Blog

  • நவராத்திரி நவிலும் தத்துவம்!

     

    காயத்ரி பாலசுப்ரமணியன்

    மனிதன் வாழ்வில் பாடுபடுவது நல்ல நிலைமையில் இருக்க வேண்டும் என்பதற்காகவே! ஆற்றிவு பெற்று உயர்வுள்ளவனாய் விளங்கும் அவன் உலகில் தனித்து வாழ முடியாது. மற்ற உயிரினங்களைப்பேணி பாதுகாப்பதோடு,  அவனுக்கு பல வளங்களை அள்ளித்தரும் இயற்கையை பாழாக்காமல், சுற்றுப்புற சூழலோடு இணைந்து வாழ வேண்டும் என்பதையும்,  ஆறறிவு உடைய  அவன்   ஆன்மீகப் படிகளில் ஏறி இறைவனை அடைய வேண்டும் என்ற  இரண்டையும் படிப் படியாய் நமக்கு விளக்குவது நவராத்திரியில் வைக்கப்படும் கொலு பொம்மைகள்.
    முதல் படியில் நாம் வைப்பது  ஓரறிவு கொண்டபுல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள். .இரண்டாவது படியில் இரண்டறிவு கொண்ட நத்தை, சங்கும்,  மூன்றாவது படியில் மூவறிவு உயிர்களை கொண்ட, கரையான், எறும்பு போன்ற பொம்மைகளும், நான்காவது படியில் நான்கு அறிவு கொண்ட தும்பி, வண்டு பொம்மைகளும், ஐந்தாவது படியில் ஐந்தறிவு உடைய விலங்குகள், பறவைகள், பொம்மைகளும் இடம் பெற்றிருக்கும். இந்த ஐந்து படியில் உள்ள  மிருகங்கள், பறவைகள், பூச்சிகள் யாவும் மனிதனின் உணவுச் சங்கிலியில்   பெரும் பங்கு வகிக்கின்றன. இந்த சங்கிலி அறுபடாமல் மனிதன் பார்த்துக் கொண்டால்தான் அவன் உணவு, உடை, இருப்பிடம் எதிலும் சிக்கல் ஏதுமில்லாமல் இருக்கும். ஆனால் இந்த சங்கிலி சிதைக்கப்பட்டு விட்டது என்பதை   இயற்கை நமக்கு,  அவ்வப்போது, கன மழை,  பஞ்சம், கடும் வெய்யில், பனிப்பாறை உருகுதல், சுனாமி போன்ற இயற்கை சீற்றங்கள் மூலமாக நமக்கு எச்சரிக்கை மணி அடித்துக் கொண்டே இருக்கிறது!  ஆனால் மனிதன்தான் விழித்துகொள்வதில்லை. மனிதன் விழித்துக் கொண்டு , அவன் வாழ்வின் அடிப்படை ஆதாரமாக விளங்கும் இயற்கையை மனிதன் போற்றிக்காக்க வேண்டும் என்பதைத்தான் முதல் ஐந்து படிகளும் உணர்த்துகின்றன.
     ஆறாவது படியில் ஆறறிவு படைத்த  மனிதர்களின் பொம்மைகள் இருக்கும். மனிதன் படைக்கப்பட்டது இறையருளைப்பெற்று உய்ய வேண்டும் என்பதற்காகவே. இதற்கு அவனுக்கு வழிகாட்டியாய் விளங்குவது புராணங்கள் மற்றும் இதிகாசங்கள். அதனால்தான் ஏழாவது படியில் மனிதனுக்கு வழி காட்டியாக விளங்கும் மகான்கள், சித்தர்கள், முனிவர்கள் ஆகியோரின் பொம்மைகள் இடம் பெற்றிருக்கும். எட்டாவது படியில்  தேவர்கள் மற்றும் இறைவனின் பல்வேறு அவதார உருவங்களும், ஒன்பதாவது படியில்  நவராத்திரி நாயகிகளாய் விளங்கும்  துர்க்கை,  லட்சுமி,  சரஸ்வதி, ஆகியோருடன் பொம்மைகளும் இருக்கும்.
    ஆறாவது படியில் இருக்கும் மனிதன் ,  மன உறுதியுடன், ஒழுக்கமாகவும் இருந்து, ஏழு மற்றும்  எட்டாம் படிகள் காட்டும் வழியைப் பிடித்துக் கொண்டு விட்டால், ஒன்பது படியான இறைஅருளை எட்டிவிடலாம்! அதனால்தான் நவ ராத்திரி என்று ஒன்பது நாள் கொண்டாட்டம்.!  நவம் என்றால் ஒன்பது என்று நம்  எல்லோருக்கும் தெரியும்.   ஆனால் நவம் என்றால், கேண்மை, சினேகம், கார்காலம்,  புதுமை, பூமி என்று பல அர்த்தங்களை தமிழ்மொழி அகராதி நமக்குத் தருகிறது.  கேண்மை என்றால் உறவு,மனிதன் தன் உறவுகளையும், சினேகம் காட்டும் நட்பையும் அழைத்து பெருமைப்படுத்த இந்தப் பண்டிகையை  ஒரு நிலைக்களனாய்  உருவாக்கி வைத்துள்ளனர் நம் முன்னோர்கள்.  அத்துடன் கொலு கொண்டாடும் காலம் மழைக்காலமாகிய கார்காலம்.  புதுமை. என்றால் அற்புதம். பூமியில் மானிடராய் பிறந்த நமக்கு , நல்லபடியாக செல்லும் ஒவ்வொரு நாளும் புதுமைதான், பரம்பொருள்  நமக்கு அளிக்கும் அருட்கொடைதான்! அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஒன்பது நாளும் சக்தியை விதவிதமாக ஆராதிப்போம். அன்னையவள் அருளைப் பெறுவோம்! 

    படத்துக்கு நன்றி.

    http://en.wikipedia.org/wiki/File:Navratri_Golu.jpg

    Share
  • அன்பின் மறுபெயர்!

     

    இசைக்கவி ரமணன்

    ஒரு புதிய கவிதை, பழைய பாடல்

    ஒவ்வொரு நாளும் கவிதைகள்
    ஒவ்வொரு வேளையும் கானங்கள்
    ஓங்கி வளர்கிற தோர்பூசை
    ஒய்யா ரிக்கிது தான்சேவை
    ஒவ்வொரு கணமும் ஆனந்தம்
    ஒவ்வொரு கனவும்  மிகவும்நிசம்
    ஒருகணம் போலொரு கணமில்லை
    ஒவ்வொரு பொழுதும் புதுஎல்லை!

    “அம்மா!” என்னும் குரல்கேட்க
    அவளுக் காசை மிகவுண்டு
    அவளது தன்னந் தனிமையிலே
    அனுபவித் துள்ளே நெகிழ்வதுண்டு
    அம்மா என்னும் மந்திரச்சொல்
    அதுபோல் எதுவும் இங்கில்லை
    அவள்செவி வேறெதும் கேட்பதில்லை
    அதுவே அதுவே அவள் எல்லை!

    குட்டியைக் கவ்விய தாய்ச்சிங்கம்
    கொஞ்சம் தரையில் குலவவிடும்
    கூரிய கண்கள் ஒருசிறிதும்
    குட்டியை விட்டு விலகாது
    எட்டும் தொலைவில் அவள்காவல்
    என்றும் ஒளியாய்ச் சூழ்ந்திருக்கும்
    இடையே கவலை களிப்பாட்டம்
    என்னும் நாடகம் தொடர்ந்திருக்கும்

    மறந்த நினைவு மீள்கையிலே
    மடியைத் தேடி மனம்பதறும்
    மறக்கத் தெரியா மனத்தவளின்
    மணத்தில் முகத்தைத் தேய்த்திருக்கும்
    பிறந்து வளர்வது அவளில்தான்
    பின்னும் முன்னும் அவளில்தான்
    பிணியும் குணமும் அவளில்தான்
    பிணக்கும் தீர்வும் அவளேதான்!

    ஆழ மனத்தின் அடியிலிருந்து
    அம்மா என்றே அழைப்பவரை
    அல்லல் ஏதும் அண்டிடுமா?
    அற்ப மரணம் தீண்டிடுமா?
    வேழம் எலிவளை வீழ்ந்திடுமா?
    வேலை நாணல் பிளந்திடுமா?
    வேதனை தீர்க்கும் நாமமிது!
    வேதம் பணியும் நாமமிது!

    ஆயிரம் நாவுகள் இருந்தாலும்
    அதுதான் சொல்லித் தீர்ந்திடுமோ?
    அம்மா அம்மா என்றிடுவோம்
    ஆனந் தக்கூத் தாடிடுவோம்
    வாயினிக்க வரும் வார்த்தைகள்
    வண்ணக் கவிதைக ளாகட்டும்
    வற்றிக் கிடக்கும் தடங்களிலே
    வசந்த நதிகள் பொங்கட்டும்!

    அன்பின் மறுபெயரைச் சுவையுங்கள்!

     

    Share
  • பேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (46)

     

    தமிழில் சந்தி விதிகளை ஒரு சில தமிழ் அறிஞர்களை விட்டு யாரும் பின்பற்றுவதாகவும், தெரிந்து பேசுவதாகவும், அவை பற்றி உறுதியான கொள்கைகளை கொண்டிருப்பவர்களாகவும் தெரியவில்லை. புணர்ச்சிகளில் வல்லினம் மிகுமா மிகாதா என்பது என் கணிப்பில் 99.99% எழுதும் தமிழர்களுக்கு தெரியாது. இந்த அளவு வழக்கிறந்துவிட்ட நியதிகளை தொடர்ந்து பேசுவது நியாயமா?

    — வன்பாக்கம் விஜயராகவன்

    பதில்

    ஒரு சொல் உருபுகள் சேர்ந்து அமையும்போது அடுத்தடுத்துச் சாதாரணமாக வராத ஒலிகள் வந்தால்  அவற்றை மாற்றிச் சொல்லொலி அமைப்பைச் சரிப்படுத்துவது  சந்தி. இது உச்சரிப்பையும் எளிமையாக்குகிறது. மாற்றத்தில், ஒரு ஒலியை மற்றொன்றாக்குதல், புதிய ஒலியைத் தோற்றுவித்தல், உள்ள ஒலியை நீக்குதல் ஆகிய மூன்றும் அடங்கும். இந்த மாற்றங்கள் எழுத்திலும் பிரதிபலிக்கும். இது அகச்சந்தி. ஒரு தொடரில் அடுத்தடுத்து வரும் இரண்டு சொற்களிடையேயும் இந்த மாற்றங்கள் நிகழும். இது புறச்சந்தி.

    அகச்சந்தி சொல்லை ஒருமைப்படுத்துகிறது. இது பெரும்பாலான மொழிகளில்  உள்ளது. தமிழிலும் துவக்க காலத்திலிருந்து இன்று  வரை உள்ளது. தமிழ் பேசும், எழுதும் அனைவராலும் பின்பற்றப்படுகிறது. சில எடுத்துக்காட்டுகள்: ஆள் + கள் = ஆட்கள், பணம் + காரன் = பணக்காரன், அம்மா + ஐ = அம்மாவை, வீடு + க்கு = வீட்டுக்கு, கல் + த்த் + ஆன் = கற்றான், ஆள் + ந்த் + ஆன் = ஆண்டான். சொல்லாக்கத்தில் உருபுகள் சேரும்போது அவற்றை இணைக்கும் உருபு (சாரியை) தோன்றுவது இக்காலத் தமிழில் குறைந்துவருகிறது. அது + அன் + ஐ = அதனை, வீடு + இன் + க்கு = வீட்டிற்கு, வா + ந்த் + அன் + அன் = வந்தனன் முதலிய சொற்களுக்குப் பதில் அதை, வீட்டுக்கு, வந்தான் முதலிய சொற்கள் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனாலும், இது + அன் + க்கு = இதற்கு என்னும் சொல்லைப் பேச்சில் போல் இதுக்கு என்று எழுதுவதில்லை.

    டி. கே. சிதம்பரநாத முதலியார்  அகச்சந்தியைப் பிரித்து எழுதலாம் (எ-டு கல்த்தான்) என்று சொன்ன யோசனை எடுபடவில்லை. சொல்லின் ஒலியமைப்பு முறைமைக்கு இது முரணாக இருப்பதே இதற்குக் காரணம்.

    தொகைச் சொற்கள்  தனிச் சொல்லுக்கும் தொடருக்கும்  இடையில் உள்ள அமைப்பு. இவற்றிலும் எல்லாச் சந்தியும் உண்டு. இவை விட்டிசை (pause) இல்லாத ஒரு சொல் தன்மையுடையன என்று சொல்லச் சந்தி உதவுகிறது.

    புறச்சந்தி சில மொழிகளிலேயே  உள்ளது. அவற்றுள் தமிழும்  ஒன்று. இக்காலத் தமிழில்  பெரிய மாற்றம் நிகழ்ந்துகொண்டிருப்பது இதில்தான். ஓலைச்சுவடியில் எழுதப்பட்ட செய்யுளில் மிகுதியான புறச்சந்தி உண்டு. இப்போது தமிழைச் சிறப்புப்பாடமாக எடுத்துப் படிக்கும் மாணவர்களும் சந்தி பிரித்த, அதாவது சந்தி இல்லாத, பதிப்புகளையே படிக்கிறார்கள். புறச்சந்திக்குச் சில காரணங்கள் உண்டு. உயிர்கள் அடுத்தடுத்து வருவதைத் தடுப்பது அவற்றில் ஒன்று. (எ-டு) பார்த்தது + இல்லை = பார்த்ததில்லை, பார்த்த + இடத்தில் = பார்த்தவிடத்தில், இலக்கண + ஆசிரியர் = இலக்கணவாசிரியர். மெய்யை அடுத்து வரும் உயிர் மெய்யின்மீது ஏறி நிற்க வேண்டும் என்பது இன்னொரு காரணம். எ-டு ஊரில் + இல்லை = ஊரிலில்லை; நேரம் + ஆகாது = நேரமாகாது. ஒரு சொல்லில் அடுத்தடுத்து வராத மெய்யெழுத்துகள் சொற்சேர்க்கையால் அடுத்தடுத்து வரும்போது ஒரு மெய்யை மாற்றும் தேவை பிறிதொரு காரணம். (எ-டு) காலம் + கடத்தினான் = காலங்கடத்தினான், காலம் + தாழ்த்தினான் = காலந்தாழ்த்தினான், முதல் + சொல் = முதற்சொல். இக்காலத் தமிழில் இந்தச் சந்தி வழக்கு பெரிதும் குறைந்துவிட்டது. இந்த மாற்றம் தமிழ் வகுப்புகளிலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

    புறச்சந்தியில்  உயிரில் முடியும் சொல்லுக்குப்பின் வல்லெழுத்தில் துவங்கும்  சொல் வரும்போது அந்த வல்லெழுத்து  மிகுந்து முதல் சொல்லோடு சேர்ந்து ஒற்று மிகுதல் இலக்கண ஆசிரியர்கள் வலியுறுத்தும் சந்தி. தொடரில் சொற்களிடையே இலக்கண உறவைக் காட்டுவதற்காக இது விதிக்கப்படவில்லை என்றாலும், அது இந்தச் சந்தியின் ஒரு பயன். காலைப் பார், காலை பார் என்னும் தொடர்களில் முதலாவதில் காலை இரண்டாம் வேற்றுமை உருபு ஏற்ற பெயர்; இரண்டாவதில் காலை வினையடை. காலைச் சாப்பாடு இல்லை, காலை சாப்பாடு இல்லை என்னும் தொடர்களில் முதலதில் காலை பெயருக்கு அடையாகும் பெயர்; இரண்டாவதில் காலை வினையடை. முன்னுள்ள சொல்லில் வல்லெழுத்து இரட்டித்து நிற்கும்போது பின்னுள்ள சொல்லின் முதல் வல்லெழுத்து மிகுவது ஓசையமைதிக்காக. எ-டு எனக்குக் கொடு, எடுத்துக் கொடு, (வந்து கொடு என்பதில் மிகுவதில்லை), பாட்டுப் பாடு (வீடு பார் என்பதில் மிகுவதில்லை), நேற்றுப் பார்த்தேன், நாளைக்குப் பார்ப்பேன் (நாளை பார், இன்று பார் என்பதில் மிகுவதில்லை). முன்னுள்ள சொல் உயிரில் முடிந்து பின்னுள்ள சொல் வல்லெழுத்தில் துவங்கினால், வேகமாகப் பேசும்போது இடைவெளி போய் வல்லெழுத்து மென்மையாகும் வாய்ப்பைத் தடுப்பதற்கும் ஒட்டு இரட்டிக்கும் சந்தி பயன்படுகிறது. காகம் என்னும் சொல்லின் நடுவில் உள்ள ககரம் முதலிலுள்ள ககரத்தை விட வன்மை இழந்து ஒலிப்பதைப் போல, தலைக்கனம் என்னும் தொகைச்சொல்லில் கனம் என்னும் சொல்லில் உள்ள ககரம், ஒற்று இரட்டிக்காவிட்டால் உரசொலியாக ஒலிக்கும். இப்படிச் சில காரணங்கள் இருந்தாலும், செயவென் எச்சத்திற்குப் பிறகு, சுட்டுப்பெயரடைக்குப் பிறகு என்று பல இலக்கண வடிவங்களுக்குப் பிறகு ஒற்று இரட்டிப்பதற்குக் காரணம் இல்லை.

    சுட்டுப் பெயரெச்சத்திற்குப் பின் மிகும் ஒற்று மற்றப் பெயரெச்சத்தின் பின் மிகுவதில்லை. ஒற்று எங்கு இரட்டிக்கும் என்று சொல்ல முடியுமே தவிர ஏன் இரட்டிக்கும் என்று மொழியின் பொது இயல்பு சார்ந்த காரணம் சொல்ல முடியாது.

    அச்சும் அதோடு  நிறுத்தக்குறிகளும் வந்த பிறகு தமிழில் சந்தி  பற்றி மறுபார்வை ஏற்படுகிறது. நிறுத்தக்குறி சில வகை  விட்டிசையைச் சுட்டுகிறது. விட்டிசை உள்ள இடத்தில் சந்தியை விடுவது இயல்பாகிறது. தொடரில் உள்ள சொற்கள் பிரிந்து விட்டிசையோடு உச்சரிக்கப்படுவதால், இரு உயிர்களின் தொடர் வரவு, மெய்யேறாமல் உயிர் வருவது, சொல்லில் இல்லாத மெய்மயக்கத்தைத் தடுப்பது முதலனாவற்றைச் செய்யும் சந்தி விதிகளை இக்காலத்தில் பயன்படுத்துவதில்லை.  பார்த்த இடத்தில், இலக்கண ஆசிரியர், ஊரில் இல்லை, நேரம் ஆகாது, காலம் கடத்தினான், முதல் சொல் முதலியனவும், நான் வெளியே போக, தம்பி தூங்கிவிட்டான்; கடைக்குப் போக, பணம் என்னிடம் இல்லை; விலையைக் கேட்டு, பொருளைப் பார்த்து, பணத்தைக் கொடு முதலியனவும் சந்தி இல்லாமல் எழுதப்படுகின்றன. சந்தி இன்று ஒரு தொடரையோ சொல்லையோ ஒலிக்கும் முறையைப் பிரதிபலிக்கிறது. எழுத்தில் காற்புள்ளி, அரைப்புள்ளி முதலியவற்றைப் பேச்சில்  சுருதி ஓசை (intonation) காட்டும்போது சந்தி தேவையற்றதாகி விடுகிறது. இது ஒற்று இரட்டிக்கும் சந்திக்கும் பொருந்தும்.

    தனி எழுத்தை ஒலிக்கும்  முறையையும் சந்தி பிரதிபலிக்கிறது. தோசை என்ற சொல்லின் முதல்  மெய் ஒலிப்புடன் (voiced) இருப்பதாலும், சாம்பார் என்ற சொல்லின் முதல் மெய் உரசலுடன் (fricative) இருப்பதாலும், சுட்டுப் பெயரடைக்குப் பின் இவை ஒற்று மிகாமல் இந்த தோசை, இந்த சாம்பார் என்று எழுதுவதே இன்று பெருகிவரும் வழக்கு. இரண்டு பெயர் சேர்ந்து வரும் தொகையிலும் இப்படியே: நெய் தோசை, கத்தரிக்காய் சாம்பார்

    தமிழ்ச் சமூகத்தில் வாசிப்பு பரவலாகும் மாற்றம்  ஏற்பட்டபோது வாசித்துப் பொருள் விளங்கிக்கொளவதற்குத் துணையாகச் சொற்களைச் சந்தியால் சிதைக்காமல், அவை தனித்து நிற்கும்போது கொள்ளும் வடிவத்திலேயே, தொடரிலும் தொகையிலும் எழுதும் மரபு பெருகியது. சளிப் பிடித்தது, சொன்னாற்போல, பற்பொடி என்று சந்தியோடு எழுதும் வழக்கை விட சளி பிடித்தது, சொன்னால்போல, பல்பொடி என்று சந்தி இல்லாமல் எழுதும் வழக்கு பெருகியுள்ளது. சொற்களைச் சந்தியால் சேர்த்து நீளமாக எழுதுவதைத் தவிர்க்கும் விருப்பமும் சந்தியைக் குறைக்கிறது.

    சமூகத்திலும் மொழியிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் சந்தி உபயோகத்தை மாற்றியுள்ளன. இக்கால எழுத்து வழக்குக்குப் புதிய சந்தி விதிகள்  எழுத வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அவை எழுதப்படாமல், இன்றைய வழக்கிற்குத் தொடர்பில்லாத பழைய சந்தி விதிகளைப் பள்ளிகள் வலியுறுத்துவதால் மக்களிடையே குழப்பம் இருக்கிறது. சிலர் அகச்சந்தியும் இல்லாமல் சொல்லைப் பிரித்து வீட்டில் இருந்து வந்துகொண்டு இருக்கிறான் என்று எழுதுவதையும் பார்க்கிறோம். குழப்பத்தைப் போக்க, மக்களின் வழக்கை ஒட்டிய புதிய சந்தி விதிகள் இக்காலத் தமிழுக்கு வேண்டும்.

    Share
  • எழில் மிகு அலைமகள்

     

    கவிநயா

    மதியொளி முகத்தினள் கதிரொளி நிறத்தினள்
    தாமரைக் கரத்தினள் தங்கத்தின் குணத்தினள்

    அலைகடல் நடுவினில் அவதரித்தவள் அவள்
    அரிதுயில் மாலவன் மனங்கவர் மனையவள்
    விரிமலர் மீதினில் வீற்றிருப்பவள் அவள்
    பரிகின்ற தாயென புவியினைக் காப்பவள்

    மரகத வண்ணனின் மார்பினில் உறைபவள்
    மறைக ளெல்லாம் போற்றும் மங்கலப் பெண்ணவள்
    கருவிழி இரண்டினால் உறுவினை அழிப்பவள்
    கவிமழை யில்மகிழ்ந்து கனிமழை பொழிந்தவள்

    எழில்மிகு அலைமகள்! (அடானா ராகத்தில் சுப்பு தாத்தா)

    படத்திற்கு நன்றி :

    http://www.astromuni.com/puja/mlk.asp

     

    Share
  • பித்ருக்களுக்கு இரண்டுவார விடுமுறை

     

    விசாலம்

    சம்யமினீ அரசாங்கம் தவறாமல் நடந்து கொண்டிருக்கிறது  . இது என்ன அரசாங்கம் என யோசிக்கிறீர்களா !  இதுதான் எமதர்மனின் ஆபீஸ்   ..தெற்கு திசையில் இருக்கிறது அதற்கு மேலே சரியான  முகவரி கொடுக்க ஒருவரும் இல்லை ஏனென்றால் ஒருதடவை அவரது ஆபீஸுக்குப் போனவர்கள் திரும்பி வருவதில்லை . அந்த  இடம்  அவ்வளவு பிடித்துப்போய்விடுமோ என்னவோ! .அதில் தலைமைப் பகுதி ஏற்று கடமைகளைத் திறம்பட நடத்திவருபவர்  திருவாளர் யமன் .அரசனோ ஆண்டியோ அரசியல் மந்திரியோ அல்லது பாமர மக்களோ  எல்லோருக்கும் ஒரே நீதிதான்  அங்கு லஞ்சம் …..சுப் …..மூச்சு .விடக்கூடாது அந்தப்பேச்சுக்கே இடமில்லை .அந்த ஆபீஸுக்குப் போனவர்கள்  “பித்ருக்கள் “என்ற பெயர் பெறுகின்றனர்  இவர்கள் இருக்கும் குவார்டர்ஸின் பெயர்   பித்ருலோகம்   .இந்த  இடம் பூலோகத்திற்கும் சுவர்க லோகத்திற்கும் இடையில் உள்ள இடம்  என்கிறார்கள் .இங்கு ஒவ்வொரு வீட்டிலும்  மூன்று சந்ததிகள் ஒரே கோத்திரம் கொண்டு வசிப்பார்கள் . இந்தக்கோத்திரத்தில் நாலாவதாக பூலோகத்தில்  ஒருவர் காலமாக

      அவர்  மேலே இந்த இடத்திற்கு வருவார் .அவருக்கு இடம் கொடுக்க முதலில் வந்தவர்  தன் இடத்தைக்காலிசெய்து  சுவர்கம் போய்விடுவாராம் அவருக்கு சுவர்க்கலோகத்தில் இடம் கிடைத்துவிடும் ஒரு அட்வான்சும்  தராமலே ………..

     இவர்கள்   தாங்கள்  பல ஆண்டுகள் கூட இருந்து வாழ்ந்த குடும்பத்தையும் அவரது செல்வங்களையும்  உறவினர்களையும் பார்க்க ஆசைப்பட்டு யமனிடம் ஒரு விண்ணப்பம் கொடுத்தனர் . அதாவது  அவர்களுக்கும்  வருடத்தில் ஒரு முறையாவது லீவு  கிடைத்து தங்கள் குடும்பத்தைக்காண பூலோகத்திற்குச் செல்ல வேண்டும்    என்பது தான் யம தர்ம  பாஸும் {boss}  அவர்கள் விருப்பபடி ஒரு  பதினைந்து நாட்களுக்கு ” ஹாலிடே’ சாங்க்‌ஷன் செய்து  வடை ,பாயசம் பச்சடியுடன் நல்ல விருந்தும் சாப்பிட்டு திருப்தியாக வர வாழ்த்தி அனுப்பினார்   இந்த  விடுமுறை புரட்டாசி  மாதம்  சூரியன்  கன்னிராசியில் பிரவேசித்ததும் பௌர்ணமிக்கு மறுநாள் தேய்ப்பிறை பிரதமையிலிருந்து ஆரம்பித்து  அமாவாசை வரை நீடிக்கும். இந்த ஹாலிடேக்குப்பெயர்  “மஹாளயம் ” வருடா வருடம்   இந்த மஹாளய விடுமுறையில் பித்ருக்கள் .,,மூதாதையர்கள்  பூலோகம் வந்து  தாங்கள் யமராஜன் ஆபீஸுக்குக்கிளம்பிய   நக்‌ஷத்திரத்தில் தங்கள் மகன் வீட்டில் ஆஜராகி நல்ல விருந்து உண்டு திருப்தி திருப்தி திருப்தி என்று மூன்று தடவை சொல்லிவிட்டு  அவரது சந்ததிகளை வாழ்த்திவிட்டு வருவார்கள், மகன் இல்லையென்றால்  சகோதரன் வீட்டிலோ வேறு சகோதரன் போல்  இருக்கும் உறவினர்கள் வீட்டினிலோ போய் சாப்பிட்டும் வருவர் ஆனால்    இவர்களுக்கும் தன்மானம் உண்டு ஆகையால் முறையாக எள்ளும் நீரும் இறைத்து   கூப்பிட்டால் தான் இவர்கள்  வருவார்கள்

    மூன்று தலைமுறைப் பெயர்கள்   சொல்லி  எள்ளும் நீரும்  விட   இவர்கள் வந்து  ஆசிகள் தந்து வாழ்த்திவிட்டுப்போவார்கள் . கறுப்பு  எள் இவர்களுக்கு மிகவும் பிடிக்குமாம் .எள் திருமாலின் வியர்வையிலிருந்து  பிறந்ததாம்.    மிகவும் பரிசுத்தமான தான்யம் இந்த எள். இந்தப் பித்ருக்களை அழைக்க  உதவும்  மற்றொரு கருவி தர்ப்பை .இதற்கு அமிர்தவீர்யம் என்ற பெயரும்   உண்டு .  தர்ப்பையை  குசம் என்றும் சொல்லுவார்கள் . இந்தத்தர்ப்பை  முனையில்  பிரும்மாவும் நடுப்பாகத்தில் விஷ்ணுவும்  மறுமுனையில் ஈசனும் இருக்கிறார்கள் இதன் விசேஷம் என்னவென்றால் நீரில் அழுகாது .நிலத்தில் வாடாது  விதையில்லாமல் சுயம்புவாக  தோன்றியது ,சிலர் நமது ஆன்மாவையை தர்ப்பைக்கு ஒப்பிடுகிறார்கள் எனக்கு இதைப்பற்றி தெரியாது  நான் ஆன்மாவை இதுவ்ரையிலும் பார்த்ததில்லை .

    மஹாளயம் தினங்கள் தவிர்த்து மற்ற அமாவாசை கிரகண புண்ணியகாலங்கள் மாதப்பிறப்பு   அதுவும்  ஆடி  ,தை மாதப்பிறப்பு ,   ஆடி அமாவாசை ,  தை அமாவாசை  இறப்பு பிறப்பு போன்ற நாட்களில் இந்த எள்ளும் தர்ப்பையும் முன்னுக்கு நிற்கின்றனர்  எந்த நேரத்திலும் பித்ருக்கள் வர ரெடியாக இருந்தாலும்  இந்த இயந்திரயுகத்தில் பலர் அவர்களை அழைக்க  அத்தனை சிரத்தைக்  காட்டுவதில்லை

    தங்கள் பிறந்த நாட்கள் , தங்கள் குழந்தைகளின்  பிறந்த நாட்கள் எல்லாம் கேக் வெட்டி தடபுடலாக பார்ட்டி கொடுக்க மனம் விழைகிறதே தவிர பித்ருக்களுக்குச் செய்வதை ஒரு பாரமாக நினைத்துக் கொள்கின்றனர் சிலர். அதுவும் வருங்கால சந்ததியர்களுக்கு அதில் நம்பிக்கையும் இல்லை .தர்ப்பணம் செய்து பித்ருக்களை அழைப்பதில் மஹாளய தினங்கள் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது  .எதை விட்டாலும் இந்தத் தினங்களை விடாமல் மூதாதயர்களுக்கு திதி செய்வது மிகவும்  அவசியம் . அவர்கள் உடலைவிட்டுப்போன திதியில் இதைச்செய்ய வேண்டும்  இதில் மஹாளய பரணி நக்‌ஷத்திரம் மிகவும் விசேஷமானதாம்  இதில்ஒருவர் தமக்குத் தெரிந்தவர்கள்  .உயிரைப்போல் பழகினவர்கள் யாவரையும் நினைத்து அவர்கள் பெயர்களைச்சொல்லி திதி செய்யலாம்  மஹாளயத்தின் ஒன்பதாவது நாளில் சுமங்கலியாக இறந்த பெண்மணிகளுக்குத் திதி செய்ய வேண்டும் அத்துடன் குழந்தைகளாக இருந்து  பின் இறந்து விட்ட செல்வங்களுக்கும் இதைச் செய்யவேண்டும்

    நடுவில் வரும் அஷ்டமி திதியில்  துர்மரணம் செய்துகொண்டவர்களுக்குத் திதி செய்யவேண்டும் சன்னியாசிகளுக்கு சன்னியாஸ்த மஹாளயம் என்று ஒன்று வரும் அதில் அவர்களை நினைத்து திதி தந்து வழிபடுவார்கள் என நினைக்கிறேன் அவர்களின் பிருந்தாவனத்தில் வழிபாடு செய்வார்கள் போலிருக்கிறது ,.

    தர்ப்பணம் செய்யும் போது  எள்ளும் தண்ணீரும் இறைத்து  “தர்ப்பயாமி தர்ப்பயாமி தர்ப்பயாமி என் மூன்றுதடவைகள்  அடிக்கடி  என் அப்பா சொல்வதை நான் பார்த்திருக்கிறேன்   ,

    காருணீக பித்ரு தர்ப்பணம் என்று ஒன்று உண்டு இதில்   தெரிந்தவர்கள் தெரியாத  வம்சாவழியில் உலகைவிட்டுப் போனவர்கள் எல்லோருக்கும் அவர்கள் திருப்தி  பெற திதி  செய்யும் வழக்கமாம் என்று ஒரு புரோகிதர் கூறினார் தேவர்களும் தேவலோகவாசிகள்அனவைரும்  திருப்தியடையட்டும் என்றும் சம்ஸ்கிருதத்தில்  முடிவாக வரும்

    முன்பெல்லாம் இவர்களுக்கு சாப்பிட பல ஐட்டங்கள் கிடைக்கும்.    வடை பாயசம் எள்ளுரண்டை  என்று  நல்ல ராஜமரியாதைகளுடன்  அவர்களை வரவழைத்து வேஷ்டி .அங்கவஸ்த்திரம் [ பத்தாறு  கணக்கில்} போன்ற உடைகளையும் அளித்து ஆசாரமாக அவர்கள் விருப்பப்படி  எல்லாமே நடத்தி பெரிய நுனி இலையில்  வயிறு புடைக்க  விருந்தளிப்பார்கள் .இதை நடத்தி வைத்த வாத்தியார்களும் மிக சிரத்தையாக   நடத்திக்கொடுப்பார்கள்   இப்போது அதெல்லாம் மிகக்குறைந்து விட்டது   இதை அனுசரித்துசெய்ய ஆசைப்படுபவர்கள் இருந்தாலும்   இதைச்செய்ய வரும் வாத்தியார்கள்  கையில் மொபைலுடன்  டூவீலரில்  அவசர அவசரமாக பல வீடுகளுக்கு ஓடுவதால்    செய்யும்  அவகாசம் மிகவும் குறைந்து  எல்லாமே ஷார்ட் கட்  ஆகிவிடுகிறது ஆகையால்  வாழைக்காயும்.அரிசியும்   கொஞ்சம் பயந்தப்பருப்பும் வைத்துக்கொண்டு காத்திருக்க   எல்லாமே ஒரு 30 நிமிடங்களில்  முடிந்துவிடுகிறது . இத்தனைச்செய்வதே பெரிய காரியம்தான்
    மேலும் இந்த புரோகிதர்களின் செல்வங்கள்  இந்த  லயனுக்கு வராமல்  வேறு படிப்பு படித்து  நல்ல வேலைக்குச் சேர்ந்துவிடுவதால்  பிற்காலத்தில் எங்கே இந்த வாத்தியார் தொழிலே   பஞ்சமாகிவிடுமோ என்ற பயம்  மனதில் ஏற்படுகிறது

    இந்தக்கால  வீட்டுப்பெண்மணிகளும்  வேலைக்குப்போவதால் இதை சரியாக அனுஷ்டிக்கமுடியாமல் ஏனோதானோ என்று  நடக்கிறது .முன்பு கூட்டுக் குடும்பம் இருந்ததால் பல பெரியவர்கள் இது போன்ற நாடகளில் கடைப்பிடிக்கும் விஷயங்களைச் சொல்லிக்கொடுப்பார்கள் தற்போது அதுவும் இல்லை . சிலர் வீட்டில்  சிலரது ஜாதகத்தைப்பார்த்து பித்ரு தோஷம் இருக்கிறது அதனால் தான் வீட்டில்  இப்படிப்படுத்துகிறது என்றுச்சொல்ல கேட்டிருக்கிறேன். அந்த தோஷம் ஏற்படுவதே  இதைப்போன்ற  அனுஷ்டானங்களை விட்டதனால்தான் என்று சாஸ்திரமேதைகள் கூறுகின்றனர் சிலர் வீட்டில் பேரனது பூணலும் அவன்  உடலில் இருப்பதில்லை பல ஆயிரங்கள் செலவழித்து நடத்திய உபநயனம்  அர்த்தமில்லாமல் போய்விடுவதைப் பார்த்தால் மிகவும் வருத்தமாகத்தான் இருக்கிறது

    சிலருக்கு  பண நெருக்கடி அதிகமாக இருக்க ஆனால் எப்படியும் தன் அப்பாவுக்கு திதி செய்யவேண்டும் என்ற  மனம்  இருக்க  அவர்கள் ஆகாயத்தைப் பார்த்து” பித்ருக்களே   என்னால் ஒன்றும் செய்யமுடியவில்லை என் உடல் நிலையும்  பொருளாதார நெருக்கடியும் இதைச்   செய்ய முடியாமல் என்னைத் தடுக்கிற்து . மன்னித்து  ஆசி வழங்குங்கள் “என்று சொன்னாலே பாட்டனார் தந்தையார் போன்ற முதாதையர்கள் மனம் மகிழ்ந்து ஆசி வழங்குவார்களாம்  .மஹாளயக்காலத்தில் ஊரில் இல்லாமல் எதாவது பிரயாணம் வந்து  வேறு எங்கேயாவது போயிருந்தால் பசுவுக்குப் புல்  கொடுத்து அதைத் தர்ப்பணமாக ஏற்கச் சொல்லலாம்  என்றும் சாஸ்திரம் படித்தவர்கள் கூறுகிறார்கள்

    இப்போது காக்கையின் கதைக்கு வரலாம்

    காகத்திற்கும் மனிதனுக்கும் சில ஒற்றுமைகள்  உண்டு  காகம் எதாவது தின்ன கிடைத்தால் எல்லோரையும் கூவி அழைத்துப்பின் அதைப்பகிர்ந்துக்கொள்ளும்.இதே போல் தான்  முன்பு   கூட்டுக்குடும்ப  அமைப்பு  இருந்த போது அந்தவிட்டுப் பெண்மணி  எல்லோரையும் அழைத்து உணவளிப்பாள் இன்றும் குஜராத்தி  அல்லது மார்வாடி குடும்பத்தில் இதைக் காணலாம் .தவிர  காகம் ஒன்று மினசாரக் கம்பியில் பட்டோ அல்லது வேறுவிதமாகவோ இறந்துவிட்டால்  எல்லா காகங்களும்  “கா  கா  கா  கா  வென்று கத்தி ஊரையேக் கூட்டிவிடும்  அந்த இறந்த காக்காவின் உடலைச் சுற்றிச்சுற்றி   பறந்து கரைந்து தன் சோகத்தை வெளிப்படுத்தும்  பின்  எங்கேயாவது நீர்நிலையிருந்தால் அதில் முக்கி எழுந்து  விட்டு வருமாம . இதே போல் இன்றும் கிராமங்களில் ஒருவர் இறந்தால் பலர்  அங்கு விரைந்து வந்து  மார்பை அடித்துகொண்டு அழுது தங்கள் சோகத்தை வெளிப்படுத்துவார்கள்.   பின் இவர்களும்  ஸ்னானம் செய்துவிட்டு வருகிறார்கள்.  .

    இனி இந்தக்காகத்திற்கும் பிதுர்க்களுக்கும் என்ன சம்பந்தம் என்பதைப் பார்க்கலாம்  என் வீட்டில்  ஒரு வருடத்தில் மூன்று முறை சிரார்த்தம் வரும்  அதைத்தவிர மஹாளய தினங்கள் ஒவ்வொரு தடவையும்  எல்லா கர்மாக்களையும் முடித்தவுடனே காக்காவிற்கு  சுடச்சுட  சாதம் உருண்டையாகப் பிடித்து  என் அம்மா வைப்பார் .   பின்  என் அப்பா  “கா  கா கா  என்று குரல் கொடுத்து அழைப்பார் . அவ்வளவுதான்  உடனேயே   எங்கிருந்தோ ஒரு காகம்  வரும்  அது அண்டக்காக்கா போல்  இருக்கும்  .அது வந்து  தெற்கு திசைப்பார்த்தபடி அமரும்  . பின் தன் தலையைச்சாய்த்து    இங்கும் அங்கும் பார்த்தபடிதன் அலகால் தின்னும்   அது பாதி தின்னும் போதே  தன் சகாக்களையும்  அழைக்கும் இந்தக் காட்சியை நான் எப்போதும் பார்த்து ரசிப்பேன் . இந்தக்காகம் எங்கிருந்தோ வந்து தெற்குதிசைப்பார்த்து அமர்ந்து சாப்பிடுவது ஏன் ?

    இந்தப்பித்ருக்களுக்கும் காகத்திற்கும் என்ன சம்பந்தம் ?  

    இதைப்பற்றி என் தந்தையின் நண்பரிடம்  கேட்டேன்  . அவர் முன்பு சொன்னதை இப்போது நினைத்துப்பார்க்கிறேன் .

    திரேதாயுகம் ஆரம்பிக்கும் வரை  திதி செய்யும் நாட்களில் முன்னோர்கள் நேராகவே வந்து  வயிறு நிறைய உண்டு திருப்தியுடன் குடும்பத்தை வாழ்த்திச் சென்றார்களாம்  ராமாயணத்தில் தசரதர்  காலமானவுடன்  அந்தசெய்தி முதலில் பரதனுக்குத் தெரிய வந்த  உடனேயே அவர் உடலை விட்ட நக்‌ஷத்திரத்தில்   காரியங்கள் செய்ய ஆரம்பித்தார் ,தசரதர் பரதனைப் பார்க்கச் சென்றாராம்  . ஹிந்து தர்மப்படி ஒரு குடும்பத்தில் மூத்த மகன் தான் தன் தந்தைக்குக் கர்மா செய்ய கர்த்தாவாகிறார் . ஆகையினால் ராமரும்  தனக்கு   தன் தந்தை இறந்த தகவல் தெரிந்தவுடனே கானகத்திலேயே கர்மா செய்ய ஆரம்பித்தார்  .ஆனால் அங்கு  தசரதர் வரவில்லை ராமருக்கு மிகவும் மனவருத்தம் ஏற்பட்டு  தான் என்ன தவறு செய்தோம்  என்று மனம் குழம்பி இதைக்குறித்து  தன் குருவிடமே கேட்கவேண்டும் என்று நினைத்து கிளம்பினாராம்  அப்போது “நில் ராமா  நான் வந்துவிட்டேன்  “‘ என்று தசரதர் சொல்ல   தன்னுடயை தவறு என்ன என்று ராமர் கேட்க  தசரதர்
    ” ஹே ராமா  உன்  கர்மாவில் நான் மிகவும் மகிழ்சியடைந்தேன்  உனக்கு என் ஆசிகள் ‘ என்றார் .

