சிலப்பதிகாரத்தில் வஞ்சிப்பத்தனின் ஊனம்

0

முனைவர் த. ஆதித்தன்
இணைப்பேராசிரியர்
அரிய கையெழுத்துச் சுவடித்துறை
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்-613 010.

காப்பியம், நாவல் போன்றன தனிநபரின் கதையினை மட்டும் எடுத்துரைப்பதாக அமைவதில்லை. அவை சமுதாயத்தைப் பிரதிபலிப்பவை.  கூடிவாழும் பலரைக் கொண்டது சமுதாயம்.  சமுதாயத்துள் உள்ள பல இனத்தாரும் மற்றொரு இனத்தாரோடு முழுவதுமோ அல்லது ஏதேனும் ஒருவகையிலோ இயைந்து வாழும் தன்மையினைக் காணலாம்.  காரணம் எந்த நபராலும் தனித்து இயங்க இயலாது.  பிறர் உறவு இன்றியோ, உதவியின்றியோ வாழ்வது இயலாதது. காட்டினுள் துறவுப்பூண்டு சென்றாலும் எதிர்படும் பறவைகள், விலங்குகள், தாவரங்களைச் சாந்ந்து தானே வாழவேண்டும். எனவே பிறர் தொடர்பின்றி வாழ்தல் இயலாது.

காப்பியமும் அப்படித்தான்.  நூற்றுக்கணக்கான மாந்தர்கள், அவர்கள் தொடர்பான நிகழ்வுகள், அந்த நிகழ்வுகளுக்கு இடையேயான பிணைப்புகள் முதலான  தன்மைகளைக் கொண்டு ஒரு காப்பியம் நீண்டு செல்கிறது.  இவற்றில் அனைத்து மாந்தர்களும் முதன்மை மாந்தர்களை மையமாகக் கொண்டே இயங்குவாரர்கள் என்று தோன்றும்.  ஆனால் அந்த முதன்மை மாந்தரின் இயக்கம் சில துணைநிலை மாந்தர் இன்றி நிகழாது என்பதையும் சிந்திக்க வேண்டியுள்ளது.  ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட சிலப்பதிகாரம் பல துணைநிலை மாந்தர்களைக் கொண்டிருப்பதும் அவர்களில் முதன்மைத் தன்மை கொண்டவர்களையும் காண முடிகின்றது.  அவர்களுள் வஞ்சிப்பத்தன் என்னும் பொற்கொல்லனின் பங்கினை எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகின்றது.

சிலம்பின் நீதிகள்

சிலப்பதிகாரம் உணர்த்தும் மூன்று நீதிகள் அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று, உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர், ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பவை ஆகும்.  இந்த மூன்றினையும்,

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம்
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம்
சூழ்வினைச் சிலம்பு காரணமாகச்
சிலப்பதிகாரம் என்னும் பெயரால்
நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள் என
(சிலம்பு. பதிகம் – அடி 55-60)

என்னும் பதிகத்தின் வாயிலாக நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது.  பதிகத்தினை ஒரு நூலின் முன்னுரையாகக் கொண்டால் அந்த நூலின் மையத்தினைத் தெரிவிக்கும் தன்மையில் இந்தப் பதிகச் செய்தி அமைந்து விளங்குவதைக் காணலாம்.  அந்த மூன்று நீதிகள் நிலைநாட்டப்படுவதற்கும் துணை நிலை மாந்தர்களே முதன்மை நிலையில் துணை புரிந்திருக்கின்றார்கள் என்பதைக் காணமுடிகின்றது.

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று

முதல் நீதியான அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று என்னும் நீதி வெளிப்படுவதற்குப் பாண்டியன்  நெடுஞ்செழியனும் கோப்பெருந்தேவியும் முதற்காரணமாக விளங்குகின்றனர்.  ஆராயாமல் கோவலனைக் குற்றவாளி என்று கருதி மரணத் தண்டனை வழங்கியதன் மூலம் பாண்டியன் நெடுஞ்செழியன் அரசியலில் பிழை செய்தவன் ஆகின்றான்.  ஆராயாமல் தீர்ப்புச் சொல்வதற்கு உரிய காரணங்களில் ஒன்றாகக் கோப்பெருந்தேவி விளங்குகின்றாள்.

