(Peer Reviewed) கோபல்ல கிராமம்: வரலாற்றுக் கதை
ஏ. பிரேமானந்த்
முனைவர் பட்ட ஆய்வாளர்,
நவீன இந்திய மொழிகள் மற்றும் இலக்கியவியல் துறை,
தில்லிப் பல்கலைக்கழகம்,
தில்லி – 110 007.
மின்னஞ்சல்: epremanand87@gmail.com
“கோபல்ல கிராமம்: வரலாற்றுக் கதை”
சொல்லப்பட்ட, சொல்லாத, சொல்லத்துணிந்த அனைத்தையும் இழுத்துப் பிடித்து எழுதுவது, ஓர் அடங்காத காளை மாட்டிற்கு மூக்கணாங் கயிறுக் கட்டுகிற மாதிரி தற்போதைய ஆய்வுலகம் சென்றுகொண்டிருக்கிறது. எழுதுவது ஒன்று; செயலாக்கம் பெறுவது மற்றொன்று எனும் கால கட்டத்தில் நாம் இருக்கிறோம். பொதுவாக, அனைத்துப் பிரதிகளும் ஏதோ ஒரு கோட்பாட்டில் அடங்குவது தற்போது இயல்பாகிப் போன ஒன்று. அவ்வகையில் கரிசல் காட்டு எழுத்தாளரும் சாகித்திய அக்காதெமி விருதாளருமான கி. ராஜ நாராயணனும் ஒருவர். கி.ரா.வைப் பின் தொடர்ந்து வந்தவர்களும் வாசித்தவர்களும் ஓர் ஒழுங்கை கடைபிடிக்க முடியாது; அவற்றை நேர் நிரலில் எழுதவும் முடியாது. அது ஆய்வு வரையறையானாலும் சரி. மாட்டின் மடியைப் பிடிக்கப் போனவன் அதன் வாலைப் பிடித்தக் கதை மாறிதான் ஆகுமென்று அவரும், அவரது படைப்பும் ஓர் உதாரணம். படைப்பவர்களைவிட வாசிப்பவர்களே உலகில் நிரம்பிக் கிடக்கிறார்கள். படைப்பைப் பொறுத்து வாசகர்கள் அமைவார்கள்; வாசகர்களைப் பொறுத்தும் படைப்புகள் அமைவதுண்டு. இவ்விரு நிலையிலும் கி.ரா.வின் படைப்புகள் பொருந்தும். எல்லாப் பருவங்களிலும் (காலப் பருவங்கள் + மனிதப் பருவங்கள்) அவரது கதைகளை வாசிக்கலாம். அதாவது, மீசை வைத்தவனுக்கும் மீசையை மழித்தவனுக்கும் இவருடைய கதைகள் அல்லது எழுத்துகள் பொருந்தும். வெங்கட் சாமிநாதன் கூறுவது போல் –
“கி.ராஜநாராயணன் மற்றும் அவருடைய எழுத்துக்கள் பற்றிய அனைத்துமே, அவரை, நீட்டிய தன் கால்களை லேசாகப் பிடித்து விட்டுக்கொண்டே ஆச்சரியத்தால் அகல விரிந்த கண்களோடு சூழ்ந்திருக்கும் பேரக்குழந்தைகளுக்குக் கதை சொல்லுகின்ற பாட்டியாகவோ, அல்லது மூன்றாம் தலைமுறை வாலிபப் பிள்ளைகளுக்கு மத்தியில் அமர்ந்துகொண்டு, தன்னுடைய பழைய நாட்களை ஏக்கத்துடன் நினைவு கூர்ந்துகொண்டோ கண்களில் குறும்பு மின்னலிட ஏதாவது விரசமானவற்றைச் சொல்லி அவர்களுக்குக் கிளுகிளுப்பூட்டிக்கொண்டோ இருக்கும் தாத்தாவாகவோ தோற்றம் கொள்ளவைப்பனவாகவே இருக்கின்றன”1.(கோ.பு.ம 1993:2)
எனது வாலிபப் பருவம், அவரது வயோதிக்கப் பருவத்தில் எழுதப்பட்டு தற்போது வயோதிக்கப் பருவத்தை எதிர்நோக்கி, நாற்பத்தியொன்று ஆண்டுகள் கடந்துவிட்ட ‘கோபல்ல கிராமம்’ என்னும் இப்புதினமானது, மேற்கூறிய காரண அடிப்படையில் எழுதிய கட்டுரையுமாகும். இங்கு கி.ரா. பற்றி விமர்சன முறையில் எழுந்த கருத்தாக்கங்களை ஆய்வுக்கட்டுரை பாணியில் எடுத்துக்கூறும் விமர்சனக் கட்டுரையாகவும் எடுத்துக்கொள்ளலாம். முதுகலையில் கி.ரா.வுடைய ‘கோபல்ல கிராமம்’ எனக்குச் சிறப்புப் பாடமாக இருந்தது. வெறும் மதிப்பெண்ணுக்காக கி.ரா. எழுதிய ‘கோபல்ல கிராமம்’ என்னும் புதினத்தைப் படித்தேன். தற்போது அப்புதினத்திலே கட்டுண்டு கிடக்கும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொண்டதனால் எனது வாலிபம் மறைந்து வயோதிகப் பருவத்தை எய்தவனைப் போல இப்புதினக் கதைக் காட்சிகள் என் மனதில் நிரம்பிக் கிடக்கின்றன. இந்நூலின் மூன்றாம் பதிப்பில் (ஜூன் 1991) எம்.ஏ.நுஃமான் இப்புதினத்தைப் பற்றிக் கூறும்போது –
“இதிலே நிறைய சம்பவங்கள் வருகின்றன. ஏராளமான மனிதர்கள் வருகின்றார்கள். ஆயினும் இதிலே கதை என்று சொல்லக் கூடியதாக எதுவும் இல்லை. அதனால் கதாப்பாத்திரங்களும் இல்லை”2. (கோ.கி. 1991:1)
எல்லா சம்பவங்களும் நினைவில் நிற்க முடியாவிட்டாலும் சில சம்பவங்கள், சில கிளைக் கதைகள், சில கதா பாத்திரங்கள் வாசிப்பவரை முட்டாளாக்குவதில்லை. அவரவரது சூழலுக்கும் வயதிற்கும் எண்ணத்திற்கும் ஏற்ப அவை மாறுபடத்தான் செய்யும். அப்படியே விட்டாலும், என்னக் கதை என்பது பற்றியாவது புரிதல் வாசகரிடத்தில் இருக்கும். கோபல்ல கிராமத்தை வாசிக்கும் போதும் இதே நிலைபாட்டை நானும் அடைந்தேன். இருந்தும் கதையாசிரியர் பல்வேறு கதா பாத்திரத்தை வைத்து பல்வேறு சூழலில் அமைந்த நிகழ்வுகளைக் கதைகளாக அடுக்கிக்கொண்டு போகிறார். எல்லாமே நாட்டுப்புறக் கதைகள்தான். அதில் என்ன உண்மை இருக்கப் போகிறது; புனைவுகள்தான் அவையனைத்தும். இதில் என்ன ஆராய்ச்சி செய்வது? அப்படி ஆராய்ந்தால் மட்டும் புனைவுகள் உண்மைத் தன்மை பெற்றுவிடுமா? ஆராய்ச்சி என்பதே உண்மை நிலையை அறிதல் தானே என்கிற துணிவு வாசித்தபோது எனக்கு இருக்கத்தான் செய்தது.
