— விசாலம்.

 

pitru-tarpanam

பித்ரு லோகத்தில்  பல பித்ருக்கள் மிக  ஆவலுடன் தங்கள் தலைவர் வரும் நேரத்தை எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.

“என்ன  நம்ம யமராஜரை இன்னும் காணுமே” என்று ஒருவர் கேட்க, “அவரா, அவர்தான் காலன் ஆயிற்றே. நேரத்தை மிகச் சரியாக … ஒரு நொடி கூட அங்கும் இங்கும் போகாதபடி அல்லவா  தன் கடமைகளைச்  செய்வார்” என்று வேறு ஒருவர் பதிலளிக்க, அவர் பதில் அளித்து முடியுமுன்னே கருத்த நிறத்துடன் வாட்டசாட்டமாக
யமதர்மராஜன் நுழைந்தார்.

அவர் நுழைந்தவுடன் பவ்யமாக எல்லா பித்ருக்களும் வணங்கினர் .

“பித்ருக்களே சூரியன் கன்யா ராசிக்கு வந்துவிட்டது. இன்னும் சில நொடிகளில் கிருஷ்ணபக்ஷமும் தொடங்கப்போகிறது. உங்கள் லீவு இன்றைய தினத்திலிருந்து ஆரம்பம். ஒரு பதினைந்து நாட்கள் பூலோகத்திற்குச்  சென்று உங்கள் சந்ததிகளைப் பார்த்து மகிழ்ந்து  அவர்களுக்கு ஆசிகள் வழங்கி விட்டு வாருங்கள். அவர்களும் உங்களுக்கு தகுந்த மரியாதை செய்து உணவும் படைப்பார்கள்.  உங்கள் யாவருக்கும் என் நல் வாழ்த்துகள்”  என்று கம்பீரமாக அமர்ந்தபடி வாழ்த்தினார்.

புதிதாக வந்த பித்ரு ஒருவர்  தன் நண்பர்களிடம் “அன்பர்களே நான் இப்போது தான் முதல் தடவையாக பூலோகம் போகிறேன். என் பையன்கள் இருவர். ஒருவன் அமெரிக்காவில் இருக்கிறான். இன்னொருவன்  சென்னையில் இருக்கிறான். நான் எங்கு போகவேண்டும் என்று சொல்லிக்கொடுங்கள் ” என்றார்.

அதற்குள் இன்னொரு பித்ரு “ஆமாம் நான் என்ன செய்ய? எனக்கு குழந்தைகள் இல்லை. எனக்கு யார் மரியாதை செலுத்தி சாப்பாடு போடப்போகிறார்கள். மூத்தவரே நீங்கள் இதைப்பற்றி விளக்குங்களேன்” என்றார்.

நன்கு அனுபவப்பட்ட பித்ரு  பேச ஆரம்பித்தார்.

“கவலைப்படாதீர்கள். இந்த பதினைந்து நாட்களில் ஒரு நாள் ‘காருண்யக பித்ரு’  என்று  வரும். அந்த நாளில் உங்களுக்கு பிடித்த ஒருவர் உங்களுக்கென்று இதை செய்யலாம். உங்கள் நண்பர் கூட இதில் பங்கு பெறலாம். அதனால் குழந்தைகள் இல்லையே என்று வருத்தம் அடையாதீர். தவிர நம்மைப்போல் இருப்பவர்கள் எங்கும் ஒரு நொடியில் போக முடியும். ஆகையால் அமெரிக்காவுக்கும் போகலாம். சென்னைக்கும் போகலாம். செய்பவர்களின் சிரத்தையைப்பொருத்து தான் பலன் கிடைக்கும். இந்த பதினைந்து நாட்களில் சதுர்தசி  திதியன்று  துர்மரணம் அல்லது விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு  மட்டும் திதி செய்வார்கள்.. அமாவாசையன்று விதவையோ அல்லது பிரம்மசாரியோ இந்த சம்ஸ்காரத்தை செய்வார்கள்.”

“நம்முடன் வேறு யாரோ வருவது போல் தெரிகிறதே?”

“ஆமாம், நம்முடன் விஸ்வதேவர்களும் வருவார்கள். அவர்களும் நடப்பதைப் பார்த்து மகிழ்ச்சியடைவார்கள். சரி இப்போது   நாம் பிரியலாம் அவரவர்கள் போக வேண்டிய இடத்திற்குப் போய் வரலாம். நவராத்திரி அமாவாசையின் போது இந்த இடத்தில் சந்திக்கலாம் . சரி தானே?”

“ரொம்ப நன்றி. நாம் வந்து சேர்ந்த பின்  நடந்தவற்றை தெரிந்துக்கொள்ளலாம். இப்போது  கிளம்பலாமா?”

காட்சி 1:

ஒரு பித்ரு தான் வரவேண்டிய   இடத்திற்கு வந்து வாசலில் நிற்கிறார். உள்ளே தம்பதிகள் பேசும் சத்தம் கேட்டது .

“ஏன்னா..  எங்கே கிளம்பறேள்? இன்னிக்கு லீவுக்கு   சொல்லலையா?  ஹிரண்ய சிராத்தம் செய்யணும்னு சொன்னேனே?”

“ஆமாம் நீ சொன்னே ! எனக்கு அர்ஜண்ட்டா ஒரு மீட்டிங் வந்துடுத்து. அதை அட்டெண்டு செய்யலைனா ரொம்ப லாஸ் ஆயிடும் . நீயே வாத்தியார் வந்தா வாழைக்காய் , அரிசி கொடுத்துடு. தெரிஞ்சுதா?”

“அப்படி கொடுத்தா  பலனில்லைனா. நீங்க கொஞ்சம் லேட்டா போங்களேன்”

“மேலுக்கு மேலே பேசாதே சொன்னத்த செய்”

பித்ரு இதைக்கேட்டப்பின் அங்கே நிற்கவில்லை. மேலே நடையைக் கட்டினார் .

காட்சி 2:

இன்னொரு பித்ரு தான் போகும் வீட்டைக்கண்டு பிடித்து அங்கு உள்ளே நுழைந்து பார்க்க, அங்கே  மாம்பலத்தில் இருக்கும்  அவரது  மூத்த பையன் வாத்தியார் சொல்லும் மந்திரங்களைச்சொல்ல,  அவன் கூட  அவனது   தம்பியும் அமர்ந்து சொல்ல  பார்க்கவே மிக அழகாக இருந்தது. அந்தப்பித்ருவுக்கு ரொம்ப திருப்தி. தனது இரு மக்களும் மிக அழகாக  அமர்ந்து  சொல்வதைப்  பார்க்கவே   அவர்களுது சிரத்தை தெரிந்தது.  “ஆஹா, இந்தக்காலத்தில் இரு மருமகள்களும் அழகாக மடிசார் புடவையில் நிற்கிறார்களே. தவிர பாத்திரங்களும் எவர்சில்வர் எல்லாமல் வெள்ளியாக இருக்கின்றதே.  சாஸ்திரம் நன்றாக படிச்சிருப்பார் போலிருக்கு. நான் ரொம்ப கொடுத்துவைத்தவன் , எனக்கு ரொம்ப திருப்தி ” என்று சொல்லியபடி நகர்ந்தார்.

காட்சி 3:

வேறொரு பித்ரு தன் குழந்தைகளைப்பார்க்க  மிக ஆசையாக அவரது இடம் போய் நின்றார். அவரது பேரன் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருக்க பேத்தி  டிவி பார்த்தபடி இருந்தாள். எங்கே  வேறு ஒருவரையும் காணோம். இன்னிக்கு என்னோட திதி ஆயிற்றே! என்றவர் நினைத்துக் கொண்டிருக்கையில் அந்த வீட்டுப் பணிப்பெண் வந்தாள்.

“என்ன அம்மாவைக்காணோம்  எங்கிட்டு போயிருக்காங்க  லதா?”

“பொன்னம்மா எங்க அம்மாவும் அப்பாவும் பிளைண்ட் ஸ்கூலுக்குப்போயிருக்கா.”

“அது என்னாத்துக்கு அங்கிட்டு போயிருக்காங்க. எங்கிட்ட ஒன்னும் சொல்லலை”

“அவங்க திடீரென்னு நினைச்சு அங்க போயிருக்கா, இன்னிக்கி தாத்தாவோட திதியாம். அதுக்கு பிராம்மணாள் கூப்பிடறதுக்கு பதிலா அன்னதானம் செஞ்சுடலாம்ன்னு யோசிச்சாங்க அதான் அங்கே போயிருக்காங்க.”

“அது என்ன புள்ள!   ஐயர் வீட்ல திதி  செய்யாம எப்படி விட்டுடறாங்க? ஐயோ, எனக்கென்ன இத பத்தி. இது எல்லாம் பெரிய இடத்து சமாச்சாரம். எனக்கு எதுக்கு இந்த வம்பு.”

