Blog

  • படக்கவிதைப் போட்டி – 215

    படக்கவிதைப் போட்டி – 215

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    பார்க்கவ் கேசவன் எடுத்த இந்தப் படத்தை, சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (09.06.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • பெரியசாமி தூரனின் எழுத்துகள்

    பெரியசாமி தூரனின் எழுத்துகள்

    பெரியசாமி தூரனின் எழுத்துகள் என்ற தலைப்பிலான உரை கேட்க வருக. குவிகம் அமைப்பு அழைக்கிறது

    Share
  • தேவ நடனம்

    தேவ நடனம்

    விவேக்பாரதி

    காலபைரவர் மீது எழுதப்பட்டிருக்கும் “யம் யம் யம் யக்‌ஷரூபம்” என்கிற அஷ்டகத்தைக் கீரவாணி இசையில் கேட்க நேர்ந்தது. அந்தத் தாக்கத்தில் கோவை ஈஷா மையம் சென்று திரும்புகையில் நான் எழுதிய தேவ நடனம்…

    விண்ணெங்கும் ஆன ரூபம் விரிகிற சடையும்
    வீரியங் கொண்ட நிலையும்
    பண்ணெங்கும் கானம் பாடும் பரவச மடையும்
    பார்வையில் காலம் அழியும்
    மண்ணெங்கும் ஜீவன் வாழும் மனதினில் நிகழும்
    மாதவள் பாக மிணையும்
    கண்ணெங்கும் ஜோதி தோன்றும் கலியுக மழியும்
    காளனின் தேவ நடனம்! (1)

    தம்தம்தம் தாள மாயம் தரையினில் நடனம்
    தண்டையின் ஓசை பெருகும்
    சிம்மங்கள் காளை யோடு சிவசிவ வெனவே
    சிந்தனை பொங்க மருகும்
    துன்பங்கள் தீயி னாலே பனியென உருகும்
    துக்கமே யின்றி அமையும்
    இன்பத்தில் போது தீரும் இனிதென நிகழும்
    ஈசனின் தேவ நடனம்! (2)

    பூதங்கள் கூடி ஆடும் புதிதென வுலகம்
    புத்தி தடுமாறி காணும்
    வேதங்கள் தேவை யாகும் சுருதிக ளருளும்
    வேகமாய் வானும் மாறும்
    நாதங்கள் யாவு மாடும் நடுநிசி இரவில்
    நர்த்தனம் காண லாகும்
    காதல்கொள் தேவி யோடு கவிமகன் வரையும்
    காட்சியே தேவ நடனம்! (3)

    பூநெஞ்சம் தீப மாகும் புரிகிற தருணம்
    பூரணம் வந்து நிறையும்
    தீநஞ்சம் யாவும் மாளும் திசைகளு மதிரும்
    திவ்ய லீலைகள் நிகழும்
    கானென்றும் தேக மாகும் கடைவரு மிருளில்
    காணலாம் யாவும் புரியும்
    மானொன்றும் மீதி தோன்றும் மலைமக ளுடனும்
    மன்னனின் தேவ நடனம்! (4)

    காலங்கள் சாட்சி யாகும் கருணையின் வடிவம்
    காருண்யன் செய்யும் நடனம்
    ஓலங்கள் தீர லாகும் ஒருவொரு கணமும்
    ஓமெனும் ஓசை பரவும்
    ஞாலங்கள் கூட ஆடும் நடுநிசி இரவில்
    நாயகன் ஆடும் நடனம்
    மூலங்கொள் மூச்சு தோறும் நிகழ்கிற நடனம்
    முக்கணன் தேவ நடனம்!! (5)

    -15.04.2019

    Share
  • பிரம்மஹத்தி தோஷம் (சிறுகதை)

    பிரம்மஹத்தி தோஷம் (சிறுகதை)

    நிர்மலா ராகவன்

    தொலைக்காட்சி ஒத்திகை முடிந்து வீடு திரும்பியதும் களைப்புதான் மிஞ்சியது அபிராமிக்கு.

    `எத்தனைவித சமையல் தெரிஞ்சு வெச்சிருக்கீங்க!’ என்று புகழ்ச்சியில் ஆரம்பித்து, அவளைத் தன் நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்திருந்தார் இயக்குநர் சற்குணம்.

    முதன்முதலாகத் தன்னைப் பல்லாயிரம் பேர் பார்ப்பார்களே என்று கவனமாக அலங்கரித்துக்கொண்டு போயிருந்தாள் அபிராமி.

    அவளை மேலும் கீழும் நோட்டமிட்ட சற்குணம், “பாக்கறவங்க ஒங்களையேதான் பாத்துக்கிட்டு இருக்கப் போறாங்க. சமையல் குறிப்பிலே மனசு போகாது!” என்றார் கேலியாக.

    உடனே, கழுத்திலிருந்த இரண்டு சங்கிலிகளில் ஒன்றைக் கழற்றி கைப்பைக்குள் போட்டுக்கொண்டுவிட்டு, தாயின் ஆமோதிப்பை வேண்டும் குழந்தையைப்போல் அவரையே பார்த்தாள் அந்த இல்லத்தரசி.

    “இப்போ சரியா இருக்கு!” என்ற ஆமோதிப்பு, அப்போது மகிழ்ச்சியைக் கொடுத்தது. தானும் ஒரு சின்னத்திரை நடிகை!

    நேரம் நெருங்க நெருங்க, அபிராமிக்குப் பயம் வந்தது. பரீட்சைக்கு எழுதுமுன்னர் மாணவர்கள் கழிப்பறையை நாடி ஓடுவதுபோல் உணர்ந்தாள்.

    “அதை ஏன் அங்கே எடுத்துக்கிட்டுப் போறீங்க? இப்படி சோபாமேல வெச்சுட்டுப் போங்க, என்று குரல் கொடுத்தவள், அவள் வயதை ஒத்த கலாராணி. கல்யாணி என்ற இயற்பெயரை தொலைக்காட்சிக்காக மாற்றிக்கொண்டிருந்தவள்.

    அவள் அவ்வப்போது அங்கிருந்தவர்களுக்கு டீ போட்டுக்கொடுக்கும் `எடுபிடி’. ஆனால், அவ்வாறு அவள் மதிப்பைக் குறைக்காது, `உதவி இயக்குநர்’ என்று அவள் பெயரும் திரையில் வரும்படி செய்திருந்தார் இயக்குநர்.

    “நீங்க போயிட்டு வாங்க. நான் பாத்துக்கறேன்!” என்றவளைப் பார்த்து, தர்மசங்கடத்துடன் ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு, அவசரமாக ஓடினாள் அபிராமி.

    திரும்பி வந்தபோது, கைப்பை அவள் வைத்த இடத்தில் இருக்கவில்லை.

    “என் ஹாண்ட்பேக்?” என்று அபிராமி அலறியபோது, சிறிய சமையலறைக்கு உள்ளிருந்து வெளிப்பட்டாள் கலாராணி. அவள் தோளில் அபிராமியின் கைப்பை!

    “மொதல்லே இந்த டீயைக் குடிச்சு ஆசுவாசப்படுத்திக்குங்க! ஒங்களுக்குன்னு ஸ்ட்ராங்கா போட்டிருக்கேன்”.

    நன்றியுடன் அதை வாங்கிக்கொண்டாள் அபிராமி. சூடான பானம் தொண்டையின்வழி இறங்கியபோது, சற்றுமுன் எழுந்த பயம் மறைந்து, சுறுசுறுப்பு வந்துவிட்டாற்போல் இருந்தது.

    அடுத்து, “இந்தாங்க. நான்தான் பத்திரமா எடுத்து வெச்சேன். இப்படி வெச்சுட்டுப் போகலாமா?” என்று அபிராமியிடம் அவள் பொருளை நீட்டினாள் கலாராணி. “எல்லாம் சரியா இருக்கான்னு பாத்துக்குங்க”. குரலில் திமிர் தெரிந்தது.

    இயந்திரகதியில் அபிராமி அதைத் திறக்கப் போனபோது, “ரெடி?” என்ற இயக்குநர் குரல் கேட்டது.

    ஆளுயரக் கேமராவையும் விளக்குகளையும் பார்த்து இன்னும் நடுக்கம் எழுந்தது.

    நாலைந்து முறை குளறிவிட்டு, ஒருவழியாக வீடு திரும்பினாள் அபிராமி.

    `இந்த ஒரு அனுபவமே போதுண்டா சாமி!’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள். உடலும் மனமும் ஒருங்கே களைத்திருந்தன.

    அடுத்த சில நாட்கள், தன் உருவத்தைத் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் அனைவரும் தொலைக்காட்சிவழி பார்க்கப் போகிறார்கள், யாரெல்லாம் அழைத்துப் பாராட்டுவார்கள் என்ற இனிய கற்பனைகளில் கரைந்தன.

    ஆனால், தான் சமையல் குறிப்புகளைக் கொடுக்கும் காட்சியைப் பார்த்தபோது அபிராமிக்கு மகிழ்ச்சி ஏற்படவில்லை. கழுத்தில் ஒரே ஒரு மெல்லிய சங்கிலி இருப்பதுதான் கண்ணை உறுத்தியது.

    பதற்றத்துடன் கைப்பையில் தேடினாள் அபிராமி.

    இந்த நிகழ்ச்சிகளுக்குச் சன்மானம் எதுவும் இல்லாவிட்டாலும், தங்கள் முகம் எல்லாருக்கும் தெரிகிறதே என்ற பெருமையில்தான் பலரும் பங்கேற்க முன்வந்தார்கள் – அபிராமியைப்போல்.

    `நாங்க தெருவோரத்தில வெச்சிருக்கிற ஸ்டால்ல சாப்பிடுவோம்மா!’ என்று மன்னிப்பு கேட்கும் தொனியில் அவளும் அவர்களுடன் சேர்ந்து போவதைத் தவிர்த்திருந்தார் சற்குணம். அந்நிகழ்ச்சிக்கென்று அளிக்கப்பட்ட தொகையில் பெரும்பகுதியைத் தயாரிப்பாளர் தனதாக்கிக்கொண்டு, ஒரு சிறு விள்ளலை அதற்கென ஒதுக்கியிருந்த வயிற்றெரிச்சலை அவளுடன் முன்பே ரகசியமாகப் பகிர்ந்துகொண்டிருந்தார்.

    “அதுக்கென்ன! வீட்டிலே சமைச்சு வெச்சுட்டுத்தான் வந்திருக்கேன்!” என்று பெரியமனது பண்ணினாள் அபிராமி.

    கலாராணியோ, பகல் உணவின்போது, `நசி லெமாக்’ என்னும் தேங்காய்ப்பாலில் வெந்திருந்த சோறு நடுவில் இருக்க, அதைச் சுற்றி, வறுத்த நிலக்கடலை, கருவாடு மற்றும் வெள்ளரிக்காய் வில்லைகள், வறுத்தரைத்த மிளகாய்ச்சாறு எல்லாம் தனித்தனியாக வைக்கப்பட்ட கொழுப்பு சேர்த்த சாதம் ஓசியாகக் கிடைக்குமே என்று ஆர்வத்துடன் பங்கெடுத்துக்கொண்டாள்.

    அவளால் கண்டிப்பாக ஆறாயிரம் வெள்ளி கொடுத்து, ஐந்து பவுன் சங்கிலி வாங்கியிருக்க முடியாது.

    நடந்ததையெல்லாம் நாடகத் தொடர்போல் ஒருமுறை நினைவுபடுத்திக்கொண்டாள் அபிராமி.

    ஏதோ உள்நோக்கத்துடன்தான் அவள் கைப்பையைக் கழிப்பறைக்குள் எடுத்துச் செல்லவேண்டாம் என்று தடுத்திருக்கிறாள்! அப்போது இருந்த பதற்றத்தில் அதைத் தன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை! முட்டாள்! முட்டாள்!

    பேரன்புடன், சூடான பானத்தைக் கொடுப்பதுபோல் கொடுத்து, தன் கவனத்தைக் கலைத்திருக்கிறாள்.

    அடுத்தடுத்து வந்த சமையல் நிகழ்ச்சிகளில் கலாராணியின் கழுத்தில் மின்னிய சங்கிலி தன்னுடையதுதான் என்பதில் அபிராமிக்குச் சந்தேகம் இருக்கவில்லை.

    எடுத்ததை அவள் பார்க்கவில்லைதான். ஆனால், எந்தத் திருடன்தான் பிறர் பார்க்கத் திருடுகிறான்!

    அவளைப்போய் கேட்க முடியுமா?

    ஒரு பேரங்காடியில் தன் குழந்தைக்காகப் பால் போத்தல்களையும், மிட்டாய் வகைகளையும் திருடிய ஏழைத் தாய்க்கு சிறைத்தண்டனை. ஆனால் இவ்வளவு பெரிய குற்றத்திற்கு எந்தவிதத் தண்டனையும் இல்லாமல் இவள் தப்பிவிட்டாள்! இது என்ன நியாயம்!

    தங்கத்தைத் திருடினால் பிரம்மஹத்தி தோஷம். அதாவது, கொலை செய்த பாவம் என்று அபிராமி படித்திருக்கிறாள். `தெய்வம் நின்று கொல்லும்!’ என்றெல்லாம் வேறு சொல்கிறார்களே! இந்தத் திருடிக்கு எப்போது, எப்படி தண்டனை கிடைக்கப் போகிறது?

    விரைவிலேயே அதற்கான விடையும் கிடைத்தது, தினசரியில் முதல் பக்கச் செய்தியாக.

    கலாராணியின் மகன் தன் காரில் பதுக்கி வைத்திருந்த போதைப் பொருளுக்காக கைது செய்யப்பட்டிருந்தான்.

    `பொருள் அங்கிருப்பதே அவனுக்குத் தெரியாது. அத்துடன், தனித்து வாழும் தாய்க்கு ஒரே மகன்!’ என்று வக்கீல் வாதாடினார். கலாராணி `அன்பளிப்பாக’ அளித்திருந்த சங்கிலி அவரை அப்படி உணர்ச்சிவசமாகப் பேச வைத்திருந்தது.

    மலேசியச் சட்டப்படி, ஒரு கிலோ வைத்திருந்தாலே மரண தண்டனை. இவன் வசமோ நான்கு கிலோ!

    அதற்கடுத்த வாரம் வந்த நிகழ்ச்சியில், சோர்ந்த முகத்துடன் காணப்பட்டாள் கலாராணி. கழுத்தில் ஒரு கருகமணி மாலை மட்டும்!

    `பிரம்மஹத்தி தோஷம் சும்மா விடுமா!’ என்று உரக்கவே சொல்லிக்கொண்டபோது, ஆறுதலாக இருந்தது அபிராமிக்கு.

    Share
  • உதவிக் கரமாய் உருமாறு!

    உதவிக் கரமாய் உருமாறு!

    மீ.விசுவநாதன்

    தட்டித் தட்டிப் பார்க்கின்றான் – மனத்
    தங்கத் தரத்தை அறிகின்றான்
    முட்டி மோதித் தவித்தாலும் – உள்
    முழுதும் அவனே இருக்கின்றான்.

    வேத ஒலியாய் வாழ்கின்றான் – ஒரு
    விதைக்குள் வினையாய்க் கருவானான்
    நோதல் இலாத சுகமுண்டோ – என
    நோன்புப் பலனாய் அணைக்கின்றான்.

    இன்ப துன்பச் சக்கரத்தை – அவன்
    ஏற்றே அளவாய்ச் சுற்றுகிறான்
    வன்மம் அவனுக் கேதுமிலை – நம்
    வழிக்கு அவனே துணையாவான்.

    ஆசைப் பட்டு வருந்தாதே – என
    அன்பாய் அறிந்து சொல்கின்றான்
    பாச வலையில் சிக்காமல் – கருணை
    பழகிக் கொள்ள அருள்கின்றான்.

    உதவிக் கரமாய் உருமாறி – நீ
    உயிர்கள் மகிழப் பழகென்றான்
    எதையும் இறையாய்ப் பார்த்தாலே – என்
    இருப்பை உணர்வாய் எனச்சொன்னான்.

    Share
  • சேக்கிழார் பா நயம் – 39

    சேக்கிழார் பா நயம் – 39

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    தில்லையின் எல்லையிலே நின்ற சுந்தரர் , திருக்கோயிலுக்குள் நுழையத் தலைப்பட்டார்.அங்கேவந்தவருக்குஅன்னம்பாலிப்பும்,குடிக்கத்தக்க குளிர்நீரும் வழங்கும் சாலைகள் மிகுந்த, உலகின் அழகெல்லாம் திரண்ட திருவீதிக்குள் புகுந்தார். அங்கே திருமால் ,அயன். மறறும்தேவர்கள், முனிவர்கள் திரண்டு நெருங்கி உட்புக முயன்றனர். அவர்களுள் பக்தி வயப்பட்ட, தகுந்த சிவனடியார் மட்டுமே அனுமதிக்கப்பெற்றார்கள். கணநாதர் போன்றோர் வணங்கிஉள்ளேபுகுந்தனர்! பொன்னால் வேயப்பட்ட ஒளிமிகுந்த பேரம்பலத்தைக் கடந்து , சிற்றம்பலத்தின் அணுக்கன் திருவாயிலை அடைந்தார். அவ்வாயில் அடியார்கள் சிந்தையில் வேதத்தின் பெருமையைப் அவர்கள் கூறும் பிரணவத்தால் உணர்த்தி நிற்கிறது.

    சிந்தை என்பதற்குச் சீவனென்றும், சீவனுக்குச் சிந்தை என்றும் வந்திடும். சிந்தை – சிவஞானத்தால் விளங்கிய ஆன்ம அறிவு என்க. அவ்வறிவினுள்ளே விரிந்து விளங்கும் திருச்சிற்றம்பலத்திலே இறைவன் பிண்டத்துச் செய்யும் திருக்கூத்து நிகழும். அவ்வானந்தக் கூத்தை அவ்வியல்பிற் கும்பிட்டுச் சிவபோதத்தாலே அருளிய தமிழ் மறைகளின் முத லிடை கடைகளிலே பிரண வத்தினுட்பொருளாகிய ‘திருச்சிற்றம்பலம்’ என்பதைக் கூறித் தொடங்குதலும் முடித்தலும் அமைவுடைத்து என்பது பெரியோர் துணிபு. திருச்சிற்றம்பலம் – சிறுமை – அம்பலம் என்ற இருசொற் புணர்ந்த தொடர்மொழி. சிறுமை – இங்கு நுண்மை – (சூக்குமம்). சிவசத்தியை நோக்க மற்ற இருவகை மாயா காரியப் பொருளுந் தூலப் பொருள்களேயாம். தடையிலா ஞானமாகிய சிவசத்தி சொரூபமே அம்பலமாகலின் அது சிற்றம்பலம் எனப்பெறும். இச்சிறுமையை வடநூலார் தகரம் என்ப. – திருவளர் ஒளிசூழ் திருச்சிற்றம்பலம்முன் அணுக்கன் திருவாயில் புகுந்தார் என்பதாம். சுழுமுனையைக் கடந்து அதன்மேல் விளங்குவது சிவஞான ஒளியாதலின் மேருவலங் கொண்டு சிற்றம்பல வாயில் புகுந்தார் என்று கூறியவாறு.

    மறையின் முதல் – நடு – கடைகளில் அலர்ந்த – திருச்சிற்றம்பலம் பிரணவ உருவமாய் விளங்குதலாலும், அது சமட்டி – சேர்ந்தநிலை – ஓம், வியட்டி – பிரிந்தநிலை – அ – உ – ம் என்ற இரண்டு நிலையிலும் வேதங்களில் முதல் நடு முடிவுகளில் அமைந்து உச்சரிக்கப்படுதலாலும் இவ்வாறு கூறினார். வியட்டி நிலையில் – அகாரம் இருக்கு வேதத்தின் முதலிலும் (அக்நி மீளே), உகாரம் எசுர்வேதத்தின் நடுவிலும் (யோநிஸ் சமுத்திரோபிந்து), மகாரம் சாமவேதத்தின் முடிபிலும்….(சமாநம்வரம்) விளங்குவதென்று பெரியோர் கூறுவர். தகராகாயத்தைக் குறிக்கும் தகரத்தோடு ஓ என்ற உயிர் கூடிய தோ – (தோடு உடைய) என்று தொடங்கிய தெய்வத்தமிழ்த் திருமுறை, உலகெலாம் என்றதில் ம் என்றதுடன் முடிபு பெற்றிருத்தலும் இங்கு உணரத்தக்கது.

    திருவணுக்கள் திருவாயில் – இறைவன் ஆடுமிடத்திற் கருகில் உள்ளது. இதற்கப்புறம் வேறு வாயில்கள் இல்லை. அகத்தும் புறத்தும் இறைவனைக் காணக் கடந்துசெல்ல வேண்டிய எண்ணிறந்த வாயில்களிலே உள்ளிருந்து கணக்கிடும்போது முதற் றிருவாயில். அணுக்கத் தொண்டர்களே உட்புகக் கூடியதாதலின் இப்பெயர் பெற்ற தென்றலுமாம். இது அம்பலஞ் சூழ்ந்த மாளிகைப் பத்தியிற் கிழக்குத் திருவாயில் போலும். என்றெல்லாம் உரைகாரர்கள் விளக்குவர்!
    இப்பாடலில் சிவபெருமான் ஆடும் திருக்கூத்தின் வகைகளை முதலில் விளக்குகிறார்!

    உயிர்களை ஆட்டுவிக்கும் இறைவன் தாமே ஆடுகின்றார்! அவ்வாறு ஆடும் ஆட்டம் சில வகைப்படும். மாலும் அயனும் தேட அண்ணாமலையாய் ஆடிய ஆட்டம், அண்டத்தில் வையகம் பொலிய ஆடும்ஆட்டம், சிலம்பொலிக்க ஆடும்ஆட்டம், தில்லைமன்றினுள்ளே ஆடிய ஆட்டம், சிவஞானத்தால் விளங்கிய ஆன்ம அறிவினுள்ளே விரிந்து விளங்கும் திருச்சிற்றம்பலத்திலே இறைவன் பிண்டத்துச் செய்யும் திருக்கூத்து நிகழும். இத்திருக்கூத்து இதயத்துள்நிகழும்! இதனைத் திருவள்ளுவர், ‘’மலர்மிசை ஏகினான் ‘’ என்ற திருக்குறளில்கூறுவார். பரிமேலழகர், ‘அன்பானினைவாரது உள்ளக் கமலத்தின்கண் அவர் நினைந்தவடிவோடு விரைந்து சேறலின்’ என்ற உரை கூறியது காண்க, அப்பரடிகள்,

    நாடி நாரண னான்முக னென்றிவர்,
    தேடி யுந்திரிந் துங்காண வல்லரோ,
    மாட மாளிகை சூழ்தில்லை யம்பலத்,
    தாடி பாதமென் னெஞ்சு ளிருக்கவே“

    என்று பிரித்துக் காட்டுவார். திருச்சிற்றம்பலம் இதயத் தானமாவதும் உணர்க.. இதனையே சைவசித்தாந்தம் ஞான நாடகம், ஊனநாடகம் என்றுகூறும் .

    ‘’வையகம் பொலிய’’ என்றதொடர் இன்பத் துன்பங்களாகிய போகங்களை மட்டும் நுகர்தற்கிடமாகிய சுவர்க்க , நரக உலகங்கள் போலாது, சிவகருமஞ் செய்து முத்தி யடைதற்குரிய இடமாகிய வையகம் பொலிய எனப்பொருள் படும் . தேவர்கள் இதைக்காணவேபூமியில் பிறக்க விரும்புவர் இதனை,

    ‘’புவனியில் போய்ப் பிறவாமையில் நாள் நாம்
    போக்குகின்றோம் அவமே, இந்தப்பூமி
    சிவன் உய்யக் கொள்கின்றவாறு’’

    என்று மாணிக்கவாசகர் பாடுகின்றார்!

    இனி, ‘’மறைச் சிலம்பு அரற்ற ‘’ என்ற தொடரால், உலகத்தோற்றத்துக்கு உரிய காரணத்தைச் சேக்கிழார் கூறுகிறார்.

    – நாதமாகிய சிலம்பு ஒலிக்க. வேதம் நாத சொரூபமானது. அதுவே இறைவன் காற்சிலம்பாம். நாதத்திலிருந்து விருத்தியாய் வேதம் தோன்றும். குடிலையின் வழியே புவனங்கள் தோன்றும். அவ்வாறு தோன்றிய புவனங்களிற் பிறந்த உயிர்களுக்கு வேதமே வழிகாட்டும். இறைவன் வேதாந்தத்து விளங்குபவன்; ஆதலின் அவன் காலில் நிற்பது நாதமாகிய சிலம்பு என்க.’’ என்பது உரை.

    வையகம் பொலிய ஆடும் இத்தகைய நடனத்தை உள்ளே அகக்கண்களாலும் கண்டுணர்ந்த சிவனடியாராகிய சுந்தரர் , முதலில் கைகளைக் கூப்பி அஞ்சலிசெய்தார். அடுத்து புறக்கண்களால் அம்பலத்தில் ஆடும்நடனத்தைக் கண்டுமகிழ்ந்தார். பின்னர் அகக்கரணங்களால் அன்பு கலந்து கண்டுணர்ந்தார்! இவ்வாறு கைகளைக் கூப்பி, அகக்கண்ணால் கண்டு, அந்தக்கரணங்களில் கலந்து நிற்கக் கண்டார். இந்த மூவகைகளில் கண்டுமகிழ்ந்த காட்சிகளுள் , எதுமுன், எதுபின் எனப்புலப் படாதவாறு ஒன்றினுள் ஓன்று கலந்து விட்டனவாம்! இதனை,

    ‘’ஐயர்தாம் வெளியே ஆடுகின் றாரை
    யஞ்சலி மலர்த்திமுன் குவித்த
    கைகளோ திளைத்த கண்களோ அந்தக்
    கரணமோ கலந்த அன்பு’’

    என்கிறார். ‘’முன் குவித்த கைகளோ – கண்களோ – அந்தக்கரணமோ அன்பு உந்த – அன்பு தூண்டுதலினாலே மனம் முதலிய உட்கரணங்கள் தொழில் செய்யும் – பின்னர் அவைஏவுதலினால் கண் காணும் – கண்டதனால் அதன்பின் கைகுவியும்; ஆனால் இவை இங்கே தவயோக முயற்சியி னாலே ஒருங்கே நிகழ்ந்தமையாலே, அம்முறையிற் கூறாது மாற்றிக் கூறினார். ஒன்றன்பின் ஒன்றாய்ப் பின்னே நிகழ வேண்டியவை அவ்வாறன்றி முன்னே நிகழ்ந்தன என்பார் முன் என்றார். நிருவி கற்பம் சவிகற்பம் என்ற காட்சி யிரண்டனுள்ளே முதலிற் கண்டபோது பொது நோக்காகிய நிருவிகற்பக் காட்சி நிகழும். பின் மனதோடு கலந்து உற்றறிதல் உண்டாகும். அதன்பின் இன்னது செய்தல் வேண்டுமென்பது தோன்றும். பின்னரே அச்செயல் நிகழும். இந்த நான்கு வகை நிகழ்ச்சிகளும் கர்ப்பூரத்திலே தீப்பற்றுதல்போல் தீவிர தர பத்தி யுடையார்க்கு எது முன்னர் நிகழ்ந்ததென்றறியமுடியாதபடி விரைவிலே நிகழும்’’ என்பார் உரையாசிரியர். – உட்கரணங்கள் நான்கு. சித்தம், மனம், அகங்காரம், புத்தி என்பன. உயிர் – சித்தமாய் நின்று இது யாதாகற்பாலது எனச் சிந்திக்கும்; அதன்பின் மனமாய் நின்று இஃது இன்னதாகற்பாலது எனப் பற்றும்; அதன்பின் அகங்காரம் இது ஆமோ? அன்றோ? இதனை இன்னதெனத் தெளிவேன் யானெனத் தெளிவு பிறவாதெழும்; அதன் பின்னர்ப் புத்தியாய் நின்று இஃது இன்னதெனத் தெளியும்; இவ்வகை வெவ்வேறாய் முற்றுப்பெறாத செய்கையுடையன வல்லாதபடி முன்பயிற்சியாலே ஒருங்கே முற்றிய செய்கையுடையன ஆயின என்க

    அத்தகைய கலந்த அன்புடன் சுந்தரர் தில்லையம்பலத்தின் அணுக்கன் திருவாயிலில் புகுந்தார்! இதனையே ,

    வையகம் பொலிய மறைச்சிலம் பரற்ற
    மன்றுளே மாலயன் தேட
    ஐயர்தாம் வெளியே ஆடுகின் றாரை
    யஞ்சலி மலர்த்திமுன் குவித்த
    கைகளோ திளைத்த கண்களோ அந்தக்
    கரணமோ கலந்தவன் பந்தச்
    செய்தவப் பெரியோன் சென்றுதாழ்ந் தெழுந்தான்
    திருக்களிற் றுப்படி மருங்கு

    என்று பாடுகிறார் . இப்பாடலில்உள்ள திருக்களிற்றுப்படி என்பது – யானைத் துதிக்கை வடிவுடையனவாகிய திரணைகள் இரண்டுபுறமும் அமைந்துள்ள ஐந்து படிகள். இவ்வைந்தையும் ஏறிக் கடந்து சென்றால் அருட் பெருங் கூத்தனைக் காணலாம். களிற்றுக்கை சூழ்ந்தமையால் இது இப்பெயர்பெற்றது. களிற்றுக்கை பிரணவத்தையும், ஐந்து படிகள் திருவைந்தெழுத்தையும் குறிக்கும். ஐந்தெழுத்தால் அறியப்பெறுபவன் அவை குறிக்கும் ஐந்தொழில் ஆனந்தக் கூத்தனாதலை அவற்றின்மேற் காணும் இறைவனது திருவுருவம் இயம்பும். இக் களிற்றுக்கை எடுத்து நடராசர் திருப்பாதத்தே வைத்தமையால் காரணப் பேர் பெற்றது திருக்களிற்றுப்படியார் என்ற சைவசித்தாந்த சாத்திரம்..

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-49

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-49

    நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-49

    49. காலமறிதல்

    குறள் 481:

    பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
    வேந்தர்க்கு வேண்டும் பொழுது

    பகல் நேரத்துல கோட்டானக் கூட காக்கா செயிச்சிடும். அது கணக்கா பகையாளிய தோக்கடிக்க நெனக்கவங்களுக்கும் அதுக்கேத்த சரியான காலம் அவசியம்.

    குறள் 482:

    பருவத்தோ டொட்ட ஒழுகல் திருவினைத்
    தீராமை ஆர்க்குங் கயிறு

    காலத்த வெரயமாக்காம காரியம் செய்யுதது நழுவி ஓடுத சொத்து நீங்காம இருக்கதுக்காக கட்டிப்போடுத கயிறு கணக்கா ஆவும்.

    குறள் 483:

    அருவினை யென்ப உளவோ கருவியாற்
    கால மறிந்து செயின்

    காரியத்த முடிக்கத் தேவையான சாதனங்களோட ஏத்த காலத்தையும் அறிஞ்சுக்கிட்டு செஞ்சா முடியாத காரியம் னு ஏதும் உண்டா?

    குறள் 484:

    ஞாலங் கருதினுங் கைகூடுங் காலம்
    கருதி இடத்தாற் செயின்

    ஏத்த காலத்தையும் எடத்தையும் அறிஞ்சு ஒரு காரியத்த செய்தாம்னா இந்த பூமி முழுக்க வேணும்னு நெனச்சாலும் கைக்குள்ளார வந்துக் கிடும்..

    குறள் 485:

    காலங் கருதி இருப்பர் கலங்காது
    ஞாலங் கருது பவர்

    ஒலகம் முழுக்க வேணும்னு நெனக்கவங்க அதுக்காவ கலங்காம ஏத்த காலம் வருத வரைக்கும் பொறுமையா காத்துக் கெடப்பாக.

    குறள் 486:

    ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
    தாக்கற்குப் பேருந் தகைத்து

    மன உறுதி இருக்கவங்க பொறுமையா அமைதியா இருக்கது பயந்துகிட்டு இல்ல. ஆட்டுக் கிடா பகையாளிய தாக்குததுக்கு முன்ன கால பின்னுக்கு வாங்கிட்டு பொறவு பாயும் அது கணக்கா தான்.

    குறள் 487:

    பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்
    துள்வேர்ப்பர் ஒள்ளி யவர்

    பகையாளிய தோக்கடிக்க மனசுக்குள்ளார கோவம் இருந்தாலும் வெளிக்காட்டாம எடம், காலம் பாத்துக் காத்துக் கிடப்பாக புத்திசாலிங்க.

    குறள் 488:

    செறுநரைக் காணிற் சுமக்க இறுவரை
    காணிற் கிழக்காந் தலை

    பகையாளிக்கு தகுந்த நேரம் வருதப்போ தானே அழிஞ்சு போயிடுவான். அதுவரைக்கும் பொறுத்துப் போய்க்கிடணும்.

    குறள் 489:

    எய்தற் கரிய தியைந்தக்கால் அந்நிலையே
    செய்தற் கரிய செயல்

    காலம் நல்லதா வாய்க்குதப்போ அத ஒபயோகிச்சுக்கிட்டு ஒசந்த காரியங்கள செஞ்சு முடிக்கணும்.

    குறள் 490:

    கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
    குத்தொக்க சீர்த்த இடத்து

    காலம் வருத வரைக்கும் கொக்கு போல அமைதியா காத்துக் கெடந்து பொறவு அது எங்ஙன குறி தவறாம இரைய புடிக்குதோ அது கணக்கா காரியத்த செஞ்சு முடிக்கணும்.

    (அடுத்தாப்லயும் வரும்….)

    Share
  • மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்குப் பேராசிரியர்கள் தேவை

    மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்குப் பேராசிரியர்கள் தேவை

    இது இலவச சேவை. கல்வி நிலையங்கள் தங்கள் விளம்பரங்களை vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பினால், இங்கே வெளியிடப்படும். இதற்குக் கட்டணம் இல்லை. விரும்புவோர், வல்லமைக்கு நன்கொடை வழங்கலாம்.

    Share
  • இயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘அரசியல் பள்ளி’

    இயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘அரசியல் பள்ளி’

    மக்கள் தொடர்பாளர் குணா

    கலைத்துறையில் சமூக மாற்றத்தினை குறிக்கோளாகக் கொண்டு இயங்குபவர்களில் இயக்குநர் பா.இரஞ்சித், முக்கியமானவர். திரைப்படங்களில் அரசியல், மேடைகளில் உரையாடல் எனத் தேங்கிவிடாமல் களத்திற்கும் சென்று செயலாற்றுகிறார்.

    அந்த வகையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் விழிப்புணர்வின் அவசியத் தேவையை அடிப்படையாகக் கொண்டு அவருடைய “நீலம் பண்பாட்டு மையம்” இயக்கத்தின் சார்பில் வேலூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மூன்று நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, சட்ட ஆலோசனை மையம், இரவு பாடசாலை, நூலகம் ஆகியவற்றை திறந்து வைத்துள்ளார் இயக்குநர் பா.இரஞ்சித்.

    வேலூர் மாவட்டத்தில் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளிலும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பென்னக்கல், கௌதாமல், மத்திகிரி, பூதக்கோட்டை, மல்லசந்திரம் ஆகிய கிராமங்களில் “டாக்டர் அம்பேத்கர் அரசியல் பள்ளி” என்ற இரவுப் பாடசாலையினைத் தொடங்கி வைத்திருக்கிறார்.

    “இந்த இரவுப் பாட சாலையின் மூலம், அரசியல் மற்றும் சட்ட விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தி அறிவார்ந்தவர்களாக நெறிப்படுத்துவதே நோக்கம். இதைப் போலவே தமிழகம் முழுக்க இருக்கிற கிராமங்களிலும் இதனைச் செயல்படுத்தும் திட்டமும் இருக்கிறது. இந்த நிகழ்வினை ஒருங்கிணைக்க ஒத்துழைத்த ஜெய்பீம் பேரவை மற்றும் டாக்ர் பீமாராவ் அம்பேத்கர் இளைஞர் மன்றம் ஆகியோருக்கு நன்றிகள்” என்றார் இயக்குநர் பா.இரஞ்சித்.

