”ஐயம் அகற்றி அருச்சுனர்க்குள், ஆவேசம்
மையம்கொள் கீதை மொழிகின்றான்:, -தெய்யம்
விராட்உத் தமவில்லன், வீரன் கிரிக்கெட்
விராட்கோலி யின்பேட்டிங்(Batting) வீச்சு’’….கிரேசி மோகன்….
பாண்டவர்களுக்கு உத்தமன்
கெளரவர்களுக்கு வில்லன்….
”ஐயம் அகற்றி அருச்சுனர்க்குள், ஆவேசம்
மையம்கொள் கீதை மொழிகின்றான்:, -தெய்யம்
விராட்உத் தமவில்லன், வீரன் கிரிக்கெட்
விராட்கோலி யின்பேட்டிங்(Batting) வீச்சு’’….கிரேசி மோகன்….
பாண்டவர்களுக்கு உத்தமன்
கெளரவர்களுக்கு வில்லன்….
– தேமொழி.
தாயானும் தந்தையா லானும் மிகவின்றி
வாயின்மீக் கூறு மவர்களை ஏத்துதல்
நோயின் றெனினும் அடுப்பின் கடைமுடங்கும்
நாயைப் புலியா மெனல்.
(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)
பதம் பிரித்து:
தாயானும், தந்தையாலானும், மிகவு இன்றி,
வாயின் மீக்கூறுமவர்களை ஏத்துதல்-
நோய் இன்று எனினும், அடுப்பின் கடை முடங்கும்
நாயைப் புலியாம் எனல்.
பொருள் விளக்கம்:
(காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு என்ற மனநிலையைக் கொண்டவர்களான) பெற்ற தாயும் தந்தையும் கூட பெருமையுடன் கூறவழியற்ற பண்புகளின் இருப்பிடமானவர்,
தானே தன்னைப் புகழ்ந்து பொய்யுரைத்துப் பேசிக் கொண்டிருப்பார் என்றால், பிறரும் அவர் மொழியினை நம்பி அவர்மேல் புகழுரைகளைக் கூறிக்கொண்டிருப்பது எந்தத் துன்பத்தையும் விளைவிக்காது. ஆயினும், அது அடுப்பின் அருகில் சோம்பலுடன் முடங்கிக்கிடக்கும் நாயொன்றினை வீரம் நிறைந்த புலி எனப் பாராட்டும் (நகைப்பிற்குரிய செயலாக அமைந்துவிடும்).
பழமொழி சொல்லும் பாடம்: தற்புகழ்ச்சி கொண்டவரை அவர் மகிழும் வண்ணம் போற்றிப் புகழ்ந்துகொண்டிருப்பது முறையற்ற புகழ்ச்சியின் வகைப்படும். சிறியோர்களது பண்பு என்றும் தன்னைத்தானே புகழ்ந்து கொண்டிருப்பது என்பதைச் சுட்டுகிறார் வள்ளுவர்,
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து. (குறள்: 978)
செருக்கின்றி யாவருடனும் பணிவன்புடன் பழகுவது பண்பில் சிறந்த பெரியோர்களின் குணம், சிறுமைக்குணம் படைத்த பண்பற்றோரே ஆணவத்துடன் தற்புகழ்ச்சியாகத் தன்னைத்தானே வியந்து பாராட்டிக் கொண்டிருப்பர்.
அத்தகையோரே விரும்பிக் கேட்டாலும் அவர்களுடன் பயனற்றவற்றைப் பேசத் தேவையில்லை எனக் குறிப்பிடும் வள்ளுவர்,
வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல். (குறள்: 697)
ஒருவரிடம் உரையாடும்பொழுது பயன்தருபவற்றை மட்டுமே பேசவேண்டும். அவரே விரும்பிக் கேட்டாலும் பயன்தராதா உரைகளைத் தவிர்த்துவிடுதல் வேண்டும் என்கிறார்.
”எட்டிநாம் போனாலும் கட்டி அணைத்திடுவான்,
எட்டவன் ஏழையவல் ஏற்றளிப்பான் -பெட்டியில்:
CHIPKO கிருஷ்ணனை சேர ’மர’த்தமிழா,
சுப்கே(ஹிந்தி) சமாதி சுகம்’’….கிரேசி மோகன்….
சுப்கே -சும்மா இருத்தல்….கேசவ் ஓகேயா….!
நாகேஸ்வரி அண்ணாமலை
2016-ஆம் ஆண்டுக்கான அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் சூடுபிடித்து வருகிறது. குடியரசுக் கட்சியில் ஆரம்பத்தில் பத்துப் பேர் களத்தில் இறங்கினர். ஆனால் படிப்படியாக ஐந்து பேர் போட்டியிலிருந்து விலகிய பிறகு இப்போது ஐந்து பேர் களத்தில் இருக்கின்றனர். இவர்களில் மூன்று பேர்தான் கடைசிக் கட்டம்வரை இருப்பார்கள் போல் தெரிகிறது. இவர்கள் மூன்று பேரும் கொஞ்சம் கூட இங்கிதம் தெரியாதவர்கள். எதையெல்லாம் பேசக் கூடாது என்று ஒரு வரையறை இருக்கிறதோ அதையெல்லாம் பேசித் தீர்க்கிறார்கள்.

அதிலும் முன்னணியில் இருக்கும் டொனால்ட் ட்ரம்ப் வாய்க்கு வந்ததைப் பேசுகிறார். கூட்டத்தில் நிருபர்கள் இதை எப்படிச் சமாளிப்பீர்கள், அதை எப்படிச் சமாளிப்பீர்கள் என்று எதைக் கேட்டாலும் ‘அந்த நிலை வரும்போது பார்த்துக்கொள்ளலாம்’ என்கிறார். இவரை முந்துவதற்கு டெட் க்ரூஸ், மார்க்கோ ரூபியோ ஆகிய இருவரும் என்னென்னவோ முயற்சிகள் செய்கிறார்கள். ஒன்றும் பலிக்கவில்லை. இவர்தான் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக நியமனம் பெறலாம் என்று சில குடியரசுக் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் இவரை ஆதரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். எல்லாம் எதற்காக? ட்ரம்ப் ஜனாதிபதியானால் இவர்களுக்கும் ஏதாவது பதவி கிடைக்கும் என்ற நப்பாசையால்தான்.
முதலில் போட்டியிட்ட பத்துப் பேர்களில் ஒருவரான இப்போதைய நியு ஜெர்ஸி மாநில ஆளுநரான கிரிஸ் கிறிஸ்டி திடீரென்று ட்ரம்பை ஆதரிப்பதாக அறிக்கை விட்டார். இதைக் கேட்டுப் பலர் அதிர்ச்சி அடைந்தனர். தன்னுடைய ஆதரவாளர்களையும் ட்ரம்பை ஆதரிக்கும்படி கிறிஸ்டி கேட்டுக்கொண்டிருக்கிறார். ஆனால் பலருக்கு இது பிடிக்கவில்லை. அப்படியும் சிலர் கிறிஸ்டி கேட்டுக்கொண்டதற்கிணங்க ட்ரம்பை ஆதரிக்கப் போகிறார்கள். ட்ரம்ப்பிற்கு நியு ஜெர்ஸி மாநிலத்தில் சில வணிகத் தொடர்புகள் இருப்பதால் அவருக்கு அம்மாநிலம் பற்றி நன்றாகத் தெரியும் என்றும் கிறிஸ்டி காரணத்தோடுதான் ட்ரம்பை ஆதரிக்கிறார் என்றும் கூறுகிறார்கள்.
முதலில் பத்துப் பேரில் ஒருவராக ஜனாதிபதி பதவிக்கு கிறிஸ்டி போட்டி போட்டபோது ட்ரம்பை எப்படித் தாக்கிப் பேசினார் என்று பல பத்திரிக்கை நிருபர்கள் பழையதைத் தோண்டி எடுத்து வெளியிடுகிறார்கள். முஸ்லீம்கள்தான் அமெரிக்காவில் நடக்கும் பெரும்பாலான துப்பாக்கி வன்முறைகளுக்குக் காரணம் என்றும் அவர்களை இனி அமெரிக்காவிற்குக் குடியேற அனுமதிக்கக் கூடாது என்றும் ட்ரம்ப் பேசிவருகிறார். 2011-இல் கிறிஸ்டி நியு ஜெர்ஸி மாநில நீதிபதிகளுள் ஒருவராக ஒரு முஸ்லீமை நியமித்தபோது அதை எதிர்த்த சில பழமைவாதிகளை கிறிஸ்டி கடுமையாகச் சாடினார். அவர் இப்போது முஸ்லீம்களுக்கு முதல் எதிரியாக விளங்கும் ட்ரம்பை எப்படி ஆதரிக்கிறார் என்று பலரால் புரிந்துகொள்ள முடியவில்லை. இவர் போட்டியில் இருந்தபோது ட்ரம்ப் ஜனாதிபதி பதவிக்கு அருகதை அற்றவர் என்றார். அரசியலில் எதுவும் நடக்கலாம் என்று புலம்புவதைத் தவிர வேறு எதுவும் அவர்களால் செய்ய முடியவில்லை.
ஜனநாயகக் கட்சியில் நான்கு பேர் முதலில் முன்னிலையில் இருந்தனர். இப்போது போட்டியாளர்கள் இரண்டு பேர்தான். ஒருவர் வெர்மான்ட் செனட்டராக இருக்கும் பெர்னீ சேண்டர்ஸ்; இன்னொருவர் ஹிலரி கிளின்டன். சேண்டர்ஸ் இருபது வருடங்களுக்கும் மேலாக செனட்டராக இருக்கிறார். இவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது நேரத்திற்குத் தகுந்த மாதிரி தன் கொள்கைகளை மாற்றிப் பேசாமல் இருப்பது. அவருடைய பொருளாதாரக் கொள்கைகளில் சில நடைமுறைக்கு ஒத்துவராததாக இருந்தாலும் தான் மனதில் நினைப்பதை ஒளிவு மறைவில்லாமல் பேசுகிறார். ஒபாமாவிற்குப் பிறகு இவர் ஜனாதிபதியாக வந்தால் அமெரிக்கா அடிக்கடி போர்க் கொடியைத் தூக்கிக்கொண்டு தனக்குப் பிடிக்காத நாடுகளோடு சண்டைக்குத் தயாராகாது.
ஆனால் ஹிலரி அப்படியல்ல. ஒரு பத்திரிக்கையாளர் கூறியதுபோல் இவர் ஒரு பச்சோந்தி. நேரத்திற்குத் தகுந்த மாதிரி பேசுவார். ஒபாமாவைப் போல் இவர் சமாதான விரும்பி அல்ல. இரண்டாவது முறை ஜனாதிபதியாக வர வேண்டும் என்றால் முதல் தடவை ஜனாதிபதியாகச் செயல்படும்போது என்ன வேண்டுமானாலும் செய்வார். எத்தனை தடவை எந்த நாட்டோடும் இவர் போர் புரியத் தயங்க மாட்டார். இவர் பெரிய சந்தர்ப்பவாதி. இரண்டு நாட்களுக்கு முன்னால் தென் கரோலினா மாநிலத்தில் கருப்பர்களின் அதிக ஓட்டுக்களைப் பெற்று அந்த மாநிலத்தில் ஜெயித்தார். கருப்பர்கள் மேல் தனக்கு அளவில்லாத அக்கறையும் அன்பும் இருப்பதாகக் காட்டிக்கொள்வார். தேர்தலுக்கு முன் அந்த மாநிலத்தில் ஒரு கூட்டத்தில் பேசியபோது ஒரு கருப்பின மாணவி 1996-இல் கருப்பர்கள் பற்றி அப்போது ஜனாதிபதியாக இருந்த இவருடைய கணவர் பில் கிளின்டன் எடுத்த முடிவை ஆதரித்ததற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கோரினார். அந்தக் கருப்பின மாணவியின் கோரிக்கையை சற்றும் எதிர்பார்க்காத ஹிலரி ‘நீதான் இந்தக் கோரிக்கையை என்னிடம் முதல் முதல் வைத்திருக்கிறாய்’ என்று கூசாமல் பொய் கூறினார். ஆயிரத்துத் தொண்ணூறுகளில் பில் கிளின்டன் ஜனாதிபதியாக இருந்தபோது நிறையக் குற்றங்கள் புரிவதாகக் கருப்பர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டபோது கருப்பர்களுக்கு சிறைத் தண்டனை அதிகரித்தது. ஹிலரி ‘குற்றவாளிகளில் அதிகம் பேர் ஏன் கருப்பர்களாக இருக்கிறார்கள் என்று ஆராய்வதற்கு முன் அவர்களை முதலில் மண்டியிடவைக்க வேண்டும்’ என்று கூறினார். தான் இப்படிச் சொன்னதற்கு ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடும் அவர் இப்போது வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று அந்த மாணவி கூறினார். அப்போது கருப்பர்களைப் பற்றி அவ்வளவு குறைவாகப் பேசியவர் இப்போது அவர்களுக்காக உருகுகிறாராம்! இதுதான் ஹிலரி.
அமெரிக்காவில் எல்லா வேட்பாளர்களுக்கும் நிறைய ஆதரவாளர்கள் உண்டு. ட்ரம்ப்பை ஆதரிப்பவர்களைப் பார்த்தால் அமெரிக்கர்கள் இத்தனை இனதுவேஷிகளா என்று எண்ணத் தோன்றுகிறது. க்ரூஸ் ஆதரவாளர்களைப் பார்த்தால் வறியவர்கள் மேல் இவர்களுக்கு இத்தனை வெறுப்பா என்று நினைக்கத் தோன்றுகிறது. ஹிலரியின் ஆதரவாளர்களில் பலர் பெண்கள். ஒரு பெண் என்பதற்காகவே இவரை இப்படிக் கண்மூடித்தனமாக ஆதரிக்கிறார்களே என்று எண்ணத் தோன்றுகிறது. இவர்களை எல்லாம் கூடப் புரிந்துகொள்ள முடிகிறது.
ஆனால் இந்தியாவில் ஒரு அரசியல் தலைவரின் சிலையைக் காரின் மேல் வைத்துக்கொண்டும் படத்தைத் தன் காரின் மேல் பகுதி முழுவதும் ஒட்டிக்கொண்டும் இருப்பவரையும் அவருக்குக் கோவில் கட்டிக் கும்பிடும் இன்னொருவரையும் புரிந்துகொள்ள முடியவில்லையே.
பவள சங்கரி
தலையங்கம்
ஜனநாயகம் காக்கப்படுவதற்காக எதிர் கட்சியை சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் 6 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து பல மணி நேரங்களாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். நாட்டின் பாராளுமன்ற எதிர் கட்சித் தலைவர் மட்டும் தொடர்ச்சியாக 11 மணி நேரத்திற்கும் மேல் பேசியுள்ளார். அந்த நாட்டின் பாராளுமன்றத்தின் பாதிக்கு மேல் உள்ள ஆளும் கட்சியினர் அதை அமைதியாக கவனித்தும் வருகின்றனர். அதுவும் அவருடைய பேச்சுகளுக்கு எந்த விதமான இடையூறும் செய்யாமல் கவனித்து வருகிறார்கள். அந்த பாராளுமன்றத்தின் சபாநாயகர் 115 நேரத்திற்கு மேலாக பேசுவதற்கு அனுமதி அளித்துள்ளார். இந்த அதிசயம் நடந்திருப்பது நம் நாட்டில் அல்ல. தென் கொரிய நாட்டில் நடந்த இது முந்தைய கின்னஸ் சாதனையான கனடா பாராளுமன்றத்தில் 50 மணி நேரம் தொடர்ச்சியாகப் பேசியதை முறியடித்து புதிய சாதனை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க செனட் சபையைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து இந்தியாவில் நடைபெறும் ஆட்சியில் மத உணர்வுகளுக்கு சகிப்புத் தன்மையின்மையை சுட்டிக்காட்டி பாரதப் பிரதமர் திரு மோடி அவர்கள் கண்டிக்க வேண்டுமென்று வற்புறுத்தியுள்ளனர்.
இங்கிலாந்து பாராளுமன்றத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் கட்சிப் பாகுபாடின்றி அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் டிரம்ப் அவர்களின் தேர்தல் வாக்குறுதியான, “நான் வெற்றி பெற்றால் இசுலாமியர்களை அமெரிக்க நாட்டிற்குள் அனுமதிக்க மாட்டேன்” என்று கூறியதை வன்மையாகக் கண்டித்ததோடல்லாமல் டிரம்ப் அவர்களை இங்கிலாந்திற்குள் அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறியுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து விலகும் என்ற முடிவினை ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களும் ஆக்கப்பூர்வமாக கருத்துகள் தெரிவித்து கேமரூன் அவர்கள் ஒன்றியத்திலிருந்து விலகுவதில்லை என்று முடிவு எடுத்தும் ஒன்றியத்தைச் சார்ந்த நாடுகளில் அகதிகளை ஏற்றுக்கொள்ளும் ஒத்தக் கருத்தினை ஏற்படுத்தியுள்ளனர். இப்படி வெளி நாடுகளில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனநாயகத்தைப் போற்றி பாதுகாக்கும் வேளையில் உலகின் இரண்டாவது மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் எதிர்கட்சியினரின் குரல்வளைகள் நசுக்கப்படுவதுடன், குண்டுக்கட்டாகத் தூக்கி எறியும் அவலங்களும், எதிர்கட்சியைச் சார்ந்த பெரும் தலைவர்கள் தேசத் துரோக குற்றச்சாட்டில் தில்லி முதலமைச்சர் திரு கேசரிவால் அவர்களும், கம்யுனிசத் தலைவர் திரு யெச்சூரி அவர்களையும், அகில இந்திய காங்கிரசின் துணைத் தலைவர் திரு ராகுல் காந்தி அவர்களையும் தேசத் துரோக குற்றச் சாட்டில் வழக்கு பதிவு செய்தலும், அகில இந்திய காங்கிரசு கட்சித் தலைவர் திருமதி சோனியா காந்தி, உதவித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அக்கட்சியைச் சார்ந்த சில தலைவர்கள் மீது டெக்கான் ஹெரால்ட் வழக்கைப் போடுவதும், பாராளுமன்ற எதிர்கட்சியினராகிய காங்கிரசு கட்சியினர் பாராளுமன்றத்தை நடக்க விடாமல் முடக்குவதும், நமது நாட்டின் சட்ட மன்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகளாக உள்ளது.
காந்தியின் சத்திய சோதனையின் அடிப்படையில் நடக்க வேண்டிய நமது நாட்டின் பாராளுமன்ற, சட்டமன்ற மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குவது மிகுந்த வேதனைக்குரிய விசயம். கீழ்த்திசை நாடான கொரியா ஆகட்டும், மேற்கத்திய நாடுகளாகிய அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் பாராட்டுதலுக்குரியதாக உள்ளதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியுள்ளது.
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
மாசி 19 2047 (02.03.2016) புதன் காலை
மின்னஞ்சலாக வந்த மீட்டுருவாக்கச் செய்தி.

அஃது அழைப்பிதழல்ல.
கண்ணுக்கு விருந்து,
செவிக்குத் தேன்,
மனத்துக்கு ஒத்தடம்,
புண்ணுக்கு மருந்து.
புலமைக்குக் களன்.
06.03.2016 யாழ்ப்பாணப் பொது நூலகத்தில்
புத்தக வெளியீட்டு விழா.
இணைப்பில் அழைப்பிதழ்.
கேட்க இனிக்கும் செய்தி.
இழக்காமல் மீட்டுருவாக்கும் முயற்சி.
இருப்பதைப் பேணும் முயற்சி.
காலத்தின் பெட்டகங்கள்.
கருத்துகளின் கருவூலங்கள்.
கற்பனைகளின் சிறகுகள்.
இலக்கியத்தின் மறுமலர்ச்சி
படைப்பாளிகளின் புறாக்கூடு
எழுத்துகளின் ஏட்டுக்குவியல்.
கோப்பாய் சிவத்தாரின் தந்தையார்
முதலாகப் புலமைக் களஞ்சியங்கள்
அதுவும் ஈழம் ஈந்த களஞ்சியங்கள்
பண்பாட்டுப் பேழைகள்
பரந்து பார்த்த உள்ளங்கள்
விட்டுச் சென்ற திறன்திரள்
இலக்கிய முதுசம் என்பேனா?
மண்ணின் விளைபொருள் என்பேனா?
வாழ்த்துகிறேன், வணங்குகிறேன்.
பாராட்டுகிறேன் புகழ்கிறேன்
பணிசெய்தார்முன் தலைபணிகிறேன்
தொய்யோம் தோற்கோம் தொடர்வோம்
வளமான மனிதம் நோக்கி வளர்வோம்.
எப்படி இப்படிச் சிந்தித்தீர்கள்.
