வையவன்

நந்தவனத்தில் வெளிவந்த அட்டைப்படச் சிறப்புச் சிறுகதைக்கு வாசகர் கடிதம் ஏராளமாக வந்திருந்தது.
அந்தப் பத்திரிகை அலுவலகம் வந்திருந்த கடிதங்களை ஒரு கட்டாகக் கட்டி அவனது முகவரிக்கு அனுப்பியிருந்தது.
ஓஹோ வென்று புகழ்ந்து வந்திருந்த கடிதங்கள் அவனைப் பயமுறுத்தின.

நாலைந்து கடிதங்கள் நாசூக்காகக் குறை கூறியிருந்தன. ஆசிரியர் முயற்சித்தால் மேல் நாட்டு எழுத்தாளர் தரத்துக்கு உயரலாம் என்று ஒரு கடிதம் ஆரூடம் கூறியது.

மீண்டும் மீண்டும் அந்தக் கடிதங்களைப் படித்தான் சிவா.
புகழ் ஒரு போதை என்பது பளிச்சென்று உறைத்தது. தன்னையறியாது கர்வம் தனக்குள் முளைவிடுவதை சிவா கவனித்தான்.

எது எழுத்தாளனுக்கு மட்டுமின்றி, மனிதனுக்குக் கூட அத்தியாவசியமோ அந்த மென்மையான உணர்வுகளின் மீது பிறரது பாராட்டுக்கள் ஒரு பட்டுப் போர்வை போர்த்தின. ஒரு தங்கச் சிம்மாசனத்தில் தனிப்பீடமிட்டு ஒதுக்கின.

முதல் கதை வெளிவந்த நாலைந்து வாரத்திற்குள் அவன் எழுதி எழுதித் திரும்பி வந்திருந்த பழைய கதைகளை வெவ்வேறு பத்திரிகைகளுக்கு அனுப்பி வைத்தான்.

நான்கே மாதத்திற்குள் அவன் கதைகள் எட்டு பிரசுரமாகி விட்டன.

ஒவ்வொன்றும் வெற்றி முரசு கொட்டிக் கொண்டு வெளிவந்தன. வரவேற்கப்பட்டன. போதாததற்கு மூன்று பத்திரிகைகளில் அவன் புகைப்படம் வேறு பிரசுரிக்கப்பட்டு விட்டது.

தெருவில் போகும்போது அவனை சுட்டிக்காட்டி இன்னார் என்று யாராரோ பேசிக் கொண்டார்கள்.
புகழ் முதலில் கூச்சப்படுத்தியது; பிறகு கர்வமூட்டியது.

அப்புறம் அதில் ஒரு சுகம் தென்பட, அடிக்கடி அந்த சுகத்திற்கு மனம் ஏங்கலாயிற்று.
சட்டென்று ஒருநாள் சிவா உறக்கத்திலிருந்து விழிப்பது போல் உதறிக் கொண்டு சுய உணர்வு பெற்றான்.

‘விடுதலை பெறுக’

அண்செட்டியில் வெற்றிவேல் முன்னிலையில் கேட்ட அந்த வாசகம் பளீரென்று மனசில் சுடர் வெளிச்சமாகப் பரவிற்று.
பாபா ஓம்கார்நாத்தின் மகன் நான். என் அம்மா திருப்பத்தூரில் முதலியார் ரைஸ் மில்லில் தவிடு விட்டுக் கொண்டிருக்கிறாள்.

புகழே நீ ஒரு புழுதி மாதிரி என் மீது படிந்து என்னை நாசமாக்கி விடாதே; விலகி நில்’
என்று மனசிற்குள் அவன் ஒரு கட்டளை இட்டான்.

இந்த ‘ஸ்பாட் லைட்’ ஜாஜ்வல்யத்திலிருந்து ஓடிப் போய் உண்மையின் எளிமையை தரிசிக்க வேண்டும் போலிருந்தது.
அவன்நேராக அம்மாவைப் பார்க்கத் திருப்பத்தூர் போனான்… பாங்கிலிருந்து எல்லாப் பணத்தையும் அவளுக்குக் கொடுக்க எடுத்துக் கொண்டு.

ஒற்றை அறையுள்ள அந்த சின்ன வாடகை வீட்டில் கிழிந்த பாயில் அழுக்கான தலையணையில் படுத்துக் கொண்டு, நெல் மிஷினிலிருந்து அம்மா வரும்வரை காத்திருந்த போது புகழின் மயக்கம் சுத்தமாய்க் கலைந்து விட்டது.
இன்னும் நான் பழைய சிவாதான்.