    Share
  • அத்துரலிய இரத்தின தேரரின் கோரிக்கைகளில் இரண்டு நிறைவேற்றம்

    அத்துரலிய இரத்தின தேரரின் கோரிக்கைகளில் இரண்டு நிறைவேற்றம்

    மறவன்புலவு க. சச்சிதானந்தன் 
    சிவசேனை
    இலங்கை தீவில் இனிமையான சிவபூமியில் மண்ணின் மரபுகளை காக்கக் காலவரையற்ற உண்ணா நோன்பு கைக்கொள்ளும் வணக்கத்துக்குரிய அத்துரலிய இரத்தின தேரரின் கோரிக்கைகளில் இரண்டை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றியமையைப் பாராட்டுகிறேன்.
    கிழக்கு மாகாணச் சைவத் தமிழ் மக்களின் நெடு நாள் கோரிக்கையை நிறைவேற்றிய இலங்கை அரசைப் பாராட்டுகிறேன்.
    மேதகு குடியரசுத் தலைவரின் பணியை எளிதாக்கிக் கொப்பளிக்கும் உணர்ச்சிகளுக்கு அணை கட்டினார்கள். மேதகு ஆளுநர்களாக இருந்த திரு அலி திரு இசுபுல்லர் இருவரும், இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தைக் கொண்டுவரும் நடவடிக்கையாகத் தங்கள் பதவிகளை விட்டுக் கொடுத்ததைப் பாராட்டுகிறேன்.
    வணக்கத்துக்குரிய அத்துரலிய இரத்தின தேரரின் எஞ்சிய கோரிக்கைகளையும் இலங்கை அரசாங்கம் நிறைவேற்றி மீண்டும் வளர்ச்சிப் பாதையில் மக்களைத் திசைதிருப்பிச் செல்வமும் செழிப்பும் மிக்க நாடாக இலங்கையை மாற்ற இனங்களுக்கிடையே நல்லுறவும் நல்லிணக்கமும் அன்பும் அருளும் அறனும் நிலைக்க வேண்டுகிறேன்.
    =================================================================================
    01.06.2019 அன்று மறவன்புலவு க. சச்சிதானந்தன் வெளியிட்ட முந்தைய அறிக்கை
    வணக்கத்துக்குரிய அத்துரலிய இரத்தின தேரரின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி அவரைக் காப்பாற்றுக.
    மறவன்புலவு க. சச்சிதானந்தன்
    சிவசேனை கோரிக்கை
    இலங்கை சிவபூமி. திருமூலர் அன்றே கூறினார். புத்தர்கள் சிவபூமியை மதித்து நடக்கிறார்கள் புத்த விகாரைகளில் சிவனுக்கும் இடமுண்டு சைவக் கடவுளருக்கும் இடம் உண்டு.
    400 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைகுள் வலிந்து புகுந்த கிருத்தவ மதம் சைவர்களையும் புத்தர்களையும் ஏளனம் செய்தது சைவக் கோயில்களும் புத்த விகாரங்களும் சாத்தானின் இருப்பிடங்கள் என வலிந்து கூறினர். பீரங்கி முனையில் துப்பாக்கி முனையில் வாள் முனையில் சைவர்களையும் புத்தர்களையும் கிறித்தவர்கள் ஆக்கினர்.
    இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயரோடு புகுந்த முகமதியர்கள் தொடக்கத்தில் இந்த மண்ணின் மரபுகளை மதித்து உள் புகுந்தனர். படிப்படியாக மண்ணின் மரபுகளை இழித்துப் பேச தொடங்கினர் அண்மைக்காலங்களில் மிதித்து நடக்க முற்படுகின்றனர்.
    சிவ பூமியில் இருந்த காளி கோயிலை அகற்றினேன் அந்த இடத்தில் முகமதியர் வழிபாட்டிடம் கட்டினேன் மசூதி கட்டினேன் அதற்காக அமைச்சர் அதிகாரத்தைப் பயன்படுத்தினேன் என்ற பொருள்பட இன்றைய கிழக்கு மாகாண ஆளுநர் இசுபுல்லர் கூறிய சொற்கள் அவர் இலங்கை அரசில் எந்தப் பதவியையும் வகிக்கத் தகுதியற்றவர் என்பதையே எடுத்துக் காட்டின.
    முசலிப் பிரிவில் சிவபூமிக்குள்ளே அடாத்தாகக் காடுகளை வெட்டி ஆயிரத்துக்கும் அதிகமான முகமதியரைக் குடியேற்றியவர் இரிசாத்தர் பதியுதீன்.
    முல்லைத்தீவில் சில ஆயிரம் ஏக்கர் பரப்பளவைக் கையகப்படுத்தி அங்கு முகமதியரைக் குடியேற்ற இரிசாத்தர் பதியுதீன் முனைந்த பொழுது வடமாகாண சபை தலையிட்டுத் தடுத்தது.
    சிவபூமியில் மாட்டிறைச்சிக்கடை கூடாது எனச் சைவர்கள் களம் இறங்கிய பொழுது உள்ளுராட்சி அமைப்புக்கள் தீர்மானங்கள் இயற்றிய பொழுது உள்ளூராட்சித் தலைவர்களை மிரட்டியவர் இரிசாத்தர் பதியுதீன்.
    இசுபுல்லரும் இரிசாத்தர் பதியுதீனும் அரசுப் பதவிகளில் இருப்பதால் சைவர்களுக்கு வேண்டாததைச் செய்கிறார்கள் என்ற முறைப்பாடு வடக்கே கிழக்கே மலையகத்திலே நெடுங் காலமாக உண்டு.
    கிழக்கு மாகாணச் சைவத் தமிழர்கள் ஒன்றிணைந்து இசுபுல்லர் பதவி விலக வேண்டும் என ஒரு நாள் முழுவதும் கடையடைப்பு நிகழ்த்தியதை மறக்கமுடியாது.
    கண்டியில் தலதா மாளிகையில் வணக்கத்துக்குரிய அத்துரலிய இரத்தின தேரர் காலவரையற்ற உண்ணா நோன்பு இருக்கிறார்.
    சைவத் தமிழர்களாகிய நாங்கள் எதை இந்நாள்வரை கோரிக்கையாக வைத்திருந்தோமோ அதையே புத்தத் தேசியவாதியான வணக்கத்துக்குரிய தேரரும் வைத்திருக்கிறார் களத்தில் இறங்கி போராடுகிறார்.
    வணக்கத்துக்குரிய அத்துரலிய இரத்தன தேரர் பெருமானின் கோரிக்கைகளில் நியாயம் உண்டு. நீதி உண்டு.
    இலங்கை அரசு செவி சாய்க்க வேண்டும். அவரது கோரிக்கைகளை நிறைவேற்றி இலங்கைத்தீவின் மண்ணின் மரபுகள் பேணுவோரின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்.
    வணக்கத்துக்குரிய தேரரின் கோரிக்கைகளை ஏற்று உரிய நடவடிக்கைகளை எடுத்தால் இலங்கையைச் சிவபூமியாக கொண்டு வாழ்கின்ற சைவத் தமிழர்கள் இலங்கை அரசைப் பாராட்டுவார்கள்.
    வணக்கத்துக்குரிய அத்துரலிய இரத்தின தேரர் அவர்களும் அவரது அருமைத் தொண்டர்களும் புத்த தேசியத்தை முன்னெடுத்து மண்ணின் மரபைப் பேண விழைகிறார்கள்.
    இந்த வரலாற்று முயற்சியில் பத்த சிங்கள மக்களுக்கு உறுதுணையாக இந்த மண்ணின் மரபுகளைப் பாதுகாத்துப் பேணிக் காக்க விரும்புகின்ற சைவத் தமிழர்கள் இருப்பார்கள்.
    Share
  • (Peer Reviewed) கோபல்ல கிராமம்: வரலாற்றுக் கதை

    (Peer Reviewed) கோபல்ல கிராமம்: வரலாற்றுக் கதை

    ஏ. பிரேமானந்த்
    முனைவர் பட்ட ஆய்வாளர்,
    நவீன இந்திய மொழிகள் மற்றும் இலக்கியவியல் துறை,
    தில்லிப் பல்கலைக்கழகம்,
    தில்லி – 110 007.
    மின்னஞ்சல்: epremanand87@gmail.com

    கோபல்ல கிராமம்: வரலாற்றுக் கதை

    சொல்லப்பட்ட, சொல்லாத, சொல்லத்துணிந்த அனைத்தையும் இழுத்துப் பிடித்து எழுதுவது, ஓர் அடங்காத காளை மாட்டிற்கு மூக்கணாங் கயிறுக் கட்டுகிற மாதிரி தற்போதைய ஆய்வுலகம் சென்றுகொண்டிருக்கிறது. எழுதுவது ஒன்று; செயலாக்கம் பெறுவது மற்றொன்று எனும் கால கட்டத்தில் நாம் இருக்கிறோம். பொதுவாக, அனைத்துப் பிரதிகளும் ஏதோ ஒரு கோட்பாட்டில் அடங்குவது தற்போது இயல்பாகிப் போன ஒன்று. அவ்வகையில் கரிசல் காட்டு எழுத்தாளரும் சாகித்திய அக்காதெமி விருதாளருமான கி. ராஜ நாராயணனும் ஒருவர். கி.ரா.வைப் பின் தொடர்ந்து வந்தவர்களும் வாசித்தவர்களும் ஓர் ஒழுங்கை கடைபிடிக்க முடியாது; அவற்றை நேர் நிரலில் எழுதவும் முடியாது. அது ஆய்வு வரையறையானாலும் சரி. மாட்டின் மடியைப் பிடிக்கப் போனவன் அதன் வாலைப் பிடித்தக் கதை மாறிதான் ஆகுமென்று அவரும், அவரது படைப்பும் ஓர் உதாரணம். படைப்பவர்களைவிட வாசிப்பவர்களே உலகில் நிரம்பிக் கிடக்கிறார்கள். படைப்பைப் பொறுத்து வாசகர்கள் அமைவார்கள்; வாசகர்களைப் பொறுத்தும் படைப்புகள் அமைவதுண்டு. இவ்விரு நிலையிலும் கி.ரா.வின் படைப்புகள் பொருந்தும். எல்லாப் பருவங்களிலும் (காலப் பருவங்கள் + மனிதப் பருவங்கள்) அவரது கதைகளை வாசிக்கலாம். அதாவது, மீசை வைத்தவனுக்கும் மீசையை மழித்தவனுக்கும் இவருடைய கதைகள் அல்லது எழுத்துகள் பொருந்தும். வெங்கட் சாமிநாதன் கூறுவது போல் –

    கி.ராஜநாராயணன் மற்றும் அவருடைய எழுத்துக்கள் பற்றிய அனைத்துமே, அவரை, நீட்டிய தன் கால்களை லேசாகப் பிடித்து விட்டுக்கொண்டே ஆச்சரியத்தால் அகல விரிந்த கண்களோடு சூழ்ந்திருக்கும் பேரக்குழந்தைகளுக்குக் கதை சொல்லுகின்ற பாட்டியாகவோ, அல்லது மூன்றாம் தலைமுறை வாலிபப் பிள்ளைகளுக்கு மத்தியில் அமர்ந்துகொண்டு, தன்னுடைய பழைய நாட்களை ஏக்கத்துடன் நினைவு கூர்ந்துகொண்டோ கண்களில் குறும்பு மின்னலிட ஏதாவது விரசமானவற்றைச் சொல்லி அவர்களுக்குக் கிளுகிளுப்பூட்டிக்கொண்டோ இருக்கும் தாத்தாவாகவோ தோற்றம் கொள்ளவைப்பனவாகவே இருக்கின்றன1.(கோ.பு.ம 1993:2)

    எனது வாலிபப் பருவம், அவரது வயோதிக்கப் பருவத்தில் எழுதப்பட்டு தற்போது வயோதிக்கப் பருவத்தை எதிர்நோக்கி, நாற்பத்தியொன்று ஆண்டுகள் கடந்துவிட்ட ‘கோபல்ல கிராமம்’ என்னும் இப்புதினமானது, மேற்கூறிய காரண அடிப்படையில் எழுதிய கட்டுரையுமாகும். இங்கு கி.ரா. பற்றி விமர்சன முறையில் எழுந்த கருத்தாக்கங்களை ஆய்வுக்கட்டுரை பாணியில் எடுத்துக்கூறும் விமர்சனக் கட்டுரையாகவும் எடுத்துக்கொள்ளலாம். முதுகலையில் கி.ரா.வுடைய ‘கோபல்ல கிராமம்’ எனக்குச் சிறப்புப் பாடமாக இருந்தது. வெறும் மதிப்பெண்ணுக்காக கி.ரா. எழுதிய ‘கோபல்ல கிராமம்’ என்னும் புதினத்தைப் படித்தேன். தற்போது அப்புதினத்திலே கட்டுண்டு கிடக்கும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொண்டதனால் எனது வாலிபம் மறைந்து வயோதிகப் பருவத்தை எய்தவனைப் போல இப்புதினக் கதைக் காட்சிகள் என் மனதில் நிரம்பிக் கிடக்கின்றன. இந்நூலின் மூன்றாம் பதிப்பில் (ஜூன் 1991)  எம்.ஏ.நுஃமான் இப்புதினத்தைப் பற்றிக் கூறும்போது –

    இதிலே நிறைய சம்பவங்கள் வருகின்றன. ஏராளமான மனிதர்கள் வருகின்றார்கள். ஆயினும் இதிலே கதை என்று சொல்லக் கூடியதாக எதுவும் இல்லை. அதனால் கதாப்பாத்திரங்களும் இல்லை2. (கோ.கி. 1991:1)

    எல்லா சம்பவங்களும் நினைவில் நிற்க முடியாவிட்டாலும் சில சம்பவங்கள், சில கிளைக் கதைகள், சில கதா பாத்திரங்கள் வாசிப்பவரை முட்டாளாக்குவதில்லை. அவரவரது சூழலுக்கும் வயதிற்கும் எண்ணத்திற்கும் ஏற்ப அவை மாறுபடத்தான் செய்யும். அப்படியே விட்டாலும், என்னக் கதை என்பது பற்றியாவது புரிதல் வாசகரிடத்தில் இருக்கும். கோபல்ல கிராமத்தை வாசிக்கும் போதும் இதே நிலைபாட்டை நானும் அடைந்தேன். இருந்தும் கதையாசிரியர் பல்வேறு கதா பாத்திரத்தை வைத்து பல்வேறு சூழலில் அமைந்த நிகழ்வுகளைக் கதைகளாக அடுக்கிக்கொண்டு போகிறார். எல்லாமே நாட்டுப்புறக் கதைகள்தான். அதில் என்ன உண்மை இருக்கப் போகிறது; புனைவுகள்தான் அவையனைத்தும். இதில் என்ன ஆராய்ச்சி செய்வது? அப்படி ஆராய்ந்தால் மட்டும் புனைவுகள் உண்மைத் தன்மை பெற்றுவிடுமா? ஆராய்ச்சி என்பதே உண்மை நிலையை அறிதல் தானே என்கிற துணிவு வாசித்தபோது எனக்கு இருக்கத்தான் செய்தது.