இணையத்தில் உலவவிடுங்கள்
விலைகொடுத்து வாங்குவார்கள்
அமேசன் (amazon.com) அமைப்பினருக்குக்
காந்தளகம் சென்னை வழி விற்கலாம்
சசிரேகா tamilnool@tamilnool.com
உலகம் முழுவதும் சென்றடையும்
கேட்பவர்களுக்கு இணையமுகவரி சுட்டலாம்.
கிளிநொச்சியில் காந்தளகம் விற்றுத் தருவார்கள்
கமலராணி குணசிங்கம் 0776135602
விற்றால்தான் மீண்டும் இப்பணிகள் தொடரலாம்.
மீனாட்சி பாலகணேஷ்

சிறுமிகள் ஐந்தாறுபேர் சேர்ந்து ஒரு அழகான மண்வீட்டைக் கட்டுகிறார்கள். இதற்குச் சிற்றிலிழைப்பது எனப்பெயர். ஒரு வீட்டைக்கட்டி, இலைதழைகள் கொண்டு கூரையையும் அமைத்துப் பின் அதில் குடித்தனம் நடத்துவதாகப் பாசாங்கு செய்து விளையாடுகின்றனர். இங்கு ஒருபெண் சின்னச்செப்புகளை- அவை மரத்தாலோ, உலோகத்தாலோ அல்லது மண்ணாலோ செய்யப்பட்டிருக்கும்- அடுப்பில் ஏற்றிச் சோறு சமைப்பாள். அவரவர் வசதிக்கேற்ப மணலையோ, செல்வந்தர் வீட்டுக் குழந்தைகளாயின், முத்துக்களையோ நவரத்தினங்களையோ அதில் அரிசியெனப் பெய்து சமையல் நடக்கும். சாப்பிடுவதாகப் பாசாங்கு செய்யமாட்டார்கள். ஏனெனில் அதற்குள் யாராவது ஒரு சிறுவனோ சிறுமியோ தங்கள் வீட்டிலிருந்து ஏதாவது தின்பண்டத்தைக் கொண்டு வருவார்கள். அதனை உண்டு மகிழ்வர் இச்சிறுமியர்.
ஆற்றங்கரைமணலில் அழகான சிற்றிலையிழைத்து விட்டார்கள் இச்சிறுமியர். தேன்மொழிதான் வயதில் சற்றே பெரியவளானதால், அவள் சிவந்தநிற மலர்களை அடுப்பிலிட்டு நெருப்பாக்கி, சோற்றுப்பானையை இட்டு, சோறும் பொங்கிவிட்டாள். மஞ்சரி தன்வீட்டிலிருந்து தாய் செய்திருந்த சில பணியாரங்களையும், பொரி, அவல், வெல்லம், தேங்காய்ச்சில்லுகள் என வகைவகையாக எல்லாம் கொண்டு வந்துவிட்டாள். இலைபோட்டுப் பரிமாற வேண்டியதுதான்- அப்போது ஓடோடி வருகிறான் அச்சிறுவன்- யாரவன்? பெயர் சாமிநாதன்! இவர்களுடைய தோழன்தான்! ஒரு அன்னையின் தோரணையில் இடையில் கைகளை ஊன்றியவண்ணம், “சரி! சரி! அவனுக்கும் ஒரு இலை போட்டுவிடடி,”என்கிறாள் தேன்மொழி.
அதற்கெல்லாம் நேரமே இல்லாமல், வந்தவன் இவர்களின் சிற்றிலைக் காலால் எற்றி அழிக்க முற்படுகிறான். அவனுக்கு இவர்கள்மீது வெறுப்போ பகையோ ஒன்றும் இல்லை. இவர்கள் இழைத்த சிற்றிலை அழிப்பது அவன் வயதொத்த சிறுவர்களுக்கு ஒரு விளையாட்டு. அழித்தபின் அவர்கள் அழுவதனைக் கண்டு கைகொட்டி நகைப்பான். சரியான சமயத்தில் தேன்மொழி பாய்ந்து அவனைப் பிடித்து இழுத்து ஒருபுறம் நிறுத்திவிடுகிறாள். அவர்கள் சிற்றில் அழிவிலிருந்து பிழைத்தது! விக்கித்துநின்ற மற்ற சிறுமியர் இப்போது சாமியை (சாமிநாதனை அவர்கள் அப்படிதான் அழைப்பார்கள்!) ‘பிலுபிலு’வெனப் பிடித்துக் கொள்கின்றனர்; கேள்விக்கணைகளும் கூச்சலுமாக ஒரே ஆரவாரம்:
வாருங்கள், நாமும் அருகே சென்றுதான் பார்க்கலாமே!
தேன்மொழி பன்னிரண்டு பிராயம் நிரம்பியவள். சிறுபிள்ளை விளையாட்டுகளுடன், தெய்வ பக்தி நிரம்பிய தாய்தந்தையர் கூறும் கதைகளையும் தத்துவங்களையும் கேட்டு வளர்ந்தவள்; வளருபவள். அவள் ஆத்திரம் கொள்ளாமல் அமைதியாக, ஆனால் கண்டிப்பாகக் கேட்கிறாள்: “என் பாட்டனார் கூறிய தத்துவம் ஒன்றுண்டு; எம் அன்னை (ஆய்) இவ்வாறுதான் சிற்றில் இழைப்பாளாம்; அவற்றை எமது தந்தையாகிய அத்தன் சிவபிரான் அழித்துக் கூத்தாடுவானாம். எம் அன்னைக்குக் கோபமே வராதாம். பேசாமல் அவன் ஆட்டத்தை நின்று ஆனந்தமாகக் கண்டவண்ணம் கையால் தாளமுமிடுவாளாம்1. பெண்களுக்கே உரியதான பொறுமையாலும், பேரன்பினாலும், இந்த இளம்பெண்களாகிய இவர்களும் ( நாங்களும்- இம்மடவார்) நான் என்ன செய்தாலும் அவ்வாறு பொறுத்துக்கொள்ளும் தகைமைவாய்ந்தவர்களென்று நீ தவறாக எண்ணிக்கொண்டாய் போலும், சாமிநாதா! உனக்குத் தகுந்த தண்டனை கொடுக்க எம் தாய்மார்களை நாங்கள் கூவியழைப்போம் தெரியுமா?” என வாதிடுகிறாள்.
மஞ்சரி, “நீ எல்லாரிடமும் சென்று சும்மாயிருக்கும்படிக் கூறுவாய்; உன்னிடம் அதனைக் கூறுவார்- அதாவது, ‘நீ சும்மாயிரு சாமிநாதா,’ எனக்கூறுவார் ஒருவருமில்லை எனத் தெரிகிறது. அதுதான் எங்களிடம் இவ்வாறு வந்து வம்புசெய்கிறாய்,” எனக் கூற, கோதை எனும் சிறுமி, “அடியே! அதுதான் இவன், இந்தச் சாமிநாதன் தகப்பன் சாமியாயிற்றே2! உலகமே அறிந்த கதையல்லவோ அது,” எனப்பழித்து முகத்தைச் சுளிக்கிறாள்.
“அம்மாடி! நீ குறும்புசெய்யும் சிறுவர்களின் கூட்டத்துக்கு அரசனல்லவோ ?” எனக் கேட்டுச் சிறுமியர், “எங்கள் சிற்றிலை தயவுசெய்து அழிக்காதே சாமி! அழகான இந்தத் திருவேரகம் எனும் ஊரில் வாழ்கின்ற குருமணியே, எங்கள் சிற்றிலை அழிக்கவேண்டா,” எனக் கையெடுத்துக் கும்பிட்டு வேண்டுகின்றனர்.
அந்தச் சாமிநாதன் எனும் கள்ளச்சிறுவன், திருவேரகம்வாழ் குமரன், தகப்பன்சாமியான சுவாமிநாதன் குறுமுறுவல் கொள்கிறான்.
1.அன்னை சிற்றிலிழைப்பதென்பது உலகங்களைப்படைக்கும் செயல்; அத்தன் உன்மத்த நடனமாடி அதனை அழிப்பதென்பது ஊழிக்காலத்தே உலகினை இறைவன் அழிப்பதென்பதாகும். இந்தப் பிரபஞ்சப் பெருநடனத்தைக் காலந்தோறும் ஓய்வொழிவின்றி அன்னையும் அத்தனும் நிகழ்த்துகின்றனர்; இதனையே இங்கு புலவர் சிறுவர் விளையாட்டாகக் கூறுகிறார். குமரகுருபரனாரும் இதே கருத்தினை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் அழகுற எடுத்தாண்டுள்ளார்:
எற்றுபுன லில்கழுவு புவனப்பழங்கலம்
எடுத்துஅடுக் கிப்புதுக்கூழ்
இன்னமுதமும் சமைத்து அன்னைநீபன்முறை
இழைத்திட அழித்தழித்தோர்
முற்றவெளி யில்திரியும் மத்தப்பெரும்பித்தன்
முன்னின்று தொந்தமிடவும்…………
(செங்கீரைப்பருவம்- மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்)
2. தகப்பன் சுவாமி- படைப்புக் கடவுள் பிரமன் பிரணவ மந்திரத்தின் பொருள் அறிந்திலன்; அதனால் அவனைச் சிறையிலிட்ட குமரனிடம் தந்தை சிவபிரான் அதன் பொருளைக் கேட்க, அவருக்கு, தந்தைக்கு உபதேசம் செய்கிறான் முருகன்; இது திருவேரகத்தில் நிகழ்ந்தது, அதனால் முருகன் தகப்பன் சுவாமி எனக் கொண்டாடப்படுகிறான்.
3. குறும்பர் குலத்தரசன்- குறும்பு செய்யும் சிறுவர்களுக்கெல்லாம் தலைவன்; குறும்பர் எனப்படும் மலைவாழ் குறவர்களின் அரசன் என இருபொருள்படும்)
எம்மா யிழைக்கும் சிற்றிலெலா மெந்தை யழித்துக் கூத்தாட
எள்ளத் தனையும் சினவாம லினிது தாள மிடுகின்றாள்
தம்மா தரவா லிம்மடவார் தாமு மெமக்கத் தகையரெனத்
தவறா யெண்ணிக் கொண்டனையாம் தண்ட மிடத்தா
யரையழைப்போம்
சும்மா இருக்கும் படிஎவர்க்கும் சொல்ல வல்லாய் உனக்கதனைச்
சொல்வா ரிலைநீ தகப்பனுக்குச் சுவாமி யென்ப துலகறியும்
அம்மா குறும்பர் குலத்தரசே அடியேம் சிற்றி லழியேலே
அணியே ரகம்வாழ் குருமணியே அடியேம் சிற்றி லழியேலே
(திருவேரகம் சுவாமிநாதன் பிள்ளைத்தமிழ்- நடேச கவுண்டர்)
கவியரசு நடேச கவுண்டர் இயற்றியுள்ள திருவேரகம் சுவாமிநாதன் பிள்ளைத்தமிழில் உள்ள சிற்றில் பருவத்துப்பாடல் இது. அம்மையப்பன் இயற்றும் படைத்தல்-காத்தல்-அழித்தல் எனும் பெரும் தத்துவத்தைச் சிறார்களின் சிற்றில் விளையாட்டாக்கியும், “உன்னிடம் நாங்கள் எதனை எப்படிக்கூறுவது? நீதான் தகப்பன் சுவாமியாயிற்றே,” என்று திருவேரகத்தலத்தின் புராணத்தை இதனுட்படுத்தியும், ‘குறும்பர் குலத்தரசே’ என முருகனைப்பற்றி இருபொருள்படும்படியும் கவியரசு நடேச கவுண்டர் அவர்கள் பாடியுள்ள நயம் இரசிக்கத்தக்கதாம்.