    “பின்  ஏன் நான் கர்மா செய்ய ஆரம்பித்தவுடன் தாங்கள் வரவில்லை ?”
    “உன் சகோதரன் பரதன் நதியின் அக்கரையில் முதலில்    கர்மா செய்து என்னை அழைக்க அங்கு முதலில் சென்று பின் இங்கு வந்ததில் சற்று தாமதம்
    ஏற்பட்டுவிட்டது ‘

    இதைக்கேட்டதும் ஒரு வினாடி ராமருக்குக் கோபம் வந்து ” இனி எந்த முன்னோர்களும்  திதி செய்து அழைக்கும் போது  தங்கள் செல்வங்களைப் பார்க்க வரக்கூடாது  ” என்று சற்றும் யோசனை செய்யாமல் பேசிவிட்டாராம் ஆனால் அடுத்த நிமிடமே தான் செய்த காரியத்திற்கு வருந்தி தசரதரிடம் மன்னிப்புக் கேட்டாராம்  பின் இதைச் சரிப்படுத்த எதாவது வழி உண்டா என்று அங்கு நின்ற சனி பகவானிடமும் யமனிடமும் கேட்டாராம்   இது மஹாவிஷ்ணுவின் அவதாரமான ராமரே சொன்னதால் இதை மாற்ற முடியாது ஆனால் முன்னோர்களுக்கு  அளிக்கும் உணவு அவர்களிடம் போய்ச்சேர  ஒருவரை நியமித்து இதைச்சரி செய்யலாம்   என்று யமன் சொல்லி இந்தப் பொறுப்பை சனிபகவானிடம் ஒப்படைத்தார்   சனி பகவான்  தனக்கு நேரம் இல்லாததால் தன்  வாகனமான காக்கையிடம் இந்தப் பொறுப்பைக் கொடுப்பதாக யமனிடம் கூறி அவர் சம்மதத்துடன்  கொடுத்தும் விட்டார் அன்றைய தினத்திலிருந்து  காகம் தான் சாப்பிடும் அன்னத்தினால் மூதாதயர்களின்  வயிற்றை நிரப்புகிறது.    இந்தக் கதை எந்த ராமாயணத்தில் வருகிறது என்று தெரியவில்லை .

    இராமயணத்தில் வரும்  ஜயந்தனின் கதை பலருக்குத் தெரிந்திருக்கும் தேவேந்திரனின் மகன்  ஜயந்தன்  சீதையின் அழகில் மயங்கினான் கானகத்தில்  ராமர் சீதாபிராட்டியின் மடியில்  தலை வைத்து சயனித்திருக்க அந்த நேரம் பர்த்து  ஜயந்தன்  சீதையின் மார்பில் கொத்தினான் .சீதைக்கு இரத்தம் வர அதன் துளியும் ராமர் மேல் விழ அவர் விழித்து காகாசுரனைப் பார்த்தவுடன் மிகவும் கோபம்கொண்டு   ஒரு புல்லைப்பிடுங்கி பிரும்மாஸ்திர மந்திரத்தைச் சபித்து  அவன் மேல் ஏவினார் , அது அவனைத் துரத்த அவனும் பிரும்மா விஷ்ணு சிவன் என்ற மும்மூர்த்திகளிடம் சென்று தஞ்சம் கேட்க   ராமர் ஏவிய பிரும்மாஸ்திரத்தைத் தடுத்து  நிறுத்தும் சக்தி தங்களிடம் இல்லை என்றும் ராமரிடமே  போய் சரணாகதியடையவும் சொன்னார்கள்  பின் ஜயந்தனான காகாசுரன் ஸ்ரீராமரிடம் வந்து அப்படியே தலையைக் கீழே வைத்து விழ கருணை உள்ளம் கொண்ட சீதாபிராட்டி அந்தக்காக்கையை ராமரின் பாதம் மேல் படும்படி  நகர்த்தி விட்டாள், ஸ்ரீராமரும் காகத்தை மன்னித்து  துரத்தி வந்த பிரும்மாஸ்திரத்திற்கு  காகத்தின் ஒரு கண்ணைக் கொடுக்குமபடிச் சொல்லி அவனது உயிரைக் காப்பாற்றிவிட்டார் ,பின் காகாசுரனை எல்லோரும் நினைக்கும்படியான அந்தஸ்தையும் அளித்துவிட்டார் நேபாலில்  மக்கள் தீபாவளிக்கு முதல் நாள் காக்காவுக்குப் பூஜை நடத்துவார்கள் .காகம் தலையைக்கொத்த  குளிக்கும் பழக்கமும் முன்பெல்லாம் மக்களிடமிருந்தது

      பித்ருத்தர்ப்பணம்  செய்ய  சில கோயில்களும் உள்ளன   நாகை மாவடத்தில் பூந்தோட்டம் அருகே  இருக்கும்  திலதர்ப்பணபுரி முக்தீஸ்வரர் ஆலயம் .. வடக்கில் காசி  கயா  , மணிகர்ணிகா   வேதாரண்யம்   திருபுவனம் விஷ்ணுபிரயாக்  ,ருத்ரபிரயாக் .கும்பகோண காவிரி தீரம் ராமேஸ்வரம்   வேதாரண்யம் நாசிக், பஞ்சவடி  ராமேஸ்வரம்  போன்ற இடங்களில் இந்நாட்களில்  நல்ல கூட்டம் இருப்பதைப்பார்த்தால் ஏதோ நமது கலாச்சாரம் இன்னும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது  என்று கொஞ்சம் திருப்தி ஏற்படுகிறது. மஹாளயம் முடிந்து அமாவாசை வர அம்மனும்   நமது கொலுப்படியில் அமர்ந்து ஆசி கொடுக்க தயார் ஆகிவிடுவாள்

    எல்லோருக்கும் பித்ருக்களின் ஆசிகள் இந்த நன்னாளில் கிடைக்கட்டும்.

    படங்களுக்கு நன்றி:
    விஜய சங்கரி – சோமநாதர் திருக்கோவில், கொளத்தூர், சென்னை.

    Share
  • நவராத்திரி….முப்பெரும் சக்தியில் புவனபுரி..!

    ஜெயஸ்ரீ ஷங்கர்

    பொதுவாக நவராத்திரி  தீபாவாளிக்கு முன்னம்  கொண்டாடப்படும் இந்துப் பண்டிகை. நவராத்திரம் என்னும் வடமொழிச்  சொல் , தமிழில் நவராத்திரி என்று மருவி வழங்குகிறது. இது ஒன்பது இரவைக் குறிக்கும். துன்பத்தைத் துடைத்து, அச்சத்தைப் போக்கி, இன்பத்தையும் மகிழ்ச்சியையும் நல்ல வாழ்வையும் அருளச்  செய்த தேவியை வழிபடும் காலமாக நவராத்திரியின் ஒன்பது இரவுகளும் இருக்கிறது.

    நவராத்திரி வந்தாலே போதும்…பெண் குழந்தைகள் இருக்கும் வீட்டில் ஏக குஷியும்  கொண்டாட்டமும்  தான். வித விதமாக  பட்டுப் பாவாடை உடுத்திக் கொண்டு பூத் தைத்து , கழுத்து நிறைய ஜொலிக்கும்  நகைகளும் போட்டுக்  கொண்டு அசல்  அம்மனாகவே தங்களையும் அலங்கரித்துக் கொண்டு  கோவிலுக்குச் செல்வார்.   அங்கும் அலங்கார தேவிகளைக் கண்டு தொழுது  வீட்டுக்கு கை நிறைய சுண்டல் கொண்டு வரும் மகிழ்ச்சி…..வேறு எந்த விழாவில்  கிடைக்கும்.?  ஒன்பது நாட்களும் பெண் குழந்தைகளை தெய்வ அம்சமாகவே பாவித்து..பாட்டும், சிரிப்பும், சிலிர்ப்பும்…வேறு எந்த பண்டிகையும் இத்தனை நிறைவைத் தருவதில்லை. பத்துப் பதினைந்து குழந்தைகள் ஒன்றாகக் கூடி கோல்களை எடுத்துக் கொண்டு கொலு வைத்திருக்கும் வீட்டுக்குச் சென்று அங்கு கோலாட்டாம் ஆடி….மகிழ்ந்தபடியே…இறுதியாக  தமது வீட்டுக்குள் நுழையும் போது  கை கொள்ளாது…எடுத்துச் செல்லும் பையும்  கொள்ளாது… அவ்வளவு தாம்பூலம்…சுண்டல்…குங்குமச் சிமிழ்…கண்ணாடி என்று மனதும் நிறையும். இதெல்லாம் நாற்பது வருடங்கள் முன்பாக நியதியாக இருந்தாலும் இன்றும்  இது போன்ற சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப் படுவது, தொடர்வது மனதுக்கு இதமாக இருக்கிறது.  இதற்கு தொலைக்காட்சியும் முக்கிய காரணம் என்பதை நாம் மறுக்க முடியாது.

     நவராத்திரி என்னும் பெருவிழாவானது  புரட்டாசியில் வரும் மாதப் பிரதமை முதல் நவமி வரை ஆக… ஒன்பது  நாட்கள் காலமாகும். படைத்தல், காத்தல், அழித்தல் அனைத்திற்கும் மூலமாக இருப்பவள் அன்னை பராசக்தியே.முத்தொழில் புரியும் முமூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் வணங்கும் பரம்பொருள் அன்னை பராசக்தி அம்பிகையே.

    நாம் அனுதினமும் அம்பிகையைத் தொழுதாலும் இந்த நவராத்திரி சமயங்களில் ஒன்பது மடங்கு அதிகமாக பூஜிக்க வேண்டும். ஒரு வருடத்தில் நான்கு நவராத்திரி வந்தாலும் அனைவரும் தெரிந்து கொண்டாடுவது சாரதா நவராத்திரிக்கு மட்டும் சிறப்புகள் அதிகம்.

    இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி  ஆகிய மூவரும் மகிஷாசுர  மர்த்தினி  சக்தியாக உருவெடுத்து மகிஷனை வதம் செய்து அழித்ததையே  “சாரதா நவராத்திரியாக” இன்றும் சிறப்பாக கொண்டாடப் படுகிறது.

    நவராத்திரி காலம் முழுதும் பெண்களை சக்தி ஸ்வரூபங்களாகவே பாவனை செய்து மகிழ்விப்பது தேவியை ஆராதிப்பதற்கு ஒப்பானது.  அதுவும் பெண் குழந்தைகளை “கன்னிப் பெண்கள்” பாலா திரிபுர சுந்தரியாகவே பாவனை செய்தலும் கன்னியா பூஜை  செய்வதும் மிகுந்த நற்பயனையும் இகபர சுகத்தையும் தரும். அதே போல  இந்த ஒன்பது நாட்களிலும் அன்னதானம் செய்விப்பது தேவியை குளிர்வித்து சகல நன்மைகள் பெற வழி வகுக்கும்.

    சில இக்கட்டான சூழ்நிலையால் நவராத்திரிக்கு ஒன்பது நாட்களும் பூஜிக்க இயலாத நிலை வந்த போதும் 8 வது நாளான அஷ்டமி,அன்று ஒரு நாள் மட்டும் மனதார அம்பாளை வேண்டிக் கொண்டு ஆராதனை செய்தால் கூடப் போதும்;  அவள் அருளைப் பெற்றிடலாம். இந்த ஒருநாளில் கூட சுமங்கலிகளுக்கும், கன்னிப் பெண்களுக்கும் தாம்பூலம்  தந்து சகல சௌபாக்கியங்களையும் பெறலாம். நவராத்திரி அத்துணை விசேஷமானது.

    இந்தியா முழுவதும் இந்த நவராத்திரி பெரிய அளவில் விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது.

    கர்நாடகாவிலும், வங்காளத்திலும்  வெகு பிரமாண்டமாகக் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகள் தசரா என்னும் நவராத்திரி தான்.மஹாராஷ்டிரா  பகுதியில் தசரா சமயங்களில்  “தாண்டியா ரஸ் ..” என்னும்  நமது கோலாட்டத்தை மிகவும் உற்சாகமாக பெண்களும் ஆண்களும் தாளத்தோடு ஆடிப் பாடுவது மிகவும் இனிமையாகவும், ரசிக்கும் படியாக இருக்கும்.

    ஆந்திராவில் ஒரு பழக்கம் உண்டு.சிலரது வீடுகளில் சுமங்கலிப் பெண்கள் இந்த ஒன்பது நாட்களும் மௌன விரதத்தை அனுஷ்டித்து ஒரு தனி பூஜை அறையில் அமர்ந்திருப்பார்கள். மிகவும் கஷ்டமான ஆசார அனுஷ்டானத்தை மேற்கொண்டு “ஒக்கப்போது ” என்னும் ஒரு நாளைக்கு ஒரே வேளை  மட்டும் உணவு.  அதுவும் உப்பு, காரம், புளி ,அரிசி  என்று  இதை எதுவும் சேர்க்காமல் உண்பதைக் கடைபிடிப்பார்கள். அதை விடச் சிறப்பான விஷயம் என்னவென்றால்…, “ஒக்க லக்ஷ  பசுப்பு..” அதாவது அந்தப் பெண்கள் தங்களின் முன்பு மலை போல புத்தம் புதிய அல்லது காய்ந்த வரளி  மஞ்சள் இவற்றை மலை போலக் குவித்து வைத்துக் கொண்டு அவர்களைப் பார்க்க வரும் சுமங்கலிகளுக்கு அவர்களது புடைவைத் தலைப்பில் தனது  இரு கைகளின்  முழங்கை வரைக்கும் எடுத்து,  மஞ்சள் கிழங்குகளை அள்ளி தாராளமாக எடுத்து மூன்று முறை நிரப்புவார்கள். அதே போலத் தான் சுத்தமான குங்குமமும்…அள்ளி அள்ளித் தருவார்கள்.

