Blog

  • கடல் கடந்தும் தமிழன் கலை மிளிர்கிறது!

    தமிழ்த்தேனீ

    அயல் நாட்டில் தமிழ் நாடகம் நடத்தி இந்தியாவுக்கு நன்கொடை அளிக்கும் தமிழர்கள்!

    கடல் கடந்தும் தமிழன் கலை மிளிர்கிறது!

    இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழில் மக்களின் உணர்வுக்கு விருந்தாகத் திகழ்வது செவிக்கு இசையும் வசனங்களும் கண்ணுக்கு விருந்தாக நாட்டியம், நடிப்பும். ஒளி ஒலி ஆகிய எல்லாம் சேர்ந்த கலவையாக நமக்கு விருந்தளிப்பது நாடகக் கலையே.

    நவீன விஞ்ஞான உலகிலே கைவிரல் சொடுக்கிலே தொலைக் காட்சி நிகழ்ச்சிகள், தொலைத் தொடர்கள், திரைப்படங்கள் என்று கண் முன்னால் விரிந்து.கையெதிரே சுவையான நொறுக்குத் தீனிகளும் அமைந்து நம்மை வீட்டை விட்டு நகரமுடியாமல் செய்து சுகவாசிகளாக்கி வைத்திருக்கும் இந்த நாட்களில் வெளியே இருக்கும் வாகன நெரிசலில் சிக்கி அரங்கத்துக்கு சென்று நாடகம் பார்க்கும் ஆவலைத் தகர்த்துவிட்டது.

    அதனால் இந்தியாவில் தமிழ்நாட்டிலேயே நாடகம் சற்று நலிந்து போயிருக்கிறது என்பது உண்மை அப்படிப்பட்ட நாடகக் கலைக்கு புத்துயிரூட்டும் பணியை தொடர்ந்து பத்தாண்டுகளாக அமெரிக்காவில் செய்கிறார்கள். அதுவும் குறிப்பாக இந்தியாவிலிருந்து இங்கே அமெரிக்காவுக்கு வந்து தங்கள் பணிகளையும் திறமையாக நிர்வகித்துக் கொண்டே நாடகக் கலையையும் வளர்க்கிறார்கள் தமிழர்கள்.

    இண்டஸ் கிரியேஷன்ஸ்
    www.IndusCreations.org

    இந்தியாவையும் India அமெரிக்காவையும் U.S. இணைத்து Indus Creations இண்டஸ் கிரியேஷன்ஸ் என்று பெயர்கொடுத்து நல்லுறவு வளர்த்து தமிழ்நாடகம் போடுகிறார்கள். இப்படி நாடகக் கலையை நம் தமிழர்கள் அமெரிக்காவில் வளர்க்கிறார்கள் என்பது ஆச்சரியம்! ஆனால் உண்மை. இவர்களே திட்டமிட்டு நடத்தும் இந்த நாடகங்களில் இருந்து வந்த வருவாயிலிருந்து இதுவரை நம் இந்திய நாட்டில் இயங்கும் பல தொண்டு நிறுவனங்களுக்கு கிட்டத் தட்ட ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக அளித்திருக்கிறார்கள்.

    நாடகத்தில் இன்டஸ் குழுவினர்

    att

    ath
    சியாட்டில் மாகாணத்தில் மைக்ரோசாப்ட், கூகிள்,மற்றும் அமேசான் போன்ற அலுவலகங்களில் பணிபுரியும் இந்திய நாட்டு பொறியாளர்கள் இளைஞர்கள் யுவதிகள் ஆகியோரை இணைத்துக்கொண்டு சியாட்டில் எனும் மாகாணத்தில் “இண்டஸ் கிரியேஷன்ஸ்” என்னும் அமைப்பை உருவாக்கி அதன் மூலமாக தொடர்ந்து 10 ஆண்டுகளாக தமிழ் நாடகங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

    கடல் கடந்தும் தமிழன் கலை மிளிர்கிறது

    இண்டஸ் கிரியேஷன்‌ஸ்” குழுவினர் கதை எழுதுவது மட்டும் அல்லாமல், அசத்தலான நடிப்பு, இசை மற்றும் வியக்க வைக்கும் அரங்க வடிவமைப்பு மூலமாக மக்களை வசீகரிக்கின்றனர். இவர்கள் முழு நீள நகைச்சுவையில் இருந்து, உணர்ச்சிப் பெருக்கெடுத்தோடும் கதைகள் வரை பலவிதமான கதைகளைக் கையாண்டுள்ளனர். 2007ஆம் ஆண்டு அரங்கேறிய சுஜாதா அவர்களின் “கடவுள் வந்திருந்தார்” என்ற நாடகத்தில் ஒரு அயல் கிரக விண்கலம் சுற்றி வந்து அரங்கில் இறங்கி மக்களை வாயைப்பிளக்க வைத்தது. 2009ஆம் ஆண்டில் அரங்கேறிய “லண்டன் எக்ஸ்பிரஸ்” நாடகம் மக்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்தது மட்டும் அல்லாமல் ஒரு விமான நிலையத்தையே அரங்கில் கொண்டு நிறுத்தி மக்களை வியக்க வைத்தது.

    2011ஆம் ஆண்டில் நடந்த “சக்கரவியூகம்” எனும் நாடகம் சிரிப்பும் மர்மமும் கலந்து ரசிகர்களை அடுத்து வரப்போவது என்ன என்று ஆவலுடன் நுனி நாற்காலியில் உட்காரவைத்தது. 2012ஆம் ஆண்டில் நடந்த “உள்ளே வெளியே” நாடகத்தில் இரண்டு அடுக்கு மாளிகையை அரங்கில் அமைத்தது மட்டுமின்றி, பாதியில் மொத்த அரங்கைப் பின்புறமாகத் திருப்பி அங்கு நடக்கும் கதையைக் காட்டிய தருணத்தில், பார்ப்போர் சிலர் மயங்கி விழாத குறை தான். சில நாடகங்களில் காட்சிகளை மேடைக்குப் பதிலாக, காண்போர் மத்தியில் நடத்தி, எதிர்பாராத ஆச்சரியத்தை ஏற்படுத்திவிடுகின்றனர். சமீபத்தில் நடந்த “நினைத்தாலே நடக்கும்” நாடகத்தில் கதை செல்லும் பாதையை மக்களின் கூற்றுக்கு ஏற்ப மாற்றி அமைத்து, அவர்கள் நினைத்ததை, மேடையில் நடித்துக் காட்டினர்.

    மாடியுடன் கூடிய சுய அரங்க வடிவமைப்பு

    ath2

    மேலும் மேடை அரங்கத்தையும் இவர்களே திட்டமிட்டு உருவாக்கி வர்ணங்கள் தீட்டி,ஓவியங்கள் வரைந்து தட்டிகள் செய்து நிர்வகிக்கிறார்கள்,இசை இவர்களே அமைக்கிறார்கள், ஒலி ஒளி மற்றும் மேடை நிர்வாகம் உட்பட அனைத்து கலைகளையும் இவர்களே வடிவமைக்கிறார்கள் , அரங்க வடிவமைப்பு போன்றவைகளும் செய்கிறார்கள். அரங்க நிர்மாணம் செய்கிறார்கள். தொடர்ந்து பத்து ஆண்டுகளாக மிக வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள் கடல் கடந்தும் தமிழன் கலை மிளிர்கிறது.

    நாடகத்தில் ஒரு தந்திரக் காட்சி

    ath1

    இண்டஸ் குழுவினரின் அரங்கம் நிறைந்த ரசிகர்கள்

    ath3

    மேலும் நம் நாட்டில் உள்ள பல கிராமங்களை தத்தெடுத்து பலருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி பொதுத் தொண்டு செய்து வருகிறார்கள். கடல் கடந்து வந்து பணி செய்தாலும் நம் நாட்டை மறக்காமல் தமிழையும் நம் கலைகளையும் வளர்க்கும் இவர்களைப் பாராட்டி ஊக்கம் அளிப்பது ஒவ்வொரு இந்தியரின் கடமையாகும்.

    இதுவரைஅரங்கேற்றப்பட்ட நாடகங்கள்

    சிதம்பர ரகசியம் – June 2015

    ath4

    இண்டஸ் குழுவினரின் தொடர் முயற்சியால் ஒன்பது ஆண்டுகள் வெற்றிகரமாக இயங்கி இந்த 2015 ஆம் ஆண்டு வெற்றிகரமான பத்தாம் ஆண்டாக மலர்ந்து “சிதம்பர ரகசியம்” என்னும் நாடகத்தை அரங்கேற்ற உழைத்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த இண்டஸ் குழுவினர். வரும் ஜூன் மாதம் 19ம் தேதியும் 20 ம் தேதியும் இரு முறை அரங்கேறவுள்ளது இந்த “சிதம்பர ரகசியம்”

    கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடுப்புகளைச் சொடுக்கிப் பாருங்கள், இவர்களின் திறமை புரியும்! வாழ்த்துவோம், பாராட்டுவோம்!!

    அன்புடன்
    தமிழ்த்தேனீ
    rkc1947@gmail.com http:thamizthenee.blogspot.com

    இண்டஸ் கிரியேஷன்ஸ்
    www.IndusCreations.org

    இண்டஸ் கிரியேஷன்ஸ் Facebook தளம்
    https://www.facebook.com/induscreations

    இண்டஸ் கிரியேஷன்ஸ் YouTube தளம்
    http://www.youtube.com/induscreations2010

    இண்டஸ் கிரியேஷன்ஸ் சில புகைப்படங்கள்
    Indus Creations photos

    சில காட்சிகள்
    https://www.youtube.com/watch?v=fmXk-MPRyWE
    அரங்க நிர்மாணம்
    https://www.youtube.com/watch?v=c_FMJ7sIpw0

    ரசிகர்களின் விமர்சனம் https://www.youtube.com/watch?v=7VkFdyfmnz0

    Attachments area
    Preview YouTube video London Express : Indus Creations tamil play : 2009

    London Express : Indus Creations tamil play : 2009
    Preview YouTube video Time Lapse – Indus Creations – Chakravyugam

    Time Lapse – Indus Creations – Chakravyugam
    Preview YouTube video Indus Creations – Chakravyugam 2011 – Audience Feedback

    Indus Creations – Chakravyugam 2011 – Audience Feedback

    Share
  • அவன், அது, ஆத்மா! (9)

    மீ.விசுவநாதன்

    அத்யாயம்: ஒன்பது

    “தீதும் நன்றும் பிறர்தர வாரா”

    அவனுக்கு ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு நிகழ்ச்சியே குருவாக இருந்து அவனை வழிநடத்தி வருகிறது என்பதை அவன் நம்புகிறான். இளமைக் காலத்தில் கல்லிடைக்குறிச்சி கிராமத்தில் அவனது வாழ்க்கை அமைந்ததை அவன் எப்பொழுதும் பெருமையாகவே எண்ணுகிறான். அது அவனது அறியாமையைக் கேலிசெய்தும், அவனை அறிவுடையோனாக ஆக்கியதுமான நல்ல தருணங்கள். அந்த இளமை வெள்ளத்தில் அவனை அடித்துச் செல்லாமல் அதிலே எதிர்நீச்சல் போடவைத்தது. நிறை குறைகளைக் கற்றுக் கொடுத்தது. களவும் கற்றுக் கொடுத்து அதன் தண்டனையும் பெற்றுத் தந்து அவனுக்கு தர்ம நியாயங்களைப் புரியவைத்தது. அவனுக்குத் தீது வராமல் தடுக்க அவனை அணைத்தபடி ஒரு கை எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. அது காலம் அவனுக்குக் கொடுத்த நன்கொடை.

    சிறுவயதில் அவன் கூட்டுக் குடும்பத்தில் ஆனந்தமாகவே வாழ்ந்தான். அவன் சிரித்தாலும் அழுதாலும் கவனித்துக் கனிவு காட்ட தத்தா, பாட்டி, அப்பா, அம்மா, சித்தப்பா, அத்தை, அக்கா, மாமா என்றும், அவனுக்குக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள், அன்பான மனிதர்கள், நண்பர்கள் என்றும் நிறைய உறவுகள் இருந்தன. அவன் தைரியமாக சிவன்கோவில் காளைபோல வலம்வந்தான்.

    “வாழைக்காய் விற்று கற்ற படிப்பு”

    ஐந்தாம் வகுப்பு முடிந்து அவனுக்குக் கோடை விடுமுறை துவங்கிய நேரம். ஆதிவராகப் பெருமாள் கோவிலில் சித்திரைத் திருநாள் துவங்கியது. அந்தத் திருவிழாவை அவன் ரொம்பவே எதிர்பார்த்திருப்பான். பதினோரு நாட்களும் கொண்டாட்டம்தான். கண்ணாடிச் சப்பரம், சிங்கவாகனம், அனுமார் வாகனம், நாகவாகனம், கருடசேவை வண்டிச் சப்பரம், அன்ன வாகனம், யானை வாகனம், மூடு பல்லக்கு, கோரதம் (இன்றும் இரண்டு காளை மாடுகள் பூட்டி இழுத்து வருகிறார்கள்), குதிரை வாகனம், எட்டுமுக்குச் சப்பரம், புன்னை மரவாகனம், தேரோட்டம், தீர்த்த வாரிக்குத் தாமிரபரணிக்குச் சென்று நீராடுதல், மதியம் பெருமாள் கோவிலில் வெளிப்பிராகாரம் அடைத்து கிராம போஜனம், இரவில் வான வேடிக்கையுடன் ஸ்ரீ லக்ஷ்மீபதி தாயாருடன் அழகான பூப்பல்லக்கில் வீதி உலா வருதல் என்று ஒவ்வொரு நாளும் கோலாகலமாகவே இருக்கும்.

    அந்த வருடம் ஆராட்டு உற்சவம் முடிந்து அடுத்ததினம் ரகுவின் வீட்டு நடையில் கோவிலில் இருந்து கொடுவரப்பட்ட நான்கு பெரிய வாழை மரங்களை வைத்திருந்தார்கள். நல்ல பெரிய பெரிய வாழைப் பூவும், காய்களும் அதில் இருந்தன. ரகுவும், சங்கரும் இன்னும் சில நண்பர்களும் அந்த வாழைக்காய்களை எடுத்து அவனிடமும், ராமு என்ற ராமுக்கிளியிடமும் ஆளுக்குப் பத்து வாழைக் காய்களைத் தந்து , ஒரு பைசாவுக்கு ஒரு வாழக்காய் என்று விற்று வருமாறு அனுப்பி வைத்தனர். அதில் கடலை மிட்டாய் வாங்கித் தின்னலாம் என்றனர். ராமுக்கிளி வைத்தியப்பபுரம் தெருவிலும், அவன் குத்துக்கல் தெருவிலும் “வாழக்காய்…வாழக்காய்” என்று கத்திக்கொண்டே சென்றனர். அவன் குத்துக்கல் தெருவில் “காவன்னா லக்ஷமையர்” வீட்டில் ஐந்து வாழக்காய் விற்று ஐந்து காசு வாங்கிக் கொண்டான். மீதி ஐந்து காய்களைக் கையில் வைத்துக் கொண்டு “வாழக்காய்…வாழக்காய்” என்று கத்திக் கொண்டே சென்றான். அப்பொழுது அந்தத்தெருவில் அவனுக்குச் சித்தப்பா (சின்னம்பிச் சித்தப்பா) சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அவனருகில் வந்து,” இது எங்க இருந்தது? யாரு விக்கச் சொன்னா?” என்று கேட்டார். அவன் பயந்து கொண்டே,”ரகு, சங்கர்” என்றான். அவர் உடனே அவனது இடது கன்னத்தில் ஓங்கி ஒரு அறை கொடுத்து,”இது கோவில் சொத்து….இத்தத் தொடக்கூடாது..எந்த ஆத்துக்கெல்லாம் இதக் கொடுத்தாய்…வா காட்டு” என்று அவன் கழுத்துப் பகுதியைப் பிடித்துத் தள்ளியபடி வந்தார். அவன் வீட்டைக் காட்டினான். அவர் அந்த வீட்டுக் காரர்களிடம் விபரம் சொல்லி, ஐந்து பைசாவைத் திரும்பத் தந்து வாழைக் காய்களை வாங்கி அவன் கழுத்தில் தொங்க விட்டபடி ரகுவின் வீட்டிற்குக் கூட்டி வந்தார். இதற்குள் ராமுக்கிளி வைத்தியப்பபுரம் முடுக்கு வழியாக குத்துக்கல் தெருவுக்குள் நுழைத்தான். சித்தப்பா, ராமுக்கிளியையும் பிடித்து வந்தார். ரகுவின் அப்பா அவர் வீட்டு நடையில் நின்றிருந்தார். சித்தப்பா அவரிடம்,”அண்ணா…கண்ணன் இந்த வாழைக் காய்களை எடுத்துவிட்டான்…இது கோவிலச் சேந்தது ..நான் இவனைக் கண்டிக்கறேன்…” என்ற பொழுது “சின்னம்பி ….கொழந்தைகள் எதோ விளையாட்டாச் செஞ்சுடுத்து..விட்டுடு…” என்று ஆதிவராக மாமா சொன்னார். அதற்கு சின்னம்பிச் சித்தப்பா,”அண்ணா…இத இப்ப கண்டிக்காம விட்டுட்டேன்னா பிற்காலத்துல இவன்தான் கஷ்டப் படுவான். அப்பறம் இவனைத் திருடன்னு எல்லாரும் சொல்லுவா…நீ தாப்பா நெனச்சுக்காதே…பணக்காரா எது செஞ்சாலும் ஊர் எதுவும் பேசாது…இல்லதவாளப் பேசும்…” என்று சொல்லிவிட்டு நேராக அவனுக்குப் பக்கத்து வீடான “ஐம்பத்தி ஐந்தாம் எண்” வீடு வாசல் ஜன்னல்க் கம்பியில் சாய்த்து அவனது இருகைகளையும் கம்பியோடு கட்டினார். அவனது இரண்டு கன்னங்களிலும் தலையை வாரிக்கொள்ளும் சீப்பினால் மாற்றி மாற்றி அடித்தார். ஒவ்வொரு முறையும்,”மற்றவா பொருளுக்கு ஆசைப் படாதே” என்று சொல்லிச் சொல்லி அடித்தார். அவனுக்கு அம்மாவும்,” சின்னம்பி அவன நானா அடி…ஊர்ப் பொருளுக்கு ஆசைப் படாதேன்னு சொல்லி அடி…” என்று அவள் பங்குக்கு அடித்தாள். தெருவில் போவோர் வருவோரெல்லாம் பார்த்துக்கொண்டே சென்றது அவனுக்கு அவமானமாக இருந்தது. கொஞ்ச நேரம் சென்ற பிறகு அவனுக்குச் சித்தப்பா சாப்பாடு ஊட்டி விட்டார். ஊட்டும் பொழுதே,”இப்படிச் செய்யாதே கோந்தே….நீ நன்னா இருக்கணும்னுதான் ஒன்ன அடிச்சேன்…” என்று என்னைக் கட்டிக்கொண்டார். சின்னம்பிச் சித்தப்பாவின் அன்பும், நேர்மையும், கண்டிப்பும் அவனுக்குப் பிடித்திருந்தது. அவர்மீது ஒருநாளும் அவன் கோபம் கொண்டது கிடையாது. அந்தச் சித்தப்பாவையும், அம்மாவையும் அவன் எப்பொழுதுமே நினைத்துக் கொண்டுதான் இருக்கிறான். அவர்கள் அன்று கண்டிக்கவில்லையானால் அவனுக்கு இன்று ஏது அமைதி?. இதுதான் கூட்டுக் குடும்ப வலிமை. ஒருகை அடிக்கும் மறுகை அணைக்கும்.

    amv1பெருமாள் கோவில் திருநாள் முடிந்ததும், அவனும், அவனுக்கு நண்பர்களான ரகு, சங்கர், நீலகண்டன், சுரேஷ், குட்டிச்சங்கர், மூர்த்தி, சன்னதித்தெரு கண்ணன், கபாலி, கிச்சன், SV, RV, NR, பிரபு, இராஜாமணி, ராமு (ராமுக்கிளி என்று செல்லமாக அழைப்போம்) இன்னும் பல நண்பர்களும் சேர்ந்து பெருமாள் கோவில் உற்சவம் போலவே பதினோரு நாட்கள் சுவாமி வைத்து பூஜை செய்து விளையாடுவார்கள். நீலகண்டன் வீட்டில் இருந்து சுவாமி, அம்பாள், அனுமார், கருடசேவை போன்ற வாகனக்களும், பூஜை சாமான்களும் எடுத்து வருவான். அதை ரகுவின் வீட்டு நடையில் (எம்.ஆர்.ஆதிவராஹ ஐயரின் வீடு) வைத்து பூஜை செய்து குத்துக்கல்தெரு, மேலமாடத்தெரு, வடக்கு மாடத் தெரு, தெற்கு மாடத்தெரு, சன்னதித்தெரு என்று தினமும் சுவாமி புறப்பட்டு ஊர்வலமாகச் சென்று மீண்டும் ரகுவின் வீட்டிற்கே வந்து சுவாமிக்கு நெய்வேத்யம், தீப்பராதனைகள் எல்லாம் விமர்சையாக நடத்துவார்கள். குழந்தைகளை வைத்துத் தள்ளிக்கொண்டு போக பச்சை வண்ணத்தில் ஒரு வண்டி ரகுவின் வீட்டில் இருந்தது. அதில்தான் “பூப்பல்லக்கு அலங்காரம்” செய்வார்கள். குழந்தைகளை உற்சாகப் படுத்தவே “சிண்டாப் பாட்டி” (ரகுவின் அப்பா வழிப் பாட்டி ) சுவையான நெய்வேத்தியங்கள் செய்து தருவாள்.

    ரகு மிக நன்றாக நாடகங்கள் எழுதுவான். திருவிளையாடல் படத்தின் தாக்கத்தில் “பர்பியாடல்” என்றொரு நாடகம் சிவராத்திரி அன்று போட்டான். அதில் கதா பாத்திரங்கள் எல்லாம் பருப்பு, உளுந்து, சக்கரை என்றுதான் இருக்கும். நல்ல நகைச்சுவையான அந்த நாடகம் ரகுவின் பக்கத்து வீட்டுத் திண்ணையில்தான் நடந்தது. ரகுவும் அவனும்தான் சென்னையில் “வசந்தா மேன்ஷன்” விடுதியில் அறை எண் பதிமூன்றில் தங்கி இருந்தனர். எத்தனை உயர்ந்த பதவிகளில் இருந்தாலும் ரகுவின் சாத்வீக குணமும், ஒழுக்கமும், பண்பும், பணிவும் அவனுக்கு இன்றும் ஆதர்சமாகத்தான் இருக்கிறது. நல்ல நட்பு வரமல்லவா…

    “G. R. நாராயணன் சார்”

    narayanஅவனுக்கு ஐந்தாம் வகுப்பில் ஆங்கிலப் பாடம் கற்றுத் தந்தவர் “G. R. நாராயணன் சார்”. கண்டிப்பும், ஒழுக்கமும் நிறைந்த சீலர். மிக அழகாக ஆங்கில இலக்கணங்களைப் புரிய வைப்பார். மாணவர்களின் முழுக் கவனமும் அவரிடம் இருக்கும்படிப் பார்த்துக் கொள்வார். ஆங்கில உச்சரிப்பு சரியாக வரும்வரை விடமாட்டார். “திஸ் இஸ் அ பில்லர்” என்று சொல்லி “பில்லர்”ல் “ர்” உச்சரிப்பு இல்லாமல் சொல்லச் சொல்வார். அந்த வகுப்பறையில் ஒரு பெரிய தூண் இருக்கும். அதைக் காட்டி பல்வேறு விதமாக “திஸ் இஸ் அ பில்ல” என்று ஒவ்வொரு விதமாகக் கற்றுத்தருவார். முன்பெல்லாம் ஐந்தாவது வகுப்பில்தான் ஆங்கிலப் பாடம் துவங்கும். ஆங்கிலத்தில் “அட்ஜெக்டிவ்” (உரிச்சொல்) எப்படி, எங்கு வரும் என்று அவர் கூறும் உதாரணங்களே அருமையாக இருக்கும். ஓரளவுக்கு அவனுக்கு ஆங்கிலம் தெரிகிறதென்றால் அது அவர் போட்ட பிச்சைதான். அவரும் அவன் வசித்து வந்த அதே தெருவில்தான் வசித்து வந்தார். அவன், வீட்டில் ஏதேனும் முரண்டு பிடித்தால் அவனுக்கு அம்மா G. R. சாரிடம் சொல்லறேன் என்றுதான் அவனை அடக்குவாள். அவர் தினமும் காலையில் ஆறரை மணிக்கு ஆத்தங்கரைக்குக் குளிக்க அவனது வீட்டைக் கடந்துதான் செல்வார். அந்த நேரம் அவன், வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கொண்டு அவர் கற்றுத்தந்த பாடங்களை உரக்கப் படிப்பான். அவர் அவனைப் பார்த்து ஒரு புன்னகை செய்தபடியே செல்வார். அது அவனுக்கு ஏதோ பரிசு கிடைத்த மகிழ்ச்சியாக இருக்கும். அவன் பிற்காலத்தில் சென்னையில் இருந்து ஊருக்குத் திரும்பும்பொழுது ஒவ்வொரு முறையும் அவரைப் பார்த்து நமஸ்கரிப்பான். அவனை அவர் மனம் குளிர ஆசீர்வதிப்பார். நிறையப் படி. படிப்பதர்க்கென்று நேரத்தை ஒதுக்கிகொள் என்று மிகுந்த வாஞ்சையுடன் சொல்வார். அவரது இளைய மகன் N. R. அவனுக்கு நண்பன். சில மாதங்கள் சென்னையில் அவனோடு திருவல்லிகேணியில் விடுதியில் சேர்ந்து தங்கி இருக்கிறான். இப்பொழுது மும்பையில் “ராம சுப்ரமணிய சாஸ்த்ரிகளாக” இருக்கிறான். மன்னிக்கவும் இருக்கிறார். ஊரில் சாஸ்தா கனபாடிகளிடம் வேதம் கற்றுக் கொண்டபலன் இன்று சௌகர்யமாக இருக்கிறேன் என்று சொல்வார். நண்பர்கள் சந்தோஷமாக இருப்பதைப் பார்க்க அவனுக்கு எப்போதுமே பிடித்திருந்தது.

    (23.04.2015) இனியவன் அடுத்த வாரம் வருவான் ……….

    படங்கள் உதவி: K.V. அன்னபூர்ணா

    Share
  • ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது …

    — கவிஞர் காவிரிமைந்தன்.

     

    madapura

     

     

     

    மருதகாசிஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது – கவிஞர் மருதகாசி… மாடப்புறாவிற்காக…

    மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். நடித்த மாடப்புறா… அதிகமாக பரிச்சயமில்லாத ஒருசில திரைப்படங்களில் இதுவும் ஒன்று! என்றாலும் வழக்கமாக எம்.ஜி.ஆர் படங்களில் பாடல்கள் ஹிட் ஆவது இதிலும் உண்மையாகவே தோன்றுகிறது!

    ஊருக்கும் தெரியாது… யாருக்கும் புரியாது … பல்லவி தருகின்ற குரல் சற்றே வித்தியாசமாகப் பட.. யார் பாடுகிறார் என்று உற்றுக்கேட்டால்… அட… பக்திப்பாடல்களில் புகழ்பெற்ற சூலமங்கலம் ராஜலட்சுமியின் குரல்… அதிகமாக திரைப்பாடல்கள் பாடியிராத காரணத்தால் சற்று கவனமுடன் கேட்கவேண்டியிருந்தது. எனினும் கனகச்சிதமான குரல்… கருத்தையள்ளும் பாடல்!

    ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது
    உன்னை எண்ணி கனவு கண்டு உள்ளம் ஏங்குவது
    ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது

    வித்தியாசமான கதையமைப்பில் அக்கதைக்கேற்ற கருவைச் சுமந்துவருகிற பாடலாய் அமைந்தாலும் மக்கள் நெஞ்சில் அதிகம் வலம் வராத பாடாகவே இருக்கிறது!

    காண்பதெல்லாம் உன் உருவம்
    கேட்பதெல்லாம் உனது குரல்
    கண்களை உறக்கம் தழுவாது
    அன்புள்ளம் தவித்திடும் போது

    காதல் நெஞ்சில் எழுகிறபோது அதை சொல்லவும் முடியாமல்… சொல்லாமல் இருக்கவும் முடியாமல்… தவிக்கிற தவிப்பையும் தந்துசெல்கிற கவிஞர் மருதகாசியின் பாடல்! திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்களின் இசையில்… சுகம்தரும் வசந்தமாக வீசுகிறது…

    படம்: மாடப்புறா
    பாடல்: மருதகாசி
    இசை: கே.வி.மகாதேவன்
    குரல்: சூலமங்கலம் ராஜலட்சுமி, டி. எம். சௌந்தரராஜன்
    காணொளி: https://youtu.be/ff2Xtqty4p4

    https://youtu.be/ff2Xtqty4p4

    ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது
    ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது
    உன்னை எண்ணி கனவு கண்டு உள்ளம் ஏங்குவது
    ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது
    உன்னை எண்ணி கனவு கண்டு உள்ளம் ஏங்குவது
    ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது

    உன்னுடனே நான் இருக்கும்
    என்னுடனே நீ இருக்கும்
    உன்னுடனே நான் இருக்கும்
    என்னுடனே நீ இருக்கும்
    உண்மையை உலகம் அறியாது
    உண்மையை உலகம் அறியாது
    உன்னை இன்றி வாழ்க்கை ஏது

    ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது
    உன்னை எண்ணி கனவு கண்டு உள்ளம் ஏங்குவது
    ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது

    காண்பதெல்லாம் உன் உருவம்
    கேட்பதெல்லாம் உனது குரல்
    காண்பதெல்லாம் உன் உருவம்
    கேட்பதெல்லாம் உனது குரல்
    கண்களை உறக்கம் தழுவாது
    கண்களை உறக்கம் தழுவாது
    அன்புள்ளம் தவித்திடும் போது

    ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது
    உன்னை எண்ணி கனவு கண்டு உள்ளம் ஏங்குவது
    ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

    பழமொழி: நனி வெந்நீர் இல்லம் சுடுகலாவாறு

     

    இறப்பச் சிறியவர் இன்னா செயினும்
    பிறப்பினால் மாண்டார் வெகுளார் – திறத்துள்ளி
    நல்ல விறகின் அடினும் நனிவெந்நீர்
    இல்லம் சுடுகலா வாறு.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    இறப்ப சிறியவர் இன்னா செயினும்
    பிறப்பினால் மாண்டார் வெகுளார் திறத்து உள்ளி
    நல்ல விறகின் அடினும் நனி வெந்நீர்
    இல்லம் சுடுகலாவாறு

    பொருள் விளக்கம்:
    இழிந்த குணத்தை தனது இயல்பாகக் கொண்டவர்கள் துன்பத்தைத் தரும் செயல்களைச் செய்தாலும், மேன்மையான பண்புகளைத் தனது இயல்பாகக் கொண்டவர் அதற்காகாக அவரிடம் சினம் கொள்ள மாட்டார்கள். (இது எவ்வாறு எனில்) நன்கு கவனத்துடன் தேர்ந்தெடுத்த சிறந்த விறகுகளைக் கொண்டு அடுப்பெரித்துக் காய்ச்சினாலும், கொதிக்கும் வெந்நீரால் வீட்டை வேகவைக்க இயலாது என்பதைப் போன்றதாகும்.

