-மேகலா இராமமூர்த்தி

இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான ஒளிப்படத்தை எடுத்துத் தந்துள்ள திரு.வெங்கட் சிவாவுக்கும், போட்டிக்குரிய படமாய் இதனைத் தெரிவுசெய்த திருமிகு. சாந்தி மாரியப்பனுக்கும் வல்லமை ஆசிரியர் குழுவின் நன்றிகள்.

11180014_822542801133254_1503319428_n

கூடாரத்தின் (கைப்)பிடியை உறுதியாய்ப் பிடித்தபடி எம்மை உற்றுநோக்கும் சிறுவனே! உன் கண்களில் கனல்தெறிக்கின்றதே…ஏன்? மிகக் கொடிதான வறுமையை இவ்விளமையிலேயே தாங்கும் உன் பொறுமையைப் போற்றுகின்றோம்!

வறுமையின் கொடிது எது? என்று ஐயன் வள்ளுவரைக் கேட்டால் ’வறுமையின் கொடிது வறுமையே’ என்பார்.

இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது.

தம்பி! இன்று ஏழைமை உன்னோடு தோழமை கொண்டிருந்தாலும், நாளை உன் எதிர்காலம் சுடர்விட்டு ஒளிரும் எனும் நம்பிக்கை கொள்! அதற்கு நீ உடனடியாய்க் கைக்கொள்ளவேண்டிய மெய்ப்பொருள் கல்வியே!

இனி, இவ்வாரப் போட்டியில் பங்கேற்றுள்ள கவிஞர்கள் இச்சிறுவனைப் பற்றி என்ன சிந்தித்திருக்கின்றார்கள் என்பதைப் பார்ப்போம்.

முதலில், என் உள்ளம்தொட்ட கவிதை வரிகளை உவப்போடு உங்களுக்கு அறியத் தருகிறேன்!

*****

தந்தையின் குடியால் தங்கள் குடியே சீரழிந்ததை வேதனையோடு இச்சிறுவன் விளம்புவதையும், பசியால் வாடினாலும் பிச்சை எடுக்கமாட்டேன் எனும் அவன் கொள்கைப்பிடிப்பையும் காட்டும் திரு. சி. ஜெயபாரதனின் வரிகள்…

துள்ளித் திரியும் காலத்தில்
துடுக்கடக்கிப்
பள்ளிக்கு வைக்க வில்லை
பாலகன் என்னை !
மரத்தடியில் தினம் சீட்டாடி
தெருச்சுற்றிப் பணம்
திருடி 
அப்பனுக்கு மாலையில்
கப்பம் கட்டுவேன் !
[…]

குடி வாழ்வைக் கெடுத்தது !
[…]
பல நாட்கள்,

பட்டினி கிடந்தேன் !
ஜெகத்தினை எரித்திடப் 
பாரதி வரவில்லை !
ஆயினும் பிச்சை
எடுக்கப்
போக வில்லை !

******

தந்தை தாயற்ற இச்சிறுவனைக் கண்டோர் சொல்லும் கேலிச்சொற்கள், அதுகண்ட அவன் உள்ளக்குமுறல் ஆகியவற்றை அருமையாய்ப் படம்பிடித்திருக்கும் திரு. நல்லை. சரவணாவின் வரிகள்…

எச்சில் குவளைகள் 
இரண்டைத் தவறவிட்டிருந்த பொழுதில் 
அப்படித்தான் அழைத்தார் 
அன்றைய நாளின் 
முதலாளியாகியிருந்த அவர்…
[…]
குப்பிச் சாக்குகளோடு 

தெருமுனை கடக்க…
யார் பெற்ற பிள்ளையோ என 
உச்சுக் கொட்டியவனிடம் 
கத்திச் சொல்லத் தோன்றியது….
உனக்காகவும் இருக்கலாம்…

*****

சமூகத்தின் பிரதிநிதியான இச்சிறுவனை நல்லவனாக்குவதும், தீயவனாக்குவதும் இச்சமூகமே எனும் உண்மையைச் சுட்டும் திரு. கவிஜியின் வரிகள்…

நின்றிருக்கின்றேன் 
எப்படி வேண்டுமானாலும் 
தெரியும் நீங்கள் என்னை 
தேர்ந்தெடுங்கள், 
கத்தியாகவோ…
புத்தகமாகவோ….

*****

வாடகைத்தாய் பெற்றபிள்ளைகூடச் சீரோடு வாழ்ந்திருக்க, சொந்தத்தாய் பெற்றபிள்ளையோ சொந்தமின்றி, பந்தமின்றி, யாரார்க்கோ அடிமையாய் வாழ்ந்திருக்கும் அவலத்தைச் சொல்லும் திரு. சுரேஜமீயின் வரிகள்…

ஈட்டுத்தாய் பெற்று
உற்ற கருவாக்கி
ஊரார் மெச்ச
என் பிள்ளையென
ஏந்திப் பிடித்தே
‘ஐ’ யென மகிழ்ந்திருக்க!
ஒரு துணையுமின்றி நான் மட்டும்
ஓடுகாலிகளின்
ஔரதனாய் 
….வாழ்தற்கு?

 *****

சிறுவனுக்கு நல்வழிகாட்டும் திரு. செண்பக ஜெகதீசனின் வரிகள்…

பார்வையில் கோபம் வேண்டாமே
     பாவப் பட்ட பாலகனே,
தீர்வு வராதே வன்முறையில்
     திருந்தி வாழ்ந்திடு நல்வழியில்,
வேர்வை சிந்தி உழைத்திடுவாய்
     வெல்லும் வழிதான் வந்திடுமே,
நேர்மை என்றும் வழியாகும்
     நிலைத்த வாழ்வை நீபெறவே…!

*****

குழந்தைத் தொழிலாளியின் குமுறலையும், முதுகெலும்பு படைத்த நான் உழைத்து உயர்வேன் எனும் அவன் வைராக்கியத்தையும் அழகாய் விளக்கும் திருமிகு. ஜெயஸ்ரீஷங்கரின் வரிகள்…

பசிக்கும் வயிற்றுக்கும்
துடிக்கும் மனத்துக்கும்
இடையே போராடும்
ஒரு போராளியாய்
நானொரு
குழந்தைத் தொழிலாளி..!
[…]
இயலாமை தான்

என்றாலும்
முயலாமல் இருக்கலாமா?
கூடுங்கள் தோழர்களே
குனிந்த முதுகின்
முதுகெலும்பே
எதிர்க்கும்
ஆயுதங்களாகட்டும்..!

*****

’பார்வையில் காட்டத்தைக் காட்டாதே; நல்வாழ்வு உனக்குண்டு!’ என நல்வார்த்தை சொல்லும் திருமிகு. சியாமளா ராஜசேகரின் வரிகள்…

பார்வையிலே காட்டமேன் பாலகனே சொல்லடா 
சோர்ந்தாயோ நீயும் சுமைதூக்கி – நேர்வழியில் 
சென்றால் பயமில்லை செல்வா ! கலங்காதே 
நன்றாய் சிறப்புறும் வாழ்வு.

*****

மன்னன்மகனின் நிலைகண்டு மனங்கலங்கும் திரு. ஜெயராம சர்மாவின் வரிகள்…

எல்லோரும் இந்நாட்டு 
மன்னர் என்றால்
இப்பிள்ளை அப்பாவும் 
மன்னர் அன்றோ 
மன்னன் மகன்
நடுவீதி நிற்பானானால்
மக்கள்நிலை என்னாகும்
சிந்திப்போமா ? 

*****

’தெருவோரம் வளரும் அக்கினிக் குஞ்சு இச்சிறுவன்; இவனைச் சீண்டாதீர்!’ என எச்சரிக்கை விடுக்கும் திரு. அமீரின் வரிகள்…

ஒதுங்கச்சொல்லி
காறித்துப்ப
அவன் எச்சமல்ல…
பதுங்கி கில்லி
ஏறியடித்தால்
உயிர் பிழைப்பார்
 அங்கு எவருமல்ல!
[…]
தா தா 

என்று மாமுல் கேட்டால்
என்ன செய்வான்
உழைக்கும்பிள்ளை…
தாதாவாக
வளர்வதன்றி
வேறு வழியுமில்லை!

 *****

மனிதருக்குள் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் தரும் உறுத்தலை உணர்த்தும் திருமிகு. சரஸ்வதி ராஜேந்திரனின் வரிகள்…

கிழிந்த சட்டையுடன்
மழிக்காதமுடியுடன்
குப்பை அள்ளும்
சிறார்களையும்
[…]
சைக்கிள் கடையில்

வேலை பார்க்கும்
சிறார்களையும்
பார்க்கும்போது
காரில் பள்ளிப்
போகும் மகன்
நிழலாடி உறுத்தல்தருகிறது 

*****

’காசுக்கு விற்கப்படும் கல்வியால் ஏழைகளுக்குப் பயனேது?’ என்று இச்சிறுவன் ஏங்குவதாய்க் காட்டுகின்ற திருமிகு. தமிழ்முகிலின் வரிகள்…

கல்வி என்பது பணம் படைத்தோரின்
சொத்தாகிப் போய்விடுமோ எனும் கவலை
உனை ஆட்கொண்டு விட்டதோ?
[…]
எத்தனையோ இலவசங்கள்
வரிசை கட்டி வந்தாலும் – உழைத்தாலன்றி
அடுத்த வேளை உணவென்பது
கேள்விக்குறியான போது – நானும்
இங்கே குழந்தை தொழிலாளி ஆனதில்

பிழை என்ன இருக்கிறதென்று கேட்கிறாயோ ?

*****

இளமைக்கல்வியும் இனியசொற்களும் புறக்கணிக்கப்பட்ட இளம்பிஞ்சின் உள்ளக்கொதிப்பை அழகாய்ச் சொல்லுகின்ற திருமிகு. துஷ்யந்தியின் வரிகள்…

“பள்ளிப் பருவம் எதற்குனக்கு
தள்ளி நில்லு நீ” என்று
துளி கூட உள்ளமில்லா
மனங்கள் என்னை தூற்றின…!
போலி உலகை கண்டு ஓய்ந்து
கல்லாய் மாறின உள்ளமதில்
இனி கருணைக்கு இடமில்லை
இனி உறங்கப் போவதில்லை…!

*****

பார்வையால் பல்லாயிரம் மொழிபேசும் பாலகனின் கல்விக்காய்க் குரல் கொடுக்கும் அறிமுகக் கவிஞர் திரு. சதாசிவத்தின் வரிகள்…
(முயற்சி நன்று! தொடர்ந்து எழுதுங்கள் கவிஞரே!)

பார்வை ஒன்றே போதுமே பல்லாயிரம் சொல் பேசுமே
[…]
கல்வியை கற்றுவிட்டால் சேருமிடம் நன்றே!
ஐயன்மீர் யாராகிலும் சேர்த்தணைத்துக் கொள்வீர்!
சேர்த்த புண்ணியம் யாதாகிலும்,  உடன் புகழ் பெறுவீரே.

*****

’சூரியனைச் சுடும் பார்வையோடு யார்மீது கோபமுற்றிருக்கிறாய்?’ என சிறுவனை வாஞ்சையோடு வினவும் திரு. கொ.வை. அரங்கநாதனின் வரிகள்…

அந்நியர்கள் இங்கிருந்து அகன்று
அறுபதாண்டுகள் ஆகியும் கூட 
சொந்த மைந்தர்களை தினம்
சோற்றுக்கு அலைய வைக்கும்
சுதந்திர நாட்டின் மீதா?
[…]
வாழவழி தெரியாத உனக்கு
ஏதும் செய்ய இயலாது
புகைப்பட மெடுத்தவர் மீதா
கவிபாட வந்த எங்கள் மீதா?

*****

சிறுவனின் வாழ்வு சீர்பெற வழிசொல்லும் திருமிகு. புனிதா கணேசனின் வரிகள்…

கல்விக் கண்கள் திறந்திடவும்
இல்லாமைப் பேய் ஒழிந்திடவும்!
சின்ன வயிறு நிறைந்திடவும்
அன்னமிட்டு உதவிடுவோம்!
சேற்றிலும் செந்தாமரைகள்
வீற்றிருக்கும் திடமாய் நம்புவோம்!
நல்லதோர் எதிர்காலம்
வெல்வான் இவன் !

*****

இவற்றினூடே, அண்டைபூமியான ஈழத்தின் முள்ளிவாய்க்காலில் உயிரோடு கொள்ளிவைக்கப்பட்ட நம் தமிழ்ச்சோதரர்களின் குடும்பத்தில் ஒருவனாக இச்சிறுவனை இனங்கண்டு, இவ்வினப்படுகொலையால் சுற்றத்தை இழந்து சொந்தநாட்டிலேயே அகதியாக்கப்பட்ட இவனுடைய கண்ணீர்க் கதையைக் கவிதையாய் வடித்துள்ள திருமிகு. வேதா. இலங்காதிலகத்தின் ‘காத்திருப்பேன் காலத்திற்காய்’ எனும் கவிதை என்னைச் சிந்திக்க வைத்தது; கண்ணீர் சிந்தவும் வைத்தது. அவரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்ந்தெடுக்கிறேன்.

அக்கவிதை…

காத்திருப்பேன் காலத்திற்காய்!

வண்ணம் பூசி வரைந்து பல
எண்ணக் கனவுகளோடு வாழ்ந்தோம் அன்று
கண்ணிறைந்த வாழ்வு சிதறி இன்று
உண்ண உணவிற்கே திண்டாடும் நிலை
உதட்டில் மட்டும் காயம் எம்
உயிர் தப்பியது அபூர்வம்! ஒரு
ஊர்க் கோடியில் கோணித் திரையுள்
அகதி வாழ்வு இது கொடுமை!

கூனிக் குறுகி ஒடுங்கிய வாழ்வு!
ஏனிந்த நிலையிது நீதியே இல்லை!
காரணகர்த்தாக்களை உருத் தெரியாது அழிக்க
கருவெடுக்கிறது கொலை வெறி நெஞ்சில்.
அகதி நான் எனது நாட்டிலேயே!
தகுதியற்ற நிலையிது காத்திருப்பேன் காலத்திற்காய்.
காட்சிப் பொருளாக நாமின்று படத்தில்.
ஆட்சி, அரண்மனைக்கு அடிபடுகிறாரின்று பலர்!

*****

அடுத்து, ஏழைகளுக்குத் தேவை கல்வியா? செல்வமா? எனும் பட்டிமன்றத்தைக் கவிதையில் நடத்தி அதற்கு நடுவராய்க் கடவுளையே நியமித்திருக்கும் இன்னொரு கவிதையும் மெச்சும்படி இருந்தது.

சிட்டாக வேபறந்தேன் கோயிலுக்கு அங்கு 
       சிலையாக நின்றிருந்த கடவுளிடம்
திட்டாமல் தேம்பாமல் வேண்டினேன் பொங்கித்
       தவிக்கின்ற மனமுருகக் கெஞ்சினேன்
பட்டாசு கம்பெனியில் என்குடும்பம் பட்டம் 
       படிக்கின்ற ஆசையில் நானொருவன்
எட்டாத ஓர்கனவாய் ஆகிடுமோ என்றும்
       ஏழையாய் என்வாழ்வும் மாறிடுமோ

[…]

தட்டாமல் அக்கடவுள் என்கனவில் வந்தார் 
       தக்கதொரு தீர்வுதனை சொல்லி(ச்)சென்றார்
திட்டாக கோணியொன்றில் மூடியதை நீயும் 
       திறந்திட்டால் அங்கிருக்கும் உன்வாழ்க்கை
கட்டாக புத்தகம்கு விந்திருந்தால் கல்வி
       கனமான எந்திரம்என் றால்செல்வம் 
கட்டாயம் ஏற்படும்வ ரம்அளித்தேன் என்றார் 
       கவிஞர்காள் சொல்லுங்கள் என்னவரம்?

*****

என்ன வரம் தரலாம் இச்சிறுவனுக்கு? என்னைக் கேட்டால் வயிற்றுப்பசி தீர்க்கும் செல்வத்தையும், அறிவுப்பசி தீர்க்கும் கல்வியையும் சேர்த்தே அவனுக்குத் தருவதுதான் கடவுளின் கடமை என்பேன்! இக்கவிதையை யாத்த திரு. எஸ். பழனிச்சாமியைப் பாராட்டிற்குரிய கவிஞராய் அறிவிக்கிறேன்.

நண்பர்களே! தொடர்ந்து போட்டியில் பங்குகொள்ளுங்கள்! பாராட்டைப் பெறுங்கள்!

 

பதிவாசிரியரைப் பற்றி

8 thoughts on “படக்கவிதைப் போட்டி 9-இன் முடிவுகள்

  1.  வெற்றியாளர்களுக்கு  வாழ்த்துக்கள்….!!

  2. நெஞ்சை நெகிழ வைத்த கவிதைகள். கண்களை கலங்க வைத்த கவிதைகள்.

    விடியல் வரவேண்டும் வாழ்க்கை ஒளிர வேண்டும். நம்பிக்கைதான் வாழ்க்கை நல்லது நடக்கும்.

  3. அருமைச் சகோதரி மேகலா இராமமூர்த்தி அவர்களுக்கும், சிறந்த கவிஞராகத் தெரிவு செய்யப்பட்ட திருமிகு. வேதா. இலங்காதிலகத்திற்கும், சிறந்த பாராட்டுதலைப் பெற்ற திரு. எஸ். பழனிச்சாமி அவர்களுக்கும், 

    என் நெஞ்சார்ந்த பாராட்டுகளும், அவர்தம் கவியால் அனைவரின் உள்ளத்திலும் ஏகியதற்கு நன்றியையும் காணிக்கையாக்கி,

    ஏனைய சக கவிஞர்களுக்கு ஊக்கத்தையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து

    அடுத்ததொரு புனைவுக்கு புத்துணர்வோடு தங்களின் எண்ணங்களைத் தருவதற்கு மகிழ்ச்சியுடன் வரவேற்று காத்திருக்கிறேன்.

  4. வெற்றியாளர்களுக்கு என் இனிய வாழ்த்துகள்

  5. வல்லமை – இவ்வாரக் கவிஞராகத் தேர்வு. 
    அதில் நாடும் சேர்ந்து என்னை அழ வைத்து விட்டீர்கள்.
    என்னை; சரி செய்யச் சிறிது நேரம் சென்றது.
    வல்லமைக் குழுவினருக்கு மனமார்ந்த நன்றி உரித்தாகட்டும்.
    மிக்க மகிழ்வு. மே 2ம் திகதி எனக்கொரு பாராட்டு விழாவை நமது நகர் தமிழ் சங்கம் முன்னெடுக்கிறது. அதோடு இதுவும் மகிழ்வு தருகிறது. 
    மறுபடியும் நன்றி.

  6. இந்த வாரத்தின் சிறந்த கவிஞராகத் தேர்வு பெற்ற கவிஞர் வேதா. இலங்கா திலகம் அவர்களுக்க்கும், பாராட்டு பெற்ற கவிஞ்ர்களுக்கும் உற்சாகத்துடன் பங்கேற்ற அனைத்து கவிஞர்களுக்கும்  வாழ்த்திய நல் உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.

    என்னைi இந்த வாரத்தின் பாராட்டுக்குரிய கவிஞராகத் தேர்ந்தெடுத்த அருமைச் சகோதரி மேகலா ராமமூர்த்தி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *