Blog

  • கண்ணா கருமை நிறக் கண்ணா …

    — கவிஞர் காவிரிமைந்தன்.

     

    kannaa

    கண்ணா கருமை நிறக் கண்ணா …

    கண்ணனின் பெயரில் கொண்ட அபிமானத்தால் கண்ணதாசன் என்ற பெயர் சூட்டிக்கொண்டாரா? தெரியவில்லை … வேலை தேடி அலைந்த காலத்தில் ஏதோ ஒரு பத்திரிக்கை அலுவலகத்தில் … உன் பெயரென்ன என்கிற கேள்விக்குச் சட்டென்று சொன்ன பதில்… கண்ணதாசன்… எனவே அறிகிறோம். பெயரின் முன்பாதி கண்ணனை முன்மொழிய அவனின் தாசனாகவே வாழ்ந்த கண்ணதாசன் எழுதிய பாடல்கள் பல… கண்ணன் என்கிற வார்த்தையோடு தொடங்குதல் காண்கிறோம். அதுவும் அவை வெற்றிப்பாடல்களாகவே உலா வருவது கண்கூடு! அந்த வரிசையில் இதோ ஒரு பாடல்!

    பணமா பாசமா என்றால் பணத்தின் பக்கம் தலைசாயும் உலகம்!
    நிறமா குணமா என்றால் நிறத்தின் பக்கம் அலைமோதும் கூட்டம்!
    இதுதானே நடைமுறையில் நாம் காணும் இயல்புகள்!

    நல்ல குணமுடைய நங்கை ஒருத்திக்கு இல்வாழ்க்கை அமைகிறது. புகுந்த வீட்டில் உள்ள அனைவரும் பெண்ணின் நிறம் கருப்பு என்பதால் வெறுக்கிறார்கள்… முகம் சுளிக்கிறார்கள்!
    செய்வதறியாது தவிக்கிறாள் நங்கை…
    கண்களிலே ஊற்றெடுக்கும் கங்கை…
    பெண்களிலே இவள்போலப் பலபேர்…
    அவர்கள் சார்பில் குரல் கொடுத்தாள் இங்கே!

    படைத்த ஆண்டவனையே அழைத்துக் கேள்விகள் தொடுத்து வடிக்கிறாள் பாடல்! ஏ.வி.எம். நிறுவனத்திற்காக “நானும் ஒரு பெண்” திரைப்படத்தில்… தயாரிப்பாளரின் முழுமையான திருப்திக்கு பாடல் அமையாமல் போக … அந்தப் பெண்ணின் அவலத்தை, அவள் படும் பாட்டை முதலடியிலேயே பட்டென்று சொல்ல வேண்டும் என திரு.மெய்யப்பச் செட்டியார் விரும்ப, முடிவாக கண்ணதாசன் அவர்கள் வரவழைக்கப்பட்டு எழுதிய பாடலிது! இசையமைப்பாளர் ஆர்.சுதர்சனம் அவர்களின் இனிய இசையில் உருவான ஸ்வரங்களில் வடிவம்பெற்ற பாடல்! கண்ணதாசன் வரிகள் தர… பி.சுசீலா குரல்கொடுக்க… இதோ அந்தக் குற்றால அருவியின் சுகம்… சோகத்தை சுமந்துகொண்டு நம் உள்ளம் நோக்கி வருகிறது!

    கண்ணா கருமை நிறக் கண்ணா – உன்னை
    காணாத கண்ணில்லையே
    உன்னை மறுப்பாரில்லை கண்டு வெறுப்பாரில்லை – என்னைக்
    கண்டாலும் பொறுப்பாரில்லை
    கண்ணா கருமை நிறக் கண்ணா – உன்னை
    காணாத கண்ணில்லையே

    மனம் பார்க்க மறுப்போர் முன் படைத்தாய் கண்ணா
    நிறம் பார்த்து வெறுப்போர் முன் கொடுத்தாய் கண்ணா
    இனம் பார்த்து எனைச் சேர்க்க மறந்தாய் கண்ணா – நல்ல
    இடம் பார்த்து நிலையாக அமர்ந்தாய் கண்ணா

    பொன்னான மனம் ஒன்று தந்தாய் கண்ணா – அதில்
    பூப்போன்ற நினைவொன்று வைத்தாய் கண்ணா
    கண் பார்க்க முடியாமல் மறைத்தாய் கண்ணா
    கண் பார்க்க முடியாமல் மறைத்தாய் கண்ணா – எந்தக்
    கடன் தீர்க்க என்னை நீ படைத்தாய் கண்ணா
    கண்ணா கருமை நிறக் கண்ணா – உன்னை
    காணாத கண்ணில்லையே

    உன்னை மறுப்பாரில்லை கண்டு வெறுப்பாரில்லை – என்னைக்
    கண்டாலும் பொறுப்பாரில்லை
    கண்ணா கருமை நிறக் கண்ணா – உன்னை
    காணாத கண்ணில்லையே
    _______________________________________________

    திரைப்படம்: நானும் ஒரு பெண்
    இயற்றியவர்: கண்ணதாசன்
    இசை: R. சுதர்சனம்
    பாடியவர்: பி. சுசீலா
    காணொளி: https://youtu.be/xO1RW80P8YU

     

    ஒரு பெண்ணின் வேதனையைக் கவிஞனே இப்படி வெளிக்காட்ட முடியுமென்று உன் கவிதை வரிகள் திரைப்படத்திற்கு எழுதியதோடு நின்று விடாமல்… பல்லாயிரம் எம் குலப்பெண்களுக்கு ஆறுதலாய்… ஆறாம் விரலாய்… அழுத கண்ணீரைத் துடைத்து நின்றதனை என்னென்பேன்?

     

     

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

    ஆனை பசிக்கு அபயமாம் அட்ஷதை,
    தீனி அளிக்கின்றான் தன்கையால்: -வானைப்,
    பிடித்திடப் போவதேன், வைகுண்ட நாதன்
    அடித்தா மரையே அரண் ….கிரேசி மோகன்….

    Share
  • படக்கவிதைப் போட்டி 9-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான ஒளிப்படத்தை எடுத்துத் தந்துள்ள திரு.வெங்கட் சிவாவுக்கும், போட்டிக்குரிய படமாய் இதனைத் தெரிவுசெய்த திருமிகு. சாந்தி மாரியப்பனுக்கும் வல்லமை ஆசிரியர் குழுவின் நன்றிகள்.

    11180014_822542801133254_1503319428_n

    கூடாரத்தின் (கைப்)பிடியை உறுதியாய்ப் பிடித்தபடி எம்மை உற்றுநோக்கும் சிறுவனே! உன் கண்களில் கனல்தெறிக்கின்றதே…ஏன்? மிகக் கொடிதான வறுமையை இவ்விளமையிலேயே தாங்கும் உன் பொறுமையைப் போற்றுகின்றோம்!

    வறுமையின் கொடிது எது? என்று ஐயன் வள்ளுவரைக் கேட்டால் ’வறுமையின் கொடிது வறுமையே’ என்பார்.

    இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
    இன்மையே இன்னா தது.

    தம்பி! இன்று ஏழைமை உன்னோடு தோழமை கொண்டிருந்தாலும், நாளை உன் எதிர்காலம் சுடர்விட்டு ஒளிரும் எனும் நம்பிக்கை கொள்! அதற்கு நீ உடனடியாய்க் கைக்கொள்ளவேண்டிய மெய்ப்பொருள் கல்வியே!

    இனி, இவ்வாரப் போட்டியில் பங்கேற்றுள்ள கவிஞர்கள் இச்சிறுவனைப் பற்றி என்ன சிந்தித்திருக்கின்றார்கள் என்பதைப் பார்ப்போம்.

    முதலில், என் உள்ளம்தொட்ட கவிதை வரிகளை உவப்போடு உங்களுக்கு அறியத் தருகிறேன்!

    *****

    தந்தையின் குடியால் தங்கள் குடியே சீரழிந்ததை வேதனையோடு இச்சிறுவன் விளம்புவதையும், பசியால் வாடினாலும் பிச்சை எடுக்கமாட்டேன் எனும் அவன் கொள்கைப்பிடிப்பையும் காட்டும் திரு. சி. ஜெயபாரதனின் வரிகள்…

    துள்ளித் திரியும் காலத்தில்
    துடுக்கடக்கிப்
    பள்ளிக்கு வைக்க வில்லை
    பாலகன் என்னை !
    மரத்தடியில் தினம் சீட்டாடி
    தெருச்சுற்றிப் பணம்
    திருடி 
    அப்பனுக்கு மாலையில்
    கப்பம் கட்டுவேன் !
    […]

    குடி வாழ்வைக் கெடுத்தது !
    […]
    பல நாட்கள்,

    பட்டினி கிடந்தேன் !
    ஜெகத்தினை எரித்திடப் 
    பாரதி வரவில்லை !
    ஆயினும் பிச்சை
    எடுக்கப்
    போக வில்லை !

    ******

    தந்தை தாயற்ற இச்சிறுவனைக் கண்டோர் சொல்லும் கேலிச்சொற்கள், அதுகண்ட அவன் உள்ளக்குமுறல் ஆகியவற்றை அருமையாய்ப் படம்பிடித்திருக்கும் திரு. நல்லை. சரவணாவின் வரிகள்…

    எச்சில் குவளைகள் 
    இரண்டைத் தவறவிட்டிருந்த பொழுதில் 
    அப்படித்தான் அழைத்தார் 
    அன்றைய நாளின் 
    முதலாளியாகியிருந்த அவர்…
    […]
    குப்பிச் சாக்குகளோடு 

    தெருமுனை கடக்க…
    யார் பெற்ற பிள்ளையோ என 
    உச்சுக் கொட்டியவனிடம் 
    கத்திச் சொல்லத் தோன்றியது….
    உனக்காகவும் இருக்கலாம்…

    *****

    சமூகத்தின் பிரதிநிதியான இச்சிறுவனை நல்லவனாக்குவதும், தீயவனாக்குவதும் இச்சமூகமே எனும் உண்மையைச் சுட்டும் திரு. கவிஜியின் வரிகள்…

    நின்றிருக்கின்றேன் 
    எப்படி வேண்டுமானாலும் 
    தெரியும் நீங்கள் என்னை 
    தேர்ந்தெடுங்கள், 
    கத்தியாகவோ…
    புத்தகமாகவோ….

    *****

    வாடகைத்தாய் பெற்றபிள்ளைகூடச் சீரோடு வாழ்ந்திருக்க, சொந்தத்தாய் பெற்றபிள்ளையோ சொந்தமின்றி, பந்தமின்றி, யாரார்க்கோ அடிமையாய் வாழ்ந்திருக்கும் அவலத்தைச் சொல்லும் திரு. சுரேஜமீயின் வரிகள்…

    ஈட்டுத்தாய் பெற்று
    உற்ற கருவாக்கி
    ஊரார் மெச்ச
    என் பிள்ளையென
    ஏந்திப் பிடித்தே
    ‘ஐ’ யென மகிழ்ந்திருக்க!
    ஒரு துணையுமின்றி நான் மட்டும்
    ஓடுகாலிகளின்
    ஔரதனாய் 
    ….வாழ்தற்கு?

     *****

    சிறுவனுக்கு நல்வழிகாட்டும் திரு. செண்பக ஜெகதீசனின் வரிகள்…

    பார்வையில் கோபம் வேண்டாமே
         பாவப் பட்ட பாலகனே,
    தீர்வு வராதே வன்முறையில்
         திருந்தி வாழ்ந்திடு நல்வழியில்,
    வேர்வை சிந்தி உழைத்திடுவாய்
         வெல்லும் வழிதான் வந்திடுமே,
    நேர்மை என்றும் வழியாகும்
         நிலைத்த வாழ்வை நீபெறவே…!

    *****

    குழந்தைத் தொழிலாளியின் குமுறலையும், முதுகெலும்பு படைத்த நான் உழைத்து உயர்வேன் எனும் அவன் வைராக்கியத்தையும் அழகாய் விளக்கும் திருமிகு. ஜெயஸ்ரீஷங்கரின் வரிகள்…

    பசிக்கும் வயிற்றுக்கும்
    துடிக்கும் மனத்துக்கும்
    இடையே போராடும்
    ஒரு போராளியாய்
    நானொரு
    குழந்தைத் தொழிலாளி..!
    […]
    இயலாமை தான்

    என்றாலும்
    முயலாமல் இருக்கலாமா?
    கூடுங்கள் தோழர்களே
    குனிந்த முதுகின்
    முதுகெலும்பே
    எதிர்க்கும்
    ஆயுதங்களாகட்டும்..!

    *****

    ’பார்வையில் காட்டத்தைக் காட்டாதே; நல்வாழ்வு உனக்குண்டு!’ என நல்வார்த்தை சொல்லும் திருமிகு. சியாமளா ராஜசேகரின் வரிகள்…

    பார்வையிலே காட்டமேன் பாலகனே சொல்லடா 
    சோர்ந்தாயோ நீயும் சுமைதூக்கி – நேர்வழியில் 
    சென்றால் பயமில்லை செல்வா ! கலங்காதே 
    நன்றாய் சிறப்புறும் வாழ்வு.

    *****

    மன்னன்மகனின் நிலைகண்டு மனங்கலங்கும் திரு. ஜெயராம சர்மாவின் வரிகள்…

    எல்லோரும் இந்நாட்டு 
    மன்னர் என்றால்
    இப்பிள்ளை அப்பாவும் 
    மன்னர் அன்றோ 
    மன்னன் மகன்
    நடுவீதி நிற்பானானால்
    மக்கள்நிலை என்னாகும்
    சிந்திப்போமா ? 

    *****

    ’தெருவோரம் வளரும் அக்கினிக் குஞ்சு இச்சிறுவன்; இவனைச் சீண்டாதீர்!’ என எச்சரிக்கை விடுக்கும் திரு. அமீரின் வரிகள்…

    ஒதுங்கச்சொல்லி
    காறித்துப்ப
    அவன் எச்சமல்ல…
    பதுங்கி கில்லி
    ஏறியடித்தால்
    உயிர் பிழைப்பார்
     அங்கு எவருமல்ல!
    […]
    தா தா 

    என்று மாமுல் கேட்டால்
    என்ன செய்வான்
    உழைக்கும்பிள்ளை…
    தாதாவாக
    வளர்வதன்றி
    வேறு வழியுமில்லை!

     *****

    மனிதருக்குள் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் தரும் உறுத்தலை உணர்த்தும் திருமிகு. சரஸ்வதி ராஜேந்திரனின் வரிகள்…

    கிழிந்த சட்டையுடன்
    மழிக்காதமுடியுடன்
    குப்பை அள்ளும்
    சிறார்களையும்
    […]
    சைக்கிள் கடையில்

    வேலை பார்க்கும்
    சிறார்களையும்
    பார்க்கும்போது
    காரில் பள்ளிப்
    போகும் மகன்
    நிழலாடி உறுத்தல்தருகிறது 

    *****

    ’காசுக்கு விற்கப்படும் கல்வியால் ஏழைகளுக்குப் பயனேது?’ என்று இச்சிறுவன் ஏங்குவதாய்க் காட்டுகின்ற திருமிகு. தமிழ்முகிலின் வரிகள்…

    கல்வி என்பது பணம் படைத்தோரின்
    சொத்தாகிப் போய்விடுமோ எனும் கவலை
    உனை ஆட்கொண்டு விட்டதோ?
    […]
    எத்தனையோ இலவசங்கள்
    வரிசை கட்டி வந்தாலும் – உழைத்தாலன்றி
    அடுத்த வேளை உணவென்பது
    கேள்விக்குறியான போது – நானும்
    இங்கே குழந்தை தொழிலாளி ஆனதில்

    பிழை என்ன இருக்கிறதென்று கேட்கிறாயோ ?

    *****

    இளமைக்கல்வியும் இனியசொற்களும் புறக்கணிக்கப்பட்ட இளம்பிஞ்சின் உள்ளக்கொதிப்பை அழகாய்ச் சொல்லுகின்ற திருமிகு. துஷ்யந்தியின் வரிகள்…

    “பள்ளிப் பருவம் எதற்குனக்கு
    தள்ளி நில்லு நீ” என்று
    துளி கூட உள்ளமில்லா
    மனங்கள் என்னை தூற்றின…!
    போலி உலகை கண்டு ஓய்ந்து
    கல்லாய் மாறின உள்ளமதில்
    இனி கருணைக்கு இடமில்லை
    இனி உறங்கப் போவதில்லை…!

    *****

    பார்வையால் பல்லாயிரம் மொழிபேசும் பாலகனின் கல்விக்காய்க் குரல் கொடுக்கும் அறிமுகக் கவிஞர் திரு. சதாசிவத்தின் வரிகள்…
    (முயற்சி நன்று! தொடர்ந்து எழுதுங்கள் கவிஞரே!)

    பார்வை ஒன்றே போதுமே பல்லாயிரம் சொல் பேசுமே
    […]
    கல்வியை கற்றுவிட்டால் சேருமிடம் நன்றே!
    ஐயன்மீர் யாராகிலும் சேர்த்தணைத்துக் கொள்வீர்!
    சேர்த்த புண்ணியம் யாதாகிலும்,  உடன் புகழ் பெறுவீரே.

    *****

    ’சூரியனைச் சுடும் பார்வையோடு யார்மீது கோபமுற்றிருக்கிறாய்?’ என சிறுவனை வாஞ்சையோடு வினவும் திரு. கொ.வை. அரங்கநாதனின் வரிகள்…

    அந்நியர்கள் இங்கிருந்து அகன்று
    அறுபதாண்டுகள் ஆகியும் கூட 
    சொந்த மைந்தர்களை தினம்
    சோற்றுக்கு அலைய வைக்கும்
    சுதந்திர நாட்டின் மீதா?
    […]
    வாழவழி தெரியாத உனக்கு
    ஏதும் செய்ய இயலாது
    புகைப்பட மெடுத்தவர் மீதா
    கவிபாட வந்த எங்கள் மீதா?

    *****

    சிறுவனின் வாழ்வு சீர்பெற வழிசொல்லும் திருமிகு. புனிதா கணேசனின் வரிகள்…

    கல்விக் கண்கள் திறந்திடவும்
    இல்லாமைப் பேய் ஒழிந்திடவும்!
    சின்ன வயிறு நிறைந்திடவும்
    அன்னமிட்டு உதவிடுவோம்!
    சேற்றிலும் செந்தாமரைகள்
    வீற்றிருக்கும் திடமாய் நம்புவோம்!
    நல்லதோர் எதிர்காலம்
    வெல்வான் இவன் !

    *****

    இவற்றினூடே, அண்டைபூமியான ஈழத்தின் முள்ளிவாய்க்காலில் உயிரோடு கொள்ளிவைக்கப்பட்ட நம் தமிழ்ச்சோதரர்களின் குடும்பத்தில் ஒருவனாக இச்சிறுவனை இனங்கண்டு, இவ்வினப்படுகொலையால் சுற்றத்தை இழந்து சொந்தநாட்டிலேயே அகதியாக்கப்பட்ட இவனுடைய கண்ணீர்க் கதையைக் கவிதையாய் வடித்துள்ள திருமிகு. வேதா. இலங்காதிலகத்தின் ‘காத்திருப்பேன் காலத்திற்காய்’ எனும் கவிதை என்னைச் சிந்திக்க வைத்தது; கண்ணீர் சிந்தவும் வைத்தது. அவரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்ந்தெடுக்கிறேன்.

    அக்கவிதை…

    காத்திருப்பேன் காலத்திற்காய்!

    வண்ணம் பூசி வரைந்து பல
    எண்ணக் கனவுகளோடு வாழ்ந்தோம் அன்று
    கண்ணிறைந்த வாழ்வு சிதறி இன்று
    உண்ண உணவிற்கே திண்டாடும் நிலை
    உதட்டில் மட்டும் காயம் எம்
    உயிர் தப்பியது அபூர்வம்! ஒரு
    ஊர்க் கோடியில் கோணித் திரையுள்
    அகதி வாழ்வு இது கொடுமை!

    கூனிக் குறுகி ஒடுங்கிய வாழ்வு!
    ஏனிந்த நிலையிது நீதியே இல்லை!
    காரணகர்த்தாக்களை உருத் தெரியாது அழிக்க
    கருவெடுக்கிறது கொலை வெறி நெஞ்சில்.
    அகதி நான் எனது நாட்டிலேயே!
    தகுதியற்ற நிலையிது காத்திருப்பேன் காலத்திற்காய்.
    காட்சிப் பொருளாக நாமின்று படத்தில்.
    ஆட்சி, அரண்மனைக்கு அடிபடுகிறாரின்று பலர்!

    *****

    அடுத்து, ஏழைகளுக்குத் தேவை கல்வியா? செல்வமா? எனும் பட்டிமன்றத்தைக் கவிதையில் நடத்தி அதற்கு நடுவராய்க் கடவுளையே நியமித்திருக்கும் இன்னொரு கவிதையும் மெச்சும்படி இருந்தது.

    சிட்டாக வேபறந்தேன் கோயிலுக்கு அங்கு 
           சிலையாக நின்றிருந்த கடவுளிடம்
    திட்டாமல் தேம்பாமல் வேண்டினேன் பொங்கித்
           தவிக்கின்ற மனமுருகக் கெஞ்சினேன்
    பட்டாசு கம்பெனியில் என்குடும்பம் பட்டம் 
           படிக்கின்ற ஆசையில் நானொருவன்
    எட்டாத ஓர்கனவாய் ஆகிடுமோ என்றும்
           ஏழையாய் என்வாழ்வும் மாறிடுமோ

    […]

    தட்டாமல் அக்கடவுள் என்கனவில் வந்தார் 
           தக்கதொரு தீர்வுதனை சொல்லி(ச்)சென்றார்
    திட்டாக கோணியொன்றில் மூடியதை நீயும் 
           திறந்திட்டால் அங்கிருக்கும் உன்வாழ்க்கை
    கட்டாக புத்தகம்கு விந்திருந்தால் கல்வி
           கனமான எந்திரம்என் றால்செல்வம் 
    கட்டாயம் ஏற்படும்வ ரம்அளித்தேன் என்றார் 
           கவிஞர்காள் சொல்லுங்கள் என்னவரம்?

    *****

    என்ன வரம் தரலாம் இச்சிறுவனுக்கு? என்னைக் கேட்டால் வயிற்றுப்பசி தீர்க்கும் செல்வத்தையும், அறிவுப்பசி தீர்க்கும் கல்வியையும் சேர்த்தே அவனுக்குத் தருவதுதான் கடவுளின் கடமை என்பேன்! இக்கவிதையை யாத்த திரு. எஸ். பழனிச்சாமியைப் பாராட்டிற்குரிய கவிஞராய் அறிவிக்கிறேன்.

    நண்பர்களே! தொடர்ந்து போட்டியில் பங்குகொள்ளுங்கள்! பாராட்டைப் பெறுங்கள்!

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

    ஓம் நமோ பகவதே ஸ்ரீ ராமானுஜாய….

    சேஷா வதாரரே ஆஷாட பூதிகள்
    த்வேஷம் கலைத்து ,திருக்கோஷ்டி -கோஷமாய்,
    நார யணநாமம், நால்வருணம் ஓதிட,
    காரண மானவரே காப்பு ….கிரேசி மோகன்….

    சாமா னியரை சதுர்வேதி ஆக்கிஹரி
    நாமா வளியயை நவிலவைத்த -ராமா
    னுஜனே முழுமுதல் நாரணனைத் தாங்கும்
    புஜனே நிஜத்தில் புகுத்து ….கிரேசி மோகன்….

    Share
  • எலும்பிலிருந்தா பிறந்தாய் ?

    கட்டாரி

     

    அம்மன் கோவிலில்

    மணியடித்துக் கொண்டிருக்கிறது….

     

    சங்கிலியைப் பறிகொடுத்தவள்

    கதறியபடியே

    ஓடிவந்து கொண்டிருந்தாள்..

     

    கடைசிப் பேருந்தை

    தவறவிட்டவள்…

    வன்புணரப்பட்டிருந்தாள்…

     

    நடந்ததைச் சொல்லத் தெரியாத

    சிறுபிள்ளைக்கு

    உடம்பெங்கும் காயம்…

     

    பிணங்களாய் சிலர்

    சிரித்துக்கொண்டே விளக்கொளியில்

    நிர்வாணம்

    உடுத்தியிருந்தார்கள்….

     

    மூன்றாம் சாமத்தில்

    ஒருத்தி குளிக்கப் போயிருந்தாள்…

     

    மணியோசையும் ஓய்ந்த

    பாடில்லை…..! கூடவே

    மழையும் சேர்ந்துகொண்ட பொழுதுகளில்

     

    அரை மயக்கத்திலேயே

    ஒரு பெண்ணைப் பெற்றெடுக்கிறாள்…..

    இன்னொரு.. பெண்…!!

     

     

     

    Share
  • வலைப்பூக்களில் தமிழ் ஆளுமைகள்

    –கி. கண்ணன்.

     

     

    முன்னுரை
    தமிழ் மொழியின் எதிர்காலம் இணையத்தின் கையில் உள்ளது என்றால் அது மிகையாகாது. ஏனெனில், சங்க இலக்கியத் தமிழ், காப்பிய இலக்கியத் தமிழ், பக்தி இலக்கியத்தமிழ், இக்கால இலக்கியத் தமிழ் என்ற நிலைகளிலிருந்து மீட்டுருவாக்கம் பெற்று இன்று இணைய இலக்கியத் தமிழ் என்ற உயரிய நிலையில் தமிழ் இலக்கியம் வளர்ந்து வருகின்றது. இணையத்தின் வாயிலாக இன்றைக்கு தமிழ் மொழியின் பரவலை அதிகரிக்க முடியும் என்று நிருபித்திருக்கின்றன வலைப்பூக்கள். இவ்வலைப்பூக்கள், வலைப்பதிவு, வலைக்குறிப்பு, வலைக்குடில் [1] என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகின்றன. வலைப்பூக்களின் வளர்ச்சி அவற்றைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை ஆகியவற்றைக் கொண்டு வலைப்பூக்களின் முக்கியத்துவத்தினை நன்குணரமுடிகிறது. அப்படிப்பட்ட வலைப்பூக்களின் வாயிலாக தமிழ் மொழி பெற்றுள்ள வளர்ச்சியினை வெளிக்கொணருவதாக இக்கட்டுரை அமைகிறது.