‘கோபல்ல’ என்பது இவருடைய கிராமமான ‘இடைசெவலு’க்கு இவர் வைத்த கற்பனைப் பெயர் என்று, கி.ரா.வின் மற்றொரு படைப்பும் சாகித்திய அக்காதெமி விருதும் பெற்ற ‘கோபல்ல புரத்து மக்கள்’ என்னும் புதினத்தின் அணிந்துரையில் வெங்கட் சாமிநாதன் தெளிவுபடுத்துகிறார். அதோடு அவர் மேலும் கூறும்போது –
“ராஜ நாராயணன் தெலுங்கு பேசும் கம்மா வகுப்பினரைச் சேர்ந்தவர். இவர்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு முஸ்லீம் கொள்ளைக்காரர்களுக்குப் பயந்து ஆந்திராவிலிருந்து குடிபெயர்ந்து வந்தவர்கள். உள்ளூர்த் தமிழர்களோடு சில நூற்றாண்டுகளாக இவர்கள் கொண்டிருந்த சமூக உறவு இவர்களைத் தமிழ் வாழ்க்கைப் போக்கோடு இணைந்துவிட்டது”3. (கோ.பு.ம 1993:5)
மேற்சொன்ன வரலாற்றுச் சம்பவங்கள் இப்புதினத்தில் பார்க்க முடிகின்றன. இது ஒரு வெறும் கதையில்லை; கற்பனைக் கதையுமில்லை; உண்மைச் சம்பவங்கள் கோர்க்கப்பட்ட வரலாற்றுத் திரட்டு. அவைதாம் புனைவுகளாக எழுத்துகளில் வெளிதள்ளியுள்ளார் கி.ரா. படைப்பவர்கள் அனைவரும் உள்ளது உள்ளபடிச் சொல்லுவதுமில்லை; எழுதுவதுமில்லை. சிலர் கற்பனைகள் துணைக்கொண்டும், புனைவுகள் துணைக்கொண்டும் தான் படைக்கிறார்கள். இதில் உண்மைகள் புலப்படலாம்; புலப்படாமலும் போகலாம். எப்படியோ கதை ஒன்று வந்துவிட்டது என்கிற நினைப்பும் படைப்பவர்களுக்கு ஒரு விதத் திருப்தியைத் தந்துவிட்டால், அவர் என்ன நோக்கத்திற்காகப் படைத்தாரோ அது அவர் அறியாமல் அவருடனேயும் சமூகத்துடனேயும் செரிமாணமாகி விடுகின்றன. இதனை வாசகர்கள் புரிந்து கொள்கிறார்கள் என்பதெல்லாம் அடுத்தக்கட்ட விஷயம். எதையும் குறிப்பால் தெரிவிப்பதே படைப்பாளனின் காரியமாக இருக்கிறது. ஆகவே, இந்த நிலையைப் பார்க்கும்போது ஒவ்வொரு படைப்பாளனும் ஒரு ‘பெண்’ தன்மையோடுதான் இருக்கின்றான். அதனடிப்படையில் கி.ரா.வும் விதி விலக்கல்ல.
II
“தாய்” புதினத்தை எழுதிய மார்க்ஸிம் கார்க்கியும், “ஒரு நூறாண்டு காலத் தனிமை” என்னும் புதினத்தை எழுதிய கேப்ரியேல் கார்சியா மார்க்வெஸும் அவர்களுடைய தாத்தா – பாட்டி சொன்னக் கதைகள் வைத்தே புனைந்தார்கள்; புனைவு இலக்கியத்தையும் கண்டுணர்ந்தார்கள். ஆக உலகின் தலைச்சிறந்த படைப்பாளர்கள், கலைஞர்கள் அனைவருமே அவர்களின் கூட்டுக் குடும்பப் பின்னணியில் வாழ்ந்த, வளர்ந்த நிலையை இனம் கண்டு படைப்புகளில் எடுத்துரைக்கின்றார்கள் என்கிற கூற்றை கி.ரா.வுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். இவரும் எழுத்துலகிற்கு வரக் காரணமாக இருந்தவர்கள் இவருடைய தாத்தா – பாட்டி தான். அதன் விளைவே, இவர் எழுதியது ‘கோபல்ல கிராமம்’. சிறுவயதுப் பருவத்தில் நமக்கு தாத்தா – பாட்டி சொன்னக் கதைகள் எவ்வளவோ இருக்கின்றன. காலப் போக்கில் கூட்டுக் குடும்பம் சிதைந்து, தனிக் குடும்பமாக உருப்பெறும்போது தாத்தா – பாட்டிகளோடு அவர்களின் கதைகளும் மடிந்துவிடுகின்றன. அத்தகைய கதைகளை மீட்டெடுக்கும் சோதனை முயற்சி, இப்புதினத்தில் அமைந்திருப்பதை வாசிப்பவர்கள் அனைவரும் உணர்வார்கள்.
