Blog

  • பல்லழகன் – பகுதி 16

    திவாகர்

     

    கோம்டி கோபமாகச் சொன்னாள். சுந்தர் எழுந்தான்.

    “நான் கல்யாண் என் அண்ணங்கிற ஒரு உரிமைல சொன்னேன். எனக்கு மனசாட்சிக்கு விரோதமில்லாம என் மனசுல இருக்கறதை அப்படியே சொல்லிட்டேன். நிஜமாவே என் மன பாரம் இறங்கிடுச்சு இப்போ. நான் ஸ்டேட்மென்ட் இன்னிக்கு ராத்திரிக்குள்ள எழுதறேன். இனிமே என்னால நடந்ததை மறைக்கமுடியாதுதானே.. இப்போ நான் சொன்ன உண்மையை அப்படியே எங்க வேணும்னாலும் சொல்லமுடியும். நான் வரேண்டா கல்யாண்.. நாளைக்கு என் ஸ்டேட்மெண்டோட வரேன். பார்ப்போம் மேடம் கோமதி!”

     

    “நான் கோம்டி!”   என்றாள் அவள் சற்று கோபத்துடன். “இன்னும் ஒரே ஒரு கேள்வி மிஸ்டர் சுந்தர்.. இப்போ மாமாவோட அந்த ஆபிள் மொபைல் யார்கிட்டே இருக்கு.?”

     

    “அது ரொம்ப குழப்பமா இருக்கு மேடம். அதை நான் அப்பறமா மாமா கையிலே பார்க்கவே இல்ல.. நானும் அவரை எத்தனையோ தடவை அதப் பத்தி கேட்கலாம்னு பார்த்தேன். ஆனா மாமா சந்தர்ப்பம் கொடுக்கவே இல்லை.”

     

    “ஓ! ஆச்சரியமா இருக்கே.. அந்த ஃபோனைப் பத்தித் தெரிஞ்சவர் ரெண்டு பேர். ஒருத்தர் உங்க மாமா.. இன்னொண்ணு நீங்க.. ஆனா நீங்க சொன்ன அத்தனை விஷயங்களுக்கு ஆதாரம் அந்த ஃபோன்.. அது வேணுமே. இந்த ப்ரூஃப் இல்லேன்னா மாமா பேருல நீங்க இட்டுக்கட்டின கதையா போயிடும் மிஸ்டர் சுந்தர்.. அந்த ஆபிள் மொபைல் எங்க போச்சுங்கறதைக் கண்டுபிடிக்கணும்.”

     

    அவன் தலையாட்டிக்கொண்டே சென்றுவிட்டான்.

     

    கல்யாண் வெறுப்புடன் சொன்னான்.

    “பாருங்க.. அவனோட மனசு பாரம் இறக்கிட்டானாம். எனக்குத் தலையே வெடிச்சுடும் போல இருக்கு. ”

     

    “முரளியும் சரி, சுந்தரும் சரி, எல்லா விஷயமும் சொன்னாங்க.. ஆனா கொலையைப் பத்தியே சரியாப் பேசலை.. ரெண்டு பேர் மேலயும் தனித்தனியாவே கேஸ் போட்டாக் கூட அவங்க ரெண்டு பேருமே தனித்தனியாவே கொலை பண்ணாங்கன்னு போலீஸால் ப்ரூவ் பண்ணமுடியும். ஆனா இறந்தது ஒத்தர்தானே.. ரொம்ப கன்ஃபூஷன்ல போயிண்டுருக்கே மிஸ்டர் கல்யாண்.”

     

    ‘சரிதான்’ எனச் சொல்லி சிரித்தான் ரவி. “கோம்டி.. நீ ஒண்ணு பண்ணலாம்.. இவங்க ரெண்டுபேருக்குமா டாஸ் போட்டுப் பார்த்துட்டு தலை விழுந்தா அவனே குற்றவாளின்னு சொல்லி ஈஸியா ப்ரூவ் பண்ணிடலாம். இந்த கேஸும் முடிஞ்சாமாதிரிதான்.”

     

    கல்யாண் கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்திருந்தான். அதே சமயம் கோம்டி மொபைலில் நிறைய மெஸேஜ் வரும் சப்தங்கள் கேட்டதால் தன் மொபைல் ஃபோனை எடுத்துப் பார்த்தாள். வந்த மெஸேஜ்களைப் படித்து விட்டு கல்யாணைப் பார்த்தாள்.

     

    “கல்யாண்! இன்னிக்கி லஞ்ச்சுக்கு முன்னாடி நான் ஸ்டேஷன் போயிருந்தேன். அங்க இன்ஸ்பெக்டர் மோகனோட பேசினேன்..”

     

    போலீஸ் ஸ்டேஷன்.

     

    “சீக்கிரம் இந்தக் கேஸ் விஷயத்துல ஒரு முடிவுக்கு வரணும். நீங்க என்னென்ன கண்டுபிடிச்சிங்க? அந்த சுமதியைப் பாத்தீங்களா? கந்தசாமியோட ஃபோன் ரொம்ப ஓல்ட். அதுல இருக்கற நம்பர்லாம்  நமக்குத் தெரிஞ்சவங்க நம்பர்தான்.. இந்த ஸ்மார்ட் ஃபோன் காலத்துல இப்படியும் ஒரு ஓல்ட் ஃபேஷன் மனுஷனான்னு ஆச்சரியப்பட்டேன். அவர் உலகம் ரொம்ப சிறிசு போல இருக்கு. இந்த ஃபோன் நம்பர்லாம் நமக்கு உபயோகப்படாது. இந்தாங்க சிதம்பரம் ஃபோன் நம்பர். நாங்க இன்னும் பேசல. நாங்க பேசினாலும் சரியா சமாதானம் கிடைக்காது. அந்தம்மா பேரு சூடாமணி. அங்க ரஞ்சிதான்னு யாரும் இல்லே.  நீங்க வேணா பேசிப் பாருங்க..”

     

    “தேங்க்ஸ் சார். நான் பேசறேன். இந்த விவகாரத்துல இன்னும் ரெண்டு நாள்ல நமக்கு ஒரு தெளிவு கிடைக்கும்னு நான் நம்பறேன். பார்ப்போம்.”

     

    “உங்களுக்கு இதுவரை கிடைச்ச தகவல்ல ஏதேனா லீட் கிடைச்சுதா? இவனாதான் கொலைகாரனா இருக்கலாம்னு சந்தேகப்பட்டா கூட சொல்லுங்க.. நான் அவனை எஸ்கேப் ஆகாம இருக்கறதுக்கு ஒரு போலீஸை அனுப்பிச்சு கண்காணிக்கச் சொல்லிடறேன்..”

     

    “இன்னும் ரெண்டு நாள் போகட்டும் சார்.. நானே கேட்கிறேன். இந்த சூடாமணியும் சரி, வேற யாராக இருந்தாலும் அவங்களை விசாரிக்கறச்சே ஒருவார்த்தை ‘இன்ஸ்பெக்டர் மோகன்’ இந்தக் கேஸ்ல ரொம்ப கவனமா இருக்கார்னு நான் சொல்லலாமா சார்.. போலீஸ்ங்கற ஒரு வார்த்தை அவங்களை பொய்யைக் கம்மியா பேச வைக்கும்.. பொய்யை கம்மியா பேசறச்சே உண்மைங்க கொஞ்சம் ஜாஸ்தி வரும்.. அதனாலதான் கேட்கறேன்”.

     

    “கோமதி..” இன்ஸ்பெக்டர் பேசுமுன் ஞாபகப்படுத்துகிறாள்.

     

    “இல்ல சார்! கோம்டி..”

     

    “கோம்டி! உங்க மேல நம்பிக்கை ஜாஸ்தியா இருக்கு. நீங்க தாராளமா போலீஸ்ங்கிற வார்த்தையையும் இன்ஸ்பெக்டர் மோகன் விசாரிக்கச் சொல்றார்ங்கிற வார்த்தையையும் யூஸ் பண்ணிக்கலாம். ஆனா எனக்கு எல்லாத் தகவல்களையும் அப்படியே சொல்லணும்..”

     

    “நிச்சயமா சார்.. எப்படியானாலும் ஃபைனல் அதாரிடியே நீங்கதானே..?”

     

    “எஸ்.. தேங்க் யூ.!”

     

    மறுபடியும் நிகழ்காலத்துக்கு வருகிறாள் கோம்டி. கல்யாண் வீடு

     

    கல்யாண்! நான் இங்க வரும்போதே சூடாமணிகிட்டே பேசிட்டுதான் வந்தேன். அப்பதான் தெரிஞ்சது.. சுந்தர் அந்தப் பணத்தை அவளுக்குத் தரலேங்கறது.. ஆனா இந்த சூடாமணி திருச்சில குழந்தைங்க ஆசிரமத்தை சூபர்வைசரா பார்த்துட்டு வரச்சே இந்த கந்தசாமி, ஸாரி, உங்க பெரியப்பா அவளோட சினேகிதம் வெச்சிருக்கார். ஆசிரமத்துக்கு நிறைய ஹெல்ப் பண்றவர் போல. சூடாமணியோட பொண்ணு பிரியாவை அவள் இஷ்டத்துக்கு விரோதமா பணிய வெச்சிருக்கார், முரளி சொன்னாப்பல அதே கதையைத்தான் சூடாமணியும் சொன்னாள். ஆனா பிரியா விஷயத்தை விட இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னா இந்த சூடாமணியை கன்வின்ஸ் பண்ணி குழந்தைங்க சில பேரை சென்னைல படிக்கவெக்கறேன்னு இங்க பாலபாலிகா ஆசிரமத்துக்கு அனுப்பி வெச்சு படிக்க வெச்சிருக்கார். ஆனா இங்கயும் அந்த ஆசிரமத்துக்கு இவர் டொனேஷங்கிற பேருல கொடுத்து இவரோட காம லீலையை செஞ்சிருக்க வாய்ப்புண்டு.”

     

    “ஆனா சுந்தர்தானே இவர் இங்க வர்றதுக்கு முன்னாடிலேர்ந்து அந்த ஆசிரமத்து விஷயம் இவர் சார்பா பார்த்ததா சொன்னான். இவனுக்கு எவ்வளோ தூரம் சம்பந்தம்னு தெரியலியே கோம்டி!”

     

    ரவி குறுக்கிட்டான். பாலபாலிகா ஆசிரமத்தில் சமீபத்தில் ஒரு பெண் காணாமல் போய்விட்டதாக அந்த மேனேஜர் என்னிடம் சொன்னார். அதன்பின் நான் யார் யார் எப்படி எப்படி அங்கே வருகிறார்கள் யார் உதவி செய்யறாங்க எல்லாம் கேட்கறச்சேதான் இந்த சிதம்பரம் சூடாமணி விஷயம் கிடைச்சுது. இப்போ இந்தம்மா இந்த ஆசிரமத்தோட சம்பந்தம் இல்லேன்னாலும் காணாமப் போன விஜயாவை திருச்சிலேர்ந்து சென்னைக்கு கந்தசாமி, சாரி, கல்யாண் பெரியப்பா வற்புறுத்தி அனுப்பிவெச்சாராம். சூடாமணி இதுக்கு முன்ன திருச்சில ஆசிரமத்துல வேலை பண்றச்சே அங்கிருந்து மேல படிக்க வைக்கிறதுக்காக இந்த பாலபாலிகா ஆசிரமத்திலே ஒரு ஒப்பந்தம் வெச்சிருக்காங்க, அதனால கந்தசாமியும் இங்க நிறைய உதவி பண்ணுவாராம். அப்பப்ப வருவாராம். சுந்தரையும் அழைச்சுண்டுதான் வருவாராம். இதெல்லாம் இந்த பாலபாலிகா ஆசிரமம் மூலமா செரிஞ்சதைத்தான் கோம்டிகிட்டே சொன்னேன்.’

     

    “சுந்தரோட வேலை ஒண்ணும் பெரிசா இங்க இல்லேன்னு நினைக்கிறேன். மனசாட்சிக்குப் பயப்படறவன்னு தெரியுது. ஆனாலும் கொலை நடந்த அன்னிக்கு இவன் சொல்லற விஷயம் கன்வின்ஸிங்கா இல்லே. முரளியைப் போல் இவன் அவராலே ஏதும் பாதிக்கப்படலே என்றாலும் தன்னோட மாமா இப்படிப்பட்டவரான்னு அவனுக்கு அதிர்ச்சி. அதுலயும் திருச்சிலேர்ந்து வந்த ஒரு சிறுமியை ரொம்ப பாசமாப் பார்த்துருக்கான். அவளுக்கு எல்லா உதவியும் செய்திருக்கான். அந்தச் சிறுமியை இவனோட மாமாவே காமலீலைக்கு உபயோகப்படுத்தியது இவனுக்குப் பிடிக்காம போய் இவன் கொலை பண்ணியிருக்க வாய்ப்புண்டு.. சந்தேகம்தான் படலாம். நிரூபிக்க முடியாது.. இப்போ முரளி மேல உள்ள சந்தேகம் இன்னும் அப்படியே இருக்கு. போலீஸ் முரளியையும் ஈஸியா ஃப்ரேம் பண்ணி அரெஸ்ட் பண்ணலாம்.”

    “என் பெரியப்பா கொலைன்னு பார்க்காம, சாதாரண மூணாவது ஆளாப் பார்த்தேன்னா உங்களோட அறிவு பிரமாதமான அறிவு கோம்டி. ஆனா இந்த கொலைச் சம்பவத்தை அப்போது சாயங்காலம்  நடந்த சம்பவத்தை எப்படி இந்த ரெண்டு பேரோடு இணைக்கமுடியும்? எப்படிக் கொலை பண்ணி இருக்காங்கன்னு போலீஸால சொல்லமுடியும்.? இணைப்பு வரல்லியே..”

     

    “நல்ல கேள்வி! இவ்வளோ தூரம் வந்திருக்கோம்.. இன்னும் கொஞ்சதூரம் வந்தோம்னா விடை கிடைக்காம போகாது. ஆனா ஒண்ணு சொல்லலாம் மிஸ்டர் கல்யாண்! எத்தனைதான் உங்க சொந்த பெரியப்பா கொலையாச்சேன்னு நினைச்சாலும் உங்க பரிதாபத்துக்கோ இல்லை பாசத்துக்கோ கொஞ்சமும் பொருத்தமில்லாத ஒரு கொடூர ஆத்மா அவர். அதனால உங்க துக்கத்தை விடுங்க.. இந்தக் கேஸுல இன்னும் ரெண்டு மூணு பேரை விசாரிக்கணும். (அப்போது அவள் மொபைலில் ஃபோன் வர எடுக்கிறாள்). அவளே பேசுகிறாள்.

     

    “ஹேய் சாந்தி.. எதிர்வீட்லதான் இருக்கேன்..  நீ எப்போ வரே? ஓ.. வந்துட்டியா.. இரு வரேன்..” என்று சொல்லியவள் கல்யாணிடம் சொல்லிக் கொண்டு கிளம்புகிறாள்.

     

    ரவியோட தங்கை சாந்தி இப்போ வீட்டுக்குதான் வந்திருக்கா.. நான் கிளம்பறேன்..

     

    வீட்டில் காத்திருந்த சாந்தியுடன் அவள் வண்டியில் இருவரும் வெளியே கிளம்புகிறார்கள். உட்கார்ந்துகொண்டே கோம்டி அவளிடம் சொல்கிறாள்.

     

    “சைதாப்பேட்டைல பாலபாலிகா ஆசிரமம் போகணும்.. இதோ இந்த அட்ரஸ்’டி..”

     

    பாலபாலிகா ஆசிரமத்தில் வண்டியை நிறுத்த இருவரும் உள்ளே நுழைகிறார்கள். அங்கு ஒரு வயதானவர் இருக்கிறார். அவரிடம் பேசுகிறார்கள்.

     

    “நாங்க போலீஸ் டிபார்ட்மென்ட்லேர்ந்து வரோம். உங்கள்ட்ட சில கேள்விகள் கேட்கணும், அதுவும் கந்தசாமி விஷயமாதான் பேச வந்தோம். நீங்க பெரியவர். எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பீங்கன்னு தெரியும். இந்த மாதிரி பாலபாலிகா ஆசிரமம் இலவசமா நடத்தறதே  இந்த காலத்துல ரொம்ப கஷ்டம்தான். ஆனா நீங்க சக்ஸஸ்ஃபுல்லா நடத்தறது ரொம்ப சந்தோஷம்.”

     

    “உட்காருங்கம்மா.. நேத்து கூட ஒருத்தர் இப்படித்தான் வந்தார்.. ஆனா கடைசிவரைக்கும் போலீஸ்னு ஒரு வார்த்தை சொல்லலே.. நீங்க வந்திருக்கீங்க..எங்க ஆசிரமத்துக்கு ரொம்ப உதவி பண்ணினவர் கந்தசாமி.. ரொம்ப வருஷமா அவர் உதவி பண்ணிண்டு வரார். அவரோட ஏஜண்ட் மூலமா முதல்ல உதவி பண்ணார். இப்ப மூணு வருஷமா அவரே சென்னை வந்துட்டார்.. அப்பப்ப வருவார். பணம் கொடுப்பார்.. நல்ல மனுஷனை யாரோ சுட்டுட்டாங்க.. அதுதான் வருத்தமா இருக்கு.”

     

    “ஏஜண்ட்ன்னு சொன்னீங்களே.. அவர் பேரு சுந்தர் இல்லையா?”

     

    “ஆமாங்க.. அவரு ஆறேழு வருஷமா இங்க ஆசிரமத்துக்கு அக்கௌண்ட் ஃப்ரீயா எழுதித் தருவார். அவரே ஃபைனான்ஸ்லாம் பார்த்துக்குவார். அப்பப்ப டொனேஷன் வாங்கித் தருவார். ஆடிட்டிங்க் செய்து தருவார். இங்க இருக்கற இன்மேட்ஸ் எல்லாருக்கும் ஏதாவது புதுசா அவர் செலவுல ஏதாவது வாங்கித் தருவாரு.! எங்களுக்கும் நம்பிக்கையான ஆளு தேவை இல்லையா.. கந்தசாமியோட உறவு வேற.. காசு வாங்காம செய்யறாரு”

     

    “அது சரி, உங்க ஆசிரமத்து லேடஸ்ட் ரசீது புக் கொஞ்சம் காமிக்க முடியுமா?”

     

    “இருக்குங்க.. ஆனா அந்த மேஜை டிராயர் சாவி சுந்தர்கிட்ட இருக்கு. அவர் வந்துதான் எடுக்கமுடியும்மா.. எல்லாம் பக்காவா வெச்சிருப்பார்மா..”

     

    “சரி, சுந்தர் எப்ப வருவாரு?”

     

    “அவர் ஒரு வாரமா வரல்லேம்மா.. கடைசியா அவங்க மாமா கந்தசாமியை அழைச்சுண்டு வந்தார். அதுக்கப்பறம் வரல்லே.. மாமா போயிட்டாரு இல்லையா.. ரொம்ப பிஸியா இருப்பார்.”

     

    “ஓ! அப்போ கடைசி தடவையா கந்தசாமி வந்தாரு இல்லையா.. அப்ப அவர் கூடவே சுந்தரும் இங்க இருந்தாரு இல்லையா?

     

    “ஆமாம்மா கூடவே இருந்தாரு.”

     

    “அப்போ மாமா எதுக்காக வந்தார் அன்னிக்கு.. பணம் கொடுக்க வந்தாரா? இல்லே வேற விஷயம் பேசினாரா?”

     

    அந்தப் பெரியவர் தயங்கினார். பின்னர் மெதுவாகப் பேசினார்.

     

    “ஒரு நாலு மாசம் முந்தி ஒரு சின்ன அசம்பாவிதம் நடந்து போச்சும்மா. விஜயான்னு ஒரு பதிமூணு வயசுப் பொண்ணு. காணாமப் போயிடுச்சு. எப்படிக் காணாமப் போயிடுச்சுன்னா அந்தப் பொண்ணுக்கு கொஞ்சம் மூளைல ஒரு சின்ன ஆபரேஷன் பண்ணினா தெளிவாகிற வியாதி வந்திருக்கு. ஆனா ஆபரேஷனுக்கு அதிகப் பணம் தேவைப்படுது. அன்னிக்கு கந்தசாமி இந்தப் பொண்ணையும் இன்னும்  ஒரு மூணு பொண்ணுங்களை பீச்சுக்குக் கூப்பிட்டுண்டு போனார்மா. அப்பப்ப பண்றதுதான். சுந்தருக்கு இந்தப் பொண்ணு மேலே ரொம்பப் பாசம். அவரும் நிறைய இப்படி செய்வாரு. ஆனா ராத்திரி திரும்ப வரச்சே அந்த விஜயா வரல்லே.. மீதி மூணு பொண்ணுங்களையும் கொண்டு வந்து அழுதாரு. மெரீனா பீச்சுல இந்த நாலு பேரும் விளையாடிக்கிட்டிருந்தாங்க.. கந்தசாமி கடற்கரைல உட்கார்ந்து வேடிக்கைப் பார்த்திண்டிருந்தார். நைட் வந்ததனாலே விளையாடற பொண்ணுங்களையெல்லாம் கூப்பிட்டு போதும் வாங்க போகலாம்’னு சொல்லியிருக்கார். மூணு பொண்ணுங்க வந்தாங்க.. நாலாவது விஜயாவை ஆளைக் காணோம். உடனே எல்லாரும் தேடினாங்க.. கிடைக்கலே.. கந்தசாமி ரொம்ப வருத்தப்பட்டாரு.. எங்க போயிடுச்சோ அந்த பொண்ணு.. ஒண்ணுமே தெரியாத பொண்ணாச்சேன்னு அழுதாரு, பாவமா இருந்தது.. நான் அவரை சமாதானப்படுத்தி எங்க போயிடுங்க.. அதுவே வருதான்னு பார்க்கலாம். இல்லைன்னா என்ன பண்ண முடியும்? ஏற்கனவே இப்படி மூணு பேரு இந்த ஆசிரமத்துல காணாமப் போயிட்டாங்க. அத்தோட நாலாவதா சேர்த்துக்க வேண்டியதுதான்னு சொல்லிட்டேன்..”

     

    “ஓ! அப்போ அந்த விஜயாப் பொண்ணு நாலு மாசம் முன்னாடி காணாமப் போயிடுச்சு. மீதி வந்த பொண்ணுங்க அந்தப் பொண்ணைப் பத்தி எதுவும் சொல்லலியா..?”

     

    “அவங்களும் தேடியிருக்காங்கம்மா.. கிடைக்கலே தாத்தான்னு சொன்னாங்க.. பாவம் அந்தப் பொண்ணு..”

     

    தன் மொபைல் ஃபோனைத் திறந்து ஒரு போட்டோவைக் காண்பித்தாள்.

    “பாருங்க.. இந்தப் பொண்ணுதானே விஜயா?”

     

    “ஆமாம்மா.. இந்தப் பொண்ணுதான்.. கந்தசாமி கம்ப்ளெயின் உங்கள்ட்ட கொடுத்தாராம்மா.. அந்தப் பொண்ணுக்கு ஒரு வியாதி.. மூளை சம்பந்தப்பட்டது.. சுந்தர் அந்தப் பொண்ணுக்கு மெடிகல் டொனேஷன் வாங்கணும்னு ரொம்ப முயற்சி பண்றாரு.. அதுக்காக எடுத்த போட்டோ இது.”

     

    “அது இருக்கட்டும். போனவாரம் சுந்தரும் கந்தசாமியும் சேர்ந்து வரச்சே என்னவோ நடந்ததுன்னு ஆரம்பிச்சிங்க இல்லையா.. என்ன நடந்தது?”

     

    “இந்த விஜயா பேருதான்மா அவங்க பேசிக்கிட்டாங்க.. பெரியவர் கோபப்பட்டாரு, அடிக்கடி அந்தப் பொண்ணு பேரைச் சொல்லி எதுக்குடா என்னை மிரட்டறேன்னு சுந்தர்கிட்ட கோபமா கேட்டாரு.. சுந்தர் ஏதோ திருப்பிச் சொன்னாரு. என்ன சொன்னாருன்னு ஞாபகம் இல்லே.. ஆனா நான் சுந்தர்கிட்டே ‘விடுங்க தம்பி.. அவருதான் எல்லா இடத்துலயும் தேடினேன்னு சொன்னாரு இல்லையா அப்படின்னு சொன்னேன். கந்தசாமி உடனே அழ ஆரம்பிச்சுட்டாரு.. போதும்டா எனக்கு இந்த தண்டனை.. எத்தனை பேரைன்னு சமாளிப்பேன் நான்? எல்லாத்துக்கும் நான் பிராயச்சித்தம் பண்ணிடறேண்டா.. நீ அதுக்கு மாத்திரம் ஹெல்ப் பண்ணுடா’ன்னு கெஞ்சினாரு..”

     

    ‘உங்களுக்கு தனிப்பட்ட முறைல கந்தசாமி மேல இந்த விஜயா விஷயமா ஒரு சந்தேகமும் வரலியா?’

