கல்வெட்டு, இலக்கியப் புனைவு இல்லை

சேசாத்திரி ஸ்ரீதரன்
இனக்காப்பிற்காக, பிற இனத்தாரோடு போர் செய்த பழங்குடி நிலை முற்றாக மாறி, வேந்தர், மன்னர், அரையர், கிழார்-கோன் ஆகிய நாலடுக்கு அதிகார ஆட்சியாளர் தமது ஆட்சி நிலைக்கவும் நாடு விரிக்கவும் பழங்குடிகள் முதல் எளிய அப்பாவி மக்கள் வரை தமது உயிரை ஈகம் செய்தும் குடும்ப வாழ்வை அழித்தும் வாழ்கிற போரில் தள்ளினர். இதற்காகத் தேர்ந்த பயிற்சி உடைய வீரராகவும் உளவாளியாவும் அவர்களை மாற்றினர். இத்தகு நெறி கொண்ட போர் எளிய மக்களின் உலக வாழ்க்கையை, சமூக வாழ்க்கையை, சமய நம்பிக்கையை அடியோடு மாற்றிப் போட்டது என்பதே வரலாறு. போரில் இறந்த வீரன் தெய்வமாக வணங்கப்பட்டான் குருதி சிந்தினமைக்காக அவன் குடும்பத்தாருக்கு நெய்த்தோர்பட்டி நிலம் வழங்கப்பட்டது என்பதே ஆறுதல் செய்தி. இவற்றுக்குச் சான்றாக இங்குச் சில நடுகல் கல்வெட்டுகளை விளங்கிக் கொள்ளலாம்.
ஒரு முறை அமெரிக்கப் பெண் ஒருத்தி இந்தியா ஒரு ஆன்மீக பூமி என்கின்றீர் பின் ஏன் மக்கள் காமவயப்பட்டு இவ்வளவு அதிகப் பிள்ளை பெற்று இந்தியா மக்கள் தொகைப் பெருக்க நாடாக உள்ளது எனக் கேட்டாள். அதற்கு அவளுக்கு, இந்தியா ஆன்மீக பூமி தான் என்பதில் ஐயம் இல்லை. ஆனால் இந்திய மக்கள் எல்லோரும் யோக ஆன்மீக வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கவில்லை. எனவே இந்தியாவில் குறைந்த அளவு மக்கள் தான் உண்மையான ஆன்மீகத்தை நாடுபவராக உள்ளனர் என்று விடை கூறப்பட்டது. இந்தியாவில் தோன்றிய தந்திர யோகம், வேத மதம், சமணம், புத்தம் ஆகியன புலால் கூடாது என்று உணவுக் கட்டுப்பாடு வைத்தன. பொய், களவு கூடாது என்றன. பெண் பித்து கூடாது என்றன. ஆனால் இவற்றை மக்கள் கடைப்பிடிக்க விடாதபடி தனது வெற்றி ஒன்றே குறியாகக் கொண்டு வேந்தர், மன்னர், அரசர், கோன் போன்ற ஆட்சியாளர்கள் போரில் ஈடுபடும் வீரருக்குப் புலால் விருந்தும், கள் விருந்தும் கொடுத்துப் போருக்கு அனுப்பினர். வலுவான படை அமைக்க, தம்முள்ளே வலுவான உறவு நீடிக்க ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்தனர். அதைத் தான் எளிய போர் வீரனும் கடைப்பிடித்தான். விளைவு இரு குடும்பங்களைப் பேண முடியாமல் வறுமையில் உழலும் சூழல் ஏற்பட்டது. கல்விப் பரவல், கீழ்த்தட்டு குடிகளிடம் இல்லாமல் போனது. ஆதலால் மக்களிடம் ஒழுக்கக் குறைபாட்டால் ஆன்மீகம் மிகச் சிலருக்கு மட்டுமே வாய்த்ததாக அமைந்துவிட்டது.
குமரி மாவட்டம் தோவாளை வட்டம் ஆரம்போலி(ஆரல்வாய்மொழி)யில் கிடைத்த 17 வரி நடுகல் கல்வெட்டு. இப்போது பத்மநாபபுரம் அரண்மனையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
- ஸ்ரீ கோமாறஞ் சடையர்க்கு இ
- ருபத்தேழாமாண்டு சேரமா
- னார் படை விழிஞத்து புறத்து
- விட்டுழக்கக் கரைக்கோட்டை அழி
- ப்பான் வர பெருமானடிகளுள
- ன்பு மீக்குள இரண கீர்த்தி[யு]
- ம் அமர்க்கழியும் உள் வீ
- ட்டினொற்றைச் சேவகர் கோட்
- டை அழியாமை காத்தெறி
- ந்து பலரும் பட்ட இ
- டத்து இரணகீர்த்தி உள்
- வீட்டுச் சேவகன் கொழுவூ
- ர்க் கூற்றத்துப் பெருமூர்
- த் தாதம் பெருந்திளை [அ]
- த்திரத்தாற் பலரோடுங்
- குத்திப் பட்டான் இரு
- பது கமாளி சேவகன்
விடு – திரிந்து; உழக்க – அழிக்க; ஒற்றை – ஒற்றர் படை; தாதம் – மூலப்படை; திளை – போர்ப்படை, அத்திரம் – அம்பு; இருபது – பதுங்கு படை, மறைந்து தாக்கும் படை, Ambush; கமாளி – பிரிவு, Division (கமர் – நிலப்பிளவு. எனவே கம் என்றால் பிரிவு. கம் + ஆளி = கமாளி – பிரிவினன்; சேவகன் – படைத்தலைவன்
விளக்கம் : நடுகல்லின் முன் பக்கம் வீரன் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. பின்புறம் கல்வெட்டுச் செய்தி உள்ளது. இக்கல்வெட்டு கி.பி. 792இல் பராந்தக நெடுஞ்சடையன் என்னும் வரகுணனுக்கு 27ஆம் ஆட்சி ஆண்டில் வெட்டப்பட்டது. விழிஞம் திருவனந்தபுரத்திற்கு மேற்கே கடற்கரையில் அமைந்துள்ளது. ஏற்கெனவே மாறஞ்சடையன் சேரனிடம் இருந்து கைப்பற்றிய அவனது சில ஆட்சிப் பகுதிகளை மீட்கச் சேரமான் படை விழிஞத்தின் புறநகர்ப் பகுதியை அழித்தபடி, கரைக்கோட்டையை அழிக்க வந்தது. அப்போது பெருமானடிகள் பாண்டியனிடத்து மிக்க அன்பு கொண்ட இரணகீர்த்தி, அமர்கழி, அரண்மனை உள்வீட்டு ஒற்றர்படைத் தலைவன் ஆகியோர் கோட்டை அழிந்துவிடாமல் காத்து, பகைவரை அழித்து ஒழித்தனர். அதில் பலர் வீரச் சாவடைந்த இடத்தில் இரண கீர்த்தி, உள்மனை படைத்தலைவன், கொழுவூர் கூற்றத்தில் உள்ள பெருமூர் மூலப் படையின் பெரும்படைப் பிரிவு ஆகிய பலரோடும் சேர்ந்து பகைவர் பலரைக் குத்திக் கொன்று வீரச்சாவடைந்தான் கோட்டைப் பதுங்கு படைப் பிரிவின் தலைவன். இவனது இயற்பெயர் குறிக்கப்படவில்லை. பட்டான் என்ற ஒருமைச் சொல் இரணகீர்த்தியையோ உள்மனை ஒற்றனையோ குறிக்கவில்லை என்பது தெளிவு. ஆரல்வாய்மொழி அவன் ஊர் என்பதால் இந்த நடுகல் அங்கே சுற்றத்தாரால் நிறுத்தப்பட்டது. இக்கல்வெட்டு பலரால் தவறாக விளக்கப்பட்டுள்ளது.
பார்வை நூல்: கல்வெட்டு காலாண்டு இதழ் 72, பக்.9-10, ஆண்டு 2006, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு.
தருமபுரி மாவட்டம் அகழ்வைப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள 12 வரி நடுகல் கல்வெட்டு
- ஸ்வஸ்திஸ்ரீ அரிமிதைய மாவலி வாணராயர்
- கங்கநாடும் புறமலைநாடும் கோயினூர்நாடும்
- கோவூர்நாடும் தாயனூர்நாடும் பற்றநாடும் ம _ _ _
- அவர்க்குத் தாநாகிப் பிள்ளைய் கொண்டுள்
- புகுந்து வஞ்சித்து நாடு கொண்டானுளம்பன்.
- அவர் போரிற் றுஞ்சின பின்னைத் தேவிமார்
- கருப்பிணியருளராக அவகளைக் காத்திருந்
- தாண் பிள்ளைப் பெறுவதுந் தகடூர் புகுந்து
- நுளம்பன் பலத்தோடே துணிந்து நாடு பாவி
- நார் சங்கரகுட்டியார் . அவரோடுடன்
- புகுந்து தகடூரில் பட்டார் நாகந்தை
- சிறு குட்டியார். கல்நாடு
தாநாகி – அத்தானாகி; பலத்தோடு – படையுடன்; நாடுபாவி – நாடுவிரித்து, ஆக்கிரமித்து; பட்டான் – வீரசாவடைந்தான்; கல்நாடு – நெய்தோர்பட்டி, உதிரப்பட்டி
விளக்கம் : இந்நடுகல் கல்வெட்டு 8-9ஆம் நூற்றாண்டினதாகக் கருதப்படுகிறது. இதில் எந்த வேந்தர் பெயரும் குறிப்பிடாதது அரிமிறைய மாவலி வாணராயர் சுதந்திர ஆட்சியை நடத்தினர் என்று கொள்ள வேண்டியுள்ளது. அவர் கங்க நாடு (தகடூர்), புறமலைநாடு (அரூர்), கோயினூர்நாடு, கோவூர்நாடு (ஊத்தங்கரை), தாயனூர்நாடு, பற்றநாடு என்று மிக பெரிய நிலப் பரப்பை ஆண்டுள்ளார். இவரது வாணர் குடும்பத்திற்கும் நுளம்பர் குடும்பத்திற்கும் இடையே முன்னம் திருமணம் நிகழ்ந்து நுளம்பன் இவருக்கு அத்தான் உறவாகிப் போனான். அந்த நுளம்பன் அரிமிறைய வாணன் குடும்பத்தில் பெண் எடுத்து மாப்பிள்ளை ஆகிப் போனான். அந்த உரிமையில் அரிமிறைய வாணனை வஞ்சித்து அவனது நாட்டின் ஒரு பகுதியைத் தனதாக்கிக் கொண்டான் நுளம்பன். இதனால் இருவருக்கும் நிகழ்ந்த போரில் அரிமிறைய வாணன் போரில் இறந்து விடுகிறான். இவனுடைய மனைவியர் அதன் பின் கருவுற்றிருப்பதை அறிய வர அதற்காக அவர்களைக் காத்து அதில் ஒருத்தி ஆண் பிள்ளை பெற்றவுடன் படையுடன் தகடூரில் புகுந்து நுளம்பன் படையுடன் துணிந்து மோதி இழந்த நாட்டைக் கைப்பற்றினார் படைத்தலைவர் சங்கரக் குட்டியார். அவருடன் இணைந்து தகடூரில் படையோடு புகுந்து வீரச்சாவடைந்தார் நாகந்தை சிறு குட்டியார். இந்நடுகல் அவர் நினைவில் நடப்பட்டு அவரது குடும்பத்திற்கு நெய்த்தோர்பட்டி நிலம் தரப்பட்டது.