    ‘கோபல்ல’ என்பது இவருடைய கிராமமான ‘இடைசெவலு’க்கு இவர் வைத்த கற்பனைப் பெயர் என்று, கி.ரா.வின் மற்றொரு படைப்பும் சாகித்திய அக்காதெமி விருதும் பெற்ற ‘கோபல்ல புரத்து மக்கள்’ என்னும் புதினத்தின் அணிந்துரையில் வெங்கட் சாமிநாதன் தெளிவுபடுத்துகிறார். அதோடு அவர் மேலும் கூறும்போது –

    ராஜ நாராயணன் தெலுங்கு பேசும் கம்மா வகுப்பினரைச் சேர்ந்தவர். இவர்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு முஸ்லீம் கொள்ளைக்காரர்களுக்குப் பயந்து ஆந்திராவிலிருந்து குடிபெயர்ந்து வந்தவர்கள். உள்ளூர்த் தமிழர்களோடு சில நூற்றாண்டுகளாக இவர்கள் கொண்டிருந்த சமூக உறவு இவர்களைத் தமிழ் வாழ்க்கைப் போக்கோடு இணைந்துவிட்டது3. (கோ.பு.ம 1993:5)

    மேற்சொன்ன வரலாற்றுச் சம்பவங்கள் இப்புதினத்தில் பார்க்க முடிகின்றன. இது ஒரு வெறும் கதையில்லை; கற்பனைக் கதையுமில்லை; உண்மைச் சம்பவங்கள் கோர்க்கப்பட்ட வரலாற்றுத் திரட்டு. அவைதாம் புனைவுகளாக எழுத்துகளில் வெளிதள்ளியுள்ளார் கி.ரா. படைப்பவர்கள் அனைவரும் உள்ளது உள்ளபடிச் சொல்லுவதுமில்லை; எழுதுவதுமில்லை. சிலர் கற்பனைகள் துணைக்கொண்டும், புனைவுகள் துணைக்கொண்டும் தான் படைக்கிறார்கள். இதில் உண்மைகள் புலப்படலாம்; புலப்படாமலும் போகலாம். எப்படியோ கதை ஒன்று வந்துவிட்டது என்கிற நினைப்பும் படைப்பவர்களுக்கு ஒரு விதத் திருப்தியைத் தந்துவிட்டால், அவர் என்ன நோக்கத்திற்காகப் படைத்தாரோ அது அவர் அறியாமல் அவருடனேயும் சமூகத்துடனேயும் செரிமாணமாகி விடுகின்றன. இதனை வாசகர்கள் புரிந்து கொள்கிறார்கள் என்பதெல்லாம் அடுத்தக்கட்ட விஷயம். எதையும் குறிப்பால் தெரிவிப்பதே படைப்பாளனின் காரியமாக இருக்கிறது. ஆகவே, இந்த நிலையைப் பார்க்கும்போது ஒவ்வொரு படைப்பாளனும் ஒரு ‘பெண்’ தன்மையோடுதான் இருக்கின்றான். அதனடிப்படையில் கி.ரா.வும் விதி விலக்கல்ல.

    II

    “தாய்” புதினத்தை எழுதிய மார்க்ஸிம் கார்க்கியும், “ஒரு நூறாண்டு காலத் தனிமை” என்னும் புதினத்தை எழுதிய கேப்ரியேல் கார்சியா மார்க்வெஸும் அவர்களுடைய தாத்தாபாட்டி சொன்னக் கதைகள் வைத்தே புனைந்தார்கள்; புனைவு இலக்கியத்தையும் கண்டுணர்ந்தார்கள். ஆக உலகின் தலைச்சிறந்த படைப்பாளர்கள், கலைஞர்கள் அனைவருமே அவர்களின் கூட்டுக் குடும்பப் பின்னணியில் வாழ்ந்த, வளர்ந்த நிலையை இனம் கண்டு படைப்புகளில் எடுத்துரைக்கின்றார்கள் என்கிற கூற்றை கி.ரா.வுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். இவரும் எழுத்துலகிற்கு வரக் காரணமாக இருந்தவர்கள் இவருடைய தாத்தா – பாட்டி தான். அதன் விளைவே, இவர் எழுதியது ‘கோபல்ல கிராமம்’. சிறுவயதுப் பருவத்தில் நமக்கு தாத்தா – பாட்டி சொன்னக் கதைகள் எவ்வளவோ இருக்கின்றன. காலப் போக்கில் கூட்டுக் குடும்பம் சிதைந்து, தனிக் குடும்பமாக உருப்பெறும்போது தாத்தா – பாட்டிகளோடு அவர்களின் கதைகளும் மடிந்துவிடுகின்றன. அத்தகைய கதைகளை மீட்டெடுக்கும் சோதனை முயற்சி, இப்புதினத்தில் அமைந்திருப்பதை வாசிப்பவர்கள் அனைவரும் உணர்வார்கள்.

    இப்புதினக் கதையை எடுத்துக் கூறுவது இக்கட்டுரையின் நோக்கமில்லை. இப்புதினத்தில் இடம்பெறும் கதைகள், கதை பாத்திரங்கள், வரலாற்று அடிப்படையில் கூறப்பட்ட உண்மைச் சம்பவங்கள் அல்லது உண்மைச் சம்பவங்களை வைத்து வரலாற்றை உருவாக்கிய நிலைபாடுகள் பற்றிக் கூறுவதாகும். கி.ரா. அத்தனை கிளைக் கதைகளையும் நிகழ்வுகளையும் ஏன் தனித்தனி சிறுகதையாக வடிக்காமல் ‘கோபல்ல கிராமம்’ என்னும் புதினத்தில் அனைத்தையும் கொண்டு வந்து சேர்ந்திருக்கிறார்? வாசிப்பவர்கள் சோம்பல் முறிக்கவே அவ்வாறு தொடர்பற்றும் படாமலும் இருக்கும் காட்சிகளை அமைத்தாரா? மனம் போன போக்கிலே கதை போகட்டும் என்று விட்டுவிட்டாரா? இப்படியான பல கேள்விகள் அறுபதுகளில் கேட்கப்பட்டதா? என்று தெரியாது. ஆனால், இதையும் ஒரு நாவலாக ஏற்றிருக்கிறார்கள் என்பதுதான் தற்போதைய பலபேரின் அவாவாக இருக்கின்றன. அதற்கான காரணத்தையும் விடையையும் எடுத்துக் கூறுகிறது இக்கட்டுரை.

    கி.ரா.வின் தந்திர உத்தியை நாம் மதித்தாக வேண்டும். அவர் சொல்லவருவது வெறும் கதையையோ, வரலாற்றையோ அல்ல என்று முழுவதுமாக புறம் தள்ளிவிட முடியாது. ஆந்திரத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் பற்றியும் பேசுகிறார்; கோட்டையார் வீட்டையும் (அதன் உடன் பிறப்புகளையும் இத்துடன் சேர்ந்துக் கொள்ளலாம்) பேசுகிறார்; பிரிட்டிஷார் கிராமத்தில் நுழைந்த வரலாற்றையும் பேசுகிறார்; நாட்டுப்புற மருத்துவம் பற்றியும் பேசுகிறார். தனி நபர் (ஆண்+பெண்) பற்றியும் பேசுகிறார். இது போல எத்தனை எத்தனையோ விசயங்களைப் பேசி, கடைசியில் விக்டோரியா ராணியுடைய ஆட்சியில் கோபல்ல கிராமத்தை அடக்குகிறார். அவர் சொன்னக் கதைகளும் சம்பவங்களும் கதை பாத்திரங்களும் ஒரு நூலிழை போல ஒருவித இணைப்பில் இருப்பதை மறைத்து, வாசிப்பவரை உல்லாசப் பயணத்திற்கும் உரையாடுவதற்கும் கி.ரா. இடம் கொடுத்திருக்கிறார்; மற்றொரு புறத்தில் உலக நியதியை, அதன் விதியை ஒவ்வொரு தனி மனிதனும் உணர வேண்டும். வாழ்க்கையின் உண்மை நிலையைப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற அவருடைய அறக் கருத்தையும் இக்கதைகளில் கதை பாத்திரங்களைக் கொண்டு நிரப்பி விடுகிறார் என்பதுதான் உள்ளார்ந்த உண்மை.

    III

    இனக்குழுச் சமூகத்தில் தற்போதைய சமூக ஒழுங்கு இல்லையே தவிர, கூட்டு வாழ்க்கை இருந்தது; கூட்டின்பம் இருந்தது. சாதி – சமயம் – இனம் – நிறம் – பொருளாதார மதிப்பீடுகள் – ஆண் – பெண் வேறுபாடு இவையனைத்தையும் அத்தகைய சமூகத்தில் பார்க்க முடியாது. தொழில் அடிப்படையிலும் பிரித்தறிய முடியாது. அவர்களுக்கு உணவு – உடை – உறைவிடம் மட்டுமே பிரதானமாக இருந்தது. இதனைத் தாய்வழிச் சமூகமாக தற்போதைய திறனாய்வாளர்களும் ஆய்வாளர்களும் கூறும் வழக்கம் தமிழ்ச் சமூகத்தில் உண்டு. கோபல்ல கிராமமும் அப்படி அமைந்ததே. கதை தொடக்கமும் கதை முடிவும் ‘பெண்’ என்ற பாத்திரத்தை வைத்தே ஆசிரியர் புனைந்திருப்பதைப் பார்க்கும் போது, அந்தச் சமூகம் தாய்வழிச் சமூகமாக இருந்துள்ளதைக் காண முடிகிறது. பெண் சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கும் கோபல்ல கிராமம், அப்பெண்ணிற்கு எதிராகப் போர்க் கொடி தூக்கவும் துணிந்திருப்பதைக் கவனிக்க வேண்டும். இது ஒரு புறம் இருக்க, கதையில் கழுவன் ஆசாரி மனைவியைக் கொன்றதற்கு உடனே தண்டனை வழங்காமல், இடையில் சென்னா தேவிக்கும் துலுக்கு ராஜாவுக்கும் ஒரு முடிச்சுப் போடும் ஆசிரியர், மங்கத்தாயாரு அம்மாளுக்கும் கும்பினி வெள்ளைக் காரனுக்கும் ஒரு முடிச்சியையும் போடுகிறார். இந்த மூன்று முடிச்சுக் கதைச் சம்பவங்களும் ஓர் உண்மையை; தத்துவத்தை; நிலையாமையைச் சொல்லுகின்ற இணைப்புப் பாலமாக இப்புதினத்தில் அமைந்திருக்கின்றன.

    • கழுவனுக்கோ ஆசாரி மனைவி மங்கம்மாள் அணிந்திருந்த பாம்படங்கள் நகை மீது ஆசை. அதனால்தான் கொள்ளை அடிக்கப்போனவன் கொலை செய்யும்படியானது.
    • துலுக்கு ராஜாவிற்கோ சென்னா தேவி அழகின் மேல் ஆசை. அதற்கு உடன்பாடு இல்லை என்பதால் மக்கள் ராஜாவிற்குப் பயந்து புலம்பெயர்ந்தார்கள்.
    • கும்பினி வெள்ளை அதிகாரிக்கோ நிலம் (மண்) மீது ஆசை. பெண் மீதோ, பொன் மீதோ ஆசை இல்லாததால் மங்கத்தாயாரு அம்மாள் கும்பினி அதிகாரிக்கு வெள்ளைக் கொடி அசைத்தாள்.

    இந்த மூன்றுக் கதைச் சம்பவங்களும் பொன் – பெண் – மண் ஆகிய ஆசைகளைக் கொண்டுள்ளன. மேற்கண்ட கதை பாத்திரங்கள் இவைகளைக் கையகப்படுத்துவதால் ஏற்படும் இழப்பும் துன்பமும் கவலையும் மனிதனை ஆட்சி செய்யும் பொருள்களாக உருப்பெறுகின்றன. இத்தகைய ஆசைகள் மனிதனுக்கு அழிவைத் தரும். அது நிலையாமையை உடையது. அவற்றை மனிதன் உதறித் தள்ள வேண்டும் என்கிற நோக்கமே கோபல்ல கிராமம் உருவாகக் காரணமாக இருந்திருக்க வேண்டும். கி.ரா. மேலும் மற்றொரு தந்திரத்தை கோபல்ல கிராமத்தில் புகுத்தியுள்ளதையும் அவதானிக்கலாம். நாட்டுப்புற வாழ்வோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்ட கி.ரா. அவரது எழுத்துகளிலும் கதைகளிலும் அவ்வண்ணமே செயல்படுகிறார் என்பதை இப்புதினம் உதாரணம் காட்டுகிறது. நாட்டுப்புறத்தில் வசிப்பவர்கள் பெரும்பாலும் இந்துக்களாக இருக்கிறார்கள். அவர்கள் வழிபடும் தெய்வங்கள் இந்துத் தெய்வங்களாக இருக்கின்றன. அப்படியென்றால், நாட்டுப்புறம் என்றாலே இந்து மதச் சார்புடையவர்களுக்கு மட்டும் தானா? முஸ்லீம்களுக்கும் (இஸ்லாம்) கிறித்துவர்களுக்கும் இல்லையா? என்கிற கேள்வியைக் கோபல்ல கிராமம் எழுப்புகிறது.

    ஆந்திர தேசத்திலிருந்து கம்மவார் மட்டும் இங்கே வரவில்லை. ரெட்டியார், கம்பளத்தார், செட்டியார், பிராமணர், பொற்கொல்லர், சக்கிலியர் இப்படி எத்தனையோ4 (கோ.கி 1991:23)

    என்று குறிப்பிடும் கி.ரா. முஸ்லீம்கள் பற்றியும், கிறித்துவர்கள் பற்றியும் கூறவில்லை. இப்புதினத்தில் தனி நபர்களாகக் குறிப்பிடப்படுபவர்கள் அனைவரும் இவர் சாதியைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அதாவது, கம்மவார் சாதியைச் சேர்ந்தவர்கள். ‘கோவிந்தப்ப நாயக்கர்’, ‘கிருஷ்ணப்ப நாயக்கர்’, ‘கோவப்ப நாயக்கர்’,’ ராமப்ப நாயக்கர்’, ‘தாசப்ப நாயக்கர்’, ‘சுந்தரப்ப நாயக்கர்’, ‘கண்ணப்ப நாயக்கர்’ போன்றோர் செல்வந்தர்கள்; கோட்டையார் வீட்டு வாரிசுகள். இவர்களைச் சுற்றியே எல்லா கதைகளும் இடம்பெறுகின்றன. இவர்களைப் போலவே மற்ற தனி நபர்களும், ‘கோழி மயிர் சின்னைய்ய நாயக்கர்’, ‘மண்ணுதிண்ணி ரெங்கய்ய நாயக்கர்’, ‘நல்ல மனசு திரவத்தி நாயக்கர்’, ‘பொடிக்கார கெங்கா நாயக்கர்’, ‘காரவீட்டு லெச்சுமண நாயக்கர்’, ‘பொறை பங்காரு நாயக்கர்’ போன்றோரும் அதே சாதியை, சமயத்தை உடையவர்களாகவும் இருக்கிறார்கள். மற்ற சமயம், சாதியைச் சேர்ந்தவர்கள் கதைகளில் முக்கியத்துவம் பெறவில்லை.

    IV

    கழுவன் – மங்கம்மாள் கதையாகட்டும்; சென்னா தேவி கதையாகட்டும்; இன்ன பிற கதைகளையும் சேர்த்துப் பார்த்தால் இந்துக்கள் மட்டும் இடம்பெறும் கதைகளாகவே புலப்படுகின்றன. சென்னா தேவியோடு மொத்த மக்களும் புலம்பெயரக் காரணமாக இருந்தது சென்னா தேவியின் அழகு மட்டுமன்று; அவர்களுடைய மதமும், சமயமும்தான் காரணம். பெருமாளை வழிபடுவதால் அவர்கள் வைணவராக இருந்திருக்க வேண்டும் (தற்போதைய நிலை வேறு). முஸ்லீம் ராஜாக்கள் மதம் வேறு; சமயம் வேறு; கடவுள் வேறு; உணவும் வேறாக இருக்கின்றன. வயதான ராஜாவுக்கு பதினைந்து வயதுடைய சென்னா தேவியைக் கொடுக்கிறாயே, நீ சாப்பிடும் உணவு உனக்கு உவப்பாகுமா? என்பன போன்ற பல விடயங்களைச் சிந்திக்க, இந்தக் கோபல்ல கிராமம் வழிவிட்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். கடவுள் பற்றிய கற்பிதங்களோடுதான் கோபல்ல கிராமம் சார்ந்த கிளைக் கதைகள் இயங்குகின்றன. மற்ற மதத்தைவிட இந்துக்களின் சமயம் மிகப் பழமையானது; நிறையச் சடங்கு முறைகள் கொண்டதும், நிறைய மூட நம்பிக்கையும் கொண்டதுமான இந்துக்களின் தெய்வ வழிபாட்டு முறைகளையும் பண்டைய இலக்கியங்கள் சொல்லுக்கின்றன. அவையாவும் நாட்டுப்புற இலக்கியங்களின் எச்சங்கள் என்பது போல கோபல்ல மக்களின் வழிபாட்டு முறைகள் தெளிவுப்படுத்தியுள்ளன.

    • தண்டனை அளிக்கப்பட்ட கழுவன் இறந்த பிறகு, அவனுக்குக் கும்மியடி பாடலைப் பாடிய குழந்தைகளுக்கு சீக்கு வந்துவிட்டது. அதனால் சில குழந்தைகள் இறந்தார்கள். சிலர் தாங்க முடியாத காய்ச்சலில் படுத்துவிட்டார்கள். அதனால் அப்பிள்ளை மார்கள் கழுவனுக்கு நேர்ந்துகொண்டார்கள். பச்சேரி மக்கள் அங்கே புதைக்கப்பட்ட அந்த இருவரையுமே இப்பொழுது தேவதையாகக் கொண்டாடுகிறார்கள். பொங்கலிடுகிறார்கள். தங்கள் பெண் குழந்தைகளுக்கு கம்மாடச்சி என்றும் ஆண் குழந்தை பிறந்தால் கழுவன் என்றும் பெயர் சூட்டுகிறார்கள்5 (கோ.கி 1991:1).
    • சென்னா தேவி மரணத்தின் விளிம்பில் சிக்கிக் கொண்டிருக்கும் போது அவளது பாட்டி – மரணம் சம்பவித்துக் கொண்டிருக்கும்போது யாரும் அழக்கூடாது.. .. ஆத்மா பிரிந்து பயணப்படும் போது நாம் அழுதால் நம்முடைய கண்ணீர் அது சென்று கொண்டிருக்கும் வழியில் குறுக்கே வெள்ளம் போல் பரவிப் பெருகி அதனுடைய பயணம் தடைபட்டுப் போகும். ஆத்மா பிரிந்த பிறகு அழலாம்; பிரிந்து கொண்டிருக்கும் போது அழவே கூடாது”6 என்றாள் (மேலது, 1991:71).
    • சென்னா தேவியின் பாட்டிக்கு அருள் வந்தது – என் மக்களே, எங்கேயோ ஒரு தேசத்தில் பிறந்து, எங்கேயோ ஒரு தேசத்தில் வந்து வாழ வேண்டியதிருக்கிறதே என்று நீங்க நினைச்சி மனம் கலங்க வேண்டாம். எல்லாம் பூமித்தாயினுடைய ஒரே இடம் தான். அவளுடைய கையிலுள்ள ஒரு விரலிலிருந்து நீங்க இன்னொரு விரலுக்கு வந்திருக்றீக; அவ்வளவு தான். நீங்க ஒண்ணும் பயப்பட வேண்டியதில்லை. உங்களோடேயே சதா நா உங்களுக்குத் துணை இருப்பேன்7 என்று பாட்டி மூலம் கடவுள் சொன்னது (மேலது, 1991:69).
    • மங்கம்மாளுக்கு காரியம் முடிந்ததும் ஆசாரி யாருக்கும் தெரிவிக்காமல் நடையைக் கட்டினார். அப்போது கிருஷ்ணப்ப நாயக்கர் – “நீர் எங்கே போறதைப் பத்தியும் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை; இந்தத் தீட்டோடெ தலையிலெ தண்ணி விடாமெ, கொதிக்கிற வயிறோடெ எங்க கிராமத்தை விட்டுப் போறீரே. இது சரியா இருக்கா உமக்கு?”8 என்று வருத்ததுடன் கேட்டார். ராசாக்களே, என்னை தப்பிதமா நினைச்சிர வேண்டாம். உங்களுக்கு ஒரு குறையும் வராது என்று தனது பூணூலைத் தொட்டுத் தூக்கிக் காண்பித்துவிட்டு வேகமாக நடந்து போய்விட்டார்9 ஆசாரியார் (மேலது, 1991:114).

    எல்லா சமயத்திலும் கடவுள் உண்டு; நீதி உண்டு; நீதி இலக்கியங்களும் உண்டு. இவையனைத்துமே மனிதனுக்காக உருவாக்கப்பட்டது. ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும்? எப்படிச் சமூகத்தில் நிலைத்து வாழ வேண்டும்? என்பது போன்ற நீதி ஒழுங்கையும், மனித வாழ்க்கையில் ஏற்படும் மேடு பள்ளங்கள் பற்றியும் கூறுகின்றன; இன்பம் துன்பங்களை எவ்வாறு எதிர்கொள்வதற்கான நீதியைக் கடந்த தத்துவார்த்த வழிமுறைகளையும் நெறிமுறைகளையும் மனிதனுக்கு தக்கச் சமயத்தில் சொல்லி, நல்- வழிப்படுத்தும் நூல்கள் தமிழில் ஏராளம் உள்ளன. அதுபோல் கதைகள் மூலமாகவும் படைப்புகள் மூலமாகவும் மனிதனுக்கு நல்லறத்தைச் சொல்லும் படைப்பிலக்கியங்கள் தமிழில் உள்ளன. அதில் நாட்டுப்புற இலக்கியங்கள் தனி ‘வாடை’ உடையது. எழுத்திலக்கியங்கள் வராதபோது வாய்மொழி இலக்கியங்கள்தான் நமக்கு தாத்தா – பாட்டியாக இருந்திருக்கின்றன.

    பழமொழிகள் – விடுகதைகள் – பாடல்கள் – புராணங்கள் – இதிகாசங்கள்  இவையாவும் நமக்கு கிடைந்திருக்கும் தொன்மங்களாக இருக்கின்றன. நிறையப் புனைவுகள் கொண்டும் அதாவது கட்டுக்கதைகளாக இவை இருந்தாலும், அறக் கருத்துக்களை உள்ளடக்கியதாக இருக்கின்றன. யாவரையும் சுண்டி இழுக்கும் கதை பாங்கை நாட்டுப்புறக் கதைகளில் பார்க்க முடியும். கோபல்ல கிராமம் பொறுத்தவரை மேற்கண்ட அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கின்றன. வெறும் ரசனைக்கு மட்டும் இடம்கொடுக்காத கி.ரா. அந்த ரசனையோடுக் கூடிய நல்லறக் கருத்துக்களையும் வாசகர்கள் உள் வாங்க வேண்டும் என்கிற அவரது வயோதிகப் பருவம் எண்ணி இருக்க வேண்டும். தற்போது, 96 வயதை எட்டியிருக்கும் கி.ரா.விற்கு ஆடி அடங்கிவிட்டது இளமையும் துடிப்பும். ஆனால் அவரது கதையில் மட்டும் இவை துளிர்விட்டுக் கொண்டே இருக்கிறது. நாற்பது வயதில் அவர் கதை எழுத வந்த காலத்திலிருந்தே இத்தகைய சுபாவம் அவரது கதைகளில் இருப்பதை நாம் கவனிக்க முடியும். எல்லா சுகபோகத்தையும் கண்டவருக்கு ஏனோ வாழ்வில் ஏற்பட்ட சலிப்பா? பால்யத்தில் தவறவிட்டதை மீட்டெடுக்க தற்போது அசை போடுகிறாரா? இவர் அசை போடுவதெல்லாம் எழுத்துகளாகின்றன; கதைகளாகின்றன. கோபல்ல கிராம புதினமும் அப்படி அமைந்ததே. கோபல்ல கிராமத்திற்குத் தற்போதைய வயது நாற்பத்தொன்று.

    முதன்மைத் தரவு நூல்கள்:

    1. ராஜ நாராயணன், கி., 1991 (1976), கோபல்ல கிராமம், சிவகங்கை: அன்னம் வெளியீடு.
    2. ராஜ நாராயணன், கி., 1993 (1990), கோபல்ல புரத்து மக்கள், சிவகங்கை: செல்மா வெளியீடு.

    ==========================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    ஆய்வுக் கட்டுரையின் தலைப்பு, புதுமையானதாக இருக்கிறது. வழக்கமான சான்றுகள் காட்டுவது மட்டுமல்லாமல் இதில் ஆய்வாளர் ஓர் உரையாடலை முன்வைக்கிறார். உரையாடல் ஆய்வைத் தாண்டி புறம் போனாலும் ஆய்வாளர் தனது ஆய்வில் தெளிவாக இருக்கிறார். கோபல்ல கிராமத்தின் வரலாறும் அம்மக்களின் பின்புலமும் எடுத்துக் காட்டப்பட்டிருப்பது சிறப்பு.
    “எதையும் குறிப்பால் தெரிவிப்பதே படைப்பாளனின் காரியமாக இருக்கிறது. ஆகவே, இந்த நிலையைப் பார்க்கும்போது ஒவ்வொரு படைப்பாளனும் ஒரு ‘பெண்’ தன்மையோடுதான் இருக்கின்றான். அதனடிப்படையில் கி.ரா.வும் விதி விலக்கல்ல” இவ்வாறு படைப்பாளர்களைப் பொத்தம் பொதுவாகப் பெண் தன்மை கொண்டவர்கள் என்று வரையறை செய்வது ஏற்புடையதாக இல்லை.
    “இதையும் ஒரு நாவலாக ஏற்றிருக்கிறார்கள் என்பதுதான் தற்போதைய பல பேரின் அவாவாக இருக்கின்றது. அதற்கான காரணத்தையும் விடையையும் எடுத்துக் கூறுகிறது இக்கட்டுரை” இதில் ஆய்வாளர் சிறு குழப்பத்தை ஏற்படுத்தி விடுகிறார். கோபல்ல கிராமம் நாவல் இலக்கியத்தில் புதிய கதை கூறும் மரபைக் கொண்டது. இதனை நாவல் அல்ல என்று மறுத்தவர்கள் யார் யார், எங்கே மறுத்தார்கள்  என்ற விவரங்களை அடிக்குறிப்பாகத் தந்திருக்கலாம்.
    Share
  • விழு, எழு!

    விழு, எழு!

    நிர்மலா ராகவன்

    நலம்… நலமறிய ஆவல் – 160

    `எவ்வளவு நிதானமாகப் போனாலும், பாதியில் நின்றுவிடாதே! வெற்றி உனக்குத்தான்!’ ஆரம்பப் பள்ளியில் நாம் படித்த ஆமை-முயல் கதையில் வரும் நீதி இது. இதனை எத்தனைபேர் கடைப்பிடிக்கிறோம்?

