Blog

  • கவிச்செருக்கு கண்ணதாசனின் உடன்பிறப்பு!

    பவள சங்கரி

    கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்,

    வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி      – பாரதி.

     

     images (3)

    கன்னித்தமிழுக்குக் காவியமண்டபம் அமைத்து

    பண்ணிசையால் பூமாலையும் தொடுத்து

    ஆன்மீகம், ஆனந்தம், காதல், தத்துவம், சோகம்,

    சுகமென, அனைத்தும் அடித்தளமாய் அமைத்து

    கவிச்சொல் வீச்சின் மூலம் இப்புவியனைத்தையும்

    ஆளும் பெருங்கவி! ‘படைப்பதால் நானும் இறைவன்’

    “நான் நிரந்தரமானவன், அழிவதில்லை. எந்த நிலையிலும்

    எனக்கு மரணமில்லை” என்ற கவிச்செருக்கு

    அவன் உடன்பிறப்பு! கவித்துளிகள் காலக்காற்றில்

    கரைந்தொழியும் கற்பூரமாயிராமல், எதிர்க்காற்றில்

    ஏறிப்பறக்கும் காற்றாடியாய் காவியமானவன், கண்ணதாசன்!!

     

    தம்மை மறந்து தம்மையே அதனுள் கரைத்து

    தன்னூன் கலந்து உயிர் கலந்து பொருளுணர்ந்து

    இசையோடு இயைந்து இனிமையும் கலந்து

    கருத்துடன் கவியாய்ப் புனைந்து சிந்தையள்ளும்

    வன்மையுடையாய்! கன்னித் தமிழ்நாட்டின்

    வளமையான கழனியில் விளைந்த வளமான

    செங்கரும்பின் அடிச்சுவையவன்! தனிக்கனியவன்!!

    தரணிபோற்றும் தங்கமகன்! மனம்தளராச் சிங்கமவன்!!! …. பவளா

     

    கம்பனின் புகழ் பாடும் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள்,images (2)

    கையில் கம்பன் கவியுண்டு

    கலசம் நிறைய மதுவுண்டு

    வையம் தருமிவ் வளமின்றி

    வாழும் சுவர்க்கம் வேறுண்டோ?”

    என்பார்.

     இப்படி கம்பன் கவியில் கட்டுண்டுடவர் கவியரசர் கண்ணதாசனும்தான்! ஆம். கம்ப ரசத்தை ஆழ்ந்து சுவைத்து அதன் சாரத்தையெல்லாம் தம் கவி மொழியில் திணித்து, நம்மைச் சுவைக்கடலில் திக்குமுக்காட வைத்திருக்கும் ஓர் அற்புதக் கவிஞன் நம் கண்ணதாசன்.

    கவிச்சக்கரவர்த்தி கம்பனை, நம் கவியரசர் கண்ணதாசன் வாயாற புகழ்வதைப் பாருங்கள்……

    பத்தாயிரம் கவிதை முத்தாக

    அள்ளி வைத்த சத்தான

    கம்பனுக்கு ஈடு இன்னும்

    வித்தாகவில்லை என்று பாடு!

    என்று கம்பனின் கீர்த்தியைப் பாடியவன் அப்பெரும் புலவனின் கவிதைகளின் தாக்கமே தம் பெரும்பாலான பாடல்கள் என்றும் பதிந்துச் சென்றிருக்கிறார். ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்தானே? இதோ அந்த ஒரு சில சோறுகள்…

    1949ம் ஆண்டு, ‘கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே’ என்று `கன்னியின் காதலி’எனும் திரைப்படத்திற்காக  எழுதியது முதல் பாடல் என்றால் நம்புவது எளிதாகத்தான் இல்லை. மூன்றாம் பிறை என்ற திரைப்படத்தில் மிகவும் பிரபலமான,  `கண்ணே கலைமானே’ என்பதுதான் கவிப்பேரரசரின் கடைசிப் பாடல். உலகத்தோரின் உள்ளம் கொள்ளைகொண்ட அற்புதமும் இதில்தான்!

    ஆலயமணி எனும் திரைப்படத்தில்  டி.எம். சௌந்தரராஜன், எல்.ஆர். ஈசுவரி பாடிய இப்பாடல் கவிஞரின் திரைப்பாடல் பயணத்தின் ஒரு மைல்கல் எனலாம்.

    கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?

    கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா?

    சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா?

    சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா?

    சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா?

    சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா?

    அடடா.. அடடா…. இந்தத் தமிழ்க்காதலன்,

    வார்த்தை விளையாட்டில் மன்னனவன்!!

    கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம்

    கல்லைக் கனி ஆக்கும் உந்தன் ஒரு வாசகம்

    ஆன்மீகமும், இலக்கிய நேசமும், காதல் சுவாசமும் என அனைத்தையும் ஒருங்கே ஓரிரு வரிகளில் உரைப்புடன் அழகாய் வசப்பட்டிருக்கிறது கவிஞருக்கு.

    கம்பன் கண்ட சீதை உந்தன் தாயல்லவா?

    காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா?

    அம்பிகாபதி அணைத்த அமராவதி மங்கை அமராவதி

    சென்ற பின்பு பாவலர்க்கு நீயே கதி என்றும் நீயே கதி

     

    தம் காதலியைக் கம்பன் கண்ட, சீதை மகளாகவும், சகுந்தலை எனும் சேயாகவும் காணும் காதலனின் மொழியை அம்பிகாபதியும், அமராவதியும் பாடுவதையும், அதைச் சுவைத்து மகிழும் பாவலரின் கதியும் நம் கண் முன்னே படமாக விரிவதை மறுக்கவும் இயலுமோ?

    கண்மூடி, மனதை ஒரு நிலைப்படுத்தி, உள்ளத்தைச் சற்றே தெளிவாக்கி, அமைதியாக உட்கார்ந்து கொண்டு, அருகில் மெல்லிய ஒலியில், இந்தப் பாடலை ஒலிக்கவிட்டுப் பாருங்களேன். அப்போது தெரியும், இதன் அருமை.. ஆம், தவழ்ந்து வரும் தென்றலுடன், செந்தாழம் பூவின் மணமும் கமழ்ந்து வந்து மேலே மோதுவதை உணர முடியும்!  ஆனந்தத்தில் திளைக்கும் உள்ளமும் உரித்தாகும்..  வார்த்தைகளில் மந்திரத்தைப் புகுத்தி உன்மத்தமாக்கும் கலையில் வல்லவர் இந்த கவியரசர் என்பதே நிதர்சனம்! இதோ பாடலின் சில முத்தாய்ப்பான வரிகள்..

    செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்

    என் மீது மோதுதம்மா

    செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்

    என் மீது மோதுதம்மா

    பூ வாசம் மேடை போடுதம்மா

    பெண்போல ஜாடை பேசுதம்மா

    அம்மம்மா ஆனந்தம்

    அம்மம்மா ஆனந்தம்

     

    வளைந்து நெளிந்து போகும்பாதை

    மங்கை மோகக் கூந்தலோ?

    மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம்

    பருவ நாண ஊடலோ?

     

    அடடா … இந்தக் காட்சி கண் முன்னே விரியும்போது உடலும் மெலிதாகி உடன் பறந்து மேகத்தினுள் நுழைந்து, பனிக்காற்றின் வருடலில் நெகிழ்ந்து நிற்கும் அனுபவத்தைப் பெறமுடியும்! கம்பன் செய்த வர்ணனை என்ற சத்தியப்பிரமாணமும் கொடுத்து, சாட்சிக்கு அழைத்துக்கொள்ளும் யுக்தி.

    அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாகப்

    போகிறாள்

    ஜரிகை நெளியும் சேலை கொண்டு

    மலையை மூடப் பார்க்கிறாள்

     

