உயிரினங்களின் தோற்றமும் அவற்றின் பரிணாம வளர்ச்சியும் இயற்கையின் மிகப்பெரிய அதிசயங்களில் ஒன்றாக இன்றளவும் மதிக்கத்தக்கவை. உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி பற்றிய கருத்துக்களை மேனாட்டு அறிஞர்கள் ஆய்வு செய்து வெளியிடுவதற்கு வெகு காலத்திற்கு முன்பாகவே தமிழரின் தலையாய இலக்கண நூலான தொல்காப்பியம் அவற்றைத் துல்லியமாக விளக்கியிருப்பது நம்மை வியப்பிலாழ்த்துவதாகும்.
ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே; இரண்டு அறிவதுவே அதனொடு நாவே; மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே; நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே; ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே; ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே;- நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே.(தொல்: மரபியல்)
என்று நூற்பா வகுத்த தொல்காப்பியர்,
ஓரறிவுயிர்கள் உடம்பினால் (மெய்) அறியும் தன்மையன; ஈரறிவுயிர்கள் உடம்பினாலும் வாயினாலும் அறியும் தன்மையன; மூவறிவுயிர்கள் உடம்பு, வாய், மூக்கு இவற்றால் அறிபவை ; நாலறிவுயிர்கள் உடம்பு, வாய் , மூக்கு மற்றும் கண்ணினால் அறிபவை; ஐயறிவுயிர்கள் உடம்பு, வாய், மூக்கு , கண், செவி எனும் ஐம்புலன்களால் அறிபவை; ஆறறிவுயிர்கள் ஐம்புலன்களாலன்றியும் மனத்தினாலும் அறியும் தன்மையன என்று உயிர்களின் அறிவு வளர்ச்சியைப் படிப்படியாய் விளக்கிச் செல்கின்றார்.
அத்தோடு நில்லாமல், புல்லும் மரமும் இவைபோன்ற பிற தாவரங்களும் ஓரறிவுயிர்கள். சங்கு, நத்தை, இப்பி, கிளிஞ்சல், ஏரல் முதலியவை ஈரறிவு படைத்தவை. கறையான், எறும்பு, அட்டை போன்றவை மூவறிவு உடையன. நண்டு, தும்பி, சுரும்பு, ஞிமிறு முதலியன நாலறிவு உடைய உயிர்கள். நாற்கால் விலங்குகளும், பறவைகளும், ஊர்வன மற்றும் நீர்வாழ் உயிரினங்களாகிய மீன், ஆமை முதலியவையும் ஐந்தறிவு படைத்த உயிர்கள். மக்கள் (மனிதர்கள்) ஆறறிவுயிர்கள்; மக்களேயன்றி தேவர், அசுரர், இயக்கர் போன்றோரும் இவ்வகையினரே என்று ஓரறிவுயிர்கள் தொடங்கி ஆறறிவுயிர்கள் ஈறாய் உள்ளவற்றைத் தக்க சான்றுகளோடும் அவர் விரித்துரைக்கும் திறம் அவர் அறிவின் ஆழத்தையும், நுட்பத்தையும் புலப்படுத்துகின்றது.
இவ்வாறு தமிழிலக்கணம் விளக்கிப் போந்த பரிணாம வளர்ச்சியை, ஆய்வு செய்து தக்க ஆதாரங்களோடு உலகிற்கு விளக்கியவர், 19-ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் பிறந்த ’சார்லஸ் ராபர்ட் டார்வின்’ (Charles Robert Darwin) எனும் இயற்கையியல் அறிஞராவார். மருத்துவராக வரவேண்டும் எனும் தன் தந்தையின் ஆவலை நிறைவேற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பில் சேர்ந்த டார்வின், பின்பு அதில் ஆர்வம் இல்லாமல் சமய குருமார்களுக்கான கல்வியைக் கற்கத் தொடங்கினார். அப்போது தாவரவியல் பேராசிரியராக அங்கே பணியாற்றி வந்த ஜான் ஹென்ஸ்லோ (John Henslow) என்பவரின் நட்பைப் பெற்றார்.
அவ்வேளையில் (1831-ஆம் ஆண்டு), ‘பீகில்’ (Beagle) எனும் அரசுக் கப்பல் தென் அமெரிக்காவுக்கும், பசிபிக் பெருங்கடலுக்கும் சென்று ஆராய்ச்சி செய்வதற்காக இங்கிலாந்திலிருந்து புறப்பட்டது. பேராசிரியர் ஹென்ஸ்லோவின் முயற்சியால் அக்கப்பலில் ‘இயற்கை விஞ்ஞானியாக’ நியமிக்கப்பட்டார் டார்வின்.
உலகின் பலநாடுகளுக்கும் அக்கப்பலில் பயணம் மேற்கொண்ட அவர், இப்பயணத்தில் பற்பல இயற்கை அதிசயங்களைக் கண்டார்; ஆதி குடிகள் பலரைச் சந்தித்தார்; ஏராளமான புதைபடிவங்களைக் (Fossils) கண்டுபிடித்துச் சேகரித்தார்; எண்ணிலடங்காத் தாவர இனங்களையும், விலங்கினங்களையும் ஆராய்ந்தார். தாம் கண்டறிந்த அனைத்தைப் பற்றியும் விரிவான குறிப்புகளை எழுதி வைத்துக் கொண்டார். இக்குறிப்புக்களே இவருடைய பிந்தைய நூல்களுக்கு ஆதாரங்களாக அமைந்திருந்தன.
டார்வின் நிகழ்த்திய உயிரினக் கண்டுபிடிப்புகள் வியப்பூட்டுவன. அதன் பயனாய் மனிதனும் குரங்கும் ஒரே மூதாதை உயிரினத்திடமிருந்து பரிணாம வளர்ச்சியால் தோன்றிய இரு கிளைகள் என்ற கருத்தை அவர் வெளியிட்டார். அவர் அறிமுகப்படுத்திய இப்பரிணாமக் கொள்கையானது (Theory of Evolution), கடவுள் உலகைப் படைத்தார் எனும் மக்களின் மத நம்பிக்கைக்கு எதிரான புரட்சிகரமான அறிவியல் கொள்கையாய் அன்று அமைந்திருந்தது. ஆதலால், மதவாதிகள் உள்ளிட்ட அறிவியலாளர்கள் பலரும்கூட டார்வினின் பரிணாமக் கொள்கையை எள்ளி நகையாடினர்.
தன் ஆய்வுகளின் வாயிலாய்க் கண்டறிந்த உண்மைகளை ’உயிர்களின் தோற்றம்’ (The origin of Species) எனும் நூலாக 1859-ஆம் ஆண்டு அவர் வெளியிட்டார். அந்நூல் இன்றளவும் புகழ்பெற்ற ஒன்றாக விளங்கிவருவதை நாமறிவோம்.
சூழ்நிலைக்கேற்ப உயிரினங்கள் தம்மைத் தகவமைத்துக் கொள்ளும் (Adaptation) போராட்டங்கள் நீண்ட நெடுங்காலமாக நிகழ்ந்து வருகின்றன என்று கூறிய டார்வின், இப்போராட்டத்தில் தாக்குப் பிடிக்கக்கூடிய வலிமை வாய்ந்த உயிரினங்களே நிலைத்து வாழ்கின்றன என்பதை விளக்கும் ‘தக்கன பிழைக்கும்’ ( survival of the fittest) என்ற கருதுகோளை முன்வைத்தார். இதில் இயற்கையின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்க அளவில் இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். இதுவே ’இயற்கைத் தேர்வு’ (natural selection) என்று அழைக்கப்படுகின்றது.
டார்வினால் உருவாக்கப்பட்ட இந்தக் கோட்பாடுகள், இன்று அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியினால் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்துள்ளன. மனித மரபுக்கூறுகளை (genes) ஆராய்ந்து அவற்றின் தன்மைகளைக் கண்டறிந்து சொல்லும் அளவிற்கு இன்றைய அறிவியல் வளர்ச்சிகண்டுள்ளது.
உலக உயிர்களின் தோற்றத்தை, அவற்றின் படிநிலைகளை, வாழ்க்கைப் போராட்டங்களை அறிந்துகொள்ளப் பெரிதும் துணைபுரியும் டார்வினின் கொள்கைகளும், அவற்றை மையமாக வைத்து அவர் எழுதிய நூல்களும் உலகின் தலைசிறந்த உயிரியலறிஞர்களில் ஒருவர் என்ற புகழை அவருக்கு ஈட்டித் தந்துள்ளன.
ஏழு நாட்களில் அமைச்சர் தான் திரட்டிய தகவல்களுடன் அரசரைச் சந்தித்தார். “அந்தப் பாடல்களை இயற்றியவர் புனிதவதி என்ற பெயருடன் காரைக்காலில் ஒரு சமணக் குடும்பத்தில் தோன்றியவர். அவர் சிறுமியாக இருந்தபோது அவர் வீட்டு வாசலில் ஒரு அடியார் உணவு கேட்டு வந்தார். தாயிடமிருந்து அவருக்கு உணவு பெற்றளித்தாள் புனிதவதி. அதன் பின் அடியார் திண்ணையில் அமர்ந்து அங்குள்ள சிறுவர், சிறுமியரைக் கூட்டிக் கதைகள் சொல்லத் தொடங்கினார். அவை ஆலமர்செல்வன் என்னும் தெய்வத்தைப் பற்றியவை. அவை புனிதவதியின் மனதில் ஆழப் பதிந்தன.
புனிதவதியின் பெற்றோர்கள் நாத்திகர்கள் என்பதால் அவர் அதற்கு முன் உலகைப் படைத்துக் காக்கும் இறைவன் ஒருவன் உண்டு என்பதையே அறியாதிருந்தார். அந்தக் கதைகளைக் கேட்ட பின் அவர் இறைவனைப் பற்றியே இரவும் பகலும் சிந்திக்கலானார்.
வயது வந்ததும் நாகையைச் சேர்ந்த பரமதத்தன் என்ற வணிகனுடன் அவருக்குத் திருமணம் ஆயிற்று. காரைக்காலிலேயே ஒரு தனி வீட்டில் இருவரும் இல்லறம் நடத்தினர். ஒரு நாள் தன் கடைக்குச் சென்றிருந்த அவளது கணவன் இரண்டு மாங்கனிகள் வாங்கி வீட்டிற்கு அனுப்பினான்.
வீட்டு வாசலில் ஒரு அடியார் வந்து, ஈசனைப் போற்றிப் பாடி, உணவு யாசித்தார். புனிதவதி அவருக்குச் சோறு பரிமாறினார். கறியமுதம் எதுவும் சித்தம் ஆகாததால் அதற்கு மாற்றாக, கணவன் அனுப்பிய பழங்களில் ஒன்றை இட்டு அடியவரின் பசி மாற்றி மகிழ்ந்தார்.
வீட்டுக்கு வந்த பரமதத்தன், உணவுடன் கூட மாங்கனியைச் சுவைத்தான். உயர்வான சுவையுடன் கூடியதாக இருக்கவே, இன்னொன்றையும் போடுமாறு கேட்டான். ஈசனடியார்க்குக் கொடுத்து விட்டேன் என்று சொன்னால், நாத்திகனான தன் கணவன் கோபிப்பானோ என்று அஞ்சிய புனிதவதி இந்த இக்கட்டிலிருந்து தன்னைக் காக்குமாறு இறைவனை வேண்டினார். இறை அருளால் அவர் கையில் ஒரு மாங்கனி வந்து சேர்ந்தது. அதைக் கணவனுக்குப் படைத்தார். அது மேலும் அதிகச் சுவையுள்ளதாகவும் வேறுபட்டதாகவும் இருக்கவே அது பற்றி அவன் வினவினான். இறைவன் கொடுத்தது என்னும் செய்தியை அவன் நம்பவில்லை. நிரூபணம் வேண்டினான். இறை அருளால் புனிதவதி மீண்டும் ஒரு பழம் வருவித்தார். இறைவனை நம்பாத அவன் அவளைப் பேய்மகள் என்று கருதி அவளை விட்டு நீங்கிப் பாண்டிநாடு சென்றான். வருடங்கள் பல ஆகியும் அவன் திரும்பாத நிலையில், கணவனே தனக்குக் கதி என்று எண்ணிய அவர் கணவன் இருக்குமிடத்தைத் தேடி விசாரித்துக் கொண்டு சென்றார்.
அங்கு பரமதத்தன் வேறு பெண்ணை மணம் செய்து கொண்டு ஒரு பெண் மகவைப் பெற்றிருந்தான். புனிதவதியார் அவனது வீட்டிற்கு வந்ததும், “பேய் அணங்கே, எங்களைத் துன்புறுத்தாதே, சென்று விடு” என்று வேண்டி தன் மனைவியுடன் அவரது காலில் விழுந்தான். இதைப் பார்த்த அவளது பெற்றோரும் உறவினர்களும் அவளைப் பேய் எனவே கருதிப் புறக்கணித்தனர்.
அதன் பின் அவர் தன்னைப் பேய் என்று கூறிக் கொள்வதில் இன்பம் அடைந்தார். இறைவனைக் குறித்துப் பாடல்கள் இயற்றிப் பாடிக் கொண்டு ஊர் ஊராகச் சென்றார். பலரும் அவரிடம் அஞ்சி ஓடினர். சிலர் மட்டும் அவரைப் பின் தொடர்ந்து சென்று அவர் கூறும் பாடல்களை எல்லாம் ஏட்டில் எழுதி வந்தனர். இன்று நம்மிடம் வந்துள்ள கவிராயரின் தந்தை அத்தகையோரில் ஒருவர்” என்று சொல்லி முடித்தார் அமைச்சர்.
அரசர் வியப்படைந்தார். “இதுவரை அவருடைய பாடல்களைக் கேட்டு அளவிலா வியப்பும் மகிழ்வும் அடைந்தேன். இத்தகைய சிறந்த பாடல்களை இயற்றியவர் நிச்சயம் பேயாக இருக்க முடியாது. சேற்றில் பிறந்த செந்தாமரை போல் நாத்திகக் கூட்டத்தில் தோன்றிய இந்த அம்மையாரை அவரது இயற்பெயர் கொண்டு அழைப்பதும் மரியாதை ஆகாது. இனி அவரைக் காரைக்கால் அம்மையார் என்றே அழைப்போம். அமைச்சரே, காரைக்கால் அம்மையாரைப் போற்றிய மனிதர்கள் யார் யார், எங்குள்ளனர் என்று விசாரியுங்கள்” என்று கட்டளை இட்டார் அரசர்.
காலம்தோறும் புதுப் புதுப் பொருள்தருவது நல்ல நூலுக்குரிய தனித்தன்மை! திருக்குறள் உருவான காலத்தில் முடியாட்சிமுறையே நாட்டில் நிலவியது! சேர சோழ பாண்டியர் அரசாண்டகாலம்தான் அது. ஆனால் திருவள்ளுவர் இந்த மூவேந்தர்களைப் பற்றிய எந்தக் குறிப்பையும் தம் நூலில் குறிப்பிடவில்லை! அது மட்டுமல்ல தமிழ் மொழியிலேயே எழுதப் பெற்ற திருக்குறளில் தமிழ் என்ற சொல்லே இல்லை. இதற்குக் காரணம், இந்த நூல் எல்லா மொழிகளுக்கும், எல்லா இனங்களுக்கும், எல்லா நாடுகளுக்கும் உரிய பொது மறை என்பதை நுட்பமாக விளக்கவே என்பதாகும்!
இந்த நூல், முதற்குறள், ‘அகர’ எனத் தமிழின் முதல் எழுத்தில் தொடங்கி, இறுதி 1330- ஆம் குறளில் ‘பெறின்!’ என்ற ஈற்றுச்சீர் தமிழ் மொழியின் இறுதிஎழுத்தாகிய ‘னகரத்தில் நிறைவு பெறுகிறது. அதனால் இந்த நூலின் மொழி தமிழே என்பதை வள்ளுவர் நுட்பமாகப் புலப்படுத்துகிறார். மேலும், கடவுள் வாழ்த்தில் எந்தக் குறிப்பிட்ட மதத்துக்கும் உரிய கடவுளர் பெயரைக் குறிக்கவில்லை; ஆதிபகவன், வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமை இலான், இறைவன், ஐந்தவித்தான், தனக்குவமை இல்லாதான், அறவாழி அந்தணன், எண்குணத்தான் என்ற பொதுவான பெயர்களால் மட்டுமே இறைவனைப் பற்றி அறிமுகம் செய்கிறார்! அதனால் இந்நூல் எல்லா மதங்களுக்கும் பொதுவானது என்பதை புலப் படுத்துகிறார்! ஆனால் இதே அதிகாரத்தில் கடவுளின் மாணடி , நற்றாள், தாள், இறைவனடி என்ற சொற்களால் இறைவனின் திருவுருவத்தையும், அவன் திருவடியையும் குறிப்பிட்டு இந்துக் கடவுளரின் உருவ வழிபாட்டை நுட்பமாகப் புலப்படுத்துகிறார்! அதனால் இந்த நூல் இந்தியநாட்டில் , சிறப்பாகத் தமிழ் நாட்டில் நிலவிய இந்துமதம் சார்ந்த நூல் என்பதை நாம் புரிந்து கொள்கிறோம்! மேலும் இந்துசமய இதிகாச புராண வரலாற்று நிகழ்ச்சிகள் குறித்த தொடர்களையும் ஆங்காங்கே அமைத்துப் பாடுகிறார்!
இராமாயணம் இந்திய தேசத்தின் உயர்ந்த இதிகாசம். இந்தக் கதை இந்திய நாடெங்கும் பரவி, எல்லா மொழி மக்களாலும் புரிந்து கொள்ளப் பெற்றதாகும். இதனை சமஸ்கிருத மொழியில் வான்மீகியும், தமிழ் மொழியில் கம்பரும், இந்தியில் துளசிதாசரும், தெலுங்கிலும், மலையாளத்திலும் பலராலும் எழுதப் பெற்றுப் படித்துப் புரிந்து கொள்ளப் பெற்றது! இந்த இராமாயணத்தின் கதைத்தலைவராகிய இராமர், கடவுளின் அவதாரம் என்பதை ஒரு குறிப்பிட்ட கதை நிகழ்ச்சி நமக்குப்
புலப்படுத்துகிறது! அதாவது இராமன் விசுவாமித்திர முனிவருடன் முதன் முதலாக மிதிலை நகர் நோக்கிச் செல்லும்போது, அவருடைய கால்தூசு பட்டுக் கல்லாய்க் கிடந்த அகலிகை சாப விமோசனம் பெற்று எழுகிறாள்! இந்த நிகழ்ச்சியைப் பழந்தமிழ் இலக்கியமாகிய பரிபாடலின் பத்தொன்பதாம் பாடல் குறிப்பிடுகிறது.
‘‘இந்திரன், பூசை; இவள் அகலிகை; இவன் சென்ற கவுதமன்; சினன் உறக் கல் உரு ஒன்றிய படி இது‘ என்று உரை செய்வோரும்: இன்ன பலபல எழுத்து நிலை மண்டபம்,”
இப்பகுதியில் அகலிகை, கவுதம முனிவன் ஆகியோர் வரலாறு கூறப்படுகிறது. கவுதம முனிவன் கொடுத்த சாபத்தால் அகலிகை கல்லாய் மாறிக்கிடந்த காட்சி அந்த எழுநிலை மாடத்தில் ஓவியமாய்த் திகழ்ந்தது! இதனைத் திருவள்ளுவர் அறிந்து கொண்டு, ஒரு குறட்பா இயற்றியுள்ளார்! அக்குறள்,
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலும் கரி!
என்ற குறட்பாவும், இந்திர பதவி பெற்ற நகுஷன் தன சிவிகையைத் தாங்கி வந்த குறுமுனி அகஸ்தியரை , ”விரைந்த,விரைந்து ” என்ற பொருளில் ”சர்ப்ப, சர்ப்ப” என்றான். அகத்தியர் அவ்வாறே நீ சர்ப்பம் ஆவாயாக என்று சபித்தார். அறவோராக விளங்கிய அகஸ்திய முனிவர் அன்போடு சிவிகை சுமந்தார்; ஆனால் சிவிகை மேலிருந்த நகுஷன் அறவுணர்வு சிறிதுமில்லாமல், அன்பின்றி முனிவரை ஏவினான். சிவிகை பொறுத்த அகத்தியர் மூலமும், சிவிகை ஊர்ந்த நகுஷன் மூலமும் அறத்தின் நெறி இதுவென்று நம்மால் விளங்கி கொள்ள இயலாது.
இவ்வகையில் இந்திய இதிகாச புராணங்களைத் திருவள்ளுவர் தேவையான விளக்கம் தர எடுத்துக் கொண்டார்; இனி அவர் இயற்றிய வேறொரு திருக்குறளுக்குப் புதிய விளக்கம் காண்போம்! வாமனனாக வந்த திருமால் மகாபலியிடம் மூன்றடி மண் கேட்டார். அவருடைய வாமன உருவம் குட்டையானது. அந்த உருவத்தின் காலடியால் மூன்றடி நிலம் என்பது மிகவும் சிறியது! ஆனால் அதே திருமால் திரிவிக்கிரமனாக விஸ்வரூபம் எடுத்து வளர்ந்த போது , இரண்டடியால் மூன்று உலகங்களையும் அளந்தார்; பின்னர் மூன்றாம் அடி வைக்க இடமில்லாமையால் மகாபலி தன் தலையையே தந்தான்! இங்கே,
அனைத்துலகங்களையும், மகாபலி தலையையும் அளந்து எடுத்துக் கொண்ட திருமால் வஞ்சனை செய்தார்; ஆனால் எவ்வித வஞ்சனையும் செய்யாமல் ஓர் அரசன் சோம்பலின்றி அரசாண்டால், அவன மிக எளிதாகத் திருமால் வஞ்சனையால் அடைந்த மூவுலகங்களையும் தப்பாமல் அடைவான், என்று திருவள்ளுவர் கூறுகிறார். அக்குறள்,
என்பதாகும். இக்குறளுக்குப் பொருள் காணும் போது, அடியளந்தான் (வஞ்சனையால்) தாஅயதெல்லாம் ஒருங்கே , மடியிலா (வஞ்சனையில்லாத) மன்னவன் எய்தும் என்று பொருள் கொண்டால், மடியில்லாதவன் வஞ்சனை செய்யாத அறவோனாகவும் விளங்குவான் என்பது புலனாகும்! மடிஎன்னும் சோம்பலுடையவனிடம் மிக்க வஞ்சனை புரியும் மூதேவி தங்கிவிடுவாள்; ஆனால் சோம்பலற்றவனின், முயற்சியாகிய தாளின்கீழ் திருமகளே உறைவாள்” என்ற பொருளில், அடுத்த அதிகாரத்தில் வள்ளுவர் கூறும் குறளைப் பயின்றால் மடியின்மையுடன் அறவுணர்வு நீங்காமல் இருக்கும் என்பது புலனாகும்!
மீண்டும் மீண்டும்
கேமராவைப் பாருங்கள்
என்று போட்டோகிராபர்
கூறிக் கொண்டிருக்க
நான்
ஜன்னலில் ஆடிய
அவளது நிழலைப்
பார்த்துக் கொண்டிருந்தேன்.
போட்டோ பிரிண்ட்
பார்த்தவர்கள் பார்வை
ஜன்னலை நோக்கித் திரும்பியது
சுவாதினமில்லாமல்
ஓவியம் பார்ப்பதும் , ஓர்கவிதை உள்ளத்தில் தாவி உதிப்பதும் , தாமரைப் பூவிலே ஆவி கலப்பதும் , ஆண்டவன் ஆசியைத் தூவித் தெளிக்கும் துளி. (103) 12.04.2015
கவிழ்ந்தும் நிமிர்ந்தும் கனிந்தும் சிரித்தும் தவழ்ந்தும் விழுந்தும் தளிராய் எழுந்தும் தவறாத நம்பிக்கை சக்தியுடன் பிள்ளைத் தமிழாய் வளர்தல் தவம் (104) 13.04.2015
படிப்பது நன்கு பதிவதும் , நாடித் துடிப்பெலாம் என்றும் துடிப்பாய் முடிகொண்ட சங்கத் தமிழ்போல சத்தாய் ஒலிப்பதும் எங்கள் குருவருள் ஈர்ப்பு (105) 14.04.2015
சங்கமம் அடையும் புத்துலகுக்கு
ஓர் ஆத்மா உண்டு !
