பழமொழி கூறும் பாடம்
– தேமொழி.
பழமொழி: நனி வெந்நீர் இல்லம் சுடுகலாவாறு
இறப்பச் சிறியவர் இன்னா செயினும்
பிறப்பினால் மாண்டார் வெகுளார் – திறத்துள்ளி
நல்ல விறகின் அடினும் நனிவெந்நீர்
இல்லம் சுடுகலா வாறு.
(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)
பதம் பிரித்து:
இறப்ப சிறியவர் இன்னா செயினும்
பிறப்பினால் மாண்டார் வெகுளார் திறத்து உள்ளி
நல்ல விறகின் அடினும் நனி வெந்நீர்
இல்லம் சுடுகலாவாறு
பொருள் விளக்கம்:
இழிந்த குணத்தை தனது இயல்பாகக் கொண்டவர்கள் துன்பத்தைத் தரும் செயல்களைச் செய்தாலும், மேன்மையான பண்புகளைத் தனது இயல்பாகக் கொண்டவர் அதற்காகாக அவரிடம் சினம் கொள்ள மாட்டார்கள். (இது எவ்வாறு எனில்) நன்கு கவனத்துடன் தேர்ந்தெடுத்த சிறந்த விறகுகளைக் கொண்டு அடுப்பெரித்துக் காய்ச்சினாலும், கொதிக்கும் வெந்நீரால் வீட்டை வேகவைக்க இயலாது என்பதைப் போன்றதாகும்.
பழமொழி சொல்லும் பாடம்: சிறுமதி கொண்டோர் செய்யும் கேடுகள் குறித்து அவர்மேல் சீற்றம் கொள்ளாதிருப்பது பண்பிற் சிறந்தோர் இயல்பு.