    இளைய பருவம் மலையில் வந்தால்

    ஏகம் சொர்க்க சிந்தனை

    இதழில் வருடும் பனியின் காற்று

    கம்பன் செய்த வர்ணனை

    ஓடை தரும் வாடைக் காற்று வான்

    உலகைக் காட்டுது

    உள்ளே வரும் வெள்ளம் ஒன்று

    எங்கோ என்னைக் கூட்டுது

    மறவேன் மறவேன் அற்புதக் காட்சி

    மகிழ்ச்சியோ, கோபமோ, வேதனையோ அல்லது அன்போ எதுவாகிலும் அதனை அபரிமிதமாகக் காட்டும் வல்லமை பெற்ற கவியரசர்கள் ஆச்சரியத்திற்குரியவர்கள்.  பக்தியும், காதலும், ஊடலும், உன்மத்தமும் அனைத்தும் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கும் அழகைக் கூர்ந்து கவனிப்பவர்கள் தவிர்க்க இயலாது! அந்த வகையில் நம் கவியரசரின் சில பாடல்கள் நம் உள்ளத்தை உருக்கிக் கொள்ளை கொண்டுவிடும் என்பதே சத்தியம். இது ஒருநாள் நிகழ்வு அல்ல என்பதே உச்சம். ஆம், ஒவ்வொரு முறை கேட்கும்போதும் முதல் முறை கேட்கும்போது ஏற்பட்ட அதே அதிர்வு ஏற்படத்தான் செய்கிறது. இது எங்கனம் சில கவிஞர்களுக்கு மட்டுமே சாத்தியமாகிறது என்று சிந்திக்கும்போதுதான், சிலர் பிறவி ஞானம் பெற்று வருபவர்கள் என்ற கூத்தை ஒப்புக்கொள்ள வேண்டியவராகிறோம். இந்தப் பாடல் அப்படி ஒன்றுதான் இல்லையா?

    நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்….

     

    நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை

    நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை

    முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே

    தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே

    மனிதர் வாழ்வில் மரணம் என்ற ஒன்று தவிர்க்கவே முடியாதது என்பதை நாம் அறியாதது அல்ல.  ஆனால் ஒரு அன்பு நண்பன், அருமைத் தோழன் அருகிருந்து கண் துடைத்து, ஆறுதளிப்பது போன்றதொரு நெருக்கம் இந்த எழுத்திற்கு எங்கனம் சாத்தியமானது?

    ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்

    யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது

    ஒருவர் மட்டும் குடியிருந்தல் துன்பம் ஏதுமில்லை

    ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை

    எத்துனை யதார்த்தமான வாசகங்கள்! மனிதர் வாழ்க்கையின் அடிமட்டம் வரை ஊர்ந்து சென்று உறைந்திருந்து, உருவகப்படுத்தியுள்ள வல்லமையை என்ன சொல்லி பாராட்டுவது!

    எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்

    இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது

    பாதையெல்லம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்

    மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்

     

    எத்துனை நம்பிக்கையான வார்த்தைகள்! ஒரு சரித்திரத்தையே ஒரு பாடலுக்குள் அடக்க முடியும் என்று ஆதாரம் கொடுத்துள்ள உன்னதம்!

    ‘அச்சம் என்பது மடமையடா,’ ‘மலர்ந்தும் மலராத.’ ‘போனால் போகட்டும் போடா..,’ ‘கொடி அசைந்ததும்,’ `உன்னைச் சொல்லிக் குற்றமில்லை,’  ‘சட்டி சுட்டதடா கை விட்டதடா,‘கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்,’ `எங்கிருந்தாலும் வாழ்க,’ `அதோ அந்தப் பறவைபோல வாழவேண்டும்,’ ‘பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா?’, ‘மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா’, ‘ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே’, போன்ற இன்னும் எத்தனை, எத்தனை காவியங்கள் இக்கவிச்சக்கரவர்த்தியின் புகழ் பாடுபவைகள்!

    //எல்லோரும் நாட்டியம் ஆடுவதில்லை. எல்லோரும் சங்கீதம் பாடுவதில்லை. எல்லோரும் வயலினோ, மிருதங்கமோ வாசிப்பதில்லை. சிலருக்குத்தான் இந்தக் காரியங்களைச் செய்ய முடிகிறது. அந்தச் சிலரிலேயே ஓரிரண்டுபேர் செய்யும் பொழுது நமக்கு மெய் மறந்துவிடுகிறது. தெய்வத்தையே கண்டு விட்டாற்போல புல்லரித்துப் போகிறோம். வேறு பலர் செய்யும் பொழுது, நமக்கு இந்த அனுபவம் ஏற்படுவதில்லை. ஒரு சமயம் நாம் பிரமிக்கலாம். மலைக்கலாம். வியக்கலாம். நுட்பமான ரசானுபவம், தன்மறதி போன்ற உணர்வு நிலைகள் வருவதில்லை. கலைஞர் உணர்வு மயமாகி ஆகி ஆடும்போதோ, வாசிக்கும் போதோ, தானாக ஒரு முழுமையும் ஓர் ஒருமையும் அந்தக் கலைப்படைப்பில் நிறைந்து, நம்முள்ளேயும் பரவி நிரம்பும். உணர்வு இல்லாமல் இயந்திர ரீதியில் படைக்கிறவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் சாமர்த்தியத்தையும் அசகாய சூரத்தனத்தையும் காட்டி நம்மைப் பிரமிக்க வைக்க முடியும், ஆனால் மெய்மறக்கச் செய்ய இயலாது. நான் இந்த நோக்கில்தான் எந்தக் கலைப் படைப்பையும் பார்க்கிற வழக்கம். சிறுகதையையும் அப்படித்தான் பார்க்கிறேன்.//  தி.ஜானகிராமன் எழுதிய,  ‘சிறுகதை எழுதுவது எப்படி’ – என்ற கட்டுரையின் ஒரு பகுதி இது. கவியரசர் கண்ணதாசனின் பாடல்களுக்கும் இது முழுமையாகப் பொருந்தும். நாமும் அன்றாடம் எத்தனையோ விதமான படைப்புகளை கடந்து வந்துகொண்டுதான் இருக்கிறோம். என்றாலும் ஒரு சில நேரங்களில், குறிப்பிட்ட ஒரு சில படைப்புகளே, ஒரு சில சூழல்களுக்கு உகந்ததாக, இதமாக அமையும். உதாரணமாக,

