Blog

  • குறளின் கதிர்களாய்…(42)

    -செண்பக ஜெகதீசன்

    கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
    நாவாயு மோடா நிலத்து. (திருக்குறள்-496: இடனறிதல்)

    புதுக் கவிதையில்…

    இடமறிந்து செயல்படு                              Ratham-R2
    இடர்ப்பாடுகளின்றி வாழ..
    இடம் மாறினால் பாழ்தான்!
    பார்,
    நின்று அசைந்துவரும்
    திடமான தேரும்
    கடலில் ஓடாது,
    கடலில் மிதந்தோடும்
    மரக்கலம்
    ஓடாது நிலத்திலே…!

    குறும்பாவில்…

    தேர் ஓடிடாது கடலில்,
    கப்பல் ஓடிடாது நிலத்தில்,
    கற்றிடு இடமறிந்து செயல்பட…!

    மரபுக் கவிதையில்…

    இடமதை யறிந்தே செயல்படுவாய்,
    இடர்தான் வாழ்வில் இல்லையெனில்,
    கடலில் உலாவரும் கப்பலதைக்
    கரையில் கொணர்ந்தே ஓடவிட்டால்
    கடுகள வேனும் அசையாதே,
    காட்சிக் கழகிய தேரதுவும்
    கடலில் விட்டால் ஓடாதே,
    கருத்திதைக் கொண்டிடு செயல்படவே…!

    லிமரைக்கூ…

    கடலிலே ஓடிடாது தரையினிலோடும் தேர்,
    இடமறிந்து செயல்படு,
    கடலோடும் கப்பலும் கரையிலோடாது பார்…!

    கிராமிய பாணியில்…

    நடந்துக்க நடந்துக்க
    எடம்பாத்து நடந்துக்க,
    எடம்மாறிப் போச்சிண்ணா
    எல்லாமே பாழாவும்…

    கப்பலு கடலுலபோவும்
    தேரு தரைலபோவும்,
    கடலுல ஓடாதய்யா தேரு
    நெலத்துல நவுராதய்யா கப்பலு..

    பாத்துக்க பாத்துக்க
    பாத்தபடி நடந்துக்க,
    நடந்துக்க நடந்துக்க
    எடம்பாத்து நடந்துக்க…!

     

    Share
  • காந்தி கல்லாகிவிட்டார்!

    -ரா. பார்த்தசாரதி

    உண்மை  எங்கே  விலை  போயிற்று எனத்  தேடுவேன்   gandi
    நேர்மை எங்கே என்று எல்லோரிடத்திலும் கேட்பேன்
    எளிமை எங்கே எனத் தேடி அலைந்து கொண்டிருப்பேன்
    தூய்மை  எங்கே என மனம் குமுறித் துடித்துப்போவேன்

    சத்தியத்திற்கே ஒரு சத்தியசோதனையா என எண்ணிடுவேன்
    ’அகிம்சை’  என்ற  வார்த்தை காணாமல் போயிற்றே  என்பேன்
    மனித நேயத்தை இந்நாட்டில் எங்கே என்று கேட்பேன்
    நான் சொன்னதெல்லாம் எங்கே போயிற்று என் நினைப்பேன்

    அன்று வெள்ளையரை வெளியேற்ற அமைதிப் போரைத் துவக்கினேன்
    இன்று மக்கள் தண்ணீருக்காகப் போராட்டத்தை நடத்துகிறார்களே
    எங்கும் ஊழலும், லஞ்சமும் தலை விரித்து ஆடுகிறதே
    நிலைகெட்ட  அரசாங்கத்தை நினைத்தால் தலை சுற்றுகிறதே

    நான் பாடுபட்டதெல்லாம் நாட்டின் விடுதலைக்காகவே
    இன்றைய தலைவர்கள் பாடுபடுவது தன் சொந்தங்களுக்காகவே
    என்னைத் தந்தையாக  நினைத்த  இந்திய மக்களே
    என் சொற்களை மந்திரமாக நினைப்பது எக்காலத்திலே?

    என் மதிப்பு, என் தலை ரூபாய் நோட்டின் முகப்பிலே
    என் கொள்கைகள் எல்லாம் வீசப்படுகின்றதே தெருவிலே
    ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்றேனே
    இன்று காணமுடியாமல் கடற்கரையில் கல்லாய் நிற்கின்றேனே!

     

    Share
  • காற்று வாங்கப் போனேன் – 46

    கே. ரவி

    என்ன, வக்கீல் புத்தியைக் காட்டி விட்டேனோ? கட்சி பேசுவது, சாட்சி சொல்வது என்றெல்லாம் பழக்க தோஷத்தில் எழுதி விட்டேனோ?

    சாட்சி சொல்வது என்றதும் என் நினைவில் நிழலாடும் ஒரு நண்பர், ஒரு பிரபல நடிகர். அவர் இப்பொழுது நம்மிடையே இல்லை; ஆனால், தமிழ் மக்கள் நெஞ்சங்களில் எல்லாம் நீங்கா இடம்பெற்று விட்டவர். அவர் என் கட்சிக்காரராகவும் வந்து சேர்ந்தார், 1980-களில். அவருடைய திரையரங்கம் குறித்து ஒரு வழக்கு ஏற்பட்டு, அதில் நான் அவருக்காக வாதாடும் வழக்குரைஞனாகப் பொறுப்பேற்றுக் கொண்டேன். நாலைந்து நாட்கள் அவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதியரசர் ஆறுமுகம் முன்னிலையில் சாட்சிக் கூண்டில் நின்று சாட்சி சொன்னார். நீதிமன்றத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. நீதியரசரும், அந்த நடிகருடைய நகைச்சுவையான பதில்களைப் பதிவு செய்துகொண்டே, நிதானமாக ரசித்துக் கொண்டிருந்தார். அதில் ஒரு பகுதி:

    எதிரியின் வக்கீல்: என் கட்சிக்காரர் உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகைக்குக் காசோலை வழங்கினாரா?

    நடிகர் : வழங்கினார்.

    எதிரியின் வக்கீல்: காசோலையை என்ன செய்தீர்கள்?

    நடிகர்: வங்கியில் போட்டேன்.

    எதிரியின் வக்கீல்: காசோலை, காசாக மாறியதா?

    நடிகர்: மாறியது.

    எதிரியின் வக்கீல்: பிறகு என்ன செய்தீர்கள்?

    நடிகர்: என்ன்ன்ன செய்தேனா? காசைச் செலவழித்தேன்.

    நீதிமன்றத்தில் சிரிப்பொலி அடங்கச் சில நிமிடங்கள் ஆயிற்று. நீதியரசரும், ஏன், எதிர்க்கட்சிக்காரரின் வக்கீல், என் இனிய நண்பர், மூத்த வழக்கறிஞர் திரு.ஆர்.கிருஷ்ணசாமி உட்பட எல்லாரும் சிரித்துவிட்டனர். அதுவும், “என்ன்ன்ன செய்தேனா? காசைச் செலவழித்தேன்” என்று திருவிளையாடல் திரைப்படத்தில் வரும் தருமியின் பாணியில் நாகேஷ் அவர்கள் நீதிமன்றத்தில் பதில் சொன்னதும் யார்தான் சிரிக்காமல் இருந்திருக்க முடியும்?

    nageshநாகேஷ் போன்ற நல்ல நகைச்சுவை உணர்ச்சி மிக்க நடிகரைப் பார்ப்பது அரிது. அத்துடன் அவர் குழந்தை உள்ளம் படைத்தவர். தினமும் வழக்கு நடந்து கொண்டிருந்த காலத்தில், என்னைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று கருதி, மாலை நேரத்தில் என் அலுவலக மேலாளர் திரு.ஹரிஹரன் அவர்கள் வீட்டுக்குச் சென்று, அன்றைய கோர்ட் நடவடிக்கை குறித்துத் தெரிந்துகொள்வதோடு, ஹரியின் அம்மா செய்து தரும் தோசையைச் சாப்பிட்டு விட்டு, மறுநாள் அதுபற்றி என்னிடம் வானளாவப் புகழ்வார். ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் தினமும் ஒரு முறையாவது என்னைப் பார்ப்பதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

    ஒருமுறை ஹைதராபாத்தில் இருந்து அவரும் நானும் விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்த போது, தனக்கு மிகவும் பிடித்த பாடல் என்று சொல்லி ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி’ என்ற பாடலை விமானத்திலேயே மெல்லிய குரலில் மிக இனிமையாக அவர் பாடியதை நான் மறக்கவே முடியாது. அப்பொழுது அவர் சொன்னார், “ரவி சார்! (என்னை விட வயதில் மிகவும் மூத்த அவர், நான் எவ்வளவு சொல்லியும் அப்படித்தான் என்னை அழைத்தார்). இந்தப் பாடலைக் கேட்கும் போது பாடும் மங்கையின் கனவுக்குள்ளேயே நாம் சென்று விடுகிறோம் இல்லையா”.

    அன்று நாகேஷ் சொன்னதை இன்று நினைத்துக்கொள்கிறேன். இன்னொருவரின் கனவுக்குள், அதுவும், அனுபவக் களத்துக்குள் தன் ரசிகர்களை அழைத்துச் செல்லும் சாதனையைக் கவிஞர் கண்ணதாசன் எவ்வளவு சுலபமாகச் செய்து விட்டார்! இந்தப் பாடலாகட்டும், “கங்கைக் கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம்” என்ற பாடலாகட்டும், அவற்றில் ஒரு மங்கையின் ஏக்கம் மட்டுமா வெளிப்படுகிறது. எந்தப் புருஷோத்தமனின் முன் ஆண்கள், பெண்கள் ஆகிய நாம் அனைவருமே கன்னிப் பெண்களோ, அந்தக் கண்ணனிடம் ஒன்றிவிட வேண்டும் என்ற உயிரின் ஜீவ தாகத்தையன்றோ இந்தப் பாடல்கள் எதிரொலிக்கின்றன!

    “எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் தலைவன்” என்ற பாடலைக் கண்ணதாசன் எழுதிய காலத்தில், தமிழகத்தில் அடுக்குமாடிக் கட்டடங்களே இல்லை. அவர் பாடிய எட்டடுக்கு மாளிகை என்பது இந்த எண்சாண் உடம்புதான் சாமி! அதில் சிறைப்பட்டிருக்கும் ஜீவனின் பிரிவுத் துயரத்தையும், பரம்பொருளோடு கூடிவிடத் துடிக்கும் ஏக்கத்தையும் அந்தப் பாடலில் அவர் பிழிந்து தரவில்லையா?

    வ.ரா. சொன்னது இப்பத்தான் ஜோராப் புரியுது! சாட்சி சொல்வது வேறு, கட்சி பேசுவது வேறு. நாகேஷ் சொன்னது சாட்சி. கண்ணதாசன் பேசியது கட்சி. கண்ணதாசனுக்கும் கட்சிக்கும் எப்போதுமே நெருங்கிய தொடர்பு; ஆனால் அது மாறிக்கொண்டே இருந்த அரசியல் தொடர்பு. அது வேறு கதை.

    என் இசையில் எஸ்.பி.பி. பாடி, 1994இல் வெளியான ‘தெய்வ கானாம்ருதம்’ ஒளிப்பேழை வெளியீட்டு விழாவில் நாகேஷ் கலந்துகொண்டார். ‘என் வக்கீல் அழைத்தால் நான் வராமல் இருக்க முடியுமா?’ என்ற கேள்வியோடு பேச்சைத் தொடங்கி நகைச்சுவையோடு பேசினார். அதே விழாவில் கலந்துகொண்டு சுகி சிவம் பேசும் போது, அந்த ஒலிப்பேழையில் இருந்த “கல்மனம் உருகிக் கனிவதும் எக்காலம் அகலாதா இந்த அகலிகையின் சாபம்” என்ற பாடலைக் குறிப்பிட்டு ஒரு கருத்துச் சொன்னார்: இராமன் திருவடி பட்டுச் சாபம் நீங்கி அகலிகை மீண்டும் பெண்ணானதும், இராமன் அவளைத் தாய் என்றே குறிப்பிடுகிறான். அன்னையைப் போன்ற இந்த மங்ககைக்கு எப்படி இந்த நிலை ஏற்பட்டது என்று இராமன் விஸ்வாமித்திர முனிவரிடம் வினவுவதாகக் கம்ப சித்திரம் பேசுகிறது:

    அன்னையே அனையாட்கு இங்ஙன் அடுத்தவாறு அருளுக

    கெளசல்யா, பத்து மாதம்தான் அவனைக் கருவில் சுமந்தாள். ஆனால், அகல்யா எத்தனை ஆண்டுகள் அவன் வரவுக்காக அவனை நெஞ்சில் சுமந்தாளோ! எனவே, அவளை இராம பிரான் தாயென்றது பொருத்தமே. இதுதான் சிவம் சொன்ன கருத்தின் சாரம். விழாவின் பரபரப்பில் நான் சிவம் பேச்சைச் சரிவர கவனிக்கத் தவறியிருந்தேன். ஆனால், விழா முடிந்த மறுநாள் நாகேஷ் என்னிடம் தொலைபேசியில் சிவம் சொன்ன இந்தக் கருத்தைச் சொல்லி வெகுவாகப் பாராட்டினார். நாகேஷுக்குள் கவிதை ரசனை ஒளிந்திருந்ததை மீண்டும் உணர்த்திய சம்பவம் இது.

    Semmangudiஅந்த விழாவில்தான் செம்மங்குடி சீனிவாச மாமா என்னைக் ‘கவிரவி’ என்று அழைத்தார். அன்று முதல் என்னைப் பார்க்கும் போதெல்லாம் அவர் அப்படியே அழைப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தார். அமரராகும் வரை, கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள், வானவில் பண்பாட்டு மையம் நடத்திய ஒவ்வொரு பாரதி விழாவையும் முன்னின்று நடத்தித் தந்த அந்தப் பெரியவரை என்னால் மறக்கவே முடியாது.

    சாட்சி சொல்லியாகி விட்டது, கட்சி பேசியாகி விட்டது. தீர்ப்பு எப்போது சாமி? நல்ல தீர்ப்பு வருமா? இன்றைய கேள்வி இதுதானே!

    சரி, நுட்ப உடலானது கனவில் கூடத் திட்ப உடலை நீங்கிப் பறக்கிறது என்று சொன்னேனே, அதில் ஒரு சிறு கவனக் குறிப்பை இணைக்க வேண்டும். கனவில் ஓரளவு ஆழம் அல்லது ஓரளவு உயரத்துக்கு மட்டுமே நுட்ப உடல் போகிறது. அதற்குமேல் தாண்டிப் போக அதனால் முடிவதில்லை. அது, முற்றிலுமாகத் திட்ப உடலை நீங்கிப் போவதில்லை. நீண்ட கயிற்றால் கட்டப்பட்ட நாய் போல் கொஞ்சம் தொலைவுதான் அதன் சுதந்திரம். இன்னும் குறிப்பிட்டுச் சொல்வதென்றால், என்னுடைய தனிப்பட்ட அனுபவக் களத்துக்குள்தான் கனவில் என் நுட்ப உடல் அல்லாடுகிறது. நான் அனுபவித்தே இராத எதையும் அது அங்கே எதிர்கொள்வதில்லை. என் அனுபவக் களத்தில் உள்ள, தொடர்பற்ற இரண்டு அனுபவங்களை வேண்டுமானால் தொடர்பு படுத்தி அது அனுபவிக்கலாமே தவிர, என் அனுபவக் களத்தைக் கடந்து செல்ல அதற்கு உரிமை இல்லை. அதாவது, பெரோலில் (Parole) வெளியாகும் கைதி போலத்தானே ஒழிய, பெய்லில் (Bail), அதாவது, பிணையில் வெளியாகும் கைதி போல இல்லை. மீண்டும் வக்கீல் புத்தி!

    ஆனால், கவிதை உதிக்கும் கணத்தில், ஒரு கணம், அது அந்தச் சுதந்திரம் பெறுகிறது. அந்த ஒரே கணத்தில், பல யுகக் கணக்குகளைக் கடந்தும், பல அண்டத் தொலைவுகளைக் கடந்தும் சென்று மீள்கிறது. அப்பொழுதுதான், அது வேறு யுகங்களில், வேறு பரிமாணங்களில் எதிர்ப்படும் அனுபவக் களங்களில் பிரவேசிக்க முடிகிறது.

    கொஞ்சம் இயல்பியல் பாடம் படிக்கலாம். அதுவும் ‘க்வாண்டம் ஃப்ஸிக்ஸ்’ (quantum physics) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் துளிநிலை இயல்பியல் பாடம்! அணுக்கருவுக்குள் கருவின் ஈர்ப்புச் சக்தியை மீற முடியாமல் சிறைப்பட்டுச் சுழலும் சிற்றணுத் துகள் ஒன்று, மிகச் சிறிய, அதாவது, கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாத அளவு மிகச் சிறிய கால அவகாசத்துக்குக் கடனாக அபார சக்தி பெற்று, அதன் மூலம் கருவின் ஈர்ப்புச் சக்தியில் இருந்து விடுபட்டு, வெளிச்சென்று, திரிந்து விட்டு, அந்த கால அவகாசம் முடிவதற்குள் கடன் வாங்கிய சக்தியைத் திருப்பிக் கொடுத்து விட்டு, கருவின் அமைப்பு வட்டத்துக்குள் வந்து ஒன்றுமே நடக்காதது போல் மீண்டும் சுழன்று கொண்டிருக்குமாம். நான் சொல்லவில்லை தம்பி, விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். அது போல், நுட்ப உடல் மிகச் சிறிய கால அவகாசம் ஆன ஒரு கணத்துக்குள் அபார சக்தியைக் கடனாகப் பெற்றுத் தன் பிரக்ஞை வட்டத்தை விட்டு வெளியேகிப் பல யுகங்கள், பல அண்டத் தொலைவுகள் கடந்து சென்று அனுபவங்கள் அள்ளி வந்து மீண்டும் தன் நுட்ப உடலை ஆண்டு கொண்டு உழலும் என்பதை நான் சொல்லவில்லை தம்பி, சித்தர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

    “ஆளை விடப்பா!”

    புத்தி சிகாமணிக்கே தலை சுற்றுகிறது!

    “ஒரு கணத்தில் பல யுகங்களா? இது சாத்தியமா?”

    அதுதானப்பா மனோவேகம். மனோன்மணிக்குத் தெரியும்.

    ஒருமுறை, 1978ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன், ரமணன் அப்போது பங்களூரில், (அப்போது அது பங்களூர் தாங்க!) ஹிண்டு பத்திரிகையில் வேலை பார்த்து வந்தான். அவன் அடிக்கடிக் கடிதங்கள் எழுதுவான், அதுவும் நீண்ட கடிதங்கள். எனக்கென்னவோ, கடிதங்கள் எழுதுவது மட்டும் அவ்வளவாகக் கைவரவில்லை. கவிதை எழுதி விடுவேன், ஆனால் கடிதங்கள் எழுதச் சோம்பல் படுவேன். நான் பதில் கடிதம் எழுதாதது பற்றி ரமணன் சற்று வருத்தப்பட்டு எழுதியிருந்தான். பதிலுக்கு நான் எழுதினேன், கடிதம் இல்லை, கவிதை! அதைக் கூடத் தொலைபேசியில்தான் அவனுக்குப் பாடிக் காட்டினேன் என்று ஞாபகம்:

    கடிதம் எழுதும் வழக்கம் இல்லை

    கவிதை எழுத முடியும் – வெறும்

    சேதி கேட்க ஜீவன் இல்லை

    தேம்பி அழத் தெரியும் – மனம்

    தேம்பி அழத் தெரியும்

    முடிவு கூடப் புலப்படாத பாதை யிந்த வாழ்க்கை – இதில்

    அன்பு நட்பு காதல் பாசம் அளவி லாத சேர்க்கை

    (கடிதம் எழுதும் வழக்கம் இல்லை)

    ஒருக ணத்தில் உருவம் எய்தி ஒரு கணத்தில் மறையும் – மனம்

    உலகம் என்றும் யுகங்கள் என்றும் உருவகங்கள் புனையும்

    (கடிதம் எழுதும் வழக்கம் இல்லை)

    வான மிங்கு மழை பொழிந்து வாழ்த்துகின்ற போதும் – இருள்

    வடிவ மொன்று மின்னலாய் ஒளி வழங்குகின்ற போதும் – இனிய

    கானம் ஒன்று கவிதையாகக் காதில் வந்து மோதும் – உன்

    ஞாபகத்தை உறுதி செய்யப் பாடல் ஒன்று போதும்

    (கடிதம் எழுதும் வழக்கம் இல்லை)

    ஒரு கணம் போதும். மனம், உருவம் எடுக்கவும், உலகம், யுகங்கள் என்று பல உருவகங்கள் புனையவும்!

    பாரதி என்ன சொல்கிறான் கேட்கலாம். கண்ணபிரான் தன் சக்கராயுதத்தை எடுப்பது ஒரு கணம்தான்; அடுத்த கணமே, அதாவது, மறுகணமே, உலகத்தில் தர்மம் நிலைநாட்டப்படுமாம்.

    “அப்படியா சங்கதி,” சிகாமணி நீட்டி முழக்குகிறான். “ஓ, அதான், அர்ஜுனன் சுபத்திரையை, அதாவது கண்ணனின் தங்கையைக் கடத்தக் கண்ணனிடமே ஐடியா கேட்டப்ப, கன்ணன் ரெண்டு நிமிடம் எடுத்துக்கிட்டாரோ?”

    சிகாமணி சிண்டு முடியப் பார்க்கிறான். பாரதி படாரென்று அவன் முதுகில் தட்டி, ” அடே, உன் நிமிடக் கணக்கைக் குப்பையில் போடு. கண்ணன் கணக்கோ கணக் கணக்கு. அதாவது கணங்களால் ஆன கணக்கு, கன ஜோரான கணக்கு. அவனுடைய ஒரு கணத்துக்கும் அடுத்த கணத்துக்கும் நடுவில் இன்னொரு கணம் கிடையாது. இரண்டு கணங்களும் ஒரே கணம்.”

    சக்கரத்தை எடுப்ப தொருகணம்

    தருமம் பாரில் தழைத்தல் மறுகணம்

    இக்கணத்தில் இடைக்கணம் ஒன்றுண்டோ

    சிகாமணி தலையைப் பிய்த்துக் கொள்கிறான்: இதானே வேணாங்கறேன். 2 = 1. என்னப்பா தப்புக் கணக்குச் சொல்லித் தருகிறாய்!

    “தப்புக் கணக்கில்லை தம்பி. தப்பாத கணக்கு. இன்னும் புரியவில்லை என்றால் மேலும் சொல்கிறேன்” என்று சொல்லி விட்டு பாரதி மடமடவென்று கவிதை பொழிகிறான்:

    கணம்தோறும் வியப்புக்கள் புதிய தோன்றும்

    கணம்தோறும் வெவ்வேறு கனவு தோன்றும்

    கணம்தோறும் நவநவமாம் களிப்புத் தோன்றும்

    கருதிடவும் சொல்லிடவும் எளிதோ ஆங்கே

    கணம்தோறும் ஒருபுதிய வண்ணம் காட்டிக்

    காளிபரா சக்தியவள் களிக்கும் கோலம்

    கணம்தோறும் அவள்பிறப்பாள் என்று மேலோர்

    கருதுவதன் விளக்கத்தை இங்குக் காண்பாய்

    அப்பா, உண்மையிலேயே தலை சுற்றுகிறதப்பா.

    இந்தக் கணங்கள் அடுக்குத் தொடராய் இருந்தாலும், சுபத்திரையைக் கடத்தக் கண்ணன் இரண்டு கணங்கள் எடுத்துக் கொண்டாலும், சரணம் என்று ஒருவன் அவனே கதி என்று வந்து அடைக்கலம் கேட்டுவிட்டால் ஒரே கணத்தில் அவனுக்கு அபயம் அளிப்பவன் கண்ணன். அதையும் பாரதி சொல்கிறான்:

    பொன்னவிர் மேனி சுபத்திரை மாதைப் புறங்கொண்டு போவதற்கே – இனி

    என்ன வழியென்று கேட்கில் உபாயம் இருகணத்தே உரைப்பான் – அந்தக்

    கன்னன் வில்லாளர் தலைவனைக் கொன்றிடக் காணும் வழியொன்றில்லேன் – வந்திங்கு

    உன்னை அடைந்தனன் என்னில் உபாயம் ஒருகணத்தே உரைப்பான்

    நான் சமீபத்தில், அதாவது இரண்டாண்டுகளுக்கு முன்னால் எழுதிய பாடல் ஒன்று இப்பொழுது நினைவுக்குள் அடியெடுத்து வைக்கிறது!

    தோன்றிய பிறகு, வந்து சேர இரண்டு ஆண்டுகளா, எவ்வளவு மெதுவாக வருகிறது?

    அப்படிச் சொல்லாதீர்கள். அது வந்த வேகம் அசாத்திய வேகம். தான் தோன்றிய கணத்தையும் அது முந்திக் கொண்டு வந்து விட்டதாம். நான் சொல்லவில்லை. அதுவே சொல்கிறது. பாட்டைக் கேளுங்கள்:

    இந்தக் கணம் இன்னும் வரவில்லை – அதை

    முந்தி வந்த திந்தப் பாடல்

    சந்தம் எதுகை உவமை புலமை

    எந்த நகையும் அணிந்துகொள் ளாமல்

    முந்தி வந்த திந்தப் பாடல்

    வந்த கணத்தை வழியனுப்பி – வர

    விருக்கும் கணத்தை வரவேற்கச்

    சொந்தக் கணமொன் றில்லாமல் – அதி

    சூட்சுமமாய் ஒரு சொப்பனமாய்

    முந்தி வந்த திந்தப் பாடல்

    அந்தரமோ நிரந்தரமோ – இந்த

    அனுபவத் தையென்ன சொல்லுவது

    காந்தநிலை ஏகாந்தநிலை – இது

    காலத்தை யும்வெற்றி கொள்ளுவது

    இந்தக் கணம் என்றும் தொடருவது – பேர்

    ஒளியாய் நெஞ்சில் படருவது

    சரி தம்பி. இந்தக் கணத்துக்கு இவ்வளவுதான்! அடுத்த கணத்தில் சந்திப்போம்.

    (தொடரும்)

    Share
  • இந்தியாவின்​ முதல் பௌதிக விஞ்ஞான மேதை​ ​ ஸர் ஜகதிஷ் சந்திர போஸ்

    — சி. ஜெயபாரதன்.

     

     இந்தியாவின்

    ​ முதல் பௌதிக விஞ்ஞான மேதை​

    ஸர் ஜகதிஷ் சந்திர போஸ்

    Jagadish Chandra Bose -1

    ஸர் ஜகதிஷ் சந்திர போஸ்

    சி. ஜெயபாரதன், B.E. (Hons), P. Eng (Nuclear),  கனடா

    பாரத தேசத்தின் விண்ணலை முன்னோடி ஆராய்ச்சி விஞ்ஞானி

     

    பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் நான்கு சிறப்பான நிபுணர்கள் கம்பியில்லாத் தொடர்பை உலகில் ஏற்படுத்த இராப் பகலாக ஆராய்ச்சியில் ஈடுபட்டார்கள்! இத்தாலியில் பொறியியல் வல்லுநர், மார்கோனி [Marconi Guglielmo (1874-1937)]. ஜெர்மனியில் பெளதிக விஞ்ஞானி கார்ல் பிரெளன் [Karl Braun(1850-1918)]. ரஷ்யாவில் ​ரஷ்ய ​விஞ்ஞானி அலெக்ஸாண்டர் போபாவ் [Alexander Popov (1859-1905)]. இந்தியாவில் பெளதிக விஞ்ஞானி ஜகதிஷ் சந்திர போஸ் [Jagadis Chandra Bose].  மெய்யாக போஸ்தான் கம்பியில்லாத் தொடர்பை ஜனவரி 1897 இல் அனைவருக்கும் முன்பாக அமைத்துக் காட்டியவர். அதிர்ஷ்ட தேவதை அருட்கண் திறந்து ஆசீர்வதிக்கா விட்டாலும், இந்தியாவின் விஞ்ஞான நிபுணர் ஜகதிஷ் சந்திர போஸ்தான் வானொலித் தொடர்பு ஆய்வில் முதலில் வெற்றி பெற்றவர் என்பது விஞ்ஞான வரலாற்றில் குறிக்கப்பட வேண்டிய நிகழ்ச்சியாகும்!

