-செண்பக ஜெகதீசன்

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயு மோடா நிலத்து. (திருக்குறள்-496: இடனறிதல்)

புதுக் கவிதையில்…

இடமறிந்து செயல்படு                              Ratham-R2
இடர்ப்பாடுகளின்றி வாழ..
இடம் மாறினால் பாழ்தான்!
பார்,
நின்று அசைந்துவரும்
திடமான தேரும்
கடலில் ஓடாது,
கடலில் மிதந்தோடும்
மரக்கலம்
ஓடாது நிலத்திலே…!

குறும்பாவில்…

தேர் ஓடிடாது கடலில்,
கப்பல் ஓடிடாது நிலத்தில்,
கற்றிடு இடமறிந்து செயல்பட…!

மரபுக் கவிதையில்…

இடமதை யறிந்தே செயல்படுவாய்,
இடர்தான் வாழ்வில் இல்லையெனில்,
கடலில் உலாவரும் கப்பலதைக்
கரையில் கொணர்ந்தே ஓடவிட்டால்
கடுகள வேனும் அசையாதே,
காட்சிக் கழகிய தேரதுவும்
கடலில் விட்டால் ஓடாதே,
கருத்திதைக் கொண்டிடு செயல்படவே…!

லிமரைக்கூ…

கடலிலே ஓடிடாது தரையினிலோடும் தேர்,
இடமறிந்து செயல்படு,
கடலோடும் கப்பலும் கரையிலோடாது பார்…!

கிராமிய பாணியில்…

நடந்துக்க நடந்துக்க
எடம்பாத்து நடந்துக்க,
எடம்மாறிப் போச்சிண்ணா
எல்லாமே பாழாவும்…

கப்பலு கடலுலபோவும்
தேரு தரைலபோவும்,
கடலுல ஓடாதய்யா தேரு
நெலத்துல நவுராதய்யா கப்பலு..

பாத்துக்க பாத்துக்க
பாத்தபடி நடந்துக்க,
நடந்துக்க நடந்துக்க
எடம்பாத்து நடந்துக்க…!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *