சி. ஜெயபாரதன், கனடா

நடு ராத்திரி பெற்ற சுதந்திரம்
இன்னும்
விடிய வில்லை !
முடிய வில்லை தடி ஆட்சி !                     flag
மடிக்குள் வெடி மறைத்து
நடக்குது மதப்போர் !
ஏர் முனைகள் வளைக்கப் பட்டு
வாள் முனைகள் ஆயின !
கார்மேகம் இப்போது
கரியமிலம் பொழிகிறது !

பாரதப் பண்பாடு
நார் நாராய்க் கிழிந்து
வேர்கள் பரவாது, விழுதுகள் படராது,
கீழ்நோக்கி நுழையாது,
மேல் நோக்கித் துளைக்கும் !
எழுத்தாணிகள் அமணமாய்
ஒழுக்கம் தவறிக்
குத்தூசி களாய் மாறின !
பத்திர காளி கைச் சூலாயுதம்
பக்தரின் கைவசம் மாறும் !

பல்கலைக் கழகங்கள் யாவும்
பணவேட்டை ஆடும்
படிப்போர் குருதி உறிஞ்சி !
கீழ் ஜாதியார் மேல் நிலை தாவி
ஒதுக்கப் பட்டார் !
மேல் ஜாதியார் கீழ் நிலை மேவி
விரட்டப் பட்டார் !

கணினி வணிக நகரங்கள்
நூற்றுக் கணக்கில் பெருகி
ஏழை செல்வந்தர்
வேற்றுமை ஏறிக் கொண்டே போகுது !
நடிப்புக்கு மதிப்பளிக்கும்
குடியாட்சி நாட்டில்
படிப்புக்கு மதிப்பில்லை !

மருத்துவம் பணத்துவம் ஆனது !
உயிர்களுக்கு மதிப்பில்லை !
உன்னைப் பெற்ற அன்னையோ
உடன் பிறந்த தங்கையோ
நடக்க முடியாது தனியாய்த்
தெருவில்,
பட்டப் பகலில் ?

பாரத மணிக்கொடி கிழிந்து போனது !
புதிய பாரதம் கூனிக் குறுகி
சிதைந்து போகுது !
குடியாட்சியைத் தைப்பதா ?
முடிப்பதா ?

+++++++++++++


பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.