    பழமொழி சொல்லும் பாடம்: சிறுமதி கொண்டோர் செய்யும் கேடுகள் குறித்து அவர்மேல் சீற்றம் கொள்ளாதிருப்பது பண்பிற் சிறந்தோர் இயல்பு.

    Share
  • என்று விடியும் விவசாயிகளின் வாழ்க்கை?

    பவள சங்கரி

    தலையங்கம்

    மனித இனத்துக்கே அன்னமிடும் விவசாயிகள்  இப்படி வெந்து வேதனையில் சாகலாமா? நாடு தாங்குமா? விஞ்ஞானமும், அறிவியலும் வளர்ந்துகொண்டிருக்கிறது என்று மார் தட்டிக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் நம்மோடு, நம் வயிறு நிரம்ப உழைக்கும் ஒரு இனம் இப்படி அழிந்து வருவது உணவு விசயத்தில் தன்னிறைவு பெற்றுள்ள நம் நாட்டிற்கு நல்லதா? இந்த நிறைவு நிலைக்குமா? இப்படி பல கேள்விகள் இன்று மக்களிடம் எழ ஆரம்பித்துவிட்டன. விவசாயிகளின் தற்கொலை விவகாரம் தொடர்ந்த வண்ணம் உள்ளது. நேற்றும் நம் தலைநகர் தில்லியில் தொழிலதிபர்களுக்கு ஆதரவான நில உரிமைப்படுத்தும் சட்டம் எதிர்ப்பு தெரிவித்து ‘ஆம் ஆத்மி கட்சி’ நடத்திய எதிர்ப்புப் பேரணி மற்றும் தில்லி முதல்வர் கேஜரிவால் கலந்துகொண்ட எதிர்ப்புக் கூட்டத்தில் அருகிலேயே மரத்தின் உச்சியில் ஏறி ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு விவசாயி தற்கொலை செய்துள்ளார். தொண்டர்கள் தடுப்பதற்கு முயன்றும் பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளார். விவசாயிகள் தற்கொலை நிகழ்வுகள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறதேயொழிய குறைந்தபாடில்லை. 1995 ம் ஆண்டிலிருந்து, கிட்டத்தட்ட 3 இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் அளிக்கிறது கருத்துக் கணிப்பு. இதில், சட்டீஸ்கர் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் தற்கொலை செய்திகள் வெளியிடுவதை நிறுத்திவிட்டன. நம் இந்தியாவில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்கள் மகாராஷ்டிரம், ஆந்திர பிரதேசம், கர்நாடகம், மத்திய பிரதேசம் மற்றும் கேரளா ஆகியவை. போதாதற்கு அனைத்து விவசாயிகளுக்குமே பிரச்சனை தரக்கூடிய நிலங்களை உரிமைப்படுத்தும் சட்டம் வேறு அச்சமேற்படுத்திக்கொண்டிருக்கிறது.

    இன்று சக்கரைத் தொழிற்சாலைகள் நலிவுடன் இருக்கின்றனவா அல்லது கரும்பை விளைவிக்கக்கூடிய விவசாயிகள் வளமற்று வாழ்கிறார்களா? சக்கரை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இன்று கிலோவிற்கு ரூ. 8 முதல் 10 வரை விலை இறங்கியுள்ளது. ஆனால் இந்த விலை இறக்கம் முழுமையாக பொதுமக்களைச் சென்று அடைந்துள்ளதா என்றால் இல்லை என்பதுதான் உண்மை. கிலோவிற்கு ரூ. 2 அல்லது 3 தான் பொதுமக்களைச் சென்று சேர்ந்திருக்கிறது. பொதுவாகவே அத்தியாவசியப் பொருட்களின் விலை இறக்கம் என்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றல்லவா. அதாவது நம் ரூபாயின் மதிப்பு அதிகரிக்கிறது என்றல்லவா அர்த்தம். இதைவிடுத்து விலையேற்றம் ஏற்படுத்தும் வகையில் ஆயத்தீர்வுகளையும், இறக்குமதி வரிகளையும் அதிகப்படுத்த அரசு முயல்வது சரியான தீர்வா? சக்கரை ஆலை அதிபர்களுக்கு மட்டுமே பயன் தரக்கூடிய திட்டமாகவே இருக்கிறது. இன்று கரும்பு விளை நிலங்களின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. முன்பு பெரியார் மாவட்டத்தில் 5 இலட்சம் ஹெக்டேரில் விளைவிக்கப்பட்ட கரும்பு தற்போது மூன்றரை இலட்சமாகக் குறைந்துள்ளது. இன்னும் அதனுடைய அளவு சுருங்கக்கூடிய வாய்ப்பே உள்ளது. இதற்கு இந்த விலை வீழ்ச்சி காரணமல்ல. நாம் எந்த ஒரு பொருளை வாங்குவதென்றாலும் பணம் கொடுத்துத்தானே வாங்குகிறோம். ஆனால் விவசாயிகளிடமிருந்து கரும்பை வாங்கும் போது அதற்குரியத் தொகையைக் கொடுக்காமல் காலந்தாழ்த்துவது ஏன்? தோராயமாக, 22,000 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்யப்படாமல் நிலுவையில் உள்ளது. இதுதான் விளை நிலங்களின் குறைவிற்குக் காரணம். பணப் பயிர் என்று கூறக்கூடிய கரும்பிற்கே இந்த நிலை. சக்கரை ஆலை அதிபர்கள் பணம் கைக்கு கிடைத்த பின்புதான் சக்கரையை வெளியே அனுப்புகின்றனர். ஆனால் விவசாயிகளுக்கு மட்டும் பணம் தராமல் இழுத்தடிப்பது சரியாகாது. சக்கரை ஆலை அதிபர்களுக்கு மொலாசஸ் மூலமாக ஒரு வருமானம் கிடைக்கும்போது அதற்குரிய ஆயத்தீர்வை அரசு ஏன் குறைக்க வேண்டும். கரும்புச் சக்கை கூட காகிதத் தொழிற்சாலையில் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. இப்படி பல வகையிலும் வருமானம் பெறக்கூடிய சக்கரை ஆலைகளை ஒரு சிலர் நலிவடையச் செய்ய அரசு அனுமதிக்கலாமா. அண்டை மாநிலங்களிலிருந்து வரக்கூடிய உபரி சக்கரையும், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யக்கூடிய சக்கரைக்கும் அதிகப்படியான வரி விதிப்பதால் செயற்கையான விலையேற்றம் ஏற்பட வழியாகிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைந்தால் நம் ரூபாயின் மதிப்பு கூடி நாட்டின் பொருளாதார உயர்வும் சாத்தியமாகும்.

    Share
  • காலடி சங்கரன்

    கிரேசி மோகன்

    images

    குருவாரம் ஆச்சார்யாள் ஜெயந்தி….
    ————————————————————-

     

    ”காலடி மைந்தனாய் கோவிந்த FATHERரின்
    காலடியில் கற்க, கயிலையின் -ஆலடி
    சங்கரனே அத்வைதம் ஸ்தாபிக்கத் தோன்றினன்:
    இங்கரனே வந்தநாள் இன்று’’

    ஹஸ்தாமலக கீதம்….
    ——————————————————————————–
    நொச்சூர் ஸ்ரீவெங்கடராம ஸ்வாமிகளின் ஆங்கில உரையைப்
    படித்த பாதிப்பில், தமிழில் வெண்பாக்களாகச் செய்துள்ளேன்….
    நொச்சூர் அவர்களின் ஆங்கில முன்னுரையையும் இணைத்துள்ளேன்….
    முன்கதையாக….மொழிபெயர்ப்பில் மூலமும் என்மூலம் வந்த கற்பனையும்
    இணைந்துள்ளது(ஸ்ரீ பகவான் ரமண உபயம்)….
    ————————————————————————————-

    images (2)
    (காப்பு)
    ———
    ‘’அருணா சலர்க்குப்பின், ஆதிசங் கரர்பின்
    கருணா கரர்காம கோடி -உருவாய்
    அரனா கவந்து அரணா கநின்றோய்
    வரனாய்யென் வெண்பாவில் வா’’….கிரேசி மோகன்….
    —————————————————————————————–
    ‘’ஆத்திலொரு கால்வைத்து ஆன்மப்போ ராட்டமாய்
    சேத்திலொரு கால்வைத்த ஜீவனவன் -காத்திருக்கான்
    காணா(து) ஒளிந்திடும், காணும் அனைத்திலும்
    நானார் உணர்வை நினைத்து’’….கிரேசி மோகன்….
    —————————————————————————————
    முன்கதை சுருக்கம்
    ————————–

    “பித்தான, பேசாத பிள்ளைமுன் அத்வைத
    சொத்தான சங்கரர்வி சாரிக்க , -அத்தா
    மலகனவன் வாக்கில் மலர்ந்தது கீதம்;
    உலககுரு கொண்டார் உவப்பு”

     

    ஆதிசங்கரர் கேள்வி….
    ————————–

    “யார்நீ!, உனக்கிங்(கு) எவர்சொந்தம்!, போவதெங்கே!
    பேரென்ன பிள்ளாய் பதிலெனக்கு, -கூறென்று
    வித்தை வினவ , விருட்ஷமாய் எழுந்தது
    அத்தா மலக அமுது”…..(1)

     

    அத்தாமலகர் பதில்…..
    —————————-
    “பால்வடியும் பிள்ளை பதிலாதி புங்கவர்க்கு,
    “நால்வர்ணம், யக்ஷசுர மேல்வர்ணம், -போல்எவரும்
    நானல்ல, இல்லறமோ நைஷ்டிகமோ ஞானியோ
    நானல்ல, நானுணர்வே நான்”….(2)….

    “காரியமாய் பூமியைக் காத்திடும் காரண
    சூரியன்போல், ஐம்பொறிக்கு சுத்தாத்ம-வீரியமே,
    அன்னவரே நானதற்கு ஆகாயம் தானுவமை,
    எண்ணவரு வோர்க்கு இருப்பு (OR ) எழுத்து”….
    (OR)
    எண்ணவரு வோர்க்கது ஏய்ப்பு”….adhi
    எண்ணவரும் ஏகாந்த மே”….(3)….

    “கனலும் கொதிப்புமாய் கட்டிக் கலந்தாற்போல்,
    உணர்வுடன் ஆத்துமா ஒன்றி;-புணர்ந்திடும்,
    சேதஅ சேதனங்கள் சார்ந்திருக்கும் அவ்வான்ம
    நாதனே, என்றுமுள நான்”….(4)….

    “ஆடியில் பிம்பமது ஆளுள்ள மட்டுமே
    ஜோடியாய் சேர்ந்தாலும் ஜீவனவன், -நாடிக்
    கிடப்ப(து) உணர்வின் கிளரொளியை நம்பி,
    தொடர்ந்தொளிர்அவ் வான்மாநான் தான்”….(5)….

    “முன்னாடி பார்த்த முகம்மட் டுமிருக்கும் –
    கண்ணாடி பிம்பங்கள் காட்சிப்பொய் -உன்னாடை –
    மேனி ,தனித்தன்மை ,மாயை அதுபோல –
    ஞானி உணர்வான்மன் ஞான் “….(6)….

    “எண்ணும் மனதை இயக்கும் மனம்யார் ! –
    கண்ணுக்குப் பின்னிருந்து காண்கின்ற -கண்ணன்யார் !-adi-sankara-2
    கண்மனம் காணாத கம்பீ ரவுணர்வாம்,
    நன்மையா னந்தமே நான்’’ ….(7)….

    “கணக்கற்ற பிம்பம் குடநீரில், ஆனால்,
    உனக்குற்ற சூரியனோ ஒன்று; -மனக்குற்றம்,
    ஒன்றைப் பலவாய் உடைத்தல், உணர்விலே,
    நின்றென்றும் நீங்காதோன் நான்”….(8)….

    ’’அருக்கன் இருக்க அனைத்தும் தெரியும்,
    கருக்கல் வருங்கால் காணா(து) -இருக்கும்காண்,
    சூரியர்க்கும், கண்ணுக்கும் ஜோதி கொடுக்கும்நான்,
    பேரியக்க ஆன்மவொளி பார்’’….(9)….

    ’’காட்சியொரே காலத்தில் காண்போர் அனைவர்க்கும்,
    தீட்ஷண்ய மாக்கும் திவாகரனின் -மாட்சிமைபோல்,
    பட்டுப் பலர்புத்தி பேரொளி வீசிடும்
    நிட்டைப் பரபிருமம் நான்’’….(10)….

    ”ஏகபிம்ப பானு எழுச்சியிலாத் தண்ணீரில்,
    ஏகமாய் பிம்பங்கள் ஏற்றிடும் -வேகநீர்,
    ஆசையின் வேகத்தில் அவ்வான்மா ஜீவன்கள்,1032A.108
    வாசனை நீங்கவொளி வீச்சு’’….(11)….

    ”மார்த்தாண்டன் சூரியனை மேக அறியாமை
    போர்த்தாண்டு கொள்ளும் படுபாவி, -தீர்த்தாண்ட
    வர்க்கு ஒளியாய் வெளிவரும் ஆன்மனாய்
    நிற்கும் நிரந்தரம் நான்’’….(12)….

    ’’யாதுமாய் நின்றாலும், ஏதும் அதைத்தொடாது,
    ஆதவனே ஒட்டாத ஆகாசமாய், -ஈதுணர்ந்து,
    எப்போதும் ஆன்மனாய் எங்கும் நிலைத்தபடி
    நிற்போனே நிர்மல நான்’’….(13)….

    “செய்யும் முறையால் ஸ்படிக நிறம்மாறும்,
    அய்யவுன் புத்தியும் அஃதேபோல், -பெய்யும்,
    மதிபிம்பம் ஆடும் நதிநீரில், ஆன்மப்
    ப்ரதிம்பம் உன்னாட்டம் போல்”….(14)….

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

     

    வடபத்ர சாயியாய் வ்ரஜ குலத்தோன் ஆலில் மிதந்தபோது
    காலடித் தூளியை உண்ணும் பசு நினைவும், பசி நினைவும்
    வர….தன் கட்டைவிரலில் பெருகும் கிருஷ்ண காலாமிருதத்தை(பாதத் தூளியை)
    ஆலில் மிதக்கையில் அருந்தினான்….!

    ’’காலடி சங்கரர் கற்றதை, கோகுலக்
    காலடியில் பெற்றது கோமாதா: -காலடித்
    தூளியின் உன்னதம் தாமோ தரணுர்ந்து,
    ஊழியில் உண்டான் உணவு’’….கிரேசி மோகன்….

    Share
  • தொல்காப்பியர் கூறும் நூல் பூணூலா?

    முனைவர் ஜ.பிரேமலதா,

    தமிழ்இணைப்பேராசிரியர்,

    அரசு கலைக்கல்லூரி,சேலம்-7

    தொல்காப்பியர் கூறும் நூல் பூணூலா?

    முன்னுரை

    தொல்காப்பியர், பொருளதிகார மரபியலில்  நான்கு வருணத்தாருக்குரியப் பொருட்களைப் பற்றிக் கூறுமிடத்து, நூல் என்ற சொல்லையும் குறிப்பிட்டிருக்கிறார். இச்சொல் தொடர்பாக உரையாசிரியர்கள் பலரும் பலவித கருத்துக்களைக் கூறியுள்ளனர். இக்கருத்துக்களிலுள்ள சாதியச் சார்புத் தனைமையைக் கண்டறிந்து உண்மையை வெளிப்படுத்தும் நோக்கில் இக்கட்டுரை அமைகிறது.