    பாலும் பழமும் (1961) திரைப்படத்தில்,  எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், டி.எம். சௌந்தரராஜன் பாடிய, ‘போனால் போகட்டும் போடா’ என்ற பாடலை அதற்கான ஒரு துக்ககரமான சூழலில் கேட்டுப்பாருங்கள்.. அந்த துக்கத்தின் வலியை முழுவதுமாக உணர்ந்து ஓவென்று அழுது தீர்த்தபின்பு ஒரு ஆழ்ந்த அமைதியைப் பெற முடியும் என்றால் அதுதான் தெய்வத்தின் சன்னதி என்றே கூற முடியும் அல்லவா.. இதோ அப்படி ஒரு முத்தான, சொத்து!

    போனால் போகட்டும் போடா

    போனால் போகட்டும் போடா – இந்த

    பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?

    போனால் போகட்டும் போடா

     

    வந்தது தெரியும் போவது எங்கே

    வாசல் நமக்கே தெரியாது

    வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் – இந்த

    மண்ணில் நமக்கே இடமேது?

     

    இரவல் தந்தவன் கேட்கின்றான் – அதை

    இல்லை என்றால் அவன் விடுவானா?

    உறவைச் சொல்லி அழுவதனாலே

    உயிரை மீண்டும் தருவானா?

    கூக்குரலாலே கிடைக்காது – இது

    கோட்டைக்குப் போனால் ஜெயிக்காது – அந்தக்

    கோட்டையில் நுழைந்தால் திரும்பாது

     

    எத்துனை யதார்த்தம்.. எத்துனை சத்தியமான வார்த்தைகள். அப்பப்பா கண்ணதாசனைத் தவிர யாரால் இப்படி எழுத முடியும்?

    கவிஞர் கண்ணதாசன், தன்னைத்தானே கொஞ்சமும் தயவு  தாட்சண்யமில்லாமல், ஆய்வு  செய்து  கொண்டு அவர் வெளியிட்ட சில  அறிக்கைகள் பலவுண்டு… அதில் சில…

    நானிடறி வீழ்ந்த இடம்  நாலாயிரம் அதிலும்    நான்போட்ட முட்கள் பதியும்

    நடைபாதை வணிகனெனெ   நான்கூவி விற்றபொருள்    நல்லபொருள் இல்லை அதிகம்

    மனிதர்களின் எல்லையற்ற கவலைகள், நோய்கள்,தேடல்கள், தவிப்புகள் போன்ற அனைத்தையுமே சமநோக்கோடு பார்த்ததன் விளைவாகக்  கவிஞர் கண்ணதாசன் எழுதிய அற்புதமான சொற்களே இவை.

