ஒளவையார் புறப்பாடல்களில் பெண்நிலைப் பதிவுகள்
முனைவர் மூ. சிந்து
இணைப் பேராசிரியர்
தமிழ்த்துறை
டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி ( தன்னாட்சி)
காளப்பட்டி ரோடு, கோயம்புத்தூர் – 641048
முன்னுரை
இலக்கியங்கள் கால வளர்ச்சிக்கேற்பப் புதுப்பொழிவுடன் தோற்றம் பெறுகின்றது. தமிழ் மொழியில் தினந்தோறும் புதிய புதிய இலக்கியங்கள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. இவ்வாறு தோன்றிய இலக்கியங்களில் வரலாறுகள் ஒன்றாகத் தொகுக்கப்பட்டும் அவற்றில் நிகழும் மாற்றங்கள் குறித்தும் ஆராயப்படுகின்றன. இனியும் ஆராயப்படும் என்பதில் எவ்விதமான ஐயப்பாடுமில்லை என்பதை உறுதியாகக் கூறலாம்.
சங்க இலக்கியங்களின் காலம் என்பது அந்தந்த கால கட்டத்தில் வாழ்ந்த அரசர்கள் புலவர்கள் அவர்களின் ஆட்சிநிலை சிறப்பு ஆகியவற்றின் மூலமாக அறிய முடிகிறது. ஆண்பாற் புலவர்களையே பாராட்டிய காலங்களில் பெண்பாற் புலவர்களும் கல்வியில் மேம்பட்டவர்களாகத் திகழ்ந்தனர். கற்புக் கடம் பூண்ட பொற்புடை மகளீரும் என்ற நிலைமாறி பெண்கள் கல்வி நிலையில் சிறப்புடன் திகழ்ந்துள்ளன ஆண்களுக்கு நிகராப் பெண்களும் சமூகத்தில் இருந்தனர் என்பதை அறியமுடிகிறது.
சங்க காலங்களில் காக்கைப்பாடினியார், நச்செள்ளையார், ஓக்கூர் மாசத்தியார், ஓரம்போகியார், ஒளவையார் என 41பெண் புலவர்கள் கல்வி நிலையில் சிறப்பு பெற்று விளங்கியதை அவர்களது பாடல்கள் மற்றும் செயல்களில் அறியமுடியும். சங்க இலக்கியங்களில் மேற்கூறிய பெண்டிர் தம் சிறப்பினைக் கூறியிருந்தாலும் இதில் அனைவராலும் போற்றப்பட்டு அனைவரின் உள்ளத்தில் சிறப்பிடம் பெற்றுத் திகழ்ந்தவர் என்பதை “ஒளவையார் புறப்பாடல்களில் பெண்நிலைப் பதிவுகள்” கட்டுரையில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஒளவையும் புறப்பாடல்களும்
ஒளவை பாடியவையாகப் புறநானூற்றில் 33 பாடல்கள் கிடைக்கின்றன. இவர் தமது புரவலர்களாக நால்வரைக் குறிப்பிடுகின்றார். அதியமானை பாட்டுடைத் தலைவனாக் கொண்டு 22 பாடல்களும், பொகுட்டெழினியைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு 3 பாடல்களும், நாஞ்சில் வள்ளுவனைப் பற்றி 3 பாடலும், மூன்று வேந்தர் ஒருங்கிருந்த போது அவர்கள் குறித்த 1 பாடலும், பொது நிலையில் 6 பாடல்களும் இவரால் பாடப்பெற்றுள்ளன.
ஒளவையும் அதியமானும்
ஒளவை தம்மை ஆதரித்த புரவலர்களில் குறிப்பிடத்தக்கவனாக அதியமானைப் பதிவு செய்கிறார். அதியமானின் வீரத்தைப் பெரிதுபட அவ்வை எடுத்துரைக்கின்றார் அப்பதிவுகள் பின்வருமாறு.
போரில் அதியமானைக் கூரைப்படை, தார்படைக் கொண்டு வெல்லுதல் இயலாது அவன் மன்றில் தொங்கும் முடிவினில் காற்றுப்பட்டு எழும் ஒலியைக் கேட்டதும் அது போர்க்கான முழக்கமாகக் கருதி பேருக்கு எழும் இயல்புடையவன் (புறம் 89)
புலவர்களுக்கும் நாட்டுமக்களுக்கும் எளியவன் எதிரிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்ற வலிமையன் நீர்த்துறையில் யானையின் கோடுகளைத் தழுவி உடலை வருடி விளையாடுவதைப் பொறுத்துக் கொள்ளும் யானை போல அதியமான் புலவர்க்கு இனியன் அதே யானை மதம் கொண்ட போது பாகனையே பயமுறுத்தும் அதைப் போல போரிடத்தில் அதியமான் சினந்து நிற்பான். (புறம் 315)
வைகல் என்தேர் செய்யும் தச்சன்
திங்கள் வளத்த கால் கால் அன்னான் (புறம் -87)
அதியமானின் பேராற்றலை உவமைகள் கொண்டு ஒளவை முன் வைப்பது சிந்தனைக்குரியது. புலி முன் நில்லா இருளின் நிலை போலவும் வலிமை மிகு எருதின் முன் கடக்க முடியா சாலை எதுவும் இருக்க முடியா நிலை போலவும் அதியமான் முன் பகைவர் விளங்குகின்றனர். இவ்வாறு பெருவீரனாக அதியமானை ஒளவை பதிவு செய்வதன் மூலம் புரவலர்கள் இயல்பை விளக்குகிறார். அதியமான் அன்பிற்கு கட்டுப்பட்டவனாய் (தம் போன்ற பாணர்) பாதுகாவலனாய் வலிமை பெற்றவனாய்ச் சித்தரிப்பதன் மூலம் தம் போன்ற பாடினிக்கான சமூக வெளியைப் புலப்படுத்துகிறார். ஆற்றல் கொண்ட பெருவீரனுக்குச் சமமான சுயமதிப்பை பெற்றவர்களாக தம் போன்ற பாடினிகள் இருந்தமைக்கு அதியன் அவ்வைக்கும் கொடுத்த நெல்லிக்கனி ஒன்றே தக்க சான்றாக்கலாம்.
அதியனிடம் நெல்லிக்கனி உண்டவரும் அவனோடு சேர்ந்து கள்ளுண்டவளுமான இந்த ஒளவை ஆண்-பெண் நட்புக்கு இலக்கியமாய் பங்குநிலை மாதிரியாய் (Role Model) விளங்குகின்றார்.
அதியமானின் கொடைத்திறம்
அதியமான் விருந்தோம்பும் திறத்தில் சிறந்தவன் என்பதை ஒரு நாள் அல்ல இருநாள் அல்ல பலநாள் பலரோடு புலவர்கள் சென்றாலும், தலைநாள் போன்றே அதியன் பரிசளிப்பான். யானைக் கோட்டிடை வைத்த கவளம் போல பரிசில் தப்பாது என்பது உறுதியாகும். (புறம் – 101)
அதியன் வாழ்நாள் நீட்டிக்கச் செய்யும் கருநெல்லிக் கனியை தான் உண்ணாது தனக்கு உண்ணக் கொடுக்க அவ்வை அவனை நீலமணி மிடற்று ஒருவன் போல மன்னுக பெரும நீ என (புறம் 91) இவர் வாழ்த்துகிறார். இவ்வுலகம் நிலைபெற்று விளங்குவதற்கு இத்தகு இறை குணமே காரணமாக அமையும் என்பதாகக் கொண்டு அவ்வை அதியனை நீலமணி மிடற்றன் என்கிறார்.
இம்மொழி வரையறுப்பதாக அமைகிறது, நீலமணி மிடற்றன் என்பது இயற்கையை அதீத ஆற்றலை உணர்த்தும் குறியீடாக அவ்வையால் முன் வைக்கப்படுகிறது எனலாம். இதற்கு அதியனை நாட்டு எல்லையைப் பெருக்கி வளமுடன் வாழ வேண்டுமென்று வாழ்த்தாத தன்மையைக் காரணமாகச் சுட்டலாம்.
தொன்மங்கள் உயிர்ப் பொருளாக விளங்குகின்றன. சமூகத்துடன் துடிப்புள்ள உயிர்த் தொடர்பு கொண்டு விளங்குகின்றன. சமூகத்தின் ஒவ்வொரு நுனிக் கூறுகளுக்குள்ளும் நுழைந்து ஊடுருவிச் செல்கின்றன.
மேலும் நெல்லிக்கனி தந்த அதியமானை தன் தந்தையென பாராட்டுவதன் மூலம் மேற்கூற்றை உறுதி செய்கிறார். அதியனை தந்தையாகப் பாவிப்பது மட்டுமின்றி மக்கள் விரும்பும் மண்ணின் மைந்தனாக அதியன் இருக்க வேண்டுமென்ற கருத்தினை இனங்கான முடிகிறது. ஒளவை தான் பெற்ற கொடை என்றில்லாமல் பெண்கள் கலைகளோடு தொடர்புடையவர்களாகவும் அக்கலையும் கலைஞர்களும் சமூக மதிப்பு பெற்றிருந்தமையும் தம் போன்ற பாணர்கள் குறித்தும் பதிவு செய்கிறார். (புறம் -103)
இல்லிறைச் செரீஇய ஞெலிகோல் போலத்
தோன்றா திருக்கவும் வல்லன் மற்றதன் (புறம் 315)
என்ற ஒளவையின் கூற்றில் அதியனின் கொடை மேம்பாடு உணர்த்துவதுடன் தலைமை பொறுப்பில் உள்ள அவன் அதிகாரமற்றவனாய் படுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் குணம் உடையவனாய் சித்தரிப்பதன் மூலம் ஆணின் பேராண்மை சுட்டுவதாக
அமைகிறது. ஆணிக் அடக்கி ஆளும் குணத்திற்கு மாற்றா பேராண்மை குணம் ஆணின் குணமாக இருக்க வேண்டுமென்றெ அவ்வையின் விருப்பினை இங்கு இனம் காண முடிகிறது.
அதியமானின் இறப்பும் ஒளவையின் இரங்கலும்
அதியமான் இறப்பை ஆற்ற இயலாது ஒளவை மூன்று பாடல்களில் தம் வருத்தத்தைப் பதிவு செய்கிறார். அவை கையறு நிலைத் துறைகளாக அமைகின்றன.
அதியமானின் உடலை எரிக்கின்ற தீ அதனை அணுமி எரித்தாலும் எரிக்கட்டும் அல்லது வானுயர சென்றாலும் செல்லட்டும் வெண்கொற்றக்குடையாய் உலகைக் காக்கின்ற ஞாயிறு போன்ற அதியமானின் புகழை எத்தீயாலும் எரிக்க முடியாது என்பதை
திங்க ளன்ன வெண்குடை
ஞாயிற் றன்னோன் புகழ்மா யலவே (புறம் 231)
என்ற பாடலில் உணரலாம்.
அதியன் தன் அதிகாரத்தால் ஆக்கிரமிப்பு கொள்ள நினையாத மனதையும் நாடு பற்றிய அவன் பார்வையும் இனம் காண முடிகிறது. அதாவது நிலவரைக்குட்பட்ட நாடு என்ற கருத்தியல் ஒளவையால் புறம் தள்ளப்படுகிறது.
(புறம் 232)
இனிபாடுநரும் இல்லை பாடுநர்க்கு ஒன்று ஈருநருமில்லை (புறம் 236) என்ற பாடல் வரிமூலம் பாணருக்கான சமூக வெளியில் அதியனுக்கு இருந்த மரியாதையும் அவன் அவர்களை மதித்த பாங்கும் தன்னிடம் உள்ளத்தைப் பிறருக்கு பகிர்ந்து கொடுத்து தனக்கென வாழா பண்புடையவனாக அவன் இருந்தமை இனம் காட்டுவதுடன் பாணர் குலத்துக்கு நேர்ந்த சமூக நெருக்கத்தையும் இனம் காட்டுகிறது.