*****

சிறுமியர் சிற்றிலிழைத்துப்பின்பு தமது பாவைகளுக்கு ஒரு திருமணவிழாவினையும் நடத்த முனைந்துள்ளனர். சிறுமி சுந்தரியின் அழகான மரப்பாவை திருமணப்பெண்; மஞ்சள் நிறப்பட்டாடை அணிவிக்கப்பட்டுப் பொலிகிறாள்! அடுத்தவள் மேகலையின் மரப்பாவைதான் மணமகன். ஒருகை சிறிது ஒடிந்திருந்தாலும், முறுக்குமீசையும் தலைப்பாகையுமாக கனகம்பீரமாக நிற்கிறான் அவன்! மேலும் சில மணமக்கள்- மற்றச் சிறுமியர்களுடையவை. அவரவர்கள் தங்கள் அன்னையிடமிருந்து வாங்கிய பட்டுத்துண்டுகளாலும் மலர்மாலைகளாலும் இவற்றினை அலங்கரித்து தமது கழுத்து அணிகளையும் பூட்டி இப்பாவைகளுக்குத் தத்தம் இல்லங்களில் முன்பொருதினம் நிகழக்கண்ட மணவினைப்படி, மணமுடிக்கக் கருதியுள்ளனர். அதற்காகத்தான் பெருவிருந்தொன்றினையும்(!) ஏற்பாடு செய்துள்ளனர். இந்தச் சுவாமிநாதனோவெனில் இவர்கள் சிற்றிலை அழிப்பதிலேயே முனைப்பாக உள்ளான்; என்னவொரு அரக்கத்தனமான விளையாட்டிது?
சினம்பொங்க மேகலை கூறுகிறாள்: “ஆயிரம் பொய்சொல்லியாவது ஒரு திருமணத்தை முடிக்கவேண்டும் சாமிநாதா. பண்டொருநாள் உன் தந்தை புத்தூர் எனும் ஊரில் ஒரு பெண்ணின் திருமணத்தினை என்னவோ கதைகூறி4 நிறுத்திவிட்டார். அதனால் வந்த பாவத்தினால் தன்னுடைய இருகால்களும் வருந்தும்படிக்கு இருள்படர்ந்த இரவுநேரத்தில் கல்லும் முள்ளும் நிறைந்த திருவாரூர் வீதியில் தம் அடியவருக்காகத் தூதுசென்று நடந்தலைந்தார் என்பதனை நீ அறிந்திருக்கவில்லை போலுள்ளது சாமிநாதா!”
“ஆமாம்! நீ எங்கள் சிற்றிலையும் அழித்து இந்தப் பாவைகளுக்கு நாம் புரியவிருக்கும் திருமணத்தையும் நிறுத்தி விட்டாயானால் எத்தனை பெண்களிடம் தூதாகக் கால் சிவந்துவருந்த நடக்கவேண்டி வருமோ எனத்தெரியவில்லையே, பாவம்!” எனப்போலியாக வருந்துகிறாள் மஞ்சரி.
“எல்லாவற்றையும் நன்கு சிந்தித்துக்கொள்; நாங்கள் சிறுமிகள்; ஏதோ விளையாடிக் கொண்டிருக்கிறோம். எங்கள்மீது இரக்கம் இல்லாமல் எங்களுடைய சிற்றிலைச் சிதைக்காதே அப்பா! திருவேரகம்வாழ் முருகா, எங்கள் சிற்றிலைச் சிதைக்காதே,” என முறையீடு செய்கின்றனர் சிறுமிகள்.
தகப்பன்சுவாமியான முருகன் இவ்வேண்டுதலுக்குச் செவிசாய்க்காதிருப்பானோ? கட்டாயமாக இல்லை. அருட்கடலல்லவா அவன்?
4. சிவபிரான் முதியவர் வடிவில் வந்து புத்தூர் சடங்கவி சிவாச்சாரியார் மகளுக்கும் சுந்தரருக்கும் நடக்கவிருந்த திருமணத்தை, ‘சுந்தரன் என் அடிமை’ என எழுதிய ஓலையைக்காட்டி ஆட்கொண்டு, திருமணத்தை நிறுத்திவிட்டார். அதனையே சிறுமியர் கூற்றாகப் புலவர் இவ்வாறு கூறுகிறார்.
5. அதனால் வந்த பாவம் தொலையுமாறு (இது புலவர் இந்தப் பாடலின் சுவைக்காகக் கற்பனை செய்த கருத்து) அதே சுந்தரருக்காகப் பரவை நாச்சியாரிடம் திருவாரூர் வீதியில் திரும்பத்திரும்ப அலைந்து தூது சென்றார் சிவபிரான்.)
உந்தை புத்தூர் வருபாவை ஒருத்தி மணத்தை ஒருகால்முன்
ஒழித்த பவத்தால் இருகாலும் உறுத்த ஆரூர் வீதியெலாம்
முந்தை யிருளினில் நடந்தலைந்த முறைமை யறியாய்ப் பலகாலும்
முயன்று பாவை பலர்க்குமணம் முடிக்கக் கருதும் வேளையிடை
வந்து சிதைத்தி யிப்பாவம் மலர்க்கால் சிவக்க எத்தனைகால்
மகளிர் பால்நீ தூதாக வருந்தி நடக்கப் புரிந்திடுமோ
சிந்தை நினைந்து சிறியேம்செய் சிற்றில் சிதையேல் சிதையேலே
திருவே ரகம்வாழ் முருகோனே சிற்றில் சிதையேல் சிதையேலே
(திருவேரகம் சுவாமிநாதன் பிள்ளைத்தமிழ்- நடேச கவுண்டர்)
தகப்பன் சுவாமி என்றது ‘நீ தகப்பனுக்கும் ஒருபடி மேல். அவன் ஒரு பெண்ணின் திருமணத்தை நிறுத்தியதற்கே இவ்வளவு அலைய நேரிட்டது. நீ பல பாவைகளின் (பெண்கள்/ விளையாட்டு பொம்மைகள்) திருமணங்களை நிறுத்தினால் எப்படியெல்லாம் அலைய நேரிடும்?’ எனப் பேதைச் சிறுமிகள் கேட்பதாகக் கற்பனை செய்து பாடியது மிக அருமை.
இதுபோலும் அருமையான பாடல்களை மேலும் அடுத்தடுத்துக் காண்போம்.
மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
{முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
தமிழ்த்துறைத் தலைவர்.}
********************************
_
இன்னம்பூரான்
FGM (FEMALE GENITAL MUTILATION
‘ஆஃப்ரிக்க நாடுகளில் பெண்கள் தாழ்த்தப்படுவதும், துன்புறுத்தப்படுவதும்…’ என்று அவசரத்தில் எழுதிவிட்டேன் போலும்! கட்னா எனப்படும் சிறுமிகளின் பிறப்புறுப்பை குத்திக்கிளறிக் குலைப்பது ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, ஆசிய நாடுகளில், இந்தியா உள்பட, நாட்தோறும் நடந்து வருகிறது.
எல்லா நாடுகளிலிருந்தும் அகதிகளின்/வந்தேறிகளை பெற்றுள்ள இங்கிலாந்து நாட்டின் பதிவு ஒன்றை நோக்குக.
இங்கிலாந்தில் கட்னா சட்டவிரோதம். அதனால் பிறந்த நாட்டுக்குக் கொண்டு போய் கிட்டத்தட்ட 1.37 லக்ஷம் பெண்மணிகள் இவ்வாறு குலைக்கப்பட்டதாக, புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இது ஒரு ஊகமே. இந்த அவலங்கள் மர்மாகவே உளன என்பதால், உண்மை மேலும் படுமோசமாக இருக்கலாம். இங்கிலாந்திலேயே [London, Cardiff, Manchester, Sheffield, Northampton, Birmingham, Oxford, Crawley, Reading, Slough and Milton Keynes.] இந்த அறுவை நடந்திருக்கலாம் என்று அந்த நாட்டு அரசின் ஆய்வு கூறுகிறது. பூப்படைவதற்கு முன். பெண் குழந்தைகளும், சிறுமிகளும் இந்த அவஸ்தைக்கு, வாசனைக்குக்கூட மருத்துவம் அறியாத தாதிகளால், கையில் கிடைத்த கத்தி, கத்திரி, பிளேடு ஆகியவற்றால், மயக்கமருந்தும், பாதுகாப்பும் இல்லாத சூழ்நிலையில், உட்படுத்தப்படுகிறார்கள், கட்டி வைத்து. அப்பனும், ஆத்தாளும் தான் உள்கை. கட்னா எனப்படும் இந்த டார்ச்சரில் நான்கு வகை உண்டு: clitoridectomy, excision, infibulation, pricking, piercing, cutting, scraping and burning the area. இந்த கசுமாலங்களை தமிழில் மொழிபெயர்த்தால், அதை காமாந்தகாரச்செயல் என்று சால்ஜாப்பு அணிகள் குற்றம் சாற்றுவார்கள். விழிப்புணர்ச்சி கண்களை இறுக்க மூடிக்கொள்ளும். கட்னாவினால் பயன் ஒன்றுமில்லை. அதீதமான வலியும், திக்கிட்டுப்போவதும், ரத்தப்போக்கும், சிறுநீர் கழிப்பதில் இன்னல்களும், அவயவங்களின் அலங்கோலமும், இன்ஃபெக்ஷனும் தான் பாக்கி. மாதவிலக்கு தடைபடும். சிறுநீரகம் பாதிக்கப்படலாம். பிள்ளைப்பேறு கடினமாகும். உடலுறவு பாதிக்கப்படும். அது சாத்தியமில்லாமல் கூட ஆகிவிடலாம், உளவியல் பார்வையில், பாதிக்கப்பட்டவர்கள், வாழ்நாள் முழுதும் நிம்மதி இழப்பார்கள். தந்தையும் தாயும் தனக்குத் துரோகம் செய்ததை நினைத்து மருகிப்போவார்கள்/ இங்கிலாந்தில் இந்த சட்டவிரோதமான செயலுக்கு 14 வருட சிறைத்தண்டனையும், பலத்த அபராதமும் விதிப்பார்கள். இந்த சின்னாபின்னத்தை ஓரளவு அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யலாம்.
