Blog

  • இந்த வார வல்லமையாளர்!

    ஜனவரி 19, 2015

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு முனைவர் இல. சுந்தரம் அவர்கள்

     

    இல சுந்தரம்

     

     

    வல்லமை இதழின் இந்த வார வல்லமையாளராகச் சிறப்பிக்கப்படுபவர், சென்ற செவ்வாய்க் கிழமையன்று (ஜனவரி 13, 2015) “தமிழ்நிதி விருது” பெற்ற கணினித்தமிழ் அறிஞர் இல. சுந்தரம் அவர்கள். முனைவர் இல. சுந்தரம் எஸ். ஆர். எம். பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராயத்தின் துணைப்பேராசிரியர். இவர் தமிழ், கணினி என இருதுறைகள் சார்ந்த கல்வியில் பட்டங்கள் பெற்றவர் (எம். ஏ., எம். ஃபில், எம்.சி.ஏ., எம்.பி.ஏ. முதுகலைப்பட்டங்களும் முனைவர் பட்டமும்). இத்திறமையைச் செம்மையாகப் பயன்படுத்தி கணினித்தமிழ் வளர்ச்சியிலும், தமிழ் மென்மம் உருவாக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

    தொல்காப்பிய எழுத்ததிகாரத்திற்கு மாணவர் உரை நூல் எழுதும் இவரது தமிழிலக்கிய ஈடுபாட்டிற்குச் சற்றும் குறைந்ததல்ல இவரது கணினித்தமிழ் ஆர்வமும். தமிழ் மரபுக்களஞ்சியக் கணினித்திட்ட அமைப்பாளராகவும், உத்தமம் (உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம் / The International Forum for Information Technology in Tamil – INFITT) உறுப்பினராகவும் கணினித் தமிழ்வளர்ச்சியில் பங்காற்றிவரும் இல. சுந்தரம் அவர்கள் ஒருங்குறி தமிழ் எழுத்துருக்களை உருவாக்கி, அவற்றை பொதுப்பயன்பாட்டுக்கு வெளியிட்டுள்ளார்.

    இல சுந்தரம்4

    கட்டற்ற கணிநுட்ப வளர்ச்சிக்கு உதவிவரும் ‘கணியம்’ இவர் உருவாக்கிய 10 ஒருங்குறி தமிழ் எழுத்துருக்களை இந்த ஆண்டின் புத்தாண்டு பரிசாக அறிவித்துள்ளது (http://www.kaniyam.com/ila-sundaram-unicode-tamil-fonts/). இத்தளத்திற்குச் சென்று இந்த எழுத்துருக்களைத் தரவிறக்கிப் பயன்படுத்தலாம். இவை SIL Open Font License, Version 1.1. என்ற கட்டற்ற உரிமையில் வழங்கப் படுகின்றன. எனவே இந்த பொதுப்பயன்பாட்டு விதியின்படி இந்த எழுத்துருக்களை யாவரும் பயன்படுத்தலாம். பகிரலாம். மாற்றங்கள் செய்து புது எழுத்துருக்களாகவும் வெளியிடலாம்.

    இவர் உருவாக்கிய கட்டற்ற ஒருங்குறி தமிழ் எழுத்துருக்களின் மாதிரிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன:

    இல சுந்தரம்5

    “கணினியில் தமிழ்மொழியின் பயன்பாடு பெருகியுள்ளது. தமிழ்மொழியின் வளர்ச்சிக்குக் கணினியின் பங்களிப்பு தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது. மொழி ஆய்வுக் கருவியாகக் கணினியைப் பயன்படுத்திவருகிற நிலையில் தமிழ்மொழித் தரவுகளை அதற்கு ஓர் ஒழுங்கமைவுடன் கற்றுத்தரவேண்டியுள்ளது. அதாவது கணித அடிப்படையில் மொழியில் உள்ள மொழியியல் கூறுகளைக் கணினிக்கு ஏற்ற வகையில் மாற்றித்தரவேண்டியுள்ளது. இத்தகைய வழிமுறைகளைக் கொடுப்பதே கணினி மொழியியல் என்பதாகும். மொழி செயல்படுவதில் உள்ள ஒழுங்குமுறையின் தொகுப்புதான் இலக்கணம். இத்தகைய ஒழுங்குமுறை நவீன, தொழில்நுட்ப வளர்ச்சிகளினாலும் மொழி உலகமயமாக்கச் சூழலினாலும் சிதைந்தும் மாறுபட்டும் வருகிறது. மொழியை இத்தகைய சிதைவுகளிலிருந்து மீட்டெடுக்க மொழியியல் கூறுகளை முறையாகக் கற்று, பயன்படுத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.”

    … என்று கணினித் தமிழ்வளர்சியின் இன்றியமையாமையைக் குறிப்பிடும் கணினி தமிழ் அறிஞரான இல. சுந்தரம், அத்துறையின் வளர்ச்சியில் கொண்டுள்ள அக்கறையின் காரணமாக கணினி தமிழ் எதிர்கொள்ளும் தடங்கல்கள், தமிழ் மென்மம் வளர்ச்சியின் தேவைகள் ஆகியவற்றைக் குறித்து உலகத்தமிழ் கருத்தரங்குகளில் ஆய்வறிக்கைகள் வாசித்துள்ளார்.

    இல சுந்தரம்3

    சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் உயராய்வு மையமும், உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றமும் இணைந்து நடத்திய 11வது உலகத் தமிழ் இணைய மாநாட்டில், ‘பயனர் நோக்கில் மென்தமிழ் தமிழ்ச் சொல்லாளர்’ என்ற ஆய்வறிக்கையை வாசித்துள்ளார். மேலும் இவரது, ‘கணினிவழித் தமிழ்மொழியாய்வில் பொருள் மயக்கம்’ , ‘கணினிவழிச் சொல்லடைவு மென்மம் உருவாக்கமும் தமிழ்மொழியமைப்புச் சிக்கல்களும்’ போன்ற கணினித் தமிழ்க் கட்டுரைகளும் கணினித்தமிழ்த் துறைக்கு இவராற்றிய பங்களிப்புகளாகும்.

    இல சுந்தரம்7

    கணினித் தமிழ் வளர்ச்சித் துறையில் தொடர்ந்து பங்காற்றிவரும் இல. சுந்தரம் அவர்களது ஆர்வத்தைப் பாராட்டி, இதுவரை இவராற்றிய தமிழ்ப் பணியினைக் கருத்தில் கொண்டு, அவர் இத்துறையில் மேலும் பங்களிக்க உற்சாகமூட்டும் வகையில், திரு இராம வீரப்பன் தலைவர் சென்னைக் கம்பன் கழகம் தலைமையில் இளம் தலை முறையினரை ஊக்குவிக்கும் திட்டத்தில், ‘தமிழ்நிதி ‘ விருது வழங்கப்பட்டு இல. சுந்தரம் சிறப்பிக்கப்பட்டுள்ளார். இளம் வயதில் இவர் செய்துள்ள இந்த சாதனையைப் பாராட்டி வல்லமை இதழ் குழுவினரும் இவரை இந்தவார வல்லமையாளாராக அறிவித்து பாராட்டி மகிழ்கிறோம்.