    இந்த ஒன்பது நாட்களுள் மூன்று லக்ஷம் மஞ்சள் கிழங்குகள் வரைக்கும் கூட அள்ளிக் கொடுப்பார்கள் சிலர். இது ஒரு சிறப்பான வேண்டுதல் ஆகும். இதைக் கொடுக்கும் வீட்டின் முன்பு எப்போதும் பெண்களின் கூட்டம் நிறைந்திருக்கும் . இந்த முறையைப் பின் பற்றி தருபவருக்கும் பெறுபவருக்கும் சகல சௌபாக்கியங்களும் வந்து சேரும் என்பது ஐதீகம்
    அதே போல விடியற்காலையில்  நான்கு மணியிலிருந்து அடுத்த நாள் இரவு ஒரு மணி வரைக்கும் கூட நீண்ட வரிசையில் இந்த மஞ்சள் வாங்கிக் கொள்ளப் பெண்கள் வரிசையில் காத்திருந்தபடியே “லலிதா சஹஸ்ரநாமத்தைப்” பாராயணம் செய்து கொண்டே இருப்பார்கள். எனக்கும் இந்த சுகமான அனுபவம் கிடைத்ததை நான் பெற்ற வரமாகவே நினைக்கிறேன்.

    தமிழகத்தில் எப்படி “கொலு” வைத்திருக்கும் வீடுகளுக்குச் சென்று “கொலு பார்க்க வந்திருக்கோம்” என்று சென்று கொலுவைப் பார்த்துவிட்டு தாம்பூலமும் சுண்டலும் வாங்கிச் செல்வார்களோ…அதே போல ஆந்திராவிலும் “லட்சப் பசுப்பு” என்று எழுதி வைத்திருக்கும் வீட்டின் முன்பு பெண்களின் கூட்டம் அலைமோதும்.

    மதுரையிலும்  சம்பிரதாயம் எதுவும் மாறாமல் ஒன்பது படிகள் கொலு வைத்து பெண் குழந்தைகளை அழைத்து “கோலாட்டம்” வைத்துக் கொண்டு ஆடியும்…அந்தந்த நாளுக்கான ராகத்தைப் ..பாடிக்கொண்டே கும்மியடித்தும் அம்பாளை சந்தோஷப் படுத்துவார்கள்.ஒன்பது நாட்களும்    வந்து பாடிவிட்டு மகிழ்வோடு தாம்பூலம் வாங்கிக் கொண்டு செல்வதைக் காணும்போது தான் கொலு வைத்தவர் மனதில் அந்த அம்பிகையே…பராசக்தியே நேரில் வந்திருந்து ஆசீர்வாதம் செய்த திருப்தி இருக்கும்.

    அத்தனை கோயில்களிலும் கூட ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விசேஷ அலங்காரமும் ஆராதனையும் நடக்கும். கோயில்களில் கொலு பார்க்க வேண்டியே தினமும்  வரும் கூட்டம் கட்டுக்கு அடங்காது.  மீனாக்ஷி அம்மன் கோவிலில் அம்பிகையைக்  கொலு  மண்டபத்தில் நவ வித பூஜையோடு நவ வித அலங்காரத்தோடு வீற்றிருக்கும்  அன்னையைக் காண ஜென்ம பலன் கிட்டும். மண்டபத்தின் வழியெங்கும் இருபக்கமும் ஆறடி உயரத்தில் வெள்ளியில் தங்க முலாம்  பூசப்பட்ட…யானை,மயில்,கிளி,அன்னம்,காமதேனு,கருடன்,சிம்மம்,மூஞ்சூறு,கடோத்கஜன்,நந்தி ..ஆகிய வாகனங்கள்  தக தகவென்று மின்னிக் கொண்டு நிறுத்த வைக்கப் பட்டிருக்கும் அழகு அபாரமானது.
    ஒரு முறை கண்டால் போதும்…என்றென்றும் நெஞ்சத்தை விட்டு அகலாது. பொற்றாமரைக் குளம் முழுதும் விளக்கொளியில் அலங்கரிக்கப் பட்டு ஜக ஜோதியாக மின்னிக் கொண்டிருக்கும் அழகு. சித்திரைத் திருவிழாவைப்  போலவே “நவராத்திரிக்கும்” மதுரையே  ஜே…ஜே.. என்று மல்லிகை, பிச்சி,ஜாதி முல்லை,தாழம்பூ,பன்னீர் ரோஜா ஆகிய சுகந்த மலர்களின் இனிய மணத்தை  தாங்கி மணத்துக்  கொட்டும்.இதுவரை ஒரு முறை கூட கண்டிராதவர்கள் அவசியம் ஒரு முறையேனும் கண்டு வரவேண்டும். அந்த சுகமே அலாதியானது.தேவி பாகவதத்தில் கூறப் பட்டுள்ள படியே இந்த நவராத்திரி பூஜை சிறப்பாக கொண்டாடும் மற்றோர் இடம் சிதம்பரம் ஆகும். கோயிலின் பிரகாரத்தின் உள்ளே பிரம்மாண்டமான முறையில் பொம்மைக் கொலு…! நீளத்திலும் அகலத்திலும் அந்தப் பிரகாரத்தையே சிறப்பிப்பதாக அமையும் வகையில் இருக்கும். ஆயிரக் கணக்கில் மிகவும் புராதனக் களிமண் பொம்மைகள் கூட வீற்றிருக்கும்.நித்தம் சாஸ்திர சம்பிரதாயப் படியே ஹோமங்களும், நித்தியா அன்னதானமும், சுவாசினி பூஜையும், 1008 கன்னியா பூஜை மற்றும் ஒரு லட்சத்தியெட்டு ரவிக்கைத் துண்டுகள்,   ஒன்பது வண்ணங்களில் அர்ச்சனை  செய்வித்து பாலாம்பிகையை வணங்கும் விதத்தைக் காண மனம் நெகிழும்.
    இந்த ஒன்பது நாள் பூஜையின் இறுதியில் மகா சண்டி யாகம் நூற்றி எட்டு குருக்கள் இணைந்து கலந்து கொண்டு வேத கோஷம் முழங்க பூர்ணாகுதி நடக்கும் போது அம்பிகையே நேரில் வந்து ஆசீர்வதிப்பது  போல இருக்கும்.

    விஜயதசமி அன்று நடராஜர் முன்பு இருக்கும்  மண்டபத்தில் பரதம் அறிந்த  குழந்தைகளும் , பெரியவர்களும்  பரதம் ஆடுவார்கள். அன்று பல கோயில்களில் அக்ஷராப்பியாசம்..என்னும் முதன் முதலில் குழந்தைகளுக்கு எழுதக்   கற்றுத்  தருவது வழக்கம். இந்த நாளில் செய்யும் அனைத்துக் காரியமும் நம்மை வெற்றியோடு விளங்கச் செய்யும் என்ற நம்பிக்கை என்றும் உண்டு. புதிதாக வீடு கட்ட ப் போவதன் முன்பு வாஸ்து பூஜையும் இந்த நல்ல நாளில் செய்தால் எவ்விதத் தடங்கலும் இன்றி ஜெயம் உண்டாகும் என்பதும் வழக்கத்தில் உள்ளது.

    கும்பகோணம் அருகில் தமிழ்நாட்டில் இருக்கும் சரஸ்வதிக்கென்று தனிக் கோயில் பூந்தோட்டத்தில் இருக்கிறது.ஒட்டக்கூத்தருக்கு அன்னை அருள் பாலித்த திருத்தலம் அதனால் கூத்தனூர் சரஸ்வதி  என்றே அழைக்கப் படுகிறாள். செல்வம் அழிந்தாலும் கற்ற வித்தை அழியாது எனபதை உணர்த்தும் வண்ணம் அன்னை கலைகளுக்கரசி…வீணையோடு வீற்றிருக்கும் எழிலைக் காண கண் கோடி வேண்டும். இத்தகைய ஞான சக்தி வழிபாடு நமது  நமது அறியாமையை அகற்றி அறிவையும், சத்துவ குணத்தையும் வளர்க்கிறது. கூத்தனூர் சரஸ்வதி கோயிலில் சிலேட்டு, நோட்டுப் புத்தகம்,பேனா பென்சில் இவற்றை அம்மனின் காலடியில் சமர்ப்பித்து எடுத்து வருவது நல்லது . குழந்தைகளுக்கு கொல்லூர் மூக்காம்பிகை கோயிலில் மற்றும் கேரளக் கோவிலில் நடை பெறுவது போலவே இங்கும் அக்ஷராப்யாசம் வெகு விமரிசையாக நடை பெரும்.

    பூந்தோட்டதிலிருந்து  ஒரு ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் இருப்பது திருமீயச்சூர்..இங்கு அன்னை லலிதாம்பிகை அருள்பாலிக்கிறார். தேவியின் லலிதா சஹஸ்ரநாமம் தேவியே சொல்ல இங்கு தான் அகஸ்த்தியரால் பாடப் பெற்றது. அமைதியும், எழிலும், கலைவண்ணமும் கொண்ட திருக்கோவில். அம்பாளைக் காண மனம் குளிரும்.
    ஒவ்வொரு நவராத்திரி சமயத்திலும் வேறு எங்குமே இல்லாத வகையில் இங்கு தான் அம்பாளின் முன்பு சர்க்கரைப் பொங்கலைப்பரப்பி பள்ளம்  வெட்டி , அது நிறைய ததும்ப  ததும்ப நெய்யை ஊற்றி அதில் லலிதாம்பிகாவின் பிம்பம் உருகிய நெய்யில் விழும்  காட்சியை  சேவிப்பார்கள். நெய்விளக்கின் ஒளியில் அம்பாளின் உருவம் கண்ணாடியாக மின்னும்…அழகே அழகு. வருடத்தில் ஒருமுறை மட்டுமே காணக் கிடைக்கும் அற்புதக் காட்சியாகும். மாதா ஜெயா ஓம் லாலிதாம்பிகையே …என்ற நவரத்னா மாலையில் பாடுவது போல “காணக் கிடையா கதியானவளே ..” என்ற வரியை உணர்த்தும் அனுபவம்..நிச்சயம் கிடைக்கப் பெறும்.

    நவராத்திரியில் நவாட்சரி மந்திரம் செய்வது 24 அக்ஷரங்கள் கொண்ட நவாட்சரி காயத்ரிக்கு ஈடான மகாமந்திரமாகும். சகல காரிய சித்திக்கும் அற்புத மந்திரம். இந்த மந்திரத்திற்கு மகா லட்சுமியும்  , மகா சரஸ்வதியும் சக்தி தேவியர்களாக  அருள் பாலிக்கிறார்கள். “நவாட்சரி மகாமந்திர ஜபம் கரிஷ்யே என்று கூறி “ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் சாமுண்டாயை விச்சே” என்று 108 முறை ஜபம் செய்து பால் பாயசம் நைவேத்யம் செய்தால் தேவியின் அருள் நிலைத்திருக்கும்.

    இச்சா சக்தி அதாவது துர்க்கை வீரத்தின் தெய்வம், சிவப் பிரியை, வெற்றியின் தேவதை, எருது உருவம் கொண்ட மகிஷன் எனும் அரக்கனை  ஒன்பது இரவுகள் போரிட்டு வெற்றி கண்டவள். அவனை வதம் செய்த நாளே  “விஜயதசமி”. மகிஷனை வதைத்ததால் “மகிஷாசுர  மர்த்தினி” . நவ துர்க்கை வழிபாடு நவராத்திரியில் சிறப்பானது.கொல்லூர் செல்லும் வழியில் தான் கட்டில் வன துர்க்கை (துர்கா பரமேஸ்வரி ) அருள் பாலிக்கிறாள். மிகவும் சாநித்யம் படைத்த கட்டில் துர்க்கைக்கு நிமிஷா நிமிஷம் சூட்டைத் தணிக்க இளநீர் அபிஷேகம் செய்வதைக் கண்கூடாகக் காணலாம் .

    கிரியா சக்தி செல்வத் திருமகள், லட்சுமி. மலரையொத்த மென்மையான அழகு நிரம்பியவள். செல்வத்தின் உறைவிடமே இவளின் இருப்பிடம், விஷ்ணுப் ப்ரியை, பாற்கடலில் அமுதத்துடன் உதித்தவள். சமுத்ரராஜனின் குமாரி. செந்தாமரையில் வீற்றிருப்பவள். திருச்சானூர் நாயகி. நவராத்திரியில் நான்காவது நாளிலிருந்து ஆறாம் நாள் வரை அஷ்டலக்ஷ்மிகளின் தரிசனம் அனைத்து கடாக்ஷத்தையும் நல்கும்.

    ஞான சக்தி, ஆயக் கலைகளுக்கும் சகல கல்விக்கும் அதிபதி சரஸ்வதி..!  பிரகாசம் கொண்ட ஸ்படிகம் போன்ற அறிவின் தன்மையைக் கொண்டவள். பிரம்மாவின் பிரியை.அஷ்ட சரஸ்வதியின் தரிசனம் பெற்று கடைசி மூன்று நாட்களும் வழிபட்டால்…கலைமகளின் பூரண கடாக்ஷத்தைப் பெறலாம்.

    கூத்தனூர் சரஸ்வதியைத் தவிர ஆந்திராவில் இரண்டு இடங்களில், பாசார் மற்றும் பாசரா என்ற இடங்களில் மலை மீது சரஸ்வதிக்கு கோயில் இருக்கிறது. கொல்லூர் மூகாம்பிகையும், சிருங்கேரி சாரதாம்பிகையும், கூட சரஸ்வதி தான். நவராத்திரியில்  நீல சரஸ்வதியைத் தொழுதால் ஞானம் பெறலாம்.

