இன்னம்பூரான் பக்கம்: 3: கனம் கோர்ட்டார் அவர்களே![27]
இன்னம்பூரான்
27 02 2016
இது இன்றைய செய்தி -27 02 2016.
சட்டம் சட்டத்துக்குள்; நியாயம் நீதிபதி வழங்கும் தீர்வில் சட்டத்தின் உட்பொருள் காண்பது; தர்மம் தலைகாக்கும்.
“மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தம்நிரை தாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்தென்னைக்
கைத்தலம் பற்றக் கணக் கண்டேன் தோழிநான் “
என்ற காதல்மொழி உரைத்த ஆண்டாளின் ஶ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள வத்தராயிருப்பு என்ற ஊரில் [அர்ச்சானாபுரம்] தொழப்படும் நல்லதங்காள் என்ற தெய்வம் ஒரு மனுஷியை பற்றியது. அவள் வறுமை தாங்காமல், மன உளைச்சலின் காரணமாக தனது ஒன்பது குழந்தைகளை கிணற்றில் போட்டு கொன்றது கர்ணபரம்பரை.நல்லதங்காள் கதை தமிழகத்தில் பிரபலமான ஒரு சோகக் கதையாகும். இது தொடர்பான சம்பவம் கதையாகவே சொல்லப்பட்டு வந்தாலும், அவள் உண்மையிலேயே வாழ்ந்தாள் எனவும் நம்பப்படுகிறது. நல்லதங்காள் வறுமையின் காரணமாகவும் தனது அண்ணியின் சுடுசொல் தாளாமலும் தான் பெற்ற பிள்ளைகளைக் கிணற்றில் வீசிக் கொன்று விட்டு, பின் தானும் அக்கிணற்றில் விழுந்து இறந்ததாக அவளது கதை சொல்லப்படுகிறது. அவளது மரணத்தைத் தாளாத அவளது அண்ணன் நல்லதம்பியும் அதே கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டான். நல்லதம்பி-நல்ல தங்காள் வாழ்க்கை சிறந்த அண்ணன் – தங்கை பாசத்துக்கு எடுத்துக்காட்டாக சொல்லப்படுகிறது. [விக்கிப்பீடியா].
அவளுக்கு [மறுமலர்ச்சி கண்ட தற்கால நல்லதங்காள்.] காவேரி என்ற புனைப்பெயர் சூட்டுவோம். அவள் தன் வாழ்க்கையின் மறுமலர்ச்சி நோக்கி பயணிக்கும் போது, அதற்கு தர்மமிகு கோர்ட்டார் வழி வகுத்தப்போது , நாம் அவரை வெட்ட வெளியில் உண்மை பெயர் சொல்லி விமர்சனம் செய்வது கொடுமை. தற்காலம் குழுமங்களில் என்னவென்னமோ எல்லாம் பேசுகிறார்கள். ‘காவேரியை’ அந்த துன்பக்கேணியில் இறக்க எனக்கு விருப்பமில்லை.
அவர் பட்ட இன்னல்கள் கொஞ்சநஞ்சமில்லை. அவர் கருவிலே இருக்குபோதே, குடும்பத்தைத் தவிக்க விட்டு, தந்தை ஓடிப்போனார். ஒரு வயது நிரம்பும் வேளையில் தாயும் அவரை கைவிட்டாள். சில குடும்பங்களில் இத்தகைய சம்பவங்கள் நடப்பது உண்டு. அமெரிக்காவோ, இங்கிலாந்தோ,கனடாவோ, அந்த மாதிரி மேல்நாடுகளில், அரசும், சமுதாயமும், இம்மாதிரியான அனாதைகளை உய்விக்க முன் வருவார்கள். Foster-children is a well-known civilised concept in the western world. ஒரு நாள் போர்ட்ஸ்மத் நூலகம் திறக்க வேண்டி காத்திருந்த போது , ஒரு முதிய பெண்மணியுடன் பேச்சுக்கொடுத்தேன். உலக யுத்தத்தின் போது தாயும் தந்தையும் நாட்டுப்பணியில். குழந்தைகள் கிராமத்து பெரியோர் குடும்பங்களில். தான் அப்படி வளர்ந்தவள் என்று கூறிய அவர், தத்து எடுத்துவர்களின் அன்பை பாராட்டி கண்ணீர் உகுத்தார், 70 ஆண்டுகளுக்குப் பிறகு. அமெரிக்காவில் அரசு மான்யத்தைப் பெற்று ஏழைகள் தான் சக ஏழைகளின் அனாதை குழந்தைகளை வளர்க்கிறார்கள்.
இங்கோ, இவரை வளர்த்து வந்த பாட்டியினால், வறுமையின் பொருட்டு, இவரை பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை. சமுதாயம் வேடிக்கை பார்த்தது. காலம் கழிந்து வந்தது. இவரும் கண்ணன் என்ற தினக்கூலியை மணந்தார், மூன்று ஆண் குழந்தைகள். இல்லாமையில் தத்தளிப்பு. கணவன் வேலை தேடி கேரளா செல்கிறார். ஒரு சச்சரவினால், பாட்டி விலகி விடுகிறார்.
செப்டம்பர் 2008: பசியின் கொடுமை தாங்காமல், குழந்தைகளை கிணற்றில் வீசி, தானும் குதிக்கிறார். ஆழம் இல்லாத கேணி. இவர் பிழைத்து விடுகிறார். இந்த அவலங்களை படித்த Centre for Protection of Civil Liberties (CPCL) அவருக்கு உதவ முன் வருகிறது. பேசக்கூட முடியாத அளவு சோகத்தில் ஆழ்ந்திருந்த அவருக்கு ஆறுதல் கூற, கண்ணனை வரவைழைத்தார்கள். இவருக்கும் ஜாமீன் கிடைத்தது. கஷ்டப்பட்டு வாடகைக்கு வீடு பிடித்துக்கொடுத்தார்கள். இருவரும் ஒருபாடாக ஆறுதல் அடைந்து குடித்தனம் நடத்தினார்கள். ஒரு ஆண் குழந்தை உபயம்.
இந்த காலகட்டத்தில் சட்டம் குறுக்கிட்டது. இந்தியன் பீனல் கோடு 302ம் ஷரத்துப்படி, கொலைக்குற்றத்துக்கு ஆக அவருக்கு மூன்று ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது. அவர் நிலை குலைந்து போனார். குழந்தையையும் எடுத்துக்கொண்டு சிறையில் 11 மாதங்கள் கழித்தார்.
CPCL ஒரு விடாக்கொண்டன். உச்சநீதி மன்றத்தில் முறையிட்டார்கள். சேலத்தின் மனோநிலை பேராசிரியர் டாக்டர் மீனாக்ஷி .
‘Kaveri was suffering from ‘psycho motor activity retardation’ (slowing of motor activity and cognitive function which are manifestations of severe depression). The doctor explained that a person suffering from it would have depression, loss of trust in life and urge to commit suicide. என்று சாக்ஷியம் அளித்தார். உச்ச நீதிமன்றம் அதை மதித்தது. அவளை விடுதலை செய்ய உத்திரவிட்டது. நீதிபதிகள் எம்.ஜயசந்திரனும், எஸ்.நாகமுத்துவும், அவர் மேல் சாட்டப்பெற்ற குற்றம் சட்டப்படி செல்லாது என்றார்கள். மேலும், அவளிடம் தடாலடியாக பெறப்பட்ட வாக்குமூலம் சட்டத்துக்கு உட்பட்டது அல்ல என்றார்கள். நீங்கள், போலீஸின் தகாத செயல், கீழ்க்கோர்ட்டின் அசமஞ்ச தீர்ப்பு ஆகியவற்றையும், அவற்றினால் நடந்த வாழ்க்கைக்கொலையையும் கண்டு கொள்ள வேண்டும்.
காவேரியின் முதல் மகன் ஆறாம் வகுப்பில். அடுத்த பையன் ஐந்து மாத குழந்தை. சீர்மையாக, அவர்கள் வாழ்க்கை நடந்து கொண்டு இருக்கிறது.கடந்த இழப்புகளை நினைத்து வருந்தும் காவேரி நாட்தோறும் தெய்வத்திடம் மன்னிப்பு கேட்டு மன்றாடுகிறார். வாழ்க! வாழ்க! காவேரியின் குடும்பம்.
முனைவர் செல்வகுமார் CPCL ஐ இந்த/அடுத்த வார வல்லமையாளராக தேர்ந்தெடுக்க வேண்டும் என என் பரிந்துரை.
பெண்ணியம் போற்றும் நமது அங்கத்தினர்கள் இதையெல்லாம் கவனிக்காமல், பழைய 78 ஆர்.பி.எம். கிராமஃபோன் தட்டுக்களைப் போல் சொன்னதையே சொல்லி தன்னை மகிழ்வித்துக்கொள்ளலாகாது என்பது என் தாழ்மையான கருத்து.
சித்திரத்துக்கு நன்றி:http://www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-56/Kallu_Paanai-1.jpg
இன்னம்பூரான்
http://innamburan.blogspot.co.uk
http://innamburan.blogspot.de/view/magazine
இன்னம்பூரான் ஐயா, கட்டாயம் நெஞ்சை உலுக்கும் உண்மை நிகழ்ச்சி. இவரையும் கருத்தில் கொள்வோம். உங்களுக்கும் வல்லமை ஆசிரியர் குழுவினருக்கும் தனிமடலில் இன்னும் சில சொல்லவிருக்கின்றேன். பரிந்துரைக்கு நன்றி ஐயா.
உமது வரவு ஆகுக, தனி மடலில் நீங்கள் கூறுவதை கவனித்துச் சிந்திப்பேன், செ.இரா.செ. அவர்களே.
அன்புடன், இன்னம்பூரான்