இலக்கியம்கவிதைகள்

கானடா நாடென்னும் போதினிலே!

-சி. ஜெயபாரதன், கனடா

கானடா நாடென்னும் போதினிலே, இன்பக்
கானம்வந் தோதும் நம் காதினிலே
தேனினும் இனிய தேசமடா, இதைத்
தேடிப் புகுந்தது எம் யோகமடா!

எங்கெங்கு காணினும் ஏரிகளே, திசை            kanada
எப்புறம் நோக்கினும் ஆறுகளே
பொங்குநீர் வீழ்ச்சிகள் மேவுமடா, பனிப்
பூக்களை வானமும் தூவுமடா!

ஊசி இலைமரக் காடுகளாம், பனி
ஓங்கும் உயர்மலை மேடுகளாம்
வீசிடும் வெப்ப வீடுகளாம், குளிர்
வெப்பம் மாறிடும் நாடுகளாம்!

ஈரேழு மாநிலப் பனிநாடு, சீராய்
இரட்டை மொழியாளும் தனிநாடு
நீர்வளம், நிலவளம் மிக்கதடா, பயிர்கள்
நிறைய விளைந்திடத் தக்கதடா!

முப்புறம் ஆழ்கடல் சூழுமடா, பனி
மூடும் துருவம் வடக்கிலடா
கப்பல்நீந் திடும்நீர் மார்க்கமடா, தென்
காவலாய் அமெரிக்கத் தேசமடா!

மேப்பிள் சிவப்பிலைக் கொடிபறக்கும், அருள்
மேவிப் பிறர்க்குக் கொடையளிக்கும்
ஆப்பிளும் பீச்சுக்கனி பழுக்கும், பல்
ஆயிரம் தக்காளிக் காய் தழைக்கும்!

தாமிர வைரத் தளங்களடா, ஒளிர்த்
தங்கமும் வெள்ளிச் சுரங்கமடா
பூமியில் புதிய காண்டமடா, இதைப்
போற்றிப் புகழ்ந்திட வேண்டுமடா!

 

Print Friendly, PDF & Email
Download PDF
Share

Comments (2)

  1. Avatar

    அழகிய பாடல், கனடா என்பது கானடா என ராகத்தின் பெயரால் நீண்டாலும் பொருள் பொதிந்த ஆக்கம்.

  2. Avatar

    பாராட்டுக்கு பணிவான நன்றி நண்பர் அண்ணாகண்ணன்.

    பாரதியின் “செந்தமிழ் நாடென்னும் போதினிலே” என்னும் பாட்டே மாதிரி. செந்தமிழ் என்பது கூவிளம்.  அதனால் கனடா என்பது கானடா ஆனது.

    சி. ஜெயபாரதன்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க