இவ்வாறு தன்னுடைய மகள்களையே சின்னாபின்னப்படுத்தும் சமுதாயங்கள், இது தான் பெண்களை ஆளாக்கி, திருமணம் செய்ய தகுந்த வழிமுறை என்கிறார்கள். பெண்கள் அதற்கு முன் உடலுறவில் நாட்டம் காட்டக்கூடாது, எப்படியும் அவர்களுக்கு காம வேட்கை இருக்கக்கூடாது என்று விரும்பி, இப்படி சிதைக்கிறார்கள்.
இங்கிலாந்தில் இந்த அருவருக்கும் தீயச்செயலை வந்தேறிகளில் சில இனங்கள் மட்டுமே செய்கின்றன. ஆனாலும் அரசின் Health and Social Care Information Centre (HSCIC) என்ற அமைப்பு இதை ஒழிக்க பாடுபடுகிறது. உருது முதல் பலமொழிகளில் விழிப்புணர்ச்சி ஊட்டுகிறது.
More about FGM – English version (PDF, 248Kb)
Mwy o wybodaeth am FGM – Welsh version (PDF, 175Kb)
ስለ ኤፍ ጂ ኤም ተጨማሪ መረጃ – Amharic version (PDF, 1.09Mb)
مزيد من المعلومات حول ختان الإناث – Arabic version (PDF, 177Kb)
FGM اطلاعات بیشتر درباره – Farsi version (PDF,221Kb)
Renseignements complémentaires sur les MGF – French version (PDF, 182Kb)
FGM زانیاری زیاتر دەربارەی – Kurdish Sorani version (PDF, 246Kb)
Macluumaad dheeraad ah ee ku saabsan FGM – Somali version (PDF, 196Kb)
Habari zaidi kuhusu ukeketaji wa wanawake – Swahili version (PDF, 176Kb)
ብዛዕባ ኤፍ ጂ ኤም ተወሳኺ ሓበሬታ – Tigrinya version (PDF, 766Kb)
ایف جی ایم کے بارے میں مزید معلومات – Urdu version (PDF, 188Kb)
இந்தியாவில் நடப்பதை கவனிப்போம். போஹ்ரா என்ற சமுதாய பிரிவில் தலைவர்கள் வைத்தது தான் சட்டம். திரு. இஞ்சினீயர் என்ற சமூக ஊழியர், பல அடிதடிகளின் மத்தியில், இதை எதிர்த்துப் போராடி வந்தார், செத்தும் போனார். அந்த காலத்தில் அவரை நன்கு அறிந்திருந்தேன். அந்த சமூகத்தில் கட்னா செய்ய்ப்படாத பெண்கள் அசுத்தம்; கற்பிழந்தவர்கள். பெண்கள் கட்னாவை பற்றி பேசக்கூடாது. அது குடும்ப அவமானம். அதற்கு மேல் அச்சம். மத குருமார்களும், குடும்பமும், தாய்தந்தையர் என்ன செய்வார்கள் என்று சொல்லமுடியாது. அச்சம், பயம், பீதி இவை எல்லாம் வினோதமான களம் எனலாம். காலில் ஆணி விழுவதைப் போல் நமநமத்து பெண்களை வழிக்கு கொண்டு வரும் என்கிறார்கள்.
அந்த சமூகத்தை சேர்ந்த சில பெண்மணிகள் இந்த சனியனை உரத்துக் கண்டிக்க ஆரம்பித்தார்கள். மஸூமா ரனல்வி சொல்வதை கேளுங்கள்.
The experience of just penning down in detail the suppressed memory of a dark and sordid ritual was cat
#Bohra community #female genital mutilation #genital mutilation #Speak out on FGM
அவருடைய பேச்சில் தென்படும் துணிவை பாராட்டுகிறேன். அவர்களின் செயல்பாடுகள் ஆக்கப்பூர்வமாக அமைந்ததை கவனியுங்கள்.
இந்த விண்ணப்பத்தை நோக்குங்கள்.
At the age of seven, I was subjected to Female Genital Mutilation (FGM) in Mumbai, in a most unhygienic and clandestine manner. The shock and trauma of that day are still with me.
Like me, there are thousands of my Dawoodi Bohra sisters who have been subjected to genital cutting as children and even today thousands of Bohra girls are being subjected to this practice, since it has been ordained by the clergy of our community.
A few months ago, women like me got together under the forum – ‘Speak out on FGM’ – to begin a conversation on this extremely secretive ritual which has caused physical and psychological damage to each of us in some way or the other.
We the undersigned women, who have been subjected to Female Genital Mutilation (FGM) also known as ‘Khatna’ belong to the Dawoodi Bohra community which has its major adherents in India.
The practice of FGM is done surreptiously and in a clandestine manner to all the girl children in our community, without any consent whatsoever. The alleged reason for this tradition is to curb the sexual drive of women and control them.
The Dawoodi Bohras are amongst the most educated in India, yet we are also the only Muslim community in India to practice FGM. The practice has nothing to do with religion and is more of a cultural practice.
Most of us are too scared to speak out publicly. We fear ostracization, social boycott and exclusion of our families from the rest of the community by our religious clergy if we object to the continuation of this practice.
FGM has no health benefits, in fact it harms girls and women in many ways. It involves removing and damaging healthy and normal female genital tissue, and interferes with the natural functions of girls’ and women’s bodies. FGM is often done without anaesthesia, without medical supervision and sometimes the procedure goes horribly wrong.
It often leads to pain, shock, tetanus, genital sores, excessive bleeding, etc. It also has long-lasting psychological impact on the victims, ranging from sexual disorders, fear of sexual intimacy, nightmares and post traumatic stress disorder.
In December 2012, the UN General Assembly adopted a unanimous resolution on the elimination of FGM. Across the world FGM is being outlawed in many countries. Nigeria and Gambia recently made FGM illegal after women came together, campaigned and raised their voice. FGM is banned in over 20 countries in Africa itself.
The World Health Organisation (WHO) classifies FGM as a violation of the human rights of girls and women. According to WHO, FGM reflects deep-rooted inequality between the sexes, and constitutes an extreme form of discrimination against women. It is nearly always carried out on minors and is a violation of the rights of children.
In Australia, three Dawoodi Bohras were held guilty of FGM recently by the Supreme Court of New Wales, Australia. The case was closely watched by the Dawoodi Bohra community in India.
We urge the Government to pass a law banning this practice in India, such that anyone found involved in aiding, abetting and perpetrating this practice should be punished. Pressure of this law and fear of punishment will be the best way to put a stop to this cruel practice.
I along with my Dawoodi Bohra sisters want to raise our voice against FGM in India and put an end to this. You can support us by signing this petition.
Sign our petition and ask the government of India to act against Female Genital Mutilation!
Masooma Ranalvi, Aarefa Johari, Insia Dariwala, Shabnum Poonawala, Nafisa Pardawala, Farida Ali, Tasneema Ranalvi, Hanan Adarkar, Shaheeda Kirtane, Tanvee Vasudevan, Ummul Ranalvi, Zainub Poonawala, Sana Vaidya, Zehra Patwa, Farzana Doctor, Fiza Jha, Zarine Hashim
On Behalf of SPEAK OUT ON FGM
நானும் நமது குழுமங்களில் பல வருடங்களாக கவனித்து வருகிறேன். பெண்ணியம் பெண்ணியம் என்று முழங்கும்/ கர்ஜிக்கும் தாய்க்குலம் கருநாகமென நஞ்சு கக்கும் இந்த அவலத்தை ஏன் கண்டிக்கவில்லை? ஏன் விழிப்புணர்ச்சிக்கு பாடுபடுவதில்லை? இந்த அவலம் தமிழ்நாட்டில் இல்லவே இல்லை என்று உறுதி அளிக்க முடியுமா? அது முடியும் என்றால், தமிழ்நாட்டு எல்லை கடந்த அவலங்களை கண்டிக்கக்கூடாதா?
சமுதாயம் தான் சமுதாயத்தின் விரோதி.
-#-
சித்திரத்துக்கு நன்றி: http://cdn.youthkiawaaz.com/wp-content/uploads/2013/06/mutilation-tools.jpg
இன்னம்பூரான்
http://innamburan.blogspot.co.uk
து. ஆர்த்தி சரவணன்
மரணத்தைப் பற்றி நான் என்றுமே சிந்தித்துப் பார்த்ததில்லை. பெண்ணாகப் பிறந்தகாரணத்தால் மயானம் செல்லும் வாய்ப்பு கிட்டியதில்லை. நகரத்தில் பிறந்ததாலே இறப்பிற்குப் பின் செய்யப்படும் சடங்குகளைக் கூட முறையாகப் பார்த்ததில்லை. ஆனால் என் திருமணத்திற்கு பின்பு நகரத்தில் இருந்து தென்மாவட்டம் வந்து விட்டேன். ஒரு முறை இங்கு ஓர் இறப்பில் கலந்து கொள்ளும் போதுதான் வெட்டியான் தொழில் செய்பவர்களை இப்பகுதி மக்கள் நடத்தும்விதம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
இச்சடங்கிற்காக அவர்கள் பணம் பெற்றதைப் பார்த்தேன். அந்த வெட்டியான் தன் தோளில் இருந்த துண்டை தன் கையில் ஏந்தி அந்த பணத்தை மிகப் பணிவோடு பெற்றுக் கொள்ள, அதைப் போட்ட பெரியவரோ சற்று தள்ளி நின்று அதை அந்தத் துண்டில் போட்டதைப் பார்த்து அதிர்ந்து போனேன். அன்றுதான் என் மனதில் இவர்கள் செய்யும் தொழில் புனிதமா? இல்லை சாபமா? என்ற வினா எழும்பியது.
இந்த நிலையைப் பார்த்தபோது இவர்களைப் பற்றி இவர்களின் வாழ்க்கையின் சில அவலங்களைப் பகிர விரும்பி இக்கட்டுரையை நான் எழுத விளைகிறேன்.
பொதுவாக இந்த வெட்டியான் தொழில் செய்பவர்களைப் பற்றியக் கட்டுரைகள் சிலவற்றை நான் படித்திருக்கிறேன். அதில் அவர்கள் செய்யும் தொழில் புனிதமான தொழில், இறந்த உடலை முறையான எரியூட்டுவது மிகவும் சிறந்த ஒரு செயல் என்றெல்லாம் நான் படித்திருக்கிறேன்.
ஆனால் ஒரு கேள்வி? ஏன் இதை ஐந்தாறு தலைமுறைகளாக தொடர்ந்து ஒரு சமூக மக்களே செய்து கொண்டு வரவேண்டும்? ஒரு வெட்டியானின் மகன் ஏன் ஒரு மருத்துவராகவோ, மாவட்ட நிர்வாகியாகவோ, ஒரு மந்திரியாகவோ, ஒரு முதலமைச்சராகவோ ஆகக் கூடாது. ஏன் ஆகவில்லை? ஏன் ஒரு வெட்டியான் சொந்த வீடு, நல்ல உணவு, நல்ல உடை என்ற ஒரு வாழ்க்கையை வாழ இயலவில்லை?
எனக்குத் தோன்றிய இக்கருத்துகள் அனைத்தும் இப்போது உங்கள் மனதிலும் எழுகிறது அல்லவா!
நம் தமிழகத்தில் வெட்டியான் தொழில் செய்பவர்களில் 98 சதவிகிதம் பேர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் பல தலைமுறைகளாகத் தொடர்ந்து இத்தொழிலை மட்டுமே செய்து வருகின்றனர். அவர்களின் வறுமையின் காரணமாகவோ அல்லது மாற்றுத் தொழில் பெறும் வாய்ப்பு குறைவாக இருப்பதாலோ ஏனோ இதே தொழிலை தொடர்ந்து செய்ய வேண்டிய அவலத்திற்குத் தள்ளப்படுகின்றனர்.
பிணம் எரிப்பதற்கு அனுபவம் அவசியம் தேவை. பிணம் சீராக எரிய சில நுணுக்கங்களை இவர்கள் கையாளுகின்றனர். எனவே பிணம் எரிப்பது எளிதானது அல்ல. வருடத்தில் எல்லா நாளும் இவர்களுக்குத் தொழில் இருக்குமா என்றால் அது கேள்விக்குறிதான். சில முறை தொடர்ந்து 42 நாட்கள் கூட தொழில் இல்லாமல் இருப்பதும் உண்டு.
பிணம் எரிக்கும் தொழில் தவிர இவர்கள் எதற்கெல்லாம் அமர்த்தப்படுகின்றார்கள் என்றால், இறந்த விலங்குகளை அகற்றவும் (மாடு, ஆடு, பூனை, நாய்) சாலைகளில் விபத்தால் இறந்த உடல்களை அகற்றவும், இரயிலில் அடிபட்டு இறந்த விலங்குகள் மற்றும் மனித உடல்களை அகற்றவும் பயன்படுத்தப்படுகின்றனர். இதற்கு அவர்களுக்கு அளிக்கப்படுவது 100 லிருந்து 150 ரூபாய் மற்றும் ஒரு கால்பாட்டில் மதுபானமும் வழங்கப்படுகிறது.
அது மட்டுமின்றி பிணவறைகளில் பிரேத பரிசோதனை செய்யவும் பல நாட்களாகப் பல மாதங்களாக யாராலும் வாங்கப்படாத உடல்களை நல்லடக்கம் செய்ய இன்னும் சில நேரங்களில் இயற்கை சீற்றத்தால் இறந்த உடல்களை எல்லாம் அகற்றவும் பயன்படுத்தப்படுகின்றனர். மொத்தத்தில் மிகவும் மோசமான பாதுகாப்பற்ற தொழிலை மேற்கொண்டு வருகின்றனர் என்பது மறக்க முடியாத உண்மை.
மேற்கூறிய எந்த வேலையும் இல்லாத நிலைகளில்; கல்லுடைத்தல், மண் வெட்டுதல் போன்ற கூலி வேலைகளுக்கும் இவர்கள் செல்வதுண்டு. மொத்தத்தில் வாழும் காலத்தில் கைக்கும் வாய்க்கும் போதாத ஒரு வாழ்க்கையை வாழ்ந்து முடித்து விடுகின்றனர். இத்தொழில் செய்பவர்கள் பலர், மயானத்தின் உள்ளோ அல்லது மயானத்தில் மிக அருகிலேயோ குடியிருக்கும் நிலையில் உள்ளனர். எனவே இவர்களுக்கு மற்றவர்களோடு இணையும் வாய்ப்பும் மிகக் குறைவாக இருப்பதாலோ என்னவோ தாழ்த்தப்பட்ட சமூகத்தின் அரசாங்க சலுகைகள் கூடக் கிடைப்பதில்லை என்பதே உண்மை.
அவர்களுடைய குடும்பத்தில் உள்ள பெண்கள் குழந்தைகள் யாவரும் பிணம் எரிக்கும்போது உதவுவது என்பது தலைமுறை தலைமுறையாக ஏற்படும் ஒரு நிகழ்வாகவே உள்ளது. எனவேதான் இவர்களது தலைமுறையினர் வெகு சுலபமாக இத்தொழிலைக் கையிலெடுத்து கொண்டு குடும்ப வறுமை காரணமாக சம்பாரிக்க துவங்குகின்றனர். வெட்டியான்களின் மனைவிகள் கூட கணவரின் உதவியே இல்லாமல் இரண்டுபேர்கள் மட்டுமே இணைந்து பிணத்தை எரிப்பதும் உண்டு என்று கேட்ட தகவல் எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது.
அரசு தரப்பில் இவர்களுக்கான நலத்திட்டங்கள் என்று பார்த்தால் மிகவும் விரல்விட்டு எண்ணும் அளவிற்கே உள்ளது. நடைமுறையில் இத்திட்டங்கள் உள்ளதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
2007 ஆம் ஆண்டு ஜூலை மாதம், திரு.ஸ்டாலின் அவர்கள் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த போது சென்னை மாநகராட்சியில் நிரந்தரப் பணியில் இல்லாமல் தற்காலிகப் பணியில் இருந்த 173 பிணம் எரிக்கும் தொழிலாளிக்கு ‘மயான உதவியாளர்கள்’ என்று பணிநியமனக் கடிதம் வழங்கப்பட்டது. மாதச் சம்பளமாக ரூ.5,000 வழங்குமாறும் பண நியமனத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இம்மயான உதவியாளர்களுக்கு சென்னை மாநகராட்சியில் பணிநியமனம் அளித்தது போல கூடிய விரைவில் தமிழகம் முழுவதும் கிராமங்களில் இருக்கும் பிணம் எரிக்கும் தொழிலாளர்களுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அப்படி நடக்கவில்லை. இந்த 173 தொழிலாளர்களை தற்போதைய நிலை என்ன என்பதைக் குறித்த சரியான விவரமும் தற்போது இல்லை. இதைத் தொடர்ந்து, “மயான வெட்டியான்கள்” சங்கம் என்று ஒரு சங்கம் நிறுவப்பட்டு அதன் முதல் மாநில அளவிலான மாநாடு, 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மதுரையில் நடந்தேறியது. இம்மாநாட்டில், பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. மாத ஊதியம், வெட்டியான் தொழில் செய்யும் பெண்களுக்கான பிரசவ கால உதவித்தொகை, மருத்துவக் காப்பீடு, தடுப்பூசிகள் போடுவது, மருத்துவ பரிசோதனைகள், மாற்றுத் தொழில் வழங்குவது போன்றவை.
ஆனால், அதற்குப் பின் அந்த சங்கத்தைப் பற்றியோ கோரிக்கைகள் பற்றியோ தொடர்ந்து செய்திகள் வரவில்லை என்பதே உண்மை. இத்தொழிலாளர்கள் பலருக்கு இச்சங்கத்தைப் பற்றியே தெரியவில்லை. இந்த மாநாடு அப்போது இருந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலவாரிய அமைச்சர் திருமதி.ஏ. தமிழரசி முன்னிலையில் நடந்தது என்பது கூடுதல் தகவல். அரசாங்கத்தில் வேலை பார்க்கும் அனைத்து ஊழியர்களுக்கும் அரசாங்கத்தின் பல சலுகைகள் கிடைக்கப்படுகின்றன. தலைமை பதவியில் இருப்பதில் இருந்து கடை நிலை ஊழியர் வரை அனைவரும் சம்பளம் சார்ந்த மற்றும் சம்பளம் சாராத பல உதவியைப் பெறும் நிலையில், (மயானங்களில்) தலைமுறை தலைமுறையாக பணிபுரியும் ஊழியர்களில் நிலைதான் என்ன? சமூக நீதியில் இருந்து இம்மக்களுக்கு சமஉரிமை கிடைக்கவில்லை (என்பதுதானே உண்மை).
மனிதக் கழிவினை அகற்றும் ஊழியர்கள் இருக்கக் கூடாது என்பதற்காகவும், மனித கழிவகற்றும் ஊழியர்களுக்கு மறுவாழ்வு வழங்குவதற்காகவும் அரசாங்கத்தால் பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. பிணங்களை எரிக்கும் தொழில் செய்பவர்களுக்கும் இப்படிப்பட்ட மறுவாழ்வு திட்டங்களும், நலவாழ்வு திட்டங்களும் நிச்சயம் வேண்டும். இறந்தவர்கள் பல காரணங்களுக்காக இறந்திருக்கலாம். தொற்று நோய்கள், ரேபிஸ் என்று சொல்லக் கூடிய நாய்க்கடியால் கூட இறந்திருக்கலாம். இறந்தவரின் உறவினர்கள் இதைப் பற்றி வெட்டியான்களிடம் தெரிவிப்பது மிகவும் அரிதே என்ற நிலையில் பாதுகாப்பு சாதனங்களான கையுறை, காலுறை போன்றவை அல்லாமல் இவர்கள் அப்பிணங்களைக் கையாண்டு எரிப்பதனால் இவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.
தொடர்ந்து இப்பிணவாடைகளை சுவாசிப்பதாலும் இவர்களில் பலருக்கு சுவாச சம்பந்தமான பிரச்சினைகள் அதிகமாகவே இருக்கிறது. பல காரணங்களுக்காக இறந்து போன உடல்களையும் சில சிதைந்து போன எரிந்து போன உடல்களையும் தகனம் செய்யும் போது இவர்களுக்கு மன ரீதியான பாதிப்புகள் கூட ஏற்படலாம் என்பதே உண்மை. இதனால் தான் இவர்களில் அனைவருமே குடிப்பழக்கத்திற்கு அடிமையாகின்றனர். 25 பிணம் எரிக்கும் தொழிலாளர்களில் ஒருவர் கண்டிப்பாக நுரையீரல் பாதிப்புக்குள்ளாகின்றார்(என்பது உண்மை).
திண்டுக்கல் மாவட்டம், குமரன் நகரைச் சேர்ந்த நடராஜன் என்ற இளைஞர் தனது தந்தை இறந்த பின் தனது 17 ஆவது வயதில் இருந்து இத்தொழிலைச் செய்து வந்தார். அவர் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி நோய்வாய்ப் பட்டு சிகிச்சை அளிக்க பணம் இல்லாத காரணத்தால் தனது 37 வயதில் இறந்து போனார் என்பதையும் அவர் சகோதரி தற்போது தான் அனாதையாக நிற்பதைக் கண்ணீரோடு கூறியபோது அது நெஞ்சை உருக்கச் செய்தது. சிலர் இறப்பிற்குக் காரணம் கூடத் தெரிவதில்லை. அவர் தொற்று நோயால் கூட இறந்திருக்கலாம் என்பதை விழிப்புணர்வு இல்லாமல், வெள்ளந்தியாக இம்மக்கள் கூறுவது மிகவும் வருத்தத்தை அளிக்கின்றது.
மயானங்களைப் பராமரிப்பது, மயானங்களை ஏற்படுத்துவது, அரசாங்கம் மற்றும் அரசாங்கங்களின் பணி என்றால் மயான பணியாளர்களை நியமிப்பது அவர்களுக்கான சலுகைகள் வழங்குவதும் அரசாங்கத்தின் பணி என்பது மறுக்க முடியாத உண்மை.
இப்படி பிணம் எரிக்கும் தொழில் செய்யும் ஊழியர்களுக்கான பணி நியமனம், மாதச்சம்பளம், மருத்துவப் பரிசோதனை முறைகள், தடுப்பு ஊசிகள், எரிப்பதற்கான தற்காப்பு சாதனங்கள் போன்ற அனைத்திற்கும் வழி வகுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.
தலைமுறை தலைமுறையாக இப்பணியைச் செய்யும் தொழிலாளிகளின் இன்றைய தலைமுறையினருக்காக கல்வி உதவி, மாற்றுத் தொழிலுக்கான உதவிகளையும் அரசாங்கம் மனதில் கொள்ள வேண்டும்.பிணம் எரிப்பதைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருப்பவர்களின் மனநிலை பாதித்து குடிப்பழக்கத்திற்குப் பலியாகாமல் இருக்க மனநிலை நிபுணர்களைக் கொண்டு சிறப்பு கலந்தாய்வு கூட வழங்கலாம் என்பதே என் தாழ்மையான வேண்டுகோள்.
ஐந்தறிவு படைத்த யானைகளுக்குப் புத்துணர்வு அளிக்கப் புத்துணர்வு முகாம் நடத்தும் போது, இறந்து போன நமது உறவினரையும் நமது நண்பர்களையும் நமது உற்றார்களையும் சீராக தகனம் செய்யும் நம் வெட்டியான் நண்பர்களுக்கான அனைத்து அடிப்படை மற்றும் நிதி வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்துவது நம்மைப்போன்று ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கடமை என்பதை உணர்ந்து இக்கட்டுரையை வழங்குகிறேன். நிச்சயம் மாற்றம் உருவாகும் என்ற நம்பிக்கையோடு!.
__________________________________
து. ஆர்த்தி சரவணன்
ஆராய்ச்சியாளர்
காந்திகிராம பல்கலைக் கழகம்
[அரசியல் அறிவியல் துறை]
திண்டுக்கல்
இன்னம்பூரான்
27 02 2016
இது இன்றைய செய்தி -27 02 2016.
சட்டம் சட்டத்துக்குள்; நியாயம் நீதிபதி வழங்கும் தீர்வில் சட்டத்தின் உட்பொருள் காண்பது; தர்மம் தலைகாக்கும்.
“மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தம்நிரை தாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்தென்னைக்
கைத்தலம் பற்றக் கணக் கண்டேன் தோழிநான் “
என்ற காதல்மொழி உரைத்த ஆண்டாளின் ஶ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள வத்தராயிருப்பு என்ற ஊரில் [அர்ச்சானாபுரம்] தொழப்படும் நல்லதங்காள் என்ற தெய்வம் ஒரு மனுஷியை பற்றியது. அவள் வறுமை தாங்காமல், மன உளைச்சலின் காரணமாக தனது ஒன்பது குழந்தைகளை கிணற்றில் போட்டு கொன்றது கர்ணபரம்பரை.நல்லதங்காள் கதை தமிழகத்தில் பிரபலமான ஒரு சோகக் கதையாகும். இது தொடர்பான சம்பவம் கதையாகவே சொல்லப்பட்டு வந்தாலும், அவள் உண்மையிலேயே வாழ்ந்தாள் எனவும் நம்பப்படுகிறது. நல்லதங்காள் வறுமையின் காரணமாகவும் தனது அண்ணியின் சுடுசொல் தாளாமலும் தான் பெற்ற பிள்ளைகளைக் கிணற்றில் வீசிக் கொன்று விட்டு, பின் தானும் அக்கிணற்றில் விழுந்து இறந்ததாக அவளது கதை சொல்லப்படுகிறது. அவளது மரணத்தைத் தாளாத அவளது அண்ணன் நல்லதம்பியும் அதே கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டான். நல்லதம்பி-நல்ல தங்காள் வாழ்க்கை சிறந்த அண்ணன் – தங்கை பாசத்துக்கு எடுத்துக்காட்டாக சொல்லப்படுகிறது. [விக்கிப்பீடியா].
அவளுக்கு [மறுமலர்ச்சி கண்ட தற்கால நல்லதங்காள்.] காவேரி என்ற புனைப்பெயர் சூட்டுவோம். அவள் தன் வாழ்க்கையின் மறுமலர்ச்சி நோக்கி பயணிக்கும் போது, அதற்கு தர்மமிகு கோர்ட்டார் வழி வகுத்தப்போது , நாம் அவரை வெட்ட வெளியில் உண்மை பெயர் சொல்லி விமர்சனம் செய்வது கொடுமை. தற்காலம் குழுமங்களில் என்னவென்னமோ எல்லாம் பேசுகிறார்கள். ‘காவேரியை’ அந்த துன்பக்கேணியில் இறக்க எனக்கு விருப்பமில்லை.
அவர் பட்ட இன்னல்கள் கொஞ்சநஞ்சமில்லை. அவர் கருவிலே இருக்குபோதே, குடும்பத்தைத் தவிக்க விட்டு, தந்தை ஓடிப்போனார். ஒரு வயது நிரம்பும் வேளையில் தாயும் அவரை கைவிட்டாள். சில குடும்பங்களில் இத்தகைய சம்பவங்கள் நடப்பது உண்டு. அமெரிக்காவோ, இங்கிலாந்தோ,கனடாவோ, அந்த மாதிரி மேல்நாடுகளில், அரசும், சமுதாயமும், இம்மாதிரியான அனாதைகளை உய்விக்க முன் வருவார்கள். Foster-children is a well-known civilised concept in the western world. ஒரு நாள் போர்ட்ஸ்மத் நூலகம் திறக்க வேண்டி காத்திருந்த போது , ஒரு முதிய பெண்மணியுடன் பேச்சுக்கொடுத்தேன். உலக யுத்தத்தின் போது தாயும் தந்தையும் நாட்டுப்பணியில். குழந்தைகள் கிராமத்து பெரியோர் குடும்பங்களில். தான் அப்படி வளர்ந்தவள் என்று கூறிய அவர், தத்து எடுத்துவர்களின் அன்பை பாராட்டி கண்ணீர் உகுத்தார், 70 ஆண்டுகளுக்குப் பிறகு. அமெரிக்காவில் அரசு மான்யத்தைப் பெற்று ஏழைகள் தான் சக ஏழைகளின் அனாதை குழந்தைகளை வளர்க்கிறார்கள்.
இங்கோ, இவரை வளர்த்து வந்த பாட்டியினால், வறுமையின் பொருட்டு, இவரை பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை. சமுதாயம் வேடிக்கை பார்த்தது. காலம் கழிந்து வந்தது. இவரும் கண்ணன் என்ற தினக்கூலியை மணந்தார், மூன்று ஆண் குழந்தைகள். இல்லாமையில் தத்தளிப்பு. கணவன் வேலை தேடி கேரளா செல்கிறார். ஒரு சச்சரவினால், பாட்டி விலகி விடுகிறார்.
செப்டம்பர் 2008: பசியின் கொடுமை தாங்காமல், குழந்தைகளை கிணற்றில் வீசி, தானும் குதிக்கிறார். ஆழம் இல்லாத கேணி. இவர் பிழைத்து விடுகிறார். இந்த அவலங்களை படித்த Centre for Protection of Civil Liberties (CPCL) அவருக்கு உதவ முன் வருகிறது. பேசக்கூட முடியாத அளவு சோகத்தில் ஆழ்ந்திருந்த அவருக்கு ஆறுதல் கூற, கண்ணனை வரவைழைத்தார்கள். இவருக்கும் ஜாமீன் கிடைத்தது. கஷ்டப்பட்டு வாடகைக்கு வீடு பிடித்துக்கொடுத்தார்கள். இருவரும் ஒருபாடாக ஆறுதல் அடைந்து குடித்தனம் நடத்தினார்கள். ஒரு ஆண் குழந்தை உபயம்.
இந்த காலகட்டத்தில் சட்டம் குறுக்கிட்டது. இந்தியன் பீனல் கோடு 302ம் ஷரத்துப்படி, கொலைக்குற்றத்துக்கு ஆக அவருக்கு மூன்று ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது. அவர் நிலை குலைந்து போனார். குழந்தையையும் எடுத்துக்கொண்டு சிறையில் 11 மாதங்கள் கழித்தார்.
CPCL ஒரு விடாக்கொண்டன். உச்சநீதி மன்றத்தில் முறையிட்டார்கள். சேலத்தின் மனோநிலை பேராசிரியர் டாக்டர் மீனாக்ஷி .