    கலைகளைத் தரும் தேவிக்கு சிலைகள்  பஞ்சலோகத்தில் மூர்த்தம் வடிக்கும்  சில்பிகளைச் சந்திக்கும் வாய்ப்பு சமீபத்தில் கிட்டியது. அத்தனை நேர்த்தியான வேளைகளில்….மெய்மறந்து ரசித்துக் கொண்டே நின்றவள்..அவர்களிடம் கேட்ட கேள்வி…எப்படீங்க எல்லாம் ஒரே மாதிரி அச்சில் வார்த்தாலும்..மேற்கொண்டு உளியில் செதுக்கியும்…அதே நயத்தோடு வருகிறது..ஒவ்வொன்றும் ஒன்றை விட இன்னொன்று என்று கச்சிதமாக சிலா ரூபம் எடுக்கிறது என்று ஆவல் மேலிடக் கேட்டேன். அவர்கள் சொன்ன பதில்…” எல்லாம் அந்த சரஸ்வதி தேவியின் அருள் கடாக்ஷம் தாங்க….”என்று பதிலாகக் கேட்டதும்….”ஆம்..அவளின்று எது கலை…?” இதோ எழுத ஆரம்பிக்கும் போது  அவள் நினைவால் தொடங்கினேன்..எண்ணமெல்லாம் எழுத்தாக அவளே முடிவு வரை நடக்கிறாள்.

    வீரமும், கல்வியும், செல்வமும் ஆக இந்த முப்பெரும் சக்திகள் தான் இந்த புவனத்தையே ஆளுகிறது…அதற்காக வருடத்தில்  ஒன்பது இரவுகள் இந்த மூன்று தேவிகளை ஒவ்வொரு நவராத்திரியிலும் மனம் நிறைந்த பக்தியோடும் கருணையோடும் துதித்து வரம் பெறுவோம்.

     படத்துக்கு நன்றி

     

    Share
  • வந்து சொல்றேம்மா…

    முகில் தினகரன்

    நடுநிசி 12.00 மணி.

    அந்த தியேட்டர் முன் கூடியிருந்த இளைஞர் பட்டாளம் படு பிஸியாயிருந்தது. மறுநாள் ரிலீஸாகவிருக்கும் அவர்களின் அபிமான நடிகன்…தானைத் தலைவன்…தங்கத்தலைவன்…’இளஞ் சூறாவளி’ ராகவ் நடித்த படத்தை வரவேற்க விதவிதமான பேனர்களையும்…கட்அவுட்களையும்…தோரணங்களையும்…வரவேற்பு வளையங்களையும் தியேட்டர் வாசலெங்கும் கட்டி அசத்திக் கொண்டிருந்தனர். இரண்டாம் ஆட்டம் முடிந்து வெளியே வந்த ஜனக் கூட்டம் அங்கு அரங்கேறிக் கொண்டிருந்த அமர்க்களத்தைக் கண்டு திறந்த வாய் மூடாமலேயே வீடு வரை சென்றது.

    ஒரு மணி வாக்கில் ஓரளவிற்கு எல்லா வேலைகளையும் முடித்து விட்ட ரசிகர் கூட்டம் புறப்படத் தயாரானது.

    தன் அபிமான நடிகன் ‘ராகவ்’வுடன் தான் நிற்கும் புகைப்படத்தை ஒரு பெரிய பேனராக்கி தியேட்டர் முகப்பில் அதைக் கட்டி வைத்து அழகு பார்த்துக் கொண்டிருந்த மாவட்டத் தலைவர் பிரசனனாவிடம் வந்த ரசிகர் பட்டாளம்,

    ‘அப்ப..நாங்க புறப்படறோம் பிரசன்னா’

    ‘ஓ.கே.ம்மா…காலைல எல்லோரும் சரியா ஆறு மணிக்கு இங்க ஆஜராயிடணும்…சிறப்புக்காட்சி ஏழு மணிக்குத் துவங்கிடும்’

    ‘கண்டிப்பா வந்துடுவோம் பிரசன்னா’

    அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் பிரசன்னாவும் தன் பைக்கில் ஏறிப் பறந்தான்.

    காலை நாலரை மணியிருக்கும்,

    யாரோ கதவை ‘தட…தட’வெனத் தட்டும் ஓசை கேட்டு வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தான் பிரசன்னா. ‘யாராயிருக்கும்….இந்த நேரத்துல..?’ யோசனையுடன் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான்.

    கோகலே வீதி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த நாலைந்து இளைஞர்கள் நிற்க,

    ‘என்னப்பா….என்ன விஷயம்?’

    ‘வந்து…வந்து…’

    ‘அட..என்ன..’ சற்றுக் கடுப்புடனே கேட்டான் பிரசன்னா. இரவு லேட்டாய் வந்து படுத்ததில் கண்கள் தீயாய் எரிந்தன.

    ‘தியேட்டர் வாசல்ல நாம கட்டியிருந்த பேனர்களுக்கும் வளையங்களுக்கும் யாரோ தீ வெச்சுட்டாங்க பிரசன்னா…’

    ‘என்ன…தீ வெச்சுட்டாங்களா?’ அதிர்ந்து போன பிரசன்னா பதட்டமாய்க் கிளம்ப, பாதித் தூக்கத்தில் எழுந்து வந்த அவன் தாய், ‘டேய்…டேய்…என்னடா…என்னாச்சுடா?’ அவன் பின்னாடியே வந்து கேட்டாள்.

    ‘ப்ச்….வந்து சொல்றேன்மா…’ தாவிச் சென்று பைக்கில் ஏறி, மின்னல் வேகத்தில் பறந்தான்.

    தியேட்டர் வாசல் சாம்பல் குவியலாயிருந்தது. ஆங்காங்கே பாதி எரிந்த நிலையில் பேனர்களும்…கட்அவுட்களும்…வளையங்களும் கிடக்க, இன்னொரு புறம் அவன் ஆசை ஆசையாய்க் கட்டி அழகு பார்த்த, தலைவனோடு அவன் நிற்கும் பேனர் குற்றுயிராய்க் கிடந்தது.

    ஆத்திரத்தில் வலது கையால் இடது உள்ளங்கையில் ஓங்கிக் குத்தினான் பிரசன்னா.

    ‘யாரு…யாரோட வேலைடா இது…?’ கண்கள் சிவக்கக் கேட்டான்.

    எதிர் டீக்கடையிலிருந்து நிதானமாய் நடந்து வந்த அந்தக் கட்டம் போட்ட லுங்கிக்காரன், ‘தம்பி…நான் பார்த்தேன்…தீ வெச்ச ஆளுங்களை..’ என்றான் பிரசன்னாவைப் பார்த்து.

    பாய்ந்து வந்து அவன் சட்டைக் காலரைப் பற்றிய பிரசன்னா கத்தலாய்க் கேட்டான், ‘சொல்லு…சொல்லு…யாரு…யாரு?’

    ‘த பாரு தம்பி…அவனுக யாரு எவருன்னு எனக்குத் தெரியாது…ஆனா தீயை வெச்சுப்புட்டு அவனுக கத்திட்டுப் போனது மட்டும் எனக்கு நல்லாக் காதில் விழுந்தது’

    ‘சரி…அதையாவது சொல்லித் தொலை…என்ன கத்திட்டுப் போனானுங்க?’ சட்டைக் காலரை உதறலாய் விடுவித்தான் பிரசன்னா.

    ‘விக்டரி ஸ்டார் விமலன் வாழ்க..! விக்டரி ஸ்டார் விமலன் வாழ்க’ன்னு கோஷம் போட்டுக்கிட்டே ஓடினானுக’

    ‘நெனச்சேன்….அவனுகளாத்தான் இருக்கும்னு நெனச்சேன்!…விட மாட்டேன்டா.. இதுக்கு அவனுக பதில் சொல்லாம விட மாட்டேண்டா…!’ என்று ஓங்கிய குரலில் கத்திவிட்டு, தன் சகாக்கள் பக்கம் திரும்பி, ‘டேய்…ரவி…போடா…ஓடிப் போய் அஞ்சு லிட்டர் பெட்ரோல் வாங்கிட்டு வாடா’

    ‘பிரசன்னா….எதுக்கு நீ இப்ப பெட்ரோல் கேட்கறே?’ அந்த ரவி புரியாமல் கேட்க,

    ‘டேய்…கேள்வி கேட்காத…சொன்னதை மட்டும் செய்’

    அந்த ரவியாகப்பட்டவன் தயங்கி நிற்க, “இப்ப நீ போறியா?…இல்ல நானே போய் வாங்கிட்டு வரட்டுமா?” விழிகள் சிவக்க பிரசன்னா அதட்டிய அதட்டலில் ரவி பாய்ந்தோடினான்.

    பெட்ரோல் கேன் கைக்கு வந்ததும், ‘இளஞ் சூறாவளி ராகவ் ரசிக கண்மணிகளே….. நம்ம தலைவரோட பேனர்களையும்….கட்அவுட்களையும் அந்த விமலனோட ரசிகர்கள் கொளுத்தினதுக்கு நீதி கேட்டு என்னை நானே கொளுத்திக்கப் போறேன்…!’

    அந்த அதிகாலை நேரத்தில்….அவ்வளவாக கூட்டமில்லாத சாலையில்…தனக்குத் தானே பெட்ரோல் அபிஷேகம் செய்து கொண்டு, தனக்குத் தானே தீபாராதனை காட்டிக் கொண்டு, அபிமான நடிகனுக்காக அமரனானான் பிரசன்னா.

    காட்சிகள் ரத்து செய்யப்பட்டு…தியேட்டர் சீல் வைக்கப்பட்டது. ஆனால், தாறுமாறாய் கிடைத்த தீக்குளிப்பு விளம்பரத்தினால் இளஞ் சூறாவளி ராகவ்வின் திரைப்படம் ரிலீஸ் ஆன மற்ற எல்லாத் தியேட்டர்களிலும் பிய்த்துக் கொண்டு ஓடியது.

    தமிழகமெங்கும் பத்தே நாளில் ஐம்பது நாள் வசூலை வாரிக் குவித்தது.

    தனக்காக உயிரை மாய்த்துக் கொண்ட அந்த ரசிகனின் குடும்பத்திற்கு ஒரு சொற்ப….அற்ப….தொகையை பெரும் விளம்பர ஏற்பாட்டிற்குப் பிறகு வழங்கிய இளஞ்சூறாவளி, தன் படத்தின் நூறாவது நாள் விழாவிற்காக காத்திருந்தார்.

    இரவு 11.30.

    இளஞ் சூறாவளி ராகவ்வின் பிரத்யேக கைப் பேசி ராகமிசைக்க எடுத்துப் பார்த்தார். ‘விக்டரி ஸ்டார் விமலன்’

    ‘ஹல்லோ…விக்டரி ஸ்டார் …எப்படியிருக்கீங்க?’ இளஞ் சூறாவளி சிரிப்புடன் கேட்க,

    ‘ஐ யாம் ஃபைன்!…அது சரி இளஞ் சூறாவளி…எப்ப உன் படத்தோட நூறாவது நாள் விழா?’

    ‘ம்ம்ம்….அதுக்கு இன்னும் இருபது நாளிருக்கே’

    ‘ம்…ம்…ஜமாய்ங்க…’ விமலன் சொல்ல

    ‘எல்லாம் உங்க தயவுதானே விமலன்?…நீங்க மட்டும் அன்னிக்கு உங்க ஆளுங்களை வெச்சு…அந்த தியேட்டர் முன்னாடி என்னோட ரசிகர்கள் கட்டின பேனர்களை எரிக்கலைன்னா…அந்தப் பையன் தீக்குளிப்பானா?…அப்படி அவன் தீக்குளிச்சதுதானே பெரிய விளம்பரமாகி…என் படத்தையே அமோக வெற்றியடைய வெச்சிருக்கு’

    ‘சரி…சரி…இப்ப நான் உங்களைக் கூப்பிட்டது எதுக்குன்னா…அடுத்த வாரம் என்னோட புதுப்படம் ரிலீஸாகப் போகுது…அந்தப் படமும் வெற்றிப் படமாகணும்…உங்க படத்துக்கு நான் எப்படி ஹெல்ப் பண்ணினேனோ, அதே மாதிரி நீங்களும் ஏதாவது ஹெல்ப் பண்ணி என்னோட படத்தையும் ஜெயிக்க வைக்கணும்’

    ‘செஞ்சுட்டாப் போகுது விமலன்…உங்க பின்னாடியும்….என் பின்னாடியும் லட்சக் கணக்குல முட்டாள் ரசிகனுங்க இருக்கற வரைக்கும் நமக்கென்ன கவலை?’ இளஞ் சூறாவளி ராகவ் சொல்லி விட்டுச் சிரிக்க,

    பதிலுக்குச் சிரித்தது விக்டரி ஸ்டார்.

    அதே நேரம்,

    மகன் சாவிற்குப் பின் பைத்தியமாகிப் போன அந்தப் பிரசன்னாவின் தாய் மகனின் போட்டோவைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தாள்.

    ‘ஏண்டா…”வந்து சொல்றேன்மா” ன்னுட்டுப் போனியே ஏண்டா வரலை? சொல்லுடா ஏண்டா வரலை?’

    (முற்றும்) 

    Share
  • அன்னையைப் பணிவோம்!

     

    பாகம்பிரியாள்

    இருளில் மூழ்கிக் கிடக்கும் உயிர்களைத் தன்
    அருள்பார்வையால் காத்த அன்னையைப் பணிவோம்.

    பொருளே வாழ்க்கை என கானல் நீரைத்தேடியவர் மேல்
    அருள் மழை பொழிந்த அன்னையைப் பணிவோம்.

    துன்பம் வந்த போதெல்லாம்  துவண்டு விடாமல் நம்
    துயர் துடைத்துய்வித்த  அன்னையைப் பணிவோம்.

    பொறாமை என்னும் நோய் பீடித்தபோதெல்லாம்
    பொறுமையாய்க் காத்த அன்னையைப் பணிவோம் .

    இரவும், பகலும் அவளை மறந்து அலைந்த போது
    அருள் கரம் காட்டிய அன்னையைப் பணிவோம்.

    கால பயம் நீங்கிட காலனை காலால் உதைத்து
    கனகமணியாய் விளங்கும் அன்னையைப் பணிவோம்  

    தேறும் வழி தெரியாது தவித்தழுத போதெல்லாம்  
    தஞ்சம் என்று அருளிய  அன்னையைப் பணிவோம்.

    வல்வினைகளை நீக்கி , வாடும் உயிர்கள்மேல்
    வாஞ்சையைப்பொழியும் அன்னையைப் பணிவோம்.

    ஒன்பது நாளும் கம்பீரமாய்  கொலு வீற்றிருக்குமவள்
    அழகை  தீந்தமிழில் பாடி, அன்னையைப் பணிவோம்!

     

    படத்துக்கு நன்றி

    http://www.lotussculpture.com/8bc11.html

    Share
  • உச்சி மாநாடு!

    எல்லைக் கட்டுப்பாட்டுக்குள்
    தூய்மைப்படுத்த
    அப்புறப்படுத்த
    சீர்படுத்த
    ஒரு
    கணக்கெடுப்பு!

    மனிதப்பதர்களின்
    இயற்கைச் சூழல்
    அட்டூழிய
    அடாவடிகள்
    எதிர்கொள்ள
    ஒரு
    கருத்தாய்வு!!

    வேலனது
    பருத்திக்காட்டில்
    பச்சைப்புழு அகற்றம்
    குமரனது நெற்பயிரில்
    அடர்புழு நீக்கம்
    கந்தனது வாழையில்
    குருத்துப் புழு
    கொத்தியெடுப்பு
    ஆங்காங்கே
    வேலை நியமனம்!

    எல்லாமும்
    அலசி ஆய்ந்திட
    ஊர்த்தலைவாசலில்
    மின்னோட்டமில்லா
    மின்கம்பிகளில்
    மின்னல்வேக
    ஏற்பாட்டில்
    ஓர்
    உச்சிமாநாடு!

    இது
    அனைத்துண்ணிகளாம்
    பகுத்துண்ணிகளின்
    உச்சிமாநாடு!!

    Share
  • கட்டுக்கடங்காத வெள்ளம்!

     

    இசைக்கவி இரமணன்    

    காலு வச்ச எடமெங்கும்  தாமரை
    கையி தொட்ட எடமெங்கும் பூமழை
    கண்ணு பட்ட எடமெல்லாம் பெளர்ணமி
    கன்னு முட்ட முட்டவரும் பால்மடி

    இவ எட்ட முடியாத பைரவி
    எவனும் கிட்ட நெருங்காத பேரொளி

    அவ சுட்ட எடமெங்கும் பொட்டலே
    அது தொட்ட கணத்துல பூக்குமே

    இது கட்டுக் கடங்காத வெள்ளமே
    அதைக் கட்டத் துடிக்குது உள்ளமே

    தென்றல் தொட்டு விழுந்தது பட்டு மலரொன்று
    போகுது ஊர்கோலமே!

    இனி திக்குத் தெசெயொண்ணுமில்லயே
    இதில் திரும்ப வழியொண்ணுமில்லயே
    இதில் இன்பமும் துன்பமும் வண்ணமே
    அதில் வண்ணங்கள் ஒவ்வொன்றும் ராகமே

    எந்தன் நட்டநடு நெஞ்சில் பைரவி
    அது பட்டப் பகலினில் ராத்திரி

    தங்கம் கொட்டிக் கெடக்குது கொல்லையில்
    உயிர் பஞ்சுப் பறக்குது கொள்ளையில்

    இன்னும் எத்தனை எத்தனை சென்மமோ?
    இந்த அன்புக்குப் பேரென்ன வன்மமோ?

    அந்த முத்துச் சிரிப்பியின் பித்தத்திலே
    இந்தச் சத்தமும் சங்கீதமோ?
    நான் உங்களுக்கு வழி சொல்லவா?
    அட உங்களையும் சுழல் கொள்ளவா?
    தேன் சின்னத் துளியில்ல ஊருணி
    வான் அந்தத் துளிக்குள்ள முக்குளி
    அவ வச்சுக்கிட்ட பேரு பைரவி
    அதைச் சொல்லச் சொல்ல நெஞ்சில் காவிரி

    அட கண்ணில் பெருகுது கங்கையே
    அடி காலை அளந்தவன் தங்கையே

    அம்மோய்! அண்ட பகிரண்டம் பம்பரம்
    அங்கு ஜனன மரணங்கள் சாமரம்

    என்னைக் கொண்டவளே உன்னைக் கண்டொருநாள் ரெண்டு
    வார்த்தை சொன்னாலிது தீருமோ

    அவ ஊரறியாத பயங்கரி
    வந்து ஊட்டி வளர்க்கிற சங்கரி
    அவ வச்சதுதானிங்கு சட்டமே
    அந்தச் சட்டமெல்லாம் அவ இட்டமே

    உயிர் உன்மத்த உச்சமே பைரவி
    அதில் ஊறிக் கெடக்குது என்விதி

    இனி மிச்சமொண்ணுமில்ல சங்கதி
    அட மீனுக்கு முக்கெல்லாம் சந்நிதி

    அந்தக் காத்துல வாசனை என்கதி
    அவ காலில் கெடப்பதே நிம்மதி

    அந்த உச்சாணிக் கொம்புல உக்காந்த பைங்கிளி
    பேச்சில் அறுந்தது சங்கிலி!

    காலு வச்ச எடமெங்கும் (இசை வெள்ளத்தில் மூழ்கித் திளைக்க)

    படத்திற்கு நன்றி :

    http://srisubramaniamthroupathai.webs.com/srithroupathaimahashakti.htm#542691942

    Share
  • வீணையடி நீ எனக்கு!

     

     

    ஷைலஜா

    கர்னாடக சங்கீதத்தின் உயிர்நாடியாக விளங்குவது வீணை. வீணையை உற்பத்தி செய்வதும் சரி, பயில்வதும் சரி கடினமானது. வீணை, ஆய கலைகள் அறுபத்து நான்கிற்கும் அதிபதியாய் விளங்கும் சரஸ்வதி தேவியின் திருக்கரங்களில் தவழும் உன்னத வாத்தியமாகும். தமிழ் இலக்கியங்களிலும், பண்டைய சிற்பக்கலையிலும், ஓவியக்கலையிலும், அதி முக்கிய வாத்தியமாக அன்றும், இன்றும் விளங்குவது வீணை தான்.

    வீணை மிகவும் தொன்மை வாய்ந்தது. ஆன்மீகம் சார்ந்தது, வரலாற்றுப் பெருமைமிக்கது. இலங்கை மன்னன் இராவணன் வீணை வாசிப்பதில் உயர்ந்தவனாகவும்
     
     
     அவனது வீணை இசையில் எல்லாம் வல்ல சிவபிரானே லயித்ததாகவும் புராணக்கதை கூறும்.
     
    இன்றும் திருவரங்கம் அரங்கன் கோயிலில் இரவு திருவரங்கனுக்கு ஏகாந்த வீணை இசை வாசிக்கப்படுகிறது.(வேறு கோவில்களிலும் இருக்கலாம்)

    இன்று தமிழ் கலையுலகில் அரங்கத்தை அலங்கரிக்கும் அதி சிறப்பு வாத்தியங்களின் வரிசையில் முக்கிய இடம் பிடித்துள்ள வாத்தியமாக விளங்குவது வீணை… பலா மரமே இவ்விசைக் கருவியினை வடிவமைக்க பெரிதும் பயன்படுத்தப்படும் என்றாலும் ஒவ்வொரு வகையான வீணையைப் பொறுத்து வீணை
     
    செய்யப்பயன்படுத்தப்படும் மரமும் மாறுபடுகிறது.. கலைவாணி சரஸ்வதிதேவியின் திருக்கரங்களில் காணப்படும் வீணையானது சரஸ்வதி வீணை அல்லது இரகுநாத வீணை அல்லது தஞ்சாவூர் வீணையென்று அழைக்கப்படும். தஞ்சையை ஆண்ட மன்னனான இரகுநாத மன்னனின் காலத்தில் சிறப்புற வடிவமைக்கப்பட்ட வீணையே மேற் குறிப்பிட்ட பெயர்களைத் தாங்கிய வீணை இசைக் கருவியாகும். இது தவிர நடைமுறையில் பல வகைப்பட்ட வீணை இசைவாத்தியங்கள் இன்று வழக்கத்தில் இடம்பெற்ற போதும் பொதுப்படையில் மேலே குறிப்பிட்ட பெயர்களைத் தாங்கிய தஞ்சாவூர் வீணையே புழக்கத்திலும் தமிழரின் பாரம்பரிய நாரிசை வாத்தியமாகவும் பிரபல்யம் பெற்று விளங்குகின்றது.

    மேற்குறிப்பிடப்படும் வீணை ஆனது உற்பத்தி செய்யப்படும் இடத்தின் தன்மைக்கு ஏற்ற வகையிலும் அதன் ஒட்டு மொத்த அழகியல் அலங்கரிப்பு உருவ
     அமைப்பிலும் தஞ்சாவூர் வீணை சிறந்த அலங்கரிப்புடன் எடை கூடியதாகவும் விளங்குகின்றது. அதே சமயம் மைசூர் வீணையானது அலங்கரிப்பிலும்,
     வடிவமைப்பிலும் குறைந்ததாகவும், முன்குடமானது அளவில் பெரியதாகவும் விளங்குகின்றது. அவ்வாறே தஞ்சாவூர் வீணையின் (சரஸ்வதி வீணை)
     மற்றுமொரு உற்பத்தி பூமியாக திருவனந்தபுரம் விளங்குகின்றது. திருவனந்தபுர வீணை எடையில் குறைவானதாகவும் நீளத்தில் கூடியதாகவும் விளங்குகின்றது. தஞ்சாவூர் வீணை (சரஸ்வதி வீணை), மைசூர், மற்றும் திருவனந்தபுரம், ஆகிய இடங்களை உற்பத்தி மையமாகக் கொண்டு விளங்குவதுடன் அடிப்படையில்அதன் அலங்கரிப்பு, உருவ வடிவமைப்பு என்பன மாற்றம் பெற்ற போதும் அதன் பாவனை, நுட்பவியல், நுணுக்க வடிவமைப்பு என்பனவற்றில் எவ்வித மாற்றமும் இடம்பெறவில்லை.

    கர்நாடக இசை உலகில் அதி உன்னத இடத்தைப்பெற்ற வீணை தஞ்சாவூர் வீணை அல்லது சரஸ்வதி வீணை அல்லது இரகுநாத வீணை எனப் பல வகைப் பெயர்களால் குறிப்பிட்டு அழைக்கப்படினும் யாவும் ஓரே வகையான வீணையே ஆகும். பொதுவாக சாதாரண மக்களால் வீணை வாசித்தல் என சொல்லப்பட்டாலும் வீணை மீட்டலே சரியான வார்த்தை ஆகும் .
     
    வீணைகளையும் தம்புராக்களையும் உற்பத்தி செய்யும் தொழிலில் திருச்சியும் நாத பரம்பரையை வளர்ப்பதில் தன்னாலான தொண்டு புரிந்து வருகிறது. பல வெளிநாடுகளுக்கு   இந்த வாத்தியங்களை  ஏற்றுமதி செய்துவரும் ராம்ஜீ கம்பெனியை  திருச்சி ஆண்டார் தெருவில் மிக எளிமையான தோற்றத்துடன் ஆனால் உள்ளே கலையின் சாங்கோபாங்கமான விளக்கமுடன் இருப்பதை  சிறுமியாய்  இருக்கும்போது அப்பாவுடன் சென்று காண நேர்ந்தது. அப்போது அதன் உரிமையாளராக இருந்தவர்  அப்பாவிடம்,” இதை தொழில்னு சொல்லமுடியாதுங்க சார்  உயிர்த்துடிப்புள்ள கலைன்னு தான் சொல்வேன் வீணை தம்புராக்கள் செய்யறது மட்டுமில்ல  அவைகளை ரிப்பேருக்கு யாரும் கொண்டுவந்தா என் சொந்த செலவுலயே  செய்து்  தந்துடுவேன்” என்றார் மகிழ்ச்சியாக.
     
    ஒலிநயத்தைப்பற்றியும் சங்கீததைப்பற்றியும் நூற்றுக்கணக்கான நூல்கள் அந்ததொழிலகத்தின்  சிறிய  நூல்நிலையத்தில் இருந்தன  உற்பத்தியின் ஒவ்வொரு கட்டத்திலும்   அந்த   நூல்களைப்  பார்த்துதான் சரி செய்துகொள்கிறார்களாம். அந்த வாத்திய தொழிலகத்தின் பின்பக்கம் உள்ள கூடத்தில் முதல் உற்பத்திக்கூடங்கள் இருந்தன  ஒருவர் தண்டியை சரி செய்துகொண்டிருந்தார் இன்னொருவர் யாளிமுகப்புக்கு  ஃபினிஷிங் டச்  கொடுத்தார்.  வேறொருவர் சுருதிக்    கம்பிகளை இணைத்துக்கொண்டிருந்தார் . உற்பத்திக்கட்டங்கள்  பலவாறாகக்  காணப்பட்டன.
     
    ‘சாதகத்தால் பலம் பெறுகிறது சங்கீத ஞானம்  அதேபோல  ஆற  அமர   சிந்திச்சி செதுக்கி நகாசுகள் செய்து  நாதப்பரிசோதனை செய்து பெருமை பெறுவது
     வீணையாகும்” என்றார் அங்கிருந்த  ஒருவர். மேலைநாட்டு சங்கீதவிற்பன்னர்கள்  திருச்சியின் இந்த இசைக்கருவி தொழிற்கூடத்திற்குவந்து நாதப்பரிவர்த்தனை செய்து சென்றிருக்கிறார்களாம். பிரமாண சுருதி  என்றும் சுருதி ஆனந்தம் என்றும்  பெரியோர் கூறுவார்கள் நாதத்தின் உயிர் நாடியே சுருதி தானே!
     
