”மாடுவரும் பின்னே, முகுந்தன் வரும்முன்னே,
காடுகழனி மேயாதவன் காலில், -தேடும்,
மிரளாத வாழ்வை, இருளோத வண்ணன்,
அருளாளன் கண்ணன் அளிப்பு”….கிரேசி மோகன்….
Blog
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
-
நான் அறிந்த சிலம்பு – 167
-மலர் சபா
மதுரைக் காண்டம் – 05: அடைக்கலக் காதை
கவுந்தி மாதரியிடம் கண்ணகியை அடைக்கலமாகக் கொடுத்தல்
பசுக்களைப் பிணிகளிலிருந்து காத்து
அவற்றுக்கு உணவு நீர் கொடுத்து
கவனத்துடன் வளர்த்து வரும்
இடையரின் வாழ்க்கையில்
துன்பமொன்றும் இல்லை.குற்றமற்றவள் முதுமகள்
நேரான குணமுடையவள்
இரக்கத்துடன் பிறர்க்கு உதவுபவள்;
எனவே இம்மாதரியிடத்தில்
கண்ணகியை அடைக்கலமாய் வைப்பது
பொருத்தமாக இருக்கும்
என்று எண்ணிய கவுந்தி
இங்ஙனம் கூறலானார்:மாதரியே கேள்!
இப்பெண்ணின் கணவருடைய தகப்பனின்
பெயரைக் கேட்டால்
அவர் குலப்பிறப்பான இந்நகரில் வாழும்
பெருவணிகர் யாவரும்
தாம் பெறுதற்கு அரிய
செல்வத்தைப் பெற்றோம்
என்றே எண்ணி
அவர்களை எதிர்கொண்டு
விருந்தினராக்கி உபசரிப்பர்.
அங்ஙனம் இந்தப்பெண்
பெருஞ்செல்வம் பெற்றவரது இல்லம்
அடைக்கலம் புகும் வரையில்
இடைக்குலப் பெண்ணாகிய உனக்கு
இவளை அடைக்கலம் கொள்ளும்
பொறுப்பைத் தருகிறேன்.அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 120-130
படத்துக்கு நன்றி: கூகுள்
-
இந்த வார வல்லமையாளர்!
மே 25, 2015
இவ்வார வல்லமையாளர்
வல்லமைமிகு சமூகப் போராளி மாணவி நந்தினி அவர்கள்மக்களை பேரழிவிற்கு இட்டுச் செல்லும் மதுவை ஒழிப்பதற்காகத் தொடர்ந்து போராடிவருபவர் சமூகப் போராளி, மதுரை சட்டக் கல்லூரிமாணவி நந்தினி ஆனந்தன் அவர்கள். தனது தொடர் போராட்டத்தின் ஒருபகுதியாக… தமிழக அரசு “டாஸ்மாக்” மதுக்கடைகள் வழியாக மதுவிற்பனையில் ஈடுபடுவதைக் கண்டிக்கும் நோக்கில் இவர் போராட்டங்கள் நடத்தி வருவது தமிழகம் அறிந்த நிகழ்வுகள். மாண்புமிகு முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் மீண்டும் பதவி ஏற்கும் நாளான சென்ற வாரம் மே 23 அன்று தனது போராட்டத்தின் தொடர்ச்சியாக சென்னை தலைமைச் செயலகம் முன் கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட நந்தினி திட்டமிட்டிருந்தார். இவரது இந்த அறிவிப்பைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை அடிப்படையில் இவரைத் தடுத்து நிறுத்தும் பொருட்டு நந்தினியையும், அவருடன் போராட்டத்தில் ஈடுபட இருந்த அவரது தந்தை ஆனந்தனையும் மதுரை மாநகரக் காவல் துறையினர் மே 22 ஆம் நாள் கைது செய்தார்கள். முதல்வரின் பதவியேற்பிற்குப் பிறகு காவல்துறையினர் இவர்களை விடுதலை செய்துள்ளனர். நாளிதழ்கள் அறிவித்த இச்செய்தியை நந்தினியும் தனது ஃபேஸ்புக் தளத்திலும் பதிவு செய்துள்ளார். சென்றவாரக் கைது உட்பட மது ஒழிப்பு போராட்டத்திற்காக இவர் இதுநாள் வரை 27 முறைகள் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமூகநலனில் அக்கறை கொண்டு தளராது தனது போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வரும் திருமிகு நந்தினி ஆனந்தன் அவர்களின் முயற்சியைப் பாராட்டும் வகையில் அவரை இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

நந்தினியின் போராட்டங்களுக்கு உந்துதலாகவும், அவருக்கு ஆதரவாகவும் இருப்பவர் தமிழக அரசின் வேளாண் பொறியியல் துறையில் இளநிலைப் பொறியாளராகப் பணியாற்றி, தற்பொழுது விருப்ப ஓய்வு பெற்றுள்ள இவரது தந்தை. மதுரை புதூர் காந்திபுரத்தைச் சேர்ந்த இவரது தந்தை திருவாளர் ஆனந்தன் அவர்கள் தனது மகளின் போராட்டத்திற்கு உறுதுணையாக இருந்துவருகிறார். சட்டக்கல்லூரி இறுதியாண்டு மாணவியான நந்தினியுடனும், தந்தை ஆனந்தனுடனும், இவரது சகோதரி நிரஞ்சனாவும் போராட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக; மதுரை சட்டக்கல்லூரி, சென்னை உயர்நீதிமன்றம், மதுரை உயர்நீதிமன்றம், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருப்பத்தூர், சேலம், ஏற்காடு, பெருந்துறை உள்ளிட்ட பல இடங்களில் டாஸ்மாக் விற்பனை நிலையங்களில் மதுவுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தியதற்காகவும் நந்தினி கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல்துறை தலைமை அலுவலகம், முதல்வரின் இல்லம் , முதல்வரின் கொடநாடு ஓய்வில்லம் எனப் பிற இடங்களில் உண்ணாவிரதப்போராட்டம் இருக்க முயன்ற பொழுது முன்னெச்சரிக்கையாகவும் அரசால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தனது கண்முன்னர் அழியும் குடும்பங்களின் துயரைப் பொறுக்க முடியாத நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நூறு குழந்தைகளுடன் முதல்வரைச் சந்தித்து நியாயம் கேட்க முயன்றதில் துவங்கியது நந்தினியின் போராட்டம். இந்திய குற்றவியல் சட்டம் 328 பிரிவின் கீழ் அரசே மதுவிற்பது சட்டவிரோதமான செயல் என்பது நந்தினி முன்வைக்கும் வாதம்.
