அறியாப் பருவத்திலே (சிறுகதை)
நிர்மலா ராகவன்
மணப்பெண்ணைப் பார்த்தபோது அதிர்ச்சியைவிட ஆனந்தம்தான் அதிகம் எழுந்தது ரமணனுக்கு.
இவளுக்கு என்ன, இருபத்து நான்கு வயதிருக்குமா? கணக்குப் போட்டுப்பார்த்தால் சரியாக வந்தது.
`கணக்கு’ என்றதுமே உமா ஞாபகம்தான் எழுந்தது.
கண்டிப்பாக உமாவுக்குப் பிறந்தவளாகத்தான் இருக்கவேண்டும். அதே சாயல், அதே வெட்கங்கலந்த சிரிப்பு.
அவனுடன் படித்த உமா படிப்பில் கெட்டிக்காரி. பாடத்தில் சந்தேகம் கேட்பதுபோல் அவளுடன் பழகியவன் அவளுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமானான்.
சிடுமூஞ்சி கணக்கு வாத்தியாரைப்போல் இல்லாது, பொறுமையாக விளக்கிவிட்டு, “நான் என்ன, ஒன்னோட டீச்சரா?” என்று சிரிப்பாள் உமா. வெட்கமும் பெருமையும் அதில் கலந்திருக்கும்.
“சனிக்கிழமை என்கூட ஒரு இடத்துக்கு வர்றியா? என்று அவன் கெஞ்சலாகக் கேட்டபோது, அவள் அதிகம் யோசிக்கவில்லை.
“எங்கேடா?” என்றுமட்டும் கேட்டாள்.
“சொன்னாத்தான் வருவியா? அது ஒரு சர்ப்ரைஸ்! ஒனக்கு நிச்சயம் பிடிக்கும்,” என்று புதிர் போட்டுவிட்டு, “லைப்ரரின்னு வீட்டிலே சொல்லிட்டு வா!” என்று திட்டம்கூட வகுத்துக்கொடுத்தான்.
“எங்கேடா?” மீண்டும் கேட்டாள்.
“ராஜன் வீட்டுக்கு!” என்று மட்டும் தெரிவித்தான்.
அவர்களுடன் இன்னும் நாலைந்துபேர் இருந்தார்கள். ஒன்றாகப் படித்தவர்கள்.
“டி.வி பாக்கத்தான் என்னை வரச்சொன்னியா? இதுக்கு வீட்டிலேயே ஒக்காந்து படிச்சிருப்பேன்,” என்று அலுத்தவளிடம், “இது வேற மாதிரி,” என்று நமட்டுச்சிரிப்புடன் புதிர்போட்டான் ரமணன்.
அவளுக்குப் பயம் வந்தது. “ராஜன்! ஒங்க வீட்டிலே பெரியவங்க யாரும் இல்லே?” என்று கேட்டாள்.
“அப்பா வேலை விஷயமா வெளிநாட்டுக்குப் போயிருக்கார். அம்மாவும் கூடப்போயிருக்காங்க. வீட்டிலே நானும், அண்ணனும்தான். நல்ல காலம், அவனுக்கு இன்னிக்கு ஏதோ விளையாட்டுப்போட்டி! நாம்ப ஜாலியா படம் பாக்கலாம்!” பெரிய சிரிப்புடன் பதில் வந்தது.
“நான் போறேன்,” என்று எழுந்தவளின் கையைப்பிடித்து இழுத்தான் ரமணன். “ஒனக்கும் சேர்த்துக் காசு குடுத்திருக்கேன் உமா. கொஞ்சம் பாரு. பிடிக்காட்டி போயிடலாம்”.
அறையில் அசாத்திய மௌனம் நிலவியது. எல்லாம் படம் ஆரம்பிக்கும்வரைதான். அதன்பின் ஒரே கூச்சல், கும்மாளம்.
படிப்பைத்தவிர வேறு எதையும் அறிந்திராத அந்த பதினான்கு வயதுப் பெண்ணுக்கு வெட்கமாக இருந்தது.
`பெண்களை என்னமாக இழிவு படுத்துகிறார்கள்!’ என்று கோபமும் வந்தாலும், புதிய விஷயத்தை அறிந்துகொள்வதில் ஏற்பட்ட ஆர்வத்துடன் பார்த்தாள்.
திரையில் வரும் பெண்ணாகவே காமத்துடன் தன்னைப் பார்க்கிறார்கள் நண்பர்கள் என்று புரிந்துகொண்டபோது நிலைமை முற்றியிருந்தது.
அதற்கடுத்த வாரம் பள்ளியில், “ஸாரி உமா. இனிமே அப்படிப் பண்ணமாட்டேன்,” என்று ரமணன் மன்னிப்பு கேட்டுக்கொண்டான். “நடந்ததை மறந்துடு”.
ஆனால், நடந்ததை மறக்கமுடியாதபடி விதி விளையாடியது.
“யாருடி அவன்? நீ படிச்சு முன்னுக்கு வருவேன்னு பாத்தா, இப்படி கெட்டுப்போய் வந்து நிக்கறியே!” அப்பா குதித்தார்.
இருபுறமும் போலீஸ் காவலுடன், தலையைக் குனிந்தபடி, ரமணன் நடந்தபோது பள்ளி முழுவதும் வேடிக்கை பார்த்தது. பின்னால், வருத்தமே உருவாக அவனுடைய விதவைத்தாய்.
இளம் வயது அவனுக்குத் துணையாக இருந்தது. சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பினார்கள்.
