ஐயப்பன் காவியம் – 3

-கவிமாமணி இலந்தை சு.இராமசாமி
பொதிகைப் படலம்
விளம் மா தேமா – அறுசீர் விருத்தம்
மந்தையாம் மேகம், வேழம்
மலையெலாம் உலவும், கேட்க
விந்தையாய்த் தென்றல் பாடும்
வெளியெலாம் பச்சைப் பூச்சு.
மந்திகள் பாசம் காட்டி
வயிற்றிலே குட்டி தூக்கும்
விந்தைகொள் பொதிகை மேடு
மேற்கிலே திகழ்ந்த தன்றே! (23)
காட்டிலே சிங்கம் போடும்
கர்ஜனை மக்கள் வாழும்
வீட்டிலே கேட்கும், பாயும்
வேங்கையோ அவ்வப்போது
நாட்டிலே எட்டிப் பார்க்கும்
நாயெலாம் வரவு பாடி
கூட்டமாய்ப் பாய வேங்கை
கொட்டமும் அடங்கி ஓடும். (24)
மூங்கிலின் உச்சி ஏறி
முழுநிலா தொட்டுப் பார்க்க
ஆங்கொரு கடுவன் முந்தும்
அதையதன் துணைர சிக்கும்
ஓங்கிய மரநெருக்கம்
ஒளியினைச் சலித்துப் போடும்
வீங்கிய தேக்கின் மேலே
மேகங்கள் குடியிருக்கும். (25)
மலைகளும் உயரம், அங்கே
மரங்களும் உயரம், உள்ளே
அலைகிற யானைக் கூட்டம்
அளவிலே உயரம், இந்த
நிலையிலே வானத் துக்கு
நெருக்கமாய் இருப்பதாலே
தலமதை வானோர் தங்கத்
தகுந்ததாய்க் கருது வாரே! (26)
சாரலில் நனைந்து கொண்டே
தடவிடும் தென்றல் காற்றில்
ஈரமும் அனுப வித்தே
எதிர்வரும் மந்திக் கூட்டம்
சாரியாய் அங்கு மிங்கும்
தாவிடப் பயந்து கொண்டே
நேரெதிர் அருவி பார்த்து
நெருங்கிடும் மக்கள் கூட்டம் (27)
வலம் வரும் முகிலின் மந்தை
மலைகளின் முகட்டில் ஏறி
உலவிடும், மரங்க ளெல்லாம்
உரசிடும் ஒன்றை யொன்று.
நிலவினைத் தடவிப் பார்க்கும்
நெடுமரம், தரையின் மேலே
பலவகைப் பூக்கள் மீது
பாடிடும் தேனீக் கொள்ளை. (28)
தெளிந்தநீர் அதனைப் போலே
தேடியும் காணா வண்ணம்
குளிர்ந்தநீர் அருவி கொட்ட
குளிக்கிற மக்கள் பக்கம்
வளைந்துநீர் தேங்கு கின்ற
மடுவிலும் துளைந்து பார்ப்பார்
நெளிந்திடும் நதியாய் ஓடும்
நீர்வழி பயிரின் ஈட்டம் (29)
புலிநகம் விற்போர் ஓர்பால்
புதுப்புதுத் தந்த மாலை
பலவகை விற்போர் ஓர்பால்
பழங்களை விற்போர் ஓர்பால்
விலையுயர் முத்து கொண்டு
வீதியில் விற்போர் ஓர்பால்
தலமெலாம் மணக்கச் செய்யும்
சந்தனம் விற்போர் ஓர் பால் (30)
மா மா காய் – அறுசீர் விருத்தம்
சிகரத் திருந்து தேனருவி
திடுதி டென்னக் கீழ்பாயும்
பகர ஒண்ணா அழகோடு
பாயும் செண்ப காதேவி
தகவாய்க் குளிக்கும் வகையினிலே
தழைந்து கொட்டும் சிற்றருவி
சுகமாய்க் குளிக்க முதலருவி
தொடர்ந்து கொட்டும் குற்றாலம் (31)
இன்னோர் பக்கம் ஐந்தருவி
இடையிற் பிரிந்து ஓலமிடும்
தன்னே ரில்லாக் காட்டுக்குள்
சத்தம் போடும் பேய்க்கூதல்
என்னே வாசம், இதமென்றே
எண்ண வைக்கும் மூலிகைகள்
முன்னே மூன்று பிரிவாக
மூலம் காட்டும் திரிகூடம் (32)