காலம்! (2)
மீ. விசுவநாதன்
சின்னப் பருவத்தில் சேதிசொன்ன வெண்ணிலவே
இன்றும் எனக்கு(ள்) இனிக்கிறது ; என்னதான்
விஞ்ஞானம் கொக்கரித்து விண்ணிற்கே போனாலும்
மெஞ்ஞான என்னிலவே மேல். (11) 10.01.2015
பழவண்டி தள்ளுபவன் பாடுதான் பட்டுக்
கிழவண்டி யானாலும் கீர்த்தி முழமும்
குறையாமல் பேசுகிறான் ; கோடீஸ் வரனோ
அறைக்குள் அடங்கிய ஆள். (12) 11.01.2015
எல்லாமே நன்றாய் இசைவுடனே கற்றாலும்
வல்லானை இப்போதே வாயார மெல்லுவதே
நல்லோர்க் கழகாகும் ; நம்பாத பேருள்ளும்
துல்லியமாய்த் தோன்றும் துணை. (13) 12.01.2015
விதவிதமாய்க் “கார்கள்” வியாபார(ம்) ஆகும்
புதுமையென சக்கரங்கள் போடா ததோடுமோ ?
வாழ்வுமே அப்படித்தான் ! மாற்றங்கள் கோடியாம் ;
ஊழ்வினை மாறாத ஊற்று.. (14) 13.01.2015
வெயில், மழை, சூறை, வெளிவானம் ,சோலை
மயில்,குயில், ஆறு ,மனதில் பயிலும்
மவுனம் , கவிதை மடியில் கடவுள்,
பவுர்ணமி எல்லாம் பரம். (15) 14.01.2015
வெல்ல(ம்) ,அரிசி ,விரும்பும் கரும்புடன்
கல்யாண மஞ்சள், கனிகளும் எல்லோர்க்கும்
நல்லின்பம் கூட்டிடும் நாளிது பொங்கலாம் !
சொல்கிறேன் வாழ்த்துச் சுகம். (16) 15.01.2015
அரும்பும் கதிரோன், அழகாம் இருட்டு,
விரும்பும் பொருளாய் வெளிச்ச அருளாய்
திரும்பும் திசையெலாம் தெய்வ முணர்ந்தால்
கரும்பும் கசப்புமோர் கண். (17) 16.01.2015
“நிலமண் ணடி,கல் , நிலக்கரி , வைரம்”
பலநிலைப் பக்குவத்தில் பாடம் பலவகை !
காலம் நமக்காகக் கற்றுத் தருகின்ற
கோலவகை என்றுதான் கொள். (18) 17. 1.2015
கிருஷ்ணப் பருந்தும் கிளியைத் துரத்தும்!
சிருஷ்டி இதுதான் ; சிறப்பும் பெருமையும்
கற்றுத் தருவது காலக் கடவுளென
உற்றுநீ பார்த்தே உயர். (19) 18. 1.2015
“தமிழ்த்தாத்தா” பற்றி தரமான பேச்சை
அவைக்களித்தார் கீழாம்பூர் ; ஆஹா சுவைச்சத்து !
இன்றைய காலம் இனிதாகச் சென்றதற்கு
நன்றி உரைக்குமென் நா. (20) 19. 1.2015
அட்டகாசம்.. மிக உயர்ந்த கருத்துள்ள வெண்பாக்கள்.
காலத்துள் சிக்கும் கரும்பு!
யோகியார்