இசைக்கவி ரமணன்

942642_763177157075789_1200482388492604033_n

சின்னக் குழந்தை சிரிப்பினிலும், அந்தச்
சித்திரை வானத் தெறிப்பினிலும். நல்ல
கன்னலி லேமுண்டும் கணுக்களிலும், நம்
கண்ணில் படாத அணுக்களிலும், மங்கை
கன்னத்தில் ததும்பும் மின்னலிலும், தென்றல்
கானத்தில் அசையும் சென்னெலிலும், தோன்றி
என்னை மயக்கிக் கவிதைசொல்வாள், இசை
ஏழுக்கும் எட்டாத வாணியவள்!

ஓரக் குயில்மேவும் காதலினால், மனம்
உருகி இசைத்திடும் பாட்டினிலும், விழி
சோரக் கருத்திடும் வேளையிலே, மழை
சொட்டுச்சொட் டாய்விழும் ஓசையிலும்
நேரமென் னும்பொய்யை நீக்கிவிட்டே, நம்
நெஞ்சினி லேவளர் கானத்திலும்
தூரத்தி லிருந்து தூண்டிவிடும், ஒலித்
தூய்மையி லேயிவள் தோன்றிடுவாள்!

கல்லை உடைக்கின்ற கைகளிலே, அந்தக்10574236_1490587474554176_3016036001259081854_n
கழனி அளைகின்ற கால்களிலே, ஒற்றைச்
சொல்லுக் குயிரைப் பணயம்வைத்து, நின்று
துடிக்கும் கவிஞரின் உள்ளத்திலே
மல்லுக்கு நிற்கின்ற மடமையெல்லாம். வீழ்ந்து
மாய்ந்தபின் னெழும்கர வொலியினிலே, நெஞ்ச
வில்லுக்கு விசையும் அம்பும்தந்து, அதை
வீணையாய் மீட்டிடும் விந்தையிவள்!

அறிவை வெறுப்பவன் வெறும்முட்டாள், ஆனால்
அறிவைத் தொழுபவன் அடிமுட்டாள், என்று
செறிவுடன் பேசிடும் வேதமொழி, இவள்
சேல்விழி ஓரத்தில் மையெழுதும்
அறிவை வழங்கியும் ஆதரிப்பாள், அதை
அறிந்து துறப்பவ ரையணைப்பாள், புத்தித்
தறியினில் சிக்காது தெய்வநெறி, எங்கள்
தாமரைத் தெய்வத்தின் தாளைப்பணி!

உழைப்பை மதிப்பவ ரைவணங்கி, அவர்
உள்ளத்தில் வாழ்ந்திட வேயிணங்கி
அழைப்பவர் அழைத்த படிநுழைந்து, அவர்
ஆடிடப் பாடிட அகமகிழ்ந்து, தமிழ்
தழைக்கச் செய்திடும் தாள்களினை, என்னைத்
தாங்கி அசைத்திடும் தோள்களினை, வீழும்
மழைக்குள் இறங்கி மண்மணக்கும், எந்தன்
மனத் தறுவாயில் மணியொலிக்கும்

கானத்தின் ராணியைக் காதலித்தேன், எந்தன்
கவிதையின் சோதியைக் கைபிடித்தேன்
மோனத் தவத்தினில் மூண்டுவரும், இந்த
மெளனத்தின் தேவிமேல் மோகம்கொண்டேன்
தேனந்தி மாலை நேரத்திலே, ஒரு
தெய்வீக நதியின் தீரத்திலே, அங்கு
நானற்றுப் போனவோர் நற்கணத்தே, எந்தன்
நாதத்தின் தேவியை நான்கலந்தேன்!

03.10.2014 / வியாழன் / 6.30

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *