குறளின் கதிர்களாய்…(482)

செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(482)
கொன்றன்ன இன்னா செயினு மவர்செய்த
வொன்றுநன் றுள்ளக் கெடும்.
–திருக்குறள் – 109 (செய்ந்நன்றி அறிதல்)
புதுக் கவிதையில்…
ஒரு காலத்தில்
உபகாரமொன்று செய்தவர்
பின்பு
உயிரை எடுத்தல் போலொரு
உபத்திரவம் செய்தாலும்,
முன்பு அவர் செய்த
நன்மையை நினைத்தவுடன்
இத்துன்பம்
இல்லாமல் கெட்டு
அகன்று போய்விடும்…!
குறும்பாவில்…
கொல்லுதல் போலொரு துன்பமொருவர்
கொடுத்தாலும் முன்பவர் செய்த நன்மையொன்றினை
நினைத்ததும் இத்துன்பம் இலாதுபோகும்…!
மரபுக் கவிதையில்…
கொல்வது போலொரு கொடுந்துன்பம்
கொடுத்திடும் ஒருவரும் அன்றொருநாள்
நல்லதாய் நமக்கவர் செய்திட்ட
நற்செயல் ஒன்றினை நினைத்தவுடன்,
அல்லதா யவரது செயலாலே
அடைந்ததாம் அளவதே யில்லாத
அல்லலும் இலையெனக் கெட்டழிந்தே
அகன்றிடும் நிலையினைக் காண்பாயே…!
லிமரைக்கூ…
உடலொடு உள்ளம் வேகும்
கொடுமையொருவர் செய்தாலும் முன்பவரின் நன்மையினை
நினைத்தவுடன் இத்துன்பம் போகும்…!
கிராமிய பாணியில்…
நன்றிகாட்டணும் நன்றிகாட்டணும்
செய்த ஒதவிக்கு நன்றிகாட்டணும்,
ஒசந்தகொணம் இதுதான்
ஒலகத்தில ஒசந்தகொணம் இதேதான்..
ஒரு காலத்தில
ஒபகாரமா நன்ம செய்த
ஒருத்தரு பின்னால
கொல்லுற மாதிரி
கொடும செஞ்சாலும்,
அவுரு முன்னால செஞ்ச
நன்மய நெனச்ச ஒடனயே
இந்தத் துன்ப நெனப்பெல்லம்
இல்லாமப் போயிடுமே..
தெரிஞ்சிக்கோ,
நன்றிகாட்டணும் நன்றிகாட்டணும்
செய்த ஒதவிக்கு நன்றிகாட்டணும்,
ஒசந்தகொணம் இதுதான்
ஒலகத்தில ஒசந்தகொணம் இதேதான்..!