-செண்பக ஜெகதீசன்
படைத்தவனைவிட,
பக்கத்திலிருக்கும் மனிதன்மீது
அதிக அன்பு செலுத்துபவனின்
பக்கத்தில் அமர்ந்துகொள்கிறான்,
அவன் நாட்குறிப்பின்
முதல் பக்கத்தில்
முத்துமுத்தாய்க் கையெழுத்திடுகிறான்,
இறைவன்…!
—காவிரிமைந்தன்.
இசையின் மொழியை முற்றிலும் அறிந்த குயில் எம்.எஸ். சுப்புலஷ்மி …
மீரா திரைப்படத்தில் வரும் இந்த கானம் காற்றினிலே வரும் கீதம்…
இயற்றியிருக்கிறார் கல்கி கிருஷ்ணமூர்த்தி.. எத்தனையோ பாடல்கள் நம் காதில் விழுந்தாலும் எத்தனையோ கானங்கள் நம் நெஞ்சம் நுழைந்தாலும் … இந்த கானம் தருகிற அமைதியும் ஆனந்தமும் அலாதியானது.
எந்த அலம்பலும் இல்லாமல் அன்பின் மொழியாக … நந்தவனத்திற்குள் வருகின்ற தென்றல் போலே கேட்போரை நிம்மதியின் சன்னதிக்கு அழைத்துசெல்கிறார்.
கண்ணனை எண்ணி மனம் உருகி.. உச்சநிலையில் உள்ளம் தொடுகிற பணியை இந்தப் பாடல் எந்த ஆர்பாட்டமுமின்றி செய்துவிடுகிறது.
கர்நாடக சங்கீதத்தில் முதல் நிலையில் விளங்கிய இசையரசி எம்.எஸ். சுப்புலஷ்மி பாடிய ஒரு சில திரைப்பாடல்களில் இதுவும் ஒன்று.
எஸ். வி. வெங்கட்ராமன் அவர்களின் இசையில் இழைந்தோடிவரும் இன்ப கானம்!
மனம் ஒருமிக்க இந்தப் பாடலில் மயங்கலாம்…
இறை அருள் பெற்ற இசையரசியின் குரல் கேட்டு இன்புறலாம் …
http://www.youtube.com/watch?v=Fg1XYA0atg8
காணொளி: http://www.youtube.com/watch?v=Fg1XYA0atg8
……………………………………………………..
படம்: மீரா (1945)
பாடல்: கல்கி கிருஷ்ணமூர்த்தி
இசை: எஸ். வி. வெங்கட்ராமன்
குரல்: எம்.எஸ். சுப்புலஷ்மி
……………………………………………………..காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே…
காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்
கண்கள் பனித்திட பொங்கும் கீதம்
கல்லும் கனியும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்பட்டமரங்கள் தளிர்க்கும் கீதம்
பண்ணொளி பொங்கிடும் கீதம்
காட்டு விலங்கும் கேட்டே மயங்கும்
மதுரமோகன கீதம்
நெஞ்சினிலே
நெஞ்சினில் இன்பக் கனலை எழுப்பி
நினைவழிக்கும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்சுனை வண்டுடன் சோலைக்குயிலும்
மனங் குவிந்திடவும்
வானவெளிதனில் தாரா கணங்கள்
தயங்கி நின்றிடவும்
ஆ.. என் சொல்வேன் மாயப்பிள்ளை
வேய்ங்குழல் பொழி கீதம்
காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்நிலா மலர்ந்த இரவினில் தென்றல்
உலாவிடும் நதியில்
நீல நிறத்து பாலகன் ஒருவன்
குழல் ஊதி நின்றான்
காலமெல்லாம்
காலமெல்லாம் அவன் காதலை எண்ணி
உருகுமோ என் உள்ளம்
காற்றினிலே வரும் கீதம்..
காற்றினிலே வரும் கீதம்..
காற்றினிலே..
கிரேசி மோகன்
“பூவைக் குமிடத்தில் பொன்வைப்போன் வள்ளலென்றால்,
பூவைக்கும் பாதத்தில் பிள்ளையை -நீவைத்தாய்;
கர்ண மகாப்பிரபு கேசவ் கலக்கும்நீ
வர்ண மகாப்பிரபு வே”…..கிரேசி மோகன் ….
“எதிர்காத்(து) இருப்பவர்க்கு ஏமாற்றம் தந்து
எதிர்காத்தாய் வீசும் எவர்க்கோ -மதில்மேலே
பூனைக்கீ டாமிரெண்டும்; பிள்ளை அழைத்தாலோ
தூணைப் பிளந்துதெய்வம் தொப்….
குழந்தை தெய்வமும் கேசவ் கொண்டாடும் தெய்வமும்….
நம் நலம் பேணும் தாயும் சேயும் நலம் ….
“ஓணமும் ஆதிரையும் ஒன்றிக் கலந்திட
கானில் பிறந்தமணி கண்டனே ,-ஞானமே,
தாய்மோ கினியவள் தாளில் பசித்திராய்
போய்வன் புலிப்பால் பருகு”….கிரேசி மோகன் ….
ஓணம் -அரி , திருவாதிரை -அரன்
கானில் -காட்டில்….
அன்புடையீர்!
வணக்கம்.
நேற்று மாலை (15.09.2014) நான் நிகழ்த்திய ”கடவுளும் கவிஞனும்” என்னும் சொற்பொழிவின் ஒளிப்பதிவை நீங்கள் இங்கே காணலாம்:
http://www.kalakendra.com/shopping/isaikkavi-ramanan-kadavulum-kavignanum-free-streaming-p-3612.html
பதிவுகளைச் செய்துவரும் Swathi Soft Solutions நிறுவனத்திற்கும், தொடர்ந்து உழைத்துவரும் நண்பர் திரு. ரஞ்சித் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
அன்புடன்,
ரமணன்
பவள சங்கரி
தலையங்கம்
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃது ஆற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து. குறள் 1032
பொருள்
உழவு செய்ய முடியாமல் உயிர் வாழ்கின்றவர் எல்லாரையும் தாங்குவதால், உழவு செய்கின்றவர் உலகத்தார்க்கு அச்சாணி போன்றவர்.
இயற்கைச் சீற்றங்கள், நீராதாரம் போன்றவற்றால் ஏற்படும் பிரச்சனைகள் இயல்பானது. இதற்காக அரசாங்கமும் உடனடியாக கடன்களையோ, வட்டியையோ ரத்து செய்தோ அல்லது இலவசமாக உரங்களை அளித்தும், மானிய விலையில் விதைகளை அளித்தும் விவசாயத்தைப் பாதுகாக்க ஆவண செய்ய முற்படுகின்றனர்.விளைச்சல், அறுவடை, அதனால் வரக்கூடிய இலாபம், இவைகளை மட்டுமே கருத்தில் கொண்டு தங்களுடைய தொழிலை நடத்துவது என்பது ஏனைய தயாரிப்பாளர்கள் போன்று விவசாயம் செய்பவர்களுக்கும் பொருந்தும் என்றாலும், விவசாயம் என்பது மற்ற தொழில்களைப் போன்றது அல்ல. இது நம் வாழ்வாதாரம். அதனாலேயே மற்ற அனைத்துத் தொழில்களைக்காட்டிலும் விவசாயம் உன்னதமானது என்று தெய்வப் புலவர்களும் அறுதியிட்டு கூறிச்சென்றுள்ளனர். அந்த உன்னத நிலையைத் தக்க வைத்துக்கொள்வதும் அவரவர் கைகளில்தான் உள்ளது.
ஆனால் பெரும்பாலான விவசாயிகள் சமுதாய அக்கறையின்றி, அதிக இலாபம் என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு விளைச்சல் பார்ப்பது வருத்தத்திற்குரிய விசயம். உதாரணமாக, தக்காளிப் பழத்திற்கு எடை கூடவேண்டும் என்று சில யுக்திகளை கையாளுகின்றனர். தண்ணீர் தாகத்திற்காக சாப்பிடக்கூடிய கோசாப் பழத்திற்கு (தர்பூசணி) சாராயம் ஊற்றி விளைவிப்பதாகக் கூறுகின்றனர். நம்முடைய முக்கிய உணவுப் பொருளான நெல்லை விளைவிக்க தரமற்ற பொருட்களை பயன்படுத்தியும், தேவையறியாமலே அவ்வப்போது உயிர்கொல்லி மருந்துகளும் பயன்படுத்தப்படுகின்றன. இப்பொழுதெல்லாம், முதல் நாள் தயாரித்த சாதத்தை பழைய சாதமாக அடுத்த நாள் சாப்பிடும் சுகம், பெரும்பாலான வகை அரிசியில், அது எவ்வளவு விலை உயர்ந்ததாக இருப்பினும் கிடைப்பதில்லை. பொதுவாக பழைய சாதமென்றால் தேவாமிர்தமாக இருந்த நிலை மாறிவிட்டது.
அநேகமாக, இந்த பத்தாண்டுகளில்தான், முன்பு பயன்படுத்திய பசுந்தளை இயற்கை உரம் மற்றும் மறு சுழற்சி விவசாய முறைகள் போன்றவற்றில் அதிகமாக கவனம் செலுத்தப்படுவதில்லை. இதனால் விவசாயப்பெருமக்களின் பொருளாதார நிலை வேண்டுமானால் உயரலாம். ஆனால் இதை உண்ணும் மக்களின் நிலை பற்றி சிந்திப்பார் இல்லை. தற்போது கிடைத்துள்ள சில புள்ளி விவரங்களின் படி இது போன்ற வேதிப் பொருட்கள் பயன்படுத்துவதால் புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாகவும், இதைவிட அதிர்ச்சிகரமான மற்றொரு தகவல் வாழையடி, வாழையாக நம் சந்ததிகள் தளைப்பதற்கான வாய்ப்பே அற்றுப் போவதற்கான சூழ்நிலை உருவாகி வருகின்றன என்பதும் வல்லுநர்களின் கவலையாக உள்ளது. சக்கரை நோய்களின் தலையிடமாகவும், நம் இந்தியா, உலக அரங்கில் அறிவிக்கப்பட்டுள்ளது. சுமாராக ஏழு கோடி மக்கள் சக்கரை வியாதி பாதிக்கப்பட்டவர்களாகவும், 14 கோடி மக்கள் சக்கரை நோய் வருவதற்கான விளிம்பில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெருவாரியான வழக்குகள் ஆண்மை குறைபாடு உள்ள காரணத்தினால் விவாகரத்து நாடி நீதி மன்றம் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஆய்வு அறிக்கைகள் வெளியிடுகின்றன. விலை பொருட்கள் அனைத்தும் விலைக்காக மட்டுமல்லாமல் மக்கள் நோய் நொடியின்றி வாழும் வகையில் விவசாய உத்திகளை மாற்றியமைக்க வேண்டியது அவசியமாகிறது. நன்கு ஆய்வு செய்து தேவையென்றால் மட்டுமே பூச்சுக்கொல்லி மருந்து அடிக்க வேண்டும்.
சமீபத்தில் ஈரோடு அருகில், சித்தோடு எனும் இடத்தில், நாட்டுச் சக்கரை, வெல்லச் சந்தையில் நடந்த நிகழ்வு இது. வெல்ல உருண்டைகள் வெளிர் மஞ்சளில் இருந்தால் நல்ல விலை கிடைக்கும் என்பதால், ஏதோ இரசாயணப் பொருட்களைப் பயன்படுத்தி பழுப்பு நிறத்தை நீக்கிவிட முயன்றிருக்கின்றனர். இதனை அறிந்த, கொள்முதல் பண்ணுவதற்காக வந்திருந்த அனைவரும் 15 டன் பொருட்களையும் வாங்க மறுத்துவிட்டனர். இது அடிக்கடி தொடரும் நிலையாகவே உள்ளது. அதேபோல் ஆலைக் கரும்பின் எடை கூடுவதற்காக பயன்படுத்தும் பொருட்களையும் தவிர்க்க வேண்டும் என்பதே வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.
இது போன்ற பிரச்சனைகளை தவிர்ப்பதற்கு, நம் அரசு ஆய்வகங்களின் மூலமாக ஆய்வு செய்து, அதன் பின் விளைவுகளை கணக்கில்கொண்டு எந்த விதமான உரங்களை, எவ்வளவு அளவிற்கு பயன்படுத்தலாம் என்பதற்கான அறிக்கைகளை வெளியிட்டால். விவசாய பெருமக்களுக்கும் பேருதவியாக இருக்கலாம். அறியாமையால் செய்யப்படும் தவறுகளும் திருத்தம் பெறலாம். நம் வருங்காலச் சந்ததியினர் நோயற்ற வாழ்வை வாழ முடியும் என்ற உத்திரவாதமும் இருக்கும் என்பதே நிதர்சனம்.
கிரேசி மோகன்
நெட்டிப் பிள்ளையார்
“லேசிகனாய் ஆனான்பார் லம்போ தரந்தனது
மூஷிக வாகனர்க்காய்; முத்தமிழ் -தேசிகன்
“வித்யா ததாதி வினயம்” உணர்த்துதிங்கு
சித்யானைக் குட்டி சிறுத்து”….கிரேசி மோகன் ….
வினயம் வித்தைக்கு அடையாளம்….
சித்தானைக் குட்டி -சித் + யானைக் குட்டி….
— மாதவ. பூவராக மூர்த்தி.
மனம் நிறைந்து போயிருக்கிற தருணம். இந்தப் பதிவை நானாகத் துவக்க வில்லை. அதுவாகத் துவங்கிக் கொண்டது. போனவாரம் என் தங்கைகளும் ஒரு தங்கையின் மகளும் வந்திருந்தனர். அப்போது என் தங்கை மகள் கத்திரிக்காய் காரக்குழம்பையும், மெல்லிதாக நறுக்கிச் செய்த முட்டைகோஸ் கறியையும் விரும்பிச் சாப்பிட்டாள்.
இரவு வீட்டுக்குப் போய் தன் அம்மாவிடம் (என் தங்கையிடம்) “மாமா வீட்டில் கோஸ் கறி அம்மா சான்ஸே இல்லை அப்படி ஒரு ஃபைன் கட்டிங்” என்றாளாம். அவள் எனக்கு ஃபோன் பண்ணி இதைத் தெரிவித்தாள்.
நான் தொலைபேசியில் அவளுக்கு ஒரு செய்தி அனுப்பினேன். “உன் அம்மா மூலம் நீ அனுப்பிய பாராட்டை என் விளியேமனைக்கு சேர்ப்பித்துவிட்டேன்” என்று.
அதற்கு அவள் பதில் செய்தியாக “your viliyeymane has created more expectations” என்று செய்தி அனுப்பினாள். விளியேமனை என்றால் அரிவாள் மனை. அப்பாவின் நினைவு மேலோங்கியது. அப்பாவின் ஒவ்வொரு செயலும் எனக்குப் பாடமாக இருப்பவை. அப்பா ஒரு பிரம்மா, விஷ்ணு, சிவன்(ருத்ரன்). படைக்கும் போது அவர் பிரம்மா, எங்களை வளர்த்து காப்பாற்றிய விஷ்ணு. எங்களிடம் மட்டும் அவர் காட்டும் அநியாயக் கோபத்தில் ருத்ரன்.
கத்தி, சாப்பர் எல்லாம் வந்துவிட்டாலும் எனக்கு இன்றும் என் அரிவாள் மனைதான். அது அப்பா எனக்கு விட்டுச் சென்ற வித்தை. கோவையில் என் மகன் வீட்டிற்கு சென்றபோது காய்கறி நறுக்க உட்கார்ந்தேன். உருளைக் கிழங்கு நறுக்க வேணும். நான் நறுக்கத்துவங்கிய போது அவன் கட்டரைக் கொண்டு வந்து அப்பா இதுல வைச்சு ஒரு ப்ர்ஸ் பண்ணு என்று பண்ணிக் காட்டினான். எல்லாம் ஒன்று போல கீழே இறங்கியது. எளிதில் முடிந்து விடும் என்றான்.
எனக்கு அதில் விருப்ப மில்லை. எல்லாம் ஒன்றாக இருப்பதில் ஸ்வாரஸ்யம் இல்லை. உருளையின் வடிவம் பொருத்து விரல்கள் செய்யும் வித்தையில் அரிவாள் மனையில் கீழ் விழும் துண்டுகள் காட்டும் ஜாலம் தனிதான்.
அப்பா சமையல் கலையில் வல்லவர். வங்கிப்பணியில் இருந்தாலும் அவர் விரும்பிச் செய்வது சமையல். எனக்குத் தெரிந்து எங்கள் வீட்டில் அம்மா அரிவாள் மனையைத் தொட்ட நாட்கள் மிகச் சொற்பம். அப்பா தன் கடைமைகளைத் தவறாமல் செய்வார். அதில் ஒரு நிதானம் அழகு மிளிரும்.
காய்கறி மார்க்கெட் போய் காய்கறி வாங்கி வருவார். அம்மா குளிக்கப் போகுமுன் அன்றைய சமையலை அறிவித்து விடுவார். அதில் ஒரு நல்ல சுழற்சி இருக்கும். எங்கள் கன்னட குடும்பங்களில் சாம்பார், பிட்லை மோர்க்குழம்பு, ஹூலிபல்ய என்ற பருப்பு வகை தவிர்த்து கொச்சு, கொட்டு கூட்டு, ரஸவாங்கி, காயரஸா, மெந்துலி, பர்த்தா, அரத ஹூலி என்ற புளிக்குழம்புகளின் அணிவரிசை உண்டு.
சாம்பாரில் மூன்றுவகை, பிட்லை ஒன்று, மோர்க்குழம்பு இரண்டு வகை. பருப்பு போட்டு சாம்பார் என்றால் கொட்டு ரஸம். சாம்பாருக்கு காரக்கறி, குழம்புக்கு தேங்காய் கறி…இப்படி.
மார்க்கெட் போகும்போது என்னையும் அழைத்துப் போவார். அலுக்காத வகையில் காய்கறி வாங்குவார். விருந்தினர் வருகையின் அளவையும் தேவையையும் மனதில் கொண்டு வாங்குவார். சில சமயம் வீட்டுத் தோட்டத்து காய்களை கலந்து கொள்வார்.
வந்தவுடன் தாழ்வாரத்தில் வந்து அமர்வார் அம்மா அரிவாள் மனையும் பாத்திரங்கள் தட்டுக்களை முன் வைப்பார். அப்பா நறுக்கத் துவங்குவார். அவர் செய் நேர்த்தி காண கொடுத்து வைக்க வேண்டும். தோல் உரிக்கும்போது அவர் கைக்கும் அரிவாள் மனைக்கும் ஒரு சங்கேத மொழி உருவாகும். பழுதில்லாமல் தோல் மட்டும் உரிந்து விழும்.
அதன் பிறகு சாம்பாருக்கு வடிவம் பெறும். பூசனிக்காய் சாம்பார் என்றால் அச்சு வெல்லம் போல் நறுக்கி வைப்பார். கூட்டு என்றால் க்யூபிக் போல இருக்கும். பாத்திரத்தைப் பார்த்தால் சீராக இருக்கும். பரங்கிக்காய் ஹிலிபல்யம் என்றால் மாங்காய் பத்தை பீச்சில் விற்குமே அப்படி பல் பல்லாய் வடிவம் பெறும். கத்திரிக்காய் சாம்பாருக்கு நீட்டு வாக்கில் நீரில் மிதக்கும். பொரியலுக்கு கட்டம் கட்டமாக நீரில் மிதக்கும். பிட்லைக்கு காய்கள் தட்டில் சீர் போல் வைத்திருப்பார். கொத்தவரங்காய் மூன்றாய் கிள்ளி ஒரு மூலையில் இடம்பிடிக்கும். சௌசௌ செவ்வகமாய் இருக்கும். கருணைக் கிழங்கு வட்டமாக நறுக்கப்படும். கத்திரிக்காய் நடுவில் நறுக்காமல் இருக்கும். பாகற்காய் விதை நீங்கி வளையங்களாய் ஒரு ஓரம் அலங்கரிக்கும். பிட்லைக்கு காம்பினேஷன் கோஸ் கறி. அந்த கோஸ் பெரிய கோளமாக வருவது அப்பாவின் கை பட்டு கத்தரித்து விழும்போது தேங்காய் பூ போல இருக்கும்.
சேனைக்கிழங்கு கறி மோர்க்குழம்பிற்கு, அது ஒரு பேசினில் பரத்தப்பட்டிருக்கும். பாகற்காய் குழம்பிற்கு என்றால் நீட்டு வாக்கில் முதலையை கூறு போட்டாற் போல் இருக்கும். அதன் நடுவே இரண்டோ மூன்றோ பச்சை மிளகாய் மூக்கு கீறி இணைந்திருக்கும். பரங்கியின் குடல் பிரித்து விதை நீக்கி துகையலுக்கு நறுக்கி வைப்பார்.
வெண்டைக்காய் குழம்புக்கு நீட்டமாகவும், கறிக்கு திட்டமாகவும், பச்சடிக்கு ஸ்லைசாகவும் உரு மாறும். பேசிக்கொண்டே நறுக்குவார். குப்பைகளை அவ்வப்போது அகற்றி வைப்பார்.
வாழைக்காயை நறுக்கும்போது தோல் எடுத்து நீரில் மிதக்க விடுவார். வறுவலுக் கென்றால் இரண்டாக நறுக்கி குறுக்கு வெட்டில் ஒரு அளவு வரை போய் நிறுத்தி விடுவார். வறுவல் கட்டையில் தேய்த்தால் அளவு கச்சிதமாக இருக்கும்.
காரக்கறிக்கு மறுபடியும் சதுரமாகும். சேப்பங்கிழங்கை கோணியின் மீது தேய்த்து அதன் தோல் உரிப்பார். வறுவலுக்கு அது உருமாறும். முருங்கை காயின் நீளம் அவர் கைகளில் அளவெடுக்கும். முனை போக முழுவதும் ஒரே அளவாக தட்டில் விழும். முள்ளங்கி தோல் சீவி வட்டமாக ஒரு சீராக தட்டில் விழும். வெங்காயம் தோல் உரித்து தட்டில் ஒரு பகுதியில் இருக்கும்.
அவர் நறுக்கி வைத்ததைப் பார்க்கும் போதே அன்று என்ன சமையல் என்று பார்ப்பவர்களுக்குத் தெரிந்து விடும். கீரை நறுக்கும் போது அவர் கையில் அகப்படும் கீரைக் கத்தை அரிவாள்மனையில் ஒரு பக்கம் பொருத்தி இன்னொரு கையால் அதை நறுக்குவார். கீரை அப்படியே பொடிசாக விழும். அதை தண்ணீரில் மிதக்க விட்டு பச்சைமிளகாய் நடுவில் போடுவார்.
வீட்டில் விழுந்த வாழை மரத்தை வெட்டி அதன் பட்டையைப் பிரித்து அதை பக்குவமாக சீவி அதற்கு மட்டும் கத்தி. ஒரு பட்டையை இரண்டாக ப் பிரித்து இரண்டையும் தேங்காய் விளக்குமாற்று குச்சியால் தைத்து இலையாக போடுவார். அதில் தயிர் சாதம் சாப்பிட்டால் அவ்வளவு ருசி போங்கள்.
வாழைத்தண்டை தோல் சீவி அதனை வட்டவடிவாக நறுக்கி அதனை நெடுக்கில் சீவி தண்ணீரில் போடுவார் . அது குழம்பிலும் மோர்க்கூட்டிலும் குழைந்து போகும்.
ஏகாதசி அன்று மறுநாள் துவாதசிக்காக அகத்திக்கீரை கட்டு வாங்கி இலை உதிர்த்து பழுப்பு நீக்கி நறுக்கி வைப்பார். வாழைத்தண்டின் வெட்டப்பட்ட சக்கரங்களில் நாங்கள் விளக்கமாற்று குச்சியைச் சொருகி தேர் பண்ணுவோம். வெண்டைக்காய் தலையைச் சுவரில் ஒட்டுவோம். அகத்திக்கீரை களைந்த குச்சிகளை ஒன்றாக்கி வாழை நாரில் கட்டி விளக்குமாறாக்குவோம்.
பரங்கி விதைகளைப் பொறுக்கி கழுவி வெய்யிலில் உலர்த்தி தோல் பிரித்துத் தின்போம். வாழைப்பூவின் தலைப்பகுதியை அதன் துவர்ப்பினை அனுபவிக்க பச்சையாக தின்பது ஒரு தனி சுகம்.
குப்பையையா வாரி முறத்தில் வைத்து கொல்லையில் மாட்டுதொட்டியில் கழுநீருக்கு நடுவில் போட்டால் வாணவில்லின் வர்ணஜாலமாய் பச்சை மஞ்சள் எல்லாம் இருக்கும்.
அப்பா அந்த அரிவாள் மனையை நேசத்தோடு பாது காப்பார். ஆறு மாதம் ஒரு முறை அதற்கு வாசலில் வருபவனிடம் சானை பிடிப்பார். சாணை பிடிக்கும் போது காலால் அவன் சக்கரத்தைச் சுழற்றி சுழலும் சாணக்கல்லில் இந்த அரிவாள் மனையின் முனைகளை பக்க வாட்டில் தொடும்போது தீப்பொறி பறக்கும். பூசணிக்காய் அரிந்தால் கூர் அதிகமாகும் என்று அப்பா சொல்வார்.
எனக்குத் தெரிந்து இரண்டு முறை அரிவாள் மனை தலை கழண்டு விட்டது. விழுவதற்கு முன் கொஞ்சநாள் அந்த பகுதி சூரன் தலை போல் ஆடும். அப்பறம் ஒரு நாள் வீழும்.
புது அரிவாள் மனை புழக்கத்திற்கு வரும். முதலில் கொஞ்சம் விரலைப் பதம் பார்க்கும். அப்பா விரலை தலைமேல் பிடித்துக் கொண்டு வலியில் அவர் முகம் கோணலாகும். பார்க்கப் பாவமாக இருக்கும். ஒருநாள் அம்மாவே காய் நறுக்குவாள். அப்பாவின் நேர்த்தி அதில் இருக்காது.
இரண்டு நாட்களுக்குப் பிறகு அப்பா தன் அரியாசனத்தில் அமர்ந்து விடுவார். புது அரிவாள் மனையுடன் தோழமை கொண்டு விடுவார். இன்று நான் அரிவாள் மனையுடன் தோழமை கொண்டுள்ளேன். என் வாரிசு கத்திக்கும் கட்டருக்கும் மாறிவிட்டது. எனக்குப் பிறகு “விளியேமனை” எங்கள் வீட்டிலிருந்து மெல்ல விடைபெறும். அது வரை அதனை போற்றிப் பாதுகாப்பேன்.
சமையல்காரர்கள் உபயோகிக்கும் அரிவாள் மனை, கத்தி, கரண்டி எல்லாம் அளவில் பெரியதாக இருக்கும். வீட்டு அரிவாள்மனை திட்டமாக இருக்கும்.
அரிவாள் மனைமுன் அமரும்போது அப்பா என் மனம் முழுக்க வியாபித்திருப்பார். பெற்றவரை எப்படி வணங்கினால் என்ன. நான் தொழிலால் வணங்குகிறேன்.
உங்கள் வீட்டில் அரிவாள்மனை இருந்தால் ஒரு முறை அதன் முன் அமர்ந்து அந்த ஆனந்த்தை அனுபவியுங்களேன்.
படம் உதவி: Aruvamanai (Photo credit: Technofreak)
http://thesoulbistro.wordpress.com/2013/07/11/ruminations-of-an-octogenarian/
மூலம் : எலிஸபெத் பிரௌனிங்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
நேசனே! என்னரும் நேசனே!
நினைத்துப் பார்க்கும் போது,
ஓராண்டுக்கு முன்பு நான்
பனித் தளத்தில்
தனித்தமர்ந்த சமயத்தில் நீ
இத்தரணி மீது இருந்தாய், ஆயினும்
எத்தடமும் காணேன்!
அமைதி மூழ்கிக் கிடந்தது!
உந்தன் குரல் செவியில் விழும் நேரம்
வந்திட வில்லை,
என் தொடர்புச் சம்பந் தங்களை
எண்ணிப் பார்த்தேன்,
ஒவ்வோர் சங்கிலிக் கோப்பாக!
உன்கரம் புரியப் போகும்
எவ்வித உடைப்பும்
முறிக்காது
அந்தப் பிணைப்பை!
ஏனென்று வாழ்விலே ஆச்சரியம்
எழுவதும் விந்தைதான்!
இரவோ, பகலோ எதுவாயினும்
உன் உரையோ,
அல்லது உன்னரும் பணியோ
புல்லரிப் பளிப்ப தில்லை
உனக்கு!
ஏதோ உனக்குள்ள முன்னறிவால்
வெள்ளைப் பூ மலர்வதைக் கண்டாய்!
நாத்திகர் மந்த புத்திக் காரர்!
ஊகிக்க முடியாது
அவரால்
ஊனக்கண் காணா கடவுளின்
இருப்பை !
********************
Poem -20
Sonnets from the Portuguese
By: Elizabeth Browning
Beloved, my Beloved, when I think
That thou wast in the world a year ago,
What time I sat alone here in the snow
And saw no footprint, heard the silence sink
No moment at thy voice, but, link by link,
Went counting all my chains as if that so
They never could fall off at any blow
Struck by thy possible hand,–why, thus I drink
Of life’s great cup of wonder! Wonderful,
Never to feel thee thrill the day or night
With personal act or speech,–nor ever cull
Some prescience of thee with the blossoms white
Thou sawest growing! Atheists are as dull,
Who cannot guess God’s presence out of sight.
*********
— விசாலம்.
பித்ரு லோகத்தில் பல பித்ருக்கள் மிக ஆவலுடன் தங்கள் தலைவர் வரும் நேரத்தை எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.
“என்ன நம்ம யமராஜரை இன்னும் காணுமே” என்று ஒருவர் கேட்க, “அவரா, அவர்தான் காலன் ஆயிற்றே. நேரத்தை மிகச் சரியாக … ஒரு நொடி கூட அங்கும் இங்கும் போகாதபடி அல்லவா தன் கடமைகளைச் செய்வார்” என்று வேறு ஒருவர் பதிலளிக்க, அவர் பதில் அளித்து முடியுமுன்னே கருத்த நிறத்துடன் வாட்டசாட்டமாக
யமதர்மராஜன் நுழைந்தார்.
அவர் நுழைந்தவுடன் பவ்யமாக எல்லா பித்ருக்களும் வணங்கினர் .
“பித்ருக்களே சூரியன் கன்யா ராசிக்கு வந்துவிட்டது. இன்னும் சில நொடிகளில் கிருஷ்ணபக்ஷமும் தொடங்கப்போகிறது. உங்கள் லீவு இன்றைய தினத்திலிருந்து ஆரம்பம். ஒரு பதினைந்து நாட்கள் பூலோகத்திற்குச் சென்று உங்கள் சந்ததிகளைப் பார்த்து மகிழ்ந்து அவர்களுக்கு ஆசிகள் வழங்கி விட்டு வாருங்கள். அவர்களும் உங்களுக்கு தகுந்த மரியாதை செய்து உணவும் படைப்பார்கள். உங்கள் யாவருக்கும் என் நல் வாழ்த்துகள்” என்று கம்பீரமாக அமர்ந்தபடி வாழ்த்தினார்.
புதிதாக வந்த பித்ரு ஒருவர் தன் நண்பர்களிடம் “அன்பர்களே நான் இப்போது தான் முதல் தடவையாக பூலோகம் போகிறேன். என் பையன்கள் இருவர். ஒருவன் அமெரிக்காவில் இருக்கிறான். இன்னொருவன் சென்னையில் இருக்கிறான். நான் எங்கு போகவேண்டும் என்று சொல்லிக்கொடுங்கள் ” என்றார்.
அதற்குள் இன்னொரு பித்ரு “ஆமாம் நான் என்ன செய்ய? எனக்கு குழந்தைகள் இல்லை. எனக்கு யார் மரியாதை செலுத்தி சாப்பாடு போடப்போகிறார்கள். மூத்தவரே நீங்கள் இதைப்பற்றி விளக்குங்களேன்” என்றார்.
நன்கு அனுபவப்பட்ட பித்ரு பேச ஆரம்பித்தார்.
“கவலைப்படாதீர்கள். இந்த பதினைந்து நாட்களில் ஒரு நாள் ‘காருண்யக பித்ரு’ என்று வரும். அந்த நாளில் உங்களுக்கு பிடித்த ஒருவர் உங்களுக்கென்று இதை செய்யலாம். உங்கள் நண்பர் கூட இதில் பங்கு பெறலாம். அதனால் குழந்தைகள் இல்லையே என்று வருத்தம் அடையாதீர். தவிர நம்மைப்போல் இருப்பவர்கள் எங்கும் ஒரு நொடியில் போக முடியும். ஆகையால் அமெரிக்காவுக்கும் போகலாம். சென்னைக்கும் போகலாம். செய்பவர்களின் சிரத்தையைப்பொருத்து தான் பலன் கிடைக்கும். இந்த பதினைந்து நாட்களில் சதுர்தசி திதியன்று துர்மரணம் அல்லது விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மட்டும் திதி செய்வார்கள்.. அமாவாசையன்று விதவையோ அல்லது பிரம்மசாரியோ இந்த சம்ஸ்காரத்தை செய்வார்கள்.”
“நம்முடன் வேறு யாரோ வருவது போல் தெரிகிறதே?”
“ஆமாம், நம்முடன் விஸ்வதேவர்களும் வருவார்கள். அவர்களும் நடப்பதைப் பார்த்து மகிழ்ச்சியடைவார்கள். சரி இப்போது நாம் பிரியலாம் அவரவர்கள் போக வேண்டிய இடத்திற்குப் போய் வரலாம். நவராத்திரி அமாவாசையின் போது இந்த இடத்தில் சந்திக்கலாம் . சரி தானே?”
“ரொம்ப நன்றி. நாம் வந்து சேர்ந்த பின் நடந்தவற்றை தெரிந்துக்கொள்ளலாம். இப்போது கிளம்பலாமா?”
காட்சி 1:
ஒரு பித்ரு தான் வரவேண்டிய இடத்திற்கு வந்து வாசலில் நிற்கிறார். உள்ளே தம்பதிகள் பேசும் சத்தம் கேட்டது .
“ஏன்னா.. எங்கே கிளம்பறேள்? இன்னிக்கு லீவுக்கு சொல்லலையா? ஹிரண்ய சிராத்தம் செய்யணும்னு சொன்னேனே?”
“ஆமாம் நீ சொன்னே ! எனக்கு அர்ஜண்ட்டா ஒரு மீட்டிங் வந்துடுத்து. அதை அட்டெண்டு செய்யலைனா ரொம்ப லாஸ் ஆயிடும் . நீயே வாத்தியார் வந்தா வாழைக்காய் , அரிசி கொடுத்துடு. தெரிஞ்சுதா?”
“அப்படி கொடுத்தா பலனில்லைனா. நீங்க கொஞ்சம் லேட்டா போங்களேன்”
“மேலுக்கு மேலே பேசாதே சொன்னத்த செய்”
பித்ரு இதைக்கேட்டப்பின் அங்கே நிற்கவில்லை. மேலே நடையைக் கட்டினார் .
காட்சி 2:
இன்னொரு பித்ரு தான் போகும் வீட்டைக்கண்டு பிடித்து அங்கு உள்ளே நுழைந்து பார்க்க, அங்கே மாம்பலத்தில் இருக்கும் அவரது மூத்த பையன் வாத்தியார் சொல்லும் மந்திரங்களைச்சொல்ல, அவன் கூட அவனது தம்பியும் அமர்ந்து சொல்ல பார்க்கவே மிக அழகாக இருந்தது. அந்தப்பித்ருவுக்கு ரொம்ப திருப்தி. தனது இரு மக்களும் மிக அழகாக அமர்ந்து சொல்வதைப் பார்க்கவே அவர்களுது சிரத்தை தெரிந்தது. “ஆஹா, இந்தக்காலத்தில் இரு மருமகள்களும் அழகாக மடிசார் புடவையில் நிற்கிறார்களே. தவிர பாத்திரங்களும் எவர்சில்வர் எல்லாமல் வெள்ளியாக இருக்கின்றதே. சாஸ்திரம் நன்றாக படிச்சிருப்பார் போலிருக்கு. நான் ரொம்ப கொடுத்துவைத்தவன் , எனக்கு ரொம்ப திருப்தி ” என்று சொல்லியபடி நகர்ந்தார்.
காட்சி 3:
வேறொரு பித்ரு தன் குழந்தைகளைப்பார்க்க மிக ஆசையாக அவரது இடம் போய் நின்றார். அவரது பேரன் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருக்க பேத்தி டிவி பார்த்தபடி இருந்தாள். எங்கே வேறு ஒருவரையும் காணோம். இன்னிக்கு என்னோட திதி ஆயிற்றே! என்றவர் நினைத்துக் கொண்டிருக்கையில் அந்த வீட்டுப் பணிப்பெண் வந்தாள்.
“என்ன அம்மாவைக்காணோம் எங்கிட்டு போயிருக்காங்க லதா?”
“பொன்னம்மா எங்க அம்மாவும் அப்பாவும் பிளைண்ட் ஸ்கூலுக்குப்போயிருக்கா.”
“அது என்னாத்துக்கு அங்கிட்டு போயிருக்காங்க. எங்கிட்ட ஒன்னும் சொல்லலை”
“அவங்க திடீரென்னு நினைச்சு அங்க போயிருக்கா, இன்னிக்கி தாத்தாவோட திதியாம். அதுக்கு பிராம்மணாள் கூப்பிடறதுக்கு பதிலா அன்னதானம் செஞ்சுடலாம்ன்னு யோசிச்சாங்க அதான் அங்கே போயிருக்காங்க.”
“அது என்ன புள்ள! ஐயர் வீட்ல திதி செய்யாம எப்படி விட்டுடறாங்க? ஐயோ, எனக்கென்ன இத பத்தி. இது எல்லாம் பெரிய இடத்து சமாச்சாரம். எனக்கு எதுக்கு இந்த வம்பு.”
“அட போ பொன்னம்மா, இத்தன தூரம் பேசிட்டு இப்ப என்ன வம்புன்னு ஏன் சொல்றே? சரி சரி போய் உன் ஜோலியைப் பாரு”
இத்தனையும் கேட்டு நின்ற பித்ரு “சரி ஏதோ நல்லது பண்றான் பிள்ளை. சினிமா பீச்சுன்னு சுத்தாம ஏதோ அன்னதானமாவது பண்றானே! ஆனாலும் அது என் பசிக்கு வராது. ஹிரண்ய சிரார்த்தம் செய்தால்தான் அந்தப்பொருள் எனக்கு வரும். அதுதான் என்னைச்சேர சரியான பாஸ்வேர்டு. பரவாயில்லை, என் பசி இருக்கட்டும் அவனுக்கு புண்ணியம் சேருமே அது போதும் எனக்கு. குழந்தைகள் எல்லாம் என் ஆசிகளோட நன்னா வாழட்டும்,” என்றபடி அங்கிருந்து நடையைக் கட்டுகிறார்.
காட்சி 4:
இந்த சீனில் நடப்பது என்ன? வாசலில் வந்து நிற்கிறார் ஒரு பித்ரு.
மருமகள் கத்துகிறாள் “வாட் அ ஸில்லி திங்க் ? எப்பவோ செத்து போனவர் இப்ப வந்து நாம கொடுக்கறதை வாங்கிண்டு பிளஸ் பண்ணுவாராம், எனக்கு இதெல்லாம் நம்பிக்கை இல்லை. ஸ்டுப்பிட் திங். நான் ஆபீஸ் போகப்போறேன். “
“அடி சுசீ, இன்னிக்கி ஒரு நாள் கோவாப்ரேட் செய்ய மாட்டாயா? இப்படி பேண்டும் ஷர்ட்டும் போட்டுண்டு கிளம்பறே.”
” எஸ் வாட்ஸ் ராங் இன் திஸ்? என் ஆபீஸ்ல எனக்கு என்ன மாதிரி போஸ்ட்ன்னு உனக்கு தெரியாதா? நீ எப்படியோ இன்னிக்கி மேனேஜ் பண்ணிக்க. யூ டூ வாட்டெவர் யூ லைக் ஐ வோன்ட் இன்டர்பியர், அண்டர்ஸ்டுட் ?”
“சரி என்ன குக் செய்திருக்கே ?”
“வெங்காயம் போட்டு மஸாலா தோஸா? வெஜ் பர்கர் …தென்.. நூடுல்ஸ்”
கணவானான முரளி பரிதாபமாக அவளைப்பார்க்க, அவள் கதவை டபார் என்று சாத்தியபடி வெளியேறுகிறாள் .
காட்சி 5:
இதையெல்லாம் பார்த்த பித்ரு அங்கிருந்து கிளம்பி வரும் போது அவரது அண்ணாவைப் பார்த்தார். அண்ணா அடையார் பக்கம் போய்க்கொண்டிருக்க தம்பி பித்ருவும் அவருடன் சேர்ந்துக்கொண்டார். இருவரும் அடையார் வீட்டில் நுழைந்தனர். அங்கு வயதான சுமங்கலி அமர்ந்து ஒரு அமெரிக்கப்பெண்மணிக்கு மஹாளயம் பற்றி விவரித்துக்கொண்டிருந்தார்.விவரித்த விதம் பார்த்தாலே அவர் பெரிய புரபஸர் போல் தெரிந்தது. அந்தப்பெண்மணியும் லில்லி என்ற தன் பெயரை லீலா என்று ஆக்கிக்கொண்டிருந்தாள். அவளது முடி பொன் நிறமாக இருக்க அதைக்கொண்டைப்போட்டுக்கொண்டிருந்தாள். அவள் உடலுக்கு நீலப்புடவை அவள் சோபையை இன்னும் கூட்டியது. அவளது கணவன் சியாம் நியூ ஜெர்ஸியிலிருந்து சிரார்த்தம் செய்ய தன் புது அமெரிக்க மனைவியுடன் வந்திருந்தான். அவனும் பஞ்சகச்ச வேஷ்டியுடன் வாத்தியாரை எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்தான். அவனது மனைவி லீலா மிகவும் சிரத்தையாக எல்லாவற்றுக்கும் விளக்கம் கேட்டபடி அன்றைய காரியங்களில் கைக்கொடுத்தாள். வீட்டில் எல்லோரும் படித்தவர்கள் ஆனதால் அங்கு ஆங்கிலம் மொழி நிலவினாலும் நடைமுறையெல்லாம் தமிழ் நாட்டு பண்பாட்டைப்பின் பற்றியதாகவே இருந்தன. வாத்தியார் வந்தார். காரியம் செய்து வைக்கும்போது வேறு யாராவது பெயர் இதில் சேர்க்க வேண்டுமா என்று கேட்க “ஆமாம் என் சித்தப்பாவும் இறந்து விட்டார். அவர் பெயரும் சேர்த்துக்கொள்ளுங்கள் என்றார். இதையெல்லாம் பார்த்தபடி அண்ணா பித்ரு தம்பியை பெருமையாகப்பார்த்தார். தம்பிக்கும் தன் அண்ணண் குடும்பம் மூலம் தனது பெயருக்கும் ஒரு மரியாதை இருப்பதைக்கண்டுக்கொண்டார்.
காட்சி 6
“ஏண்டா ராமு.. உன் அப்பாவுக்கு மஹாளய தர்ப்பணம் பண்ணியாச்சா?’
“நேத்திக்கி தான் பண்ணினேன்.”
“பின்ன என்ன உம்ம்ன்னு சோகமா உட்க்கார்ந்திருக்கே”
“பின்ன என்ன மாமா. என் அண்ணா தம்பி எல்லோரும் வெளியூரிலே நன்னா சம்பாதிச்சிண்டிருக்கா. நான் மட்டும் என் அப்பாவோட சேர்ந்து அப்பாவோட ஆசைக்கு மந்திரம் சொல்ல கத்துண்டேன். அவ்வளவுதான் அதே என் வாழ்க்கை ஆயிடுத்து. என் அப்பா எனக்கு ஒரு கல்யாணம் கூட பண்ணி வைக்கலை. என்னவோ ஜாதகத்ல தோஷமாம். அவர் ஒரு சுயநலவாதி. அவரால் தனியா வைதீகம் செய்ய முடில, அதனாலே என்னை உபயோகிச்சுண்டார். அவரும் போய்ச் சேர்ந்தார் ஐந்து வருஷம் ஆயிடுத்து. இப்போ ஆயிடுத்து எனக்கும் 45 வயசு. ஒரு வருஷத்து மூணு தெவசம் செய்யறேன். இதே போல செஞ்சு செஞ்சு எனக்கே இப்போ ஒன்றும் பிடிக்கலை.”
“நல்லதுதானே ராமு. எத்தனை பேரை நீ கரை சேர்க்கறே. உனக்கு நிறைய புண்ணியம் கிடைக்கும்டா.”
“மாமா நான் இப்போ ஒண்ணு தீர்மானம் செஞ்சுட்டேன். நான் சன்யாசம் வாங்கிக்கலாம்ன்னு … அப்போ எனக்கு இது மாதிரி ஒன்றும் செய்யவேண்டாமே!”
மாமா பரிதாபமாக அவனைப்பார்த்தார். இதெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த பித்ரு ரூபத்தில் இருந்த ராமுவின் அப்பா அங்கிருந்து வருத்தமாக வெளியேறினார் .
பதினைந்து நாட்கள் ஓடிவிட்டன. பல பல அனுபவங்களுடன் எல்லா பித்ருக்களும் வந்த இடத்திற்கே கிளம்பினர் எல்லோருடைய அனுபவத்திலும் கலி முற்றுகிறது என்ற உண்மை மட்டும் தெரிந்தது.
***
மேலே குறிப்பிட்ட சம்ஸ்கார நிகழ்சிகள் யாவும் நான் பார்த்த உண்மைச் சம்பவங்கள் அடிப்படையில் எழுதப்பட்டவை. இவற்றையெல்லாம் பார்க்க ஹிந்து சம்ஸ்காரம் தேவையா இல்லையா என்ற கேள்வி எழுகிறது. ஏனென்றால் அதை சரியாக புரியவைக்க ஒருவருமில்லையோ என்ற ஐயப்பாடு உண்டாகிறது. அதைப்புரிந்துக்கொண்டால் எல்லாம் ஒழுங்காக நடக்கலாம் . பல பெரியவர்கள் கருத்தின் படி நம் வருங்கால சந்ததிகள் அவர்களது முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கர்மாக்களை செய்ய வளமாக வாழ்ந்து நன்றாக இருப்பார்கள் என்று தெரிய வருகிறது. அதனால் இந்த சம்ஸ்காரத்தை செய்ய ஏன் தயங்க வேண்டும்? இதற்கென்று அதிக சிலவுமில்லை. இரண்டு வாழைக்காய். கொஞ்சம் அரிசி, பருப்ப , வெற்றிலை பாக்கு, கொஞ்சம் தக்ஷிணை… அவ்வளவுதான். ஒரு முப்பது நிமிடங்களில் எல்லாமே முடிந்துவிடும். டிவி முன்னாடி பல மணி நேரங்கள் கழிக்கிறோம். இதற்கென்று கொஞ்சம் சமயம் அர்ப்பிக்கலாமே .
படம் உதவிக்கு நன்றி: http://www.maalaimalar.com/2014/05/09151209/pitru-tarpanam-to–provide-eka.html
-எம். ஜெயராம சர்மா – மெல்பேண்
காஞ்சியிலே பிறந்த அண்ணா
கண்ணியத்தைக் காத்தமையால்
வாஞ்சையுடன் அவரைமக்கள்
மனத்தினிலே இருத்திவிட்டார்!
வாமன உருவுடையார்
மனங்களை வெற்றிகண்டார்
தூய்மையாய் ஆட்சிசெய்ய
துணிவுடன் அண்ணாவந்தார்!
இன்பத் தமிழுடனே
இங்கிதமாய் ஆங்கிலத்தைப்
பங்கமின்றிப் பேசிப்
பலபேரும் மெச்சநின்றார்!
சங்கத் தமிழறிவார்
சபையறிந்தும் பேசவல்லார்
எங்கும் அவர்முழக்கம்
ஈடின்றி ஒலித்ததுவே!
எதிரிகளைக் கூடஅவர்
இன்முகமாய்ப் பார்த்தாரே
சதிகாரக் கும்பலையும்
தலைவணங்க வைத்தாரே!
நட்புக்கு இலக்கணமாய்
நம்அண்ணா இருந்தாரே
நாடெல்லாம் அவர்புகழை
நாளுமே சொல்லுதிப்போ!
மதிநுட்பம் மிக்கஅவர்
மன்னிக்கும் இயல்புடையார்
நதியாகி நின்றுஅவர்
நாட்டு வளமானாரே!
பொதுவாகப் பேசிடினும்
பொடிவைத்துப் பேசிடுவார்
நிதிபோல இருந்ததனால்
நெஞ்சமெலாம் நிறைந்துவிட்டார்!
தென்னாட்டின் ’பெர்னாட்ஷா’
என்றழைத்தார் அண்ணாவை
சீர்திருத்தக் கருத்தையெலாம்
சினமின்றிச் சொல்லிநின்றார்!
மற்றவரின் மனமுடைய
வக்கிரமாய்ச் சொல்லாது
தேனோடு மருந்தாகச்
சிந்தனையை ஊட்டினரே!
வெற்றிலைக் காவியொடு
வீசிஎறி சால்வையுடன்
வித்தகர் சபைதனிலே
விபரமாய்ப் பேசினரே!
எத்திக்கு வினாவரினும்
எதற்குமே அஞ்சாது
ஏற்றபதில் கொடுத்தாரே
எமதருமை அண்ணாவும்!
எதிர்க்கட்சி சொன்னாலும்
ஏற்றுநிற்கும் பண்பாளர்
எதையுமே தனக்காக
எடுத்தொதுக்கி வைக்கவில்லை!
மாடிமனை சேர்க்கவில்லை
வங்கியிலும் வைக்கவில்லை
தேடித்தேடி வாசித்தார்
திறனுடய நூல்களையே!
பண்புநிறை அரசியலைப்
பலருக்கும் காட்டிநின்றார்
தன்புகழைப் பாடாது
தரமுடனே அவர்நின்றார்
அன்புகொண்டு அரவணைத்தார்
ஆரையுமே நோகடியார்
துன்பமெலாம் பட்டிடினும்
துடிப்புடனே செயற்பட்டார்!
அண்ணாவின் அடியொற்றி
ஆரையுமே காணவில்லை!!!
அவர்பெயரைச் சொன்னபடி
ஆட்டமெலாம் போடுகிறார்
அண்ணாவின் கால்பதிந்த
அருமைத் தமிழ்நாடே
அண்ணாவைப் போலொருவர்
அரவணைக்க வருவாரா?
இது அரைகுறை மயக்கமல்ல.. ஆனந்த மயக்கம்..
திருவிழாக் காலமல்ல.. மங்கையின் திருமணக்கோலம்
மனதிற்குள் மழைபொழியும்.. கனவுகள் ஆயிரம் தோன்றும்
பருவத்தின் வாசல்தனிலே தேர்வுகள் நடத்தல் போல
உள்ளத்துள் மின்சாரம் அங்கே உற்பத்தியாகும் என்றே
உணர்ந்தவர் சொல்வதுண்டு!. உண்மையதிலே உண்டு!
தன்னிலை மறக்கும் பெண்மை வெட்கத்தில் தலைகவிழ
அந்நிலை என்னென்று கேட்டால் எப்படிச் சொல்லும்?
பெண்மையின் பூரணமே அந்த நாணத்தில் நலம்பாடும்போது
தோன்றும் நயனங்கள் தானே அப்பெண்மையைத் தாலாட்டச்
சொல்லும்? எழுதப்படிக்கத் தெரியாதபோதும்கூட அறிகின்ற
கலைதனில் ஒன்று! மலருக்குள் தேனெடுக்கச் செல்லும்!
வண்டின் தேவையை.. மலரா அறியும்?
அறிந்தா இதழ் திறந்து வைக்கும்?
தோன்றிய உயிரனங்கள் அணைத்துகொள்ளும்
தோன்றலின் ரகசியம் தானே!
ஆயினும் இங்கே மனுடன் அனுதினம் தேடும் தெய்வீக ராகம்!
அன்பே.. அன்பே.. பெண்மையும் சொல்லும்
பதில் .. அத்தான்.. அத்தான்..
பாசமலரில் விளைந்த பாட்டு மலரிது..
கற்பனைச் சிறகடித்து கண்ணதாசன் எழுதிய பாட்டு..
பி.சுசீலா குரலால் இனிக்கும் பாட்டு!
விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் மயங்கலாம் கேட்டு!
மயங்குகிறாள் ஒரு மாது!!
http://www.youtube.com/watch?v=AK7qnBt_gKk
காணொளி: http://www.youtube.com/watch?v=AK7qnBt_gKk
ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம் ஹ்ம்
ஹ்ம்ஹ்ம்ஹ்ம் ஹ்ம்ஹ்ம்ம்மயங்குகிறாள் ஒரு மாது தன்
மனதுக்கும் செயலுக்கும் உறவுமில்லாது
திருவாய் மொழியாலே திருவாய் மொழியாலே
அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா?
திருவாய் மொழியாலே
அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா?
ஆஆஆஆஆஆஆஆமயங்குகிறாள் ஒரு மாது தன்
மனதுக்கும் செயலுக்கும் உறவுமில்லாது
மயங்குகிறாள் ஒரு மாதுதோழியர் கதை சொல்லித் தரவில்லையா?
துணிவில்லையா பயம் விடவில்லையா?
தோழியர் கதை சொல்லித் தரவில்லையா?
துணிவில்லையா பயம் விடவில்லையா?
நாழிகை செல்வதும் நினைவில்லையா?
நாழிகை செல்வதும் நினைவில்லையா?
அன்பே அன்பே அன்பே அன்பே
அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா?
ஆஆஆஆஆஆஆஆமயங்குகிறாள் ஒரு மாது தன்
மனதுக்கும் செயலுக்கும் உறவுமில்லாது
மயங்குகிறாள் ஒரு மாதுபார்வையில் ஆயிரம் கதை சொல்லுவாள்
படித்தவள் தான் அதை மறந்து விட்டாள்
காதலை நாணத்தில் மறைத்து விட்டாள்
காதலை நாணத்தில் மறைத்து விட்டாள்
அன்பே அன்பே அன்பே அன்பே
அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா?
ஆஆஆஆஆஆஆஆமயங்குகிறாள் ஒரு மாது தன்
மனதுக்கும் செயலுக்கும் உறவுமில்லாது
மயங்குகிறாள் ஒரு மாதுஅஹஹா அஹஹா அஹஹாஹஹஹாஹாஹ
ம்ஹ்ம்ம் ம்ஹ்ம்ம் ம்ஹ்ம்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம்படம்: பாசமலர்
பாடல்: கண்ணதாசன்
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
குரல்: பி. சுசீலா
கிரேசி மோகன்
”புள்ளி மயில்சூடி, புள்ளாழ்வான் போலிறகை,
புள்ளாண்டான் போர்த்திப் பறப்பது, -மல்லாண்டு,
மாமனைக் கொல்லல், மகாபா ரதம்செய்தல்,
பூமனையாள் இட்ட பணி’’….கிரேசி மோகன்….
பூமனையாள்- மனைவி பூமாதேவி….
புள்ளாழ்வான் -கருடாழ்வார்….
சு.ரவி
வணக்கம் வாழியநலம்
எத்தனையோ பேர் கர்நாடக இசை உலகில் பாடி உலாவந்தாலும், இவரது குரலில் மட்டும் அப்படி என்ன விசேஷமான ingredient கலந்து நம்மைப் பரவசத்தில் ஆழ்த்துகிறது என்று வியக்காதவர் இல்லை.
