திவாகர்

 

கோம்டி கொஞ்சம் யோசனை செய்துவிட்டு பேப்பரை எடுத்துக்கொண்டு குறிப்புகள் எழுதிக் கொண்டாள். பிறகு தன் கைப்பையோடு எதிர்வீடான கல்யாண் வீட்டுக்குக் கிளம்பினாள். அவள் அம்மா எதிரே வந்தாள்.

 

“ஏண்டி கோமதி? இன்னிக்கும் கிலினிக் பங்க் அடிக்கப் போறியா?”

 

“பாக்கலாம்மா.. எதிர்வீட்டுக்குதான் போறேன்.. வேலை இல்லேன்னா வந்துடறேன்.. ஆனாலும் என்ன உனக்குக் கிலினிக்லேர்ந்து கலக்ஷன் வந்துடறது இல்லே..”

 

“அது சரிடி.. அந்த கல்யாண் போட்டோவை ஏண்டி இங்க க்லினிக்ல மாட்டி வெச்சுருக்கே..”

 

“கல்யாண் போட்டோவை கல்யாண்னு ஏன் பாக்கறே? அவன் பல்லைப் பாரும்மா.. பல் ஆஸ்பத்திரிக்கு பல்லழகன் போட்டோ இல்லையேன்னு தேடிண்டிருந்தேன்.. இவன் மாட்டினான். இப்பதான் கிலினிக்குக்குக் களையே வந்திருக்கு.”

 

“ஆனாலும் ரொம்ப மோசம்டி நீ.. சீக்கிரம் வந்து சேரு.”

 

கல்யாண் வீடு. சுந்தர் கையைப் பிசைந்துகொண்டே உட்கார்ந்திருக்கிறான். கல்யாண் முகம் சற்று கோபமாக இருப்பதை அங்கு வந்த கோம்டி பார்க்கிறாள்.

 

“என்ன கல்யாண்.. இவர் என்ன சொல்றார்.. ஏதாவது புதுத் தகவல் கொடுக்கிறாரா? அது சரி, இன்னிக்கு வொர்க்கிங்க் டே ஆச்சே.. ஆஃபீஸ் இருக்குமே.. ரொம்ப பிஸியான ஆளாச்சே..”

 

அவளின் கிண்டல் வார்த்தைகள் புரிந்தாலும் அவன் ஒன்றும் பதில் சொல்லவில்லை. கல்யாண் பேசினான்.

 

“கோம்டி! இன்னிக்கு இன்ஸ்பெக்டர் மோகன் இவனை ஸ்டேஷனுக்கு வரச் சொல்லி இருந்தாராம். போயிருக்கான். (சுந்தரைப் பார்த்து) சுந்தர்! நீயே சொல்லுடா அங்க என்ன நடந்ததுன்னு.”

சுந்தர் ஸ்டேஷனில் நடந்ததை விவரிக்கிறான்.

 

போலிஸ் ஸ்டேஷன்

இன்ஸ்பெக்டர் மோகன் சாந்தமாகத்தான் விசாரிக்கிறார்.

 

“மிஸ்டர் சுந்தர்.. நீங்க முதல்ல உங்களை விசாரிக்கறச்சே உங்க மாமாவை கொலை செஞ்ச நாள்லேர்ந்து ஒரு வாரம் முன்னாடி வரைக்கும் பார்க்கலேன்னு சொன்னீங்க.. ஆனா அவர் கார்ல நீங்க அந்தக் குழந்தைங்க ஆசிரமத்துக்கு கொலை நடந்ததுக்கு இரண்டு நாள் முன்னாடி அழைச்சிட்டு வந்ததாக அந்த ஆசிரமம் மேனேஜர் தகவல் கொடுத்திருக்கார். பாலபாலிகா ஆசிரமம் இல்லையா அத்தோட பேரு. இதை ஏன் எங்களுக்குச் சொல்லலே?”

 

சுந்தர் அசரவில்லை. அவனும் நிதானமாகவே பதில் சொன்னான்.

