மீ.விசுவநாதன்

அத்யாயம்: ஒன்பது

“தீதும் நன்றும் பிறர்தர வாரா”

அவனுக்கு ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு நிகழ்ச்சியே குருவாக இருந்து அவனை வழிநடத்தி வருகிறது என்பதை அவன் நம்புகிறான். இளமைக் காலத்தில் கல்லிடைக்குறிச்சி கிராமத்தில் அவனது வாழ்க்கை அமைந்ததை அவன் எப்பொழுதும் பெருமையாகவே எண்ணுகிறான். அது அவனது அறியாமையைக் கேலிசெய்தும், அவனை அறிவுடையோனாக ஆக்கியதுமான நல்ல தருணங்கள். அந்த இளமை வெள்ளத்தில் அவனை அடித்துச் செல்லாமல் அதிலே எதிர்நீச்சல் போடவைத்தது. நிறை குறைகளைக் கற்றுக் கொடுத்தது. களவும் கற்றுக் கொடுத்து அதன் தண்டனையும் பெற்றுத் தந்து அவனுக்கு தர்ம நியாயங்களைப் புரியவைத்தது. அவனுக்குத் தீது வராமல் தடுக்க அவனை அணைத்தபடி ஒரு கை எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. அது காலம் அவனுக்குக் கொடுத்த நன்கொடை.

சிறுவயதில் அவன் கூட்டுக் குடும்பத்தில் ஆனந்தமாகவே வாழ்ந்தான். அவன் சிரித்தாலும் அழுதாலும் கவனித்துக் கனிவு காட்ட தத்தா, பாட்டி, அப்பா, அம்மா, சித்தப்பா, அத்தை, அக்கா, மாமா என்றும், அவனுக்குக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள், அன்பான மனிதர்கள், நண்பர்கள் என்றும் நிறைய உறவுகள் இருந்தன. அவன் தைரியமாக சிவன்கோவில் காளைபோல வலம்வந்தான்.

“வாழைக்காய் விற்று கற்ற படிப்பு”

ஐந்தாம் வகுப்பு முடிந்து அவனுக்குக் கோடை விடுமுறை துவங்கிய நேரம். ஆதிவராகப் பெருமாள் கோவிலில் சித்திரைத் திருநாள் துவங்கியது. அந்தத் திருவிழாவை அவன் ரொம்பவே எதிர்பார்த்திருப்பான். பதினோரு நாட்களும் கொண்டாட்டம்தான். கண்ணாடிச் சப்பரம், சிங்கவாகனம், அனுமார் வாகனம், நாகவாகனம், கருடசேவை வண்டிச் சப்பரம், அன்ன வாகனம், யானை வாகனம், மூடு பல்லக்கு, கோரதம் (இன்றும் இரண்டு காளை மாடுகள் பூட்டி இழுத்து வருகிறார்கள்), குதிரை வாகனம், எட்டுமுக்குச் சப்பரம், புன்னை மரவாகனம், தேரோட்டம், தீர்த்த வாரிக்குத் தாமிரபரணிக்குச் சென்று நீராடுதல், மதியம் பெருமாள் கோவிலில் வெளிப்பிராகாரம் அடைத்து கிராம போஜனம், இரவில் வான வேடிக்கையுடன் ஸ்ரீ லக்ஷ்மீபதி தாயாருடன் அழகான பூப்பல்லக்கில் வீதி உலா வருதல் என்று ஒவ்வொரு நாளும் கோலாகலமாகவே இருக்கும்.