Central Government Act – Section 328 in The Indian Penal Code: 328. Causing hurt by means of poison, etc., with intent to commit an offense.—Whoever administers to or causes to be taken by any person any poison or any stupefying, intoxicating or unwholesome drug, or other thing with intent to cause hurt to such person, or with intent to commit or to facilitate the commission of an offense or knowing it to be likely that he will thereby cause hurt, shall be punished with imprisonment of either description for a term which may extend to ten years, and shall also be liable to fine. [Source: http://www.indianpenalcode.in/ipc-328/]
“போதைப் பொருள்களைத் தவறு எனத் தெரிந்தே விற்பது சட்டப்படி குற்றம். அதற்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும். மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு என்று நன்றாகத் தெரிந்து கொண்டே மதுவை அரசு விற்பது சட்டத்தை மீறிய செயல் இல்லையா? கள்ளச் சாராயம் காய்ச்சுவது குற்றமென்றால் உரிமம் பெற்று டாஸ்மாக் நடத்துவது சரியானதுதானா? அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 47 இன் படி மதுவிலக்கை மாநில அரசு அமல்படுத்த வேண்டும்” என்பது நந்தினி அரசிற்கு வைத்த கோரிக்கை.
சட்டப்படி அரசின்மீது நடவடிக்கை எடுத்தால் நீதி கிடைக்க ஆண்டுகள் பல ஆகலாம் என்ற நாட்டின் நடைமுறை நிலமையாலும், பள்ளி மாணவர்களும் தற்காலத்தில் குடிக்கு அடிமையாவதும், குடிப்பழக்கம் உள்ள குடும்பங்களில் தற்கொலைகள் அதிகரிக்கும் நிலையும் இவரை போராட்டங்கள், உண்ணாவிரதங்கள் ஆகியவற்றின் வழியாக நீதி கேட்கும் முறையைத் தேர்ந்தெடுக்கச் செய்துள்ளது. இவரது போராட்டங்களுக்கு இவரது கல்லூரி நண்பர்களும், மாணவர் சமுதாயமும், அரசியல்வாதிகள் சிலரும், பொதுமக்களும், பத்திரிக்கைகளும் ஆதரவு தெரிவித்து வந்துள்ளனர்.
சென்ற வெள்ளியன்று நந்தினியின் கருப்புக்கொடி போராட்டத்தை முறியடிக்கும் விதமாகக் காவல்துறையினர் இவரைக் கைது செய்து, பின்னர் மறுநாள் விடுதலை செய்த பிறகு நந்தினி தனது ஃபேஸ்புக் சமூகவலைத்தளத்தின் மூலம் கீழ் காணும் செய்தியை தமிழக அரசின் பார்வைக்கு அனுப்பியுள்ளார்.
“ஐந்தாவது முறையாக தமிழக முதல்வராகப் பதவியேற்றுள்ள ஜெயலலிதா அவர்களே,
“ஒரு அரசமைப்பு எவ்வளவு உயர்ந்ததாக இருந்தபோதிலும் அதைச் செயல்படுத்துபவர்கள் மோசமானவர்களாக இருந்தால் அந்த அரசமைப்பும் மோசமாகிவிடும்”- என அரசியல்சாசன சிற்பி அண்ணல் அம்பேத்கர் சொன்னது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ நிச்சயமாக உங்களுக்கும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கும் 100% பொருந்தும். நீங்கள் இருவரும்தானே தமிழக மக்களைத் திட்டமிட்டு குடிக்கு அடிமைப்படுத்தி, பல லட்சம் குடும்பங்களை நாசப்படுத்திய குற்றவாளிகள். ஆம், நீங்கள் இருவரும் கொடிய குற்றவாளிகள் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. பாலில் கலப்படம் செய்து விற்பவர்களுக்கு ஆயுள் தண்டனை தரவேண்டும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. பாலில் கலப்படம் செய்தாலே ஆயுள் தண்டனை என்றால், மது என்னும் கொடிய விஷத்தை விற்று ஏராளமான மக்களைப் படுகொலை செய்யும் உங்களுக்கு என்ன தண்டனை தருவது? தூக்குதண்டனை கூடப் போதாது. அதையும் தாண்டி புதிதாக ஏதாவது தண்டனையை சட்டத்தில் சேர்க்க வேண்டும். சட்டத்தில் இருந்து தப்புவது உங்களுக்குக் கைவந்த கலையாக இருக்கலாம். ஆனால் கடவுளின் தீர்ப்பிலிருந்து உங்களால் என்றுமே தப்பிக்க முடியாது. மதுவிற்பனை அதிகரிக்க, அதிகரிக்க உங்களது பாவக்கணக்கும் அதிகரிப்பதை மறந்துவிடாதீர்கள். நிச்சயமாக, ஒருநாள் இதற்கெல்லாம் நீங்கள் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். நீதிக்காக மன்னனையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்திய கற்புக்கரசி கண்ணகி வாழ்ந்த மண் இது. நீதியும் நியாயமும் இங்கு இன்னும் உயிரோடுதான் இருக்கிறது..அநீதிக்கு எதிரான போர்க்குரல் இம்மண்ணிலிருந்து ஒலித்துக்கொண்டுதான் இருக்கும். யாராலும் இதனைத் தடுக்க முடியாது.ஆ.நந்தினி சட்டக்கல்லூரி மாணவி,மதுரை.”சமூக நலன் கருதி அயராது போராடும் நந்தினியின் முயற்சியைப் பாராட்டி அவரது மதுஒழிப்புப் போராட்டத்தில் வெற்றிபெற வல்லமைக் குழுவினர்களின் சார்பில் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!**************************************************************************************
[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]
நன்றி: செய்திகள் படங்கள் இணையத்தளங்களின் உதவியால் கிடைத்தவை
நந்தினையத் தொடர்பு கொள்ள:
https://www.facebook.com/nandhini.anandhan.35?தொலைபேசி தொடர்புக்கு: 97507 24220
-
படக்கவிதைப் போட்டி (14)
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?
திருமிகு வனிலா பாலாஜி எடுத்த இந்தப் படத்திற்கு [பட்டுக்கூடுகளிலிருந்து நூல் பிரித்தெடுக்கப்படுகிறது] ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (30.05.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.
புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடையவலைப்பூ – மணிமிடைபவளம்
-
தொட்ட இடம் துலங்க வரும் தாய்க்குலமே வருக …
— கவிஞர் காவிரிமைந்தன்.
தமிழ்மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற அரசியல் தலைவியாய் …
எதிர்பட்ட இன்னல்களை எல்லாம் துணிவுடன் எதிர்கொண்ட பெண்ணாய் …
உலக அளவில் புகழ் பெற்ற புரட்சித் தலைவியாய் …
ஐந்தாம் முறை அரியணை காணும் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களுக்கு வாழ்த்துகள்!!தொட்ட இடம் துலங்க வரும் தாய்க்குலமே வருக …
காவியக் கவிஞர் வாலி அவர்களுடன் ஒரு நாள் உரையாடிக் கொண்டிருந்தபோது … அவர் எழுதிய மன்னன் திரைப்பாடலில் அம்மா என்றழைக்காத உயிரில்லையே என்ற பாடலில் தாயின் பெருமைகள் பற்றி மிக அழகாக எடுத்துக்கூறியிருந்தது குறித்து என் மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்தேன்.
அப்போது … இதைவிட ஒருமுறை குமுதம் வார இதழில் தாய் பற்றி 72 முறை தாய் என்னும் சொல்லைப் பயன்படுத்தி எழுதினேன். அப்போது கிடைத்த பாராட்டுக்கள் மிகக் குறைவு! ஆனால் திரைப் பாடலில் பிரபல நடிகர் நடித்து வெளியாகும்போது அதன் வீச்சு அதிகம் என்று குறிப்பிட்டார்.
இதோ … இந்தப் பாடலின் தொகையறா கவிஞர் வாலி அவர்களின் ‘தாய்’ கவிதையை நினைவூட்டுகிறது.
அரியதாய் … பெரியதாய் … வணக்கத்திற்குரியதாய் …
எளியதாய் வலியதாய் என்றுமே இனியதாய் …
மலர்ந்ததாய் கனிந்ததாய் மனதிலே நிறைந்ததாய் …
வளர்ந்ததாய் வாழ்ந்ததாய் வந்த தாய் எங்கள் தாய் …முத்துச் சிப்பி திரைப்படத்திற்காக கவிஞர் வாலி வரைந்தளித்த பாடலிது! தமிழக அரசியல் வரலாற்றில் இரு பெரும் தலைவர்களாக உருவாகி … சாதனை சரித்திரம் எழுதிய வகையில் புரட்சித் தலைவருக்காக கவிஞர் வாலி எழுதிய இதுபோன்ற பாடல் உண்டு …
பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே
பெருமையுடன் வருக
உன் திருவடித் தாமரை தொடங்கிய பாதையில்
தேசம் நன்மை பெருக !நான் ஆணையிட்டால் திரைப்படத்திற்காக கவிஞர் வாலி எழுதிய இப்பாடலும் … புரட்சித்தலைவிக்காக முத்துச்சிப்பி திரைப்படத்திற்காக எழுதிய தொட்ட இடம் துலங்க வரும் என்கிற பாடலும் இன்று நினைத்துப் பார்த்தால் … கவிஞர்கள் தீர்க்கதரிசனம் கொண்டவர்கள் என்பதற்கு தக்க சான்றாகத் தோன்றுகிறது!
அரியதாய் … பெரியதாய் … வணக்கத்திற்குரியதாய்
எளியதாய் வலியதாய் என்றுமே இனியதாய்
மலர்ந்ததாய் கனிந்ததாய் மனதிலே நிறைந்ததாய் …
வளர்ந்ததாய் வாழ்ந்ததாய் வந்த தாய் எங்கள் தாய் … எங்கள் தாய் …தொட்ட இடம் துலங்க வரும் … தாய்க்குலமே வருக …
கண் பட்ட இடம் பூ மலரும் … பொன் மகளே வருக …
பொன் மகளே வருக … நீ வருக!கருணை என்ற தீபம்
இரு கண்களில் ஏந்திய தாயே
காலங்கள்தோறும் நெஞ்சில் வந்து கோவில் கொண்டவள் நீயே
பூமுகத்தாமரை மேலே அருள் பொழிகின்ற தெய்வத்தாயே
வானம் பார்த்த பூமிக்கெல்லாம் மாரியென்பது நீயே …
முத்து மாரியென்பது நீயே … முத்து மாரியென்பது நீயே …இதயம் உன்னைப்பாடும் …
நல்ல எண்ணங்கள் மாலைகள்போடும்
இன்னல் வந்த நேரம் உந்தன் புன்னகை ஆறுதல் கூறும்
வாவென வேண்டிடும்போது எதிர் வருகின்ற செல்வம் நீயே
நாலும் கொண்ட பெண்கள் தலைவியாகிய தாயே …
ஒரு தலைவியாகிய தாயே!! -
சொல்லிச்செல்பவன் இல்லாத கதைகள்!
