சேக்கிழார் பா நயம் – 39

திருச்சி புலவர் இராமமூர்த்தி
தில்லையின் எல்லையிலே நின்ற சுந்தரர் , திருக்கோயிலுக்குள் நுழையத் தலைப்பட்டார்.அங்கேவந்தவருக்குஅன்னம்பாலிப்பும்,குடிக்கத்தக்க குளிர்நீரும் வழங்கும் சாலைகள் மிகுந்த, உலகின் அழகெல்லாம் திரண்ட திருவீதிக்குள் புகுந்தார். அங்கே திருமால் ,அயன். மறறும்தேவர்கள், முனிவர்கள் திரண்டு நெருங்கி உட்புக முயன்றனர். அவர்களுள் பக்தி வயப்பட்ட, தகுந்த சிவனடியார் மட்டுமே அனுமதிக்கப்பெற்றார்கள். கணநாதர் போன்றோர் வணங்கிஉள்ளேபுகுந்தனர்! பொன்னால் வேயப்பட்ட ஒளிமிகுந்த பேரம்பலத்தைக் கடந்து , சிற்றம்பலத்தின் அணுக்கன் திருவாயிலை அடைந்தார். அவ்வாயில் அடியார்கள் சிந்தையில் வேதத்தின் பெருமையைப் அவர்கள் கூறும் பிரணவத்தால் உணர்த்தி நிற்கிறது.
சிந்தை என்பதற்குச் சீவனென்றும், சீவனுக்குச் சிந்தை என்றும் வந்திடும். சிந்தை – சிவஞானத்தால் விளங்கிய ஆன்ம அறிவு என்க. அவ்வறிவினுள்ளே விரிந்து விளங்கும் திருச்சிற்றம்பலத்திலே இறைவன் பிண்டத்துச் செய்யும் திருக்கூத்து நிகழும். அவ்வானந்தக் கூத்தை அவ்வியல்பிற் கும்பிட்டுச் சிவபோதத்தாலே அருளிய தமிழ் மறைகளின் முத லிடை கடைகளிலே பிரண வத்தினுட்பொருளாகிய ‘திருச்சிற்றம்பலம்’ என்பதைக் கூறித் தொடங்குதலும் முடித்தலும் அமைவுடைத்து என்பது பெரியோர் துணிபு. திருச்சிற்றம்பலம் – சிறுமை – அம்பலம் என்ற இருசொற் புணர்ந்த தொடர்மொழி. சிறுமை – இங்கு நுண்மை – (சூக்குமம்). சிவசத்தியை நோக்க மற்ற இருவகை மாயா காரியப் பொருளுந் தூலப் பொருள்களேயாம். தடையிலா ஞானமாகிய சிவசத்தி சொரூபமே அம்பலமாகலின் அது சிற்றம்பலம் எனப்பெறும். இச்சிறுமையை வடநூலார் தகரம் என்ப. – திருவளர் ஒளிசூழ் திருச்சிற்றம்பலம்முன் அணுக்கன் திருவாயில் புகுந்தார் என்பதாம். சுழுமுனையைக் கடந்து அதன்மேல் விளங்குவது சிவஞான ஒளியாதலின் மேருவலங் கொண்டு சிற்றம்பல வாயில் புகுந்தார் என்று கூறியவாறு.
மறையின் முதல் – நடு – கடைகளில் அலர்ந்த – திருச்சிற்றம்பலம் பிரணவ உருவமாய் விளங்குதலாலும், அது சமட்டி – சேர்ந்தநிலை – ஓம், வியட்டி – பிரிந்தநிலை – அ – உ – ம் என்ற இரண்டு நிலையிலும் வேதங்களில் முதல் நடு முடிவுகளில் அமைந்து உச்சரிக்கப்படுதலாலும் இவ்வாறு கூறினார். வியட்டி நிலையில் – அகாரம் இருக்கு வேதத்தின் முதலிலும் (அக்நி மீளே), உகாரம் எசுர்வேதத்தின் நடுவிலும் (யோநிஸ் சமுத்திரோபிந்து), மகாரம் சாமவேதத்தின் முடிபிலும்….(சமாநம்வரம்) விளங்குவதென்று பெரியோர் கூறுவர். தகராகாயத்தைக் குறிக்கும் தகரத்தோடு ஓ என்ற உயிர் கூடிய தோ – (தோடு உடைய) என்று தொடங்கிய தெய்வத்தமிழ்த் திருமுறை, உலகெலாம் என்றதில் ம் என்றதுடன் முடிபு பெற்றிருத்தலும் இங்கு உணரத்தக்கது.