    காக்கை குருவியைப்போல் கவலையின்றி நீயிருந்தால்

    யாக்கை கொடுத்தவனை யார்நினைப்பார் இவ்வுலகில்

     

    சட்டியிலே வேகின்ற சத்தெல்லாம் சரக்கானால்

    மட்டின்றிப் படித்துவந்த மருத்துவர்க்கு வேலையென்ன

     

    கடலருகே வீற்றிருந்தும் கடுந்தாகம் வரும்பொழுதே

    கடவுளெனும் ஒருவனது கைசரக்கு நினைவுவரும்

    இன்னதுதான் இப்படித்தான் என்பதெல்லாம் பொய்க்கணக்கு

    இறைவனிடம் உள்ளதடா எப்போதும் உன்வழக்கு

     

    எல்லாம் அவன்செயலே என்பதற்கு என்னபொருள்

    உன்னால் முடிந்ததெல்லாம் ஓரளவே என்றுபொருள்  

    கோடைநாளின்  சாலைவழிப் பயணத்தின் களைப்பான வேளையில் வழியில் தென்படும் படர்ந்த குளிர் நிழல்போன்ற இதமான வரிகள் இவை.

    உலகில் தான் கண்ட எத்தனையோ விசயங்களின் மூலம்  தனக்குக் கிடைத்த அனுபவங்கள் பற்றி கவிஞர் சொல்வதைப் பாருங்களேன்…

    “ஆற்றிலும் குளித்தேன் சேற்றிலும் குளித்தேன்

    காற்றிலும் பறந்தேன் கல்லிலும் நடந்தேன்

    ஊற்றுப் புனலில் ஒளியினைக் கண்டேன்

    மாற்றுப் பொன்னிலும் மாசினைப் பார்த்தேன்

    பார்த்தது கோடி பட்டது கோடி

    சேர்த்தது என்ன? சிறந்த அனுபவம்”

    அனுபவங்களின் அமுத சாரமே கண்ணதாசன் கவிதைகள். பலமுறை, திரைப் பாடல்களில் சூசகமாகத் தமது சொந்தக் கருத்துகள், விருப்பங்களைப் பதிவு செய்து அவற்றை சம்பந்தப்பட்டவர் மட்டுமே அறிந்துக் கொள்ளும் வகையில் திறம்பட எழுதக் கூடியவர் கண்ணதாசன். இவர் திமுக கட்சியில் இருந்த போது காமராஜரின் மீது தனிப்பட்ட முறையில் பற்று கொண்டிருந்தாலும், தான் சார்ந்திருந்த கட்சிக்காக  தன் விருப்பத்தையும் மீறி, அவரை எதிர்க்க வேண்டிய சூழல் இருந்தது. இந்நிலையில் பட்டணத்தில் பூதம் என்ற  படத்துக்காக எழுதப்பட்ட ,  “அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி, என்னைச் சேரும் நாள் பார்க்கச் சொல்லடி” என்று எழுதினார். காமராஜரின் தாயார் பெயர் சிவகாமி அம்மையார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஐயாயிரத்துக்கும் அதிகமான திரைப்பாடல்கள் மட்டுமின்றி, தனிக்கவிதைத் தொகுப்புகள், நாவல்கள், இலக்கியத் திறனாய்வுகள், நாடகங்கள், சுயசரிதை என இலக்கியத்தின் பல்வேறு பரிமாணங்களிலும் பகலவனாய் பரிமளித்தவர் கவியரசர். தனது “சேரமான் காதலி” எனும் படைப்பிற்காக சாகித்ய அகாதமியின் விருதும் பெற்றார்.

    இவையனைத்திற்கும் மேலாக, இறப்புக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பே தனக்குத்தானே இரங்கற்பா எழுதிவைத்துக்கொண்ட கவிஞர் இவராகத்தான் இருக்க முடியுமோ என்றுதான் தோன்றுகிறது. எத்துனை துணிவு வேண்டும் இதற்கு.. மனிதர் ஒரு முறை தானே, தன் நெருங்கிய உறவுகள், நட்புகள் என அனைவருக்கும் தான் இறந்துவிட்டதாகச் செய்தி அனுப்பிவிட்டு உட்கார்ந்திருக்கிறாராம்.. அப்படி என்னதான் கற்பனை செய்திருப்பாரோ..?

    அவருடைய சுய இரங்கற்பாவின்  இறுதி பத்தி இப்படி முடியும்…

    போற்றியதன் தலைவனிடம் போகின்றேன்

       என்றவன்வாய் புகன்ற தில்லை;

    சாற்றியதன் தமிழிடமும் சாகின்றேன்

       என்றவன்வாய் சாற்ற வில்லை;

    கூற்றவன் தன் அழைப்பிதழைக் கொடுத்தவுடன்

       படுத்தவனைக் குவித்துப் போட்டு

    ஏற்றியசெந் தீயேநீ எரிவதிலும்

       அவன்பாட்டை எழுந்து பாடு!

     

    தனக்கே ஒரு கவிஞன் இரங்கற்பா பாடிக்கொண்ட புதுமையைச் செய்தவர் கவியரசு கண்ணதாசன். ஆம் ஒரு மனிதன் தன்னையே ஆய்வு செய்கிறபோது கிடைக்கிற தெளிவு ஆயிரமாயிரம் அறநூல்களை வாசிப்பதால் வருகிற தெளிவைக்காட்டிலும் தெளிந்தது.

    “அவனது வாழ்க்கை அதிசயமான வேடிக்கை. அவசரத்தில் காரியம் செய்து, சாவகாசத்தில் சங்கடப்படுவது அவனது இயற்கையான சுபாவம். தவறுகளைப் புரிந்து கொண்டே அவற்றை மறந்து நியாயம் கற்பிக்க முயன்றான். அவன் மனம் அழுத பொழுதும் வாய் சிரித்துக் கொண்டிருந்தது. பயனற்ற வேலைகளில் ஆசையோடு ஈடுபட்டுப் பொழுதைச் செலவழித்தான்” – தன்னைப் பற்றிய சுயசரிதையில் எழுதிய வரிகள் தான் இது!

    Share
  • கவியரசர் கண்ணதாசன்

    மீ.விசுவநாதன்

    images (2)
    கவிதை எழுத வேண்டும் !
    கண்ண தாசன் போலத்
    தவிக்கும் ஆத்ம தாக
    தர்மத் துடன் என்றும்
    புவியில் நிலைத்து நிற்கும்
    புதுப்புது எளிய சொல்லால்
    செவியும் மனதும் ஈர்க்கும்
    செந்தமிழ்ப் பழக்கத் தாலே !

    வலியோர் எளியோர் என்று
    வருவோர் போவோர் கூட
    சலியா மனதைக் கொள்ள
    சர்க்கரைப் பாடல் தந்து
    புலியாய்ப் பாயச் செய்தும்
    பூவாய் மலர வைத்தும்
    பொலிந்த கண்ண தாசன்
    பொன்னடி தொழுது நிற்பேன்!
    (இன்று 24.06.2015 கவியரசரின் பிறந்த தினம்)

    Share
  • இன்று கவிஞர் கண்ணதாசன் பிறந்தநாள்….

    எத்தனையோ ஸ்லோகங்கள் இருந்தாலும், எனது பிரார்த்தனை வரிகள் ”கந்தன் கருணை” படத்தில் பி.சுசிலா அம்மையார் அவர்களின் தேனினும் இனிய குரலில், கே.வி.மகாதேவன் இசையமைப்பில் பார்வதி(சாவித்திரி அம்மா) தன் மகன் முருகனைக் கொஞ்சும் கவிஞரின் தாலாட்டு வரிகள் ”உயிரினங்கள் ஒன்றையொன்று வாழ்த்திடும் போது அதன் உள்ளிருந்து வாழ்த்துவது உன் குரலன்றோ முருகா உன் குரலன்றோ”….கிரேசி மோகன்….

    kannadasan2

    இன்று கவிஞர் கண்ணதாசன் பிறந்தநாள்….
    ——————————————————-
    ”உயிரினங்கள் ஒன்றையொன்று உள்ளிருந்து வாழ்த்தல்
    அயிவேலன் வாக்கென்ற, அந்த -மயிலிறகு
    கண்ணனின் தாசன் கவிச்சக்ர வர்த்தியின்று
    மண்ணில் பிறந்தார் மலர்ந்து”….கிரேசி மோகன்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

    ”கண்ணா பிதற்றல் கவிதை அளிக்கின்றேன்,
    உன்னால் முடியும் உவந்தேற்க: -முன்னால்,
    முழங்கால் மடித்துவிழும் மாட்டுக்(கு) அளித்தாய்,
    தொழுங்கால் ஆசீர்வா தம்”….கிரேசி மோகன்….

    Share
  • கவியரசு கண்ணதாசன் பிறந்த நாள் – சிறப்புப் பதிவு

    கவிஞர் காவிரிமைந்தன்.

    ‘கண்ணதாசன்’ – இந்த ஒற்றைச் சொல்லுக்குள் எத்தனைப் புதையல்கள்? எத்தனைப் பொக்கிஷங்கள்? கடந்த நூற்றாண்டில், கால வெள்ளம் கரைத்துவிட முடியாத அளவு, தமிழ் பேசத் தெரிந்த மக்களின் இதயங்களில் நிறைந்திருக்கும் பெயர் ‘ கண்ணதாசன்.’

    பாரதி, பாரதிதாசன் காலங்களுக்கு பின் வந்த கவிஞர்கள் வரிசையில், மக்கள் மனதில் இடம்பெற்ற கவிஞரின் சிறப்புகள் ஒன்றல்ல… இரண்டல்ல… ஓராயிரம்…
    நாம் வாழ்கின்ற நூற்றாண்டில் நம் கண்முன்னே வாழ்ந்து…
    அன்பன் கண்ணதாசன் என்று அழகுக் கையொப்பமிட்டு…
    கவிஞர் கண்ணதாசன் என்று திரையுலகில் கோலோச்சி…
    கவியரசு கண்ணதாசன் என்று தமிழக அரசால் கௌரவிக்கப்பட்டு…
    கோடான கோடி தமிழ் நெஞ்சங்களில் இனிக்கின்ற பெயர் கண்ணதாசன்…
    கொஞ்சும் தமிழ் மகளுக்குக் கொலுசு கட்டி சந்தக்கவி பல்லாயிரம் படைத்தவர் கண்ணதாசன்!

    கவியரசரின் பாடல் வரிகள் என்பது..

    kannadasan2* வெறும் கதைக்காக மட்டும் எழுதப்பட்டவை அல்ல…
    * கதாநாயக, நாயகியர் பாத்திரப் படைப்புக்காக மட்டுமல்ல…
    * இசை வடிவிற்கு வார்த்தைகள் வழங்கிய விழா மட்டுமல்ல, மாறாக என்றைக்கும் மாறாத வாழ்க்கைத் தத்துவங்களாக…
    * மனித குலம் என்றைக்கும் நினைவில் கொள்ளத்தக்க வரிகளாய், வார்த்தைகளாய்…
    * உறவுக்கும் பிரிவுக்கும் தக்கதோர் பாலமாய் …
    * உணர்வின் வடிகாலாய்…
    * பண்பாட்டிற்கும் ஒருமைப்பாட்டிற்கும் மிகச் சிறந்த உதாரணமாய்…
    * பழமொழிகள் முதலாக மரபில் வரும் அத்தனை முத்துக்களையும் கோர்த்தெடுத்த மலர்ச்சரமாய்…
    * வாழ்த்துகள் என்றால்.. வகை.. வகையாய்.. சூடிக் கொடுத்த பாங்கு..
    * பக்தி என்றால் இசைந்து… கனிந்து உருகிடும் உள்ளம்…
    * அனுபவ முத்திரைகள் கொட்டிக்கிடக்கும் அதிசயச் சுரங்கமாய்…
    * வேதங்கள், உபநிடதங்கள் முதலான பல்வேறு புராணங்கள், இதிகாசங்கள், இலக்கியங்கள் என்பனவற்றின் சாரங்களை எத்தனை எளிமையாக்கி…
    * வார்த்தை வரிகளாய் வடித்து வைத்த வள்ளல்… கண்ணதாசன்… கண்ணதாசன்…

    கவியரசர் தம் பாடல்களில் உள்ள சுகம் – தனி ராகம் – எளிய சொற்களை மட்டுமே கையாண்டு அவர் எட்டியிருக்கும் உயரம் விழியிமைகளை விரிய வைக்கும். வெறும் எட்டாம் வகுப்பு மட்டுமே படித்த கண்ணதாசனிடம் தமிழ் எப்படி இப்படி கொட்டிக்கவிழ்த்த தமிழமுத சுரபியாய் அமைந்தது என்று வியக்காத பண்டிதரில்லை!

    கவிதை, நயம், பொருள், சொல்லழகு என்று இலக்கணம் பயின்ற தமிழ்ப் புலவர்களுக்கும் வசப்படாத கற்பனை வளம் கொடிகட்டிப் பறந்தது கவிஞரிடம்! எழுதப்படிக்கத் தெரியாத எவரும்கூட கண்ணதாசனின் பாடல் அமுதம் கேட்டபின் தமிழின் இனிமையில் மூழ்கினர் என்பதே அந்த வெற்றித்திருமகன் வெள்ளித்திரையில் படைத்த வரலாறு. அப்பாடல்கள் காலத்தை வென்றவை என்பதற்கு இதுவே சாட்சி!