அப்பாடா… இது எத்தனை ஆறுதலாக இருக்கிறது!
வரும்போதே “எப்படா வந்தே?” என்று கேட்டுக் கொண்டே நுழைந்தாள் தாட்சாயணி.

உடல் மெலிந்து, முகமெல்லாம் தவிடு படிந்திருக்க சாயம் போன சேலையில் அவளைக் காண நெஞ்சு நைந்தது. கண்ணிலும் உதட்டிலும் பாசம் பூரித்தது.

“அரை மணி நேரம் ஆச்சும்மா”
“ஏண்டா எளைச்சுப் போயிருக்கே”
அவன் சிரித்தான்.

“என்னடா சிரிக்கறே?”
“என்னடா சிரிக்கறே?”
“எந்த அம்மாவுக்கும் தன் பிள்ளை எளைச்சிருக்கற மாதிரியே தான் தோணுமா?”

“அம்மாங்கள்ளாம் அசடுண்ணு சொல்றியா…”
“நீ எப்பிடிம்மா இருக்கே?”

அவன் அவள் கேள்விக்கு பதிலளிக்காது மடக்கினான்.
“எனக்கு என்ன..நான் நல்லாத்தான் இருக்கேன்”

“தான் எளைச்சிருக்கப்ப மகன் எளைச்சிருக்கறதை கண்டுபிடிக்க வேற யாராலே முடியும்?”
“அசடுண்ணு சொல்றே அப்ப…”
“நீ அசடானா நான் கசடாயிருப்பேம்மா.”

“போதும் நிறுத்துடா” என்று அவன் மேலே புகழ்ந்து விட இடம் தராது, முகம கை கால் கழுவி வர வெளியே புழக்கடைக்குப் போனாள். திரும்பியபோது சிவா…

“ஒரு மாசத்துக்கு முன்னாடி நான் பாபா ஓம்கார்நாத்தை சந்திச்சேன்” என்று கூறினான்.
அம்மா முகத்தைத் துடைத்துக் கொண்டு நெற்றியில் குங்குமம் வைக்கப் போனாள்.

“யாரது… பெரிய மகானா?”

“பெரிய மகான் தான். எல்லோரும் பேசிக்கிட்டாங்க. எனக்கு அப்படித் தோணலே.”
அவள் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொண்டு திரும்பினாள்.
“ஏன்?”

“நான் சாமியாராய் போகிறேன்னு தன் மனைவிகிட்டே விடுதலை வாங்கிட்டுப் போனவர் ஒரு மகானா… அவருக்கு விடுதலை கொடுத்தாளே அந்த அம்மா ஒரு மகானா?”

அம்மாவின் முகம் அதிர்ச்சியடையும் என்று சிவா எதிர்பார்த்தான். மாறாக ஓர் அமைதி வந்தது.
“அவரைப் பாத்தியா?”
“பாத்தேன்.”
“பேசினியா…”

“சூடு குடுக்கறாப்பிலே! ஓடி வந்தவர் மகானாகிட முடியாதுண்ணு சொன்னேன்.”
“அதை அப்புறமா பேசலாம்… நீ கொஞ்சம் சாப்பிடறியா… காலைலே வடிச்ச சோறு தான் இருக்கு. புளிக்கொழம்பு.”
“எனக்குப் பசிக்கலேம்மா… நீ சாப்பிடு.”

தந்தையைப் பற்றி அம்மா ஆர்வமாக விசாரிப்பாள் என்று எண்ணியதற்கு ஏமாற்றமாயிருந்தது.
“நல்லா சொன்னியே… ஒனக்கு புளிக்கொழம்பு புடிக்காது இல்லே. இரு வேற சோறு வடிச்சு ஒரு பருப்புக் கொழம்பு வக்கிறேன்.”

தான் சாப்பிடாமல் அவள் சாப்பிட மாட்டாள் என்று உணர்ந்தான்.

“அடுப்பை மட்டும் பத்த வச்சுக் கொடுத்துட்டு இப்படிவாம்மா… அந்தப் பழைய சாதத்தையே நான் தக்காளியும் வெங்காயமும் அரிஞ்சு போட்டு மசாலா சாதம் பண்ணிடறேன்” என்று எழுந்தான்.

