குறளின் கதிர்களாய்…(479)

செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(479)
மங்கல மென்ப மனைமாட்சி மற்றத
னன்கல னன்மக்கட் பேறு.
–திருக்குறள் -60 (வாழ்க்கைத் துணைநலம்)
புதுக் கவிதையில்…
நற்குண
நற்செயல்களையுடைய மனைவி
ஒருவனுக்கு அமைவது
இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்பர்
எல்லாமறிந்த பெரியோர்,
அந்த அழகுக்கு
அழகு சேர்க்கும்
அணிகலனாய் விளங்குவது
நல்ல பிள்ளைகளைப்
பெறுவதே…!
குறும்பாவில்…
நற்குணவதி மனைவியாய் அமைவது
இல்லறத்தில் மங்கலமென்பர் பெரியோர், அதற்கணிகலன்
ஆவது நன்மக்களைப் பெறுவதே…!
மரபுக் கவிதையில்…
மங்கை யொருத்தி குணவதியாய்
மனைவி யானால் ஒருவனுக்கு,
மங்கலம் தங்கும் இல்லிலென
மதிப்பு மிக்கோர் உரைத்தனரே,
பொங்கும் அழகுக் கணிகலனாய்ப்
பொருந்தி அழகு சேர்த்திடுமே
தங்கும் செல்வம் பிள்ளைகளாய்த்
தாங்கி யவளே பெற்றிடலே…!
லிமரைக்கூ…
நற்குண மனைவியால் தங்குமே
மங்கலம் இல்வாழ்வில், நன்மக்களைப் பெறுதல்
அழகுக்கழகு சேர்க்கும் எங்குமே…!
கிராமிய பாணியில்…
வேணும்வேணும் தொணவேணும்
வாழ்க்கயில ஒருத்தனுக்கு
நல்ல தொணவேணும்,
நல்ல பொஞ்சாதி தொணவேணும்..
நல்ல கொணமுள்ள பொஞ்சாதி
ஒருத்தனுக்குக் கெடச்சிண்ணா
அதுதான் குடும்ப வாழ்க்கயில
ரெம்ப அழகுண்ணு
பெரியவுங்க சொல்லியிருக்காங்க,
அதோட
அந்த அழகுக்குக்
கூடுதலா அழகுசேக்கிற ஒசந்த
நககளப்போலத்தான் ஆவும்
நாம பெத்துக்கிற
நல்ல கொழந்தையளுமே..
அதால
வேணும்வேணும் தொணவேணும்
வாழ்க்கயில ஒருத்தனுக்கு
நல்ல தொணவேணும்,
நல்ல பொஞ்சாதி தொணவேணும்…!