அந்த வருடம் ஆராட்டு உற்சவம் முடிந்து அடுத்ததினம் ரகுவின் வீட்டு நடையில் கோவிலில் இருந்து கொடுவரப்பட்ட நான்கு பெரிய வாழை மரங்களை வைத்திருந்தார்கள். நல்ல பெரிய பெரிய வாழைப் பூவும், காய்களும் அதில் இருந்தன. ரகுவும், சங்கரும் இன்னும் சில நண்பர்களும் அந்த வாழைக்காய்களை எடுத்து அவனிடமும், ராமு என்ற ராமுக்கிளியிடமும் ஆளுக்குப் பத்து வாழைக் காய்களைத் தந்து , ஒரு பைசாவுக்கு ஒரு வாழக்காய் என்று விற்று வருமாறு அனுப்பி வைத்தனர். அதில் கடலை மிட்டாய் வாங்கித் தின்னலாம் என்றனர். ராமுக்கிளி வைத்தியப்பபுரம் தெருவிலும், அவன் குத்துக்கல் தெருவிலும் “வாழக்காய்…வாழக்காய்” என்று கத்திக்கொண்டே சென்றனர். அவன் குத்துக்கல் தெருவில் “காவன்னா லக்ஷமையர்” வீட்டில் ஐந்து வாழக்காய் விற்று ஐந்து காசு வாங்கிக் கொண்டான். மீதி ஐந்து காய்களைக் கையில் வைத்துக் கொண்டு “வாழக்காய்…வாழக்காய்” என்று கத்திக் கொண்டே சென்றான். அப்பொழுது அந்தத்தெருவில் அவனுக்குச் சித்தப்பா (சின்னம்பிச் சித்தப்பா) சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அவனருகில் வந்து,” இது எங்க இருந்தது? யாரு விக்கச் சொன்னா?” என்று கேட்டார். அவன் பயந்து கொண்டே,”ரகு, சங்கர்” என்றான். அவர் உடனே அவனது இடது கன்னத்தில் ஓங்கி ஒரு அறை கொடுத்து,”இது கோவில் சொத்து….இத்தத் தொடக்கூடாது..எந்த ஆத்துக்கெல்லாம் இதக் கொடுத்தாய்…வா காட்டு” என்று அவன் கழுத்துப் பகுதியைப் பிடித்துத் தள்ளியபடி வந்தார். அவன் வீட்டைக் காட்டினான். அவர் அந்த வீட்டுக் காரர்களிடம் விபரம் சொல்லி, ஐந்து பைசாவைத் திரும்பத் தந்து வாழைக் காய்களை வாங்கி அவன் கழுத்தில் தொங்க விட்டபடி ரகுவின் வீட்டிற்குக் கூட்டி வந்தார். இதற்குள் ராமுக்கிளி வைத்தியப்பபுரம் முடுக்கு வழியாக குத்துக்கல் தெருவுக்குள் நுழைத்தான். சித்தப்பா, ராமுக்கிளியையும் பிடித்து வந்தார். ரகுவின் அப்பா அவர் வீட்டு நடையில் நின்றிருந்தார். சித்தப்பா அவரிடம்,”அண்ணா…கண்ணன் இந்த வாழைக் காய்களை எடுத்துவிட்டான்…இது கோவிலச் சேந்தது ..நான் இவனைக் கண்டிக்கறேன்…” என்ற பொழுது “சின்னம்பி ….கொழந்தைகள் எதோ விளையாட்டாச் செஞ்சுடுத்து..விட்டுடு…” என்று ஆதிவராக மாமா சொன்னார். அதற்கு சின்னம்பிச் சித்தப்பா,”அண்ணா…இத இப்ப கண்டிக்காம விட்டுட்டேன்னா பிற்காலத்துல இவன்தான் கஷ்டப் படுவான். அப்பறம் இவனைத் திருடன்னு எல்லாரும் சொல்லுவா…நீ தாப்பா நெனச்சுக்காதே…பணக்காரா எது செஞ்சாலும் ஊர் எதுவும் பேசாது…இல்லதவாளப் பேசும்…” என்று சொல்லிவிட்டு நேராக அவனுக்குப் பக்கத்து வீடான “ஐம்பத்தி ஐந்தாம் எண்” வீடு வாசல் ஜன்னல்க் கம்பியில் சாய்த்து அவனது இருகைகளையும் கம்பியோடு கட்டினார். அவனது இரண்டு கன்னங்களிலும் தலையை வாரிக்கொள்ளும் சீப்பினால் மாற்றி மாற்றி அடித்தார். ஒவ்வொரு முறையும்,”மற்றவா பொருளுக்கு ஆசைப் படாதே” என்று சொல்லிச் சொல்லி அடித்தார். அவனுக்கு அம்மாவும்,” சின்னம்பி அவன நானா அடி…ஊர்ப் பொருளுக்கு ஆசைப் படாதேன்னு சொல்லி அடி…” என்று அவள் பங்குக்கு அடித்தாள். தெருவில் போவோர் வருவோரெல்லாம் பார்த்துக்கொண்டே சென்றது அவனுக்கு அவமானமாக இருந்தது. கொஞ்ச நேரம் சென்ற பிறகு அவனுக்குச் சித்தப்பா சாப்பாடு ஊட்டி விட்டார். ஊட்டும் பொழுதே,”இப்படிச் செய்யாதே கோந்தே….நீ நன்னா இருக்கணும்னுதான் ஒன்ன அடிச்சேன்…” என்று என்னைக் கட்டிக்கொண்டார். சின்னம்பிச் சித்தப்பாவின் அன்பும், நேர்மையும், கண்டிப்பும் அவனுக்குப் பிடித்திருந்தது. அவர்மீது ஒருநாளும் அவன் கோபம் கொண்டது கிடையாது. அந்தச் சித்தப்பாவையும், அம்மாவையும் அவன் எப்பொழுதுமே நினைத்துக் கொண்டுதான் இருக்கிறான். அவர்கள் அன்று கண்டிக்கவில்லையானால் அவனுக்கு இன்று ஏது அமைதி?. இதுதான் கூட்டுக் குடும்ப வலிமை. ஒருகை அடிக்கும் மறுகை அணைக்கும்.

amv1பெருமாள் கோவில் திருநாள் முடிந்ததும், அவனும், அவனுக்கு நண்பர்களான ரகு, சங்கர், நீலகண்டன், சுரேஷ், குட்டிச்சங்கர், மூர்த்தி, சன்னதித்தெரு கண்ணன், கபாலி, கிச்சன், SV, RV, NR, பிரபு, இராஜாமணி, ராமு (ராமுக்கிளி என்று செல்லமாக அழைப்போம்) இன்னும் பல நண்பர்களும் சேர்ந்து பெருமாள் கோவில் உற்சவம் போலவே பதினோரு நாட்கள் சுவாமி வைத்து பூஜை செய்து விளையாடுவார்கள். நீலகண்டன் வீட்டில் இருந்து சுவாமி, அம்பாள், அனுமார், கருடசேவை போன்ற வாகனக்களும், பூஜை சாமான்களும் எடுத்து வருவான். அதை ரகுவின் வீட்டு நடையில் (எம்.ஆர்.ஆதிவராஹ ஐயரின் வீடு) வைத்து பூஜை செய்து குத்துக்கல்தெரு, மேலமாடத்தெரு, வடக்கு மாடத் தெரு, தெற்கு மாடத்தெரு, சன்னதித்தெரு என்று தினமும் சுவாமி புறப்பட்டு ஊர்வலமாகச் சென்று மீண்டும் ரகுவின் வீட்டிற்கே வந்து சுவாமிக்கு நெய்வேத்யம், தீப்பராதனைகள் எல்லாம் விமர்சையாக நடத்துவார்கள். குழந்தைகளை வைத்துத் தள்ளிக்கொண்டு போக பச்சை வண்ணத்தில் ஒரு வண்டி ரகுவின் வீட்டில் இருந்தது. அதில்தான் “பூப்பல்லக்கு அலங்காரம்” செய்வார்கள். குழந்தைகளை உற்சாகப் படுத்தவே “சிண்டாப் பாட்டி” (ரகுவின் அப்பா வழிப் பாட்டி ) சுவையான நெய்வேத்தியங்கள் செய்து தருவாள்.

ரகு மிக நன்றாக நாடகங்கள் எழுதுவான். திருவிளையாடல் படத்தின் தாக்கத்தில் “பர்பியாடல்” என்றொரு நாடகம் சிவராத்திரி அன்று போட்டான். அதில் கதா பாத்திரங்கள் எல்லாம் பருப்பு, உளுந்து, சக்கரை என்றுதான் இருக்கும். நல்ல நகைச்சுவையான அந்த நாடகம் ரகுவின் பக்கத்து வீட்டுத் திண்ணையில்தான் நடந்தது. ரகுவும் அவனும்தான் சென்னையில் “வசந்தா மேன்ஷன்” விடுதியில் அறை எண் பதிமூன்றில் தங்கி இருந்தனர். எத்தனை உயர்ந்த பதவிகளில் இருந்தாலும் ரகுவின் சாத்வீக குணமும், ஒழுக்கமும், பண்பும், பணிவும் அவனுக்கு இன்றும் ஆதர்சமாகத்தான் இருக்கிறது. நல்ல நட்பு வரமல்லவா…

“G. R. நாராயணன் சார்”

narayanஅவனுக்கு ஐந்தாம் வகுப்பில் ஆங்கிலப் பாடம் கற்றுத் தந்தவர் “G. R. நாராயணன் சார்”. கண்டிப்பும், ஒழுக்கமும் நிறைந்த சீலர். மிக அழகாக ஆங்கில இலக்கணங்களைப் புரிய வைப்பார். மாணவர்களின் முழுக் கவனமும் அவரிடம் இருக்கும்படிப் பார்த்துக் கொள்வார். ஆங்கில உச்சரிப்பு சரியாக வரும்வரை விடமாட்டார். “திஸ் இஸ் அ பில்லர்” என்று சொல்லி “பில்லர்”ல் “ர்” உச்சரிப்பு இல்லாமல் சொல்லச் சொல்வார். அந்த வகுப்பறையில் ஒரு பெரிய தூண் இருக்கும். அதைக் காட்டி பல்வேறு விதமாக “திஸ் இஸ் அ பில்ல” என்று ஒவ்வொரு விதமாகக் கற்றுத்தருவார். முன்பெல்லாம் ஐந்தாவது வகுப்பில்தான் ஆங்கிலப் பாடம் துவங்கும். ஆங்கிலத்தில் “அட்ஜெக்டிவ்” (உரிச்சொல்) எப்படி, எங்கு வரும் என்று அவர் கூறும் உதாரணங்களே அருமையாக இருக்கும். ஓரளவுக்கு அவனுக்கு ஆங்கிலம் தெரிகிறதென்றால் அது அவர் போட்ட பிச்சைதான். அவரும் அவன் வசித்து வந்த அதே தெருவில்தான் வசித்து வந்தார். அவன், வீட்டில் ஏதேனும் முரண்டு பிடித்தால் அவனுக்கு அம்மா G. R. சாரிடம் சொல்லறேன் என்றுதான் அவனை அடக்குவாள். அவர் தினமும் காலையில் ஆறரை மணிக்கு ஆத்தங்கரைக்குக் குளிக்க அவனது வீட்டைக் கடந்துதான் செல்வார். அந்த நேரம் அவன், வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கொண்டு அவர் கற்றுத்தந்த பாடங்களை உரக்கப் படிப்பான். அவர் அவனைப் பார்த்து ஒரு புன்னகை செய்தபடியே செல்வார். அது அவனுக்கு ஏதோ பரிசு கிடைத்த மகிழ்ச்சியாக இருக்கும். அவன் பிற்காலத்தில் சென்னையில் இருந்து ஊருக்குத் திரும்பும்பொழுது ஒவ்வொரு முறையும் அவரைப் பார்த்து நமஸ்கரிப்பான். அவனை அவர் மனம் குளிர ஆசீர்வதிப்பார். நிறையப் படி. படிப்பதர்க்கென்று நேரத்தை ஒதுக்கிகொள் என்று மிகுந்த வாஞ்சையுடன் சொல்வார். அவரது இளைய மகன் N. R. அவனுக்கு நண்பன். சில மாதங்கள் சென்னையில் அவனோடு திருவல்லிகேணியில் விடுதியில் சேர்ந்து தங்கி இருக்கிறான். இப்பொழுது மும்பையில் “ராம சுப்ரமணிய சாஸ்த்ரிகளாக” இருக்கிறான். மன்னிக்கவும் இருக்கிறார். ஊரில் சாஸ்தா கனபாடிகளிடம் வேதம் கற்றுக் கொண்டபலன் இன்று சௌகர்யமாக இருக்கிறேன் என்று சொல்வார். நண்பர்கள் சந்தோஷமாக இருப்பதைப் பார்க்க அவனுக்கு எப்போதுமே பிடித்திருந்தது.

(23.04.2015) இனியவன் அடுத்த வாரம் வருவான் ……….

படங்கள் உதவி: K.V. அன்னபூர்ணா

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *