பெரியபுராணம் எனும் பேரமுதம் – பகுதி 22
63 நாயன்மார்கள் வரலாறு – 20. குலச்சிறை நாயனார்


வன்றொண்டன் எனும் சுந்தரமூர்த்தி நாயனாரால் திருத்தொண்டத்தொகையிலே “பெரு நம்பி” என்று வியந்துரைக்கப்பட்ட பெருந்தகை குலச்சிறையார். தம் மனத்திருக்கும் திண்மையால் அடியவர்களுக்குத் திருத்தொண்டு புரியும் திறத்தினின்றும் சற்றும் வழுவாத சைவ சமய நெறியாளர் இவர்.
கோதில்புகழ் தருமணமேற் குடியார் கோவண்
குலச்சிறையார் தென்னர்குல வமைச்சர் குன்றா
மாதவர்க ளடிபரவு மரபார் பாண்டி
மாதேவி யாரருள்வான் பயிர்க்கு வேலி
காதன்மிகு கவுணியர்கோன் வாதிற் றோற்ற
கையரைவை கைக்கரைசேர் கழுவி லேற்று
நீதியினா ராலவாய் நிமலர்ச் சேர்ந்த
நின்மலனா ரென்மலங்க ணீக்கி னாரே.
சிவனடியார்களை சிவமாக எண்ணி வழிபடும் நெறியில் நின்றவர் குலச்சிறையார் எனும் பெருமகனார். பாண்டி நாட்டின் முதலமைச்சராக விளங்கியவர் என்றாலும் இவர் அடியார் பக்தியில் சிறந்து விளங்கியவர். பழம்பெருமை மிக்க பாண்டிய நாட்டில், புதுக்கோட்டைக்கு அண்மையில் அமைந்துள்ள மணமேற்குடி என்ற ஊரில் அவதரித்தவர். செந்நெல் நிரம்பிய வயல்களும் இனிய கரும்புகளும், அருகே செறிந்து நிற்கும் பாக்கு மரங்களும் என பசுமையான வயல்வெளிகளால் குளிர்ந்துள்ள இடங்களும் சூழ உள்ளதொரு அழகிய நகரம் மணமேற்குடி. பாண்டி நாட்டில் மங்கையர்கரசியார் சைவப் பயிர் வளர்க்கத் துணை நிற்கும் பேறுபெற்றவர் குலச்சிறையார். ஞானசம்பந்தப் பெருமானுடன் தன் சொந்த ஊர் சென்று சிவாலயத்தில் வழிபாடு செய்த பேறும் பெற்றவர் இவர். மதுரை சொக்கலிங்கப் பெருமானை அன்றாடம் வழிபாடு செய்யத் தவறாத சிவனடியார் இவர். அனைத்திற்கும் மேலாக கூன் பாண்டியனாக இருந்த பாண்டியனை நின்ற சீர் நெடுமாறனாக மாறத் துணைபுரிந்தவர்.
கார ணங்கண் ணுதற்கன்பர் என்னவே
வார மாகி மகிழ்ந்தவர் தாள்மிசை
ஆரும் அன்பொடு வீழ்ந்தஞ் சலிமுகிழ்த்
தீர நன்மொழி எய்த இசைத்துளார்.
சிவனடியாருக்குச் செய்யும் பணி சிவனுக்குரியது என்பதால் எம்பெருமானின் இன்னருள் பெறுதற்கு சிவனடியார்களே காரணமானவர் என்பதை உணர்ந்து, அடியவர்களிடத்து அன்பு கொண்டு அவர்களுடைய திருவடிகளில் மிகுந்த அன்பொடும் வணங்கி கைகள் கூப்பித் தொழுது, நன்மொழிகளைப் பொருந்தச் சொல்லி வாழ்பவர்.