கோப்பெருந்தேவியின் சிலம்பைத் திருடிய கள்வன் என்ற குற்றச்சாட்டு, கோவலன் மேல் சுமத்தப்படுகின்றது.  குற்றம் சுமத்தப்பட்டவனிடம் இருக்கும் சிலம்பினை உடனே பெறவேண்டும் என்னும் விரைவு நெடுஞ்செழியனிடம் காணப்படுகின்றது. அந்த விரைவுக்குக் காரணம் கோப்பெருந்தேவி கொண்டிருந்த ஊடலை அந்தச் சிலம்பின் துணைகொண்டு தணிக்கலாம் என்னும் எண்ணமே ஆகும். அதுவே ஆராயாமல் தீர்ப்பு வழங்கும் மனநிலையைப் பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு ஏற்படுத்தியிருகிறது.

கோவலன் கையில் வைத்திருக்கும் சிலம்பானது கோப்பெருந்தேவிக்கு உரிய சிலம்பு என்று பொற்கொல்லன் தெரிவித்த ஒரு செய்தியைத் தவிர பாண்டியன் நெடுஞ்செழியனுக்குக் கோவலன் கையில் இருக்கும் சிலம்பினைப் பற்றி எதுவும் தெரியாது.  பொற்கொல்லன்தான் தேவியின் சிலம்பினைச் சீர் செய்வதற்காகப் பெற்றவன்.  எனவே கோப்பெருந்தேவியின் சிலம்பு எத்தகையது என்பது அவனுக்குத் தெரியும். ஆனால் ஊர் காப்பாளர்களுக்குச் சிலம்பினைத் தெரியுமே தவிர, கோவலனின் கையில் இருப்பது கோப்பெருந்தேவியின் சிலம்பு என்று தெரிவதற்கு வாய்ப்பு இல்லை. அவ்வாறு இருக்கையில், கோப்பெருந்தேவியின் சிலம்பு அந்தக் கள்வனின் கையில் இருந்தால் அவனைக் கொன்று அந்தச் சிலம்பினைக் கொண்டு வாருங்கள் என்று ஆணையிட்ட பாண்டியனின் செயல் அறிவுக்குப் பொருந்தும்  செயலாகத் தோன்றவில்லை. அவ்வாறு நமக்குத் தோன்றும் என்று கருதியே இளங்கோவடிகள் இந்தப் பகுதியின் தொடக்கத்திலேயே ‘வினை விளை காலம் ஆதலின்’ என்று தெரிவித்துள்ளார். தீய செயல் நடப்பதற்கான காரணம் அது என்பதாலேயே நெடுஞ்செழியனிடம் விரைவான எண்ணம் எழுந்துள்ளது. பிற உயிர் தொடர்பான நீதியினை வழங்கும்போது இவ்வளவு விரைவு கூடாது என்று ஓர் அரசனுக்குத் தெரியாமல் இருக்காது. தெரிந்து இருந்தும் அவ்வாறு அவன் விரைந்து ஆணையிடுவதற்குக் காரணமாக அந்தச் சூழல் அமைந்திருக்கிறது என தெளியலாம்.

அவ்வாறு நெடுஞ்செழியன் பதற்றத்துடன் விரைந்து முடிவெடுப்பதற்குக் காரணமாக அமைந்தது கோப்பெருந்தேவியின் ஊடல் ஆகும். எனவே கோப்பெருந்தேவியும் அரசியலில் ஏற்பட்ட பிழைக்குக் காரணம் ஆகிறாள். எனவே சிலப்பதிகாரத்தின் முதல் நீதியாகிய அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று என்னும் நீதிக்கு அடிப்படையாக இந்த இரண்டு துணைநிலை மாந்தர்களும் விளங்கியுள்ளனர் என்பது தெளிவாகிறது.

வஞ்சிப் பத்தனின் பங்கு

பாண்டியன் கொலைத் தண்டனை விதிக்கும் சூழல் உருவாவதற்குக் காரணமாக இருப்பவன் வஞ்சிப்பத்தன் என்னும் பொற்கொல்லன். எனவே துணைநிலை மாந்தனாகிய வஞ்சிப்பத்தனும் அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று என்னும் நீதி வெளிப்படுவதற்கு அடிப்படையாய் அமைந்துள்ளான் எனலாம்.

“துன்பியல் நாடகங்கள் எதிர்மாந்தரை இன்றியமையாதுடையன. சிலம்பில் பாத்திரமாக வரும் பொற்கொல்லன் எதிர் மாந்தனாக அமையினும் உருவமற்ற ஊழ் எதிராற்றல் எனக் கொள்வது இயல்பு” (சுப்பிரமணியன். ச.வே., 1984, இளங்கோவின் இலக்கிய உத்திகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, ப.61) என்னும் அடிகளால் சிலப்பதிகாரத்தின் எதிர்நிலை மாந்தனாக இடம்பெறும் பொற்கொல்லன், துணைநிலை மாந்தனாக இடம்பெற்று எவ்வாறு முதன்மைத் தன்மை அடைந்துள்ளான் என்பதை அறியமுடிகிறது.

“கண்ணுள் வினைஞர் கைவினை முற்றிய
நுண்வினைக் கொல்லர் நூற்றுவர் பின்வர
மெய்ப்பை புக்கு விலங்கு நடைச் செலவின்
கைக்கோல் கொல்வனைக் கண்டனனாகித்
தென்னவன் பெயரொடு சிறப்புப் பெற்ற
பொன்வினைக் கொல்லன் இவனென”
(சிலம்பு. கொலைக்களக் காதை, அடி.105-110)

என்னும் அடிகளில் பொற்கொல்லன் வந்த தன்மையினை இளங்கோ தெரிவித்துள்ளார். அவனை நூற்றுக்கணக்கான கொல்லர் தொடர்ந்து வந்திருக்கின்றனர் என்றால் அவன் பொற்கொல்லருக்கெல்லாம் தலைமை நிலையில் அமைந்திருக்கிறான் என்பதனைத் தெரிந்துகொள்ள முடிகிறது. அவனது உடலினைச் சட்டை பொதிந்திருக்கிறது என்று சிறப்பாகத் தெரிவித்திருக்கும் காரணத்தால் பிற பொற்கொல்லர்கள் மேலாடை என்னும் சட்டை அணியாமல் இருந்திருப்பார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. மேலும் அந்தச் சட்டையை அவனுக்கு உரிய அடையாளமாகவும் இளங்கோ தெரிவித்துள்ளார். ஏனெனில் உயர்நிலை பெற்ற கொல்லனுக்கு உரிய அடையாளங்களில் ஒன்றாக அது அமைந்துள்ளது எனலாம். மேலும் அவனது கையில் கோல் ஒன்று இருத்தாகவும் இளங்கோ குறிப்பிட்டுள்ளார். அந்தக் கோல், பொற்கொல்லனின் தொழிலுக்குத் துணைபுரியும் ஊதுகோலா அல்லது குறட்டுக்கோலா அல்லது தலைமைப் பொற்கொல்லன் என்னும் அடையாளக் கோலா என்னும் சிந்தனையைத் தூண்டுகிறது. அவன் நேராக நடக்கவில்லை, மாறாகப் பக்கம் சாய்ந்து சாய்ந்து நடந்துள்ளான். எனவே அவனது செயலில் நேர்மை இருக்காது என்பதனை வாசகர்களுக்கு இளங்கோ குறிப்பால் உணர்த்தியுள்ளளார் எனலாம்.

வஞ்சிப்பத்தன் வந்த சூழ்நிலையும் அவனது உயர் நிலையும் கோவலனைக் கவர்கின்றன. அந்தக் கவர்ச்சியின் காரணமாக இந்தப் பொற்கொல்லன் நல்லவனா, கெட்டவனா என்னும் எண்ணம் கோவலனுக்கு எழவில்லை. மாறாக இவனே இந்தச் சிலம்பை விற்றுக் கொடுப்பதற்கு ஏற்றவன் என்னும் எண்ணமே எழுகிறது. எனவே,

“காவலன் தேவிக்கு ஆவதோர் காற்குஅணி
நீ விலை இடுதற்கு ஆதியோ என”
(சிலம்பு. கொலைக்களக்காதை அடி. 111-112)

என்று தெரிவிக்கிறான். கோவலன் தெரிவிக்கும்போதே தான் கொண்டு வந்திருக்கும் சிலம்பானது பாண்டியனின் மணைவி காலுக்கு ஏற்றது என்கிறான். சொத்தெல்லாம் இழந்த பின்னரும் அவனிடம் பழம் பெருமை எண்ணம் நிலைத்தே நின்றிருக்கிறது. எனவேதான் கொண்டு வந்திருக்கும் சிலம்பானது சாதாரணச் சிலம்பு இல்லை என்று தெரிவிக்கும் நோக்கில் தேவிக்குப் பொருத்தமானது என உரைக்கிறான்.  அவ்வாறு உரைத்தது பழம் பெருமையினை உரைக்கும் நோக்கம் உடையது இல்லை என்றால்  தனது சிலம்புக்கு அதிக விலை பெறும் நோக்கமுடையது எனலாம். கோப்பெருந்தேவிக்கும் பொருத்தமானது என்று சொன்னால்  அதிக விலை பெற முடியும் என எதிர்ப்பார்த்து அவன் கூறியிருக்கிறான் என்றும் கொள்ளலாம்.

நூறு பொற்கொல்லர் சூழந்துவர வந்த வஞ்சிப்பத்தன், தனி ஒருவனாக இருந்த கோவலனைப் பார்த்துப் பணிவாகக் கூறுகிறான்.

“அடியேன் அறியேன் ஆயினும் வேந்தர்
அடிமுதல் கலங்கள் சமைப்பேன் யானெக்
கூற்றத் தூதன் கொதொழு தேத்த
போற்றருஞ் சிலம்பின் பொதிவாய் அவிழ்த்தனன்
மத்தக மணியொடு வயிரம் கட்டிய
பக்திக் கேவணப் பசும்பொற் குடைச்சூல்
சித்திரச் சிலம்பின் செய்வினை எல்லாம்
பொய்த்தொழில் கொல்லன் புரிந்துடன் நோக்கின்
கோப்பெருந்தேவிக் கல்லதை இச்சிலம்பு
யாப்புற வில்லை என முன்போந்து
விறல் மிகு வேந்தற்கு விளம்பியான் வரஎன்
சிறுகுடில் அங்கண் இருமின் நீர்எனக்
கோவலன் சென்று அக்குறுமகன் இருக்கையோர்
தேவகோட்டச் சிறையகம் புக்கபின்”
(சிலம்பு. கொலைக்களக்காதை: அடி.113-126)

என்னும் அடிகளில் வஞ்சிப்பத்தனின் கபட எண்ணம் வெளிப்படா வஞ்ச நடிப்பு வெளிப்பட்டிருப்பதைக் காண முடிகிறது.

கோவலன் தான் கொண்டு வந்திருக்கும் காற்சிலம்பு உயர்வானது என்னும் எண்ணத்துடன் இருக்கிறான் என்பதை மிக எளிதில் புரிந்து கொண்டான் வஞ்சிப்பத்தன். எனவே தாழ்ந்த நிலை அடைந்த பின்னும் கோவலனிடம் இருக்கும் உயர்வு எண்ணத்தினை அப்படியே அவனிடம், நிலைபெறச் செய்கிறான். அதற்காகவே தன்னைத் தாழ்த்திக் கொள்கிறான் வஞ்சிப்பத்தன். ‘நீ கொண்டு வந்திருக்கும் சிலம்பின் உயர்வினை என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை, இருப்பினும் அரசிக்குப் பாதமுதல் உள்ள அனைத்து அணிகலன்களையும் செய்யும் பொறுப்புடையவன்’ என்று பெருமையாகச் சொல்கிறான். அவ்வாறு சொல்லும்போது கோவலனைப் பார்த்து வணங்கி உரைத்துள்ளான், அந்த மிதமிஞ்சிய பணிவானது உள்ளே கயமையை மறைத்து வைத்துள்ளதனை யாரும் எளிதில் அறிய முடியாதவாறு காட்சிப்படுத்துகிறது. அதேநேரம் இந்த இடத்தில் இளங்கோ வெளிப்பட்டு அந்த வஞ்சிப்பத்தனைக் கூற்றத்தூதன் என்று குறிப்பிடுகிறார்.

வஞ்சிப்பத்தன் என்னும் பாத்திரம் மிக உயர்ந்த நடிப்பை வெளிப்படுத்தும் பாத்திரம் என்னும் நிலையில்  படைத்த இளங்கோ, அந்தப் பாத்திரத்தின் நயவஞ்சக எண்ணத்தினைத் தாங்கிக் கொள்ள இயலாமல்  அவ்வப்போது வெளிப்பட்டு, அவனை இகழ்ந்திருப்பதைக் காணமுடிகிறது.