இப்புதினக் கதையை எடுத்துக் கூறுவது இக்கட்டுரையின் நோக்கமில்லை. இப்புதினத்தில் இடம்பெறும் கதைகள், கதை பாத்திரங்கள், வரலாற்று அடிப்படையில் கூறப்பட்ட உண்மைச் சம்பவங்கள் அல்லது உண்மைச் சம்பவங்களை வைத்து வரலாற்றை உருவாக்கிய நிலைபாடுகள் பற்றிக் கூறுவதாகும். கி.ரா. அத்தனை கிளைக் கதைகளையும் நிகழ்வுகளையும் ஏன் தனித்தனி சிறுகதையாக வடிக்காமல் ‘கோபல்ல கிராமம்’ என்னும் புதினத்தில் அனைத்தையும் கொண்டு வந்து சேர்ந்திருக்கிறார்? வாசிப்பவர்கள் சோம்பல் முறிக்கவே அவ்வாறு தொடர்பற்றும் படாமலும் இருக்கும் காட்சிகளை அமைத்தாரா? மனம் போன போக்கிலே கதை போகட்டும் என்று விட்டுவிட்டாரா? இப்படியான பல கேள்விகள் அறுபதுகளில் கேட்கப்பட்டதா? என்று தெரியாது. ஆனால், இதையும் ஒரு நாவலாக ஏற்றிருக்கிறார்கள் என்பதுதான் தற்போதைய பலபேரின் அவாவாக இருக்கின்றன. அதற்கான காரணத்தையும் விடையையும் எடுத்துக் கூறுகிறது இக்கட்டுரை.
கி.ரா.வின் தந்திர உத்தியை நாம் மதித்தாக வேண்டும். அவர் சொல்லவருவது வெறும் கதையையோ, வரலாற்றையோ அல்ல என்று முழுவதுமாக புறம் தள்ளிவிட முடியாது. ஆந்திரத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் பற்றியும் பேசுகிறார்; கோட்டையார் வீட்டையும் (அதன் உடன் பிறப்புகளையும் இத்துடன் சேர்ந்துக் கொள்ளலாம்) பேசுகிறார்; பிரிட்டிஷார் கிராமத்தில் நுழைந்த வரலாற்றையும் பேசுகிறார்; நாட்டுப்புற மருத்துவம் பற்றியும் பேசுகிறார். தனி நபர் (ஆண்+பெண்) பற்றியும் பேசுகிறார். இது போல எத்தனை எத்தனையோ விசயங்களைப் பேசி, கடைசியில் விக்டோரியா ராணியுடைய ஆட்சியில் கோபல்ல கிராமத்தை அடக்குகிறார். அவர் சொன்னக் கதைகளும் சம்பவங்களும் கதை பாத்திரங்களும் ஒரு நூலிழை போல ஒருவித இணைப்பில் இருப்பதை மறைத்து, வாசிப்பவரை உல்லாசப் பயணத்திற்கும் உரையாடுவதற்கும் கி.ரா. இடம் கொடுத்திருக்கிறார்; மற்றொரு புறத்தில் உலக நியதியை, அதன் விதியை ஒவ்வொரு தனி மனிதனும் உணர வேண்டும். வாழ்க்கையின் உண்மை நிலையைப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற அவருடைய அறக் கருத்தையும் இக்கதைகளில் கதை பாத்திரங்களைக் கொண்டு நிரப்பி விடுகிறார் என்பதுதான் உள்ளார்ந்த உண்மை.
III
இனக்குழுச் சமூகத்தில் தற்போதைய சமூக ஒழுங்கு இல்லையே தவிர, கூட்டு வாழ்க்கை இருந்தது; கூட்டின்பம் இருந்தது. சாதி – சமயம் – இனம் – நிறம் – பொருளாதார மதிப்பீடுகள் – ஆண் – பெண் வேறுபாடு இவையனைத்தையும் அத்தகைய சமூகத்தில் பார்க்க முடியாது. தொழில் அடிப்படையிலும் பிரித்தறிய முடியாது. அவர்களுக்கு உணவு – உடை – உறைவிடம் மட்டுமே பிரதானமாக இருந்தது. இதனைத் தாய்வழிச் சமூகமாக தற்போதைய திறனாய்வாளர்களும் ஆய்வாளர்களும் கூறும் வழக்கம் தமிழ்ச் சமூகத்தில் உண்டு. கோபல்ல கிராமமும் அப்படி அமைந்ததே. கதை தொடக்கமும் கதை முடிவும் ‘பெண்’ என்ற பாத்திரத்தை வைத்தே ஆசிரியர் புனைந்திருப்பதைப் பார்க்கும் போது, அந்தச் சமூகம் தாய்வழிச் சமூகமாக இருந்துள்ளதைக் காண முடிகிறது. பெண் சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கும் கோபல்ல கிராமம், அப்பெண்ணிற்கு எதிராகப் போர்க் கொடி தூக்கவும் துணிந்திருப்பதைக் கவனிக்க வேண்டும். இது ஒரு புறம் இருக்க, கதையில் கழுவன் ஆசாரி மனைவியைக் கொன்றதற்கு உடனே தண்டனை வழங்காமல், இடையில் சென்னா தேவிக்கும் துலுக்கு ராஜாவுக்கும் ஒரு முடிச்சுப் போடும் ஆசிரியர், மங்கத்தாயாரு அம்மாளுக்கும் கும்பினி வெள்ளைக் காரனுக்கும் ஒரு முடிச்சியையும் போடுகிறார். இந்த மூன்று முடிச்சுக் கதைச் சம்பவங்களும் ஓர் உண்மையை; தத்துவத்தை; நிலையாமையைச் சொல்லுகின்ற இணைப்புப் பாலமாக இப்புதினத்தில் அமைந்திருக்கின்றன.
- கழுவனுக்கோ ஆசாரி மனைவி மங்கம்மாள் அணிந்திருந்த பாம்படங்கள் நகை மீது ஆசை. அதனால்தான் கொள்ளை அடிக்கப்போனவன் கொலை செய்யும்படியானது.
- துலுக்கு ராஜாவிற்கோ சென்னா தேவி அழகின் மேல் ஆசை. அதற்கு உடன்பாடு இல்லை என்பதால் மக்கள் ராஜாவிற்குப் பயந்து புலம்பெயர்ந்தார்கள்.
- கும்பினி வெள்ளை அதிகாரிக்கோ நிலம் (மண்) மீது ஆசை. பெண் மீதோ, பொன் மீதோ ஆசை இல்லாததால் மங்கத்தாயாரு அம்மாள் கும்பினி அதிகாரிக்கு வெள்ளைக் கொடி அசைத்தாள்.
இந்த மூன்றுக் கதைச் சம்பவங்களும் பொன் – பெண் – மண் ஆகிய ஆசைகளைக் கொண்டுள்ளன. மேற்கண்ட கதை பாத்திரங்கள் இவைகளைக் கையகப்படுத்துவதால் ஏற்படும் இழப்பும் துன்பமும் கவலையும் மனிதனை ஆட்சி செய்யும் பொருள்களாக உருப்பெறுகின்றன. இத்தகைய ஆசைகள் மனிதனுக்கு அழிவைத் தரும். அது நிலையாமையை உடையது. அவற்றை மனிதன் உதறித் தள்ள வேண்டும் என்கிற நோக்கமே கோபல்ல கிராமம் உருவாகக் காரணமாக இருந்திருக்க வேண்டும். கி.ரா. மேலும் மற்றொரு தந்திரத்தை கோபல்ல கிராமத்தில் புகுத்தியுள்ளதையும் அவதானிக்கலாம். நாட்டுப்புற வாழ்வோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்ட கி.ரா. அவரது எழுத்துகளிலும் கதைகளிலும் அவ்வண்ணமே செயல்படுகிறார் என்பதை இப்புதினம் உதாரணம் காட்டுகிறது. நாட்டுப்புறத்தில் வசிப்பவர்கள் பெரும்பாலும் இந்துக்களாக இருக்கிறார்கள். அவர்கள் வழிபடும் தெய்வங்கள் இந்துத் தெய்வங்களாக இருக்கின்றன. அப்படியென்றால், நாட்டுப்புறம் என்றாலே இந்து மதச் சார்புடையவர்களுக்கு மட்டும் தானா? முஸ்லீம்களுக்கும் (இஸ்லாம்) கிறித்துவர்களுக்கும் இல்லையா? என்கிற கேள்வியைக் கோபல்ல கிராமம் எழுப்புகிறது.