உறுதியாய் அந்த ஆத்மாவுக்கு
ஒரு குரலும் உண்டு !
அமெரிக் காவின் குரல்
அகில தேசக் குரலாய்
அமைவது அவனி விதி !
அந்நாட்டுக் கலை, கலாச்சாரம்,
சந்ததிகள்
அந்நியர் ஈடுபாட்டால்
கறைபடும் நிறம் மாறி !
உன்னத யுரேசிய
ஆன்மாக் களின்
உண்மை அழகு
உருவாகி வருகிறது அதன்
கருவாகி !
அகில நாடுகள் தழுவும்
மகத்துவ
ஒருமைப் பாட்டுணர்வை
உருவாக்கும் !
பல்வேறு கலாச்சாரம்
பின்னிடும்
பன்னிறப் பேழை அது !
அந்த அந்த தேச மாந்தர்
மாறுபாடாய்ச்
சிரம்மேல் கொள்கிறார்
அவரவர் சமூகத்து
வரலாற்றுப் பழக்கத்தை !
அனைவரும் ஒருமித்து
நோக்குவது
அமெரிக்க மண்ணை
ஒரு பொதுத் தளமாய் ! ஆயினும்
பொதுவில்லாக்
கருணை உள்ளம்
உதிக்கிறது அங்கே
எதிர்பாராது !
அந்தப் பரம்பரையில்
படிப்படியாய்
விருத்தி யாகி
அனைவரையும் பிணைக்கும்
ஓரின உணர்ச்சி !
கலப்புக் கலாச்சாரமே
கவர்ந்து
உருவாகி வருகுது
அமெரிக்க ஐக்கியம்
பேராற்ற லோடு !
சுதந்திர மனிதர் நாம் !
சுதந்திர மனிதர்கள் நாம் !
கிழக்கையோ மேற்கையோ
தழுவியோர் அல்லர் !
எல்லைக் கோடுகள் நமது
இதயத்தில் இல்லை !
சிலுவை, பிறை நிலவை
வழிபடுவோர் இல்லை !
ஏசுவையோ புத்தரையோ
நேசிப்போர் இல்லை !
யூதர் மீதோ, இஸ்லாமியர் மீதோ
பேதமை இல்லை !
சுதந்திர மனிதர்கள் நாம் !
ஏழாம் வகுப்பில் அவனுக்கு விஞ்ஞானப் பாடம் எடுத்த ஆசிரியர் R. S. என்ற R. சங்கர ஐயர். மிகுந்த ஆசார சீலர். ஒழுக்கம் நிறைந்த அமைதியான மனிதர். பஞ்சகச்சமும், முழுக்கை சட்டையும் அணிந்து கழுத்தைச் சுற்றி அழகாக மடிக்கப்பட்ட ஒரு அங்கவஸ்திரமும் போட்டுக் கொண்டிருப்பார். சட்டையின் கழுத்துப் பகுதி மூடப்பட்டு, தொண்டைப் பகுதியில் ஒரு “டாலர்”ஐ மாட்டிக் கொண்டிருப்பார். அது அவரது தந்தையாரின் படம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவரது தந்தையார் சன்யாசம் வாங்கிக் கொண்டவர். ஸ்ரீ ராமானந்த சரஸ்வதி என்பது சன்யாச ஆஸ்ரமத்தில் அவரது பெயர்.
“ஆர்.எஸ்.” சார் மாணவ மாணவியரிடம் ஒருபோதும் கோபப்படாதவர். அவரது வகுப்பை எல்லோரும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். காரணம், அவர் பாடம் நடத்திய பின்பு தினமும் ஒரு பத்து நிமிடங்கள் நல்ல நீதிக் கதைகளை ரொம்பவும் சுவாரஸ்யமாகச் சொல்லுவார். அவரது அந்தக் கதைகளைக் கேட்ட மாணவ, மாணவியர்கள் நிச்சயம் வாழ்க்கையில் நல்ல பாதையில்தான் செல்வார்கள். பள்ளிப் பாடமும், வாழ்க்கைப் பாடமும் உள்ளத்தில் பதியும் படிச் சொல்லும் நல்லாசிரியர்களில் அவர் ஒரு “ரத்தினம்”. அப்படி என்ன அவர் கதை சொல்லி விட்டார் என்கிறீர்களா? இதோ அவர் சொன்ன, அவன் நினைவில் உள்ள ஒரு சிறிய கதையைச் சொல்லுகிறான் , கேளுங்கள்.
“உண்மையைச் சொல்லு, தர்மப்படி நட”
“அது ஒரு அழகிய கிராமம். அந்த கிராமத்தில் உள்ள அக்கிரஹாரத்தில் ஒரு பெரும் பணக்காரர் இருந்தார். அவர் தருமமும், நியாயமும் அறிந்த நல்ல மனிதர். அவரது வீட்டில் தினந்தோறும், வீட்டில் உள்ளவர்களைத் தவிர ஒரு பத்து பேர்களுக்காவது சாப்பாடு போடுவார்கள். இல்லை என்று சொல்லக் கூடாது என்ற குணம் கொண்ட குடும்பம். ஒரு நாள் அவரது வீட்டின் வாசலில் ஒரு அந்தணச் சிறுவன் “அம்மா சாப்பாடு போடுங்கோ” என்று, தனது கையில் ஒரு சிறிய பாத்திரத்தை ஏந்தியபடி நின்றிருப்பதைக் கண்டு, தனது மனைவியிடம் ,”யாரோ ஒரு குழந்தை பசிக் கரதுன்னு வாசல்ல நிக்கறான்…அந்த பிரும்பச்சாரிக் குழந்தையைப் பார்த்தா பாவமா இருக்கு..அவன உள்ள கூப்பிட்டு சாப்பாடு போடு” என்றார். அவரது மனைவியும் அந்தச் சிறுவனை உள்ளே அழைத்து கை,கால்களை கழுவிக்கொண்டு வீட்டின் நடுக்கூடத்தில் வந்து அமரச் சொன்னாள். அதுபோலவே அந்தச் சிறுவனும் வந்து அமர்ந்து கொண்டான். அவனுக்கு முன்னால் ஒரு வாழை இலை போட்டு சாப்பாடு பரிமாறினாள் அந்த அம்மாள். அந்தச் சிறுவனும் சாப்பாட்டை வணங்கி விட்டு, சாதத்தைக் குழம்பு விட்டுப் பிசைந்து மெதுவாக முதல் கவளத்தை எடுத்துத் தனது வாயருகில் கொண்டு செல்லும் போது, அந்த வீட்டின் மற்றொரு அறையில் இருந்து “டங்..டங்” என்று ஒரு சத்தம் வந்தது. உடனே அந்தச் சிறுவன்,” கலக்கறா…கலக்கறா” என்று கத்தினான். அந்த நிமிடம் சத்தம் நின்றது. மீண்டும் அந்தச் சிறுவன் கையில் ஒரு கவளம் சாதம் எடுத்துத் தன் வாயருகில் கொண்டு செல்லும் போது அதே “டங்..டங்” சத்தம் கேட்டது. “கலக்கறா..கலக்கறா..” என்று மீண்டும் அந்தச் சிறுவன் கத்தினான். இப்போதும் அந்தச் சத்தம் நின்று விட்டது. அந்த வீட்டின் பெரியவர் அந்தச் சிறுவனிடம்,” என்னது கலக்கறா..கலக்கறான்னு கத்தறே” என்று கேட்டார். அதற்கு அந்தச் சிறுவன்,” இந்த வீட்டில் யாரோ ஒரு ஆசாரி தங்கத்தில் செம்பைக் கலக்கறார்…அதனாலதான் கத்தினேன் ” என்றான். “உனக்கு எப்படி அது தெரியும்” என்று அந்தப் பெரியவர் கேட்டார். “எங்கப்பாவும் ஆசாரிதான்..நகைகள் செய்வார்…அதனால அந்தத் தட்டுகிற ஓசையிலேயே எவ்வளவு செம்பு தங்கத்தில் கலக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும்” என்றான். “நீ ஏன் ஆசாரிப் பையன் என்று என்னிடம் சொல்லவில்லை” என்றார். “நீங்கள் என்னிடம் நீ யார் என்றே கேட்கவில்லையே” என்றான். உடனே பெரியவர் ,”சரி நீ முதல்ல சாப்பிடு..” என்று சொல்லிவிட்டு, பக்கத்து அறையில் தன்னுடைய வீட்டிற்கான நகைகளைச் செய்து கொண்டிருந்த ஆசாரியைக் கூடத்திற்கு அழைத்து வந்தார். “என்னப்பா நீ..தங்கத்தில் செம்பு கலந்தாயா..”என்று கண்டிப்பான குரலில் கேட்டார். தயங்கித் தயங்கி,” ஆமாம் ஐயா..” என்றார் அந்த ஆசாரி. “உன்னை நம்பி இந்த வேலையைத் தந்தேன்…நம்பிக்கை துரோகம் செய்துட்டயே..இனிமேல் நீ வேலை செய்ய வேண்டாம்…பண்ணின வேலைக்குக் கூலிய வாங்கிண்டு வீட்டுக்குப் போ” என்று அனுப்பி விட்டார். இதைப் பார்த்துக் கொண்டே இருந்த சிறுவனிடம் ,” நீ உண்மையச் சொன்னாய்..அது எனக்கு ரொம்பப் பிடிச்சுது…அதனால இந்த நகைசெய்யற வேலைய ஒன்னோட அப்பாவுக்குத் தரேன்..அவரைப் போய் இங்க கூட்டிண்டு வா…நீ நன்னாப் படி..ஒன்ன நானே படிக்கச் வைக்கறேன்…எப்போதும் உண்மையே பேசு…” என்று அந்தச் சிறுவனை அனுப்பிவைத்தார்.
எப்படி அரிச்சந்திரன் நாடகம் காந்தியின் மனதில் சத்தியம் பேச வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்ததோ அதேபோல அவனது “ஆர்.எஸ். சார்” சொன்ன இந்தக் கதையின் கருவும் அவன் உள்ளத்தில் ஆழப் பதிந்தது. அவன் பிற்காலத்தில் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை செய்து ஓய்வு பெற்ற நாளில் அனைவரும் அவனை “நாணயமானவன்” என்று பரிசு கொடுத்துப் பாராட்டியதில் அவன் கர்வப்படவில்லை. அந்த “ஆர்.எஸ்.சாரின் பாதங்களையும், பெற்றோரின் பாதங்ககளையும்” மானசீகமாக நமஸ்கரித்தான்.
“ஸ்ரீ ஞானானந்த பாரதீ”
“ஆர்.எஸ்.சாரின்” மூத்த சகோதரர் திருநெல்வேலி வக்கீல் ஆர்.கிருஷ்ணசாமி ஐயர். ஒரு சிறந்த ஆன்மிகவாதி. தேர்ந்த எழுத்தாளரும் கூட. தமிழ், வடமொழி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் நல்ல பாண்டித்யம் உள்ளவர். சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் 34 வது பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்யாள் அனந்தஸ்ரீ விபூஷித ஸ்ரீ சந்திரசேகர பாரதீ மகாஸ்வமிகளிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தவர். அவருடன் நெருங்கிய தொடர்பு கொண்டதன் பலனாக தர்ம, நியாயங்களிலும், வேத சாஸ்திரத்திலும் ஆழமான பிடிப்புக் கொண்டிருந்தார். பிரபலமான வக்கீலாக இருந்த காலத்திலேயே (1965 ம் ஆண்டு) தனது வக்கீல் தொழிலை விட்டுவிட்டு சன்யாசம் வங்கிக் கொண்டார். அவருக்கு “ஸ்ரீ ஞானானந்த பாரதீ” என்று சன்யாசாஸ்ரமப் பெயர் வழங்கப்பட்டது. நீதிமஞ்சரி, வாசிஷ்டசாரம், குருகிருபா விலாசம், தேன்மொழிகள் போன்ற தமிழ் நூல்களும், The Saint of Sringeri, Dialogue with the Guru, போன்ற அற்புதமான ஆன்மிக நூல்களையும், மேலும் பல நூல்களையும் எழுதியுள்ளார். அவர் 1975 ம் வருடம் தமிழ் நாட்டிலுள்ள “மன்னாடிமங்கலம்” என்ற கிராமத்தில் சித்தி அடைந்தார். அவர் சித்தி அடைவதற்கு முன்பாக சிருங்கேரி ஜகத்குரு நாதர்கள் அனந்தஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த மகாஸ்வாமிகள், அனந்தஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகள் இருவரும் தங்களுடைய இராமேஸ்வரம் யாத்திரைக்குச் செல்லும் வழியில் மன்னாடிமங்கலத்திற்குச் சென்று அவருக்கு தரிசனம் தந்தனர். அவருடைய அதிஷ்டானத்தில் இப்பொழுதும் பூஜை, ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. ஸ்ரீ ஞானானந்த பாரதீ சுவாமிகளின் நூல்களை எல்லாம் அவன் அடிக்கடி படித்துக்கொண்டே இருப்பான். முக்கியமாக “குருகிருபா விலாசம்” இரண்டாம் பாகம், நீதிமஞ்சரி போன்ற புத்தகங்களை அவன் விரும்பிப் படிப்பான். இந்தப் புத்தகங்களை சென்னையில் இருக்கும் “ஸ்ரீ ஞானானந்த பாரதி கிரந்த சமிதி” அறக்கட்டளை மூலமாக ஸ்ரீ ஞானானந்த பாரதி சுவாமிகளின் பூர்வாஸ்ரம மகன் வழிப் பேரன் ஆர்.சங்கரன் குடும்பத்தினர் வெளியிட்டு வருகின்றனர் .
“L. விஸ்வநாத ஐயர்”
அவனுக்கு ஏழாம் வகுப்பில் கணக்குப் பாடத்திற்கு எல்.விஸ்வநாத ஐயர் டியூஷன். அவர் அவனது குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர். கனிவும், கண்டிப்பும் உள்ள ஆசிரியர். அவனுக்கு அப்பா அவரிடம் ,” நம்ம கண்ணனுக்குக் கணக்குப் பாடம் சரியாப் புரியலைன்னு சொல்லறான்..ரொம்ப விளையாட்டுப் பிள்ளையா இருக்கான்.” என்று சொன்னார். அப்பொழுது அவர் ,” சுந்தரம் நீ ஒண்ணும் கவலைப் படாதே …அவன எங்கிட்ட அனுப்பு. நான் அவனுக்குச் சொல்லிக் கொடுக்கறேன்” என்றார். அடுத்த நாள் காலையில் ஆறரை மணிக்கு வடக்கு மாடத்தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு அவன் டியூஷனுக்காகச் சென்றான். இன்னும் இரு மாணவர்கள் அங்கே இருந்தனர். நன்றாக மனதில் பதியும்படி அவர் சொல்லித் தருவார். அவரது கையெழுத்து முத்து முத்தாக இருக்கும். பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு பாடம் சொல்லித்தருவார். அவனுக்கு அப்பா அவரிடம் ,” அண்ணா .. டியூஷன் பீஸ் எவ்வளவு வேணும்?” என்று கேட்ட பொழுது அவர் கோபித்துக் கொண்டார். ” ஒங்கிட்ட நான் பணம் கேட்டேனா?” என்று அன்போடு கடிந்து கொண்டார். “இல்லை அண்ணா.”.என்று அவனுக்கு அப்பா இழுத்த பொழுது ,”ஒனக்கு முடிஞ்சதக் கொடு” என்று சொன்னார். அந்த மாதச் சம்பளம் வாங்கியவுடன் அவனுக்கு அப்பா அவனிடம் “ஐந்து ரூபாய்” தந்து,” இத இன்னிக்கு நீ டியூஷன் போகும் பொழுது சாரிடம் கொடுத்து நமஸ்காரம் பண்ணு” என்று சொன்னார். அவனும் அப்படியே செய்தான். “எல்.வி” சார் அதை சந்தோஷமாகப் பெற்றுக் கொண்டு,” இத பாரு கண்ணா..கணக்குப் புரியலைன்னா கேளு…சொல்லித்தரேன்..யாரப் பாத்தும் காப்பி அடிக்காதே…தெரியலைனா விட்டுடு..திரும்பத்திரும்ப நான் சொல்லிக் கொடுத்த கணக்குகளைப் போட்டுப் பாரு..” என்று கூறி நிறைய மாதிரிக் கணக்குகளைப் போட்டுப் பார்க்கச் சொல்வார். அடுத்தநாள் அதை சரிபார்த்து, ஒவ்வொரு படியாகச் சொல்லித்தருவார். விடுமுறை நாட்களில் ஒரு நோட்டுப் புத்தகம் முழுதும் பயிற்சிக் கணக்குகள் தந்து போடச் சொல்லுவார். அவன் படிக்கும் நேரத்தில் தெருவில் விளையாடுவதைப் பார்த்தால் உரிமையோடு கண்டிப்பார். இரண்டு வருடங்கள் அவரிடம் அவன் டியூஷன் படித்தான். அதன் பலன் எட்டாவது வகுப்பில் கணக்கில் நல்ல மார்க்குகள் வாங்கித் தேறினான். அதைவிட முக்கியமாக அவன் ஒருநாளும் யாரையும் பார்த்துக் காப்பி அடிக்கவும் மாட்டான். மற்றவர்களுக்கும் காட்ட மாட்டான். கணக்கின்மீது அவனுக்கு பயம் போய், ஆர்வம் வந்ததற்குக் காரணமே எல்.விஸ்வநாத ஐயரின் அணுகு முறைதான். டியூஷன் எடுக்கும் பொழுது அவருக்கு அவரது வீட்டில் குடிப்பதற்குக் “காப்பி” தருவார்கள். உடனே அவர் அவரது மகளிடம் ,” ஏடி…மதுரம் கண்ணனுக்கும் கொஞ்சம் காப்பி கொடு” என்பார். அதுபோன்ற அன்பான ஆசிரியர்களால்தான் அவன் வாழ்க்கைப் பாடத்தை நன்றாகக் கற்றுக் கொண்டான். வெறும் “ஐந்து ரூபாய்”க்காக அவர்கள் பாடம் நடத்த வில்லை. தன்னிடம் கற்ற மாணவன் வாழ்க்கையில் வெற்றி பெறவேண்டும் என்றும், இந்த ஏழைக் குழந்தை நன்றாக முன்னுக்கு வரவேண்டும் என்றுதான் அவர்கள் உழைத்தார்கள். அவரது மகள் மதுரம் அவனுக்கு சகோதரி பாலாவின் வகுப்புத் தோழி. அவருக்கு தர்மராஜன், சங்கர் என்று இரண்டு மகன்களும் உண்டு. எல்லோருமே அவனிடமும், அவனது குடுபத்தினரிடமும் இன்றுவரை அன்போடுதான் இருக்கின்றனர்.
இசையெனும் இன்பநதியில் இதயம் மூழ்கிவிட்டால் மனம் இன்பலஹரியில் மோகனம் பாடும்! பாண்டித்துவம் பெற்ற விற்பன்னர்கள் மட்டுமே அனுபவித்துவந்த இசையை, பாமரனும் அனுபவிக்கும்வண்ணம் வழி வகை செய்தது திரையிசையால் மட்டுமே சாத்தியமானது. தமிழ்த் திரையிசை இதுநாள் வரை எத்தனையோ ஜாம்பவான்களைக் கண்டிருக்கிறது! அவர்கள் ஒவ்வொருவரின் பாணியும் தனித்துவம் மிக்கதென்பதும் மறுக்க முடியாதது.
இந்தச் சரித்திரத்தில் இசையமைப்பாளர் வி.தக்ஷிணாமூர்த்தி ஏனைய இசையமைப்பாளர்களால் போற்றிப் புகழ்ந்து வணங்கி மகிழும் ‘மகா’ மனிதர். தமிழ்த்திரையில் இவர் இசை அமைத்த படங்கள் குறைவு என்றாலும் எல்லோரின் இதயங்களிலும் ரீங்காரமிடும் இன்னிசைப் பதிவுகள் இவருடையதாகும்.
அப்படி ஒரு சுகானுபவத்தை இவரின் ஒவ்வொரு பாடலும் தட்டாமல் தந்து விடும். கர்நாடக சங்கீதத்தின் வாயிலாக கவிதை சொல்லும் யுக்தியிது என்று கூட நான் நினைப்பதுண்டு.
காவியக் கவிஞர் வாலி அவர்களின் விரல்களில் வழிந்த வார்த்தை நதியில் அயோத்தி அரண்மனைப் பஞ்சணை … இதோ அலங்கரிக்கப்படுகிறது. சுகராக ஜீவிதம் பேர் விரும்புவர்கள் இப்பாடலைக் கேட்டு மகிழலாம்.
அயோத்தி அரண்மனை பஞ்சணையில் அமைதி கொண்டிருந்தான் ஸ்ரீராமன் வராத சுகம் இன்று வந்ததென மடியினில் கிடந்தாள் வைதேகி [ அயோத்தி அரண்மனை ]
சீதையை ராமன் பாராட்டினான் சீதா ராமனைத் தாலாட்டினாள் திரும்பவும் காலம் வென்றதென தேன் எனும் குரலில் சீராட்டினாள் [ அயோத்தி அரண்மனை ]
கல்லில் நடந்த ராமனுக்கு கால்கட்டு போட்டாள் வைதேகி கண்ணில் கலந்த ராமனுக்கு கால்கட்டு போட்டாள் வைதேகி ஒரு நாள் ராமனை உறங்க வைக்க பலநாள் ஜானகி தவமிருந்தாள் ரகுபதி ராகவன் துயில் கொண்டான் ரசனையை ஜானகி பயில்கின்றாள்
அயோத்தி அரண்மனை பஞ்சணையில் அமைதி கொண்டிருந்தான் ஸ்ரீராமன் வராத சுகம் இன்று வந்ததென மடியினில் கிடந்தாள் வைதேகி
அற்புத வரிகளோடு கவியாட்சி நடக்க, இசையங்கே முடிசூட்டு விழா நடத்திவிடுகிறது. பி.சுசீலாவின் தெய்வீகக் குரலில் தேன் வந்து விழுகிறது. தென்றல் ஒன்று நடந்து வருவதைப் போன்ற சுகம் இப்பாடலைக் கேட்கும்போது உணரலாம்.
ஜீவநாடி திரைப்படத்தில் நம் ஜீவன் தொடும் வி.தக்ஷிணாமூர்த்தி இசையில் வாலி அவர்களின் வரிகள் நம்மை அயோத்திக்கு அழைத்துச் செல்கின்றதல்லவா?
இந்தவாரம் அதாவது எம் கண் முன்னே கடந்து சென்ற வாரம் தன்னோடு சுமந்து சென்ற பெருமையென்ன ?
தமிழ்த் திரைப்பட உலகில் தனக்கேயுரிய அந்தஸ்தோடு கோலோச்சிய எமது கவியரசர், கவிதைக்கோமகன் கண்ணதாசன் அவர்களின் 89வது பிறந்த தினத்தை தனக்குள் தாங்கிச் சென்ற ஒரு உன்னதமான வாரம்.
புலம்பெயர்ந்து அந்நியநாடுகளை தமது சொந்தநாடுகளாக்கி வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர் லட்சோப லட்சம்.
இவர்கள் புலம்பெயர்ந்ததற்கான காரணங்கள் பல. குறிப்பாக இலங்கைத் திருநாட்டைச் சேர்ந்த எனது ஆயிரமாயிரம் உடன்பிறப்புகள் யுத்த காலங்களில் அங்கு பாதுகாப்பாக வாழமுடியாத சூழலினால் இடம் பெயர்ந்தவர்கள் பலர்.என்னைப் போன்ற நிலையிலுள்ள பலர் தமது உயர் கல்வியை பல்வேறு காரணங்களினால் தொடரமுடியாமல் வெளிநாடுகளில் தமது உயர் கல்விக்காகப் புலம் பெயர்ந்து பின்னர் அந்நாடுகளின் சூழல்களில் தம்மை ஐக்கியப் படுத்திக் கொண்ட காரணத்தினால் தொடர்ந்தும் தமது வாழ்வை அந்நாடுகளிலே தொடரும் நிலை.