“அட போ பொன்னம்மா, இத்தன தூரம் பேசிட்டு இப்ப என்ன வம்புன்னு ஏன் சொல்றே? சரி சரி போய் உன் ஜோலியைப் பாரு”

இத்தனையும் கேட்டு நின்ற பித்ரு “சரி ஏதோ நல்லது பண்றான் பிள்ளை. சினிமா பீச்சுன்னு சுத்தாம ஏதோ அன்னதானமாவது பண்றானே! ஆனாலும் அது என் பசிக்கு வராது. ஹிரண்ய சிரார்த்தம் செய்தால்தான்  அந்தப்பொருள் எனக்கு வரும். அதுதான் என்னைச்சேர சரியான பாஸ்வேர்டு. பரவாயில்லை, என் பசி இருக்கட்டும்  அவனுக்கு புண்ணியம் சேருமே அது போதும் எனக்கு. குழந்தைகள் எல்லாம் என் ஆசிகளோட நன்னா வாழட்டும்,”    என்றபடி அங்கிருந்து நடையைக் கட்டுகிறார்.

காட்சி 4:

இந்த சீனில் நடப்பது என்ன?  வாசலில் வந்து நிற்கிறார் ஒரு பித்ரு.

மருமகள் கத்துகிறாள் “வாட் அ ஸில்லி திங்க் ?  எப்பவோ செத்து போனவர்  இப்ப வந்து நாம  கொடுக்கறதை வாங்கிண்டு  பிளஸ் பண்ணுவாராம், எனக்கு இதெல்லாம் நம்பிக்கை இல்லை. ஸ்டுப்பிட் திங். நான் ஆபீஸ் போகப்போறேன். “

“அடி சுசீ, இன்னிக்கி ஒரு நாள் கோவாப்ரேட் செய்ய மாட்டாயா? இப்படி பேண்டும்  ஷர்ட்டும் போட்டுண்டு கிளம்பறே.”

” எஸ்  வாட்ஸ்  ராங் இன்  திஸ்? என் ஆபீஸ்ல எனக்கு   என்ன மாதிரி போஸ்ட்ன்னு உனக்கு தெரியாதா? நீ எப்படியோ இன்னிக்கி  மேனேஜ் பண்ணிக்க. யூ டூ வாட்டெவர்  யூ லைக்  ஐ வோன்ட் இன்டர்பியர், அண்டர்ஸ்டுட் ?”

“சரி  என்ன குக் செய்திருக்கே ?”

“வெங்காயம் போட்டு மஸாலா தோஸா? வெஜ் பர்கர் …தென்..     நூடுல்ஸ்”

கணவானான முரளி பரிதாபமாக அவளைப்பார்க்க,  அவள் கதவை டபார் என்று சாத்தியபடி வெளியேறுகிறாள் .

காட்சி  5:

இதையெல்லாம் பார்த்த பித்ரு அங்கிருந்து கிளம்பி வரும் போது அவரது அண்ணாவைப் பார்த்தார். அண்ணா  அடையார் பக்கம் போய்க்கொண்டிருக்க தம்பி பித்ருவும் அவருடன் சேர்ந்துக்கொண்டார். இருவரும்  அடையார் வீட்டில் நுழைந்தனர். அங்கு  வயதான சுமங்கலி அமர்ந்து ஒரு அமெரிக்கப்பெண்மணிக்கு மஹாளயம் பற்றி விவரித்துக்கொண்டிருந்தார்.விவரித்த விதம் பார்த்தாலே அவர் பெரிய புரபஸர் போல் தெரிந்தது. அந்தப்பெண்மணியும் லில்லி என்ற தன்  பெயரை லீலா என்று ஆக்கிக்கொண்டிருந்தாள்.  அவளது முடி பொன் நிறமாக இருக்க அதைக்கொண்டைப்போட்டுக்கொண்டிருந்தாள். அவள் உடலுக்கு நீலப்புடவை  அவள் சோபையை இன்னும் கூட்டியது. அவளது கணவன் சியாம்   நியூ ஜெர்ஸியிலிருந்து சிரார்த்தம் செய்ய தன் புது அமெரிக்க மனைவியுடன் வந்திருந்தான். அவனும் பஞ்சகச்ச வேஷ்டியுடன் வாத்தியாரை எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்தான். அவனது மனைவி லீலா மிகவும் சிரத்தையாக எல்லாவற்றுக்கும் விளக்கம் கேட்டபடி அன்றைய காரியங்களில் கைக்கொடுத்தாள். வீட்டில் எல்லோரும் படித்தவர்கள் ஆனதால் அங்கு ஆங்கிலம் மொழி நிலவினாலும் நடைமுறையெல்லாம் தமிழ் நாட்டு பண்பாட்டைப்பின் பற்றியதாகவே இருந்தன. வாத்தியார் வந்தார். காரியம் செய்து வைக்கும்போது வேறு யாராவது பெயர் இதில் சேர்க்க வேண்டுமா என்று கேட்க “ஆமாம் என் சித்தப்பாவும் இறந்து விட்டார். அவர் பெயரும் சேர்த்துக்கொள்ளுங்கள் என்றார்.  இதையெல்லாம் பார்த்தபடி  அண்ணா பித்ரு தம்பியை பெருமையாகப்பார்த்தார். தம்பிக்கும்  தன் அண்ணண்  குடும்பம் மூலம்  தனது பெயருக்கும் ஒரு மரியாதை இருப்பதைக்கண்டுக்கொண்டார்.

காட்சி 6

“ஏண்டா ராமு.. உன் அப்பாவுக்கு மஹாளய தர்ப்பணம்   பண்ணியாச்சா?’

“நேத்திக்கி தான் பண்ணினேன்.”

“பின்ன என்ன உம்ம்ன்னு  சோகமா உட்க்கார்ந்திருக்கே”

“பின்ன  என்ன மாமா. என் அண்ணா தம்பி எல்லோரும் வெளியூரிலே  நன்னா சம்பாதிச்சிண்டிருக்கா. நான் மட்டும் என் அப்பாவோட சேர்ந்து அப்பாவோட ஆசைக்கு மந்திரம் சொல்ல கத்துண்டேன். அவ்வளவுதான்  அதே என் வாழ்க்கை ஆயிடுத்து. என் அப்பா எனக்கு ஒரு கல்யாணம் கூட பண்ணி வைக்கலை. என்னவோ ஜாதகத்ல தோஷமாம்.  அவர் ஒரு சுயநலவாதி. அவரால் தனியா வைதீகம் செய்ய முடில, அதனாலே என்னை உபயோகிச்சுண்டார். அவரும் போய்ச்  சேர்ந்தார்  ஐந்து வருஷம் ஆயிடுத்து. இப்போ ஆயிடுத்து எனக்கும் 45 வயசு. ஒரு வருஷத்து மூணு தெவசம் செய்யறேன். இதே போல செஞ்சு செஞ்சு எனக்கே இப்போ ஒன்றும் பிடிக்கலை.”

“நல்லதுதானே ராமு. எத்தனை பேரை நீ கரை சேர்க்கறே. உனக்கு நிறைய புண்ணியம் கிடைக்கும்டா.”

“மாமா நான் இப்போ ஒண்ணு தீர்மானம் செஞ்சுட்டேன். நான் சன்யாசம் வாங்கிக்கலாம்ன்னு … அப்போ எனக்கு இது மாதிரி ஒன்றும் செய்யவேண்டாமே!”

மாமா பரிதாபமாக அவனைப்பார்த்தார். இதெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த  பித்ரு ரூபத்தில் இருந்த ராமுவின் அப்பா அங்கிருந்து வருத்தமாக வெளியேறினார் .

பதினைந்து நாட்கள் ஓடிவிட்டன. பல பல அனுபவங்களுடன்  எல்லா பித்ருக்களும் வந்த இடத்திற்கே கிளம்பினர் எல்லோருடைய அனுபவத்திலும் கலி முற்றுகிறது என்ற உண்மை மட்டும் தெரிந்தது.

***

மேலே குறிப்பிட்ட   சம்ஸ்கார நிகழ்சிகள்  யாவும் நான் பார்த்த உண்மைச் சம்பவங்கள் அடிப்படையில் எழுதப்பட்டவை.  இவற்றையெல்லாம் பார்க்க  ஹிந்து  சம்ஸ்காரம் தேவையா இல்லையா என்ற கேள்வி எழுகிறது. ஏனென்றால் அதை சரியாக புரியவைக்க ஒருவருமில்லையோ என்ற ஐயப்பாடு உண்டாகிறது. அதைப்புரிந்துக்கொண்டால் எல்லாம் ஒழுங்காக நடக்கலாம் .   பல பெரியவர்கள் கருத்தின் படி நம் வருங்கால சந்ததிகள்   அவர்களது முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கர்மாக்களை  செய்ய வளமாக வாழ்ந்து  நன்றாக இருப்பார்கள்  என்று தெரிய வருகிறது. அதனால் இந்த சம்ஸ்காரத்தை செய்ய ஏன் தயங்க வேண்டும்?  இதற்கென்று அதிக சிலவுமில்லை. இரண்டு வாழைக்காய். கொஞ்சம் அரிசி, பருப்ப , வெற்றிலை பாக்கு, கொஞ்சம் தக்ஷிணை… அவ்வளவுதான். ஒரு  முப்பது நிமிடங்களில் எல்லாமே முடிந்துவிடும். டிவி முன்னாடி பல மணி நேரங்கள்  கழிக்கிறோம். இதற்கென்று கொஞ்சம் சமயம் அர்ப்பிக்கலாமே .

படம் உதவிக்கு நன்றி:  http://www.maalaimalar.com/2014/05/09151209/pitru-tarpanam-to–provide-eka.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.