பொகுட்டெழினி
அதியமான் வாழ்ந்த காலத்தில் பொருட்டெழினியைச் சிறப்பித்ததாக (புறம் 96) ஒருபாடலும் அதியனின் இறப்பிற்கு பிறகு (புறம் 102) ஆட்சி சிறப்பையும் புறம் (103) குடிச்சிறப்பையும் கூறி ஒளவை மூன்று பாடல்களைப் பாடியுள்ளார்.
தும்பைப் பூமாலை அணிந்த மார்பினையும் நீண்ட கையினையுடைய என்னுடைய தலைவன் அதியனுக்கு மகன் என்பதன் வாயிலாக அதியனின் குணமே அவனுக்கு வெற்றியைத் தருகிறது. அக்குணத்தால் பெண்களால் பொருட்டெழினியும் நேசிக்கப்பட்டான் என்ற குறிப்பினையும் இனம் காண முடிகிறது.
அதியனுக்கு பிறகு பொருட்டெழனி சேம அச்சு போல இருந்து செயல்படுவான் என்பதை
எருதே யிளைய துகமுனை ராவே
கீழ்மரத்தி யாத்த சேவச் சன்ன (புறம் 102)
என்ற பாடல் வாயிலாக உணரமுடிகிறது.
ஒளவையின் எதிர்பார்ப்புகளான ஆளமைப்பண்பு என்பது மேற்கூறிய செய்திகள் வாயிலாக இனம் கொள்ளலாம்.”
நாஞ்சில் வள்ளுவன்
நாஞ்சில் வள்ளவன் கொடை குணமுடையவன். புலவர்களைப் புரக்கும் இயல்புடையோன் என்பதும் தெரிய வருகின்றன. இரப்பவரின் தாழ்ச்சியைக் கருதாமல் தன்னுடைய தரத்தின் உயர்ச்சியை எண்ணிப் பெரிய யானையைக் கொடுத்ததன் வாயிலாக கொடைத்தன்மையை இனங்காணலாம். பாணர் குலத்தின் சமூக மதிப்பறிந்து ஒழுகுபவனாக நாஞ்சில் வள்ளுவன் அவ்வையால் சித்தரிக்கப்பட்டுள்ளான். தன் போன்ற பாணரை சமூக மதிப்பில் உயர்ச்சியாக அவ்வை முன் வைப்பதன் மூலம் பெண் கவிகளுக்கு சமூக வெளியான தன்னிலை அடையாளத்தையும் அவ்வடையாளத்திற்கு வேண்டிய விழைவும் குறிப்பால் உணர்த்துகிறார் எனலாம்.
மூவேந்தர்கள்
ஒளவையார் தான் வாழ்ந்த காலத்தில் பொதுநிலையில் மன்னர்களின் தன்மையை தம் பாடல்களில் வரலாற்று ஆதாரமாக முன்வைத்துள்ளார் என்றாலும், அவ்வையின் காலத்தில் உருவாகிக் கொண்டிருந்த நிலவுடைமை சமூகத்தின் குறியீடுகளாக மூவேந்தர்களையும் நாட்டையும் சுட்டுகிறார் எனலாம்.சுருங்கக் கூறின் அவ்வை காண விழைந்த ஆளமைபண்புள்ள மண்ணின் மைந்தர்களாக அவர்கள் மாற உலக அறத்தை அறிவுறுத்துவதாக அமைகிறது. நாடு என்ற கருத்தியலை அவ்வை புறத்தள்ளிவிட்டு குறுகிய கால வாழ்க்கையை இன்பத்தோடு வாழவேண்டும் என்று ஆணுக்கான சமூக மதிப்புடைய வீரம் முதன்மைப்படுத்தப்படுகிறது. சுருங்ககூறின் அவ்வை முன் வைக்கும் அதியனது வீரம் இனக்குழுவின் வீரம் எனலாம்.
துணைநின்ற நூல்கள்
- புலவர் இரா.இளங்குமரன் – சங்க இலக்கியம் – புறநானூறு
- முனைவர் பொ.நா.கமலாஃ – தொல்காப்பியம் முதல் தெரிதா வரை
- க.பஞ்சாங்கம் – இலக்கியத் திறனாய்வு கோட்பாடுகளும்
-
மாலதி மைத்ரி – விடுதலையை எழுதுதல்
