இலக்கியம்கவிதைகள்

அரவணைக்க வருவாரா?

-எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

aug7

 

 

 

 

 

 

 

காஞ்சியிலே பிறந்த அண்ணா
கண்ணியத்தைக் காத்தமையால்
வாஞ்சையுடன் அவரைமக்கள்
மனத்தினிலே இருத்திவிட்டார்!

வாமன உருவுடையார்
மனங்களை வெற்றிகண்டார்
தூய்மையாய் ஆட்சிசெய்ய
துணிவுடன் அண்ணாவந்தார்!

இன்பத் தமிழுடனே
இங்கிதமாய் ஆங்கிலத்தைப்
பங்கமின்றிப் பேசிப்
பலபேரும் மெச்சநின்றார்!

சங்கத் தமிழறிவார்
சபையறிந்தும் பேசவல்லார்
எங்கும் அவர்முழக்கம்
ஈடின்றி ஒலித்ததுவே!

எதிரிகளைக் கூடஅவர்
இன்முகமாய்ப் பார்த்தாரே
சதிகாரக் கும்பலையும்
தலைவணங்க வைத்தாரே!

நட்புக்கு இலக்கணமாய்
நம்அண்ணா இருந்தாரே
நாடெல்லாம்  அவர்புகழை
நாளுமே சொல்லுதிப்போ!

மதிநுட்பம் மிக்கஅவர்
மன்னிக்கும் இயல்புடையார்
நதியாகி நின்றுஅவர்
நாட்டு வளமானாரே!

பொதுவாகப் பேசிடினும்
பொடிவைத்துப் பேசிடுவார்
நிதிபோல இருந்ததனால்
நெஞ்சமெலாம் நிறைந்துவிட்டார்!

தென்னாட்டின் ’பெர்னாட்ஷா’
என்றழைத்தார் அண்ணாவை
சீர்திருத்தக் கருத்தையெலாம்
சினமின்றிச் சொல்லிநின்றார்!

மற்றவரின் மனமுடைய
வக்கிரமாய்ச் சொல்லாது
தேனோடு மருந்தாகச்
சிந்தனையை ஊட்டினரே!

வெற்றிலைக் காவியொடு
வீசிஎறி சால்வையுடன்
வித்தகர் சபைதனிலே
விபரமாய்ப் பேசினரே!

எத்திக்கு வினாவரினும்
எதற்குமே அஞ்சாது
ஏற்றபதில் கொடுத்தாரே
எமதருமை அண்ணாவும்!

எதிர்க்கட்சி சொன்னாலும்
ஏற்றுநிற்கும் பண்பாளர்
எதையுமே தனக்காக
எடுத்தொதுக்கி வைக்கவில்லை!

மாடிமனை சேர்க்கவில்லை
வங்கியிலும் வைக்கவில்லை
தேடித்தேடி வாசித்தார்
திறனுடய நூல்களையே!

பண்புநிறை அரசியலைப்
பலருக்கும் காட்டிநின்றார்
தன்புகழைப் பாடாது
தரமுடனே அவர்நின்றார்

அன்புகொண்டு அரவணைத்தார்
ஆரையுமே நோகடியார்
துன்பமெலாம் பட்டிடினும்
துடிப்புடனே செயற்பட்டார்!

அண்ணாவின் அடியொற்றி
ஆரையுமே காணவில்லை!!!
அவர்பெயரைச் சொன்னபடி
ஆட்டமெலாம் போடுகிறார்

அண்ணாவின் கால்பதிந்த
அருமைத் தமிழ்நாடே
அண்ணாவைப் போலொருவர்
அரவணைக்க வருவாரா?

Print Friendly, PDF & Email
Download PDF
Share

Comments (1)

 1. Avatar

  பேரறிஞர்  அண்ணாவின் பிறந்தநாள் கவிதையென
  ஓரரறிஞர் பாடிய கானமிது எனலாமா?
   
