குறளின் கதிர்களாய்…(483)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(483)
எல்லார்க்கும் நன்றாம் பணித லவருள்ளுஞ்
செல்வர்க்கே செல்வந் தகைத்து.
–திருக்குறள் – 125 (அடக்கமுடைமை)
புதுக் கவிதையில்…
புவி வாழ்வில்
செருக்கு ஏதுமின்றி
அடக்கமானவராய் ஒழுகுதல்
பொதுவாக
அனைவருக்கும் நல்லதாகும்,
அதிலும்
சிறப்பாய்ச் செல்வர்களுக்கு
அதுவே மேலுமொரு
செல்வமாக விளங்கும்…!
குறும்பாவில்…
செருக்கின்றிப் பணிவுடன் ஒழுகுதல்
எல்லோருக்கும் நல்லதாகும், அவர்களுள் செல்வர்களுக்கே
அதுவே மேலுமோரு செல்வமாகும்…!
மரபுக் கவிதையில்…
மண்ணில் மனித வாழ்வினிலே
மற்றோர் முன்னில் செருக்கின்றி
எண்ணம் உயர்வாய்ப் பணிந்திருத்தல்
எல்லார் தமக்கும் நன்றாகும்,
திண்ண மாக அதுவேதான்
திரண்ட செல்வம் கொண்டோர்க்கு
வண்ண மயமாய் மேலுமொரு
வளமாம் செல்வம் ஆகிடுமே…!
லிமரைக்கூ…
செருக்கிலா அடக்கம் நன்றே
எல்லோருக்கும், அதுவே செல்வர்கள் தமக்கு
மேலுமோர் செல்வமாகும் நின்றே…!
கிராமிய பாணியில்…
வேணும் வேணும்
வாழ்க்கயில வேணும்,
அவசியமா வேணும்
அடக்கம் வேணும்..
தலக்கனம் இல்லாம
தன்னடக்கத்தோட வாழுறது
ஒலகத்தில
எல்லாருக்கும் நல்லது,
அதுலயும்
செல்வந்தரா இருக்கவுங்களுக்கு
அதுவும் சேந்து
கூடவொரு செல்வமா
ஆயிடுமே..
ஆதால,
வேணும் வேணும்
வாழ்க்கயில வேணும்,
அவசியமா வேணும்
அடக்கம் வேணும்…!