குழல்வாய் மொழியாள் கொண்ட ஊடல்!
மீனாட்சி பாலகணேஷ்
காவியத்தலைவன் இவன் ஆடவர்களுக்குள் மிகவும் உயர்வானவன்; அவனுக்கு ஈடு இணை யாருமில்லை; சூரிய சந்திரர்கள் தேரிலேறி வலம் வந்து மலர்களைத் தூவிப் பணியும் குற்றாலமலையில் செம்பொன்னாலாகிய கோவிலினுள் உறைபவன். அவனை மலர்களைத் தூவி இவ்வுலகத்து அடியார்கள் போற்றுவார்கள்; அவன் திருநாமம் குற்றாலநாதன்.
இவள் அவனுடைய உயிரானவள், உடலிலும் பாதி கொண்டவள், குழல்வாய் மொழியாள் எனும் காதல் நாயகி அவனிடம் ஊடல் கொண்டு விட்டாள்! காரணம் ஏன் தெரியுமா?
கடல்முத்துத் தான் வெளேரென வெளுத்திருக்கும்; ஆனால் மழுப்படை ஏந்திய அவனுடைய பவள இதழ்கள் வெளுத்துள்ளனவாம். இதனால் அவனுடைய நாயகி தானே இதற்கு ஒரு காரணத்தைக் கற்பித்துக் கொண்டு, “இதுவும் உமக்கு ஒரு அழகு ஆகின்றது அல்லவோ,” எனச் சினந்து கூறி, அவன் வேறொரு பெண்ணுடன் சரசமாடி விட்டு வந்ததாக எண்ணி ஊடல் கொண்டு விட்டாள்.
தேரேறுஞ் சூரியர்கள் வலம்புரியும் வல்மபுரியின் செம்பொற் கோயில்
தாரேறு மலர்தூவித் தாலத்தார் பரவியகுற் றாலத் தாரே
ஏரேறு கடல்பிறந்த கருணைநகை முத்துவெளுத் திருப்ப தல்லால்
ஆரேறு மழுப்படையீர் பவளம்வெளுத் திருப்பதழ காகுந் தானே (1).
ஊடலைத் தணிக்கத் தன் நாயகியிடம் மென்மையான சில மொழிகளைக் கூறுகிறான் குற்றாலநாதன். “காகங்கள் கூட அணுக முடியாத திரிகூட மலையின் அணங்கே! உனது கற்பின் திறத்தை வேதங்கள் எல்லாம் உயர்வாகக் கூறும்; அதனால் அது வெளுப்பாக உள்ளது (வெண்மையாய் பளிச்சிடுகிறது); உனக்கு மூத்தவனான உனது அண்ணன்- நீலமேக வண்ணனான கண்ணன்- பள்ளி கொண்ட பாற்கடலும் வெளுப்பாய் உள்ளது; யாம் இருக்கும் இமயமாம் பனிமலையும் வெளுப்பாகவே உள்ளது; விபூதிப் பூச்சினால் என் உடலெல்லாம் வெளுப்புத்தான்; ஆகவே அதரம் மட்டும் வெளுப்பாகாது என யாரால் சொல்ல இயலும்? நீ இதற்கெல்லாம் (அநியாயமாக) ஒரு காரணம் கற்பிக்கலாமோ?” எனப் பணிவாக அன்போடு கேட்கிறான்.