     

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    தொடர்புக்கு:

    இல. சுந்தரம் – http://ilasundaram.blogspot.com/
    கணினித்தமிழ்ப் பயிற்சி – http://tamilcomputingcourse.blogspot.com/
    மின்னஞ்சல் – ilasundaram@gmail.com

    படங்கள் உதவிக்கு நன்றி: மயிலை நூ த லோ சு, கணியம்

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 151

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 04: ஊர் காண் காதை

    நண்பகலில் பொழுதுபோக்கு

    குளிர்ந்த நறுமண முல்லை மலரும்
    ஆழ்ந்த நீரில் பூத்த குவளை மலரும்
    கண்கள் போன்ற நெய்தல் மலரும்                    silambu
    இவை அனைத்தும் கூந்தலில் சூடி
    மல்லிகையின் வெண்பூக்களால் ஆன
    மாலையுடன் இணைந்து
    குளிர்ந்த செங்கழுநீர்ப்பூவின்
    தாதுகள் விரிந்த இதழ்களால் கட்டிய பிணையலை
    கொற்கைத் துறையில் கிடைக்கும்
    பெரிய முத்துகளால் செய்த வடத்துடன் அணிந்து
    தென் திசைப் பொதிகை மலையில் விளைந்த
    சந்தனத்தை உடல் முழுதும் பூசி
    அழகிய கொடிகளையுடைய மூதூர்க்கு அருகில் உள்ள
    சோலைதனில் விளையாடும்  விளையாட்டை விரும்பி

    அந்திப் பொழுதைக் கழித்தல்

    எற்பாடாகிய பொழுதில்
    இளநிலா பொழியும் முற்றத்தில்
    மனதிற்கு இனியதாக இருக்கும்
    கோலத்தை இளைஞர் பாராட்ட
    மனம் விரும்பும் பூம்படுக்கை மேல்
    இனிதாக அமர்ந்து

    கடைகழி மகளிர் காலத்திற்கு ஏற்ற இன்பங்களில் ஈடுபடுதல் கார் காலம்

    பூவேலைப்பாடமைந்த செம்பட்டை
    இடையின் மீது உடுத்தி
    கொத்தாக முடியுள்ள தலையில்
    வெண்மை நிறப் பாலைப் பூவைச் சூடி,
    சிறுமலையில் பூத்த செந்நறுந்தாளிப்பூவுடன்
    மணமுடன் மலர்ந்த குறிஞ்சியையும் சூடி,
    குங்கும வண்ணம் கொண்ட செஞ்சந்தனத்தை
    மார்புகளில் எழுதி
    செங்கொடுவேரியின் செழுமையான பூவால்
    கட்டப்பட்ட பிணையலை
    செம்மையான சுண்ணம் அப்பிய மார்பினில்
    அழகிய பவள வடத்துடன் பூண்டு
    மலைகளின் சிறகைத்  தாக்கிய
    வச்சிரப்படையுடைய இந்திரனுக்கு
    ஆரவாரம் மிகுந்த கூடல் மாநகரத்தில்
    தம் செவ்வணியைக் காட்டுமாறு
    காரை ஆளும் அரசன்
    குளிர்காலக் காற்றுடன் வரும் காலமும்
    அந்தக் காலம் அன்றியும்…

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 76 – 97
    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1134-oorkankathai–

    படத்துக்கு நன்றி:
    http://en.wikipedia.org/wiki/Modern_Indian_painting

     

    Share
  • “நம் நாட்டைக் காப்போம்”

    –விசாலம்

    பதினாறாம் நூற்றாண்டு……..

    பாரத தேசம் முழுவதிலும் முஸ்லிம்களும், பட்டானியர்களும் பல இடங்களை ஆக்கிரமித்த காலம் அது. அந்நேரம் ராஜஸ்தானில் பல மன்னர்கள் மிகவும் சிறப்பாக ஆட்சி புரிந்து வந்தனர். அவர்களிடம் தேச பக்தி மிகுந்து காணப்பட்டது. தில்லியில் ஆள வந்த பல முஸ்லிம் மன்னர்களுக்கு ராஜஸ்தான் மேல் கண் இருந்தது. தவிர ராஜ்புத் பெண்கள் மிகவும் அழகாக இருந்தமையால் அவர்களைத் தங்கள் அடிமைகளாக்கிக்கொள்ள பல மன்னர்கள் துடித்தனர். அடிக்கடி அந்த ராஜ்ஜியத்தின் மேல் மோத இதனால் போர் அடிக்கடி ஏற்பட்டது. அப்போது ஆண்ட பாபரின் மகன் ஹுமாயூன் ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் சேர்ஷா என்பவன் தான் பாதுஷாவாக ஆவதற்குப் பாடுபட்டுகொண்டிருந்தான்.

    அந்த சமயத்தில் ராஜஸ்தானில் சித்தௌட் என்ற இடத்தை ஆண்ட அரசன் விக்ரமன் துரதர்ஷடவசமாக பல கெட்ட பழக்கங்களுடன் ஸ்திரீலோலனாக இருந்ததால் தன் ராஜ்யத்தைப் பொறுப்பாக ஆளவில்லை. மிகுந்த பலஹீனமாக இருந்ததால் இந்தச்சூழ்நிலையை சாதகமாக்கிக்கொண்டு பலர் அதை முற்றுகையிட முயற்சித்தனர். வழக்கம் போல் ராஜா விக்ரமன் தனது அரியணையில் அமர்ந்தபடி நடனத்தை ரசித்துக்கொண்டிருந்தான். அழகான இரண்டு பெண்கள் தங்கள் தலையில் பல பானைகளைச் சுமந்து நடனமாடியபடி தங்கள் கால்களைக்கொண்டு வர்ணக்கோலங்களும் போட்டுக்கொண்டிருந்தனர். அரசன் கையில் உயர்ந்த ரகு மது இருக்க தன்னை மறந்து அமர்ந்திருந்தான். திடீரென்று வந்தது போர் முழக்கம். தூரத்திலிருந்த இந்தப்படைகளை தனது மாளிகையிலிருந்த அரசி ஜவஹர்பாயி கவனித்தாள். கூடவே ராணி கர்னாவதியும் அதிரிடும் சத்தம் கேட்டு வெளி வந்தாள். அவளுக்குத் தன் மகன் விக்ரமஜித் மிகவும் பொருத்தமில்லாத அரசன் என்றும் அரியணையில் அமர லாயக்கில்லை என்றும் தெரியும். உடனே போருக்கு புறப்பட அரசனுக்கு செய்தி அனுப்பினள். தன்னையே மறந்த நிலையில் இருந்த அரசன் எப்படி கிளம்பமுடியும்? இருப்பினும் அவர்களது குல வழக்கபடி வெற்றித்திலகம் இட்டு அவனை அனுப்பி வைத்தாள்.

    ஒரு முஸ்லிம் படை அங்கு முற்றுகையிட அரசன் விக்ரமன் கோழையாக ஓடி வந்துவிட்டான். ராஜஸ்தான் பெண்மணிகள் தன் நாட்டை மிகவும் நேசிப்பவர்களாகவும் இருந்தனர். விக்ரமனின் மனைவி ஜவஹர்பாயி ஒரு வீரப்பெண்மணி. தன் நாட்டிற்காக எதையும் செய்வாள். போர் நடக்கும் போதே முஸ்லிம் படையினர் பல ராஜபுத்ர பெண்மணிகளை இழுத்துப்போக முயல்வார்கள். கற்பழிக்கும் எண்ணம் அவர்களுக்கு இருந்ததால் அதற்கு இடம் கொடுக்கக்கூடாது என்ற கொள்கையுடன் பல ஸ்திரீகள் நெருப்பை மூட்டி அதில் குதித்து தங்களை மாய்த்துக்கொள்வார்கள். இந்த அக்னிப்பிரவேசத்திற்கு “ஜௌஹர்” எனப்பெயர்.

    இந்த ஜௌஹரை முதலில் ஆரம்பித்து வைத்தது ராணி பத்மினி தான். பின்னால் வந்த ஸ்ரீ ராஜாராம் மோஹன்ரரய் இது போன்ற ஜௌஹர் , சதி என்ற வழக்கங்களை மிகவும் புரட்சிகரமாக முறியடித்தார் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஜவஹர்பாயி தன் கணவன் ஒரு நல்ல மன்னனாக இருப்பதற்கு பதிலாக இப்படி கேளிக்கையில் ஈடுப்பட்டு நாட்டைக் குட்டிச்சுவராக ஆக்குகிறானே என்று மிகவும் வருத்தம் கொண்டு மாளிகையில் இங்கும் அங்கும் அலைந்தபடி இருந்தாள். பின்னர் எப்படியும் மேவாரைக் காக்க வேண்டும் என்று தீர்மானித்தாள். என் கணவர் செய்ய வேண்டியதை நான் செய்ய வேண்டும், மேவாரைக்காக்க வேண்டும். என் உடலை நெருப்பில் இட்டு உயிரை விடுவதில் என்ன லாபம்? நாட்டை அல்லவா காக்க வேண்டும்! ஆகையினால் ஜௌவார் என்ற தீக்குளிப்பு செயலில் இறங்காமல் எல்லோரையும் போருக்குத்தயார் செய்ய வேண்டும். வீர மரணம் வந்தாலும் அது நாட்டுக்குப்பெருமை தான் என்று யோசனை செய்தபடி தனது யோசனையை அங்கிருக்கும் பல ராஜபுத்திர பெண்மணிகளுக்குச் சொல்ல எல்லோரையும் அழைத்தாள். அந்த நேரத்தில் முஸ்லிம் படைகள் சமீபத்தில் வரத்தொடங்கியது.

    The_Rajput_ceremony_of_Jauhar_(holocaust),_1567முஸ்லிம் படைகள் சமீபத்தில் வர வர பல ராஜபுத்ர பெண்மணிகள் நெருப்பை மூட்டி அதில் விழத் தயாரானார்கள். அப்போது வீரம் பொங்க, கண்களில் கனல் பறக்க வந்தாள் விக்ரமனின் மனைவி ஜவஹர் பாய். அக்னி கபகப என்று எரிந்தபடி இருந்தது. அவள் கண்களிலும் அக்னி போல் பொரி பறந்தது.

    “நில்லுங்கள், சற்றுப் பொறுங்கள்”

    இந்தக்குரல் கேட்டவுடன் பல பெண்மணிகள் அக்னியில் குதிக்காமல் அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று ஆவலுடன் பார்த்தனர். “சகோதரிகளே, நாம் இப்போது ஜௌஹர் செய்துக்கொண்டால் நம் கற்பு காக்கப்படும், ஆனால் இப்போது நாம் நம் மேவாரையல்லவா காப்பாற்ற வேண்டும், அது மிக முக்கியமாயிற்றே. கிளம்புங்கள் நம் உயிரைக் கொடுத்தாவது தாய்நாட்டைக் காக்க வேண்டும். ஜெய் மாதா! துர்கே! நாம் வீரத்துடன் அந்த மிலேச்சர்களைத் துரத்தியடிப்போம் நம்
    மாத்ருபூமியைக் காப்பாற்றுவோம். வாளை கையில் எடுங்கள், கோஷமிடுங்கள், ஜய் துர்கே மா”.

    ஒரு நிமிடம் எல்லா ராஜ்புத் பெண்களும் நெருப்பின் கனலைப்பார்த்தார்கள். நாட்டைக்காப்பாற்றுவது தான் முக்கியம் என்று உணர்ந்து வீரத்துடன் அவரவர்கள் பெரிய வாளைக் கையில் எடுத்தார்கள். எங்கும் ஜயதுர்கே என்ற கோஷம் முழங்க பெண்கள் படை கிளம்பியது. கையில் வாளுடன் வீரயுத்தம் நடந்தது. இதை எதிரிகள் கொஞ்சமும் எதிர்ப்பார்க்கவேயில்லை.

    எதிர்ப்பாராத இந்தத்திருப்பத்தினால் எதிரிகள் ஓட்டம் பிடித்தனர், இத்தனை வீரமாக தன் நாட்டையும் கற்பையும் காப்பாற்றிய ஜவஹர் பாய் சரித்திரத்தில் அழியா இடம் பெறுகிறாள்.

    படம்: http://commons.wikimedia.org/wiki/File:The_Rajput_ceremony_of_Jauhar_(holocaust),_1567.jpg

    Share
  • மனத்தில் நிறைந்த மக்கள் திலகம்

    பவள சங்கரி

    அன்பினிய நண்பர்களுக்கு,

    வணக்கம். அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள். தமிழர் திருநாளாம் இத்தைத்திங்கள் நன்னாளில், மக்கள் திலகம், புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல், ஏழைப்பங்காளன் என்று பல்வேறு அடைமொழிகளுடன் அன்புடன் அனைத்து மக்களாலும் இன்றும் போற்றப்படுபவர், திரையுலகம், அரசியல், சமூக நலன் என அனைத்துத் தளங்களிலும் ஓய்வில்லாமல் உழைத்த உத்தமர், தமிழ் மொழி மற்றும் தமிழர்களின் நல்வாழ்வு என தம் வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்து வாழ்ந்தவர், இன்று பிறந்த நாள் கண்ட, எம்.ஜி.ஆர். என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பெற்ற தமிழக முன்னாள் முதல் அமைச்சர், மறைந்த திரு எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களின் பன்முகத் திறமைகளை பாரில் அனைவரும் அறிவர். இத்தகைய மாமனிதரை தங்கள் பார்வையில் அறிந்ததையும், உணர்ந்ததையும், ‘மனத்தில் நிறைந்த மக்கள் திலகம்’ என்ற தலைப்பில் பகிர்ந்து, பரிசுகளை வெல்லுமாறு மனமுவந்து அழைக்கிறோம்.

    mgr

    திரு எம்.ஜி.ஆர். அவர்களின் மீது ஆழ்ந்த பற்றும் அன்பும் கொண்ட கவிஞர் காவிரி மைந்தன் மற்றும் சசிகுமார் இருவரும் இப்போட்டியை வல்லமையுடன் இணைந்து நடத்துகிறார்கள் என்று மகிழ்வுடன் தெரிவிக்கிறோம். வழமை போல இந்தப் போட்டியிலும் நம் வாசகர்கள் திரளாகக் கலந்துகொண்டு வெற்றியடையச் செய்வீர்கள் என்று நம்புகிறோம். போட்டி குறித்த விவரங்கள் இதோ:

    mgr comp

    ‘தனது உயிரிலே கலந்திருப்பது தலைவன் என்கிற உணர்வு.. அவன் காட்டிய வழிகள்! நெறிகள்! பாடல்கள் மூலம் தமிழகத்தை நல்லபாதையில் இட்டுச்சென்றவன் இவன் ஒருவன் தவிர வேறு எவனும் இல்லை! கொள்கைப் பாடல்கள் என்று அவை இன்றும் உலக அளவில் பரவியிருக்கின்றன. அரசியல் அமைப்புகளுக்குக்கூட அந்தப் பாடல்கள் தான் இன்றும் ஜீவன் தருகின்றன!’- கவிஞர் காவிரி மைந்தன்.

    வல்லமை மின்னிதழ் வாயிலாக திரு. எம்.ஜி.ஆர் அவர்களின் இரண்டு ரசிகர்கள் – திரு.காவிரிமைந்தன் மற்றும் திரு. சசிகுமார்  ஆகிய இருவரும் இணைந்து வழங்கிடும்  ‘மனத்தில் நிறைந்த மக்கள் திலகம்’ – கட்டுரைப் போட்டி!!

    கட்டுரையின் அளவு குறைந்தபட்சம் 1000 வார்த்தைகளும் அதிகபட்சம் 1500 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்!

    கட்டுரைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 01.03.2015 என அறிவித்திருந்தோம். வாசகர்களுக்குக் கூடுதல் அவகாசம் தரும் பொருட்டு, இதனை மார்ச்சு 31 வரை நீட்டிக்கிறோம். 

    பரிசுத் தொகை – முதல் பரிசுகள் மூன்று …. ரூ.1000 வீதமும்

    இரண்டாம் பரிசுகள் இரண்டு ரூ.750 வீதமும் மற்றும் மூன்றாம் பரிசுகளாய் மூன்று ரூ.500 வீதமும் வழங்கப்படும்!

    முன்னாள் மதுரை கல்லூரி தமிழ்ப் பேராசிரியை முனைவர் கமலம் சங்கர் அவர்கள் நடுவராக இருந்து கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து உரிய கருத்துரைகள் தந்து ஊக்கம் தர இசைவு தந்துள்ளார்கள்.

    மேற்கண்ட பரிசுகள் தவிர, பங்கேற்கும் அனைத்துக் கட்டுரைகளும் பரிசீலிக்கப்பட்டு உருவாகவிருக்கும் மனதில் நிறைந்த மக்கள் திலகம் நூலில் இடம்பெறும் என்கிற மகிழ்ச்சியான தகவலையும் முன்பதிவு செய்ய விரும்புகிறோம்!

    ஒருவரே ஒரு கட்டுரைக்கு மேல் அனுப்பலாம் எந்தத் தடையும் இல்லை..

    கட்டுரைப் போட்டி முடிவுகள் பொறுத்தவரை நடுவரின் தீர்ப்பே இறுதியானது.

    அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : vallamaieditor@gmail.com

    போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற வாழ்த்துகள் நண்பர்களே!

    நன்றி
    அன்புடன்
    பவள சங்கரி

    Share
  • பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! சூரியக் கோள்கள் தோற்றக் கருத்தில் ஒரு மாறுபட்ட கோட்பாடு

     

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    http://video.pbs.org/video/1790621534/

    https://www.youtube.com/watch?feature=player_embedded&v=mCF2p5TvlQ4

    https://www.youtube.com/watch?feature=player_embedded&v=YTRP_lyBk7A

    *********************

    சூரிய குடும்பத்தின் பிணைப்பில்
    சுழற் கோள்கள்
    சுற்றிடும் விந்தை யென்ன ?
    பிண்டங்கள்
    கோளமான மர்மம் என்ன ?
    நீள் வட்ட வீதியில் அண்டங்கள்
    மீள் சுற்றும் நியதி என்ன ?
    கோள்கள் அனைத்தும்
    ஒழுங்காகச்
    சூரியனை ஒரே திசையில்
    சுற்றுவ தென்ன ?
    ஒற்றைத் தள மட்டத்தில் கோள்கள்
    பரிதி இடுப்பைச் சுற்றி
    வருவ தென்ன ?
    யுரேனஸ் கோள் அச்சும்
    சரிந்து போய்ச் சாய்ந்த தென்ன ?
    பரிதி மண்டலத்தில்
    வக்கிரமாய்ச் சுழன்று
    சுக்கிரன் மட்டும்
    திக்குமாறிப்
    போன தென்ன ?
    தன்னச்சில் சுழாமல் வெண்ணிலா
    முன்னழகைக் காட்டிப்
    பின்னழகை
    மறைப்ப தென்ன ?

    ++++++++++++++

    Oigins of Solar System


    எறிகற்கள் [Meteors] தாக்கிக் கோள்கள் உருவாயின என்பது மெய்யான முத்திரை அறிவிப் பில்லை.  அந்த சிறு துணுக்குகள் கோள்களின் வடிவ விளைவால் உண்டான உதிரியே தவிர, அவை கோள்களை உருவாக்கிய செங்கற்கள் [Building Blocks] அல்ல.  தற்போதைய இப்புதிய கோட்பாடு சூரியக் கோள்கள் தோன்றியதாக  முன்னர் கருதப் பட்ட கொள்கையைத் திருத்தி விடும்.   அதாவது பூர்வீக சூரிய தோற்ற ஏற்பாடு நாம் எதிர்பார்த்ததை விடப் பெரும் மோதல் கொந்தளிப்பில் உண்டானதாகத் தெரிய வருகிறது.

    பிரான்டன் ஜான்சன் [Post doctorate, MIT Dept of Earth]

    யுலிஸிஸ் சூரிய விண்ணுளவியின் கருவிகள் இன்னும் சீராகப் பணியாற்றிச் சூரியப் புயல், அகிலக் கதிர்கள், சக்தி வாய்ந்த துகள்கள், சூரிய காந்த அரங்கம் பற்றிய தகவலைத் தொடர்ந்து அனுப்பி வருகின்றன. . . . ஏவிய நாளிலிருந்து (அக்டோபர் 1990) எந்தக் கருவியும் இதுவரைப் பழுதாகவில்லை !

    ரிச்சர்டு மார்ஸ்டன், யுலிஸிஸ் சூரிய விண்ணுளவித் திட்ட மேற்பார்வை விஞ்ஞானி (European Space Agency)  [ஏப்ரல் 15, 2008]


    Meteorite impacts on Planets

    பூர்வச் சூரியக் கோள்கள் தோற்றத்தின் மாறுபட்ட கோட்பாடு

    பூர்வீகச் சூரியக் கோள்கள் தோன்றியதால் உண்டான எச்சத் துணுக்குகளே முரண் கோள்கள் [Asteroids]  என்னும் கோட்பாடு இப்போது [2015 ஜனவரி 15] இயற்கை விஞ்ஞான நூல் வெளியீட்டின் அறிவிப்புப்படி உறுதியாகி வருகிறது.  முரண் கோள்கள்  சூரியக் கோள்களின் உருவாக்கத் தோற்றத் துக்கு  மூலப் பொருட்கள் அல்ல.  சூரியக் கோள்கள் தோன்றத் தேவை யான மூலச் செங்கற்கள் [Building Blocks] நாமறிந்த முரண் கோள்கள் அல்ல என்பதே புதிய முடிவு;   அமெரிக்காவின் பர்டே [Purdue] பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர், பிரான்டன் ஜான்சன் கூறுவது,  ” நான்கு பில்லியன் ஆண்டுக்கு முன்பே பூர்வச் சூரியக் கோள் பிறப்புக் கருவில் [Planetary Embryos]  ஆரம்பத்திலே வித்துகள் இருந்தன,” என்று.

    முரண் கோள் முறிவுகள் பூமியில் விழும்போது எறிகற்களாய்ச் [Meteorites] சிதறுகின்றன. கடந்த 100 ஆண்டுகளாய் உறைந்த திரவ உருண்டையான கோலிப் பாறைகள்  [Beads like Chondrules]  எறிகற்களில் காணப்பட்டன.  அவை  இருப்பதற்குக் காரணம் தெரியாமல் இதுவரை மர்மமாகவே இருந்தது.  இப்போது விளைவுகளைத் தாக்கல் மாடலில் [Computer Impact Model] இட்டுப் பார்த்தால் செம்மையாகப் பொருந்துகின்றன.

    முடிவுகள் இவைதான் :

    1.  முரண் கோள்கள் [Asteroids] பரிதிக் கோள்கள் உருவாக்கத்தில் எஞ்சிய உதிரிகள் அல்ல.

    2.  உண்டையான கோலிகள் [chondrules] சூரியக் கோள் வடிவாகத் தேவைப்படா.  அவை  கோள்கள் உருவாகத் தேவையான மூலச் செங்கற்கள் அல்ல.


    நமது சூரிய மண்டலம் எப்போது தோன்றியது ?

    வானியல் விஞ்ஞானிகளும், பூதளவாதிகளும் (Astronomers & Geologists) பூமியின் வயதைக் கணித்து அதிலிருந்து பரிதி மண்டலத்தின் தோற்ற வயதை அறியப் பல்வேறு முறைகளைக் கையாள்கிறார்.  நாமறிந்த பூமிப் பாறைகளின் கதிரியக்கத் தேய்வு வீதங்களைப் “பாறைக் கதிரளப்புக் காலக் கணிப்பு” மூலம் (Radiometric Dating of Rocks) கணக்கிட்டுச் சூரிய குடும்பம் சுமார் 4.6 பில்லியன் ஆண்டுக்கு முன்பு தோன்றியிருக்கலாம் என்று கருதுகிறார்கள்.  பூமியின் பூர்வீகப் பாறை வயது கதிரியக்கத் தேய்வு வீதக் கணிப்பில் 3.9 பில்லியன் ஆண்டுகள் என்பது தெரிய வருகிறது !  பூதளத் தட்டு நகர்ச்சிகள் (Plate Tectonics) தூண்டி பூமியில் எழும் பூகம்ப எரிமலை நிகழ்ச்சிகளால் பூர்வீகப் பாறைகள் நிலைமாறி அவற்றைக் காண முடியாமல் சிதைத்து விடுகின்றன !

    பூமியின் பூர்வீகப் பாறைகளைத் தவிர விண்வெளிக் கற்கள், எரிகற்கள், நிலவிலிருந்து அல்லது செவ்வாய்க் கோளிலிருந்து வீழும் விண்கற்கள் மிகத் துல்லியமாகப் பரிதி மண்டல வயதுக் காலத்தை நிர்ணயம் செய்ய உதவுகின்றன.  அந்த மாதிரிகளின் கதிரியக்கத் தேய்வு வீதத்தைக் கணித்ததில் அவை 4.6 பில்லியன் ஆண்டு வயதைக் கொண்டவை என்று அறியப்பட்டு, பரிதி மண்டலம் அந்த வயதை ஒட்டி உண்டாகி இருக்க வேண்டும் என்று யூகிக்கப்படுகிறது.

    நமது சூரிய மண்டலம் எப்படி உண்டானது ?