    வலைப்பூக்கள் அறிமுகம்
    ”வலைப்பூ என்பது எழுத்துக்கள், ஒலி, ஒளி வடிவக்கோப்புகள், ஓவியம், படங்கள், என்பனவற்றை நாமே இணையம் வழி வெளியுலகிற்குத தெரிவிக்கும் இணைய சேவையாகும்.”[2] என்பார் முனைவர் துரை. மணிகண்டன் அவர்கள். ஆங்கிலத்தில் Blog என்று அழைக்கப்படும் இது இரு இணைய சொற்களின் கூட்டுச் சொல்லாகும். Web – log என்று வழங்கிய வலைப்பூ Blog என்ற பெயரில் இன்று வழங்கப்பட்டு வருகின்றது. தமிழில் முதல் வலைப்பதிவு 2003 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது என்றும் முதல் பதிவை கார்த்திகேயன் இராமசுவாமி என்பவர் பதிவு செய்தார் [3] என்றும் தமிழ் விக்கிபீடியா விளக்கியுள்ளது..

    வலைப்பூ அமைப்பு
    Blog என்பது பெயர்ச்சொல்லாக இருந்து வலைப்பதிவு என்றும் வினைச்சொல்லாக இருந்து வலைப்பதிவு எழுது என்றும் பொருள் தருகிறது. Blogger என்பது பெயர்ச்சொல்லாக இருந்து வலைப்பதிவு எழுதுபவர் அல்லது வலைப்பதிவு ஆசிரியரைக் குறிக்கின்றது. Blogging என்பது வினைச்சொல்லாக இருந்து வலைப்பதிவில் எழுதுதல் என்றும் பொருள் தருகின்றது. மேலும்,
    ஒவ்வொரு வலைப்பூவும் கீழ்க்கண்ட சில அடிப்படை அமைப்புகளைப் பெற்றுத் திகழ்கின்றன.
    • வலைப்பூவின் பெயர் – வலைப்பூ ஆசிரியர் தன்னுடைய வலைப்பூவிற்கு வைக்கும் பெயர் தன் விருப்பத்திற்கேற்ற விதத்தில் இருக்கும்.
    • வலைப்பூவின் முகப்பு – வலைப்பதிவர் தம்மைப் பற்றியும் தன் வலைப்பூவின் நோக்கம் பற்றியும் விளக்கும் பகுதி.
    • வலைப்பூவின் தலைப்பு – புதியதாக பதிவு செய்யும் படைப்பிற்கு இடும் பெயர் ஆகும்.
    • பூவின் உள்ளமைப்பு – தலைப்பைத் தொடர்ந்த கட்டுரைப் பகுதி.
    • வலைப்பூ பதிப்பித்த நாள், நேரம், பதித்தவர் பெயர் முத்திரைகள் – வலைப்பூ ஆசிரியர் தான் பதிப்பிக்கும் பதிப்பின் விவரம் தெரிவிக்கும் பகுதி.
    • பின்னூட்டங்கள் – தான் வெளியிட்ட பதிப்பினைப் படித்த வாசகர்கள் தரும் விமர்சனம்.
    • சேமிப்பகம் – பதிவுகளை சேமிக்கும் பகுதி.
    • இணைப்புகள் – தன்னுடைய வலைப்பூவிலிருந்து வேறொரு தளத்திற்கு செல்லும் பகுதி.
    • வலைப்பதிவுகளில் பக்கக் கூறுகள் – வலைப்பூவின் இருபுறமும் அமைந்திருக்கும் இணைக்கப்படும் பக்கக்கூறுகள் போன்றனவாகும்.

    தமிழ் வலைப்பூக்கள்
    இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கணினியில் தமிழ்மொழி பயன்படுத்தப்பட்டு வந்தாலும் தமிழில் மென்பொருள்களும் எழுத்துருக்களும் முறையாக வெளிவந்த பிறகுதான் இணையத்தை அனைவராலும் பயன்படுத்த முடிகிறது. அதன் வெளிப்பாடாக, தற்போது தமிழ்மொழியில் நிறைய வலைப்பூக்கள் வெளிவந்து கொண்டிருப்பதைக் கொண்டு அறிய முடிகிறது.

    வலைப்பூக்கள், அவற்றில் பதிப்பிக்கும் ஆசிரியரைப் பொறுத்து அதனைத் தோற்றுவித்த நோக்கத்தினைப் பொறுத்து தமிழின் ஆளுமைகள் மாறுபடுகின்றன. பொழுதுபோக்கிற்காக மட்டுமே என்றால் அதில் தமிழின் வெளிப்பாடு தரமானதாக இருக்குமா என்பது சந்தேகமானதாகவே உள்ளது. மாறாக, இலக்கிய நோக்குடன் தோற்றுவிக்கப்பட்ட வலைப்பூக்களில் தமிழின் பயன்பாடும் இலக்கியத்தரமும் மிகுந்து காணப்படும். அவற்றில் சில…

    மு.இளங்கோவன் வலைப்பூ

    muelangovan.blogspot.in
    பாண்டிச்சேரியைச் சேர்ந்த பேராசிரியர் முனைவர் மு. இளங்கோவன் அவர்களால் muelangovan.blogspot.in [3] என்ற பெயரில் 2007 ஆம் ஆண்டு துவக்கப்பட்டு இன்று வரை இலக்கியம், நாட்டுப்புறம், இலக்கியவாதிகள் பற்றிய விமர்சனம் ஆகியன பற்றி பல அரிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்.

    இவரது அச்சக ஆற்றுப்படை என்னும் நூலினை வலைப்பூவில் பதிவு செய்து வைத்துள்ளதில் தமிழ் மரபுக் கவிதைகளின்பால் இவருக்கு இருக்கும் ஆர்வத்தை பறைச்சாற்றுவதாய் அமைந்துள்ளது. இவரது வலைப்பூவில் இணைய பயிலரங்கம், கருத்தரங்கம் போன்ற இணையத்தில் தமிழ்மொழி, தமிழிலக்கியம் சார்ந்ததாக உள்ளது.

    manikandanvanathi.blogspot.inமணிவானதி வலைப்பூ
    பேராசிரியர் முனைவர் து. மணிகண்டன் அவர்களால் 2009 ஆம் ஆண்டு முதல் manikandanvanathi.blogspot.in [4] என்னும் பெயரில் வலைப்பூ மணிவானதி என்ற தலைப்புடன் துவங்கப்பட்டு பல இலக்கியம், தொழில்நுட்பம் சார்ந்த பதிவுகளையும் தமிழ்மொழி சார்ந்த இணைய பயிலரங்கப் பதிவுகளையும் காணமுடிகிறது. இவரது இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள், தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள் போன்ற நூல்கள் இணையத்திலும் வலைப்பூக்களிலும் தமிழ்மொழி பயன்படுத்தப்பட்டு வரும் சிறப்பினை விளக்குவதாக அமைந்துள்ளது.

    Arivumathi.blogspot.inஅறிவுமதி வலைப்பூ
    கவிஞர் அறிவுமதியின் வலைப்பூ. Arivumathi.blogspot.in [5]  என்ற பெயரில் வெளிவந்து கொண்டிருக்கிறது. இவரது படைப்புகள் பெரும்பான்மை கவிதை நடையையே பின்பற்றி இருக்கின்றன. சமூகச் சாடல்கள் அதிகம் காணப்படும் இவரது கவிதைப் பதிவுகளில் எதார்த்தமும் இயல்பான நடைமுறை அவலங்களும் அதிகம் காணப்படுகிறது.

    duraiarasan-blogதுரையரசன் வலைப்பூ
    அழகு தமிழில் இலக்கியம் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளை பதிவு செய்வதில் தனக்கென தனி இடம் பிடித்திருப்பவர் பேராசிரியர் முனைவர் க. துரையரசன் அவர்கள். இவரது வலைப்பூ duraiarasan.blogspot.com [6 ]என்பதாகும். 2007 ஆம் ஆண்டு முதல் இன்று வரை பதிவுகளை செய்து வரும் இவர் புறநானூற்றில் நிர்வாகவியல் சிந்தனைகள், அகநானூறு 99 மலர்கள், திருக்குறளில் அணி இலக்கணக் கூறுகள் போன்ற தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரைகளும் திணை நிலை நோக்கில் ஐந்திணை ஐம்பது என்ற தலைப்பில் பயிலரங்கமும் இணையத்தில் தமிழ்த் தரவுகள் என்ற இணையதள கருத்தரங்கமும் இவரால் நிகழ்த்தப்பட்டுள்ளது என்பதை விளக்கியுள்ளமை வலைப்பூவில் இவரது தமிழ் ஆளுமையைப் பறைச்சாற்றுகின்றது.

    gunathamizhகுணசீலன் வலைப்பூ
    வேர்களைத் தேடி என்ற தலைப்பினைக் கொண்ட www.gunathamizh.com [7] வலைப்பூ பேராசிரியர் முனைவர் இரா. குணசீலன் அவர்களால் இன்று வரை தரவுகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. கலை, இலக்கியம், ஆய்வுக் கட்டுரைகள் என தமிழ் சார்ந்த பல்வேறு தகவல்களை பதிவு செய்துள்ளார். வலைத்தளத்திலும் வலைப்பூவிலும் தமிழ் தரவுகளைப் பதிவு செய்வது இவரது தலையாயப் பணியாக உள்ளது என்பதை அறிய முடிகிறது. தமிழ் வலைப்பூக்களைப் பற்றிய தொகுப்பு இவரது பதிவில் தொடர்பாய் உள்ளது நோக்குதற்குரியது.

    இவ்வலைப்பூக்கள் மட்டுமே அல்லாமல் பக்தி இலக்கியம், நவீன இலக்கியம் குழந்தைகள் பாட்டு, கவிதை, கட்டுரை என அனைத்து விதமான தகவல்களையும் பதிவு செய்து எண்ணற்ற பல வலைப்பூக்கள் இணையத்தில் வலம் வருகின்றன.

    வலைப்பூக்களின் இலக்கியப் பணி
    இலக்கியம் சார்ந்த வலைப்பூக்கள் தமிழ் வலைத்தளத்தில் அதிகமாக வெளிவரத்தொடங்கியுள்ள இந்த இணைய இலக்கிய காலத்தில் வலைப்பூக்களினால் சங்க இ.லக்கிய நூல்களும் அதற்குப் பிறகு தோன்றிய எல்லா வகையான இலக்கண இலக்கிய நூல்களையும் பதிவு செய்து கொள்ள முடிகிறது. அடுத்த தலைமுறையினரிடையே தமிழ் இலக்கியம் பற்றிய முழுமையன புரிதலை ஏற்படுத்த இத்தகைய வலைப்பூக்கள் பெரிதும் துணை நிற்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. காகிதங்களில் கரையான்களுக்கு இரையாக்கிய காலம் மாறி இன்று எவ்விதத்திலும் அழியாத நிலையில் தொழில் நுட்பத்தின் துணை கொண்டு பன்னெடுங்காலமும் மக்கள் படிக்கவும் பயனுறவும் இத்தகைய இணைய பதிவுகள் துணை நிற்கின்றன.

    தமிழ் வலைப்பூக்கள் மொழி, இலக்கியம், இலக்கணம், சமயம், பண்பாடு உள்ளிட்ட கருத்தோட்டங்களைத் தாங்கி வருகின்றன. இவற்றின் வருகையால் தமிழ் ஆய்வுப் பரப்பில் புத்தெழுச்சித் தோன்றியுள்ளது.8 என்கின்றார் முனைவர் க. துரையரசன். இலக்கியத் தரம் வாய்ந்த வலைப்பூக்கள் மட்டுமே இங்கு விளக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற பல பூக்கள் இணையத்தையும் தமிழ்மொழியினையும் இன்றும் அலங்கரித்து வருகின்றன.

    முடிவுரை
    கல்வெட்டுகளிலிருந்து ஓலைக்கும் ஓலைகளிலிருந்து காகிதத்திற்கும் மாறிய தமிழ் மொழி இன்று கணினி தமிழாக மாறியிருப்பது காலத்தின் கட்டாயமாகவுள்ளது. ஆய்வுக் கட்டுரைகள் போன்றவற்றை பதிவின் மூலம் வெளியிடுவதனால் பிற நாடுகளில் வாழும் தமிழ்ச் சான்றோர்களாலும் விமர்சிக்கக் கூடியதாக அமைகிறது. இலக்கிய – இலக்கண வளர்ச்சிக்கும் தமிழின் தொன்மையும் பழமையும் வெளி உலகிற்கு தெரியப்படுத்திட இன்றைக்குக் கட்டாயமான தேவையாக வலைப்பதிவுகள் எனப்படும் வலைப்பூக்கள் உள்ளன.

    துணை நூற்பட்டியல்
    1. http://ta.m.wikipedia.org/wiki/
    2. முனைவர் துரை. மணிகண்டன், இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள், ப. 11
    3. muelangovan.blogspot.in
    4. manikandanvanathi.blogspot.in
    5. Arivumathi.blogspot.in
    6. duraiarasan.blogspot.com
    7. Gunathamih.blogspot.com
    8. முனைவர் க. துரையரசன், இணையமும் இனிய தமிழும், ப. 100

     

     

    கி. கண்ணன்,
    முனைவர் பட்ட ஆய்வாளர், (ப/நே.)
    அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை,
    தமிழ்ப் பல்கலைக்கழகம்,
    தஞ்சாவூர்.

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 53

    –சு. கோதண்டராமன்.

     

    வேதப் புதிர்கள் சில

     

    புதிர்களைத் தீர்ப்பதில் ஆர்வம் கொண்டவர்களுக்கு வேதம் ஒரு வைரச் சுரங்கம். வேதத்தில் உள்ள நூற்றுக்கணக்கான புதிர்களில் சில மட்டும் இங்கே தரப்பட்டுள்ளன:-

    முட்டையிலிருந்து கோழியா, கோழியிலிருந்து முட்டையா- இது நீண்ட நாள் பிரச்சினை. வேதத்தில் உள்ள இது போன்ற ஒரு புதிர்- தக்ஷன் அதிதியிடமிருந்து பிறந்தான். அதிதி தக்ஷனிடமிருந்து பிறந்தாள். 10.72.4

    ஒரு கால் உள்ளவன் இரு காலனைத் தாண்டிப் போகிறான். இரு காலன் முக்காலனை வெல்கிறான். இரு காலன் கூப்பிட்டால் நான்கு காலன் வருகிறான். ஐங்காலர் நின்று பார்க்கின்றனர். 10.117.8

    சோமன் தோத்திரங்களால் தூண்டப்பட்டு ஏழு நதிகளை மகிழ்விக்கிறார். அவை ஒரு கண்ணை வளர்க்கின்றன. 9.9.4

    தனியாகச் சஞ்சரிக்கும் ஒருவர் ஆறு பாரங்களைச் சுமக்கிறார். பசுக்கள் உயர்ந்த உண்மையை அடைகின்றன. மூன்று உலகங்கள் மேலே உள்ளன. அவற்றில் ஒன்று தெரிகிறது, இரண்டு மறைந்துள்ளன. 3.56.2

    இந்த இனிய தலை நரைத்த புரோகிதருடைய மூன்று சகோதரர்களில் நடுவர் மின்னல். மூன்றாமவர் நெய் முதுகு உடையவர். இங்கு நான் ஏழு புத்திரர்களை உடைய தலைவனைப் பார்க்கிறேன். 1.164.1

    அவர்கள் ஒற்றைச் சக்கரம் உள்ள தேருக்கு ஏழு குதிரைகளை இணைத்தனர். ஏழு பெயருடையதை ஒரு குதிரை சுமந்து செல்கிறது. மூன்று அச்சுகளை உடைய அழியாத சக்கரம் அது. எல்லா உலகங்களும் அதில் நிலைபெற்றுள்ளன. 1.164.2

    மூன்று தாய்மார்களையும் மூன்று தந்தைகளையும் தனியே சுமக்கிறார் அவர். அவர்கள் அவரைத் துன்புறுத்துவதில்லை. வானின் உச்சியில் அவர்கள் பேசுகிறார்கள். எல்லோருக்கும் தெரிந்த பேச்சு, எவரையும் கட்டுப்படுத்தாத பேச்சு. 1.164.10

    இவர்கள் ஆண்கள் என்று சொன்னார்கள். ஆனால் இவர்கள் பெண்கள். கண்ணுள்ளவன் பார்க்கிறான். இல்லாதவன் அறியமாட்டான். அறிவாளியான பிள்ளை அறிவான். இதைப் புரிந்து கொண்டவன் தந்தையின் தந்தை ஆவான். 1.164.16

    அந்த மரத்தின் உச்சியில் அழகிய இறக்கையுள்ள பறவைகள் இனிமையை உண்கின்றன. அவை அங்கே தங்கி முட்டை இடுகின்றன. அந்தப் பழம் இனியது என்று சொல்கிறார்கள். தந்தையை அறியாதவன் அதை அறியமாட்டான். 1.164.22

    நான்கு கொண்டைகள் கொண்ட அழகிய இளம்பெண் நெய்யினால் பளபளக்கும் முகத்துடன் அறிவை அணிந்து கொள்கிறாள். அவளிடத்தில் வலிமையுள்ள பறவைகள் இரண்டு வந்து அமர்ந்தன. அங்கு தான் தேவர்கள் தங்கள் பங்கைப் பெற்றுக் கொள்கின்றனர். 10.114.3

    Share
  • வீடு பெற நில்!

    வீடு பெற நில்!

    ஒரு அரிசோனன்

     

     crowd1

    ஸ்ரீநிவாசின் உரிமையாளர் உள்ளே நுழைந்தார்.  அங்கு பல வீட்டு உரிமையாளர்கள் குழுமி இருந்தார்கள்.

       “வாங்க ஸ்ரீநிவாஸ்,  எப்படி இருக்கீங்க!” என்று வரவேற்றாள் காமாட்சி[காமாட்சி நிலைய உரிமையாளர்]. அவர்களின் பெயர் தெரியாததால், இனிமேல் அனைவரையும் அவர்களின் வீட்டுப் பெயராலேயே குறிப்பிடுவோமே!

       “என்னத்தைங்க சொல்லறது?  பொழுதுபோய் போழுதுவந்தால் இங்கே வந்து நாம பேசறோம்.  அலுத்துக்கறோம்.  வேற என்னாங்க சொல்றது!” அலுத்துக்கொண்டார் ஸ்ரீநிவாஸ்.

       “அண்ணாச்சி, ஏன் அலுத்துக்கறீக?  இங்கே வந்து பேசுனாத்தானே வீட்ட ஒழுங்கா வச்சுக்கத் தாவலை!”  என்றார் அப்துல்லா.

    abdulla

       “நீங்க சொல்றது சரித்தான் பாய்!  ஆனா, வீட்ட ஒழுங்க வச்சுகனுமின்னு புது வீட்ட கட்டாம இருக்காகளே!  அப்படி இருந்தா புள்ள குட்டிகளுக்குக் குடி இருக்க வீடு கிடைக்குமா?” என்று தன்பங்கு குறையைச் சொன்னார் தேவநாயகம்.

       “ஏங்க, வாடகை வீடு கிடைக்காதா?”  என்று அப்பாவித்தனமாக ஒலித்தது ஒரு இளம் குரல்.

       அனைவரும் தலையைத் திருப்பிப் பார்த்தால், சுரேஷ் என்ற ஒரு சிறுவன் நின்றுகொண்டிருந்தான்.  அவன் முகத்தைக்கண்ட அனைவருக்கும் சிரிப்பு வந்தது.

    boy

       “நீ எங்கே இங்கே வந்தே?”  ஒருமித்த குரல் எழுந்தது.

       “நானும் ஒரு வீட்டுக்குச் சொந்தக்காரன்தானே!  கேள்வி கேட்கக்கூடாதா?” மழலை துள்ளி விளையாடியது.

       “ஆமாம், இவன் எங்கே இங்கே வந்தான்?”  ஒரு முணுமுணுப்பு எழுந்தது.

       “வரவேண்டிய வேளை வந்தால் வரவேண்டியதுதானே!  கேள்வி கேட்டால் நாமும் பதில் சொல்லவேண்டியதுதானே!” என்று ஸ்ரீநிவாஸ் சொல்லிவிட்டுத் திரும்பிப்பார்த்தால், சுரஷ் மாயமாக மறைந்துவிட்டிருந்தான்.

        “எங்கே போயிட்டான் இந்தப் பிள்ளையாண்டான்?  கேள்வி கேக்கவேண்டியது, அப்பறம் பதில் சொல்லறதுக்குள்ள ஓடிப்போயிடவேண்டியது!”  அம்புஜம் மாமியின் குரலில் எரிச்சல் இருந்தது.

       “விட்டுத்தள்ளுவீகளா மாமி.  சின்னப்புள்ள, புதுவீடு, அதுதான் அடிக்கடி ஓடிப்போகுது.” என்றார் அப்துல்லா.

       “ஆமாம்.  விட்டுத் தள்ளுங்க!”  என்று அப்துல்லா சொல்வதை ஆமோதித்தார் தேவநாயகம்.

       “சொல்லுங்க, ஏன் வாடகை வீட்டுல இருக்கக் கூடாது?”

       மீண்டும் அதே குரல், சுரேஷ்தான்!

       “சுரேஷ் கண்ணா.  ரூல் அப்படித்தாண்டா!  எல்லோரும் சொந்த வீட்டில இருக்கணும்தானே சட்டம்!  அதை நம்ப எப்படி மாத்த முடியும்?” புதுக் குரல் ஒலித்தது. சுரேஷின் அம்மா சரஸ்வதியுடையதுதான் அது.

       “சரிம்மா!”  பழையபடியும் மறைந்துவிட்டான் சுரேஷ்.

    crowd2

       தூரத்தில் கூக்குரல் ஒலித்தது.  அனைவரும் அப்பக்கம் திரும்பினார்கள்.  நூற்றுக்கணக்கான பேர்கள் – உருவம்கூடச் சரியாகத் தெரியாத தூரத்தில் நின்றுகொண்டு – கூக்குரல் இட்டுக்கொண்டிருந்தார்கள்.

        “யாருங்க அவங்க?  ஏன் இப்படிக் கத்தறாங்க?”  காமாட்சி கேட்டாள்.

       தொண்டையைச் செருமிக்கொண்டார், புதிதாக உள்ளே நுழைந்த வரதராஜுலு.

       “அவங்கல்லாம் வீடு இல்லாதவங்க!  புதுசா வீடு கிடைச்சாத்தானே குடிபோகமுடியும்?  அதுதான் இங்கே நிக்கறாங்க!”

       அவர்கள் பார்க்கப்பார்க்க, வீடில்லாதவர்கள் கூட்டம் பெருகிக்கொண்டே போவதாக அவர்களுத் தோன்றியது.

       “ஏன் அவா கும்பல் ஜாஸ்தியாப் போயிண்டே இருக்கு?” அம்புஜம் மாமி குரல் ஒலித்தது.

       “இப்பத்தான் புத்சா வூடு கட்றது கொறஞ்சு பூட்டுதே மாமி!  தெரியாத்த மாறி கேக்குறே!”  பின்னால் இருந்த முனியாண்டி உரக்கக் கத்தினான்.

       “எல்லாம் சோம்பேறித்தனம், சொயநலமுங்க!  தங்களோட வீட்டை நல்லப் பாத்துக்கணும்னு வீடு கட்டமாடேங்கராணுவ!  ஆனாப்பாருங்க, நான் நாலு வீடு கட்டினேனுங்க!”  என்றார் அப்துல்லா.

       “உங்கமாதிரி இருக்கறவங்க கொஞ்சப்பேருதானுங்க.”  இது ஸ்ரீநிவாஸ்.

       “எங்க தாத்தா பத்து வீடு கட்டினார்.  எங்க அப்பா அஞ்சு கட்டினார்.  நானும் எங்களவரும் ரெண்டுதான் கட்டினோம்.”  அன்புஜம் மாமி கணக்குச் சொன்னாள்.

       “எனக்கும் ரெண்டு வீடுதாங்க.”  தேவநாயகம் செய்ந்து கொண்டார்.

       “அந்தக்காலத்துல நிறைய வீடு கட்டணும்கற ஆசை இருந்துது.  கட்டினாங்க.  சரியாப் பராமரிக்க வசதி இல்லை.  அதுனால எல்லா வீடும் ஸ்ட்ராங்கா இல்லை.  ஒரு சிலதான் நிலைச்சு நின்னுது.  இப்ப அப்படியா? நம்ம வீட்டையும், நாம கட்டின வீட்டையும் நிறைய நாள் இருக்கும்படி பாத்துக்கறோம்.  அதுனால ரெண்டு வீடுக்குமேல கட்ட வசதி இல்லாம போறது.”  ஸ்ரீநிவாஸ் விளக்கம் கொடுக்க முனைந்தார்.

       “அதோட மட்டுமில்லீங்க.  கலியாணம் ஆனவங்கதான் வீடுகட்டலாம்னு வேற சொல்றாங்க. போறாததுக்கு, பொறக்கற ஒரொரு குழந்தைக்கும் ஒரு வீடு கட்டிக்கொடுக்கணும்னும் ரூல் போட்டாச்சு.” காமாட்சி தனக்குத் தெரிந்ததைச் சொன்னாள்.

       “இது பிற்போக்குத்தனம்.  திருமணம் செய்துகொண்டுதான் வீடு கட்டவேண்டுமா?  இப்படிப்பட்ட பிற்போக்குத்தனமான, பகுத்தறிவுக்கு ஒப்பாத சட்டதிட்டங்களால்தான் நாடு முன்னேறாமல் நிற்கிறது.  மேலை நாடுகளில் இப்படிப்பட்ட சட்டங்கள் இல்லை.  அதனால்தான் அங்கு வீட்டுப் பற்றாக்குறை இல்லை!”  என்று சிங்கமாக முழங்கினார் சிங்காரவேலர்.

       “அதுசரி, அங்கே ரெண்டுபேர் சேர்ந்து வீட்டைக் கட்ட ஆரம்பிக்கறாங்களாம்.  வேண்டாம்னா இடிச்சுப் போட்டுப் போயிடறாங்களாமே?”  என்று வினவினார் தேவநாயகம்.

       “இங்கிட்டு மட்டும் என்ன வாழுதாம்?  கண்ணாலம் கட்டாம வூட்டக் கட்ட ஆரம்பிச்சுடறாங்க.  அப்பால, சட்டத்துக்குப் பயந்துகினு இடிச்சுத்தள்ளிடறாங்க.  இன்னும் சிலபேரு கட்டின வூட்டை வுட்டுட்டு ஓடியே போயிடறாங்க.”  முனியாண்டி தூரத்தில் இருந்து கத்தினான்.

       “இடிக்கறதுக்கு அது பரவயில்லைக!  யாராவது வந்து குடி இருக்கலாமில்ல!”  இது அப்துல்லா.  அதை தேவநாயகமும், ஸ்ரீநிவாசும் ஆமோதித்தார்கள்.

    speech

        “அதனால்தான் இந்த மூடத்தனமான, குருட்டுத்தனமான சட்டதிட்டங்கள் ஒழிக்கப்படவேண்டும், உடைத்தெறியப்பட வேண்டும் என்கிறேன்.  விரைவிலேயே ஒரு போராட்டமும் நடத்தலாம் என்று இருக்கிறேன்.”  மேடைப்பேச்சுத் தொனியில் மீண்டும் முழங்கினார் சிங்காரவேலர்.

       “ஊரோட ஒத்து வாழவேணும், இல்லையா!  இப்படி எதுக்கெடுத்தாலும் போராட்டம், போராட்டம்னா எப்படி?  சட்டம் போட்டவங்க இதெல்லாம் தெரியாமலா போட்டிருக்காங்க.  நினைச்சவங்க நினச்ச்போதேல்லாம், கண்ட இடத்திலே, ஒரு விதிமுறை இல்லாம விடுகட்டினா அதுக்கு வேண்டிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டாமா?”  என்று கனிந்த குரலில் கேட்டார் கல்யாணராமன்.

       “ரெண்டுபேர், ரெண்டுபேர்னா, என்னைமாதிரி ரெண்டுசின்னப்பசங்க வீடுகட்டலாமா?”  திடுமென்று அங்கேவந்து குதித்து, கேள்வியைக் கேட்ட சுரேஷ் ஓடியே போய்விட்டான்.

       “என்னது, இந்தக் குழந்தை திடும்திடும்னு வந்து நின்னு, கேள்வியைக் கேட்டுட்டு ஓடியே போயிடறது!” என்று முகத்தை தோளில் இடித்துக்கொண்டாள் அம்புஜம் மாமி.

       “சும்மா குழந்தையைத் திட்டதீங்க, மாமி.  அதுக்கென்ன தெரியும்?  குட்டியும், நாயும் குடிபோன இடத்தை விட்டு வருமா?”  என்று சமாதானம் சொன்னார் வரதராஜூலு.

       “ஆமாம்!  என்னைத் திட்டாதீங்க மாமி.  மாமா, நீங்களே சொல்லுங்க.  என்னைமாதிரிச் சின்னப்பசங்க ஏன் வீடு கட்டுக்கூடாது?”  கல்யாணராமனின் கையைபிடித்து உலுக்கினான் சுரேஷ்.

       “அதுக்கு வயசு வரணும்.  நீ சின்னப்பையன் இல்லையா.  உனக்கு வீடு கட்டத் தெரியாது.” என்று இருக்கும் இடத்திலிருந்தே சுருக்கமாகச் சொன்னார் ஸ்ரீநிவாஸ்.

       “சொல்லித்தந்தா கட்டிடப் போறேன்!”  என்று சிரித்த சுரேஷ், வழக்கப்படி கண்ணிமைக்கும் நேரத்திற்குள் காணாமல்போய்விட்டான்.

    mountain

       தூரத்தில் ஒரு பனிபடர்ந்த மலையின்மேலே கண்ணைப்பறிக்கும் வெளிச்சத்தில் எதோ ஒன்று தெரிந்தது.  உருவம் புலப்படாத பலர் அந்த மலையின் மீது ஏறிச் சென்று கொண்டிருந்தார்கள்.  சிலர் அங்கிருந்து உருண்டு விழுந்து கூட்டமாக நின்று கத்திக்கொன்றிருந்தவர்களுடன் சேர்ந்து கொண்டார்கள்.  அவர்களில் பலர் எங்கோ போவதும், அதற்கும் அதிகமானவர் அங்கு வந்து சேர்ந்து கொள்வதுமாக இருந்தது.

       இதை வியப்புடன் பார்த்த சரஸ்வதி, “ஏன் அந்த மலையில் ஏறிப்போகிறார்கள்?  ஏன் உருண்டு விழுகிறார்கள்?” என்று கேட்டாள்.

       “அதுங்களா!  அந்த மலைமேலதாங்க ஒரு பெரிய நகரம் இருக்குது.  அங்கே ரொம்ப வசதியான வீடுக இருக்காப்பல.  தோட்டம், துரவு, மத்த வசதிக்கெல்லாம் கொறச்சலே இல்லீக.  அங்கிட்டு வீடு எத்தன காலமானாலும் அப்படியே புதிசா இருக்குமாங்க.”  என்று சொன்னார் அப்துல்லா.

        “நீங்க போய் பாத்திருக்கீங்களா?”

          இல்லை என்பதுபோல தலையைக் குறுக்கவாட்டில் ஆட்டினார்.

       “நாம் இங்கு வீட்டை எப்படி வைத்துக்கொள்கிறோம் என்று கணக்கு எடுக்கப்படுகிறது.  அதைப் பொறுத்து அங்கு வீடுகள் கொடுக்கப்படுகின்றன.  வீட்டை ஒழுங்காக வைத்துக்கொள்ளாமல் பாழடையவோ, சேதமாகவோவிட்டவர்கள் உருட்டித் தள்ளப்படுகிறார்கள்!”  என்று தனக்குத் தெரிந்ததைத் சொன்னார் தேவநாயகம்.

          “உங்களுக்கு எப்பாடித் தெரியும்?” இந்தமுறையும் கேள்வியை எழுப்பியவர் சிங்காரவேலர்தான்.

       “புஸ்தகத்திலே படிச்சிருக்கேன்.”

       “எந்தப் புத்தகம்?”

       “எங்கிட்ட இருக்கற புத்தகம்.”

       “உங்ககிட்டே இருக்கிறது என்பதால் அது உண்மையா?  அதில் எழுதி இருப்பதை நாங்கள் ஒப்புக்கொள்ள வேண்டுமா?”  சிங்காரவேலர் அதட்டும் குரலில் கேட்டார்.

       “மாமா, நீங்க எதையும் ஒப்புக்க மாட்டேங்கறீங்களே!  எதை ஒப்புக்குவீங்க?”  பின்னாலிருந்து சுரேஷ் கேட்டது சிங்காரவேலரைத் திடுக்கிடவைத்தது.

       “நான் என் அறிவையும், கண்ணால் காணுவதையும், காதால் கேட்பதையும், தகுந்த சான்றுகளுடன் சொல்வதையும்தான் ஒப்புக்கொள்வேன்.  அதுசரி, நீ என்ன பெரிய மனிதன்மாதிரி என்னைக் கேள்வி கேட்கிறாய்?”  அவர் குரல் உஷ்ணமாக இருந்தது.  ஒரு சிறுவன் தன்னை மடக்குவது மாதிரி கேள்வி கேட்பதா என்ற எரிச்சலலும், கோபமும் அவர் குரலில் கலந்திருந்தன.

       “தம்பி சரியாத்தானே கேக்குறான்.  நீ ஏன் சாரு சும்மா வெடய்க்கிறே!  யாரு எதைச் சொன்னாலும் நீதான் குறுக்கே வந்து அது சரியில்லே, இது சரியில்லேங்கறே.  நீதான் சொல்லேன், பாப்பம்.  அந்த மலைகப்பால என்னதான் கீது?”  முனியாண்டி தூரத்தில் இருந்து கத்தினாலும் எல்லோரின் காதிலும் அது ஒலிக்கத்தான் செய்தது.

       “ஆமாம்.  சொல்லுங்க!”  பல குரல்கள் ஒலித்தன.

       “அங்கே போய்ப் பார்க்காதவரை நாம் ஒன்றும் சொல்ல முடியாது.  நாம் காண்பதெல்லாம் வெறும் மனப் பிரமை.  கண்ணைக்கூசும் வெளிச்சம் பலவிதமான இல்லாத தோற்றங்களை உண்டுபண்ணுகிறது.”  சிங்காரவேலர் தான் சொல்வதுதான் சரி என்பதுபோன்ற திட்டவட்டமான் குரலில் அறிவித்தார்.

       “ஒரு விதத்திலே அப்துல்லா சொன்னதோ, தேவநாயகம் சொன்னதோ சரியாக இருக்கலாம்.  அதுனால, நாம அங்கே என்ன இருக்குன்னு மனசை ஒருநிலைப்படுத்தி யோசித்தால் எல்லாம் விளங்கும்.” என்றார் கல்யாணராமன்.

       ”நீங்க என்ன சொல்றேள்?” என்று கேட்டாள் அம்புஜம் மாமி.

       “நீங்க சொல்றது புதிர்போடறமாதிரி இருக்கு.”  இது சரஸ்வதி.

       “ஒண்ணைப் பார்க்காதாதுனாலே அது இல்லேன்னு நம்ம சிங்காரவேலர் சொல்றார்.  அந்த மலைலே ஏறி வெளிச்சத்திலே போய் மறையரவங்க யாரும் திரும்பி வரதாக் காணோம்.  மலைலேந்து உருண்டு விழறவங்க தூரத்திலே வீடு வேணும்கற கூட்டத்தில கலந்துடறாங்க.  அதைப் பார்த்து நாம நம்ம மனசுக்குத் தோணினதைச் சொல்றோம்.” என்று அனைவர் சொன்னதையும் சுர்க்கிச் சொன்னார்  வரதராஜுலு.

       “நான் மேலே சொல்றேன்.”  என்று துவங்கினார் ஸ்ரீநிவாஸ்.  “மலைக்கு மேல என்ன இருக்குன்னு தெரியாம வெளிச்சம்தான் நம்ம கண்ணை மறைக்குது.  அந்தக் கூச்சம் தெரியாம இருக்க ஒரு நல்ல கருப்புக்கண்ணாடியை மாட்டிக்கிட்டா அங்கே என்ன இருக்கும்னு தெரியும் இல்லையா?”

       “அது மட்டும் போதுமா?  இங்கேந்து பார்த்தா தெரியற விஷயமா இது?”  சரஸ்வதியிடமிருந்து கேள்வி பிறந்தது.

       “ஒரு பைனாகுலர் இருந்தா…”

       “ஏன்?  நாமளும் அந்தக் கூட்டத்தோட சேந்துக்கினு போய்ப்பாத்தாத்தான் இன்னா கொறஞ்சா பூடும்?”  முனியாண்டியின் குரல் காதில் விழுந்த அடுத்தகணமே சுரேஷின் குரல் பெரிதாகக் கேட்டது.

       “பை, பை, அம்மா, மாமா, மாமி, எல்லோருக்கும், பை,பை.  நான் வரேன்.  உங்க எல்லோரோட வீடுகளும் இடிஞ்சு போயிடுத்து.  பை, பை!”  உற்சாகமாகக் கையை ஆட்டிவிட்டு ஒடி மறைந்தான் சுரேஷ்.

       முனியாண்டி மட்டும் மலையில் ஏறும் கும்பலில் இருந்தான்.  மற்றவர்கள் வீடில்லாமல் கூச்சலிடும் கும்பலில் தாங்கள் இருக்கக் கண்டார்கள்.

    nurse

    டாக்டர்!  கார் ஆக்சிடென்ட்லேந்து கொண்டுவந்தவங்கள்ல இந்தப் பையன் சுரேஷ் மட்டும்தான் பிழைச்சுக்கிட்டான்.  அவனுக்கு வைட்டல் சைன்ஸ் போயிட்டுபோயிட்டு வந்துட்டே இருந்திச்சு. நினைவும் வந்துவந்து போயிட்டே இருந்துது.  கண்ணைத் திறந்துட்டான்.  இப்ப அவனது எல்லாம் ஸ்டெடியாக ஆயிடுச்சு.  இதயத் துடிப்பு, சுவாசம் எல்லாம் நார்மல். என்று நர்ஸ் டாக்டரிடம் தொலைபேசியில் சொன்னாள்.