“கரெக்ட்தான் சார். ஆனா எங்க மாமா எங்கிட்ட ஒரு சத்தியம் வாங்கி இருக்காரு சார். அதாவது பாலபாலிகா ஆசிரமத்துக்கு அவர் நிறைய நிதிஉதவி பண்றார் சார். ‘இதை ரகசியமா வெச்சுக்கணும்டா சுந்தர்.. தருமகாரியமெல்லாம் வெளியில தம்பட்டம் அடிச்சுக்கக்கூடாது. ஒரு கை செய்யறது இன்னொரு கைக்குத் தெரியக்கூடாது.. அதனால யார்கிட்டயும் எந்த சமயத்துலயும் சொல்லக்கூடாதுடான்னு சத்தியம் வாங்கினார். நான் தர்மகாரியம் பண்றது ஊருலகத்துக்குத் தெரியணுங்கறது அவசியம் இல்லடா.. அதனாலதான் சொல்றேன்.’ அப்படின்னார். நீங்க சொல்லுங்க இன்ஸ்பெக்டர்.. நான் சத்தியத்தை மீறமுடியாம அப்படி சொன்னேன். ஆனா இதுல ஒண்ணும் பெரிய பொய்யோ அல்லது பெரிய விஷயமே இல்லையே சார். அதனாலே நானும் பெரிசா எடுத்துக்கலே.”

 

“சரி, உங்களுக்குப் பெரிய விஷயம் இல்லேதான் சார். ஆனா கொலைங்கிறது ரொம்பப் பெரிய விஷயம்.”

 

சுந்தர் கெஞ்ச ஆரம்பித்தான்.

 

“சார் அது பெரிய விஷயம்தான் சார்.. ஆனா என் நிலைமையைப் பாருங்க சார்.. மாமா சத்தியம் வாங்கினது எப்படி எல்லார் முன்னாடியும் சொல்லறதுன்னு தெரியலே.. அதனால அந்த சமயத்துல அப்படிச் சொல்லிட்டேன்.”

 

“ஏன் மிஸ்டர் சுந்தர்.. தரும காரியத்தை வெளில சொல்லறதுல என்ன இருக்கு? போகட்டும்.. நீங்க எத்தனை மணிக்கு அங்க போனீங்க? எத்தனை மணிக்கு அவரை வீட்ல விட்டுட்டு அவர் காரை எடுத்துப் போனீங்க எங்கிற விவரமெல்லாம் ஒரு ஸ்டேட்மெண்ட் எழுதிக் கொடுங்க.. ஆசிரமம் விஷயம் தவிர வேற எங்கேயாவது போனீங்களான்னு கூட அதையும் எழுதுங்க. அதாவது நீங்க சம்பந்தப்பட்டது, அல்லது வேற யார் சம்பந்தப்பட்டதா இருந்தாலும் எழுதுங்க.. அப்பறம் உங்களுக்கு யார் மேலேயாவது சந்தேகம் இருக்கா?”

 

“ஸார்.. எனக்கு யார் மேலயும் சந்தேகம்லாம் இல்லே சார்..”

 

“சரி, அன்னிக்குக் காலைல வைத்தீஸ்வரன் கோயில் போனேன்னு சொன்னிங்க இல்லையா.. இங்கிருந்து எத்தனை மணிக்குக் கிளம்பினீங்க.. உங்களுக்கு எத்தனை மணிக்கு கொலை பத்திய முரளி கால் வந்தது வைத்தீஸ்வரன் கோயிலிலேர்ந்து எத்தனை மணிக்குக் கிளம்பினீங்க.. இந்த டீடெயிலும் ஸ்டேட்மென்ட்ல கொடுத்துடுங்க..”

 

சுந்தர் எழுதிக்கொடுத்து வந்தான்.

 

 

கல்யாண் வீடு

 

அதை வீட்டுக்கு வந்து கல்யாணிடம் சொல்லுகையில் அவனுக்குக் கோபம் வந்தது. இந்த விஷயத்தை ஏன் முன்னமே தன்னிடமோ இல்லை கோம்டிக்கோ சொல்லவில்லை என்று கோபமாக சொல்லிக் கொண்டிருந்தான்.