அப்படிப்பட்ட மக்களின் அடுத்த தலைமுறை அவர்கள் வாழும் அந்தப்புலம் பெயர் மண்ணையே தமது தாய் மண்ணாகக் கருதி வாழும் ஒரு நிலை காணப்படுகிறது.
இந்தச் சூழலிலே தாய்நாட்டின் ஏக்கங்களையும், தமிழின் மீது கொண்ட காதலின் கனத்தையும் தமது இதயங்களிலே சுமந்து வாழும் அம்மக்களோடு கவியரசர் பின்னிப் பிணைந்திருப்பது காலத்தால் மாற்ற முடியா உண்மை.
அவரது பாடல்கள், அப்பாடல்களில் புதைந்துள்ள எளிமையான கருத்துக்களின் ஆழம் என்பன தமது தாய்மண்ணைத் தொலைத்து விட்டு நிர்க்கதியாகி நிற்கும் பல உடன்பிறப்புகளின் உள்ளத்தின் ரணங்களுக்கு களிம்பாகிறது என்பது வெள்ளிடை மலை போலத் தெரிகிறது.
ஒரு திரைப்படப் பாடலாசிரியர் எனும் பணியினால் உயர்ந்து நவீன கால தமிழன்பர்களுக்கு கண்ணதாசன் என்றால் தமிழ் எனும் வகையில் அவரை அவர்களுடன் இணைத்து வைத்துள்ள உண்மை புலனாகிறது.
அவர் வரைந்த காதல் பாடல்கள் பல, சோகப் பாடல்கள் பல , தத்துவப் பாடல்கள் பல. ஆனால், இவைகள் அனைத்திலும் புதைந்துள்ள சிலவரிகளை எடுத்துப் பார்த்தால் அவை எமது மண்ணைப் பிரிந்த எமது ஏக்கப் பிரதிபலிப்புகளை எடுத்துக்காட்டுபவை போல அமைகிறது.
அப்போது நான் லண்டன் வந்த ஒரு இரண்டு அல்லது மூன்று வருடங்கள் இருக்கும். தாய்மண்ணைப் பிரிந்த ஏக்கம் தந்த இருள் நெஞ்சைக் கவ்விக் கொண்டிருக்க இலண்டன் நகர பனிக்கால இருளோடு குளிரும் இணைந்து உடலை வாட்டும் ஒரு இரவில் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தேன்.
அப்போது கை எனது கட்டிலருகே தலைமாட்டில் எப்போதும் எனக்குத் துணையிருக்கும் ஒரு டேப்ரிக்கார்டரைத் தட்டி விட்டது.
காதல் சிறகைக் காற்றில் விரித்து
வானவீதியில் பறக்கவா ?
எனும் கவியரசரின் அழகிய வரிகளோடு சுசீலா அம்மாவின் குயில் குரல் ஒலித்தது. மனம் பாட்டின் வரிகளோடு லயித்தது. கவிதைபால் நாட்டம் கொண்டிருந்ததாலோ என்னவோ எப்போதும் மனம் பாட்டின் இசையை ரசித்தாலும் அதன் பொருள் தேடி ஏங்கும்.
அப்போது ,
எண்ணங்களாலே பாலம் அமைத்து
இரவும் பகலும் நடக்கவா
இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி
இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி
இரு கை கொண்டு வணங்கவா
இரு கை கொண்டு வணங்கவா
எனும் வரிகள் ஒலித்தது. என்னையறியாமல் என் கண்களில் கண்ணீர் ஊற்றெடுத்தது. ஆமாம் எனது தாய்மண்ணின் பிரிவோடு நான் அவ்வரிகளை இணைத்துப் பார்த்தேன். பல்லாயிரம் மைல்களுக்கப்பால் தாய்மண்ணை விட்டுப் பிரிந்து இருக்கும் நான் எப்படி என் தாய்நாட்டை அக்கணத்தில் அடைவேன்? எண்ணங்களினாலே பாலம் அமைப்பது ஒன்று மட்டும்தானே பொருளாதாரச் சிக்கலில் தவிக்கும் ஒரு புலம்பெயர் மாணவனால் இயலும், அதைத் தவிர வேறு மார்க்கம் ஏது?
எத்தனை காலம் பிரிந்து இருந்தேன் என் தாய்மண்ணை அதை எண்ணிக் கண்ணீர் வடிப்பது ஒன்று தானே அப்போது உணர்வுகளை ஆற்றிக் கொள்ள ஒரே வழியாகிறது. அதுதான் கவியரசரின் மகத்துவம். எளிமையான வரிகள் அதனுள் எத்தனையோ வகைகளில் ஆராய்ந்து பார்க்கக்கூடிய ஆழமான கருத்துக்கள்.
மற்றுமொரு இனிய பாடல் …
ஆண் நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது
இங்கு பெண்ணும் ஆணும் வாழும் வாழ்க்கை இனியது
ஆமாம் இது போன்ற கவியரசரின் பாடல்கள்தான் என் போன்ற புலம் பெயர்ந்தவர்களை மிகவும் கடினமான தாய்நாட்டு ஏக்க காலங்களில் கரை சேர்க்க உதவியது. காலத்தால் அழியாத கவிஞன், எத்தனையோ நாடுகளில் வாழும் எத்தனையோ நாடுகளைச் சேர்ந்த தமிழர்களால் இன்றும் போற்றிப் பேசப்படும் ஒரு ஈடற்ற படைப்பாளி.
அவரது இந்தப் பிறந்த தின வாரத்தின் வாயிலாக அவரை நினைவுகூற கிடைத்த சந்தர்ப்பத்திற்கு நன்றி கூறிக்கொண்டு விடைபெறுகிறேன்.
நமது விருப்பத்தை அடைய, அதற்கான வழிகளை என்னவேண்டும்; எண்ணத்தை வெளியிட, அதை மற்றவர்கள் மூலமோ, இணைந்தோ செயல்படுத்த மொழி வேண்டும். மொழிதான் ஒரு குமுகத்தின் இணைப்புப் பாலம். குமுகம் மட்டுமல்ல, செயல்படும் அனைத்தின் இணைப்புப் பாலமும் கூட. மொழி ஒளியாகத்தானே வெளிவருகிறது!
அந்த ஒலியின் முதல் ‘அ’தானே!
அந்த ‘அ’காரமே மிகச் சுருக்கமாக ‘அ’காரத்தை அறிந்தவன், விஸ்வாநரன் என்று சொல்லப்படும், விழித்திருக்கும் நிலையில் உள்ள ஆத்மனின் முதல் பகுதியை அறிந்தவன், அதற்கேற்பச் செயல்பட்டால் [நனவு நிலையில்] விருப்பப்பட்டதை அடையலாம் என்று பூடகமாகச் சொல்லுகிறது உபநிஷத்து…
கனவு நிலையில் இருக்கும் தைஜஸன் இரண்டாம் ஒலியான [எழுத்தான] ‘உ’காரமாக உயர்ந்த நிலையிலும், இடைநிலையிலுமே இருக்கிறான். யார் இவ்வாறு அறிகிறானோ அவன் ஞான வழிமரபை உயர்த்துகிறான். சமமானவனாகவும் ஆகிறான். அவனது வழித்தோன்றல்களில் பரம்பொருளை [பிரம்மத்தை] அறியாதவர் இருக்கமாட்டார். – 10
பதவுரை: ஸ்வப்னஸ்தான:– கனவுநிலையில் இருக்கும்; தைஜஸ: – தைஜஸன்; த்விதீயா மாத்ரா – இரண்டாம் ஒலியான [எழுத்தான]; உகார: – உகாரமாக [அ என்னும் ஒலியாக]; உத்கர்ஷாது – உயர்ந்தவனாகவும்; உபயத்வாது ஹ வை – இடையில் இருப்பவனாக்கவுமே இருக்கிறான்; ய:: – எவன்; ஏவம் வேத – இவ்வாறு அறிகிறானோ; ஞான சந்ததிம் – ஞானவழி மரபை; உத்கர்ஷதி – உயர்த்துகிறான்; ஸமான: ’ச – சமமானவனாகவும்; ப4வதி – ஆகிறான்; அஸ்ய குலே – அவனது வழித்தோன்றல்களில்; அ ப்ரஹ்மவித் – பரம்பொருளை [பிரம்மத்தை] அறியாதவர் ; நப4வதி – இருப்பதில்லை..
விளக்கம்: இரண்டாம் ஒலியான ‘உ’காரமானது உயர்ந்தவனும்,, இடைப்பட்டவனுமான ஆத்மனின் இரண்டாம் பகுதியான தைஜஸன் என்று உபநிஷத் உரைக்கிறது.
அத்துடன் இவ்வுண்மையை உணர்ந்து அறிபவன் ஞானவழி மரபை உயர்த்துவதோடு மட்டுமல்லாது, அனைவருக்கும் சமமானவன், என்றும் சொல்கிறது.
சமமானவர் என்றால் யார் என்று பார்ப்போம்.
சமம் என்றால் உயரத்திலா, எடையிலா, நிறத்திலா, அறிவிலா, திறமையிலா, செல்வத்திலா, மற்ற எதில் சமம்?
ஆத்மனே பரம்பொருள் என்றும், இருந்தது, இருப்பது, இருக்கப்போவது எல்லாமே ஓங்காரம்தான், ஓங்காரமே பரம்பொருள் என்றால் ஆத்மனின் பகுதிகளும் சமமாகத்தானே இருக்கவேண்டும்! அதுமட்டுமா? வெளியுலகில் அறிந்த அனைத்தும் கனவுநிலையில் நுண்ணறிவாகத்தானே புலப்படுகின்றன! அந்த ஒளிமயமான எண்ணப் பதிவுகளில் அனைத்தும் சமமே! எல்லா அறிவுகளும் அங்கு ஒன்றன்மேல் ஒன்றாக வந்து பதிகின்றன. கனவுலகமே ஒரு ஒளிமயமான நூலகம்.அங்கு எல்லா அறிவுகளும் உள்ளன. அறிவின் முன்னர் அனைத்தும் சமமே. ஏழை-பணக்காரன், ஆண்-பெண், பலசாலி-வலிமையற்றவன் என்ற வேறுபாடே கிடையாது.இவர்கள் அனைவரின் அறிவும் அங்கு நிறைந்துள்ளது. நினைவுகளின் முன்பு அனைவரும் சமமே. இந்த அறிவின் கருவூலமான தைஜஸன் அனைத்துக்கும் சமமானவன்.
ஞானவழி மரபை உயர்த்துபவன் என்றால்…
சந்ததி என்றால் ஒருவனுக்குப் பிறக்கும் குழந்தைகள் என்றுதானே பொருள், ஞானசந்ததி என்றால் அறிவுள்ள குழந்தைகள் என்றுதானே புரிந்துகொள்ளவேண்டும், ஞானவழி மரபு என்ற புதுப் பொருள் கொடுத்தால் எப்படி என்று கேள்வி எழலாம்.
ஒருவர் தன்னிடம் இருக்கும் அறிவை இன்னொருவருக்குப் புகட்டினால் புகட்டுபவர் புகடப்படுபவருக்குத் தந்தை ஆகிறார். எனவேதான் ஆசானைத் தந்தை என்றும் சொல்லப்படுகிறது.
இதெல்லாம் பத்தாம்பசலித்தனம், ஆசானாவது, தந்தையாவாது, இதெல்லாம் பேத்தல், அறிவுக்கு ஒவ்வாதது என்றுதான் இன்றைய அறிவியல் வாதிக்கும். நாம் ஒன்றைக் கற்றுக்கொள்ள விரும்புகிறோம். கல்விக்கூடங்களுக்கு கட்டணம் செலுத்துகிறோம்; அதில் ஒரு பகுதியைப் பெற்றுக்கொண்டு நமக்கு கல்வி கற்பிக்கிறார்கள். அதற்காக அவர்களை நமது பெற்றோருக்கு இணையாகக் கருதமுடியுமா என்றுதான் கேள்வி வரும்.
இந்தக் கேள்வியெல்லாம் நான் காசு கொடுக்கிறேன், எனக்குக் கல்வி போதிக்கப்படுகிறது; எனவே, எனக்குக் கல்வி கற்பிப்பவர்கள் எனது வேலைக்காரர்கள் என்ற மனநிலையால் ஏற்படும் மயக்கமேயன்றி வேறொன்றுமில்லை. எவ்வளவு செல்வம் கொடுத்தாலும் கல்வி தானாக வந்துவிடாது. ஆசான், மாணவர் இருவருமே ஒருவரையொருவர் புரிந்துகொண்டு அக்கறையோடு செயல்பட்டால்தான் அது கல்வியாகும். அதனால்தான் கல்விக்கூடத்தை ஊட்டி வளர்க்கும் அன்னை [Alma-mater] என்றழைக்கும் பழக்கம் இருக்கிறது. கல்விக்கூடத்தை அன்னை என்றால், கற்பிப்பவர்கள் தந்தையாகவும், தாயாகவும்தானே ஆகமுடியும்.
அதனால்தான் இங்கு சந்ததி என்பதற்கு மரபு என்ற பொருள் பகரப்படுகிறது. ஆத்மனின் அறிவின் கருவூலம் என்று அறிபவர் அனைவரையும் சமமாகத்தான் கருதுவார் அறிவை, ஞானத்தை அனைவருக்கும் சமமாக வழங்குவார்; ஞானவழி மரபை உயர்நிலைக்குக் கொண்டுவருவார். அதுவே இந்தச் சொற்றொடர் மூலம் விளங்குகிறது.
அவனது வழித்தோன்றல்களில் பரம்பொருளை [பிரம்மத்தை] அறியாதவர் இருக்கமாட்டார் என்று பதவுரை தருகிறீர்களே, குலம் என்றுதானே போட்டிருக்கிறது, குலம் என்றால் சாதிதானே, இந்த உபநிஷத்து மறைமுகமாக சாதி உணர்வைத்தானே வளர்க்கிறது, அதை மறைக்க வழித்தோன்றல் என்று பொருள் கொடுத்து அதை மறைக்கலாமா என்று ஒரு கேள்வியும் எழலாம்.
அதற்கும் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்.
தாய்க்குலம் என்று சொல்கிறோமே, அப்படியென்றால் தாய் என்பது ஒரு சாதியா, இல்லையே! பெண்கள் அனைவரும் தாய் ஆகிறார்கள், எனவே அவர்கள் அனைவரையும் ஒருமைப்படுத்தி, தாய்க்குலம் என்று வழங்கப்படுகிறது. அதுபோலத்தான் ஒரே மாதிரியானவர்களைக் குலம் என்று சொல்லப்படுகிறது.
இங்கும் அதேமாதிரியான கருத்துடன்தான் குலம் என்று கூறப்படுகிறது.
மெய்ஞானத்தால் பரம்பொருளை அறிய இயலும் என்னும்போது, அப்படிப்பட்ட அறிவை, ஞானத்தைக் கற்பிப்பவர்கள் அந்த அறிவை வாழையடி வாழையாகத் தனது சீடர்களுக்குக் கற்பிக்கிறார்கள. எனவே அந்த மெய்ஞானத்தை அறிபவர்களின் குமுகம், கூட்டம், குழு, வழித்தோன்றல்கள் [வழிவழியாக மெய்ஞானத்தைக் கற்பவர்கள்] பரம்பொருளின் ஞானத்தைப் பெற்றிருப்பார்கள் என்று உபநிஷத்து உரைக்கிறது…
இங்கு ஆதி சங்கரரின் விளக்கத்தையும் அறிந்துகொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இரண்டாம் எழுத்தான ‘உ’காரத்திற்கும், தைஜஸனுக்கும் என்ன ஒற்றுமை? ஒரு பொதுவான சிறப்பியல்பாக உயர்வைச் சொல்லலாம். ‘உ’ என்ற ஒலி ‘அ’வைவிடச் உயர்ந்தது[1]. அதைப்போலவே தைஜஸன் வைஸ்வாநரனைவிட உயர்ந்தவன்[2]. இன்னொரு பொதுவான சிறப்பியல்பாகச் சொல்லக் கூடியது – ‘உ’, ‘அ’வுக்கும், ‘ம்’க்கும் இடையில் இருக்கிறது; அதுபோல, தைஜஸனும், வைஸ்வாநரனுக்கும், ப்ராக்ஞனுக்கும் இடையில் இருக்கிறான்.
இப்பொழுது இந்த அறிவின் [ஞானத்தின்] விளைவு, பயன் விளக்கப்படுகிறது. அறிவு – ‘உ’காரத்தை இனம் கண்டுகொண்டதனால் ஏற்படும் அறிவு – எப்பொழுதுமே அதிகமாகிறது. அதாவது, அவனது அறியும் திறன் மிகவும் அதிகமாகிறது. இவ்வறிவு பெற்றவன் அனைவராலும் அவ்வாறே [அறிவாளி என்றே] அறியப்படுகிறான் அவனது நண்பர்களைப் போல அவனது எதிரிகளும் அவனைக்கண்டு [அவனது அறிவைக்கண்டு] பொறாமைப் படுவதில்லை. மேலும், இவனது மரபில் [இவனிடம் அறிவைப் பெற்றவர்கள்] பரம்பொருளை அறியாதவராக இருக்கமாட்டார்கள்.
[1] ‘அ’ என்னும் ஒலி முதலில் வருவதால் அது அனைத்து ஒலிகளைக் காட்டிலும் உயர்ந்ததானாலும், ‘அ’வுக்குப் பின்னால் வருவதால் ‘உ’ உயர்ந்தது என்று மறைமுகமாக எண்ண வாய்ப்பிருக்கிறது.
[2] விஸ்வாநரன் தூலப் பொருள்களையே [ஐம்புலன்களால் உள்ளி உணர்வதையே] விரும்புவதாலும், அவனது அறிவு தூலப் பொருள்களையே நம்பி இருப்பதாலும், நுண்ணுணர்வு மூலம் அனைத்தையும் அறியும் தைஜஸன் விஸ்வாநரனைவிட உயர்வாக அறியப்படுகிறான்.
அளப்பதினாலும், ஒன்றியதாலும், ஆழ்உறக்க நிலையினான அறிவாளி [ப்ராக்ஞன்] உண்மையில் ‘மூன்றாம் ஒலி[எழுத்து]யான ம’காரமே [‘ம்’ என்ற ஒலியே]. எவன் இவ்வாறு அறிகிறானோ [அவன்] இவை எல்லாவற்றையும் அறிந்துகொண்டு தன்னுள் ஒடுங்குகிறான். – 11
பதவுரை: ஸுஷுப்தஸ்தான:– ஆழ்உறக்கநிலையில் இருக்கும்; ப்ராக்ஞ: – பிராக்ஞன் [அறிவாளி]; மிதே: அபி – அளப்பதினாலும்; அபீதே: வா – உள்ளே ஒடுங்குவதலுமே த்ருதீயா மாத்ரா – மூன்றாம் ஒலியான [எழுத்தான]; மகார: – ‘ம’காரமே [ம் என்னும் ஒலியே]: ய:: – எவன்; ஏவம் வேத – இவ்வாறு அறிகிறானோ; இதஹும் சர்வம் – இவை எல்லாவற்றையுமே; அபீதி: ச – உள்ஒடுங்குபவனாகவும் பவதி – ஆகிறான்; மினோதி ஹ வா – நிச்சயமாக உள் அளப்பவனாகவும் [ஆகிறான்].
விளக்கம்: நாம் எதிர்பார்த்தபடி மூன்றாம் ஒலியான ‘ம்’ ஆத்மனின் மூன்றாவது பகுதியான பிராக்ஞன் என்று உபநிஷத்தின் பதினொன்றாவது சொற்றொடர் செப்புகிறது. முந்தைய சொற்றொடர்களைப் போலவே, பிராக்ஞனுக்கும் இரண்டு குணங்களைக் குறிப்பிடுகிறது – அளப்பவன், உள்ளே ஒடுங்குபவன் அல்லது ஒன்றுபவன்.
அளப்பவன் என்றால் எதை அளக்கிறான்? எங்கு ஒன்றுகிறான்?
ஆழ்உறக்க நிலையில் உள்ளே இறையுடன் ஒன்றுகிறான் என்றான் ஒருவகையில் ஒப்புக்கொள்ளலாம். ஆனால் எண்ணங்களின் குவியல்களாக இருக்கும் பிராக்ஞன் எதை அளக்கிறான்?
ஆதி சங்கரர் இதைப்பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
ஒரு பயிர் வளரும்போது அது பலவிதமாக அளக்கப்படுகிறது. முதலில் விதையாக இருக்கும் அது, தூவப்பட்ட இடத்தில் முளைவிட்டு நிலத்தைவிட்டு வெளிக்கிளம்புகிறது. பிறகு நாற்றாக இருக்கும்போது அது இருக்கும் இடத்தைவிட்டு பெயர்த்தெடுக்கப்பட்டு சரியான இடைவெளிவிட்டு, நன்கு வளரும்படி நடப்படுகிறது. அப்படி நடப்பட்ட பயிர் நன்கு வளர்ந்து, பூத்துக் கதிர்விடுகிறது. இவை அனைத்தையும் குடியானவன் கவனித்து, பயிரின் வளர்ச்சியை அளந்து, அதற்கு நீர்பாய்ச்சுகிறான். அவன் ஆதிக்கமாகவும் நீர் பாய்ச்சுவதில்லை, குறைத்தும் விடுவதில்லை. சரியான அளவுக்கே நீர் பாய்ச்சுகிறான். நாற்றைப் பிடுங்கி நடும் முன்னரும், அது சரியான அளவுக்கு வரந்திருக்கிறதா என்று அளவிட்டபின்னே அதைச் செய்கிறான்.
கதிர் முற்றியபின்னரும், அது அறுவடை செய்யத்தக்க நிலையை அடைந்துவிட்டதா என்று அளந்தபின்னரே அதை மேற்கொள்கிறான்.
அதைப்போலவே வைஸ்வாநரனும், தைஜஸனும் அவர்களது பரிணாம வளர்ச்சியின்போதும், உள்ஒடுங்கி, ஆழ்உறக்கத்தில் ஒன்றி பிராக்ஞனாக பரிணாம மாற்றமடையும்போதும் பிராக்ஞநால் அளக்கப்படுகிறார்கள்.
அதேமாதிரி ஓம் என்னும் சொல்லில் உள்ள அகாரமும், உகாரமும் ஒன்றி ஓகாரமாகி ‘ம்’முடன் ஒன்றுவதையே இச் சொற்றொடர் குறிக்கிறது. மீண்டும் ஓங்காரத்தை ஒலிக்க, மகாரத்திலிருந்தான் – ‘’ம்’ என்னும் ஒலி நின்றபின்னரே, அகாரமும், உகாரமும் வெளிக்கிளம்புகின்றன.
இன்னொருவிதமாக விளக்கினால், விழித்திருக்கும்போது ஆத்மனாகிய நாம் வெளியுலகிலிருந்து பெரும் அத்துணை உணர்வுகளும், அறிவுகளும், கனவுறக்க நிலையில் அதே ஆத்மனாகிய நாம் காணும் ஒளிமயமயமான நுண்ணுணர்வுகளும், தோற்றமற மறைந்து, ஆழ்உறக்க நிலையில் இருக்கும் ஆத்மனாகிய நம்மிடம் ஒடுங்கிவிடகின்றன — மீண்டும் நாம் நனவு, கனவு நிலைக்குத் திரும்பும் வரையும்.
எனவே பிராக்ஞன் வைஸ்வாநரன், தைஜஸன் இவர்களின் எண்ணங்கள், உணர்வுகள், அறிவுகள் இவையெல்லாம் வைக்கப்படும் ஒரு கொள்கலமாக ஆழ்உறக்கநிலையில் இருக்கும் பிராக்ஞன் ஆகிறான்.
