Blog

  • குறளின் கதிர்களாய்…(264)

    குறளின் கதிர்களாய்…(264)

    -செண்பக ஜெகதீசன் 

    நிலைமக்கள் சால வுடைத்தெனினுந் தானை
    தலைமக்க ளில்வழி யில்.

    திருக்குறள் -770(படைமாட்சி)

    புதுக் கவிதையில்…

    களத்தில் உறுதியாய் நின்று
    போரிடும்
    வல்லமை மிகு வீரர்கள்
    பலர் இருப்பினும்,
    முன்னின்று வழிநடத்தும்
    தகுதி வாய்ந்த
    தலைவன் இல்லாதபோது
    படைக்குப் பெருமையில்லை
    நிலைத்தும் நிற்காது…!

    குறும்பாவில்…

    நிலையான வீரர்கள் பலரிருப்பினும்,
    வழிநடத்தும் தலைவனில்லாத படைக்குப்
    பெருமையில்லை நிலைக்காது…!

    மரபுக் கவிதையில்…

    நிலையாய்க் களத்தினில் நின்றேதான்
    நன்றாய்ப் போரிடும் படைவீரர்
    பலரும் படையி லிருந்தாலும்,
    போரில் வெல்ல முன்னின்று
    தலைமை யேற்றுப் படைநடத்தத்
    தக்க தலைவன் இல்லையெனில்,
    நிலைமை மிகவும் மோசமாகி
    நிலைப்ப தில்லை படைச்சிறப்பே…!

    லிமரைக்கூ..

    போரிடுவோர் நிலையாய் நின்று
    வீரர் பலரிருப்பினும், தலைவனில்லாப் படையின்
    பெருமை நிலைக்காது வென்று…!

    கிராமிய பாணியில்…

    படவேணும் படவேணும்
    போருல ஜெயிக்கணுண்ணா
    நல்ல படவேணும்..

    போர்க்களத்தில நெலயா நின்னு
    தெறமயா சண்டபோடுற வீரனுங்க
    நெறய இருந்தாலும்,
    மொறயா முன்னால நின்னு
    படநடத்துற தலைவன் இல்லண்ணா,
    படைக்கு வராது பெரும
    போருல ஜெயிச்சி..

    அதால
    படவேணும் படவேணும்
    போருல ஜெயிக்கணுண்ணா
    நல்ல படவேணும்…!

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (299

    இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (299

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்களைத் தாங்கி வருகிறது எந்தன் அடுத்த மடல்உள்ளத்தின் கதவுகளைத் திறந்து வெள்ளமாய் இருக்கும் எண்ணங்களின் சிலதுகள்களை அள்ளித் தெளிப்பதில் ஆனந்தமடைகிறேன்.

    கடுகதி வேகத்தில் காற்றைப்போல் பறந்து செல்கிறது காலம்இந்தக் காலக் காற்றினுள் அகப்பட்ட சருகுகளாக அடித்துச் செலப்பட்டுக் கொண்டிருக்கிறோம்ஆனால் அத்தகைய சூறாவளிக்குள் சிக்கப்பட்ட நிலையிலும், வசதியான ஒரு வாழ்வைத் தக்க வைத்துக் கொள்வதற்காக உலகின் ஒரு பக்க மக்களும்அன்றாடத் தேவைகளையே தீர்க்க முடியாமல் அல்லலுறும் உலகின் மற்றொரு பகுதி மக்களும் வாழ்கின்ற நிலை.

    இந்நிலையில் இவ்விரு வகையான மக்களின் வாழ்க்கையையும் நிர்ணயிக்கின்ற பொறுப்புகளில் அந்நதந்தப் பகுதிகளில் அரசியல் நடத்தும் தலைவர்களும் அவர்கள் வழி வந்தவர்களும் தங்கள் கொள்கைகளை நியாயப்படுத்தும் வகையில் தம்பக்க பிரச்சாரங்களுக்குள் மக்களை மூழ்கடிக்கும் நோக்கத்தோடு செயலாற்றும் நிலை.

    பசிபஞ்சம்பட்டினிமரணம் என்பன எப்படி ஜாதிமதஇனநிற வேறுபாடு காட்டுவதில்லையோ அதேபோல செல்வம் மகிழ்ச்சி,வாழ்வுஆடம்பரம் என்பனவும் இவ்வேறுபாடுகளைக் காட்டுவதில்லைஇருப்பினும் இன்றைய உலகில் இப்படிபஞ்சம்பட்டினி அகால மரணங்கள்தேவையற்ற யுத்தங்கள் என்பன வசதி குறைந்தபொருளாதாரச் சிக்கல்கள் நிறைந்த Developing countries அதாவது முன்னேற்றமடைந்து வரும் நாடுகள் என்று அழகாகக் குறிப்பிடப்படும் நாடுகளிலேயே நிகழ்கின்றன.

    முன்னேற்றமடைந்துவரும் நாடுகளின் முன்னேற்றத்துக்கு உதவுகிறோம் என்று அதற்கொரு கொள்கையையும்,அக்கொள்கையைச் செயற்படுத்துவதற்கென்று அமைச்சர்களையும்வாரியத்தையும் நியமித்து செயற்படுகிறது தம்மை முன்னேற்றமடைந்து விட்ட நாடுகள் கூறும் மேற்குலக வல்லரசு நாடுகள்ஆயினும் இவர்களின் முன்னேற்றமடையாத நாடுகளுக்கான உதவிகளின் அடிப்படையில் தான் இவர்களது பொருளாதர வீரியம் தங்கியுள்ளது என்பது உண்மையேஎந்தநாடும் தமது நாட்டின் நன்மையை கருத்திற் கொண்டுதான் எந்தவொரு திட்டத்தையும் நடைமுறைப்படுத்தும்அதுவே அந்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பும்யதார்த்தமும் கூடஆனால் அனைத்துக்கும் பின்னால் மறைந்து நிற்கும் அரசியல் லாபங்களின் உண்மை வடிவங்கள் சாதாரண மக்களுக்கு காட்டப்படுவதில்லை.

    வசதி குறைந்த நாடுகளுக்கு உதவுவது மனித தர்மமே ஆனால் உதவி எனும் பெயரில் தமது ஆதிக்கத்தைதாம் எவ்வழியில் அந்நாடு போகவேண்டும் என்று எண்ணும் வழியில் அந்நாடு நடக்கவேண்டும் என்று எண்ணி அந்நாட்டிற்கு ஏற்புடையதல்லாத வழியில் போகவைக்க எத்தனிப்பது உண்மையான உதவியாகுமாஎன்பது இன்றைய உலகின் ஒரு முக்கியமான கேள்வியாகிறது.

    இத்தகைய வழியில் ஒரு வல்லமை கூடிய நாடு உதவி எனும் பெயரில் மற்றொரு நாட்டினை மறைமுக ஆதிக்கத்துக்கு உள்ளாக்குவதற்கு அவ்வல்லமை மிக்க நாடு மட்டும்தான் காரணமாஇல்லை அவர்களிடம் உதவியை ஏற்றுக் கொள்ளும் அவ்வசதி குறைந்த நாட்டினை வழி நடத்துகிறோம் என்றுகூறி அதிகாரத்திலிருக்கும் அரசியல் தலமைகளின் சுயநலமான மனப்போக்கே காரணமாகிறதுமுன்னேற்றம் அடைந்துவரும் நாடுகளை முன்னேற்றமடையவிடாத நிலையில் வைத்திருப்பதனால் தமக்கு இலாபம் எனும் கணக்கீட்டினால் அரசியல் வியாபாரகி விட்ட ஒரு சூழலே இதற்கு மூலகாரணமாகிறது.

    இத்தகைய மக்களின் வாழ்வோடு விளையாடும் அரசியல் நடத்துவோரால்தான் இன்று இனவிரோத மனப்பான்மையை நியாயப்படுத்தி அதனைப் பாப்பியூலசிம் எனும் உணர்ச்சி மிக்க தீவிரவாத அரசியல் நிலைப்பாடாகக் காட்டும் அரசியல் தலைவர்களுக்கான ஆதரவு மேற்குலக நாடுகளில் பெருகி வருவதைக் காண்கிறோம்சோசலிஸம்கப்பிட்டிலஸம்கம்யூனிசம் எனும் வகை அரசியல் முறைகளைப் பல்வேறு நாடுகள் கடைப்பிடித்து வந்தனஅவற்றில் பல அவ்வகை அரசியலினால் தமது பொருளாதார வளத்தைப் பெருக்கிக் கொண்டனசுற்றிவரும் ராட்டினத்தில் மேலிருக்கும் பகுதி கீழே வருவதும்கீழிருக்கும் பகுதி மேலே போவதும் சகஜம்அதேபோல் இப்பொருளாதார மேம்பாடு கண்டவர்களின் வாழ்வாதாரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டதும் அதற்குக் காரணமாக இலகுவாக கண்முன்னே தோன்றுவது வெளிநாட்டிலிருந்து வந்து குடியேறிவவர்களேஅதுவும் அவர்கள் வேற்றினத்து,வேறு நிறத்துடையவரானால் அது இன்னும் வெளிப்படையாகத் தோன்றும்இப்பொருளாதார வீழ்ச்சிக்கு இனவாதத் துவேஷங்களை விளக்கமாக்கும் யுக்தியைக் கையாளுவதே பல அரசியல்வாதிகளுக்கு இலகுவான காரியமாகத் தென்பட்டது.

    விளைவு !

    இன்றைய மேற்குலக நாடுகளில்அதாவது வெள்ளை இனத்தவரைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடுகளில்வேற்றினத்து குறிப்பாகக் கறுப்பின மக்களின் மீதான வெறுப்புணர்வின் பலத்தில் தமது அரசியல்கோட்டைகளைக் கட்டிக்கொள்ளப் பலர் முனைவதைக் காண்கிறோம்இதற்கு பற்பல காரணங்களுக்காக புலம்பெயர்ந்து வாழும் மக்களின் நடவடிக்கைகளும் துணை போகின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மையே நாம் புலம்பெயர்ந்து வந்தபோது எம்மை அரவணைத்துஎமக்கான வாழ்வொன்றை ஏற்படுத்திக் கொடுத்த நாட்டை வாடகை வீடு போன்றும்எந்தநாட்டில் வாழமுடியாமல் விட்டு ஓடி வந்தோமோ அந்நாட்டினைச் சொந்த வீடு போன்றும் கருதும் மனப்பான்மையினால் கூறப்படும் கருத்துக்கள்செயற்படுத்தும் நடவடிக்கைகள் எமக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் மனதில் ஆறாத வடுக்களை ஏற்படுத்துவது சகஜமே !

    புலம்பெயர்ந்த நாடுகளின் அமைப்புகளில் அரசியல் நீரோட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்டு அதன் அங்கங்களாகச் செயற்படும் பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்களை அவர் இனத்தினைச் சேர்ந்தவர்களே எதோ தமது இனத்துக்கு துரோகம் செய்வோர்கள் என்பது போன்ற மனப்பான்மையில் பார்ப்பது கூட சில இடங்களில் நடப்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.இங்கேதான் தாய்நாடு” , “தாய்மொழி” என்பதன் அர்த்தங்களின் புரிதல்களின் வித்தியாசங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள் புலனாகின்றனஅந்நியமொழியைக் கற்று அதனில் புலமை பெறுவதென்பது தாய்மொழி“யை மறப்பதன்று எனும் உண்மை பலருக்குக் கசப்பாக இருக்கிறது என்பது வியப்புக்குரியதொன்றாக இருக்கிறதுஅவ்வகையில் தாம் அந்நியமொழியில் பெற்ற புலமையின் பலத்தால் தன்னை ஈன்றெடுத்த தாய் பேசும் மொழியின் சிறப்பான இலக்கியங்களை மொழிமாற்றம் செய்து தமதுதாய்மொழியின் சிறப்பினை அந்நியமொழி பேசுவோருக்கும் புலப்படுத்துவது கூட ஒரு சிறப்பான தாய்மொழிப் பற்று என்பதனை மறந்து விடுக்கிறோம்.

    மதம் என்பது ஒரு மனிதனின் அணிகலனே அன்றி ஆடையாகாதுஅம்மதத்தின் மூலம் நாம் கற்றுக் கொண்ட நல்வாழ்வுக்குரிய நற்பண்புகளை வளர்த்துக் கொள்வது தவறாகாதுஆனால் மதத்தின் மீது கொண்ட பற்று எனும் காரணம் நாம் மனிதனாக வாழ்வில் முன்னேறும் படிகளில் தடைக்கற்களாக்கிக் கொள்வது தவறுஇன்றைய பிரிட்டன்  பல்லினமக்களைக் கொண்ட  பலகலாச்சார நாடாகும்மத வேறுபாடுகளைக் கடந்துநிற வேறுபாடுகளைக் கடந்து மனிதரென்னும் அடிப்படையில் அடுத்தவரின் உரிமைகளை மதிப்பது ஒன்றே இந்நாட்டின் அமைதியான வாழ்வுக்கு அடிப்படையாகும்.