 

“சுந்தர் போலீஸ் ஸ்டேஷன் வந்தது பற்றி இன்ஸ்பெக்டர் மோகன் என்னிடம் பேசினார் கல்யாண். இவர் கொடுத்த ஸ்டேட்மென்ட் விஷயம்லாம் எனக்குத் தெரியும். இன்ஸ்பெக்டர் எங்கிட்டே என்ன கேட்டார்னு எவ்வளோ தூரம் சுந்தரோட ஸ்டேட்மென்ட் உண்மைன்னு விசாரிக்கணும்னு சொன்னார். நானே இன்னிக்கு சாயந்திரம் இவர் ஆஃபீஸுக்குப் போகலாம்னு இருந்தேன். எனிஹவ், நீங்க இங்கே வரவழைச்சது கூட நல்லதுதான். ஏன்னா இங்கதானே கொலை நடந்தது?”

 

சுந்தர் கோபமாகப் பார்த்தான்.

“அப்போ நான் இந்தக் கேஸுல இன்வால்வ் ஆகியிருக்கேன்னு சொல்லறிங்களா மேடம்.?. நான் உங்கள்ட்ட கொஞ்சம் மாத்திச் சொன்னது உண்மைதான். ஆனா மாமா எங்கிட்டே சத்தியம் வாங்கினதாலே இதெல்லாம் வெளியே சொல்லமுடியலே.”

 

அவள் சிரித்தாள்.

“என்ன சுந்தர்.. வெளியே சொல்ல வெட்கப்படவேண்டிய விஷயமா இது? உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லட்டுமா.. நீங்க ஆரம்பத்திலேர்ந்து அதிகம் பொய்தான் பேசறிங்க..  அதனால உங்க மேலே சாதாரணமாகவே இன்ஸ்பெக்டருக்கு ஏற்பட்ட மாதிரி எனக்கும் சந்தேகம் ஏற்படுது..”

 

“பொய்யா.. அப்போ நான் சொன்னது எல்லாமே பொய்னு குற்றம் சொல்லறிங்களா.. கல்யாண்! அநியாயம்டா இது!”

 

“ஏண்டா  ஏற்கனவே பொய் சொல்லிதானே இப்போ வரைக்கும் மாட்டிண்டு இருக்கே? இதோ பார்.. எனக்கு உண்மை தேவை. அதனால இன்ஸ்பெக்டருக்கும் கோம்டிக்கும் ஏற்படற அதே சந்தேகம் எனக்கும் இருக்குடா..”

 

கோம்டி புன்னகையை விரிவு செய்தாள்.

“சரி, கொலை நடந்த அன்னிக்கு நீங்க எங்க இருந்தீங்க?”

 

“நான் உண்மையைத்தான் சொல்லறேங்க.. நான் வைத்தீஸ்வரன் கோயில்லதான் இருந்தேன். மாமா காருலதான் போனேன்.”

 

“சரி, அதுக்கும் முதல் நாள் அதாவது கொலை நடந்ததுக்கு முதல் நாள் எங்க இருந்தீங்க?”

 

“மாமா கார் சர்வீஸ்க்கு விட்டுட்டு ஆஃபீஸ் போனேங்க.. மறுபடியும் மத்தியானம் கூட அங்கேதான் போனேன். அவங்க கொடுத்த சர்வீஸ் ரசீது கூட கார் உள்ஷெல்ஃப்ல வெச்சுருக்கேன். நீங்க வேணுமின்னா செக் பண்ணிக்கலாம்”

 

ரவியிடம் திரும்பினாள்.

“ரவி அந்த சர்வீஸ் ரசீதைக் கொஞ்சம் எடுத்துவரமுடியுமா?” என்று கேட்டவள் அவனருகே காதில் இன்னொன்றையும் சொன்னாள்.

 

“சரி, கார் சரியாக சர்வீஸ் பண்ணாங்களா.. மிஸ்டர் சுந்தர்?”

 

“அடுத்த நாள் ரொம்பதூரம் போயிட்டு வரணுமேன்னு ஒரிஜினல் சர்வீஸ் டீலர்கிட்டே விட்டுட்டுதான் நானும் நல்லாவே சர்வீஸ் பண்ணனும்னு சொன்னேன். வண்டி சூபரா இருந்தது.”

 

“ஓகே மிஸ்டர் சுந்தர்.. கொலை நடந்த நாளுக்கு முதல் நாள் காரை சர்வீஸுக்கு விட்டீங்க. அதுக்கும் முதல் நாள்தான் கந்தசாமியை அழைச்சிண்டு பாலபாலிகா ஆசிரமம் போனீங்க இல்லையா?!”

 

“ஆமா.. ஆமா.. நீங்க சொல்லறது அப்படியே கரெக்ட்..”

 

“இதையும் ஸ்டேட்மென்ட்ல எழுதி போலீஸுக்குக் கொடுத்தீங்க இல்லே?”

 

“ஆமா.. அவங்க எல்லாத்தையும் கேட்டாங்க.. எதுக்கு வம்புன்னு கார் சர்வீஸ் ஒரு சில்லி மேட்டர்னா கூட அதையும் சேர்த்துதான் ஸ்டேட்மெண்ட்ல எழுதினேன்.”

 

ரவி உள்ளே வருகிறான். கையில் உள்ள பேப்பரை கோம்டியிடம் தருகிறான்.

 

“சுந்தர் சொன்னது உண்மைதான் கார் சர்வீஸ் பண்ணது வாஸ்தவம்தான். ரசீதை நல்லா பாரு கோம்டி.” என்று ஒரு நம்பரைக் காண்பித்தான்.

 

“மிஸ்டர் சுந்தர்.. இப்பதான் சொன்னீங்க.. கார் சர்வீஸ்லாம் சில்லி மேட்டர்தான்.. இருந்தாலும் போலிஸ் ஸ்டேட்மென்ட்ல அப்படியே அதைப் பத்தியும் எழுதியிருக்கேன்னு.. ஆனா மிஸ்டர் சுந்தர்.. கார் சர்வீஸ் மேட்டர் சில்லி மேட்டர் இல்லன்னு நான் சின்ன ப்ரூஃப் தரட்டுமா? நீங்க எதையுமே சீரியஸா எடுத்துக்கலே..”

 

சுந்தர் பயந்தான் சற்று. அவளை பரிதாபமாகப் பார்த்தான். அவள் குரல் கொஞ்சம் கடுமையாக வந்தது.

 

“சென்னைலேர்ந்து வைத்தீஸ்வரன் கோயில் போயிட்டு வர கிட்டதட்ட 500 கி.மீட்டராவது ஆகும் இல்லையா.. ஆனா இந்தக் கார் இப்போ வரைக்கும் அதாவது சர்வீஸ் பண்ண தினத்திலேர்ந்து இன்னிக்கு இப்போது வரைக்கும் இந்த ஒரு வாரத்துல நூறு கிலோ மீட்டர் கூட ஓடல. இத்தனைக்கும் இந்தக் காரை நேத்து ஒரு தடவை கல்யாண் யூஸ் பண்ணி முப்பது கிலோமீட்டராவது போயிருப்பாரு.. சர்வீஸ் பண்ணின போது உங்க கார் ஸ்பீடோ மீட்டர்ல உள்ள கார் ரன்னிங்க் ரீடிங்க் இந்த ரசீதுல பேனால அழகா தெளிவா எழுதியிருக்கான். அந்த ரீடிங்க்லேர்ந்து நூறு கிலோமீட்டர் கூட அதிகமா இந்த கார் ஓடலேன்னு இப்போ கல்யாண் கார்ல பார்த்த அதே ரீடிங்க் மார்க் சொல்லுது. ஸோ நீங்க கொலை நடந்த அன்னிக்கு வெளிலே ரொம்ப தூரம்லாம் போகலே.. ஆனா அப்படி போனா மாதிரி பொய் ஸ்டேட்மென்ட் போலீஸ்கிட்ட கொடுத்திட்டு அதையே எங்க காதுலயும் சொல்லி போலீஸுக்குக் கொடுத்த பூவையும் எங்களுக்கும் சேர்த்தே சுத்தியிருக்கீங்க.. நீங்க இனிமேயும் பொய் சொல்லாம உண்மையை சொன்னீங்கன்னா நீங்க எப்படி தப்பிக்கலாம்னு வழியை நாங்க சொல்லுவோம். இல்ல.. முயலுக்கு மூணு கால்தான்னு முரண்டு பிடிச்சீங்கன்னா இதோ இப்படிப்பட்ட ப்ரூஃப் உங்களை அழகாக் காட்டிக் கொடுத்துடும். ஏற்கனவே உங்கமேல சந்தேகத்துல இருக்கற போலீஸ்கிட இந்த மாதிரி சின்ன விஷயம் ப்ரூஃபா கிடைச்சிடுச்சுன்னா அதை வெச்சுண்டு அவங்க அடிக்கற அடியில நீங்கதான் கொலையாளிங்கறதும் அவங்க  வெளிக்கொண்டு வந்துடுவாங்க.. அப்புறம் உங்க இஷ்டம்..”

 

கோம்டி சொல்லச் சொல்ல ஆச்சரியம் அதிக அளவாய்க் காண்பித்து கல்யாண் அவளைக் கையைப் பிடித்துக் குலுக்கினாலும் சுந்தர் தன் தலையைப் பிடித்துக் கொண்டே அப்படியே சோபாவில் சாய்ந்தான். ரவி இப்போது சுந்தரைப் பார்த்தான். அருகே சென்றான்.

 

“இப்போ இன்னொரு உண்மையும் சொல்லணுமே.. கல்யாணோட பெரியப்பா கொடுத்த அந்த பத்து லட்சம் ரூபாயை சிதம்பரத்துல நீங்க கொண்டு போய் கொடுக்கலியே.. அந்தப் பணத்தை எங்கே வெச்சிருக்கீங்க.. அதையும் சொல்லணும்..”

 

சுந்தர் தன் தலையில் அடித்துக் கொண்டு அழுதான்..

“கல்யாண்.. நான் என்னவெல்லாமோ நினைச்சு உங்கிட்டே எல்லா விஷயமும் சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்லயே உன்னைப் பாக்கறச்சே சொல்லலாம்னுதாண்டா இருந்தேன்.. இந்தக் கொலை நடந்த முதல் நாளே நான் தீர்மானம் பண்ணது என்னன்னா அடுத்த நாள் காலைல ஸ்டேஷனுக்கு வந்து அங்கேயே உன்னை உக்காத்தி வெச்சு எல்லா விஷயத்தையும் சொல்லிட்டுதான் இங்க மாமா வீட்டுக்கு அழைச்சுட்டு வரணும்னுதாண்டா.  உனக்குப் பெரிய துரோகம் பண்ணிட்டார்டா.. உனக்கு மட்டுமில்லே.. எனக்கும் சேர்த்துதாண்டா சொல்லறேன். ஐய்யோ.. வேணாம் வேணாம்னு நான் எத்தனையோ முறை சொல்லியும் மாமா கேட்கலியேடா.. அவருக்கென்ன? செய்யறதெல்லாம் செஞ்சிட்டு அவர் பாட்டுக்கு போய்ச் சேர்ந்துட்டார்.. இப்போ யாருடா அவர் செஞ்ச பாவத்துக்கெல்லாம் அனுபவிக்கறது..” அழுதான் அவன்,

 

கல்யாண் கடுமையாகப் பேசினான். “பச்சதாபப்பட்டு அழுதா போதுமா சுந்தர்.. இப்போ வரைக்கும் நீ பொய் சொல்லித்தான் வந்திருக்க.. இன்னும் கூட நீ என்ன நடந்ததுன்னு சொல்லறதுக்கு மனசு உனக்கு வரல்லே..”

 

“இல்லடா.. இல்லே.. நான் சொல்லப் போகறது கொஞ்சம் டெலிகேட்டான விஷயம்டா.. வெளியில தெரிஞ்சா ரொம்ப கேவலமா நினைப்பாங்க.. (கோம்டியை காட்டி) இவங்க முன்னாடி சொல்லறதுக்குக் கூட கூச்சமா இருக்கு.. ஆனா இப்போ வேற வழி தெரியலே.. கல்யாண்.. உன்னோட மாமா ஒரு குரூரமான மெண்டாலிடி உள்ளவர்டா.. ரொம்ப ரொம்பகாலமா இப்படித்தான் இருக்கார். குரூரம்னு சொன்னா கூட அதுக்கு அர்த்தம் இல்லை. இன்னும் மேல.. உனக்கு எப்படி சொல்லறதுன்னு தெரியலே..”

 

கோம்டி சற்று நிதானமாகவே கேட்டாள். “ உங்க மாமா பெரிய பெண் பித்தர்.. அதத்தானே சொல்ல வரீங்க..”