வஞ்சிப்பத்தனின் பணிவினை நம்பிய கோவலன் தான் கொண்டுவந்த சிலம்புப் பொதியினை அவிழ்க்கிறான், அந்தச் சிலம்பினைப் பார்த்த மாத்திரத்திலேயே அதன் உயர்வினை உணர்ந்துவிடுகிறான் வஞ்சிப்பத்தன். அந்த நிலையிலும் இளங்கோ வெளிப்பட்டு அவனைப் பொய்த்தொழில் கொல்லன் என்று இகழ்ந்துரைக்கிறார்.

சிலம்பினைப் பார்த்த ஒரு சில நிமிடங்களிலேயே பொற்கொல்லனிடம் சூழ்ச்சி சூழ்ந்துவிடுகிறது. இதுதான் அரசியின் சிலம்பு என்றும் அந்தச் சிலம்பினைத் திருடியவன் இவன்தான் என்றும் நிலைநாட்டிடத் துடிக்கிறான். இவ்வளவு விரைவில் பொற்கொல்லனிடம் சூழ்ச்சி சூழ்ந்ததால்தான் அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று என்னும் நீதி வெளிப்பட்டது.

காவலன் கொண்ட ஐயம்

மன்னனிடம் கோவலனைக் கள்வன் என நிலைநிறுத்தியபின் பொற்கொல்லன் காவலர்களை அழைத்துக்கொண்டு தன் இருப்பிடத்தில் இருக்கும் கோவலனிடம் வந்தான். கோவலனது தோற்றத்தைப் பார்த்தான் ஒரு காவலன். இவனது தோற்றமானது இலக்கணத்தின் சிறிதும் மாறாமல் இருக்கிறது, இவன் திருடனாக இருக்க முடியாது என எண்ணுகிறான்.

“இலக்கண முறைமையின் இருந்தோன் ஈங்கிவன்
கொலைப்படு மகனலன் என்று கூறும்”
சிலம்பு. கொலைக்களைக் காதை: அடி. 162-163)

என்னும் அடிகள் வாயிலாகப் பொற்கொல்லனின் சூழ்ச்சியை உடைக்கப் பார்க்கிறான் அந்தக் காவலன். இந்த காவலனது பேச்சினைப் போல் பிற காவலர்களும் பேசிவிட்டால் தனது சூழ்ச்சி உடைந்து விடும் என்ற எண்ணம் பொற்கொல்லனிடம் எழுகிறது. எனவே திருடர்கள் எத்தகையவர்கள் என்று உரை நிகழ்த்துகிறான் பொற்கொல்லன்.

திருடர்கள் எட்டுவகையான உத்திகளைத் தங்கள் திருட்டுத் தொழிற்குப் பயன்படுத்துவார்கள் என்கிறான். அந்த எட்டு உத்திகளில் முதலாவதான மருந்து என்னும் உத்தியைப் பயன்படுத்தினால் மன்னன் இட்ட பணியை உங்களால் செய்ய இயலாது. மந்திரத்தை அவர்கள் தங்கள் நாவில் உரைத்துவிட்டு வந்தால் உங்களுக்கு அவன் இந்திரகுமாரன் போலத் தோற்றம் அளிப்பான். தேவ தோற்றத்துடன் தோன்றிக் கையில் பெரும் பொருள் உடையவன் போலச் செல்வான். அவன் வைக்கும் மருந்தில் மாட்டிக் கொண்டால் அவ்விடத்தை விட்டு நம்மால் அகலமுடியாது. இடம், காலம், கருவி என்னும் மூன்றின் துணையுடன் திருடர்கள் திருடப் புகுந்தால் இந்திரன் மார்பில் உள்ள ஆரத்தைக் கூட திருடிவிடுவார்கள். பகல், இரவு என்றில்லாமல் எந்த நேரமும் திருடிவிடுவார்கள் என்று உரைக்கிறான். இந்த உரையோடு நிறுத்திவிட்டால் இந்த காவலர்களுக்கு மேலும் ஐயம் ஏதாவது ஏற்பட்டு விடும் என்பதற்காகத் திருடர்கள் திருடிய சில நிகழ்வுகளைத் தெரிவிக்கிறான்.

தூதன் போல் அரண்மனை வாயிலில் பகலில் இருந்தவன் இரவில் பெண்ணின் கோலத்துடன் உள்ளே புகுந்துவிட்டான். அவ்வாறு புகுந்தவன் விளக்கு ஒளி மறைந்த இருள் பகுதி வழியாகவேச் சென்றான். இளவரசன் தூங்கிக் கொண்டிருக்கும்போது அவனது வயிர மாலையை அபகரித்தான். திடீரென எழுந்த இளவரசன் அந்த திருடனை நோக்கித் தனது வாளினைப் பாச்சினான். உடனே அந்தத் திருடன் தனது கையில்  இருந்த வாளுறையால் வாளினைப் பறித்துக்கொண்டான். இளவரசன் அந்தத் திருடனை மல்யுத்தத்தில் வீழ்த்தலாம் என்று முயன்றான். அந்தத் திருடன் திடீரென்று மறைந்து கொண்டதால் தூணில் குத்தினான் இளவரசன். இவ்வாறெல்லாம் கூறும் பொற்கொல்லன் என்னும் துணைமை மாந்தன் இல்லை என்றால் இந்த நீதி வெளிப்பட்டிருக்காது என்பது உறுதி.

பொற்கொல்லனுக்குத் துணையான காவலன்

காவலர்களில் ஒருவன் பொற்கொல்லனுக்குத் துணைபுரியும் நோக்கில்  இல்லை என்றாலும், ‘கள்வர்க்கும் மற்றவர்க்கும் வேறுபாடு தெரியாது நல்லவர் போன்றே தோன்றுவர். எனவே கொல்லாமல் விடக்கூடாது’ என்கிறான். அவ்வாறு கூறுவதற்கு ஒரு நிகழ்வினையும் கூறுகிறான். நிலத்தைப் பெயர்ப்பதற்கு உரிய உளியினைக் கையில் தாங்கி, நீல ஆடையினை உடுத்திக் கொண்டு அணிகலன்களைக் கவரும் நோக்கத்தோடு ஒரு மழைநாள் இரவில் திருடன் ஒருவன் புலிபோலப் பாய்ந்து வந்தான். அவனைக் கொல்வதற்காக நான் கைவாளினை உருவினேன், அந்த வாளினைப் பிடுங்கிக் கொண்டு அவன் எங்கு மறைந்தான் என்பதைக் காணமுடியவில்லை என்று தெரிவித்தான். அவ்வாறு தெரிவித்துக் கொண்டிருக்கும் வேளையிலேயே கல்லாக் களிமகன் ஒருவன் கோவலனை வாளால் வெட்டிவிடுகிறான். இவ்வாறு கோவலன் கொலைக்களப் படுவதற்குக்   காரணமாக இருந்தவர்கள் அனைவரும் துணைநிலை மாந்தர்களாகவே காணப்படுகின்றனர். இருந்தாலும் காப்பிய நீதிக்குத் துணைநின்று முதன்மைத் தன்மை பெற்றுள்ளார்கள் என்பதனை உணரமுடியும்.

வஞ்சிப்பத்தன் என்னும் பாத்திரம் கதையின் தலைவன் கோவலன் கொலைக்களப்படுவதற்குக் காரணமாக அமைந்தது என்றாலும் அது விதிக் கொள்கையின்பால் பட்டதே என்பதை சிலப்பதிகாரம் எடுத்துரைக்கிறது. வஞ்சிப்பத்தனின் தோற்றத்தைக் குறிக்கும்போது அவன் நேராக நடக்கவில்லை மாறாகப் பக்கம் சாய்ந்து சாய்ந்து நடந்தான் என்பதாக, இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார். அது அவனின் செயலில் நேர்மை இராது என்பதை உணர்த்தவே என கொள்ளலாம். அவ்வகையில் வஞ்சிப்பத்தனின் மனதில் இருந்த ஊனமே இப்பெரும் ஊழ் செயலாற்றலுக்கு காரணமாயிற்று எனலாம். இதன் மூலம் உடல் ஊனத்தைவிட கொடுமையானதாக உள்ள ஊனம் திகழ்வதையும் சிலப்பதிகாரம் வெளிப்படுத்துவதை அறியமுடிகிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.