-சோழகக்கொண்டல்
சொல்லிச்செல்பவனின்
குரல் இல்லாமல்
தானே நிகழும் கதைகளைக்
கேட்டபடியே நிற்கிறது
காலத்தை அசைபோடும்
இந்த ஆலமரம்!இரவுக்குள் தலை நுழைக்கிறது வானம்
இருளுக்குள் உயிர் கொள்கின்றன கிளைகள்
கிளிகள் குயில்கள்
காகங்கள் கொக்குகள்
இன்னும் ஆயிரம் சத்தங்கள்
இனிக்கும் ஆயிரம் முத்தங்கள்!ஒலிகள் மொழிகள் ஆக்கப்படாமல்
ஒலிகளாகவே பேசப்பட்டு
ஒலிகளாகவே கேட்கப்படுகின்றன
எண்ணங்கள் எழுத்துகள் ஆகாமல்
எண்ணங்களாகவே எண்ணப்பட்டு
எண்ணங்களாகவே சேமிக்கப்படுகின்றன!உணர்ச்சிகள் வாக்கியங்களில் எழுதப்படாமல்
உணர்ச்சிகளாலேயே உந்தப்பட்டு
உணர்ச்சிமிகும் செயல்கள்வழியே
கடத்தப்படுவதால்
ஓயாமல் நிகழ்ந்தபடியே இருக்கும்
இந்த களத்தின் கதைகளில்
சொல்லிச்செல்பவனின் குரலை
ஒருபோதும் தனித்துக் கேட்டதில்லை
இந்த மரம்! -
கானடா நாடென்னும் போதினிலே!
-சி. ஜெயபாரதன், கனடா
கானடா நாடென்னும் போதினிலே, இன்பக்
கானம்வந் தோதும் நம் காதினிலே
தேனினும் இனிய தேசமடா, இதைத்
தேடிப் புகுந்தது எம் யோகமடா!எங்கெங்கு காணினும் ஏரிகளே, திசை

எப்புறம் நோக்கினும் ஆறுகளே
பொங்குநீர் வீழ்ச்சிகள் மேவுமடா, பனிப்
பூக்களை வானமும் தூவுமடா!ஊசி இலைமரக் காடுகளாம், பனி
ஓங்கும் உயர்மலை மேடுகளாம்
வீசிடும் வெப்ப வீடுகளாம், குளிர்
வெப்பம் மாறிடும் நாடுகளாம்!ஈரேழு மாநிலப் பனிநாடு, சீராய்
இரட்டை மொழியாளும் தனிநாடு
நீர்வளம், நிலவளம் மிக்கதடா, பயிர்கள்
நிறைய விளைந்திடத் தக்கதடா!முப்புறம் ஆழ்கடல் சூழுமடா, பனி
மூடும் துருவம் வடக்கிலடா
கப்பல்நீந் திடும்நீர் மார்க்கமடா, தென்
காவலாய் அமெரிக்கத் தேசமடா!மேப்பிள் சிவப்பிலைக் கொடிபறக்கும், அருள்
மேவிப் பிறர்க்குக் கொடையளிக்கும்
ஆப்பிளும் பீச்சுக்கனி பழுக்கும், பல்
ஆயிரம் தக்காளிக் காய் தழைக்கும்!தாமிர வைரத் தளங்களடா, ஒளிர்த்
தங்கமும் வெள்ளிச் சுரங்கமடா
பூமியில் புதிய காண்டமடா, இதைப்
போற்றிப் புகழ்ந்திட வேண்டுமடா! -
வள்ளுவ மாலை
-சுரேஜமீ
பிறப்பின் வந்தது ஊழெனின் ஓடிடும்
நிற்கத் திருக்குறள் சொல்வழி – தீர்வும்
உளதிங்கே நல்கிப் பயனுற வாழ்வின்
நிலையோங்கி நிம்மதி காண்!ஓதும் மறைபுரியார் வாழ்வின் நிறையறியார்
போதும் மனமுடைச் சிந்தையில் ஏகத்
திருக்குறள் போலொருநூல் ஏதுண்டு? – ஞாலம்
ஒருகுரலாய்ச் சிந்திக்கச் சொல்!வெப்பம் தணிக்கக் கோடையில் நீரருவி
தெப்பம் நனைப்பதுபோல் வாழ்வின் குறைபோக்க
நுட்பம் பலதரும் மெய்நூல் – திருக்குறள்
திட்பமாய் நல்கிடப் பேறு!ஊர்சொலக் கேளார் உறவுசொல வேண்டார்
நூல்சொலும் வாரீர் வருந்துன்பம் போக்குமோர்
வழியும் மாந்தர்க்கு மண்ணில் – திருக்குறள்
வாழிய வகையறிந்தேல் நன்கு!வாழ்வின் முடிவுதான் தேடியலை மாந்தர்க்கு
ஊழ்வினை அறுத்து உத்தமர்செய் – வெல்லும்
திருக்குறள் சூழும் மாற்றி நிலைதரும்
நல்வினை ஏற்றும் பார்! -
நட்டுவிட்டுச் செல்!
-இரா.சந்தோஷ் குமார், திருப்பூர்
இறுதியாக
உனக்கும் எனக்கும்
எதுவுமில்லையென்று
நீ முடிவெடுத்துத்
தனிமைத்தீவினில்
எனை விட்டுவிட்டுச்
சென்றாலும்
இந்த யுகத்தின்
மிகச்சிறந்த உனது
புன்னகைப்பூவொன்றினை
எந்தன் வாலிப தேசத்தில்
நட்டுவிட்டுச்செல் தோழி!நாளைய எனது
முதுமைக் குருதிச்செல்கள்
உந்தன் புன்னகைப்பூ
சுவாசத்தினால்கூட
உயிர்ப்பித்து
உயிர்ப்பித்து
மெய்ப்பிக்கலாம்
அந்த ஆழியின் ஆழத்திலிருக்கும்
முத்துப்போன்ற
உன் மீதான
எனது ஆழக்காதலை! -
மனமுருக்கம் !
