வாழ்வது ஒரு முறை, வாழ்த்தட்டும் தலைமுறை!
பவள சங்கரி
தலையங்கம்
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃது ஆற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து. குறள் 1032
பொருள்
உழவு செய்ய முடியாமல் உயிர் வாழ்கின்றவர் எல்லாரையும் தாங்குவதால், உழவு செய்கின்றவர் உலகத்தார்க்கு அச்சாணி போன்றவர்.
இயற்கைச் சீற்றங்கள், நீராதாரம் போன்றவற்றால் ஏற்படும் பிரச்சனைகள் இயல்பானது. இதற்காக அரசாங்கமும் உடனடியாக கடன்களையோ, வட்டியையோ ரத்து செய்தோ அல்லது இலவசமாக உரங்களை அளித்தும், மானிய விலையில் விதைகளை அளித்தும் விவசாயத்தைப் பாதுகாக்க ஆவண செய்ய முற்படுகின்றனர்.விளைச்சல், அறுவடை, அதனால் வரக்கூடிய இலாபம், இவைகளை மட்டுமே கருத்தில் கொண்டு தங்களுடைய தொழிலை நடத்துவது என்பது ஏனைய தயாரிப்பாளர்கள் போன்று விவசாயம் செய்பவர்களுக்கும் பொருந்தும் என்றாலும், விவசாயம் என்பது மற்ற தொழில்களைப் போன்றது அல்ல. இது நம் வாழ்வாதாரம். அதனாலேயே மற்ற அனைத்துத் தொழில்களைக்காட்டிலும் விவசாயம் உன்னதமானது என்று தெய்வப் புலவர்களும் அறுதியிட்டு கூறிச்சென்றுள்ளனர். அந்த உன்னத நிலையைத் தக்க வைத்துக்கொள்வதும் அவரவர் கைகளில்தான் உள்ளது.
ஆனால் பெரும்பாலான விவசாயிகள் சமுதாய அக்கறையின்றி, அதிக இலாபம் என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு விளைச்சல் பார்ப்பது வருத்தத்திற்குரிய விசயம். உதாரணமாக, தக்காளிப் பழத்திற்கு எடை கூடவேண்டும் என்று சில யுக்திகளை கையாளுகின்றனர். தண்ணீர் தாகத்திற்காக சாப்பிடக்கூடிய கோசாப் பழத்திற்கு (தர்பூசணி) சாராயம் ஊற்றி விளைவிப்பதாகக் கூறுகின்றனர். நம்முடைய முக்கிய உணவுப் பொருளான நெல்லை விளைவிக்க தரமற்ற பொருட்களை பயன்படுத்தியும், தேவையறியாமலே அவ்வப்போது உயிர்கொல்லி மருந்துகளும் பயன்படுத்தப்படுகின்றன. இப்பொழுதெல்லாம், முதல் நாள் தயாரித்த சாதத்தை பழைய சாதமாக அடுத்த நாள் சாப்பிடும் சுகம், பெரும்பாலான வகை அரிசியில், அது எவ்வளவு விலை உயர்ந்ததாக இருப்பினும் கிடைப்பதில்லை. பொதுவாக பழைய சாதமென்றால் தேவாமிர்தமாக இருந்த நிலை மாறிவிட்டது.
அநேகமாக, இந்த பத்தாண்டுகளில்தான், முன்பு பயன்படுத்திய பசுந்தளை இயற்கை உரம் மற்றும் மறு சுழற்சி விவசாய முறைகள் போன்றவற்றில் அதிகமாக கவனம் செலுத்தப்படுவதில்லை. இதனால் விவசாயப்பெருமக்களின் பொருளாதார நிலை வேண்டுமானால் உயரலாம். ஆனால் இதை உண்ணும் மக்களின் நிலை பற்றி சிந்திப்பார் இல்லை. தற்போது கிடைத்துள்ள சில புள்ளி விவரங்களின் படி இது போன்ற வேதிப் பொருட்கள் பயன்படுத்துவதால் புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாகவும், இதைவிட அதிர்ச்சிகரமான மற்றொரு தகவல் வாழையடி, வாழையாக நம் சந்ததிகள் தளைப்பதற்கான வாய்ப்பே அற்றுப் போவதற்கான சூழ்நிலை உருவாகி வருகின்றன என்பதும் வல்லுநர்களின் கவலையாக உள்ளது. சக்கரை நோய்களின் தலையிடமாகவும், நம் இந்தியா, உலக அரங்கில் அறிவிக்கப்பட்டுள்ளது. சுமாராக ஏழு கோடி மக்கள் சக்கரை வியாதி பாதிக்கப்பட்டவர்களாகவும், 14 கோடி மக்கள் சக்கரை நோய் வருவதற்கான விளிம்பில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெருவாரியான வழக்குகள் ஆண்மை குறைபாடு உள்ள காரணத்தினால் விவாகரத்து நாடி நீதி மன்றம் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஆய்வு அறிக்கைகள் வெளியிடுகின்றன. விலை பொருட்கள் அனைத்தும் விலைக்காக மட்டுமல்லாமல் மக்கள் நோய் நொடியின்றி வாழும் வகையில் விவசாய உத்திகளை மாற்றியமைக்க வேண்டியது அவசியமாகிறது. நன்கு ஆய்வு செய்து தேவையென்றால் மட்டுமே பூச்சுக்கொல்லி மருந்து அடிக்க வேண்டும்.
சமீபத்தில் ஈரோடு அருகில், சித்தோடு எனும் இடத்தில், நாட்டுச் சக்கரை, வெல்லச் சந்தையில் நடந்த நிகழ்வு இது. வெல்ல உருண்டைகள் வெளிர் மஞ்சளில் இருந்தால் நல்ல விலை கிடைக்கும் என்பதால், ஏதோ இரசாயணப் பொருட்களைப் பயன்படுத்தி பழுப்பு நிறத்தை நீக்கிவிட முயன்றிருக்கின்றனர். இதனை அறிந்த, கொள்முதல் பண்ணுவதற்காக வந்திருந்த அனைவரும் 15 டன் பொருட்களையும் வாங்க மறுத்துவிட்டனர். இது அடிக்கடி தொடரும் நிலையாகவே உள்ளது. அதேபோல் ஆலைக் கரும்பின் எடை கூடுவதற்காக பயன்படுத்தும் பொருட்களையும் தவிர்க்க வேண்டும் என்பதே வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.
இது போன்ற பிரச்சனைகளை தவிர்ப்பதற்கு, நம் அரசு ஆய்வகங்களின் மூலமாக ஆய்வு செய்து, அதன் பின் விளைவுகளை கணக்கில்கொண்டு எந்த விதமான உரங்களை, எவ்வளவு அளவிற்கு பயன்படுத்தலாம் என்பதற்கான அறிக்கைகளை வெளியிட்டால். விவசாய பெருமக்களுக்கும் பேருதவியாக இருக்கலாம். அறியாமையால் செய்யப்படும் தவறுகளும் திருத்தம் பெறலாம். நம் வருங்காலச் சந்ததியினர் நோயற்ற வாழ்வை வாழ முடியும் என்ற உத்திரவாதமும் இருக்கும் என்பதே நிதர்சனம்.