-மேகலா இராமமூர்த்தி

பழந்தமிழ்ச் சொற்கள் பலவற்றின் பயன்பாட்டை நாம் காலப்போக்கில் நிறுத்திவிட்டோம்; அல்லது பயன்படுத்த மறந்துவிட்டோம். அவற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்றுதான் ’எழினி’ என்ற நற்றமிழ்ச் சொல். இந்நாளில் நாம் ’திரைச்சீலை’ (curtain) என்றழைப்பதை அந்நாளில் ’எழினி’ என்ற பெயரால் அழைத்தன பண்டைத் தமிழ்நூல்கள்.

சிலப்பதிகாரக் காப்பியத் தலைவியருள் ஒருத்தியான மாதவிமடந்தையின் நாட்டிய அரங்கேற்றத்தை விளக்குகின்ற ‘அரங்கேற்று காதை’யில் தூணிலே கட்டப்பட்டிருந்த மூன்றுவிதமான எழினிகளை அவற்றின் அமைப்பின் அடிப்படையில் ஒருமுக எழினி, பொருமுக எழினி, கரந்துவரல் எழினி என்ற பெயர்களால் குறிப்பிடுகின்றார் சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகள்.

”ஒருமுக எழினியும் பொருமுக எழினியும்
கரந்துவரல் எழினியும் புரிந்துடன் வகுத்தாங்கு
ஓவிய விதானத்து உரைபெறு நித்திலத்து
மாலைத் தாமம் வளையுடன் நாற்றி
விருந்துபடக் கிடந்த அருந்தொழில் அரங்கத்து
…” (சிலப்: அரங்கேற்று. – 109-113)

இடத்தூணிடத்தே தொங்கவிடப்பட்டுக் கயிற்றை உருவியவழி வலத்தூண்வரை சென்று மறைப்பது ஒருமுக எழினியென்றும், வலத்துண்கள் இரண்டின் மருங்கும் தொங்கவிடப்பட்ட இரண்டு திரைகள், உருவியவழி இரண்டு பக்கத்திலிருந்தும் வந்து நடுவில் ஒன்றோடொன்று இணைவது பொருமுக எழினியென்றும், கூத்தர் அவையோர்க்குப் புலப்படாமல் மறைந்துநின்று அமரர்கள் பேசுமாறு பேசுதற்கமைந்த, மேலிருந்து கீழாக இறங்கும் திரைச்சீலை கரந்துவரல் எழினியென்றும் உரையாசிரியர்கள் இவற்றுக்கு விளக்கமளிக்கின்றனர்.

இன்று நாம் காணுகின்ற ஒருபக்கத் திரை, இருபக்கத் திரை, மேலிருந்து கீழாக இறங்கும் திரை ஆகியவை அக்காலத்திலேயே புழக்கத்தில் இருந்திருக்கின்றன என்பது சிலம்பின் வாயிலாக நமக்குப் புலனாகின்றது.

இம்மூவகை எழினிகள் அல்லாமல் எந்திரத்தால் இயங்கும் ’எந்திர எழினி’யும் அன்றிருந்தமையைச் சீவக சிந்தாமணி நமக்கு அறியத் தருகின்றது. சிந்தாமணியின் கதைத் தலைவன் சீவகனுக்கும், காந்தருவதத்தைக்கும் திருமணம் முடிந்தபின்னர் சீவகனைக் கண்டு நாணிநின்ற தத்தையை அவளின் தோழியர் உள்ளேயிருத்திப் பூம்பட்டால் ஆன எழினியால் அவ்விடத்தை மூடினராம்.

”கோதையும் தோடுமின்னக்குண்டலம் திருவில்வீச
மாதரம் பாவைநாணி மழைமினின் ஒசிந்துநிற்பக்
காதலம் தோழிமார்கள் கருங்கயற் கண்ணினாளை
ஏதமொன் றின்றிப்பூம்பட் டெந்திர எழினிவீழ்த்தார்
.” (சீவக: காந்தருவ தத்தையார் இலம்பகம் – 740)

எந்திர எழினி என்பதனால் ஏதேனும் கருவிகொண்டு (machine) அத்திரையைத் தத்தையின் தோழியர் இயக்கியிருக்கவேண்டும். 

போருக்குச் சென்ற மன்னனின் பாசறையை இரண்டு அறைகளாகப் பிரிக்கும் நோக்கில் இடையே உறுதியான கயிற்றாலே திரைச்சீலையை வளைத்துக் கட்டி, அவ்விரண்டு அறைகளுள் உள்ளறையாகிய பள்ளியறையில் மன்னனின் காவலுக்குச் சட்டையணிந்த, வாயினால் உரைக்கவியலாமல் செய்கைகளால் உரைக்கும், ஊமை மிலேச்சர் காவலாயிருந்தனர் எனும் செய்தியைச் சங்கநூலான முல்லைப்பாட்டு தெரிவிக்கின்றது.

…………………………….திண்ஞாண்
எழினி வாங்கிய ஈரறைப் பள்ளியுள்
உடம்பின் உரைக்கும் உரையா நாவின்

படம்புகு மிலேச்சர் உழையர் ஆக… (முல்லைப்பாட்டு: 63-65)

துணியால் ஆன திரைச்சீலைகளையே தமிழிலக்கியப் புலவோர் பலரும் தம் பாடல்களில் விரித்துரைக்க, கவிச்சக்கரவர்த்தி கம்பரோ கவினார் இயற்கைக் காட்சியொன்றை நம் கண்முன் நிறுத்திப் புதுமையானதொரு திரைச்சீலையையும் நமக்கு முன்னே அசையவிடுகின்றார். அக்காட்சி இதோ:

”சோலைகளில் மயில்கள் அழகாய்த் தம் தோகையை விரித்து ஆடுகின்றன;  அந்த மயிலாட்டம் சுற்றியுள்ள அனைவர்க்கும்/அனைத்திற்கும் தெளிவாய்த் தெரியும் வகையில் தாமரை மலர்கள் விளக்குகளாய் ஒளிவீசி நிற்கின்றன; ஆட்டம் என்றால் அதற்குப் பக்கவாத்தியங்கள் வேண்டாவா? அதனால் வானத்து மேகங்கள் இடியெனும் முழவினை வாசிக்கின்றன; இந்த அதிசயக் காட்சியினை, மகளிரின் கண்ணொத்த, குவளை மலர்கள் வியப்போடு விழித்து நோக்குகின்றன; ஆட்டத்திற்கு மேலும் மெருகூட்ட வண்டுகள் மகர யாழொலிபோல் இனிமையாய்ப் பாடுகின்றன. ஆங்…ஆட்ட அரங்கிற்குத் திரைச்சீலை வேண்டுமல்லவா? அருகிலுள்ள நீர்நிலையின் அலைகளே வெண்ணிறத் திரைச்சீலையாய்த் திகழ்கின்றன. இவ்வழகிய ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தையெல்லாம் மருதமெனும் மங்கை கம்பீரமாய் வீற்றிருந்து இரசிக்கின்றாள்” என்று கற்பனைநயம் சொட்டச் சொட்டக் காட்சிப்படுத்துகின்றார் கம்பர்.

தண்டலை மயில்கள் ஆட,
   தாமரை விளக்கம் தாங்க,
கொண்டல்கள் முழவின் ஏங்க,
   குவளைகண் விழித்து நோக்க,
தெண்திரை எழினி காட்டத் 
   தேம்பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட
   மருதம்வீற் றிருக்கும் மாதோ. (கம்ப. பாலகாண்டம் – 35)

நீர்நிலையில் எழும்பும் அலைகளை ’எழினி’ என்று கம்பர் பொருத்தமாய் இயம்பியிருப்பது இரசனைக்குரியது.

இவ்வாறு, எழினி என்ற சொல் திரைச்சீலையைக் குறிக்கும் வகையில் அன்றைய இலக்கிய நூல்களில் பலவிடங்களில் பயின்று வந்திருக்கக் காண்கின்றோம்.

எழினி, அஃறிணையான திரைச்சீலைக்கு மட்டுமே உரித்தான பெயரா என்றால் ”இல்லை” இப்பெயர் எங்களுக்கும் உரியதே என்று நம்முன் வரிசையாக வருகின்றனர் குறுநிலமன்னர்கள் சிலர். அவர்கள் யார் என்று பார்ப்போமா?

’எழினி’ எனும் பெயரில் சங்க நூல்களில் குறிக்கப்படுவோரில் முதன்மையானவன் கடையெழு வள்ளல்களுள் ஒருவனாகவும் சிறந்த பொருநனாகவும் அறியப்படும் அதியமான் நெடுமானஞ்சி.

குறுநில மன்னனான குமணனிடம் பரிசில்பெறச் சென்ற பெருஞ்சித்திரனார் எனும் புலவர்பெருந்தகை, ”கடையெழு வள்ளல்களின் மறைவுக்குப்பின் நீயே இரந்தோரின் துயர் தீர்க்கும் வள்ளலாய்த் திகழ்கின்றாய் என்றறிந்து உனைநாடி வந்தேன்” என்று அவனிடம் கூறுமிடத்து, கடையெழுவள்ளல்களின் பெயர்களைப் பட்டியலிட்டுவிட்டுக் குமணனின் வள்ளன்மையைப் புகழ்கின்றார். அவ்விடத்தில் ’எழினி’ என்று அதியமான் குறிக்கப்படுகின்றான்.

…கறங்குவெள் ளருவி கல்லலைத்து ஒழுகும்
பறம்பிற் கோமான் பாரியும் பிறங்குமிசைக்
கொல்லி ஆண்ட வல்வில் ஓரியும்
காரி ஊர்ந்து பேரமர்க் கடந்த
மாரி ஈகை மறப்போர் மலையனும்
ஊராது ஏந்திய குதிரைக் கூர்வேல்
கூவிளங் கண்ணிக் கொடும்பூண் எழினியும்…
(புறம்: 158 – பெருஞ்சித்திரனார்)

இப்பாடலுக்கு உரைவரைந்த உரைவேந்தர் ஔவை.சு. துரைசாமிப் பிள்ளை, எழினி என்பது அதியனின் தந்தை பெயர். அப்பெயரோடு சேர்த்து அவன் எழினியதியமான் என்றழைக்கப்பட்டான்; தந்தையின் பெயரைப் பெயரனுக்கு வைக்கும் மரபு பற்றி அவனுடைய மகனுக்கும் எழினி என்ற பெயர் வந்தது என்கின்றார்.  

வெம்போர் நுகம்படக் கடக்கும் பல்வேல் எழினி” (குறுந்: 80) எனக் குறுந்தொகையிலும், ”சில்பரிக் குதிரைப் பல்வேல் எழினி” (அகம்: 105) என அகநானூற்றிலும், பெருஞ்சேரல் இரும்பொறையோடு பொருது வீழ்ந்த நிலையில், ”பொய்யா எழினி பொருது களம்சேர” (புறம்: 230) எனப் புறநானூற்றிலும்  எழினி எனும் பெயரால் அதியமான் குறிக்கப்படுகின்றான். 

அதியமானை அதிகம் பாடிய புலவர் சங்க கால ஔவையார்; அவர், பொகுட்டெழினி என்றும் எழினி என்றும் அழைக்கப்பட்ட அதியனின் மகனையும் பாடியுள்ளார். புறநானூற்றின் 392ஆவது பாடல் அதிலொன்று. அப்பாடலில், வறுமையில் வாடி, கிழிந்த ஆடையோடு, ”மதியேர் வெண்குடை அதியர்கோமான் கொடும்பூ ணெழினி”யின் அரண்மனை முற்றத்தில் வந்துநின்று கிணைப்பறை இசைத்த பொருநன் ஒருவன், தன் வறுமை நீங்கப்பெற்றுப் புத்தாடையும், தேறலும், நல்ல உணவும் பெற்றமையைப் புகழ்ந்துரைக்கின்றார் ஔவையார்.  

இவர்கள் இருவரல்லாமல், நெடுஞ்செழியனோடு தலையாலங்கானத்தில் போரிட்டுத் தோற்ற எழுவர் கூட்டணியில் ஒருவனாகப் “பொலம்பூண் எழினி” (பொன்னாலான அணிகளையுடை எழினி) என்றோர் எழினி அகநானூற்றின் 36ஆவது பாடலில் குறிக்கப்படுகின்றான்.

முதுகுன்றம் எனும் ஊரின் தலைவனும், வீரமிகு படையை உடையவனுமாகிய கண்ணன் எழினி என்பவன் அகநானூற்றின் 197ஆவது பாடலில், ”மறம்மிகு தானை கண்ணன் எழினி” என்று பேசப்படுகின்றான். முதுகுன்றம் என ஈண்டுக் குறிக்கப்பட்டிருப்பது இன்று விருத்தாசலம் எனும் வடமொழிப் பெயரோடு விளங்கும் ஊராக இருக்கலாம். 

மற்றோர் எழினி, ”கல்லா எழினி” எனும் அடையோடு அகநானூற்றின் 211ஆவது பாடலில் குறிக்கப்படுகின்றான். சோழமன்னன் ஒருவன் இவனை யானைகளை அகப்படுத்தும் வேட்டைக்கு அழைத்திருக்க, அறிவிலியான இந்த எழினி வரவில்லையாம்; அதனால் கோபமுற்ற அம்மன்னன், தன் ஆளுகைக்கு உட்பட்ட கழார் (கழாஅர்) எனும் பகுதியை ஆட்சிசெய்த பரதவர்கோமான் மத்தி என்பவனை அழைத்து எழினிக்குப் புத்தி கற்பிக்குமாறு ஏவ, அவ்வாறே மத்தி இந்த எழினியோடு போரிட்டு இவன் பல்லைப் பிடுங்கிவந்து தனக்குச் சொந்தமான வெண்மணி எனும் ஊரின் வாயிலிலுள்ள வன்மையான கதவில் பதித்தான் என்கிறார் மாமூலனார். பகைவனை அவமானப்படுத்தும் வகையில் அவன் பல்லைப் பிடுங்கித் தம் கோட்டையில் பதித்துவைப்பது அந்நாளைய அரசர்களின் (கோர) வழக்கமாக இருந்திருப்பதனை இதன்மூலம் அறிகின்றோம்.

சேரநாட்டிலுள்ள வாட்டாறு எனும் பகுதிக்குத் தலைவனாக இருந்த எழினியாதனை, ”வளநீர் வாட்டாற்று எழினி யாதன்” என்று புறநானூற்றின் 396ஆவது பாடலில் குறிப்பிடும் புலவர் மாங்குடி கிழார், இவன் ஊக்கமில்லாதவர்க்கு ஊக்கமளிப்பவன்; உறவில்லாதவர்க்கு உறவாயிருப்பவன்; தன்னை நாடிவருவோர்க்கு வாரி வழங்குபவன் என்று பாணனின் கூற்றாகப் புகழ்ந்துள்ளார். இந்த எழினியாதன், தலையாலங்கானத்துச் செருவில் பாண்டிய நெடுஞ்செழியனோடு போரிட்டுத் தோற்ற எழினியின் மகன்; தந்தைக்குப் பிறகு ஆட்சிப்பொறுப்பை ஏற்ற இவன், நெடுஞ்செழியனோடு நட்புச் செய்துகொண்டான் என்கிறார் ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.  

வேலெறிவதில் வல்லவனான செல்லிக் கோமான் ஆதன் எழினியை ”எறிவிடத் துலையாச் செறிசுரை வெள்வேல் ஆதன் எழினி” என்று நமக்கு அறிமுகப்படுத்துகின்றது அகநானூற்றின் 216ஆவது பாடல். இவன் கோசர்களின் தலைவன் என்று அதில் சுட்டப்பெறுகின்றான்.  

இவ்வாறு எழினியெனும் பெயரிலிருந்த ஆட்சியாளர்களையும் சங்கப்பாடல்கள் வாயிலாய் நாம் அறியமுடிகின்றது.  

ஆக, எழினி என்பது திரைச்சீலைக்கும், குறுநில மன்னர்கள் சிலர்க்கும் பொதுவான பெயராக அன்றிருந்தமை தெளிவு. நாம் மறந்துபோன எழிலார் பெயரான எழினியைத் திரைச்சீலைக்கு மீண்டும் அணிவிப்போம்; குழந்தைகட்கும் சூட்டி மகிழ்வோம்!

கட்டுரைக்குத் துணைசெய்தவை:
1. புறநானூறு மூலமும் ஔவை சு. துரைசாமிப் பிள்ளையவர்கள் எழுதிய விளக்க உரையும், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
2. அகநானூறு மூலமும் நாவலர், ந.மு. வேங்கடசாமி நாட்டார், கரந்தைக் கவியரசு ரா. வேங்கடாசலம் பிள்ளை ஆகியோர் எழுதிய பதவுரை விளக்கவுரையும்.
3. குறுந்தொகை மூலமும் மகாமகோபாத்தியாய, தாக்ஷிணாத்ய கலாநிதி, டாக்டர் உ.வே. சாமிநாதையரவர்கள் எழுதிய உரையும்.
4. முல்லைப்பாட்டு – பெருமழைப் புலவர் பொ.வே. சோமசுந்தரனார் உரை.
5. சிலப்பதிகாரம் மூலமும் நாவலர் பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்கள் எழுதிய உரையும்.
6. சீவக சிந்தாமணி மூலமும் புலவர் அரசு, பெருமழைப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் ஆகியோர் எழுதிய உரையும்.
7. கம்பராமாயணம் – கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.  

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.