படக்கவிதைப் போட்டி – 215

அன்பிற்கினிய நண்பர்களே!
கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
பார்க்கவ் கேசவன் எடுத்த இந்தப் படத்தை, சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (09.06.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்
கேட்குமா…
மரங்களை வெட்டி
மனிதன்
மழையைத் தடுத்துவிட்டான்..
காட்டைக் கொளுத்தி
கொக்கின்
கூட்டைக் கலைத்துவிட்டான்..
மீன்கள் வாழும்
குளங்களைத் தூர்த்தே
மாடிவீடுகள் கட்டிவிட்டான்,
கொக்கின் பிழைப்பில்
மண்ணைப் போட்டுவிட்டான்..
பட்டமரக் கிளையிலிருந்து
கொக்கு
பட்ட பாட்டைக்
கூறுவது
கேட்குமா மனிதன்
காதுகளில்…!
செண்பக ஜெகதீசன்…
காத்திருத்தலின் ஆதீத சுகத்தில்
போனவைத் திரும்புவதில்லை
வருவதில் பற்றற்ற எதிர்ப்பார்ப்பில்
தனித்து அலைந்து திரிதலில்
அலுப்பேதும் அருகில் இல்லை
கூட்டமாகப் பறந்து திரிந்தாலும்
தனி யுலகின் ஏமாற்றங்களும் யதார்த்தங்களும்
யார் மீதும் குறை சொல்லாத
வாழ்தலின் நிறைவு
நாளையப் பறத்தலின் நம்பிக்கையில்!
கொக்கு ஒன்று காத்திருக்குது
அதற்கு பரிச்சியமில்லா உலகம்.
நீர்நிலை தேங்க இயலா நிலம்;
அக்னிப் பிழம்பில் சுட்டுப்போன சுடுவெளி;
இலைகளும் தழுவாத பட்டை மரம்;
பசுந்துளிர்களை பறிகொடுத்த கிளைகள்
மலர்களின் மணம் பரப்ப மறந்து போனாலும்,
என்றோ வரப்போகும் வசந்தத்தை வரவேற்று
வெள்ளத்து நீரில் புரண்டு வரப்போகும்
உறுமீனுக்கென
பாவம் கொக்கு ஒன்று காத்திருக்குது.
தனிமை
நினைவுகளின் சாரலில்
சிறகடிக்கிறேன்
தனிமையின் தாகம் தனிக்க
நினைவுகளின் ஈரமே மிச்சம்.
வசந்தகாலங்கள் வாசல் தெளிக்க
வண்ணமயில்கள் கோலமிட
வண்டுகளும் பூச்சிகளும்
ரீங்காரமிட
காகம் கரைய
பருந்து வட்டமிட
ஆந்தையின் அலறலில்
அறிவிப்புமணி அலறடிக்க
மைனாவின் மெல்லிசை
தேன் சிந்த
வானரங்களும் வௌவால்களும்
களிநடனமாட
நரியின் ஊளையிலும்
புலியின் உறுமலிலும்
புள்ளி மான்கள் பாய்ந்தோட
விண்ணை பிளக்கும்
யானையின் பிளிரலையடுத்து
சிங்கத்தின் கர்ஜனையில்
நிசப்தம் சிறிது நீடிக்கும்
ஆரவாரம் மீண்டும் ஆர்பரிக்கும்
அருவியின் வீழ்ச்சியும்
ஓடிய நீரோடைகளும்
தேங்கிய குன்றுகளும்
பசையற்று போனதேனோ…?
வனத்தின் வாரிசுகள்
தாகவேட்கையில் திரிவதேனோ….?
அறிவற்ற மனித மிருகத்தின்
மரங்கள் வேட்டைதான் காரணமோ…
நீர் நிலையில் ஊன்றிய
என் கால்களும்
மீன்களை நோக்கிய
என் கழுத்தும்
மழையின் வரவை நோக்கி
பட்டமரத்தில் உச்சிகிளையில்
விண்ணை நோக்கிய
காத்திருப்பு மென்மேலும் தொடர்கிறது…..
இலைகள் எல்லாம் கிளைகளின் உறவறுத்தாயிற்று.. பசுந்தளிர்களை மீண்டும் பிரசவிக்க இயலாது பட்டமரமாயிற்று…. இருந்தும் …….. வெள்ளை நிற பூவொன்று இங்கே விரிந்திருக்கும் விந்தையென்ன…? முற்றும் இழந்த பின்னும் கிளை கொக்கை தாங்கி நிற்கும் கோலம் புரிகிறதா..? மரம் இறந்தும் வாழ்கிறது.. மனிதம் இரக்கமின்றி சாகிறது.
சத்யா