    இன்றைய பிரிட்டன் அமைச்சரவையில் கிறீஸ்தவர்யூதர்இந்துஇஸ்லாம் என பல்வேறு மதப்பின்னணிகளைக் கொண்டவர்கள் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்இவர்களில் முக்கிய அமைச்சர்கள் இருவர் ஆசியப் பின்னணியைக் கொண்டவர்கள்இவர்கள் வெறும் ஆசியர்கள் எனும் காரணத்தினால் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று பல்வேறு காரணங்களுக்காக இன்றைய பிரதமரையும்அரசினையும் எதிர்க்கும் வெள்ளை இனத்தவர் மட்டுமல்ல பல ஆசியர்களுமே ஆங்காங்கே முனகுவதைக் காண்கிறேன்.

    மக்களே உங்கள் முன்னால் வைக்கப்பட வேண்டிய முக்கிய கேள்வி இதுதான்இவைகள் எல்லாவற்றையும் கடந்து ஏன் அவர்கள்,அவர்களின் திறமையின் அடிப்படியில் நியமிக்கப்பட்டிருக்கக் கூடாதுபுலம் பெயர்ந்து வந்து இம்மண்ணிலே தமது திறமையை நிலைநாட்டியவர்கள்அவர்கள் என்பதில்நாமும் புலம் பெயர்ந்தவர்கள் எனும் அடிப்படியில் நாம் பெருமை கொள்ளக்கூடாதா?பதவியலமர்த்தப்பட்டு சில தினங்களே ஆகிறது அதுக்குள்ளாகவே நாம் அவர்களின் செயற்பாடுகளின் நீதிபதிகளாவது முறையாகுமா?

    ஒரே கேள்வி ஒரே கேள்வி என் நெஞ்சிலே

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    Share
  • வல்லமைத் தளம் மீண்டது

    வல்லமைத் தளம் மீண்டது

    அண்ணாகண்ணன்

    37 நாள்கள் இடைவெளிக்குப் பிறகு வல்லமைத் தளம் (http://www.vallamai.com) இன்று மீண்டது. இதன் வழங்கியை (சர்வர்) மாற்றியுள்ளோம். இதில் நிறையக் கோப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றை நீக்க வேண்டும் அல்லது சரிசெய்ய வேண்டும். இதன் MySql தரவுகளின் அளவைக் குறைக்க வேண்டும். வடிவமைப்பை மாற்றியமைக்க வேண்டும். மேலும் புதிய அம்சங்களைச் சேர்க்க வேண்டும். இன்னும் பற்பல பணிகள் உள்ளன. ஆயினும் தளத்தை இப்போது எவரும் அணுகலாம் என்பது சற்றே ஆறுதல் அளிக்கிறது.

    இந்த இடர்மிகுந்த காலத்தில் வல்லமைக்கு நன்கொடை வழங்கிய எழுத்தாளர்கள் நிர்மலா ராகவன், ஜெயபாரதன், மேகலா இராமமூர்த்தி, நன்கொடை வழங்க இசைந்துள்ள கவிஞர் வித்யாசாகர், பேராசிரியர் செ.இரா.செல்வகுமார், முனைவர் நா.கணேசன், திருச்சி புலவர் இராமமூர்த்தி உள்ளிட்டோருக்கு உள்ளம் நிறைந்த நன்றிகள்.

    வல்லமைக்கு இதுவரை தமது வழங்கியில் இடமளித்த ஆமாச்சு (ஸ்ரீராமதாஸ்), தொழில்நுட்ப ஆதரவும் ஆலோசனையும் வழங்கிய செல்வ.முரளி, ஸ்ரீநிவாசன், கார்த்திக் நரசிம்மன் ஆகியோருக்கு முதன்மை நன்றிகள். அக்கறையுடன் தொடர்ந்து விசாரித்த நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் மிக்க நன்றி.

    வல்லமைத் தளம், திடமாகத் தொடர்வதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் தேவை. வல்லமை இதழ்ப் பணிகளுடன், வல்லமை அறக்கட்டளைப் பணிகளையும் முன்னெடுக்க வேண்டும். இயன்றோர் நன்கொடை வழங்கி ஆதரியுங்கள். நிதியாதரவு மட்டுமின்றி, துணை ஆசிரியர்களும் தேவை. நேரம் ஒதுக்கிப் பங்களிக்கக் கூடியவர்கள் தொடர்புகொள்ளுங்கள்.

    நிறையப் படைப்புகள் காத்திருக்கின்றன. இனி, முழு வீச்சில் தொடர்வோம். எப்போதும்போல் இணைந்திருங்கள்.

    Share
  • அத்தி வரதரைத் தரிசிக்க, இன்னும் மூன்று யோசனைகள்

    அண்ணாகண்ணன்

    அத்தி வரதரைத் தரிசிக்க, இன்னும் மூன்று யோசனைகள். இவற்றை 2059இலாவது நிறைவேற்றப் பரிசீலிக்கலாம்.

    யோசனை 1: அத்தி வரதர் நடுவில் வீற்றிருக்க, அவரைச் சுற்றி, 3 ரெயில் தடங்கள் அமைக்க வேண்டும். ஒவ்வொரு ரெயிலும் அத்தி வரதரை ஒரு சுற்றிவிட்டு, திரும்பி வரும். பக்தர்கள் அதில் இருந்தபடியே தரிசிக்கலாம். இதற்கு ஏற்ப, ரெயிலின் உள்ளே, எல்லாம் ஜன்னலோரம் இருப்பது போல் இருக்கைகளை வடிவமைக்க வேண்டும். மூன்று ரெயில்கள் ஓடும்போது, அடுத்த மூன்று ரெயில்களில் பக்தர்களை ஏற்றலாம். இந்த ரெயில் ஓட்டுபவர்களைச் சுழற்சி முறையில் மாற்றலாம். ரெயில்களை நள்ளிரவில் சரிபார்க்கலாம். இதே ரெயில்களை மாடி ரெயில்களாக அமைத்தால், ஒரே நேரத்தில் இரு மடங்கினர் தரிசிக்கலாம். இதற்கு மேல் ரோப்கார் அமைத்தால், அதில் ஓர் அணியினர் சென்று வரலாம்.

    யோசனை 2: நடுவில் அத்தி வரதர் வீற்றிருக்க, எட்டுப் பாதைகள் அமைத்து, ஹைப்பர்லூப் குழாயில் காந்தக் கூடுகளில் பக்தர்களை ஏற்றி, ஒரு கிலோ மீட்டரை அரை நிமிடத்தில் கடந்து, அத்தி வரதரை வலம் வந்து திரும்பலாம். ஒரே நேரத்தில் 4 கூடுகள் வலம் வருமாறு செய்யலாம். இது, ஓட்டுநர் இல்லாமல், தன்னியக்கமாகச் செயல்படுமாறும் செய்யலாம். இதன் மூலம் ஒரே நாளில் இருபது இலட்சம் பேரையும் தரிசிக்கச் செய்யலாம். இதை உலகளாவிய திருவிழாவாக மாற்றி, அயல் நாடுகளிலிருந்தும் பக்தர்களை ஈர்க்கலாம்.

    யோசனை 3: அத்தி வரதரை ஒரே இடத்தில் வைக்காமல், திருத்தேரில் ஏற்றி, தமிழகத்தின் அத்தனை மாவட்டங்களிலும் பவனி வரச் செய்யலாம். இதன் மூலம், பக்தர்கள் ஒரு நகரத்தில் குவிவதைத் தவிர்க்கலாம்.

    Share
  • படக்கவிதைப் போட்டி 220-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    காயத்ரி அகல்யாவின் (Gaya3 Akallya) எண்ணத்தில் உருவான இந்த வண்ணப் புகைப்படத்தை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தெரிவுசெய்து படக்கவிதைப் போட்டி 220க்கு அளித்திருப்பவர் சாந்தி மாரியப்பன். காயத்ரிக்கும் சாந்திக்கும் என் நன்றிகள்!

    வானவில்லின் வண்ணங்காட்டும் குடைக்குள் முகம் மலர நிற்கும் இந்தக் குழந்தைகளைக் கண்டால் கல்லும் கவிபாடும்; நம் கவிஞர்களைக் கேட்பானேன்? வரிசைகட்டி நிற்கும் வல்லமைக் கவிஞர்களைக் கவி விருந்து படைக்க அழைக்கிறேன் அன்போடு!

    *****

    ”மண்செழிக்கச் செய்யும் வான்மழை வாராது போயினும், மனம்செழிக்கச் செய்யும் பாசமழை என்றும் பெய்யும்” என்று உறுதியளிக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    மழையில் நனைந்து…

    வான்மழை வராது போனாலும்
    வைய வாழ்வில் வருவதுண்டு,
    கோன்முதல் குடிசையில் வாழ்ந்திருக்கும்
    காசினி மாந்தர் வாழ்வினிலே
    தோன்றி வளந்தரும் பாசமழை
    தொடர்ந்து வந்திடும் நின்றிடாதே,
    ஊன்றிடும் உறவிது தழைத்தோங்கும்
    உடன்பிறந் தோர்தம் பாசமதே…!

    ******

    ”மூடர்களின் வண்ணங்களும் எண்ணங்களும் கானலாய்க் கரையப் புன்னகை சிந்தும் மழலையரைக் காண்மின்” என்கிறார் திரு. சுந்தர்.

    கருமேகம் கொட்டிய
    மழைத்துளியில்
    தீட்டிய வண்ணங்களைக்
    குடையினில்
    ஏந்திய மழலைகள்
    சிந்திய புன்னகையில்
    சில மூடரின் வர்ணங்களின்
    எண்ணங்களும் கானல்
    நீராய்க் கரைகிறதே….

    *****

    குடைக்குள் நிற்கும் அழகுக் கவிதைகளாம் மழலையர் பற்றி இனிய கவிதைகள் தீட்டிய கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    அடுத்துவருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்வாகியிருப்பது…

    மழலைகளின் சாரல் மழை

    வானவில்லையே வளைத்துக்
    குடையாய்ப் பிடித்திடச்
    சிந்தும் புன்னகை
    மின்னலாய்க்
    குடைக்குள் மழையாய்
    இந்த மழலைகள்!

    வள்ளுவன் வாக்கு போல்
    வறட்சி எனும் இடுக்கண் நீங்கிட
    மழை வரும் என்று எண்ணிச்
    சந்தோஷமாய்ச் சிறிது மகிழ்ந்திட
    நம்பிக்கையின் உச்சமாய்
    மழைவந்து நனையாமல் இருக்க
    வண்ணக் குடை கொண்டு வந்ததோ
    இந்த மழலைகள்?

    சுட்டெரிக்கும் சூரியன்
    உருண்டோடும் நீள(ல)வானில்
    சட்டென மாறிய வானிலை
    சில்லென்று வீசிய காற்றில்
    வந்து நின்ற மணல் வாசம்
    கோடை மழை வந்து எட்டிப் பார்க்க
    வானவில்லை வண்ணத் தோரணங்களாய்க் கட்டித்
    தங்கள் நிலையை மாற்ற
    வரும் மழையை
    வரவேற்று நின்றனரோ
    இந்த மழலைகள்?

    ”மழைவரும் எனும் நம்பிக்கையின் உச்சமாய் வானவில்லையே குடையெனும் வண்ணத்தோரணமாய்க் கட்டி மழையை வரவேற்க விழிபூத்துக் காத்துநிற்கும் மழலையரோ இவர்கள்?” என்று வியந்து வினவும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • அத்தி வரதரை எளிதில் தரிசிக்க…!

    (அண்ணாகண்ணன் யோசனைகள் 34)

    காஞ்சி அத்தி வரதரைத் தரிசிக்க நாள்தோறும் இலட்சத்திற்கும் மேற்பட்டோர் சென்று, பல மணி நேரங்கள் வரிசையில் நின்று, வழிபடுகின்றனர். அண்மையில் பக்தர்கள் நால்வர் இறந்தனர் என்ற செய்தி, பெரிதும் வருத்தியது. 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் வெளியே வருவதால், எப்படியாவது அவரைச் சந்தித்துவிட வேண்டும் எனப் பலரும் விரும்புவது இயல்பே. ஆனால், இப்போது உள்ள ஏற்பாட்டில் இது மேலும் மேலும் சிக்கலாகி வருகிறது. இதற்கு எனக்குத் தோன்றும் ஒரு தீர்வை இங்கே முன்வைக்கிறேன்.

    அத்தி வரதரைத் திருக்குளத்திலிருந்து எழுந்தருளச் செய்து, ஏன் வரதராஜப் பெருமாள் கோவிலுக்குள் உள்ள மண்டபத்தில் வீற்றிருக்கச் செய்ய வேண்டும்? முந்தைய காலங்களில் இவ்வாறு வைத்ததால், இதுவே மரபு எனக் கருதலாம். ஆனால், இன்றைய மக்கள் தொகை, வரக்கூடிய பக்தகோடிகளின் எண்ணிக்கை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, வரதரை விசாலமான இடத்தில் நிலைகொள்ள வைப்பதே இதற்குத் தக்க தீர்வு.

    அத்தி வரதரைப் பெரிய மைதானம் அல்லது திறந்த வெளியின் மையத்தில் வைத்து, சிறிய கோவில் போன்ற அமைப்பைத் தற்காலிகமாக உருவாக்கலாம். அவரைச் சென்றடைய ஒரு வழி என வைக்காது, சுற்றிலும் 8 வழிகளை உருவாக்க வேண்டும். இவற்றுள் 4 வழிகளின் வழியாகப் பக்தர்கள் உள்வருமாறும் எஞ்சிய 4 வழிகளின் வாயிலாக அவர்கள் வெளியேறவும் பாதை அமைக்கலாம். இதைச் செய்தாலே ஒரே நேரத்தில் இப்போது உள்ளது போல், 4 மடங்கு அதிகமான பக்தர்கள் வரதரைத் தரிசிக்கலாம்.

    இதையே முன்னதாகத் திட்டமிட்டு, இரண்டு அடுக்குகளில் செய்திருந்தால், வரதரை நோக்கி மொத்தம் 16 பாதைகள் அமைந்திருக்கும். கீழே நான்கு வரிசை, மேலே நான்கு வரிசை என எட்டு வரிசைகளில் மக்கள் உள்வந்து தரிசிக்கலாம். எஞ்சிய எட்டு வழிகளின் ஊடே அவர்கள் வெளியேறலாம்.

    இப்போதும் தாமதம் ஆகிவிடவில்லை. தரைவழியே மட்டும் இந்த ஏற்பாட்டை மாவட்ட நிர்வாகம் செய்தால், 4 + 4 என 8 வழிகளைக் கொண்டே கூட்டத்தைச் சிறப்பாக நிர்வகிக்கலாம். இவற்றில் பெண்களுக்கு ஒரு வழியையும் முதியோர் மற்றும் குழந்தைகளுக்காக ஒரு வழியையும் ஒதுக்கினால், சிக்கல்கள் பலவற்றைத் தீர்த்துவிடலாம்.

    ஒரு வரிசையில் ஒரே நேரத்தில் 5 ஆயிரம் பேர் நிற்பதாகக் கொண்டால், ஒவ்வோர் ஆயிரம் பேருக்கும் நடுவில் குடிநீர், மோர், இயற்கை அழைப்புகளுக்காக ஓர் ஏற்பாட்டைச் செய்யலாம். இது, பக்தர்களின் சிரமத்தைத் தணிக்கும். இன்னும் ஒரு படி மேலே சென்று, முழுக்க நாற்காலிகளை அமைத்து, அந்த நாற்காலிகளையும் கன்வேயர் பெல்டில் இணைத்துவிடலாம். இப்போது பக்தர்கள் உட்கார்ந்தபடியே வந்து, பெருமாளைச் சேவித்து, மீண்டும் உட்கார்ந்தபடியே திரும்பச் சென்றுவிடலாம். 40 நாள்கள் முடிந்த பிறகு, அத்தி வரதரை வழக்கம்போல், குளத்திற்கே கொண்டு செல்லலாம்.

    கட்சி மாநாடுகளுக்காக ஊரையே வளைத்து, ஏக்கர் கணக்கில் பந்தல் அமைக்க முடிகிறபோது, அத்தி வரதருக்காக இவ்வாறு செய்வது இயலாத காரியம் இல்லை. வரதரை வைக்கும் இடத்திற்கு அத்தி வரதர் பீடம் என்றே பெயர் வைத்து, எப்போதும் பாதுகாத்து வைத்தால், எதிர்காலத்திலும் இந்த இடத்தைப் பயன்படுத்தலாம். சிக்கல்கள் இல்லாமல் பக்தர்களைப் பாதுகாப்பாக அனுப்பி வைக்கலாம்.

    Share
  • Annakannan Ideas – 33

    Dr.Annakannan

    Today when I came across a road junction, there is no signal, every vehicle is trying to go first with speed and hurry. More noises, rush & confusions. I thought of an emergency light in every vehicle. Normally ambulances will have such light & sound to move quickly in medical emergency. What, if someone have to catch a train or flight? Heading to an interview or client meet? Rushing to school before the gate closed? Some people may drop their wards & coming back to home in leisure. We really don’t know who is in urgency. In such time, people will think & act differently. This may lead to accidents & damages.

    To solve this issue, we can keep an orange light in front & back (without sound) to show emergency; the other vehicle in leisure can blink a green light as a signal to let them go. People have to use this option carefully with civic responsibilities. We can add this in driverless vehicles too. Do you think, this individual signal will be useful?

    (Akavazhi 33)

    Share
  • ஐயப்பன் காவியம் – 3

    ஐயப்பன் காவியம் – 3

    -கவிமாமணி இலந்தை சு.இராமசாமி 

    பொதிகைப் படலம்

    விளம் மா தேமா – அறுசீர் விருத்தம்

    மந்தையாம் மேகம், வேழம்
    மலையெலாம் உலவும், கேட்க
    விந்தையாய்த் தென்றல் பாடும்
    வெளியெலாம் பச்சைப் பூச்சு.
    மந்திகள் பாசம் காட்டி
    வயிற்றிலே குட்டி தூக்கும்
    விந்தைகொள் பொதிகை மேடு
    மேற்கிலே திகழ்ந்த தன்றே! (23)

    காட்டிலே சிங்கம் போடும்
    கர்ஜனை மக்கள் வாழும்
    வீட்டிலே கேட்கும், பாயும்
    வேங்கையோ அவ்வப்போது
    நாட்டிலே எட்டிப் பார்க்கும்
    நாயெலாம் வரவு பாடி
    கூட்டமாய்ப் பாய வேங்கை
    கொட்டமும் அடங்கி ஓடும். (24)

    மூங்கிலின் உச்சி ஏறி
    முழுநிலா தொட்டுப் பார்க்க
    ஆங்கொரு கடுவன் முந்தும்
    அதையதன் துணைர சிக்கும்
    ஓங்கிய மரநெருக்கம்
    ஒளியினைச் சலித்துப் போடும்
    வீங்கிய தேக்கின் மேலே
    மேகங்கள் குடியிருக்கும். (25)

    மலைகளும் உயரம், அங்கே
    மரங்களும் உயரம், உள்ளே
    அலைகிற யானைக் கூட்டம்
    அளவிலே உயரம், இந்த
    நிலையிலே வானத் துக்கு
    நெருக்கமாய் இருப்பதாலே
    தலமதை வானோர் தங்கத்
    தகுந்ததாய்க் கருது வாரே! (26)

    சாரலில் நனைந்து கொண்டே
    தடவிடும் தென்றல் காற்றில்
    ஈரமும் அனுப வித்தே
    எதிர்வரும் மந்திக் கூட்டம்
    சாரியாய் அங்கு மிங்கும்
    தாவிடப் பயந்து கொண்டே
    நேரெதிர் அருவி பார்த்து
    நெருங்கிடும் மக்கள் கூட்டம் (27)

    வலம் வரும் முகிலின் மந்தை
    மலைகளின் முகட்டில் ஏறி
    உலவிடும், மரங்க ளெல்லாம்
    உரசிடும் ஒன்றை யொன்று.
    நிலவினைத் தடவிப் பார்க்கும்
    நெடுமரம், தரையின் மேலே
    பலவகைப் பூக்கள் மீது
    பாடிடும் தேனீக் கொள்ளை. (28)

    தெளிந்தநீர் அதனைப் போலே
    தேடியும் காணா வண்ணம்
    குளிர்ந்தநீர் அருவி கொட்ட
    குளிக்கிற மக்கள் பக்கம்
    வளைந்துநீர் தேங்கு கின்ற
    மடுவிலும் துளைந்து பார்ப்பார்
    நெளிந்திடும் நதியாய் ஓடும்
    நீர்வழி பயிரின் ஈட்டம் (29)

    புலிநகம் விற்போர் ஓர்பால்
    புதுப்புதுத் தந்த மாலை
    பலவகை விற்போர் ஓர்பால்
    பழங்களை விற்போர் ஓர்பால்
    விலையுயர் முத்து கொண்டு
    வீதியில் விற்போர் ஓர்பால்
    தலமெலாம் மணக்கச் செய்யும்
    சந்தனம் விற்போர் ஓர் பால் (30)

    மா மா காய் – அறுசீர் விருத்தம்

    சிகரத் திருந்து தேனருவி
    திடுதி டென்னக் கீழ்பாயும்
    பகர ஒண்ணா அழகோடு
    பாயும் செண்ப காதேவி
    தகவாய்க் குளிக்கும் வகையினிலே
    தழைந்து கொட்டும் சிற்றருவி
    சுகமாய்க் குளிக்க முதலருவி
    தொடர்ந்து கொட்டும் குற்றாலம் (31)

    இன்னோர் பக்கம் ஐந்தருவி
    இடையிற் பிரிந்து ஓலமிடும்
    தன்னே ரில்லாக் காட்டுக்குள்
    சத்தம் போடும் பேய்க்கூதல்
    என்னே வாசம், இதமென்றே
    எண்ண வைக்கும் மூலிகைகள்
    முன்னே மூன்று பிரிவாக
    மூலம் காட்டும் திரிகூடம் (32)

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 58

    -நாங்குநேரி வாசஸ்ரீ

     

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 58

    கண்ணோட்டம்

    குறள் 571:

    கண்ணோட்டம் என்னுங் கழிபெருங் காரிகை
    உண்மையான் உண்டிவ் வுலகு

    இந்த ஒலகம் நேசமும் இரக்கமும் இணஞ்ச கண்ணோட்டம் ங்குத பெரும் அழகக் கொண்டவங்களால தான் அழியாம நிக்குது. 

    குறள் 572:

    கண்ணோட்டத் துள்ள துலகியல் அஃதிலார்
    உண்மை நிலக்குப் பொறை

    நேசத்தோட அணைச்சு இரக்கம் காட்டும் கண்ணோட்டம் இல்லாதவங்க உசிரோட இருக்கது இந்த பூமிக்கு சும தான்.

    குறள் 573:

    பண்ணென்னாம் பாடற் கியைபின்றேற் கண்ணென்னாங்
    கண்ணோட்டம் இல்லாத கண்

    இரக்க கொணம், நேசம் ங்குத கண்ணோட்டத்தோட பொருந்தி வாராத கண்ணும் பாட்டு கூட பொருந்தி வாராத இசையும் ஒரு உபயோகத்துக்கு ஒதவாது. 

    குறள் 574:

    உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினாற்
    கண்ணோட்டம் இல்லாத கண்

    உள்ளத்துல நேசத்தையும் இரக்கத்தையும் ஊற வைக்காத கண்ணுங்க மொகத்துல இருக்கது தவித்து அதால வேற என்ன ஒபயோகம்?

    குறள் 575:

    கண்ணிற் கணிகலங் கண்ணோட்டம் அஃதின்றேற்
    புண்ணென் றுணரப் படும்

    ஒருத்தனுக்கு கண்ணுல பூட்டுத நக நட்டு கணக்கா இருக்கது கண்ணோட்டங்குத கொணம். அது இல்லன்னா வெறும் புண் னு நெனைச்சிக்கிடணும். 

    குறள் 576:

    மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
    டியைடந்துகண் ணோடா தவர்

    ஒருத்தருக்கு கண் இருந்தும் கூட அதுக்குரிய நேசமும் இரக்கமும் இல்லன்னா அவர் மரத்துக்கு தான் சமானம். 

    குறள் 577:

    கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
    கண்ணோட்டம் இன்மையும் இல்

    கண்ணோட்டம் இல்லாதவர் கண் இல்லாதவரு தான். கண் இருக்கவங்க கண்ணோட்டம் இல்லாம இருக்க மாட்டாங்க. 

    குறள் 578:

    கருமஞ் சிதையாமற் கண்ணோட வல்லார்க்
    குரிமை உடைத்திவ் வுலகு

    செய்யுத கடமயிலேந்து தவறாம கருணையா இருக்கதிலும் முதலா இருக்கவங்களுக்கு இந்த ஒலகமே சொந்தமாவும்.    

    குறள் 579:

    ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணுங்கண் ணோடிப்
    பொறுத்தாற்றும் பண்பே தலை

    தன்னைய அழிக்க நெனக்கவங்க கிட்டயும் பொறும காட்டுதது ரொம்ப ஒசந்த கொணம். 

    குறள் 580:

    பெயக்கண்டு நஞ்சுண் டமைவர் நயத்தக்க
    நாகரிகம் வேண்டு பவர்

    கருண உள்ளமும் பண்பாடும் உள்ளவங்க தான் கூட பழகுதவங்க விஷத்த குடுத்தாக் கூட குடிச்சிபோட்டு சந்தோசப்படுவாங்க.

    (அடுத்தாப்லையும் வரும்…)

    Share
  • படக்கவிதைப் போட்டி – 221

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    சாந்தி மாரியப்பன் எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளோம். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (21.07.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • சேக்கிழார் பா நயம் – 44

    -திருச்சி புலவர் இராமமூர்த்தி
    ——————————————-

    திருவாரூரில் இறைவனின் திருமுன் அட்டாங்க பஞ்சாங்கமாக வணங்கியபின், சுந்தரர் இறைவனைப் போற்றி ஒரு பதிகம் பாடினார். அப்பொழுதே அவர் கேட்க, திருவாரூர்ப் புற்றிடங்கொண்ட பெருமான் வாக்காக ஒரு வானொலி எழுந்தது! அவ்வொலி, ‘’சுந்தரனே! யாம் நம்மை உனக்கு நெருக்கமான தோழனாகத் தந்தோம்.‘’ என்ற நற்செய்தியைக் கூறியது! அத்துடன் ‘’முன்பு திருவெண்ணெய் நல்லூரில் திருமணத்தில் உன்னைத் தடுத்து ஆட்கொண்டோம்! , அப்போது நீ கொண்ட திருமணக் கோலத்துடன் இனி எப்போதும் விளங்குக! இந்தக் கோலத்துடன் உன் விருப்பங்களை அடைந்து விளையாடுக! ‘’ என்று இறைவன் கூறினார்!

    இப்பாடல் ‘ வாழிய’ என்றசொல்லால் தொடங்குகிறது! இதற்கு உயிர்கள் வாழும் பொருட்டு என்று பொருள்கொள்ளவேண்டும்! ‘’மாமறைப் புற்று இடம் கொள் ’’ என்ற தொடர் ‘’பெருமை மிக்க வேதமாகிய புற்றினைத் தம் உறைவிடமாகக் கொண்ட ‘’ என்று பொருள்படும். இங்கே மறைப்புற்று என்பது , ‘இறைவன் திருமேனியை மறைத்து எழுந்த புற்று’ என்றும் பொருள் கொண்டு புற்றிடங்கொண்டார் என்ற பொருளில் விளங்கும் வன்மீக நாதர் என்ற திருப் பெயரை விளக்குகின்றது. அவர் வேதத்துள் மறைந்துள்ளவர் என்றும், புற்றில் மறைந்துள்ளவர் என்றும் இதற்கு இருவகைப் பொருள் கூறலாம்! ‘’வாழிய மாமறை’’ என்ற தொடரில் உலகம் உய்தி பெரும்பொருட்டு , வேதத்துள் மறைந்து தோன்றுபவர் என்றும்பொருள்கொள்ளலாம்!

    இறைவனின் சிறப்பினைஉணர்த்தும் அளவைகளாகிய பிரமாணங்கள் ஆட்சி, ஆவணம், காட்சி ஆகியவை என்பர். ‘’இந்தப் பிரமாணங்களின் தேவையின்றித் தாமே பிரமாணமாக உள்ளார் ‘’ என்பதைக்காட்டும் .தமக்குமேற் பிரமாணமில்லாமல்
    தமக்குத்தாமே பிரமாணமாயுள்ளது. வேதங்களாகிய புற்று. என்பர்பெரியோர்! உள்ளிருக்கும் பொருளை மறைத்துப் பொதிந்து மேல் மூடியிருப்பது புற்றினது இயல்பு. அவற்றை இறைவனது இருப்பிடமாக உணராதார்க்கு அவை உண்மைப்பொருளை உணர்த்தாமையின் மறைப்புற்று என்றார்.

    “ வேதம் ஓதிலென்? சாத்திரங் கேட்கில்என் ?
    நீதி நூல்பல நித்தல் பயிற்றில் என்?
    ஓதி அங்கம் ஓர் ஆறும் உணர்த்தின்என்?
    ஈசனை யுள்கு வார்க்கன்றி இல்லையே!’’

    என்ற அப்பர் தேவாரம் இங்கே சிந்திக்கத் தக்கது. இறைவனாகிய மன்னவனார் இதனை அருளினார்! சுந்தரர் தமக்கு இறைவனின் தோழமையைப் பெற்றதை அவர்தம் தேவாரங்களில் பல இடங்களில் கூறுகிறார்! அவர்,

    ‘’ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய தோழனுமாய்’’ என்றும், ‘’என்றனையாள் தோழனை’’ என்றும், ‘’தோழமை அருளித் தொண்டனேன் செய்த துரிசுகள் பொறுக்கும் நாதனை’’ என்றும் சுந்தரர் பாடியுள்ளார்! இக்காரணத்தாலேயே சுந்தரர் ’’தம்பிரான் தோழர்’’ என்று போற்றப் பெற்றார். சைவ நெறிகளாகிய அடிமைநெறி, மகன்மைநெறி, தோழமைநெறி, ஞானநெறி ஆகியவற்றுள் சுந்தரரைத் தோழமை நெறியை விளக்கவந்தவர்என்பர் !

    இங்கே ‘’நம்மைத் தந்தனம்!’’என்ற தொடருக்கு ‘அவனருளாலே அவன்றாள் வணங்கி’ என்றும், ‘தந்ததுன் றன்னை’ என்றும் அருளியபடி அவரே தாராவிடில் உயிர்கள் பெறுமாறில்லை; ஆதலின் நம்மைத் தந்தனம் என்றார்.’’ என்றுவிளக்கம்கூறுவர்!

    எவ்வுயிர்க்கும் ஈசன் தோழனாய் உடனிருப்பார்; ஆயினும், “தாவியவனுடனிருந்தும் காணாத தற்பரன்“ என்றபடி உயிர்கள் அவனை அறிவதில்லை. அவ்வாறன்றி இவர் அறியும்படி தந்தது இவர் பெருமையை உலகறிந்து உய்வதற்கு என்க. இறைவன் தம்மையே ஆரூரருக்குத் தோழமையாகத் தந்துவிட்டாராதலின் பின்னர்ப் பரவையார் திருமணம், சங்கிலியார் திருமணம், பரவையார் ஊடல் தீர்த்தல் முதலியவற்றில் பாங்கற் கூட்டம் முதலிய அகப்பொருட்டுறைகளிலே சரித நிகழ்ச்சிகளின் அமைவு காணப்பெறும். பின்னும் இதனாலே நம்பிகள் செயல் தோழர் செயலேயாதலுமாம். இனி, இப்பாடலை முழுமையாகப் படித்துப் பயில்வோம்!

    ‘’வாழிய மாமறைப் புற்றிடங்கொள்
    மன்னவனார் அருளால் ஓர் வாக்கு
    ‘’தோழமையாக உனக்கு நம்மைத்
    தந்தனம் . நாம்முன்பு தொண்டுகொண்ட
    வேள்வியில் அன்றுநீ கொண்ட கோலம்
    என்றும் புனைந்துநின் வேட்கைதீர
    வாழிமண் மேல்விளை யாடுவாய்’’என்று
    ஆரூரர் கேட்க எழுந்த தன்றே ‘’

    என்ற இப்பாடலில், முன்பு சுந்தரரைத் தடுத்தாட்கொண்ட திருமண வேள்வியில், அக்காலத்தில் அவ்வூரில் ‘’மன்னவர் திருவும் தங்கள் வைதிகத் திருவும் பொங்க“க் கொண்ட திருமணக் கோலம். என்பதை ‘’அன்றுநீ கொண்டகோலம்’’ என்றார்.

    அதனை இனி வருங்காலத்தில் ‘’என்றும் புனைந்து நின் வேட்கை தீர வாழி ‘’ என்று இறைவன் அருளினார் ! அதனால் பிற்காலத்தில் என்றும் சுந்தரர் திருக்கோலம், ‘மணமகன் திருக்கோலம்’ பெற்றே விளங்குகிறது! பின்னர் இறைவன் ‘’என்மேல் கொண்ட பக்தியாகிய ‘’வேட்கை தீர, மண்மேல் விளையாடுவாய்’’ என்றார். இதனால் கைலையில் கொண்ட வேட்கைதீர, சுந்தரர் பரவையார், சங்கிலியாரை மணந்து கொண்டு இறைவனுடன் தோழமை விளையாடல் புரிந்ததையும் குறிப்பிட்டார்! ‘’விளையாடு ‘’ என்ற சொல், பயனைக் கருதாத பக்தியைக் குறித்து சேக்கிழாரின் பாடல் நயத்தை விளக்குகின்றது!

    Share
  • தமிழரும் வாணிகமும்

    -மேகலா இராமமூர்த்தி

    ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையாய்த் திகழ்பவை உழவு, கைவினைத் தொழில்கள் மற்றும் வாணிகம் முதலியவை. பண்டைத் தமிழர், உழவுத் தொழிலிலும், கைவினைத் தொழிலிலும் சிறந்து விளங்கியது போலவே வாணிகத்திலும் சிறந்திருந்தனர். திணைநிலங்களில் வாழ்ந்த மக்கள் தாம்கொணர்ந்த பொருளுக்கு மாற்றாக வேறொரு பொருளைப் பெற்றுக்கொண்டதைச் சங்கஇலக்கிய நூல்கள் நமக்கு அறியத்தருகின்றன. இதனைப் பண்டமாற்று வாணிகம் எனலாம்.

    முல்லை நிலத்தைச் சேர்ந்த இடையன், பாலைக் கொடுத்து அதற்கு ஈடாகத் தானியத்தை மாற்றிக் கொண்டதை உறையூர் முதுகொற்றன் என்ற புலவரின் குறுந்தொகைப் பாடல் தெரிவிக்கின்றது.

    பாலோடு வந்து கூழொடு பெயரும்
    யாடுடை யிடைமகன்’
    (குறு. 221.3-4). கூழ் என்பது அரிசி, கேழ்வரகு, வரகு, தினை முதலிய தானியங்களாகும்.

    குறிஞ்சிநில வேட்டுவனொருவன் தான் வேட்டையாடிக் கொண்டுவந்த மான் இறைச்சியை மருதநில உழவனிடத்தில் கொடுத்து, அதற்கு ஈடாக நெல்லைக் கொண்டதையும், ஈதொப்ப, இடைச்சியரும் உழவனுக்குத் தயிரைக் கொடுத்து நெல்லை மாற்றாகப் பெற்றுக்கொண்டதையும் கோவூர்கிழார் எனும் சங்கப்புலவர் புறநானூற்றில் பதிவுசெய்திருக்கக் காண்கின்றோம்.

    ‘கானுறை வாழ்க்கைக் கதநாய் வேட்டுவன்
    மான்தசை சொரிந்த வட்டியும், ஆய்மகள்
    தயிர்கொடு வந்த தசும்பும் நிறைய
    ஏரின் வாழ்நர் பேரில் அரிவையர்
    குளக்கீழ் விளைந்த களக்கோள் வெண்ணெல்
    முகந்தனர் கொடுப்ப உகந்தனர் பெயரும்
    தென்னம் பொருப்பன் நன்னாட்டு உள்ளும்’
      (புறம் 33:1-8 – கோவூர்கிழார்)

    நகரங்களில் வாழ்ந்த மக்கள் தம் வாணிகத்தை நிலத்தின் வழியாகவும் நீரின் வழியாகவும் நடாத்தியிருக்கின்றனர். சோழர்களின் புகழ்பெற்ற துறைமுக நகராகியக் காவிரிப்பூம்பட்டினத்திற்குப் பல்வேறு நாடுகளிலிருந்து நீரின் வழியாகவும் நிலத்தின் வழியாகவும் வந்திறங்கிய பொருள்களின் பட்டியல் இது:

    ”நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
    காலின் வந்த கருங்கறி மூடையும்
    வடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
    குடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
    தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்
    கங்கை வாரியும் காவிரிப் பயனும்
    ஈழத் துணவும் காழகத் தாக்கமும்
    அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி
    வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகின்
    ” (பட்டினப்பாலை: 185 – 193)

    சிலப்பதிகாரத் தலைவனான கோவலனுடைய தந்தை நில வாணிகத்தில் சிறந்திருந்தமையால் ’மாசாத்துவன்’ என்றழைக்கப்பட்டான். நிலவாணிகம் செய்த வணிகக் குழுக்களைச் ’சாத்துகள்’ என்றழைத்தனர் நம் முன்னோர். எனவே ’மாசாத்துவன்’ என்ற பெயர் ’பெரும் நிலவாணிகன்’ என்றபொருள் தருகின்றது. அதுபோன்றே கண்ணகியின் தந்தை, கடல் வாணிகத்தில் சிறந்திருந்ததன் அடிப்படையிலேயே ’மாநாய்கன்’ என்று பெயர்பெற்றான். (நாவாய் வாணிகனுக்கு நாவிகன் என்று பெயர்; அது திரிந்து நாய்கன் ஆயிற்று.)

    நில வாணிகர்கள் தம் வணிகப் பொருள்களைக் குதிரைகளிலும், கழுதைகளிலும், மாட்டுவண்டிகளிலும் ஏற்றிக்கொண்டு தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று வாணிகம் செய்ததோடல்லாமல், தமிழகத்தைக் கடந்து வடபுலத்துக்கும் சென்று வாணிகம் செய்திருக்கின்றனர்.

    முசிறி என்னும் சேரநாட்டுத் துறைமுகப் பட்டினத்தில், யவனர்களின் மரக்கலங்கள் பொன்னைக் கொண்டுவந்து கொட்டிவிட்டு, அதற்கு ஈடாக மிளகு மூட்டைகளை ஏற்றிச்சென்றதாக எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான அகநானூறு அறிவிக்கின்றது.

    ”யவனர் தந்த வினைமாண் நன்கலம் 
    பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
    ” (அகம். 149: 9 – 10)

    ”உலகமே கிளர்ந்து எழுந்தாற்போன்ற அச்சந் தரக்கூடிய பெரிய நாவாயானது (மரக்கலம்), புலால் நாறும் அலைகளையுடைய பெரிய கடலின் நீர்ப்பரப்பைக் கிழித்துக் கொண்டு சென்றது” என்ற அகநானூற்றின் அடிகள் முற்காலத்திலேயே மிகப்பெரிய மரக்கலங்களை உருவாக்கிக் கடல் வாணிகம் செய்வதில் தமிழர்கள் சிறந்திருந்தனர் என்பதை விளக்கி நிற்கின்றது.

    “உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்கம் 
     புலவுத்திரைப் பெருங்கடல் நீரிடைப் போழ” (அகம். 255:1-2)

    அம்மட்டோ? கடலில் இயங்கும் காற்றைக் கலஞ்செலுத்துதற்குப் பணிகொள்ளும் விரகினை முதன்முதலிற் கண்டவர் பண்டைத் தமிழரே; யவனரல்லர் என்பதை வெண்ணிக்குயத்தியார் எனும் புலவர்பெருமாட்டியின் புறப்பாட்டு நமக்குப் புலப்படுத்துகின்றது.

    ”நளியிரு முந்நீர் நாவா யோட்டி
    வளிதொழி லாண்ட வுரவோன் மருக
    களியியல் யானைக் கரிகால் வளவ…”
    (புறம் – 66: வெண்ணிக்குயத்தியார்)

    பண்டைத் தமிழர் மேற்கே கிரேக்கம், உரோமாபுரி, எகிப்து வரையில் திரைகடலோடியிருக்கின்றனர். இவையல்லாது பாலத்தீனம், மெசபடோமியா, பாபிலோனியா போன்ற நாடுகளுடனும் வாணிகத் தொடர்பு கொண்டிருந்திருக்கின்றனர். தமிழகத்துப் பண்டங்களான ஏலம், இலவங்கம், இஞ்சி, மிளகு ஆகியவை இந்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றன.

    பழைய எத்தியோப்பிய நாடான ஷீபாவின் (Sheba) அரசி மகீடா (Makeda), இஸ்ரேல் நாட்டின் மன்னன் சாலமனை (Solomon) காணச்சென்றபோது, அவனுக்குப் பரிசுப்பொருள்களாக ஏலம், இலவங்கம் போன்றவற்றைக் கொண்டுபோனதாகப் பழைய ஏற்பாட்டில் (Old Testament) ஒரு குறிப்புக் காணப்படுகின்றது. சாலமன் ஆண்ட காலம் கி.மு.1000 என்பர். சேரநாட்டுத் துறைமுகத்திலிருந்து மயில்தோகை, அகில், யானைத்தந்தம், குரங்குகள், வெள்ளி போன்ற பொருள்களும் சாலமனுக்குக் கப்பல்மூலம் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன. ஹீப்ரு மொழியிலுள்ள பைபிளில் வழங்கப்படும் ’துகி’ என்ற சொல்லானது தமிழ்ச்சொல்லான ’தோகை’ என்பதன் திரிபே என்கிறார் மொழியியல் அறிஞர் இராபர்ட் கால்டுவெல்.

    புதுச்சேரிக்கு அருகிலுள்ள அரிக்கமேடு என்னும் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் உரோமாபுரி நாணயங்கள் கிடைக்கப்பெற்றன. இதன்மூலம் பண்டைத் தமிழருக்கும் உரோமாபுரிக்கும் கடல்வாணிகத் தொடர்பிருந்தமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

    தமிழகம், மேலைநாடுகளுடன் மட்டுமின்றிக் கீழைத்தேயங்களான சீனம், மலேசியா, ஜாவா முதலியவற்றுடனும் பன்னெடுங்காலமாகவே கடல்வாணிகத் தொடர்பு கொண்டிருந்தது. தமிழகத்துப் பண்டங்கள் கி.மு.7ஆம் நூற்றாண்டிலேயே சீனத்தில் இறக்குமதியாயின என்று அந்நாட்டு வரலாறுகள் தெரிவிக்கின்றன. சீனத்துப் பட்டாடைகளையும், சருக்கரையையும் தமிழகம் விரும்பி ஏற்றுக்கொண்டது. அதனால்தான் இன்றளவும் பட்டுக்குச் ’சீனம் என்றும், சருக்கரைக்குச் ’சீனிஎன்றும் தமிழில் பெயர் வழங்கி வருகின்றது.

    தமிழகத்தின் மூவேந்தர்களான சேர சோழ பாண்டியர்கள் வாணிகத்தில் பெருஞ்செல்வத்தை ஈட்டிய மாசாத்துவர்களுக்கும், மாநாய்கர்களுக்கும் எட்டிப்பட்டமும் எட்டிப்பூவும் அளித்துச் சிறப்புச் செய்தார்கள். (எட்டிப்பூ என்பது பொன்னால் செய்யப்பட்ட தங்கப்பதக்கம் போன்ற அணியாகும் என்கிறார் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள்.)

    இவ்வாறு பண்டைக் காலந்தொட்டே நிலவாணிகம், கடல்வாணிகம் என இருதிறத்து வாணிகங்களிலும் தமிழர்கள் சிறப்புற்று விளங்கித் தமிழகத்தின் பெருமையினை இந்தியாவில் மட்டுமன்றி அயல்நாடுகளிலும் நிலைநாட்டி இருக்கின்றனர் என்பதை அறியும்போது வியப்பும் விம்மிதமும் ஏற்படுகின்றது.

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை: 

    1. பண்டைத் தமிழக வணிகம் – நகரங்கள் மற்றும் பண்பாடு – மயிலை சீனி. வேங்கடசாமி.
    2. பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும் – மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்.

     

     

    Share
  • திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில் – சிவத்துரோகம்

    சேசாத்திரி ஸ்ரீதரன்

    திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில் – சிவத்துரோகம்

    துரோகம் என்றால் இரண்டகம், நம்பிக்கை குலைத்தல், நன்மதிப்பை பாழடித்தல் என்று கொள்ளலாம். இதில் ஒருவரை ஒருவர் மோசம் செய்வது என்றில்லாமல் இராசதுரோகம், ஊர்த்துரோகம், இனத்துரோகம், சிவத்துரோகம் என்பனவும் உண்டு. சிவத்துரோகம் என்பதற்கு சிவநெறிக்கு புறம்பாக நடத்தல் இதாவது, சிவன் கோவில் சொத்துகளை மோசடி செய்தல், களவாடுதல் ஆகியன அடங்கும். இதற்கு அக்காலத்தே கடும்தண்டனை இருந்தது. சிவத்துரோகத்தை புரிந்தவர் பெரும்பாலும் சிவன் கோவில் ஊழியத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட பிராமணர், வெள்ளாளர்  ஆகியோரே ஆவர். இந்த குற்றத்தை கண்டுபிடித்தவரும் பிராமணர் வெள்ளாளரே ஆவர். கஜினி முகம்மது, மாலிகாபூர் போன்றோர்  பல கோவில்களை இடித்துபோட்டு பொன்னும் பொருளுமாய் கொள்ளையிட்டுச் சென்றனர். அதற்கு காரணம் அவர்களிடத்தில் உருவ வழிபாட்டு நம்பிக்கை இல்லை என்பதும், பிறமத அவமதிப்பு ஆகியனவே காரணம். ஆனால் சிவன் கோவிலில் ஊழியம் செய்து கொண்டு மோசடியிலும் களவிலும் ஈடுபடும் செயலும் இத்தகையதன்றோ என எண்ணத் தோன்றுகிறது, இதாவது சிவன்பால் நம்பிக்கை இன்மை என்பதே.  இது குறித்த சில கல்வெட்டுகள் அக்காலத்தே இருந்த சட்ட முறைமைகளை எடுத்துக் காட்டுகின்றன.

    இராமநாதபுரம் மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், திருப்பத்தூர் திருத்தளீசுவரர் கோவில் முதல் சுற்றில் உள்ள தென் சுவரில் பொறிக்கப்பட்ட  15 வரிக் கல்வெட்டு. இடத்தேவைக்காக சாய்வுக் கோடுகளால் பிரிக்கப்பட்டுள்ளது.

    ஸ்வஸ்திஸ்ரீ ஸ்ரீ ஸகாப்தம்  1309 ன் மேல் செல்லாநின்ற ப்ரபவ வருஷத்து மேஷநாயற்று இரண்டாந்தியதியும் பூர்வ்வபக்ஷத்து நவமியும் ப்ரஹஸ்பதிவாரமும் பெ ற்ற பூசத்து நாள் கேரளசிங்க வளநாட்டு ப்ரஹ்மதேய ந்திருப்பத்தூர் உடையார் திருத்தளியாண்ட நாயினார் கோயிலில் ஸ்ரீ ருத்ர ஸ்ரீ மாஹேஸ்வர ஸ்ரீகாரியஞ் / செய்வார்களும் மாடாபத்தியஞ் செய்வானும் முப்பது வட்டத்து ஸிவப்ராஹ்மணரும் தானத்துக் கமைந்த தானத்தாரும் ஆக இவ்வனைவோமும் இக்கோயிற் /  கணக்கு ப்ரஹ்மப்ரியனுக்கும் இன்னாட்டு மட்டியூரான ந்ருபசேகரச் சதுர்வ்வேதி மங்கலத்து சொக்க நாராயணன் கரியமாணிக்காழ்வானுக்கும் அதளையூர் / நாட்டு தேனாற்றுப்போக்கு சிறுவயலுடையான் வேண்டவளந்தான் ஆயப்பிள்ளைக்கும் ஆக இம்மூவற்கும் கணக்கெழுத்துக் காணியாட்சி விலைப்ரமாணம் பண்ணி / க்குடுத்த பரிசாவது கணக்கன் குலாலன் அம்பலத்தாடுவானான ஆயிரத்தெழுநூற்று மூவேந்தர் வேளான் தனக்கு க்ராமத்தில் மனையும் முதலெழுத்தும் முதல் வ / ழக்கமும் இல்லையாயிருக் கச்சிதே தானறிந்ததாக ஸிவத்ரோகமாக காணாமல் களவிலே ஆயிரத்தெழுநூற்றுத் தட்டானை ஆட்பிடித்து கற்தச்சன் அலைவாயுகந் / தானைக் கொண்டு தன்னுதென்று கல்வெட்டுவிக்கையில், இப்படி செய்த இந்த வெளிப்பட்டு ஸிவத்ரோகம் வெளிப்பட்டு அம்பலத்தாடுவோன் ஓடிப்போகையில் தட்டானை / யுங் கற்தச்சனையுங் கைக்கொண்டு கண்மாளர் கைய்யிலே காட்டிக்குடுத்து கண்மாளரும் இவர்களை அழியச் செய்து தானத்துக்கு பொருந்த ப்ராய / ச்சித்தம் பண்ணிவிடுகையாலும் இந்த ஸிவத்ரோகியான அம்பலத்தாடுவான் முன்னில்லாமல் ஓடிப்போகையாலும் கோயிற் கணக்கெழுத்துக் காணியாட்சியில் ப்ரஹ்மப்ரியன் காணியாட்சி ஒன்று பாதி நீக்கி இவனோ பாதி ஒன்று பாதிக்கும் விலை நிச்சயித்த ஆடூர் பணம் 300. இதில் தேவர் விசையாலய தேவற்கு கற் / பூர முதலாக குடுத்த ஆடூர் பணம் 200 ஸ்ரீ பண்டாரத்துக்கு முதலாக பற்றின ஆடூர் பணம் 100 ஆக ஆடூர் பணம் 300. இப்பணம் முன்னூற்றுக்கும் கணகெழுதுத்துக் காணி / யாட்சியும் ஸுதந்த்யங்கள்  எப்பேற்பட்டனவும் சந்த்ராதித்யவல் செல்லவிற்று விலை ப்ரமாணம் பண்ணிக்குடுத்தோம் உடையார் திருத்தளியாண்ட நாயினார் கோயிலில் ஸ்ரீ ருத்ர ஸ்ரீ மாஹேஸ்வர ஸ்ரீ காரியஞ் செய்வார்களும் மாடாபத்தியஞ் செய்வானும் முப்பது வட்டத்து ஸிவப்ராஹ்மணரும் தாநத்துக் கமைந்த / தாநத்தாரும் ஆக இவ்வோமும் ப்ரஹ்மப்ரியருக்கும் கரியமாணிக்காழ்வாநுக்கும் ஆயப்பிள்ளைக்கும் ஆக இம்மூவற்கும்.

