உலக வாசகர் கூட்டுக் களியாட்ட தினம் !
ஏப்ரல் 23: உலக புத்தக தினம்
எஸ் வி வேணுகோபாலன்
பூவா தலையா திரைப்படம் என்று நினைவு. வண்டியிலமர்ந்தபடி, நாகேஷ் செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருப்பார். அவரைக் கடந்து செல்லும் ஒருவர் அவரை உற்றுப் பார்த்துவிட்டு ‘வெளியூரா?’ என்று கேட்பார். “ஏன் உங்க ஊர்ல யாருக்கும் பேப்பர் படிக்கத் தெரியாதா?” என்பார் நாகேஷ்.
வாசிப்பை வைத்து எழுதப்பட்டுள்ள துணுக்குகள் ஏராளம். அதை வாசித்தாலே, வாசிப்பை யாரும் விடமாட்டார்கள். மதிப்புரை எழுத தனக்கு அனுப்பப்பட்ட நகைச்சுவை புத்தகத்தின் ஆசிரியருக்கு ஓர் எழுத்தாளர் இப்படி எழுதினாராம்: “உனது புத்தகத்தைப் பார்த்ததுமுதல் சிரித்துக் கொண்டிருக்கிறேன்………..எப்பொழுதாவது வாசிப்பேன்!” என்று சுஜாதா ஒரு முறை குறிப்பிட்டிருந்தார். இது அயல்நாட்டு நகைச்சுவை. _
‘திருப்பித் தருவதாக நீ எடுத்துச் சென்ற/ நூல்களின் பெயர்ப் என்னிடம் இருக்கிறது/ ஐந்து ஆண்டுகளாக/ என் புத்தகங்களைப் படித்துக் கொண்டிருக்கிறாய் நீ/ அன்றுமுதல் நீ தந்துவிட்டுப் போன பட்டியலை வாசித்துக் கொண்டிருக்கிறேன் நான்’ என்பதாகச் சொல்லும் ஜெயபாஸ்கரன் கவிதை, புத்தக இரவல்கள் குறித்த சோகமான அனுபவத்தைச் சொல்கிறது. அப்படியாவது படித்தால் சரி.
எப்போது அழைக்கும் போதும், ‘கடைசியாக என்ன புத்தகம் படித்தீர்கள்?’ என்று தான் தொடங்குவார் தோழர் ஆறுமுக நயினார். ஜோல்னாப் பையைப் பிடுங்கி உள்ளே தனக்கு ஏதாவது நூல் சிக்குகிறதா என்று பார்ப்பதை கடந்த 30 ஆண்டுகளாக விடாது செய்பவர் நண்பர் அரசு. அவரிடமிருந்து பறிமுதல் செய்த மேஜர் ஜெய்பால் சிங் எழுதிய “நாடு அழைத்தது” நூலைப் பற்றி பின்னர் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன், தாம் பணியாற்றிவந்த அஞ்சல் துறையிலிருந்து விருப்ப ஓய்வில் வெளியேறுகையில் குறிப்பிட்டபோது சிலிர்த்தது.
தி ஜானகிராமன் அவர்களது புகழ்பெற்ற அம்மா வந்தாள் நாவல் தொடங்குமிடமே வாசிப்பின் கவிதை: “சரஸ்வதி பூஜையன்று புத்தகம் படிக்கக் கூடாது என்பார்கள். ஆனால் ஒரு நாளுமில்லாத திருநாளாகப் புத்தகத்தின்மேல் வருகிற ஆசை! கீழே கிடக்கிற-பல்பொடி மடிக்கிற-காகிதத்தையாவது எடுத்துப் படிக்க வேண்டும் என்ற மோகம்!”
காலை எழுந்தவுடன் பல் தேய்ப்பதைப் போல், வாசிப்பைப் பழக்கமாக வரித்துக் கொள்பவர்களுக்கு இந்த விவரிப்பில் எத்தனை போதை ஊறி இருக்கிறது என்பது தட்டுப்படும். இளவயதிலேயே அப்படியான பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள முடிகிற மனிதர்கள் எத்தனை வரம் பெற்றவர்கள்!