    நூற்பா நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங் காலை அந்தணர்க் குரிய ( 3: 615)

    இந்நூற்பாவிற்குரிய பொருள் அந்தணர்களுக்குரிவை நூல்,கரகம்,முக்கோல்,மணை என்ற நான்கு பொருட்கள் என்பதாகும்.

    1.நூல் – நூல் என்பதற்குப் பூணூல் என உரையாசிரியர்கள் பலரும் பொருள் கொண்டுள்ளனர்.(இதைப் பற்றியே இக்கட்டுரை ஆராய்கிறது.)

    2.கரகம் – சிறிய பானை

    3.முக்கோல் -உயிர் மூலப்பொருளின் விகாரமாகிய உடம்பைக் கொண்டிருத்தல் போல் இறைவன் உடம்பு, உயிர் இவையிரண்டையும் தனது உடம்பாகக் கொண்டுள்ளான். இறைவன்,உடல்,உடம்பு என்ற  இம்மூன்று தத்துவங்களும் ஒன்றை விட்டொன்று பிரியாமல் எக்காலத்தும், தத்தம் இயல்பை விடாமல் ஒன்று சேர்ந்துள்ளன என்பதை விளக்கவே இறைவனை வழிபடுபவர்கள், துறவிகள் மூன்று கோல்களை ஒன்றாகப் பிணைத்து கையில் வைத்திருப்பர். இதை “முக்கோல்” என்பர். துறவிகள் இவ்வாறு முக்கோல் ஏந்தும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வந்திருப்பதை தொல்காப்பிய செய்யுள் வரிகளால் அறியலாம்.

    4.மனை – அமருவதற்குரிய சிறிய பலகை.

    உரையாசிரியர்கள் கருத்து

     இதில் முதலாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ள நூல் என்னும் சொல்லுக்குத்தான் உரையாசிரியர்கள் பலரும் பலவாறாகப் பொருள் கொண்டுள்ளனர்.

    இங்கு குறிப்பிடப்படும் நூல் என்பது எது?

    உரையாசிரியர்களின் கருத்துகளை முதலில் பார்ப்போம்.

    1.தொல்காப்பிய முழுமைக்கும் உரை வகுத்த இளம்பூரணர், ‘நூலும் கரகமும் முக்கோலும் மணையும் ஆராயுங் காலத்து அந்தணர்க்கு உரிய‘ என்கிறார்.

    2.உரையாசிரியர் பேராசிரியர் அவர்கள், (இ.சுந்தரமூர்த்தி பதிப்பு)”நூலினை முற்கூறினான் பிறப்பு முறையானுமென்பது .இனிக் குடுமியுங் குசையம் (தருப்பை) போல்வன…குண்டிகை-நீர் முகந்து வைத்திருக்கும் கலம். யாமை மனை-யாமை வடிவால் செய்த இருக்கைப்பலகை….பிறப்புமுறை-அருபிறப்பாளன் என்னும் பிறப்பு முறை. சிறப்பு முறை – நூல் தாங்கிய பின்னரே கரகம் முதலிய தாங்குதல் பற்றிய சிறப்பு முறை”(ப.636-637) என்கிறார். இங்கு, பேராசிரியர் பிறப்பு முறையால் பெறப்படுவது நூல் என்பதினால் அது பூணூலையேக் குறிக்கிறது எனலாம்.

    3.உரையாசிரியர் வ.த.இராமசுப்பிரமணியம் அவர்கள்,”முப்புரிநூல் அணிவது ஏழு வயதுப்பருவத்தில் அந்தணச்சிறுவர்களுக்குச் செய்யும் சடங்குமுறை. இருபிறப்பாளர் எனலும்ஆம்.” (ப.482)என்கிறார்.இங்கு வெளிப்படையாகவே பூணூல் எனக் குறிப்பிடப்படுகிறது.

    4.தமிழண்ணல் அவர்கள், அந்தணர்க்குரியவை முப்புரிநூல், கமண்டலம்(கரகம்), முக்கோல் தண்டு, மனை இருக்கை ஆகியன. நூல்-முப்புரிநூல் கரகம்-கமண்டலம்.”என்கிறார்.

    5.ஞா.மாணிக்கவாசகன் என்பார்,“நூல்-சுவடி (முப்புரிநூல் என்பாரும் உண்டு.)”என்று நூல் என்பதற்கு சுவடியாக இருக்கலாம் என ஊகித்துள்ளார். அந்தணர், துறவிகளாய் இடம் விட்டு இடம் செல்லும் துறவோராவர். இங்கு நூலெனக் கூறப்பட்டது பொத்தகக் கட்டை இது:

    ” பூதியு மண்ணும் பொத்தகக் கட்டும்

    மானுரி மடியு மந்திரக் கலப்பையும்

    கானெடு மணையுங் கட்டுறுத் தியாத்த

    கூறை வெள்ளுறிக் குண்டிகைக் காவினர்” (பெருங்கதை – 7  ம் நூ  )

    6.பாவலரேறு ச.பாலசுந்தரம் அவர்கள்,“முந்நூலும்(முப்புரிநூல்) கமண்டலமும்,முக்கோலும்,இருக்கை மனையும் அந்தணர்க்குரிய உடைமையாகும்” என்பதோடு முப்புரிநூல் அந்தணர்,அரசர் தவிர்ந்த ஏனையோர் நூல் பூணுதல் ஆரியர் வழக்கமாகும்….முந்நூலும் மனையும் பொது. கரகமும் முக்கோலும் துறவு பூண்டோர்க்குரியவாகும் என்கிறார்.(ப.211-212).இங்கு பாலசுந்தரம் அவர்கள், ஆரிய மரபில் அந்தணர்,அரசர் தவிர்த்தவர்களுக்கும் பூணூல் அணியும் வழக்கம் இருந்தது என்கிறார்.

    நால்வகை வருணத்தாருக்கும் உரியது பூணூல்

    தொல்காப்பியர் குறிப்பிடும் நூல் பூணூல் என்றால், தமிழகத்தில் அந்தணர் எனப்படும் (ஆரியர்கள்) பார்ப்பனர்கள் மட்டும் பூணூல் அணிபவர்கள் அல்லர். தொல்காப்பியம் சொல்லுகின்ற அனைத்து வர்ணத்தவருமே பூணூல் அணிபவர்கள்தான்.

    1.இன்றைக்குத் தாழ்த்தப்பட்டவர்களாகச் சொல்லப்படும் பறையர் சமூகத்தவர், தாங்கள் பூணூல் அணிவது குறித்து இன்றுவரையிலும் பாடிவரும் பாடல்களை வரலாறு தெரிந்தவர்கள் அறிவார்கள்.

    “முந்திப் பிறந்தவன் நான்

    முதல் பூணூல் தரித்தவன் நான்

    சங்குப் பறையன் நான்

    சாதியில் மூத்தவன் நான்”- என்கிறது அப்பாடல்.

    ஞானவெட்டியார் பாடல்கள்,

    “… … பூணூலந்

    தரணிமுத லென்பறையில் தழைத்த தாண்டே”

    “பூணூல் தரித்துக் கொள்ளுவோம் – சிவ சிவ

    பொறியுமைம் புலனையுந் தொழுது கொள்ளுவோம்

    வேண விருதுகளும் விகிதமாய்

    வெண்குடை, வெண்சாமரமும் பிடித்துக் கொள்வோம்”

    “பூணூல் பிறந்ததெங்கே -சிவசிவ” http://saanron.webs.com/katuraikal.htm  என்று சான்று காட்டுகிறார்.

    2.விஸ்வபிராமணர்கள் எனப்படும் கம்மாளர்கள் தாங்களே உண்மையான பார்ப்பனர்கள் என்று நீதிமன்றம் சென்று வாதாடிய வரலாறுதான் ‘சித்தூர் ஜில்லா அதாலத்’ என்று புகழ் பெற்றது. அந்தக் கம்மாளர்கள் கிருஷ்ண யஜூர் வேதத்தின் தைத்ரிய சம்ஹிதையைப் பின்பற்றி வேத கர்மாக்களுடன், உபநயனம் எனப்படும் பூணூல் அணியும் சடங்கைச் செய்து கொள்பவர்கள் என்பதற்கு ஆதாரமாக ஆந்திர மாநிலத்தில் பல கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.

    3.நாட்டுக் கோட்டை நகரத்தார் என்று சொல்லப்படும் செட்டியார்கள் பூணூல் அணிபவர்கள். வன்னியர்களில் ஒரு பிரிவினர் முத்திரை போட்டுக் கொள்வது என்கிற பெயரில் பூணூல் அணிகின்ற சடங்கைச் செய்து கொள்கின்றனர்.

    1. ஆப்பிரிக்காவின் எகிப்பது நாட்டிற்கு ஆரியர்கள் செல்வதற்கும் முற்பட்ட காலத்தைச் சேர்ந்த பாறை ஓவியங்கள் கிடைத்துள்ளன. அதில் உள்ள உருவங்கள் சிலவற்றில் பூணூல் போன்று மார்புக்குக் குறுக்கே வரையப்பட்டுள்ளது. அது பூசாரிகளின் ஓவியங்களாக இருக்கலாம் என அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், பூணூல் அணிதல் என்பது சூரிய வழிபாடு தொடர்புடைய ஒரு மதச் சின்னம். இஸ்லாமியர்கள் தலையில் குல்லாய் அணிவது போல இது ஒரு மதச் சின்னம் அவ்வளவே.

    புலையன் என்ற சொல்லுக்கு தமிழ் லெக்சிகனில் (Tamil Lexicon) “கீழ்மகன்” (கீழ்ச்சாதியான்) என்று பொருள் தரப்பட்டுள்ளது. அதே சொல்லுக்குப் “புரோகிதன்” என்று வேறொரு பொருளும் தரப்பட்டுள்ளது.

    புரோகிதர் என்றால் மதகுரு (Priest); சமயத் துறையின் தலைமகன். சமயச் சடங்குகளை நிகழ்த்துவது இவரது சிறப்புரிமை. இந்தத் தலைமகன் எப்படிக் கீழ்மகனாகவும் கருதப்படமுடியும்? இது ஆழ்ந்து ஆய்வு செய்வதற்குரியதாகிறது.

    சமயச் சடங்குகளில் கடவுள்வழிபாட்டுச் சடங்குதான் முதலிடம் வகிப்பது. இதற்கு அடுத்து புராதன சமுதாயத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது ஈமச்சடங்காகும். திருமணச் சடங்கு முதலியவெல்லாம் காலத்தால் மிகவும் பிற்பட்டவை. எனவே கடவுள் வழிபாட்டைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் இறுதிச்சடங்குதான் முதல்இடத்தில் இருப்பது.

    பழந்தமிழகத்தில் இத்தகைய பெருமைவாய்ந்த இறுதிச் சடங்கை நடத்திவைக்கும் மரியாதைக்குரிய மதகுருவாகப் “புலையர்” இருந்தனர். குடிமக்களுக்கு மட்டுமல்லாது மன்னர்களின் இறுதிச் சடங்குகளையும் இவர்களே செய்துள்ளனர்.

    சுடுகாட்டில், இறந்தமன்னனின் உடல் கிடத்தப்பட்ட பிறகு, புலையன் சோறும்,கள்ளும் படைக்க, இறந்தவன் அதை வாங்கி உண்பான் என்று நம்பப் பட்டது. அதன்பின் உடலுக்கு எரியூட்டப்படும்.

    இதைக் குறிப்பிடும் பாடல்கள் புறநானூற்றில் உள்ளன.

    “புல்லகத்திட்ட சில்அவிழ் வல்சி

    புலையன் ஏவப் புல்மேல் அமர்ந்து உண்டு

    அழல்வாய்ப் புக்க…

    இப்பாடலை (எண்: 360) மேற்கோள் காட்டிப் புலையர் புரோகிதராயிருந்தனர் என்று பொருள் தந்துள்ளது லெக்சிகன்.

    ஆனால் இதே புறநானூற்றில் இன்னொரு பாடலும் உள்ளது. இதில் இறுதிக்கடன் தீர்க்கும் தகுதி புதல்வனுக்கு மட்டுமே உண்டு என்று வலியுறுத்தப் படுகிறது.

    இப்பாடலில் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி இவ்வாறு கூறுகிறான்:

    “இதோ அம்பு செலுத்த ஆயத்தமாகிவிட்டேன். அதற்குமுன் பசுக்களும், பார்ப்பனரும், பெண்களும், இறந்தோர் கடன்முடிக்கப் பிள்ளை பெறாதவர்களும் விலகியோடிப் பாதுகாப்பு தேடிக்கொள்ளுங்கள்!” (புறம்: 9).

    “ஆவும், ஆனியல் பார்ப்பன மாக்களும்

    …………………………………………….

    தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்

    பொன்போல் புதல்வரைப் பெறாதீரும்

    ……… நும் அரண் சேர்மின்”.

    பல யாகசாலைகள் நிறுவி வேள்விகள் நடத்த உதவிய அந்த மன்னனைப் புகழும் புலவர் வைதிகச் சார்பினர் என்று கொள்ளலாம். இவர் இறுதிச் சடங்கில் புலையனின் முக்கிய இடத்தை மறுத்துவிடுகிறார்.

    செத்தவனுக்குக் கொடுக்கப் படும் உணவுதான் அவனது எதிர்கால வாழ்வைப் பாதுகாக்கும். இந்த மிக முக்கியமான சடங்குதான் இப்புறப்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது என்கிறார் உ.வே.சா. ஆனால் புறநானூற்றில் இரண்டு பாடல்களில் (360, 363) பிண்டம் கொடுக்கும் சடங்கைப் புலையன் செய்ததாக வந்துள்ளது. அன்று தமிழகத்தில் வந்து குடியேறியிருந்த வைதிகர் பார்வையில் இது படுபயங்கரமான பாவமாகும். இருந்தாலும் எதிர்ப்புக்குரல் மிக பலவீனமாகவும், மறைமுகமாகவும்தான்

    ஒலிக்கிறது. புலையன் பிண்டம் தரலாகாது என்று நேரடியாகத் தடை செய்வதற்குப் பதில் புதல்வனைப் பெறாதோர்க்குக் கதிமோட்சமில்லை என்று நுட்பமாக உரைக்கிறது; புலையனின் இடத்தில் புதல்வனை வைக்கிறது.

    புலையர்குடியினர் இறந்தோரை வைத்துப் புதைக்கும் முதுமக்கள்தாழியையும் செய்பவர்களாக இருந்தனர். எனவே சுடுகாட்டில் புரோகிதம் செய்வது மட்டுமன்றி இடுகாட்டிலும் இவர்கள் பணி இன்றியமையாததாக இருந்தது. இறுதியடக்கம் செய்ய உதவுவதை இழிவானது என்று நாகரிகம் படைத்தவர்கள் நினைக்கமாட்டார்கள்.

    சுடுகாடு மற்றும் இடுகாடு குறித்துப் பார்ப்பனியத்தில் உள்ளதுபோல் அருவருப்பு அடைவது அர்த்தமற்றதாகும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இத்தகைய நல்ல நாகரிகம் இருந்தது. பார்ப்பனியப் பண்பாட்டால் இந்நாகரிகத்தை நாம் இழந்தோம்.

    “கலம்செய் கோவே, கலம்செய் கோவே! வண்டிச் சக்கரத்தில் ஒட்டிக்கொண்டு வந்த பல்லி போல, என் கணவனோடு பல ஆபத்தான பாதைகளைக் கடந்து வந்தேன். ஆனால் அவனோ இன்று இறந்துபோனான். அவனைப் புதைக்க ஒரு ஈமத்தாழி செய்து எனக்குத் தந்தருள். அதையும் சற்றுப் பெரியதாகச் செய்துவிடு– எனக்கும் அதில் இடம் இருக்குமாறு.” இப்படி ஒரு புலையரை இறைஞ்சுகிறாள் ஒரு புறநானூற்றுப் பெண்.

    இது ஓர் அற்புதமான புறப்பாடல் செய்தி (எண்: 256). இதைவிட அற்புதம் ஒரு கைவினைஞன் போற்றப்பட்டு “கோ” என அழைக்கப் பட்டிருப்பது. “அருள்கூர்ந்து தாழியைச் செய்துதா,” என்று புலையனான அவன் தயவு கோரப்படுகிறது.

    இவையனைத்தையும் தொகுத்துப் பார்க்கும்பொழுது பழந்தமிழகத்தில் புலையர் போற்றப்பட்டிருந்தமை புலனாகும் .இவர்கள் பொதுவாகப் பறையர் ,பாணர் முதலிய குடிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.குடிமக்களும் ,மன்னர்களும் தமக்குள்ள எத்தனையோ மாறுபாடுகள் இருந்தாலும் இப்புரோகிதரைப் பெரிதும் மதித்தார்கள்.

    மெகஸ்தின் என்னும் கிரேக்கர் சந்திரகுத்த மயூரனின் அரண்மணையில் கி. மு. 302-முதல் சிலகாலம் தங்கியிருந்தார். இவர் இந்தியாவைப்பற்றிய ஒரு நூல் எழுதியிருந்தார். அதிற் காணப்படும் சில பகுதிகள் அக்கால இந்திய மக்களின் வாழ்க்கை முறைகளை நன்கு விளக்குவன. அவர் கூறுவன :

      இந்தியர் ஏழுவகையாகப் பிரிக்கப்பட்டிருந்தனர். தத்துவசாத்திரத்தில் தேர்ந்த ஒரு கூட்டத்தினர் முதற் குலத்தினராகக் கொள்ளப்பட்டனர். மற்றைக் கூட்டத்தினரைவிட இவர்களின் தொகை குறைவாயிருந்தது. இவர்கள் எசமானராகவோ வேலைக்காரராகவோ இருக்கவில்லை. மறு உலகத்திற்குரிய பொருள்களை எல்லாம் இவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள் என மக்கள் நம்பினார்கள். ஆகவே, அவர்கள் இவர்களைப் பிணச்சடங்குகள் புரிவதற்கும் உரிய காலங்களிற் கடவுட்பலியைச் செலுத்துவதற்கும் அழைத்தார்கள். இவ்வகைக் கிரியைகள் புரிவதற்குக் கைம்மாறாக இவர்கள் மிகுந்த பொருளைப் பெற்றனர்.(தமிழ் இந்தியா – யாழ்ப்பாணத்து நவாலியூர்திரு.ந.சி.கந்தையா பிள்ளை, ப -89)

    அப்படியெனில் தொல்காப்பியர் குறிப்பிடும் நூல் என்பது எப்படி பூணூல் எனக் கருதப்பட்டது?

    தொல்காப்பியர் குறிப்பிடும் அந்தணர் என்பவர் யார்?

    அப்படியெனில் தொல்காப்பியத்தில் பிற்காலத்தில் வருணம் தொடர்பான பாடல்கள் இடைச்செருகல்கள் செய்யப்பட்டனவா?

    எனில் தொல்காப்பியத்தில் இடைச்செருகல் – எவை

     தொல்காப்பியத்தின் ஒவ்வொரு இயலிலும் நூற்பாக்கள் ஒழுங்காக அடுக்கப்பட்டுள்ளன.

     இந்த ஒழுங்கடுக்கில் தொடர்பில்லாத சில நூற்பாக்கள் இடையில் வருகின்றன.

     அவற்றை அறிஞர்கள் இடைச்செருகல் எனக் குறிப்பிடுகின்றனர்.

    அகத்திணையியலில்,

    ‘மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்தே’ என்றும்,

    புறத்திணையியலில்,

    ‘அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்

    ஐவகை மரபின் அரசர் பக்கமும்

    இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும்’  என்றும்

    கற்பியலில்,

    ‘மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்

    கீழோர்க்காகிய காலமும் உண்டே’ என்றும்

    பொருளியலில்,

    ‘பரத்தை வாயில் நால்வர்க்கு முரித்தே’ என்றும்,

    எழுத்ததிகாரத்தில் எழுத்தை உச்சரிக்கும் ஒலியளவுக்கு இலக்கணமாக,

    ‘அளபின் கோடல் அந்தணர் மறைத்தே’ என்றும் சொல்லப்பட்டுள்ளது.

    இவ்வாறாக, மரபியல் தவிர வேறுபல இயல்களிலும் நால் வர்ணம் தொடர்பான, பிராம்மணரின் மறை தொடர்பான சுட்டுகள் உள்ளன..இவற்றை குறித்த தமிழாய்வாளர்களின் கருத்துக்கள்

    1.முனைவர் சி இலக்குவனார் தம் ஆங்கில மொழிபெயர்ப்புத் தொல்காப்பிய நூலில், மரபியல் பகுதியில் 24 நூற்பாக்களை உடுக்குறி(*)யால் இடைச்செருகல் எனப் பாகுபடுத்தியுள்ளார்.

    மக்களில் பிறப்பால் வரும் நான்கு வருண உடைமைகளைக் கூறும் நூற்பாக்கள் 15 (71-85)

    செய்யுளியலில் கூறாமல் மரபியலின் இறுதியில் தொடர்பில்லாமல் சேர்க்கப்பட்டிருக்கும் 9 நூற்பாக்கள்ஆக  24 நூற்பாக்கள் இடைச்செருகல் என்கிறார். மேலும், அகத்திணையியலில் பிரிவைப் பற்றிச் சொல்லும்போது, 13 நூற்பாக்களில் (24 முதல் 36) குலப் பிரிவு சேர்க்கப்பட்டுக் குழப்பம் செய்யப்பட்டுள்ளது. இவையும் இடைச்செருகல்கள் என்பது தெளிவு என்றும்இவை இடைச்செருகல்களேஎன்பதை உரையாசிரியர்களின் மேற்கோள்களால் அறியலாம்.சங்கநூல் பாடல்களில் இவற்றிற்கான மேற்கோள் பாடல்கள் இல்லாமல் பண்டைய உரையாசிரியர்களே புறப்பொருள் வெண்பாமாலை, யாப்பருங்கல விருத்திமுதலான பிற்கால நூல் தரும் பாடல்களைத் தருகின்றனர்என்றும் விளக்கம் தருகிறார்.

    2.அகத்திணையியலில் மக்களை ஆயர், வேட்டுவர் எனப் பகுத்துக் காட்டும் பகுதி தொல்காப்பியருடையது. சங்கப்பாடல்களில் இத்தகைய பாகுபாடுகளே உள்ளன. நால்வர், உயர்ந்தோர், பின்னோர் எனக் கூறும் 6 நூற்பாக்கள் இடைச்செருகல்.

    மரபியலில் ஆண், பெண் விலங்கினங்களின் பெயரைக் கூறிய பின்னர், புல் மர வகைகளின் இலை, பூ, காய் வகைகளை விளக்குவதற்கு முன்னர் இடையில் அந்தணர், அரசர், வைசியர், வேளாண்-மாந்தர் ஆகியோரைப் பற்றிப் பேசும் 15 நூற்பாக்கள் இடைச்செருகல்கள்.

    மேலும் ஆங்காங்கே சங்க காலத்துக்குப் பிற்பட்டபழக்க வழக்கங்களைக் கூறும் சிறுசிறு மாற்றங்கள் தெளிவாகத் தெரிக்ன்றன.வைசிகன் என்னும் சொல் சங்கநூல்களில் இல்லை. வணிகன் என்னும் சொல்கூடப் பிற்காலத்தில் சங்கநூல்களைத் தொகுத்தவர் சூட்டிய புலவர் பெயர்களில் மட்டும் வருகின்றன.வேளாண்-தர் ன்னும்    ர““தந்மா ல்லாட்சியும்சொ

      .சங்கநூல்களில் இல்லை.. வேளாண்-சிறுபதம் வேளாண்-வாயில்  போன்ற ஒருசில சொற்களும் வேளாண்மைத் தொழிலைக் குறிப்பன அல்ல.வேளாண்மை  என வரும் சொல்கூட உதவி செய்தல் என்னும் பொருளில் மட்டுமே வருகிறது.இந்த நான்கு-சாதிப் பாகுபாட்டைக் காட்டும் குறிப்புகள்கூடச் சங்கநூல்களில் இல்லை. •  INDEX DES MOTS DE LA LITERATURE TAMOULE ANCIENNE (1970) (சங்கநூல் சொல்லடைவு) முயற்சி இல்லாமல் பெற்ற சிற்றுணவு-நீர் -புறம் 74,கொடை வழங்கும் வாயில் பொருநராற்றுப்படை அடி 75 , கலித்தொகை (101-44) (திருக்குறள் 212) எனவே இந்த சான்கு-சாதிப் பாகுபாட்டு முறைகளைக் காட்டும் நூற்பாக்கள் தொல்காப்பியத்தில் செருகப்பட்டவை.செருகப்பட்டுள்ள இடமும் மேலும் கீழும் உள்ள நூற்பாக்களைப் பார்க்கும்போது மரபியல் சொற்களுக்குத் தொடர்பில்லாதவை என்பது விளங்கும். நன்றி.விக்கிப்பீடியா.

    3.மின்தமிழ் என்னும் இணையக்குழு விவாதத்தில் சேசாத்திரி ஸ்ரீதரன் என்பவர், “மரபியலில் நால்வகை வருணம் இடம் பெற்றிருப்பது இடைச்செருகல் ஆகும். தொல்காப்பியர் எழுதியதில்லை அது. அச் செய்திகளில் கூறப்படும் இடம், சூழல் ஆகியவற்றை காணும் போது அது இடைச் செருகல் எனத் தெற்றெனத் தெரியும்.தொல்காப்பியம் பொருளதிகார மரபியலில் உயிரினங்களை, அவற்றின் பெயர்களை விளக்கிக் கொண்டு வரும் போது 71 ஆவது நூற்பாவாக  வருணம்  பற்றிய செய்தி வருகிறது. அதிலிருந்து 85 ஆவது நூற்பா வரையிலும் அது தொடர்பான செய்திகளே கூறப்படுகின்றன. 86 ஆவது  நூற்பா, விடுபட்டுப் போன மரபியலின் தொடர்ச்சியாக ‘புறக் காழனவே புல்லெனப்படுமே’  என விளங்குகிறது. அறிவியல் செய்திகளுக்கு ஊடாக சமூகவியல் கொள்கை இடம் பெற்றிருப்பது முற்றிலும் பொருத்தமாக இல்லை. எனவே, வருணம் பற்றிய தொல்காப்பியர் காலத்தில் ஆரியப் பார்ப்பனர்கள் சமூகச் செல்வாக்கு பெற்ற ஒரு பிரிவாக இல்லவே இல்லை. எனவே தொல்காப்பியர் நால் வருணம் பற்றி பேச வாய்ப்பில்லை. இடைச்காலத்தைச் சேர்ந்த பாறை ஓவியங்கள் கிடைத்துள்ளன. அதில் உள்ள உருவங்கள் சிலவற்றில் பூணூல் போன்று மார்புக்குக் குறுக்கே வரையப்பட்டுள்ளது. அது பூசாரிகளின் ஓவியங்களாக இருக்கலாம் என அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், பூணூல் அணிதல் என்பது சூரிய வழிபாடு தொடர்புடைய ஒரு மதச் சின்னம். இஸ்லாமியர்கள் தலையில் குல்லாய் அணிவது போல இது ஒரு மதச் சின்னம் அவ்வளவே.

    பிரவாஹன் என்பவர்,தொல்காப்பியம் புறத்திணை-இயல்  பார்ப்பன பக்கம், அரசர் பக்கம், ஏனோர் பக்கம் – என்னும் பாகுபாடுகள் தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்திலேயே பார்ப்பனரின் முதுகில் பூணூல் மாட்டப்பட்டு விடுகிறது.” என்கிறார். http://www.sooddram.com/Articles/otherbooks/Mar2013/Mar252013_Tamilenthi.htm.

    உண்மையில் தொல்காப்பியர் குறிப்பிடும் நூல் பூணூல்தானா? என்றால் இல்லவே இல்லை என்பதே ஆய்ந்தபின் கிடைத்த பதில்.

    தொல்காப்பியர் குறிப்பிடும் நூல் பூணூலே அல்ல

    தொல்காப்பியர் குறிப்பிடும் நூல் என்பதை பூணூலாகக் கருதியதன் விளைவே இச்சர்ச்சைகளுக்குக் காரணம்.பெரும்பாலும் உரையாசிரியர்கள் அனைவரும் நூல் என்பதற்குத் தோளில் அணியும் பூணூலையேக் குறிப்பதாகக் கருதி உரை வகுத்துள்ளனர். அதை அடிப்படையாகக் கொண்டே விவாதங்களும் நிகழ்த்தப்பட்டுள்ளன. ஆனால், பூணூலைத்தான் நூல் என்ற சொல் குறிக்கிறதா எனபதை சங்கப் பாடல்களைக் கொண்டு ஆராய்ந்தால், நூல் என்னும் சொல் பூணுலைக் குறிக்கவேயில்லை என்பது தெளிவாகப் புலப்படும்.

    நூற்பாவினை ஊன்றிக் கவனமாகப் படித்துப் பார்த்தால் ஒரு செய்தி புலப்படும். தொல்காப்பியர் கையில் எடுத்துச்செல்லும் பொருட்களைத்தான் பட்டியலிடுகிறார்.

    நூலே கரகம் முக்கோல் மணையே

    ஆயுங் காலை அந்தணர்க் குரிய (தொல்.3: 615)

    அந்தணராக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி பூணூலைக் கையில் எடுத்துச் செல்ல மாட்டார்கள். தோளில்தான் அணிவார்கள்.ஆனால்,தொல்காப்பியர்,அந்தணர் கையில் எடுத்துச் செல்லும் பொருட்களாக நூல், கரகம், முக்கோல், மணை முதலானவற்றைக் குறிப்பிடுகிறார்.

    கையில் நூலை எதற்காக எடுத்துச் செல்ல வேண்டும்?

    நூலை அடுத்து கரகம் இடம் பெற்றிருப்பதால், அது கரகத்தை எடுத்துச் செல்வதற்குரிய நூலையேக் குறிக்கிறது.சங்க இலக்கியப் பாடல்களில் இதற்கு சிறப்பான உதாரணம் உள்ளது. பல மெல்லிய நூல்களைக் கொண்டு முறுக்கப்பட்ட கயிறு ‘புரிநூல்’ என்று அழைக்கப்பட்டுள்ளது. இப்புரிநூல் சிறிய பொருட்களைக் கட்டி எடுத்துச் செல்வதற்கு உறியாகப் பயன்பட்டுள்ளது

    முனிவர்கள் ‘கரண்டை’ எனப்படும் சிறிய பானையை நீர் எடுத்துச் செல்லப் பயன்படுத்தியுள்ளனர். இக்கரண்டையானது கல்லில் பொத்தல் ஏற்படுத்தினாற் போன்ற சிறிய வாயினை உடையது. கரண்டை கீழே சாய்ந்தாலும் சிறிய அளவு நீரே வீணாகும். இக்கரண்டை எனப்படும் சிறிய பானையைப் பல வடங்களுடையப் புரி நூலால் செய்யப்பட்ட உறியில் வைத்துக் கையில் எடுத்துச் சென்றுள்ளனர். பல வடமுடையப் புரிநூலால் ஆன உறியானது ‘சிமிலி’ என அழைக்கப்பட்டுள்ளது.

    “”””கல்பொறிந்தன்ன இட்டு வாய்க் கரண்டைப்

    பல்புரிச் சிமிலி நாற்ற நல்கி வர”” (மதுரைக் காஞ்சி. 483-484)

    கல்லினால் பொத்தல் ஏற்படுத்தினாற் போன்ற சிறிய வாயினையுடைய கரண்டை எனப்படும் சிறிய பானையைப், பல புரிகளுடைய நூலைக்கொண்டு கட்டி, அந்நூலை கையால் பற்றிய படி எடுத்துச்சென்றனர் என்பது இதன் பொருளாகும். இந்நூல் சிமிலி என்றழைக்கப்பட்டுள்ளது. (கையில் எடுத்துச் செல்லும் விளக்கையும் சிமிலி என அழைத்திருக்கலாம். அதுவே, ஆங்கிலத்தில் சிம்னி என வழங்கியிருக்கலாம்.)

    மணிமேகலை ‘சிமிலியில்’ கரண்டை எனப்படும் பானையை வைத்து எடுத்துச் செல்லும் முனிவர்களைச் ‘சிமிலிக் கரண்டையான்’ (மணி. 3: 86) எனக் கூறுகிறது.

    கலித்தொகை ‘உறித் தாழ்ந்த கரகம்’(கலி.9) என இதைப் பதிவு செய்துள்ளது. கரகம் என்பது கரண்டையாகும் (சிறிய பானை).

    “எறித்தரு கதிர்தாங்கி   ஏந்திய குடைநீழல்

     உறித்தாழ்ந்த கரகமும்   உரைசான்ற முக்கோலும்

     நெறிப்படச் சுவல்அசைஇ  வேறோரா நெஞ்சத்துக்

     குறிப்பேவல் செயல்மாலைக்    கொளைநடை அந்தணீர்” (பாலைக்கலி.9)

    என்ற வரிகளால் இதைஅறியலாம்.

    தொல்காப்பியர் எங்குமே தோளில் அணியக்கூடிய நூலைப் பற்றிக் குறிப்பிடவில்லை. கையில் எடுத்துச்செல்லும் நூலையே குறிப்பிடுகிறார் என்பதை இதிலிருந்து அறியலாம்.

    தொல்காப்பியரின் ” வினையின் நீங்கி விளங்கிய அறிவின்

    முனைவன் (640.641.தொ.பொருள்) என்ற நூற்பாவின் மூலம் பிறப்பாலல்லாமல் தகுதியாலும், புலமையாலும், துறவுத் தன்மையாலும், கற்றறிந்தஅறிஞரையே அந்தணர் என்று கருதியுள்ளார் எனலாம். எவ்வருணத்தாராக இருந்தாலும்,துறவு மேற்கொண்டுள்ளவர்கள் அந்தணர்கள் என அழைக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் கையில் எடுத்துச்செல்லும் பொருட்களாக உறிநூல், சிறிய பானை, முக்கோல்,மனை போன்ற பொருட்கள் இருந்துள்ளன.பிற்காலத்தில் மண்பானையை விடுத்து, பித்தளை மற்றும் செம்பு போன்ற பொருட்கள் புழக்கத்தில் வந்த காலத்து அவ்வுலோகங்களினால் ஆன கைப்பிடிகள் தூக்கிச்செல்வதற்கேற்ற வகையில் கரகத்தில் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

    முடிவுரை

    தொல்காப்பிய மரபியல் நூற்பாவில் காணலாகும் ஒரு சொல்லிற்கு உரையாசிரியர்கள், சாதி மற்றும் வருணச்சாயம் பூசி,அதில் தங்கள் கருத்தை ஏற்றிப் பலவாறாகப் பொருள் கொண்டுள்ளனர். இது தொடர்பாக இன்னும் விவாதங்கள் நடந்தபடியே இருப்பதுதான் பெரு வியப்பு. நடுநிலைமையோடு அணுகியிருந்தால் தொல்காப்பியர் குறிப்பிடும் நூல் என்பது கரகம் எடுத்துச்செல்ல உதவும் உறிநூலே என்பது தெற்றன விளங்கும்.

    காந்தியார் தன் சுயசரிதையில் “சூத்திரர்கள் பூணூல் அணிந்து கொள்ளக்கூடாது என்றால், மற்ற வருணத் தாருக்கு மட்டும் அதை அணிந்து கொள்வதற்கு என்ன உரிமை இருக்கிறது என்று அவர்களுடன் வாதாடினேன். பூணூல் அணிந்து கொள்வது தேவையற்ற பழக்கம் என்பது என் கருத்து. சமயங்கள் பல இருந்து வரும் வரையில், ஒவ்வொரு சமயத்திற்கும் வெளிப்படையான சின்னம் ஏதாவது அவசியமாக இருக்கலாம். ஆனால், அந்தச் சின்னமே பிரமாதமாக்கப்பட்டு, இன்னொரு மதத்தை விட தன் மதமே உயர்வானது என்று காட்டுவதற்கு அது பயன் படுத்தப்படுமாயின் அப்பொழுது அச்சின்னம் புறக்கணிக்கப்படுவதற்கே ஏற்றதாகும்.ஹிந்து சமயத்தை மேன்மைப் படுத்துவதற்கான சாதனமாக பூணூல் உள்ளது என்று எனக்குத் தோன்றவில்லை. ஆகையால், அதில் எனக்குக் கவலையும் இல்லை”என்கிறார். தொல்காப்பியர் “வினையின் நீங்கி விளங்கிய அறிவு”(தொல். மரபு. 95)  எனக் குறிப்பாக உணர்த்துவதில் இருந்து யாரும் முனைவனாக வரலாம் என்பது தெரிகிறது. இது பிறப்பில் அல்லாமல் அறிவாற்றலில் உள்ளது என்கிறார். எனவே, தொல்காப்பியர் குறிப்பிடும் நூல் என்பது பூணூல் அல்ல என்பது தெளிவு. நூல் என்று மரபியலில் குறிப்பிடும் சொல் கையில் எடுத்துச் செல்லும் நூலையேக் குறிப்பதால் அது கரண்டையைத் தாங்கும் நூலாக இருக்கலாம் அல்லது ஓலைச் சுவடியாக இருக்கலாம்.

    Share
  • உலக வாசகர் கூட்டுக் களியாட்ட தினம் !

    ஏப்ரல் 23: உலக புத்தக தினம்

    எஸ் வி வேணுகோபாலன்

    book-house-3

    பூவா தலையா திரைப்படம் என்று நினைவு. வண்டியிலமர்ந்தபடி, நாகேஷ் செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருப்பார். அவரைக் கடந்து செல்லும் ஒருவர் அவரை உற்றுப் பார்த்துவிட்டு ‘வெளியூரா?’ என்று கேட்பார். “ஏன் உங்க ஊர்ல யாருக்கும் பேப்பர் படிக்கத் தெரியாதா?” என்பார் நாகேஷ்.

    வாசிப்பை வைத்து எழுதப்பட்டுள்ள துணுக்குகள் ஏராளம். அதை வாசித்தாலே, வாசிப்பை யாரும் விடமாட்டார்கள். மதிப்புரை எழுத தனக்கு அனுப்பப்பட்ட நகைச்சுவை புத்தகத்தின் ஆசிரியருக்கு ஓர் எழுத்தாளர் இப்படி எழுதினாராம்: “உனது புத்தகத்தைப் பார்த்ததுமுதல் சிரித்துக் கொண்டிருக்கிறேன்………..எப்பொழுதாவது வாசிப்பேன்!” என்று சுஜாதா ஒரு முறை குறிப்பிட்டிருந்தார். இது அயல்நாட்டு நகைச்சுவை. _

    ‘திருப்பித் தருவதாக நீ எடுத்துச் சென்ற/ நூல்களின் பெயர்ப் என்னிடம் இருக்கிறது/ ஐந்து ஆண்டுகளாக/ என் புத்தகங்களைப் படித்துக் கொண்டிருக்கிறாய் நீ/ அன்றுமுதல் நீ தந்துவிட்டுப் போன பட்டியலை வாசித்துக் கொண்டிருக்கிறேன் நான்’ என்பதாகச் சொல்லும் ஜெயபாஸ்கரன் கவிதை, புத்தக இரவல்கள் குறித்த சோகமான அனுபவத்தைச் சொல்கிறது. அப்படியாவது படித்தால் சரி.

    எப்போது அழைக்கும் போதும், ‘கடைசியாக என்ன புத்தகம் படித்தீர்கள்?’ என்று தான் தொடங்குவார் தோழர் ஆறுமுக நயினார். ஜோல்னாப் பையைப் பிடுங்கி உள்ளே தனக்கு ஏதாவது நூல் சிக்குகிறதா என்று பார்ப்பதை கடந்த 30 ஆண்டுகளாக விடாது செய்பவர் நண்பர் அரசு. அவரிடமிருந்து பறிமுதல் செய்த மேஜர் ஜெய்பால் சிங் எழுதிய “நாடு அழைத்தது” நூலைப் பற்றி பின்னர் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன், தாம் பணியாற்றிவந்த அஞ்சல் துறையிலிருந்து விருப்ப ஓய்வில் வெளியேறுகையில் குறிப்பிட்டபோது சிலிர்த்தது.

    தி ஜானகிராமன் அவர்களது புகழ்பெற்ற அம்மா வந்தாள் நாவல் தொடங்குமிடமே வாசிப்பின் கவிதை: “சரஸ்வதி பூஜையன்று புத்தகம் படிக்கக் கூடாது என்பார்கள். ஆனால் ஒரு நாளுமில்லாத திருநாளாகப் புத்தகத்தின்மேல் வருகிற ஆசை! கீழே கிடக்கிற-பல்பொடி மடிக்கிற-காகிதத்தையாவது எடுத்துப் படிக்க வேண்டும் என்ற மோகம்!”

    காலை எழுந்தவுடன் பல் தேய்ப்பதைப் போல், வாசிப்பைப் பழக்கமாக வரித்துக் கொள்பவர்களுக்கு இந்த விவரிப்பில் எத்தனை போதை ஊறி இருக்கிறது என்பது தட்டுப்படும். இளவயதிலேயே அப்படியான பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள முடிகிற மனிதர்கள் எத்தனை வரம் பெற்றவர்கள்!

    avnபுதுவை தோழர் ஹேமா தங்களது செல்ல மகள் சாதனா, இந்தக் கோடை விடுமுறையில் முதல் வேலையாக இங்கே அங்கே சிதறிக் கிடக்கும் தனது புத்தகங்களை ஒழுங்காக அடுக்கி, தங்களது இல்ல நூலகத்திற்கு அற்புத உலகம் என்று பெயர் சூட்டி, விரும்பும் நண்பர்களுக்கு டோக்கன் போட்டு இலவசமாக வாசிக்கக் கொடுத்து அவர்களையும் வாசிப்பு உலகில் திளைக்க வைக்க மும்முரமாக இயங்கிக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார். இந்தப் புத்தகங்களை அடுக்குதல் என்பது இங்கே எழுதி இருக்கும் வேகத்தில், எந்திரம் போல் நடைபெற்ற வேலை இல்லை. எந்தெந்த நூல் எங்கே எப்போது வாங்கப்பட்டது, பரிசாகப் பெற்றிருந்தால் எதற்காக என்றெல்லாம் நினைவடுக்குகளில் பின்னோக்கிப் பயணம் செய்து, அந்த இனிப்பான நிகழ்வுகளின் மறு தேரோட்டத்தொடு நடந்து முடிந்த அனுபவம் அது!சாதனாவின் வயது ஒன்பது என்பது எத்தனை சிலிர்ப்புற வைக்கும் செய்தி!

    மறைந்த தி க சி அவர்களது நினைவாக ஓர் எளிய சங்கமம் கடந்த மாதம் சென்னையில் எழுத்தாளர் தி சுபாஷினி அவர்களது இல்லத்தில் நடைபெற்றது. அசாத்திய நினைவாற்றலும், மிகுந்த இலக்கிய ரசனையும், நகைச்சுவை உணர்வும் பொங்கித் ததும்பிய மனிதர் ஒருவர் பெங்களூரிலிருந்து வந்திருந்தார். திரு வி க அவர்களைச் சந்தித்திருப்பவர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் வானொலி உரைகளைக் கேட்டிருப்பவர், அ.சீ.ரா என்றழைக்கப்படும் புகழ்பெற்ற பேரா.சீனிவாசராகவன் அவர்களது மாணவர் என்னும் பெருமைக்குரிய அந்த மனிதர் 82ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருப்பவர். வாசிப்புக்காக குறுகுறுத்துக் கொண்டிருக்கும் அந்தக் கண்களில் தெறித்த மின்னலுக்கு அத்தனை வயது தெரியவில்லை.

    aven

    சமையல் அறையின் எண்ணெய்க் கைவிரல்களால் எழுத்துக் கூட்டி எழுத்துக் கூட்டிப் படித்த பெண்கள் குறித்து ஜனநாயக மாதர் சங்கத் தலைவர் பாப்பா உமாநாத் குறிப்பிடுவதுண்டு. நான்கு சுவர்களுக்குள் சிறைப்பட்ட தனது வாழ்க்கையினூடே கண்டங்களைக் கடக்கும் அனுபவங்களைத் தந்த வாசிப்பில் சுடர் விட்டுத் திகழ்ந்த தனது சுப்புலட்சுமி பாட்டி பற்றிய தோழர் மைதிலி சிவராமன் அவர்களது தொகுப்பு அபாரமான சமூக ஆற்றல் ஒன்றின் தீப்பொறி (ஒரு வாழ்க்கையின் துகள்கள் – பாரதி புத்தகாலயம்).

    தேர்தலில் தனது கட்சி தோல்வி அடைந்ததும், திரிபுரா மாநில முதல்வர் பொறுப்பிலிருந்து விலகி வெளியேறியபோது ஒப்பற்ற அந்த மனிதரின் ஒரே உடைமையான சிறு கைப்பெட்டியில் ஒரு ஜோடி துணிமணிகளோடு உடன் இருந்தவை புத்தகங்களே என்பது தோழர் நிருபன் சக்கரவர்த்தி அவர்களது வரலாற்றில் பதிவாகிவிட்ட செய்தி. நூல்களோடு இழையறாத தொடர்பு கொண்டிருப்போர் எந்தத் தோல்வியின்போதும் நிலைகுலைவதில்லை.

    ஒரு நல்ல புத்தகம் உரையாடலைத் தோற்றுவிக்கிறது. பிடித்தமான இசையைப் பின்னணியாக இழையோட விடுகிறது. தன்னையறியாமல் ஒரு மென் புன்னகை, அவ்வப்பொழுது கொஞ்சம் உச் உச், ஆழ்ந்த பெருமூச்சு, அடப் பாவமே என்ற இரக்க ஒலி, அப்படிப் போடு என்ற உற்சாகம்…..என ஒரு பயணம் சக்கை போடு போடுகிறது வாசிப்பின் ரசனையாளருக்கு. புத்தகத்தை மூடி வைக்கையில் எத்தனை உள்ளார்ந்த அனுபவம் வாய்த்த உணர்வு!

    ‘பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன்’ என்பது மாதிரியே புத்தங்களில் உள்ளத்தைப் பறிகொடுத்த பாவிகளுக்கென்று ஒரு திருநாள் வருவது எத்தனை கொண்டாட்டமான விஷயம்! மொழிகளைக் கடந்தும், தேச எல்லைகளுக்கு அப்பாலும் பரவுகிற கூட்டுக் களியாட்டம் அல்லவா இந்த உலக தினம்!

    முதல் புத்தகத்தை நம் கைகளில் எடுத்து வைத்தவர் யாரோ அவருக்காக நமது நன்றி படரட்டும் இந்த தினத்தில்! வாசிப்பை ஊக்குவிக்கும் ஒவ்வோர் அன்பு உள்ளத்திற்கும் நமது பாராட்டுதல்கள் சென்றடையட்டும் இந்த நாளில்! ஷேக்ஸ்பியர் பிறந்த நாளோ, நினைவு நாளோ, செர்வாண்டிஸ் நாளோ – படைப்புலகின் இதயங்கள் யாவற்றுக்கும் பூச்சொரிந்து கொண்டாடுகிறோம் இந்த நாளில்.

    தினம் தோறும் வாசிப்பு என்பதே வாசிப்புக்கான தினத்தின் அறைகூவலாக இருக்கட்டும்.

    &&&&&&&&&&&&&&&&&

    Share
  • காலடி ஸ்ரீ சங்கரர்

    மீ.விசுவநாதன்

    aathisangarar

     

    பிறப்பால் உயர்ந்தவன் என்று
    பிறரின் நலத்தினை எண்ணித்shankaracharya
    துறந்தான் ! அதன்வினை இன்றும்
    துடிப்பாய் இயங்கிடச் செய்தான் !
    மறப்பான் பிறர்குறை எல்லாம்
    மலர்வான் அகத்திலே அன்பால் !
    அறத்தான் , அறிவிலே ஞானி ,
    அளவிலா நல்வினை செய்தோன் !

    சுனைநீர் ஆத்மனைக் காண
    சுகமாய் சூத்திரம் தந்தான் !
    தனையோர் எளியனாய் வைத்தே
    தனக்குள் எளியனைக் கண்டான் !
    அனைவர் அறிவினைத் தூண்டி
    அதர்ம வழியினை மாய்த்தான் !
    நினைவில் இருத்திட வேண்டும்
    நிறைந்தோன் “சங்கரர்” பேரை !
    (இன்று 23.04.2014 ஸ்ரீ சங்கர ஜயந்தி தினம்)

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

     

    ”கொம்புக்(கு) இடையிலே, காலம்ப்ர தோஷத்தில்,
    சம்பு நடமாட, சீராயர் -நம்பியும்,
    கொம்புக்(கு) இடையே குமுதம் மலர்ந்தாற்போல்,
    அம்புஜவாத் சல்யம் அளிப்பு’’….கிரேசி மோகன்….

    Share
  • தேகமும் யோகமும்—{5 வது பகுதி}

    –யோகாவினால் பொங்கிவரும் ஆழ்மன சக்தி….

     &&&&&&&&&&&&&&&&&&&&&&

    yoga

    கவியோகி வேதம்

    ………….. நம் ஒவ்வொருவரிடமும் ஆழம்காணமுடியாத ஞாபக சக்தி, அபாரமான  ஆராய்ந்தறியும் அறிவு முதலியவை நமது  ’ஆழ்மன’த்துள்ளே புதைந்து கிடக்கின்றன. அது இறைவன் நமக்குக்கொடுத்த பெரிய வரப்ரஸாதம். இதனை நாம் நம் தினசரி தீவிர யோகப்பயிற்சியாலும், ஒழுங்கான தியானத்தாலும்  நிச்சயம் தோண்டி வெளியே எடுக்கலாம்.

     இதில் நல்ல வெற்றி பெற்ற என் ஒரு நண்பர்.. ஒரு உதாரணத்திற்குச் சொல்கிறேன். அவர் மலேஷியாவிலிருக்கும் என் அன்பர்டாக்டர்  திரு.ஜேபீ{ஜெயபாரதி} அவர்கள்.அவர் தற்போது இதையெல்லாம் தம் அகத்தியர் இணையத்தில் {அகத்தியர் யாஹூ க்ரூப்ஸ்}வெளிப்படுத்திவருகிறார்.அவர் அடிக்கடி சொல்லுவார்.வேதம்! என் முன்னோர்கள் செய்த பாக்கியம். எனக்கு இந்த யோக முறைகளைக் கற்றுத்தந்த  ‘வேலவனார்’  அவர்கள் குரு வாக அமைந்ததும்,அவர் மூலம் என் ஆழ்மன சக்திகளை வெளியே தோண்டி எடுத்ததும்.. இவற்றை நான் பயன்படுத்தி எவ்வளவோ பேருக்கு இலவசமாய் நல்ல உதவிகள் செய்திருக்கிறேன் என்று..

     இப்போது சொல்லுங்கள்!அந்த விலைமதிப்பில்லாத சக்திச்சுரங்கத்தை நாம் ஒவ்வொருவருவரும் தோண்டித்தோண்டி எடுத்துப்பயன்

     படுத்துகிறோமா? என்றால் அதுதான் இல்லை. சிறுவயதுமுதல் நம் குழந்தைகட்கு சுமார் மூன்று வயதுமுதலே தேவாரம், திருவாசகம்,சில குறிப்பிட்ட மந்திர ஸ்லோகங்கள், அருணகிரி நாதரின் திருப்புகழ்  முதலியவற்றை மனப்பாடமாகச் சொல்லக் கற்றுக் கொடுத்துப் பாருங்கள்! குறிப்பிட்ட 12 வயதுக்குள் அக்குழந்தைகளின் ஞாபக சக்தி,தமிழ்

     இலக்கியம் கற்றுக்கொள்ளும் ஆர்வம் எல்லாமே ஆச்சர்யப்படும் விதமாக வளரும்.

     ஒரு குழந்தையும் இந்த விஷயத்தில் குறைந்தோ, அல்லது மக்காகவோ இருக்காது.

          …..  இதை என் பையனிடம் முன்பே சொல்லிவைத்திருந்தேன். ஆகவே இதைப் பரீட்சித்துப்பார்க்கும் விதமாக( அவன் நியூஜெர்ஸியில் இருக்கையில்) அவனது மகனை(என் பேரனை) ஸ்கூல் நேரம் முடிந்து மாலை 6 முதல் 7 மணி வரை பக்கத்திலுள்ள ஒரு சம்ஸ்கிருத டீச்சரிடம்( சிவாநந்தாவின் சம்ஸ்கிருதி பவுண்டேஷன்) வடமொழி ஸ்லோகங்கள், ஒவ்வொரு பகவானுக்கும் உரிய மந்திரங்கள், பகவத் கீதை முதலியவற்றைக் கற்க ஏற்பாடு செய்தான். வீட்டிலோ என் மருமகள் பாரதியாரின்

     சில பாடல்களைக் கற்றுக்கொடுத்தாள்.ஆச்சர்யம்! ஒரே வருடத்தில்

     என் பேரன் எல்லாவற்றையும் தலைகீழ்ப்பாடமாகச்  சொல்வதோடு இன்னும்  இந்த10-வது வயதிலும், ஒரு வரி கூட மறக்காமல் சொல்கிறான். காரணம் என்னவெனில் குழந்தைப்பருவத்திலேயே விளையாட்டோடு விளையாட்டாய் ஆழ்மன சக்தியும் மேம்படுகிறது. வளர்கிறது.மனத்தில் குப்பைகள் சேர்வதில்லை. தேவையில்லாத எண்ணங்கள்  அவைகளை நெருக்குவதில்லை.அப்படியே சின்னச்சின்னக் கோபம், பிடிவாதச் சொற்களை  அவர்கள்  வெளிப்படுத்தினாலும்  அடுத்த நிமிடம் சமாதானமாகி,  சொற்களை, எண்ணங்களை மறந்துவிடுகின்றன.  பெரியவர்களைப்போல்(தாய் தந்தை?) ஆழ்மனம் வரை அவற்றைக்கொண்டு செல்வதில்லை. திரியாத பால் போல் குழந்தை மனம் தெளிவாக இருக்கிறது.அதாவது,உறவினரும், பெற்றோரும் அவற்றைக்கெடுத்துக் குட்டிச்சுவராக்காதவரை! கவிஞர் புலமைப்பித்தன் பாடினார்..-

        என்ன- பால்  மனமடீ உனக்கு!-குழந்தாய்!

           .. எண்ணி வியக்கின்றேனடி!

       தின்னும் பொருளை உன் அண்ணன்-நீ

         .. திகைக்கும்படிப் பிடுங்கிடினும்,

       மின்னலெனச் சண்டை போடுகிறாய்!-படு

          ..வேகமாய்க் கத்தியே திட்டுகின்றாய்!

      பின்பு வேறோர் பண்ட(ம்)உன் கைவந்தால்,-வாய்

     …. பிடித்துக்  கடித்(து)அவன் கைவைப்பாய்!

     என்ன பால்மனமடீ!..உனக்கு!!

     

    .. எவ்வளவு அழகிய பாடல் பாருங்கள்! இதுதான் குழந்தை மனம். அதில் கல்மிஷம்  இல்லை; தீராத வன்மம் இல்லை.நிலைத்த கோபமோ பொறாமையோ இல்லை.

     அதனால்தான் ஆராய்ந்து  சொல்கிறேன்.குழந்தைகளின் வெளிமனமும் உள்மனமும்பிரகாசமாகவே இருக்கிறது.ஆழ்மனமோ அற்புத சக்தி படைத்ததாக இருக்கிறது.

     பெற்றோர்கள்தாம் அதனை முதலிலேயே உணர்ந்து மூன்று வயது முதல் திருக்குறள்,திருவாசகம்,பிரபந்தங்கள் முதலியனவற்றை அவர்கட்குக்  கற்றுக்கொடுக்க ஒரு ஏற்பாடு செய்யவேண்டும்.

        ..நம் (அவ்வை!)பாட்டிகள் சொல்லவில்லையா? ‘ஐந்தில் விளையாதது ஐம்பதில் விளையுமோ?’.. ஆம்.. வயது ஏற ஏற ஞாபக சக்தி குறைகிறது.காரணம், தேவைஇல்லாத அசட்டு சினிமாப்  பத்திரிகைகள், சினிமா நடிகைச்  சமாச்சாரங்கள்,,கணினியின்  மனம் கெடுக்கும் விளையாட்டுகள்,  அனாவசியக் கோபம், பொறாமைகள், கவலைகள்.. போன்ற குப்பைகளை  மனத்துள்ளே போட்டு பால்போன்ற மனத்தைத் திரித்துவைக்கின்றோம். ஆழ்மனம் தெளிந்து அருவிநீர்போல்  இருக்கும்வரை ஞாபக சக்தியும் பெருகி, எத்தனையோ பழம்பாடல்கள், கம்பன் அமுதம், காப்பியங்கள் இவற்றை மனப்பாடமாகச் செய்தாலும் அப்படியே நினைவில் நின்று சொற்பொழிவுக்கும், சொற்ப ஒழிவு இன்றிச் செய்யும் கட்டுரைக்கும் நல்ல துணையாய் நிற்கும்.

         என் நண்பன் எழுத்தாளர் பாலகுமாரன் தம் எத்தனையோ கட்டுரைகளில் சொல்லியிருக்கிறார்.தம் அன்னையே தனது எழுத்தின் பிரகாசத்திற்குக் காரணம் என்று.ஒரு பள்ளியில் டீச்சராக இருந்த அவர் அன்னை தினமும் இரண்டு தேவாரப்பாடல், பத்து  திருக்குறள், ஒரு திருவாசகம் இவற்றை சரியாக ஒப்பிக்காவிட்டால் இரவுச் சோறு போடமாட்டார்களாம். தாமும் துணை நின்று ஒவ்வொரு பாடலின் முழுப்பொருளும் மிக ருசிகரமாகச் சொல்லிகொடுத்ததால் ஆர்வத்துடன் எல்லாவற் றையும்  சீக்கிரமே மனப்பாடம் செய்தாராம்.தாயும் மிக சந்தோஷமடைந்து அதிகம் தமிழ்ப்பாடல்களை ஒப்பித்தால் அவ்வப்போது ஸ்பெஷல் தின்பண்டங்களும் பாலகுமாரனுக்குச் செய்துதந்து மகிழ்ச்சியில் ஆழ்த்துவாராம்.அவர் அன்றோ சிறந்த அன்னை!

     ….இப்படி மனப்பாடம் செய்ததால் சரியான உதாரணங்கள் காட்டி இப்போதும் அவரால் சிறந்த சித்தர்போல் சொற்பொழிவாற்றமுடிகிறது. என் இன்னொரு நண்பர்( திருப்புகழ்ச் செம்மல்) மதிவண்ணனும் அப்படித்தான். சிறுவயதுமுதலே அருணகிரியார் பாடல்களினால் கவரப்பட்டு உரிய சந்தத்தோடு மனப்பாடம் செய்தவர்.

     பள்ளியில் படிக்கும் போது அவர் அருகில் குமுதம், பேசும்படம் போன்ற அநாவசியஏடுகளைப் பிறர்படிக்கத்தூண்டினாலும்,மறுத்துவிடுவாராம்.திருப்புகழே எனக்குச்

    சோறுபோடும், உயிர்வளர்க்கும் தெய்வம் என  என் அன்னையும், அண்ணனும் சொல்லியுள்ளார்கள்..ஆகவே அசுத்த ஏடுகளைச் சிந்தையாலும் தொடேன் என்பாராம்.

           ..  ‘ கசடு அறக் கற்க’ என என் தமிழ் ஆசான் திருவள்ளுவர்

     சொல்லியபடி நன்றாகத் தேர்ந்து (கசடு அற= குற்றமற்ற, உள்ளத்தில் தீய எண்ணம் விளைவிக்காத) நல்ல தமிழ் நூல்களையே கற்றுச் சிறந்த பேச்சாளனாக விளங்குவேன்!”-

     என்று பல நண்பர்களிடம் சவால் விட்டு அதில் ஜெயித்தும் காட்டி இருக்கிறார். இன்றும் அவர் சுமார் இரண்டாயிரம்  கம்பன் பாடல்களையும், ஆயிரம் திருப்புகழையும் இரவில் எழுப்பிக் கேட்டாலும் தட தட என அருவிபோல் கொட்டுவார். இதற்கு அவர் காரணமாகச் சொல்வது சிறிது நேர தியானமும்,தேகத்தையும், மூளையையும், நல்ல அளவில் பேணி வளர்த்ததும் தான் !..என்பார்.

     அவரது நினைவாற்றலில், சொற்பொழிவுத்திறனில் வியந்துபோய் மும்பை, கொல்கத்தா, மலேசியா, ஸ்ரீலங்கா அன்பர்கள் இன்றும்அவரைப்

     பல இடங்களில் தொடர்ச்சொற்பொழிவுக்குக் கூப்பிடுகிறார்கள். இதற்கெல்லாம்என்ன காரணம்? அந்தச் சிறுவயதின் தெளிந்த ஆழ்மனச் சக்தியை மதிவண்ணன் அவர்கள் மிகச்சரியாகப் பயன்படுத்தியமையே. ..

             இப்போதும் சொல்லுவார் என்னிடம். வேதம் ஸ்வாமீ!!  சிறு வயது முதல்நான் கண்ட கண்ட புத்தகங்களைப் படிப்பதை வெறுத்தவன். என் ஐந்து வயதுமுதல் இன்றுவரை தவறாமல் அருணகிரிநாதரின் புயவகுப்பு, வேல்வகுப்பு, சீர்பாத வகுப்பு  இவற்றின் பாடல்களைக் கண்மூடிச்சொல்லியபிறகே தூங்கப்போவேன். அதுவே  ஒரு பழக்கமாகிவிட்டது வேதம்! ஏன் எனில் இவற்றின்மூலம்,

     எனக்கு அருணகிரிநாதர் என் வாழ்வுக்கும்,வருமானத்திற்கும் போட்ட பிச்சை! ”–என மிக நெகிழ்ந்து கண்ணில் நீர் கோக்க  ஒரு பரவசமாய்ச் சொல்வார்!இதனால்இன்றுவரை அவரது ஞாபக சக்தியும், தமிழில் ஆராயும் அறிவும்ஆழ்மனச் சக்தியும் வளர்ந்துகொண்டே போகிறது…

     …  சுரங்கம் தோண்டி வைர  ‘ முதல்’எடுக்கின்ற சொக்கத்தங்கம் ஐயா நீர்! ’

    என்று நான் அவரைச் சிரிப்போடு கிண்டல் செய்வேன்!  மனமாரத் தழுவிக்கொள்வேன்..இப்படி ஆழ்மனச்சக்தியை வளர்த்துவரும்  நண்பர் மதிவண்ணனின் சொல்லின் அற்புதத்திறன்,பாட்டுத்திறன் இவற்றால்  எத்தனை எத்தனை  நண்பர்களின் சிக்கலான வாழ்வு சீர் அடைந்துள்ளது என நான் விவரித்தால் நீங்கள் அசந்துபோவீர்கள்..(தொடரும்)-

    &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

    Share
  • காதல் நாற்பது – 36

    ajay

    காதல் பளிங்கு மாளிகை

    மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

     

    உன்னை நான் முதன்முறை

    சந்தித்து

    காதலித்த போது,

    அச்சம்ப வத்தின் மீது நான்

    எழுப்ப வில்லை

    பளிங்கு மனக் கோட்டை !

    நிலைத்து விடுமா

    அப்படிக்

    கட்டுமோர் காதல்

    அடுத்தடுத்த துயருக்கு இடையே

    ஊசலாடிக் கொண்டு ?

    இல்லை !

    புல்லரித்தது எனக்கு மாறாக,

    முன் செல்லும் பாதை

    நெடுவே

    மின்னும் ஒவ்வொன்றையும்

    நம்பாத போது !

    விரலை ஊன்றிச் சாயவும்

    அரண்டேன் !

    முரணாக அன்றுமுதல் அமைதியில்

    வலுப் பெற்றாலும்

    தலைதூக்கும்

    மற்றுமோர் மீளும் அச்சம்

    கடவுள் விட்டபடி !

    ஓ காதலே !

    ஒப்பந்த உறுதி வாசகம்

    ஓதாமல்

    பிணைத்துக் கொண்ட கரங்கள்

    பிடித்திடக் கூடாது !

    ஒருவருக் கொருவர் முத்தம்

    தருதல் கூடாது,

    நம்மிருவருக் கிடையே

    உரியதாய் ஆகாத உறவில்

    உதடுகள்

    குளிர்ந்து போனால் !

    உறுதி வாக்கொன்றை

    நிறைவேற்ற

    ஊழ்வினை முன்னறிவித்த

    களிப்பினைக்

    காதலன் இழக்க நேர்ந்தால்

    காதலே பொய்யாகும்

    அப்போது !

    ************

    Poem -36

    Sonnets from the Portuguese

    By: Elizabeth Browning

    When we met first and loved, I did not build

    Upon the event with marble. Could it mean

    To last, a love set pendulous between

    Sorrow and sorrow? Nay, I rather thrilled,

    Distrusting every light that seemed to gild

    The onward path, and feared to overlean

    A finger even. And, though I have grown serene

    And strong since then, I think that God has willed

    A still renewable fear . . .O love, O troth

    Lest these enclasped hands should never hold,

    This mutual kiss drop down between us both

    As an unowned thing, once the lips being cold.

    And Love, be false! if he, to keep one oath,

    Must lose one joy, by his life’s star foretold,

    **********

    Share
  • ஓலைத்துடிப்புகள் (1)

    அன்பு நண்பர்களே,

    வணக்கம்.

    oolaisuvadi

    பழமை, இனிமை, சொல்வளம், திருந்திய பண்பட்ட இலக்கிய இலக்கணங்கள், பிற மொழிகளின் துணை வேண்டாத தனித் தன்மை முதலியன நம் தமிழ் மொழியின் அரிய பண்புகளாம். தமிழின் சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியவை. சங்க இலக்கியம் என்பது ஒரு சுரங்கம். நாம் தோண்டும் ஆழத்திற்கு ஏற்றவாறு அதன் இன்சுவை அமுதை அள்ளிப் பருக இயலும்! சங்கப் பாடல்களில் கற்பனைகள் இருந்தாலும் அவை வரம்பு மீறிய உயர்வு நவிற்சிகளாக மாறுவதில்லை என்பதும் தனிச்சிறப்பு. இத்தகையப் பாடல்களை பதம் பிரித்து படித்து, பொருள் விளங்கிக்கொள்ள சில நேரங்களில் சிரமம் ஏற்படுவதும் உண்டு. இதனைப் போக்கும் விதமாக கவிஞர் SDC11588 (3)திரு ருத்ரா அவர்கள் “ஓலைத்துடிப்புகள்” என்ற தலைப்பில் நம் சங்கத்தமிழ் அலைவிரிப்பை அணிவகுப்பாக்கி நமக்கு எளிமையாக அளிக்கப் போகிறார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். செங்கீரன், ருத்ரா என்ற பெயர்களில் நூற்றுக் கணக்கான கவிதைகள் எழுதியுள்ளார். ருத்ரா எனும் இ.பரமசிவன் ஆகிய இவர் பிறந்தது நெல்லைச்சீமையில் தாமிரபரணிக் கரையில் உள்ள‌ கல்லிடைக்குறிச்சி. ‘சங்க இலக்கியத்தில் மிகவும் ஆர்வம் கொண்டு சங்க நடைச்செய்யுள் போன்று பாடல்கள் எழுதுவது எனக்கு மிகவும் பிடிக்கும்’ என்கிறார். இனி தொடர்ந்து பிரதி புதன் தோறும் கவிஞர் ருத்ரா அவர்களின் சங்கத் தமிழ் பாடலும் அதனை எளிமையாகப் புரிந்து கொள்ளும் விதமாக விளக்கமும் காணலாம். வாருங்கள் நண்பர்களே, சுவையோடு சங்கத் தமிழ் சொல் வளங்கள் கற்போம்!

    அன்புடன்

    பவள சங்கரி

    ஓலைத்துடிப்புகள் 

    தொண்டை சுற்றிய குவளை
    ===============================================

    நுண்சிறைத்தும்பி நுரைவிரித்தாங்கு
    நுவலும் அதிர்வின் நரல் மொழி உய்த்து
    கொண்டல் நாடன் கொழு நிழல் தழீஇ
    தொண்டை சுற்றிய குவளையன்ன‌
    தொடிநெகிழ் பசலை நோன்ற காலை
    நோக்கும் நெடும் தேர் மணி இமிழோசை.

     

    பொழிப்புரை
    ========================================

    நுண்சிறகுகள் நுரை படர்ந்தாற்போல் அதிர‌
    அதனுள் ஒலிக்கும் காதலனின் இன் சொல் உற்றுக்கேட்டு
    மகிழ்கிறாள் காதலி.காதலன் நாட்டின் மழை மேகம் மறைக்கும்
    அடர்ந்த நிழலில் அவன் நினைப்பில் தழுவிக்கிடக்கும் உணர்வை
    அடைகிறாள்.தொண்டைக்கொடி சுற்றிய குவளை மலர் போல‌
    அவன் தழுவலுக்கு ஏங்கி அவள் “தொடி” நெகிழும் வண்ணம்
    பசலையுற்றாள்.அப்போது ஏக்கத்தோடு காதலனின் தேர் மணி ஒலிக்கும் ஓசையை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறாள்.

    சங்க நடைக் கவிதையில் இது காதலின் எழில் பொங்கும் ஒரு காட்சி.

    ======================================================

    சந்திப்போம்

    Share
  • சிகரம் நோக்கி …. (1)

    சுரேஜமீ

    peak

    நம் கல்விமுறையில் மாற்றம் வேண்டுமென்பது, பெரும்பான்மையினரின் கருத்தாக, இற்றை நாட்களில் இருக்கிறது. இதற்குப் பின்னனி என்ன என்று யோசித்தால், வாழ்வியல் சார்ந்த கல்வியாக, தற்போதைய கல்வி இல்லை என்பதும், ஒரு தேர்விற்காகத் தன்னைத் தகுதிப் படுத்திக் கொள்ளும் மனனம் சார்ந்த ஒரு புத்தக அறிவை மட்டுமே தருகிறது என்பதும், குற்றச்சாட்டாக இருக்கிறது.

    கல்வி என்பது சிந்தனை ஆற்றலை, பகுத்து உணரும் அறிவை, சூழலுக்கு ஏற்ப முடிவு எடுக்கும் தன்மையை, வாழ்க்கை நெறியை உய்விக்கும் கோட்பாடுகளை, ஒவ்வொரு தனி மனிதனுக்கும் கொடுக்க வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு கிடையாது!

    ஆனால், நாம் படித்ததை, நம் வாழ்க்கைக்குப் பயன்படுத்தி, நம்மைச் செதுக்கினோமா? என்றால், அதற்கான விடையைத் தேடும் சமுதாயமாக, வளரும் சமுதாயம், இருப்பதுதான் வேதனையாக இருக்கிறது!

    ஒரு பழமொழி நாம் அனைவரும் அறிந்ததே.

    ‘ஐந்தில் வளையாதது; ஐம்பதில் வளையாது! என்பது;

    ஆகவே தான், நல்ல பல கருத்துக்களை, மிகவும் சுருக்கமாக, குழந்தைகளுக்கு, ஆரம்பக் கல்வியில் வைத்தார்கள்! ஆனால், அதன் ஆழத்தைப் பெற்றோர்கள் உணர்த்தினார்களா? என்பதில் தான், கல்வியின் மேம்பாடு இருக்கிறது!

    இன்றைக்கு ஆங்கில வழிக் கல்விதான், உலகத்திலேயே சிறந்தது என்ற நினைப்புதான், ஆதாரக் கல்வியான தாய்மொழிக் கல்வியின் சிறப்பைக் கெடுக்கிறது.

    ஆங்கிலம் என்பது ஒரு அன்னிய மொழி அறிவு! அவ்வளவே! அது சூழலால் ஏற்படுவது. மொழி அறிவு என்பது, ஒரு புரிதல் சாதனம்! அதுவே, அறிவின் உச்சமாகிவிடாது!

    தாய்மொழிக் கல்விதான் தரத்தின் அடையாளம்!

    avvaiஅதற்கேற்ப, தமிழ்க் கிழவி ஔவையாரின் சில பாடல்களும், அதன் கருத்துக்களும், வளரும் சமுதாயத்திற்காகப் பகிர்வதில் பெருமிதம் கொள்கிறேன்!

    கல்வியின் சிறப்பு என்ன? ஏன் படிக்க வேண்டும்? படித்தால் தான் வாழ முடியுமா? என்ற கேள்விகளுக்கு, ஔவையார் என்ன சொல்கிறார் என்று சிந்தியுங்கள்!

    மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
    மன்னனில் கற்றோன் சிறப்புடையன் – மன்னர்க்குத்
    தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
    சென்றஇடம் எல்லாம் சிறப்பு!

    இதைவிடப் பிஞ்சு உள்ளங்களில், கல்வியின் சிறப்பைச் செம்மையாகச் சொல்ல இயலுமா? ஆகக், குழந்தைகள் சிந்திக்க வேண்டுவது, நாம் ஒரு தேசத்தில் மட்டுமே இருக்க வேண்டுமா? அல்லது, மன்னனினும் உயர்வாகக் கற்றவராக இருந்தால், சென்ற இடமெல்லாம் சிறப்புப் பெறமுடியும்!

    இன்றைக்கு மக்களாட்சியில், ஆட்சி பீடத்தில் இருப்பவர்களும் பல தேசம் போகலாம்; ஆனால், கற்றவரின் துணையில்லையேல், ஆட்சியாளருக்கே அவலமாகிவிடும்!

    ஆதலால், கல்வியின் சிறப்பு எத்தகையது என்பதை அறிய, இதைவிட உதாரணம் வேறில்லை!

    அடுத்து, நாம் யாரோடு நம்மைத் தொடர்பு படுத்திக் கொள்ளல் அவசியம் என்பதை மிக அழகாகச் சொல்லியிருக்கிறார் அடுத்த இரண்டு பாடல்களில்!

    நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலமிக்க
    நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே!

    அப்படி, நல்லவர்களோடு நட்பு கொள்ளும்போது, நமக்கு என்ன கிடைக்கும்?

    இந்தப் பாடலைக் கவனியுங்கள்!

    நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
    புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் – தொல்லுலகில்
    நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
    எல்லார்க்கும் பெய்யும் மழை!

    நாம் கழனியிலே நெல்லுக்குத்தான் நீர் பாய்ச்சுகிறோம்; ஆனால், அது புல்லுக்கும் போகிறதல்லவா? அதுபோல, இந்த உலகம் உய்வதற்குத் துணையாக இருப்பவர்கள் நல்லவர்கள். ஆதலால், அவர்களுடைய நட்பு அவசியம் என்பதை, அவர்களால்தான் அனைவருக்கும் பயன் விளைகிறதென்பதை, மழையோடு ஒப்பிட்டுச் சொல்கிறார்.

    அடுத்து உறவு எப்படி இருக்க வேண்டும்?

    இன்றைக்கு அவசியமானது நல்ல உறவுகள், நமக்குத் துணையாக இருப்பதுதான். நமக்குக் கிடைத்த உறவுகள், நம் பிள்ளைகளுக்கு வாய்ப்பதில்லை. அதற்குக் காரணம், நாம் கூட்டுக் குடும்பங்களில் வாழ்ந்ததும், நம் உடன் பிறந்தோர் ஒன்றுக்கு மேல் என்பதும்!!

    ஆனால், இன்றைக்கு இருக்கக்கூடிய சூழலில், பொருளாதார ஏற்ற, இறக்கங்களில், தனிக்குடித்தன வாழ்வும், பெரும்பாலான இல்லங்களில் உறுப்பினர்கள் குறைவு என்பதும் கண்கூடு. ஆக, உறவு முறைகள் அவ்வளவாக பலமாக இருப்பது இல்லை என்பதும், அதன் அவசியத்தை இன்னும் பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

    இவர் கூற்றுப்படி ஒரு உறவு உங்களுக்குக் கிடைத்தால், நிச்சயம், நீங்கள் கொடுத்து வைத்தவரே!

    அற்ற குளத்தில் அறும்நீர்ப் பறவைபோல்
    உற்றுழித் தீர்வர் உறவல்லர் – அக்குளத்தில்
    கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
    ஒட்டி உறுவார் உறவு!

    நீர்ப் பறவைகள் எப்படி நீர் வற்றியவுடன், அடுத்த நீர் நிலையைத் தேடி ஓடுகிறதோ, அவ்வாறில்லாமல், நீர்த்தாவரங்கள், நீரோடு சேர்ந்து தானும் மடிவதுபோல,

    உறவுகள் நம் துன்பத்திலும் தோள் கொடுக்கக் கூடிய உறவுகளாகப் பெற்றவர்கள் வாழ்க்கை சொர்க்கத்திற்கு ஒப்பானது!

    இன்னும் எவ்வளவோ சான்றுகளை, நீதிகளை அடுக்கலாம். ஆனால், நாம் எந்த அளவு ஒரு நூலைத் தனதாக்கி, அதனை நாம் சிந்தையில் ஏகி, அதன் பயனை, வளரும் சமுதாயத்திற்கு ஏற்ற வகையில், எடுத்து இயம்புவோமேயானால்,

    ஒரு உறுதியான சமுதாயத்தை, உலகுக்கே வழிகாட்டும் சமுதாயத்தை, உன்னத நெறி போற்றும் சமுதாயத்தை, நம்மால் உருவாக்க முடியும்!

    செய்வோமா?

    Share