    நடை பயில ஆரம்பிக்கும்போது பலமுறை விழுந்தாலும், யாரும் நடக்காமலேயே இருந்துவிடுவதில்லை.

    இதைத்தான் ஐன்ஸ்டீன் இப்படிச் சொல்கிறார்: “வாழ்க்கை மிதிவண்டிக்கு ஒப்பானது. ஒரே இடத்தில் நில்லாது, நகர்ந்துகொண்டே இருக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால், விழுந்துவிடுவோம்”.

    `ஏன் வெற்றி நம்மைக் கண்டு அஞ்சி விலகுகிறது?’ என்று காலங்கடந்து சிந்தனையை ஓடவிட்டால் எந்தப் பயனுமில்லை. `நேராகப் போனால், சுவரில்தான் முட்டிக்கொள்ள வேண்டும்!’ என்று தோன்றினால், அதைச் சுற்றி வேறு வழி இருக்கிறதா என்று ஆராய்வதுபோல், பிரச்னையை எப்படியெல்லாம் சமாளிக்க முடியும் என்ற யோசனை பலனளிக்கும்.

    தோல்வி நிரந்தரமில்லை என்று உணர்ந்தால் போதும். மனம் தளராது, நம் கனவுகளையோ, அதற்கான முயற்சிகளையோ கைவிடாது இருந்தால் வெற்றி நிச்சயம்.

    கதை

    அபியின் புக்ககத்தினர் `ஆயிரம் பொய்யைச் சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்து!’ என்பதை வேத வாக்காக பாவித்து நடந்துகொண்டிருந்தனர்.

    அப்பெண்ணின் நாத்தனார்கள், மைத்துனர் ஆகியவர்களின் வாழ்க்கை நரகமாக அமைந்திருந்தது. `இவள் மட்டும் மகிழ்ச்சியாக இருக்கலாமா?’ என்று எண்ணியதுபோல் அபியை ஆட்டிவைத்தார்கள்.

    பெரியவர்கள் நிச்சயித்த கல்யாணம் பொய்த்தால், அவர்களுக்குத்தான் மனவருத்தம், அவமானம் என்று ஏதேதோ குழப்பம் உண்டாக, தன்னால் இயன்றவரை எதிர்த்துப் பார்த்தாள் அபி. பலனில்லாது போக, எல்லா இடர்களையும் பொறுத்துப்போனாள். ஒரு தருணத்தில், இனி பொறுக்கவே முடியாது!’ என்று தோன்றிப்போயிற்று.

    ஒரு பூட்டைத் திறக்கவென சாவிக்கொத்தில் இருப்பவற்றில் சிலவற்றைப் பரீட்சித்து, முடியாவிட்டால் விட்டுவிடுவோமா? ஒன்று மாற்றி ஒன்றாக எல்லா சாவிகளைக் கொண்டும் முயற்சி செய்வோமே!

    அப்படித்தான் அபியும் யோசித்தாள்: இன்னும் என்ன செய்யலாம்?

    சண்டை பிடித்தால்தானே நிம்மதி கெடுகிறது! வீட்டில் எப்போதும்போல் பொறுமையைக் கடைப்பிடிக்க நிச்சயித்தாள். தான் நிம்மதியாகவே இருக்கக்கூடாது என்று நினைத்ததுபோல் நடந்துகொண்டவர்களின் உறவைத் துண்டித்தாள். ஒரு வழியாக, குடும்பத்தில் அமைதி நிலவியது.

    அபி செய்ததுபோல், இதுவரை துணிந்து செய்யாத முயற்சிகளில் இறங்கத் தயங்குவார்கள் பலர். அவை பலனளிக்காவிட்டால் என்ன செய்வது! `இப்போது சௌகரியமாகத்தானே இருக்கிறேன்!’ என்று ஒரே நிலையில் இருப்பார்கள்.

    “ஆரம்பிக்காதே! ஆரம்பித்தால், பாதியில் விடாதே!” (சீனப் பழமொழி).

    எதையாவது செய்ய ஆரம்பித்து, வெற்றி கைக்கெட்டும் தூரத்தில் இருக்கையில் அம்முயற்சியைக் கைவிட்டவர்கள்தாம் தோற்கிறார்கள் என்கிறார் தாமஸ் ஆல்வா எடிசன்.

    `நான் தோல்வியே அடைந்ததில்லை. ஒரு காரியத்தை எப்படியெல்லாம் செய்யக்கூடாது என்பதைத்தான் விதவிதமாகக் கற்றேன்!’ என்று, தோல்விகளை வெற்றியாக்கிய வித்தையை வேடிக்கையாகப் பகிர்ந்துகொள்கிறார் இவர்.

    இந்த மனநிலையால்தான், 1,093 மின்சாதனங்களைக் கண்டுபிடித்திருக்கிறார் — சில சமயம், குழுக்களுடன் இணைந்து. (அமெரிக்காவிலேயே மிக அதிகமான காப்புரிமை பெற்றவர் என்ற புகழுக்கு உரியவர் எடிசன்).

    `நம்மால் முடியுமா!’ என்ற அவநம்பிக்கையைப் பொய்க்கச் செய்தால், அது அளிக்கும் ஆனந்தமே தனிதான்.

    தோல்வி ஒவ்வொரு மனிதரையும் வெவ்வேறு விதத்தில் பாதிக்கிறது.

    தாம் தோல்வி அடையும்போது, அதற்கு வேறு எவரையாவது காரணம் காட்டித் தப்பித்துக்கொள்ள நினைப்பது கோழைத்தனம். இப்படிப்பட்டவர் முயற்சியில் தோற்கவில்லை. முயற்சியில் முழுமனதாக ஈடுபடவில்லை.

    எல்லா முயற்சிகளும் வெற்றியில்தான் முடியும் என்றில்லை. முதலாவதாக, எடுத்த காரியத்தில் திறமை இருக்கவேண்டும். வற்றாத ஆர்வம், அடுத்து வருவது.

    `முயலாமல் போய்விட்டோமே!’ என்ற வருத்தம் எதற்கு? முயற்சி செய்தபின் தோல்வியடைந்தால், `ஏதோ, நம்மால் முடிந்ததைச் செய்தோம்!’ என்ற திருப்தியாவது மிஞ்சும்.

    `இந்தக் காரியத்தைச் செய்ய நெடுநேரம் பிடிக்குமே!’ என்று தயங்குவார்கள் வேறு சிலர். காலம் எப்படியும் கடந்துதான் போகும். அதை ஆக்ககரமாகச் செலவழிக்கலாமே!

    இளமையில் தாங்கள் விரும்பியது கிடைக்காவிட்டால், அந்தக் கனவை பிள்ளைகளின்மூலம் நனவாக்கிக்கொள்ள நினைக்கிறார்கள் பெற்றோர் பலர்.

    “அவளுடைய நான்கு குழந்தைகளும் மருத்துவர்கள்!” என்று எங்கள் தோழியைப் பற்றி வியந்து கூறினாள் ஒருத்தி.

    பதிலுக்கு, “அவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்களோ?” என்று கேட்டேன். பெற்றோரது ஆசைகளைப் பூர்த்தி செய்வது கிடக்கட்டும், பிள்ளைகளுக்கென்று தனியாக மனம் இருக்காதா? அதில் வேறு எதிர்பார்ப்புகள் இருக்காதா?

    சிலர் ஏன் செய்கிறோம் என்று புரியாமலேயே ஒரு காரியத்தில் ஈடுபடுவார்கள். முழுமனதுடன் ஈடுபடாவிட்டால், காரியம் அரைகுறையாகத்தான் இருக்கும்.

    கதை

    திருமணம்தான் ஆகவில்லை, படித்தாவது வைக்கிறேனே!’ என்று மருத்துவரானவள் கற்பகம். புத்திசாலி. அத்துடன், சொந்தக் காலில் நிற்கவேண்டிய அவசியமும்கூட.

    ஆனால், அதற்கான பக்குவம் இருக்கவில்லை. இல்லாவிட்டால், நள்ளிரவில், `குழந்தைக்கு உடம்பு ரொம்ப மோசமாக இருக்கிறது, டாக்டர்!’ என்று வீட்டுவாசலில் நின்று பெற்றோர் கதற, `எனக்குத் தூக்கம் வருது!’ என்று இழுத்துப் போர்த்திக்கொள்வாளா?

    ஏன் விழுகிறோம்?

    முதலாவது முயற்சியில் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், அது தொடரும் என்பது நிச்சயமில்லை.

    ஒரே ஒரு கதை எழுதிவிட்டு, அது பத்திரிகையில் பிரசுரமும் ஆனபின், `நான் எப்படி எழுதினாலும் ஏற்றுக்கொள்வார்கள்!’ என்ற மிதப்புடன் கிறுக்கித் தள்ளினால் எப்படி!

    இந்த `உயர்ந்த’ மனப்பான்மை, எல்லா மனிதருக்கும் ஏற்படுவது. அதை எதிர்கொள்ள, அடுத்தடுத்து வரும் முயற்சிகளுக்காக இன்னும் கடுமையாக உழைக்க வேண்டுவது அவசியம்.

    தோல்வியை எவரும் விரும்புவதில்லை. அது ஏற்படும்போது, மனம் உடைந்துதான் போகும். ஆனால், விரக்தியிலேயே மூழ்கிவிடாது, சொற்ப காலம் கழித்து, வேறு முயற்சிகளில், அல்லது வெவ்வேறு விதமாக ஒரே முயற்சியில் ஈடுபட்டால் பலன் கிடைக்குமே!

    “நான் ஆங்கில தினசரிக்கு எத்தனையோ எழுதினேன். ஒன்றுகூட பிரசுரம் ஆகவில்லை!” என்று ஓர் இளம்பெண் என்னிடம் வருத்தத்துடன் தெரிவித்தாள்.

    இது சம்பந்தமாக, பிறர் என்னைக் கேட்டது: “உங்களுக்கு யாரைத் தெரியும்?”

    தெரிந்தவர் மூலம் வெற்றி அடைந்தால் அதனால் ஒருவர் பெருமைப்பட என்ன இருக்கிறது?

    கதை

    1990-இல், சிங்கப்பூரில் ஒரு விஞ்ஞானக் கண்காட்சியில், பிரா மாதிரியான ஒரு சாதனத்தை வைத்திருந்தார்கள்.

    `இதில் என்ன புதுமை?’ என்கிறீர்களா?

    இது ஆண்கள் அணிவது. உள்ளே குழந்தை குடிக்கும் பால் இருக்கும். அம்மா வீட்டில் இல்லாதபோது குழந்தை அழுதால், அப்பா இந்த சாதனத்தை அணிந்துகொண்டு, குழந்தையை `மார்புடன்’ அணைத்துப் பாலூட்டலாம்.

    `இச்செய்தியைப் படித்ததுமே, குமுதம்தான் நினைவில் எழுந்தது!’ என்று ஒரு கடிதத்தைத் தனியாக ஆசிரியருக்கு எழுதி, ஒரு குட்டிக் கதையையும் அனுப்பினேன். உடனே பிரசுரமானது, தினசரியில் வந்த படத்துடன்.

    எந்தப் பத்திரிகையில் எப்படி எழுதினால் ஏற்பார்கள் என்று புரிந்துகொள்ள அந்த அனுபவம் உதவியது.

    ஆன்மீகப் பத்திரிகைக்கு இந்தக் கதையை அனுப்பியிருக்க முடியுமா?

    Share
  • கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை!

    கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை!

    -நாகேஸ்வரி அண்ணாமலை

     

    நேத்தன்யாஹுவுக்கு மாபெரும் வெற்றியாகக் கருதப்பட்ட தேர்தல் வெற்றி இப்போது செல்லாததாகிவிட்டது.  மே மாதம் 29-ஆம் தேதி நள்ளிரவுக்குள் மந்திரிசபை அமைக்க வேண்டும் என்ற கெடு கடந்துவிட்டது.  அவருடைய கட்சிக்கு 35 இடங்கள் கிடைத்தன.  இன்னும் 26 இடங்களைப் பெற்று அமைச்சரவை அமைப்பதற்கு முடியாமல் போயிற்று. இஸ்ரேல் பார்லிமென்டில் மொத்தம் 120 இடங்கள்.  மந்திரிசபை அமைப்பதற்கு 61 இடங்களாவது வேண்டும்.  அதைக்கூட அவரால் பெற முடியவில்லை.  எப்படியோ முயன்று மற்றக் கட்சிகளோடு சேர்ந்து 60 இடங்களைப் பிடித்துவிட்டும் இன்னும் ஒரேயொரு சீட் வேண்டியிருந்ததால் மந்திரிசபை அமைக்க முடியாமல் போனது.  கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போயிற்று என்று சொல்வோமே அப்படித்தான் நடந்திருக்கிறது.

    நேத்தன்யாஹு மந்திரிசபை அமைக்க முடியாமல் போனதற்கு முக்கிய காரணம் ஒரு காலத்தில் அவருடைய மந்திரிசபையில் ராணுவ மந்திரியாகவும் உள்துறை மந்திரியாகவும் பதவி வகித்த லிபெர்மேன் என்பவர்.  மால்டோவாவிலிருந்து வந்து இஸ்ரேலில் குடியேறிய இவர்.  நேத்தன்யாஹுவுக்கு உதவியாளராக அரசியலில் நுழைந்து படிப்படியாக முன்னேறி இப்போது கட்சி ஒன்றை ஆரம்பிக்கும் அளவுக்கு அரசியலில் உயர்ந்திருக்கிறார்.  இப்போது நேத்தன்யாஹுவுக்கு மிகவும் வேண்டாதவராக மாறியிருக்கிறார்.

    நேத்தன்யாஹு மேல்மூன்று வழக்குகள் – ஊழல் புரிந்தது, லஞ்சம் வாங்கியது, நம்பிக்கைத் துரோகம் செய்ததுஎன்று பலவகைக் குற்றச்சாட்டுக்கள் – இருக்கின்றன.  இப்படி வழக்குகளில் சிக்கிக்கொண்டவருக்கு ஆதரவு கொடுக்க சிறிய கட்சிகள் எதுவும் முன்வரவில்லை.  இதைச் சாக்காக வைத்து நேத்தன்யாஹுவின் லிக்கூட் கட்சி மந்திரிசபை அமைத்து அவருக்கு முதல் மந்திரி ஆகும் வாய்ப்பைத் தடுத்து நிறுத்த முயல்கிறார் லிபெர்மேன் என்பது நேத்தன்யாஹுவின் வாதம்.

    அவருக்கும் நேத்தன்யாஹுவுக்கும் இடையே இன்னொரு பிரச்சினை இருக்கிறது.  இஸ்ரேலில் 18 வயது முடிந்த ஆண், பெண் அனைவரும் இரண்டு வருடங்களுக்கு கட்டாய ராணுவ சேவை செய்ய வேண்டும்.  யூத மத்தத்தின் வேதமான தோராவைப் படிப்பவர்களுக்கும் அதை மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பவர்களுக்கும் மாத்திரம் இதிலிருந்து விலக்கு உண்டு.  அவர்களுக்கு விலக்களிக்கத் தேவையில்லை என்று கூறி ஒரு சட்டத்தை இயற்ற லிபெர்மேன் ஒரு மசோதாவைக் கொண்டுவந்தார்.  இந்தச் சட்டம் நிறைவேறாமல் தடுக்கும் கூட்டணி அரசோடு எப்படி சேருவது என்பது லிபெர்மேனின் வாதம்.  இப்போது இவருக்குத் தனியாக ஒரு கட்சி இருக்கிறது.அந்தக் கட்சிக்கு ஐந்து இடங்கள் கிடைத்திருந்தது.  (இஸ்ரேலில் ஏகப்பட்ட அரசியல் கட்சிகள்)

    நேத்தன்யாஹு முதல் முறையாக 1996-1999 வரை இஸ்ரேல் பிரதம மந்திரியாக இருந்தவர்.  அதன் பிறகு 2009 முதல் மார்ச்சில் நடந்த தேர்தல்வரை பிரதம மந்திரியாக இருந்தவர். அடுத்த தேர்தல் நடக்கும்வரை இடைக்கால அரசின் பிரதமராக இருப்பார்.  தேர்தலில் 35 சீட்டுகளே பெற்ற இவர் மூன்று முறை பிரதமராக பதவி வகித்த பிறகு இப்போது முதல் முறையாக மந்திரிசபை அமைக்க முடியாமல் போனது.  இவரோடு கூட்டுச் சேர வந்த கட்சிகளின் மூலம் இவருக்கு 60 சீட்டுகள்தான் கிடைத்தது.  மே மாதம் 27 இரவு 12 மணிவரை இருந்த கெடுவிற்குள் இவரால மந்திரிசபை அமைக்க முடியாமல் போனதால் கெடு முடிந்தவுடனேயே பார்லிமென்டைக் கலைத்துவிட்டார்.  ஜனாதிபதி வேறு ஏதாவது கட்சியை மந்திரிசபை அமைக்க முயற்சிக்குமாறு கேட்டுவிடுவாரோ என்று நினைத்துத்தான் அவசரமாகப் பார்லிமென்டைக் கலைத்தார்.

    பார்லிமென்டைக் கலைத்துவிட்டு லிபெர்மேன் தன்னுடைய கூட்டணியில் சேர்ந்திருந்தால் தான் மந்திரிசபை அமைத்திருக்கலாம் என்றும் தனக்குப் பிரதம மந்திரி பதவி கிடைக்கக் கூடாது என்பதற்காகத்தன் அவர் நேத்தன்யாஹு கூட்டணியில் சேரவில்லை என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.

    மே மாதம் 30-ஆம் தேதி இரவு 12 மணியோடு அமைச்சரவை அமைக்க நேத்தன்யாஹுவுக்குக் கொடுத்த கெடு முடிந்துவிட்ட நிலையில் அன்று காலை ட்ரம்ப்பின் மருமகனும் மத்திய கிழக்கு ஆலோசகருமாகிய ஜேரட் குஷ்னரும் வெள்ளை மாளிகை அதிகாரியுமான ஜேஸன் கிரீன்ப்ளாட்டும் அடுத்த மாதம் பாஹ்ரைனில் நடக்கவிருக்கும் பாலஸ்தீன அமைதிக்கான திட்டங்களை வகுக்கப் போகும் மாநாட்டில் கலந்துகொள்ள ஜெருசலேம் வந்திருக்கிறார்கள்.  அப்போது இரவு கெடு முடிந்துவிட்டதைப் பற்றிக் குறிப்பிடுகையில்,‘நேற்று இரவு ஏதோ ஒரு சிறிய சம்பவம் நடந்திருக்கிறது.  அது பற்றி ஒன்றும் கவலையில்லை.  நாங்கள் தொடர்ந்து செயலாற்றுவோம்’ என்று நேத்தன்யாஹு குறிப்பிட்டார்.  காலை தொலைக்காட்சி அறிக்கையில் இஸ்ரேல் தான் இல்லாமல் இயங்க முடியாது என்பது போலவும் தனக்கு ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதின் ஆகிய இருவரின் ஆதரவு இருப்பது போலவும் பேசினார்.  தன்னுடைய சொந்த நலனுக்காக லிபெர்மேன் வலதுசாரி அரசைக் கவிழ்த்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்.  முன்னாள் ராணுவ அதிகாரியாக இருந்த கேன்ட்ஸ் கட்சியும் 35. சீட்டுகளைப் பெற்றிருக்கிறது.  நேத்தன்யாஹு பார்லிமென்ட்டைக் கலைக்காமல் இருந்திருந்தால் அவர் அமைச்சரவையை அமைத்திருக்கலாமோ என்னவோ.  நேத்தன்யாஹு மேல் வழக்கு நடக்கவிருப்பதால் நேத்தன்யாஹுவோடு சேர்ந்து அமைச்சரவை அமைக்க அவர் விரும்பவில்லை.

    செப்டம்பர் 17-ஆம் தேதிக்கு அடுத்த தேர்தல் நடப்பதாக இருக்கிறது.  சென்ற தேர்தலில் ஜெயித்திருந்தால் பதவியில் இருக்கும் பிரதம மந்திரியின் மீது குற்றம் சுமத்த முடியாது என்று ஒரு சட்டம் கொண்டுவர நேத்தன்யாஹு திட்டம் போட்டிருந்தார்.  இப்போது அது முடியாமல் போய்விட்டது.  இனி செப்டம்பர் 17 தேர்தலில் ஜெயித்தால் அதை முயன்று பார்க்கலாம்.  ஆனால் அதற்கு நேரம் இருக்கிறதா என்று தெரியவில்லை.  ஏனெனில் அக்டோபரில் நேத்தன்யாஹு மேல் இருக்கும் வழக்குகளை விசாரிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.  தேர்தலில் ஜெயித்தாலும் அந்தச் சட்டத்தைக் கொண்டுவருவதற்கு அவகாசம் இருக்குமா என்று தெரியவில்லை.

    இஸ்ரேலில் இன்னொரு தேர்தல் நடந்து யார் பதவிக்கு வரப் போகிறார்கள் என்பது ஒரு புறம் இருக்கட்டும்.  எல்லா அரசியல் தலைவர்களும் பாலஸ்தீனர்களுக்கு எதிராகத்தான் செயல்படுவார்கள்.  லிபெர்மேன் என்ன சொல்கிறார் தெரியுமா?  காஸாவை இன்னும் அதிகமாகத் தண்டிக்க வேண்டுமாம்.  இவர்கள் பயங்கரவாதிகள் என்று கணிக்கும் எல்லோருக்கும் மரண தண்டனை கொடுக்க வேண்டுமாம்.  இப்படித்தான் எல்லா இஸ்ரேல் தலைவர்களும் நினைக்கிறார்கள்.  யார் வந்தாலும் பாலஸ்தீனர்களுக்கு நியாயம் கிடைக்கப் போவதில்லை.  இஸ்ரேல் அரசியல் தலைவர்கள் மத்தியில் ஒரு காந்திஜி தோன்றினால்தான் பாலஸ்தீனர்களுக்கு நியாயம் கிடைக்கும்.

    Share
  • படக்கவிதைப் போட்டி – 214

    படக்கவிதைப் போட்டி – 214

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    கே.மோகன்தாஸ் எடுத்த இந்தப் படத்தை, சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் செவ்வாய்க்கிழமை (04.06.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-48

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-48

    நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-48

    48. வலியறிதல்

    குறள் 471:

    வினைவலியுந் தன்வலியும் மாற்றான் வலியும்
    துணைவலியுந் தூக்கிச் செயல்

    காரியத்தோட வலிமையும், அத செய்ய நெனக்குத தன்னோட வலிமையும், அத கெடுக்கணும்னு நெனக்கவன் வலிமையும்,  ரெண்டு பேருக்கும் தொணையா நிப்பாம்னு தோணுதவனோட வலிமையும் ஆராஞ்ச பொறவுதான்அந்த காரியத்த செய்யணும்.

    குறள் 472:

    ஒல்வ தறிவ தறிந்ததன் கண்தங்கிச்
    செல்வார்க்குச் செல்லாத தில்

    தன்னால முடியுத காரியத்த செய்யுமுன்ன அத செய்யுததுக்கு தேவையானத அறிஞ்சிக்கிட்டு பொறவு செய்ய முனஞ்சாம்னா அவனால முடியாததுனு எதுவும் இல்ல.

    குறள் 473:

    உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
    இடைக்கண் முரிந்தார் பலர்

    தன்னோட பலம் இவ்ளோதான்னு அறிஞ்சிக்கிடாம உணச்சி வசத்தால காரியத்த தொடங்கிப்போட்டு பொறவு பாதியில கெடப்புல போட்டு அழிஞ்சவங்க பலபேரு இருக்காக.

    குறள் 474:

    அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
    வியந்தான் விரைந்து கெடும்

    தன்னோட பலத்த உணந்துக்கிடாம, பிறத்தியாரோடயும்  ஒத்துப் போவாம தன்னையப் பத்தி பெரிசா நெனச்சி மண்டக்கனம் புடிச்சு அலையுதவன் வெரசலா அழிஞ்சு போவான்.

    குறள் 475:

    பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
    சால மிகுத்துப் பெயின்

    மயில் தோகதானே ன்னாலும் அளவுக்கு அதிகமா வண்டியில ஏத்தினா வண்டியோட அச்சு முறிஞ்சு போவும்.

    குறள் 476:

    நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
    உயிர்க்கிறுதி ஆகி விடும்

    மரத்தோட நுனிக் கொம்புல ஏறிக்கிட்டவன் அதுக்கும் மேல ஒசரத்துல ஏற மொனஞ்சாம்னா அது அவனோட உசிருக்கு முடிவா வந்து சேரும்.

    குறள் 477:

    ஆற்றின் அளவறிந் தீக அதுபொருள்
    போற்றி வழங்கு நெறி

    எதப் பொறத்தியாருக்கு குடுக்கும்போதும்  தன்னோட சம்பாத்யத்த அறிஞ்சிக்கிட்டு அளவா குடுக்கணும்.  அப்டி கொடுக்குததுதான் பொருளச் சேத்து காப்பாத்தி வச்சிக்கிட்டு குடுக்குத வழிமுறை.

    குறள் 478:

    ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை
    போகா றகலாக் கடை

    சம்பாத்யம் கொறச்சலா இருந்தாலும் வரம்பு மீறின செலவு இல்லாம இருக்குதது நல்லது.

    குறள் 479:

    அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
    இல்லாகித் தோன்றாக் கெடும்

    தன் சொத்தோட மதிப்ப அறிஞ்சுக்கிட்டு ஏத்தாப்போல வாழாதவனோட வாழ்க்க வளம் இருக்குதது போல தோணினாலும் இல்லாம அழிஞ்சு போவும்.

    குறள் 480:

    உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
    வளவரை வல்லைக் கெடும்

    தங்கிட்ட எம்புட்டு இருக்குனு பாராம மத்தவுகளுக்கு ஒதவி செஞ்சிக்கிட்டே இருக்கவனோட செல்வம் சுருக்க அழிஞ்சு போவும்.

    (அடுத்தாப்லயும் வரும்…)

    Share