    விஞ்ஞான வரலாற்றில் எத்தனையோ கருத்துக்கள் மாறிப் போனாலும், பரிதி மண்டலம் எப்படி உண்டானது என்னும் கருத்து கடந்த 250 ஆண்டு காலமாக மாறவில்லை.  1755 ஆம் ஆண்டில் ஜெர்மன் வேதாந்தி இம்மானுவெல் கென்ட் (Immanuel Kant) (1724-1804) முதன்முதலில் தனது நிபுளா கோட்பாடைக் (Nebular Hypothesis) கூறினார்:  அதன்படி பேரளவு வாயு முகில் கொண்ட ஆதிச்சூரிய நிபுளா, பரிதி மண்டலத்தின் சூரியனாகவும், மற்ற அண்டக் கோள்களாகவும் உண்டாக மூலாதாரப் பொருளானது !  1796 இல் பிரெஞ்ச வானியல் நிபுணர் பியர் சைமன் லாப்பிலாஸ் (Pierre Simon Laplace) (1749-1827) அதே மாதிரிக் கோட்பாடை எடுத்துக் கூறினார்.  ஆனால் ஆழ்ந்த விண்வெளியை நோக்கி அவரால் அதற்குச் சான்றுகளை எடுத்துக் காட்ட முடியவில்லை !

    jay

    இம்மானுவெல் கென்ட் விளக்கிய நிபுளா கோட்பாடில் இருப்பது இதுதான் : பேரளவுக் கொள்ளளவு வாயு நிறையும் தூசி துணுக்குகளும் திணிவு ஈர்ப்பு (Mass Gravity) விசையால் சேர்ந்து சுற்ற ஆரம்பித்தன.  திணிவு நிறை பெருகப் பெருக ஈர்ப்பு சக்தி மிகையாகி வாயுத் திணிவை இறுக்கிச் சுருக்கி (Gravitational Contraction) வாயுக் கோள்களாகவும், திடக்கோள்களாகவும் உருவாயின.

    இப்போது வானியல் விஞ்ஞானிகள் அவற்றை விபரமாகச் சொல்ல முடிகிறது.  அதாவது முதலில் சூரிய மண்டலத்தின் வாயு முகில் மூலக்கூறு (Molecular Gas Cloud) முறிந்த போது அதன் விரிவு 100 AU (Astronomical Unit) [1 AU = Average distance between Sun & Earth (93 மில்லியன் மைல் /150 மில்லியன் கி.மீ.)] ஆகவும், திணிவு நிறை பரிதியைப் போல் 2 அல்லது 3 மடங்கு இருந்ததாகவும் யூகிக்கிறார்கள்.  அத்தகைய வாயு முகில் ஈர்ப்பு முறிவைத் (Cloud’s Gravitational Collapse) தூண்டி விட்டிருப்பது அருகில் இருந்த சூப்பர்நோவாவின் (Supernova) மின்னல் வெடிப்பில் நேர்ந்த அழுத்த அலையாக இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.  வாயு முகில் குவிந்து விழுந்த பிறகு பலமுறைகளில் திணிவு சேர்ப்பு விரைவானது.  முகில் திணிவின் உஷ்ணம் அதிகரித்து அது சுழலத் தொடங்கியது.  வாயுப் பிண்டம் தங்கி அது வட்டத் தட்டு வடிவாக மட்டமானது.  மிகையான ஈர்ப்பு சேமிப்புச் சக்தி (Gravitational Potential Energy) வெப்பமாக மாறி வாயு முகில் அடர்த்தி (Density) அதிகமானது.  அதுவே கோள்களின் உட்கரு உலோகமாகப் பின்னால் திரட்சி யானது.

    பரிதியின் அண்டக் கோள்கள் உண்டான தெப்படி ?

    வட்டவியல் திணிவு நெம்பு நிலைப்புப்படி (Conservation of Angular Momentum) வடிவம் சிறுகச் சிறுகச் சுழலும் மட்டமான தட்டின் வேகம் மிகையானது.  மென்மேலும் விழுந்து சேரும் வாயுவும், தூசி துணுக்கு களும் சேர்ந்து கொண்டு முன்னோடிக் கோள் தட்டு (Proto-Planetary Disk) மையம் தடித்து ஓரம் மெலிவாகித் தமிழகத்தின் “ஆப்பம்” போல் (Pancake) உருவாகியது.  நடுவில் மகா ஈர்ப்புச்சக்தி வாய்ந்த உட்கரு எழுவதும் அப்பால் விளிம்பு நோக்கிச் செல்லச்செல்ல வலுகுன்றிய கோள்கள் உருவாவதும் எப்படி என்று விளக்கிச் சொல்லலாம் ?  பேரளவு வாயுப் பிண்டம் செழித்த நிபுளாவைச் சுற்றிலும் அதன் பூத ஈர்ப்பு மண்டலம் காந்த சக்தியால் சூடாக உள்ளது !  அந்த ஈர்ப்பு வாயுத் துணுக்குகளுக்கு சுழற்சியை உண்டாக்கித் தன் பூத ஈர்ப்புக் குழியில் சுற்றத் தூண்டுகிறது.  அவ்விதம் சிறுகச் சிறுக்கச் சேர்ந்துதான் சுழலும் கிருஷ்ணச் சக்கிரம் போல் அசுர வடிவாகி வட அமெரிக்க வேனிற்தள ஹர்ரிக்கேன் (Tropical Hurricanes) சூறாவளிகள் உருவாகின்றன !

    பேரளவு இயக்கம் மையத்தில் உண்டாகி முன்னோடிச் சேய் விண்மீன் (Infant Proto-Star) விரைவாக வாயுத் திணிவைத் திரட்டி சூரியனாகியது.  அதன் பிறகு 50 மில்லியன் ஆண்டுகளாக பரிதி போதுமான வாயு நிறையைச் சுருட்டிப் பூரண எரிநிலை அடைந்து பிணைவு சக்தி தூண்டப் பட்டு சுயவொளி விண்மீனாக மாறியது.  தட்டின் விளிம்புகளில் மேலும் வாயுத் துணுக்குகள் சேமிப்பாகி அங்குமிங்கும் கண்ட இடங்களில் சிறிதும் பெரிதுமாக வாயுவிலும் திடப் பிண்டத்திலும் கோள்கள் உண்டாயின.

    பரிதி வெப்ப அணுக்கரு சக்தியால் தூண்டப் பட்டதும் அது அசுரப் புயலை எழுப்பித் தூசிகளையும் துணுக்குகளையும் தட்டிலிருந்து வெளியேற்றியது.  அப்போது பூத வாயுக் கோள்கள் மென்மேலும் பெருக்க இயலாது போயின.  தட்டில் தங்கிய மீத வாயுக்கள் பேரளவு வெப்பத்தாலும், ஈர்ப்பு விசை யாலும் மூலகமாற்றம் நிகழ்ந்து குளிர்ந்து திரண்டு சிலிகேட்களும், உலோகங்களும் (Silicates & Metals) உண்டாயின.  துணுக்குகளும், தூசிப் பனிகளும் மற்ற கோள்களின் முன்னோடிகளைக் கட்டி மென்மேலும் பெருக்க வைத்துப் பேரளவு அண்டங்களாக்கின.

    பரிதி மண்டலத்தின் புறக் கோள்கள் பனி அண்டங்களாய்க் கட்டுமான மாகின.  வாயுக் கோள்களின் உட்கரு அடர்த்தியாகி வாயு முகில்கள் அவற்றை இறுகிப் போர்த்திக் கொண்டன.  புறக்கோள்களைச் சுற்றிலும் பல துணைக்கோள்கள் உண்டாகிச் சுற்றத் தொடங்கின.  வாயு முகில்கள் வீசி எறியப்பட்டு வால்மீன்களாக “ஓர்ட் முகில்” மந்தையில் (Oort Cloud of Comets) சிக்கின.  ஓர் அசுரப் பிண்டம் பூமியை மோதி நிலவு உண்டானது.  செவ்வாய்க் கோளுக்குச் சந்திரன்கள் ஏற்பட்டுச் சுற்ற ஆரம்பித்தன.  இவை அனைத்தும் இம்மானுவெல் கான்ட் 250 ஆண்டுகளுக்கு முன்பு கூறிய நிபுளாக் கோட்பாடைத்தான் முற்றிலும் மெய்ப்பிக்கின்றன.

    பரிதி மண்டலப் படைப்பில் காணும் சில புதிர்கள் !

    அண்டக் கோள்கள் ஏன் பரிதியை ஒரே தளமட்டத்தில் நீள்வட்ட வீதிகளில் சுற்றுகின்றன ?  அவற்றின் சீரொழுக்க இயக்க முறைக்கு என்ன காரணம் உள்ளது ?  அகக்கோள்களும், புறக்கோள்களும் சூரியனை ஏன் எதிர்க் கடிகார முறையில் சுற்றி வருகின்றன ? சூரியனையும் மற்ற கோள்கள் போலின்றித் தன்னச்சில் சுக்கிரன் மட்டும் ஏன் நேர்க் கடிகார வக்கிர திசையில் சுற்றி வருகிறது ? பூமியின் நிலவு தன்னச்சில் சுழாது ஏன் ஒரே முகத்தைக் காட்டிக் கொண்டு புது மாதிரிச் சுற்றி வருகிறது ? தன்னச்சில் கோள்களும் எதிர்க் கடிகாரச் சுழற்சியில் சுழல்வது ஓர் விந்தைதான்.  கோள்களின் துணைக் கோள்களும் எதிர்க் கடிகாரச் சுழற்சியில் சுற்றுவதும் ஒரு விந்தைதான்.  இந்த விந்தைகள் அனைத்தும் நிபுளாக் கோட்பாடு கூறும் “சுழற்தட்டு அமைப்பு” விதியைப் பெரும்பாலும் நிரூபிக்கின்றன.

    யுலிஸிஸ் சூரிய விண்ணுளவியின் பணி தொடர்கிறது !

    ஏப்ரல் 15, 2008 ஆம் தேதி அண்டவெளித் தேடல் விஞ்ஞானிகள் 1990 ஆண்டு முதல் பதினேழு ஆண்டுகளாய்ப் பரிதியைச் சுற்றி ஆராய்ந்து வரும் “யுலிஸிஸ் சூரிய விண்ணுளவியைப்” (Ulysses Solar Probe) பூமி ஆட்சி அரங்கிலிருந்து தளர்த்தி ஓய்வாக இருக்கவிட்டு 2013 ஆண்டில் மீண்டும் ஆய்வு செய்ய மாற்றியுள்ளார் !  அப்போதுதான் மறுபடியும் பரிதியின் அடுத்த உச்சநிலைக் கதிராட்டம் தொடங்கும் !  அதுவரை விண்ணுளவியின் ராக்கெட் உந்தல் எரிசக்தியை வீணாக்காமல் சேமித்து வைத்து சில இயக்கங்களையும் முடக்கி உளவி ஓய்வெடுத்துக் கொள்ள ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது !  பரிதியிலிருந்து 125 மில்லியன் மைல் தூரத்தில் பரிதியை மையமாகக் கொண்டு சுற்றிவரும் நீள் வட்ட வீதியில் (Helio Centric Orbit) உறங்கி வரும் கருவிகளைச் சூரிய கனல் வெப்பமே எழுப்பிவிடும் தகுதி பெற்றது.  இப்போது ஓய்வெடுக்கும் உளவி பரிதியை விட்டு அப்பால் நகன்று 250 மில்லியன் தொலைவை 2010 ஆண்டில் அடைந்து விடும்.

    [தொடரும்]

    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Astronomy Magazine.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – How did the Solar System form ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world [1998]
    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 National Geographic Picture of Our Universe By Roy Gallant: (1986)
    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
    15 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206291&format=html [சூரியன்]
    16 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40804101&format=html (What will Happen to the Sun ?)
    17 Solar System Formation By Jeff Scott (October 16, 2005)
    18. Spaceflight Now -Breaking News. Controllers Working to Keep “Ulysses Sun Orbiter Alive” By :Stephen Clark (www.spaceflightnow.com/news/n0804/15ulysses) [April 18, 2008]

    19.http://www.spacedaily.com/reports/A_twist_on_planetary_origins_999.html  [January 15, 2015]

    20. http://www.spacedaily.com/reports/Meteorite_material_born_in_molten_spray_as_embryo_planets_collided_999.html [January 15, 2015]

    ******************

    S. Jayabarathan [jayabarathans@gmail.comJanuary 16, 2014

    Attachments area
    Preview YouTube video Ray Jayawardhana – “Rocks, Ice and Penguins: Searching for Clues to Planetary Origins in Antarctica”

    Ray Jayawardhana – “Rocks, Ice and Penguins: Searching for Clues to Planetary Origins in Antarctica”

    Preview YouTube video The origin of mankind, ufos, planetary travel, venus, mars, where we have been

    The origin of mankind, ufos, planetary travel, venus, mars, where we have been
    Share
  • கண்ணன் மனநிலையை தங்கமே தங்கம் …

    –கவிஞர் காவிரிமைந்தன்

    கண்ணன் மனநிலை2

    மகாகவி பாரதியாரின் பாடல்களை அவற்றில் மனம்கொடுத்தோர் அவ்வப்போது திரைப்படங்களிலும் பயன்படுத்தி வந்துள்ளார்கள். இசைமேதை ஜி.இராமனாதன் இசையமைப்பில் தெய்வத்தின் தெய்வம் திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் எஸ். ஜானகி குரலில் இழைந்துவரும் அமுதகானமாக..

    எஸ்.எஸ்.இராஜேந்திரன் .. விஜயகுமாரி நடிப்பில் இயக்குனர்திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வண்ணக்கவிதைக்கு ஒரு வசந்தவிழா எடுத்திருக்கிறார் இசையமைப்பாளர்.

    ஒப்பிலாப் பாடலுக்கு உகந்த இசை பின்னணியாய் அமைந்துவிட அதை உணர்ந்து பாடி உருவம் தந்திருக்கிறார் பாடகி!

    நற்றமிழ் நர்த்தனம் – நலம் சேர்க்கும் மெல்லிசை மோகனம் கேட்கும்போதே பரவசம் தருகிற பாடல்! மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிற இசைவெள்ளம் பாய்கிறது – இதயத்தைத் திறந்துவையுங்கள்!

     

    http://youtu.be/j8y_bhR19oI

    காணொளி: http://youtu.be/j8y_bhR19oI

    படம்: தெய்வத்தின் தெய்வம்
    பாடல்: பாரதியார்
    இசை : ஜி. ராமநாதன்
    குரல்: எஸ் ஜானகி

    பாரதிஜி ராமநாதன்ஜானகிதெய்வத்தின் தெய்வம்
    கண்ணன்…
    கண்ணன் மனநிலையை தங்கமே தங்கம்
    கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்;
    எண்ணமுரைத்துவிடில் தங்கமே தங்கம்..ஆஆ…
    எண்ணமுரைத்துவிடில் தங்கமே தங்கம்
    பின்னர் ஏதெனிலும் செய்வோமடி தங்கமே தங்கம்!

    (கண்ணன்…)

    ஆற்றங் கரை அதனில் முன்னம் ஒருநாள்…
    ஆற்றங் கரை அதனில் முன்னம் ஒருநாள்
    எனை அழைத்துத் தனியிடத்தில் பேசிய தெல்லாம்
    தூற்றி நகர் முரசு சாற்றுவேனென்று
    சொல்லி வருவாயடி தங்கமே தங்கம்..!

    (கண்ணன்…)

    நேர முழுதிலும் அப்பாவி தன்னையே…
    நேர முழுதிலும் அப்பாவி தன்னையே
    உள்ளம்நினைந்து மறுகுதடி தங்கமே தங்கம்..!
    தீர ஒருசொல் இன்று கேட்டு வந்திட்டால்….
    தீர ஒருசொல் இன்று கேட்டு வந்திட்டால் பின்பு
    தெய்வம் இருக்குதடி தங்கமே தங்கம்..!

    (கண்ணன்..)

    Share
  • மாட்டுப் பொங்கல்….

    கிரேசி மோகன்

    ————————————————

    Tamil-Daily-News-Paper_72220575810
    ’’வீட்டுக்கோர் பிள்ளையாய் காட்டுக்கு சென்றாயர்,
    கூட்டத் துடன்கலந்த கோபாலா, -மாட்டுக்குப்,
    பொங்கலின்று, மீண்டும்நீ பூமிக்(கு) எழுந்தருள்வாய்,
    எங்களை மானுடமாய் ஏற்று’’….கிரேசி மோகன்….

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 40

    –சு. கோதண்டராமன்

    மனிதனும் ருதமும்

    amrita rig veda
    மனிதர்கள் ருதத்தை அனுசரித்து நடக்க வேண்டும். அப்படி நடந்தால் கிடைப்பது அம்ருதம். எல்லாத் தேவர்களும் காப்பாற்றுவார்கள். ருதத்தை மீறினால், அதாவது அன்ருதத்தைக் கைக்கொண்டால், வருணன் தண்டிப்பார் என்கிறது வேதம்.