     உற்பத்தியாளராக  வியாபாரியாக மட்டும்   இல்லாமல் தன்னை  ஒரு கலைஞராயும் அமைத்து  தாம் உற்பத்திசெய்யும்  தம்புரா வீணைகளை  சுருதி மீட்டி சரி பார்த்தார்  அன்று நான் சென்றபொது இருந்த அந்த  உரிமையாளர்(பெயர் மறந்துவிட்டது)ஆண்டார் தெருவில் தயாராகும் வீணையைப்பற்றி  அப்போது  திருச்சி தொழிலதிபர் இப்படிக்கூறினார் என அப்பா விவரித்தார்,”  வீணை இங்கே உற்பத்திச் செய்து விற்கப்படுகி்றது ஆனால் மறக்கப்படுவது கிடையாது! (A  Veena  is  sold  here, but is not  forgotton)

     இசைக்கருவிகளில்  வீணை  சிறந்தது ஏன் என்றால்  அதை எளிதிலே உண்டாக்கிவிட முடியாதாம் நல்ல மரத்தைதேர்ந்தெடுத்து வெவ்வேறு பகுதிகளையும் அமைத்து  அவற்றை இணைத்து     தந்தி பூட்டி உருவாக்கவேண்டும். அழகிய பருவ மங்கைபோல் விளங்கும் வீணை கமகத்தில் சிறந்தது. எந்தக்கருவிக்கும்   இல்லாத சிறப்பு வீணைக்கு உண்டு , ஆம், மற்ற கருவி்களை இயக்கும்போது ஒலிக்கும் விரல்களையோ வாயையோ எடுத்தால்  ஒலி நின்றுவிடும் ஆனால் வீணையை மீட்டியவிரலை எடுத்த பிறகும் அதன் கார்வை இனிதாக ஒலித்துக்கொண்டே  இருக்கும் , பெண் மனம்  போல!

    படங்களுக்கு நன்றி :

    http://en.wikipedia.org/wiki/Saraswati_veena

     

     

    Share
  • துர்க்கை

     

     கவிநயா

     துர்க்கை என்னும் பேரைச் சொன்னால் துன்பம் மிரண்டு போகுமே!

    நற்சொல்லாகி நாவில் நின்று நாளும் நம்மைக் காக்குமே!

     

    துர்க்கை என்னும் பேரைச் சொன்னால் தீமை ஓடிப் போகுமே!

    நற்பலன்கள் நம்மைத் தேடி வந்து நன்மை சேர்க்குமே!

     

    துர்க்கை என்னும் பேரைச் சொன்னால் அச்சம் அச்சம் கொள்ளுமே!

    நற்றுணையாய் நிமிடந் தோறும் கூட நின்று காக்குமே!

     

    துர்க்கை என்னும் பேரைச் சொன்னால் சஞ்சலங்கள் விலகுமே!

    சத்தியத்தைக் காட்டி நம்மின் சோதனைகள் தீர்க்குமே!

     

    துர்க்கை என்னும் பேரைச் சொன்னால் வினைகள் யாவும் தீருமே!

    வித்தை போல நல்லவற்றைத் தந்து நம்மைக் காக்குமே!

     

    துர்க்கை என்னும் பேரைச் சொன்னால் தோல்வி தோற்றுப் போகுமே!

    நிற்க என்று சொல்லி வெற்றி நம்மை வந்து பற்றுமே!

     

    துர்க்கை என்னும் நாமம் சொன்னால் அமைதி நெஞ்சில் கூடுமே!

    ஆனந்தமே ஆனந்தமாய் நம்மை வந்து சேருமே!

     

    கற்க என்று காலன் வந்து பாடம் சொல்லும் முன்னமே

    துர்க்கை நாமம் நெஞ்சில் வைக்க என்றும் நன்மை நன்மையே!

     

    படத்திற்கு நன்றி

    http://iravuvaanam.blogspot.com/2011_10_01_archive.html

    Share
  • பரமஹம்ஸரும் பவதாரிணியும்

     

    இசைக்கவி ரமணன்

    அவளுக் கென்றோர் மனமுண்டு! அதில்
    ஆயிர மாயிரம் குணமுண்டு!
    சிவனை நெஞ்சில் மிதித்திடுவாள், ஒரு
    சித்திர மலராய்ச் சிரித்திடுவாள்
    கவலைகள் யாவும் இவளேதான், ஒரு
    கலமாய் வருவதும் அவளேதான்!
    எவரும் எதுவும் அறியாமல், இவளே
    எதிரே புதிராய்த் திரிகின்றாள்!

    ஏதும் துவங்கிய முன்பேயே, அவை
    எல்லாம் விழுங்கி வியர்த்தவள்தான்
    ஏதோ மிஞ்சி இருப்பதுபோல்
    இன்றும் வீதியில் திரிகின்றாள்
    தீதும் நன்றும் இவள்கண்கள், இவள்
    சிந்திய சிரிப்பே நம்பெண்கள்
    கீதம் பாடும் கவிஞர் நெஞ்சில்
    கிளர்ந் தெழுந்திடும் கிரணங்கள்!

    உச்சி வெய்யில் வியர்வையிலே
    உடம்பில் ஒருவித நடுக்கம்போல்
    பிச்சியின் சினத்தின் உச்சத்தில்
    பெயர்ந்த சுகமே பக்தியடா!
    தன்னை மீறிய புதிரொன்று
    தன்னி லிருந்தே தோன்றியதை
    அன்னை உணர்ந்து வியக்கின்றாள்
    அதனைக் காண விழைகின்றாள்!

    எங்கே எப்படிக் காணுவது?
    எவ்விதம் தன்னைக் காணுவது?
    கங்கைக் கரையின் ஓரத்தில்
    கனலாய் பக்தி ஒதுங்கியது
    அங்கே பதுமை வடிவத்தில்
    அநந்த சக்தி ஒடுங்கியது
    எங்கும் காணாப் பேரின்பம், ஓர்
    ஏழையின் மூலம் துலங்கியது!

    பவதா ரிணியே கண்ணாடி
    பரம ஹம்ஸரே பக்தியதில்
    அவரை வைத்துத் தன்னைத்தான்
    கண்டு மகிழ்ந்தாள் பராசக்தி!
    சிவனே அறியாப் பேதையவள்
    சித்தம் சிலிர்க்க வைத்தவரை
    இவனா கவியில் பாடுவது?
    இலையா நதியைச் சூடுவது?

    பக்திக் கனலின் வெப்பத்தால்
    சக்தியின் பிடரியைப் பற்றியவர்
    சக்தி யென்னுமோர் மூர்க்கத்தை
    சற்றும் குறையா ஆக்கத்தை
    நற்கதி அனைவரும் பெறவேண்டி
    நட்டு வைத்தார் நடுவூரில்
    முக்தியும் இதற்கோர் ஈடில்லை, எந்த
    முடிவும் இதுபோல் சுகமில்லை!

    காளியின் கண்ணைப் பாருங்கள், அதில்
    பரம ஹம்ஸரே தெரிகின்றார்
    தூளியி லாடும் குழந்தைபோல்,
    தூண்டிற் புழுபோல், தோள்தேடும்
    தோழன் போல், ஒரு துணைவன்போல்
    துவண்டு புரண்டு துடிக்கின்றார்
    ஆளே யின்றி அத்வைத
    அருமை ஒருமையில் நிற்கின்றார்!

     
    அவளுக் காக அழுவதுபோல்
    ஆனந் தம்வே றொன்றில்லை
    அவளே கதியென விழுவதுபோல்
    அறிவொன் றிங்கே வேறில்லை
    அவளே தானாய்க் காண்கின்ற
    அனுபவம் போல்பிறி தொன்றில்லை
    பவதா ரிணியைக் காணுங்கள்
    பரம ஹம்ஸர்தான் தெரிகின்றார்!

    படத்திற்கு நன்றி :

    http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D

    Share
  • ஸ்ரீ ஷிர்டி சாயி ஆறு

     

    இசைக்கவி ரமணன்

    ஸ்ரீ ஷிர்டி சாயி ஆறு

    (அக்டோபர் 21, 1985 விஜயதசமி அன்று எழுதியது)

     

    பாடத் திறந்தவாய் மூடமுடி யாதபடிப்
    பாயும்கங் கைப் பிரவாகம்
    பருகத் திறந்தவிழி பரிதியாய் விரியவே
    பரவுமின் பப் பிரகாசம்
    சாடப் பிறந்தகலி ஓடச் சிரித்தபடி
    சஞ்சாரம் செய்யும் நாகம்
    தரையேது வானேது தெரியாத விதமாகத்
    தாயாகப் பொழியு மேகம்
    தண்மையை தழலான தங்கதீபம் நெஞ்சைத்
    தாலாட்டும் தேவ கீதம்
    தந்திகளை உந்திவரும் சங்கநாதம் நல்ல
    தருணத்தில் வந்த வேதம்
    ஆடாஆ டப்பெருகும் ஆவேசம் நெஞ்சைவிட்
    டகலாது நீளும் தாபம்
    அள்ளஅள் ளப்பரவும் ஆனந்த சாகரம்
    அமிழ்தமென் சாயிரூபம்!

     

    நந்தா விளக்காக நமதுவினை எரியவதில்
    நாயகன் குளிர்காய்கிறான்
    நாளாக இரவாக வாளாகத் நின்றுதுயர்
    நண்ணாமல் காவல் செய்வான்
    வந்தாடும் பிள்ளையெனைப் பந்தாடி வீடெங்கும்
    வாசலாய் மாற்றிவிட்டான்
    வருவதெது செல்வதெது விரைவதெது தெரியாமல்
    வண்ணவிண் நாய்நிறைந்தான்
    என் தாயுமல்லவோ என் தந்தையல்லவோ
    எல்லாமும் நீயல்லவோ!
    ஏனோ வெறித்தபடி எங்கோநீ நோக்குவதும்
    எமதுநலன் தானல்லவோ?
    சந்திநே ரத்தொளிரும் தங்கத் தடாகத்தில்
    தாமரை எங்கள் தேகம்
    சந்நிதி உலாவந்து சஞ்சலம் தீர்க்கும் ஆச்
    சர்யமென் சாயி நாமம்!

     

    யார்சொல்லி வீதியினில் யாகத்தின் ஜ்வாலையாய்
    யாசகம் கேட்டுவந் தாய்?
    யார்சொல்லி ஆனந்த லீலைகள் மாயங்கள்
    அன்றாடம் என்றாக்கினாய்?
    யாரழைத் தாலும்வந் தருள்செய்யும் கருணையை
    ஐயனே எங்கு கற்றாய்?
    அபலையாய் நின்றவெனை அன்போடு தடவியேன்
    அருள்மொழிகள் பேசவைத்தாய்?
    ஓரிழை கூடவொளி நுழையாத நெஞ்சிலேன்
    உள்ளங்கை யாகநின்றாய்?
    ஓங்காரம் ரூபமாய் ஒளியெலாம் நாதமாய்
    ஓயாமல் விந்தைசெய்தாய்
    ஆரழைத் தாலும்விசி அகலாமல் கடலுன்னுள்
    அலையாய்க் கலந்திருக்கும்
    அல்லல்புயல் வீசுமொரு தொல்லைப்ர தேசத்தின்
    ஆச்சரியம் சாயிதீபம்!

     

    விட்டாலும் எனைவிட்டு வெளியெங்கும் போகாமல்
    வீடாக வாழவேண்டும்
    கொட்டாமல் உள்ளழகுக் கோலத்தை யேகாண
    ஒத்தாசை செய்யவேண்டும்
    சுட்டாலும் உன்கோவில் சுவரிலே மோதிநான்
    சுமையின்றி வீழவேண்டும்
    ஒட்டாமல் நின்றபடி உயிரெலாம் தழுவுமுன்
    உள்ளன்பில் நெகிழவேண்டும்
    முட்டாமல் முட்டிமடி மோதிக் களிக்கும்நான்
    மோகனக் கன்று நீ தாய்
    தொட்டாலும் வானமாய்த் தொலைவெங்கும் செல்லாமல்
    தூபமாய் நீ நிறைந்தாய்
    எட்டாத படியென்று முட்டிமுட் டிக்கதறி
    எத்தனைக் காலமழுதேன்!
    முட்டா ளெனைக்கொன்று முகமெலாம் ஆனந்தம்
    மூட்டியது சாயிதீபம்!

     

    விழிதிறந் தாலென்ன இமைவிழுந்தா லென்ன
    வேண்டியதை மனம்பார்க்குமே!
    வெளியென்றும் உள்ளென்றும் விளையாட்டு நின்றகணம்
    விரிகின்ற புதுலோகமே!
    மொழியெலாம் சுடராகிச் சுடரெலாம் மொழியாகி
    மோடி தலை சுழலுதையா!
    மோனமா ஞானமா மூண்ட அபிமானத்தில்
    வானெலாம் அழுததையா!
    வழியெலாம் திருநாட்கள் வாசலில் கைபொத்தி
    வரவேற்றுப் பாடுதையா
    தவழ்ந்திடத் தவழ்ந்திடத் தரையெலாம் மடியாகித்
    தடுமாற வைக்குதையா!
    அழவேண்டி வரும்கண்ணீர் ஆகாய கங்கையாய்
    அடிநெஞ்சில் மோதுதையா!
    தொழவேண்டும் என்றேனும் தோணாத மூடனின்
    தோள்தட்டும் சாயிநாமம்!

     

    நரகத்தில் வாழ்வதே நலமென்று நம்பினேன்
    நாதனே வந்துநின்றாய்!
    நான்பார்க்கி றேனென்னும் மடமையினி யில்லையெனை
    நீபார்க்கும் நினைவுபோதும்!
    விரகத்தைக் கொண்டாடும் வீணனைத் துரியத்தின்
    வெட்டவெளி தொட்டருளினாய்
    வீணான காலங்கள் விளைக்கின்ற உரமாகும்
    விந்தையதை யும்புரிந்தாய்
    கரகங்கள் தலைமீது காலடியில் கனலாறு
    கடுவெய்யில் சுட்டெரிக்க
    கங்கையாய் வந்தென்னைக் காப்பாற்றி மாறாத
    கடனாளி யாக்கிவிட்டாய்
    சிரசுக்குன் சீரடி சிந்தைக்கு ஷீரடி
    சித்தமெல் லாமுன் துனி!
    செப்புவதும் உந்நாமம் சிந்திப்ப துன்ரூபம்
    சேரும்கதி உன்தீபமே!

    படத்திற்கு நன்றி :
    http://www.saibaba.ws/quotes/shirdi100sayings.htm

    Share
  • மீண்டும் ‘இல்னாவின்’ தலைவராக பரேஷ் நாத்

     

    செல்வரகு

     

    BY,

    T.JAYANTHI

    EDITORIAL IN-CHARGE,
    GRIHSHOBHA (Delhi press Group)

     

    Share