    நோபெல் பரிசு பெற்ற ஸர் சி.வி. ராமனுக்கும் முன்பாகவே விஞ்ஞான ஆய்வுகளில் மூழ்கிக் கம்பியில்லாத் தொலைத் தொடர்பை உலகில் உண்டாக்கிய நான்கு முன்னோடி வல்லுநர்களில் ஒருவராகப் பெயர் எடுத்தவர் ஜகதிஷ் சந்திர போஸ். அத்துடன் பொது வினை புரியும் அநேக நுண்ணலைச் சிறு சாதனங்களைப் [Microwave Components] படைத்தவர். அவர் மில்லி மீட்டர் நீளலைகளில் [Millimeter Wavelengths] ஆய்வு செய்து பிறரை விட 50 ஆண்டுகள் முன்னதாக இருந்தார்! ரஷ்ய விஞ்ஞானி போபாவுக்கும் முதலாக, இங்கிலாந்தில் மார்க்கோனி [மே மாதம் 1897] படைப்பதற்கு முன்பாக, போஸ் கம்பியில்லாத் தொடர்பை ஜனவரி 1897 இல் அமைத்துக் காட்டினாலும், இறுதியில் நோபெல் பரிசு பெற முடியாது சரியான சமயத்தில் இந்தியாவின் முதல் பௌதிக விஞ்ஞானி, ஜகதீஸ் சந்திர போஸின் உன்னத விஞ்ஞான ஆக்கம் உலகின் கண்களுக்குத் தென்படாமலே போனது!

    இந்தியாவின் முதல் பௌதிக விஞ்ஞான மேதை

    இந்தியாவில் நவீன விஞ்ஞான ஆராய்ச்சியின் தந்தை என்று சிலரால் போற்றப்படுவர் ஜகதிஷ் சந்திர போஸ்! 1930 இல் பெளதிகத்திற்கு நோபெல் பரிசு பெற்ற ஸர்.சி.வி. ராமன் (1888-1970) காலத்துக்கும் சிறிது முற்பட்டு விஞ்ஞான வளர்ச்சிக்கு பாரதத்தில் விதை யிட்டவர், J.C. போஸ். செடி, கொடி, மரம், புல், பூண்டுக்கும் மனிதர், விலங்குகளைப் போல் உணர்ச்சிகள் உண்டு என்று முதலில் அறிவித்தவர் போஸ்! தாவரவியல் விஞ்ஞானத்தில் ஆழ்ந்து பயிர் இனங்களின் நுண்ணிய​உணர்ச்சியைக் கருவிகள் மூலம் பதிவு செய்து மனிதர், விலங்குகளைப் போன்ற உயிர் இனங்களை ஒத்துள்ளது என்று கண்டு பிடித்தவர் போஸ்! விலங்குகளின் தசைகளுக்கு இணையாக தாவரவியல் தசைகளும் [Plant Tissues] உள்ளன என்று எடுத்துக் காட்டியர், போஸ்! ரேடியோ மார்கோனியைத் தெரிந்த அளவுக்கு, ஸர் சி.வி. ராமனை அறிந்த அளவுக்கு, தேசீய வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸைப் புரிந்த கொண்ட அளவுக்கு இந்தியருக்கும், உலகினருக்கும் பாரதத்தின் முதல் பெளதிக விஞ்ஞானி, ஸர் ஜகதிஷ் சந்திர போஸைப் பற்றிப் பூர்வமாகத் தெரியாது!

    பதினெட்டாம் நூற்றாண்டில் மின்சக்தி யுகம் [Electricity Age] தோகை விரித்ததும் கம்பியில்லாத் தொடர்பைப் [Wireless Communication] பற்றி வேட்கை உண்டாகி அடுத்து நூறாண்டுகள் விஞ்ஞானிகளும், பொறியியல் நிபுணர்களும் முயன்று வந்திருக்கிறார்கள்! 1795 டிசம்பர் 16 ஆம் தேதி ஸ்பெயின் தேசத்து விஞ்ஞானி, ஸால்வா [Salva] ஸ்பெயின் விஞ்ஞானக் கழகத்தில் [Spanish Academy of Sciences] தொலை வரைவுக்கு மின்சக்தி உபயோகம் [On the Application of Electricity to Telegraphy] என்னும் புதிய கருத்து வெளியீட்டைச் சமர்ப்பித்து ரேடியோ சாதனத்திற்கு முதலில் விதை ஊன்றினார். ஆனால் தீவிர முயற்சிகள் 1830 ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் ஆரம்பமாயின! விஞ்ஞான வல்லுநர்கள் பலர் அத்துறையில் மூழ்கி 1895 ஆம் ஆண்டில் ஓரளவு வெற்றி பெற்று முதலில் சிறிதளவு தூரத்துக்கு ரேடியோ வானலையை அனுப்பிக் காட்டினர்!

    Marconi-1

    இத்தாலிய விஞ்ஞானி மார்கோனி

    பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் நான்கு சிறப்பான நிபுணர்கள் கம்பியில்லாத் தொடர்பை உலகில் ஏற்படுத்த இராப் பகலாக ஆராய்ச்சியில் ஈடுபட்டார்கள்! இத்தாலியில் பொறியியல் வல்லுநர், மார்கோனி [Marconi Guglielmo (1874-1937)]. ஜெர்மனியில் பெளதிக விஞ்ஞானி கார்ல் பிரெளன் [Karl Braun(1850-1918)]. ரஷ்யாவில் விஞ்ஞானி அலெக்ஸாண்டர் போபாவ் [Alexander Popov (1859-1905)]. இந்தியாவில் பெளதிக விஞ்ஞானி ஜகதிஷ் சந்திர போஸ் [Jagadis Chandra Bose]. போட்டியில் எல்லோரையும் முந்திக் கொண்டதாகக் கருதப்பட்டு மார்க்கோனியும், கார்ல் பிரெளனும் 1909 இல் நோபெல் பரிசைத் தட்டிக் கொண்டு போய்ப் பகிர்ந்து கொண்டார்கள்! மெய்யாக போஸ்தான் கம்பியில்லாத் தொடர்பை ஜனவரி 1897 இல் அனைவருக்கும் முன்பாக அமைத்துக் காட்டியவர். அதிர்ஷ்ட தேவதை அருட்கண் திறந்து ஆசீர்வதிக்கா விட்டாலும், இந்தியாவின் விஞ்ஞான நிபுணர் ஜகதிஷ் சந்திர போஸ்தான் வானொலித் தொடர்பு ஆய்வில் முதலில் வெற்றி பெற்றவர் என்பது விஞ்ஞான வரலாற்றில் குறிக்கப்பட வேண்டிய நிகழ்ச்சியாகும்! அமெரிக்காவின் மின்துறை மின்னியல் பேரவை IEEE [The Institute of Electrical & Electronics Engineers] J.C. போஸ் ரேடியோ சாதனத்தைக் கண்டு பிடித்த முன்னோடிகளில் [Pioneers of Radio] ஒருவர் என்று மட்டுமே சமீபத்தில் சான்றிதழ் கொடுத்துள்ளது!

     Popov Radio Equipment

    அலெக்ஸாண்டர் போபாவ் [Alexander Popov (1859-1905)]

    இந்தியாவில் நவீன விஞ்ஞான ஆராய்ச்சியின் தந்தை என்று சிலரால் போற்றப்படுவர் ஜகதிஷ் சந்திர போஸ்! 1930 இல் பெளதிகத்திற்கு நோபெல் பரிசு பெற்ற ஸர்.சி.வி. ராமன் (1888-1970) காலத்துக்கும் சிறிது முற்பட்டு விஞ்ஞான வளர்ச்சிக்கு பாரதத்தில் விதை யிட்டவர், J.C. போஸ். செடி, கொடி, மரம், புல், பூண்டுக்கும் மனிதர், விலங்குகளைப் போல் உணர்ச்சிகள் உண்டு என்று முதலில் அறிவித்தவர் போஸ்! தாவரவியல் விஞ்ஞானத்தில் ஆழ்ந்து பயிர் இனங்களின் நுண்ணிய ​உணர்ச்சியைக் கருவிகள் மூலம் பதிவு செய்து மனிதர், விலங்குகளைப் போன்ற உயிர் இனங்களை ஒத்துள்ளது என்று கண்டு பிடித்தவர் போஸ்! விலங்குகளின் தசைகளுக்கு இணையாக தாவரவியல் தசைகளும் [Plant Tissues] உள்ளன என்று எடுத்துக் காட்டியர், போஸ்! ரேடியோ மார்கோனியைத் தெரிந்த அளவுக்கு, ஸர் சி.வி. ராமனை அறிந்த அளவுக்கு, தேசீய வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸைப் புரிந்த கொண்ட அளவுக்கு இந்தியருக்கும், உலகினருக்கும் பாரதத்தின் முதல் பெளதிக விஞ்ஞானி, ஸர் ஜகதிஷ் சந்திர போஸைப் பற்றிப் பூர்வமாகத் தெரியாது!

    Radio Inventers

    ஹெர்ட்ஸ், போபாவ் & மாக்ஸ்வெல்

    ஜகதிஷ் சந்திர போஸின் ஆரம்ப வாழ்க்கை வரலாறு

    1858 நவம்பர் 30 ஆம் தேதி வங்காளத்தில் மைமென்சிங் [Mymensigh, Bengal] என்னும் ஊரில் ஜகதிஷ் சந்திர போஸ் பிறந்தார். இருபத்திரண்டு வருடங்கள் இந்தியாவின் பள்ளியிலும், கல்லூரியிலும் சிறப்பாகக் கல்வி கற்று மேற்கொண்டு லண்டன் பல்கலைக் கழகத்தில் மருத்துவம் பயில, 1880 இல் இங்கிலாந்துக்குச் சென்றார். ஓராண்டுக்குள் போஸ் இயற்கைவியல் விஞ்ஞானத்திற்கு [Natural Science] உபகாரச் சம்பளம் பெற்றுக் கிறித்துவக் கல்லூரியில் படிக்கக் கேம்பிரிடிஜ் பல்கலைக் கழகத்திற்குத் தாவினார். அங்குள்ள அவரது ஆசிரியர்களில் குறிப்பிடத் தக்கவர், பேராசிரியர் ஜான் ராலே [John W.S. Rayleigh (1842-1919)]. அவரிடம் கற்ற கல்விப் பயிற்சி போஸின் பிற்கால விஞ்ஞானப் படைப்புகளுக்கு மிகவும் பேராதரவாய் இருந்தது. போஸ் 1884 இல் கேம்பிரிட்ஜில் B.A. பட்டத்தையும், லண்டன் பல்கலை கழகத்தில் B.Sc. பட்டத்தையும் பெற்றுக் கொண்டு இந்தியாவுக்கு மீண்டார். கல்கத்தாவில் பிரசிடென்ஸிக் கல்லூரியில் பெளதிகத்தில் நுழைவுப் பேராசிரியர் பதவியை 1885 இல் ஒப்புக் கொண்டு வேலையில் சேர்ந்தார். அப்பணியில் இருந்த போது, அவரது முன்னாள் பிரிட்டிஷ் பேராசிரியர் ஜான் ராலேயின் சீரிய கல்வி முறைகளைக் கையாண்டு, விஞ்ஞானக் காட்சிச் சாதனங்களை மாணவர்களுக்கு இயக்கிக் காட்டி, கைதேர்ந்த ஆசிரியர் என்று பெயர் பெற்றார். அவரிடம் மாணவராகப் படித்தவர்களில் பலர் பின்னால் பெரும் பெளதிக மேதையாக பெயர் பெற்றனர்.

    Popov & Marconi Receivers

    ஸர் ஆலிவர் லாட்ஜ் [Sir Oliver Lodge] எழுதிய ஹையன்ரிச் ஹெர்ட்ஸ் & பின்வந்தவர்கள் [Heinrich Hertz & His Successors] என்னும் நூலை ஆழ்ந்து படித்து, மின்காந்தக் கதிர்வீச்சின் [Electromagnetic Radiation] தன்மைகளைப் படித்து, ஹெர்ட்சியன் அலைகளைப் [Hertzian Waves] பற்றி விபரமாக அறிந்து கொண்டார். அதன் பிறகு 1894 இல் கல்லூரியில் ஒர் ஒதுக்குப் புறத்தை அறையாக மாற்றிக் கதிரலை ஆய்வுச் சோதனைகள் [Refraction, diffraction, & Polarization] பலவற்றைத் தனியாகச் செய்ய ஆரம்பித்தார். ரேடியோ சிற்றலைச் சோதனைகளுக்கு அலையீர்ப்பியை [Receiver] உண்டாக்க காலினாப் படிகத்தை [Galena Crystal] விருத்தி செய்து முதன் முதலில் பயன்படுத்தினார். கல்கத்தாவில் 1898 இல் ஜெ.சி. போஸ் தான் முதலில் மில்லி மீட்டர் நீளலைகளை [Millimeter Wavelengths] உண்டாக்கிப் புரிந்த ஆராய்ச்சியை லண்டன் ராஜீய விஞ்ஞானக் கூடத்திற்கு [Royal Institution, London] எழுதி அனுப்பினார். 1904 ஆம் ஆண்டு அவரது, முதல் ‘மின்காந்தக் கதிரலை உளவிப் [Detection of Electromagnetic Radiation] படைப்புக்குக் காப்புரிமை [Patent Rights] வழங்கப் பட்டது!

    கல்லூரியில் 1915 வரைப் பேராசிரியராகப் பணி புரிந்து விலகி, 1917 இல் கல்கத்தாவில் போஸ் ஆய்வுக் கூடத்தை ஆரம்பித்து, அவர் இறக்கும் வரை [1937] அதன் ஆணையாளராக இருந்தார். 1920 இல் இங்கிலாந்து ஸர் பட்டத்தையும், F.R.S. [Fellow of Royal Society] கெளரவ அங்கீகாரத்தையும் J.C. போஸூக்கு அளித்தது.

    Bose microwave apparatus

    ஜகதிஷ் சந்திர போஸ் புரிந்த விஞ்ஞானச் சாதனைகள்

    (1894-1899) உலகின் பல்வழித் தொடர்பு [Multimedia Communication] முறையைத் துவக்கிய முன்னோடிகளில் ஒருவர் ஜகதிஷ் சந்திர போஸ். முதலில் இந்தியாவில் ஹெர்ட்ஸியன் அலைகளைப் [Hertzion Waves] பற்றிய சோதனை ஆராய்ச்சிகளை ஆரம்பித்து, மிகச் சிறிய 5 மில்லி மீட்டர் ரேடியோ அலைகளை [Radio Waves] உண்டாக்கிக் காட்டியவர், போஸ். தொடர்புக் கம்பமுடன் தூக்கிச் செல்லும் சாதனத்தைச் [Portable Apparatus with Antenna] செய்து, 5 mm அலைகளின் ஒளிக்காட்சித் [Optical Properties] தன்மைகளைக் கண்டு ஆராய்ந்தவர். தற்கால நுண்ணலைப் பொறியல் துறைக்கு [Microwave Engineering] அது அடிகோலியது. முதல் கம்பியில்லாத் தொலைத் தொடர்பைப் போஸ் 1895 ஜனவரியில் கல்கத்தாவில் செய்து காட்டினார். மின்காந்த அலைகளைப் பயன்படுத்தித் தூரத்திலிருந்து தூண்டி, கம்பி யில்லாமல் ஒரு மின்சார மணியை அடிக்கச் செய்தார்! அடுத்து அம்முறையில் வெடி மருந்தை வெடிக்கச் செய்தார்! 1896 இல் இங்கிலாந்தின் தினச் செய்தித்தாள் [Daily Chronicle], ‘ஆக்க நிபுணர் J.C. போஸ் ஏறக்குறைய ஒரு மைல் தூரம் கம்பி யில்லாமல் மின்னலைச் சமிக்கைகளை அனுப்பித் தொலைத்தொடர்பு செய்துள்ளார்! இது முதலில் செய்த ஓர் ஒப்பற்ற உயர்ந்த சாதனை! ‘ என்று பறை சாற்றியது! அரைக்கடத்தியைப் [Semiconductor] பயன்படுத்தி முதலில் அமைக்கப் பட்ட அவரது காலினா உளவியும் [Galena Detector] ஒளி மின்னழுத்தச் சிமிழும் [Photovoltaic Cell] 1904 இல் அமெரிக்கக் காப்புரிமை [U.S. Patent No.755840] பெற்றன.

    (1899-1907) கோஹெரர் உளவி [Coherer Detector] பற்றி முதற்படி ஆய்வு செய்து விலங்கினம், தாவர இனம், தாதுக் கலப்புத் திரவங்கள் [Inorganic Compounds] ஆகிய வற்றில் எழும் எல்லா விதத் தூண்டலையும் நுகர்ந்து அவை மின்சாரப் பதிவு [Electric Response to Stimulation] செய்வதைக் கண்டு பிடித்தார். உயிரினப் பெளதிக [Biophysical Phenomena] நிகழ்ச்சிகளின் தாது மாதிரிகளைத் [Inorganic Models] தயாரித்துத், தாவர இனம், விலங்கினத்தின் சதைகள் [Tissues] அனுப்பும் தூண்டலை மின்சார, யந்திரவியல் முறைகளில் பதிவு செய்தார். அம்முறையில் மனிதரின் கண்ணொளி, மூளையின் நினைவுச் சரங்கள் [Vision & Memory Units of Brain] ஆகியவற்றில் எழும் அதிர்வு அலைகளையும் ஆராய்ந்தார்.

    Microwave Spectrometer

    (1907-1933) தாவர இனங்களின் உணர்ச்சி முறைகளை ஆராய்ந்து, தாதுப் பண்டம், விலங்கினம் ஆகிய இரண்டின் உணர்ச்சிகளுக்கும் அவை இடைப்பட்டது என்று கண்டு பிடித்தார். போஸ் தனது ஆராய்ச்சிகளைச் செய்ய பலவிதக் கருவிகளை ஆக்கினார். மிக நுணுக்கமான நகர்ச்சி

    ​ ​

    களைப் பதிவு செய்யும் சுய இயக்கக் கருவிகள் காயம் பட்டத் தாவரப் பயிர்கள் உண்டாக்கும் மென்மையான உணர்ச்சியை வரைந்து காட்டின. J.C. போஸ் 1917 நவம்பர் 30 ஆம் தேதியில் தனது போஸ் ஆய்வுக் கூடத்தை [Bose Institute] ஆரம்பித்து வைத்தார். அன்று ‘உயிரினத்தின் கூக்குரல் ‘ [The Voice of Life] என்னும் சொற்பொழிவை நிகழ்த்தி, போஸ் ஆய்வுக் கூடத்தை பாரத நாட்டிற்கு அர்ப்பணம் செய்தார்.

    நூறாண்டுகளுக்கு முன்பே கல்கத்தாவில் J.C. போஸ் மில்லி மீட்டர் மின்னலையை உண்டாக்கி, அவற்றை உளவிக் காணும் [Generation & Detection of Millimeter Waves] ஆய்வுகளைச் செய்து, அவ்வலைகளின் மூலம் பொருள்களின் குணாதிசயங் களையும் குறிப்பிட்டு எழுதினார். இக்காலத்தில் பயன்படும் நமக்குப் பழக்கமான நுண்ணலைச் சிறு கலன்கள் [Microwave Components], அலை வழிகாட்டி [Waveguide], கொம்பு மின்கம்பம் [Horn Antenna], போலரைஸர் [Polarizers], மின்தடுக்கி லென்ஸ் [Dielectric Lenses], முப்பட்டை [Prisms], மின்காந்த அலைவீச்சை உளவும் அரை மின்கடத்திகள் [Semconductor Detectors of Electromagnetic Radiation] ஆகிய யாவற்றையும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில் போஸ் தன் ஆராய்ச்சிகளுக்குப் பயன் படுத்தி யிருக்கிறார். அவை யாவும் இப்போது அவர் அமைத்த போஸ் ஆய்வுக் கூடத்தில் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன.

    Bose lecturing

    போஸ் அமைத்த ரேடியோ சாதனங்களின் கண்காட்சி மாளிகை

    போஸ் தான் அமைத்த கருவிகளைக் கல்கத்தாவின் காட்சி மாளிகையில் [Bose Museum] பலர் காண வைத்துள்ளார். 1986 இல் காட்சி மாளிகை புதிய இடத்திற்கு மாறியது. அங்கே அடிக்கடி நுண்ணலைப் பொறியியல் [Microwave Technology] பற்றிப் பேரவைச் சொற்பொழிவுகள் நிகழ்ந்து வருகின்றன. இந்திய அரசின் மின்னியல் துறையின் [Dept of Electronics] ஆதரவில் இயங்கும், கல்கத்தா பல்கலைக் கழகத்தின் மின்னியல் பொறியியல் கூடத்தின் வானலைப் பெளதிக மாணவர்கள் செய்முறைப் பயிற்சிக்காக போஸ் காட்சி மாளிகைக்குப் போய் வருகிறார்கள்.

    போஸ் எழுதிய விஞ்ஞான நூல்கள்: உயிருள்ள, உயிரில்லாப் பிறவிகளின் உணர்வெழுச்சி [Response in the Living & Non-Living (1902)], தாவரங்களின் நரம்பு இயக்க முறைகள் [The Nervous Mechanism of Plants (1926)].

    அவரிடம் மாணவராக இருந்தவர்களில் சிலர் பின்னால் பெரும் பெளதிக மேதைகளாக உலகப் புகழ் அடைந்தனர். சிறப்பாக போஸான் [Boson] என்னும் அடிப்படைத் துகளைக் கண்டு பிடித்து, ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் அவர்களுடன் இணைந்து புகழ் பெற்ற ‘போஸ்-ஐன்ஸ்டைன் புள்ளியியல் ‘ [Bose-Einstein Statistics] கோட்பாடை உண்டாக்கிய சத்யேந்திர நாத் போஸ் [Satyendra Nath Bose (1894-1974)] அவரிடம் கற்ற விஞ்ஞானி. போஸான் போஸ் [Boson Bose] என்றும் உலகில் அழைக்கப்படும் எஸ். என். போஸ், பேராசிரியர் ஜகதிஷ் சந்திர போஸின் ஒப்பற்ற மாணவர்!

    Bose Statue

    குடத்து விளக்காய் ஒளிவீசிய ஆசீய தீபம் அணைந்தது!

    1937 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் தேதி ஜகதிஷ் சந்திர போஸ் தனது 79 ஆவது வயதில் பீஹாரில் கிரிடி [Giridih, Bihar] என்னும் ஊரில் காலமானார். அவர்தான் ரேடியோ அலைகளைத் தேட முதன் முதலில் மின்னியல் அரைக்கடத்தி இணைப்பைப் [Electronic Semiconductor Junction] பயன் படுத்தியவர். 1977 இல் திடப் படிக மின்னியல் [Solid-state Electronics] துறைக்கு நோபெல் பரிசு பெற்ற ஸர் நெவில் மாட் [Sir Neville Mott], ‘ஜகதிஷ் சந்திர போஸ் P-type, N-type அரை மின்கடத்திகள் [P-type, N-type Semiconductors] தோன்றப் போவதை எதிர்நோக்கி, அவரது காலத்திற்கும் முன்பாக அறுபது ஆண்டுகள் முன்னேறி இருந்தார் ‘ என்று புகழ்ந்து கூறியிருக்கிறார்.

    நோபெல் பரிசு பெற்ற ஸர் சி.வி. ராமனுக்கும் முன்பாகவே விஞ்ஞான ஆய்வுகளில் மூழ்கிக் கம்பியில்லாத் தொலைத் தொடர்பை உலகில் உண்டாக்கிய நான்கு முன்னோடி வல்லுநர்களில் ஒருவராகப் பெயர் எடுத்தவர் ஜகதிஷ் சந்திர போஸ். அத்துடன் பொது வினை புரியும் அநேக நுண்ணலைச் சிறு சாதனங்களைப் [Microwave Components] படைத்தவர். அவர் மில்லி மீட்டர் நீளலைகளில் [Millimeter Wavelengths] ஆய்வு செய்து பிறரை விட 50 ஆண்டுகள் முன்னதாக இருந்தார்! ரஷ்ய விஞ்ஞானி போபாவுக்கும் முதலாக, இங்கிலாந்தில் மார்க்கோனி [மே மாதம் 1897] படைப்பதற்கு முன்பாக, போஸ் கம்பியில்லாத் தொடர்பை ஜனவரி 1897 இல் அமைத்துக் காட்டினாலும், இறுதியில் நோபெல் பரிசு பெற முடியாது சரியான சமயத்தில் J.C. போஸின் உன்னத விஞ்ஞான ஆக்கம் உலகின் கண்களுக்குத் தென்படாமலே போனது!

    *****************************

    1.  http://en.wikipedia.org/wiki/Jagadish_Chandra_Bose

    2.  http://www.conferencecallsunlimited.com/history-calling/

    3.  http://www.iloveindia.com/indian-heroes/jagadish-chandra-bose.html

    4.  http://www.ieeeghn.org/wiki/index.php/Jagadish_Chandra_Bose

    5.   http://en.wikipedia.org/wiki/Invention_of_radio

    +++++++++++++++++++++

    S. Jayabarathan  [jayabarathans@gmail.com]  October ​5, 2014.

     

     

    Share
  • என்ன விலை அழகே!!!

    — கவிஞர் காவிரிமைந்தன்.

     

    kaathalar thinam

     

    கவிதை என்னும் கனிமொழியில் தினம் உருகிக் கிடப்பதால் வாலி அவர்களின் வார்த்தைகள் அனைத்தும் முத்து முத்தாகவு உதிர்கின்றன!  அழகு என்னும் ஆபரணத்தை மங்கை அணிந்து வரும் போதிலே அதை வர்ணிக்க வேண்டும் என்றால் சொல்லவும் வேண்டுமோ? “பல்லவன் சிற்பிகள் அன்று பண்ணிய சிற்பத்தில் ஒன்று பெண்ணென வந்தது இன்று சிலையே!” என்று  வார்த்தையில் வரைந்தளிக்க வாலியால்தான் முடிகிறது! காதலர் தினம் பாடல் தினம்தோறும் பாடலாம் போல்!

    படைத்தான் இறைவன் உனையே
    மலைத்தான் உடனே அவனே
    அழகைப் படைக்கும் திறமை முழுக்க
    உன்னுடன் சார்ந்தது என்னுடன் சேர்ந்தது
    விடிய விடிய மடியில் கிடக்கும்
    பொன் வீணை உன் மேனி
    மீட்டட்டும் என் மேனி
    விரைவினில் வந்து கலந்திடு
    விரல்பட மெல்லக் கனிந்திடு

    இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இனிய இசையில் அழகைச் சுமந்துவரும் ஆனந்த பைரவிகள்! ஒவ்வொரு பாடலிலும் உயிர்ப்பு விசைகலந்து அளித்துள்ளார் போலும்.. வரிகள் எவ்வண்ணம் மின்னுகின்றனவோ அவ்வண்ணமே இசையும் இங்கே ஆடிப்பாடி.. வருகிறது!

    பல்லவன் சிற்பிகள் அன்று
    பண்ணிய சிற்பத்தில் ஒன்று
    பெண்ணென வந்தது இன்று சிலையே
    பல்லவன் சிற்பிகள் அன்று
    பண்ணிய சிற்பத்தில் ஒன்று
    பெண்ணென வந்தது இன்று சிலையே
    உந்தன் அழகுக்கில்லை ஈடு
    தினம் தினம் உனை நினைக்கிறேன்
    துரும்பென உடல் இளைக்கிறேன்
    உயிர் கொண்டு வரும் பதுமையே
    உனைவிட இல்லை புதுமையே
    உன் புகழ் வையமும் சொல்ல
    சித்தன்ன வாசலில் உள்ள
    சித்திரம் வெட்குது மெல்ல உயிரே
    உன் புகழ் வையமும் சொல்ல
    சித்தன்ன வாசலில் உள்ள
    சித்திரம் வெட்குது மெல்ல
    நல்ல நாள் உனைச்சேரும் நாள்தான்

    வற்றாத ஜீவநதிபோல் வரிகள் விழ எக்காலமும் கேட்டு மயங்கும் இசையை ரகுமான் தர இயக்குனர் கதிர் இயக்கத்தில் காதலர் தினம் கானங்கள் காலகாலம் நிலைக்கும் என்பது கன்னித்தமிழின் தீர்ப்பு! உயிர்கொண்ட ஓவியமாய் உலவி வரும் பேரழகை உள்ளத்தில் வாங்கி கவிதைமலர்களால் அலங்கரித்து வாலி அவர்கள் செய்திருக்கும் பணி பாராட்டத்தக்கது! இக்காலத்தில் இதுபோன்ற பாடலா என்று கேள்வியெழ வைத்தது.  பிறகுதான் கவிஞர் வாலியின் கைவண்ணத்தில் தெரிந்தது! காலகாலமாய் கவிஞர்கள் காதலை எழுதிக்குவித்திருந்தாலும் இன்னும் எழுத இதோ இருக்கிறது என்று காட்டியிருக்கும் அற்புதக்கவிஞர் வாலியின் விரல்களுக்கு நன்றி! நல்லதோர் பாடலை நற்றமிழ் புனைந்து நடமாடவிட்டிருக்கும் அத்தனைக் கலைஞரகளுக்கும் உள்ளத்து நன்றிகளை உரித்தாக்குகின்றேன்!

    http://www.youtube.com/watch?v=K7lE7n_mc1I
    காணொளி: http://www.youtube.com/watch?v=K7lE7n_mc1I

    படம்: காதலர் தினம்
    பாடல்: வாலி
    இசை: AR ரஹ்மான்
    பாடியவர்: உன்னி மேனன்
    …………………………………………………………..
    என்ன விலை அழகே …
    என்ன விலை அழகே …
    சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
    விலை உயிர் என்றாலும் தருவேன்
    இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன்
    ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்
    ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்

    என்ன விலை அழகே
    சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
    விலை உயிர் என்றாலும் தருவேன்
    இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஓ
    ஒரு மொழியில்லாமல்
    ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்..
    ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்..

    படைத்தான் இறைவன் உனையே
    மலைத்தான் உடனே அவனே
    அழகைப் படைக்கும் திறமை முழுக்க
    உன்னுடன் சார்ந்தது என் விழி சேர்ந்தது
    விடிய விடிய மடியில் கிடக்கும்
    பொன் வீணை உன் மேனி
    மீட்டட்டும் என் மேனி
    விரைவினில் வந்து கலந்திடு
    விரல்பட மெல்லக் கனிந்திடு
    உடல் மட்டும் இங்கு கிடக்குது
    உடன் வந்து நீயும் உயிர் கொடு
    பல்லவன் சிற்பிகள் அன்று
    பண்ணிய சிற்பத்தில் ஒன்று
    பெண்ணென வந்தது இன்று சிலையே
    பல்லவன் சிற்பிகள் அன்று
    பண்ணிய சிற்பத்தில் ஒன்று
    பெண்ணென வந்தது இன்று சிலையே
    உந்தன் அழகுக்கில்லை ஈடு
    என்ன விலை அழகே
    சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
    விலை உயிர் என்றாலும் தருவேன்
    இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஓ..
    ஒரு மொழியில்லாமல்
    ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்

    உயிரே உனையே நினைந்து
    விழி நீர் மழையில் நனைந்து
    இமையில் இருக்கும் இரவு உறக்கம்
    கண் விட்டுப் போயாச்சு
    காரணம் நீயாச்சு
    நிலவு எரிக்க நினைவு கொதிக்க
    ஆராத நெஞ்சாச்சு ஆகாரம் நஞ்சாச்சு
    தினம் தினம் உனை நினைக்கிறேன்
    துரும்பென உடல் இளைக்கிறேன்
    உயிர் கொண்டு வரும் பதுமையே
    உனைவிட இல்லை புதுமையே
    உன் புகழ் வையமும் சொல்ல
    சிற்றென்ன வாசலில் உள்ள
    சித்திரம் வெட்குது மெல்ல உயிரே
    உன் புகழ் வையமும் சொல்ல
    சிற்றென்ன வாசலில் உள்ள
    சித்திரம் வெட்குது மெல்ல லல்லலா
    உன்னை நாளும் சேரும் நாள்தான்

    என்ன விலை அழகே
    என்ன விலை அழகே
    சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
    விலை உயிர் என்றாலும் தருவேன்
    இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஓ
    ஒரு மொழியில்லாமல்
    ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்..
    ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன் ..
    ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன் ..

    vaali(1)ar-rahman-dc-0306_0_0_0_0_1unnimenonKadhalar_Dhinam_DVD_Cover

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy

    “பாலா பிஷேகமே பட்டா பிஷேகமாய்
    கோலோ கலமாகக் கொண்டாடும் -மாலோலன்;
    ஆவிந்தன் பாலில் அபிஷேக நீராடி
    கோவிந்தன் கொற்றவைக் கூத்து”….கிரேசி மோகன்….

    “அங்கதன்வாள் ஏந்தல், அனுமனிரு தாள்பிடித்தல்,
    தங்கமுடி தம்பியர் தாங்குதல், -மங்கல
    கங்கைநீ ராட்டலில்லை ,கம்பன்பா ராட்டலில்லை
    கங்கியாலா னான்கண்ணன் கோன்”….கிரேசி மோகன்….

    கோன் -அரசன்….
    கங்கி -கண்ணனின் ஆஸ்தான பசு….

    பண்டிதர்களும் ,பணக்காரர்களும் காத்திருக்க பழனிச் சாமியுடன் பிச்சை எடுத்து பகவான் ரமணர் தனது கரத்தை மண்டையில் தேய்த்தபடி சொன்னார் “Now I Feel Like A King” என்று….விடுதலை பெற்றவனே வீரன் ….வீரனே வேந்தன்….Being Simple தான் பட்டாபிஷேகம்….தானே தானாய் நிற்றல்….கண்ணனும் ரமணரும் Cousins….

    “பிச்சை எடுத்துண்டு பின்மண்டை உச்சியில்
    மிச்சத்தை தேய்த்த மகான்ரமணர் -RICHசானார்;
    கொட்டாயில் பாலாடை கட்டிய கண்ணனின்
    பட்டா பிஷேகம்SIM PLE”….கிரேசி மோகன்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy

    “பார்த்தனுக்கு முன்பே பசுவுக்கு கீதையை
    வார்த்தைகள் இல்லாது, வேய்ங்குழல் -கீர்த்தனையாய்
    ஊதுகிறான் கண்ணன்; உலக உயிர்களில்,
    பேதமில்லை என்றே பொருள்”….
    (OR)
    பாடுகிறான் கண்ணன் ;பசுபார்த்தன் என்றவேறு
    பாடுபோக ஞானம் பிறப்பு”….கிரேசி மோகன்”….கிரேசி மோகன்….

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy

    ” கண்ணனைக் கண்டேன்நான் கேசவ்கை வண்ணத்தில்,
    ZENனென கண்மூடி சர்பம்மேல் -நின்னவன்;
    மென்பூ கசங்காது மேவிடும் வண்டேபோல்
    KUNGFU கிருஷ்ணா குதிப்பு”….கிரேசி மோகன்….

    This is Kung Fu Krishna drawn years back. 🙂 Rhis also includes
    the Yin and Yang- subject is Kaliyamardhana.
    With regards,
    Keshav

    Share
  • வெற்றிப் பத்து

    கே.ரவி

    [ரமணனும், சு.ரவியும் நவராத்திரி ஒன்பது நாட்களும் மாறிமாறிப் பெய்யும் கவிமாரியில் நனைந்து, நெகிழ்ந்து, குளிர்ந்து வீரமாகாளி, விண்ணும் மண்ணும் ஆளும் வீரை சக்தி, அகணித தாரா கணங்களின் நடுவே ஆடும் பராசக்தி, இனியொரு யுகம் சாந்த ஸ்வ்ரூபிணியாய், அழகே உருவான வாலைக் குமரியாய், ஒயிலே வடிவான மதுரைப் பேரரசியாய்ப், பொன்மழை பொழியும் செங்கமலத் தாயாய், மேலவர் நாவெனும் மலர்ப்பதங்கள் கொண்ட கலைச்செல்வியாய் மட்டுமே இருப்பதென்று சங்கல்பம் செய்யப் கூடுமோ!]

    vetri 10

    [mixcloud]http://www.mixcloud.com/jothi-s-themozhi/yaarindha-azhagu-chelvi/[/mixcloud]

    (01-10-2014)

    யாரிந்த அழகுச் செல்வி யாழெடுத் தமர்ந்து கொண்ட

    வாறெந்தென் உள்ள மெங்கும் ஆனந்த லஹரி யாய்த்தேன்

    மாரிபெய் தந்தத் தேனில் மலர்ந்ததோர் வண்ணப் பூவாய்

    மாறியப் பூவில் மொய்க்கும் வண்டுமாய் ஆன தென்னே (1)

     

    பொன்வண்டுச் சிறகின் ஓசை பூந்தென்றல் காற்றின் ஓசை

    மின்னலே வீணை யாக மீட்டும்கை விரல்கள் ஓசை

    புன்னகை ஓசை நெஞ்சில் புரள்கின்ற அலைகள் ஓசை

    என்னென்ன ஓசை அம்மா எழில்கொஞ்ச நடக்கி றாளே (2)

     

    ஓசையைச் சொல்லப் பாடல் ஒருநூறு வேண்டும் நெஞ்சின்

    ஆசையைச் சொல்ல வோபல் லாயிரம் வேண்டும் காற்று

    வீசவும் அந்த வீச்சில் சருகுகள் சரச ரத்துப்

    பேசவும் கவிதை யொன்று பேசாமல் மலர்ந்த தாமே (3)

     

    கவிதையின் நடனத் தைக்கண் கொட்டாமல் பார்த்தி ருக்கும்

    புவியெனும் குழந்தை யாகிக் குழந்தையை மடியி ருத்தும்

    தவிசாகித் தாயும் ஆகி தாய்மையின் ஊற்றும் ஆகிச்

    செவியாகிச் சிந்தை யாகிச் சிலிர்க்கின்ற சிலையா னாளே (4)

     

    சிலையென்றா சொல்லி விட்டேன் சிலையிலே சிறக சைக்கும்

    கலையாகி உளியு மாகிக் கலையிலே பின்னி வைத்த

    வலையாகி என்ம னத்தை வானமாய் விழுங்கு கின்ற

    உலைநெருப் பில்சி ரிக்கும் ஊர்த்துவ ஜ்வாலை யன்றோ (5)

     

    சிரிப்பிலே சிந்து கன்னக் கதுப்பிலே விருத்தம் பார்வைத்

    தெறிப்பிலே வஞ்சி என்னைச் சேர்த்தணைக் கின்ற அன்பு

    நெறிப்பிலே அகவல் எந்தன் நெஞ்சிலே வெண்பா காட்சி

    விரிப்பிலே கலித்து றையென் நெற்றியில் வெற்றிப் பொட்டே (6)

     

    கலியினைப் பிளந்து சாடக் கைகளா யிரமா வேண்டும்

    கலியாணக் கோலங் காட்டிக் கண்ஜாடை செய்தால் போதும்

    நலியாத நெஞ்சுக் குள்ளே நம்பிக்கைச் சுடரை ஏற்றும்

    மெலிதான புன்ன கைப்பூ அதுபோதும் அதுவே போதும் (7)

     

    புன்னகை யாலே இந்தப் புவியெலாம் நின்று காக்கும்

    அன்னையை வணங்கு கின்றேன் அன்பிலே ஒடுங்கு கின்றேன்

    சொன்னசொல் பலிக்கச் சொர்ண பிம்பமாய் ஜொலிக்கச் சொன்ன

    வண்ணமே வெற்றி சேர்க்க வருமலர்ப் பதங்கள் போற்றி (8)

     

    வெற்றியாய் வேலெ றிந்து விண்ணவர் தம்மைக் காத்த

    பெற்றியைப் பெற்றெ டுத்த பெண்மையாய் உண்மைத் தீயாய்ச்

    சுற்றிலும் உள்ள சூழ்ச்சித் திரைகளை அகற்றி எந்தன்

    நெற்றியில் திலக மாகி வளர்கின்ற முழுநி லாவாம் (9)

     

    திலகவா ணுதலாம் திங்கள் உதிக்கின்ற உச்சி யாமிவ்

    வுலகவாழ் வினையும் தூய ஒளிதந்து துலங்கச் செய்யும்

    மலர்மகள் கலைம கள்மா மலைமகள் மூன்று மாகி

    விளங்கிடும் மாதா வாம்ஶ்ரீ வித்யாவை வணங்கு கின்றேன் (10)

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(124)

    –சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே !

    cameron confஇனிய வணக்கங்களுடன் அடுத்தொரு மடலில் இணைவதில் மகிழ்கிறேன்.

    வசந்தகாலம் வந்த சுவடு தெரியாமல் மறைந்ததும் அடுத்து வந்த கோடைக்காலம் காற்றோடு காற்றாக மறைந்ததும் இதோ கண்முன்னே இலையுதிர் காலம் சதிராடுவதும் பச்சைப் புற்தரையை பொன்னிறக் கம்பளம் கொண்டு மூடியதைப் போல புற்களை உதிர்ந்த பொன்னிற இலைகள் மூடி நிற்பது எமக்கு உணர்த்துக்கிறது.

    ஆமாம் இங்கிலாந்திலே இலையுதிர்காலத்தில் எது நடக்கிறதோ இல்லையோ அரசியல் கட்சிகளின் வருடாந்த மாகாநாடு தவறாமல் நடந்தேறி விடும்.

    இதுவரை இங்கிலாந்து அரசியல் தளத்தினில் நடக்கும் அரசியல் போராட்டம் மும்முனைத் தாக்குதலாகத்தான் இருந்தது.

    ஆமாம் கன்சர்வேடிவ் கட்சி , லேபர் கட்சி, லிபரல் டெமகிரட்ஸ் கட்சி என இவை மூன்றுமே அரசியல் களத்தில் முக்கியமாக மோதிக் கொள்ளும் கட்சிகளாக இருந்தன.

    ஆனால் கடந்த தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையை எந்தக் கட்சியும் அடையாததினால் அதிகூடிய இடங்களைக் கைப்பற்றிய கன்சர்வேடிவ் கட்சி ஆட்சி அமைப்பதற்கான அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்வதற்காக லிபரல் டெமகிரட்ஸ் கட்சியுடன் சேர்ந்து கூட்டரசாங்கம் அமைத்ததும் இப்போராட்டக்களத்தில் இரண்டு கட்சிகளின் மோதல்களே பெருமளவில் இடம்பெற்றன.

    ஆனால் உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி ஐக்கிய இராச்சியத்தையும் விட்டுவைக்காத காரணத்தினால் பதவிக்கு வந்த கூட்டரசாங்கம் எடுத்த மிகவும் சிக்கலான செலவுக் கட்டுப்பாட்டுத் திட்டங்களினால் மத்தியதர, அடித்தர மக்களின் வாழ்க்கைத் தரம் பாதிக்கப்பட்டது.

    இப்பாதிப்போடு ஐரோப்பிய ஒன்றியத்தின் செயற்பாட்டால் பொதுவாக மக்கள் மனதில் ஏற்பட்டுள்ள எதிர்மறையான பாதிப்பினாலும் , ஐரோப்பிய ஒன்றியத்தில் சமீப காலத்தில் இணைந்த கிழக்கு ஐரோப்பிய நாட்டிலுள்ள பலர் ஐக்கிய இராச்சியத்தினுள் இலகுவாக நுழைந்து இந்நாட்டின் உதவித் தொகைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள் எனும் பொதுக் கருத்தின் பாதிப்பினாலும் இவைகளை எதிர்க்கிறோம் என்று தொடங்கப்பட்ட யூகிப் எனும் அரசியல் கட்சியின் ஆதரவு பலமாகியது.

                                      milliband confFarage confclegg conf

    அந்தக் கட்சியின் தலைவரான மைக்கல் ப்ஃராஜ் கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினராகவிருந்தவர்.  தமது கட்சி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் தனதும் தன்னைப் போன்ற மற்றைய உறுப்பினர்களினதும் கொள்கையை முன்னெடுக்கத் தயங்கியதால் அக்கட்சியிலிருந்து வெளியேறி யூகிப் எனும் கட்சியை அரம்பித்தார்.

    ஐரோப்பிய ஒன்றியத்தினுள் இருப்பதை விட அதனிலிருந்து வெளியேறுவதே ஐக்கிய இராச்சியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்பதே இக்கட்சியின் பிரதானக் கொள்கையாகும்.

    இக்கட்சியின் ஆதரவு பெருகி இப்போது இக்கட்சி கருத்துக்கணிப்பில் இதுவரை மூன்றாவது பெரிய கட்சியான லிபரல் டெமகிரட்ஸ் கட்சியை விட முன்னனியில் நிற்கிறது.

    அதுதவிர சமீபத்தில் இரண்டு கன்சர்வேடிவ் கட்சி பாரளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவியை இராஜினாமாச் செய்து விட்டு யூகிப் கட்சிக்குத் தாவி இடைத்தேர்தலில் அக்கட்சியின் சார்பில் போட்டியிடுடப்போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

    இது ஆளும் கட்சிகளில் முக்கியமான கன்சர்வேடிவ் கட்சிக்கும் அதன் தலைவர் பிரதமர் டேவிட் கமரனுக்கும் தலையிடியைக் கொடுத்துள்ளது…

    இந்நிலையில் தான் 2014ம் ஆண்டு அரசியல் மகாநாடுகள் நடந்து முடிந்துள்ளன. முதலில் நடந்த லிபரல் டெமகிரட்ஸ் கட்சியின் மாநாடு சோபிக்கவில்லை. அவர்கள் கொள்கையில் தமக்கு நேர் எதிரான கன்சர்வேடிவ் கட்சியோடு கூட்டரசாங்கத்தில் இணைந்தது அவர்களுக்கு செல்வாக்குச் சரிவையே ஏற்படுத்தியுள்ளது.

    அடுத்து நடந்து முடிந்த யூகிப் கட்சியின் மநாடு அனைவருக்கும் ஒரு புதிய அனுபவமாகவே இருந்தது. அரசியலில் புது அதிர்வலையை ஏற்படுத்தியவர்களின் மற்றைய கொள்கைகள் ஏதுவாயிருக்கும் எனும் எதிர்பார்ப்பே அதற்குக் காரணம். ஆயினும் இதுவரை பராளுமன்றக் கதிரையையேக் கண்டிராத இக்கட்சியினர் பதவியிலமர்ந்ததும் அவர்களது நடவடிக்கை எப்படியிருக்கும் என்பதுவே அனைவரினதும் கேள்விக்குறி.

    எதிர்க்கட்சி ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் லேபர் கட்சியினரின் மாநாடு அவர்களின் அரசியல் அந்தஸ்திற்கேற்ப எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. குறிப்பேடுகள் எதுவுமின்றி 80 நிமிடங்கள் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் டேவிட் மில்லிபாண்ட், தான் குறிப்பில்லாமல் பேசுகிறேன் என்பதில் கவனமாக இருந்து முக்கியமான கொள்கைகள் இரண்டைப் பற்றிப் பேச மறந்து விட்டார்.

    அட இவரா? பிரதமர் பதவிக்கு போட்டியிடப் போகிறார் போச்சுடா ! எனும் வகையில் பல ஊடகங்கள் இப்பவே அவரது தோல்வியைக் கங்கணம் கட்டிக் கொண்டு விட்டன.

    கடைசியாக நேற்று நடந்து முடிந்த பதவியிலிருக்கும் கட்சியின் மாநாடு கொஞ்சம் விவாதங்களைக் கிளப்பி விட்டிருக்கின்றன. நாட்டின் உண்மையான நிதி நிலைமையையயும் அதைச் சீர் செய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும் அப்படியே மக்களுக்குப் புட்டு  புட்டு வைக்கிறேன் என்று மத்தியதரக் குடும்பத்தினர் பலரை கவலை கொள்ள வைத்த நிதியமைச்சர் ஒருபுறம், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்க வேண்டுமா? வேண்டாமா? எனும் பொதுக்மக்களின் சர்வஜன வாக்கெடுப்பை 2017ல் நடத்துவோம் என்று மக்களுக்குக் குரல் அளிக்கும் அதிகாரத்தை எமது கட்சியை விட வேறெந்தக் கட்சியும் நடத்துவதாக உறுதியளிக்கவில்லை என்று மார்தட்டிய பிரதமர் மறுபுபுறம்.

    ஆரவாரம் ஓய்ந்ததும் இலைகள் உதிரவும் சரியாகத்தான் இருக்கின்றது.

    தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது என்பது என்னவோ உண்மைதான் !

    ஆனால் வசந்தத்தின் முடிவில் கோடையின் நுழைவாசலில் வரப்போகும் 2015ம் ஆண்டுத் தேர்தல் என்ன மாறுதலைக் கொண்டுவரக்கூடும் ?

    ஒரு வித்தியாசம் மூன்று கட்சிகளுக்கிடையில் அல்ல நான்கு கட்சிகளுக்கிடையில் நடக்கும் அரசியல் போராட்டம் மக்களுக்கு என்ன மாறுதலைக் கொண்டுவரும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டுமோ ?

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • நவராத்திரியில் ஒரு ராத்திரி

    -மாதவ. பூவராக மூர்த்தி

    navratri-dollsசொன்னால் நம்ப மாட்டீர்கள். நீங்கள் இப்படி ஒரு விஷயத்தை என்னிடம் சொன்னால் நான் கூட நம்ப மாட்டேன்.

    என் பெண், அம்மாவுக்கு முடியவில்லையென்றால் என்ன? நான் கொலு வைக்கிறேன் என்று அமாவாசை அன்று ஆபீஸிலிருந்து லேட்டாக வந்து நான் தூங்கப் போனவுடன் என் புது வேஷ்டியைக் குட்டி மர பீரோ ஸ்டூல் எல்லாம் வைத்து என்னைத் தொந்தரவு செய்யாமல் பரணிலிருந்து கொலு பொம்மைகளை எடுத்து ஐந்து படி கொலு வைத்தாள்.

    காலை எழுந்த நான் பிரமித்து என் மோட்டோ ஜீயில் போட்டோ எடுத்து வாட் சாப்பில் போட்டு எல்லாரையும் கொலுவுக்கு அழைத்து விட்டேன். என் மகள் வேலைக்குப் போவதால் காலை ஆபீஸ் போவதற்கு முன் விளக்கேத்தி வாழைப்பழமோ ஆப்பிளோ சாத்துக்குடியோ நைவேத்தியம் பண்ணிவிட்டு அவசரமாக ஓடி விடுவாள்.

    என் மனைவி வருகிறவர்களுக்கு மூன்று நாளாக மில்க் பிஸ்கட், மேரி பிஸ்கட் அல்லது குட் டே பிஸ்கட் கொடுத்துக் கொண்டிருந்தாள். இருபது நாட்களுக்கு முன் கடைக்குப் போகும்போது கீழே விழுந்து ஹேர் லைன் கிராக் என்று மாவுகட்டுப் போட்டு சுழலும் நாற்காலியில் வீட்டைச் சுற்றி வருவதால் கொலுவும் வந்தவர்களும் அவளின் பிரசாதங்களை அன்போடு ஏற்றுக் கொண்டார்கள். நாங்கள் மட்டும் குழந்தைகளின் தயவால் வகை வகையாகச் சுண்டல் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்

    நவராத்திரியில் தினமும் சாயங்காலம் என் மச்சினன் குழந்தைகள் புடவை கட்டிக்கொண்டு பிளாட்டில் எல்லா வீடுகளுக்கும் குங்குமச் சிமிழும் ஒரு பையும் எடுத்துக் கொண்டு “குறையொன்றும் இல்லை” பாட்டும் “கண்ணுக்குள் பொத்தி வைத்தேன் என் கண்ணனையும்” பாடி வகை வகையாய்ச் சுண்டல் எடுத்து வர நான் அளவு தெரியாமல் சாப்பிட்டுத் தொலைத்தேன்.

    நேற்று இரவு எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்க எனக்கு வயிறு கொஞ்சம் கடமுட என்றது. எழுந்து பாத்ரூம் போகலாம் என்று பெட்ரூம் கதவைத் திறக்க முயன்ற போது ஹாலில் பேச்சுச் சப்தம் கேட்டது.

    நான் முதலின் என் பெண் பூர்வஜாதான் டி.வி ஆஃப் பண்ணாமல் வந்து விட்டாள் என்று நினைத்தேன். பாட்டு, வடிவேலு விவேக் குரல் போல இல்லை. உற்றுக் கவனித்தேன்; லேசாக கதவைத் திறந்து பார்த்தேன். திகைத்துப் போனேன். மறுபடியும் சொல்கிறேன். நான் கேட்டதையும் பார்த்ததையும் சொன்னால் நீங்கள் நம்பப் போவதில்லை. இருந்தாலும் உங்களுக்கு இப்படி ஏதாவது ஒன்று நடக்கும்போது நான் சொன்னதும் நடந்திருக்கக் கூடும் என்று நீங்கள் நம்புவீர்கள் என்று நம்பிக்கை எனக்கிருக்கிறது.

    படியில் வரிசையாக அடுக்கி வைத்திருந்த பொம்மைகள் மிஸ் இல்லாத பள்ளிக் குழந்தைகள் போல இடம் மாறி திரும்பி ஒன்றோடு ஒன்று பேசிக்கொண்டிருந்தது. என் வயிறு உபாதை மாயமாய் மறைந்தது.

    இடுக்கு வழியாகப் பார்த்தேன். என்ன ஸ்வாரஸ்யமான வம்பு. அவைகளுக்குத்தான் எத்தனை மனக் கிலேசங்கள், பொறாமைகள், குறைகள். எப்போது பேச ஆரம்பித்ததோ எனக்குத் தெரியாது. நான் பார்க்கும்போது அது ஒரு சுவாரஸ்யமான பகுதியில் இருந்தது.

    மேல் படியில் இருந்த மரப்பாச்சி பொம்மைகள் குரல் கரகரப்போடு அதற்கு முன்னால் இருந்த மஹாலஷ்மியிடம் தம் குறையைச் சொல்லிக்கொண்டிருந்தன. ”உங்களுக்கு என்ன? பொம்மை செய்யும் போதே வர்ணம் அடித்துப் புடவை…அதில் ஜரிகை. உங்க வீட்டுக் காரருக்குப் பட்டு பீதாம்பரம் எல்லாம் இருக்கிறது. என்னையும் என் வீட்டுக்காரரையும் பாருங்கள். ஒரே பச்சை நிறத்துணி நாலு வருஷமாய்.

    அம்மாவும் பொண்ணும் கடைக்குப் போகும் போதெல்லாம் துணி வாங்க முடிகிறது. எங்களுக்கு ஏன் ஒரு சூடிதார் ஜீன்ஸ் வாங்கி போடக்கூடாது?”

    அவைகளின் ஆதங்கம் நியாயமானதுதான் எனக்கே அந்த மாதிரி ஒரு எண்ணம் உண்டு இவர்கள் மேல்.

    “இதையெல்லாம் பெரிது படுத்தாதே! அவர்கள் நம்மைப் பொம்மைகளாக நினைக்கிறார்கள்.” என்று விஷ்ணு சமாதானம் சொன்னார். “என்னை மேல் படியில் வைத்திருக்கிறார்கள். இருந்து என்ன? ஒரு விஷ்ணு சகஸ்ரநாமம் படிக்கிறார்களா? இல்லை ஒரு எம்.எஸ் பாடியதையாவது போடுகிறார்களா? அதுவும் இல்லை. பக்கத்தில் டி.வியைப் பெரியதாக வைத்து விடுகிறார்கள். அடுத்த படியில் இருந்த தசாவதார பொம்மைகள் மெதுவாக ஆரம்பித்தன. தசாவதாரம் வரிசையாக வைத்திருக்கிறார்கள். ஆனால் மூன்று வருடங்களுக்கு முன் புதிதாக செட்டை வாங்கி வைத்திருக்கிறார்கள். இந்தப் பெண் பூர்வஜா பொம்மை அடுக்கும்போது வாமனாவதாரத்தைக் கீழே போட்டு உடைத்து விட்டாள். பழைய பொம்மை; இந்த அம்மாள் கல்யாணம் பண்ணின புதிதில் வாங்கின தசாவதார செட்டில் சேதாரம் போக மீந்திருந்த எங்களை விடச் சின்ன வாமனரை எங்கள் பக்கத்தில் நிற்க வைத்துவிட்டார்கள். எங்கள் உயரத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் குறுகி நிற்கிறார் என்றது ராமர் பொம்மை.

    மூன்றாம் படியில் இருந்த அஷ்ட லக்ஷ்மிகள் போன வருடம் வந்தவர்கள். ஜொலித்தார்கள். மேல் படியில் இருந்த லக்ஷ்மி ஸரஸ்வதி இந்த அஷ்ட லக்ஷ்மிகள் ரொம்பத் திமிராக நம்மிடம் பேசாமல் அவர்களுக்குள் மட்டும் பேசிக்கொள்கிறார்கள். இன்னும் இரண்டு வருஷம் போனால் நம் கதிதான் இவர்களுக்கு என்று தங்கள் வருத்தத்தைப் பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள்.

    நாலாவது படியில் இருந்த சிவன் பார்வதி பேச வேண்டாம் என்று இருந்தேன். என் வாயைக் கிளப்பி விட்டீர்கள். அடி முடி காண முடியாத விஷ்ணுவை மேல் படியில் வைத்துவிட்டு இவர்கள் ஹரி தாசர்களாம் (விஷ்ணுவை ஸ்மரிக்கிறவர்கள்) அதனால் என்னை ஒரு படி இறக்கி என்னை நாலாவது படியில் வைத்து என் குடும்பத்தையும் வைத்து என்னை அவமதிக்கிறார்கள்.

    “என்ன செட்டியாரே உங்க வியாபாரம் எப்படி? என்று மேற்படியில் இருந்த மரப்பாச்சி உரக்கக் கேட்டது. செட்டியார் மெதுவாகத் திரும்பி இந்தக் கிண்டல் தானே வேண்டாம். என்னை இங்கு உட்கார வைத்து ஒரு பண்டம் கூட விற்பதற்கு இல்லை. இவர்கள் ஃப்லிப்கார்டில் எல்லாம் வாங்குவதால் ஆன் லைன் டிரேடிங்க் காலமாகப் போகிவிட்டது.

    ராகவேந்திர சுவாமிகள் மௌனமாகவே இருந்தார். இதற்குள் இந்த மரப்பாச்சி வந்தவர்களையும் விட்டு வைக்கவில்லை. நேத்திக்கு வந்த 43 பிளாட் நம்பர் மாமி ஸ்ருதி சேராம ஶ்ரீமன் நாராயண பாடினாள். விஷ்ணு கண்ணை மூடிக்கொண்டு விட்டார்.

    இன்னும் ரெண்டு மாமிகள் வந்து உட்கார்ந்து பாட்டுப் பாடாமல் ஜெயலலிதாவைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இப்படிக் கொஞ்சமும் ஈடுபாடு இல்லாமல் கொலு வைப்பதைவிட நம்மைக் கொலுப் பெட்டியிலே வைத்து இருக்கலாம். டி வி யில் சிந்துஜா நவராத்திரி பற்றிப் பேசுவது கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது. அவள் கழுத்தை நெரித்து இவர்கள் சிரிப்பொலி வைக்கும்போது அப்படிப் பற்றிக் கொண்டு வருகிறது. என்ன பண்ணுவது நாம் பொம்மைகளாகப் போய்விட்டோம்.

    சரி சரி யாராவது வந்துவிடப் போகிறார்கள் பேசாமல் பொம்மையாக மாறி விடுங்கள் என்று மஹாவிஷ்ணு சொன்னவுடன் மாயமாய் எல்லாம் பூர்வஜா (என் மகள்) வைத்த மாதிரியே இருக்கிறார்கள்.

    நான் வெளியே வந்து பாத்ரூம் போய்விட்டுக் கொலு அருகில் போய் நின்றேன். எல்லாம் பொம்மைகளாகத்தான் இருந்தன. எனக்குத்தான் பிரமையா?

    உள்ளே போய்ப் படுத்தேன். நாளை முதல் பக்தியுடன் மாலை சுண்டல் செய்யச் சொல்ல வேண்டும். கம்ப்யூட்டரில் எம்.எஸ் அம்மா பாட்டுப் போட வேண்டும். சாயங்காலம் கொஞ்ச நேரமாவது டி வியில் சினிமா சம்பந்தமாகப் போடக்கூடாது என்று முடிவு செய்தேன். எப்போது தூங்கினேன் என்று தெரியாது.

    “என்ன எழுந்திருக்கிறேளா…? பால் வாங்கிண்டு வரணும்…காலங்காத்தால அப்படி என்ன குறட்டை விட்டுண்டு தூக்கம்?” என்றாள். எழுந்தேன் வந்து ஹாலில் பார்த்தால் எல்லா பொம்மைகளும் ஒன்றுமே நடக்காதது மாதிரி உட்கார்ந்திருக்கின்றன.

    நான் நேற்று இரவு கேட்டதும் பார்த்ததும் உண்மையா பொய்யா சொல்லுங்களேன்?

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 25

    –சு.கோதண்டராமன்.

     

    விஷ்ணுவும் ருத்ரனும்

     

    sivavishnu

     

    விஷ்ணு

     

    vamanவேதத்தில் விஷ்ணு பற்றிய மந்திரங்கள் 114. இவற்றில் 31 இல் மட்டும் அவர் தனியாகப் போற்றப்படுகிறார். 11இல் இந்திரனுடன் சேர்த்துப் பேசப்படுகிறார். மற்றவற்றில் மருத், பூஷன், அர்யமன், வருணன், மித்ரன் முதலான பல தெய்வங்களுடன் சேர்த்துக் குறிப்பிடப்படுகிறார்.

    விஷ்ணு என்ற சொல் எங்கும் வியாபித்தது என்ற பொருள் உடையது. இந்த அடைமொழி அக்னிக்கும், இந்திரனுக்கும், சூரியனுக்கும் சில இடங்களில் கொடுக்கப்படுகிறது. பெரும்பாலான இடங்களில் விஷ்ணு ஒரு தனித் தெய்வமாகவே போற்றப்படுகிறார்.

    இன்று விஷ்ணு பற்றி வழங்கும் பல கருத்துகள் ரிக் வேதத்தில் இல்லை. இருக்கின்ற, குறிப்பிடத்தக்க ஒரே விஷயம் அவர் மூன்று அடி எடுத்து வைத்ததுதான். இது நமக்கு வாமன திரிவிக்ரம அவதாரங்களை நினைவூட்டினாலும் சாயணர் அவ்வாறு கருதவில்லை. இது சூரியனின் மூன்று நிலைகளைக் (காலை, பகல், மாலை) குறிப்பதாக அவர் கூறுகிறார்.

    விஷ்ணுவின் ஒரு அடைமொழியான அஹர்வித் (ஒளியை அறிந்தவர்) என்பதற்கு வாழ்க்கையின் இறுதி லட்சியமாகிய ஒளியை அளிப்பவர் என்று சாயணர் கூறுகிறார்.

    மனிதன் தேவனாகும் மார்க்கத்தில், தேவ நிலைக்கு முந்திய நிலையில் இருப்பவர்களான சூரிகள் எப்பொழுதும் அவருடைய இடத்தைப் பார்த்துக் கொண்டும் புகழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள் என்கிறது வேதம். (1.22.20)    

    தேவத்தன்மை தருபவர் சூர்யன் என்று சொல்லப்பட்டிருப்பதால் (1.110.3, 4.54.2)  விஷ்ணு என்பது சூரியனின் வேறு பெயர்தான் என ஊகிக்க முடிகிறது. சூரியன், ஸவிதா, பகன், பூஷன், விஷ்ணு என்ற பல பெயர்களும் ஒரே சூரியனைக் குறித்தாலும் அவர்கள் தனித் தனி தெய்வமாகவே போற்றப்படுகிறார்கள்.

    விஷ்ணு இந்திரனின் நண்பர். அவரோடு சேர்ந்து சோம பானம் அருந்துபவர். விண்ணைத் தூக்கி நிறுத்தியவர். உலகம் முழுவதும் அவருடைய காலடித் தூசியில் இருப்பதாக ரிக் கூறுகிறது. பாதிக்கப்பட்ட மனிதர்களுக்காக, அவர்களுக்கு வீடு கொடுப்பதற்காக, மித்ரனின் தர்மப்படி நடந்து தர்மத்தை நிலைநாட்டினார். அவரே உலகை நாம் வாழ்வதற்கு ஏற்றதாகச் செய்தவர்.

    எல்லாத் தேவர்களையும் போல, இவரும் மகிழ்ச்சி தருபவராகவும், வலிமை மிக்கவராகவும் ருதத்தோடு நெருங்கிய தொடர்பு உடையவராகவும் கூறப்படுகிறார். அவரே ருதத்தின் கர்ப்பம். யக்ஞம் செய்பவர்களுக்கு ருதத்தில் பங்கு அளிக்கிறார்.

     

    ருத்ரன்

     

    SHIVAரிக் வேதத்தில் ருத்ரனைப் போற்றும் மந்திரங்கள் அக்னி, இந்திரன், வருணன், மருத்துகள், அச்வின்கள் இவர்களுடையதை விடக் குறைவாகவே உள்ளன. இவர் நோய் நீக்கும் தெய்வம். தெய்வக் குற்றத்தால் ஏற்பட்ட நோயாக இருந்தாலும் பல வகையான மருந்துகளுடன் வந்து அதனைப் போக்க வல்லவர். எல்லா மருந்துகளின் தலைவர், நோய்களைக் குணமாக்குபவர், வைத்தியர்களுக்கெல்லாம் மேலான வைத்தியர் என்று அவருடைய வைத்தியத் திறமை பல இடங்களில் போற்றப்படுகிறது.

    ருத்ரன் கோபம் மிகுந்தவர். உங்கள் கோபம் எங்கள் குழந்தைகளையும் பேரர்களையும் பாதிக்காமல் இருக்கட்டும் என்று வேண்டிக் கொள்ளப்படுகிறார்.

    மற்ற தேவர்களைப் போல ருத்ரனும் பகைமையையும் பாவங்களையும் போக்குகிறார். வலிமை மிக்கவர் என்பதால் அசுரர், வஜ்ரபாஹூ என்ற அடைமொழிகள் இவருக்கு உண்டு. இவருடைய ஆயுதங்கள் வில், அம்பு, நிஷ்கம்.

    மருத்துகளின் தந்தை என்று போற்றப்படுகிறார் ருத்ரன். புகழ்ச்சியால் வசப்படுபவராகவும் கூறப்படுகிறார்.

    அர்ஹத் என்ற சிறப்புப் பெற்ற தேவர்கள் நால்வர்- அக்னி, ருத்ரன், மருத், இந்திரன். இவர்களில் குறைவான பாடல்களைப் பெற்றவர் ருத்ரன்தான்.

    எல்லாத் தேவர்களும் ருதம் என்னும் இயற்கை நியதியோடு நெருங்கிய தொடர்பு கொண்டவராகக் கூறப்படும்போது, ருத்ரன் அவ்வாறு தொடர்பு படுத்தப்படவில்லை என்பது கவனத்துக்கு உரியது. ஆனால் ருதத்தின் மற்றொரு பெயரான ஸ்வதா என்ற சொல் ருத்திரனின் அடைமொழிகளில் ஒன்றாக வருகிறது.

    ருத்ரன் பற்றி ரிக் வேதத்தில் கூறப்படுவதற்கும் யஜுர்வேதத்தில் வரும் ருத்ரனுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன. யஜுர் வேதத்தில் ருத்ரனின்  கோபமும், எதிரிகளை அழிக்கும் தன்மையும் வலியுறுத்தப்படுகின்றன.  பிற்காலத்தில் சிவனாக உரு மாறுவதற்கான ஆரம்ப அறிகுறிகள் யஜுர் வேத ருத்ரனிடம் காணப்படுகின்றன.

     

     

     

     

     

     

    படங்களின் தேர்வு இணையத்திலிருந்து

    Share
  • தாமரைத் தெய்வம்

    இசைக்கவி ரமணன்

    942642_763177157075789_1200482388492604033_n

    சின்னக் குழந்தை சிரிப்பினிலும், அந்தச்
    சித்திரை வானத் தெறிப்பினிலும். நல்ல
    கன்னலி லேமுண்டும் கணுக்களிலும், நம்
    கண்ணில் படாத அணுக்களிலும், மங்கை
    கன்னத்தில் ததும்பும் மின்னலிலும், தென்றல்
    கானத்தில் அசையும் சென்னெலிலும், தோன்றி
    என்னை மயக்கிக் கவிதைசொல்வாள், இசை
    ஏழுக்கும் எட்டாத வாணியவள்!

    ஓரக் குயில்மேவும் காதலினால், மனம்
    உருகி இசைத்திடும் பாட்டினிலும், விழி
    சோரக் கருத்திடும் வேளையிலே, மழை
    சொட்டுச்சொட் டாய்விழும் ஓசையிலும்
    நேரமென் னும்பொய்யை நீக்கிவிட்டே, நம்
    நெஞ்சினி லேவளர் கானத்திலும்
    தூரத்தி லிருந்து தூண்டிவிடும், ஒலித்
    தூய்மையி லேயிவள் தோன்றிடுவாள்!

    கல்லை உடைக்கின்ற கைகளிலே, அந்தக்10574236_1490587474554176_3016036001259081854_n
    கழனி அளைகின்ற கால்களிலே, ஒற்றைச்
    சொல்லுக் குயிரைப் பணயம்வைத்து, நின்று
    துடிக்கும் கவிஞரின் உள்ளத்திலே
    மல்லுக்கு நிற்கின்ற மடமையெல்லாம். வீழ்ந்து
    மாய்ந்தபின் னெழும்கர வொலியினிலே, நெஞ்ச
    வில்லுக்கு விசையும் அம்பும்தந்து, அதை
    வீணையாய் மீட்டிடும் விந்தையிவள்!

    அறிவை வெறுப்பவன் வெறும்முட்டாள், ஆனால்
    அறிவைத் தொழுபவன் அடிமுட்டாள், என்று
    செறிவுடன் பேசிடும் வேதமொழி, இவள்
    சேல்விழி ஓரத்தில் மையெழுதும்
    அறிவை வழங்கியும் ஆதரிப்பாள், அதை
    அறிந்து துறப்பவ ரையணைப்பாள், புத்தித்
    தறியினில் சிக்காது தெய்வநெறி, எங்கள்
    தாமரைத் தெய்வத்தின் தாளைப்பணி!

    உழைப்பை மதிப்பவ ரைவணங்கி, அவர்
    உள்ளத்தில் வாழ்ந்திட வேயிணங்கி
    அழைப்பவர் அழைத்த படிநுழைந்து, அவர்
    ஆடிடப் பாடிட அகமகிழ்ந்து, தமிழ்
    தழைக்கச் செய்திடும் தாள்களினை, என்னைத்
    தாங்கி அசைத்திடும் தோள்களினை, வீழும்
    மழைக்குள் இறங்கி மண்மணக்கும், எந்தன்
    மனத் தறுவாயில் மணியொலிக்கும்

    கானத்தின் ராணியைக் காதலித்தேன், எந்தன்
    கவிதையின் சோதியைக் கைபிடித்தேன்
    மோனத் தவத்தினில் மூண்டுவரும், இந்த
    மெளனத்தின் தேவிமேல் மோகம்கொண்டேன்
    தேனந்தி மாலை நேரத்திலே, ஒரு
    தெய்வீக நதியின் தீரத்திலே, அங்கு
    நானற்றுப் போனவோர் நற்கணத்தே, எந்தன்
    நாதத்தின் தேவியை நான்கலந்தேன்!

    03.10.2014 / வியாழன் / 6.30

    Share
  • ஆடலுடன் பாடலைக்கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் …

    – கவிஞர் காவிரிமைந்தன்.

     

    AADALUDAN...

     

    ஆடலுடன் பாடலைக் கேட்டு..

    தமிழ்த்திரை வரலாற்றில் எத்தனையோ பஞ்சாபி வகைப் பாடல்கள் இடம்பெற்ற போதும்.. இப்பாடல் அவற்றுக்கெல்லாம் தலைமை தாங்கும்!

    மக்கள் திலகத்துடன் இணைந்து விஜயலட்சுமி ஆடல்தர.. மனதில் மகிழ்ச்சியைக் கொட்டிக்கவிழ்க்கின்ற திரைப்பாடலாய்!  பள்ளி கல்லூரி தளங்களில் நடைபெறும் ஆண்டுவிழாக்களில் அன்றும் இன்றும் என்றும் என பெரும்பாலும் இடம்பெற்ற இந்தப் பாடல் இசையில் ஒரு குதூகலம்!

    திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளிலும் இப்பாடலுக்கு நிச்சயம் இடம் உண்டு!  ஆடல் கலையை பயின்று அறிந்து வைத்திருந்த விஜயலட்சுமி அவர்களுடன் எம்.ஜி.ஆர் பிரத்யேகமாக பயிற்சி எடுத்து ஆடியது இந்தக் காட்சியில் …

    கதையின் போக்கை உள்வாங்கி கவிஞர் ஆலங்குடி சோமு வரைந்தளித்த இப்பாடலை உச்சஸ்தாயியில் டி.எம்.செளந்திரராஜனும் பி.சுசீலாவும் இணைந்து வழங்கியிருக்கிறார்கள்! இதில் ஆடலும் உண்டு!  பாடலும் உண்டு!  மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் புதுமைகளை நாளும் கொண்டுவரவேண்டும் என்கிற அவரின் உள்மனதின் தாகம் – வட இந்திய கலாச்சாரத்தை முன்னிறுத்தும் பஞ்சாபி நடனம் பாணியில் வழங்கிய முத்திரைப் பாடல்!

    http://www.youtube.com/watch?v=BqeX54Wmvgw
    காணொளி: http://www.youtube.com/watch?v=BqeX54Wmvgw

    ஆடலுடன்பாடலைக்கேட்டு
    படம்: (குடியிருந்த கோவில் (1968)
    பாடல்: ஆலங்குடி சோமு
    இசை: எம். எஸ். விஸ்வநாதன்
    ………………………………………………………………..

    ஆடலுடன் பாடலைக் கேட்டு
    ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
    ஆடலுடன் பாடலைக் கேட்டு
    ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்

    ஆசை தரும் பார்வையில் எல்லாம்
    ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்
    ஆசை தரும் பார்வையில் எல்லாம்
    ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்

    ஆடலுடன் பாடலைக் கேட்டு
    ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
    ஆசை தரும் பார்வையில் எல்லாம்
    ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்

    கண்ணருகில் பெண்மை குடி ஏற
    கையருகில் இளமை தடுமாற
    தென்னை இள நீரின் பதமாக
    ஒன்று நான் தரவா இதமாக
    கண்ணருகில் பெண்மை குடி ஏற
    கையருகில் இளமை தடுமாற
    தென்னை இள நீரின் பதமாக
    ஒன்று நான் தரவா இதமாக

    செங்கனியில் தலைவன் பசியாற
    தின்ற இடம் தேனின் சுவையூற
    பங்கு பெற வரவா துணையாக
    செங்கனியில் தலைவன் பசியாற
    தின்ற இடம் தேனின் சுவையூற
    பங்கு பெற வரவா துணையாக
    மன ஊஞ்சலின் மீது பூ மழை தூவிட
    உரியவன் நீ தானே

    ஆடலுடன் பாடலைக் கேட்டு
    ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
    ஆசை தரும் பார்வையில் எல்லாம்
    ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்

    கள்ளிருக்கும் மலரே வளைந்தாடு
    களைப்பாற மடியில் இடம் போடு
    உள்ளிருக்கும் நினைவில் உறவாடு
    உலகையே மறந்து விளையாடு
    கள்ளிருக்கும் மலரே வளைந்தாடு
    களைப்பாற மடியில் இடம் போடு
    உள்ளிருக்கும் நினைவில் உறவாடு
    உலகையே மறந்து விளையாடு

    விம்மி வரும் அழகில் நடை போடு
    வந்திருக்கும் மனதை எடை போடு
    வேண்டியதைப் பெறலாம் துணிவோடு
    விம்மி வரும் அழகில் நடை போடு
    வந்திருக்கும் மனதை எடை போடு
    வேண்டியதைப் பெறலாம் துணிவோடு
    உன் பாதையிலே நான் ஊர்வலம் வருவேன்
    புதுமையை நீ பாடு

    ஆடலுடன் பாடலைக் கேட்டு
    ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
    ஆசை தரும் பார்வையில் எல்லாம்
    ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்
    ஆடலுடன் பாடலைக் கேட்டு
    ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
    ஆசை தரும் பார்வையில் எல்லாம்
    ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்

    ஆடலுடன் ………………….
                           Alangudi+Somumsvtmsps

    Share
  • கருணைக் கடலே…கலைமகளே!

    -மேகலா இராமமூர்த்தி

    saraswatiவெள்ளத்தால் போகாத வெந்தணலால் வேகாத செல்வம் கல்விச் செல்வம் ஒன்றேயாகும். ஏனைய செல்வங்கள் எல்லாம் கொடுக்கக் கொடுக்கக் குறைவுபடும்; கல்வி ஒன்றே மற்றவர்க்கு வழங்க வழங்க (அதனைத் தருபவனுக்குக்) குறையாது மிகும். செல்லும் இடமெல்லாம் சிறப்புப் பெறுவதும்; செல்லும் தேயமெல்லாம் புகழ் பெறுவதும் கற்றாரே.

    கல்வி எனும் உயரிய செல்வத்தை மாந்தர்க்கு வாரி வழங்கும் தெய்வமாகக் கருதப்படுபவள் நான்முகனின் நாயகியாகிய கலைவாணி. கல்வியேயன்றி ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விப்பவள் அவள்.

    மனிதர்களின் நாவில் அந்தக் கலைமகள் நிலைத்திருப்பதாக நம்பப்படுகின்றது. அதனாலேயே அவள் ’நாமகள்’ என்று தமிழிலும் ’வாக்தேவி’ என்று வடமொழியிலும்  அழைக்கப்படுகின்றாள். கொள்ளை இன்பத்தைக் கேட்பார்க்குத் தருகின்ற பாவலர்களின் கவிதையிலும், இனிய குரலில் மாதர்கள் பாடும் பாட்டிலும் விரும்பிப் பவனி வருபவள் அவள். தன் திருக்கரத்தில் மாணிக்க வீணையேந்தி அதன் ஒலியில் மகிழ்ந்திருக்கும் அந்த மாதரசி, மழலை மிழற்றும் கிள்ளையின் நாவிலும், கீதமினிய குயிலின் குரலிலும்கூட விருப்பமொடு வாசம் செய்பவள் என்கிறார் மகாகவி பாரதி.

    கலைவாணியைப் போற்றுமுகத்தான், ‘நாமகள் இலம்பகம்’ எனும் பெயரோடு ’நா வீற்றிருந்த புலமா மகளோடு….” என்ற அடியை ஆரம்பமாகக் கொண்டே ஐம்பெருங்காப்பியங்களில் சிறந்த ஒன்றான சீவக சிந்தாமணி தொடங்குகின்றது. சாத்தனாரின் மணிமேகலையிலும் ஆபுத்திரனின் வரலாற்றைக் கூறும் பகுதியில் ’சிந்தாதேவி’ எனும் பெயரால் கலைமகள் குறிக்கப்பெறுகிறாள்.

    இதோ அவ்வரலாறு …

    தன் வளர்ப்புத் தந்தையான இளம்பூதி என்பவனால் கைவிடப்பட்ட ஆபுத்திரன் எனும் அந்தண இளைஞன் செல்வர்கள் பலர் வாழ்ந்துவந்த மதுரை நகரின்கண் பிச்சை வாங்கிக் குருடர்கள், முடவர்கள் முதலிய உடற்குறையுடையோர்க்கெல்லாம் முதலில் அளித்துவிட்டு மீதமிருந்த உணவைத் தான் உண்டு, அவ்வூரிலே இருந்த ‘சிந்தாதேவி’யின் கலை நியமத்தில் (கோயில்) தங்கியிருந்தான்.

    மாரிக் காலத்து நள்ளிருள் வேளையில் ஒருநாள், சில ஏழை மக்கள் ஆபுத்திரன் தங்கியிருந்த சிந்தாதேவிக் கோயிலுக்கு வந்து அவனிடம் தங்கள் பசிக்கொடுமையைக் கூறி உணவளிக்கும்படி வேண்ட, பிச்சையாய்ப் பெறும் உணவேயன்றி வேறு உணவு ஏதுமில்லாத தன் வறுமை நிலையை அவன் அவர்களுக்கு வேதனையோடு விளக்க, ஆபுத்திரன் உணவளிப்பான் என்று நம்பிவந்த அந்த ஏழை மக்கள் ஏமாற்றத்தோடு திரும்புகின்றனர்.

    மற்றவர்களின் பசிப்பிணியைத் தீர்க்க இயலாத தன் நிலையை எண்ணி அவன் கழிவிரக்கத்தோடு வருந்தியிருந்த அவ்வேளையில் ஓர் அற்புதம் நிகழ்ந்தது! ஆம்…நியமத்தில் சிலையாயிருந்த சிந்தாதேவி உயிர்பெற்றாள்; ஆபுத்திரன் அருகே ஓர் பாத்திரத்தோடு அவள் தோன்றி, ”வருந்தாதே! இதோ என் கையிலுள்ள ஓட்டினைக் கொள்வாய்; நாடு வறுமையுற்றாலும் இந்த ஓடு வறுமையுறாது. இதிலிருந்து வரும் அளவிலா உணவை வாங்குவோர் கைகள்தான் வருந்துமேயின்றி; இதில் உணவு ஒருநாளும் குறைவுபடாது” எனக்கூறி அந்த அமுதசுரபியை ஆபுத்திரனுக்கு அளித்தாள்.

    தேவி சிந்தா விளக்குத் தோன்றி
    ஏடா அழியல் எழுந்திது கொள்ளாய்
    நாடுவறங் கூரினுமிவ் வோடுவறங் கூராது
    வாங்குநர் கையகம் வருந்துதல் அல்லது
    தான்தொலை வில்லாத் தகைமைய தென்றே. (மணி: பாத்திர மரபு கூறிய காதை)

    சிந்தாதேவியை நேரில் கண்ட அதிசயத்தில் வாயடைத்துப்போன ஆபுத்திரன், ”சிந்தையில் உறையும் தேவியே, கலைக் கோட்டத்தில் வீற்றிருக்கும் நந்தா விளக்கே, நாமகளே, வானோர்க்கெல்லாம் தலைவியே, மண்ணோர்க்கெல்லாம் முதல்வியே, மக்களின் இடர்கள் அனைத்தையும் நீ களைவாயாக!” என்று அவளைத் தொழுது வணங்கினான்.

    சிந்தா தேவி செழுங்கலை நியமத்து
    நந்தா
    விளக்கே நாமிசைப் பாவாய்
    வானோர் தலைவி மண்ணோர் முதல்வி
    ஏனோர் உற்ற இடர்களை வாய்…” (மணி: பாத்திர மரபு கூறிய காதை)

    கிடைத்தற்கரிய அந்த அமுதசுரபியின் உதவியோடு மக்களின் பசியைப் போக்கிவந்தான் ஆபுத்திரன் என்கிறது மணிமேகலைக் காப்பியம்.

    இதன்மூலம் கல்விக்குத் தெய்வமான கலைமகள் கருணைக்கும் பிறப்பிடமாக இருப்பதை உணரமுடிகின்றது அல்லவா?

    கலைவாணியின் மகிமையை உணர்த்தும் மற்றொரு நிகழ்வு…

    முருகன் அருளால் பேசிய குழந்தையாகக் கருதப்படும் குமரகுருபரர் புண்ணியத் தலங்களில் முதன்மையானதாகக் கருதப்படும் காசித் திருத்தலத்தில் ஓர் சைவமடத்தை நிறுவும் ஆசை கொண்டார். அப்போது அப்பகுதியை ஆட்சிசெய்துவந்த முகலாய மன்னரிடம் (ஷாஜஹான்?) அதுகுறித்துத் தன் கோரிக்கையை வைக்க விரும்பினார். ஆனால் அவருக்கோ மன்னருடன் உரையாடுவதற்குத் தேவையான ஹிந்துஸ்தானி மொழி தெரியாது; மன்னருக்காவது நம் தமிழ் மொழி தெரியுமா என்றால் அவருக்கும் தமிழ் தெரியாது.

    இந்தச் சங்கடமான சூழ்நிலையை எவ்வாறு எதிர்கொள்வது என்று யோசித்தார் குமரகுருபர சுவாமிகள். அவர் மனத்திலே திடீரென்று ஓர் எண்ணம் மின்னலாய் உதித்தது. ஹிந்துஸ்தானி மொழியில் புலமை பெறுவதற்குக் கலைமகளின் அருளை உடனடியாக நாடினால் என்ன? என்பதே அது.

    உடனே சகலகலாவல்லியான சரஸ்வதியின் அருள்வேண்டிச் ’சகலகலாவல்லி மாலை’ என்னும் தெள்ளுதமிழ்ப் பாக்களைக் கொண்ட பதிகத்தைப் பாடிமுடித்தார். அப்பாடல்கள் அனைத்துமே சுவாமிகளின் தமிழ்ப் புலமைக்குக் கட்டியம் கூறுவதாய் அமைந்துள்ளன.

    சான்றாகச் சில:

    தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய்
    வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும்
    தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று
    காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே.

    மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென்
    பண்கண் டளவிற் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம்
    விண்கண்ட தெய்வம்பல் கோடியுண்டேனும் விளம்பிலுன்போற்
    கண்கண்ட தெய்வ முளதோ சகல கலாவல்லியே.

    இப்பாடல்களின் சொற்சுவையிலும் பொருட்சுவையிலும் சிந்தாதேவியே தன் சிந்தையைப் பறிகொடுத்தாள் போலும். குமரகுருபரரின் விருப்பத்திற்கேற்ப ஹிந்துஸ்தானி மொழிப்புலமையை அவருக்கு நல்கினாள். அவரும் மன்னரைக் கண்டு உரையாடிக் காசியில் ஓர் மடத்தை நிறுவினார் என்று ஆன்மிக அருளாளர்கள் கூறுகின்றனர். அம்மடம் ‘காசிமடம்’ எனும் பெயரால் இன்றும் காசி நகரில் காட்சியளிக்கின்றது.

    வேண்டுவோர்க்கு வேண்டுவனவற்றை நல்கும் இக்கலைத் தெய்வத்தை, கருணைக் கடலை அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால் கல்லும் சொல்லாதோ கவி என்கிறார் கல்வியில் பெரியவரான கம்பர் தன் சரஸ்வதி அந்தாதியில். எனவே கல்வியிலும், கலைகளிலும் நாமும் சிறந்து விளங்க  எல்லையில்லா அருள்முதல்வியான கலைமகளை ஒன்பான் இரவுகளின் (நவராத்திரி) ஒன்பதாம் நாளான வாணி பூசையன்று துதித்துப் பயன்பெறுவோம்.

    Share