  பெருமைமிகு தமிழகத்தின் அரணாக இருந்த அண்ணா
  பிள்ளைத்தமிழ் பாடியன்றோ நம்மையெல்லாம் தாலாட்டினார்!
  உள்ளம்தொடும் தமிழமுது உணர்வுதரும் கவிதையென
  சொல்லெடுத்து விளையாட சொல்லித்தந்தவர் அவரன்றோ?
  மேடையிலே நம் அண்ணா பேசுகின்றார் என்றுசொன்னால்
  மாற்றுக்கருத்துடையோரும் மறைந்துநின்று கேட்பரன்றோ?
  நற்றமிழின் நாயகன் நம்மை ஆண்டிருக்க.. ஒராண்டே
  கிட்டியதே – அந்த சோகத்தை எங்குசொல்ல?
  மக்களின் பிரச்சினைகள் மாநிலத்தின் முன்னேற்றம்
  பகலிரவு தெரியாமல் பாடுபட்டு உழைத்தானே..
  கிடைத்திட்ட நேரமெல்லாம் சூரியனாய் சுழன்றானே..
  இருள்நீக்க வந்த கதிரவன்போல் இதயமெலாம் நிறைந்தானே!
  பொன்மீது ஆசையில்லை! புகழுக்கு ஆசையில்லை!
  தங்கமனம் கொண்டானே!  தமிழ்வளர்த்துத் தந்தானே!
  ஓயாத உழைப்புமட்டும் உடன்வைத்திருந்த மகன்.. தன்
  உடல்நலத்தைப் பாராமல் உயிர்விட்டுச் சென்றானே!
  நீதிக்கும் பாசத்திற்கும் எல்லைகள் வகுத்துவைத்து
  நேர்மைக்கும் தூய்மைக்கும் இலக்கணமாய் இருந்தானே!
  முன்னேறு அரிமாவாய் முழங்கிநின்ற காரணத்தால்
  முதல்முறையாய் அரியணையில் கழகம் வெற்றிகண்டதன்றோ?
  அன்புடனே அரவணைக்கும் அண்ணாவைப்போல் ஓர்தலைவர்
  எந்நாளும் காண்பதில்லை என்பதே உண்மையன்றோ?
  ஐந்தடிஉயரத்தில் அடங்கியிருந்த அறிவுப்பெட்டகம்..
  ஆர்த்தெழுந்து கிளர்ந்ததென்றால் இமயம்கூடகாலில் விழும்!
  சந்ததமாய் மணக்கின்ற தமிழ்தந்த காரணத்தால்.. அவரை
  சந்தனப் பெட்டியிலே கண்ணுறங்க வைத்தோமோ?
  எதிரிகளின் இதயத்தையும் ஈர்க்கின்ற வல்லமை
  இவரிடத்தே இருந்ததனால் வெற்றி இவர்பக்கமன்றோ?
  நுண்ணறிவு நூலறிவு சொல்லறிவு.. என்று அறிவின்பாக்கமாய்
  கண்முன்னே கண்டோமே.. காலத்தை வென்றாரே!!
  அவர்பற்றி அறிந்ததெல்லாம் ஆயிரத்தில் ஒன்றுதான்..
  அடடா.. ஆராய்ந்து பார்த்தாலே ஆழ்கடலும் பின்னர்தான்!
  வங்கக்கடலோரம் ஓய்வெடுக்கும் மன்னவனே.. உனைப்பற்றி
  முன்பொரு நாள் எழுதிய கவியில் நான்..
  கடலோரம் உனைக்காணும்போதெல்லாம் .. ஓர்
  கண்ணை இழந்ததுபோல் உணர்வுகொள்வேன் என்றேன்..
  இன்றைக்கு ஆண்டுகள் முப்பதுக்கு மேல்கடந்தும்..
  ஒருதுளியும் மாறவில்லை உன் நேசம்!!
  மாண்டார் மீள்வதில்லை என்பதெல்லாம் பொதுநியதி.. நீ
  மீண்டால்தான் தமிழகத்திற்கு பெருமையென்பதால்..
  ஒப்புக்கொண்ட ஒன்றே குலம் ஒருவனே தேவன்..அவனிடம்
  ஒருமித்த குரலோடு உரிமையோடு கேட்கின்றோம்..
  ஏழைகளின் தலைவனை.. எங்கள் குலக் கண்மணியை..
  இன்னுமொருமுறை பிறக்கவை!! 
   
  – எனும் கருத்தை
  உள்ளபடி உங்களது பாணியிலே ..
  உரைத்தது உங்கள் கவிதைநன்று!
  வல்லமையின் விருதுபெற்று வழங்கிய முதல்கவிதை..
  சொல்புதிது சுவைபுதிதாய் முழங்கிய முத்தமிழே!! வாழி!!

  என்றென்றும் கண்ணதாசன் புகழ்பாடும்
  காவிரிமைந்தன்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க