கர்நாடகக் கீர்த்தனைகளோ, மீரா பஜன் பாடல்களோ, வடமொழி ஸ்லோகங்களோ, தமிழ்ப் பாசுரங்களோ- அக்காலத்தில் இவர் பாடிய திரை இசைப் பாடல்களோ- இசையின் எந்த வடிவத்திலும் தன்னிகரற்றுக் கோலோச்சிய இசை அரசி M.S சுப்பலக்ஷ்மி அவர்களின் தேனிசைக் குரலுக்கு அடிமை ஆகாதார் எவர்?
உயர்தர இசையும், உன்னதமான பக்தியும் இரண்டறக் கலந்து ஒரு வடிவாக இலங்கிய இவர் பிறந்து 98ஆண்டுகள் நிறைந்து 99 வது ஆண்டு தொடங்கும் இத்தருணத்தில், அன்னாரது நினைவாக வரைந்த கருப்பு வெள்ளை மற்றும் நீர்வண்ண ஓவியங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.
பார்க்க, ரசிக்க…
சு.ரவி
புதுச்சேரியில் உலகத் தமிழ் இணைய மாநாடு :
பன்னாட்டுக் கணினி, இணைய அறிஞர்கள் வருகை
புதுச்சேரியில் பதின்மூன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாடு, வரும் செப்டம்பர் 19, 20, 21(வெள்ளி,சனி,ஞாயிறு) ஆகிய மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. புதுச்சேரியில் அமைந்துள்ள புதுவைப் பல்கலைக்கழகத்தின் பண்பாட்டு வளாகத்தில் (Cultural Complex) இந்த மாநாடு நடைபெற உள்ளதாக மாநாட்டின் உள்நாட்டுக்குழுத் தலைவர் பேராசிரியர் மு. இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் கணினி, இணையத்தில் தமிழைப் பயன்படுத்துவது குறித்து ஆராய உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்(உத்தமம்) என்ற அமைப்பு உள்ளது. இது அமெரிக்காவில் பதிவுபெற்ற தன்னார்வ அமைப்பு ஆகும். இதில் உலகம் முழுவதும் உள்ள தொழில் நுட்ப வல்லுநர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த அமைப்பு பல்கலைக்கழகங்களுடனும், தமிழக அரசுடனும் இணைந்து இதுவரை உலகின் பல பாகங்களில் 12 மாநாடுகளை நடத்தியுள்ளது. பதின்மூன்றாவது மாநாடு புதுச்சேரியில் முதன்முறையாக நடைபெறுகின்றது.
இதன் தொடக்க விழா 19-09-2014 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்குப் புதுவைப் பல்கலைக்கழகப் பண்பாட்டு வளாகத்தில் உள்ள மாநாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. புதுவை மாநில முதலமைச்சர் ந. ரங்கசாமி கலந்து கொண்டு மாநாட்டைத் தொடங்கி வைக்க உள்ளார். உத்தமம் அமைப்பின் தலைவரும் அமெரிக்கா பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான வாசு. அரங்கநாதன் அனைவரையும் வரவேற்க உள்ளார். சுவிசர்லாந்து பல்கலைக்கழகப் பேராசிரியர் கு. கல்யாணசுந்தரம் மாநாட்டின் நோக்கவுரையாற்ற உள்ளார்.
புதுவைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சந்திரா கிருட்டிணமூர்த்தியின் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் உத்தமம் ஆலோசகரும், கான்பூர் ஐ.ஐ.டி. தலைவருமான பேராசிரியர் மு.அனந்தகிருட்டிணன் சிறப்புரையாற்ற உள்ளார். புதுவை நாடாளுமன்ற உறுப்பினர் இரா. இராதாகிருட்டிணன், காலாப்பட்டு சட்டமன்ற உறுப்பினர் திரு. பி.எம்.எல். கல்யாணசுந்தரம் மைசூர் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனப் பேராசிரியர் முனைவர் எல். இராமமூர்த்தி வாழ்த்துரை வழங்க உள்ளனர். உலகத் தமிழ் இணைய மாநாட்டின் உள்நாட்டுக்குழுத் தலைவரும், புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத் தமிழ்ப் பேராசிரியருமான மு.இளங்கோவன் நன்றியுரை ஆற்ற உள்ளார்.
புதுச்சேரி உலகத் தமிழ் இணைய மாநாட்டுக்கு அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, கனடா, பிரான்சு, செர்மனி, ஹாங்காங்கு, செகோஸ்லேவியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து 300 க்கும் மேற்பட்ட பேராளர்கள் வருகை தர உள்ளனர். ஆய்வறிஞர்கள் 100 பேர் ஆய்வுக்கட்டுரை படிக்க உள்ளனர். ஆய்வுக்கட்டுரைகள் தொகுக்கப்பட்டு மாநாட்டின் தொடக்க விழாவில் வெளியிடப்பட உள்ளது. மாநாட்டை ஒட்டிச் சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடப்பட உள்ளது.
உலகத் தமிழ் இணைய மாநாடு மூன்று பிரிவுகளாக நடைபெறுகின்றது. ஆய்வரங்கம் புதுவைப் பல்கலைக்கழகத்தில் மூன்றுநாள் நடைபெறுகின்றது. இந்த ஆய்வரங்கில் ஆய்வாளர்கள் 100 பேர் ஆய்வுக் கட்டுரை படைக்க உள்ளனர். பேராசிரியர் ந. தெய்வசுந்தரம், பேராசிரியர் ஆ.க. இராமகிருட்டினன், அ.இளங்கோவன், பேராசிரியர் செல்வகுமார்(கனடா) ஆகியோர் சிறப்பு உரையரங்குகளில் பேச உள்ளனர். அதே நாள்களில் புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள காந்தித்திடல் அருகில் உள்ள கைவினைப் பொருள் கண்காட்சிக்கூடத்தில் கணினித்திருவிழா என்ற பெயரில் மென்பொருள், கணினிக் கண்காட்சியும் மக்கள் அரங்கமும் நடைபெறுகின்றது. தமிழகத்தின் முன்னணிக் கணினி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் இந்தக் கண்காட்சியில் கலந்துகொண்டு தங்கள் படைப்புகளை மக்களுக்குப் பார்வைக்கு வைக்க உள்ளன.
மக்கள் அரங்கில் கணினி, இணையத் தன்னார்வலர்கள் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் கணினி, இணையம் குறித்துப் பொதுமக்கள், மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு விடையளிப்பார்கள். தமிழ்த்தட்டச்சு செய்வது, விக்கிப்பீடியாவில் எழுதுவது, வலைப்பதிவு(பிளாக்) உருவாக்குவது குறித்து, இணையத்தில் உள்ள இலவச மென்பொருள்களை அறிமுகம் செய்வது என்று மக்கள் அரங்கத்தின் பணிகள் இருக்கும்.
மாநாட்டின் சார்பில் நடைபெறும் வலைப்பதிவு உருவாக்கும் போட்டி, தமிழ்த்தட்டச்சுப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்றவர்களுக்குப் பாராட்டும் நடைபெறுகின்றது. தமிழ்க் கணினி, இணைய வளர்ச்சிக்குப் பாடுபட்ட தன்னார்வலர்கள் இந்த மாநாட்டுக்கு அழைக்கப்பெற்றுச் சிறப்பிக்கப்பட உள்ளனர். மாநாடு குறித்த செய்திகள் www.infitt.org என்ற இணையதளத்தில் கிடைக்கும். இவ்வாறு உலகத் தமிழ் இணைய மாநாட்டு உள்நாட்டுக்குழுத் தலைவர் மு.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
கிரேசி மோகன்
“இஞ்சி இடுப்பழகன், இம்மை கொடுப்பழகன்,
மஞ்ச உடுப்பழகன், மாதரார், -துஞ்சும்,
நடுப்பகல் நேரம், பொடிப்பயல்க ளோடு,
அடுக்களையில் செய்வான் அதம்(ஹதம்)” ….கிரேசி மோகன்….
மஞ்ச உடுப்பழகன் – பீதாம்பரதாரி….
துஞ்சும் -தூங்கும்….