    தொடரும்

    Share
  • கவிதைகள்

    மு. பிரபு
    191/2, புதிய தெரு
    ரூசா வழி
    மேல்காவனூர் கிராமம் & அஞ்சல்
    கே.வி. குப்பம் தாலுக்கா
    வேலூர் மாவட்டம். 632 209. 

    1. ஈரத்துணி

    தொடர் மழை
    தொடரமுடியாத
    தொழிலாளர்கள் பணி,

    ஈரத்துணி
    அவர்கள்
    தலையில் மட்டுமில்லை
    வயிற்றிலும் கூட..

    2. தொடர் மழை 

    தேங்கி நிற்கும்
    தண்ணிர்
    வடியவில்லை,

    வாழ்க்கைக்கு பாதையின்றி
    கண்ணீர் வடிக்கும்
    நடைப்பாதை வியாபாரி.

    3. மழைக்காலம்

    அடுப்பு பற்றவைக்க
    முடியாமல்
    செங்கல்
    சூளைக்காரர்.

    வயிற்று பசியை
    அணைக்க முடியாமல்
    தவிக்கும்
    செங்கல் சூளை
    தொழிலாளி.

    4. விவசாயமுமில்லை

    விலைகளும்
    குறையவில்லை
    நிரந்தர வேலையுமில்லை
    வேலைக்கு ஏற்ற
    ஊதியமுமில்லை
    ஆனாலும்
    மறைமுக வரிகளால்
    சுமைதாங்கிகளாய்
    ஏழைகள்.

    5. செயலிகளில் 

    வாசிக்கப்படும் புத்தகங்கள்
    பாசிக்கு உணவாகும்
    நூலக புத்தகங்கள்.

    Share
  • சமிக்கை

    த. ஆதித்தன்

    இரைச்சல்களுக்குள்
    பொதிந்து கிடக்கின்றன
    சமிக்கைகள்.

    தேர்ந்தெடுக்கும் திறன்
    அபரித ஆற்றலாய்
    மறுபடிகட்டிற்கு
    தேர்ந்தெடுத்தல்
    இங்கு
    உரிமையாய்…

    தேர்ந்தெடுப்பின் விளைவு
    சிலவற்றிற்கு, ம்…
    பலவற்றிற்குக் கூட
    மறுதலிப்பு பதிலாய்…
    தம் திறன்
    தேர்ந்தெடுப்பில்
    தொலைகையில்
    இயலாமையின் பிடியில்…

    கொண்டாடுங்கள்
    புறக்கணிப்பை
    ம்… அங்கு
    தேர்ந்தெடுப்பின்
    பூரணத்துவம்

    பிரம்மமாய்!
    பெரும் ஏகாந்தம்
    பரந்துபட்ட வெளியாய்
    தேர்ந்தெடுப்பின் களம்.

    இலக்கு வெளிப்பட
    தப்பிச் சென்றிடு
    சலசலப்பில்….

    ஒதுங்கி நிற்பது
    நாம்
    தொலைந்திட, தொலைத்திட அன்று…
    கண்டறிதலின்
    சூட்சமம் அது.
    சமிக்கைகளைக் கண்டறியும்
    வாய்ப்பாடு.
    ஆய்ந்தறிந்து புலப்படுத்தும்
    வித்தையல்ல,
    இயந்திர ஓட்டத்தில்…
    ஒதுங்கி நிற்றல்
    சமிக்கை அறிதலின்
    அத்தியாவசிய தந்திரமாய்…

    Share
  • மனதைத் திறந்து காட்டிட வேண்டும்!

    மனதைத் திறந்து காட்டிட வேண்டும்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மேனாள் தமிழ் மொழிக்  கல்வி இயக்குநர் 
    மெல்பேண், ஆஸ்திரேலியா 

    மன்னிக்க நினைத்தால் மன்னிக்க வேண்டும்
    வாழ்த்திட  விரும்பினால் வாழ்த்திட வேண்டும்
    மனத்தினில் தேக்கி வைத்திடல் வேண்டாம்
    மனதைத் திறந்து காட்டிட வேண்டும்

    ஆத்திரம் வந்தால் அடக்கிட வேண்டாம்
    கொட்டியே தீர்த்தால் குளிர்ந்திடும் அனைத்தும்
    அழுகை பெருகினால் அழுதிடல் அவசியம்
    அடக்கினால் அனைத்தும் அணுவாய் மாறும்

    கற்றவர் யாவரும் பெரியவர் அல்லர்
    கற்றதைக் கருத்தில் எடுப்பவர் பெரியவர்
    நிற்பதும் நடப்பதும் நெறியாய் இருப்பதே
    கற்றவர் இலக்கணம் என்பதே உண்மை

    உறவு என்பது உபசாரம் அன்று
    உறவு என்பது உயர் நிலையாகும்
    அன்பால் மலர்வதே ஆனந்த உறவு
    ஆசை வார்த்தைகள் நல்லுற வன்று

    நடிக்கும் உறவு கலைந்திடும் நிச்சயம்
    நம்பகத் தன்மை குலைந்தால் துன்பமே
    துடிக்கும் உணர்வுடன் உறவுகள் இருந்தால்
    தொடரும் உறவாய் தொடரும் தொடரும்

    Share
  • பல்லழகன் – பகுதி 15

    திவாகர்

     

     

    “டேய்.. இதுல என்னடா பார்த்தே.. நான் என்னத்தைப் பார்த்தேன்னு நீ பார்த்தே?.. சொல்லுடா.. சொல்லு.. என்ன பார்த்தே..”

     

    “மாமா இது அநியாயம். ஃபோன்ல பார்த்துண்டு இருந்தது நீங்க.. ஆனா, என்னைப் போய் எப்படி அப்படி கேட்கலாம். அதுவும் அசிங்கமான படங்க.. அதனால கொஞ்சம் ஷாக்காயிட்டேன். ஆனா கீழே போட்டது நீங்கதானே?”

     

    சட்டென சமாளித்தார்.  “டேய் சுந்தர்.. அது ஒண்ணுமில்லேடா.. இந்த வாட்ஸப்ல ஏதோ அப்படி இப்படின்னு ஃபோட்டோ இமேஜ் வந்தது.. வாட்ஸ் அப்லே இதெல்லாம் சகஜம்.. அதெல்லாம் அழிச்சிட்டிருந்தேன்.. நீ பார்த்துட்டே போலருக்கு. சரி சரி.. இப்போ ஃபோன் உடைஞ்சு போச்சே.. உனக்குத் தெரிஞ்ச ரிப்பேர்க்காரன் இருக்கானா? ஆனா இது ஆபிள் ஃபோன்.. அவன் ஏஜென்ஸிதான் ரிப்பேர் பண்ணுவான். அவனுக்கு ஃபோனைக் கொடுத்தா அவனும் உன்னை மாதிரி ஏதேனா ஏடாகூடமான படத்தைப் பார்த்துட்டு உங்க மாமா இப்படிபட்டவராடான்னு கேட்டாலும் கேட்பானேடா.. அத்தோட ரொம்ப இம்பார்ட்மென்ட் விஷயம்லாம் வெச்சிருக்கேன். சில காண்டாக்ட் நம்பர்லாம் இருக்கு. இந்த ஃபோன் எங்கிட்ட இருக்கறதே யாருக்கும் தெரியாதுடா. இந்த ஃபோன்லேர்ந்து யாருக்கும் ஃபோன் கூட பண்ணமாட்டேன்.. ”

     

    சுந்தர் எதுவும் பேசவில்லை. கன்னத்தைத் தடவியபடி இருந்தான். அவர் சுந்தரின் கன்னத்தின் அருகே வந்து கன்னத்தைத் தடவிக்கொடுத்தார்.

     

    “நான் எப்பவுமே உன்னை அடிச்சதில்லே.. என்ன இருந்தாலும் இன்னொரு தகப்பன் பெத்த பிள்ளை நீ.. என் சொந்த மகனா நினைச்சு அடிச்சுட்டேன்.. தப்புதான்..”

     

    “மாமா அப்படி சொல்லாதீங்க.. உங்களுக்கு எல்லா உரிமையும் என் மேல இருக்கு. விவரம் தெரியாம வந்து எட்டிப் பார்த்தது என் தப்புதான். மாமா.. இந்த மாதிரி ஆபிள்மொபைல் எல்லாம் நானே ரிப்பேர் செய்வேன் மாமா..  நான் சரி பண்ணிக் கொடுத்துடறேன்.. ரூம்ல இதுக்கான ஸ்பெஷல் டூல்கிட் இருக்கு. எனக்குக் கொடுங்க.. அலுங்காம நலுங்காம மேல கூட ஒரு புது கவர் போட்டு புதுசாவே கொடுத்துடறேன்.”

     

    மாமா யோசித்தார். “சுந்தர்.. இது அப்படியில்லேடா. சில லேவாதேவி கேஷ் கணக்கெல்லாம் அவங்கவங்க பேருல எழுதி ரகசியமா வெச்சுருக்கேன். நாளைக் காலைல ஆடிட்டர் இங்க வருவாரில்லையா.. அவர்கிட்டே இதெல்லாம் காண்பிச்சு அட்ஜஸ்ட் பண்ணனும்.” என்றவர் கீழே கிடந்த ஆடிட்டர் பேப்பரையெல்லாம் பொறுக்கி கையில் அடுக்கி வைத்துக் கொண்டு பேசினார்.

     

    “இந்த பேப்பர்லாம் அந்தக் கணக்கோடு பார்த்து ஃபைசல் பண்ணனும்டா.. நீ ஒண்ணு பண்ணேன்.. அடையாறுலதான் உன் ரூம் இருக்கு. போய் அந்த டூல்கிட் கொண்டு வந்துடு. நீ இங்கயே நைட் சாப்ட்டுக்கலாம். அப்படியே இங்கேயே ரிப்பேரும் பண்ணிடு. மேல கவர் நாளைக்கு கடைல வாங்கி புதுசா போட்டுக்கலாம். நாளைக்கு வரச்சே நீயா புதுக் கவரை வாங்கிவந்துடேன்..”

     

    “சரி மாமா” என்று சொன்னவன் கடகடவென தன் பைக்கில் கிளம்பினான்.

     

    மறுபடியும் தற்போதைய நிலைக்கு வந்தான் சுந்தர். அவனையே கல்யாணும் கோம்டியும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

     

    “நான் என் ரூமுக்குப் போய் ஆப்பிள் ஃபோன் ரிப்பேர் டூல்கிட் எடுத்துட்டு அப்படியே வர வழியிலே ஒரு ஃபோன் சேஃப்டி அப்பர்கவரும் வாங்கிண்டு வீட்டுக்கு வந்தேன். மாமா ரொம்பவே பரபரப்பா வாசல்லியே எனக்காகக் காத்துண்டிருந்தார். இதுக்குப் போய் இவ்வளவு டென்ஷன் ஆகறாரே’ன்னு கூட நினைச்சுண்டேன்.. ஹால்லயே அவர் ஃபோன் எடுத்து ரிப்பேர் பண்ணேன். என் பக்கத்துலேயே இருந்தார்.”

     

    மறுபடியும் அவன் நினைவுகள் வலம் வந்தது. மாமா வீட்டில் அவர் நிம்மதியற்று நின்று கொண்டிருக்க சுந்தர் மொபைல் முழுவதையும் அக்கு வேறாக ஆணி வேறாக கழட்டினான். உள்ளே எதையோ கொஞ்ச நேரம் நோண்டினான். சில பாகங்களைத் துணியால் துடைத்து வாயால் ஊதினான். பிறகு பத்திரமாக அதை வைத்துவிட்டு ஃபோனை மறுபடியும் சேர்த்து வைத்து பழைய நிலைக்குக் கொண்டு வந்து சார்ஜிங்க் செய்து ஆன் செய்தான். கருநிறம் சூழ நடுவில் வெள்ளையாய் ஆபிள் படம் வெளி வர ஃபோன்  திறக்க ஆரம்பித்தது.

     

    “மாமா இதுக்கு ஓபனிங்க் பாஸ்வேர்ட் வெச்சிருக்கீங்களா?”

     

    “எதுக்குடா.. பாஸ்வேர்ட்   நான் அதெல்லாம் வெக்கிறதில்லேடா.. ஓபன் பண்ணா வந்திருமே.. ”

     

    “சரி மாமா.”

     

    “அவன் மொபைலைத் திறக்க முயற்சிக்கிறான்,, முதலில் ஆபிள் படம் சின்னதாக வந்து முழுவதுமாக முடிந்ததும் அதன் மேல் சேஃப்டி கவரை ஒட்டினான். அப்படி ஒட்டும்போதுதான் சடாரென ஒரு வண்ணப் படமாக அந்த ஃபோனில் வர அப்படி வந்தது என்னவோ ஒரு பெண்ணின் முழு நிர்வாணப்படம். அதை ஆஃப் செய்து புதிதாக வாங்கிவந்த பிளாஸ்டிக்கண்ணாடி கவரை ஒட்டிச் சட்டென அந்த ஃபோனை மாமாவிடம் கொடுத்துவிட்டான்.”

     

    “ஆஹா.. ரொம்ப தேங்க்ஸ்டா.. வா வா சாப்பிடலாம்..”

     

     

     

     

     

    இருவரும் சாப்பிடும்போது அவன் மெல்லக் கேட்டான். அவன் கை சோற்றைப் பிசைந்து கொண்டே இருந்தது. சாப்பிடாமல் பேசினான்.

    “மாமா.. தப்பா நினைச்சுக்காதீங்க.. நான் கேக்கறேன்னு.. இப்போ நான் பார்த்த படத்தோட முகம் கொஞ்ச நாள் முன்னாடி நம்ம பால பாலிகா ஆசிரமத்துலேர்ந்து காணாமப் போன ஒரு சின்னப் பொண்ணு முகம் போல இருக்கு.. மாமா எனக்கென்னவோ சோறு ஏறமாட்டேங்குது மாமா.. அது சின்னக் குழந்தை மாதிரி தெரியுது..”

     

    “என்னடா சொல்லறே.. எதுனா கற்பனை பண்ணி மனசுல விபரீதமா நினைக்காதே..”

     

    “விபரீதமா அப்படி எதுவும் இல்லேன்னா ஹாப்பிதான் மாமா.. ஆனா அந்த முகம் மட்டும் அப்படியே அந்த சின்னப் பொண்ணோட முகம்தான்.. நான் அப்பர் கவரை ஒட்டறச்ச நல்லா பார்த்தேனே”

     

    “எதுவும் உளறாதடா”

     

    “உளறல மாமா.. நாலு வருஷமா அந்தப் பொண்ணைப் பார்த்துண்டே வரேனே.. நீங்க திருச்சிலேர்ந்து ஒன்பது வயசுப் பொண்ணா அனுப்பிச்சிங்களே.. சென்னையில நான் இருக்கேன்னு எனக்குதானே சொல்லுவீங்க.. புதுத்துணியெல்லாம் எடுத்துக் கொடுத்திருக்கேன்.. எக்ஸிபிஷன் வந்தா அழைச்சுண்டு போவேன்.. குழந்தை மாதிரி வருமே.. நான் கல்யாணம் பண்ணிண்டு குழந்தையைப் பெத்துண்டேன்னா இந்த மாதிரி பொண்பிள்ளையா பிறக்கணும்னு நினைச்சுப்பேன் மாமா..”

     

    “இதெல்லாம் ஏண்டா இப்போ சொல்லறே?”

     

    “இப்போ அந்தப் பொண்ணை இப்படிப் போட்டோவுல பாக்கறது கஷ்டமா இருக்கு மாமா..”

     

    மாமா உறுமினார். “டேய்.. உன்னை நான் இங்க கூப்பிட்டது தப்பா போச்சு.. வெளில போய் எதுனா கன்னா பின்னான்னு இது மாதிரி உளறி வெக்காதே.. எனக்கு நீ பாடம் நடத்துறியா?”

     

    “எனக்கு ஏதோ வித்தியாசமா படறது மாமா.  இந்த மாதிரி படம்லாம் இப்படிப் பாக்கறதுக்குன்னே நிறைய பேர் பணம் கொடுத்துப் பாப்பாங்களாம். சமீபத்துல ஒரு கேஸ் பேப்பர்ல நியூஸா வந்தது. அரபு நாடுகளுக்குக் கூட இந்த மாதிரி போட்டோ அனுப்பிச்சு அந்த சாம்பிள் காமிச்சு அந்தப் பொண்ணையே விக்கறதாவும் அவனை அரெஸ்ட் பண்ணி போஸ்கோ சட்டத்துல உள்ளே தள்ளினதாவும் நியூஸ் படிச்சேன்.”

     

    “இப்போ எதுக்குடா இதெல்லாம் சொல்லறே?”

     

    “இந்த மாதிரி போட்டோ வெச்சிருந்தாலும் அவங்களை அரெஸ்ட் பண்றதுக்கு போலீஸுக்கு உரிமை இருக்கு. அதனால எதுனாச்சும் போட்டோ இருந்தாலும் அதை ரிமூவ் பண்ணிடுங்க மாமா..”

     

    “சுந்தர் எனக்குத் தெரியும். எதை எப்படி ஹாண்டில் பண்ணனும்னு. நீ சின்னப் பையன். உனக்கு வேண்டாத விஷயத்துல தலையிடாதே.. புரியறதா?”

     

    “மாமா எனக்கு ஏன் வீண் வம்புன்னு என்னால அப்படி விட முடியலே.. ஏன்னா அதுக்குக் காரணம் அந்தப் பொண்ணுதான்.. வேணாம் மாமா.. இப்போ அந்தப் பொண்ணு கூட ஆசிரமத்துல இல்லே. காணாமப் போனவ திரும்ப வரவே இல்லை. அவளுக்கு  ஏதாவது  ஏடாகூடமா ஆகக்கூடாது மாமா”

     

    அவன் எழுந்துவிட்டான். சாப்பிடவில்லை. மாமா யோசித்தார். தன் அறைக்குப் போனார். பீரோவைத் திறந்து ஒரு கட்டு பணம் எடுத்து வந்தார்.

     

    “இதோ பார்.. இந்த பணம் உனக்கு லஞ்சமா தரலே.. பாசத்தோடு தரேன். உன் மனசு கவலையா இருக்கு. எங்கயாவது கோவா கீவான்னு போயிட்டு வா..  நாம அப்பறமா பேசலாம் இதப் பத்தி.”

     

    “வேணாம் மாமா இந்தப் பணமெல்லாம்..”

     

    “டேய்.. உன்னை வளர்த்தவன் நான். எனக்குத் தெரியும்.. யாருக்கு என்ன கொடுக்கணும்.. எது கொடுக்கக்கூடாதுன்னு.. போடா.. நாலு நாள் லீவு போடு.. மனசுல எந்த விஷயத்தையும் அப்படியே வெச்சுக்காதே..  போய் வாழ்க்கையை நல்லா எஞ்சாய் பண்ணு..”

     

    என்று சொன்னவர் அவன் பாக்கெட்டில் அந்த  நோட்டுக் கட்டைச் செருகினார். அவனைத் தட்டிக் கொடுத்தார்.

     

    திரும்பவும் தற்காலத்துக்கு வந்தான் சுந்தர்.

     

    கல்யாண் தலையில் கை வைத்துக் கொண்டான். கோம்டி மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். சுந்தர் சொல்லிக் கொண்டிருந்தான்.

     

    “இப்படித்தான் ஆரம்பிச்சது இந்த விவகாரம். எப்போ மாமா எனக்கு இதெல்லாம் புரிஞ்சு போயிடுச்சுன்னு நினைச்சாரோ என் வாயை மூட அப்பலேர்ந்து எனக்குப் பணமழை பொழிய ஆரம்பிச்சதுடா கல்யாண். முதல்ல நான் மாமாவுக்கு புத்திமதி சொன்னவன். ஆனா மாமா இந்த விஷயத்துல ரொம்ப நல்லா ஊறிப் போனவர்னு தெரிஞ்சவுடனே என்னாலே எதுவும் பண்ணமுடியலே..”

     

    “அப்போ நீங்களும் உடந்தையாதான் பிற்பாடு இந்த மாதிரி வேலையெல்லாம் செஞ்சீங்களா? நல்லா பணக்காரரா மாறியிருப்பீங்களே!”

     

    “சத்தியமா நான் இந்த மாதிரி வேலையெல்லாம் மனசால கூட நினைச்சுப் பண்ணமாட்டேன் கல்யாண். என் தப்பு என்னன்னா நான் இந்த விஷயத்தை வெளியில சொல்லமுடியாத நிலையில இருந்தேன். ஆனா அதுக்குன்னு அவருக்கு நான் உடந்தையா மட்டும் நிச்சயம் இல்லே. மாமா கூட அதுக்கப்பறம் நான் அவர்கூட இருக்கறவரைக்கும் இந்த மாதிரி வேலை செய்யலேன்னுதான் நான் நினைக்கிறேன். எனக்குத் தெரிஞ்சதைத்தான் சொல்றேன்.”

     

    “முரளிக்கும் இந்த விஷயம் தெரியுமோ..” கல்யாண் கோபத்தோடு கேட்டான்.

     

    “இந்த விஷயம் அவனுக்குத் தெரியாது.. ஆனா முரளிக்கும் மாமாவுக்கும் வேற ஏதோ சின்ன தகராறு இருக்குன்னு தெரியும்.. அதை ரெண்டு பேருமே எங்கிட்ட சொல்லாதனதாலே நானும் கேட்டுக்கலே.. ஆனா சமீப காலமா முரளி அடிக்கடி வர்றது இல்லேங்க்கிறதாலே நான் அப்பப்ப மாமாவுக்குக் கார் டிரைவரா மாறினேன். ஆசிரமத்துக்குப் போவோம். ஆனா மாமா எனக்கு மாசம் பொறந்தா ஒரு லட்ச ரூபாய் கொடுத்திண்டு வந்தாரு. எனக்குக் கொடுத்த ஒரு லட்ச ரூபாயும் நான் ஆசிரமத்துக்கே கொடுத்துட்டேன். வேணுமின்னா நீங்க அங்க போய் செக் பண்ணிக்கலாம்.”

     

    ‘ஒஹோ..’

     

    கல்யாணின் குரல் கொஞ்சம் கேலியாக ஒலித்தது.

     

    “இன்னும் அந்த பத்து லட்ச ரூபாய் விஷயம் சொல்லலியே.” கோம்டி ஞாபகமூட்டினாள்.

     

    “அதுவும் சொல்லதான் வரேன். கொலை நடந்ததுக்கு மூணு  நாளைக்கு முன்னாடி  நான் அவரை ஆசிரமத்துக்கு அழைச்சிட்டுப் போயிட்டு வீட்டுக்கு வந்தோம்.  இல்லையா.. என்னை உள்ளே கூப்பிட்டார். பத்து லட்ச ரூபாய் பணக்கட்டு கொடுத்து சிதம்பரத்துல ஒரு விலாசத்துல கொடுக்கச் சொன்னார். இதுதான் கடைசின்னு ஏதோ ஒரு வார்த்தை ஒரு காகிதத்துல எழுதினாரு. விலாசம் கூட எழுதினார்.   ரஞ்சிதான்னு ஒரு பொண்ணு பேரு. எனக்கு மகா கோபம் வந்தது. இவ்வளோ சொல்லியும் அவர் மாறலே.. நான் அவர்கிட்டே அந்த பணம் வாங்கினேன். அந்த அட்ரஸ்ஸை தூக்கிக் குப்பைல போட்டேன். அடுத்த நாள் வண்டியை சர்வீஸுக்கு விடறதுக்கு முன்னாடி அந்த பத்து லட்ச ரூபாய் அப்படியே பாலபாலிகா ஆசிரமத்துக்கு டொனேஷனா பாங்க்ல டெபாசிட் பண்ணிட்டேன். நீங்க போய் அங்க செக் பண்ணிக்கலாம்.”

     

    சுந்தர் மிகவும் ஆயாசமாகச் சொன்னான்.

     

    “அவ்வளவுதான் நடந்தது. நான் கடைசி வரைக்கும் மாமாவைக் காப்பாத்ததான் முயற்சி பண்ணினேன்.. ஆனா முடியலே.. இந்த ஆள் மாறவே மாட்டாருன்னு..”

     

    “அதனால அன்னிக்கு சாயங்காலம் அஞ்சு மணிக்கே வீட்டுக்கு வந்து மாமாவை கொலை பண்ணிட்டீங்களா?”

     

    நிதானமாகக் கேட்டாள் கோம்டி. உடனடியாக அவன் அழுதான்..

    “இல்லை நான் அவரைக் கொலை செய்யலே.. அவர் எப்படி கொலையானார்னும் எனக்குத் தெரியாது. கொலை நடந்த அன்னிக்கி நான் சென்னைலயே இருந்தேன். பைத்தியக்காரனா பார்க்’லே சுத்திட்டு இருந்தேன்…”

     

    “நான் நம்பமுடியாது சுந்தர்.. நான்னு இல்லே.. போலீசும் நம்பாது.?”

     

    “இல்ல.. ஆசிரமம் போகலாமான்னு கூட பார்த்தேன். ஆனா எனக்கு அங்க போக அப்போ இஷ்டம் இல்லே.. ஏன்னா நான் சிதம்பரம் போயிருக்கணும்னு நினைச்ச வேளையில ஆசிரமத்துக்கு போயிருந்ததைப் பத்தி மாமா கேள்விப்பட்டாருன்னா இன்னும் திட்டுவாரு. பார்க்’லேர்ந்து பஸ்ல காளிகாம்பா கோயிலுக்குப் போனேன். அதுக்கப்பறம் மகாபலிபுரத்துல ஒரு ரிஸார்ட்க்குப் போய் தண்ணியடிச்சு அங்கே போய் உட்கார்ந்து யோசித்தேன், மனசுல மறுபடி மறுபடி அந்தப் பொண்ணு போட்டோ வந்து மனசைக் குழப்பிக்கிட்டே இருந்தது…”

     

    ரவி நிதானமாக கேட்டான். ‘ஸோ.. அப்படிக் குழம்பின மனசோட நேரா வீட்டுக்கு வந்து மாமாவைப் போட்டுத் தள்ளிட்டீங்களா? இப்படித்தான் போலீஸ் முடிவா கேட்டு உங்க மேல குத்தம் சுமத்தி இந்தக் கேஸை முடிச்சுடுவாங்க மிஸ்டர் சுந்தர்.!’

     

    ‘ஐய்யோ.. நான் சத்தியமா அவரைக் கொலை பண்ணலே.. அந்த நேரத்துல நான் அந்த ரிசார்ட்ல இருந்ததுக்கு என் டெபிட்கார்ட் பேமென்ட் ஏன் அங்க இருக்கற சிசி டிவி கேமரா கூட சாட்சியா இருக்கு.’

     

    “ஓ!! அந்தச் சின்னப்பொண்ணுன்னு உங்க மாமா ஃபோன்ல பார்த்தீங்களே.. அந்தப் பொண்ணு இப்போ எங்கே இருக்குது.. சொல்ல முடியுமா?” கோம்டி கேட்டாள்.

     

    “அந்தப் பொண்ணை நானும் தேடறேன்.. யாரோ தெரிஞ்சவங்க கிட்டே கொடுத்து வளர்க்கறாரு மாமா.. அப்படிங்கறது என் யூகம்.

     

    ‘ஆனா ஆசிரமத்து ரிகார்ட்ல அந்தப் பொண்ணு காணாமப் போயிடுச்சுன்னு இருக்கு.” ரவி சொன்னதும் விழித்தான் சுந்தர்.

     

    சுந்தர் மௌனமாக இருந்ததால் கோம்டி இன்னொரு கேள்வி கேட்டாள்.

     

    “சரி.. நீங்க எந்த தைரியத்துல நீங்களா முடிவு செஞ்சு அந்த பத்து லட்சத்தை ஆசிரமத்துக்குக் கொடுக்கலாம். இந்தக் கொலையே நடக்கலே.. ஒருவேளை உங்க மாமா அந்த ரஞ்சிதாவுக்கு ஃபோன்ல பேசி அந்தப் பணம் வந்துதான்னு கேட்டு அது வரலைன்னு தெரியறச்சே அவர் கோபப்படுவார் இல்லையா.. எந்த நினைப்புல அப்படி செஞ்சீங்க.. ஒருவேளை மாமாவோட இந்தக் கொடூர முடிவை நீங்க முன்கூட்டியே எதிர்பார்த்தீங்களா?”

     

    “ஐய்யோ.. அப்படியெல்லாம் இல்லங்க.. இந்த விஷயத்துல அவர் கேள்வி கேட்பாருன்னு நான் எதிர்பார்த்தேன்.. அப்படி கேட்டாருன்னா அந்த ரஞ்சிதா விஷயத்தைக் காமிச்சு அவரைத் திருப்பி நாலு வார்த்தை கேட்டு, நீங்க திருந்தவே மாட்டீங்களான்னு நல்லா திட்டிட்டு அதுக்கப்பறம் பாலபாலிகா ஆசிரமத்துக்கு நான் கொடுத்த பத்து லட்சத்தைக் காமிக்கலாம். அத்தோட இந்த விஷயத்தையெல்லாம் கல்யாண்கிட்டே சொல்லிட்டு அன்னியிலேர்ந்து அவரோட சகவாசத்தையும் உறவையும் ஒரேயடியா அறுத்துக்கலாம்னு மனசுல வெச்சிருந்தேன். ஆனா அவர் கொலையானது எனக்கு அதிர்ச்சிதான்.”

     

    “சரி, நீங்க இந்தக் கொலையைச் செய்யலேன்னு வெச்சுக்கலாம். அப்போ யார் செஞ்சிருக்கலாம்?. இவ்வளோ நெருக்கத்துல உங்க மாமாவைப் படிச்சவர் பழகினவர் நீங்க.. உங்களுக்கு என்ன தொணறதோ அதைச் சொல்லுங்க..”

     

    “எனக்குத் தோணறது என்னென்னா இவரால கொடுமையா அவதிப்பட்ட எந்தப் பொண்ணோ அல்லது பொண்ணோட சொந்தமோ இவரைக் கொலை பண்ணியிருக்கலாம்னுதான் மனசுல பட்டது..”

     

    “நீங்க அப்புறம் மாமாகிட்ட பேசலியா?”

     

    “நான் கடைசியா அவருக்கு ஃபோன்ல பேசினப்போ கொலை நடந்த அன்னிக்கு நாலு மணிக்குப் பேசினேன். அவர் கொடுத்த பத்து லட்சம் கொடுத்தாச்சுன்னு சொன்னவுடனே ‘சுந்தர் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்ன்னு கொஞ்சம் வருத்தமான குரல்ல சொன்னார். அதுதான் கடைசி.”

     

    “அதாவது அவரோட  நோகியா பழைய ஃபோன்ல பேசினீங்க இல்லையா?”

     

    “ஆமாம். அது இப்போ போலீஸ் கையிலதான் இருக்கு. செக் பண்ணிக்கலாம்.”

     

    “சரி மிஸ்டர் சுந்தர்.. நீங்க இதுவரை சொன்னதை நான் ரிகார்ட் பண்ணியிருக்கேன். அதனால நீங்க புதுசா ஒரு போலீஸ் ஸ்டேட்மென்ட் தயார் பண்ணி அதுல உண்மையை அப்படியே எழுதுங்க..  இன்னும் கொலையாளி யார்னு தெரியலே.. கொலைக்கான மோடிவ் கூட தெரியலே.. பார்ப்போம்.”

     

    “கொலைகாரன் யாரா இருந்தா என்ன? அவன் செஞ்சது சரின்னு தெரிஞ்சிடுத்து இப்போ. இப்படிப்பட்டவரெல்லாம் உயிரோடு வாழத்தான் வேணுமா?”

     

    “எங்கிட்டே இப்படிச் சொன்னதை போலீஸ்கிட்ட சொல்லாதீங்க மிஸ்டர் சுந்தர்.”

     

    தொடரும்

     

     

    Share
  • பெரியபுராணம் எனும் பேரமுதம் – பகுதி 22

     

    63 நாயன்மார்கள் வரலாறு – 20. குலச்சிறை நாயனார்

    வன்றொண்டன் எனும் சுந்தரமூர்த்தி நாயனாரால் திருத்தொண்டத்தொகையிலே “பெரு நம்பி” என்று வியந்துரைக்கப்பட்ட பெருந்தகை குலச்சிறையார். தம் மனத்திருக்கும் திண்மையால் அடியவர்களுக்குத் திருத்தொண்டு புரியும் திறத்தினின்றும் சற்றும் வழுவாத சைவ சமய நெறியாளர் இவர்.

    கோதில்புகழ் தருமணமேற் குடியார் கோவண்

        குலச்சிறையார் தென்னர்குல வமைச்சர் குன்றா

    மாதவர்க ளடிபரவு மரபார் பாண்டி

        மாதேவி யாரருள்வான் பயிர்க்கு வேலி

    காதன்மிகு கவுணியர்கோன் வாதிற் றோற்ற

        கையரைவை கைக்கரைசேர் கழுவி லேற்று

    நீதியினா ராலவாய் நிமலர்ச் சேர்ந்த

        நின்மலனா ரென்மலங்க ணீக்கி னாரே.

    சிவனடியார்களை சிவமாக எண்ணி வழிபடும் நெறியில் நின்றவர் குலச்சிறையார் எனும் பெருமகனார். பாண்டி நாட்டின் முதலமைச்சராக விளங்கியவர் என்றாலும் இவர் அடியார் பக்தியில் சிறந்து விளங்கியவர். பழம்பெருமை மிக்க பாண்டிய நாட்டில், புதுக்கோட்டைக்கு அண்மையில் அமைந்துள்ள மணமேற்குடி என்ற ஊரில் அவதரித்தவர். செந்நெல் நிரம்பிய வயல்களும் இனிய கரும்புகளும், அருகே  செறிந்து நிற்கும் பாக்கு மரங்களும் என பசுமையான வயல்வெளிகளால் குளிர்ந்துள்ள இடங்களும் சூழ உள்ளதொரு அழகிய நகரம் மணமேற்குடி. பாண்டி நாட்டில் மங்கையர்கரசியார் சைவப் பயிர் வளர்க்கத் துணை நிற்கும் பேறுபெற்றவர் குலச்சிறையார். ஞானசம்பந்தப் பெருமானுடன் தன் சொந்த ஊர் சென்று சிவாலயத்தில் வழிபாடு செய்த பேறும் பெற்றவர் இவர். மதுரை சொக்கலிங்கப் பெருமானை அன்றாடம் வழிபாடு செய்யத் தவறாத சிவனடியார் இவர். அனைத்திற்கும் மேலாக கூன் பாண்டியனாக இருந்த பாண்டியனை நின்ற சீர் நெடுமாறனாக மாறத் துணைபுரிந்தவர்.

    கார ணங்கண் ணுதற்கன்பர் என்னவே
    வார மாகி மகிழ்ந்தவர் தாள்மிசை
    ஆரும் அன்பொடு வீழ்ந்தஞ் சலிமுகிழ்த்
    தீர நன்மொழி எய்த இசைத்துளார்.

     

    சிவனடியாருக்குச் செய்யும் பணி சிவனுக்குரியது என்பதால் எம்பெருமானின் இன்னருள் பெறுதற்கு சிவனடியார்களே காரணமானவர் என்பதை உணர்ந்து, அடியவர்களிடத்து அன்பு கொண்டு அவர்களுடைய திருவடிகளில் மிகுந்த அன்பொடும் வணங்கி கைகள் கூப்பித் தொழுது, நன்மொழிகளைப் பொருந்தச் சொல்லி வாழ்பவர்.

     

    குறியில் நான்கு குலத்தினர் ஆயினும்
    நெறியின் அக்குலம் நீங்கினர் ஆயினும்
    அறிவு சங்கரற் கன்பர் எனப்பெறில்
    செறிவு றப்பணிந் தேத்திய செய்கையார்

     

    வினைவழிப்பட்ட நிலையில் தோன்றிய நான்கு குலத்தவர்களாக இருப்பினும், அவர்தம் ஒழுக்க நெறியினின்றும் நீங்கியவர்களாக இருப்பினும் சிவபெருமானிடத்தில்  நிலைபெற்ற அறிவுடையவர்கள் என அறியப்பெறின், அவர்களை மனம் பொருந்தப் பணிந்து வணங்கும் செய்கையினை உடையவர் குலச்சிறையார். உலகினர் தாம் சிறந்தனவெனக் கொள்ளும் நலங்களை உடையவராயினும், அந்நலங்களின்றி அளவற்ற தீமைகளை உடையராயினும், அவர் சிவபெருமானின் அடியவர்களாய் இருப்பின், அன்னோரை நிலம் உற வீழ்ந்து வணங்கும் தன்மையினை உடையவர் குலச்சிறையார்.

     

    குலச்சிறை நாயனார் புராணம் சொல்லும் கருத்து

    குணத்தில் மிக்கவர்கள் உணவு வேண்டி பெருங்கூட்டத்தாராய் வந்தாலும், அல்லது ஒருவராய் வந்தாலும், எண்ணுதற்கரிய அன்பினால் எதிர் கொண்டு அழைத்து, நட்பு மிகுதியுடன் திருவமுது ஊட்டும் நலத்தினை உடையவர் குலச்சிறையார். அடியவர்கள், திருநீறு, உருத்திராக்கம், ஆகிய சிவவேடத்தால் பொலிவு பெற்று, யாவர்க்கும் மூல காரணமாய் நிற்கும் சிவபெருமானின் திருவைந்தெழுத்தை நா வணங்கி, ஓதி உரைப்பவராயின், அவர் திருவடிகளை நாளும் போற்றிவரும் பண்பினை உடையவர். இத்தகைய அரிய பண்பினரை,

     

    வெற்றவே யடியார் அடிமிசை வீழும்

      விருப்பினன் வெள்ளைநீ றணியுங்

    கொற்றவன் றனக்கு மந்திரி யாய

      குலச்சிறை குலாவி நின்றேத்தும்

    ஒற்றைவெள் விடையன் உம்பரார் தலைவன்

     

    என்றும்

     

    கணங்களாய் வரினுந் தமியராய் வரினும்

      அடியவர் தங்களைக் கண்டால்

    குணங்கொடு பணியுங் குலச்சிறை குலாவுங்

      கோபுரஞ் சூழ்மணிக் கோயில்

    என்றும் ஞானசம்பந்தப் பெருமான் தம் பதிகத்தில் மகிழ்ந்து குறிப்பிடுகின்றார்.

     

    தாம் பெருஞ் செல்வரும் பாண்டிய மன்னனுக்கு முதன்மந்திரியாய் இருந்தும், சிறிதும் செருக்கு உறாது, இச்சிவபுண்ணியத்தைச் செய்தமையால், சிவனிடத்தே மெய்யன்புடையர் என்பது தெள்ளிதிற் உணரப்படும்.

    நம் முன்னோர்கள் சிவனடியாரை சிவமாக எண்ணி வழிபடும் முறையை ஏற்றிப் போற்றி வந்தனர். ஆன்றோர் பெருமக்கள் இறைவனைச் சென்றடைய வழிபாட்டினை முத்திறமாக வகுத்தனர். அவை, சிவலிங்கத் திருமேனியையே சிவமாக எண்ணி வழிபடுதல், குருவையே சிவமாக எண்ணி வழிபடுதல், அடியார்களையே சிவமாகக் கருதி வழிபடுவது போன்றவை. இதனை குருலிங்க சங்கம வழிபாடு என்பர். இவ்வழிபாட்டில் சிவனடியார்களைச் சிவமாக எண்ணி வழிபடும் நெறியில் நின்றவர் குலச்சிறையார்.

    திருச்சிற்றம்பலம்

    Share
  • எல்லோர்க்கும் நல்லாண்டாய் இருபத்தியாறேவா!

    எல்லோர்க்கும் நல்லாண்டாய் இருபத்தியாறேவா!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    வெள்ளத்தின் வேதனை போக்கிடவே வா
    பள்ளத்தில் வீழ்ந்தோரை எண்ணியே வா
    உள்ளத்தால் உடைந்தோர்க்கு உயர் மருந்தாய்வா
    எல்லோர்க்கும் நல்லாண்டாய் இருபத்தி யாறேவா

    மண்ணுக்குள் புதையுண்டு மாண்டோரை நினைக்கும்
    மனவருத்தம் போக்கிடவே புத்தாண்டே வா
    மழையாலே அள்ளுண்டு வீடிழந்து நிற்பாரின்
    மனவருத்தம் போக்கிடவே புத்தாண்டே வா

    கும்பிட்ட கோவிலெங்கும் குளமாகி நிற்கையிலே
    நம்பிக்கை இழக்காமல் நாடினார் இறையிடமே
    இறைதூதர் வடிவிலே எங்கிருந்தோ வந்து
    உதவினார் குணம்போற்ற ஓடிவா புத்தாண்டே

    விளம்பரம் தோடாமல் விரைந்தோடி வந்து
    வீழ்ந்திருப்பார் இடம்பார்த்து தேவையினை அறிந்து
    உளமுவக்க உவந்திட்டார் உச்சிதொட்டு வாழ்த்துதற்கு
    புத்தாண்டே நீயும் புறப்பட்டு வந்துவிடு

    போரிடும் எண்ணம் புதைந்து விட வேண்டும்
    யாரிடமும் பகைமை கொள்ளாமை வேண்டும்
    சமத்துவமும் நீதியும் நிறைந்திடவே செய்யும்
    சாதுர்யம் மிக்க புத்தாண்டாய் மலர்க

    இருபத்து ஆறு எல்லோர்க்கும் நல்லதை
    ஈய்கின்ற ஆண்டாக இருந்திடவே வேண்டும்
    இன்னல் அகன்று எல்லோரும் நலமாய்
    இருக்கின்ற ஆண்டாக இறைவாநீ ஆக்கிடுவாய்

    நலமோங்க வேண்டும் வளமோங்க வேண்டும்
    நிலமீது யாவருக்கும் நிம்மதியே வேண்டும்
    அளவில்லா அருளுடைய ஆண்டவனே நீயும்
    அனைவர்க்கும் அருந்துணையாய் அமைந்துவிடு நாளும் !

    Share
  • சங்க இலக்கியத்தில் அணிகலன்கள்

    முனைவர் மூ. சிந்து
    இணைப் பேராசிரியர்
    தமிழ்த்துறை
    டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி ( தன்னாட்சி)
    காளப்பட்டி ரோடு
    கோயம்புத்தூர் – 641048

    முன்னுரை

    மனிதர்கள் தன்னை அடையாளம் காட்ட விழைவது இயற்கையாகும். ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய பொருளாதாரம் மற்றும் சூழலுக்கேற்ப உணவு, உடை, அணிகலன், ஆகியவற்றில் ஒப்பனைகளை ஏற்படுத்திக் கொள்வதை அவசியமாகக் கருதுகின்றனர்

    ”ஆடையில்லா மனிதன் அரை மனிதன்” “ஆள் பாதி ஆடை பாதி” என்பது நம் தமிழர் வழக்கு. ஆடைகளில் தன்னிறைவைக் கண்ட மனிதர்கள், அணிகலன்களை பூட்டி தங்களை அழகுபடுத்திக் கொள்கின்ற நிலைப்பாட்டினை இன்று ஆண், பெண் இருபாலர்களிடையேயும் காணமுடிகிறது.

    இன்றைய மகளிரைப் போன்றே சங்ககாலத்துப் பெண்களும் ஆடை அலங்காரங்கள், அணிகலன்கள், ஒப்பனைகள் முதலியவற்றில் மிகுந்த நாட்டம் கொண்டவர்களாகவும், விரும்பி அதனை அணிந்துகொள்ளும் குணம்  உடையவர்களாக இருந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

    அணிகலன்கள்

    அணி என்பது அழகு எனப் பொருள்படும். மகளிர் தன்னை அழகுப்படுத்தவும், அழகுக்கு மேலும் அழகு சேர்க்கவும் அணிகலன்களைப் பயன்படுத்தினர். நூலுக்கு அணி செய்வது போல ஒரு பெண்ணுக்கு  அணி செய்ய அணிகலன்கள் இன்றியமையாதாகும்.

    மலர்அணிகலன்கள்
    ‘ஆம்பல் வன்னித் தொடிக்கை மகளிர்’       (புறம். 63:12)

    பவளவளை செறிந்தாட் கண்பணித்தான் பச்சைக்
    குவளைப் பசுந்தண்டு கொண்டு’                   (பரி. 11:101-102)

    ஆம்பல், குவளை முதலியவற்றின் தண்டுகளால் மகளிர் வளையல் செய்து அணிந்ததை அறியமுடிகிறது.

    ‘கூந்தல் ஆம்பல் முழுநெறி அடைச்சி’                   (குறுந். 80:1)

    என்றும்

    “பரூஉப்பகை ஆம்பல் குருஉத்தொடை நீவிச்
    சுரும்பிமீர் ஆய்மலர் வேய்ந்த”                      (அகம். 136:27-28)

    எனும் பாடல் வரிகளில் ஆம்பல் மலர்களால் ஆன மாலையைக் கழுத்தில் அணிந்து கொண்டதையும், கூந்தலில் சூடியதையும் தெரிவிக்கிறது. மேலும் தாவரங்களினின்று உருவாக்கிய அணிகளைத் தவிர உலோகங்களால் செய்யப்பட்ட அணிகலன்களையும் சங்கப் பெண்டிர் அணிந்திருந்தமையை அறியமுடிகிறது.

    செயற்கை அணிகலன்கள்

    வணிகத் தொடர்புகளாலும், உலோகக் கண்டுபிடிப்புகளாலும்,  செயற்கை அணிகலன்கள் புழக்கத்தில்  வந்தன.

    “அணி, பூண், பணி, இழை, கலன், நகை, குழை, தொடி, வளை முதலிய சொற்கள் அணிகலன்களைக் குறித்து வழங்கப்படுவனவாக அமைந்துள்ளன” என்று வெ.வரதாராசன் அவர்கள் தமிழரின் ஒப்பனைக் கலைத்திறன் என்ற நூலில் கையாண்டுள்ளார்.

    சங்ககால மகளிர் தலையணி, நுதலணி, காதணி, கபத்தணி, தோளணி, மார்பணி, கையணி, விரலணி, இடையணி, காலணி எனும் பலவகை அணிகலன்களை உடலுறுப்புகளில் அணிந்தனர் என்பதையும் அறியமுடிகிறது.

    மகளிர் தன்னை அழகுபடுத்த அணிகளையும், அணிகளை அழகுப்படுத்த அதில் விதவிதமான இரத்தினங்களையும், கற்களையும், முத்து பவளங்களையும் பதித்து அணிந்து கொண்ட செய்திகளையும் சங்க இலக்கியங்களில் காணமுடிகிறது.

    “கைவல் வினைவன் தையுரு சொரிந்த
    சுரிதக உருவு”                                                        (நற். 86: 5-6)

    கைத்தொழிலில் வல்லவன் இரத்தினக் கற்கள் பதியப்பெற்று செய்த பொன்னாலாகிய சுரிதகம் என்னும் அணியை அணிந்த பெண்டிரைப்  பற்றி பூதன்தேவனார் மருதத்திணைப் பாடலில் எடுத்துரைத்துள்ளார்.

    “எறிமகர வலயம் அணிதிகழ் நுதலியர்”  (பரி.10-77)

    மகரலயம் எனும் நுதலணியைப் பற்றிப் (நெற்றியணி) பரிபாடல் கூறுகிறது.

    காதணிகள்

    புராணக் காலத்தில் ஒலைகளான அணிகளன்களும், சங்க காலத்தில் பூக்களால் ஆகிய அணிகலன்களும், உலோக அணிகளும் அணியப்பெற்றமையை அறியமுடிகிறது. பொன்குழை ஒண்குழை, கனங்குழை, சிறுகுழை, மகரக்குழை, கொடுங்குழை, தோடு ஆகியவற்றை காதணிகளாக சங்கப் பெண்டிர் அணிந்திருந்தனர்.

    “ஞாயலியர் மென்காதிற் புல்லிகைச் சாமனா”   (கலி. 96.11)

    புல்லிகை எனும் அணியும் காதணியையே குறிக்கும் என்பதை அறிய முடிகிறது.

    “கோழி பொறிந்த கொடுங்காற் கனங்குழை
     பொற்கார் புதல்வர் புரவியின் றுருட்டு
     முக்காற் சிறுதேர் முன்வழி விலக்கும்”                (ப.பாலை. 23-25)

    காவிரிப் பூம்பட்டினத்துத் தாய்மார்கள் கோழிகளை விரட்ட காதில் அணிந்த குழையைத் தூக்கி எறிந்ததைப் பட்டினப்பாலை பாடல் வழி அறியலாகிறது.

    கழுத்து அணிகலன்கள்

    கழுத்து அணிகலன்கள் என்பது கழுத்தில் அணியப்படுவது. இது தாலி, மாலை, அல்லது மதாணி (தொங்கல்) போன்ற பல்வேறு வடிவங்களில், தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களால் அமைந்ததாகும்.

    பொன்னாலாகிய காசுகளைக் கோர்த்து இழைக்கப்பெற்ற காசு மாலையைக் கழுத்தில் அணிந்ததையும்

    புதுநாண் நுழைப்பான் நுதிமாண் வள்ளுகிர்ப்
    பொலங்கல ஒருகா சேய்க்கும்                                              (குறு. 67:4)

    பொன்னொடு புலிப்பல் கோத்த புலம்பு மணித்தாலி             (அகம். 7:17-18)

    பொன்னொடு புலிப்பல் கோக்கப் பெற்ற தாலி அணிந்ததையும் அறிய முடிகிறது.

    கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம்
    பந்தர்ப் பெயர்க்கும் பன்மாண் ஏந்தெழில்                         (பதி. 67:1-2)

    அரசர்கள் ஏகவடம் என்னும் முத்து மாலைகளை அணிந்தார்கள். செல்வர் வீட்டுப் பெண்களும் அரசகுமாரிகளும், இராணிகளும் முத்துமாலைகளை அணிந்தார்கள். உரோம தேசத்து மகளிர் தமிழ்நாட்டு முத்துக்களைப் பெரிதும் மதித்தனர் என்ற செய்தியை மயிலை சீனி வேங்கடசாமியின் பழங்காலத் தமிழர் வாணிகம் என்ற நூலின் மூலம் அறியமுடிகிறது.

    தோள் அணிகலன்கள்

    ‘தொடி’ என்பது பழந்தமிழில் பெண்கள் அணியும் கைவளை அல்லது தோள்வளையைக் குறிக்கும் ஒரு அணிகலன் சொல் ஆகும். இது சங்கு, பொன் அல்லது பிற உலோகங்களால் செய்யப்படலாம். இலக்கியங்களில் இது பெரும்பாலும் ‘ஒள் தொடி’ (ஒளிமிக்க வளையல்) எனப் பெண்களின் அழகுக்கும் மென்மைக்கும் அடையாளமாகப் பயன்படுத்தப்படுகிறது.

    “ஒண்தொடி நெகிழ” (அகம். 265:9)

    “தொடிதோள் இலர்க”  (அகம். 269:1)

    எனும் ‘தொடி’ என்னும் அணிகலன் அணியப் பெற்றமையை அறியமுடிகிறது.

    மார்பணிகலன்கள்

    மார்பணி என்பது பொதுவாக மார்பில் அணியும் அணிகலன் (மதாணி, பூண்) அல்லது கவசத்தைக் குறிக்கும். இது ஒருவகை மார்புப் புண், தண்டனையாக மார்பில் தைக்கப்படுவதாகும்.

    வயங்கு கதிர் வயிரமோடு உறழ்ந்து, பூண் சுடர்வர,
    எழுமுடி கெழீஇய திரு ஞெமர் அகலத்து,                  (ப.ப 16:16,)

    பூண் அணிந்து எழிலிய வனைந்துவரல் இள முலை,
    மாண் வரி அல்குல், மலர்ந்த நோக்கின்,                    (ப.ப 65:6)

    என்ற வரிகள் அரசியர்  மார்பணி அணிந்தைமையை எடுத்துரைக்கிறது.

    பொலங்கலம் சுமந்த பூண் தாங்கு இள முலை              (அகம். 16:9)

    மன்னர்கள் மார்பணி அணிந்ததும், பரத்தையர்களாலும் அணியப் பெற்றதையும்  அகநானூறு  பாடல் வழி அறியமுடிகிறது.

    கை அணிகலன்கள்

    தமிழர் பண்பாட்டில் கை அணிகலன்கள் பாரம்பரியம் மற்றும் அழகைக் குறிக்கின்றன. வளையல், காப்பு, கைகளில் அணியப்படும் ஆபரணங்கள். இவை தங்கம், வெள்ளி, மற்றும் சங்கு போன்ற பொருட்களால் செய்யப்படுகின்றன.

    கைகளில் வளையல்கள் அணிவது சங்ககாலந் தொட்டே மங்கலமாகக் கருதப்பட்டது.

    “வல்லோன் வாளரம் ரு கோனோர் எல்வளை”              (நற்.78:8-9)

    வளையல்கள், கொடிகள், பூக்கள், வரிகள் ஆகிய தொழில்நுட்பத்தோடு செய்யப் பெற்றதைக் காணமுடிகிறது.

    “அணிவளை முன்கை ஆயிழை மடந்தெ                          (அகம் 361:4)
    “சின்னிரை வால்வளைக் குறுமகள்”                                               (குறுந் 189.6)

    “வளைக்கை விறலி
    வல்லோள் வானரம் பொருத
    கோணேர் எல்வளை அகன்தொடி செறித்த முன்கை”              (நற்.77:8-10)

    ஆகிய வரிகளின்றும் மகளிர் அனைவரும் (கணவனை இழந்தோர் தவிர வளையல்கள் அணிந்திருந்ததை அறியமுடிகிறது.

    பாண்டியன் நெடுஞ்செழியனின் மனைவி பாண்டிமா தேவி வலம்புரிச்சங்கு வளையல்களோடு பொன் வளையல்களையும் அணிந்திருந்ததை நெடுநல்வாடை கூறுகிறது.

    “பொலந்தொடி தின்ற மயிர்வார் முன்கை
    வலம்புரி வளையொடு கடிகை நூல் யாத்து”                   (நெடுநல். 141-142)

    திருமணத்தின் போது கொடுக்கப்படும் பரிசப் பொருட்களில் ஒன்றாக தமிழகத்தில் சங்கு வளையல்கள் இருந்துள்ளதை அறியமுடிகிறது.

    இடுப்பு அணிகலன்கள்

    “மேகலை” என்பது பெண்கள் தங்கள் இடுப்பில் அணியும் ஒரு வகை அணிகலன் அல்லது ஒட்டியாணம் ஆகும். இது இடையணி என்றும் அழைக்கப்படுகிறது,

    வகையமை மேகலை”                                                  (பரி.22:30)

    என்ற பரிபாடலும்

    “நேர்மணி நேர்முக்காழப் பல்பல கண்டிகைத்
    தார்மணி பூண்ட தமனிய மேகலை”                                    (கலி.96:10-15)

    என்ற கலித்தொகையும்

    “பொலம்பசும் பாண்டிய காசுநிரை அல்குல்”                   (ஐங்.310.1)

     என்று ஐங்குநூறும் இடுப்பில் அணியும் அணிகலன்களைக் கூறுகின்றன.

    “…. தெண்நீர்
    முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்தூற்று”             (நற்.110.45)

    தெளிந்த ஒளியுடைய முத்துக்களை உள்ளே பரலாக இட்டுச் செய்த பொற்சிலம்பை அணிந்த சிறு பெண்ணைப் பற்றி அறியமுடிகிறது.

    சிலம்பில் அணிகலன்கள்

    சிலம்பு பற்றிக் கூறும் சிலப்பதிகாரத்தில் மாதவி  அணிந்த அணிகலன்களாக விரலணி (கான்மோதிரம்), பரியகம் (கார்சவடி) நூபுரம் (சிலம்பு) பாடகம், சதங்கை. அரியகம் (பாதசாலம்) குறங்குசெறி (கவான்செறி. விரிசிகை, கண்டிகை (மாணிக்கவளை), கே தோள்வளை, சூடகம், கைவளை (பொன்வணா) பரியகம், (பாசித்தாமணி, கைச்சரி), வால்வளை (சங்கவளை, வெள்ளிவளை), பவழவளை, வாளைப் பகுவாய் மோதிரம், மணி மோதிரம், மரகத் தாள் செறி(மரகதக் கடைசெறி) சங்கிலி மறத்தொடரி. நுண்ஞாண் ஆரம், கயிற்கடை, யொகுழுகிய கோவை (பின்றாலி), இந்திர நீலக் கடிப்பிணை (நீலக்குதம்பை) தெய்வ வுத்தி (திருத்தேவி), வலம்புரி, தொய்யகம் (தலைப்பானை, பூரப்பாளை), புல்லகம் (தென்பல்லியும் வடபல்லியும்) என 27 வகை அணிகள் அணிந்திருந்ததாகச் சிலப்பதிகாரக் கடலாடுகாதை கூறுகின்றது. இவற்றுள் அடங்காத வேறு சில அணிகளும்  அக்காலத்திருந்தன. அவற்றுள் ஒன்று ஆடை அல்லது சூடாமணி, பெண்டிர் அரைப்பட்டிகை மட்டும் மேகலை, காஞ்சி, கலாபம், பருமம், விரிசிகை என ஐந்து வகையாக இருந்தமையையும் சிலப்பதிகாரம் வழி அறியமுடிகிறது.

    முடிவுரை

    • சங்ககாலப் பெண்டிர் இயற்கையானப் பொருட்களைக் கொண்டு அணிகலன்களாக அணிந்தனர்.
    • காலம் செல்லச் செல்ல வாணிகமும், தொழில் நுட்பமும் வளர்ச்சியடைந்த நிலையில் முத்து, பவளம், மாணிக்கம், மணி போன்ற பொருட்களைக் கொண்டு அழகுபடுத்தி அணிகலன்களை உருவாக்கினர்.
    • சிறந்த வகை அணிகலன்களை சங்ககால மக்கள் அணிந்திருந்தனர் என்பதை உணர முடிகிறது.
    • அணிகலன்கள் சங்ககால மக்களின் வாழ்க்கையோடு எல்லா நிலைகளிலும் இருந்தமையை தெளிவுற அறியமுடிகிறது.

    துணை நின்ற நூல்கள்

    1. சங்க இலக்கியத் தொகுப்பு – வர்த்தமானன் பதிப்பகம்.

    Share
  • வாழ்க வளமுடன் என்றுமே வாழ்த்திடுவோம் !

    வாழ்க வளமுடன் என்றுமே வாழ்த்திடுவோம் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    அழவைத்து வந்ததெலாம் அழவைக்க வைத்துவிடும்
    நிலமீது நிம்மதியை நித்தமுமே குலைத்துவிடும்
    கண்ணீரை வரவழைத்தால் கண்ணீரே முதலாகும்
    மண்மீது மற்றவரை வதைத்துவிடல் முறையல்ல

    ஏமாற்றிப் பறித்தால் எதுவுமே நிலைக்காது
    எக்கணமும் திருட்டு இருட்டையே காட்டிவிடும்
    பொய்யோடு களவென்றும் உய்யும்வழி காட்டாது
    உய்யும்வழி காண உண்மையாய் இருந்திடுங்கள்

    ஆசையில்லா  மனம் யாருக்குத் தானிருக்கு
    அவனியிலே வாழ்வார்க்கு ஆசைக்கோர் அளவில்லை
    ஆசையினால் விளைகின்ற அத்தனையும் விட்டுவிட்டால்
    அவனியிலே வாழ்க்கை ஆனந்தமாய் இருக்கும்

    திருமூலர் செப்பினார் பட்டினத்தார் பகர்ந்தார்
    நால்வரும் மொழிந்தார் நல்வழியும் சொன்னார்
    ஒளவையும் சொன்னார் ஆளுமைகள் பலசொன்னார்
    உள்ளத்தில் பதிக்காமல் இருந்திடுதல் முறையாமோ

    உறங்கினால் விழிப்போமா யாருக்கும் தெரியாது
    ஓராயிரம் கனவை உள்ளத்தில் சுமக்கின்றோம்
    வஞ்ச மனத்துடனே வாழ்வது முறையாமோ
    நஞ்சகற்றி வாழ்ந்தால் நாளுமே பேரின்பம்

    மனமகிழ வாழ்த்துவோம் வாஞ்சையுடன் அணைப்போம்
    தினமே நல்லதைத் தேர்ந்துமே செய்திடுவோம்
    புலனைந்தும் நன்னெறியில் போகவே வைத்திடுவோம்
    நலமுடைய நல்வாழ்வு நமைத்தேடி வந்துவிடும்

    வாழ்க வளமுடன் என்றுமே வாழ்த்திடுவோம்
    வளமோடும் நலமும் வாய்க்குமே எங்களுக்கு
    இனியவை என்றைக்கும் இன்பத்தையே கொடுக்கும்
    எல்லோரும் அன்பாலே இணைவதுதான் பேரின்பம் !

    Share
  • திருவெம்பாவையை எம் சிந்தையில் இருத்துவோம் !

    திருவெம்பாவையை எம் சிந்தையில் இருத்துவோம் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் 
    மெல்பேண், ஆஸ்திரேலியா 

    உலகில் பல மொழிகள் ஒவ்வொரு விதத்திலும் சிறப்பினை உடையதாய் விளங்குகின்றன என்பது தான் பொதுமையான கருத்தாகும். இவற்றுள் எங்கள் தாய் மொழியான தமிழ் ஒன்றேதான் பக்தியைப் பாடிக் கொண்டாடிய மொழி என்பதும் மிக மிகச் சிறப்புடையதாகும். தமிழ் என்றால் பக்தியின் மொழி என்று துணிந்து கூறலாம். அந்தளவுக்கு பக்தியை இலக்கியம் ஆக்கிய பெருமை எங்கள் தமிழ் மொழிக்கு மட்டுமே உரித்தான தாகும் என்று உரத்தே உரைக்கலாம். பக்தியை இலக்கியம் ஆக்கியமையால் பண்கசிந்த தமிழும், பக்குவத் தமிழும், பாடிப் பரவிடும் தமிழும், இன்னிசைத் தமிழும், இயைய வைக்கும் இங்கிதத் தமிழும் எமக்கு பெரும் பொக்கிஷமாகக் கிடைத்தன என்பதை மனமிருத்துவது மிகவும் முக்கியமாகும். சைவமும், வைணவமும், பக்தி இலக்கியத்திக்கு வழங்கிய பெருங்கொடைகள் – தமிழை யாவரும் வியந்தே பார்த்திட வைத்திருக்கிறது. அந்த வகையில் மார்கழியில் மனம் அமரும் வகையில் – வாசகர் மணித் தமிழும், கோதையின் கொஞ்சு தமிழும் கொண்டாடிப் போற்றும் வகையில் மலர்ந்திருக்கிறது என்பது மனக்கொள்ளத்தக்கது.

    மணிவாசகப் பெருமான் தமிழ் மனத்தை உருக்கிட வைக்கும் தமிழ் .சினத்தை அகற்றிட வைக்கும் தமிழ். சிந்தனையைத் தூண்டுந் தமிழ். சிவனை நினைந்து நெக்குருக வைக்குந் தமிழ். தாழ்வாய் உரைத்து தலை வணங்குந் தமிழ். இத்தகு தமிழால் எட்டா நிலையில் இருக்கும் எம்பொருமானை இயம்பிடும் வகையில் எட்டாந் திருமுறையாய் அமைந்து ஏற்றிப் போற்றப்பட்டுக் கொண்டிருக்குந் தமிழ். திருவாசகம் என்னும் தேன்தான் அந்தத் திருமுறைத் தமிழ். அந்தத் திருவாசகத்தில் ஒன்றாய் அமைந்திருப்பதுதான் மார்கழியில் மனமமரும் வாசகரின் திருவெம்பாவை என்னும் திவ்விய தமிழாகும். திருவண்ணாமலையில் மணிவாசகரால் மனமுருகிப் பக்திப் பெருவெளியில் உற்ற துணையாக வந்தமைந்த தமிழ்தான் திருவெம்பாவை என்னும் சிறப்புடைத் தமிழ் எனலாம்.

    “ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெருஞ் சோதி” – என்றுதான் மணிவாசகர் திருவெம்பாவையினைத் தொடங்குகிறார்.  “போற்றி என் வாழ்முதல் ஆகிய பொருளே” என்று நிறைவு செய்கின்றார். இருபது பாடல்கள் இறையினைப் பற்றியும், அவரின் இயல்பினைப் பற்றியும், இறையினைத் தொழுதிடும் அடியவர் மனநிலை பற்றியும், இறையடியார்கள் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக் கூடாது, என்பதைப் பற்றியும் பக்குவமாய் காட்டுகின்றார். அதற்காக அவர் பாவைப்பாட்டு என்னும் சங்கத்தமிழ் வழியில் பயணப்படுவதையும் காண்கின்றோம்.

    திரு + எம் + பாவை என்பது திருவெம்பாவை ஆகும். தெய்வத்தை நோக்கிய பக்தி நிலையில் நின்று பாடும் பாடல்கள் என்பதே இதன் அர்த்தம் எனவும் கொள்ளலாம். ஒவ்வொரு பாடலின் முடிவிலும் “ஏலோர் எம்பா வாய்” என்றே முடிகின்றதைக் காண்கின்றோம் இதனைப் பாவைப் பாட்டு என்றும் நீராட்டுப் பாட்டு என்றும் குறிப்பிடுவார்கள். இளம் பெண்கள் தங்களுக்கு நல்ல கணவர் அமைய வேண்டும் எனக் கருதி மார்கழி மாதத்தில் நோன்பு நோற்பது வழக்கம். இந்தப் பெண்கள் அதிகாலை எழுந்து இறைவனது புகழைப்பாடி நீராடச் செல்லும் போது “திருவெம்பாவை” பாடல்களைப் பாடிச் சென்றுள்ளனர் என்பதையே இங்கு நாம் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

    முதல் நான்கு பாடல்களும் அதிகாலையில் நீராடப் புறப்பட்ட பெண்கள் இன்னும் நித்திரைவிட்டு எழாத தமது தோழியரை எழுப்புவதாக, அதற்கு அப்பெண்ணானவள் மறுமொழி கூறுவதாகவும் அமைந்திருக்கின்றது. ஐந்தாம் பாடல் தொடக்கம் எட்டாம் பாடல் வரை உள்ளன நித்திரைவிட்டெழும் பெண்கள் கூறும் விதமாக இருக்கின்றன. ஒன்பதாம் பாடல் முதல் இருபதாம் பாடல் வரை நித்திரை கலைந்த பெண்கள் இறைவனைத் துதித்துப் பாடும் வகையில் அமைந்திருக்கின்றன.

    மார்கழியில் அதிகாலை நீராடப் போகும் பெண்கள், ஒருவரை ஒருவர் எழுப்பி ஒன்றாய் கூடி நீராடும் காட்சியை உள்ளடக்கி, அவர்கள் வாயிலாக இறை புகழை, இறை தத்துவத்தை, இயம்பும் வகையில் திருவெம்பாவையினை மணிவாசகப் பெருமான் பக்திப் பாமாலை ஆக்கி இருக்கிறார். காலைப் பொழுது அற்புதமாய் காட்டப்படுகிறது. பெண்களின் இயல்பான உரையாடல் பக்தியுடன் இணைந்து பயணிக்கிறது.

    பெண்கள் ஒருவரை ஒருவர் விழிக்கும் வார்த்தைகள் எம்மை யெல்லாம் விழிக்கவும் வைக்கின்றன. நீராடுதல், நித்திரை விட்டெழுமாறு செய்தல், யாவும் சாதரணமாய் தெரிந்தாலும் அதற்குள் ஆத்ம தத்துவம், ஆத்ம ஈடேற்றம், அனைத்தும் அணைந்தே இருக்கிறது என்பதை அனைவரும் அகம் இருத்துவது அவசியமாகும்.

    சமயத்தை, தத்துவத்தை, ஆன்ம ஈடேற்றத்தை, மக்கள் மனத்தில் பதியச் செய்வது என்பது இலகுவான செயல் அன்று. ஞானவான் ஆகிய மணிவாசகப் பெருமான் இவற்றை மனத்தில் நன்றாய் பதித்த காரணத்தால் யாவருக்கும் பயனை நல்கும் வண்ணம் தேர்ந்தெடுத்த நல்வழியாகவே திருவெம்பாவை யினை அணுகுதல் பொருத்தமாகும். பெண்கள் மார்கழியில் அதிகாலையில் நீராடச் செல்வதை மனமேற்றினார் மணிவாசகர். பாவை நோன்பினை பெண்கள் நோற்பதையும் மனமிருத்தினார். இவையனைத்தையும் தன் சிந்தனைக்குள் இருத்தியே திருவெம்பாவையினைப் பாடினார் என்பது தான் பொருத்தமுடையதாகும்.

    மார்கழி நீராடப் போகும் இளம் பெண்களை இறைவன் புகழினை எடுத்தியம்பிட வைக்கிறார். நீராடச் செல்பவர்கள் தங்கள் தோழிகளை அவரவர் வீட்டு வாசலில் நின்று துயில் எழுப்புவதாய் திருவெம்பாவை யினை எமக்கெல்லாம் வழங்கி இருக்கிறார் மணிவாசகப் பெருமான்.

    “ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதி”

    “அத்தன் ஆனந்தன்”

    “தேவன் சிவலோகன்”

    “மாலறியா நான் முகனும் காணா மலையினை”

    “ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்”

    “என்னானை என் அரையன் இன்னமுது என்று எல்லோமும் சொன்னோம் கேள்”

    “கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை”

    “முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே – பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே”

    “விண்ணுக் கொரு மருந்தை வேத விழுப் பொருளை”

    “இவ்வானும் குவலயமும் எல்லோரும் – காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி”

    “வேதப்பொருள் பாடி அப்பொருளாம் மாபாடி
    சோதி திறம்பாடி சூழ்கொன்றைத் தாழ்பாடி
    ஆதி திறம்பாடி அந்தமாம் மாபாடிப் பேதித்து”

    “விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக் – கண்ணார் அமுதமுமாய் நின்றான்”

    “போற்றியென் வாழ்முதல் ஆகிய பொருளே”

    என்று நீராடப் போகும் பெண்கள் வாயிலாக பரம்பொருளின் நிலையினை, பரம்பொருளின் வியாபகத் தன்மையை, பரம் பொருளின் பேராற்றலை, பரம் பொருளின் கருணையின் விசாலத்தை எல்லாம் மணிவாசகப் பெருமான் திருவெம்பாவைப் பாடல்கள் வாயிலாய் எமக்கெல்லாம் உணர்த்தி நிற்கிறார்.

    ஆதியும் அந்தமும் இல்லா அந்த அருப்பெருஞ்சோதியை பாடுவோம், பரவுவோம், பக்குவமாய் மனத்தில் பதிப்போம் என்று நீராடச் செல்லும் மகிளிர் வாயிலாக நல்ல தொரு நற்சிந்தனைப் பாடத்தைப் பக்தியுடன் பதிக்க விடுகிறார் மணிவாசகப் பெருமான் திருவெம்பாவை வாயிலாக எனலாம்.

    திருவெம்பாவைப் பாடல்களை மார்கழியில் ஆலயங்களில் அதிகாலை பாடுவதை நாம் அனைவரும் அதாவது சைவர்கள் கேட்டிருக்கிறோம். நாமும் கூடப் பாடியும் இருக்கிறோம். பாடும் வேளை அதன் பொருள் தெரிந்து பாடுவார் ஒரு சிலரே. மற்றவர்கள் இசையுடனோ அல்லது இசையின்றியோ பாடிவிடுவார்கள். பொருளை விளங்கிப் பாடினால் கிடைக்கும் பயனோ மிகப் பெரிது. இதனால்த்தான் “பொருள் உணர்ந்து சொல்வர் செல்வார் சிவனடிக் கீழ்” என மொழிந்ததை இனியாவது மனமிருத்துவது யாவருக்கும் பயனே.

    துயில் கொள்ளும் தோழியரைத் துயிலெழுப்பி நீராட அழைக்கும் பெண்கள் இறைபுகழைப் பலவாறு பாடுவதாய் திருவெம்பா அமைந்திருக்கிறது. அப்படி அழைக்கும் பெண்கள் கிண்டலாயும், கேலியாயும்,   தமக்குள் பேசுவதையும் திருவெம்பாவையில் காணலாம். சிரிக்கிறார்கள், சீறுகிறார்கள், சிந்திக்கவும் செய்கிறார்கள். ஆனாலும் தங்கருத்தான இறையின் முக்கியத்தைவத்தை மட்டும் விட்டு அகலாதே, மிகக் கவனமாகவே மொழியும் பக்குவத்தை நாமனைவரும் மனமிருத்துதல் அவசியமாகும். இப்படியான ஒரு பக்குவத்தை காட்டும் இயக்குனராய் மணிவாசகப் பெருமான் விளங்குகிறார் என்பதையும் மனமிருத்துதல் வேண்டும்.

    “மாதே வளருதியோ” , “வன் செவியோ நின் செவிதான்”, மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த் தொலிகள் வீதியெங்குமே ஒலிக்கிறதே இன்னுமா உனக்குக் கேட்கவில்லை என்னும் நிலை மிகவும் முக்கிய நிலையாகும். கேட்காத காது , விழிக்காத விழிப்பு இருந்தும் என்ன பயன்? உலக மாயையில் உழலுவதால்   உயர் பொருளான அந்தப் பரம்பொருள் பற்றிய வார்த்தைகளை உன் காது ஏற்க மறுக்கிறது. உலக மாயை உன்னை இறுகப் பற்றிக் கொண்டுள்ளதால் உன்னால் விழிப்படைந்திட முடியாமலே இருக்கிறது. என்னும் உயரிய தத்துவமே இங்கு உணர்த்தப்படுகிறது. நித்திரை எழும்பாத தோழியரை எழுப்பிட முயலுகிறார்கள் மற்றையப் பெண்கள் என்பதுதான் மேலோட்டமாய் நாமனைவரும் எடுத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஓர்ந்து உணர்ந்தால் உயர் பொருள் உள்ளம் அமரும்.

    ஆண்டாள் திருப்பாவையில் தன்னைக் காட்டும் பாங்கு வேறு. மணிவாசகர் திருவெம்பாவையில் தன்னைக் காட்டும் பாங்கு வேறு. ஆண்டாள் திருமாலை தன் கணவனாக்க முயலுகின்றாள்.தான் எப்படியும் திருமாலின் அருகமர்ந்து மனைவியாய் இருக்கவே மன்றாடி நிற்கிறாள். அதுவே அவளின் உள்ளடக்கிடக்கையாகி திருப் பாவையாய் மலர்கிறது. ஆனால் மணிவாசகர் காட்டும் பாங்கு சிவனடியாரே தங்களுக்குக் கணவராய் வாழ்வு க்குத் துணையாய் ஆகிட வேண்டும் என்று – பெண்கள் பாடிப் பரவுதாகக் காட்டுவ தேயாகும். மணிவாசகர் இல்லறைத்தைத் துறந்த பெருஞானி.