புதுவை தோழர் ஹேமா தங்களது செல்ல மகள் சாதனா, இந்தக் கோடை விடுமுறையில் முதல் வேலையாக இங்கே அங்கே சிதறிக் கிடக்கும் தனது புத்தகங்களை ஒழுங்காக அடுக்கி, தங்களது இல்ல நூலகத்திற்கு அற்புத உலகம் என்று பெயர் சூட்டி, விரும்பும் நண்பர்களுக்கு டோக்கன் போட்டு இலவசமாக வாசிக்கக் கொடுத்து அவர்களையும் வாசிப்பு உலகில் திளைக்க வைக்க மும்முரமாக இயங்கிக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார். இந்தப் புத்தகங்களை அடுக்குதல் என்பது இங்கே எழுதி இருக்கும் வேகத்தில், எந்திரம் போல் நடைபெற்ற வேலை இல்லை. எந்தெந்த நூல் எங்கே எப்போது வாங்கப்பட்டது, பரிசாகப் பெற்றிருந்தால் எதற்காக என்றெல்லாம் நினைவடுக்குகளில் பின்னோக்கிப் பயணம் செய்து, அந்த இனிப்பான நிகழ்வுகளின் மறு தேரோட்டத்தொடு நடந்து முடிந்த அனுபவம் அது!சாதனாவின் வயது ஒன்பது என்பது எத்தனை சிலிர்ப்புற வைக்கும் செய்தி!
மறைந்த தி க சி அவர்களது நினைவாக ஓர் எளிய சங்கமம் கடந்த மாதம் சென்னையில் எழுத்தாளர் தி சுபாஷினி அவர்களது இல்லத்தில் நடைபெற்றது. அசாத்திய நினைவாற்றலும், மிகுந்த இலக்கிய ரசனையும், நகைச்சுவை உணர்வும் பொங்கித் ததும்பிய மனிதர் ஒருவர் பெங்களூரிலிருந்து வந்திருந்தார். திரு வி க அவர்களைச் சந்தித்திருப்பவர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் வானொலி உரைகளைக் கேட்டிருப்பவர், அ.சீ.ரா என்றழைக்கப்படும் புகழ்பெற்ற பேரா.சீனிவாசராகவன் அவர்களது மாணவர் என்னும் பெருமைக்குரிய அந்த மனிதர் 82ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருப்பவர். வாசிப்புக்காக குறுகுறுத்துக் கொண்டிருக்கும் அந்தக் கண்களில் தெறித்த மின்னலுக்கு அத்தனை வயது தெரியவில்லை.
சமையல் அறையின் எண்ணெய்க் கைவிரல்களால் எழுத்துக் கூட்டி எழுத்துக் கூட்டிப் படித்த பெண்கள் குறித்து ஜனநாயக மாதர் சங்கத் தலைவர் பாப்பா உமாநாத் குறிப்பிடுவதுண்டு. நான்கு சுவர்களுக்குள் சிறைப்பட்ட தனது வாழ்க்கையினூடே கண்டங்களைக் கடக்கும் அனுபவங்களைத் தந்த வாசிப்பில் சுடர் விட்டுத் திகழ்ந்த தனது சுப்புலட்சுமி பாட்டி பற்றிய தோழர் மைதிலி சிவராமன் அவர்களது தொகுப்பு அபாரமான சமூக ஆற்றல் ஒன்றின் தீப்பொறி (ஒரு வாழ்க்கையின் துகள்கள் – பாரதி புத்தகாலயம்).
தேர்தலில் தனது கட்சி தோல்வி அடைந்ததும், திரிபுரா மாநில முதல்வர் பொறுப்பிலிருந்து விலகி வெளியேறியபோது ஒப்பற்ற அந்த மனிதரின் ஒரே உடைமையான சிறு கைப்பெட்டியில் ஒரு ஜோடி துணிமணிகளோடு உடன் இருந்தவை புத்தகங்களே என்பது தோழர் நிருபன் சக்கரவர்த்தி அவர்களது வரலாற்றில் பதிவாகிவிட்ட செய்தி. நூல்களோடு இழையறாத தொடர்பு கொண்டிருப்போர் எந்தத் தோல்வியின்போதும் நிலைகுலைவதில்லை.
ஒரு நல்ல புத்தகம் உரையாடலைத் தோற்றுவிக்கிறது. பிடித்தமான இசையைப் பின்னணியாக இழையோட விடுகிறது. தன்னையறியாமல் ஒரு மென் புன்னகை, அவ்வப்பொழுது கொஞ்சம் உச் உச், ஆழ்ந்த பெருமூச்சு, அடப் பாவமே என்ற இரக்க ஒலி, அப்படிப் போடு என்ற உற்சாகம்…..என ஒரு பயணம் சக்கை போடு போடுகிறது வாசிப்பின் ரசனையாளருக்கு. புத்தகத்தை மூடி வைக்கையில் எத்தனை உள்ளார்ந்த அனுபவம் வாய்த்த உணர்வு!
‘பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன்’ என்பது மாதிரியே புத்தங்களில் உள்ளத்தைப் பறிகொடுத்த பாவிகளுக்கென்று ஒரு திருநாள் வருவது எத்தனை கொண்டாட்டமான விஷயம்! மொழிகளைக் கடந்தும், தேச எல்லைகளுக்கு அப்பாலும் பரவுகிற கூட்டுக் களியாட்டம் அல்லவா இந்த உலக தினம்!
முதல் புத்தகத்தை நம் கைகளில் எடுத்து வைத்தவர் யாரோ அவருக்காக நமது நன்றி படரட்டும் இந்த தினத்தில்! வாசிப்பை ஊக்குவிக்கும் ஒவ்வோர் அன்பு உள்ளத்திற்கும் நமது பாராட்டுதல்கள் சென்றடையட்டும் இந்த நாளில்! ஷேக்ஸ்பியர் பிறந்த நாளோ, நினைவு நாளோ, செர்வாண்டிஸ் நாளோ – படைப்புலகின் இதயங்கள் யாவற்றுக்கும் பூச்சொரிந்து கொண்டாடுகிறோம் இந்த நாளில்.
தினம் தோறும் வாசிப்பு என்பதே வாசிப்புக்கான தினத்தின் அறைகூவலாக இருக்கட்டும்.
&&&&&&&&&&&&&&&&&
i celebrate book lovers as this author does—–i am looking for more time with book lovers—–you dont get tired when talking on books—-salutes sv.venugopal—-his wide reading mesmerises
வாசிப்பு என்பது போற்றத்த்தக்க தினசரி செயலாக இருக்க வேண்டியது.ஆனால் நவீன தொழில்நுட்ப வளர்ச்சி எழுத்துவடிவில் வெளிப்படுத்த வேண்டிய த்தகவல்கள் சில மதிக்கப்படுகின்றன.எழுத்துவடிவில் வெளிப்டுத்துவதை விட ஒளி ஒலி வடிவில் மேம்படுத்தப்பட்ட வடிவில் வெளிப்படுத்தினால் மட்டமே அதன் முழுவெளாப்பாட்டின் பொருள் சரியாக புரியும் என்ற நிலை உருவாகி உள்ளது.எழுத்த்தாளர்கள் சாண்டியன் போன்றவர்கள் காட்சியை எழுத்து வடிவில் ஓவியமாக நீண்ட நெடிய வரிகளில் படைத்தார்கள்.அதே காட்சி காண்வடிவில் சில நொடிகளில் படிக்க முடியும் என்ற நிலை உருவாகிவிட்ட பின்னர்.வாசகர்கள் காண் வடிவில் இருக்க வேண்டியதை காண்வடிவில் தேடுகிறார்கள் எழுத்து வடிவில் படிக்க கூடியதை மட்டும் வரிவடிவில் தேடுகிறார்கள்.எழுத்தாளர்கள் .இதை புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.காண்வடிவத்தில் வர வேண்டிய தகவலை எழுத்துவடிவில் கொடுத்துதவிட்டு வாசகர்கள் வாசிப்பு ஆர்வம் குறைந்து வருகிறது என குறை கூறுகிறார்கள்.இது சரியான பார்வை அல்ல.