“எனக்கு என்ன வேலையாம்…? நீ உக்காருடா” அம்மா அடுப்பு பற்ற வைக்கும் வேலையில் இறங்கினாள்.
“நான் யாருக்கோ தான் சமைச்சுப் போட்டிருக்கேன். ஒனக்கு ஏம்மா போடக் கூடாது? இன்னிக்கு நாந்தான் சமைப்பேன்” என்று சிவா பிடிவாதமாகச் சொன்னான்.

“சரி, உன் இஷ்டம்! தக்காளியும் வெங்காயமும் இருக்கு; அரிஞ்சு தர்றேன்” என்று தாட்சாயணி அரிவாள் மணையை எடுத்தாள்.

அடுப்பு பற்றிக் கொண்டது. வாணலி காயட்டும் என்று அதைத் தூக்கி அடுப்பின் மீது வைத்தான்.
அம்மா தக்காளி அரியலானாள்.

“நீ லெட்டரிலே எழுதவே இல்லையே”

அப்பாவைப் பார்த்ததைப் பற்றிச் சொல்கிறாள் என்று சட்டென்ஙறு இயைவுபடுத்திக் கொண்டான் சிவா.
“இது எழுதற விஷயம் இல்லேம்மா… சொல்ல வேண்டியது… கேட்க வேண்டியது?”
“எப்படியிருக்கிறார்?…”

“வெள்ளை வெளேர்ணு மார் வரைக்கும் தாடி… தலை சுத்தமா நரைச்சிருக்கு. சாந்தியா… சௌக்கியமா இருக்கிறார். அவருக்கென்ன… கோடீஸ்வர சிஷ்யர்கள்! அமெரிக்காக்காரன்… கர்நாடகத்துக்காரன்… இப்படி”

அவள் சிறிதும் பாதிக்கப்படாமல் தன் வேலையில் மூழ்கியிருந்தாள். ஒருமுறை அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் மனசை ஊடுருவி அவன் குத்தலுக்கும் கிண்டலுக்கும் முற்றுப்புள்ளி வைப்பது போன்ற பார்வை அது.
“நீ என்ன கேட்டே… அவர் என்ன சொன்னார்?”

‘நீங்க ஏன் ஓடினீங்கன்னேன்… நதி ஓடுகிறதுன்னு சொன்னாரு. தப்பி ஓடறது ஞானமில்லேன்னேன்… இலை பழுத்தால் உதிரும்னார். நான் விடலே. சொல்லாமே ஓடி வந்தீங்களேன்னு குத்திக் காட்டினேன். விடுதலை பெற்றதுன்னாரு. யாரிடம்னு கேட்டேன். பெற வேண்டியவரிடம்ணு சொன்னாரு.”

அவள் மௌனமாகக் கேட்டுக் கொண்டாள். அந்த வார்த்தைகளை எண்ணிப் பார்க்கிறவள் மாதிரி சற்று நேரம் கண்ணிமைகளை மூடினாள்.

வாணலி காய்ந்துவிட சிவா எண்ணெய் ஊற்றினான். தாளித்து விட்டு அரிந்த தக்காளி வெங்காயத்தைக் கொட்டினான்.
“அப்புறம் என்ன சொன்னாரு?”

“விடுதலை பெறுகன்னாரு.”
மசாலா சாதத்தைக் கிளறி விட்டுக் கொண்டே அம்மா மௌனமாக உட்கார்ந்திருப்பதைத் திரும்பித் திரும்பிப் பார்த்தான் சிவா.

அவள் தியானிக்கிறாளா?
யோசிக்கிறாளா…
வருந்துகிறாளா…
பழங்கணக்கைப் புரட்டுகிறாளா… ஒன்றும் புரியவில்லை.

அவன் தன்னையே பார்ப்பதை ஒரு குறுகுறுப்பினால் உணர்ந்து தாட்சாயணி சிவாவைத் திரும்பிப் பார்த்தாள்.
“என்னடா பாக்கறே?”
“நீ அப்பாவுக்கு அனுமதி கொடுத்தியாம்மா?”
தாட்சாயணி அவன் கண்களைப் பார்த்தவாறே பதில் சொன்னாள்.

“ஆமாம்.”
“ஏம்மா… ஒன்னாலே எப்பிடிம்மா அப்படி ஒரு அனுமதி கொடுக்க முடிஞ்சது?”

தாட்சாயணி அவனுக்கு நேர் மேலே மாட்டியிருந்த கிருஷ்ணன் படத்தை நிமிர்ந்து பார்த்தாள். ஒரு பெருமூச்சு விட்டாள்.
“சிவா அவர் மகான் தான்! தாலி கட்டி மறுமூச்சு விருந்துக்கு வந்தப்பவே அவர் என்னன்னு கண்டுபிடிச்சுட்டேன். பதிமூணு வருஷம் என்னோட அவர் பொழச்ச பொழப்பு இருக்கே.. உங்ககிட்டே காட்டின பாசம் இருக்கே… எல்லாம் நெல்லுக்கு மேலே உமி மாதிரி.”

சிவா, முதன் முறையாக தன் தந்தையைப் பற்றி தாய் பேசுவதைக் கேட்டான்.
“இப்படிப் பொறப்பட்டுப் போறவர் ஏம்மா கல்யாணம் பண்ணிகிட்டார்!”

“அவரா பண்ணிகிட்டாரு? பையன் அடிக்கடி தியானம் பண்ணிகிட்டு உட்கார்ந்திருக்கானேன்னு என் மாமியாரும் மாமனாரும் பண்ணி வச்சாங்க.”

அவர் ஏன் குழந்தை பெற்றுக் கொண்டார் என்ற கேள்வி அவன் தொண்டை வரை வந்தது. ஆனால் கேட்கவில்லை.
“எனக்குத் தெரிஞ்சு அவரா விரும்பி எந்தக் காரியமும் செய்யல்லே”

கேட்க முடியாத கேள்விக்குச் சொல்ல முடியாத பதிலை அம்மா சொல்லி விட்டாள்.
சிவா திரும்பி மசாலா சாதத்தை அடுப்பிலிருந்து இறக்கினான்.

“என்னிக்கோ ஒருநாள் அவரு பொறப்பட்டுப் போயிடுவாருன்னு மட்டும் எனக்குத் தெரியும். அதை ஒவ்வொரு நாளும் நான் எதிர்பார்த்துட்டே இருந்தேன்.”
சிவா அதைக் கற்பனை செய்து பார்த்தான்.

ஒவ்வொரு நாளும்…
இன்றுதானா… இல்லை நாளையா… இன்றில்லை. அம்மாடா… அது இன்றில்லை.
ஒருவேளை நாளையாக இருக்குமோ?

இப்படியே பதின்மூன்று வருடங்கள். அவனுக்கு முதுகு சிலிர்த்தது.

“அவர் எப்படிப் போவாருன்னு நான் நெனச்சு நெனச்சு பாத்திருக்கேன். அதுக்கெல்லாம் வித்தியாசமா என்னையே அவர் அனுமதி கேட்பார்னு மட்டும் எதிர்பார்க்கலே. கேட்டார்.”
“நீ பேசாம போய் வாங்கன்னு சொல்லிட்டியா?”

“இல்லே… எனக்கு பதில் சொல்லுங்க. நான் எப்படி ஜீவிக்கறதுன்னு கேட்டேன். அவர் இதோ இந்த கிருஷ்ணன் படத்தைக் காட்டினார். பட்டுன்னு எனக்கு ஒரு தைரியம் வந்தது. போற வழிக்கு பாறாங்கல்லா நான் இருக்க வேண்டாமேன்னு தோணிச்சு. தடுத்து நிறுத்தியிருக்க முடியுமா?”

தாட்சாயணி சிவாவுக்காக ஒரு தட்டை எடுத்து வைத்தாள். ‘அம்மாவோடு ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டு எத்தனை நாளாயிற்று?’

சிவா இன்னொரு தட்டை எடுத்து அவள் முன்னால் வைத்தான்.
“நீ மொதல்லே சாப்பிடுடா”

“ரெண்டு பேருமே சாப்பிடலாம்மா”

அவள் வாணலியிலிருந்த சாதத்தை ஒரு போகணியில் கொட்டி முதலில் அவனுக்குப் பரிமாறிக் கொண்டே சொன்னாள்.
“அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி அணைகட்டி நிறுத்தியிருக்கலாம். எத்தனை நாளைக்கு அது முடிஞ்சிருக்கப் போவுது?”

அவள் தனக்குப் பரிமாறிக் கொள்ளாததை சிவா கவனித்தான். அன்னக்குத்தியை எடுத்து சாதத்தை அள்ளி அவள் தட்டில் போட்டான்.

காலையில் அவள் மிஷினுக்குப் போவதற்காக வெகு சீக்கிரம் விழித்து அவனுக்காகச் சமைக்கத் தொடங்கியிருந்தாள். சிவாவின் தூக்கம் கலைந்து விடக்கூடாதே என்பதற்காக ஓசைப்படாமல் காரியங்களைச் செய்வது அரைத் தூக்கத்தில் அவனுக்குத் தெரிந்தது.

அவன் எழுந்து உட்கார்ந்தான்.
“ஏம்மா, இவ்ளோ காலையிலே?”
“மிஷினுக்குப் போகணுண்டா”

“இனிமே நீ மிஷினுக்குப் போக வேணாம்”
“எதை நம்பி என் கைத்தொழிலை விட்டுடச் சொல்றே?”
“நான் எழுதறேம்மா… அதுலே காசு கெடைக்குது”

“எழுத்து நிரந்தரமில்லேப்பா. ஒனக்கு பர்மனெண்டா ஒரு வேலை கெடைக்கட்டும். நான் விட்டுடறேன்.”
சிவாவிற்கு தாமு சொன்னது நினைவு வந்தது. எழுத்தை நம்பிவிடாதே!
“அம்மா, உன்னை ஒண்ணு கேக்கணும்னே இங்கே வந்தேன்?”

“என்னடா அது?”
“ஒரு மோட்டார் ஒர்க்ஷாப்.. நான் இருக்கிறேனே… அந்த வீட்டுக்காரருடையது. அந்த ஒர்க்ஷாப் மானேஜரா இருக்கச் சொல்லி கூப்பிடறாரு.”

“ஏன்… அவருக்கு என்ன?”
“அவர் மதனபள்ளிக்குப் பேபாயிடறாராம்.”
“அப்ப ஒர்க்ஷாப் அங்கே எதுக்கு?”

அதற்கு சிவாவால் தெளிவான பதிலைச் சொல்ல முடியவில்லை.

அதற்கு என்ன பதில் சொல்வது என்று யோசிக்கும் போதுதான் சிவாவுக்கு தாமுவின் விருப்பத்திற்கு இசைவாக இயங்க வேண்டிய கருவியாகத் தன்னை அவன் பயன்படுத்துகிறானோ என்று தோன்றியது.

“நல்லா வளந்துட்ட தொழிலை ஏன் விடணும்ணு நெனக்கிறார்!”
“…….”
“அப்ப அவருக்குக் கட்டுப்பட்டுதான் நீ இருக்கணும். உன்னாலே அப்படி இருக்க முடியாதே”
‘உனக்காக எதற்கும் கட்டுப்பட்டு நான் இருப்பேன்’ என்று நினைத்தான் சிவா.
அவன் மௌனமாக இருப்பதைக் கண்டு தாட்சாயணி தொடர்ந்தாள்.
“எதையும் யோசிச்சுச் செய்.”

காலையிலிருந்து மாலை வரை யந்திரம் அரைத்துக் கொட்டும் அரிசியில் தவிடு புடைக்கும் அம்மா… யந்திரத்துக்கும் ஒரு முதலாளிக்கும் கட்டுப்பட்டிருக்கும் அம்மா… தான் ஒருவரிடம் கட்டுப்படுவதை விரும்பாத அதிசயத்தை சிந்தித்துக் கொண்டே சிவா எழுந்து பாயைச் சுருட்டினான்.

“எந்தத் தொழில் செஞ்சாலும், எங்கே உத்தியோகம் பண்ணினாலும் யாருக்காவது கட்டுப்பட்டு தானேம்மா ஆகணும்!”
அரிசி கழுவிக் கொண்டே அம்மா பதிலளித்தாள்.

“அது மெய்தான்! நீயா விரும்பி மனசார ஏத்துகிட்டா நீ எதுக்கும் கட்டுப்பட்டதா ஆகாது. வேற நிர்ப்பந்தத்துக்காக எதையாவது ஏத்துகிட்டா அது என்னிக்குமே ஒரு சுமைதான்.”

அண்செட்டியில் சின்னாற்றங்கரையின் ஓரத்தில் ஆலமரத்தடியில் கேட்ட அந்த வாசகம் இரண்டாவது முறையாக மீண்டும் நினைவு வந்தது.

‘விடுதலை பெறுக.’
அவன் குளித்து விட்டு வெற்றிவேலைப் பார்த்து வரக் கிளம்பினான்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.