    உற்றாரை யான் வேண்டேன்
    ஊர் வேண்டேன் பேர் வேண்டேன்
    கற்றாரை யான் வேண்டேன்
    கற்பனவும் இனி அமையும்
    குற்றாலத்து அமர்ந்து உறையும்
    கூத்தா உன் குரை கழற்கே
    கற்று ஆவின் மனம்போலக்
    கசிந்து உருகி வேண்டுவனே!

    இதுதான் அவரின் நிலை. அதனால் அவர் ஆண்டாள் மனநிலைக்கு எப்பொழுதுமே வரமாட்டார். அதனால்த்தான் திருவெம்பாவையினை தானாய் நிற்காமல் இளம்பெண்கள் மூலம் இறையின் நிலையினை,  ஆன்ம தத்துவத்தை சொல்ல விளைந்தார் என்றுதான் எண்ண முடிகிறது. ஆண்டாள் முப்பது பாடினார். மணிவாசகர் இருபது பாடல்களே பாடினார். அதற்குள்ளும் ஒரு தத்துவம் உலகியலோடு இணைகிறது. பெண்களின் உடற்கூறு இங்கு மணிவாசகருக்கு விளங்கி இருக்கிறது. ஆனால் பெண்ணாய் இருந்தும் ஆண்டாள் ஏன் முப்பது பாடல்கள் பாடினார் என்பது அந்தத் திருமாலுக்கு மட்டுமே தெரியும் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    திருவெம்பாவையில் சக்தியின் தத்துவமும் வெளிப்பட்டு நிற்கிறது. பாவை நோன்பின் அடிப்படையே சக்தியை முன்னிறுத்துவதேயாகும். சக்தியே “பின்ன மிலான் எங்கள் பிரானாய்”, “பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளை”, ஆதியும் அந்தமும் இல்லா அந்த அரும் பெருஞ்சோதிக்குள் அப்பனும் அம்மையுமாய் அந்தப் பரம் பொருள் இருக்கிறது என்பதை மணிவாசகப் பெருமான் திருவெம்பாவை வாயிலாக எமக்கெல்லாம் உணர்த்தி நிற்கிறார்.

    திருவெம்பாவையை மார்கழியில் பாடுவதற்காய் மணிவாசகப் பெருமான் வழங்கி இருந்தாலும் அதனூடாய் – ஆன்மீக வெளிப்படுகிறது. ஆத்மஞானம் வெளிப்படுகிறது. இறைவனை மனதிருத்திப் பாடினால் மாநிலம் செழிக்கும், மழைவளம் மிகும், மழைவளம் மிகுந்தால் மக்கள் மனவளம் சிறக்கும். மனவளம் சிறந்தால் மாதேவன் மனமதில் அமர்வான். மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி வையகம் எங்கும் பரவிடும் அல்லவா. திருவெம்பாவையினைப் படிப்போம் எம் சிந்தையில் இருத்துவோம் !

    Share
  • பல்லழகன் – பகுதி – 14

     

     

    திவாகர்

     

    கோம்டி கொஞ்சம் யோசனை செய்துவிட்டு பேப்பரை எடுத்துக்கொண்டு குறிப்புகள் எழுதிக் கொண்டாள். பிறகு தன் கைப்பையோடு எதிர்வீடான கல்யாண் வீட்டுக்குக் கிளம்பினாள். அவள் அம்மா எதிரே வந்தாள்.

     

    “ஏண்டி கோமதி? இன்னிக்கும் கிலினிக் பங்க் அடிக்கப் போறியா?”

     

    “பாக்கலாம்மா.. எதிர்வீட்டுக்குதான் போறேன்.. வேலை இல்லேன்னா வந்துடறேன்.. ஆனாலும் என்ன உனக்குக் கிலினிக்லேர்ந்து கலக்ஷன் வந்துடறது இல்லே..”

     

    “அது சரிடி.. அந்த கல்யாண் போட்டோவை ஏண்டி இங்க க்லினிக்ல மாட்டி வெச்சுருக்கே..”

     

    “கல்யாண் போட்டோவை கல்யாண்னு ஏன் பாக்கறே? அவன் பல்லைப் பாரும்மா.. பல் ஆஸ்பத்திரிக்கு பல்லழகன் போட்டோ இல்லையேன்னு தேடிண்டிருந்தேன்.. இவன் மாட்டினான். இப்பதான் கிலினிக்குக்குக் களையே வந்திருக்கு.”

     

    “ஆனாலும் ரொம்ப மோசம்டி நீ.. சீக்கிரம் வந்து சேரு.”

     

    கல்யாண் வீடு. சுந்தர் கையைப் பிசைந்துகொண்டே உட்கார்ந்திருக்கிறான். கல்யாண் முகம் சற்று கோபமாக இருப்பதை அங்கு வந்த கோம்டி பார்க்கிறாள்.

     

    “என்ன கல்யாண்.. இவர் என்ன சொல்றார்.. ஏதாவது புதுத் தகவல் கொடுக்கிறாரா? அது சரி, இன்னிக்கு வொர்க்கிங்க் டே ஆச்சே.. ஆஃபீஸ் இருக்குமே.. ரொம்ப பிஸியான ஆளாச்சே..”

     

    அவளின் கிண்டல் வார்த்தைகள் புரிந்தாலும் அவன் ஒன்றும் பதில் சொல்லவில்லை. கல்யாண் பேசினான்.

     

    “கோம்டி! இன்னிக்கு இன்ஸ்பெக்டர் மோகன் இவனை ஸ்டேஷனுக்கு வரச் சொல்லி இருந்தாராம். போயிருக்கான். (சுந்தரைப் பார்த்து) சுந்தர்! நீயே சொல்லுடா அங்க என்ன நடந்ததுன்னு.”

    சுந்தர் ஸ்டேஷனில் நடந்ததை விவரிக்கிறான்.

     

    போலிஸ் ஸ்டேஷன்

    இன்ஸ்பெக்டர் மோகன் சாந்தமாகத்தான் விசாரிக்கிறார்.

     

    “மிஸ்டர் சுந்தர்.. நீங்க முதல்ல உங்களை விசாரிக்கறச்சே உங்க மாமாவை கொலை செஞ்ச நாள்லேர்ந்து ஒரு வாரம் முன்னாடி வரைக்கும் பார்க்கலேன்னு சொன்னீங்க.. ஆனா அவர் கார்ல நீங்க அந்தக் குழந்தைங்க ஆசிரமத்துக்கு கொலை நடந்ததுக்கு இரண்டு நாள் முன்னாடி அழைச்சிட்டு வந்ததாக அந்த ஆசிரமம் மேனேஜர் தகவல் கொடுத்திருக்கார். பாலபாலிகா ஆசிரமம் இல்லையா அத்தோட பேரு. இதை ஏன் எங்களுக்குச் சொல்லலே?”

     

    சுந்தர் அசரவில்லை. அவனும் நிதானமாகவே பதில் சொன்னான்.

    “கரெக்ட்தான் சார். ஆனா எங்க மாமா எங்கிட்ட ஒரு சத்தியம் வாங்கி இருக்காரு சார். அதாவது பாலபாலிகா ஆசிரமத்துக்கு அவர் நிறைய நிதிஉதவி பண்றார் சார். ‘இதை ரகசியமா வெச்சுக்கணும்டா சுந்தர்.. தருமகாரியமெல்லாம் வெளியில தம்பட்டம் அடிச்சுக்கக்கூடாது. ஒரு கை செய்யறது இன்னொரு கைக்குத் தெரியக்கூடாது.. அதனால யார்கிட்டயும் எந்த சமயத்துலயும் சொல்லக்கூடாதுடான்னு சத்தியம் வாங்கினார். நான் தர்மகாரியம் பண்றது ஊருலகத்துக்குத் தெரியணுங்கறது அவசியம் இல்லடா.. அதனாலதான் சொல்றேன்.’ அப்படின்னார். நீங்க சொல்லுங்க இன்ஸ்பெக்டர்.. நான் சத்தியத்தை மீறமுடியாம அப்படி சொன்னேன். ஆனா இதுல ஒண்ணும் பெரிய பொய்யோ அல்லது பெரிய விஷயமே இல்லையே சார். அதனாலே நானும் பெரிசா எடுத்துக்கலே.”

     

    “சரி, உங்களுக்குப் பெரிய விஷயம் இல்லேதான் சார். ஆனா கொலைங்கிறது ரொம்பப் பெரிய விஷயம்.”

     

    சுந்தர் கெஞ்ச ஆரம்பித்தான்.

     

    “சார் அது பெரிய விஷயம்தான் சார்.. ஆனா என் நிலைமையைப் பாருங்க சார்.. மாமா சத்தியம் வாங்கினது எப்படி எல்லார் முன்னாடியும் சொல்லறதுன்னு தெரியலே.. அதனால அந்த சமயத்துல அப்படிச் சொல்லிட்டேன்.”

     

    “ஏன் மிஸ்டர் சுந்தர்.. தரும காரியத்தை வெளில சொல்லறதுல என்ன இருக்கு? போகட்டும்.. நீங்க எத்தனை மணிக்கு அங்க போனீங்க? எத்தனை மணிக்கு அவரை வீட்ல விட்டுட்டு அவர் காரை எடுத்துப் போனீங்க எங்கிற விவரமெல்லாம் ஒரு ஸ்டேட்மெண்ட் எழுதிக் கொடுங்க.. ஆசிரமம் விஷயம் தவிர வேற எங்கேயாவது போனீங்களான்னு கூட அதையும் எழுதுங்க. அதாவது நீங்க சம்பந்தப்பட்டது, அல்லது வேற யார் சம்பந்தப்பட்டதா இருந்தாலும் எழுதுங்க.. அப்பறம் உங்களுக்கு யார் மேலேயாவது சந்தேகம் இருக்கா?”

     

    “ஸார்.. எனக்கு யார் மேலயும் சந்தேகம்லாம் இல்லே சார்..”

     

    “சரி, அன்னிக்குக் காலைல வைத்தீஸ்வரன் கோயில் போனேன்னு சொன்னிங்க இல்லையா.. இங்கிருந்து எத்தனை மணிக்குக் கிளம்பினீங்க.. உங்களுக்கு எத்தனை மணிக்கு கொலை பத்திய முரளி கால் வந்தது வைத்தீஸ்வரன் கோயிலிலேர்ந்து எத்தனை மணிக்குக் கிளம்பினீங்க.. இந்த டீடெயிலும் ஸ்டேட்மென்ட்ல கொடுத்துடுங்க..”

     

    சுந்தர் எழுதிக்கொடுத்து வந்தான்.

     

     

    கல்யாண் வீடு

     

    அதை வீட்டுக்கு வந்து கல்யாணிடம் சொல்லுகையில் அவனுக்குக் கோபம் வந்தது. இந்த விஷயத்தை ஏன் முன்னமே தன்னிடமோ இல்லை கோம்டிக்கோ சொல்லவில்லை என்று கோபமாக சொல்லிக் கொண்டிருந்தான்.

     

    “சுந்தர் போலீஸ் ஸ்டேஷன் வந்தது பற்றி இன்ஸ்பெக்டர் மோகன் என்னிடம் பேசினார் கல்யாண். இவர் கொடுத்த ஸ்டேட்மென்ட் விஷயம்லாம் எனக்குத் தெரியும். இன்ஸ்பெக்டர் எங்கிட்டே என்ன கேட்டார்னு எவ்வளோ தூரம் சுந்தரோட ஸ்டேட்மென்ட் உண்மைன்னு விசாரிக்கணும்னு சொன்னார். நானே இன்னிக்கு சாயந்திரம் இவர் ஆஃபீஸுக்குப் போகலாம்னு இருந்தேன். எனிஹவ், நீங்க இங்கே வரவழைச்சது கூட நல்லதுதான். ஏன்னா இங்கதானே கொலை நடந்தது?”

     

    சுந்தர் கோபமாகப் பார்த்தான்.

    “அப்போ நான் இந்தக் கேஸுல இன்வால்வ் ஆகியிருக்கேன்னு சொல்லறிங்களா மேடம்.?. நான் உங்கள்ட்ட கொஞ்சம் மாத்திச் சொன்னது உண்மைதான். ஆனா மாமா எங்கிட்டே சத்தியம் வாங்கினதாலே இதெல்லாம் வெளியே சொல்லமுடியலே.”

     

    அவள் சிரித்தாள்.

    “என்ன சுந்தர்.. வெளியே சொல்ல வெட்கப்படவேண்டிய விஷயமா இது? உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லட்டுமா.. நீங்க ஆரம்பத்திலேர்ந்து அதிகம் பொய்தான் பேசறிங்க..  அதனால உங்க மேலே சாதாரணமாகவே இன்ஸ்பெக்டருக்கு ஏற்பட்ட மாதிரி எனக்கும் சந்தேகம் ஏற்படுது..”

     

    “பொய்யா.. அப்போ நான் சொன்னது எல்லாமே பொய்னு குற்றம் சொல்லறிங்களா.. கல்யாண்! அநியாயம்டா இது!”

     

    “ஏண்டா  ஏற்கனவே பொய் சொல்லிதானே இப்போ வரைக்கும் மாட்டிண்டு இருக்கே? இதோ பார்.. எனக்கு உண்மை தேவை. அதனால இன்ஸ்பெக்டருக்கும் கோம்டிக்கும் ஏற்படற அதே சந்தேகம் எனக்கும் இருக்குடா..”

     

    கோம்டி புன்னகையை விரிவு செய்தாள்.

    “சரி, கொலை நடந்த அன்னிக்கு நீங்க எங்க இருந்தீங்க?”

     

    “நான் உண்மையைத்தான் சொல்லறேங்க.. நான் வைத்தீஸ்வரன் கோயில்லதான் இருந்தேன். மாமா காருலதான் போனேன்.”

     

    “சரி, அதுக்கும் முதல் நாள் அதாவது கொலை நடந்ததுக்கு முதல் நாள் எங்க இருந்தீங்க?”

     

    “மாமா கார் சர்வீஸ்க்கு விட்டுட்டு ஆஃபீஸ் போனேங்க.. மறுபடியும் மத்தியானம் கூட அங்கேதான் போனேன். அவங்க கொடுத்த சர்வீஸ் ரசீது கூட கார் உள்ஷெல்ஃப்ல வெச்சுருக்கேன். நீங்க வேணுமின்னா செக் பண்ணிக்கலாம்”

     

    ரவியிடம் திரும்பினாள்.

    “ரவி அந்த சர்வீஸ் ரசீதைக் கொஞ்சம் எடுத்துவரமுடியுமா?” என்று கேட்டவள் அவனருகே காதில் இன்னொன்றையும் சொன்னாள்.

     

    “சரி, கார் சரியாக சர்வீஸ் பண்ணாங்களா.. மிஸ்டர் சுந்தர்?”

     

    “அடுத்த நாள் ரொம்பதூரம் போயிட்டு வரணுமேன்னு ஒரிஜினல் சர்வீஸ் டீலர்கிட்டே விட்டுட்டுதான் நானும் நல்லாவே சர்வீஸ் பண்ணனும்னு சொன்னேன். வண்டி சூபரா இருந்தது.”

     

    “ஓகே மிஸ்டர் சுந்தர்.. கொலை நடந்த நாளுக்கு முதல் நாள் காரை சர்வீஸுக்கு விட்டீங்க. அதுக்கும் முதல் நாள்தான் கந்தசாமியை அழைச்சிண்டு பாலபாலிகா ஆசிரமம் போனீங்க இல்லையா?!”

     

    “ஆமா.. ஆமா.. நீங்க சொல்லறது அப்படியே கரெக்ட்..”

     

    “இதையும் ஸ்டேட்மென்ட்ல எழுதி போலீஸுக்குக் கொடுத்தீங்க இல்லே?”

     

    “ஆமா.. அவங்க எல்லாத்தையும் கேட்டாங்க.. எதுக்கு வம்புன்னு கார் சர்வீஸ் ஒரு சில்லி மேட்டர்னா கூட அதையும் சேர்த்துதான் ஸ்டேட்மெண்ட்ல எழுதினேன்.”

     

    ரவி உள்ளே வருகிறான். கையில் உள்ள பேப்பரை கோம்டியிடம் தருகிறான்.

     

    “சுந்தர் சொன்னது உண்மைதான் கார் சர்வீஸ் பண்ணது வாஸ்தவம்தான். ரசீதை நல்லா பாரு கோம்டி.” என்று ஒரு நம்பரைக் காண்பித்தான்.

     

    “மிஸ்டர் சுந்தர்.. இப்பதான் சொன்னீங்க.. கார் சர்வீஸ்லாம் சில்லி மேட்டர்தான்.. இருந்தாலும் போலிஸ் ஸ்டேட்மென்ட்ல அப்படியே அதைப் பத்தியும் எழுதியிருக்கேன்னு.. ஆனா மிஸ்டர் சுந்தர்.. கார் சர்வீஸ் மேட்டர் சில்லி மேட்டர் இல்லன்னு நான் சின்ன ப்ரூஃப் தரட்டுமா? நீங்க எதையுமே சீரியஸா எடுத்துக்கலே..”

     

    சுந்தர் பயந்தான் சற்று. அவளை பரிதாபமாகப் பார்த்தான். அவள் குரல் கொஞ்சம் கடுமையாக வந்தது.

     

    “சென்னைலேர்ந்து வைத்தீஸ்வரன் கோயில் போயிட்டு வர கிட்டதட்ட 500 கி.மீட்டராவது ஆகும் இல்லையா.. ஆனா இந்தக் கார் இப்போ வரைக்கும் அதாவது சர்வீஸ் பண்ண தினத்திலேர்ந்து இன்னிக்கு இப்போது வரைக்கும் இந்த ஒரு வாரத்துல நூறு கிலோ மீட்டர் கூட ஓடல. இத்தனைக்கும் இந்தக் காரை நேத்து ஒரு தடவை கல்யாண் யூஸ் பண்ணி முப்பது கிலோமீட்டராவது போயிருப்பாரு.. சர்வீஸ் பண்ணின போது உங்க கார் ஸ்பீடோ மீட்டர்ல உள்ள கார் ரன்னிங்க் ரீடிங்க் இந்த ரசீதுல பேனால அழகா தெளிவா எழுதியிருக்கான். அந்த ரீடிங்க்லேர்ந்து நூறு கிலோமீட்டர் கூட அதிகமா இந்த கார் ஓடலேன்னு இப்போ கல்யாண் கார்ல பார்த்த அதே ரீடிங்க் மார்க் சொல்லுது. ஸோ நீங்க கொலை நடந்த அன்னிக்கு வெளிலே ரொம்ப தூரம்லாம் போகலே.. ஆனா அப்படி போனா மாதிரி பொய் ஸ்டேட்மென்ட் போலீஸ்கிட்ட கொடுத்திட்டு அதையே எங்க காதுலயும் சொல்லி போலீஸுக்குக் கொடுத்த பூவையும் எங்களுக்கும் சேர்த்தே சுத்தியிருக்கீங்க.. நீங்க இனிமேயும் பொய் சொல்லாம உண்மையை சொன்னீங்கன்னா நீங்க எப்படி தப்பிக்கலாம்னு வழியை நாங்க சொல்லுவோம். இல்ல.. முயலுக்கு மூணு கால்தான்னு முரண்டு பிடிச்சீங்கன்னா இதோ இப்படிப்பட்ட ப்ரூஃப் உங்களை அழகாக் காட்டிக் கொடுத்துடும். ஏற்கனவே உங்கமேல சந்தேகத்துல இருக்கற போலீஸ்கிட இந்த மாதிரி சின்ன விஷயம் ப்ரூஃபா கிடைச்சிடுச்சுன்னா அதை வெச்சுண்டு அவங்க அடிக்கற அடியில நீங்கதான் கொலையாளிங்கறதும் அவங்க  வெளிக்கொண்டு வந்துடுவாங்க.. அப்புறம் உங்க இஷ்டம்..”

     

    கோம்டி சொல்லச் சொல்ல ஆச்சரியம் அதிக அளவாய்க் காண்பித்து கல்யாண் அவளைக் கையைப் பிடித்துக் குலுக்கினாலும் சுந்தர் தன் தலையைப் பிடித்துக் கொண்டே அப்படியே சோபாவில் சாய்ந்தான். ரவி இப்போது சுந்தரைப் பார்த்தான். அருகே சென்றான்.

     

    “இப்போ இன்னொரு உண்மையும் சொல்லணுமே.. கல்யாணோட பெரியப்பா கொடுத்த அந்த பத்து லட்சம் ரூபாயை சிதம்பரத்துல நீங்க கொண்டு போய் கொடுக்கலியே.. அந்தப் பணத்தை எங்கே வெச்சிருக்கீங்க.. அதையும் சொல்லணும்..”

     

    சுந்தர் தன் தலையில் அடித்துக் கொண்டு அழுதான்..

    “கல்யாண்.. நான் என்னவெல்லாமோ நினைச்சு உங்கிட்டே எல்லா விஷயமும் சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்லயே உன்னைப் பாக்கறச்சே சொல்லலாம்னுதாண்டா இருந்தேன்.. இந்தக் கொலை நடந்த முதல் நாளே நான் தீர்மானம் பண்ணது என்னன்னா அடுத்த நாள் காலைல ஸ்டேஷனுக்கு வந்து அங்கேயே உன்னை உக்காத்தி வெச்சு எல்லா விஷயத்தையும் சொல்லிட்டுதான் இங்க மாமா வீட்டுக்கு அழைச்சுட்டு வரணும்னுதாண்டா.  உனக்குப் பெரிய துரோகம் பண்ணிட்டார்டா.. உனக்கு மட்டுமில்லே.. எனக்கும் சேர்த்துதாண்டா சொல்லறேன். ஐய்யோ.. வேணாம் வேணாம்னு நான் எத்தனையோ முறை சொல்லியும் மாமா கேட்கலியேடா.. அவருக்கென்ன? செய்யறதெல்லாம் செஞ்சிட்டு அவர் பாட்டுக்கு போய்ச் சேர்ந்துட்டார்.. இப்போ யாருடா அவர் செஞ்ச பாவத்துக்கெல்லாம் அனுபவிக்கறது..” அழுதான் அவன்,

     

    கல்யாண் கடுமையாகப் பேசினான். “பச்சதாபப்பட்டு அழுதா போதுமா சுந்தர்.. இப்போ வரைக்கும் நீ பொய் சொல்லித்தான் வந்திருக்க.. இன்னும் கூட நீ என்ன நடந்ததுன்னு சொல்லறதுக்கு மனசு உனக்கு வரல்லே..”

     

    “இல்லடா.. இல்லே.. நான் சொல்லப் போகறது கொஞ்சம் டெலிகேட்டான விஷயம்டா.. வெளியில தெரிஞ்சா ரொம்ப கேவலமா நினைப்பாங்க.. (கோம்டியை காட்டி) இவங்க முன்னாடி சொல்லறதுக்குக் கூட கூச்சமா இருக்கு.. ஆனா இப்போ வேற வழி தெரியலே.. கல்யாண்.. உன்னோட மாமா ஒரு குரூரமான மெண்டாலிடி உள்ளவர்டா.. ரொம்ப ரொம்பகாலமா இப்படித்தான் இருக்கார். குரூரம்னு சொன்னா கூட அதுக்கு அர்த்தம் இல்லை. இன்னும் மேல.. உனக்கு எப்படி சொல்லறதுன்னு தெரியலே..”

     

    கோம்டி சற்று நிதானமாகவே கேட்டாள். “ உங்க மாமா பெரிய பெண் பித்தர்.. அதத்தானே சொல்ல வரீங்க..”

     

    தலையை அசைத்தான். “சாதாரண ஸ்த்ரீ வெறியன் இல்ல மேடம்.. எப்படிச் சொல்றதுன்னே தெரியல. அவர் ஒரு சைகோபாத் செக்ஸ் வெறியர்.”

     

    “உங்களுக்கு எப்போ தெரிய வந்தது இந்த விஷயம்?”

     

    “நாலு மாசமாவே தெரியும் மேடம். ஒரு நாள் சாயங்காலம் ஆஃபீஸ்லேர்ந்து கிளம்பறச்சே மாமா ஃபோன் வந்தது.  ஆடிட்டர் அர்ஜெண்டா சில பேப்பர் டைப் பண்ணனும்னு சொல்லி சில அப்ளிகேஷன் ஃபார்ம் லிங்க் அனுப்பிச்சிருந்தார். அதை கம்ப்யூட்டர்லயே பார்த்து சரியா அந்த காலம்ன் பார்த்து டைப் செய்யணும். இதெல்லாம் முரளியும் செய்வான். ஆனா ரெண்டு மூணு நாளா அவன் வரல்லே.. ஆளும் கிடைக்கலே. அப்போ என்னைக் கூப்பிட்டார். நான் இங்க வந்தேன்.  கம்யூட்டரைக் காமிச்சு அந்த லிங்க் எடுத்து ஃபார்ம் ஃபில் பண்ணி ப்ரிண்ட் அவுட் எடுக்கணும்டா.. அதைப் பண்ணு.. பேப்பர்ல சைன் பண்ணினா ஆடிட்டர் நேரயே  நாளைக்காலைல இன்கம்டாக்ஸ் ஆஃபீஸ்ல கொடுத்துடுவார்டா’ன்னு எனக்குச் சொன்னார். நானும் கம்ப்யூட்டர்கிட்டே உட்கார்ந்து இதையெல்லாம் செஞ்சுண்டுருக்கறச்ச இவர் ஹால்ல தன் ஃபோனை   நோண்டிண்டிருந்தார். நான் முதல்ல அத சரியா கண்டுக்கலதான். கம்ப்யூட்டர் வேலை முடிச்சு பிரிண்ட் அவுட்லாம் எடுத்து அவர்கிட்ட கையெழுத்து வாங்கணும்னு கொஞ்சம் அவர்கிட்டே நிதானமாத்தான் போனேன்.”

     

    அவன் நினைவுகள் அந்த நாளிரவு நிகழ்ச்சிக்குத் தாவின. இதே ஹால்தான். மாமா சோபாவில் வெகு சீரியஸாக ஃபோனில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தார். சுந்தர் கையில் பேப்பர்களுடன் மெதுவாக ‘என்ன போட்டோ அது’ என்று ஒரு ஆவலில் அவர் பின்னால் நின்று அவருக்குத் தெரியாமல் எட்டிப் பார்த்தான். எல்லாமே பெண்களின் நிர்வாணப் படங்கள். அதிர்ச்சியில் நிலைமை தெரியாமல் கத்தி விட்டான். அவன் கைகளிலிருந்த பேப்பர்கள் சிதறி கீழே விழுந்தன.

     

    “மாமா! என்ன இதெல்லாம்? அதுவும் நீங்களா இப்படி?”

     

    மாமாவும் இவன் திடீரென வந்து கத்திக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்தார். அந்த அதிர்ச்சியில் அவசரமாக எழுந்து கொள்ளும்போது தடாலென அவர் கையிலிருந்த ஃபோன் ஏடாகூடமாக கீழே விழுந்து இரண்டாக விரிந்து போனது. அவசரமாக கீழே விழுந்த ஃபோனை எடுத்து அந்த இரண்டுப் பகுதிகளையும் சேர்க்கையில் அது வேலை செய்யாமல் ரிப்பேரானது தெரிய வந்தது. ஆத்திரம் வந்தது மாமாவுக்கு. சுந்தர் பக்கத்தில் வந்து ஆத்திரத்துடன் ‘பளாரென’ அவன் கன்னத்தில் அறைந்தார். சுந்தர் கன்னத்தைத் தடவியபடி அப்படியே நின்றான்.

     

    மாமா கொஞ்சம் நிதானத்துக்கு வந்தார். ஒரு கையில் ஃபோனைப் பார்த்துக் கொண்டே அவனைப் பார்த்தார்.

    தொடரும்

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி 21

    63 நாயன்மார்கள் வரலாறு – 19 திருநாவுக்கரசர் நாயனார் – பகுதி 2

     

     

    மொழியும் இனமும்

    நம் மொழி இலக்கியத்துள் முதன்முதலாக மொழிவழித் தேசிய இனம் என்ற புதிய மரபினைத் தோற்றுவித்த பெருமை அப்பரடிகளையேச் சாரும்! ‘தமிழன்’ என்ற சொல்லையும் முதன்முதலில் கூறிய முதல் தமிழரும் அவரே!

    ஆரியன் கண்டாய், தமிழன் கண்டாய்’ (6-23-5)

    இதன் பொருட்டே திருநாவுக்கரசர் நாயனார் பெருமானை ‘தமிழ் மொழித் தலைவர்’ எனக் குறிப்பிடுகிறார் போலும் சேக்கிழார் பெருமான்.

    சண்பைநா டுடைய பிள்ளை தமிழ்மொழித் தலைவ ரோடு

    மண்பயில் சீர்த்திச் செல்வமாமறைக் காடு வைகி, என்கிறார்.

    அப்பரடிகள் தருமசேனர் எனும் சமணராய் இருந்தபோது அவர்களோடு கூடியிருந்து அவர்தம் சோற்றை உண்ட தன் உடல் மாசுபட்டுள்ளதோ என்று அவருடைய உள் மனது வருந்த, அந்த மாசைப் போக்க வேண்டும் என்று நினைத்தார். பொதுவாக இத்தகைய மாசு நீங்க வேண்டுமானால் ஒன்று நீரால் அல்லது தீயால் மட்டுமே ஆகும் என்ற எண்ணத்தில் தன் உடலை இந்த இரண்டு முறையிலும் தூய்மை செய்ய விழைந்தார். முதல் முறையாக திருக்கெடில நதியில் நீராடி அப்பாவத்தைப் போக்க முனைந்தார். அடுத்து எஞ்சிய மாசும் பாவமும் தீயால் சுட்டெரிக்க முடிவெடுத்தவர், தூங்கானை மாடத்தில் எழுந்தருளியிருக்கும் சுடர்கொழுந்தீசரைப் பார்த்து வழிபட்டு ஓர் விண்ணப்பமும் வைத்தார்.

     பொன்னார் திருவடிக் கொன்றுண்டு

      விண்ணப்பம் போற்றிசெய்யும்

    என்னாவி காப்பதற் கிச்சையுண்

      டேலிருங் கூற்றகல

    மின்னாரு மூவிலைச் சூலமென்

      மேற்பொறி மேவுகொண்டல்

    துன்னார் கடந்தையுள் தூங்கானை

      மாடச் சுடர்க்கொழுந்தே

    இடவம் பொறித்தென்னையேன்று கொள்ளாயிருஞ் சோலை திங்கள்

    தடவும் கடந்தையுள் தூங்கானை மடத்தெந்தத்துவனே

    அப்பரடிகள் சிவபெருமானிடம், “என் உடம்பில் உயிர் இருக்க வேண்டும் என்பது உமது விருப்பமாயின் எனது தோளில் இடபச் சூலக்குறி பொறிக்க வேண்டும்” என்று விண்ணப்பித்தார். சிவகணம் மூலமாக இடபச் சூலக்குறிகளைப் பொறிக்கச் செய்தார். அப்பரடிகளும் அகம் குளிர்ந்தார். வாகீசப் பெருமான் பெண்ணாகடத்தினின்றும் புறப்பட்டுத் தில்லை சென்று கூத்தப் பெருமானின் ஆனந்தத் திருக்கூத்தினைக் கண்டு களிப்புற்றவர், ‘கருநட்ட கண்டனை’ எனும் திருவிருத்தம், ‘பத்தனாய்ப் பாடமாட்டேன்’ என்னும் திருநேரிசை, ‘அன்னம் பாலிக்கும் தில்லை’ எனும் திருக்குறுந்தொகை, ‘அரியாணை அந்தணர் தம் சிந்தையானை’ எனும் பெயரில் திருத்தாண்டகம் முதலிய பலப்பல பதிகங்கள் பாடி மகிழ்ந்து துதித்தார்.

    திருஞானசம்பந்தப் பெருமானின் சைவத்திருப்பணி பற்றி அறிந்த நாவுக்கரசர் அவரைக் காண சீர்காழி எனும் திருத்தலம் நோக்கிச் சென்றபோது சம்பந்தரும் ‘அப்பரே வாருங்கள்’ என்று அன்போடு எதிர்கொண்டழைத்தார். இருவரும் திருமறைக்காடு சென்று வேதத்தால் பூட்டப்பட்ட ஆலய மணிக்கதவை தமிழ் பண்ணிசைப்பாடி திறக்கவும் மீண்டும் மூடவும் செய்தனர். சில நாட்கள் அவருடன் தங்கியிருந்தவர் பின்னர் விடைபெற்று சோழ நாட்டு திருத்தலங்கள் பலவற்றிற்கும் சென்று வழிபட்டு, திருச்சத்திமுற்றம் எனும் திருத்தலம் சென்றடைந்தார்.

    கோவாய் முடுகி யடுதிறற்

      கூற்றங் குமைப்பதன்முன்

    பூவா ரடிச்சுவ டென்மேற்

      பொறித்துவை போகவிடின்

    மூவா முழுப்பழி மூடுங்கண்

      டாய்முழங் குந்தழற்கைத்

    தேவா திருச்சத்தி முற்றத்

      துறையுஞ் சிவக்கொழுந்தே.

    திருச்சத்திமுற்றத்து சிவக்கொழுந்தீசரிடம் தம்முடைய நீண்ட நாள் பேரவாவை நிறைவேற்றித் தருமாறு வேண்டி நின்றார். ஈசனின் அழகிய பொன் போன்ற திருவடியை தம் தலைமேல் சூட்டியருள வேண்டும் என்ற வேண்டுதலை வைத்தார். எம்பெருமானும் நல்லூருக்கு வா என்று பணித்தார். நல்லூர் சென்று பாதம் பணிந்த அப்பரடிகளைப் பார்த்து, ‘உம்முடைய நினைப்பதனை முடிக்கின்றோம்’ என்றவர் தம் சென்னிமிசை பாதமலர் சூட்டினான் சிவபெருமான். நாவுக்கரசரும் திருத்தொண்டகச் செந்தமிழ்ப் பாமாலை பாடிப் பரவினார். இப்பதிகத்தில் பாடல்தோறும் இறுதி அடியில்,

    திருவடி என் தலைமேல் வைத்தார்

    நல்லூ ரெம் பெருமானார் நல்லவாறே

    என தம்மை ஆட்கொண்ட  நல்லூர் எம்பெருமானின் கருணைத் திறத்தை வியந்துருகிப் போற்றுகின்றார்.

    பின்னர் திருப்பழன நாதரை வழிபட எண்ணி திங்களூர் என்ற ஊரின் வழியே சென்றார். அங்கு தமது பெயரால் சோலைகள், குளங்கள், சாலைகள், தண்ணீர்பந்தல் முதலிய அறங்களை அப்பூதியார் என்ற பெருமகனார் செய்து வருவதைக் கண்டு அதிர்ச்சியுற்றார். அப்பூதி அடிகள் நாயனாரைச் சந்தித்து, திருவமுது செய்ய அவரது வீட்டிற்குச் சென்ற போது அரவத்தால் மாண்ட அப்பூதி அடிகளாரின் மூத்த மகனை, ‘ஒன்றுகொலாம்’ எனும் திருப்பதிகம் பாடி உயிர்ப்பித்துப்  பின் பயணத்தைத் தொடர்ந்தார்.

    திங்களூரை விட்டுப் புறப்பட்ட திருநாவுக்கரசு நாயனார் திருப்புகலூரை அடைந்தபோது அங்கு வந்த திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரை மீண்டும் சந்தித்து, இருவரும் திருவீழிமிழலை சென்றடைந்தனர். அப்போது அங்கு நாடு வளம் இன்றி வறட்சியுற்றிருந்தது. மக்கள் உண்ண உணவின்றி துன்பத்துக்கு ஆளாகியிருந்தனர். மக்களின் துன்பம் தீர நாட்டில் பஞ்சம் ஒழிய வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் கண்ணயர்ந்தனர். பெருமக்கள் இருவரின் கனவிலும் இறையனார் வந்து அருளியதன் பேரில், விண்ணிழி விமானநாதன் ஆலயத்தைச் சென்று வணங்கி காழிப்பிள்ளையார் கிழக்கு வாயில் பலிபீடத்தை அடைந்தார். அங்கு ஒரு பொற்காசு இருப்பதை அறிந்து அதனை வணங்கி எடுத்தார். அப்பரடிகளும் மேற்கு வாயிலில் பலிபீடத்திலிருந்து பொற்காசை எடுக்க இருவரும் மகிழ்ச்சியுடன் இரு மடங்கள் அமைத்து மக்களுக்கு அன்னதானப் பணிபுரிந்தனர்.

    அதன் பின்னர் இருவரும் அங்கிருந்து புறப்பட்டு திருமறைக்காடு (தற்போது வேதாரண்யம் என்று வழங்கப்படுகிறது) சென்று வேதங்களால் பலகாலம் அடைக்கப்பட்டிருந்த கதவினைத் திறக்கவும் மூடவும் பாடியருளினர்.

    திறக்கப் பாடிய என்னினும் செந்தமிழ்

    உறைப்புப் பாடி அடைப்பித்தார் உந்நின்றார்

    மறைக்க வல்லேரோ தம்மை திருவாய்மூர்ப்

    பிறைக்கொள் செஞ்சடையார் இவர் பித்தரே

    திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பாண்டிமாதேவியின் அழைப்பை ஏற்று மதுரையை நோக்கிப் புறப்பட்டவுடன், திருநாவுக்கரசு நாயனார் பெருமான் சோழ நாட்டுத் தலங்களைத் தொடர்ந்து தரிசித்துத் திருத்தொண்டு செய்து வந்தார். சமணர்களால் மறைக்கப்பட்டிருந்த பழையாறை வடதளி ஆலயத்தை மீண்டும் திறந்து தரிசிக்காமல் செல்வதில்லை என்று உண்ணா நோன்பு மேற்கொண்டார். எம்பெருமானும் பழையாறை நகரில் வாழும் மன்னன் கனவில் தோன்றி, உண்ணாமை பூண்டிருக்கும் நாவுக்கரசர் வெளிப்படையாகக் கண்டு வழிபடும் வகையில் ஆவன செய்யுமாறு கூறி மறைந்தார். மன்னனும் நேரில் சென்று அப்பரடிகளின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி அவரோடு சென்று வடதளிநாதனை வணங்கி, புதிய கோபுரம் எழுப்பி பல நிவந்தங்களையளித்தான்.

    பின்னர் நாவுக்கரசர் திருச்சிராப்பள்ளி, திருவானைக்கா, திருவெறும்பூர், திருப்பராய்த்துறை முதலிய பல தலங்களை வழிபட்டு பின் திருப்பைஞ்ஞீலியை அடைந்தார். அப்போது அவருக்குப் பசி மேலிட்டபோது, சிவபெருமான் கட்டமுது தந்தருளினார். தல யாத்திரையைத் தொடர்ந்து மேற்கொண்ட திருநாவுக்கரசு நாயனார், திருக்காளத்தியில் காளத்தியப்பரையும், கண்ணப்ப நாயனாரையும் தரிசித்துவிட்டு திருக்கயிலை யாத்திரை மேற்கொண்டார். உடல் தளர்ந்த நிலையிலும் உறுதி தளராத அவரை சிவபெருமான் அங்கு ஓர் தடாகத்தில் மூழ்கப் பணித்துத் திருவையாற்றில் திருக்குளத்தில் எழச் செய்து சிவனார் உமையம்மையோடு திருக்கோயில் காட்சியைத் திருநாவுக்கரசு நாயனாருக்குக் காட்டியருளினார்.

    வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி

            மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி

    ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி

            ஓவாத சத்தத் தொலியே போற்றி

    ஆற்றாகி யங்கே அமர்ந்தாய் போற்றி

            ஆறங்கம் நால்வேத மானாய் போற்றி

    காற்றாகி யெங்குங் கலந்தாய் போற்றி

            கயிலை மலையானே போற்றி! போற்றி!

    எனும் போற்றித் திருத்தாண்டகம் பாடி திருஐந்தெழுத்தை ஓதி அவ்வாவியில் மூழ்கித் திருவையாற்றில் உள்ள ஒரு தடாகத்தில் தோன்றிக் கரையேறினார். சம்பந்தரிடம் விடைபெற்று பாண்டி நாடு சென்ற நாவுக்கரசர் அங்கு நெடுமாறன், மங்கையர்கரசியார், குலச்சிறையார் ஆகியோரின் விருந்தினராய்த் தங்கி அவர்களோடு தல யாத்திரை மேற்கொண்டு பல தலங்களையும் பணிந்து திருப்புகலூர் வந்து தங்கி புகலூர்ப் பெருமானை வணங்கி, உழவாரப் பணி செய்து மகிழ்ந்தார். அப்போது அவர், நின்ற திருத்தாண்டகம், தனித் திருத்தாண்டகம், மன்னுறைவோர் வாழ்பதிகள், வாழ்த்துத் திருத்தாண்டகம், திருநேரிசை, தனித்திருநேரிசை, ஆருயிர் திருவிருத்தம், தசபுராணத் தடைவு, பாவநாசத் திருப்பதிகம், அறைகூவும் திருப்பதிகம் முதலிய பாமாலைகளைப் பாடியருளினார்.

    தமது 81வது வயதில் திருப்புகலூரை அடைந்த திருநாவுக்கரசு நாயனார் அங்கேயே தங்கித் உழவாரப் பணியைச் செய்தார். திருப்புகலூர் இறைவனை பல நாட்கள் தங்கி வணங்கிய அப்பரடிகள் உலக வாழ்வில் வெறுப்புற்று இறைவன் திருவடிப்பேறு எய்த விரும்பினார். திருப்புகலூர் இறைவன் தன்னை திருவடியில் இருத்திக் கொள்வான் என முன்னுணர்வு பெற்று திருப்பதிகங்கள் பாடினார்.

    தன்னைச் சரணென்று தாளடைந்

      தேன்றன் அடியடையப்

    புன்னைப் பொழிற்புக லூரண்ணல்

      செய்வன கேண்மின்களோ

    என்னைப் பிறப்பறுத் தென்வினை

      கட்டறுத் தேழ்நரகத்ஹ்

    தென்னைக் கிடக்கலொட் டான்சிவ

      லோகத் திருத்திடுமே

     

    எண்ணுகேன் என்சொல்லி எண்ணு கேனோ

            எம்பெருமான் திருவடியே எண்ணி னல்லாற்

    கண்ணிலேன் மற்றோர் களைக ணில்லேன்

            கழலடியே கைதொழுது காணி னல்லால்

    ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்

            ஒக்க அடைக்கும்போ துணர மாட்டேன்

    புண்ணியா உன்னடிக்கே போது கின்றேன்

            பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.

    எனவரும் திருத்தாண்டகத்தில் பாடியருளியபோது புகலூர்ப் புண்ணியன் கருவறையில் சோதி எழுந்தது. அச்சோதியிற் கலந்து நுண்ணறிய சிவானந்த வடிவேயாகி அண்ணல் சேவடிக்கீழ் எய்தி இன்புற்றார். அப்பரடிகள் சிவனடி சேர்ந்த திருநாளே சித்திரை சதயத் திருநாளாகும்.

     

    திருநாவுக்கரசர் நாயனார் புராணம் சொல்லும் கருத்து

    இன்று உலக நாடுகள் அனைத்தும் தனிமனிதச் சுதந்திரத்தை நிலைநாட்ட ஐ.நா. சபை என ஓர் அமைப்பை உருவாக்கியுள்ளார்கள். அந்த மாமன்றத்திலேயே அப்பரடிகளின் திருவாக்கு பொறிக்கத்தக்கதாகும்! உலக வரலாற்றில் ஒரு சர்வாதிகார ஆட்சியை எதிர்த்துத் தனி நபராக நின்று போர்ப்பரணி பாடிய முதற்குரல் எழுந்த இடம் நம் தமிழகத்துப் பாடலிபுத்திரமாகும். ஏழாம் நூற்றாண்டில் மக்கள் துணை இன்றி மகாதேவன் துணையோடு தன்னந்தனி மனிதராய் ஒரு மாபெரும் சாம்ராச்சியத்தையே  எதிர்த்துப் போராடியவர் நம் அப்பரடிகள்!

    நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்

            நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்

    ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்

            இன்பமே எந்நாளுந் துன்ப மில்லை

    தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான

            சங்கரனற் சங்கவெண் குழையோர் காதிற்

    கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்

            கொய்ம்மலர்ச்சே வடியிணையே குறுகி னோமே.

    சிவபெருமானைத் தவிர வேறு எவருக்கும் அடி பணிய மாட்டோம் என வீரமுழக்கமிட்டார்.

    நெடுநாட்கள் சமணத்திலிருந்த அப்பரடிகள் அங்கு தலைவர்கள் திருமடம் அமைத்து தங்கள் சமயத்தைப் பரப்ப தொண்டர்களைக் கூட்டி, அவர்கட்கு மதப்பயிற்சி அளிப்பதைக் கண்டிருப்பவர், சைவநெறியில் அத்தகைய அமைப்பு ஏதும் இல்லாத நிலை கண்டு வருந்தினார். சைவம் தழைக்கும் வகையில் தொண்டர்களை உருவாக்கத் தாமே திருப்பூந்துருத்தி என்னும் ஊரில் திருமடம் அமைத்தார். அத்திருமடம் வானுயர சேக்கிழார் காலம் வரை சிறப்பான முறையில் ஓங்கி இருந்துள்ளது. சைவசமய வரலாற்றில் சமய நெறி பரப்பத் தோன்றிய முதல் திருமடம் என்பதும் திருநாவுக்கரசு நாயனார் இத்திருமடத்தில் தங்கிப் பல பதிகங்கள் பாடி பொய்யிலியைப் பூந்துருத்தி கண்டேனே எனவும் பரவிப்பாடிப் பணிந்தார். அப்பரடிகளும், சம்பந்தரும் பூந்துருத்தி ஆலயம் சென்று, வணங்கி திருமடத்திலும் பல நாட்கள் தங்கியிருந்தனர்.

    அப்பரடிகள் உள்ளத்துறவு நெறியினை உலகுக்கு உணர்த்த விரும்பிய எம்பெருமானார், அடிகள் உழவாரப் பணியாக அவ்வாலயத்தில் உள்ள புல், பூண்டு முதலியவற்றையும், கற்களையும் களைந்து எறிந்தபோது இறையருளால் பொன்னும் நவமணியும் அக்கல்லோடும், புல்லோடும் கலந்து வந்தன.  ஓடும், செம்பொன்னும் ஒன்றாகக் கருதும் அப்பரடிகள் அவற்றையும் அப்புல்லோடும், கல்லோடும் எடுத்துத் தூர வீசி தாம் துறவின் சிகரம் என நிறுவினார்.

    அப்பரடிகள் திருத்தொண்டு செய்து வரும்போது ஒரு நாள் அரம்பையரும், தேவமாதரும் கூடி நின்று அவர்தம் திருமேனியில் நறுமலர் பெய்து நடனமாடினர். ஆனால் அடிகளார் சிந்தை மயக்கமின்றித் தம்பெருமான் திருவடியையே சிந்தையில் நிறுத்தி ஒருமனமுடையவராய்த் திகழ்ந்தார்.

    நெக்கு நெக்கு நினைப்பவர் நெஞ்சுளே

    புக்கு நிற்கும் பொன்னார் சடை புண்ணியன்

    பொக்கமிக்கவர் பூவும் நீரும் கொண்டு

    நக்கு நிற்பர் அவர்தம்மை நாணியே.

    என்று பொய்யாக வேடமிட்டு ஆடம்பரமாக ஆலயத்தில் வழிபாடு செய்யும் போலிகளைக் கண்டு இறைவன் நகைப்பான் என்கிறார்.

    ஒன்றே கடவுள் எனும் அப்பரடிகள் பல தெய்வ, சிறு தெய்வ வழிபாட்டினை வெறுத்துப் பேசுகிறார்.

    யாரோர் தேவ ரெனப்படு வார்க்கெல்லாம்

    மாதே வன்னலால் தேர்மற் றில்லையே

    எனக்கூறி ஒருவனே தேவன் என வலியுறுத்தினார்.

     

    கோலும் புல்லும் ஒரு கையில் கூர்ச்சமும்

           தோலும் பூண்டு துயரம் உற்று என் பயன்

           நீல மா மயிலாடுதுறையனே

           நூலும் வேண்டுமோ நுண் உணர்ந்தோர்கட்கே

    நீல மயில்கள் நடமாடும் சிறப்பு வாய்ந்த மயிலாடுதுறை தலத்தில் உறைபவனும், வேதங்களில் சொல்லப்படும் மெய்ப்பொருளின் வடிவமாகிய சிவபெருமானை உணர்ந்தவர்களுக்கு, வேறு எந்த அறிவு நூல்களும் தேவைப்படாது என்கிறார்.

    பண்டைய நாளில் தமிழகம் பேசும் மொழி, மதம், கலை, பண்பாடு, நாகரிகம், கலாச்சாரம் போன்றவற்றால் மாறுபடாமல் இருந்தாலும் நாடாளும் மன்னர்களால் வகுத்த நாட்டெல்லைகளால் சேர, சோழ, பாண்டிய, தொண்டை, கொங்கு எனப் பல்வேறு நாடுகளாக இருந்தது. தமிழ் வேந்தர் படையெடுத்துச் சென்று இமயம் வரை நம் தமிழ்க்கொடியை நாட்டினர். கடல் கடந்த நாடுகளிலும் நம் தமிழ் மொழியும், தமிழர் தம் கொடியும் பறந்தது. இவர்களையெல்லாம் இணைக்கின்ற சக்தி ஒன்று தேவையென்று முதல் அமைச்சராய் இருந்த சேக்கிழார் பெருமான் நினைத்தார். இமயத்தை ஒட்டி வாழ்ந்தாலும், கடல் கடந்து வாழ்ந்தாலும் கன்னித் தமிழ் நாட்டின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் இவர்களை ஒன்றிணைக்க ஒரு மாபெரும் சக்தியாகச் செய்யவல்லது அமிழ்தினும் இனிய நம் செந்தமிழ் மொழியே என உறுதியாக நம்பினார். நம் செந்தமிழ் மொழிக்கு, அஞ்சாமையும், நெஞ்சுறுதியும் கொண்ட  ஒரு தலைவனை தமிழக மக்களுக்குக் காட்சிப்படுத்தினார் சேக்கிழார். அந்த தமிழ் மொழித் தலைவனே திருநாவுக்கரசர் நாயனார்.

    திருநாவுக்கரசு பெருமானை, எம்பெருமான் சூலை நோய் கொடுத்து ஆட்கொண்ட வேளையில் மனிதன் நோய் பற்றி, அதன் கொடுமை பற்றி, தமக்குற்ற சூலை நோய் பற்றி, அதன் கொடுமை பற்றி அவர் பாடியுள்ள பாடல் நமக்கே சூலை நோய் ஏற்பட்டது போன்று துடித்துப்போகச் செய்கிறது.

    கூற்றாயின வாறுவி லக்ககிலீர்

      கொடுமைபல செய்தன நானறியேன்

    ஏற்றாயடிக் கேஇர வும்பகலும்

      பிரியாது வணங்குவன் எப்பொழுதும்

    தோற்றாதென் வயிற்றின் அகம்படியே

      குடரோடு துடக்கி முடக்கியிட

    ஆற்றேன் அடியேன்அதி கைக்கெடில

      வீரட்டா னத்துறை அம்மானே.

    இப்பாடலில் உள்ள சொற்கள் அனைத்தும் வயிற்று வலி வந்த ஒருவரின் அனுபவ உண்மை என்பது விளங்கும். இத்திருப்பதிகம் ஒரு சத்தியவாக்கு, ஒரு திருமந்திரம் என்பது அனுபவப்பூர்வமான சத்தியம் ஆகும். இன்றும் தீராத வயிற்று வலி உள்ளவர்கள் திருவதிகை சென்று 48 நாட்கள் காலையும், மாலையும் இத்திருப்பதிகம் பாடினால் கொடிய சூலை நோய் நீங்கக் காண்பது அனுபவப்பூர்வமான உண்மை. அப்பரடிகளின் வாக்கு சத்திய வாக்கு என்றும் அவருடைய ஒவ்வொரு சொல்லும் மந்திரச் சொல் என்ற நம்பிக்கையும் பரவலாக உள்ளது.

    அப்பரடிகள் 49,000 தேவாரப் பதிகங்களைப் பாடியுள்ளார். இவற்றில் சில பதிகங்கள், தாள அமைப்பினைச் சேர்ந்தவை. தாள அமைப்புடன் பாடப்பட்டவற்றைப் பண்ணாங்கப் பாடல்கள் என்றும், தாள அமைப்பு இல்லாத பாடல்கள் சுத்தாங்கப் பாடல்கள் என்றும் குறிப்பிடப்படுகின்றன. திருத்தாண்டகம், திருவிருத்தம், திருக்குறுந்தொகை ஆகியவை திருநாவுக்கரசு நாயனார் பாடிய சுத்தாங்கப் பதிகங்கள். அப்பரடிகளின் அனைத்துப் பாடல்களும் தமிழ்ச் சுவையும் பக்திச் சுவையும் தோய்ந்தவை.

     

     

    Share
  • அழகைப் பார்த்து ஏமாந்த மீன்!! (நீதி கதை)

    ஏ. எஸ். கோவிந்த ராஜன்

    இயற்கை எழில் நிறைந்த அழகான ஊர் தான் புதூர். அங்கு ஏரி, குளங்கள் என நீர் நிலைகள் நிறைந்திருக்கும். அங்குள்ள ஒரு குளத்தில் பல வகையான வண்ண மீன்கள் வாழ்ந்து வந்தன. அக்குளத்தில் உள்ள மீன் குட்டிகள் எப்பொழுதும் கூட்டமாக விளையாடிக் கொண்டிருக்கும்.

    அதில் ஜானி, பட்டு என்ற இரு குட்டி மீன்கள் விளையாடிக் கொண்டிருந்தன. ஜானி, ஏய்! பட்டு எங்கே என்னைப் பிடி பார்க்கலாம் என்றது. அதற்கு பட்டு, என்னிடமே சவால் விடுகிறாயா? இப்பொழுது பார். ஒரு நொடியில் உன்னை பிடிக்கிறேன் என்று கூறி விளையாடிக் கொண்டே கரையோரம் வந்தன.

    அச்சமயம் கரையில் ஒரு காகம் புழுக்களைக் கொத்திக் கொண்டிருப்பதை பார்த்து, ‘ஏய் ஜானி, அங்கே பார் அவன் எவ்வளவு கருப்பாக இருக்கிறான்.” மேலும் அவன் குரலை நீ கேட்டிருக்கிறாயா? அருவருப்பாக இருக்கும். அவனை பார்த்தாலே பயமாக இருக்கிறது. வா! ஜானி நாம் உள்ளே சென்று விடலாம் என்று கூறியதும், எல்லா மீன்களும் குளத்திற்குள் வேகமாக சென்றுவிட்டன.

    வேக வேகமாக மீன்கள் உள்ளே சென்றபோது, குட்டிகளா! ஏன் இப்படி அவசரமாக ஓடி வருகிறீர்கள்? என்று அங்குள்ள ஒரு பெரிய மீன் கேட்டது. கரையோரத்தில் ஒரு காகம் இருக்கிறது. அக்காகத்தின் நிறம் மற்றும் குரலைக் கேட்டால் பயமாக இருக்கிறது. அதனால்தான் வேகமாக ஓடி வந்தோம் என்றது, பட்டு.

    அதற்கு அந்த பெரிய மீன் காகத்தால் நமக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றது. ‘உருவத்தை மட்டுமே வைத்து ஒருவரைப்பற்றி தவறாக நினைக்கக்கூடாது” என்று பெரிய மீன் கூறியது. மற்ற மீன்குட்டிகள் இந்த தாத்தாவுக்கு வேறு வேலையே இல்லை. எப்பொழுதுமே உபதேசம் தான் என்று கூறிவிட்டு சென்றன.

    தினமும் காகத்தைப் பார்த்து கரைக்குச் செல்லாமல் குளத்தினுள்ளேயே விளையாடிக் கொண்டிருந்தன, மீன்கள். சில நாட்களுக்குப் பிறகு குளத்தின் கரையில் கொக்கு ஒன்று அமர்ந்திருந்தது.

    அதை பார்த்த மீன் குஞ்சுகள், ஏய்! அங்கே பாருங்கள். வெள்ளை நிறத்தில் எவ்வளவு அழகாக இருக்கிறது. அதன் அலகு நீளமாக மட்டுமில்லாமல் கூர்மையாகவும் உள்ளதே! அதனுடைய நடையைப் பார் என்று கொக்குவை வர்ணித்துக் கொண்டிருந்தது.

    மீன் குஞ்சுகள் பேசும் சத்தம் கேட்டு குளத்தை நெருங்கியது, கொக்கு. உடனே மீன் குட்டிகள் கொக்குவைப் பார்த்து நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள், உங்களது அலகை தொட்டுப் பார்க்கலாமா? என்று ஒரு மீன் குட்டி கேட்டது.

    அக்குட்டிமீன் அவ்வாறு கேட்டதும் கொக்கு மகிழ்ச்சியில் மூழ்கியது. உடனே, கொக்கு தொட்டுப் பார் என்று கூறியது. ஒரு மீன் குட்டி கொக்கிடம் சென்றதும், கொக்கு அந்த மீனை கவ்விக் கொண்டது. நன்றாக மாட்டிக்கொண்டாயா? என்றது.

    கொக்கிடம் மாட்டிய மீன் ஆ! என்னை விட்டிவிடுங்கள்! என்று கெஞ்சியது. இதை பார்த்த மற்ற மீன் குட்டிகள் ஆபத்து ஆபத்து வேகமாக ஓடுங்கள் என்று அனைத்து மீன்களும் குளத்திற்குள் சென்றன. ஆனால், அந்த கொக்கு கவ்விய மீனுடன் வானத்தில் சென்று மறைந்தது. மற்ற மீன் குட்டிகள் அந்த தாத்தா மீன் சொன்னது சரிதான்.

    அழகை மட்டும் பார்த்து ஒருவருடன் பழகக்கூடாது என்று அனைத்து மீன்களும் உறுதியெடுத்துக் கொண்டன. அன்று முதல் அனைத்து மீன் குட்டிகளும் கவனமாக இருந்தன. மகிழ்ச்சியாக குளத்தில் வாழ்ந்து வந்தன.

    நீதி : அழகற்று இருப்பது எல்லாம் தீயதுமல்ல. அழகாக இருப்பது எல்லாம் நல்லதுமல்ல.

    Share
  • ஒளவையார் புறப்பாடல்களில் பெண்நிலைப் பதிவுகள்

    முனைவர் மூ. சிந்து
    இணைப் பேராசிரியர்
    தமிழ்த்துறை
    டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி ( தன்னாட்சி)
    காளப்பட்டி ரோடு, கோயம்புத்தூர் – 641048

    முன்னுரை

    இலக்கியங்கள் கால வளர்ச்சிக்கேற்பப் புதுப்பொழிவுடன் தோற்றம் பெறுகின்றது. தமிழ் மொழியில் தினந்தோறும் புதிய புதிய இலக்கியங்கள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. இவ்வாறு தோன்றிய இலக்கியங்களில் வரலாறுகள் ஒன்றாகத் தொகுக்கப்பட்டும் அவற்றில் நிகழும் மாற்றங்கள் குறித்தும் ஆராயப்படுகின்றன. இனியும் ஆராயப்படும் என்பதில் எவ்விதமான ஐயப்பாடுமில்லை என்பதை உறுதியாகக் கூறலாம்.

    சங்க இலக்கியங்களின் காலம் என்பது அந்தந்த கால கட்டத்தில் வாழ்ந்த அரசர்கள் புலவர்கள் அவர்களின் ஆட்சிநிலை சிறப்பு ஆகியவற்றின் மூலமாக அறிய முடிகிறது. ஆண்பாற் புலவர்களையே பாராட்டிய காலங்களில் பெண்பாற் புலவர்களும் கல்வியில் மேம்பட்டவர்களாகத் திகழ்ந்தனர். கற்புக் கடம் பூண்ட பொற்புடை மகளீரும் என்ற நிலைமாறி பெண்கள் கல்வி நிலையில் சிறப்புடன் திகழ்ந்துள்ளன ஆண்களுக்கு நிகராப் பெண்களும் சமூகத்தில் இருந்தனர் என்பதை அறியமுடிகிறது.

    சங்க காலங்களில் காக்கைப்பாடினியார், நச்செள்ளையார், ஓக்கூர் மாசத்தியார், ஓரம்போகியார், ஒளவையார் என 41பெண் புலவர்கள் கல்வி நிலையில் சிறப்பு பெற்று விளங்கியதை அவர்களது பாடல்கள் மற்றும் செயல்களில் அறியமுடியும். சங்க இலக்கியங்களில் மேற்கூறிய பெண்டிர் தம் சிறப்பினைக் கூறியிருந்தாலும் இதில் அனைவராலும் போற்றப்பட்டு அனைவரின் உள்ளத்தில் சிறப்பிடம் பெற்றுத் திகழ்ந்தவர் என்பதை “ஒளவையார் புறப்பாடல்களில் பெண்நிலைப் பதிவுகள்” கட்டுரையில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    ஒளவையும் புறப்பாடல்களும்

    ஒளவை பாடியவையாகப் புறநானூற்றில் 33 பாடல்கள் கிடைக்கின்றன. இவர் தமது புரவலர்களாக நால்வரைக் குறிப்பிடுகின்றார். அதியமானை பாட்டுடைத் தலைவனாக் கொண்டு 22 பாடல்களும், பொகுட்டெழினியைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு 3 பாடல்களும், நாஞ்சில் வள்ளுவனைப் பற்றி 3 பாடலும், மூன்று வேந்தர் ஒருங்கிருந்த போது அவர்கள் குறித்த 1 பாடலும், பொது நிலையில் 6 பாடல்களும் இவரால் பாடப்பெற்றுள்ளன.

    ஒளவையும் அதியமானும்

    ஒளவை தம்மை ஆதரித்த புரவலர்களில் குறிப்பிடத்தக்கவனாக அதியமானைப் பதிவு செய்கிறார். அதியமானின் வீரத்தைப் பெரிதுபட அவ்வை எடுத்துரைக்கின்றார் அப்பதிவுகள் பின்வருமாறு.

    போரில் அதியமானைக் கூரைப்படை, தார்படைக் கொண்டு வெல்லுதல் இயலாது அவன் மன்றில் தொங்கும் முடிவினில் காற்றுப்பட்டு எழும் ஒலியைக் கேட்டதும் அது போர்க்கான முழக்கமாகக் கருதி பேருக்கு எழும் இயல்புடையவன் (புறம் 89)

    புலவர்களுக்கும் நாட்டுமக்களுக்கும் எளியவன் எதிரிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்ற வலிமையன் நீர்த்துறையில் யானையின் கோடுகளைத் தழுவி உடலை வருடி விளையாடுவதைப் பொறுத்துக் கொள்ளும் யானை போல அதியமான் புலவர்க்கு இனியன் அதே யானை மதம் கொண்ட போது பாகனையே பயமுறுத்தும் அதைப் போல போரிடத்தில் அதியமான் சினந்து நிற்பான்.   (புறம் 315)

                        வைகல் என்தேர் செய்யும் தச்சன்
                        திங்கள் வளத்த கால் கால் அன்னான்            (புறம் -87)

    அதியமானின் பேராற்றலை உவமைகள் கொண்டு ஒளவை முன் வைப்பது சிந்தனைக்குரியது. புலி முன் நில்லா இருளின் நிலை போலவும் வலிமை மிகு எருதின் முன் கடக்க முடியா சாலை எதுவும் இருக்க முடியா நிலை போலவும் அதியமான் முன் பகைவர் விளங்குகின்றனர். இவ்வாறு பெருவீரனாக அதியமானை ஒளவை பதிவு செய்வதன் மூலம் புரவலர்கள் இயல்பை விளக்குகிறார். அதியமான் அன்பிற்கு கட்டுப்பட்டவனாய் (தம் போன்ற பாணர்) பாதுகாவலனாய் வலிமை பெற்றவனாய்ச் சித்தரிப்பதன் மூலம் தம் போன்ற பாடினிக்கான சமூக வெளியைப் புலப்படுத்துகிறார். ஆற்றல் கொண்ட பெருவீரனுக்குச் சமமான சுயமதிப்பை பெற்றவர்களாக தம் போன்ற பாடினிகள் இருந்தமைக்கு அதியன் அவ்வைக்கும் கொடுத்த நெல்லிக்கனி ஒன்றே தக்க சான்றாக்கலாம்.

    அதியனிடம் நெல்லிக்கனி உண்டவரும் அவனோடு சேர்ந்து கள்ளுண்டவளுமான இந்த ஒளவை ஆண்-பெண் நட்புக்கு இலக்கியமாய் பங்குநிலை மாதிரியாய் (Role Model) விளங்குகின்றார்.

    அதியமானின் கொடைத்திறம்

    அதியமான் விருந்தோம்பும் திறத்தில் சிறந்தவன் என்பதை ஒரு நாள் அல்ல இருநாள் அல்ல பலநாள் பலரோடு புலவர்கள் சென்றாலும், தலைநாள் போன்றே அதியன் பரிசளிப்பான். யானைக் கோட்டிடை வைத்த கவளம் போல பரிசில் தப்பாது என்பது உறுதியாகும். (புறம் – 101)

    அதியன் வாழ்நாள் நீட்டிக்கச் செய்யும் கருநெல்லிக் கனியை தான் உண்ணாது தனக்கு உண்ணக் கொடுக்க அவ்வை அவனை நீலமணி மிடற்று ஒருவன் போல மன்னுக பெரும நீ என (புறம் 91) இவர் வாழ்த்துகிறார். இவ்வுலகம் நிலைபெற்று விளங்குவதற்கு இத்தகு இறை குணமே காரணமாக அமையும் என்பதாகக் கொண்டு அவ்வை அதியனை நீலமணி மிடற்றன் என்கிறார்.

    இம்மொழி வரையறுப்பதாக அமைகிறது, நீலமணி மிடற்றன் என்பது இயற்கையை அதீத ஆற்றலை உணர்த்தும் குறியீடாக அவ்வையால் முன் வைக்கப்படுகிறது எனலாம். இதற்கு அதியனை நாட்டு எல்லையைப் பெருக்கி வளமுடன் வாழ வேண்டுமென்று வாழ்த்தாத தன்மையைக் காரணமாகச் சுட்டலாம்.

    தொன்மங்கள் உயிர்ப் பொருளாக விளங்குகின்றன. சமூகத்துடன் துடிப்புள்ள உயிர்த் தொடர்பு கொண்டு விளங்குகின்றன. சமூகத்தின் ஒவ்வொரு நுனிக் கூறுகளுக்குள்ளும் நுழைந்து ஊடுருவிச் செல்கின்றன.

    மேலும் நெல்லிக்கனி தந்த அதியமானை தன் தந்தையென பாராட்டுவதன் மூலம் மேற்கூற்றை உறுதி செய்கிறார். அதியனை தந்தையாகப் பாவிப்பது மட்டுமின்றி மக்கள் விரும்பும் மண்ணின் மைந்தனாக அதியன் இருக்க வேண்டுமென்ற கருத்தினை இனங்கான முடிகிறது. ஒளவை தான் பெற்ற கொடை என்றில்லாமல் பெண்கள் கலைகளோடு தொடர்புடையவர்களாகவும் அக்கலையும் கலைஞர்களும் சமூக மதிப்பு பெற்றிருந்தமையும் தம் போன்ற பாணர்கள் குறித்தும் பதிவு செய்கிறார். (புறம் -103)

                        இல்லிறைச் செரீஇய ஞெலிகோல் போலத்
                         தோன்றா திருக்கவும் வல்லன் மற்றதன்   (புறம் 315)

    என்ற ஒளவையின் கூற்றில் அதியனின் கொடை மேம்பாடு உணர்த்துவதுடன் தலைமை பொறுப்பில் உள்ள அவன் அதிகாரமற்றவனாய் படுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் குணம் உடையவனாய் சித்தரிப்பதன் மூலம் ஆணின் பேராண்மை சுட்டுவதாக

    அமைகிறது. ஆணிக் அடக்கி ஆளும் குணத்திற்கு மாற்றா பேராண்மை குணம் ஆணின் குணமாக இருக்க வேண்டுமென்றெ அவ்வையின் விருப்பினை இங்கு இனம் காண முடிகிறது.

    அதியமானின் இறப்பும் ஒளவையின் இரங்கலும்

    அதியமான் இறப்பை ஆற்ற இயலாது ஒளவை மூன்று பாடல்களில் தம் வருத்தத்தைப் பதிவு செய்கிறார். அவை கையறு நிலைத் துறைகளாக அமைகின்றன.

    அதியமானின் உடலை எரிக்கின்ற தீ அதனை அணுமி எரித்தாலும் எரிக்கட்டும் அல்லது வானுயர சென்றாலும் செல்லட்டும் வெண்கொற்றக்குடையாய் உலகைக் காக்கின்ற ஞாயிறு போன்ற அதியமானின் புகழை எத்தீயாலும் எரிக்க முடியாது என்பதை

                        திங்க ளன்ன வெண்குடை
                        ஞாயிற் றன்னோன் புகழ்மா யலவே   (புறம் 231)     

    என்ற பாடலில் உணரலாம்.

    அதியன் தன் அதிகாரத்தால் ஆக்கிரமிப்பு கொள்ள நினையாத மனதையும் நாடு பற்றிய அவன் பார்வையும் இனம் காண முடிகிறது. அதாவது நிலவரைக்குட்பட்ட நாடு என்ற கருத்தியல் ஒளவையால் புறம் தள்ளப்படுகிறது.

    (புறம் 232)

    இனிபாடுநரும் இல்லை பாடுநர்க்கு ஒன்று ஈருநருமில்லை (புறம் 236)   என்ற பாடல் வரிமூலம் பாணருக்கான சமூக வெளியில் அதியனுக்கு இருந்த மரியாதையும் அவன் அவர்களை மதித்த பாங்கும் தன்னிடம் உள்ளத்தைப் பிறருக்கு பகிர்ந்து கொடுத்து தனக்கென வாழா பண்புடையவனாக அவன் இருந்தமை இனம் காட்டுவதுடன் பாணர் குலத்துக்கு நேர்ந்த சமூக நெருக்கத்தையும் இனம் காட்டுகிறது.

    பொகுட்டெழினி

    அதியமான் வாழ்ந்த காலத்தில் பொருட்டெழினியைச் சிறப்பித்ததாக (புறம் 96) ஒருபாடலும் அதியனின் இறப்பிற்கு பிறகு (புறம் 102) ஆட்சி சிறப்பையும் புறம் (103) குடிச்சிறப்பையும் கூறி ஒளவை மூன்று பாடல்களைப் பாடியுள்ளார்.

    தும்பைப் பூமாலை அணிந்த மார்பினையும் நீண்ட கையினையுடைய என்னுடைய தலைவன் அதியனுக்கு மகன் என்பதன் வாயிலாக அதியனின் குணமே அவனுக்கு வெற்றியைத் தருகிறது. அக்குணத்தால் பெண்களால் பொருட்டெழினியும் நேசிக்கப்பட்டான் என்ற குறிப்பினையும் இனம் காண முடிகிறது.

    அதியனுக்கு பிறகு பொருட்டெழனி சேம அச்சு போல இருந்து செயல்படுவான் என்பதை

                          எருதே யிளைய துகமுனை ராவே
                        கீழ்மரத்தி யாத்த சேவச் சன்ன (புறம் 102)

    என்ற பாடல் வாயிலாக உணரமுடிகிறது.

    ஒளவையின் எதிர்பார்ப்புகளான ஆளமைப்பண்பு என்பது மேற்கூறிய செய்திகள் வாயிலாக இனம் கொள்ளலாம்.”

    நாஞ்சில் வள்ளுவன்

    நாஞ்சில் வள்ளவன் கொடை குணமுடையவன். புலவர்களைப் புரக்கும் இயல்புடையோன் என்பதும் தெரிய வருகின்றன. இரப்பவரின் தாழ்ச்சியைக் கருதாமல் தன்னுடைய தரத்தின் உயர்ச்சியை எண்ணிப் பெரிய யானையைக் கொடுத்ததன் வாயிலாக கொடைத்தன்மையை இனங்காணலாம். பாணர் குலத்தின் சமூக மதிப்பறிந்து ஒழுகுபவனாக நாஞ்சில் வள்ளுவன் அவ்வையால் சித்தரிக்கப்பட்டுள்ளான். தன் போன்ற பாணரை சமூக மதிப்பில் உயர்ச்சியாக அவ்வை முன் வைப்பதன் மூலம் பெண் கவிகளுக்கு சமூக வெளியான தன்னிலை அடையாளத்தையும் அவ்வடையாளத்திற்கு வேண்டிய விழைவும் குறிப்பால் உணர்த்துகிறார் எனலாம்.

    மூவேந்தர்கள்

    ஒளவையார் தான் வாழ்ந்த காலத்தில் பொதுநிலையில் மன்னர்களின் தன்மையை தம் பாடல்களில் வரலாற்று ஆதாரமாக முன்வைத்துள்ளார் என்றாலும், அவ்வையின் காலத்தில் உருவாகிக் கொண்டிருந்த நிலவுடைமை சமூகத்தின் குறியீடுகளாக மூவேந்தர்களையும் நாட்டையும் சுட்டுகிறார் எனலாம்.சுருங்கக் கூறின் அவ்வை காண விழைந்த ஆளமைபண்புள்ள மண்ணின் மைந்தர்களாக அவர்கள் மாற உலக அறத்தை அறிவுறுத்துவதாக அமைகிறது. நாடு என்ற கருத்தியலை அவ்வை புறத்தள்ளிவிட்டு குறுகிய கால வாழ்க்கையை இன்பத்தோடு வாழவேண்டும் என்று ஆணுக்கான சமூக மதிப்புடைய வீரம் முதன்மைப்படுத்தப்படுகிறது. சுருங்ககூறின் அவ்வை முன் வைக்கும் அதியனது வீரம் இனக்குழுவின் வீரம் எனலாம்.

    துணைநின்ற நூல்கள்

    1. புலவர் இரா.இளங்குமரன் – சங்க இலக்கியம் – புறநானூறு
    2. முனைவர் பொ.நா.கமலாஃ – தொல்காப்பியம் முதல் தெரிதா வரை
    3. க.பஞ்சாங்கம் – இலக்கியத் திறனாய்வு கோட்பாடுகளும்
    4. மாலதி மைத்ரி – விடுதலையை எழுதுதல்

    Share
  • சிலப்பதிகாரத்தில் வஞ்சிப்பத்தனின் ஊனம்

    முனைவர் த. ஆதித்தன்
    இணைப்பேராசிரியர்
    அரிய கையெழுத்துச் சுவடித்துறை
    தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்-613 010.

    காப்பியம், நாவல் போன்றன தனிநபரின் கதையினை மட்டும் எடுத்துரைப்பதாக அமைவதில்லை. அவை சமுதாயத்தைப் பிரதிபலிப்பவை.  கூடிவாழும் பலரைக் கொண்டது சமுதாயம்.  சமுதாயத்துள் உள்ள பல இனத்தாரும் மற்றொரு இனத்தாரோடு முழுவதுமோ அல்லது ஏதேனும் ஒருவகையிலோ இயைந்து வாழும் தன்மையினைக் காணலாம்.  காரணம் எந்த நபராலும் தனித்து இயங்க இயலாது.  பிறர் உறவு இன்றியோ, உதவியின்றியோ வாழ்வது இயலாதது. காட்டினுள் துறவுப்பூண்டு சென்றாலும் எதிர்படும் பறவைகள், விலங்குகள், தாவரங்களைச் சாந்ந்து தானே வாழவேண்டும். எனவே பிறர் தொடர்பின்றி வாழ்தல் இயலாது.

    காப்பியமும் அப்படித்தான்.  நூற்றுக்கணக்கான மாந்தர்கள், அவர்கள் தொடர்பான நிகழ்வுகள், அந்த நிகழ்வுகளுக்கு இடையேயான பிணைப்புகள் முதலான  தன்மைகளைக் கொண்டு ஒரு காப்பியம் நீண்டு செல்கிறது.  இவற்றில் அனைத்து மாந்தர்களும் முதன்மை மாந்தர்களை மையமாகக் கொண்டே இயங்குவாரர்கள் என்று தோன்றும்.  ஆனால் அந்த முதன்மை மாந்தரின் இயக்கம் சில துணைநிலை மாந்தர் இன்றி நிகழாது என்பதையும் சிந்திக்க வேண்டியுள்ளது.  ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட சிலப்பதிகாரம் பல துணைநிலை மாந்தர்களைக் கொண்டிருப்பதும் அவர்களில் முதன்மைத் தன்மை கொண்டவர்களையும் காண முடிகின்றது.  அவர்களுள் வஞ்சிப்பத்தன் என்னும் பொற்கொல்லனின் பங்கினை எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகின்றது.

    சிலம்பின் நீதிகள்

    சிலப்பதிகாரம் உணர்த்தும் மூன்று நீதிகள் அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று, உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர், ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பவை ஆகும்.  இந்த மூன்றினையும்,

    அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம்
    உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
    ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம்
    சூழ்வினைச் சிலம்பு காரணமாகச்
    சிலப்பதிகாரம் என்னும் பெயரால்
    நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள் என
    (சிலம்பு. பதிகம் – அடி 55-60)

    என்னும் பதிகத்தின் வாயிலாக நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது.  பதிகத்தினை ஒரு நூலின் முன்னுரையாகக் கொண்டால் அந்த நூலின் மையத்தினைத் தெரிவிக்கும் தன்மையில் இந்தப் பதிகச் செய்தி அமைந்து விளங்குவதைக் காணலாம்.  அந்த மூன்று நீதிகள் நிலைநாட்டப்படுவதற்கும் துணை நிலை மாந்தர்களே முதன்மை நிலையில் துணை புரிந்திருக்கின்றார்கள் என்பதைக் காணமுடிகின்றது.

    அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று

    முதல் நீதியான அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று என்னும் நீதி வெளிப்படுவதற்குப் பாண்டியன்  நெடுஞ்செழியனும் கோப்பெருந்தேவியும் முதற்காரணமாக விளங்குகின்றனர்.  ஆராயாமல் கோவலனைக் குற்றவாளி என்று கருதி மரணத் தண்டனை வழங்கியதன் மூலம் பாண்டியன் நெடுஞ்செழியன் அரசியலில் பிழை செய்தவன் ஆகின்றான்.  ஆராயாமல் தீர்ப்புச் சொல்வதற்கு உரிய காரணங்களில் ஒன்றாகக் கோப்பெருந்தேவி விளங்குகின்றாள்.

    கோப்பெருந்தேவியின் சிலம்பைத் திருடிய கள்வன் என்ற குற்றச்சாட்டு, கோவலன் மேல் சுமத்தப்படுகின்றது.  குற்றம் சுமத்தப்பட்டவனிடம் இருக்கும் சிலம்பினை உடனே பெறவேண்டும் என்னும் விரைவு நெடுஞ்செழியனிடம் காணப்படுகின்றது. அந்த விரைவுக்குக் காரணம் கோப்பெருந்தேவி கொண்டிருந்த ஊடலை அந்தச் சிலம்பின் துணைகொண்டு தணிக்கலாம் என்னும் எண்ணமே ஆகும். அதுவே ஆராயாமல் தீர்ப்பு வழங்கும் மனநிலையைப் பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு ஏற்படுத்தியிருகிறது.

    கோவலன் கையில் வைத்திருக்கும் சிலம்பானது கோப்பெருந்தேவிக்கு உரிய சிலம்பு என்று பொற்கொல்லன் தெரிவித்த ஒரு செய்தியைத் தவிர பாண்டியன் நெடுஞ்செழியனுக்குக் கோவலன் கையில் இருக்கும் சிலம்பினைப் பற்றி எதுவும் தெரியாது.  பொற்கொல்லன்தான் தேவியின் சிலம்பினைச் சீர் செய்வதற்காகப் பெற்றவன்.  எனவே கோப்பெருந்தேவியின் சிலம்பு எத்தகையது என்பது அவனுக்குத் தெரியும். ஆனால் ஊர் காப்பாளர்களுக்குச் சிலம்பினைத் தெரியுமே தவிர, கோவலனின் கையில் இருப்பது கோப்பெருந்தேவியின் சிலம்பு என்று தெரிவதற்கு வாய்ப்பு இல்லை. அவ்வாறு இருக்கையில், கோப்பெருந்தேவியின் சிலம்பு அந்தக் கள்வனின் கையில் இருந்தால் அவனைக் கொன்று அந்தச் சிலம்பினைக் கொண்டு வாருங்கள் என்று ஆணையிட்ட பாண்டியனின் செயல் அறிவுக்குப் பொருந்தும்  செயலாகத் தோன்றவில்லை. அவ்வாறு நமக்குத் தோன்றும் என்று கருதியே இளங்கோவடிகள் இந்தப் பகுதியின் தொடக்கத்திலேயே ‘வினை விளை காலம் ஆதலின்’ என்று தெரிவித்துள்ளார். தீய செயல் நடப்பதற்கான காரணம் அது என்பதாலேயே நெடுஞ்செழியனிடம் விரைவான எண்ணம் எழுந்துள்ளது. பிற உயிர் தொடர்பான நீதியினை வழங்கும்போது இவ்வளவு விரைவு கூடாது என்று ஓர் அரசனுக்குத் தெரியாமல் இருக்காது. தெரிந்து இருந்தும் அவ்வாறு அவன் விரைந்து ஆணையிடுவதற்குக் காரணமாக அந்தச் சூழல் அமைந்திருக்கிறது என தெளியலாம்.

    அவ்வாறு நெடுஞ்செழியன் பதற்றத்துடன் விரைந்து முடிவெடுப்பதற்குக் காரணமாக அமைந்தது கோப்பெருந்தேவியின் ஊடல் ஆகும். எனவே கோப்பெருந்தேவியும் அரசியலில் ஏற்பட்ட பிழைக்குக் காரணம் ஆகிறாள். எனவே சிலப்பதிகாரத்தின் முதல் நீதியாகிய அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று என்னும் நீதிக்கு அடிப்படையாக இந்த இரண்டு துணைநிலை மாந்தர்களும் விளங்கியுள்ளனர் என்பது தெளிவாகிறது.

    வஞ்சிப் பத்தனின் பங்கு

    பாண்டியன் கொலைத் தண்டனை விதிக்கும் சூழல் உருவாவதற்குக் காரணமாக இருப்பவன் வஞ்சிப்பத்தன் என்னும் பொற்கொல்லன். எனவே துணைநிலை மாந்தனாகிய வஞ்சிப்பத்தனும் அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று என்னும் நீதி வெளிப்படுவதற்கு அடிப்படையாய் அமைந்துள்ளான் எனலாம்.

    “துன்பியல் நாடகங்கள் எதிர்மாந்தரை இன்றியமையாதுடையன. சிலம்பில் பாத்திரமாக வரும் பொற்கொல்லன் எதிர் மாந்தனாக அமையினும் உருவமற்ற ஊழ் எதிராற்றல் எனக் கொள்வது இயல்பு” (சுப்பிரமணியன். ச.வே., 1984, இளங்கோவின் இலக்கிய உத்திகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, ப.61) என்னும் அடிகளால் சிலப்பதிகாரத்தின் எதிர்நிலை மாந்தனாக இடம்பெறும் பொற்கொல்லன், துணைநிலை மாந்தனாக இடம்பெற்று எவ்வாறு முதன்மைத் தன்மை அடைந்துள்ளான் என்பதை அறியமுடிகிறது.

    “கண்ணுள் வினைஞர் கைவினை முற்றிய
    நுண்வினைக் கொல்லர் நூற்றுவர் பின்வர
    மெய்ப்பை புக்கு விலங்கு நடைச் செலவின்
    கைக்கோல் கொல்வனைக் கண்டனனாகித்
    தென்னவன் பெயரொடு சிறப்புப் பெற்ற
    பொன்வினைக் கொல்லன் இவனென”
    (சிலம்பு. கொலைக்களக் காதை, அடி.105-110)

    என்னும் அடிகளில் பொற்கொல்லன் வந்த தன்மையினை இளங்கோ தெரிவித்துள்ளார். அவனை நூற்றுக்கணக்கான கொல்லர் தொடர்ந்து வந்திருக்கின்றனர் என்றால் அவன் பொற்கொல்லருக்கெல்லாம் தலைமை நிலையில் அமைந்திருக்கிறான் என்பதனைத் தெரிந்துகொள்ள முடிகிறது. அவனது உடலினைச் சட்டை பொதிந்திருக்கிறது என்று சிறப்பாகத் தெரிவித்திருக்கும் காரணத்தால் பிற பொற்கொல்லர்கள் மேலாடை என்னும் சட்டை அணியாமல் இருந்திருப்பார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. மேலும் அந்தச் சட்டையை அவனுக்கு உரிய அடையாளமாகவும் இளங்கோ தெரிவித்துள்ளார். ஏனெனில் உயர்நிலை பெற்ற கொல்லனுக்கு உரிய அடையாளங்களில் ஒன்றாக அது அமைந்துள்ளது எனலாம். மேலும் அவனது கையில் கோல் ஒன்று இருத்தாகவும் இளங்கோ குறிப்பிட்டுள்ளார். அந்தக் கோல், பொற்கொல்லனின் தொழிலுக்குத் துணைபுரியும் ஊதுகோலா அல்லது குறட்டுக்கோலா அல்லது தலைமைப் பொற்கொல்லன் என்னும் அடையாளக் கோலா என்னும் சிந்தனையைத் தூண்டுகிறது. அவன் நேராக நடக்கவில்லை, மாறாகப் பக்கம் சாய்ந்து சாய்ந்து நடந்துள்ளான். எனவே அவனது செயலில் நேர்மை இருக்காது என்பதனை வாசகர்களுக்கு இளங்கோ குறிப்பால் உணர்த்தியுள்ளளார் எனலாம்.

    வஞ்சிப்பத்தன் வந்த சூழ்நிலையும் அவனது உயர் நிலையும் கோவலனைக் கவர்கின்றன. அந்தக் கவர்ச்சியின் காரணமாக இந்தப் பொற்கொல்லன் நல்லவனா, கெட்டவனா என்னும் எண்ணம் கோவலனுக்கு எழவில்லை. மாறாக இவனே இந்தச் சிலம்பை விற்றுக் கொடுப்பதற்கு ஏற்றவன் என்னும் எண்ணமே எழுகிறது. எனவே,

    “காவலன் தேவிக்கு ஆவதோர் காற்குஅணி
    நீ விலை இடுதற்கு ஆதியோ என”
    (சிலம்பு. கொலைக்களக்காதை அடி. 111-112)

    என்று தெரிவிக்கிறான். கோவலன் தெரிவிக்கும்போதே தான் கொண்டு வந்திருக்கும் சிலம்பானது பாண்டியனின் மணைவி காலுக்கு ஏற்றது என்கிறான். சொத்தெல்லாம் இழந்த பின்னரும் அவனிடம் பழம் பெருமை எண்ணம் நிலைத்தே நின்றிருக்கிறது. எனவேதான் கொண்டு வந்திருக்கும் சிலம்பானது சாதாரணச் சிலம்பு இல்லை என்று தெரிவிக்கும் நோக்கில் தேவிக்குப் பொருத்தமானது என உரைக்கிறான்.  அவ்வாறு உரைத்தது பழம் பெருமையினை உரைக்கும் நோக்கம் உடையது இல்லை என்றால்  தனது சிலம்புக்கு அதிக விலை பெறும் நோக்கமுடையது எனலாம். கோப்பெருந்தேவிக்கும் பொருத்தமானது என்று சொன்னால்  அதிக விலை பெற முடியும் என எதிர்ப்பார்த்து அவன் கூறியிருக்கிறான் என்றும் கொள்ளலாம்.

    நூறு பொற்கொல்லர் சூழந்துவர வந்த வஞ்சிப்பத்தன், தனி ஒருவனாக இருந்த கோவலனைப் பார்த்துப் பணிவாகக் கூறுகிறான்.

    “அடியேன் அறியேன் ஆயினும் வேந்தர்
    அடிமுதல் கலங்கள் சமைப்பேன் யானெக்
    கூற்றத் தூதன் கொதொழு தேத்த
    போற்றருஞ் சிலம்பின் பொதிவாய் அவிழ்த்தனன்
    மத்தக மணியொடு வயிரம் கட்டிய
    பக்திக் கேவணப் பசும்பொற் குடைச்சூல்
    சித்திரச் சிலம்பின் செய்வினை எல்லாம்
    பொய்த்தொழில் கொல்லன் புரிந்துடன் நோக்கின்
    கோப்பெருந்தேவிக் கல்லதை இச்சிலம்பு
    யாப்புற வில்லை என முன்போந்து
    விறல் மிகு வேந்தற்கு விளம்பியான் வரஎன்
    சிறுகுடில் அங்கண் இருமின் நீர்எனக்
    கோவலன் சென்று அக்குறுமகன் இருக்கையோர்
    தேவகோட்டச் சிறையகம் புக்கபின்”
    (சிலம்பு. கொலைக்களக்காதை: அடி.113-126)

    என்னும் அடிகளில் வஞ்சிப்பத்தனின் கபட எண்ணம் வெளிப்படா வஞ்ச நடிப்பு வெளிப்பட்டிருப்பதைக் காண முடிகிறது.

    கோவலன் தான் கொண்டு வந்திருக்கும் காற்சிலம்பு உயர்வானது என்னும் எண்ணத்துடன் இருக்கிறான் என்பதை மிக எளிதில் புரிந்து கொண்டான் வஞ்சிப்பத்தன். எனவே தாழ்ந்த நிலை அடைந்த பின்னும் கோவலனிடம் இருக்கும் உயர்வு எண்ணத்தினை அப்படியே அவனிடம், நிலைபெறச் செய்கிறான். அதற்காகவே தன்னைத் தாழ்த்திக் கொள்கிறான் வஞ்சிப்பத்தன். ‘நீ கொண்டு வந்திருக்கும் சிலம்பின் உயர்வினை என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை, இருப்பினும் அரசிக்குப் பாதமுதல் உள்ள அனைத்து அணிகலன்களையும் செய்யும் பொறுப்புடையவன்’ என்று பெருமையாகச் சொல்கிறான். அவ்வாறு சொல்லும்போது கோவலனைப் பார்த்து வணங்கி உரைத்துள்ளான், அந்த மிதமிஞ்சிய பணிவானது உள்ளே கயமையை மறைத்து வைத்துள்ளதனை யாரும் எளிதில் அறிய முடியாதவாறு காட்சிப்படுத்துகிறது. அதேநேரம் இந்த இடத்தில் இளங்கோ வெளிப்பட்டு அந்த வஞ்சிப்பத்தனைக் கூற்றத்தூதன் என்று குறிப்பிடுகிறார்.

    வஞ்சிப்பத்தன் என்னும் பாத்திரம் மிக உயர்ந்த நடிப்பை வெளிப்படுத்தும் பாத்திரம் என்னும் நிலையில்  படைத்த இளங்கோ, அந்தப் பாத்திரத்தின் நயவஞ்சக எண்ணத்தினைத் தாங்கிக் கொள்ள இயலாமல்  அவ்வப்போது வெளிப்பட்டு, அவனை இகழ்ந்திருப்பதைக் காணமுடிகிறது.

    வஞ்சிப்பத்தனின் பணிவினை நம்பிய கோவலன் தான் கொண்டுவந்த சிலம்புப் பொதியினை அவிழ்க்கிறான், அந்தச் சிலம்பினைப் பார்த்த மாத்திரத்திலேயே அதன் உயர்வினை உணர்ந்துவிடுகிறான் வஞ்சிப்பத்தன். அந்த நிலையிலும் இளங்கோ வெளிப்பட்டு அவனைப் பொய்த்தொழில் கொல்லன் என்று இகழ்ந்துரைக்கிறார்.

    சிலம்பினைப் பார்த்த ஒரு சில நிமிடங்களிலேயே பொற்கொல்லனிடம் சூழ்ச்சி சூழ்ந்துவிடுகிறது. இதுதான் அரசியின் சிலம்பு என்றும் அந்தச் சிலம்பினைத் திருடியவன் இவன்தான் என்றும் நிலைநாட்டிடத் துடிக்கிறான். இவ்வளவு விரைவில் பொற்கொல்லனிடம் சூழ்ச்சி சூழ்ந்ததால்தான் அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று என்னும் நீதி வெளிப்பட்டது.

    காவலன் கொண்ட ஐயம்

    மன்னனிடம் கோவலனைக் கள்வன் என நிலைநிறுத்தியபின் பொற்கொல்லன் காவலர்களை அழைத்துக்கொண்டு தன் இருப்பிடத்தில் இருக்கும் கோவலனிடம் வந்தான். கோவலனது தோற்றத்தைப் பார்த்தான் ஒரு காவலன். இவனது தோற்றமானது இலக்கணத்தின் சிறிதும் மாறாமல் இருக்கிறது, இவன் திருடனாக இருக்க முடியாது என எண்ணுகிறான்.

    “இலக்கண முறைமையின் இருந்தோன் ஈங்கிவன்
    கொலைப்படு மகனலன் என்று கூறும்”
    சிலம்பு. கொலைக்களைக் காதை: அடி. 162-163)

    என்னும் அடிகள் வாயிலாகப் பொற்கொல்லனின் சூழ்ச்சியை உடைக்கப் பார்க்கிறான் அந்தக் காவலன். இந்த காவலனது பேச்சினைப் போல் பிற காவலர்களும் பேசிவிட்டால் தனது சூழ்ச்சி உடைந்து விடும் என்ற எண்ணம் பொற்கொல்லனிடம் எழுகிறது. எனவே திருடர்கள் எத்தகையவர்கள் என்று உரை நிகழ்த்துகிறான் பொற்கொல்லன்.

    திருடர்கள் எட்டுவகையான உத்திகளைத் தங்கள் திருட்டுத் தொழிற்குப் பயன்படுத்துவார்கள் என்கிறான். அந்த எட்டு உத்திகளில் முதலாவதான மருந்து என்னும் உத்தியைப் பயன்படுத்தினால் மன்னன் இட்ட பணியை உங்களால் செய்ய இயலாது. மந்திரத்தை அவர்கள் தங்கள் நாவில் உரைத்துவிட்டு வந்தால் உங்களுக்கு அவன் இந்திரகுமாரன் போலத் தோற்றம் அளிப்பான். தேவ தோற்றத்துடன் தோன்றிக் கையில் பெரும் பொருள் உடையவன் போலச் செல்வான். அவன் வைக்கும் மருந்தில் மாட்டிக் கொண்டால் அவ்விடத்தை விட்டு நம்மால் அகலமுடியாது. இடம், காலம், கருவி என்னும் மூன்றின் துணையுடன் திருடர்கள் திருடப் புகுந்தால் இந்திரன் மார்பில் உள்ள ஆரத்தைக் கூட திருடிவிடுவார்கள். பகல், இரவு என்றில்லாமல் எந்த நேரமும் திருடிவிடுவார்கள் என்று உரைக்கிறான். இந்த உரையோடு நிறுத்திவிட்டால் இந்த காவலர்களுக்கு மேலும் ஐயம் ஏதாவது ஏற்பட்டு விடும் என்பதற்காகத் திருடர்கள் திருடிய சில நிகழ்வுகளைத் தெரிவிக்கிறான்.

    தூதன் போல் அரண்மனை வாயிலில் பகலில் இருந்தவன் இரவில் பெண்ணின் கோலத்துடன் உள்ளே புகுந்துவிட்டான். அவ்வாறு புகுந்தவன் விளக்கு ஒளி மறைந்த இருள் பகுதி வழியாகவேச் சென்றான். இளவரசன் தூங்கிக் கொண்டிருக்கும்போது அவனது வயிர மாலையை அபகரித்தான். திடீரென எழுந்த இளவரசன் அந்த திருடனை நோக்கித் தனது வாளினைப் பாச்சினான். உடனே அந்தத் திருடன் தனது கையில்  இருந்த வாளுறையால் வாளினைப் பறித்துக்கொண்டான். இளவரசன் அந்தத் திருடனை மல்யுத்தத்தில் வீழ்த்தலாம் என்று முயன்றான். அந்தத் திருடன் திடீரென்று மறைந்து கொண்டதால் தூணில் குத்தினான் இளவரசன். இவ்வாறெல்லாம் கூறும் பொற்கொல்லன் என்னும் துணைமை மாந்தன் இல்லை என்றால் இந்த நீதி வெளிப்பட்டிருக்காது என்பது உறுதி.

    பொற்கொல்லனுக்குத் துணையான காவலன்

    காவலர்களில் ஒருவன் பொற்கொல்லனுக்குத் துணைபுரியும் நோக்கில்  இல்லை என்றாலும், ‘கள்வர்க்கும் மற்றவர்க்கும் வேறுபாடு தெரியாது நல்லவர் போன்றே தோன்றுவர். எனவே கொல்லாமல் விடக்கூடாது’ என்கிறான். அவ்வாறு கூறுவதற்கு ஒரு நிகழ்வினையும் கூறுகிறான். நிலத்தைப் பெயர்ப்பதற்கு உரிய உளியினைக் கையில் தாங்கி, நீல ஆடையினை உடுத்திக் கொண்டு அணிகலன்களைக் கவரும் நோக்கத்தோடு ஒரு மழைநாள் இரவில் திருடன் ஒருவன் புலிபோலப் பாய்ந்து வந்தான். அவனைக் கொல்வதற்காக நான் கைவாளினை உருவினேன், அந்த வாளினைப் பிடுங்கிக் கொண்டு அவன் எங்கு மறைந்தான் என்பதைக் காணமுடியவில்லை என்று தெரிவித்தான். அவ்வாறு தெரிவித்துக் கொண்டிருக்கும் வேளையிலேயே கல்லாக் களிமகன் ஒருவன் கோவலனை வாளால் வெட்டிவிடுகிறான். இவ்வாறு கோவலன் கொலைக்களப் படுவதற்குக்   காரணமாக இருந்தவர்கள் அனைவரும் துணைநிலை மாந்தர்களாகவே காணப்படுகின்றனர். இருந்தாலும் காப்பிய நீதிக்குத் துணைநின்று முதன்மைத் தன்மை பெற்றுள்ளார்கள் என்பதனை உணரமுடியும்.

    வஞ்சிப்பத்தன் என்னும் பாத்திரம் கதையின் தலைவன் கோவலன் கொலைக்களப்படுவதற்குக் காரணமாக அமைந்தது என்றாலும் அது விதிக் கொள்கையின்பால் பட்டதே என்பதை சிலப்பதிகாரம் எடுத்துரைக்கிறது. வஞ்சிப்பத்தனின் தோற்றத்தைக் குறிக்கும்போது அவன் நேராக நடக்கவில்லை மாறாகப் பக்கம் சாய்ந்து சாய்ந்து நடந்தான் என்பதாக, இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார். அது அவனின் செயலில் நேர்மை இராது என்பதை உணர்த்தவே என கொள்ளலாம். அவ்வகையில் வஞ்சிப்பத்தனின் மனதில் இருந்த ஊனமே இப்பெரும் ஊழ் செயலாற்றலுக்கு காரணமாயிற்று எனலாம். இதன் மூலம் உடல் ஊனத்தைவிட கொடுமையானதாக உள்ள ஊனம் திகழ்வதையும் சிலப்பதிகாரம் வெளிப்படுத்துவதை அறியமுடிகிறது.

    Share