அதாவது வைஸ்வாநரனும், தைஜஸனும் ஆழ்உறக்க நிலையில் பிராக்ஞனுடன் ஒன்றி விடுகிறார்கள் — ஒடுங்கிவிடுகிரார்கள் – ஒன்றாக ஆகிவிடுகிறார்கள்…
இப்படி எல்லாம் ஒன்றுக்குள் ஒன்றாக ஒடுங்குகிறது என்றால் என்ன, ஓங்காரத்தின் ஒவ்வொரு ஒலியையும் அறிந்தவர் இப்படிப்பட்ட பலன்களை அடைவார்கள் என்று உபநிஷத்து சொல்கிறதே, ஒலியை ஆத்மனின் ஒவ்வொரு பகுதி என்று அறிவதா, புரிந்துகொள்வது கடினமாக இருக்கிறதே என்ற கேள்வி பிறக்கிறது.
இதற்கு பதிலாகச் சொல்லபடுவதுதான் தியானம் [meditation].
ஒரு மந்திரம் என்பது மனதிற்குள் சொல்லப்படுவது.
ஓம் என்பது ஒரு மந்திரம். இந்த மந்திரத்தை மனதில் சொல்லும்போது, மனதை ஒருநிலைப்படுத்தும் பொது – ‘அ’ என்ற ஒலியிலோ, ‘உ’ என்ற ஒலியிலோ, ‘ம்’ என்ற ஒலியிலோ மனதை ஒருநிலைப்படுத்தித் தியானிக்கும்போது, தியானிப்பவர்கள், அவர்கள் மனதை ஒருநிலைப்படுத்தும் ஒலிக்குத் தகுந்தாவாறு வைஸ்வாநரனையோ, தைஜஸநியோ, பிராக்ஞனையோ உணருகிறார்கள்/ஒன்றுகிரார்கள்/அறிகிறார்கள். அப்படி நடக்கும்போது தன்னுள் இருக்கும் ஆத்மனை அறிகிறார்கள்
அந்தந்த ஆத்மனின் பிரிவுக்குள்ள குணங்கள் அனைத்தும் கைவரப்பெறுகிறார்கள்.
அதுசரி, ஏன் வைஸ்வாநரன் தைஜஸனுடன் ஒன்றவேண்டும், அப்படி ஒன்றியபின், தைஜஸன் ஏன் பிராக்ஞனுடன் ஒன்றவேண்டும்? இவர்கள் ஆத்மனின் மூன்று பிரிவுகள் தானே, ஏன் ஒவ்வொன்றாக ஒன்றுகிரார்கள் என்ற நியாயமான கேள்வியும் நம்முள் எழுகிறது.
உதாரணமாக நாம் ஒரு பாத்திரத்தில் பாலை வைத்திருக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம்; அதை நான்காகப் பிரித்து, வெவேறு நிறங்களுடைய கண்ணாடிப் பாத்திரங்களில் ஊற்றிவைக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். பாலின் நிறம் அது ஊற்றிவைக்கப்படும் கண்ணாடிப் பாத்திரத்தின் நிறமாகத்தானே தெரியும்?
முதல் பாத்திரம் மஞ்சள் நிறம் – அதனுள் இருக்கும் பால் [ஆத்மனின் பிரிவாகிய வைஸ்வாநரன் – நமது வெளிஅறிவால் உணரக்கூடிய அண்டம்]
இரண்டாம் நீல நிறப் பாத்திரத்தில் இருக்கும் பால் தைஜஸன் – அண்ட மனம்.
மூன்றாவது சிவப்புப் பாத்திரத்தில் பிராக்ஞன் இருக்கிறது. அதுதான் குணமுள்ள ஈஸ்வரன் [சகுணப் பிரம்மம்] ஈஸ்வரனே அனைத்தின் தோற்றமாகவும், அதன் முடிவாகவும் இருக்கிறான். அவனே விழிப்புநிலையில் நாம் ஐம்புலன்களாலும் உணரும் அண்டங்களையும், கனவுநிலையில் காணும் உணர்வுகளையும், காட்சிகளையும், ஆழ் உறக்க நிலையில் ஒன்றுமில்லா நிலைக்கும் ஒன்று சேர்க்கிறான். நனவும், கனவும் ஒன்றுமில்லா நிலையில் [ஆழ்உறக்க நிலையில்] ஒன்றிவிடுகின்றன.
முதலில் மஞ்சள் நிறமாக இருக்கும் பாத்திரத்தில் இருக்கும் பகுதி வைஸ்வாநரன் என்று வைத்துகொண்டு, அந்தப் பாத்திரத்தில் இருக்கும் பாலை, நீல நிறத்தில் இருக்கும் பாத்திரத்தில் இருக்கும் பாலில் [தைஜஸன்] சேர்த்தால் பால் நீலமும், மஞ்சளும் சேர்ந்த பச்சை நிறமாகத் தெரியாது, நீல நிறமாத்தான் தெரியும். இப்பொழுது இரண்டும் இணைந்தாலும் ஒரே நிறமாகத்தானே நமக்குத் தோன்றுகிறது!
இப்படிச் சேர்த்த பாலை முன்பு இருந்ததுபோல மீண்டும் பிரிக்க முடியுமா? இரண்டறக் கலந்ததுவிட்டபின் அவற்றை தனித்தனியாக எப்படிப் பிரித்தெடுக்கமுடியும்? தண்ணீரும், எண்ணையும் என்றால் – மணலும் சர்க்கரையும் என்றால் முடியும். ஏனென்றால் அவை தனித்தனியான பொருள்கள். ஆத்மன் தனித்தனி அல்லவே! ஒன்றாக இருந்த ஒன்றை இரண்டாகப் பிரித்து, ஒன்றுசேர்த்தபின், முதலில் இருக்கும் பிரிவுக்கு எப்படிக் கொண்டுசெல்ல இயலும்?
அடுத்தபடியாக நீலப் பாத்திரத்தில் இருக்கும் பாலை [இரண்டறக் கலந்த வைஸ்வாநரன் + தைஜஸன்] சிவப்புப் பாத்திரத்தில் இருக்கும் பாலுடன் [பிராக்ஞன்] ஊற்றினால், பால் கலவை ஊதா நிறமாகத் தெரியாது. சிவப்பாகத்தான் தெரியும். ஒன்றிய பால் பிராக்ஞன்தான். இக்கலவையையும் பழையபடி பிரிக்க இயலாது.
இதற்கடுத்த நிலைதான் துரிய நிலை. ஓங்காரத்தின் இறுதி விளக்கம்.
விளக்கம்: இந்த சொற்றொடரில் பரம்பொருளுடன் ஒன்றுவது எப்படி என்று சொல்லப்படுகிறது. அத்துடன் மட்டுமல்ல, ‘ஓம்’ என்ற சொல் மூன்று ஒலிகளால் ஆனது மட்டுமல்ல, நான்காவதாக ஒலியற்ற நிலைமையும் ஓங்காரத்திற்கு இருக்கிறது, அதுவே ஆத்மனின் ‘துரிய’ நிலை என்றும் எடுத்துரைக்கிறது.
அந்நிலையில் ஆத்மன் செயல் எதுவும் ஆற்றுவதில்லை. அந்நிலையில் – ஆத்மனின் செயலற்ற நிலையில் – அண்டமே — நனவில் திடப்போருளாகக் காணப்படும், கனவுநிலையில் ஒளிமயமான உணர்வுகளாகத் தோன்றும், ஆழ்உறக்க நிலையில் எண்ணங்களின் குவியலாக உருவமற்று இருக்கும் – அந்த அண்டமே முடிந்துபோகிறது. ஈஸ்வரன் என்று அழைக்கப்படும் காரிய, காரணங்கள் உள்ள பரம்பொருள், சிவமாக, மங்கலமான ஒன்றாக, தான் வேறு, மற்ற உயிர்கள் – ஜீவாத்மாக்கள் வேறு என்ற மாயத்தோற்றம் இல்லாது – இருமையில்லாது ஒன்றாகி நிற்கிறான்/நிற்கிறாள்/நிற்கிறது.
முதலீட்டியம் / ஒருமை
இதையே அறிவியல் ஒருமை, முதலீட்டியம் [singularity] என்று சொல்லுகிறதோ என்னவோ! பெருவெடிப்பு நிகழ்ந்து அண்டம் உருவாகும் தருணத்தில் அவ்வண்டமே ஒரு முதலீட்டியமாக/ஒருமையாக – இனம் பிரித்து அறியாதவண்ணம் ஒன்றாக இருந்தது என்று பொதுச் சார்பியல் [ஜெனரல் ரிலேட்டிவிட்டி] கூறுகிறது[1] துரியன் இருமையற்றவன் என்றால் அவனை ஒரு முதலீட்டியம்/ஒருமையானவன் [singularity] என்று சொல்வதில் பிழை இருக்கிறதா என்ன?
அது மட்டுமல்ல, பால்வழி மண்டலங்கள் [galaxies] உருவாகக் காரணமான கரும் துளைகள் [black holes] உள்ளே முதலீட்டியம் உள்ளது என்றும் அறிவியல் ஆராய்ந்து உரைக்கிறது.[1]
எதுவும் உருவாகாமல் ஒன்றி இருந்த ஒன்று, இருமை இல்லாமல் இருந்த ஒன்று — பால்வழி மண்டலங்கள், மற்றும் பெரும்வெடிப்பு தோன்றி அண்டமே உருவாக வழிவகுத்தது என்று — அறிவியலே சொல்லும்போது, அந்த முதலீடியமே பரம்பொருள், ஆத்மன் என்று பொருள்கொள்வதில் தவறென்ன!
இந்த வழியிலேயே தொடர்ந்தால் —
இங்கு நாம் காணும் அண்ட சராசரங்கள் அனைத்தும் ஒரு முதலீட்டியத்திலிருந்துதான் –பெருவெடிப்பின் மூலம் தோன்றின.
அப்படித் தோன்றியவை அனைத்தும் அந்த முதலீட்டியத்தில்தான் இருந்தன.
உயிரும் அந்த முதலீட்டியத்திலிருந்துதான் தோன்றியிருக்கவேண்டும்.
நாம் கண்ட, காணும் அனைத்தும் அந்த முதலீட்டியத்திலிருந்துதான் வந்தன.
இவ்வண்டத்தில் நாம் காணும் சக்தி அனைத்தும் அந்த முதலீட்டியத்திலிருந்துதான் வந்தன.
இவ்வண்டம் தோன்றுமுன்னே முதலீட்டியம்தான் இருந்தது. எனவே அந்த முதலீட்டியத்தினுள்தான் அண்டமே ஒடுங்கி இருந்த்திருக்கவேண்டும்.
இந்த அண்டம் தோன்றும் முன்னர் முதலீட்டியம் செயலற்றே இருந்திருக்கவேண்டும்.
எனவே இந்த முதலீட்டியத்தையே — ஆத்மனின் நான்காம் பகுதியான — வைஸ்வாநாரன், தைஜஸன், பிராக்ஞன் இவற்றை உள்ளடக்கிய – ஓங்காரத்தின் நான்காவது ஒலியற்ற ஒன்றாக – துரியனாக அறியலாமே.
நாம் வெளியில் இருந்து, நனவுலகிலோ, கனவுலகிலோ, ஆழ்உறக்க நிலையிலோ, துரிய நிலையை எய்த இயலுமா?
இயலவே இயலாது!
ஏனெனில், வெளியில் இருந்து நோகும்போது இருமைதான் இருக்கும், ஒருமை இருக்காது. எனவே, அந்த ஒருமையான பரம்பொருளினபால் சித்தத்தைச் செலுத்தி ஒன்றி, நிர்விகல்ப சமாதி நிலையை அடையும்போதுதான், அப்பரம்பொருளுடன் நாம் ஒன்ற இயலும்.
‘அ’விலிருந்து ‘உ’’வுக்கும், ‘ம்’க்கும் வருவோம்.
ஆதி சங்கரர் என்ன சொல்கிறார், துரியனைப் பற்றி?
அவர் பரம்பொருளையே இரண்டுவிதமாகப் பிரிக்கிறார், சகுணப் பிரம்மம், நிர்குணப் பிரம்மம் என்று.
இந்த சகுணப் பிரம்மமே — குணங்களுடன் கூடிய ஈஸ்வரனே – இவ்வண்டத்தின் தோற்றத்திற்கு காரணமாக இருக்கிறார். அவரை [சகுண பிரம்மத்தை] அறிய, கௌடபாதரின் காரிகையில் (விளக்கம்) உள்ள சுலோகத்தின் 26ம் சுலோகத்தின் முதல் வரிப்படி மனதை ஒருநிலைப்படுத்தவேண்டும் என்கிறார்.
ஓங்காரமோ எனில் மற்றொரு பிரம்மமே! ஓங்காரமும் பரப்பிரம்மமாகவே எண்ணப்படுகிறது.
கூர்ந்து கவனித்தால் மற்றொரு பிரம்மம், அப்படியே எண்ணப்படுகிறது என்று சொல்லப்படுவதைக் காணலாம். மற்றொரு பிரம்மம் என்பதுதான் சகுணப்பிரம்மம் [பரம்பொருள்/ஈஸ்வரன்]. பரம்பொருளை முதலில் அறிய விரும்புபவர்கள் — அதாவது, முதல் முயற்சி எடுப்பவர்கள் — ஓங்காரத்தைப் பரம்பொருளாக [ஈசனாக] எண்ணித் தியானிக்கவேண்டும் என்று சொல்வது புரியும்.
தியானம் செய்யப் புகுபவர்கள் — அனைத்தையும் வெளியுலகின் வாயிலாக அறிபவர்கள் – அம்மாதிரித்தான் தியானம் செய்ய – மனதை ஒருநிலைப்படுத்த இயலும். எனவேதான் அகர, உகர், மகரமாக, ஒலியாக நிற்கும் ஈசனை, பரம்பொருளை, ஓங்காரத்தை தியானம் செய்யவேண்டும். இது கைகூடினால் ‘சகுண சமாதி’ நிலை கிட்டும். இந்நிலையை அடைந்தவர்கள் மீண்டும் கார, காரியம் உள்ள இவ்வண்டத்திற்குத் திரும்பி வருவார்கள்.
அதன்பின் ஒலியற்ற ஓங்காரமான துரியனை, நிர்குணப் பிரம்மத்தின்பால் ஒருநிலைப்படுத்த வேண்டும்.
இப்பொழுது இரண்டாம் வரிக்குச் செல்லுவோம்.
அபூர்வோஅனந்தரோஅபா3ஹ்யோஅனபர: ப்ரணவோஅவ்யய: ||
முன்தோற்றமற்றதும், முடிவற்றதும், வெளியில் இல்லாததும், தனித்தன்மை வாய்ந்ததுமான ஓங்காரம் மாற்றமில்லாதது.
முன்தோற்றமற்றது என்றால் என்ன? இதற்குமுன் எதுவும் தோன்றவில்லை, இதுவேதான் இருந்துவருகிறது, இதை யாரும் படைக்கவில்லை, உருவாக்கவில்லை, இதுவும் தோன்றவில்லை.
தோன்றவில்லையா, அப்பொழுது இது எப்படி இருக்கமுடியும் என்ற கேள்வி எழுகிறது. நமது வெளியுல உணர்வுப்படி நோக்கினால் — ஒன்று தோன்றியது என்றாலே, அதற்குத் துவக்கம் இருக்கவேண்டும், அதை யாராவது உருவாக்கி இருக்கவேண்டும் என்றுதானே பொருள்? அப்பொழுது அது பரம்பொருளாக இருக்கமுடியுமா? முடியாதே! அதனால் அப்பரம்பொருள் தோற்றமற்றது, துவக்கமற்றது. அது எப்பொழுதும் இருக்கிறது.
இது முடிவும் அடையாதது: முடிவு என்று ஒன்று இருந்தால் அதற்குத் துவக்கம் என்றும் ஒன்றும் இருக்கவேண்டும் அல்லவா! எனவே, துவங்காத ஒன்று முடிவும் அடையாது.
அது வெளியிலும் இல்லை என்றால் என்ன? எல்லாமே அதுதான், அப்பரம்பொருள்தான்! எனவே எதுவும் அதற்கு வெளியில் இருக்கமுடியாது.
அறிவியல்படி நோக்கினால், பெருவெடிப்புக்குமுன் அண்டமே இல்லை, அண்டத்தில் இருக்கும் எதுவுமே இல்லை. அண்டமே அண்டத்தில், பரம்பொருளுள் அடங்கி இருந்தது. அந்நிலையில்தான் நிர்குணப் பிரம்மமும் இருக்கிறது.
தனித்தன்மை வாய்ந்தது: இப்படிப்பட்டது எதுவும் இருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அப்படிப்பட்டது தனித்தன்மை வாய்ந்த ஒன்றுதானே!
அப்படி தோற்றமும் இல்லாமல், முடிவும் இல்லாமல், வெளியிலும் இல்லாத, தனித்தன்மை வாய்ந்த அது மாற்றமின்றித்தான் இருக்கும். அங்கு காரணமும் இல்லை, காரியமும் இல்லை. ஒரே அமைதிதான். படைப்பும் இல்லை, காப்பும் இல்லை, அழிப்பும் இல்லை, மறைப்பும் இல்லை, அருளும் இல்லை. எல்லாம் ஓய்ந்துபோன நிலையில் எதுவுமில்லாமல் “சிவனே” என்றிருக்கும் நிலை.
அந்த நிலையில் இருக்கும் – ஒலியற்ற ஓங்காரமாக இருக்கும் இறைவன்/வி ஆணுமல்ல, பெண்ணுமல்ல, அதுவுமல்ல. ஏனெனில் அதை வெளியில் இருக்கும் எதுவும் பார்க்கமுடியாது, அளவிடமுடியாது – ஏனென்றால் அந்த அமைதியான நிலையில் வெளியில்தான் எதுவுமே இல்லையே!
இப்படிப்பட்ட பரம்பொருளை அடைய, அதுவேறல்ல, நான் வேறல்ல என்று உணர்ந்து அதனுடன் ஒன்றிப் பரம்பொருளாகவே ஆக, ஒலியற்ற ஓங்காரத்தை தியானம் செய்து மனத்தை ஒருநிலைப்படுத்தவேண்டும்.
இப்படித் தன்னுள் இருக்கும் பரம்பொருளுடன் ஒன்றுவதே நிர்விகல்ப [வேறுபாடற்ற/பிரித்தறியாத] சமாதி நிலை. இந்நிலையை அடைந்தோருக்கு இவ்வுலகமில்லை, பிறப்பு இறப்பு என்னும் காரிய, காரணம் இல்லை. ஆணவம், கர்ம வினைகள், மாயையினால் கட்டப்படாது — அவை நீங்கி — தான், தனது, எனது, மற்றவை, என்ற எண்ணம் இல்லாமல் — பிறித்தறியாமல் — எல்லாமே ஒன்று என்று இருமையற்ற நிலையில், ஒருமையாகி — ஒலியற்ற ஓங்காரத்துடன், பரம்பொருளுடன் இரண்டறக்கலந்து ஒன்றிய அவர்கள் — பரம்பொருளாகவே ஆகிவிடுகிறார்கள் [நிர்விகல்ப சமாதி அடைந்து விடுகிறார்கள்]! பேரின்பநிலையை எய்துகிறார்கள்.
நிர்விகல்ப சமாதி
இத்துடன் எனது மாண்டூக்கிய உபநிஷத்தின் எளிய விளக்கம் நிறைவு பெறுகிறது. இராமனுக்கு கடலின் மேல் பாலமமைக்க ஒரு அணில் தனது முன்னங்கால்களால் ஒரு சிறுகல்லை உருட்டிப்போட்டதுபோல என்னால் இயன்றதை எழுதியுள்ளேன். நான் எழுதியதில் தவறு இருந்தால், பெரியோர்கள் சுட்டிக்காட்டினால் என் தவறைத் திருத்திக்கொள்வேன்.
அமைதி மந்திரம்:
எந்த ஒரு உபநிஷத்துவிற்கும் துவக்கத்தில் ஒரு அமைதி மந்திரம் [சாந்தி ஸ்லோகம்] உண்டு. எதையும் கற்பதற்குமுன் ஆசிரியரும், மாணவர்களும் அமைதியுடன் இருந்து கற்பிக்க/கற்கவேண்டும் என்பது அதன் காரணமாகும். இந்த உபநிஷத்துவுக்கான அமைதி மந்திரத்தை முதலில் எழுதாததற்கு ஒரு காரணம் உண்டு. இங்கு நான் கற்பிப்பவனும் அல்லன். இதைப்படிப்பவர்கள் எனது மாணவர்களும் அல்லர்.
எனவே, முதலில் சொல்லவேண்டிய அமைதி மந்திரத்தைக் முடிவில் கொடுத்து முடிக்கிறேன்.
தேவர்களே [தெய்வங்களே]! காதுகளால் நல்லதையே கேட்போமாக. போற்றுதலுக்கு உரியவர்களே, கண்களால் நல்லதையே பார்ப்போமாக. உறுதியான புலன்களுடன் [திட அறிவுடன்] நுணுக்கமாக [உங்களைப்] புகழ்ந்து, எவ்வளவு ஆயுள் இறைவனால் கொடுக்கப்பட்டதோ [அதை] அனுபவிப்போமாக. நிகரற்ற புகழுள்ள இந்திரனே எங்களுக்கு [கல்வி கற்பதில்] வெற்றி [உண்டாகட்டும்]! அனைத்தையும் அறிந்த ஆதவனே, எங்களுக்கு வெற்றி! தடையின்றிச் செல்லும் [பறக்கும்] கருடனே, எங்களுக்கு வெற்றி! பிரஹஸ்பதியே, எங்களுக்கு வெற்றி! ஓம்1 அமைதி! அமைதி!! அமைதி!!!
[நிறைவு பெறுகிறது]
[1] Curiel, Erik & Peter Bokulich. “Singularities and Black Holes”. Stanford Encyclopedia of Philosophy. Center for the Study of Language and Information, Stanford University. Retrieved 26 December 2012.
பதம் பிரித்து:
எவ்வம் துணையாய்ப் பொருள் முடிக்கும் தாளாண்மை,
தெய்வம் முடிப்புழி, என் செய்யும், மொய் கொண்டு?-
பூப் புக்கு வண்டு ஆர்க்கும் ஊர!- குறும்பு, இயங்கும்
கோப் புக்குழி, செய்வது இல்.
பொருள் விளக்கம்:
துன்பமே துணையாக (வரும் பொழுதில்), தான் செய்து முடிக்க விரும்புவதைச் செய்யும் முயற்சிகள், விதி வலியால் நடைபெறாது போக நேர்ந்தால் என்ன செய்யமுடியும், முயல்வதால் பலனில்லை. பூவுக்குள் வண்டு புகுந்து ஒலியெழுப்பும் ஊரைச் சேர்ந்தவரே, குறுநில அரசனால், எத்திசையும் வெற்றியை நிலைநாட்டி வரும் பேரரசன் ஒருவன் தனது நாட்டில் போரிடப் புகுந்தால் அடங்கிப் போவதைத் தவிர வேறொன்றும் செய்ய இயலாது.
பழமொழி சொல்லும் பாடம்: தனது முயற்சிக்கு எதிராக விதி சதி செய்யும் பொழுது முயற்சிகள் பயனளிப்பதில்லை. நாம் எவ்வளவுதான் முயன்றாலும், சில நேரம் நமது கட்டுப்பாட்டில் இல்லாத நிகழ்வுகள் நமது முயற்சிக்கேற்ற பலனைத் தருவதில்லை. இவ்வாறு நிகழும் கைமீறிய விளைவுகளுக்கு வள்ளுவர் ஊழினைக் காரணமாகக் காட்டுகிறார்.
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். (குறள்: 380)
ஊழை வெல்ல வேறொரு வழியை எண்ணி நாம் செயற்பட்டாலும், அந்த வழியிலேயோ வேறு ஒரு வழியிலேயோ அது நம்முன் வந்து நிற்கும்; ஆகவே விதியை விட வலிமையானவை வேறு எவை என்று கூறமுடியும் என்பது விதி வலியது என அறிவுறுத்தும் வள்ளுவர் வாக்கு.