காகமணு காததிரி கூடமலை யணங்கேயுன் கற்பின் சீர்த்தி
யோகமுறை பணிந்தேத்தி யுயர்மறையெ லாம்வெளுப்பா யுனக்கு மூத்த
மேகவண்ணன் கடல்வெளுப்பாய் யாமிருக்கும் மலைமுழுதும் வெளுப்பா யென்றன்
ஆகமெலாம் வெளுப்பானா லதரம்வெளுப் பேறாதென்று ஆர்சொல் வாரே. (2)
***********************************************
நாம் இன்னும் இந்த ஊடல் இலக்கியத்தைத் தொடர்ந்து படிக்கும் முன்பு இதைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம். இந்த அழகான ஊடல் சிற்றிலக்கியத்தை இயற்றியவர் யார் தெரியுமா?- திரிகூட ராசப்பக் கவிராயர்- ஆம்- நமக்குக் கொஞ்சு தமிழில் குற்றாலக் குறவஞ்சியைத் தந்தவர் தான் இந்தத் திருக் குற்றால ஊடல் என்னும் (உண்மையாகவே சிறிய – 20 பாடல்களைக் கொண்ட) இலக்கியத்தைத் தந்துள்ளார். குழல்வாய்மொழியம்மை குற்றாலநாதரிடம் ஊடல் கொண்டதாகப் புனைந்து இருவருக்குமிடையே நிகழும் வாக்குவாதங்களைச் சுவை மிகுந்த புராணக் கதைகளை இணைத்துத் தொகுத்து நமக்கு, ஏன் தமிழுக்கு ஒரு இலக்கிய நயமிகுந்த நூலை அளித்துள்ளார். இதுவும் ஒரு அந்தாதி போலவே அமைந்துள்ளது நூலுக்கு அதிகச் சுவை சேர்க்கிறது.
சாமானிய மானிடக் காதலர்கள் தாம் ஊடுவார்கள்; ஏசிக் கொள்வார்கள்; கடவுளர்கள் ஊடலாமோ? இலக்கியத்திற்குச் சுவை சேர்க்க அவர்கள் ஊடுவது போலக் காட்டி, அதன் மூலம் வாக்குவாதங்களை அவர்களிடையே எழுப்பி, புராணக் கதைகளையும் அவர்கள் தம் திருவிளையாடல்களையும் கூறுவதுண்டு. மனிதர்களாகிய நாம் செய்வது போலவே பழித்துரை போலவும், அங்கதம் போலவும் கூறுவது உண்டு. அதில் இது ஒரு அருமையான சிறு நூல். எதிர்பாராத ஒரு சந்தர்ப்பத்தில் இந்த நூலைக் கண்ணுற்றதும் எனது ஆச்சரியத்திற்கும் மகிழ்ச்சிக்கும் எல்லையே இல்லை.
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!!
இதோ! நான் ரசித்துச் சுவைத்த திரிகூட ராசப்பரின் தமிழை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நூலின் தலைவி- தலைவனிடம் திரும்பச் செல்லலாமா? அவர்கள் வாக்குவாதங்களைப் பார்க்கலாமே; அவர்கள் ஊடல் எவ்வாறு தீர்ந்தது எனத் தெரிந்து கொள்ள வேண்டாமோ? வாருங்கள்……
************************************************
தன் தலைவன் இவ்வாறு சொன்ன பின்பும் குழல்வாய்மொழியாளின் ஐயம் தீர்வதில்லை. இதெல்லாம் எளிதில் தீர்ந்து விடும் ஐயங்களா? நன்கு, தீர விசாரித்து அல்லவோ தீர்த்துக் கொள்ளுதல் வேண்டும்?!! ஐயனிடம் கூறுகிறாள்:
“திரிகூடத்து அண்ணலே! நீர் ஒருகாலத்தில் உமது உடலில் எனது முலைக்குறியும் வளைக்குறியும் பெற்றிருந்தவர் தானே! (பார்வதி தேவி அன்னை காமாட்சியாக அவதரித்த காலத்தில், மணலால் இலிங்கப் பிரதிமை செய்து ஈசனைப் பூசித்து வரும் பொழுது இறைவனார் அவளைச் சோதிக்க எண்ணி ஆற்றில் வெள்ளப் பெருக்கெடுக்கச் செய்தார். அப்போது அந்த இலிங்கத்தை உமாதேவியார் நீர்ப்பெருக்கினின்று காப்பாற்ற வேண்டி இறுகக் கட்டி அணைத்துக் கொண்டதால், அவளுடைய முலைத் தழும்பும், கரங்களில் அணிந்த வளைகளின் தழும்பும் அந்த இலிங்கத்தில் பதிந்தன- அதைத்தான் இங்கு கூறுகிறாள் குழல்வாய் மொழியாள்) இப்போது உமது திருமார்பில் மேலும் ஒரு மைக்குறி வந்தது எவ்வாறு? வாசனை மிகுந்த மஞ்சள் குறி வந்தது எவ்வாறாம்? வேறு எவளோ ஒருத்தி உம்மை வந்து தழுவிக் கொண்டாளோ? அவள் பெயரை எனக்குக் கூறும் ஐயா! உமது நெஞ்சம் முழுதும் வஞ்சம் தான் உடையவரோ நீர்?” எனச் சினத்துடன் ஆத்திரமாக உரைக்கிறாள் குழல்வாய்மொழியாள்.
