Blog

  • யாஅல்லாஹ்!

    கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

    உள்ளத்து உணர்வினிலே- ஒருசிறு
    ஏக்கப் பெருமூச்சுவரும் – அந்த
    சுவாசக்  காற்றிலே – நிழலாய்
    நினைவுகள்வந்து நிழலாடும்- அந்தப்
    பாசத்தை தடவியபடியே – தோழமைகள்
    இதயத்தில் வந்தமரும்  – அங்கே
    நட்புத் துளியினாலே பாசம் –
    மனதினை மகிழ்ச்சியாக்கும் !

    அன்புத் தோழிகள் உறவும்   – இப்படிச்
    சொந்த மாகுமெனில்
    என்னை உயர்வெனப் – படைத்தாய்
    என்ன தகுதி யாஅல்லாஹ் ?
    அன்பு உயிர் நாடி  –  என்பதாயின்
    உயிரினில் இணைத்து விடு
    மனமெல்லாம் நிறைந்திட   – அன்புள்ளங்களை
    இன்பமுறச் செய்திடுவேன்!

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy
    “துலாபாரத் தட்டில் துளசி அமர,
      உலாபோறான் கண்ணன் உயரே, -விலாநோக,
      மூச்சடக்கி யோகம் முயல்வதேன் மூடனே,
      கூச்செறியும் பக்தியே காப்பு”…..கிரேசி மோகன்….
    Share
  • கருத்தரங்கிற்கு வாரீர்!

    கே. ரவி

    அனைவருக்கும் வணக்கம். என் இனிய நண்பர்கள் சிலர், சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியோடு இணைந்து, என் படைப்புகள் பற்றி ஒரு முழுநாள் கருத்தரங்கம் ஏற்பாடு செய்துள்ளார்கள். டாக்டர் வி.சி.குழந்தைசாமி, திரு.பி.எஸ். ராகவன், முனைவர் ஒளவை நடராஜன், இலக்கியச் செல்வர் குமரி அனந்தன், திரு.இல.கணேசன் போன்ற பெருமக்கள் முன்னின்று நடத்துமாறு இந்தக் கருத்தரங்கை வடிவமைத்துச் செயலூக்கம் தந்துவருவோர் பாலக்காடு டாக்டர் ராஜாராம் அவர்களும், புதுவை டாக்டர் அ.அறிவுநம்பி அவர்களும்.

    பிப்ரவரி மாதம் 21 சனிக்கிழமை அன்று கருத்தரங்கம் சென்னை எதிராஜ் மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. 20ஆம் தேதி வெள்ளிக் கிழமை மாலை கருத்தரங்கத்தின் தொடக்கவிழாவைச் சிறப்பாக அமைக்க இருக்கிறார்கள். அழைப்பிதழ் தயாரானதும் முகநூலிலும் இந்த வாட்ஸாப் தளத்திலும் பதிவேற்றம் செய்யப்படும்.

    கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்களை அன்புடன் வரவேற்கிறேன்.
    தங்கள் வருகையை 044 24350506 என்ற எண்ணில் பதிவு செய்து கொண்டால் அழைப்பிதழ் அனுப்ப வசதியாக இருக்கும். நன்றி.

    கே.ரவி

    என் படைப்புகள்:

    1. நமக்குத் தொழில் கவிதை
    2. உன்னோடு நான் (கவிதைகள்)
    3. மின்னற்சுவை
    4. சொற்களுக்குள் ஏறிக்கொள்
    5. இருபதாம் நூற்றாண்டு இயல்பியல் வரலாறு
    6. Tha verses of wisdom
    7. Justice vs Natural Justice
    8. Law, logic and liberty.
    9. வள்ளுவரின் வாயிலில்
    10. காற்று வாங்கப் போனேன் (சுயசரிதைக் குறிப்புகள்: வல்லமை மின்னிதழில் வெளிவந்த தொடர்)
    11. கவிதைக்குப் பொய்யழகு (இலக்கிய வேல் பத்திரிகையில் வெளிவந்த தொடர்)

    Share
  • குழல்வாய் மொழியாள் கொண்ட ஊடல்!

    மீனாட்சி பாலகணேஷ்

    காவியத்தலைவன் இவன் ஆடவர்களுக்குள் மிகவும் உயர்வானவன்; அவனுக்கு ஈடு இணை யாருமில்லை; சூரிய சந்திரர்கள் தேரிலேறி வலம் வந்து மலர்களைத் தூவிப் பணியும் குற்றாலமலையில் செம்பொன்னாலாகிய கோவிலினுள் உறைபவன். அவனை மலர்களைத் தூவி இவ்வுலகத்து அடியார்கள் போற்றுவார்கள்; அவன் திருநாமம் குற்றாலநாதன்.
    இவள் அவனுடைய உயிரானவள், உடலிலும் பாதி கொண்டவள், குழல்வாய் மொழியாள் எனும் காதல் நாயகி அவனிடம் ஊடல் கொண்டு விட்டாள்! காரணம் ஏன் தெரியுமா?

    z1
    கடல்முத்துத் தான் வெளேரென வெளுத்திருக்கும்; ஆனால் மழுப்படை ஏந்திய அவனுடைய பவள இதழ்கள் வெளுத்துள்ளனவாம். இதனால் அவனுடைய நாயகி தானே இதற்கு ஒரு காரணத்தைக் கற்பித்துக் கொண்டு, “இதுவும் உமக்கு ஒரு அழகு ஆகின்றது அல்லவோ,” எனச் சினந்து கூறி, அவன் வேறொரு பெண்ணுடன் சரசமாடி விட்டு வந்ததாக எண்ணி ஊடல் கொண்டு விட்டாள்.

    தேரேறுஞ் சூரியர்கள் வலம்புரியும் வல்மபுரியின் செம்பொற் கோயில்
    தாரேறு மலர்தூவித் தாலத்தார் பரவியகுற் றாலத் தாரே
    ஏரேறு கடல்பிறந்த கருணைநகை முத்துவெளுத் திருப்ப தல்லால்
    ஆரேறு மழுப்படையீர் பவளம்வெளுத் திருப்பதழ காகுந் தானே (1).

    ஊடலைத் தணிக்கத் தன் நாயகியிடம் மென்மையான சில மொழிகளைக் கூறுகிறான் குற்றாலநாதன். “காகங்கள் கூட அணுக முடியாத திரிகூட மலையின் அணங்கே! உனது கற்பின் திறத்தை வேதங்கள் எல்லாம் உயர்வாகக் கூறும்; அதனால் அது வெளுப்பாக உள்ளது (வெண்மையாய் பளிச்சிடுகிறது); உனக்கு மூத்தவனான உனது அண்ணன்- நீலமேக வண்ணனான கண்ணன்- பள்ளி கொண்ட பாற்கடலும் வெளுப்பாய் உள்ளது; யாம் இருக்கும் இமயமாம் பனிமலையும் வெளுப்பாகவே உள்ளது; விபூதிப் பூச்சினால் என் உடலெல்லாம் வெளுப்புத்தான்; ஆகவே அதரம் மட்டும் வெளுப்பாகாது என யாரால் சொல்ல இயலும்? நீ இதற்கெல்லாம் (அநியாயமாக) ஒரு காரணம் கற்பிக்கலாமோ?” எனப் பணிவாக அன்போடு கேட்கிறான்.

    காகமணு காததிரி கூடமலை யணங்கேயுன் கற்பின் சீர்த்தி
    யோகமுறை பணிந்தேத்தி யுயர்மறையெ லாம்வெளுப்பா யுனக்கு மூத்த
    மேகவண்ணன் கடல்வெளுப்பாய் யாமிருக்கும் மலைமுழுதும் வெளுப்பா யென்றன்
    ஆகமெலாம் வெளுப்பானா லதரம்வெளுப் பேறாதென்று ஆர்சொல் வாரே. (2)
    ***********************************************

    நாம் இன்னும் இந்த ஊடல் இலக்கியத்தைத் தொடர்ந்து படிக்கும் முன்பு இதைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம். இந்த அழகான ஊடல் சிற்றிலக்கியத்தை இயற்றியவர் யார் தெரியுமா?- திரிகூட ராசப்பக் கவிராயர்- ஆம்- நமக்குக் கொஞ்சு தமிழில் குற்றாலக் குறவஞ்சியைத் தந்தவர் தான் இந்தத் திருக் குற்றால ஊடல் என்னும் (உண்மையாகவே சிறிய – 20 பாடல்களைக் கொண்ட) இலக்கியத்தைத் தந்துள்ளார். குழல்வாய்மொழியம்மை குற்றாலநாதரிடம் ஊடல் கொண்டதாகப் புனைந்து இருவருக்குமிடையே நிகழும் வாக்குவாதங்களைச் சுவை மிகுந்த புராணக் கதைகளை இணைத்துத் தொகுத்து நமக்கு, ஏன் தமிழுக்கு ஒரு இலக்கிய நயமிகுந்த நூலை அளித்துள்ளார். இதுவும் ஒரு அந்தாதி போலவே அமைந்துள்ளது நூலுக்கு அதிகச் சுவை சேர்க்கிறது.

