என்று விடியும் விவசாயிகளின் வாழ்க்கை?

2

பவள சங்கரி

தலையங்கம்

மனித இனத்துக்கே அன்னமிடும் விவசாயிகள்  இப்படி வெந்து வேதனையில் சாகலாமா? நாடு தாங்குமா? விஞ்ஞானமும், அறிவியலும் வளர்ந்துகொண்டிருக்கிறது என்று மார் தட்டிக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் நம்மோடு, நம் வயிறு நிரம்ப உழைக்கும் ஒரு இனம் இப்படி அழிந்து வருவது உணவு விசயத்தில் தன்னிறைவு பெற்றுள்ள நம் நாட்டிற்கு நல்லதா? இந்த நிறைவு நிலைக்குமா? இப்படி பல கேள்விகள் இன்று மக்களிடம் எழ ஆரம்பித்துவிட்டன. விவசாயிகளின் தற்கொலை விவகாரம் தொடர்ந்த வண்ணம் உள்ளது. நேற்றும் நம் தலைநகர் தில்லியில் தொழிலதிபர்களுக்கு ஆதரவான நில உரிமைப்படுத்தும் சட்டம் எதிர்ப்பு தெரிவித்து ‘ஆம் ஆத்மி கட்சி’ நடத்திய எதிர்ப்புப் பேரணி மற்றும் தில்லி முதல்வர் கேஜரிவால் கலந்துகொண்ட எதிர்ப்புக் கூட்டத்தில் அருகிலேயே மரத்தின் உச்சியில் ஏறி ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு விவசாயி தற்கொலை செய்துள்ளார். தொண்டர்கள் தடுப்பதற்கு முயன்றும் பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளார். விவசாயிகள் தற்கொலை நிகழ்வுகள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறதேயொழிய குறைந்தபாடில்லை. 1995 ம் ஆண்டிலிருந்து, கிட்டத்தட்ட 3 இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் அளிக்கிறது கருத்துக் கணிப்பு. இதில், சட்டீஸ்கர் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் தற்கொலை செய்திகள் வெளியிடுவதை நிறுத்திவிட்டன. நம் இந்தியாவில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்கள் மகாராஷ்டிரம், ஆந்திர பிரதேசம், கர்நாடகம், மத்திய பிரதேசம் மற்றும் கேரளா ஆகியவை. போதாதற்கு அனைத்து விவசாயிகளுக்குமே பிரச்சனை தரக்கூடிய நிலங்களை உரிமைப்படுத்தும் சட்டம் வேறு அச்சமேற்படுத்திக்கொண்டிருக்கிறது.

இன்று சக்கரைத் தொழிற்சாலைகள் நலிவுடன் இருக்கின்றனவா அல்லது கரும்பை விளைவிக்கக்கூடிய விவசாயிகள் வளமற்று வாழ்கிறார்களா? சக்கரை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இன்று கிலோவிற்கு ரூ. 8 முதல் 10 வரை விலை இறங்கியுள்ளது. ஆனால் இந்த விலை இறக்கம் முழுமையாக பொதுமக்களைச் சென்று அடைந்துள்ளதா என்றால் இல்லை என்பதுதான் உண்மை. கிலோவிற்கு ரூ. 2 அல்லது 3 தான் பொதுமக்களைச் சென்று சேர்ந்திருக்கிறது. பொதுவாகவே அத்தியாவசியப் பொருட்களின் விலை இறக்கம் என்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றல்லவா. அதாவது நம் ரூபாயின் மதிப்பு அதிகரிக்கிறது என்றல்லவா அர்த்தம். இதைவிடுத்து விலையேற்றம் ஏற்படுத்தும் வகையில் ஆயத்தீர்வுகளையும், இறக்குமதி வரிகளையும் அதிகப்படுத்த அரசு முயல்வது சரியான தீர்வா? சக்கரை ஆலை அதிபர்களுக்கு மட்டுமே பயன் தரக்கூடிய திட்டமாகவே இருக்கிறது. இன்று கரும்பு விளை நிலங்களின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. முன்பு பெரியார் மாவட்டத்தில் 5 இலட்சம் ஹெக்டேரில் விளைவிக்கப்பட்ட கரும்பு தற்போது மூன்றரை இலட்சமாகக் குறைந்துள்ளது. இன்னும் அதனுடைய அளவு சுருங்கக்கூடிய வாய்ப்பே உள்ளது. இதற்கு இந்த விலை வீழ்ச்சி காரணமல்ல. நாம் எந்த ஒரு பொருளை வாங்குவதென்றாலும் பணம் கொடுத்துத்தானே வாங்குகிறோம். ஆனால் விவசாயிகளிடமிருந்து கரும்பை வாங்கும் போது அதற்குரியத் தொகையைக் கொடுக்காமல் காலந்தாழ்த்துவது ஏன்? தோராயமாக, 22,000 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்யப்படாமல் நிலுவையில் உள்ளது. இதுதான் விளை நிலங்களின் குறைவிற்குக் காரணம். பணப் பயிர் என்று கூறக்கூடிய கரும்பிற்கே இந்த நிலை. சக்கரை ஆலை அதிபர்கள் பணம் கைக்கு கிடைத்த பின்புதான் சக்கரையை வெளியே அனுப்புகின்றனர். ஆனால் விவசாயிகளுக்கு மட்டும் பணம் தராமல் இழுத்தடிப்பது சரியாகாது. சக்கரை ஆலை அதிபர்களுக்கு மொலாசஸ் மூலமாக ஒரு வருமானம் கிடைக்கும்போது அதற்குரிய ஆயத்தீர்வை அரசு ஏன் குறைக்க வேண்டும். கரும்புச் சக்கை கூட காகிதத் தொழிற்சாலையில் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. இப்படி பல வகையிலும் வருமானம் பெறக்கூடிய சக்கரை ஆலைகளை ஒரு சிலர் நலிவடையச் செய்ய அரசு அனுமதிக்கலாமா. அண்டை மாநிலங்களிலிருந்து வரக்கூடிய உபரி சக்கரையும், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யக்கூடிய சக்கரைக்கும் அதிகப்படியான வரி விதிப்பதால் செயற்கையான விலையேற்றம் ஏற்பட வழியாகிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைந்தால் நம் ரூபாயின் மதிப்பு கூடி நாட்டின் பொருளாதார உயர்வும் சாத்தியமாகும்.

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “என்று விடியும் விவசாயிகளின் வாழ்க்கை?

 1. வேதனையாக இருக்கிறது!  

  தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம் என்ற பாரதியின் நாட்டில், இன்னும் பட்டினிக் கொடுமைகள் உயிரைக் குடிப்பது கண்டு!

  உழைப்பவன் வியர்வையில் 
  பெருப்பவன் பணக்காரனா இருப்பதும்
  அவனுக்குத் துணையாக
  அரசியல் இருப்பதும்
  அடியோடு தொலையும் நாள்தான்
  அன்னை பாரதம் விழிப்படையும் நாள்!

  வருத்தத்துடன்
  சுரேஜமீ

 2.  ரொம்ப சரியாகச் சொன்னீர்கள் பவளசங்கரி. எவ்வளவோ அழகாக எல்லாப்பிரச்னைகளையும் தீர்த்துவைப்பார், ஊழல் களைவார்; உன்னதம் சேர்ப்பார் விவசாயி வாழ்வில் என்றெல்லாம் எதிர்பார்த்து மோடிக்கு ஓட்டுப்போட்டோம்.அவர் என்னவென்றால் அடிமடியிலேயே கைவைத்து உழுபவன் வாழ்வில் மண்ணைப்போட்டு ஊர் ஊராகச் சுற்றிக்கொண்டிருக்கிறார்.
   என்று விடியும் இந்த பாரதம்?
   யோகியார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.