-பா.ராஜசேகர்
செடிகொடிகள்
பசி கொண்டு
வான் நோக்கும் !மேகங்கள்
கலந்தாடிக்
கருத்தரிக்கும் !கருமேகங்கள்
மனமுருகி
மழை பொழியும் !மண் குளிரும்
வளம் கொழிக்கும் !மகரந்தம்
மலர்தாவும்
கனி பிறக்கும் !இறக்கை
சிறகடிக்கப்
பறவைகள் பசியாறும் !இயற்கையின்
இலக்கணமே
மிக நெருக்கம் !மனமுருக்கம்
ஒன்றேதான்
மாற்றும் என்பேன் !சுழலுகின்ற
உலகுக்கும்
மனமிருக்கு !கனிந்த மனம்
வாழ்வியலைச்
சிறப்பாக்கும் !வாழ்க்கைக்கு
அர்த்தத்தை
உருவாக்கும் !வாழ்கின்ற
காலம் மிக
கொஞ்சமையா !வாழ்த்துகின்ற
உள்ளங்களில்
துஞ்சுமையா ! -
கரைந்த கற்பு!
-றியாஸ் முஹமட்
கடல் கடந்த கல்யாணி
கட்டிய கணவனையும்
கட்டியணைத்த குழந்தையையும்
கலாசார மோகத்தால்
களைந்திடுவாள்!கண் கூசும் ஆடை
கண்றாவியாகிவிட…
கவலைப்பட மாட்டாள்!கனவு காண்பாள்
கடுகளவேனும்
கணவனையோ, குழந்தையையோ
கண்டிட மாட்டாள்!கண்ணுக்கு மையிட்டு
’கலர்புல்’ ஆடையணிந்து
கால்குதி உயர்ந்து
கதி மறந்துபோவாள்!காட்டரபி கூட
கலங்கிடுவான்
கண் கெட்டு நின்று விடுவான்
கண நேரம்…!களைத்து வியர்த்து உழைத்துக்
கண்ட காசு கரைந்திடும்
கானலாகிவிடும்!கடிதம் காணாமல்
கதி கலங்கிடும் குடும்பம்காலமோ கரைய
களங்கமில்லாத கற்பையும்
கள்வர்களிடம் கரைத்து,
கட்டுநாயக்க விமானத்தளத்தில்
கால்வைத்து விடுகிறாள்!கண்வைத்த தூரம்
கட்டிய கணவனுமில்லை
கருணைக் குடும்பமுமில்லை!கண நேரமாகியும் காத்திடுவாள்
காக்கைகூட கவனிக்காது…கார் பிடித்து,
காரைக்குடிக்குச் செல்வாள்
கட்டிய வீட்டில்
கட்டிய கணவன்
கலக்கலாக வாழ்கின்றான் – பல
கன்னிகளுடன்!கடி நாகம்
கடித்தது போல
கலங்கிடுவாள்,
கரைந்து போன
கற்போடு! -
வல்லமைக்கு வயது ஆறு!
-றியாஸ் முஹமட்
வண்ணத்தமிழ் கொண்டு
வற்றாது தினந்தோறும்
வானத்துச் சூரியனாய்
வாசலிலே படியேறி
வந்திகள் பாடிச்செல்லும்
வாசகத்திற்கு இடந்தந்து
வாசகர் நெஞ்சிலே
வருடலாய்ப் பலசொல்லி
வல்லவன் என்றொரு
வழுவாத பெயர் தந்து
வழிமுறை பலதையும்
வன்மனதில் பதியவைத்து
வள்ளுவன் மொழிந்த
வாசகம் தான்உணர்த்தி
வாஞ்சை காட்டி பிறர்
வாதை மனதில் போக்கி
வாமதேவனவன் கருணைதனை
வாடாமலராய் மணக்கவைத்து
வாய்மை ஒன்றையே வேத
வரிகளாய் தன்னுள் கொண்ட
வல்லமையே…
உன்னை
வாழ்த்துகின்றேன் இன்னும்
வாழ்க வாழ்கவென்று…
வாழ்க நின் புகழ்
வாழிய வாழியவே…!!! -
உன்னையறிந்தால் …… (6)
நிர்மலா ராகவன்
வெற்றிப்பாதையில் முட்கள்
கேள்வி: எந்தச் சமயத்திலும் பிறரை நோகடிக்கக் கூடாது என்பது சரிதானா? எல்லோரிடமும் சிரித்துப் பேசுவது சிலருக்கு மட்டும் எப்படி கைவருகிறது?
பதில்: இப்படி நடப்பவர்கள் மகிழ்ச்சியானவர்கள் என்று சொல்ல முடியாது. எப்போதும் சிரிப்பது, அதுவும் உரக்கச் சிரிப்பது, மகிழ்ச்சியின் அறிகுறி என்று அர்த்தமாகாது.
சிறு வயதில் தாய், தந்தையர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் ஆகிய எல்லாரிடமும் பாராட்டு பெற விரும்பிய ஒரு பெண் பிறருக்கு என்ன பிடிக்கும் என்று குறிப்பால் அறிந்து, அதன்படி நடக்கிறாள்.
யாரையாவது எதிர்த்தால், அதற்காகத் திட்டு விழும், தன்னை `நல்ல பொண்ணு!’ என்று புகழமாட்டார்கள் என்று புரிந்து போகிறது. அதனால், அவள் செய்யும் ஒவ்வொரு காரியமுமே பிறர் என்ன சொல்வார்களோ என்ற அடிப்படையில்தான் இருக்கும்.
பெரியவளாக ஆன பின்னரும், இதே போக்கு தொடர்கிறது. `எனக்கு எதிரிகளே கிடையாது. எல்லாருக்கும் என்னைப் பிடிக்கும்!’ என்று பெருமையாகச் சொல்லிக் கொள்கிறாள்.
இவளுக்கு எதிரிடையான பெண் ஒருத்தியே எடுத்துக்கொள்வோம். அவளைக் கண்டனம் செய்பவர்கள்தாம் அதிகம்.
1 `உனக்கு ஆனாலும் ரொம்பத்தான் கர்வம்!’
2 `நீ சொன்னது (அல்லது, நடந்துகொண்ட விதம்) என்னை நோகடித்துவிட்டது’.
3 `உன்னால் ஏன் மற்றவர்களுடன் ஒத்துப்போக முடிவதில்லை?’இந்த மாதிரி கேள்விக் கணைகளைத் தொடுத்து, யாராவது உங்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறார்களா?
கவலையை விடுங்கள். பிரச்னை உங்களிடம் இல்லை. கேட்டவரிடம்தான்.`ஏன் என்னால் முன்னுக்கு வரவே முடியவில்லை?’ என்று வருந்துபவர்கள், பிறர் தம் முன்னேற்றத்தைத் தடுக்க எந்தெந்த வழிகளை எல்லாம் கையாளுவர் என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுடைய நைச்சியமான பேச்சால் பாதிப்பு அடையாமல் இருக்க முடியும்.
(1)`கர்வி’ என்று நம்மை ஒருவரைப் பழித்தால், நம்மிடம் ஏதோ சிறப்பு இருக்கிறதென்று எதிராளி உணர்ந்திருக்கிறார் என்று அர்த்தம். அந்தச் சிறப்பே நம் பலமாக, வெற்றிக்கு அடிப்படைக் காரணமாக ஆகவிடாமல் தடுக்கும் முயற்சி இந்த ஏளனம் கலந்த குற்றச்சாட்டு.
பிறரை ஓயாது பழித்துவிட்டு, `ஏனோ ஒருவருக்கும் என்னைக் கண்டால் பிடிப்பதில்லை!’ என்று புலம்புவார்கள் இத்தகையவர். இல்லாவிட்டால், தன்னைப்போன்ற இன்னொருவருடன் நெருங்கிய நட்பு கொண்டு, பிறரைப் பழிப்பதிலேயே நிறைவு கண்டுவிடுவர்.
கதை:
நான் ஒரு புதிய பள்ளிக்கு மாற்றலாகிப் போனேன். இரு சீன ஆசிரியைகள் ஒன்று சேர்ந்து, என்னை மட்டம் தட்டிக்கொண்டே இருந்தார்கள், `நீ புதியவள். உனக்கு ஒன்றும் தெரியாது,’ என்பதுபோல. இத்தனைக்கும் எனக்கு முன் அனுபவம் இருந்தது. நான் பட்டதாரி ஆசிரியை, அவர்களைவிட உயர்ந்த பதவி வரிசையில் இருந்தேன் என்ற ஆத்திரமாக இருக்கலாம்.
பொறுக்கிறவரை பொறுத்துவிட்டு, அதற்கு ஒரு முடிவு கட்ட எண்ணினேன். பின்பு, `என்னையும் உன்னைமாதிரி முட்டாள் என்று நினைத்தாயா?’ (You think I am stupid like you, aah?”) என்று ஒருத்திக்குப் பதிலடி கொடுத்தேன், ஒரு முறை. அவர்கள் பேசும் முறையையே கையாண்டதால், அவர்களுக்கு என் ஏளனம் புரிந்தது.
அவ்விருவர் முகத்திலும் ஒரே ஆத்திரம். ஆனால், அவர்களுக்கு மேலே எதுவும் பேசும் தைரியம் இருக்கவில்லை.
அதன்பின் என்ன! போலியான, திகட்டும் அளவுக்கு பணிவுதான் என்னிடம்!(2) `நீ சொன்னது (அல்லது, நடந்துகொண்ட விதம்) என்னை நோகடித்துவிட்டது’.
பிறரது எண்ணங்களுக்கும், உணர்ச்சிகளுக்கும் நாம் பொறுப்பில்லை. நாம் சொல்வதையோ, செய்வதையோ பிறர் ஏற்றுக்கொள்ள முடியாதது நம் தப்பா?
பல பெரியவர்கள் இம்மாதிரி பேசி, தம் குழந்தைகளை, `தாம் நொந்தாலும் பரவாயில்லை, பிறரை நோகடிக்கக்கூடாது,’ என்பதுபோல் என்றுமே சுயமாகச் சிந்தித்து நடக்கும் திறனில்லாது பழக்கிவிடுகிறார்கள். அதனால் குழந்தைகளும் பிறருடைய உணர்ச்சிக்கே மதிப்பு கொடுத்து, ஒவ்வொரு வார்த்தையையும் அளந்து பேசப் பழகுகிறார்கள். பிறர் சொல்வது சரியோ, இல்லையோ, அதை ஆமோதித்து ஏற்றால் அவர்களுக்குப் பிடித்தவர்களாக ஆகிவிடுகிறோம் என்பது இவர்களுக்குத் தெரிகிறது.
இக்குழந்தைகள் பெரியவர்களானதும், தாமே ஏதாவது செய்ய முயன்றுவிட்டு, அதுவும் பிழையாகிப் போனால் என்ன ஆகும்?
ஒரேயடியாகக் கூசிப்போய், பிறருடைய பழிக்கும், கேலிக்கும் அஞ்சி, புதிதாக எதிலும் ஈடுபடும் துணிச்சலை இழந்துவிடுகிறார்கள். `நான் போட்டியில் எல்லாம் கலந்துகொள்ள மாட்டேம்பா. வெற்றி பெறாவிட்டால், கேவலம்!’ என்று பெருமை பேசுவார்கள்.
அவர்களைப்போலவே பலரும் இருப்பதால், தாம் செய்வதுதான் சரி என்று திருப்தி அடைந்துவிடுகிறார்கள். வெகு சிலரே வெற்றிப் பாதையில் பீடுநடை போடுவது இதனால்தான்.
தலைமைப் பொறுப்பு வேண்டுமெனில், சுய சிந்தனை அவசியம். எதிர்ப்புக்கு அஞ்சக்கூடாது. நமக்குச் சரியெனப்பட்டதை, அது பிறருக்குத் தீங்கு விளைவிக்காதவரை, துணிந்து செய்ய வேண்டும்.