முதலாம் மகேந்திர நுளம்பன் தான் அரிமிறைய வாணனை வஞ்சித்து நாடு கவர்ந்தான் என்று கொள்ளப்படுகிறது. வாணரும் நுளம்பரும் கன்னடர் ஆவர். தமிழகத்தில் இவர்களது அதிகாரம் பல்லவரால் ஏற்பட்டது.
பார்வை நூல்: கல்வெட்டியல் 132, த நா தொ து வெளியீடு.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் திண்டிவனம் அருகே கிடைத்த 3 வரி நடுகல் கல்வெட்டு
- கம்பப் பெருமாள் ஆனையாடின
- கொந்தளத்து இவ்வூர் அழிந்த நாள்
- பட்டான் இவ்வூர் கோதுபத்தி மாத்ரகன்.
கொந்தளத்து – அமளிகுமளி, turmoil; கோதுபத்தி (கோடு+பத்தி) – குலையாகப் பிரித்த படையணிப் பிரிவு, army division; divide as a battalion; மாத்ரகன் – அளவிடுபவன், surveyor, assessor
விளக்கம் : 9ஆம் நூற்றாண்டில் வேந்தன் கம்ப வர்மப் பல்லவனே திண்டிவனம் அருகே யானைப் படையுடன் சென்று போர் புரிந்த போது இந்த ஊரே அமளி குமளியாக அழிந்த நாளில் இவ்வூரின் படைப்பிரிவில் அளப்போனாக உள்ள வீரன் இப்போரில் வீரச்சாவடைந்தான். அவன் இயற்பெயர் குறிப்பிடப்படவில்லை. இறந்த வீரன் எந்த அரசன் சார்பாக போரிட்டான் என்றும் தெரியவில்லை. ஆண்டுக் குறிப்பும் இல்லை. இந்த ஊர், சிறு படைத் தளமாக இருந்ததாலே வேந்தனால் அழிக்கப்பட்டது. கம்ப வர்மன் நிருபதுங்கன், அபராஜித்தன் பதவி சண்டையில் யார் பக்கம் இருந்தான் என்று தெரியவில்லை. அப்படியானால் இது பல்லவர் இடையே நடந்த போராகக் கொள்ள முடியுமா?
கல்வெட்டின்படி ஒவ்வொரு படையெடுப்பின் போதும் ஊரும் சேர்ந்தே அழிக்கப்படுகிறது என்பதை இக்கல்வெட்டு சுட்டுகிறது. இங்கே ஊர் என்பது படைவீரர் ஊர் என்று கொள்வதே சரியாகும்.
பார்வை நூல்: கல்வெட்டியல் 131, த நா தொ து வெளியீடு.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் கருங்காலிப்பாடி ஊரில் கண்ட 5 வரி நடுகல் கல்வெட்டு.
- தென் வேணாட்டு மேலைக் கரு
- ங்காலிப்பாடி சிலகில் காவேட்டுவைய
- ன் அடியேன் பறையன் பளியனேன்
- ஊரழியப் போகே
- னென்று பட்டான்
சிலகில் – பிளவில், இருமலைக்கு நடுவே; போகேன் – விடமாட்டேன்
விளக்கம் : மன்னன் பெயரோ ஆண்டோ இல்லாத கல்வெட்டு இது. வேணாட்டின் தெற்கே உள்ள கருங்காலிப்பாடியின் மலை இடுக்கில் வாழும் காட்டின் வேட்டுவத் தலைவனுக்கு அடியவனான பறையன் பளியன் என்பவன் இவ்வூரை பகைவர் அழிக்க விடமாட்டேன் என்று சூளுரைத்து, போரில் வீரச் சாவடைந்தான்.
பளியர் என்போர் தமிழகப் பழங்குடி மக்கள் ஆவர். இன்று திண்டுக்கல், தென்காசிப் பகுதிகளில் மட்டும் சிறு தொகையில் வாழ்கின்றனர். ஆனால் இக்கல்வெட்டு அவர்கள் தமிழகத்தின் வட பகுதியான திருவண்ணாமலையிலும் வாழ்ந்ததைத் தெரிவிக்கிறது. மன்னர்கள் அமைதியாக வாழும் பழங்குடிகளையும் விட்டுவைக்கவில்லை. அவர்களையும் போரிலும் உளவிலும் ஈடுபடுத்தினர். மேலும் இது போன்ற பழங்குடிகளே பின்னாளில் பறையர் என்ற சாதி தோன்றக் காரணமாக இருந்துள்ளனர் என்பதற்கு இக்கல்வெட்டு சான்று. ஆனால் இந்துமதம் தான், பிராமணர் தான் பட்டியலின மக்களை உருவாக்கினர் என்று அரசியல் மேடையிலும் எழுத்திலும் பொய்யுரைத்து வரலாற்றையே புனைவாகச் செய்துள்ளனர். இக்கல்வெட்டு அதைத் தகர்க்கிறது. தமிழ்நாடு தொல்லியல் துறை பன்றயன் புளியனேன் என்று தவறாகப் படித்து அச்சேற்றி ‘கல்வெட்டியல்’ என்ற நூலில் கடைசிப் பகுதியில் வெளியிட்டுள்ளது. இப்படித் தப்பும் தவறுமாக படித்து நூல் வெளியிட்டால் உண்மை தான் மறைக்கப்பட்டுவிடும்.
பார்வை நூல்: நடுகல் கல்வெட்டுகளும் சிற்பங்களும் தொகுதி I, பக். 341, ஆசிரியர் ச. கிருஷ்ணமூர்த்தி
தருமபுரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் ஒட்டம்பட்டி 6 வரி நடுகல் கல்வெட்டு
- சிவமார பருமர்க்கு யாண்டு யிருபத்
- திரண்டாவது மாவலி வாணராயர் க
- ங்க நாடாள இந்திரன் தகடூ
- ர் மேல்வந்த ஞான்று மறவனா
- ர் சேவகன் கண்ணனூருடை கமிய
- த் தழமன் பட்டான்.
கம்மிய – கருமார் (அ) கைவினைஞன், blacksmith / craftsman; தழமன் – தழல் என்றால் நெருப்பு. எனவே உலைக்கு நெருப்பைப் பேணுபவன்; சேவகன் – படைத்தலைவன்
விளக்கம் : நுளம்ப வேந்தன் சிவமாறனின் 22ஆம் ஆட்சி ஆண்டில் அவனுக்கு அடங்கிய வாண மன்னன் மாவலி வாணராயன் கங்க நாட்டை (தகடூர்) ஆண்டுகொண்டிருக்கையில் வைடும்ப அல்லது தெலுங்குச் சோழன் மன்னன் இந்திரன் தகடூர் மேல் படை கொண்டு வந்த போது இந்த வாணனுக்கு அடிபணிந்த ஆட்சியாளன் மறவனுடைய படைத்தலைவனாக உள்ள கண்ணனூருடைய கருமான் உலைக்கு நெருப்பு எரிப்பவன் வீரச் சாவடைந்தான். இவன் இயற்பெயர் தெரியவில்லை. இவன் போர்க்கருவி செய்பவனாய் இருந்திருப்பான் எனத் தெரிகிறது. இதன் மூலம் ஒவ்வொரு படையும் தனியே தனக்கென கருமாரை வைத்திருந்தன என்று தெரிகிறது. அதே நேரம் படையெடுத்து வருபவன் முதலில் அழிப்பது ஆயுதம் செய்பவரை ஆயுத சாலையைத் தான் என்பதை இக்கல்வெட்டு நமக்கு சுட்டுகிறது.
பார்வை நூல்: நடுகல் கல்வெட்டுகளும் சிற்பங்களும் தொகுதி I, பக். 348, ஆசிரியர் ச. கிருஷ்ணமூர்த்தி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் அங்குத்திசுனை 7 வரி வட்டெழுத்து நடுகல் கல்வெட்டு.
- ஸ்வஸ்திஸ்ரீ நுளம்பன் மகன்
- சிவமாறன் வூறளிய்க் ஆழுடைய
- போயையந் மகந் துட்டப்பநுக்கு
- தம்பி முளித்தயந் செய்வித்தாந்.
- தச்சான் வெந்றி
- சிரியன் நாட்டி
- னக் கல்
ஆளுடைய – தலைமை செய்யும்; போ ஐயன் – வில் வேடுவர் தலைவன், bowman. போ + அன் = போவன் அல்லது போயன் என் ஆகும். போ என்பது வளைந்த வில்லை குறித்தது. ஆங்கிலச் சொல் Bow உடன் தொடர்புடையது.
விளக்கம் : மேலுள்ள ஒட்டம்பட்டி கல்வெட்டுக்கு முற்பட்ட 8ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு இது. மாவலி வாணனைச் சிவமாற நுளம்பன் வென்று ஆட்படுத்துவதற்கு முன் நிகழ்ந்தது எனக் கொள்ளலாம். சிவமாறன் ஊத்தங்கரை மேல் படையெடுத்து ஊரை அழித்த போது போயர் தலைவனுக்கு மூத்த மகன் துட்டப்பன் அதில் வீரச்சாவடைந்தான். அவன் தம்பி முழித்தயன் இந்த நடுகல்லைச் செய்வித்தான். சிற்பி வென்றி சிரியன் இந்தக் கல்லையும் எழுத்தையும் செதுக்கி நிறுத்தினான். இதில் மான் வேட்டையாடுவது போன்ற உருவப் பொறிப்பு போயர் வேட்டுவர் என்று சுட்டுகிறது. இவர்கள் போர்த் தொழிலை ஏற்றவர்கள். இந்தப் பழங்குடிகள் பின்னாளில் தருமபுரியில் குடியேறிய தெலுங்கு ஒட்டருடன் கலந்துவிட்டனரோ? ஏனெனில் இவர் பெயரை இன்று ஒட்டர்கள் பயன்படுத்துவதாகத் தெரிகிறது.
பார்வை நூல்: கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்றுப் பேரவை காணொளி
இராமநாதபுரம் மாவட்டம், முதுகுடி ஊர் அருகில் உள்ள கருங்குளம் ஏரி 16 வரிக் கல்வெட்டு
- ____
- குலைசேகர தேவ
- ர்க்கு யாண்டு 34 வ
- துக் கருங்குளத்திர்க்
- கு ஒரு பழி உண்
- டானபடியாலே,
- இப்பழிக்கு இவ்வூர்
- குடும்பரில் பெரிய
- தேவப் பள்ளன் அணை
- வெட்டிப் போகையா
- லே இவன் மகளுக்கு
- ஊரார்களிட்ட உதி
- ரப்பட்டி குடுத்தபடி தபான
- வ நிலம் அரை மா அணை
- நிலம் சந்திராதித்தவன்
- மானி போவிப்பர்
- கா _ _ _
பழி – தீவினை; அணை – கரை; தபானவ – வறண்ட புஞ்சை; மானி – மதித்து; போவி – செல்வதாக
விளக்கம் : மாறவர்மன் குலசேகரப் பாண்டியனின் 34ஆவது ஆட்சி ஆண்டு 1302 இல் இராமநாதபுரம் முதுகுடி ஊருக்கு அருகில் உள்ள கருங்குளத்தில் கரை உடைந்துவிட்டது. இந்த உடைப்பை இந்த ஊர் குடும்பரில் பெரிய தேவப் பள்ளன் கரைவெட்டி தடுத்தான். அதில் அவன் இறந்துவிடுகிறான். இதனால் பரிவுற்ற ஊர் மக்கள் அவன் மகளுக்கு நெய்த்தோர்பட்டியாக குளக்கரைக்கு ஒட்டி அரைமா வறண்ட புஞ்சை நிலத்தைக் கொடுத்தனர். இதைச் சந்திரன் சூரியன் உள்ள கால அளவும் மதித்துச் செல்ல வேண்டும் என்று குறித்தனர். நெய்தோர்பட்டி என்ற குறிப்பு பெரிய தேவ பள்ளன் இந்தக் கரையைப் பாதுகாப்பதில் எடுத்துக்கொண்ட உயிர்ச் சேதத்திற்காகக் கொடுத்திருக்கலாம்.
பார்வை நூல்: கொங்கு இதழ் 25. செ இராசு, திசம்பர் 1972
வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம், சின்னத்தாமல்செறு கிராமத்தில் கற்பலகையில் செதுக்கிய நடுகல்லில் உள்ள 8 வரிக் கல்வெட்டு.
- செல்(லை)ளை
- வூரர் அடியக
- ன் பம்மான்
- டை மகன் ஆ
- னை கொன்
- றும் நத்தம்
- கொண்டா
- ந்
அடியகன் – ஏவலன், தொண்டன்; பம்மாண்டி – பறை அடிப்பவன்; நத்தம் – நெய்த்தோர்பட்டி நிலம்
விளக்கம் : மன்னன் பெயரோ ஆண்டுக் குறிப்போ இல்லாத தனி நடுகல் கல்வெட்டு. வீரன் இடக்கையில் கேடயமும் வலக்கையில் குறுவாளும் ஏந்தியுள்ளான். செல்லைவூரரின் ஏவலன் பறையடிப்பவனின் அடியாள் வீரன் ஊரில் அட்டகாசம் செய்த யானையைக் கொன்று தானும் வீரச்சாவடைந்து விடுகிறான். அதற்காக அவன் வீட்டாருக்கு நெய்தோர்பட்டி நிலம் ஊராரால் கொடுக்கப்பட்டது. வீரன் பெயர்க் குறிப்பு இல்லை. பம்மாண்டை பெயரும் இல்லை.
பார்வை நூல்: நடுகல் கல்வெட்டுகளும் சிற்பங்களும் தொகுதி II, பக்.130, ஆசிரியர் ச. கிருஷ்ணமூர்த்தி
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையம் 7 வரி நடுகல் எருது பிடி கல்வெட்டு
- கோவுரிச் சங்கன்
- கருவந் துறையி
- லே எருது விளை
- யாடி பட்டான்.
- சங்கன் மகன் பெ
- ரிய பயலு நட்ட க
- ல்லு
எருது விளையாடி – காளை அடக்கி; கோ – ஆனேறு, நூல் கோற்றல்; உரி – களைதல், கழற்றுதல்
விளக்கம் : மன்னன் பெயர், ஆண்டுக் குறிப்பு, விளையாடிய காரணம் ஏதும் இல்லாத நடுகல் கல்வெட்டு. ஆத்தூர் கருமந்துறையில் 400 ஆண்டுகள் முன் நடந்த எருது பிடித்து, கழுத்தில் கட்டியதை உருவும் போட்டியில் விளையாடிய போது அந்த எருது முட்டி சங்கன் சாவடைந்தான். இவனது மூத்த மகன் இதன் நினைவாக நடுகல் நட்டான். இதே விளையாட்டாக இருந்ததாலோ என்னவோ அவன் “கோவுரி” என்ற அடையுடன் அழைக்கப்படுகிறான். இன்றைய சல்லிக்கட்டு அக்காலத்தே கொங்கில் கோவுரி எனப்பட்டது.
பார்வை நூல்: கல்வெட்டு காலாண்டு இதழ் 15, பக். 14 த நா தொ து வெளியீடு
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம் குலசேகரபுரம் ஊரில் கிட்டிய இறுதி 6 வரிக் கல்வெட்டு
- _ _ _ ஆற்றுந பெருமகன் உய
- ர் பிரம்மதாய்ய பெற்றமை தெருட்டு
- கொல்லாறு விட நடந்து கொண்
- டார் மணற்குடி பார்ப்பார் சா
- ன்றார். வடக்குஇருக்கை அறி நாட்டா
- த் தெல்லையாக நட்ட கல்
தெருட்டு – அறிவிப்பு; கொல்லாறு – ஏச்சு பேச்சு, ஏளனம் (அ) தீங்கான பேச்சு, கொல் குறும்பு, act of teasing; இருக்கை – குடியிருப்பு; நாட்டாத்து – ஊர்;
விளக்கம் : கடைசி ஆறு வரிகள் தவிர்த்து மேல் இருந்த கல்வெட்டு வரிகள் உடைந்து சிதைந்துவிட்டன. எனவே முழுச் செய்தியும் அறிய முடியவில்லை. _ _ _ ஆற்றுந பெருமகன் உயர்ந்த பிரம்மதாயம் / பிரம்ம தேயம் பெற்றதை அறிவித்தவுடன் மணற்குடி பார்ப்பாரச் சான்றோர் தம் ஏச்சு பேச்சுகளை விட்டு நல்லமுறையில் நடந்து கொண்டனர். இந்தப் பிரம்மதேயத்தின் வடக்குக் குடியிருப்பை அறிந்துகொள்ள ஊர் எல்லையாக நடப்பட்ட கல் இது. பெருமகன் என்பது ஆட்சியாளனைக் குறிக்கிறது. அவன் மணற்குடி பார்ப்பாரச் சான்றோரரான பிராமணருக்கு இறையிலி நிலக்கொடை அறிவித்துள்ளான். அதன் வடக்கு எல்லை இது என்று கல்வெட்டு அறிவிக்கின்றது. இதன் மூலம் பார்ப்பாரச் சான்றார் என்பது பிராமணரைக் குறிப்பது தான் நாடார் குலத்தவரை குறிப்பதல்ல என்பது தெளிவு. சிலர் இதற்கு நாடாருள் பார்ப்பர் என்று தவறாகக் கருத்துத் தெரிவிக்கின்றனர். பிரம்மதேயம் பிராமணருக்கு மட்டும் கொடுக்கப்படுவது என்பதைக் கருதவேண்டும். கல்வெட்டில் இ, ய, த, ட எழுத்துகள் பழமையானவை. இக்கல்வெட்டில் குறில் எழுத்துகளும் மெய் எழுத்துகளும் புள்ளியிடப்பட்டுள்ளதால் இது 7ஆம் நூற்றாண்டினது என்று தெரிகிறது. இதே போல மதுரை மேலூரின் பெருமாள் மலை அருகே 13ஆம் நூற்றாண்டின் “நாயனார் திருமுகப்படி திருமுகூர் நாட்டு தேவதானம் பட்டூர்க்கு எல்லை” எல்லைக் கல்வெட்டு கிட்டியது ஒப்பு நோக்கத் தக்கது.
பார்வை நூல்: நடுகல் கல்வெட்டுகளும் சிற்பங்களும் தொகுதி II, பக். 176, ஆசிரியர் ச. கிருஷ்ணமூர்த்தி. கல்வெட்டு காலாண்டு இதழ் 11 பக்.33
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம் கப்பலூர்ப்பட்டியில் உள்ள 23 வரி கல்வெட்டு
ஸ்ரீ கோக்கண்டன் மாந்தரனுக்குச் செல்லா நின்ற யாண்டு அ (8). இவ்வாண்டு (பெரு)மாள் கீழ் வாழ்ந்து மழநாட்டான் மூர்க் கூற்றத்துக் கீழ்க்கூற்றில் எதகம்பாடி வெள்ளான் கூத்தன் காடி நிருத்தியான நெருப்பறையாசாரிகள் மக னிருத்தி விரதி (சூரன்) றந்தையாரையுந் தாயாரையுஞ் சாத்திச் செய்வித்த கிணறும் வட்டும்.
பெருமாள் – மன்னன்; காடிக்காரம் – நெருப்புக்கல், ஆயக்கல், silver nitrate acid; நிருத்தி – தேய்க்கும், அழிக்கும்; நெருப்பு அறை – நெருப்புக் கல்; வட்டு – நீர் முகக்கும் கலன்
விளக்கம் : மன்னன் கோக்கண்டன் மாந்தரனின் எட்டாம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டு. இவன் களப்பிர மன்னன் என்றும் சேரன் என்றும் இரு வேறு கருத்து நிலவுகிறது. இந்த மன்னன் கீழ் நேரடியாகப் பணி செய்து வாழ்பவனான மழநாட்டான்மூர் கூற்றத்தின் கிழக்கில் எதகம்பாடி ஊரைச் சேர்ந்த நெருப்புக்கல் உரைக்கும் நெருப்புக் கல் ஆசாரி வெள்ளான் கூத்தனுடைய மகன் விரதி சூரன் என்பவன் தன் தந்தையையும் (வெள்ளான் கூத்தன்) தாயையும் நினைவில் கொண்டு பொது மக்கள் பயனுற கிணறும் நீர்க்கலனும் செய்தான். இவனும் இவன் தந்தையும் உலோகப் பணியோடு (metallurgy) தொடர்புடையவர் போலும்.
பார்வை நூல்: கல்வெட்டு காலாண்டு இதழ் 85, ஆண்டு: 2011 பக்.4 & இதழ் 66 பக். 42, ஆண்டு: 2005
குமரி மாவட்டம் கல்குளம் வட்டம் புலியூர்க் குறிச்சி கிராமத்தில் உள்ள உதயகிரிக் கோட்டை 13 வரி கிருத்துவர் கல்லறைக் கல்வெட்டு
- லோகத்திலே பரதேசி கிறிஸ்துவனே
- நில்லு நினையுங்கோ
- இவ்விடத்திலே யிருக்கிற
- வலிய காப்பிதாருட மகன் செரிய கப்பித்தான்
- யுவான் யஸ்தாக்கியோ வென்தொ தெலுனுவ 9(00)
- 2(0)1 ஆண்டு ஆவணி மாதம் 12 நாள் செவாயி கிளமைக்கு பிற
- ந்து 9(00)4(0) ஆண்டு சித்திரை மாதம் 2(0)2 நாள் திங்கள் கிள
- மைக்கு களக்காட்டுச் சண்டையிலே காயப்பட்டு
- 9(00)4(0)1 ஆண்டு புரட்டாசி மாதம் 9 நாள் சரீரம்
- விழுந்து போகவும் செய்து அவருடைய
- ஆற்பனாவுக்கு உதவியாக சறு
- வேசுரனோட வேண்டி
- க் கொள்ளவும் ஆமென்.
பரதேசி – வெளிநாட்டு; நினை – அஞ்சலி; வலிய – பெரிய; கப்பித்தான் – படையணி தலைவன், captain; செரிய – சிறிய; ஆற்பனா – ஆத்மா;
விளக்கம் : திருவிதாங்கூர் அரசர் மார்த்தாண்ட வர்மாவின் படைத்தளபதி தச்சு வீரர் திலெனாய் (Euastachius Benedictus de Lannoy (1715 – 1777). இவருடைய மகன் சிறிய கப்பித்தான் யுவான் யஸ்தாக்கி யோவென் தொ தெலுனு (Yuvan Euastace Johannes de Lannoy) கொல்லம் ஆண்டு 921 (1745) இல் ஆவணி மாதம் 12 நாள் செவ்வாய்க் கிழமையில் பிறந்தவர். இவர் தமது 19 வயதில் கொல்லம் ஆண்டு 940 (1764) இல் சித்திரை மாதம் 22 நாளில் திங்கட்கிழமை அன்று களக்காட்டுப் போரில் காயமடைந்தார். பின் 8 மாதம் 17 நாள் கழித்து 941 (1765) இல் புரட்டாசி மாதம் 9 ஆம் நாளில் 20 ஆம் வயதில் உடலை விட்டு ஆவி பிரிந்தது. அவருடைய ஆன்மாவுக்கு ஆறுதலாக உலகத்தில் வாழும் வெள்ளை நாட்டவரே இங்கு நின்று நினைத்து எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்க . ஆமென்!! இவர் தமிழகத்தில் குடி இருந்ததால் உரோமன் கத்தோலிக்க முறைப்படி புதைக்கப்பட்டாலும் இவரது பிறப்பும் இறப்பும் தமிழில் எழுதப்பட்டது. இவருக்கு பின்னர் இறந்த தந்தை திலெனொய் மகனுக்கு அருகேயே புதைக்கப்பட்டு அவரது கல்லறை ஆவணம் (epithet) தமிழ், இலத்தின் மொழிகளில் எழுதப்பட்டுள்ளது.
பார்வை நூல்: கல்வெட்டு காலாண்டு இதழ் 72, பக்.9 ஆண்டு 2006
மயிலாடுதுறை மாவட்டம் திருவீழிமிழலை (திருவிந்தளூர் செப்பேடு, பக்கம். 186)
நமக்கு யாண்டு முப்பத்தஞ்சாவது நாள் நூற்றிருபத்தொன்றினால் வரியிலிட்டுக் குடுத்தபடியும் நமக்கு யாண்டு முப்பத்தஞ்சாவது நாள் நூற்றினால் கங்கைகொண்ட சோழபுரத்தில் நம் வீடு முடிகொண்டசோழநில் தெற்கில் மறைவிடக் கூடத்தில் நாம் கூறை உடா நிற்க விக்கிரம சோழபாண்டியந் நமக்குச் சொல்லி நூற்று முப்பத்தின்மர் சதுர்வேதி பட்டர்களுக்கு ப்ரஹ்மதேய இறையிலியாக குடுப்பித்த சோழகுல நாராயணச் சதுர்வேதி மங்கலம் _ _ _
வரியிலிட்டு – எழுதிக் கொடுத்த; வீடு – அரண்மனை; கூறை உடா – ஆடை உடுத்தாமல்
விளக்கம் : முதலாம் இராசேந்திர சோழனின் மகன் வேந்தன் இராசாதிராசனுக்கு 35ஆம் ஆட்சி ஆண்டில் 121 ஆம் நாளில் எழுத்தில் எழுதிக் கொடுத்த அறிவிப்பு ஆணை யாதெனில், எனக்கு 35ஆம் ஆட்சி ஆண்டில் நாள் 100 அன்று கங்கைகொண்ட சோழபுரத்தில் என் அரண்மனை முடிகொண்ட சோழனில் தெற்குத் திசையில் இருந்த மறைவிடக் கூடத்தில் நான் ஆடை ஏதும் உடுத்தாமல் (இலங்கோடுடன்) நின்றிருக்க, விக்கிரம சோழபாண்டியன் என்னிடம் சொல்லியதால் 130 சதுர்வேதம் கற்ற பிராமணர்களுக்கு பிரம்மதேய இறையிலிக் கொடையாக கொடுக்கப்பட்ட ஊர் சோழகுல நாராயணச் சதுர்வேதி மங்கலம் ஆகும்.
வேந்தன் எண்ணெய்க் குளியலாட எண்ணெய் பூசி இருந்ததால் ஆடை உடுத்தாமல் இருந்திருக்கலாம். மேலும் அமைச்சன் அல்லது அணுக்கச் செயலன் விக்கிரம சோழபாண்டியன் இப்படி மறைவிடம் செல்லும் வகையில் வேந்தனுக்கு நெருங்கிய குருதி உறவினனாக இருத்தல் வேண்டும். முதலாம் இராசேந்திரன் தனது மகனை மதுரைக்கு ஆட்சியாளனாக அமர்த்திய போது அவனுக்குச் சோழ பாண்டியன் என்று பட்டம் சூட்டினான் என்பதில் இருந்து இது உறுதியாகிறது. இராசாதிராசன் 100 ஆம் நாளில் இந்தக் கொடைக்கு ஒப்புதல் அளித்தாலும் ஓலை ஆணை என்னவோ 21 நாள் கழித்துத் தான் எழுதி வழங்கப்பட்டது. ஆக அதன் ஏற்பாட்டிற்கு இத்தனை நாள் ஆகியுள்ளது.
பார்வை நூல்: கங்கைகொண்ட சோழபுரம் கல்வெட்டுகள், பக். 101, இல. தியாகராஜன்.
சதிகல் கல்வெட்டு (இடம் கொங்கின் வடமேற்கு பகுதியாக இருக்கலாம். ஊர்ப் பெயர் தெரியவில்லை)
வீரபிரதாப ஸ்ரீ _ _ _ _ ராயமகாராயர் பிருத்விராச்சசியம் செய்திருக்க சக வருஷம் 1339 ஆவது ஹேவிளம்பி சம்வத்சரத்து பாத்திரபதசுத்த பஞ்சமி ஸ்ரீ சகலாட்சபுரத்தும் ரெ _ _ மகன் புக்கரன் ஸ்வரக்கத்தன் ஆனதில் அவன் பெண்டாட்டியர் மூவர் தோளும் கையும் கொடுத்த கம்பம்
சொர்க்கத்தன் – இறந்து சொர்க்கம் புகுந்தவன்
விளக்கம் : விசயநகர வேந்தன் வீர விஜயராய மகாராயர் மண்ணுலகு ஆண்டு கொண்டிருந்த சக ஆண்டு 1339 (கி.பி.1417) இல் ஏவிளம்பி ஆண்டில் பாத்திரபத சுத்த பஞ்சமி அன்று ஸ்ரீ சகலாட்ச புரத்தும் ரெ _ _ மகன் புக்கரன் இறந்து சொர்க்கம் ஏகினபடியால் அவனது மூன்று மனைவியரும் உடன்கட்டை ஏறி மாண்டதன் நினைவாகத் தோளும் கையும் கொடுத்த கம்பம் நாட்டப்பட்டது.
இறந்த பெண்டிரின் நினைவாக இவ்வாறான சிற்பம் அல்லது சதிக்கல் கல்வெட்டுகளுடன் இருப்பது தமிழகத்தில் மிக அரிது. சதிக்கல் கருநாடகத்தில் அதிகமாக காணப்படுகிறது.
பார்வை நூல்: செந்தமிழ் தொகுதி 3 & தென்னிந்திய வீரக் கற்கள், பக். 379-380, வெ. கேசவராஜ்