ஜனவரி 19, 2015

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு முனைவர் இல. சுந்தரம் அவர்கள்

 

இல சுந்தரம்

 

 

வல்லமை இதழின் இந்த வார வல்லமையாளராகச் சிறப்பிக்கப்படுபவர், சென்ற செவ்வாய்க் கிழமையன்று (ஜனவரி 13, 2015) “தமிழ்நிதி விருது” பெற்ற கணினித்தமிழ் அறிஞர் இல. சுந்தரம் அவர்கள். முனைவர் இல. சுந்தரம் எஸ். ஆர். எம். பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராயத்தின் துணைப்பேராசிரியர். இவர் தமிழ், கணினி என இருதுறைகள் சார்ந்த கல்வியில் பட்டங்கள் பெற்றவர் (எம். ஏ., எம். ஃபில், எம்.சி.ஏ., எம்.பி.ஏ. முதுகலைப்பட்டங்களும் முனைவர் பட்டமும்). இத்திறமையைச் செம்மையாகப் பயன்படுத்தி கணினித்தமிழ் வளர்ச்சியிலும், தமிழ் மென்மம் உருவாக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

தொல்காப்பிய எழுத்ததிகாரத்திற்கு மாணவர் உரை நூல் எழுதும் இவரது தமிழிலக்கிய ஈடுபாட்டிற்குச் சற்றும் குறைந்ததல்ல இவரது கணினித்தமிழ் ஆர்வமும். தமிழ் மரபுக்களஞ்சியக் கணினித்திட்ட அமைப்பாளராகவும், உத்தமம் (உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம் / The International Forum for Information Technology in Tamil – INFITT) உறுப்பினராகவும் கணினித் தமிழ்வளர்ச்சியில் பங்காற்றிவரும் இல. சுந்தரம் அவர்கள் ஒருங்குறி தமிழ் எழுத்துருக்களை உருவாக்கி, அவற்றை பொதுப்பயன்பாட்டுக்கு வெளியிட்டுள்ளார்.

இல சுந்தரம்4

கட்டற்ற கணிநுட்ப வளர்ச்சிக்கு உதவிவரும் ‘கணியம்’ இவர் உருவாக்கிய 10 ஒருங்குறி தமிழ் எழுத்துருக்களை இந்த ஆண்டின் புத்தாண்டு பரிசாக அறிவித்துள்ளது (http://www.kaniyam.com/ila-sundaram-unicode-tamil-fonts/). இத்தளத்திற்குச் சென்று இந்த எழுத்துருக்களைத் தரவிறக்கிப் பயன்படுத்தலாம். இவை SIL Open Font License, Version 1.1. என்ற கட்டற்ற உரிமையில் வழங்கப் படுகின்றன. எனவே இந்த பொதுப்பயன்பாட்டு விதியின்படி இந்த எழுத்துருக்களை யாவரும் பயன்படுத்தலாம். பகிரலாம். மாற்றங்கள் செய்து புது எழுத்துருக்களாகவும் வெளியிடலாம்.

இவர் உருவாக்கிய கட்டற்ற ஒருங்குறி தமிழ் எழுத்துருக்களின் மாதிரிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன:

இல சுந்தரம்5

“கணினியில் தமிழ்மொழியின் பயன்பாடு பெருகியுள்ளது. தமிழ்மொழியின் வளர்ச்சிக்குக் கணினியின் பங்களிப்பு தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது. மொழி ஆய்வுக் கருவியாகக் கணினியைப் பயன்படுத்திவருகிற நிலையில் தமிழ்மொழித் தரவுகளை அதற்கு ஓர் ஒழுங்கமைவுடன் கற்றுத்தரவேண்டியுள்ளது. அதாவது கணித அடிப்படையில் மொழியில் உள்ள மொழியியல் கூறுகளைக் கணினிக்கு ஏற்ற வகையில் மாற்றித்தரவேண்டியுள்ளது. இத்தகைய வழிமுறைகளைக் கொடுப்பதே கணினி மொழியியல் என்பதாகும். மொழி செயல்படுவதில் உள்ள ஒழுங்குமுறையின் தொகுப்புதான் இலக்கணம். இத்தகைய ஒழுங்குமுறை நவீன, தொழில்நுட்ப வளர்ச்சிகளினாலும் மொழி உலகமயமாக்கச் சூழலினாலும் சிதைந்தும் மாறுபட்டும் வருகிறது. மொழியை இத்தகைய சிதைவுகளிலிருந்து மீட்டெடுக்க மொழியியல் கூறுகளை முறையாகக் கற்று, பயன்படுத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.”

… என்று கணினித் தமிழ்வளர்சியின் இன்றியமையாமையைக் குறிப்பிடும் கணினி தமிழ் அறிஞரான இல. சுந்தரம், அத்துறையின் வளர்ச்சியில் கொண்டுள்ள அக்கறையின் காரணமாக கணினி தமிழ் எதிர்கொள்ளும் தடங்கல்கள், தமிழ் மென்மம் வளர்ச்சியின் தேவைகள் ஆகியவற்றைக் குறித்து உலகத்தமிழ் கருத்தரங்குகளில் ஆய்வறிக்கைகள் வாசித்துள்ளார்.

இல சுந்தரம்3

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் உயராய்வு மையமும், உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றமும் இணைந்து நடத்திய 11வது உலகத் தமிழ் இணைய மாநாட்டில், ‘பயனர் நோக்கில் மென்தமிழ் தமிழ்ச் சொல்லாளர்’ என்ற ஆய்வறிக்கையை வாசித்துள்ளார். மேலும் இவரது, ‘கணினிவழித் தமிழ்மொழியாய்வில் பொருள் மயக்கம்’ , ‘கணினிவழிச் சொல்லடைவு மென்மம் உருவாக்கமும் தமிழ்மொழியமைப்புச் சிக்கல்களும்’ போன்ற கணினித் தமிழ்க் கட்டுரைகளும் கணினித்தமிழ்த் துறைக்கு இவராற்றிய பங்களிப்புகளாகும்.

இல சுந்தரம்7

கணினித் தமிழ் வளர்ச்சித் துறையில் தொடர்ந்து பங்காற்றிவரும் இல. சுந்தரம் அவர்களது ஆர்வத்தைப் பாராட்டி, இதுவரை இவராற்றிய தமிழ்ப் பணியினைக் கருத்தில் கொண்டு, அவர் இத்துறையில் மேலும் பங்களிக்க உற்சாகமூட்டும் வகையில், திரு இராம வீரப்பன் தலைவர் சென்னைக் கம்பன் கழகம் தலைமையில் இளம் தலை முறையினரை ஊக்குவிக்கும் திட்டத்தில், ‘தமிழ்நிதி ‘ விருது வழங்கப்பட்டு இல. சுந்தரம் சிறப்பிக்கப்பட்டுள்ளார். இளம் வயதில் இவர் செய்துள்ள இந்த சாதனையைப் பாராட்டி வல்லமை இதழ் குழுவினரும் இவரை இந்தவார வல்லமையாளாராக அறிவித்து பாராட்டி மகிழ்கிறோம்.

 

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]

தொடர்புக்கு:

இல. சுந்தரம் – http://ilasundaram.blogspot.com/
கணினித்தமிழ்ப் பயிற்சி – http://tamilcomputingcourse.blogspot.com/
மின்னஞ்சல் – ilasundaram@gmail.com

படங்கள் உதவிக்கு நன்றி: மயிலை நூ த லோ சு, கணியம்

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “இந்த வார வல்லமையாளர்!

 1. திங்கள்தோறும் ஒரு வல்லமையாளர் 
   வல்லமை மின்னிதழில் தோன்றுகிறார்..
  அன்னவர்பற்றி அரிய தகவல்கள் நம் 
  கண்முன்விரிய காட்சி தருகிறார் 
  ஒவ்வொரு துறையிலும் உச்சம் தொட்டிட்ட 
  வித்தகர் இவரென நாம் அறிய 
  தேமொழி முதலாய் தேர்வுக்குழுவினர் 
  ஆய்வுதான் நடத்துகின்றார்!
  இவ்வரிசையில் இன்று முனைவர் இல.சுந்தரம் 
  மென்பொருள் கணினி என்கிற துறையில் 
  புதுமைகள் புரிந்துவரும் இளம் பேராசிரியர் 
  தமிழ்மொழி கணினி யுகத்தில் 
  எதிர்வரும் இடர்களைய உதவுகின்றார் 
  இலக்கியப் பக்கமும் இவரின் முகம் 
  இனிதே தெரிகிறது! தொல்காப்பிய 
  எழுத்ததிகாரத்திற்கு மாணவர் உரை வருகிறது 
  தமிழ்நிதி விருது பெற்றிட்ட 
   முனைவர் இல. சுந்தரம் அவர்களை
  வல்லமையாளர் விருது வழங்கிச் 
  சிறப்பித்தது மிக அருமை!
  வாழ்த்துகள்! பாராட்டுகள்!! 

  காவிரிமைந்தன்

 2. தமிழ்நிதி விருது பெற்ற திரு இல.சுந்தரம் பெரிய சாதனையைப்படைத்துள்ளார். அவருக்கு என் நல்லாசிகளுட ன் நல்வாழ்த்துகள்

 3. அரிய தொண்டாற்றி அதன் மூலம் சாதனை படைத்திருக்கும் இல.சுந்தரம் அவர்களுக்கு பாராட்டுக்கள்,வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.