    சாமானிய மானிடக் காதலர்கள் தாம் ஊடுவார்கள்; ஏசிக் கொள்வார்கள்; கடவுளர்கள் ஊடலாமோ? இலக்கியத்திற்குச் சுவை சேர்க்க அவர்கள் ஊடுவது போலக் காட்டி, அதன் மூலம் வாக்குவாதங்களை அவர்களிடையே எழுப்பி, புராணக் கதைகளையும் அவர்கள் தம் திருவிளையாடல்களையும் கூறுவதுண்டு. மனிதர்களாகிய நாம் செய்வது போலவே பழித்துரை போலவும், அங்கதம் போலவும் கூறுவது உண்டு. அதில் இது ஒரு அருமையான சிறு நூல். எதிர்பாராத ஒரு சந்தர்ப்பத்தில் இந்த நூலைக் கண்ணுற்றதும் எனது ஆச்சரியத்திற்கும் மகிழ்ச்சிக்கும் எல்லையே இல்லை.
    யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!!

    இதோ! நான் ரசித்துச் சுவைத்த திரிகூட ராசப்பரின் தமிழை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நூலின் தலைவி- தலைவனிடம் திரும்பச் செல்லலாமா? அவர்கள் வாக்குவாதங்களைப் பார்க்கலாமே; அவர்கள் ஊடல் எவ்வாறு தீர்ந்தது எனத் தெரிந்து கொள்ள வேண்டாமோ? வாருங்கள்……
    ************************************************

    தன் தலைவன் இவ்வாறு சொன்ன பின்பும் குழல்வாய்மொழியாளின் ஐயம் தீர்வதில்லை. இதெல்லாம் எளிதில் தீர்ந்து விடும் ஐயங்களா? நன்கு, தீர விசாரித்து அல்லவோ தீர்த்துக் கொள்ளுதல் வேண்டும்?!! ஐயனிடம் கூறுகிறாள்:
    “திரிகூடத்து அண்ணலே! நீர் ஒருகாலத்தில் உமது உடலில் எனது முலைக்குறியும் வளைக்குறியும் பெற்றிருந்தவர் தானே! (பார்வதி தேவி அன்னை காமாட்சியாக அவதரித்த காலத்தில், மணலால் இலிங்கப் பிரதிமை செய்து ஈசனைப் பூசித்து வரும் பொழுது இறைவனார் அவளைச் சோதிக்க எண்ணி ஆற்றில் வெள்ளப் பெருக்கெடுக்கச் செய்தார். அப்போது அந்த இலிங்கத்தை உமாதேவியார் நீர்ப்பெருக்கினின்று காப்பாற்ற வேண்டி இறுகக் கட்டி அணைத்துக் கொண்டதால், அவளுடைய முலைத் தழும்பும், கரங்களில் அணிந்த வளைகளின் தழும்பும் அந்த இலிங்கத்தில் பதிந்தன- அதைத்தான் இங்கு கூறுகிறாள் குழல்வாய் மொழியாள்) இப்போது உமது திருமார்பில் மேலும் ஒரு மைக்குறி வந்தது எவ்வாறு? வாசனை மிகுந்த மஞ்சள் குறி வந்தது எவ்வாறாம்? வேறு எவளோ ஒருத்தி உம்மை வந்து தழுவிக் கொண்டாளோ? அவள் பெயரை எனக்குக் கூறும் ஐயா! உமது நெஞ்சம் முழுதும் வஞ்சம் தான் உடையவரோ நீர்?” எனச் சினத்துடன் ஆத்திரமாக உரைக்கிறாள் குழல்வாய்மொழியாள்.

    ஆரிருந்தும் தனித்திருந்தும் பிறைமவுலித் திரிகூடத் தண்ண லாரே
    சீரியபொன் முலைக்குறியும் வளைக்குறியும் பெற்றிருந்த தேவ ரீர்தாம்
    மார்பிலொரு மைக்குறியும் வாடைமஞ்சட் குறியுமன்று வரப்பெற் றீரே
    நேரிழைதன் பேருரையீர் வஞ்சம்தா னோஉமது நெஞ்சந் தானே. (3)

    நமது காவியத் தலைவன் குற்றாலநாதன் பாடு திண்டாட்டம் தான்! என்ன விடை பகருகிறான் எனக் காண்போமா?
    “என் நெஞ்சில் நீ இருக்கும்போது நான் எவ்வாறு இன்னொருத்தியை நினைக்க இயலும்? ஊஞ்சலாடும் குழைகளைக் காதிலணிந்த கயல்விழிப் பெண்ணே! குழல்மொழியே! எனது இந்த ஒரு சொல்லைக் கேளாய்! இது மைத்தீற்றலல்ல; நான் தலையில் அணிந்துள்ள திருச்சாந்து (நறுமண நெய்) வழிந்ததால் உண்டான கருமை நிறமாகும்; மஞ்சளாக நீ காண்பதும் என் தலையில் நான் அணிந்துள்ள அலர்ந்த கொன்றை மலர்களிலிருந்து உதிர்ந்த பூந்தாதுகள் தானே,” என விளக்க முற்படுகிறான்.

    நெஞ்சகத்தி னீயிருக்க நின்னையல்லா லொருவரையு நினைய லாமோ
    உஞ்சலிட்ட குழைதடவும் கயல்விழிப்பெண் குழல்மொழியே ஒன்று கேளாய்
    அஞ்சனத்தின் வண்ணமல்ல திருச்சாந்து வழிந்துநிற மதுவே யன்றி
    மஞ்சளைப்போ லிருந்தநிறம் பொன்னிதழித் தாதவிழ்ந்த மாற்றந் தானே (4).

    இதனாலெல்லாம் சந்தேகம் தீர்ந்து குழல்வாய்மொழியாள் தனது நாயகனை நம்பி விடுவதாக இல்லை: பின்னும் கூறுகிறாள்: “வெண்மையான காளை மீதேறி நீர் காட்சி தருவது எப்படியுள்ளது தெரியுமா குற்றாலத்துப் பெரிய மனிதரே! மாற்றுக் குறையாத வெள்ளி போன்ற மலை மீது (பனி படர்ந்த இமயமலை எனக் கொள்ளலாம்) பவளமலை பெருமையாக வீற்றிருப்பது போல உள்ளது. வெண்மையான கங்கை ஆறு (பெருகுவதால் வெள்ளையாய்க் காண்கிறது) உமது சடையில் இருக்கிறது; வெள்ளையாகப் பிறைச் சந்திரனும் கீற்றாக அங்கு உள்ளது; இப்படி எல்லாம் வெள்ளையும் சள்ளையுமாக இருக்க, நீங்களும் நேற்று வெள்ளை சார்த்திக் கொண்டு (நேர்த்தியாக உடுத்துக் கொண்டு) காட்சியளித்ததை இன்று உமது கண்கள் சிவப்பாகி விட்டதால் (உறக்கமின்மையால்?) நிறுத்தி விட்டீரே!” என்று கடிந்துரைக்கிறாள்.

    மாற்றுவெள்ளி மலையிலொரு பவளமலை கொலுவிருக்கு மகிமை போல
    வேற்றுவெள்ளை விடைமீதில் காட்சிதருங் குற்றாலத் தெந்தை யாரே
    ஆற்றுவெள்ளை சடையிருக்கக் கீற்றுவெள்ளை மதியிருக்க அதிக மாநீர்
    நேற்றுவெள்ளை சாத்தினதை இன்றுசிவப் பானகண்ணால் நிறுத்தி னீரே (5).

    குற்றாலநாதன் இப்போது உண்மையாகவே தடுமாற்றம் கொள்கிறான். என்னதான் சொல்லி இவளை சாந்தப் படுத்துவது? அவனுடன் ஊடுவதையே ஒரு முனைப்பாய்க் கொண்டு நிற்கிறாள் இவள்! அவனுக்கும் சலிப்பாக இருக்கிறது. கூறுவான்: “உன்னைத் தனியே விட்டுவிட்டு நான் என்றுமே பிரிந்து சென்றதில்லையே கண்மணியே! நீயே ஒருமுறை என்னைப் பிரிந்து பனிமலையில் சென்று நின்றாய் அல்லவோ? நாமும் அந்தத் தனிமையைப் பொறுத்துக் கொண்டு வடக்குத் திசையில் ஆலமரத்தினடியில் தனித்துத் தவத்தில் அமர்ந்திருந்தோம். அதனைக் கண்டு பொறுக்க மாட்டாமல் சிறுபிள்ளைத் தனமாகப் பண்பின்றி அன்றலர்ந்த மலர் அம்புகளைக் குவித்து ஏந்தி வந்தவனான கருமையான மேனி நிறம் கொண்ட மன்மதனை நாம் சினந்து மூன்றாம் கண்ணைத் திறந்து பார்த்ததனால் அல்லவோஅந்த விழி சிவந்தது ? வேறு எதனாலும் அல்ல எனக் காண்பாய் குழல் மொழியே, பூங்கொடி போன்றவளே!”

    நிறுத்தி நாம் பிரிந்ததில்லை நீபிரிந்து பனிவரைக்கே நிற்கு நாளில்
    பொறுத்துநாம் வடவாலின் கீழிருந்தோ மதுதனக்குப் பொறுப்பில் லாமல்
    சிறுத்துநாள் மலர்தூவிக் கறுத்துவந்த சேவகனைச் சிவந்த போது
    குறித்துநாம் பார்த்தவிழி சிவப்பன்றோ குழல்மொழிப்பூங் கொடிஅன் னாளே (6).

    தட்சனின் மகளான தாட்சாயணி தன் கணவரான சிவபிரானைத் தன் தந்தை (தட்சன்) அவமதித்ததால் சினம் கொண்டு, சினத்தீயில் தன்னை எரித்துக் கொள்கிறாள். பின்பு இமவானின் (பனிவரையின் மன்னன் அவன்) மகளாகப் பிறந்து வளர்கிறாள்; துணையைப் பிரிந்த சிவபிரானும் தனிமையில் தவம் செய்வாராயினார். தக்க பருவம் வந்ததும் தவம் செய்யும் சிவபிரானுக்குப் பணிவிடைகள் செய்ய, பர்வதராஜன் குமாரி பார்வதி, அவருடைய ஆசிரமத்தை அடைகிறாள். அதைத் தான் இங்கு கூறுகிறார் குற்றாலநாதர். அப்போது சூரபதுமன், தாரகன் எனும் அரக்கர்களின் தொல்லை பொறுக்காத தேவர்கள் உமையும் சிவனும் திருமணம் புரிந்து கொண்டால் அவர்களுக்குப் பிறக்கும் ஒரு ஒப்பற்ற மகனே இவ்வரக்கர்களை அழிக்க வல்லவனென எண்ணி, சிவனாரின் தவத்தைக் கலைக்க மன்மதனை அனுப்புகின்றனர். அவனும் பொறுப்பின்றி அவரை உடனே காமவயப்படுத்த வேண்டும் என்னும் பேராசையால் எல்லா மலர்களையும் ஒருசேரத் தூவுகிறான். இந்தப் பண்பற்ற செயலுக்காக அவனைச் சினந்து சிவபிரான் தம் நெற்றிக் கண் நெருப்பால் அவனை எரித்தார் என்பது புராணம். பின்பு பார்வதி சிவனாரைக் கணவராக அடைய விரும்பி, பனிமலையில் தனித்திருந்து கடுமையாகத் தவம் செய்கிறாள். இறுதியில் ஈசனும் அவளை மணந்து கொள்கிறார். அதையும் இங்கு குற்றாலநாதர் தன் நாயகி குழல்வாய்மொழி அம்மைக்கு நினைவு படுத்தி அருளுகிறார்.

    இதனாலெல்லாம் சமாதானம் அடைந்து விடுவாளா இந்த நாயகி? வேண்டுமென்றே பழைய கதைகளை நினைவு படுத்தி வீண்வாதம் புரிகிறாள் பாருங்கள்! “அந்த நாட்களில் நீர் வெறும் கோவணமும் புலித்தோல் மேலாடையும் அணிந்து கொண்டு சோம்பேறியாக ஆலமர நிழலில் தான் வாழ்ந்தும் தூங்கியும் பொழுதைக் கழித்து இருந்தீர் என்பது மறந்து போயிற்றோ? என்னைத் திருமணம் செய்து கொண்டதன் பின்னரே நல்ல உடைகளும் இருப்பிடமும் பெற்றுள்ளீர் தெரியாதோ? பிறகு இந்நாட்களில் நல்ல சலவை உடைகள் அணிந்து பூமாலை எல்லாம் அணிந்து கொண்டு தினமும் மகிழ்ச்சியாக இருந்தால் இப்படியெல்லாமா உமக்கு எண்ணம் செல்லும்? சங்கம் வளர்த்த நீண்ட வீதிகளைக் கொண்ட மதுரை மாநகரத்தவரே! பொலிவாகத் திகழ்பவர்கள் (இளம் மங்கையர்கள்) இன்னும் சில பேரும் கூட உமக்கு வேண்டாமோ சொல்லுமையா!” என்கிறாள்.

    அந்நாளிற் கோவணமும் புலித்தோலும் வேடமுமா யாலின் கீழே
    பன்னாளும் தூங்கினநீ ரென்னாலே மணக்கோலப் பதம்பெற் றீரே
    இந்நாளிற் சலவைக்கட்டிப் பூமுடித்துத் தினஞ்சுகித்தா லிதுவோ செய்வீர்
    மின்னாரு மினிச்சிலபேர் வேண்டாவோ நீண்டசங்க வீதி யாரே. (7)

    ‘தூங்கின நீர்’ என்பதற்கு அறிதுயில், யோகநித்திரை என்பது மற்றொரு பொருள். சங்கம்- வீணர்கள் கூட்டம் எனவும் ஒரு பொருள் கொள்ளலாம்!

    அம்பிகையைக் கலியாணம் செய்துகொள்வதற்கு முன்னே தூங்கித் தூங்கிக் காலத்தைக் கழித்தான். அம்பிகையைத் திருமணம் செய்து கொண்டபின் வந்த ‘ஆக்கத்தால்’ (செல்வச் செழிப்பால்) ‘சோம்பர்’கள் கூட்டத்தில் கழிக்கின்றான். முயற்சியின்றிச் செல்வம் வந்தால், ‘அற்பனுக்குப் பவிஷு வந்தால்’ அர்த்தராத்திரியிலும் குடைப்பிடிக்க வீணர் கூட்டம் வேண்டாவோ என ஏசுகின்றாள்.

    இப்போது குற்றாலநாதருக்குச் சிறிது கோபம் வரத்தான் செய்கிறது. அளவுக்கு மீறி அல்லவா அவரைக் குழல்மொழியாள் ஏளனம் செய்கிறாள்? உன் குடும்பக் கதை மறந்து போய் விட்டதோ எனத் திரும்பக் கேட்கிறார். “குழல் மொழியாளே! கயல்கண் மாதே! உன் அண்ணன் இராமன் மரவுரியையும் மான்தோலையும் தரித்துக் கொண்டு அரிய தவ வேடம் தாங்கி அந்த நாட்களில் காடுகளில் எல்லாம் அலைந்து திரிந்தான்; அதன் பிறகு அயோத்தி சென்று சீதையுடன் கூடியிருந்து உலகை ஆண்டான்; அவன் இங்ஙனம் செய்ததை எல்லாம் கேள்விப்பட்டிருந்தும் இவ்வாறு நீ என்னிடம் கூறலாகுமோ?” என்கிறான் நாதன்.

    வீதியாய் மரவுரிகிட் டினாசம்பூண் டரியதவ வேடம் தாங்கி
    ஆதிநாட் கான்தோறு மலைந்துதிரிந் தானதுபோ யயோத்தி மேவி
    மாதுசீ தையைப்புணர்ந்து பாராண்ட வுங்களண்ணன் மார்க்க மெல்லாம்
    காதுகேட் டிருந்துமிது சொன்னதென்ன குழல்மொழிப்பூங் கயல்கண் மாதே. (8)

    அவளுடைய அண்ணனைப் பற்றிக் குறைவாகக் கூறினால் கோபம் வருமா வராதா? இன்னுமே சினம் கூடுகிறது குழல்மொழியாளுக்கு! கூறுகிறாள்:

    “பிட்சாடனராகித் (தாருகாவனத்து ரிஷிபத்தினிப்) பெண்களிடம் சென்று பிச்சை கேட்டீர்! அவர்களும் உம்மழகில் மயங்கி, துகிலும் வளையும் நெகிழ வந்து பிச்சையிட்டனராமே! நீர் பின்பு பரம சாது போலப் புலித்தோலை உடுத்திக் கொண்டீர்! (அபிசார வேள்வி செய்து முனிவர்கள் ஏவிய புலியைக் கொன்று அதன் தோலையும் உடையாக உடுத்துக் கொண்டீர்). பிறைச் சந்திரனான சோமனைத் தலையில் மேல் அணிந்து கொண்டீர் (சோமன் என்பது பஞ்சகச்சமாக ஆடவர் இடையில் அணியும் ஆடையையும் குறிக்கும்; இங்கு ‘இடையில் அணிவதைத் தலையில் அணிந்தீரே’ எனப் பரிகாசமாகக் கூறுவதாக அமைந்தது). பின்பு தோன்றிய பாம்பு ஒன்றைப் பிடித்துக் காதில் ஆபரணமாகப் பூண்டீர்! (அபிசார வேள்வியில் ரிஷிகள் உம்மீது ஏவிய பாம்பைப் பிடித்துக் காதில் அணிந்து கொண்டீர்!) போதாக்குறைக்குக் கழுத்தில் நஞ்சை (விஷத்தை) வைத்துக் கொண்டீர்! (பாற்கடல் கடைந்த போது பாம்பு கக்கிய ஆலகால நஞ்சை சிவபிரான் ஏற்று உண்ண, அம்மை அவரது குரல்வளையைத் தடவி அதை அங்கேயே நிலைத்திருக்கச் செய்கிறாள்). பெருத்த பேய்களைத் துணையாகக் கொண்டீர்! இதனால் உம்மைப் போல ஒரு பித்தர் எந்த உலகிலும் உள்ளாரோ குற்றாலத்து உறையும் அண்ணலே!” என ஏளனமும் சினமுமாக மொழிகிறாள் குழல்வாய்மொழியாள்.

    இது மேலெழுந்த வாரியாகப் பார்ககத்தான் ஏளனமாகக் கூறுவது போலக் காணப்படுகிறது. ஒவ்வொன்றும் அண்ணலின் புகழை அல்லவோ பாடுகிறது? நிந்தா ஸ்துதி பாடுவதில் குழல்வாய் மொழியாள் போலும் காதலிகளும் வல்லமை பெற்றவர்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி!

    மாதர்பாற் பலியிரந்தீர் பலியிடப்பைந் தார்துகிலும் வளையும் கொண்டீர்
    சாதுவாய்த் தோலுடுப்பீ ரரையிலுள்ள சோமனையுந் தலைமேற் கொள்வீர்
    காதிலே பாம்பையிட்டீர் கழுத்திலே நஞ்சையிட்டீர் கனபேய் கொண்டீர்
    ஆதலா லுமைப்போலும் பித்தருண்டோ குற்றாலத் தண்ண லாரே (9)

    (ஊடல் இன்னும் தொடரும்)

    Share
  • பாரிலே பிறப்பான்….!

    -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

    மகிமை மிக்கதோர் மானுடப் பிறவி 
    அணுவிலும் நுண்ணிய கருவினில் இருந்து 
    அன்னை வயிற்றினுள் அடக்கமாய் வளர்ந்து 
    பத்துத் திங்களில் பாரிலே பிறப்பான்….!

    இருண்ட சூழலை மாற்றிய பின்னே 
    ஒளி உலகத்தை உவப்புடன் பார்க்க 
    விழிகள் திறப்பான் விருப்புடன் கை கால் 
    ஆட்டி மகிழ்ந்து அகிலத்தை ரசிப்பான்…..!

    தத்தித் திரிந்து தளர்நடை பயின்று 
    பள்ளிப் பருவ வாசல் ஏறி 
    இளைஞனாகி என்றும் வனப்புடன் 
    உலக அரங்கில் நடிப்பினைத் தொடர்வான்….!

    குருடனாய்,செவிடனாய் குடிக்கு அடிமையாய் 
    அறிஞனாய்க் கலைஞனாய் ஆயிரம் வேஷம் 
    ஏதோ ஒன்றை இட்டுக் கொள்வான்
    எல்லாம் மனம் போல் இகத்தில் செய்வான்….!

    முதுமை தோன்றுமே நரைகள் தாவுமே,
    பிள்ளையைப் பெற்றவன் பேரனைக் காண்பான் 
    போகப் போக நடை தளர்ந்திடுவான் 
    பூமியில் ஒரு நாள் உறுதியாய் இறப்பான்…..!

     

    Share
  • அச்சம் என்பது மடமையடா…

    கவிஞர் காவிரிமைந்தன்.

     

    அச்சம் என்பது மடமையடா1

     

    எழுச்சிமிக்க பாடல் ஒன்றுதான் திரைப்படத்தின் துவக்கம் என்று சொன்னால் கண்முன்னே வந்து நிற்பது மன்னாதி மன்னன். நடேஷ் ஆர்ட்ஸ் பிக்சர்ஸரின் தயாரிப்பில் கவியரசு கண்ணதாசன் கதை, வசனம், பாடல்கள் என பொறுப்பேற்ற படமாகும். மக்கள் திலகம் – குதிரைகள் பூட்டப்பட்ட வாகனத்தில் பயணம் செய்தபடி பாடுகிறார்! அந்தக் குளம்படிச் சத்தம் இசையமைப்பை இயற்கையானதாக்கிட டி.எம்.செளந்திரராஜன் அவர்களின் கம்பீரக் குரலில் காலத்தை வென்றுநிற்கும் பாடல்! மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி.. தமிழ் உலகம் உள்ளவரை போற்றப்படுகிறார்கள் என்பதற்கு சான்று! சேர சோழ பாண்டியர்தம் பெருமைகளைச் சொல்லி..

    உணர்வைத் தட்டியெழுப்பும் உவமைகளைக் கையாண்டு.. தன்மானம் காக்கும் தனயனின் பரம்பரை நமதென முழங்கி.. வீர மரபில் விளைந்தவர்கள் நாம் என முரசுகொட்டும் பாடல்! ஓங்கி ஒலிப்பது மட்டுமின்றி ஒவ்வொரு வரியிலும் வீரத்தின் வரலாறு! திராவிடத்தின் பெருமைதனை உலகுக்குச் சொல்ல இந்த ஒரு பாடல் போதுமே!!

    காலத்தை வென்றவர்கள் வரிசையிலே கண்ணதாசன், எம்.ஜி.ஆர். போன்றோர் நிற்பதைக் காண்கிறோம். அவர்கள் சராசரி வாழ்க்கையைக் கடந்து தங்கள் சாதனைகளால் புகழ்வானில் நிலைத்ததையும் அறிவோம்!

    வாழ்ந்தவர் கோடி.. மறைந்தவர் கோடி..
    மக்களின் மனதில் நிற்பவர் யார்..
    என்கிற இப்பாடல் வரிகளுக்கு இவர்களே இலக்கணமாய்த் திகழ்கிறார்கள்.

    ஆறிலும் சாவு.. நூறிலும் சாவு..
    தாயகம் காப்பது கடமையடா..
    இதில் ஆறிலும் சாவு.. நூறிலும் சாவு என்பது ஆறுவயதிலும் மரணம் வரலாம்! நூறு வயதிலும் மரணம்என்பதே குறிப்பென மரணத்தின் நிச்சயத் தன்மை வரையறுக்கப்பட்டிருக்கிறது!

    மகாபாரதத்தில் – பாண்டவர்கள் ஐவரோடு ஆறாவதாக நின்றாலும் கர்ணனுக்கு மரணம் நிச்சயம்! கெளரவர்கள் நூறுபேரோடு நின்று போரிடினும் மரணம் நிச்சயம் என்றும் இதற்கு பொருள் கண்டபோது வியந்துபோனேன்.

    பல்லவியாய் அமைந்த நான்கு வரிகளையும் குழந்தைகள் நெஞ்சில் பதித்து வையுங்கள்! நாளைய தலைமுறை வீரம், மானம் மிக்கதாய் விளங்கும் என்பதில் ஐயமில்லை..

    அச்சம் என்பது மடமையடா ..
    அஞ்சாமை திராவிடர் உடமையடா.. ஆ..ஆ..ஆ..
    அஞ்சாமை திராவிடர் உடமையடா
    அச்சம் என்பது மடமையடா ..
    அஞ்சாமை திராவிடர் உடமையடா
    ஆறிலும் சாவு நூறிலும் சாவு
    தாயகம் காப்பது கடமையடா
    தாயகம் காப்பது கடமையடா
    அச்சம் என்பது மடமையடா ..
    அஞ்சாமை திராவிடர் உடமையடா

    1999ஆம் ஆண்டு யாம் நடத்திய பாங்கான பட்டிமன்றத்தில் தருமபுரியிலிருந்து அழைத்து வரப்பட்ட 65வயது இளையவர் இப்பாடலைப் பாடியபோது.. கூடியிருந்த மக்கள் அனைவரின் இரத்த நாளங்கள் சூடாகின. நரம்புகள் முறுக்கேறின. அத்தனை அற்புதமாய் பாடிய அவரை.. பம்மல் நல்லதம்பி அவர்கள் மெச்சிப் புகழ்ந்து.. எங்களை எல்லாம் 1960களுக்கே அழைத்துச் சென்றுவிட்டீர் என்றது நினைவுக்கு வருகிறது..

    எல்லாவற்றையும் விட ஒரு ரகசியம்.. புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மல் ஒவ்வொரு முறை காரில் பயணம் செய்யும்போதும் தவறாமல் இப்பாடல் ஒலிக்குமாம்! .. கண்ணதாசன் என்னும் காவியத்தில் இதுவும் ஒரு பக்கம்!

    காணொளி: http://youtu.be/KnRLGNYrCh0

     

    படம்: மன்னாதி மன்னன் (1960)
    பாடல்: கண்ணதாசன்
    இசை: எம். எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
    குரல்: டி. எம். சௌந்தரராஜன்

    _______________________

    அச்சம் என்பது மடமையடா ..
    அஞ்சாமை திராவிடர் உடமையடா.. ஆ..ஆ..ஆ..
    அஞ்சாமை திராவிடர் உடமையடா
    அச்சம் என்பது மடமையடா ..
    அஞ்சாமை திராவிடர் உடமையடா
    ஆறிலும் சாவு நூறிலும் சாவு
    தாயகம் காப்பது கடமையடா
    தாயகம் காப்பது கடமையடா
    அச்சம் என்பது மடமையடா ..
    அஞ்சாமை திராவிடர் உடமையடா

    கனகவிஜையரின் முடிதலை நெறித்து
    கல்லினை வைத்தான் சேர மகன்..ஆ..ஆ
    கனகவிஜையரின் முடிதலை நெறித்து
    கல்லினை வைத்தான் சேர மகன்
    இமய வரம்பினில் மீன் கொடியேற்றி
    இசை பட வாழ்ந்தான் பாண்டியனே
    அச்சம் என்பது மடமையடா ..
    அஞ்சாமை திராவிடர் உடமையடா

    கருவினில் வளரும் மழலையின் உடலில்
    தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை.. ஈ..ஈ..ஆ..
    கருவினில் வளரும் மழலையின் உடலில்
    தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
    களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்
    காத்திட எழுவான் அவள் பிள்ளை
    அச்சம் என்பது மடமையடா ..
    அஞ்சாமை திராவிடர் உடமையடா

    வாழ்பவர் கோடி மறைந்தவர் கோடி
    மக்களின் மனதில் நிற்பவர் யார்
    வாழ்பவர் கோடி மறைந்தவர் கோடி
    மக்களின் மனதில் நிற்பவர் யார்
    மாபெரும் வீரர் மானம் காப்போர்
    சரித்திரம் தனிலே நிற்கின்றார்
    அச்சம் என்பது மடமையடா ..
    அஞ்சாமை திராவிடர் உடமையடா
    ஆறிலும் சாவு நூறிலும் சாவு
    தாயகம் காப்பது கடமையடா
    தாயகம் காப்பது கடமையடா
    அச்சம் என்பது மடமையடா ..
    அஞ்சாமை திராவிடர் உடமையடா

    அச்சம் என்பது மடமையடாTHREETMSஅச்சம் என்பது மடமையடா2

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    பீஷ்மரின் நோயென்ற மரணத்தில் பிறந்தது நமது பிறவிப்பிணி தீர்க்கும்
    “விஷ்ணு சகஸ்ரநாமம்” என்ற மருந்து….பாரத ‘கதாம்ருதம்’ இதுதான்….

    crazy

    “கதாமகன் பாகவதக் கண்ணன் மடியில்,
    பிதாமகர் பீஷ்மர் புலமைக், -கதாம்ருத,
    மாய்ப்பிறந்த ஆயிரம்நா மாக்களைப் பாடிட,
    நோய்மருந்(து) ஆச்சு நமக்கு”….கிரேசி மோகன்….