ஆரிருந்தும் தனித்திருந்தும் பிறைமவுலித் திரிகூடத் தண்ண லாரே
சீரியபொன் முலைக்குறியும் வளைக்குறியும் பெற்றிருந்த தேவ ரீர்தாம்
மார்பிலொரு மைக்குறியும் வாடைமஞ்சட் குறியுமன்று வரப்பெற் றீரே
நேரிழைதன் பேருரையீர் வஞ்சம்தா னோஉமது நெஞ்சந் தானே. (3)
நமது காவியத் தலைவன் குற்றாலநாதன் பாடு திண்டாட்டம் தான்! என்ன விடை பகருகிறான் எனக் காண்போமா?
“என் நெஞ்சில் நீ இருக்கும்போது நான் எவ்வாறு இன்னொருத்தியை நினைக்க இயலும்? ஊஞ்சலாடும் குழைகளைக் காதிலணிந்த கயல்விழிப் பெண்ணே! குழல்மொழியே! எனது இந்த ஒரு சொல்லைக் கேளாய்! இது மைத்தீற்றலல்ல; நான் தலையில் அணிந்துள்ள திருச்சாந்து (நறுமண நெய்) வழிந்ததால் உண்டான கருமை நிறமாகும்; மஞ்சளாக நீ காண்பதும் என் தலையில் நான் அணிந்துள்ள அலர்ந்த கொன்றை மலர்களிலிருந்து உதிர்ந்த பூந்தாதுகள் தானே,” என விளக்க முற்படுகிறான்.
நெஞ்சகத்தி னீயிருக்க நின்னையல்லா லொருவரையு நினைய லாமோ
உஞ்சலிட்ட குழைதடவும் கயல்விழிப்பெண் குழல்மொழியே ஒன்று கேளாய்
அஞ்சனத்தின் வண்ணமல்ல திருச்சாந்து வழிந்துநிற மதுவே யன்றி
மஞ்சளைப்போ லிருந்தநிறம் பொன்னிதழித் தாதவிழ்ந்த மாற்றந் தானே (4).
இதனாலெல்லாம் சந்தேகம் தீர்ந்து குழல்வாய்மொழியாள் தனது நாயகனை நம்பி விடுவதாக இல்லை: பின்னும் கூறுகிறாள்: “வெண்மையான காளை மீதேறி நீர் காட்சி தருவது எப்படியுள்ளது தெரியுமா குற்றாலத்துப் பெரிய மனிதரே! மாற்றுக் குறையாத வெள்ளி போன்ற மலை மீது (பனி படர்ந்த இமயமலை எனக் கொள்ளலாம்) பவளமலை பெருமையாக வீற்றிருப்பது போல உள்ளது. வெண்மையான கங்கை ஆறு (பெருகுவதால் வெள்ளையாய்க் காண்கிறது) உமது சடையில் இருக்கிறது; வெள்ளையாகப் பிறைச் சந்திரனும் கீற்றாக அங்கு உள்ளது; இப்படி எல்லாம் வெள்ளையும் சள்ளையுமாக இருக்க, நீங்களும் நேற்று வெள்ளை சார்த்திக் கொண்டு (நேர்த்தியாக உடுத்துக் கொண்டு) காட்சியளித்ததை இன்று உமது கண்கள் சிவப்பாகி விட்டதால் (உறக்கமின்மையால்?) நிறுத்தி விட்டீரே!” என்று கடிந்துரைக்கிறாள்.
மாற்றுவெள்ளி மலையிலொரு பவளமலை கொலுவிருக்கு மகிமை போல
வேற்றுவெள்ளை விடைமீதில் காட்சிதருங் குற்றாலத் தெந்தை யாரே
ஆற்றுவெள்ளை சடையிருக்கக் கீற்றுவெள்ளை மதியிருக்க அதிக மாநீர்
நேற்றுவெள்ளை சாத்தினதை இன்றுசிவப் பானகண்ணால் நிறுத்தி னீரே (5).
குற்றாலநாதன் இப்போது உண்மையாகவே தடுமாற்றம் கொள்கிறான். என்னதான் சொல்லி இவளை சாந்தப் படுத்துவது? அவனுடன் ஊடுவதையே ஒரு முனைப்பாய்க் கொண்டு நிற்கிறாள் இவள்! அவனுக்கும் சலிப்பாக இருக்கிறது. கூறுவான்: “உன்னைத் தனியே விட்டுவிட்டு நான் என்றுமே பிரிந்து சென்றதில்லையே கண்மணியே! நீயே ஒருமுறை என்னைப் பிரிந்து பனிமலையில் சென்று நின்றாய் அல்லவோ? நாமும் அந்தத் தனிமையைப் பொறுத்துக் கொண்டு வடக்குத் திசையில் ஆலமரத்தினடியில் தனித்துத் தவத்தில் அமர்ந்திருந்தோம். அதனைக் கண்டு பொறுக்க மாட்டாமல் சிறுபிள்ளைத் தனமாகப் பண்பின்றி அன்றலர்ந்த மலர் அம்புகளைக் குவித்து ஏந்தி வந்தவனான கருமையான மேனி நிறம் கொண்ட மன்மதனை நாம் சினந்து மூன்றாம் கண்ணைத் திறந்து பார்த்ததனால் அல்லவோஅந்த விழி சிவந்தது ? வேறு எதனாலும் அல்ல எனக் காண்பாய் குழல் மொழியே, பூங்கொடி போன்றவளே!”
நிறுத்தி நாம் பிரிந்ததில்லை நீபிரிந்து பனிவரைக்கே நிற்கு நாளில்
பொறுத்துநாம் வடவாலின் கீழிருந்தோ மதுதனக்குப் பொறுப்பில் லாமல்
சிறுத்துநாள் மலர்தூவிக் கறுத்துவந்த சேவகனைச் சிவந்த போது
குறித்துநாம் பார்த்தவிழி சிவப்பன்றோ குழல்மொழிப்பூங் கொடிஅன் னாளே (6).
தட்சனின் மகளான தாட்சாயணி தன் கணவரான சிவபிரானைத் தன் தந்தை (தட்சன்) அவமதித்ததால் சினம் கொண்டு, சினத்தீயில் தன்னை எரித்துக் கொள்கிறாள். பின்பு இமவானின் (பனிவரையின் மன்னன் அவன்) மகளாகப் பிறந்து வளர்கிறாள்; துணையைப் பிரிந்த சிவபிரானும் தனிமையில் தவம் செய்வாராயினார். தக்க பருவம் வந்ததும் தவம் செய்யும் சிவபிரானுக்குப் பணிவிடைகள் செய்ய, பர்வதராஜன் குமாரி பார்வதி, அவருடைய ஆசிரமத்தை அடைகிறாள். அதைத் தான் இங்கு கூறுகிறார் குற்றாலநாதர். அப்போது சூரபதுமன், தாரகன் எனும் அரக்கர்களின் தொல்லை பொறுக்காத தேவர்கள் உமையும் சிவனும் திருமணம் புரிந்து கொண்டால் அவர்களுக்குப் பிறக்கும் ஒரு ஒப்பற்ற மகனே இவ்வரக்கர்களை அழிக்க வல்லவனென எண்ணி, சிவனாரின் தவத்தைக் கலைக்க மன்மதனை அனுப்புகின்றனர். அவனும் பொறுப்பின்றி அவரை உடனே காமவயப்படுத்த வேண்டும் என்னும் பேராசையால் எல்லா மலர்களையும் ஒருசேரத் தூவுகிறான். இந்தப் பண்பற்ற செயலுக்காக அவனைச் சினந்து சிவபிரான் தம் நெற்றிக் கண் நெருப்பால் அவனை எரித்தார் என்பது புராணம். பின்பு பார்வதி சிவனாரைக் கணவராக அடைய விரும்பி, பனிமலையில் தனித்திருந்து கடுமையாகத் தவம் செய்கிறாள். இறுதியில் ஈசனும் அவளை மணந்து கொள்கிறார். அதையும் இங்கு குற்றாலநாதர் தன் நாயகி குழல்வாய்மொழி அம்மைக்கு நினைவு படுத்தி அருளுகிறார்.
இதனாலெல்லாம் சமாதானம் அடைந்து விடுவாளா இந்த நாயகி? வேண்டுமென்றே பழைய கதைகளை நினைவு படுத்தி வீண்வாதம் புரிகிறாள் பாருங்கள்! “அந்த நாட்களில் நீர் வெறும் கோவணமும் புலித்தோல் மேலாடையும் அணிந்து கொண்டு சோம்பேறியாக ஆலமர நிழலில் தான் வாழ்ந்தும் தூங்கியும் பொழுதைக் கழித்து இருந்தீர் என்பது மறந்து போயிற்றோ? என்னைத் திருமணம் செய்து கொண்டதன் பின்னரே நல்ல உடைகளும் இருப்பிடமும் பெற்றுள்ளீர் தெரியாதோ? பிறகு இந்நாட்களில் நல்ல சலவை உடைகள் அணிந்து பூமாலை எல்லாம் அணிந்து கொண்டு தினமும் மகிழ்ச்சியாக இருந்தால் இப்படியெல்லாமா உமக்கு எண்ணம் செல்லும்? சங்கம் வளர்த்த நீண்ட வீதிகளைக் கொண்ட மதுரை மாநகரத்தவரே! பொலிவாகத் திகழ்பவர்கள் (இளம் மங்கையர்கள்) இன்னும் சில பேரும் கூட உமக்கு வேண்டாமோ சொல்லுமையா!” என்கிறாள்.
அந்நாளிற் கோவணமும் புலித்தோலும் வேடமுமா யாலின் கீழே
பன்னாளும் தூங்கினநீ ரென்னாலே மணக்கோலப் பதம்பெற் றீரே
இந்நாளிற் சலவைக்கட்டிப் பூமுடித்துத் தினஞ்சுகித்தா லிதுவோ செய்வீர்
மின்னாரு மினிச்சிலபேர் வேண்டாவோ நீண்டசங்க வீதி யாரே. (7)
‘தூங்கின நீர்’ என்பதற்கு அறிதுயில், யோகநித்திரை என்பது மற்றொரு பொருள். சங்கம்- வீணர்கள் கூட்டம் எனவும் ஒரு பொருள் கொள்ளலாம்!
அம்பிகையைக் கலியாணம் செய்துகொள்வதற்கு முன்னே தூங்கித் தூங்கிக் காலத்தைக் கழித்தான். அம்பிகையைத் திருமணம் செய்து கொண்டபின் வந்த ‘ஆக்கத்தால்’ (செல்வச் செழிப்பால்) ‘சோம்பர்’கள் கூட்டத்தில் கழிக்கின்றான். முயற்சியின்றிச் செல்வம் வந்தால், ‘அற்பனுக்குப் பவிஷு வந்தால்’ அர்த்தராத்திரியிலும் குடைப்பிடிக்க வீணர் கூட்டம் வேண்டாவோ என ஏசுகின்றாள்.
இப்போது குற்றாலநாதருக்குச் சிறிது கோபம் வரத்தான் செய்கிறது. அளவுக்கு மீறி அல்லவா அவரைக் குழல்மொழியாள் ஏளனம் செய்கிறாள்? உன் குடும்பக் கதை மறந்து போய் விட்டதோ எனத் திரும்பக் கேட்கிறார். “குழல் மொழியாளே! கயல்கண் மாதே! உன் அண்ணன் இராமன் மரவுரியையும் மான்தோலையும் தரித்துக் கொண்டு அரிய தவ வேடம் தாங்கி அந்த நாட்களில் காடுகளில் எல்லாம் அலைந்து திரிந்தான்; அதன் பிறகு அயோத்தி சென்று சீதையுடன் கூடியிருந்து உலகை ஆண்டான்; அவன் இங்ஙனம் செய்ததை எல்லாம் கேள்விப்பட்டிருந்தும் இவ்வாறு நீ என்னிடம் கூறலாகுமோ?” என்கிறான் நாதன்.
வீதியாய் மரவுரிகிட் டினாசம்பூண் டரியதவ வேடம் தாங்கி
ஆதிநாட் கான்தோறு மலைந்துதிரிந் தானதுபோ யயோத்தி மேவி
மாதுசீ தையைப்புணர்ந்து பாராண்ட வுங்களண்ணன் மார்க்க மெல்லாம்
காதுகேட் டிருந்துமிது சொன்னதென்ன குழல்மொழிப்பூங் கயல்கண் மாதே. (8)
அவளுடைய அண்ணனைப் பற்றிக் குறைவாகக் கூறினால் கோபம் வருமா வராதா? இன்னுமே சினம் கூடுகிறது குழல்மொழியாளுக்கு! கூறுகிறாள்:
“பிட்சாடனராகித் (தாருகாவனத்து ரிஷிபத்தினிப்) பெண்களிடம் சென்று பிச்சை கேட்டீர்! அவர்களும் உம்மழகில் மயங்கி, துகிலும் வளையும் நெகிழ வந்து பிச்சையிட்டனராமே! நீர் பின்பு பரம சாது போலப் புலித்தோலை உடுத்திக் கொண்டீர்! (அபிசார வேள்வி செய்து முனிவர்கள் ஏவிய புலியைக் கொன்று அதன் தோலையும் உடையாக உடுத்துக் கொண்டீர்). பிறைச் சந்திரனான சோமனைத் தலையில் மேல் அணிந்து கொண்டீர் (சோமன் என்பது பஞ்சகச்சமாக ஆடவர் இடையில் அணியும் ஆடையையும் குறிக்கும்; இங்கு ‘இடையில் அணிவதைத் தலையில் அணிந்தீரே’ எனப் பரிகாசமாகக் கூறுவதாக அமைந்தது). பின்பு தோன்றிய பாம்பு ஒன்றைப் பிடித்துக் காதில் ஆபரணமாகப் பூண்டீர்! (அபிசார வேள்வியில் ரிஷிகள் உம்மீது ஏவிய பாம்பைப் பிடித்துக் காதில் அணிந்து கொண்டீர்!) போதாக்குறைக்குக் கழுத்தில் நஞ்சை (விஷத்தை) வைத்துக் கொண்டீர்! (பாற்கடல் கடைந்த போது பாம்பு கக்கிய ஆலகால நஞ்சை சிவபிரான் ஏற்று உண்ண, அம்மை அவரது குரல்வளையைத் தடவி அதை அங்கேயே நிலைத்திருக்கச் செய்கிறாள்). பெருத்த பேய்களைத் துணையாகக் கொண்டீர்! இதனால் உம்மைப் போல ஒரு பித்தர் எந்த உலகிலும் உள்ளாரோ குற்றாலத்து உறையும் அண்ணலே!” என ஏளனமும் சினமுமாக மொழிகிறாள் குழல்வாய்மொழியாள்.
இது மேலெழுந்த வாரியாகப் பார்ககத்தான் ஏளனமாகக் கூறுவது போலக் காணப்படுகிறது. ஒவ்வொன்றும் அண்ணலின் புகழை அல்லவோ பாடுகிறது? நிந்தா ஸ்துதி பாடுவதில் குழல்வாய் மொழியாள் போலும் காதலிகளும் வல்லமை பெற்றவர்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி!
மாதர்பாற் பலியிரந்தீர் பலியிடப்பைந் தார்துகிலும் வளையும் கொண்டீர்
சாதுவாய்த் தோலுடுப்பீ ரரையிலுள்ள சோமனையுந் தலைமேற் கொள்வீர்
காதிலே பாம்பையிட்டீர் கழுத்திலே நஞ்சையிட்டீர் கனபேய் கொண்டீர்
ஆதலா லுமைப்போலும் பித்தருண்டோ குற்றாலத் தண்ண லாரே (9)
(ஊடல் இன்னும் தொடரும்)