கே.ரவி

[ரமணனும், சு.ரவியும் நவராத்திரி ஒன்பது நாட்களும் மாறிமாறிப் பெய்யும் கவிமாரியில் நனைந்து, நெகிழ்ந்து, குளிர்ந்து வீரமாகாளி, விண்ணும் மண்ணும் ஆளும் வீரை சக்தி, அகணித தாரா கணங்களின் நடுவே ஆடும் பராசக்தி, இனியொரு யுகம் சாந்த ஸ்வ்ரூபிணியாய், அழகே உருவான வாலைக் குமரியாய், ஒயிலே வடிவான மதுரைப் பேரரசியாய்ப், பொன்மழை பொழியும் செங்கமலத் தாயாய், மேலவர் நாவெனும் மலர்ப்பதங்கள் கொண்ட கலைச்செல்வியாய் மட்டுமே இருப்பதென்று சங்கல்பம் செய்யப் கூடுமோ!]

vetri 10

[mixcloud]http://www.mixcloud.com/jothi-s-themozhi/yaarindha-azhagu-chelvi/[/mixcloud]

(01-10-2014)

யாரிந்த அழகுச் செல்வி யாழெடுத் தமர்ந்து கொண்ட

வாறெந்தென் உள்ள மெங்கும் ஆனந்த லஹரி யாய்த்தேன்

மாரிபெய் தந்தத் தேனில் மலர்ந்ததோர் வண்ணப் பூவாய்

மாறியப் பூவில் மொய்க்கும் வண்டுமாய் ஆன தென்னே (1)

 

பொன்வண்டுச் சிறகின் ஓசை பூந்தென்றல் காற்றின் ஓசை

மின்னலே வீணை யாக மீட்டும்கை விரல்கள் ஓசை

புன்னகை ஓசை நெஞ்சில் புரள்கின்ற அலைகள் ஓசை

என்னென்ன ஓசை அம்மா எழில்கொஞ்ச நடக்கி றாளே (2)

 

ஓசையைச் சொல்லப் பாடல் ஒருநூறு வேண்டும் நெஞ்சின்

ஆசையைச் சொல்ல வோபல் லாயிரம் வேண்டும் காற்று

வீசவும் அந்த வீச்சில் சருகுகள் சரச ரத்துப்

பேசவும் கவிதை யொன்று பேசாமல் மலர்ந்த தாமே (3)

 

கவிதையின் நடனத் தைக்கண் கொட்டாமல் பார்த்தி ருக்கும்

புவியெனும் குழந்தை யாகிக் குழந்தையை மடியி ருத்தும்

தவிசாகித் தாயும் ஆகி தாய்மையின் ஊற்றும் ஆகிச்

செவியாகிச் சிந்தை யாகிச் சிலிர்க்கின்ற சிலையா னாளே (4)

 

சிலையென்றா சொல்லி விட்டேன் சிலையிலே சிறக சைக்கும்

கலையாகி உளியு மாகிக் கலையிலே பின்னி வைத்த

வலையாகி என்ம னத்தை வானமாய் விழுங்கு கின்ற

உலைநெருப் பில்சி ரிக்கும் ஊர்த்துவ ஜ்வாலை யன்றோ (5)

 

சிரிப்பிலே சிந்து கன்னக் கதுப்பிலே விருத்தம் பார்வைத்

தெறிப்பிலே வஞ்சி என்னைச் சேர்த்தணைக் கின்ற அன்பு

நெறிப்பிலே அகவல் எந்தன் நெஞ்சிலே வெண்பா காட்சி

விரிப்பிலே கலித்து றையென் நெற்றியில் வெற்றிப் பொட்டே (6)

 

கலியினைப் பிளந்து சாடக் கைகளா யிரமா வேண்டும்

கலியாணக் கோலங் காட்டிக் கண்ஜாடை செய்தால் போதும்

நலியாத நெஞ்சுக் குள்ளே நம்பிக்கைச் சுடரை ஏற்றும்

மெலிதான புன்ன கைப்பூ அதுபோதும் அதுவே போதும் (7)

 

புன்னகை யாலே இந்தப் புவியெலாம் நின்று காக்கும்

அன்னையை வணங்கு கின்றேன் அன்பிலே ஒடுங்கு கின்றேன்

சொன்னசொல் பலிக்கச் சொர்ண பிம்பமாய் ஜொலிக்கச் சொன்ன

வண்ணமே வெற்றி சேர்க்க வருமலர்ப் பதங்கள் போற்றி (8)

 

வெற்றியாய் வேலெ றிந்து விண்ணவர் தம்மைக் காத்த

பெற்றியைப் பெற்றெ டுத்த பெண்மையாய் உண்மைத் தீயாய்ச்

சுற்றிலும் உள்ள சூழ்ச்சித் திரைகளை அகற்றி எந்தன்

நெற்றியில் திலக மாகி வளர்கின்ற முழுநி லாவாம் (9)

 

திலகவா ணுதலாம் திங்கள் உதிக்கின்ற உச்சி யாமிவ்

வுலகவாழ் வினையும் தூய ஒளிதந்து துலங்கச் செய்யும்

மலர்மகள் கலைம கள்மா மலைமகள் மூன்று மாகி

விளங்கிடும் மாதா வாம்ஶ்ரீ வித்யாவை வணங்கு கின்றேன் (10)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *