நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-49
நாங்குநேரி வாசஸ்ரீ
நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-49
49. காலமறிதல்
குறள் 481:
பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது
பகல் நேரத்துல கோட்டானக் கூட காக்கா செயிச்சிடும். அது கணக்கா பகையாளிய தோக்கடிக்க நெனக்கவங்களுக்கும் அதுக்கேத்த சரியான காலம் அவசியம்.
குறள் 482:
பருவத்தோ டொட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு
காலத்த வெரயமாக்காம காரியம் செய்யுதது நழுவி ஓடுத சொத்து நீங்காம இருக்கதுக்காக கட்டிப்போடுத கயிறு கணக்கா ஆவும்.
குறள் 483:
அருவினை யென்ப உளவோ கருவியாற்
கால மறிந்து செயின்
காரியத்த முடிக்கத் தேவையான சாதனங்களோட ஏத்த காலத்தையும் அறிஞ்சுக்கிட்டு செஞ்சா முடியாத காரியம் னு ஏதும் உண்டா?
குறள் 484:
ஞாலங் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்
ஏத்த காலத்தையும் எடத்தையும் அறிஞ்சு ஒரு காரியத்த செய்தாம்னா இந்த பூமி முழுக்க வேணும்னு நெனச்சாலும் கைக்குள்ளார வந்துக் கிடும்..
குறள் 485:
காலங் கருதி இருப்பர் கலங்காது
ஞாலங் கருது பவர்
ஒலகம் முழுக்க வேணும்னு நெனக்கவங்க அதுக்காவ கலங்காம ஏத்த காலம் வருத வரைக்கும் பொறுமையா காத்துக் கெடப்பாக.
குறள் 486:
ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து
மன உறுதி இருக்கவங்க பொறுமையா அமைதியா இருக்கது பயந்துகிட்டு இல்ல. ஆட்டுக் கிடா பகையாளிய தாக்குததுக்கு முன்ன கால பின்னுக்கு வாங்கிட்டு பொறவு பாயும் அது கணக்கா தான்.
குறள் 487:
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்
துள்வேர்ப்பர் ஒள்ளி யவர்
பகையாளிய தோக்கடிக்க மனசுக்குள்ளார கோவம் இருந்தாலும் வெளிக்காட்டாம எடம், காலம் பாத்துக் காத்துக் கிடப்பாக புத்திசாலிங்க.
குறள் 488:
செறுநரைக் காணிற் சுமக்க இறுவரை
காணிற் கிழக்காந் தலை
பகையாளிக்கு தகுந்த நேரம் வருதப்போ தானே அழிஞ்சு போயிடுவான். அதுவரைக்கும் பொறுத்துப் போய்க்கிடணும்.
குறள் 489:
எய்தற் கரிய தியைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்
காலம் நல்லதா வாய்க்குதப்போ அத ஒபயோகிச்சுக்கிட்டு ஒசந்த காரியங்கள செஞ்சு முடிக்கணும்.
குறள் 490:
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து
காலம் வருத வரைக்கும் கொக்கு போல அமைதியா காத்துக் கெடந்து பொறவு அது எங்ஙன குறி தவறாம இரைய புடிக்குதோ அது கணக்கா காரியத்த செஞ்சு முடிக்கணும்.
(அடுத்தாப்லயும் வரும்….)