“ஆந்திர தேசத்திலிருந்து கம்மவார் மட்டும் இங்கே வரவில்லை. ரெட்டியார், கம்பளத்தார், செட்டியார், பிராமணர், பொற்கொல்லர், சக்கிலியர் இப்படி எத்தனையோ”4 (கோ.கி 1991:23)
என்று குறிப்பிடும் கி.ரா. முஸ்லீம்கள் பற்றியும், கிறித்துவர்கள் பற்றியும் கூறவில்லை. இப்புதினத்தில் தனி நபர்களாகக் குறிப்பிடப்படுபவர்கள் அனைவரும் இவர் சாதியைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அதாவது, கம்மவார் சாதியைச் சேர்ந்தவர்கள். ‘கோவிந்தப்ப நாயக்கர்’, ‘கிருஷ்ணப்ப நாயக்கர்’, ‘கோவப்ப நாயக்கர்’,’ ராமப்ப நாயக்கர்’, ‘தாசப்ப நாயக்கர்’, ‘சுந்தரப்ப நாயக்கர்’, ‘கண்ணப்ப நாயக்கர்’ போன்றோர் செல்வந்தர்கள்; கோட்டையார் வீட்டு வாரிசுகள். இவர்களைச் சுற்றியே எல்லா கதைகளும் இடம்பெறுகின்றன. இவர்களைப் போலவே மற்ற தனி நபர்களும், ‘கோழி மயிர் சின்னைய்ய நாயக்கர்’, ‘மண்ணுதிண்ணி ரெங்கய்ய நாயக்கர்’, ‘நல்ல மனசு திரவத்தி நாயக்கர்’, ‘பொடிக்கார கெங்கா நாயக்கர்’, ‘காரவீட்டு லெச்சுமண நாயக்கர்’, ‘பொறை பங்காரு நாயக்கர்’ போன்றோரும் அதே சாதியை, சமயத்தை உடையவர்களாகவும் இருக்கிறார்கள். மற்ற சமயம், சாதியைச் சேர்ந்தவர்கள் கதைகளில் முக்கியத்துவம் பெறவில்லை.
IV
கழுவன் – மங்கம்மாள் கதையாகட்டும்; சென்னா தேவி கதையாகட்டும்; இன்ன பிற கதைகளையும் சேர்த்துப் பார்த்தால் இந்துக்கள் மட்டும் இடம்பெறும் கதைகளாகவே புலப்படுகின்றன. சென்னா தேவியோடு மொத்த மக்களும் புலம்பெயரக் காரணமாக இருந்தது சென்னா தேவியின் அழகு மட்டுமன்று; அவர்களுடைய மதமும், சமயமும்தான் காரணம். பெருமாளை வழிபடுவதால் அவர்கள் வைணவராக இருந்திருக்க வேண்டும் (தற்போதைய நிலை வேறு). முஸ்லீம் ராஜாக்கள் மதம் வேறு; சமயம் வேறு; கடவுள் வேறு; உணவும் வேறாக இருக்கின்றன. வயதான ராஜாவுக்கு பதினைந்து வயதுடைய சென்னா தேவியைக் கொடுக்கிறாயே, நீ சாப்பிடும் உணவு உனக்கு உவப்பாகுமா? என்பன போன்ற பல விடயங்களைச் சிந்திக்க, இந்தக் கோபல்ல கிராமம் வழிவிட்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். கடவுள் பற்றிய கற்பிதங்களோடுதான் கோபல்ல கிராமம் சார்ந்த கிளைக் கதைகள் இயங்குகின்றன. மற்ற மதத்தைவிட இந்துக்களின் சமயம் மிகப் பழமையானது; நிறையச் சடங்கு முறைகள் கொண்டதும், நிறைய மூட நம்பிக்கையும் கொண்டதுமான இந்துக்களின் தெய்வ வழிபாட்டு முறைகளையும் பண்டைய இலக்கியங்கள் சொல்லுக்கின்றன. அவையாவும் நாட்டுப்புற இலக்கியங்களின் எச்சங்கள் என்பது போல கோபல்ல மக்களின் வழிபாட்டு முறைகள் தெளிவுப்படுத்தியுள்ளன.
- தண்டனை அளிக்கப்பட்ட கழுவன் இறந்த பிறகு, அவனுக்குக் கும்மியடி பாடலைப் பாடிய குழந்தைகளுக்கு சீக்கு வந்துவிட்டது. அதனால் சில குழந்தைகள் இறந்தார்கள். சிலர் தாங்க முடியாத காய்ச்சலில் படுத்துவிட்டார்கள். அதனால் அப்பிள்ளை மார்கள் கழுவனுக்கு நேர்ந்துகொண்டார்கள். “பச்சேரி மக்கள் அங்கே புதைக்கப்பட்ட அந்த இருவரையுமே இப்பொழுது தேவதையாகக் கொண்டாடுகிறார்கள். பொங்கலிடுகிறார்கள். தங்கள் பெண் குழந்தைகளுக்கு கம்மாடச்சி என்றும் ஆண் குழந்தை பிறந்தால் கழுவன் என்றும் பெயர் சூட்டுகிறார்கள்”5 (கோ.கி 1991:1).
- சென்னா தேவி மரணத்தின் விளிம்பில் சிக்கிக் கொண்டிருக்கும் போது அவளது பாட்டி – “மரணம் சம்பவித்துக் கொண்டிருக்கும்போது யாரும் அழக்கூடாது.. .. ஆத்மா பிரிந்து பயணப்படும் போது நாம் அழுதால் நம்முடைய கண்ணீர் அது சென்று கொண்டிருக்கும் வழியில் குறுக்கே வெள்ளம் போல் பரவிப் பெருகி அதனுடைய பயணம் தடைபட்டுப் போகும். ஆத்மா பிரிந்த பிறகு அழலாம்; பிரிந்து கொண்டிருக்கும் போது அழவே கூடாது”6 என்றாள் (மேலது, 1991:71).
- சென்னா தேவியின் பாட்டிக்கு அருள் வந்தது – “என் மக்களே, எங்கேயோ ஒரு தேசத்தில் பிறந்து, எங்கேயோ ஒரு தேசத்தில் வந்து வாழ வேண்டியதிருக்கிறதே என்று நீங்க நினைச்சி மனம் கலங்க வேண்டாம். எல்லாம் பூமித்தாயினுடைய ஒரே இடம் தான். அவளுடைய கையிலுள்ள ஒரு விரலிலிருந்து நீங்க இன்னொரு விரலுக்கு வந்திருக்றீக; அவ்வளவு தான். நீங்க ஒண்ணும் பயப்பட வேண்டியதில்லை. உங்களோடேயே சதா நா உங்களுக்குத் துணை இருப்பேன்”7 என்று பாட்டி மூலம் கடவுள் சொன்னது (மேலது, 1991:69).
- மங்கம்மாளுக்கு காரியம் முடிந்ததும் ஆசாரி யாருக்கும் தெரிவிக்காமல் நடையைக் கட்டினார். அப்போது கிருஷ்ணப்ப நாயக்கர் – “நீர் எங்கே போறதைப் பத்தியும் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை; இந்தத் தீட்டோடெ தலையிலெ தண்ணி விடாமெ, கொதிக்கிற வயிறோடெ எங்க கிராமத்தை விட்டுப் போறீரே. இது சரியா இருக்கா உமக்கு?”8 என்று வருத்ததுடன் கேட்டார். “ராசாக்களே, என்னை தப்பிதமா நினைச்சிர வேண்டாம். உங்களுக்கு ஒரு குறையும் வராது என்று தனது பூணூலைத் தொட்டுத் தூக்கிக் காண்பித்துவிட்டு வேகமாக நடந்து போய்விட்டார்”9 ஆசாரியார் (மேலது, 1991:114).
எல்லா சமயத்திலும் கடவுள் உண்டு; நீதி உண்டு; நீதி இலக்கியங்களும் உண்டு. இவையனைத்துமே மனிதனுக்காக உருவாக்கப்பட்டது. ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும்? எப்படிச் சமூகத்தில் நிலைத்து வாழ வேண்டும்? என்பது போன்ற நீதி ஒழுங்கையும், மனித வாழ்க்கையில் ஏற்படும் மேடு பள்ளங்கள் பற்றியும் கூறுகின்றன; இன்பம் துன்பங்களை எவ்வாறு எதிர்கொள்வதற்கான நீதியைக் கடந்த தத்துவார்த்த வழிமுறைகளையும் நெறிமுறைகளையும் மனிதனுக்கு தக்கச் சமயத்தில் சொல்லி, நல்- வழிப்படுத்தும் நூல்கள் தமிழில் ஏராளம் உள்ளன. அதுபோல் கதைகள் மூலமாகவும் படைப்புகள் மூலமாகவும் மனிதனுக்கு நல்லறத்தைச் சொல்லும் படைப்பிலக்கியங்கள் தமிழில் உள்ளன. அதில் நாட்டுப்புற இலக்கியங்கள் தனி ‘வாடை’ உடையது. எழுத்திலக்கியங்கள் வராதபோது வாய்மொழி இலக்கியங்கள்தான் நமக்கு தாத்தா – பாட்டியாக இருந்திருக்கின்றன.
பழமொழிகள் – விடுகதைகள் – பாடல்கள் – புராணங்கள் – இதிகாசங்கள் இவையாவும் நமக்கு கிடைந்திருக்கும் தொன்மங்களாக இருக்கின்றன. நிறையப் புனைவுகள் கொண்டும் அதாவது கட்டுக்கதைகளாக இவை இருந்தாலும், அறக் கருத்துக்களை உள்ளடக்கியதாக இருக்கின்றன. யாவரையும் சுண்டி இழுக்கும் கதை பாங்கை நாட்டுப்புறக் கதைகளில் பார்க்க முடியும். கோபல்ல கிராமம் பொறுத்தவரை மேற்கண்ட அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கின்றன. வெறும் ரசனைக்கு மட்டும் இடம்கொடுக்காத கி.ரா. அந்த ரசனையோடுக் கூடிய நல்லறக் கருத்துக்களையும் வாசகர்கள் உள் வாங்க வேண்டும் என்கிற அவரது வயோதிகப் பருவம் எண்ணி இருக்க வேண்டும். தற்போது, 96 வயதை எட்டியிருக்கும் கி.ரா.விற்கு ஆடி அடங்கிவிட்டது இளமையும் துடிப்பும். ஆனால் அவரது கதையில் மட்டும் இவை துளிர்விட்டுக் கொண்டே இருக்கிறது. நாற்பது வயதில் அவர் கதை எழுத வந்த காலத்திலிருந்தே இத்தகைய சுபாவம் அவரது கதைகளில் இருப்பதை நாம் கவனிக்க முடியும். எல்லா சுகபோகத்தையும் கண்டவருக்கு ஏனோ வாழ்வில் ஏற்பட்ட சலிப்பா? பால்யத்தில் தவறவிட்டதை மீட்டெடுக்க தற்போது அசை போடுகிறாரா? இவர் அசை போடுவதெல்லாம் எழுத்துகளாகின்றன; கதைகளாகின்றன. கோபல்ல கிராம புதினமும் அப்படி அமைந்ததே. கோபல்ல கிராமத்திற்குத் தற்போதைய வயது நாற்பத்தொன்று.
முதன்மைத் தரவு நூல்கள்:
- ராஜ நாராயணன், கி., 1991 (1976), கோபல்ல கிராமம், சிவகங்கை: அன்னம் வெளியீடு.
- ராஜ நாராயணன், கி., 1993 (1990), கோபல்ல புரத்து மக்கள், சிவகங்கை: செல்மா வெளியீடு.
==========================================
ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):
இதழாசிரியருக்கு வணக்கம்.
தங்கள் இதழில் எனது ஆய்வுக்கட்டுரை வெளியிட்டமைக்கு நன்றி. கட்டுரையின் விமரிசனமும் எனது அடுத்து வெளியாகும் கட்டுரைகளுக்கு மிகவும் ஒத்தாசையாக இருக்கும்.
பேரன்புடன்,
ஏ.பிரேமானந்த்
புது தில்லி.