ராஜன்தான், `எனக்கென்ன பயம்? எங்கப்பா எனக்கு ஆதரவா இருக்காரு!’ என்று வீறாப்பாகப் பேசினாலும், ஈராண்டுகளாக இப்படி ஒரு தொழிலில் சாமர்த்தியமாகச் சம்பாதித்த தனக்கு உலை வைத்துவிட்டானே பாவி என்று குமுறினான்.
`அந்தப் பொண்ணு `நோ! நோ!’ ன்னு கத்தினா. அவ கையையும், காலையும் ரெண்டு, ரெண்டு பேர் பிடிச்சுக்கிட்டு,” என்ற வர்ணனையுடன் வாக்குமூலம் அளித்தான்.
வீடியோ கடைக்குப்போய், `ஸ், ஸ்’ என்று ரகசியக்குரல் கொடுக்க, மேசை அடியில் கொடுப்பார்கள் அப்படங்களை. அவன் நல்ல காலம், `அவங்க அந்த மாதிரி படம் பாக்கறப்போ ஒனக்கென்ன அங்கே வேலை?’ என்று யாரும் அவனைக் கேட்கவில்லை. போலீஸ் அதிகாரியின் பிள்ளையாயிற்றே!
வியாபார நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்து, புதிய மனிதனாக வெளியே வந்த ரமணன் முதல் வேலையாக உமாவைத் தேடிப்போனான்.
அவளிருந்த வீட்டில் யாரோ குடியிருந்தார்கள். எங்கு போய் தேடுவது என்ற குழப்பம்தான் எழுந்தது அவனுக்குள்.
விரக்தியுடன், தானுண்டு, தன் கடை உண்டு என்று வாழ ஆரம்பித்தான்.
ரமணனுடைய மினி மார்க்கெட்டில் வேலை செய்த பரதனுக்குக் கல்யாணமாம்.
“எல்லாரும் ஒங்களைமாதிரி சன்யாசியா இருப்பாங்களா ஸார்?” என்று விளையாட்டாகக் கேட்டபடி பத்திரிகை கொடுத்தான் மாப்பிள்ளை.
நானா சன்யாசி! நான் பிஞ்சிலேயே வெம்பிப்போனவண்டா!
“என்னடா? லவ்வா?”
வெட்கப்பட்டான். “அதெல்லாம் இல்ல ஸார். அனாதை ஆசிரமத்திலே வளர்ந்த பொண்ணு. பஸ் ஸ்டாப்பில பாத்தேன். பிடிச்சுப்போச்சு”.
“அப்போ அது லவ்தான்!” தனக்கும் மீண்டும் கலகலப்பு வந்துவிட்டதே என்ற ஆச்சரியம் எழுந்தது ரமணனுக்கு.
மணவறையில் அமர்ந்த பெண்ணைப் பார்த்ததும், அவன் மனம் ஆடிப்போயிற்று.
இவளா? இவளா அனாதை?
அப்பன் நானிருக்கிறேன்.
ஆனால், அதை உரக்கச் சொல்லமுடியுமா?
பிறந்ததுமே, `வேண்டாம்!’ என்று உன்னை உதறிவிட்டுப் போய்விட்டாளா உன் தாய்? ஆத்திரம் எழுந்தது.
`பாவம், சிறு பெண்! அவள் வேறு என்ன செய்திருக்க முடியும்?’ என்று மூளை தர்க்கம் செய்தது.
நான் செய்த தவற்றுக்கு இப்பெண்கள் இருவரும் பலி!
“மொதல்லே முதலாளி காலிலே விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கலாம், வா!”
கூச்சத்துடன் காலை பின்னுக்கு இழுத்துக்கொண்டான் ரமணன். “நல்லா இருங்க!” என்று வாழ்த்தியபோது, குரல் தழுதழுத்தது.
தனக்கு நாதியில்லாமல் போய்விட்டதே என்ற கவலை இனி இல்லை. கடையை பரதனுக்குக் கொடுப்பதுதான் தான் செய்யக்கூடிய பிராயச்சித்தம். இனியாவது மகள் செல்வச்செழிப்புடன் வாழ்வாள்.
தன்னைப்போல் தனிமரமாக இல்லாது, எங்கோ குடும்பம், குழந்தைகள் என்றிருப்பாள் உமா. அந்த எண்ணமே மகிழ்ச்சி அளித்தது.
“ஸார் முகத்திலே இன்னிக்குத்தான் சிரிப்பைப் பாக்கறேன்!” என்று மகிழ்ச்சியுடன் புதுமனைவியிடம் கூறினான் பரதன்.
அது நிலைக்காது என்று அப்போது எவரும் நினைக்கவில்லை.
ஒரு வாரத்திற்குப்பின். “ஒங்க மொதலாளி நீங்க நினைக்கிறமாதிரி நல்லவரில்லே. என்னை வெறிச்சு வெறிச்சுப் பாக்கறாருங்க. நாம்ப வேற எங்கேயாச்சும் போயிடலாம். ஒங்களுக்கு இந்த வேலை வேணாம்!” என்று கெஞ்சலும் பயமுமாகக் கூறியபோது, மனைவியின் விருப்பத்திற்கு அடிபணிந்தவனாக, “நானும் கவனிச்சுட்டுத்தான் வரேன். காலாகாலத்திலே கல்யாணம் கட்டாட்டி இப்படித்தான்!” என்று அந்த பிரச்னைக்கு முடிவு கட்டினான் பரதன்.