‘Kaveri was suffering from ‘psycho motor activity retardation’ (slowing of motor activity and cognitive function which are manifestations of severe depression). The doctor explained that a person suffering from it would have depression, loss of trust in life and urge to commit suicide. என்று சாக்ஷியம் அளித்தார். உச்ச நீதிமன்றம் அதை மதித்தது. அவளை விடுதலை செய்ய உத்திரவிட்டது. நீதிபதிகள் எம்.ஜயசந்திரனும், எஸ்.நாகமுத்துவும், அவர் மேல் சாட்டப்பெற்ற குற்றம் சட்டப்படி செல்லாது என்றார்கள். மேலும், அவளிடம் தடாலடியாக பெறப்பட்ட வாக்குமூலம் சட்டத்துக்கு உட்பட்டது அல்ல என்றார்கள். நீங்கள், போலீஸின் தகாத செயல், கீழ்க்கோர்ட்டின் அசமஞ்ச தீர்ப்பு ஆகியவற்றையும், அவற்றினால் நடந்த வாழ்க்கைக்கொலையையும் கண்டு கொள்ள வேண்டும்.
காவேரியின் முதல் மகன் ஆறாம் வகுப்பில். அடுத்த பையன் ஐந்து மாத குழந்தை. சீர்மையாக, அவர்கள் வாழ்க்கை நடந்து கொண்டு இருக்கிறது.கடந்த இழப்புகளை நினைத்து வருந்தும் காவேரி நாட்தோறும் தெய்வத்திடம் மன்னிப்பு கேட்டு மன்றாடுகிறார். வாழ்க! வாழ்க! காவேரியின் குடும்பம்.
முனைவர் செல்வகுமார் CPCL ஐ இந்த/அடுத்த வார வல்லமையாளராக தேர்ந்தெடுக்க வேண்டும் என என் பரிந்துரை.
பெண்ணியம் போற்றும் நமது அங்கத்தினர்கள் இதையெல்லாம் கவனிக்காமல், பழைய 78 ஆர்.பி.எம். கிராமஃபோன் தட்டுக்களைப் போல் சொன்னதையே சொல்லி தன்னை மகிழ்வித்துக்கொள்ளலாகாது என்பது என் தாழ்மையான கருத்து.
சித்திரத்துக்கு நன்றி:http://www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-56/Kallu_Paanai-1.jpg
இன்னம்பூரான்
http://innamburan.blogspot.co.uk
”சிந்தனை செய்கின்றான் சீராயர் பாடியில்,
எந்தவிதம் சொல்லி எடுத்துரைத்தால், -சொந்தங்கள்
பாராது பார்த்தன் படையெடுப்பான்: வேதத்தின்
சாராம்ஸ கீதை ஜனிப்பு ….கிரேசி மோகன்….
”Because Of KRISHNAபக்தி பாகவதன் கேசவ்ஸ்
Picasso கிருஷ்ணன் பலேஜோர்,: -டிகாக்ஷனாய்,
‘’நான்’’அதிலே சேர்ந்தால் நவநீதப் பால்சுரக்கும்
காண்அதிலே Coffee-With க்ருஷ்’’….கிரேசி மோகன்….
(OR)
நாமதிலே சேர்ந்தால், நவநீதப் பால்சுரக்கும்,
ஆமதுதான் ஆவின் அரி(றி)’’….கிரேசி மோகன்….
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

பிரேம்நாத் திருமலைசாமி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (5.03.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.
புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்
செ.இரா. செல்வக்குமார்
வல்லமையின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப்பெறுபவர் அகவை 27 நிரம்பிய செல்வி கம்சாயினி குணரத்தினம் (Khamshajiny Gunaratnam) என்னும் தமிழ்ப்பெண். இவர் ஐரோப்பாவிலுள்ள நோர்வே நாட்டின் தலைநகரான ஓசுலோ (Oslo) நகரின் துணை நகரமுதல்வர் (Deputy Mayor) பதவியை அடைத்திருக்கின்றார். உலகிலேயே மனிதவளத்தில் முதலிடத்தில் இருக்கும் நோர்வே நாட்டின் தலைநகரமும் அந்நாட்டின் மிக அதிக மக்கள் தொகையும் கொண்ட இந்நகரத்தின் துணை நகரமுதல்வர் என்பது மிகவும் பெருமைவாய்ந்த பொறுப்பு மிகுந்த பதவி.
நோர்வே நாட்டின் உழைப்பாளர் கட்சியின் (Labour Party) உறுப்பினரான இவர் முதன்முதலாக 2007 ஆம் ஆண்டில் தன் 19 -ஆவது வயதில் ஓசுலோ மாநகரதின் குழுவில் ஓர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் பல பொறுப்புகளுக்குப் பின் ஓசுலோவின் நகரத் துணைமுதல்வர் பதவியை எட்டினார்.
ஓசுலோவுக்கு வடமேற்கே உள்ள தைரி ஏரியில் உள்ள அதோயா (Utøya) தீவில் ஆண்டுதோறும் உழைப்பாளர் கட்சியின் இளைஞர்களுக்கான முகாம் ஒன்று நடைபெறும். 2011 ஆம் ஆண்டு நடந்த இந்த முகாமில் கம்சாயினி குணரத்தினம் அவர்களும் கலந்துகொண்டார். அவ்வாண்டு ஏறத்தாழ 600 இளைஞர்கள் அதில் கலந்துகொண்டனர். இந்த முகாமில் சற்றும் எதிர்பாராமல் ஆந்தேசு பிரெவீக்கு (Anders Breivik ) என்பார் புகுந்து துப்பாக்கியால் ஒவ்வொருவராகக் குறிவைத்துச் சுட்டு மாபெரும் படுகொலை செய்தார். 69 பேர் உயிரிழந்தனர், 110 பேர் படுகாயம் அடைந்தனர். பலர் பாறைகளுக்கு இடுக்கில் மறைந்துகொண்டும், ஏரியில் குதித்தும் உயிர்பிழைக்க முயன்றனர். ஏரியில் குதித்து நீந்தித்தப்பிக்க முயன்றவர்களைக் குறிவைத்துச் சுட்டுக் கொண்டிருந்தபொழுதும், கம்சாயினி குணரத்தினம் துணிவாக விடாமுயற்சியுடன் நீந்தி 500 மீட்டர் தொலைவைக் கடந்து கரையேறி தப்பித்தார். அப்பொழுது அவருக்கு வயது 23. வீரத்துடனும் நல்வாய்ப்பாகவும் இவர் உயிர்தப்பியது வியப்பூட்டுவது.
கம்சி (Kamzy ) என்னும் பெயரால் தன்னை அழைத்துக்கொள்ளும் இவர் மார்ச்சு மாதம் 27 ஆம் நாள் 1988 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்தார். தனக்கு அகவை 3 இருக்கும்பொழுதே நோர்வே நாட்டுக்குத் தன் பெற்றோருடன் குடிபெயர்ந்தார். முதலில் நோர்வே நாட்டில் வடக்கே மீன்பிடித்துறையில் இவரின் பெற்றோர்கள் பணியில் இருந்தார்கள். சில ஆண்டுகள் கழித்து இவருடைய தம்பியோடு இவருடைய பெற்றோர், தம் குழந்தைகள் தமிழ் படிக்க வசதியாக இருக்குமென நினைத்து ஓசுலோ நகரத்திற்குக் குடிபெயர்ந்தனர். ஓசுலோவின் தமிழ் இளைஞர் நிறுவன (Tamil Youth Organisation) விழாவொன்றுக்கு வந்திருந்த ஓசுலோ நகர முதல்வர் இரேமந்து யோகான்சன் (Raymond Johansen) அவர்களைச் சந்திக்க ஒரு வாய்ப்பு கிட்டியது. அப்பொழுது யோகான்சன் அவர்கள் இவரை பெரிதும் ஊக்கப்படுத்தினார். அதன் பின்னர் கம்சி ஓசுலோ பல்கலைக்கழகத்தில் குமுக அமைப்பியல் துறையில் படித்துப் பட்டம் பெற்றார். அரசியலில் பங்குபற்றி நற்பணிகள் செய்து, நற்பெயர் ஈட்டி ஐரோப்பாவின் தலைகநகரமொன்றின் நகரத் துணைமுதல்வர் பதவியை இப்பொழுது எட்டியுள்ளார்.
கம்சாயினி குணரத்தினம் அவர்களுக்கு வல்லமை குழுவின் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம். தன் பதவியில் சிறப்பு எய்தவும் மேலும் பல உயர்ச்சிகள் எட்டவும் வாழ்த்துகின்றோம்.
[1] https://www.facebook.com/khamshajiny/?fref=ts
{2] https://en.wikipedia.org/wiki/Khamshajiny_Gunaratnam ; https://ta.wikipedia.org/s/4t3j
{3] http://www.theguardian.com/women-in-leadership/2015/dec/22/my-ambition-is-to-be-a-voice-for-those-who-dont-or-cant-speak-their-mind
[இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com , vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]
_______________________________________________________
-மலர் சபா
மதுரைக் காண்டம் – 07: ஆய்ச்சியர் குரவை
முன்னிலைப் பரவல்
மந்தர மலையை மத்தாக நிறுத்தி,
வாசுகிப் பாம்பினைக் கடையும் கயிறாக்கி,
கடலின் நிறம்கொண்ட கண்ணனே!
நீ முன்பொருநாள்
பாற்கடலைக் கடைந்தாய்! 
இவ்வாறு கடைந்த உன் வலிமையான கைகள்தான்
யசோதைத் தாயின் கடை கயிற்றில் கட்டுண்ட
அந்தக் கைகளோ?
இது என்ன மாயம்?
நான்முகனை ஈன்ற மலர் போன்ற
உந்தியை உடையவனே!
எமக்கு மிகவும் வியப்பாகிறதே!
அரும்பொருள் முதற்பொருள் இவனே என்று
தேவர்கள் வணங்கிப் போற்றும் வண்ணம்
நீ மிக்க பசி ஏதுமில்லாமலேயே
உலகம் முழுவதையும் உண்டாய்!
வளமான துளசி மாலை அணிந்தவனே!
இவ்வாறு உலகை உண்ட இந்த வாய்தான்
அன்று ஆய்ச்சியர் உறியில் சேமித்த
வெண்ணெயை உண்ட திருவாயோ?
இது என்ன மாயமோ?
எமக்கு மிகவும் வியப்பாகிறதே!
அனைவரும் போற்றி வணங்கும் திருமாலே!
தாமரை போன்ற உன் பாதத்தின் இரு அடிகளால்
மூவுலகையும் அளந்தாயே!
இருள் நீங்கும் வண்ணம் நடந்தாயே!
இவ்வாறு நடந்த அடிகள்தான்
பின்னர்ப் பாண்டவர்க்குத் தூதாக
நடந்துசென்ற அடிகளோ?
நரசிம்ம அவதாரமாய்ப் பகைவனை அழித்தவனே!
இது என்ன மாயமோ?
எமக்கு மிகவும் வியப்பாகிறதே!
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram9.html