குறியில் நான்கு குலத்தினர் ஆயினும்
நெறியின் அக்குலம் நீங்கினர் ஆயினும்
அறிவு சங்கரற் கன்பர் எனப்பெறில்
செறிவு றப்பணிந் தேத்திய செய்கையார்
வினைவழிப்பட்ட நிலையில் தோன்றிய நான்கு குலத்தவர்களாக இருப்பினும், அவர்தம் ஒழுக்க நெறியினின்றும் நீங்கியவர்களாக இருப்பினும் சிவபெருமானிடத்தில் நிலைபெற்ற அறிவுடையவர்கள் என அறியப்பெறின், அவர்களை மனம் பொருந்தப் பணிந்து வணங்கும் செய்கையினை உடையவர் குலச்சிறையார். உலகினர் தாம் சிறந்தனவெனக் கொள்ளும் நலங்களை உடையவராயினும், அந்நலங்களின்றி அளவற்ற தீமைகளை உடையராயினும், அவர் சிவபெருமானின் அடியவர்களாய் இருப்பின், அன்னோரை நிலம் உற வீழ்ந்து வணங்கும் தன்மையினை உடையவர் குலச்சிறையார்.
குலச்சிறை நாயனார் புராணம் சொல்லும் கருத்து
குணத்தில் மிக்கவர்கள் உணவு வேண்டி பெருங்கூட்டத்தாராய் வந்தாலும், அல்லது ஒருவராய் வந்தாலும், எண்ணுதற்கரிய அன்பினால் எதிர் கொண்டு அழைத்து, நட்பு மிகுதியுடன் திருவமுது ஊட்டும் நலத்தினை உடையவர் குலச்சிறையார். அடியவர்கள், திருநீறு, உருத்திராக்கம், ஆகிய சிவவேடத்தால் பொலிவு பெற்று, யாவர்க்கும் மூல காரணமாய் நிற்கும் சிவபெருமானின் திருவைந்தெழுத்தை நா வணங்கி, ஓதி உரைப்பவராயின், அவர் திருவடிகளை நாளும் போற்றிவரும் பண்பினை உடையவர். இத்தகைய அரிய பண்பினரை,
வெற்றவே யடியார் அடிமிசை வீழும்
விருப்பினன் வெள்ளைநீ றணியுங்
கொற்றவன் றனக்கு மந்திரி யாய
குலச்சிறை குலாவி நின்றேத்தும்
ஒற்றைவெள் விடையன் உம்பரார் தலைவன்
என்றும்
கணங்களாய் வரினுந் தமியராய் வரினும்
அடியவர் தங்களைக் கண்டால்
குணங்கொடு பணியுங் குலச்சிறை குலாவுங்
கோபுரஞ் சூழ்மணிக் கோயில்
என்றும் ஞானசம்பந்தப் பெருமான் தம் பதிகத்தில் மகிழ்ந்து குறிப்பிடுகின்றார்.
தாம் பெருஞ் செல்வரும் பாண்டிய மன்னனுக்கு முதன்மந்திரியாய் இருந்தும், சிறிதும் செருக்கு உறாது, இச்சிவபுண்ணியத்தைச் செய்தமையால், சிவனிடத்தே மெய்யன்புடையர் என்பது தெள்ளிதிற் உணரப்படும்.
நம் முன்னோர்கள் சிவனடியாரை சிவமாக எண்ணி வழிபடும் முறையை ஏற்றிப் போற்றி வந்தனர். ஆன்றோர் பெருமக்கள் இறைவனைச் சென்றடைய வழிபாட்டினை முத்திறமாக வகுத்தனர். அவை, சிவலிங்கத் திருமேனியையே சிவமாக எண்ணி வழிபடுதல், குருவையே சிவமாக எண்ணி வழிபடுதல், அடியார்களையே சிவமாகக் கருதி வழிபடுவது போன்றவை. இதனை குருலிங்க சங்கம வழிபாடு என்பர். இவ்வழிபாட்டில் சிவனடியார்களைச் சிவமாக எண்ணி வழிபடும் நெறியில் நின்றவர் குலச்சிறையார்.
திருச்சிற்றம்பலம்