 

தலையை அசைத்தான். “சாதாரண ஸ்த்ரீ வெறியன் இல்ல மேடம்.. எப்படிச் சொல்றதுன்னே தெரியல. அவர் ஒரு சைகோபாத் செக்ஸ் வெறியர்.”

 

“உங்களுக்கு எப்போ தெரிய வந்தது இந்த விஷயம்?”

 

“நாலு மாசமாவே தெரியும் மேடம். ஒரு நாள் சாயங்காலம் ஆஃபீஸ்லேர்ந்து கிளம்பறச்சே மாமா ஃபோன் வந்தது.  ஆடிட்டர் அர்ஜெண்டா சில பேப்பர் டைப் பண்ணனும்னு சொல்லி சில அப்ளிகேஷன் ஃபார்ம் லிங்க் அனுப்பிச்சிருந்தார். அதை கம்ப்யூட்டர்லயே பார்த்து சரியா அந்த காலம்ன் பார்த்து டைப் செய்யணும். இதெல்லாம் முரளியும் செய்வான். ஆனா ரெண்டு மூணு நாளா அவன் வரல்லே.. ஆளும் கிடைக்கலே. அப்போ என்னைக் கூப்பிட்டார். நான் இங்க வந்தேன்.  கம்யூட்டரைக் காமிச்சு அந்த லிங்க் எடுத்து ஃபார்ம் ஃபில் பண்ணி ப்ரிண்ட் அவுட் எடுக்கணும்டா.. அதைப் பண்ணு.. பேப்பர்ல சைன் பண்ணினா ஆடிட்டர் நேரயே  நாளைக்காலைல இன்கம்டாக்ஸ் ஆஃபீஸ்ல கொடுத்துடுவார்டா’ன்னு எனக்குச் சொன்னார். நானும் கம்ப்யூட்டர்கிட்டே உட்கார்ந்து இதையெல்லாம் செஞ்சுண்டுருக்கறச்ச இவர் ஹால்ல தன் ஃபோனை   நோண்டிண்டிருந்தார். நான் முதல்ல அத சரியா கண்டுக்கலதான். கம்ப்யூட்டர் வேலை முடிச்சு பிரிண்ட் அவுட்லாம் எடுத்து அவர்கிட்ட கையெழுத்து வாங்கணும்னு கொஞ்சம் அவர்கிட்டே நிதானமாத்தான் போனேன்.”

 

அவன் நினைவுகள் அந்த நாளிரவு நிகழ்ச்சிக்குத் தாவின. இதே ஹால்தான். மாமா சோபாவில் வெகு சீரியஸாக ஃபோனில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தார். சுந்தர் கையில் பேப்பர்களுடன் மெதுவாக ‘என்ன போட்டோ அது’ என்று ஒரு ஆவலில் அவர் பின்னால் நின்று அவருக்குத் தெரியாமல் எட்டிப் பார்த்தான். எல்லாமே பெண்களின் நிர்வாணப் படங்கள். அதிர்ச்சியில் நிலைமை தெரியாமல் கத்தி விட்டான். அவன் கைகளிலிருந்த பேப்பர்கள் சிதறி கீழே விழுந்தன.

 

“மாமா! என்ன இதெல்லாம்? அதுவும் நீங்களா இப்படி?”

 

மாமாவும் இவன் திடீரென வந்து கத்திக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்தார். அந்த அதிர்ச்சியில் அவசரமாக எழுந்து கொள்ளும்போது தடாலென அவர் கையிலிருந்த ஃபோன் ஏடாகூடமாக கீழே விழுந்து இரண்டாக விரிந்து போனது. அவசரமாக கீழே விழுந்த ஃபோனை எடுத்து அந்த இரண்டுப் பகுதிகளையும் சேர்க்கையில் அது வேலை செய்யாமல் ரிப்பேரானது தெரிய வந்தது. ஆத்திரம் வந்தது மாமாவுக்கு. சுந்தர் பக்கத்தில் வந்து ஆத்திரத்துடன் ‘பளாரென’ அவன் கன்னத்தில் அறைந்தார். சுந்தர் கன்னத்தைத் தடவியபடி அப்படியே நின்றான்.

 

மாமா கொஞ்சம் நிதானத்துக்கு வந்தார். ஒரு கையில் ஃபோனைப் பார்த்துக் கொண்டே அவனைப் பார்த்தார்.

தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.