    Share
  • இறைவனடி சேர்ந்தார் விசாலம் அம்மையார்

    visalam

    நம் வல்லமையின் நீண்ட கால படைப்பாளரும், வாசகருமான அன்புத் தோழி திருமதி விசாலம் இராமன் அவர்கள் நேற்று (ஜனவரி 26, 2015) இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அவரது பிரிவால் வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கு நம் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். அம்மையாரின் ஆன்மா சாந்தியடைய மனமாரப் பிரார்த்திக்கிறோம்.

    என்னைப் பற்றி: விசாலம்
    http://www.sify.com/sifyimagine/fullstory.php?id=14607928

    நான் பிறந்ததிலிருந்து பம்பாய் வாசி. திருமணம் ஆன பின் தில்லிவாசி. நான் கற்றுக்கொண்ட கலைகள்: பாட்டு வயலின், ஹார்மோனியம்; சிறிது காலம் நாட்டியம். பாட்டிலும் வயலினிலும் முன்னுக்கு வந்து, என் அக்கா கலயாணி பாலகிருஷ்ணா பாட, என் வயலின் கச்சேரி எப்போதும் இருக்கும். மற்ற கலைகள், படங்கள் வரைவது, நாடகங்களில் நடிப்பது.

    சிறு வயதிலிருந்தே தமிழ் மீது மிகவும் ஈடுபாடு ஆனதால் எப்படி தேர்ச்சி பெறலாம் என்று யோசித்து பம்பாய் தமிழ்ச் சங்கத்திலும் பாரதி கலாமன்றத்திலும் அங்கத்தினர் ஆனேன். நிறையப் புத்தகங்கள் படித்துக் கொஞசம் அறிவு வந்தது. ஏதோ சிறு அணிலும் அணை கட்ட ராமருக்கு உதவியது போல், எழுத்தின் மேல் ஆர்வம். பல கவிதைகள் ஆத்ம திருப்திக்கு எழுத ஆரம்பித்தேன். ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் எழுதினேன்.

    பரிசுகள்… பேச்சுப் போட்டி, எழுத்துப் போட்டியில் நிறைய வந்துள்ளன. பாராட்டியவர்கள்… திருவாளர்கள் கி.வா.ஜகன்னாதன், கி.ஆ.பெ.விசுவநாதம், நாடோ டி, கல்கி, ஆனந்தி ராமசந்திரன், சுபஸ்ரீ முதலியவர்கள் என்னை ஊக்குவித்து வெற்றிப் படிகளில் ஏற வைத்தனர். இவர்கள் போல் பல பேர்கள். அவர்களை நான் இன்றும் வணங்குகிறேன். நாடகம் என்றால் எனக்கு உயிர். பல நாடகங்கள் லேடீஸ் கிளப் வழியாக நடித்திருக்கிறேன். ஹிந்தி மொழியில் ஆர்வம் கொண்டு, ராஷ்ட்ரபாஷா ரத்னா வரை படித்து மஹாராஷ்டிராவிலேயே இரண்டாவது இடம் வந்து மெடலும் புத்தகப் பரிசும் வாங்கின நாள் எனக்கு இன்றும் பசுமையாக இருக்கிறது.

    என் ஆசிரியர் தொழில் ஆரம்பித்தது என் 16 வயதில். அது தான் என்னை முழுவதுமாக ஆக்கிரமித்துக்கொண்டது. அது தான் என் golden period. மற்ற பொழுதுபோக்குகள்: astrology, numerology, palmistry, namalogy and vastu. என் அப்பா தான் என் குரு என் 45 வயதிலிருந்து கற்றுக்கொண்டவை… reiki grandmaster, pranik healing, magnified healing, gayatri healing, siddha sakthi, alpha mind power…., art of living.., isha yoga, mnavalakalai…, flower therapy, homeopati and sujok therapy (accupressure).

    தற்போது ரேக்கி கிளினிக்கில் ஹீலிங் செய்து வருகிறேன் ஆன்மீகத்தில் மிகவும் ஈடுபாடு, சமூக சேவையும் முடிந்த வரை செய்கிறேன் அன்னையும் பாபாவும் என் மூச்சில் எப்போதும் இருக்கிறார்கள். என் வாழ்க்கை முழுதும் நிறைய miracles. அந்த இறைச் சக்தியால் தான் எனக்கு எல்லாமே நடந்து வருகிறது. நான் அன்பினால், அன்புக்காக, அன்புடன் வாழ்கிறேன். அன்பே கடவுள்! அன்பையே அள்ளித் தருவோம் வாருங்கள்.

    என் வலைப் பதிவு: http://meerambika.blogspot.com

    தமிழ் சிஃபியில் அவர் எழுதிய சில கட்டுரைகள் வருமாறு:

    http://www.sify.com/sifyimagine/fullstory.php?id=14607931
    http://www.sify.com/sifyimagine/fullstory.php?id=14722026
    http://www.sify.com/sifyimagine/fullstory.php?id=14729138
    http://www.sify.com/sifyimagine/fullstory.php?id=14736647

    சென்னை ஆன்லைனில் வெளிவந்த அவரது கட்டுரைகள் சில இங்கே – http://tamil.chennaionline.com/tamilcolumn/index2.aspx?CatID=visal

     கடைசியாக 2015 ஜனவரி 19 அன்று நம் வல்லமையில் அவர் எழுதிய படைப்பு வெளியாகியுள்ளது. இது வரை வல்லமையில் அவர் எழுதி 187 ஆக்கங்கள் வெளியாகியுள்ளன. அவை இங்கே – http://www.vallamai.com/?tag=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D

    தகவல் – திரு அண்ணாகண்ணன்

    திரு ராமன் அவர்களை 8695969237 என்கிற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்
    வீட்டு விலாசம் H 2015, 5 th Street, 12 th main Road, Anna Nagar West Chennai

    Share
  • இந்திய குடியரசு தின விழாவில் அமெரிக்க அதிபர்!

    பவள சங்கரி

    தலையங்கம்

    1

    இருபெரும் ஜனநாயக நாடுகளின் கைகோர்ப்பு தினம் இன்று. டில்லி ராஜ்பாத்தில் நடைபெற்ற இந்தியாவின் 66 வது குடியரசு தின விழாவிற்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அழைக்கப்பட்டுள்ளார். இந்திய குடியரசு தின விழாவில் அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் அழைக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு , அணுசக்தி, இரு நாடுகள் இடையே வர்த்தகம், பருவநிலை மாற்றம், தொழில்நுட்ப பரிமாற்றம் உள்ளிட்ட விவகாரங்களில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து மாநில பாரம்பரிய கலாச்சார கலை நிகழ்ச்சிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள், நடனம் போன்றவற்றை ஒபாமா, மோடி இருவரும் கண்டு களித்தனர். இதில் முதன்முறையாக முப்படையான ராணுவம், கப்பற்படை, விமானப்படை ஆகியவற்றில் பெண் படைப்பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    25-1422174041-obama-indiad-600

    இன்றைய அணிவகுப்பு மரியாதையின்போது பெண் அதிகாரி ஒருவர் தலைமையில் அமெரிக்க அதிபருக்கு மரியாதை கொடுக்கப்பட்டது அனைவரையும் கவர்ந்ததோடு, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் நம் இந்தியப் பிரதமர் மோடி என்பதையும் உறுதி செய்தது . இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் பூஜா தாக்கூர் அவர்கள் தலைமையில் நம் இந்திய வீரர்கள் அணிவகுப்பு மரியாதையில் கலந்து கொண்டதன் மூலம், அணிவகுப்பு மரியாதைக்கு பெண் அதிகாரி ஒருவர் தலைமை தாங்கியது இதுவே முதல் முறை என்ற வரலாற்றுச் சிறப்பும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    26-1422272498-a-marching-contingent-at-th

    ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பினர் தகுதியை இந்தியாவிற்குக் கிடைக்க அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என்றும் ஒபாமா தெரிவித்துள்ளார். அணு சக்தி பயன்பாட்டிலிருந்த தடையை நீக்கியதாக அறிவித்துள்ளது, இன்றைய நம்முடைய தேவைக்கு பயனுள்ளதோர் அறிவிப்பு. அமெரிக்க மண்ணில் மின்வெட்டு, மின்தடை என்பதே இல்லை என்பதைப்போன்ற நிலை நம் இந்திய மண்ணிலும் ஏற்படுத்துவதற்குரிய இந்த அறிவிப்பை மனமார வரவேற்கும் இதே நேரத்தில் நம் அறிவியல் விஞ்ஞானிகளின் நிலைப்பாட்டை அறிய வேண்டியதும் அவசியம். கிழக்குக் கடற்கரையில் கொட்டிக்கிடக்கும் தோரியம் சொரிந்த மணல்களிலிருந்து அணு சக்தியை எடுத்தால் இதைவிட குறைவான செலவில் அணு சக்தி பெற முடியும் என்று கூறிய முன்னாள் குடியரசுத் தலைவரும், அறிவியல் விஞ்ஞானியுமான மேதகு அப்துல் கலாம் அவர்களுடைய கருத்திற்குரிய நிலைப்பாடு மற்றும் நம்முடைய ஆய்வரங்கங்களில் இவைகள் ஆய்வு செய்யப்படுகின்றனவா என்பதும் தெரியவில்லை. தோரியம் சொரிந்த கடற்கரை மணல்கள் அந்நிய நாட்டினரால் எதற்காக கடத்தப்பட வேண்டும் என்பதும் ஆய்விற்குட்பட்டது.

    அமெரிக்காவுடனான பாதுகாப்பு உறவுகள் வணிக ஒப்பந்தங்கள் நம் நாட்டின் முன்னேற்றம் கருதி, வாழ்த்தி வரவேற்கப்படவேண்டியவையே. நம் பழம்பெருமையை மட்டுமே பேசுவதை விடுத்து செயல்வடிவில் நம் வளர்ச்சியைக்கூட்டும் விதமாக அந்நிய மண்ணில் நம் முதலீடுகளை வெகு விரைவில் செய்யவேண்டியதும் அவசியம். அமெரிக்காவின் பெருமுயற்சியால் கண்டுபிடிக்கப்பட்ட எரிவாயுவினால் அவர்களுடைய பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதி குறைந்ததால் உலகளாவிய வகையில் அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் சீர்பெற்று வருகிறது. நமது இயற்கை எரிவாயுக்கள் பல கிணறுகளிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டும் இன்னும் செயல்பாட்டிற்குக் கொண்டுவராமல் இருப்பதும் வருத்தத்திற்குரிய விசயம். இதனை சரிசெய்யும் வகையில் நம் இந்தியப் பொருளாதாரம் மேலும் பன்மடங்கு சீர்படும் . அமெரிக்காவில் ஒரு லிட்டருக்கு முப்பது உரூபாய் அளவிற்கு பெட்ரோல் விற்பனை செய்ய முடிகிறது எனும்போது நமது நாட்டில் மட்டும் அதன் விலை இரட்டிப்பாக இருப்பதன் காரணமும் புரியவில்லை. இந்தியாவிலேயே முன்பு கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 110 டாலருக்கு  இருந்தபோது, பெட்ரோல் லிட்டருக்கு 50 ரூபாய்க்கு விற்கப்பட்டது. பாதிக்கும் கீழே, அதாவது 48 டாலருக்கு வந்திருக்கும்போதும், ஏன் இவ்வளவு விலையேற்றம்? நமது இந்தியாவிலேயே கிடைக்கக்கூடிய இயற்கை எரிவாயுவை அனைத்துப் பேருந்துகள் மற்றும் தொடர் வண்டிகளுக்கும் பயன்படுத்தினால் நம் பொருளாதாரத்தில் மிகப்பெரும் எழுச்சி ஏற்படுவதோடு , ‘தரமே, தாரக மந்திரம்’ என்ற வகையில் இந்தியப் பொருட்களின் தயாரிப்பு இருந்தால் நமது பாரதப் பிரதமரின் , ‘மேக் இந்தியா’ என்ற வாசகமும் உயிர் பெறும். . அறிவியல் வளர்ச்சியின் பயன்கள் மக்களை முழுமையாகச் சென்றடைய வேண்டும் என்று இந்த குடியரசு தின நாளில் உறுதி கொள்வோம். வெல்க பாரதம்!

    படங்களுக்கு நன்றி

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    ஜனவரி 26, 2015

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு முனைவர் மு.பழனியப்பன் அவர்கள்

    palaniappan fb

    வல்லமை இதழின் வாசகர்களுடன் கடந்த நான்கு ஆண்டுகளாகத் தனது இலக்கிய மற்றும் ஆய்வுக் கட்டுரைகளைப் பகிர்ந்து கொண்டு, சிறந்த இலக்கிய விருந்தளிக்கும் முனைவர் மு.பழனியப்பன்  அவர்களை இவ்வார வல்லமையாளராக அறிவித்து வல்லமைக் குழுவினர் பாராட்டி மகிழ்கிறோம். கடந்த திங்கட்கிழமையன்று வல்லமை இதழில் வெளிவந்த “ஆழியாற்றின் கரையினில் கவித்தவம் இருக்கும் கலைச் சிற்பி”  என்ற கட்டுரைக்காக இவர் வல்லமையாளராக அறிவிக்கப்படுகிறார்.

    புதுக்கோட்டை மன்னர் கல்லூரி, தமிழ் இணையப் பல்கலைக்கழகம், சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி போன்றவற்றில் பணியாற்றிய முனைவர் மு.பழனியப்பன்அவர்கள், தற்போது திருவாடானை – அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராக தமிழ்த்துறையை முன்னடத்திச் செல்வதுடன் மேலும் பல தமிழ்ப்பணிகளையும் ஆற்றி வருபவர். வள்ளுவனிடமும், கம்பனிடமும் ஆழ்ந்த பற்று கொண்ட மு.பழனியப்பன் ஆண்டுதோறும் நடைபெறும் காரைக்குடி கம்பன் விழாக்கள், உலகத் திருக்குறள் பேரவையின் மாநாடுகள், அழகப்பா பல்கலைக்கழகமும் தமிழ் மரபு அறக்கட்டளையும் இணைந்து வழங்கிய கருத்தரங்கம், சிற்பி பவளவிழா ஆகியவற்றின் ஒருங்கிணைப்பாளராகவும் தன்னார்வத் தொண்டாற்றி வருபவர். தமிழ் இணையப் பயிலரங்கங்களை நடத்துவதிலும், “ஆய்வுச் சுற்றம்” என்ற தமிழாய்வு இணைய சஞ்சிகையையிலும் பங்காற்றி வருகிறார்.

    new

    இவர் இலக்கியப் பங்களிப்பிற்குச் சான்றாகப் பத்து நூல்களை வழங்கியதுடன், பற்பல கட்டுரைகளையும் இணைய இதழ்களான வல்லமை, திண்ணை, ஜியோதமிழ் ஆகிய இதழ்களில் எழுதி வந்துள்ளார். இவர் எழுதியிருக்கும் “விடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்” என்ற நூலிற்காகப் பெருமுயற்சி செய்து 43 நாவல்களைத் தேடிப் பிடித்து, இந்தப் புத்தகத்திற்காக ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளார். இந்நூலில் இவர் நாவலாசிரியர்களின் படைப்புகளைப் பட்டியலிட்டு, அவர்களது பங்களிப்பையும் பதிவு செய்து, நாவல்களின் கதைச் சுருக்கங்களையும் தொகுத்தளித்திருக்கிறார். இந்நூல் சிறந்த ஆய்வு நூலாகப் பாராட்டப் பட்டதுடன், சாமானியர்களும் படித்துத் தெரிந்துகொள்ள உதவும் சுவாரசியமான தகவல் களஞ்சியம் எனவும் பாராட்டு பெற்றுள்ளது.

    கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக இணைய இதழ்களிலும், இணையத்தமிழ்க் குழுமங்களிலும், பல்கலைக்கழக கருத்தரங்கங்களிலும் தனது இலக்கிய மற்றும் ஆய்வுக் கட்டுரைகளைப் பகிர்ந்து வந்துள்ளார். தமிழிலக்கியக் கட்டுரைகள், நூலாய்வுக் கட்டுரைகள், தமிழ்மொழி வளர்ச்சி, இணைய மற்றும் கணினித் தமிழ் வளர்ச்சி, சமூகவியல் கட்டுரைகள் போன்ற பிரிவுகளில் கட்டுரைகள் பல வழங்கியுள்ளார்.

    வல்லமையில் இம்முறை இவர் வழங்கிய நூலறிமுகம்/நூலாசிரியர் அறிமுகம் கட்டுரையான “ஆழியாற்றின் கரையினில் கவித்தவம் இருக்கும் கலைச் சிற்பி” கட்டுரையில், சொல்லில் கலை வண்ணம் கண்டுக் கவிதைச் சிற்பங்களைச் செதுக்கும் வானம்பாடிக் கவிஞர்… மரபில் தொடங்கிப் புதுக்கவிதையில் பூத்த பழமை மாறதா புதுப்பாவலர் …. பேராசிரியர், கவிஞர், காவிய ஆசிரியர், திறனாய்வாளர், ஆய்வு நெறியாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர், சாகித்திய அகாடமி விருதாளர், சாகித்திய அகாடமி தமிழ்ப்பகுதிப் பொறுப்பாளர், ஆண்டுதோறும் வாழ்நாள் சாதனைக் கவிஞர்களை, புதுக் கவிஞர்களைப் பாரட்டும் சீரிய நெஞ்சர் என்று பல்வேறு முகங்களைக் கொண்ட சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்களை அறிமுகப்படுத்தியிருந்தார்.

    அறிவியல், ஆன்மீகம், தத்துவம், சராசரி வாழ்க்கை என்று தற்காலத்தின் கவிதைப் பதிவுகளாக விளங்குபவை சிற்பியின் ஆக்கங்கள்….சொல்லுக்குள் சுகம் வைத்து, கவிதைக்குள் உலகைத் தேக்கி, தன் காலப் பதிவைச் சிறப்பாகச் செய்து வருபவர் சிற்பி. அப்துல்கலாமின் ஏவுகணை வெற்றியையும் இவர் பாடுகிறார். இயந்திர மனிதனின் குழந்தை தானியங்கிக் கதவிடுக்கில் சிக்கிக் கொண்ட சோகத்தில் அறிவியலாளன் திணற, அடுத்த கட்டளையைக் கேட்டு நிற்கும் இயந்திர மனிதனின் தோல்வியையும் இவரின் கவிதை பாடுகின்றது என்று சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் கவிதைகளின் அழகியலையும் இலக்கிய நயம் பாராட்டியிருந்தார்.

    நயமிக்க கட்டுரை ஒன்றை அளித்த மு.பழனியப்பன் அவரை இவ்வார வல்லமையாளராகப் பாராட்டி அவரது தமிழ்ப்பணிகளும் இலகியப்பணிகளும் தொடர வாழ்த்துகிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

     

     

    தொடர்பிற்கு:
    முனைவர் மு.பழனியப்பன் (Dr. M.Palaniappan)
    தமிழ்த்துறைத் தலைவர்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை

    கைபேசி எண்: 9442913985
    மின்னஞ்சல் முகவரி: muppalam2006@gmail.com
    வலைப்பூ:
    manidal.blogspot.com
    http://kambanadippodi.blogspot.com/
    http://puduvayalpalaniappan.blogspot.com/
    ஃபேஸ்புக்: https://www.facebook.com/palaniappan.mutrhappan
    கூகுள் ப்ளஸ்: https://plus.google.com/112411414788276451667

     

     

    படங்கள் உதவி:
    http://senthamilcollegemadurai.blogspot.com/2013/02/blog-post.html

    Share
  • குடியரசு தின நல்வாழ்த்துகள்!

    vallamai republic

     

     

    பவள சங்கரி

    அன்னிய ஆதிக்கமெனும் அகந்தைத்தளையைhappy-republic-day-greetings
    அகிம்சையெனும் சம்மட்டியால் அடித்துநொறுக்கி
    இம்சையெலாம் களைந்து அன்னையவளை
    சிம்மாசனமேற்றிய சிம்மங்களை சிகரமேற்றி
    நினைவுகூரும் நிறைவான தருணமிது!

    தேகம்வருத்தி குருதிசிந்தி இன்னுயிரீந்து
    தாய்மண்ணை மீட்ட மித்திரர்கள்
    வன்மையோரவர் பாதம் பணிந்து
    நன்முத்துக்களின் தியாகம் போற்றி
    அவர்தம் வழித்தொடரும் தருணமிது!

    ஒருதாய் மக்களெனும் உன்னதமும்
    ஓர்குலம் ஓரினமெனும் நல்மனமும்
    அறவழியும் அன்புநெறியும் உளமேற்று
    புறவழியும் புன்மைநெறியும் புறந்தள்ளி
    புத்தொளியூட்டி வீரவாகை சூட்டியதருணமிது!

    இந்தியநாடு என்வீடு இந்தியனென்பதென் இறுமாப்பு!
    சத்தியமும் சமத்துவமும் எங்கள் உயிர்மூச்சு!
    வந்தே மாதரமென்பது எங்கள் அன்றாடப்பேச்சு!
    புத்தன் இயேசு காந்தி அல்லாவென எல்லாமுமெங்கள் நேசம்!
    ஒன்றுகூடி உறவாடிக் கொண்டாடுமெங்கள் தேசம்!

    Share
  • இந்திய நாடு என் வீடு, இந்தியன் என்பது என் பேரு…

    –கவிஞர் காவிரிமைந்தன்.

     

    குடியரசு

     

     

    உள்ளத்துள் உள்ளது கவிதை என்றான் மகா கவி பாரதி.. உணர்ச்சிப் பிழம்பாய் அவன் படைத்த கவிதைகள்தாம் விடுதலை வேட்கைக்கு வித்திட்டன என்பதை நாம் அறிவோம். கவிஞன் என்பவனின் உள்ளம் எத்தகு களமாக அமைகிறதோ அவ்விதமே.. அவனிடமிருந்து கவிதைகள் பூப்பூக்கும் அல்லது கந்தகம் வெடிக்கும். ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில் நடிகர் திலகம் நடித்த பாரத விலாஸ் திரைப்படத்தில் தேச ஒற்றுமையைக் காட்டும் அருமையான பாடல். இதயம் தொடும் இசையமைப்பை மெல்லிசை மன்னர் வழங்கியிருக்க.. கவிஞர் வாலி அவர்களின் கைவண்ணத்தில் .. ஒரு பாட்டுப் பட்டாளம் பாடியிருக்க.. நடிகர்கள் நடிகைகளும் இணைந்து வழங்கிய இப்பாடலை 26.01.2015 – இந்தியக் குடியரசு தினத்தில் பரிமாறுவதில் உளம் மகிழ்கிறேன்.

    இனத்தால் தமிழரென்றும்.. இந்தியனென்றும் கவிஞர் வாலி தந்திருக்கும் கவித்துவ முத்திரைகள் காலத்தால் அழியாதவை.

    பல்வேறு வேறுபாடுகள் எமக்குள்ளே இருந்தாலும் இந்தியன் என வரும்போது .. நாடி நரம்புகள் ரத்த நாளங்கள் ஒன்றுபட பெருமை மிக்க எம் நாட்டை எண்ணி பெருமிதம் கொள்வதும்.. வேற்றுமையில் ஒற்றுமை காண்பதும் எமது தனித்துவம் என்று உலகிற்கு பறைசாற்றிக்கொண்டிருக்கிற நாடு இந்தியா..

    ஹிந்து. முஸ்லீம்.. கிறிஸ்துவர் சீக்கியர் என்று பல்வேறு கதா பாத்திரங்கள் திரையில் தோன்ற.. மத நல்லிணக்கத்திற்கு.. என ஒற்றுமைக்கு.. இலக்கணம் வகுத்திடும் வண்ணம் எடுக்கப்பட்ட படமிது. குறிப்பாக, இந்தப் பாடல் ஒவ்வொரு இந்தியனையும் தலை நிமிரச் செய்யும். கற்பனை வளத்தில் மட்டும் பூத்த பாடல் கவிதை மனம் அல்ல. கவிஞரின் உள்மனதில் இருந்த உணர்வின் ஊற்று இது! கவிதை மணம் தவிர தமிழ் மணத்துடன் தேசிய மணமும் நிறைந்திருந்தது. நம் நெஞ்சில் நிலைத்திருந்தது.

    http://youtu.be/kG2Get7rZuU

    வந்தே மாதரம்! வந்தே மாதரம்!! வந்தே மாதரம்!!

    காணொளி: http://youtu.be/kG2Get7rZuU

     

    படம்: பாரத விலாஸ் (1973)
    இயற்றியவர்: வாலி
    இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
    பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா, எல்.ஆர். ஈஸ்வரி, ஏ.எல். ராகவன்

    இந்திய நாடு என் வீடு
    இந்தியன் என்பது என் பேரு
    எல்லா மக்களும் என் உறவு
    எல்லோர் மொழியும் என் பேச்சு
    திசை தொழும் துருக்கர் என் தோழர்
    தேவன் இயேசுவும் என் கடவுள்

    எல்லா மதமும் என் மதமே
    எதுவும் எனக்கு சம்மதமே
    ரகுபதி ராகவ ராஜாராம்
    பதீத பாவன சீதாராம்
    ரகுபதி ராகவ ராஜாராம்
    பதீத பாவன சீதாராம்

    கங்கை பாயும் வங்கம் செந்நெல்
    கதிர்கள் சாயும் தமிழகம்
    தங்கம் விளையும் கன்னடம்
    நல் தென்னை வளரும் கேரளம்

    ஆந்திரம் அஸ்ஸாம் மராட்டி
    ராஜஸ்தான் பாஞ்சாலமும்
    சேர்ந்து அமைந்த தேசம் எங்கள்
    அன்னை பூமி பாரதம்

    இந்திய நாடு என் வீடு
    இந்தியன் என்பது என் பேரு
    ரகுபதி ராகவ ராஜாராம்
    பதீத பாவன சீதாராம்

    இரிகோ இரிகோ இக்கட பாருங்கோ
    இரிகோ இரிகோ இக்கட பாருங்கோ
    சுந்தரத் தெலுங்கினில் பாடுங்கோ
    குச்சுப்புடி நடனங்கள் ஆடுங்கோ
    சல் மோகனரங்கா பாடுங்கோ
    சல் மோகனரங்கா பாடுங்கோ
    ஸ்ரீசைலம் திருப்பதி ஷேத்திரம் உண்டு
    தரிசனம் பண்ண வாருங்கோ
    கப்பல் கட்டுற விசாகப் பட்டினம்
    கடற்கரை உண்டு பாருங்கோ
    சல் மோகனரங்கா பாடுங்கோ
    சல் மோகனரங்கா பாடுங்கோ

    ஏனு ஸ்வாமி இல்லி நோடு
    எங்க ஊரு மைசூரு
    காவிரி பிரிந்த கன்னட நாட்டை
    யாவரும் போற்றி சொல்வாரு
    ஏனு ஸ்வாமி இல்லி நோடு
    எங்க ஊரு மைசூரு
    ப்ருந்தாவனமும் சாமுண்டி கோவிலும்
    நோடு ஸ்வாமி நீ நோடு
    நீ நோடு மைசூரு
    எல்லா மொழியும் எல்லா இனமும்
    ஒண்ணு கலந்தது பெங்களூரு
    ஏனு ஸ்வாமி
    ஏனு ஸ்வாமி இல்லி நோடு மைசூரு

    படச்சோன் படைச்சோன் எங்களப் படச்சோன்
    அல்லா எங்கள் அல்லா அல்லாஹூ அல்லா
    ஞானும் இவளும் ஜனனமெடுத்தது
    கேரளம் திருச்சூர் ஜில்லா

    தேக்கு தென்னை பாக்கு மரங்கள்
    இவ்விட பாக்கணும் நீங்க
    தேயிலை மிளகு விளைவதைப் பார்த்து
    வெள்ளையன் வந்தான் வாங்க

    படைச்சோன் படைச்சோன் எங்களப் படச்சோன்
    அல்லா எங்கள் அல்லா அல்லாஹூ அல்லா
    அல்லாஹூ அல்லா அல்லாஹூ அல்லா

    சுனோ சுனோ பாய் சுனோ சுனோ மே
    பஞ்சாப்வாலா கீத்து சுனோ
    பஞ்சாப்வாலா கீத்து சுனோ
    தங்கக் கலசம் பொற்கோவில்
    எங்கள் ஊரில் தேக்கோ தேக்கோ
    ஆஹா தேக்கோ தேக்கோ
    உய்யாஹு தேக்கோ தேக்கோ
    உய்யாஹு தேக்கோ தேக்கோ
    உய்யாஹு தேக்கோ தேக்கோ

    ஜீலம் ஷட்லஜ் நதிகள் பாயும்
    கோலம் காண ஆவோ ஆவோ
    ஆவோ ஆவோ உம் ஆஹா அவோ ஆவோ

    பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி
    பகத்சிங் பிறந்த பொன்னாடு
    பகத்சிங் பிறந்த பொன்னாடு
    யாஹூங் யாஹூங் உய்யாஹூ யாஹூங் யாஹூங்
    யாஹூங் யாஹூங் உய்யாஹூ யாஹூங் யாஹூங்
    யாஹூங் யாஹூங்

    எங்கு பிறந்து எங்கு வளர்ந்தும்
    எல்லாம் ஒருதாய்ப் பிள்ளைகள்
    பாரதவிலாசில் ஒன்றாய் வாழ்ந்து
    பேசிப் பழகும் கிள்ளைகள்
    சத்தியம் எங்கள் தேசம்
    சமத்துவம் எங்கள் கீதம்
    வருவதைப் பகிர்ந்து உண்போம்
    வந்தே மாதரம் என்போம்

    வந்தே மாதரம் வந்தே மாதரம்
    வந்தே மாதரம் வந்தே மாதரம்
    வந்தே மாதரம் வந்தே மாதரம்
    வந்தே மாதரம் வந்தே மாதரம்
    வந்தே மாதரம் வந்தே மாதரம்

    Share
  • குடி ஆட்சியா ? தடி ஆட்சியா ?

    சி. ஜெயபாரதன், கனடா

    நடு ராத்திரி பெற்ற சுதந்திரம்
    இன்னும்
    விடிய வில்லை !
    முடிய வில்லை தடி ஆட்சி !                     flag
    மடிக்குள் வெடி மறைத்து
    நடக்குது மதப்போர் !
    ஏர் முனைகள் வளைக்கப் பட்டு
    வாள் முனைகள் ஆயின !
    கார்மேகம் இப்போது
    கரியமிலம் பொழிகிறது !

    பாரதப் பண்பாடு
    நார் நாராய்க் கிழிந்து
    வேர்கள் பரவாது, விழுதுகள் படராது,
    கீழ்நோக்கி நுழையாது,
    மேல் நோக்கித் துளைக்கும் !
    எழுத்தாணிகள் அமணமாய்
    ஒழுக்கம் தவறிக்
    குத்தூசி களாய் மாறின !
    பத்திர காளி கைச் சூலாயுதம்
    பக்தரின் கைவசம் மாறும் !

    பல்கலைக் கழகங்கள் யாவும்
    பணவேட்டை ஆடும்
    படிப்போர் குருதி உறிஞ்சி !
    கீழ் ஜாதியார் மேல் நிலை தாவி
    ஒதுக்கப் பட்டார் !
    மேல் ஜாதியார் கீழ் நிலை மேவி
    விரட்டப் பட்டார் !

    கணினி வணிக நகரங்கள்
    நூற்றுக் கணக்கில் பெருகி
    ஏழை செல்வந்தர்
    வேற்றுமை ஏறிக் கொண்டே போகுது !
    நடிப்புக்கு மதிப்பளிக்கும்
    குடியாட்சி நாட்டில்
    படிப்புக்கு மதிப்பில்லை !

    மருத்துவம் பணத்துவம் ஆனது !
    உயிர்களுக்கு மதிப்பில்லை !
    உன்னைப் பெற்ற அன்னையோ
    உடன் பிறந்த தங்கையோ
    நடக்க முடியாது தனியாய்த்
    தெருவில்,
    பட்டப் பகலில் ?

    பாரத மணிக்கொடி கிழிந்து போனது !
    புதிய பாரதம் கூனிக் குறுகி
    சிதைந்து போகுது !
    குடியாட்சியைத் தைப்பதா ?
    முடிப்பதா ?

    +++++++++++++


    Share
  • நான் அறிந்த சிலம்பு – 152

    மலர் சபா

    மதுரைக் காண்டம் – 04: ஊர் காண் காதை

    கடை கழி மகளிர் காலத்திற்கு ஏற்ற இன்பங்களில் ஈடுபடுதல்கார் காலம்

    அங்ஙனம் படுக்கையில் இருக்கையில்
    பூ வேலைப்பாடு அமைந்த சிவப்பு நிறப்பட்டை
    இடையில் உடுத்திக்கொண்டு
    அடர்ந்த கூந்தலில் வெண்மையான பாலைப்பூவைச் சூடி
    சிறுமலையில் புதிதாய்ப் பூத்த                                 a_lonely_maiden_oq35-1
    சிவந்த நறுந்தாளிப்பூவுடன்
    நறுமணம் வீசும் புதிய குறிஞ்சிப்பூவைச் சூடி
    குங்குமச் சாந்தைக் கொங்கையில் பூசி
    செங்கொடு வேரியின் வளமான பூக்களால்
    கட்டப்பட்ட மாலையுடன்
    சிவந்த சுண்ணம் பூசிய மார்பில்
    அழகிய பவளத்தால் ஆகிய அணிகலன் பூண்டு
    மலைகளின் சிறகுகளைப் பிளந்த
    வச்சிராயுதம் கொண்ட இந்திரனுக்கு
    ஆர்ப்பரிக்கும் கடலிடத்தே
    தம் செவ்வணியைக் காட்டுமாறு
    கார்கால அரசன் தம் வாடைக்காற்றுடன் வரும்
    காலம் அன்றியும்..

    கூதிர்காலம்

    சிற்ப நூல் சாத்திரம்
    நன்கு கற்றறிந்தவர்களால் செய்யப்பட்ட
    மேகம் தவழும் உயர்ந்த மாடங்களில்
    அகில் ஆகிய விறகாலே
    மடமை பொருந்திய மகளிர்
    அத்தளத்தில் இட்ட தீயில்
    குளிர்காய விரும்பி அமர்ந்து
    நறுஞ்சாந்து பூசிய நம்பியருடன் கூடி
    குறுகிய சாளரங்களை அடைக்கும் கூதிர்க்காலமும்…

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 98 – 101
    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1134-oorkankathai–

    படத்துக்கு நன்றி:
    Google

     

    Share
  • அழுக்ககற்ற முனைந்துநிற்போம் !

      -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

    Republic Day-jpg-1193

       குடியரசு மலர்ந்தாலும்
       குடிமட்டும் மறையவில்லை
       நடுஇரவில் தனியாக
       நடமாட முடியவில்லை!

       வெடிகுண்டு கலாசாரம்
       விட்டெங்கும் போகவில்லை
       நடமாடும் விபசாரம்
       நாட்டைவிட்டு அகலவில்லை!

       காந்திசொன்ன சுதந்திரத்தை
       கண்டுகொள்ள முடியவில்லை
       கள்ளத்தனம் புகுந்தெங்கும்
       கழுத்தறுத்து நிற்கிறது!

       நீதிநேர்மை எல்லாமே
       நிலைகுலைந்து நிற்கிறது
       சாதிவெறி தலைவிரித்துச்
       சதிராடி நிற்கிறது!

       ஓதிநன்கு உணர்ந்தோர்கள்
       ஒதுங்கிநிற்க முயலுகின்றார்
       உலுத்தகுண மிக்கோரே
       உயர்த்திக்கொடி  பிடிக்கின்றார்!

       நாட்டுக்காய் உழைத்தோரை
       நாம்நினைத்துப் பார்ப்பதற்கு
       நல்லதொரு சந்தர்ப்பம்
       நம்குடியரசு நாளாகும்!

       குளறுபடி அரசியலைக்
       குழிதோண்டிப் புதைத்திடுவோம்
       நலமுடைய அரசியலை
       நம்நாட்டில் அமைத்திடுவோம்!

       தனிமனித சுதந்திரத்தைச்
       சரித்திரமாய் ஆக்கிடுவோம்
       தரணிதனில் பாரதத்தைத்
       தலைநிமரச் செய்துநிற்போம்!

      பாரதிரப் பாரதத்தைப்
    பார்க்கவைக்க வேண்டுமாயின்
    பக்குவமாய்க் குடியரசைப்
    பாதுகாத்தல் வேண்டுமன்றோ?

     போரொழிப்போம் புரட்டழிப்போம்
     பூசலெலாம் ஒழித்துநிற்போம்
    வாசலெலாம் கோலமிட்டு
     வரவேற்போம் குடியரசை!

     குடியரசுநாள்  தன்னில்
    கூடிநாம் சேர்ந்திருந்து
    அடிமனதில் ஒழிந்திருக்கும்
    அழுக்ககற்ற முனைந்துநிற்போம் !

     

    Share