    ருத வழி நடக்க எளிது.(8.31.13)
    ருதத்தைக் காப்பாற்றுபவனை அக்னி காப்பாற்றுகிறார். (6.3.1, 6.7.1)
    இந்திர வருணர்களைப் பூசிப்பவன், தானம் கொடுப்பவனாகவும், ருதத்தை அனுசரிக்கிறவனாகவும், எதிரிகளை வெல்பவனாகவும், செல்வம் பெறுபவனாகவும் இருக்கிறான். (6.68.5)

    மனிதருக்கென்று தனி ருதம் உண்டா? உண்டு. சென்ற கட்டுரையில் சொன்ன மூன்று உதாரணங்களை ஆழ்ந்து கவனித்தால் தெரியவரும்.
    ஆற்றைப் போலத் தன்னிடமுள்ள செல்வத்தை வாரி வழங்குவது, சூரியனைப் போல இடையறாது செயல்படுவது, பசுவைப் போலத் தன்னைச் சார்ந்தாரைக் காப்பது, மூன்றையும் போலப் பிறர்க்குப் பயன்படுபவனாக இருப்பது இவை தாம் மனிதனின் விரதம், தர்மம், ஸ்வதா, ருதம்.

    1. மனிதன் தன் செல்வத்தை வாரி வழங்க வேண்டும்:

    வேதத்தில் பல இடங்களில் தாசுஸ் என்ற சொல் காணப்படுகிறது. கொடுப்பவன் என்று பொருள். தாசுஸுக்குச் செல்வம், மக்கட் பேறு, புகழ், உணவு முதலியன கொடுங்கள் என்று தேவர்கள் வேண்டப்படுகிறார்கள். அதாசுஸ் (கொடுக்காதவன்) அழிய வேண்டும் என்று வேண்டுகிறார்கள்.

    2. எப்பொழுதும் செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டும்:

    தேவர்கள் அளிக்கும் செல்வத்தை மனிதன் உழைப்பு என்னும் வருத்தத்தை அளிக்கும் வழியினாலேயே அடைகிறான்.(8.47.6)
    தேவர்கள் எப்பொழுதும் கடுமையாக உழைப்போருக்கு நண்பர்களாக இருப்பர். (4.33.11)

    3. தன்னைச் சார்ந்து வாழும், தாழ்ந்த நிலையில் இருப்போரைக் காக்க வேண்டும்:

    சார்ந்து வாழ்வது மனிதனின் நியதி. பட்சிகள் மிருகங்கள் எல்லாம் சிறிது காலத்துக்குத் தாயைச் சார்ந்து வாழ்கின்றன. அதன்பின் தன் காலில் நிற்கப் பழகிக் கொள்கின்றன. பின் கடைசி மூச்சு வரை அவை சுதந்திரமாகவே இருக்கின்றன. மனிதன் குழந்தைப் பருவத்தில் பெற்றவரைச் சார்ந்து வாழ்கிறான். படிப்படியாக அந்த நிலையிலிருந்து விடுபடுகிறான். பின்னர் சமுதாயத்தில் மற்ற மக்களைச் சார்ந்து வாழவேண்டி இருக்கிறது.

    வேதம் கூறுகிறது, மனிதன் செல்வத்தைப் பற்றிச் சிந்திக்கட்டும். ருதத்தின் பாதையில் தெய்வங்களைப் பக்தி மரியாதையுடன் வணங்கட்டும். அவன் தன் அறிவைக் கொண்டு சிறந்ததைப் பேசட்டும். அவன் வலிமையுள்ளோரைச் சார்ந்து வாழட்டும். (10.31.2)
    ஏழைகளுக்கு உணவு அளிப்பவன் வள்ளல். அவன் போரில் வெல்கிறான். பகைவர்களும் அவனுக்கு நண்பர்கள் ஆவர். (10.117.3)
    உணவு நாடி வந்த நண்பனுக்கு உணவு அளிக்காதவன் நண்பனே அல்ல. (10.117.4)
    பணக்காரன் ஏழை யாசகனைத் திருப்தி செய்விக்க வேண்டும். (10.117.5)

    ஆனால் சில மனிதர்கள் அறியாமையால் சில சமயங்களில் விரதத்தை மீறிவிடுகிறார்கள். எனவே தவறுகளை மன்னித்துப் பாவங்களிலிருந்து விடுவிக்கும்-படியான பிரார்த்தனைகள் காணப்படுகின்றன.

    வருணனின் தர்மத்தை மீறியதற்காக நம்மை அவர் தண்டிக்காது இருக்கட்டும். (7,89.5)
    தவறு இழைத்து அறியாமையால் நாங்கள் தேவர்களின் விரதங்களை மீறும்போது அக்னி எங்கள் பிழைகளைத் திருத்தி தேவர்களை உரிய முறையில் மகிழ்விக்க உதவுகிறார். (10,2.4)
    யார் வேண்டுமென்றே விரதங்களை மீறுகிறார்களோ, அதற்காக வருந்துவது இல்லையோ அவர்களை தேவர்கள் அழிக்கிறார்கள். (1.130.8)

     

     

     

     

     
    Graphics courtesy: http://tutudutta.blogspot.com/2012/11/the-devas-and-asuras.html

    Share
  • புதுவாழ்வு பிறந்திடட்டும் !

    -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

    தமிழரது தலைநிமிர
    தைப்பொங்கல் உதவிடட்டும்
    தமிழேறி அரசாள
    தைப்பொங்கல் விளங்கிடட்டும்!

    வீடிழந்து நாடிழந்து
    வேதனையில் நிற்பார்க்கு
    விடிவெள்ளி தோன்றுதற்கும்
    இப்பொங்கல் உதவிடட்டும்!

    படுகொலைகள் தனைநினைந்து
    பரிதவிக்கும் உள்ளமெலாம்
    அதைமறந்து இனிவாழ
    அமைந்திடட்டும் இப்பொங்கல்!

    இனிமேலும் இத்துயர்போல்
    எவர்க்குமே வாராமல்
    இறைவாநீ காத்திடென
    எல்லோரும் பொங்கிநிற்போம்!

    மங்கலங்கள் பலநிகழ
    வழிவகுக்க வேண்டுமென்று
    பொங்கிடுவோம் பொங்கலினைப்
    புத்துணர்வு பிறப்பதற்காய்!

    சங்கெடுத்து ஊதிடுவோம்
    சங்கடங்கள் ஓடிடட்டும்
    பொங்கல்பொங்கி வருவதுபோல்
    புதுவாழ்வு பிறந்திடட்டும்!

     

    Share
  • காதல் நாற்பது – 31

    என்னை நெருங்கி நில் !

    jay

    மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    வருகிறாய் நீ ! வருகை அறிவிப்பு
    வார்த்தை எதுவு மின்றி !
    உன் பார் வைக்குத் தெரியும்படி
    உட்கார்ந் துள்ளேன்,
    சின்னஞ் சிறுவர் புரிவது போல்,
    பொய்க் குறும்போடும்,
    உள்ளொளியில்
    பூரிக்கும் கண்ணி மைகளில்
    பகற் பொழுதில் காணும்
    ஆத்மத் துடிப் போடும் !

    ஐயத்தில் முன்பு நான் கூறியது
    தவறாகத் தெரியுது பார் !
    ஒன்றாக நாமிருவரும் நம்மவர்
    முன்னிலையில்
    நிற்கும் பொழுது
    பாதிரியார்
    திருமணத்தை நடத்தாத
    அந்த தருணத்தைத் தவிர, வேறு
    எந்த மகாப் பாபத்தையும்
    நொந்திடேன் !

    அருகில் வா அன்பனே ! என்னை
    நெருங்கி நில் !
    புறாவைப் போன்றது உன்னுதவி.
    உன் இதயத்துடன் சேர்வதில்
    என் அச்சம் மிகுந்திடும் போது
    உந்தன் தெய்வீகக் தகுதிகளைச்
    சிந்திப்பேன் ஆழ்ந்து !

    கொந்தளிக்கும்
    இந்தச் சிந்தனை யாவும் நீங்கி விடும்
    அனுபவ மிலாப் பறைவைகள்
    பாலை வனம்விட்டு மேல்நோக்கிப்
    பறப்பது போல் !

    ************

    Poem -31

    Sonnets from the Portuguese

    By: Elizabeth Browning

    Thou comest! all is said without a word.
    I sit beneath thy looks, as children do
    In the noon-sun, with souls that tremble through
    Their happy eyelids from an unaverred
    Yet prodigal inward joy. Behold, I erred
    In that last doubt! and yet I cannot rue
    The sin most, but the occasion–that we two
    Should for a moment stand unministered
    By a mutual presence. Ah, keep near and close,
    Thou dovelike help! and, when my fears would rise,
    With thy broad heart serenely interpose:
    Brood down with thy divine sufficiencies
    These thoughts which tremble when bereft of those,
    Like callow birds left desert to the skies.

    **********

    Share
  • உவகை பொங்கும் உழவர் திருநாள்!

    -மேகலா இராமமூர்த்தி

    pongal3.

    விண்ணில் விரிந்த கதிராலே
    வையம் இருளற் றொளிர்ந்ததுவே!
    மண்ணில் விளைந்த கதிராலே
    உழவர் உவகை கொண்டனரே!

    புத்தம் புதிய அரிசியிலே
    பொங்கல் பொங்கிப் பூரிப்பாய்த்
    தித்திப் பான கரும்புடனே
    படைய லிட்டு மகிழ்கின்றார்!

    நித்தம் உழைப்பைத் தான்நல்கி
    நிலத்தை உழுதிடும் காளைகட்கும்
    சித்தம் மகிழும் வண்ணத்தில்
    சிறப்புச் செய்து களிக்கின்றார்!

    கத்தும் கடலின் அழகதனைச்
    சுற்றத் தாருடன் கண்டிடவே
    முத்தாய் ஒருநாள் தெரிவுசெய்தே
    ’காணும் பொங்கல்’ காண்கின்றார்!

    உழவர் சிறப்பை உலகறியச்
    செய்யும் நன்னாள் தைத்திருநாள்
    அழிவின் பாதையில் பயணிக்கும்
    உழவைக் காப்போம்! உயர்ந்திடுவோம்!

     

    Share
  • பொங்கலோ பொங்கலென்று இன்பம் பொங்க கூடிடுவோம்!

    -கவிஞர் காவிரிமைந்தன்

    உலகம் தழைக்க உழைக்கும் மாந்தர்
    வாழ்வில் வரும் ஒருநாள்!
    உயிர்கள் பிழைக்க உணவைத் தரும்                 kaviri1
    உழவர் காணும் திருநாள்!
    உடன்தான் உழைக்கும் மாடுகள்
    கூடவே காணும் பெருநாள்!
    செங்கதிரோன் பங்களிப்பில்
    பச்சைவயல் காட்சிதர…
    நம்குலத்து நாயகர்கள்
    நாளும் உழவு செய்ய
    புதுப்பானை வண்ணம்தீட்டி
    செங்கரும்பு பொங்கலிட்டு
    செந்தமிழில் குலவலிடும்
    எம்குலத்து பெண்டிற்குரல்                                kaviri2
    வந்துகேட்கும் நாளுமிது!
    புத்தாடை தனையணிந்து
    பூக்கோலம் தெருவிலிட்டு
    வந்துதித்த கதிரவனுக்கு
    வாயார நன்றிசொல்லி..
    சுற்றங்களும் சொந்தங்களும்
    சூழ்ந்துநின்று கொண்டாடும்…
    தைத்திங்கள் முதல்நாளை
    தமிழர்தம் திருநாளை
    பொங்கலோ பொங்கலென்று
    இன்பம் பொங்க கூடிடுவோம்!
    இதயம் பொங்க மகிழ்ந்திடுவோம்!

    Share
  • ஆன்ம கண்ணன் -ஜீவன் ராதை….

    கிரேசி மோகன்
    அருணாசல அன்பர் திரு.G.காமேஸ்வரன் இந்த ஓவியத்தை அனுப்பினார், வெண்பா எழுத பணித்து….

    crazy

    “கோடாக நீரில் கிழித்தாலும் , நிச்சலன , –
    ஆடாத நெஞ்சிலே ஆண்டாள்கண் -ணாடிபோல் ,-
    ஆற்றில் கிருஷ்ண அனுபவம் கொள்வதற்கு ,-
    நோற்றனள் மார்கழி நோன்பு “….கிரேசி மோகன்….

    “பிம்பமாய்க் கண்ணன் பிரதிபிம்ப மாய்ராதை –
    அம்பலம் ஆனது ஆற்றுநீர் ; -தம்பலத்தை –
    ஆத்துநீரில் ஆடொன்று பாத்து சிலிர்த்ததாம் –
    ஆத்துமாதான் சிங்கமென்(று)அம் மே “….கிரேசி மோகன் ….அம்பலம் -கோவில் ….ஆட்டுமந்தையில் கலந்து விட்ட சிங்கம் பழக்க தோஷத்தால் ‘’மே’’ என்று கனைத்துத் திரிந்ததாம்….எதேச்சையாக ஆற்று நீரில் தன் பிம்பம் சிங்கமாய் இருப்பது கண்டு தன் சொரூபம் உணர்ந்து கர்ஜித்ததாம்….மந்தைவெளி அகந்தை ஆடு நாம்….நம்முள் இருக்கும் நரசிங்கமே கண்ணன்….இதை உணரவைக்கும் ஆற்று நீரே தெளிவான அசலன குரு….உபயம் பகவான் ஸ்ரீ ரமணர்….

    Share
  • எங்களது தைப்பொங்கல்!

    -எம். ஜெயராம சர்மா -மெல்பேண்

    பொங்கலென்று சொன்னாலே
    பூரிப்புவந்து நிற்கும்
    மங்கலமாய் நினைவுகளும்
    மனங்களிலே நிறைந்துவிடும்!         http://www.dreamstime.com/royalty-free-stock-photo-indian-festival-pongal-illustration-image1753855

    தங்களது வாழ்க்கையிலே
    தைபிறந்தால் வழிபிறக்கும்
    என்றுஎண்ணி யெல்லோரும்
    இன்பமுடன் பொங்கிநிற்பர்!

    குடும்பமெலாம் ஒன்றானால்
    குதூகலமே நிறைந்துவிடும்
    குத்துவிளக் கேற்றிவைத்து
    கொண்டாடி மகிழ்ந்திடுவர்!

    மூத்தவர்கள் கையாலே
    முதலரிசி எடுத்தங்கே
    பால்பொங்கி வருகையிலே
    பக்குவமாய்ப் போட்டிடுவர்!

    சர்க்கரையும் பாலுமங்கே
    சரியாகக் கலப்பதுபோல்
    சன்மார்க்கம் சந்தோஷம்
    சகலர்க்கும் வந்துநிற்கும்!

    பொங்கல்பொங்கி வருகையிலே
    புதுச்சுவையும் கூடவரும்
    புத்துணர்வும் அதனூடாய்
    புறப்பட்டு வந்திடுமே!

    பட்டணத்தில் பொங்கலென்றால்
    பலபேர்க்குத் தெரியாது
    பட்டிக்காட்டான் பொங்கலென்று
    பகர்ந்துமே நின்றிடுவர்!

    பட்டிக்காட்டான் இல்லையென்றால்
    பட்டணமே இருக்காது
    பட்டினியாய்க் கிடந்தங்கே
    படவேணும் பலபாடு!

    சேற்றிலே காலைவைத்துச்
    சோற்றையே தந்த அவன்
    நாட்டிலே இல்லையென்றால்
    நம்பொங்கல் இனித்திடுமா!

    பொங்கலென்று சொன்னாலே
    புதுத்தெம்பு தருபவனே
    எங்களது ஏருழவன்
    ஏனதனை எண்ணவில்லை?

    மஞ்சள்இலை வந்துநிற்கும்
    மங்கலங்கள் நிறைந்துநிற்கும்
    பொங்கிவரும் பூரிப்பால்
    பொங்கலே மணக்குமங்கே!

    பட்டணத்தார் பொங்கல்பார்க்கப்
    பட்டிக்காடு போகின்றார்
    பட்டிக்காடு எல்லாமே
    பால்பொங்கி நிற்கிறது!

    பட்டணத்தில் பொங்கலிப்போ
    பத்திரமாய்க் கிச்சனிலே
    பாத்திரத்தில் இருக்கிறது
    பார்க்கமட்டும் பொங்கலாக!

    என்றாலும் பொங்குகிறார்
    இனிப்புவர வேணுமென்று
    இனிக்கட்டும் எல்லார்க்கும்
    எங்களது தைப்பொங்கல்!

    Share