திருவணுக்கள் திருவாயில் – இறைவன் ஆடுமிடத்திற் கருகில் உள்ளது. இதற்கப்புறம் வேறு வாயில்கள் இல்லை. அகத்தும் புறத்தும் இறைவனைக் காணக் கடந்துசெல்ல வேண்டிய எண்ணிறந்த வாயில்களிலே உள்ளிருந்து கணக்கிடும்போது முதற் றிருவாயில். அணுக்கத் தொண்டர்களே உட்புகக் கூடியதாதலின் இப்பெயர் பெற்ற தென்றலுமாம். இது அம்பலஞ் சூழ்ந்த மாளிகைப் பத்தியிற் கிழக்குத் திருவாயில் போலும். என்றெல்லாம் உரைகாரர்கள் விளக்குவர்!
இப்பாடலில் சிவபெருமான் ஆடும் திருக்கூத்தின் வகைகளை முதலில் விளக்குகிறார்!
உயிர்களை ஆட்டுவிக்கும் இறைவன் தாமே ஆடுகின்றார்! அவ்வாறு ஆடும் ஆட்டம் சில வகைப்படும். மாலும் அயனும் தேட அண்ணாமலையாய் ஆடிய ஆட்டம், அண்டத்தில் வையகம் பொலிய ஆடும்ஆட்டம், சிலம்பொலிக்க ஆடும்ஆட்டம், தில்லைமன்றினுள்ளே ஆடிய ஆட்டம், சிவஞானத்தால் விளங்கிய ஆன்ம அறிவினுள்ளே விரிந்து விளங்கும் திருச்சிற்றம்பலத்திலே இறைவன் பிண்டத்துச் செய்யும் திருக்கூத்து நிகழும். இத்திருக்கூத்து இதயத்துள்நிகழும்! இதனைத் திருவள்ளுவர், ‘’மலர்மிசை ஏகினான் ‘’ என்ற திருக்குறளில்கூறுவார். பரிமேலழகர், ‘அன்பானினைவாரது உள்ளக் கமலத்தின்கண் அவர் நினைந்தவடிவோடு விரைந்து சேறலின்’ என்ற உரை கூறியது காண்க, அப்பரடிகள்,
நாடி நாரண னான்முக னென்றிவர்,
தேடி யுந்திரிந் துங்காண வல்லரோ,
மாட மாளிகை சூழ்தில்லை யம்பலத்,
தாடி பாதமென் னெஞ்சு ளிருக்கவே“
என்று பிரித்துக் காட்டுவார். திருச்சிற்றம்பலம் இதயத் தானமாவதும் உணர்க.. இதனையே சைவசித்தாந்தம் ஞான நாடகம், ஊனநாடகம் என்றுகூறும் .
‘’வையகம் பொலிய’’ என்றதொடர் இன்பத் துன்பங்களாகிய போகங்களை மட்டும் நுகர்தற்கிடமாகிய சுவர்க்க , நரக உலகங்கள் போலாது, சிவகருமஞ் செய்து முத்தி யடைதற்குரிய இடமாகிய வையகம் பொலிய எனப்பொருள் படும் . தேவர்கள் இதைக்காணவேபூமியில் பிறக்க விரும்புவர் இதனை,
‘’புவனியில் போய்ப் பிறவாமையில் நாள் நாம்
போக்குகின்றோம் அவமே, இந்தப்பூமி
சிவன் உய்யக் கொள்கின்றவாறு’’
என்று மாணிக்கவாசகர் பாடுகின்றார்!
இனி, ‘’மறைச் சிலம்பு அரற்ற ‘’ என்ற தொடரால், உலகத்தோற்றத்துக்கு உரிய காரணத்தைச் சேக்கிழார் கூறுகிறார்.
– நாதமாகிய சிலம்பு ஒலிக்க. வேதம் நாத சொரூபமானது. அதுவே இறைவன் காற்சிலம்பாம். நாதத்திலிருந்து விருத்தியாய் வேதம் தோன்றும். குடிலையின் வழியே புவனங்கள் தோன்றும். அவ்வாறு தோன்றிய புவனங்களிற் பிறந்த உயிர்களுக்கு வேதமே வழிகாட்டும். இறைவன் வேதாந்தத்து விளங்குபவன்; ஆதலின் அவன் காலில் நிற்பது நாதமாகிய சிலம்பு என்க.’’ என்பது உரை.
வையகம் பொலிய ஆடும் இத்தகைய நடனத்தை உள்ளே அகக்கண்களாலும் கண்டுணர்ந்த சிவனடியாராகிய சுந்தரர் , முதலில் கைகளைக் கூப்பி அஞ்சலிசெய்தார். அடுத்து புறக்கண்களால் அம்பலத்தில் ஆடும்நடனத்தைக் கண்டுமகிழ்ந்தார். பின்னர் அகக்கரணங்களால் அன்பு கலந்து கண்டுணர்ந்தார்! இவ்வாறு கைகளைக் கூப்பி, அகக்கண்ணால் கண்டு, அந்தக்கரணங்களில் கலந்து நிற்கக் கண்டார். இந்த மூவகைகளில் கண்டுமகிழ்ந்த காட்சிகளுள் , எதுமுன், எதுபின் எனப்புலப் படாதவாறு ஒன்றினுள் ஓன்று கலந்து விட்டனவாம்! இதனை,
‘’ஐயர்தாம் வெளியே ஆடுகின் றாரை
யஞ்சலி மலர்த்திமுன் குவித்த
கைகளோ திளைத்த கண்களோ அந்தக்
கரணமோ கலந்த அன்பு’’
என்கிறார். ‘’முன் குவித்த கைகளோ – கண்களோ – அந்தக்கரணமோ அன்பு உந்த – அன்பு தூண்டுதலினாலே மனம் முதலிய உட்கரணங்கள் தொழில் செய்யும் – பின்னர் அவைஏவுதலினால் கண் காணும் – கண்டதனால் அதன்பின் கைகுவியும்; ஆனால் இவை இங்கே தவயோக முயற்சியி னாலே ஒருங்கே நிகழ்ந்தமையாலே, அம்முறையிற் கூறாது மாற்றிக் கூறினார். ஒன்றன்பின் ஒன்றாய்ப் பின்னே நிகழ வேண்டியவை அவ்வாறன்றி முன்னே நிகழ்ந்தன என்பார் முன் என்றார். நிருவி கற்பம் சவிகற்பம் என்ற காட்சி யிரண்டனுள்ளே முதலிற் கண்டபோது பொது நோக்காகிய நிருவிகற்பக் காட்சி நிகழும். பின் மனதோடு கலந்து உற்றறிதல் உண்டாகும். அதன்பின் இன்னது செய்தல் வேண்டுமென்பது தோன்றும். பின்னரே அச்செயல் நிகழும். இந்த நான்கு வகை நிகழ்ச்சிகளும் கர்ப்பூரத்திலே தீப்பற்றுதல்போல் தீவிர தர பத்தி யுடையார்க்கு எது முன்னர் நிகழ்ந்ததென்றறியமுடியாதபடி விரைவிலே நிகழும்’’ என்பார் உரையாசிரியர். – உட்கரணங்கள் நான்கு. சித்தம், மனம், அகங்காரம், புத்தி என்பன. உயிர் – சித்தமாய் நின்று இது யாதாகற்பாலது எனச் சிந்திக்கும்; அதன்பின் மனமாய் நின்று இஃது இன்னதாகற்பாலது எனப் பற்றும்; அதன்பின் அகங்காரம் இது ஆமோ? அன்றோ? இதனை இன்னதெனத் தெளிவேன் யானெனத் தெளிவு பிறவாதெழும்; அதன் பின்னர்ப் புத்தியாய் நின்று இஃது இன்னதெனத் தெளியும்; இவ்வகை வெவ்வேறாய் முற்றுப்பெறாத செய்கையுடையன வல்லாதபடி முன்பயிற்சியாலே ஒருங்கே முற்றிய செய்கையுடையன ஆயின என்க
அத்தகைய கலந்த அன்புடன் சுந்தரர் தில்லையம்பலத்தின் அணுக்கன் திருவாயிலில் புகுந்தார்! இதனையே ,
வையகம் பொலிய மறைச்சிலம் பரற்ற
மன்றுளே மாலயன் தேட
ஐயர்தாம் வெளியே ஆடுகின் றாரை
யஞ்சலி மலர்த்திமுன் குவித்த
கைகளோ திளைத்த கண்களோ அந்தக்
கரணமோ கலந்தவன் பந்தச்
செய்தவப் பெரியோன் சென்றுதாழ்ந் தெழுந்தான்
திருக்களிற் றுப்படி மருங்கு
என்று பாடுகிறார் . இப்பாடலில்உள்ள திருக்களிற்றுப்படி என்பது – யானைத் துதிக்கை வடிவுடையனவாகிய திரணைகள் இரண்டுபுறமும் அமைந்துள்ள ஐந்து படிகள். இவ்வைந்தையும் ஏறிக் கடந்து சென்றால் அருட் பெருங் கூத்தனைக் காணலாம். களிற்றுக்கை சூழ்ந்தமையால் இது இப்பெயர்பெற்றது. களிற்றுக்கை பிரணவத்தையும், ஐந்து படிகள் திருவைந்தெழுத்தையும் குறிக்கும். ஐந்தெழுத்தால் அறியப்பெறுபவன் அவை குறிக்கும் ஐந்தொழில் ஆனந்தக் கூத்தனாதலை அவற்றின்மேற் காணும் இறைவனது திருவுருவம் இயம்பும். இக் களிற்றுக்கை எடுத்து நடராசர் திருப்பாதத்தே வைத்தமையால் காரணப் பேர் பெற்றது திருக்களிற்றுப்படியார் என்ற சைவசித்தாந்த சாத்திரம்..