`எனக்காக இதைச் செய்யக்கூடாதா!’ என்று நமக்கு உடன்பாடில்லாத காரியங்களைச் செய்யத் தூண்டுபவர் நம் நலனிலும், நிம்மதியிலும் அக்கறை கொண்ட நண்பரே அல்லர்.
கதை:
ஒரு பார்ட்டிக்குப் போயிருந்தேன். அதை அளித்தவர் பெரிய அதிகாரி. ஒவ்வொருவரிடமாகப் போய், அவர்களை வற்புறுத்தி, மது குடிக்க வைத்தார். கூட இருந்தவர்களும் குடிக்காதவர்களைக் கேலி செய்தார்கள்.
என்னருகே வந்தார். என்னைவிடப் பத்து வயது பெரியவரான அவர் எதுவும் பேசுமுன், `குடிப்பதை விட்டுவிடுங்கள் என்று நான் சொன்னால் கேட்பீர்களா?’ என்று சாந்தமாக, நான் அவரைக் கேட்டேன்.
`Of course not!’ என்று ஆணித்தரமாகப் பதில் வந்தது.
`நான் மட்டும் நீங்கள் சொல்வதைக் கேட்பேன் என்று நீங்கள் எப்படி எதிர்பார்க்கலாம்?’ என்று நான் கேட்க, அவர் முகம் அதிர்ச்சியைக் காட்டியது. தலையைக் குனிந்துகொண்டு அப்பால் நகர்ந்தார். அதிலிருந்து எனக்கு ரொம்ப மரியாதை!
(3) `உன்னால் ஏன் மற்றவர்களுடன் ஒத்துப்போக முடிவதில்லை?’தன்னம்பிக்கை இல்லாத எவருக்குமே நாம் வித்தியாசமாக இருந்தால், பயம் உண்டாகும். எப்படியாவது தங்களைப்போல் மாற்றிவிட பெருமுயற்சி செய்கிறார்கள். நாம் செல்லும் பாதை தவறானது என்பதை உணர்த்துவதுபோல, `சுயநலமி,’ `அகம்பாவம் பிடித்தவள்’ என்று பல பெயர்களைச் சூட்டுவர். அவர்களை லட்சியம் செய்யவே கூடாது.
கொஞ்சம் புத்திசாலியான வேறு சிலர், `உங்கள் புத்திசாலித்தனத்துக்கு நீங்கள் இப்படிச் செய்யலாமா?’ என்று, புகழ்வதுபோல் குழி பறிப்பர். ஒரு வேளை, அவர் சொல்வதில் உண்மை இருக்குமோ என்று யோசித்து, அவர்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பது வீண்.
பழியையும், வருத்தத்தையும் நாம் ஏற்காத பட்சத்தில், அவை சொன்னவரையே போய்ச் சேரும், சுவரில் அடிக்கப்பட்ட பந்துபோல். நாமும் எப்போதும்போல் நிமிர்ந்தே நடக்கலாம்.
அச்சத்தாலோ, பொறாமையாலோ நம்மை முதலில் ஏற்காதவர்களே என்றாவது நம் உதவி தேடி வருவார்கள். `என்னைப் பழித்தாயே!’ என்று குத்திக் காட்டாது உதவலாம்.
தொடரும்
-
அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் (41)
நியாண்டர்தால் அருங்காட்சியகம் – டூசல்டோர்ஃப், ஜெர்மனி (2)
சுபாஷிணி
*குரங்கு விலங்கினத்திலிருந்து பரிணாம வளர்ச்சி கண்டு வளர்ந்த இனம் தான் மனித இனமா?
*நியாண்டர்தால் எனக்குறிப்பிடப்படும் மனித இனக்குழு இன்று காணப்படும் ஐரோப்பிய நிலப்பரப்பில் மட்டும் தான் இருந்தனரா?
*உலகின் எல்லா பாகங்களிலும் மனித இனம் ஒரே நேரத்தில் தோன்றியதா?
*ஆப்பிரிக்கா தான் மனித இனத்தோற்றத்தின் முதல் நிலப்பகுதியாக அமைந்திருந்ததா?
*விவசாயம் என்பதும், உலக நாகரிகம் என்பதும் உலகின் பல இடங்களில் ஒரே நேரத்தில் தோன்றினவா?
*மனித குலத்தை ஆக்கிரமித்திருக்கும் உலகத்தோற்றம், மனித குலத்தின் தோற்றம் வளர்ச்சி பற்றிய பற்பல கேள்விகளில் மேற்குறிப்பிட்ட இவையும் அடங்குவன.
ஆதி மனிதனின் வாழ்க்கை முறையைக் காட்டும் மெழுகு வடிவங்கள்இப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் தியரியின் படி மனித குலத்தின் ஆரம்பம் என்பது, அதாவது மரத்திலிருந்து தாவிச்செல்லும் குரங்கினத்திலிருந்து மனித இனத்திற்கான மாற்றம் என்பது ஆப்பிரிக்காவில் நிகழ்ந்தது. குரங்கினத்திலிருந்து மனித இனத்திற்கான பரிணாம மாற்றம் என்பது உடன் ஒரு குறிப்பிட்ட கால அளவில் நிகழ்ந்ததல்ல என்றும் பல்வேறு சமகால நிகழ்வுகளில் சூழலியல், தட்பவெப்ப சீதோஷ்ண நிலை மாற்றங்களாலும் நீண்ட கால அளவிலேயே இம்மாற்றம் நிகழ்ந்திருக்கும் என்பது ஆய்வறிஞர்களின் கூற்று.
முழுமையான ஒரு நியாண்டர்தால் எலும்புக்கூடு
குரங்கினத்திற்கு வாழ்க்கையை நடத்த ஆயுதங்களும் கருவிகளும் தயாரிக்கும் திறன் இல்லை. மனித இனமோ தனது சிந்தனைத்திறத்தை பயன்படுத்தி கற்களால் ஆயுதங்களையும் கருவிகளையும் செய்யும் திறமையை வளர்த்துக் கொண்டது. கருவிகள் வருவதால் வேட்டையாடுதல், உணவை தேடுதல் இனையைத் தேடுதல், குழுவாக வாழ்தல், என்ற திறனையும் படிப்படியாக மனித இனம் பெருக்கிக் கொண்டது. உணவுத்தேவையும் இனப்பெருக்கத்தேவையும் மட்டுமே அடிப்படை என்ற நிலையிலிருந்து படிப்படியாக மாறி குடும்பம், சமூகம், விவசாயம், குழு தலைமைத்துவம், கிராமம், நகரம், நாடு, அரசியல், வியாபாரம், கல்வி எனப்படிப்படியாக மனித இனம் தன து சிந்தனை வளர்ச்சியைப் பெருக்கிக் கொண்டே வந்துள்ளது. மாற்றத்தை ஏற்றுக் கொண்டு புதுமையை உட்புகுத்திக் கொண்டு வசதிகளை மேலும் மேலும் வாழ்க்கையில் சேர்த்துக் கொள்ள மனித இனம் தொடர்ந்து முயற்சித்து வருகின்றது. உலகியல் தேவைகளோடு மட்டும் நின்றுவிடாமல் உள நிலை தேடலையும் மனித இனம் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. இதன் காரணத்தினால் பல்வேறு சடங்குகள், வழிபாட்டு முறைகள், நம்பிக்கைகள் தோன்றுவதற்கும், தத்துவங்கள் பிறப்பதற்கும் காரணமாகின்றது.
நியாண்டர்தால் பள்ளத்தாகில் கண்டெடுக்கப்பட்ட கருவிகள்
நியாண்டர்தால் அருங்காட்சியகத்தில் உள்ளே நுழையும் போதே அங்கே நம்மை வரவேற்க ஒரு நியாண்டதால் மனித உருவச்சிலை உள்ளது. ஒருவருக்கு 8 யூரோ கட்டணம் கட்டி டிக்கைட்டை பெற்றுக் கொள்வதோடு விளக்கம் கொடுக்கும் கருவியையும் பெற்றுக் கொள்ளலாம். 6 தளங்களில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. முதல் தளத்தில் முதன் முதலாக நியாண்டர்தால் மனித எலும்புகளும் அதன் எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு பற்றிய தகவல்கள் உள்ளன. ஒவ்வொரு பகுதியிலும் ஒலிப்பதிவு இருப்பதால் அவ்வொலிப்பதிகளைக் கேட்டுக் கொண்டே தொடர்ந்து செல்லலாம். ஒலிப்பதிவுகள் அனைத்தும் டோய்ச் மொழியில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.
நியாண்டர்தால் பள்ளத்தாகில் கண்டெடுக்கப்பட்ட சிதைந்த எலும்புகளில் எச்சம்
அதனை அடுத்து வரும் தளத்தில் இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட கற்கருவிகள், உலோகக் கருவிகள் ஆகியன காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள சில கருவிகள் 50,000லிருந்து 20,000 ஆண்டுகளுக்கும் முற்பட்டவை என்ற குறிப்புக்களைப் பார்த்து வியந்து போனேன். மனித குல கண்டுபிடிப்புக்களில் அடங்கும் கற்கருவிகள் பல, விலங்குகளின் உடலைக் கொல்லவும், அப்படிக் கொன்ற உடலை கீறி இரைச்சியைக் கிழித்து எடுக்கவும் பயன்படுத்தப்பட்ட கருவிகள். படிப்படியான இந்த வளர்ச்சியில் கற்கருவிகளிலிருந்து பின்னர் உலோகக் கருவிகளை மனித குலம் கண்டுபிடிப்பதும் பின்னர் மட்பாண்டங்களை உருவாக்கி சமைத்தல், சேகரித்தல் என்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதையும் இந்த மனித குல வளர்ச்சியில் ஒரு முக்கிய வளர்ச்சியாகத்தான் காண வேண்டும்.
அருங்காட்சியகக் கூடத்தின் உள்ளே
தொடர்ந்து மேலே செல்லும் போது எலும்புக் கூடுகளும், மனித எலும்புகளில் சில பகுதிகளும் இங்கு அறிவியல் தகவல்களோடு வழங்கப்பட்டுள்ளதைக் காணலாம். இவை மிகச் சிறப்பான வகையில் இந்த அருங்காட்சியகத்தில் 2 மாடித்தளங்களில் வைக்கப்பட்டுள்ளன. இவை மட்டுமன்றி ஆங்காங்கே நியாண்டர்தால் மனிதர்களின் முந்தைய கால நிலையை விளக்கும் வகையில் சில்லிகானில் செய்யப்பட்ட உருவ வடிவங்களை காட்சியாக வைத்திருக்கின்றனர்.
புலி மனிதன் (ஜெர்மனியின் பாடன் உர்ட்டெம்புர்க் மானிலத்தில் கண்டெடுக்கப்பட்டது. 40,000 ஆண்டு பழமையான வடிவம்)
மேல் தளத்தில் இந்த நியாண்டதால் அருங்காட்சியகத்தின் அதி முக்கியசேகரிப்பு வைக்கப்பட்டுள்ளது. இங்குதான் இந்த நியாண்டர்தால் மனித இனத்தின் DNA க்கள் கன்ணாடி அலமாரிக்குள் மிகப்பாதுகாப்பாக அதே வேளை பொது மக்கள் சிரமமின்றி பார்க்கும் வகையில் வைக்கப்பட்டுள்ளன.
நியாண்டர்தால் அசல் DNA
இந்த DNA சேகரிப்பைக் குடுவையில் பார்க்கும் போது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒரு வியப்பு கலந்த பிரத்தியேக உணர்வு காண்போர் அனைவருக்கும் நிச்சயம் உண்டாகும் என்பதில் சந்தேகவில்லை.
தொடரும்.