       மத்தவங்க.?...

       ஆக்சிடென்ட் ஆன மினிபஸ்லேந்து கொண்டுவந்த அத்தனை பெரும்….  பேரைப் படிக்கறேன், டாக்டர் – ஸ்ரீநிவாஸ், காமாட்சி, அப்துல்லா, தேவநாயகம், அம்புஜம், முனியாண்டி, சரஸ்வதி, கல்யாணராமன், வரதராஜுலு, சிங்காரவேலர் – இவங்க யாரும் பிழைக்கலை.  ஒரு நிமிஷம் முன்னாலேதான் ஒருத்தருக்கு அப்பரம் ஒருத்தரா சில செகண்ட்ஸிலேயே போயிட்டாங்க…

     

    ***

     

     

    Share
  • ஏழையின் அந்த(ப்)புரம்!

    -பா. ராஜசேகர்

    நாலடிச் சுவரு வச்சு
    நாற்பது ஓலை மேஞ்சு!                                  hut
    சின்னதாக் கதவு வச்சுத்
    தரையிலே சாணிபூச!!

    நிலவு வந்து ஒளிகொடுக்க
    இயற்கையாகக் குளிரடிக்க!
    படுத்தா கால் தடுக்கும்
    நிற்கையில தலையிடிக்கும்!!

    அன்புக்குப் பஞ்சமில்ல
    அழகுக்கு இணையுமில்ல !
    ஊருக்கு ஒதுக்குபுறம்
    அது எங்க கிராமப்புறம் !!

     

    Share
  • காலம்! (2)

    மீ. விசுவநாதன்

    vallamai1

    சின்னப் பருவத்தில் சேதிசொன்ன வெண்ணிலவே
    இன்றும் எனக்கு(ள்) இனிக்கிறது ; என்னதான்
    விஞ்ஞானம் கொக்கரித்து விண்ணிற்கே போனாலும்
    மெஞ்ஞான என்னிலவே மேல். (11) 10.01.2015

    பழவண்டி தள்ளுபவன் பாடுதான் பட்டுக்
    கிழவண்டி யானாலும் கீர்த்தி முழமும்
    குறையாமல் பேசுகிறான் ; கோடீஸ் வரனோ
    அறைக்குள் அடங்கிய ஆள். (12) 11.01.2015

    எல்லாமே நன்றாய் இசைவுடனே கற்றாலும்
    வல்லானை இப்போதே வாயார மெல்லுவதே
    நல்லோர்க் கழகாகும் ; நம்பாத பேருள்ளும்
    துல்லியமாய்த் தோன்றும் துணை. (13) 12.01.2015

    விதவிதமாய்க் “கார்கள்” வியாபார(ம்) ஆகும்
    புதுமையென சக்கரங்கள் போடா ததோடுமோ ?
    வாழ்வுமே அப்படித்தான் ! மாற்றங்கள் கோடியாம் ;
    ஊழ்வினை மாறாத ஊற்று.. (14) 13.01.2015

    வெயில், மழை, சூறை, வெளிவானம் ,சோலை
    மயில்,குயில், ஆறு ,மனதில் பயிலும்
    மவுனம் , கவிதை மடியில் கடவுள்,
    பவுர்ணமி எல்லாம் பரம். (15) 14.01.2015

    வெல்ல(ம்) ,அரிசி ,விரும்பும் கரும்புடன்
    கல்யாண மஞ்சள், கனிகளும் எல்லோர்க்கும்
    நல்லின்பம் கூட்டிடும் நாளிது பொங்கலாம் !
    சொல்கிறேன் வாழ்த்துச் சுகம். (16) 15.01.2015

    அரும்பும் கதிரோன், அழகாம் இருட்டு,
    விரும்பும் பொருளாய் வெளிச்ச அருளாய்
    திரும்பும் திசையெலாம் தெய்வ முணர்ந்தால்
    கரும்பும் கசப்புமோர் கண். (17) 16.01.2015

    “நிலமண் ணடி,கல் , நிலக்கரி , வைரம்”
    பலநிலைப் பக்குவத்தில் பாடம் பலவகை !
    காலம் நமக்காகக் கற்றுத் தருகின்ற
    கோலவகை என்றுதான் கொள். (18) 17. 1.2015

    கிருஷ்ணப் பருந்தும் கிளியைத் துரத்தும்!
    சிருஷ்டி இதுதான் ; சிறப்பும் பெருமையும்
    கற்றுத் தருவது காலக் கடவுளென
    உற்றுநீ பார்த்தே உயர். (19) 18. 1.2015

    “தமிழ்த்தாத்தா” பற்றி தரமான பேச்சை
    அவைக்களித்தார் கீழாம்பூர் ; ஆஹா சுவைச்சத்து !
    இன்றைய காலம் இனிதாகச் சென்றதற்கு
    நன்றி உரைக்குமென் நா. (20) 19. 1.2015

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(146)

    –சக்தி சக்திதாசன்.   

     

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்கள்.

    மூன்று வாரங்களின் பின்னே இம்மடல் வழியாக உங்களைச் சந்திப்பதில் ஆறுதல் அடைகின்றேன்.

    எதற்கிந்த இடைவேளை? எனும் எண்ணம் உங்களுக்கு ஏற்படலாம் காரணம் இருக்கிறது .

    எனது மனைவியின் தந்தை, எனது மாமனார் தனது 87வது வயதில் சென்னையில் ஏப்ரல் மாதம் 2ம் திகதி காலமானார்.

    அவரது இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்வதற்காக சென்னை சென்று கடந்த ஞாயிறு காலை லண்டன் திரும்பினோம்.

    ஏ. எஸ். ராமஸ்வாமி ஐயர் !

    ஆமாம் அவர் தான் எனது மாமனார்… இல்லை… எனது தந்தையின் மறைவின் பின்னால் எனது தந்தை எனும் ஸ்தானத்தில்இருந்தவர்.

    தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார் திருநகரி எனும் ஊரில் 1927ம் ஆண்டு சுப்பிரமணியம் ஐயருக்கும், அம்மாளு அம்மாளுக்கும் மூத்த மைந்தனாகப் பிறந்தார்.

    அந்நாளில் தங்கப்பதக்கம் பெற்று சட்ட வல்லுநராகத் தேறி அரசாங்கப் பணிபுரிந்த சுப்பிரமணி ஐயரின் மறைவுக்குப்பின்னால் தனது தம்பியுடன் தாயாரின் ஊரான கடையநல்லூரில் அமைந்துள்ள கிருஸ்ணாபுரத்தில் வாழ்ந்து வந்தார்.

    வாழ்வில் பல சிரமங்களுக்கு ஊடாக, தனது விடாமுயற்சியாலும் தாயாரின் அன்பான வழிகாட்டுதலினாலும் கல்வியில்தேர்ச்சி பெற்று இந்திய வெளிநாட்டுச் சேவையான Indian Foreign Service இல் பணியாற்றினார்.

    பிரெஞ்சு, ஸ்பானிய மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்த இவர் இந்திய வெளிநாட்டுத் தூதரகங்கள் பலவற்றில் உயர்அதிகாரியாகப் பணியாற்றினார்.

    1987ம் ஆண்டு தனது பணியிலிருந்து ஓய்வு பெற்றார். 1994ம் ஆண்டு தனது மனைவியைப் பறிகொடுத்தார்.

    தனது அந்திமக்காலம் வரை தனது கால்களிலேயே நிற்க வேண்டும் என்பதில் மிகுந்த சிரத்தை கொண்டிருந்தார்.

    எனது எழுத்துக்களை மிகவும் விரும்பிப் படிக்கும் அவரின் வேண்டுகோள் எனது படைப்பான தமிழ்ப்பூங்கா எப்போதும்வெளிவரவேண்டும் என்பதுவே.
    எனது நூல்களில் ஒன்றான “கண்ணதாசன் ஒரு காவியம் ” வெளியீட்டின் போது என்னால் பங்குபெற முடியாத போது எனதுசார்பாக அவ்விழாவில் கலந்து கொண்டு மறைந்த அமரர் கே . பி. பாலச்சந்தர் அவர்களிடமிருந்து அந்நூலைப் பெற்றுச்சிறப்பித்தார்.

    பொறுமைக்கு ஒரு முழு உதாரணமாகத் திகழ்ந்தவர் எனது மாமனார். நான் அவரது மகளைக் கைப்பிடித்த நாளிலிருந்துஅவர் மறைந்த காலம் வரை எமக்கிருவரிடையே இருந்த அன்பில் எப்போதுமே மாசு படிந்ததில்லை.

    இதனை அவர் மறைவதற்கு சிலநாட்களுக்கு முன்னால் தொலைபேசியில் அவர் என்னிடம் கூறியபோது என்னையறியாமல் என் கண்களில் இருந்து நீர் வழிந்தோடியது.

    தன் தந்தையின் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தவள் என் மனைவி மைதிலி. ஒவ்வொரு வருடமும் இங்கிலாந்திலிருந்து மூன்றுவார கால விடுமுறையில் ஓடோடிச் சென்று தன் தந்தைக்கு தன் கைகளினால் அவருக்குப்பிடித்தவற்றை ஆக்கிக் கொடுப்பதையே தனது முக்கிய பணியாகக் கொண்டிருந்தாள்.

    இம்முறையும் கடந்த ஜனவரி மாதம் எனது மாமனாருடன் ஒரு மூன்று வார காலம் மிகவும் மகிழ்வாகக் களித்திருந்தோம்.

    தெய்வத்துடன் இணைந்து விட்ட பொறுமைத் திலகமாம் என் மானாரின் ஆத்மசாந்திக்காய் பிரார்த்திப்பதோடு அவரின்அன்பான ஆசியுடன் வழிகாட்டுதலும் தொடர்ந்து எனக்குக் கிடைக்க வேண்டும் என அவர்தம் பாதம் பணிந்துவேண்டுகிறேன்.

    20150421_183546(0)

    பொறுமைக்கு உதாரணமாய் திகழ்ந்த
    புண்ணிய சீலனாம் அயோத்தியின்
    இராமபிரானின் வழியில்
    பொறுமையின் பெருமையைக் காத்த
    இராமஸ்வாமியின் மருமகனாய்
    கிடைத்திட்ட பாக்கியத்தை நானும்
    கிளர்ந்திட்ட உணர்வுகளின் வழி
    உணர்ந்திட்ட பொழுதென்று அறிந்தேன்
    புலர்ந்திட்ட நாட்கள் அனைத்தும்
    புகட்டிட்ட பாடங்கள் எல்லாம்
    புகுத்திட்ட அனுபவங்கள் எனக்கு
    கற்பித்த பாடங்கள் ஆயிரம்
    தெரிந்திட்ட நிகழ்வுகளில் நானும்
    தெளிந்திட்ட பொழுதில் எல்லாம்
    மறைந்திட்ட என் மாமனார் மூலம்
    மனதினில் உறைந்திட்ட அறிவு ஆயிரம்
    எதையும் தாங்கிடும் இதயம் என்பார்
    அதையும் வாழ்வில் நான் கண்டிட்டது
    இருவராம் என் தந்தையும் மாமனாரும்
    தந்தை எனும் ஒளி வாழ்வில் மறைந்து
    இருளான மனம் மீண்டும் ஒளி கொண்டது
    மாமனார் எனும் பெரு ஒளிவிளக்கினால்
    இன்றதுவும் அணைந்தது என்று நான்
    மயங்கிய பொழுது எங்கிருந்தோ அசரீரியாய்
    எப்போதும் என்றும் உன் மனதில் ஒளியாய்
    நாமிருப்போம் என்று இருகுரல் ஒலியாய்
    மாமனாரும் தந்தையும் கூறினரே
    அன்பினுமினிய மாமனாரின் பாதம் பணிந்து
    ஆசி வேண்டியே அவரின் ஆத்மசாந்திக்காய்
    பிரார்த்திக்கிறேன்.

     

     

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • ஐந்து கை ராந்தல் (10)

    வையவன்

    நந்தவனத்தில் வெளிவந்த அட்டைப்படச் சிறப்புச் சிறுகதைக்கு வாசகர் கடிதம் ஏராளமாக வந்திருந்தது.
    அந்தப் பத்திரிகை அலுவலகம் வந்திருந்த கடிதங்களை ஒரு கட்டாகக் கட்டி அவனது முகவரிக்கு அனுப்பியிருந்தது.
    ஓஹோ வென்று புகழ்ந்து வந்திருந்த கடிதங்கள் அவனைப் பயமுறுத்தின.

    நாலைந்து கடிதங்கள் நாசூக்காகக் குறை கூறியிருந்தன. ஆசிரியர் முயற்சித்தால் மேல் நாட்டு எழுத்தாளர் தரத்துக்கு உயரலாம் என்று ஒரு கடிதம் ஆரூடம் கூறியது.

    மீண்டும் மீண்டும் அந்தக் கடிதங்களைப் படித்தான் சிவா.
    புகழ் ஒரு போதை என்பது பளிச்சென்று உறைத்தது. தன்னையறியாது கர்வம் தனக்குள் முளைவிடுவதை சிவா கவனித்தான்.

    எது எழுத்தாளனுக்கு மட்டுமின்றி, மனிதனுக்குக் கூட அத்தியாவசியமோ அந்த மென்மையான உணர்வுகளின் மீது பிறரது பாராட்டுக்கள் ஒரு பட்டுப் போர்வை போர்த்தின. ஒரு தங்கச் சிம்மாசனத்தில் தனிப்பீடமிட்டு ஒதுக்கின.

    முதல் கதை வெளிவந்த நாலைந்து வாரத்திற்குள் அவன் எழுதி எழுதித் திரும்பி வந்திருந்த பழைய கதைகளை வெவ்வேறு பத்திரிகைகளுக்கு அனுப்பி வைத்தான்.

    நான்கே மாதத்திற்குள் அவன் கதைகள் எட்டு பிரசுரமாகி விட்டன.

    ஒவ்வொன்றும் வெற்றி முரசு கொட்டிக் கொண்டு வெளிவந்தன. வரவேற்கப்பட்டன. போதாததற்கு மூன்று பத்திரிகைகளில் அவன் புகைப்படம் வேறு பிரசுரிக்கப்பட்டு விட்டது.

    தெருவில் போகும்போது அவனை சுட்டிக்காட்டி இன்னார் என்று யாராரோ பேசிக் கொண்டார்கள்.
    புகழ் முதலில் கூச்சப்படுத்தியது; பிறகு கர்வமூட்டியது.

    அப்புறம் அதில் ஒரு சுகம் தென்பட, அடிக்கடி அந்த சுகத்திற்கு மனம் ஏங்கலாயிற்று.
    சட்டென்று ஒருநாள் சிவா உறக்கத்திலிருந்து விழிப்பது போல் உதறிக் கொண்டு சுய உணர்வு பெற்றான்.

    ‘விடுதலை பெறுக’

    அண்செட்டியில் வெற்றிவேல் முன்னிலையில் கேட்ட அந்த வாசகம் பளீரென்று மனசில் சுடர் வெளிச்சமாகப் பரவிற்று.
    பாபா ஓம்கார்நாத்தின் மகன் நான். என் அம்மா திருப்பத்தூரில் முதலியார் ரைஸ் மில்லில் தவிடு விட்டுக் கொண்டிருக்கிறாள்.

    புகழே நீ ஒரு புழுதி மாதிரி என் மீது படிந்து என்னை நாசமாக்கி விடாதே; விலகி நில்’
    என்று மனசிற்குள் அவன் ஒரு கட்டளை இட்டான்.

    இந்த ‘ஸ்பாட் லைட்’ ஜாஜ்வல்யத்திலிருந்து ஓடிப் போய் உண்மையின் எளிமையை தரிசிக்க வேண்டும் போலிருந்தது.
    அவன்நேராக அம்மாவைப் பார்க்கத் திருப்பத்தூர் போனான்… பாங்கிலிருந்து எல்லாப் பணத்தையும் அவளுக்குக் கொடுக்க எடுத்துக் கொண்டு.

    ஒற்றை அறையுள்ள அந்த சின்ன வாடகை வீட்டில் கிழிந்த பாயில் அழுக்கான தலையணையில் படுத்துக் கொண்டு, நெல் மிஷினிலிருந்து அம்மா வரும்வரை காத்திருந்த போது புகழின் மயக்கம் சுத்தமாய்க் கலைந்து விட்டது.
    இன்னும் நான் பழைய சிவாதான்.

    அப்பாடா… இது எத்தனை ஆறுதலாக இருக்கிறது!
    வரும்போதே “எப்படா வந்தே?” என்று கேட்டுக் கொண்டே நுழைந்தாள் தாட்சாயணி.

    உடல் மெலிந்து, முகமெல்லாம் தவிடு படிந்திருக்க சாயம் போன சேலையில் அவளைக் காண நெஞ்சு நைந்தது. கண்ணிலும் உதட்டிலும் பாசம் பூரித்தது.

    “அரை மணி நேரம் ஆச்சும்மா”
    “ஏண்டா எளைச்சுப் போயிருக்கே”
    அவன் சிரித்தான்.

    “என்னடா சிரிக்கறே?”
    “என்னடா சிரிக்கறே?”
    “எந்த அம்மாவுக்கும் தன் பிள்ளை எளைச்சிருக்கற மாதிரியே தான் தோணுமா?”

    “அம்மாங்கள்ளாம் அசடுண்ணு சொல்றியா…”
    “நீ எப்பிடிம்மா இருக்கே?”

    அவன் அவள் கேள்விக்கு பதிலளிக்காது மடக்கினான்.
    “எனக்கு என்ன..நான் நல்லாத்தான் இருக்கேன்”

    “தான் எளைச்சிருக்கப்ப மகன் எளைச்சிருக்கறதை கண்டுபிடிக்க வேற யாராலே முடியும்?”
    “அசடுண்ணு சொல்றே அப்ப…”
    “நீ அசடானா நான் கசடாயிருப்பேம்மா.”

    “போதும் நிறுத்துடா” என்று அவன் மேலே புகழ்ந்து விட இடம் தராது, முகம கை கால் கழுவி வர வெளியே புழக்கடைக்குப் போனாள். திரும்பியபோது சிவா…

    “ஒரு மாசத்துக்கு முன்னாடி நான் பாபா ஓம்கார்நாத்தை சந்திச்சேன்” என்று கூறினான்.
    அம்மா முகத்தைத் துடைத்துக் கொண்டு நெற்றியில் குங்குமம் வைக்கப் போனாள்.

    “யாரது… பெரிய மகானா?”

    “பெரிய மகான் தான். எல்லோரும் பேசிக்கிட்டாங்க. எனக்கு அப்படித் தோணலே.”
    அவள் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொண்டு திரும்பினாள்.
    “ஏன்?”

    “நான் சாமியாராய் போகிறேன்னு தன் மனைவிகிட்டே விடுதலை வாங்கிட்டுப் போனவர் ஒரு மகானா… அவருக்கு விடுதலை கொடுத்தாளே அந்த அம்மா ஒரு மகானா?”

    அம்மாவின் முகம் அதிர்ச்சியடையும் என்று சிவா எதிர்பார்த்தான். மாறாக ஓர் அமைதி வந்தது.
    “அவரைப் பாத்தியா?”
    “பாத்தேன்.”
    “பேசினியா…”

    “சூடு குடுக்கறாப்பிலே! ஓடி வந்தவர் மகானாகிட முடியாதுண்ணு சொன்னேன்.”
    “அதை அப்புறமா பேசலாம்… நீ கொஞ்சம் சாப்பிடறியா… காலைலே வடிச்ச சோறு தான் இருக்கு. புளிக்கொழம்பு.”
    “எனக்குப் பசிக்கலேம்மா… நீ சாப்பிடு.”

    தந்தையைப் பற்றி அம்மா ஆர்வமாக விசாரிப்பாள் என்று எண்ணியதற்கு ஏமாற்றமாயிருந்தது.
    “நல்லா சொன்னியே… ஒனக்கு புளிக்கொழம்பு புடிக்காது இல்லே. இரு வேற சோறு வடிச்சு ஒரு பருப்புக் கொழம்பு வக்கிறேன்.”

    தான் சாப்பிடாமல் அவள் சாப்பிட மாட்டாள் என்று உணர்ந்தான்.

    “அடுப்பை மட்டும் பத்த வச்சுக் கொடுத்துட்டு இப்படிவாம்மா… அந்தப் பழைய சாதத்தையே நான் தக்காளியும் வெங்காயமும் அரிஞ்சு போட்டு மசாலா சாதம் பண்ணிடறேன்” என்று எழுந்தான்.

    “எனக்கு என்ன வேலையாம்…? நீ உக்காருடா” அம்மா அடுப்பு பற்ற வைக்கும் வேலையில் இறங்கினாள்.
    “நான் யாருக்கோ தான் சமைச்சுப் போட்டிருக்கேன். ஒனக்கு ஏம்மா போடக் கூடாது? இன்னிக்கு நாந்தான் சமைப்பேன்” என்று சிவா பிடிவாதமாகச் சொன்னான்.

    “சரி, உன் இஷ்டம்! தக்காளியும் வெங்காயமும் இருக்கு; அரிஞ்சு தர்றேன்” என்று தாட்சாயணி அரிவாள் மணையை எடுத்தாள்.

    அடுப்பு பற்றிக் கொண்டது. வாணலி காயட்டும் என்று அதைத் தூக்கி அடுப்பின் மீது வைத்தான்.
    அம்மா தக்காளி அரியலானாள்.

    “நீ லெட்டரிலே எழுதவே இல்லையே”

    அப்பாவைப் பார்த்ததைப் பற்றிச் சொல்கிறாள் என்று சட்டென்ஙறு இயைவுபடுத்திக் கொண்டான் சிவா.
    “இது எழுதற விஷயம் இல்லேம்மா… சொல்ல வேண்டியது… கேட்க வேண்டியது?”
    “எப்படியிருக்கிறார்?…”

    “வெள்ளை வெளேர்ணு மார் வரைக்கும் தாடி… தலை சுத்தமா நரைச்சிருக்கு. சாந்தியா… சௌக்கியமா இருக்கிறார். அவருக்கென்ன… கோடீஸ்வர சிஷ்யர்கள்! அமெரிக்காக்காரன்… கர்நாடகத்துக்காரன்… இப்படி”

    அவள் சிறிதும் பாதிக்கப்படாமல் தன் வேலையில் மூழ்கியிருந்தாள். ஒருமுறை அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் மனசை ஊடுருவி அவன் குத்தலுக்கும் கிண்டலுக்கும் முற்றுப்புள்ளி வைப்பது போன்ற பார்வை அது.
    “நீ என்ன கேட்டே… அவர் என்ன சொன்னார்?”

    ‘நீங்க ஏன் ஓடினீங்கன்னேன்… நதி ஓடுகிறதுன்னு சொன்னாரு. தப்பி ஓடறது ஞானமில்லேன்னேன்… இலை பழுத்தால் உதிரும்னார். நான் விடலே. சொல்லாமே ஓடி வந்தீங்களேன்னு குத்திக் காட்டினேன். விடுதலை பெற்றதுன்னாரு. யாரிடம்னு கேட்டேன். பெற வேண்டியவரிடம்ணு சொன்னாரு.”

    அவள் மௌனமாகக் கேட்டுக் கொண்டாள். அந்த வார்த்தைகளை எண்ணிப் பார்க்கிறவள் மாதிரி சற்று நேரம் கண்ணிமைகளை மூடினாள்.

    வாணலி காய்ந்துவிட சிவா எண்ணெய் ஊற்றினான். தாளித்து விட்டு அரிந்த தக்காளி வெங்காயத்தைக் கொட்டினான்.
    “அப்புறம் என்ன சொன்னாரு?”

    “விடுதலை பெறுகன்னாரு.”
    மசாலா சாதத்தைக் கிளறி விட்டுக் கொண்டே அம்மா மௌனமாக உட்கார்ந்திருப்பதைத் திரும்பித் திரும்பிப் பார்த்தான் சிவா.

    அவள் தியானிக்கிறாளா?
    யோசிக்கிறாளா…
    வருந்துகிறாளா…
    பழங்கணக்கைப் புரட்டுகிறாளா… ஒன்றும் புரியவில்லை.

    அவன் தன்னையே பார்ப்பதை ஒரு குறுகுறுப்பினால் உணர்ந்து தாட்சாயணி சிவாவைத் திரும்பிப் பார்த்தாள்.
    “என்னடா பாக்கறே?”
    “நீ அப்பாவுக்கு அனுமதி கொடுத்தியாம்மா?”
    தாட்சாயணி அவன் கண்களைப் பார்த்தவாறே பதில் சொன்னாள்.

    “ஆமாம்.”
    “ஏம்மா… ஒன்னாலே எப்பிடிம்மா அப்படி ஒரு அனுமதி கொடுக்க முடிஞ்சது?”

    தாட்சாயணி அவனுக்கு நேர் மேலே மாட்டியிருந்த கிருஷ்ணன் படத்தை நிமிர்ந்து பார்த்தாள். ஒரு பெருமூச்சு விட்டாள்.
    “சிவா அவர் மகான் தான்! தாலி கட்டி மறுமூச்சு விருந்துக்கு வந்தப்பவே அவர் என்னன்னு கண்டுபிடிச்சுட்டேன். பதிமூணு வருஷம் என்னோட அவர் பொழச்ச பொழப்பு இருக்கே.. உங்ககிட்டே காட்டின பாசம் இருக்கே… எல்லாம் நெல்லுக்கு மேலே உமி மாதிரி.”

    சிவா, முதன் முறையாக தன் தந்தையைப் பற்றி தாய் பேசுவதைக் கேட்டான்.
    “இப்படிப் பொறப்பட்டுப் போறவர் ஏம்மா கல்யாணம் பண்ணிகிட்டார்!”

    “அவரா பண்ணிகிட்டாரு? பையன் அடிக்கடி தியானம் பண்ணிகிட்டு உட்கார்ந்திருக்கானேன்னு என் மாமியாரும் மாமனாரும் பண்ணி வச்சாங்க.”

    அவர் ஏன் குழந்தை பெற்றுக் கொண்டார் என்ற கேள்வி அவன் தொண்டை வரை வந்தது. ஆனால் கேட்கவில்லை.
    “எனக்குத் தெரிஞ்சு அவரா விரும்பி எந்தக் காரியமும் செய்யல்லே”

    கேட்க முடியாத கேள்விக்குச் சொல்ல முடியாத பதிலை அம்மா சொல்லி விட்டாள்.
    சிவா திரும்பி மசாலா சாதத்தை அடுப்பிலிருந்து இறக்கினான்.

    “என்னிக்கோ ஒருநாள் அவரு பொறப்பட்டுப் போயிடுவாருன்னு மட்டும் எனக்குத் தெரியும். அதை ஒவ்வொரு நாளும் நான் எதிர்பார்த்துட்டே இருந்தேன்.”
    சிவா அதைக் கற்பனை செய்து பார்த்தான்.

    ஒவ்வொரு நாளும்…
    இன்றுதானா… இல்லை நாளையா… இன்றில்லை. அம்மாடா… அது இன்றில்லை.
    ஒருவேளை நாளையாக இருக்குமோ?

    இப்படியே பதின்மூன்று வருடங்கள். அவனுக்கு முதுகு சிலிர்த்தது.

    “அவர் எப்படிப் போவாருன்னு நான் நெனச்சு நெனச்சு பாத்திருக்கேன். அதுக்கெல்லாம் வித்தியாசமா என்னையே அவர் அனுமதி கேட்பார்னு மட்டும் எதிர்பார்க்கலே. கேட்டார்.”
    “நீ பேசாம போய் வாங்கன்னு சொல்லிட்டியா?”

    “இல்லே… எனக்கு பதில் சொல்லுங்க. நான் எப்படி ஜீவிக்கறதுன்னு கேட்டேன். அவர் இதோ இந்த கிருஷ்ணன் படத்தைக் காட்டினார். பட்டுன்னு எனக்கு ஒரு தைரியம் வந்தது. போற வழிக்கு பாறாங்கல்லா நான் இருக்க வேண்டாமேன்னு தோணிச்சு. தடுத்து நிறுத்தியிருக்க முடியுமா?”

    தாட்சாயணி சிவாவுக்காக ஒரு தட்டை எடுத்து வைத்தாள். ‘அம்மாவோடு ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டு எத்தனை நாளாயிற்று?’

    சிவா இன்னொரு தட்டை எடுத்து அவள் முன்னால் வைத்தான்.
    “நீ மொதல்லே சாப்பிடுடா”

    “ரெண்டு பேருமே சாப்பிடலாம்மா”

    அவள் வாணலியிலிருந்த சாதத்தை ஒரு போகணியில் கொட்டி முதலில் அவனுக்குப் பரிமாறிக் கொண்டே சொன்னாள்.
    “அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி அணைகட்டி நிறுத்தியிருக்கலாம். எத்தனை நாளைக்கு அது முடிஞ்சிருக்கப் போவுது?”

    அவள் தனக்குப் பரிமாறிக் கொள்ளாததை சிவா கவனித்தான். அன்னக்குத்தியை எடுத்து சாதத்தை அள்ளி அவள் தட்டில் போட்டான்.

    காலையில் அவள் மிஷினுக்குப் போவதற்காக வெகு சீக்கிரம் விழித்து அவனுக்காகச் சமைக்கத் தொடங்கியிருந்தாள். சிவாவின் தூக்கம் கலைந்து விடக்கூடாதே என்பதற்காக ஓசைப்படாமல் காரியங்களைச் செய்வது அரைத் தூக்கத்தில் அவனுக்குத் தெரிந்தது.

    அவன் எழுந்து உட்கார்ந்தான்.
    “ஏம்மா, இவ்ளோ காலையிலே?”
    “மிஷினுக்குப் போகணுண்டா”

    “இனிமே நீ மிஷினுக்குப் போக வேணாம்”
    “எதை நம்பி என் கைத்தொழிலை விட்டுடச் சொல்றே?”
    “நான் எழுதறேம்மா… அதுலே காசு கெடைக்குது”

    “எழுத்து நிரந்தரமில்லேப்பா. ஒனக்கு பர்மனெண்டா ஒரு வேலை கெடைக்கட்டும். நான் விட்டுடறேன்.”
    சிவாவிற்கு தாமு சொன்னது நினைவு வந்தது. எழுத்தை நம்பிவிடாதே!
    “அம்மா, உன்னை ஒண்ணு கேக்கணும்னே இங்கே வந்தேன்?”

    “என்னடா அது?”
    “ஒரு மோட்டார் ஒர்க்ஷாப்.. நான் இருக்கிறேனே… அந்த வீட்டுக்காரருடையது. அந்த ஒர்க்ஷாப் மானேஜரா இருக்கச் சொல்லி கூப்பிடறாரு.”

    “ஏன்… அவருக்கு என்ன?”
    “அவர் மதனபள்ளிக்குப் பேபாயிடறாராம்.”
    “அப்ப ஒர்க்ஷாப் அங்கே எதுக்கு?”

    அதற்கு சிவாவால் தெளிவான பதிலைச் சொல்ல முடியவில்லை.

    அதற்கு என்ன பதில் சொல்வது என்று யோசிக்கும் போதுதான் சிவாவுக்கு தாமுவின் விருப்பத்திற்கு இசைவாக இயங்க வேண்டிய கருவியாகத் தன்னை அவன் பயன்படுத்துகிறானோ என்று தோன்றியது.

    “நல்லா வளந்துட்ட தொழிலை ஏன் விடணும்ணு நெனக்கிறார்!”
    “…….”
    “அப்ப அவருக்குக் கட்டுப்பட்டுதான் நீ இருக்கணும். உன்னாலே அப்படி இருக்க முடியாதே”
    ‘உனக்காக எதற்கும் கட்டுப்பட்டு நான் இருப்பேன்’ என்று நினைத்தான் சிவா.
    அவன் மௌனமாக இருப்பதைக் கண்டு தாட்சாயணி தொடர்ந்தாள்.
    “எதையும் யோசிச்சுச் செய்.”

    காலையிலிருந்து மாலை வரை யந்திரம் அரைத்துக் கொட்டும் அரிசியில் தவிடு புடைக்கும் அம்மா… யந்திரத்துக்கும் ஒரு முதலாளிக்கும் கட்டுப்பட்டிருக்கும் அம்மா… தான் ஒருவரிடம் கட்டுப்படுவதை விரும்பாத அதிசயத்தை சிந்தித்துக் கொண்டே சிவா எழுந்து பாயைச் சுருட்டினான்.

    “எந்தத் தொழில் செஞ்சாலும், எங்கே உத்தியோகம் பண்ணினாலும் யாருக்காவது கட்டுப்பட்டு தானேம்மா ஆகணும்!”
    அரிசி கழுவிக் கொண்டே அம்மா பதிலளித்தாள்.

    “அது மெய்தான்! நீயா விரும்பி மனசார ஏத்துகிட்டா நீ எதுக்கும் கட்டுப்பட்டதா ஆகாது. வேற நிர்ப்பந்தத்துக்காக எதையாவது ஏத்துகிட்டா அது என்னிக்குமே ஒரு சுமைதான்.”

    அண்செட்டியில் சின்னாற்றங்கரையின் ஓரத்தில் ஆலமரத்தடியில் கேட்ட அந்த வாசகம் இரண்டாவது முறையாக மீண்டும் நினைவு வந்தது.

    ‘விடுதலை பெறுக.’
    அவன் குளித்து விட்டு வெற்றிவேலைப் பார்த்து வரக் கிளம்பினான்.

    Share
  • என்ன நடக்கிறது?

    – சுரேஜமீ

    என்ன நடக்குது எங்கள் நாட்டிலே
    எதிரெதிர் வருபவனும் தாக்கவும் அவனவனை
    ஏட்டினைப் படித்திடிணும் எவனுக்கும் அறிவுமில்லை
    ஏகிட்ட கல்வியென்றும் எதுசரியெனவும் இல்லை
    இருப்பவன் நம்பிடவும் மறுப்பவன் பரப்பிடவும்
    இருக்குது சுதந்திரமே இயம்பவும் செய்திடடா!
    கருத்தெதிர் கருத்தினையும் விதைத்திடு முடிந்தவரை
    கருத்தினில் கொள்பவரைக் கொண்டாடு அடிபற்றி
    திணித்திட உனக்குமில்லை உரிமையும் துளியுமடா!
    தின்பவன் உணர்வதில்தான் உணவின் அருமையடா!

    பழமையிலும் உண்டு நலன்விளை சேதிகளும்
    பண்பினை வளர்ப்பதற்கும் பேரினம் வாழ்வதற்கும்
    சொல்வண்ணம் நடந்திட்டால் சேரினம் சேர்ந்திடுமே
    செந்தமிழ் நடைபழகிச் சிந்தனைச் சிறகேறி
    வம்பினை வளர்ப்பதென்றும் நற்றமிழர் மறபன்று
    வள்ளுவம் வழிவந்த வான்புகழ் தமிழினத்தில்
    வேண்டாம் சாதியென வேண்டுவ உரைத்திட்டும்
    வீணில் வளர்த்ததுவும் வெறியர்கள் செயலன்றோ!
    பேதங்கள் பார்ப்பதுவும் வேதங்கள் செய்ததென்றால்
    ஓதவும் மறுத்திருந்தால் ஒற்றுமை நிலைத்திருக்கும்!

    வானமும் வையகமும் அனைவர்க்கும் சமமென்றால்
    வானவர் மட்டுமிதை எப்படி மறுத்திடுவார்?
    நாயனார் கதைபடித்தும் நாயகன் அறியாமல்
    நானிலம் சண்டையிட்டால் நாமும் அழிந்திடுவோம்
    நம்பிக்கை கொள்வதுவும் நம்மை உயர்த்திடவே
    நமக்குள் பிரிவறுத்து நாளும் மகிழ்ந்திடவே
    அவரவர் நம்பிக்கை அவரவர் தனிவிருப்பம்
    அடுத்தவன் மறுப்பதற்கு அவனென்ன ஆண்டவனா?
    அழிப்பது எனவந்தால் இயற்கையும் ஆண்டவனே
    அடக்கிடு சீற்றங்களை அவரவர் மட்டினிலே
    அறிவினைப் பயிர்செய்ய ஆற்றலும் பெருக்கிடலாம்
    அகிலமும் அறுவடையாய்ப் போற்றியே வாழ்ந்திடலாம்!

    அரசியல் மதங்கடந்து சாதியும் வேரறுத்து
    அறிந்திடு சரியெதென்று ஆவன செய்வதற்கு
    எவனும் தலைவனென்று ஏகிட மறுத்துவிடு
    அவனவன் குடும்பத்தை ஏற்றுதல் நீயுங்கண்டு
    அன்பைக் காட்டிடவே உனக்கவன் தலைவனென்றால்
    அன்பாய் உனைநம்பி வந்தவர் என்செய்வார்?
    அனுதினம் யோசித்து வாழ்க்கையை உயர்த்திவிடு
    ஆனந்தமாய் வாழ்ந்து அனைவரும் இன்புறவே!

     

    Share
  • பூமி வெப்பம் தடுப்போம் !

    -பா. ராஜசேகர்

    பிண்டம்
    நடமாடும்
    ஐம்புலன்கள்
    வரமாகும் !

    அண்டம்                                                                 earth-day
    உருண்டோடும்
    பஞ்சபூதங்கள்
    விதியாகும் !

    நீர் நிலம்
    காற்று
    ஆகாயம்
    நெருப்பு
    அதுவன்றோ ?

    நீரின்றி
    அமையாது
    உலகு என்பர் !

    நெருப்பின்றி
    விழையாது
    என்பேன் !

    வெயிலுக்குக்
    குடை கண்ட
    மனிதனே !

    உலகுக்குக் குடைதந்த
    இறைப் பரிசு
    ஓசோன் அன்றோ ?

    விஞ்ஞானம்
    படைத்தவனே
    மெய்ஞ்ஞானம்
    மறந்ததென்ன ?

    இறைவனின்
    படைப்பெல்லாம்
    இவ்வுலகைக்
    காத்து நிற்கும்!

    மனிதா உன்
    படைப்பெல்லாம்
    இயற்கையை
    அழிப்பதென்ன ?

    ஓசோனில்
    ஓட்டைகண்டு
    இவ்வுலகை
    எரிப்பதென்ன ?

    வெப்பம் தடுப்போம் !
    உலகைக் காப்போம் !!

     

    Share