    பூர்வபக்ஷம் – வளர்பிறை; ஸ்ரீ காரியம் – திருப்பணி; மாடாபத்தியம் – மடைபள்ளி நிர்வாகம்; தானத்துக் கமைந்த தானத்தார் – அந்தந்த பொறுப்பிற்கு அமைந்த பொறுப்பாளர்; பரிசாவது – விதம், எப்படி எனில்; முதலெழுத்தும் முதல் வழக்கமும் – தந்தை முகவரியும் முதல் மதிப்பும்; காணாமல் – கண்டுபிடிக்கமுடியாதவாறு; களவிலே – திருட்டுத்தனமாக; கைக்கொண்டு – பிடித்துவைத்து; காட்டிக் கொடுத்து – பிடித்துக் கொடுத்து.

    விளக்கம்: சக ஊழி 1309 பிரபவ ஆண்டு மேழஞாயிறு 2-ம் நாள் வியாழக்கிழமை பூச நட்சத்திரம் நிகழும் போது (1387, மார்ச்சு 28) வெட்டப்பட்ட கல்வெட்டு. இது விசயநகர ஆட்சிக்காலம்.

    கேரளசிங்க வளநாட்டில் பிரமதேயமான திருப்பத்தூர் திருத்தளியில் அமைந்த இறைவர் கோவிலில் ஸ்ரீ ருத்ர ஸ்ரீ மாஹேஸ்வர திருப்பணி செய்பவர்களும் மடைபள்ளி நிர்வாகம் செய்பவனும், முப்பது வட்டத்து சிவபிராமணரும், அந்தந்த பொறுப்பிற்கு அமைந்த பொறுப்பாளர் ஆக எல்லோரும் கூடி இக்கோயிற்  கணக்கு பொறுப்பில் உள்ள பிரம்மபிரியனுக்கும், சொக்க நாராயணன் கரியமாணிக்காழ்வானுக்கும், வேண்டவளந்தான் ஆயப்பிள்ளைக்கும் ஆக இம்மூவற்கும் கணக்கெழுத்திற்கான காணியாட்சியை விலைப்பிரமாணம் செய்துகொடுத்தது எப்படி எனில் பிரம்மபிரியன் தனக்கு உதவியாக கணக்கு பணிக்கு அமர்த்திய கணக்கன் குலாலன் அம்பலத்தாடுவானான ஆயிரத்தெழுநூற்று மூவேந்தர் வேளான் தனக்கு இக்கிராமத்தில் வீடும், இன்னார் மகன் என்ற முகவரியும், முதல் மதிப்பும் இல்லாத போதிலும் இவ்வாறு இருப்பதாக காட்டி வீடும், பிற சலுகைகளும் தனக்கு வர வேண்டி எவரும் கண்டு பிடிக்காதபடி திருட்டுத்தனமாக ஆயிரத்தெழுநூற்று தட்டானை கண்டு அவன் மூலம் கல்தச்சன் அலைவாயுகந்தானை ஏற்பாடு செய்து கொண்டு இந்த கிராமத்து வீடு தனதென்று கல்வெட்டிக் கொண்டான். இது ஒரு சிவத்துரோகம் ஆகும் என்கின்றது கல்வெட்டு. இப்படி மோசடி செய்த சிவத்துரோகச் செயல் வெளிப்பட்டு அம்பலத்தாடுவான் ஊரைவிட்டு எங்கோ ஓடிப்போய்விட  கோவிலார் தட்டானையும் கல்தச்சனையும் பிடித்து வைத்து கம்மாளரிடம் விசாரிப்பதற்கு ஒப்படைத்து விடுகின்றனர். கம்மாளர் இந்த இருவரையும் தக்கபடி அடித்து உதைத்து கோவிலுக்கு பொருத்தமான வகையில் கழுவாய் செய்ய வைத்து விடுகின்றனர். சிவத்துரோகி அம்பலத்தாடுவன் கண்ணில்படாவாறு எங்கோ ஓடிப்போனமையால் பிரம்மபிரியன் கோயில் கணக்கெழுதும் காணியாட்சியில் ஒருகாணியைப் இரு பாதியாகப் பிரித்து ஒரு பாதியை தான்  வைத்துக்கொண்டு அதற்கு விலை கொடுத்துவடுகின்றான் மற்றொரு பாதியை அம்பலத்தாடுவான் பங்காக கோயிலாரிடம்  ஒப்படைக்கின்றான்.அதை கோவில் நிர்வாகத்தார் ஊராருக்கு விற்றுவிடுகின்றனர். இப்படியாக 300 ஆடுர் பணம் விற்ற காசாக சேர்கின்றது. அதில் 200 ஆடூர் பணம் விசையாலைய தேவருக்கு கற்பூர முதலாக கொடுக்கப்பட்டது. எஞ்சிய100 ஆடூர் பணம் கோவில் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. பிரம்மபிரியனுக்கு நிலமும் அதன் உரிமைகள் அனைத்தும் விற்கப்பட்டு கோவிலாரால் விற்றுஆவணம் செய்து தரப்பட்டது. திருத்தளி இறைவர் கோயில் ஸ்ரீ ருத்ர ஸ்ரீ மாஹேஸ்வர திருப்பணி செய்பவர்கள், மடநிர்வாகம் செய்பவனும், முப்பது வட்டத்து சிவப்பிராமணரும், அந்தந்த பொறுப்பிற்கு அமைந்த பொறுப்பாளர் ஆக இவரனைவரும் பிரம்மபிரியன், கரியமாணிக்காழ்வான்,  ஆயப்பிள்ளை ஆகிய இம்மூன்று கணக்கருக்கும் விலைப் பிரமாணம் செய்து கொடுக்கின்றனர் .

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 25, பக். 158-161, (A.R.No 126  of 1908)

    இராமநாதபுரம் மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், திருப்பத்தூர் திருத்தளீசுவரர் கோவில் முதல் சுற்றில் உள்ள தென் சுவரில் பொறிக்கப்பட்ட  19 வரிக் கல்வெட்டு. இடத்தேவைக்காக சாய்வுக் கோடுகளால் பிரிக்கப்பட்டுள்ளது.

    ஸ்வஸ்திஸ்ரீ ஸ்ரீ ஸகாப்தம்  1309 ன் மேல் செல்லாநின்ற ப்ரபவ வருஷத்து மேஷநாயற்று இரண்டாந்தியதியும் பூர்வ்வபக்ஷத்து நவமியும் ப்ரஹஸ்பதி வாரமும் பெ ற்ற பூசத்து நாள் கேரளசிங்க வளநாட்டு ப்ரஹ்மதேய ந்திருப்பத்தூர் மூலவ[ரு]ஷ மஹாஸபையோம் நம்[மூர்]க்கணக்கு  மத்யஸ்தன் ப்ரஹ்மப்ரியனுக்கும் / இன்னாட்டு ப்ரஹ்மதேயம் மட்டியூரான நிர்ப்பசேகரச் சதுர்வ்வேதி மங்கலத்து மத்யஸ்தன் சொக்க நாராயணன் கரியமாணிக்காழ்வானான மஹாஜன ப்ரியனுக்கும் அதளையூர் / நாட்டு தேனாற்றுப்போக்கு சிறுவயலுடையான் வேண்டவளந்தான் ஆயப்பிள்ளைக்கும் [ஆக] இவ்வனைவற்கும்  கணக்கெழுத்துக் காணியாட்சி விலைப்ரமாணம் பண்ணி / க்குடுத்த பரிசாவது நம்மூர்க்கண் கணக்கன் குலாலன் அம்பலத்தாடுவானான ஆயிரத்தெழுநூற்று மூவேந்தர் வேளான் தனக்கு க்ராமத்தில் மனையும் முதலெழுத்தும் முதல் / வழக்கமும் இல்லையாயிருக் கச்சிதே ஸபை தனக்குக் கல்வெட்டிக்குடுத்ததாக அம்பலத்திலே ஸபையை /  அரியாமல் க்ராமத்ரோகமாகக் காணாமல் களவிலே நம்மூர் ஆயிரத்தெழுநூற்றுத் தட்டானை ஆட்பிடித்து இவனைக் கொண்டு திருக்கோட்டியூர் கல்தச்சன் / அலைவாயுகந்  தானை  அழைப்பித்து நங் க்ராமத்தில் மனையும் முதலெழுத்தும் முதல்  வழக்கமும் தன்னுதென்று களவிலே கல்வெட்டுவிக்கை / யில், இப்படி செய்த  க்ராமத்ரோகம் வெளிப்பட்டு இ[வ்வம்]பலத்தாடுவான் ஓடிப்போகையில் தட்டானைய்யும் [க]த்தச்சனையுங் கைக்கொண்  டு கண்மாளர் கைய்யிலே காட்டிக்குடுத்து இவர்க[ளை] _ _ _ _  றைக்கு கண்மாளர் அழியச் செய்து ஸபைக்குப் பொருந்த ப்ரா ச்சித்தம் பண் / ணிவிடுகையில் இந்த க்ராமத்ரோகம் செய்த அம்ப[லத்தா]டுவானான ஆயிரத்தெழுநூற்று மூவேந்தர் வேளான்  முன்னில்லாமல் ஓடிப் / போகையில் நம்மூற்கணக்கெழுத்துக் காணியாட்சியில் ப்ரஹ்மப்ரியன் காணியாட்சி ஒன்று பாதி நீக்கி இவனோ பாதி ஒன்று பாதிக் / கும் இவன் ஒற்றி விலை கொண்ட நிலக்காணியாட்சிக்கும் விலை நிச்சயித்த ஆடூர் பணம் 300. இதில் இவன் ஒற்றி விலை கொண்ட காணியா / யாட்சியாய் பலற்கும் ஸபா விநியோகமாக விற்ற நிலத்துக்கு ஆடூர் பணம் 100 நீக்கி தேவர் விசையாலய தேவற்கு கற்பூர முதலாக குடுத்த ஆடூர் பணம் 200. / இப் பணம் இருநூற்றுக்கும் கணக்கெழுத்து காணியாட்சியும் ஸு[த]ந்த்யங்கள்  எப்பேர்பட்டனவும் சந்த்ராதித்யவல் செல்லக் கல்வெட்டிக் குடுத்தோம் / மூலபருஷ மஹாஸபையோம் இந்தக் கொள்கின்ற மு[றைக்]கும் நங்க்ராமத்தில்  ப்ரமப்ரியன் மனையை அடுத்த ஒருமனை சேர்ம்மா / னமாக அனுபவிப்பார்களாகவும் இப்படி சம்மதித் கணக்கெழுத்துக் காணியாட்சி விலை ப்ரமாணம் பண்ணிக்குடுத்தோம் மூலபருஷ மஹா / ஸபையோம் ப்ரஹ்ம்ப்ரியனுக்கும் கரியமாணிக்காழ்வானுக்கும் ஆயப்பிள்ளைக்கும் அருளால் ஸபைக் கணக்கு மத்யஸ்தன் பெருமாண்டான் /  மயிலேறுவானான ப்ரஹ்மப்ரியன் எழுத்து.

    காணியாட்சி – நில உரிமை, மூலபருஷ மகாசபை – கோவில் நிர்வாக சபை,

    விளக்கம்: சக ஊழி 1309 பிரபவ ஆண்டு மேழஞாயிறு 2-ம் நாள் வியாழக்கிழமை பூச நட்சத்திரம் நிகழும் போது (1387 ல்) வெட்டப்பட்ட கல்வெட்டு.  மேற்கண்ட கல்வெட்டின் அதே செய்தியை கொண்டுள்ளது. ஆனால் இதில் சிவத்துரோகம் என்ற முறையில் அணுகாமல் கிராமத்துரோகம்ர ஊர்த்துரோகம் என்ற முறையில் அணுகி உள்ளனர். இக்கோயிற்  கணக்கு பொறுப்பில் உள்ள பிரம்மபிரியன், சொக்க நாராயணன் கரியமாணிக்காழ்வான், வேண்டவளந்தான் ஆயப்பிள்ளை ஆக இம்மூவரும் இக்கல்வெட்டில் ஊர் மத்தியஸதராக அறியப்படுகின்றனர். அம்பலத்தாடுவான் தனக்கு ஊர்ச்சபை வீடு கொடுத்ததாக கல்வெட்டிக் கொள்கிறான். இந்த மோசடி அறியப்பட்டதும் அம்பலத்தாடுவான் ஊரைவிட்டு ஓடிப்போகின்றன். பிரம்மபிரியன் ஒரு காணி நிலத்தை பாதியாக பிரித்து தான் ஒரு பாதியை வைத்துக் கொண்டு எஞ்சிய பாதியை அம்பலத்தாடுவான் பங்காக அறிவிக்கிறான்.  அம்பலத்தாடுவானுடைய பறிமுதல் செய்த நிலத்தில் பாதியை வைத்துக் கொண்டு அதை பிரம்மபியனே விலைக்கு வாங்கிவிடுவதால் அதற்கு விற்று ஆவணமும் அடுத்த பாதி நிலத்தை பலருக்கும் விற்று அவற்றுக்கும் விற்று ஆவணம் கொடுத்தனர் கோவில் நிர்வாக சபையார். இக்கிராமத்து நிலத்தை வேறு எவரும் வெளியில் இருந்து வந்து வாங்கி பயிர் செய்யப்போவதில்லை. எனவே  உள்ளூரான் பிரம்மபிரியன் வாங்கியதில் தவறு ஏதும் இல்லை. அதே வேளையில் பிரம்மபிரியன் வீட்டிற்கு அடுத்துள்ள வீட்டை கணக்கர் மூவரும் சேர்ந்தே அனுபவிப்பதற்கான உரிமை ஆவணத்தையும் கோவில் நிர்வாக சபையார் கொடுக்கின்றனர். இந்த வீட்டையும் விலைக்குத் தானே விற்றிருக்க வேண்டும். ஏன் இந்த மூன்று கணக்கரும் காசில்லாமல் வீட்டை அனுபவிக்க கோவில் நிர்வாக சபையார் ஒப்புக் கொண்டனர் என்று புரியவில்லை.  இதைத் தான் தன்னதென்று அம்பலத்தாடுவான் கல்வெட்டிக் கொண்டானா? தெரியவில்லை.

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 25, பக். 162-163.

    செங்கல்பட்டு மாவட்டம் திருப்பெரும்பூதூர் வட்டம், குமட்டூர், 10 வரிக் கல்வெட்டு

    ஸ்வஸ்த்திசிரி திரிபுவனச் சக்கரவத்திகள் மதுரைகொண்ட பாண்டியன் முடிதலையுங் கொண்டருளிய சிரிகுலோத்துங்க சோழதேவருக்கு யாண்டு பதினாறாவது விக்கிரமசோழ வளநாட்டு இன்னம்பர்நாட்டு உடையார் சிரிவி_ _ _ _ கோயிலில் கும்பிட்டு இருக்கும் ஆண்டார்கள் பெரியதேவர் இராசாதிராச தேவர்க்கு யாண்டு ஏழாவது நாளிலே பழையனூருடையார் / பல்லவராயருக்கு உடையார் தேவதானமான கமுகுதிருநந்தவன மாத்தலாறு நூற்றுநால்பது கமுகாக்கி கல்வெட்டவேமும் விண்ணப்பஞ்செய்து பிரசாதம் செய்தருளிச் செய்யும்படி பெறவேணுமென்று அவரும் விண்ணப்பஞ் செய்தும் _ _ _ _  இருந்து வருகையாலும் திருக்கொடிக்கமுகும் தெண்டும் திறப்பிலே கைவிலைக் கொண்டு வெட்டிவந்து இப்படியாய் வருகிற / கமுகை இக்கோயில் மாடாபத்தியம் பழுவூர் ஆண்டான் பதிநாலாவதும் பதினைஞ்சாவதும் கமுகு தன்னகத்துக்கு வெட்டியும் காசுக்கு வெட்டி விற்றும் தன் சம்மந்திக்கு வெட்டிக்குடுத்தும் இப்படியாக அழித்து கமுகு மூவாயிரத்தி இருநூற்றுக்கும் பாக்கு முப்பத்திரண்டு நூறாயிரமும் பதினைந்தாவது _ _ _ _  நாற்பத்திராயிரத்தறநூற்று சின்னமும் மின்னிலே மேனோக்கிப் பாழாய்த் தேவர்கடமை இழந்து வருகையாலு மித்தேவருக்கு தானத்தாரும் / கும்பிட்டிருக்கும் ஆண்டார்களும் இருந்து முதலாய் சீபண்டாரத்து ஒடுக்கினகாசு முதலிடாதேயிவன் தான் கையுற்றக் காசு முப்பத்தினாயிரத்தி நானூறு மிவன் பேரவரியோலை ஏற்றத்தாலுமிவன் கல்லிமுக்கி வாங்கிய காசிலுமிவன் சிவநாமத்து வரிசைக்கு முதநிலத்தாலும் கமுகு கடைமையாலும் _ _ _ _  அஞ்சாவது ஆனிமாதத்தே திருக்காப்புக்கொண்டு கிடந்தவாறே ஆண்டார்கள் பழுவூருடையானை யழைத்து முறையாட்டம் கேட்க புக இவன் புழக்கடையே விழுந்து ஓடிப்போனவாறே யிவனகத்தை சோதிச்ச இடத்து நாற்பதில் கல  நெல்லும் கோயிற்குறியான திருப்பரிகலமும் கண்டு எடுக்கையாய் மற்றும் பல  சிவதுரோகம் முன்னாளிவன்  செய்கையாலும் இவன் வீட்டை இடித்து குலோத்துங்க சோழ வினாயகப்பிள்ளையாரை எழுந்தருளிவித்து இவனகத்தே கண்டு எடுக்காயாயிவனும் சிவதுரோகம் செய்கையாலும் சிரீபண்டாரத்து தன்கையுற்ற காசாலுமிப்பல / படியால் முதலாந காசிலி காசுக்கு திறப்பில் சிரீபராந்தக சதுர்வேதி மங்கலத்திலத்து இவன் தனக்கு கொண்ட காணியாக்கக் கொண்ட கமுகும் விளைநிலமும் திருநாமத்து சிரீபண்டாரத்து கொண்டகாசுக்கு சிரீவீரநாராயணர்க்கு விண்ணப்ப _ _ _ _ பிடாரி வாய்க்காலுக்கு வடக்கு _ _ _ _ கிழக்கடைய நிலம் ஒருமாவரைக்காணி நீக்கி தெற்கடையதிலம் ஒருமாவரைக்காணியில் தெற்கடைய நிலம்முக்காணியில் / கிழக்கடைய ஒரு பூ நிலம் காணி அரைக்காணியும் எட்டாங்கண்ணாற்று நாலஞ்சதிர நிலம் இரண்டுமாமுக்காணியும் கோதண்டராம வாய்க்காலில் _ _ _ _வடக்கடைய நிலம் நான்மாவரையில் கிழக்கடைய நிலம் ஒருமாவரையின் உத்தேசம் நீக்கி இதன்மேற்கு நிலம் முக்காணியில் இதன் கிழக்கடைய நிலம் அரைக்காணி முந்திரிகை நீக்கி இதன்மேற்கு கமுகு நிலம் காணிமுந்திரிகையும் இதன் தெற்கடைய  நிலம் நான்குமாவரையில் கிழக்கடைய நிலம் இரண்டுமாக்காணியில் தெற்கடைய நிலம் ஒரு மாவரைவரை_ _ _ _  நிலம் அரையான்த தேசம் நீக்கி / இதன் தெற்கடைய நிலம் அரைக்காணி முந்திரிகையில் முந்திரிகை கீழ்கால் நோக்கி மேற்கடைய நிலம் முந்திரிகை கீழ் முக்காலும் இதன் மேற்கடைய நிலம் அரைக்காணி முந்திரிகையில் தெற்கடைய நிலம் அரைக்காணி நீக்கி வடக்கு_ _ _ _ வதிக்கு மேற்கு வானவன்மாதேவி வாய்க்காலுக்கு வடக்கு நாலாங்கண்ணாற்று இரண்டாஞ்சதிரத்து தெற்கடை ய நிலம் நான்மாவரையில் / மேற்கடைய நிலம் முக்காணியில் வடமேற்கடைய நிலம் மாகாணி யிப்படியாக காசுக்குடலாக திருநாமத்துகாணியாக கூட்டினோம். இது பன்மாஹேஷ்வர ரக்ஷை.

    ஆண்டார்கள் – அடியார்கள்; கமுகு திருநந்தவனம் –பாக்குதோப்பு; முறையாட்டம்- கணக்கு.

    விளக்கம்: கல்வெட்டு மூன்றாம் குலோத்துங்க சோழனின் பதினாறாவது ஆட்சிஆண்டில் (பொ.ஊ. 1194ல்)  வெட்டப்பட்டது. இன்னம்பர் நாட்டில் இறைவனை கும்பிட்டு இருந்த அடியார்கள் இரண்டாம் இராசாதிராசனின் 7-ம் ஆட்சி ஆண்டில் (பொ.ஊ.1173 ல்) பழையனூர் பல்லவராயரிடம் வேந்தரின் தேவதானமாக 140 மரங்கள் கொண்ட பாக்குத் தோப்பை இறைவனுக்கு எழுதித்தர வேண்டும் என்று விண்ணப்பம் செய்தார்கள். பல்வரையரும் இறைவனுக்கு பிரசாதம் செய்தருளும்படி பாக்குத் தோப்பை தேவதானமாக எழுதிக் கொடுத்தார். கோவில் மடைபள்ளி நிர்வாகி பாக்குத்தோப்பிற்கே சென்று விலை கொடுத்து பாக்கை வெட்டிவருகின்றான். இப்படி வரும் பாக்கை தன்வீட்டிற்கும் கொண்டு வந்து, பிறருக்கு காசிற்கு வெட்டி விற்றும், தன் சம்பந்திக்கு கொடுத்தும் அப்படியாக பச்சைப் பாக்கை  3200 காசிற்கும், 3200000 பாக்கை 42,600 காசிற்கும் விற்றதனல் கோவிலுக்கு முன்புவந்துகொண்டிருந்த நில வருவாய், பாக்கு வரி இழப்பு ஏற்பட்டது. பல்வரையரும், கோவில் பொறுப்பாளரும், இறைவனைத் தொழும் அடியார்களும் கொடுத்த காசை 30,400 இவன் கோவில் கருவூலத்தில் சேர்க்காமல் தானே கையாடல் செய்துகொண்டான். இதனால் சிவநாமத்து நில வருவாயும், பாக்கு வரியும் வராமல் போனது. ஆடிமாதத்தில் காப்புகட்டிய அடியார்கள் இந்த மடைபள்ளி நிர்வாகியை கணக்குதரும்படி கேட்டனர். அவன் தன் விட்டின் புழக்கடைவழியே ஊரைவிட்டு ஓடிப்போனான்.அவன் வீட்டை வந்து சோதித்தபோது 40 கல நெல்லும் கோயில் திருப்பரிகலமும் கண்டு எடுத்தனர். இன்னும் பல சிவதுரோகம் செய்திருந்ததினால் இவன் வீட்டை இடித்து பிள்ளையார் கோவில் கட்டினர். இவன் பாக்கு விற்ற காசில் ஊரில் பல்வேறு இடங்களில் வாங்கிப் போட்டிருந்த நிலங்கள் அத்தனையும் பறிமுதல் செய்து அவற்றை இறைவன் பெயருக்கு உரிமை ஆக்கினர். மடைபள்ளி நிர்வாகி பழுவூர் ஆண்டான் ஒரு பிராமணர் ஏனென்றால் மடைபள்ளியில் பிராமணரே பணியாற்றுவர்.

    பார்வை நூல்: தமிழ்க் கல்வெட்டுகள் வெளிச்சமிடுகின்ற அரிய உண்மைகள், பக் 292-293, முனைவர் வஞ்சியூர் க. பன்னீர்செல்வம். 0-9886769865

    Share
  • எத்தனை, எத்தனை எதிர்பார்ப்புகள்!

    நிர்மலா ராகவன்

    நலம் நலமறிய ஆவல் (166)

    எத்தனை, எத்தனை எதிர்பார்ப்புகள்!

    “பரீட்சையில் நான் எதிர்பார்த்த கேள்விகள் எதுவும் வரவில்லை!”

    பெண் பார்த்துவிட்டுப் போனவர்: “உங்கள் பெண் நான் எதிர்பார்த்த அளவுக்கு அழகாயில்லை. ஸாரி!”

    “எனக்கு ஒரு மனைவி வந்தால், என் எல்லாத் தேவைகளையும் கவனித்துக்கொள்வாள் என்று நினைத்திருந்தேன்!”

    மேற்கண்ட மாணவன், இளைஞன், கணவர் எல்லாருக்கும் ஏன் இப்படியொரு ஏமாற்றம்?

    அவர்கள் எதிர்பார்த்ததுபோல் எதுவும் அமையவில்லையாம்.

    பிறரிடம் நாம் எதிர்பார்ப்பது அனேகமாக ஏமாற்றத்தில்தான் கொண்டுவிடும்.

    காதலரோ, காதலியோ தன்னைப்பற்றியே நினைத்து உருகவேண்டும், அடிக்கடி `ஐ லவ் யு’ சொல்லவேண்டும், பரிசுப்பொருட்களால் தன்னைத் திணற அடிக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் பூசல்களைத்தான் விளைவிக்கின்றன. ஒருவருக்கு ஏமாற்றம், இன்னொருவருக்கு எரிச்சல். உறவுகளில் விரிசல் ஏற்பட இது போதுமே!

    புதுமணத் தம்பதிகளின் பிரச்னை

    கதை

    பெற்றோருக்கு ஒத்துப்போகாததால், இந்திரனுடைய வீட்டில் எப்போதும் மௌனம்தான் என்ற நிலை.

    தன் மணவாழ்க்கையும் அப்படி ஆகிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தான். உடன் படித்த பத்மினியின் கலகலப்பும் சிரிப்பும் அவன் இதுவரை அனுபவிக்காதது. சாதுவாக இருந்தவன், பிடிவாதமாக பத்மினியை மணந்தான்.

    `தான் இவனுக்கு எவ்வளவு தேவைப்பட்டால் இப்படிப் பெற்றோரையே எதிர்க்கத் துணிவான்!’ என்றெண்ணினாள் பத்மினி. அவள் கை உயர்ந்தது. பல பேர் முன்னிலையில் அவனை அவமானப்படுத்த ஆரம்பித்தாள்.

    பத்மினி எதிர்பார்த்தபடி, இந்திரனை மணந்ததால் அவளுடைய செல்வ நிலை உயர்ந்தது. பெரிய வீடு, அவளுடைய சொந்த உபயோகத்திற்கென கார் எல்லாவற்றையும் கொடுத்திருந்த இந்திரன், அவளது ஏச்சுப்பேச்சை சகிக்கமுடியாது, வீட்டில் நேரத்தைக் கழிப்பதையே குறைத்துக்கொண்டான்.

    பிறரால் நமக்கு மகிழ்ச்சி கிட்டும் என்ற எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில்தான் கொண்டுவிடும்.

    பிறர் மெச்ச எல்லாம் இருந்தாலும், `கணவன் தன்னை நாடவில்லையே!’ என்று எப்போதும் தனிமையில் நொந்த பத்மினிக்கு வெறுமைதான் ஏற்பட்டது. அவளுடைய பழைய கலகலப்பு மறைந்துபோய், பேசுவதையே குறைத்துக்கொண்டாள். நாளடைவில், மன இறுக்கம் உண்டாயிற்று.

    `உனக்கு என்ன ஆயிற்று?’ என்று யாராவது கரிசனத்துடன் கேட்டால், அவளால் அழத்தான் முடிந்தது.

    முன்பு படித்த துணுக்கு நினைவில் எழுகிறது.

    “என் இல்லற வாழ்க்கை சகிக்கவில்லை”.

    “அடடா! உன் காதலி என்ன ஆனாள்?”

    “அதை ஏன் கேட்கிறாய்! அவள்தான் இப்போது என் மனைவி!”

    இந்திரன்-பத்மினி இருவருடையேயும் இருந்த உறவும் இப்படித்தான் பலவீனமாகப் போயிற்று. காதல் போன இடம் தெரியவில்லை.

    மனைவியைப்பற்றிய எதிர்பார்ப்பு

    `உங்கள் வருங்கால மனைவி எப்படி இருக்கவேண்டும்? என்று சிலரைக் கேட்டபோது, ஒருவர் மட்டும், “எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இருக்கவில்லை,” என்றார். எப்படியும், அம்மா காட்டுகிற பெண்தான் தனக்கு மனைவியாக அமைவாள் என்ற விட்டேற்றியான போக்கு அவரிடம் காணப்பட்டது. தாய் சொல்லைத் தட்டி அறியாத மகன்!

    ஒரு சிலர், `நான் மணக்கப்போகிறவள் என்னைவிட அதிகம் படித்தவளாக இருக்கவேண்டும். அவளால் என் நிலை உயரவேண்டும்!’ என்று யோசித்து, அதன்படி நடப்பார்கள்.

    அவளுடைய எதிர்பார்ப்போ வேறுமாதிரியாக இருக்கும்.

    கதை

    சதீஷ் ஆசைப்பட்டபடியே அவனைவிடப் பெரிய படிப்புப் படித்த லோசனி அவனுக்கு மனைவியாக வாய்த்தாள். சில மாதங்கள் உத்தியோகத்திற்குப் போனதும், கருவுற்றதில் ஆரோக்கியக்குறைவு ஏற்பட்டது. வேலையை விட்டாள். அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள்.

    “இப்போதாவது வேலைக்குப் போயேன்!” என்ற கணவன் கெஞ்ச, “குழந்தைகளை நானே பார்த்துக்கொண்டால்தான் புத்திசாலிகளாக வளர்வார்கள்,” என்று மறுத்துவிட்டாள். அவன் கெஞ்சி, கொஞ்சி, மிரட்டிப்பார்த்தும் அவள் அசைந்து கொடுக்கவில்லை.

    “உன் மனைவி உண்மையாகவே படித்தவள்தானா?” என்று சில நண்பர்கள் தூபம் போட, அவன் ஆத்திரம் அதிகரித்தது.

    கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று நம்பி மணந்தவனுக்கு பெரும் ஏமாற்றம். அவனுடைய சம்பளத்தில் இப்போது நான்குபேர்!

    சில மாதங்களுக்குப்பின்னர் லோசனி மீண்டும் வேலைக்குப் போனாள். ஆனால், நண்பர்களிடம் படாடோபமாகக் காட்டிக்கொள்ளலாம் என்று நினைத்தவனுக்கு ஏமாற்றம். `என் பணம்,’ என்று அதைச் சேமித்தாள்.

    தன் தகுதிக்கு மீறி ஆசைப்பட்டது சதீஷ் செய்த பிழை. தான் அப்படி ஒரு பெண்ணிற்கு ஏற்றவன்தானா என்று முதலில் யோசித்திருக்கவேண்டும்.

    எதிர்பார்ப்பே கூடாதா?

    நாம் அடைய வேண்டியதில் மட்டும்தான் எதிர்பார்ப்புகள் அவசியம். நமது முயற்சியைக்கொண்டு வெற்றியடைவது நம் கையில்தான் இருக்கிறது.

    `என்னால் இதைவிட அதிகமாகச் சாதிக்கமுடியும்!’ என்று உறுதிபூண்டால் போதும். பிறரால்தான் அது முடியும் என்ற எதிர்பார்ப்போ ஏமாற்றத்தில்தான் கொண்டுவிடும்.

    இப்படி இருந்தால்…

    சிலருக்கு ஏன் எதிலுமே பூரண திருப்தி கிடைப்பதில்லை?

    `இப்படி இருந்தால்..!’ என்று எல்லா நிலையிலும் அதிருப்தி அடைகிறவர்கள் இவர்கள்.

    வெளியூர்களுக்குப் போகும்போது, `ரயிலில் நேற்றோ, முந்தாநாளோ பண்ணின இட்லியைக் கொடுத்துவிட்டான்! வயிற்றைக் கலக்குகிறது!’ என்று புகார் கூறுபவர் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நாம் விரைவாகப் போகும் வழி இது என்று எண்ணிப்பார்க்கத் தவறிவிடுகிறார்.

    பெரிய எதிர்பார்ப்புடன், புதிய ஊரைச் சுற்றிப்பார்க்கலாம் என்று உறவினர்கள் வீட்டுக்குப் போனால், சிலர், `ஏன் வந்தீர்கள்?’ என்பதுபோல் அவர்கள் நடந்துகொள்கிறார்கள். அவர்களுக்கு என்ன அசந்தர்ப்பமோ!

    `சுற்றுலா போக மிகச் சிறந்த இடம்!’ என்று யாராவது வந்துகொண்டே இருந்தால், அவர்கள்தாம் என்ன செய்வார்கள், பாவம்!

    நாம் பரிசுப்பொருட்கள் வாங்கிப்போனால், அது அன்பால் மட்டுமல்ல. பிரதியுபகாரத்தை எதிர்பார்த்துச் செய்யும் வியாபாரம். ஒரு சிறு குழந்தைக்கு சாக்லேட் கொடுத்து, `முத்தம் கொடு!’ என்று கேட்பதுபோல்தான்.

    `இப்படித்தான் நடக்கவேண்டும்!’ என்ற வரையறை வகுத்து, அதன்மூலம் பிறரைக் கட்டுப்படுத்தும் முயற்சி அது.

    நாம் எதிர்பார்த்ததுபோல் நடப்பார், நடக்கவேண்டும், என்று நம்பி பிறருக்கு உபகாரம் செய்வது வீண். நம் விருப்பப்படியே எல்லாரும் நடக்க வேண்டுமென்றால் ஆகிற காரியமா!

    வெற்றி நிலைக்காது ஏமாற்றம்

    ஒரு காரியத்தில் சில முறை வெற்றி கிட்டலாம். ஆனால், அந்த வெற்றி தொடரும் என்று எதிர்பார்க்க முடியுமா?

    முன்னணி நடிகர்கள் சில தோல்வியடைந்த படங்களையும் கொடுத்திருக்கிறார்கள்.

    போட்டிகளில் சேர்பவர்களுக்கு, Hope for the best. Prepare for the worst என்ற மனப்பான்மை அவசியம்.

    போட்டியில் வெற்றி அடைந்தபோது, பிறரை மதிக்காது அலட்டுபவர்கள் தோல்வி கிட்டும்போது துவண்டுவிடுவது அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பால்தான்.

    எதிர்பார்க்கலாம், ஆனால் அது நிறைவேறாதபோது தாங்கும் மனப்பான்மையை வளர்த்துக்கொண்டால், ஏமாற்றம் எழாது.

    கதை

    பாலித்தீவில் உள்ள பலருக்கு ஒரே ஆசை: வாழ்வில் ஒருமுறையாவது டெல்லியும், ரிஷிகேசமும் போய் பார்த்துவிட வேண்டும்.

    அப்படிப் போய்வந்த வாயான் (Wayan) என்பவர், “இந்தியா நான் எதிர்பார்த்தபடி இல்லை. ஆனால், மக்கள் தொகை பெருகிவிட்ட நிலையில் அனைவரும் நிதானமாக, அமைதியைக் கைவிடாது நடக்கவேண்டும் என்றால் சாத்தியமா?” என்கிறார்.

    நம் எதிர்பார்ப்பு பொய்யாகும்போது, வாயானைப்போல், `ஏன் இப்படி?’ என்று கேட்டுக்கொண்டால் ஆத்திரம் எழாது. தெளிவு பிறக்க, பிறரை அலட்சியமாகக் கருதவும் மாட்டோம்.

    Share
  • குறளின் கதிர்களாய்…(263)

    செண்பக ஜெகதீசன்…

    மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
    நட்பினுட் சாப்புல்லற் பாற்று.
    -திருக்குறள் -829(கூடா நட்பு)

    புதுக் கவிதையில்…

    மிகுந்த நட்புபோல்
    புறத்தே நடித்து,
    அகத்தே
    பகைமையுடன் இகழ்வாரிடம்,
    நாமும்
    புறத்தே அவர் மகிழுமாறு
    நட்புக் காட்டி,
    அகத்தே
    அத்தகு நட்பு
    அழியுமாறு செய்திடவேண்டும்…!

    குறும்பாவில்…

    நட்புபோல் வெளியே நடித்து
    அகத்தே பகையுடன் இகழ்வோர் நட்பை
    அவர்போல் நடித்தே அழித்திடு…!

    மரபுக் கவிதையில்…

    புறத்தே மிகுந்த நட்பதுபோல்
    பாவனை செய்தே உள்ளமதில்
    வெறுப்பு கொண்டே வஞ்சமுடன்
    வேறு விதமாய் இகழ்ந்துபேசும்
    பொறுப்பே யில்லா மாந்தரிடம்,
    போயவர் வழியில் புன்னகைத்தே
    அறுத்திட வேண்டும் அவர்நட்பை
    அறிந்தது கூடா நட்பெனவே…!

    லிமரைக்கூ..

    உள்ளத்தில் நிறைந்த பகையில்,
    நட்பாய் நடிப்பவர் தொடர்பை அறுத்திடு
    நடித்தேயவர் நம்பிடும் வகையில்…!

    கிராமிய பாணியில்…

    வேண்டாம் வேண்டாம்
    நட்பு வேண்டாம்,
    நல்லகொணம் இல்லாத
    கெட்டவுங்க நட்பு வேண்டாம்..

    நண்பன்போல வெளியே நடிச்சி
    மனசுல பகயோட பேசுறவன்
    நட்பு வேண்டாம்,
    அவனப்போல
    வெளிய சிரிச்சிப் பேசி
    மனசால அழிச்சிடணும்
    அவங்கூடவுள்ள நட்ப..

    அதால
    வேண்டாம் வேண்டாம்
    நட்பு வேண்டாம்,
    நல்லகொணம் இல்லாத
    கெட்டவுங்க நட்பு வேண்டாம்…!

    Share