குறளின் கதிர்களாய்…(481)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(481)
பணிவுடைய னின்சொல னாத லொருவற்
கணியல்ல மற்றுப் பிற.
–திருக்குறள் –95(இனியவை கூறல்)
புதுக் கவிதையில்…
ஒருவன்
பெரியோர்களிடத்துப்
பணிவுடையோனாய் இருத்தல்,
எல்லோரிடமும் இனிய சொல்லே
பேசுபவனாய் இருத்தல் ஆகிய
உயர் குணங்கள் மட்டுமே
அவனுக்கு ஆபரணங்களாய்
அணிசெய்கின்றன..
உடலில் அணியும்
பிற நகைகளெல்லாம்
உண்மையில்
ஆபரணங்கள் ஆகா…!
குறும்பாவில்…
உயர்ந்த குணங்களாம் பணிவோடிருத்தல்
இன்சொல்லே பேசுதல் போன்றவையே ஒருவனுக்கு
அணிகலன்கள், மற்றவை அல்ல…!
மரபுக் கவிதையில்…
பெரியோ ரிடத்துப் பணிவுடைமை
பேசும் பேச்சே இன்சொல்லாம்
அரிய குணமே ஒருவர்க்கே
அணியாய் சிறக்கும் வாழ்வினிலே,
தெரிந்த வரையில் இவைதவிரத்
தேடிப் பிடித்தே அணிகின்ற
பெரிதும் சிறிதாய்ப் பிறநகைகள்
பெருமை பெறாதே அணியெனவே…!
லிமரைக்கூ…
பணிவு பேசுமின்சொல் என்றே
இரண்டும் அணியாகும் ஒருவனுக்கு வாழ்வில்,
மற்றெதும் அணியாகா நின்றே…!
கிராமிய பாணியில்…
பேசணும் பேசணும்
நல்ல பேச்சே பேசணும்,
எங்கயும் எப்பவும்
நல்ல பேச்சே பேசணும்..
பெரியவுங்க கிட்ட
பணிவா இருக்கிறதும்
அடுத்தவங்க கிட்ட
அன்போட நல்ல பேச்சா
பேசுறதும்தான்
ஓலகவாழ்க்கயில ஒருத்தனுக்கு
ஓசத்தியான ஆபரணம்,
அது யில்லாம
ஒடம்புல போட்டு
அழகு பாக்கிறதெல்லாம்
உண்மயில ஆபரணமே யில்ல..
அதால
பேசணும் பேசணும்
நல்ல பேச்சே பேசணும்,
எங்கயும் எப்பவும்
நல்ல பேச்சே பேசணும்…!