    மனித குலத்திற்குத் தேவைப்படும் கருத்து முத்துக்களை – தமிழ்த்திரைப் பாடல் என்னும் ஊடகத்தின் வாயிலாக கோடான கோடி மக்களுக்கு ஆறுதலும், அறிவுரையும், தேறுதலும் தருகின்ற கண்ணதாசனை தரிசித்தேன்… இன்றும் தரிசிக்கிறேன்… என்றும் தரிசிப்பேன்!

    கண்ணதாசன் – என்னைப் பொறுத்தவரை ஒரு மந்திரச்சொல் போல மகத்துவம் நிறைந்தது. இனிக்கும் தமிழை இதயம் வழிய வழிய தந்த வள்ளல். எளிய நடையில் பாமரனது நாவிலும் பைந்தமிழ் பரவச் செய்தவன். திரைப்பாடல் மூலமாக தெள்ளத் தெளிவாக மானுட வாழ்வின் சுக துக்கங்களைப் பதிவு செய்தவன். அனுபவ முத்திரையோடு அழகு தமிழும் ஆடிவரும் பேரழகை இசையின் வடிவோடு பெற்றிட்ட நாம் பேறு பெற்றவர்கள்… இதைவிடப் பேரின்பம் ஏது?

     

    Share
  • ஜூன் 24: கவியரசு கண்ணதாசன் பிறந்த நாள்

    பிதற்றலும் கவிதையே…..

     

    எஸ் வி வேணுகோபாலன்

    kannadasan2

    கண்ணதாசன் இல்லை என்றால் நான் எப்போதோ என் வாழ்க்கையை முடித்துக் கொண்டிருப்பேன் சார்..என்று என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தவரை அன்றுதான் நான் அறிமுகம் செய்து கொண்டேன். இரண்டு ஆண்டுகளுக்குமுன் என் வாழ்க்கை இணையின் கைக் கடிகாரத்திற்கு அவர் புதிய செல் எடுத்துப் பொருத்திக் கொண்டிருந்தார். கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகில் உள்ள அந்தச் சிறிய கடைவாசலில் நின்றவாறு வழக்கம்போல் எனக்குப் பிடித்த ஒரு திரைப்படப் பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தபோது தற்செயலாகத் தொடங்கிய பேச்சின் நிறைவில் மிகப் பெரிய கவிதை ரசிகரை, பாடல் வழிபாட்டாளரை நான் கண்டுகொண்டேன்.

    அந்த எளிய மனிதர், தனது காதல் மனைவியைப் பறிகொடுத்த துயரமிக்க இரவுகளில் வாழ்க்கையின் கசப்பிலிருந்து விடுதலை பெறத் துடித்தபோது, அவரது உள்ளத்தில் கண்ணதாசனின் துன்பியல் பாடல்கள் மாற்றுவினை நிகழ்த்திக் கொண்டிருந்தன. இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய அவரது கண்களில், தானே கண்ணதாசன்தான் என்பது போன்ற பெருமித வெளிச்சம் மின்னுவதை நான் அதற்குப் பிறகு பலமுறை பார்ப்பதுண்டு.

    இப்படி லட்சக்கணக்கான ரசிக இதயங்களில் கால காலமாகக் குடி இருக்கும் வண்ணம் எப்படி அவரால் ஒரு ரசவாதம் செய்ய முடிந்தது…இத்தனைக்கும் எளிமையோ எளிமையான சொற்களால் நிரம்பித் ததும்புகின்றன அவரது பாடல் மதுக் கிண்ணங்கள். தலைவன், தலைவி, நண்பன், எதிரி, ஊடல், கூடல், காதல், காமம், குறும்பும் சேட்டையும், கனிவும் பரிவும், சிரிப்பு, கண்ணீர், பாசம், வஞ்சகம், அருளுதல் மருளுதல், வேண்டுதல் மீறுதல், கேள்வியும் பதிலும், நெருப்பும் குளிர்ச்சியும்…..என்னதான் பாடவில்லை, கண்ணதாசன்!

    காதலில் தோற்றவன் கடவுளை நொந்து கொள்ளுதல் உலக நியதி, ஆனால், ‘கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும், அவன் காதலித்து வேதனையில் வாடவேண்டும், பிரிவென்னும் கடலினிலே மூழ்கவேண்டும், அவன் பெண் என்றால் என்னவென்று உணரவேண்டும்…’ என்று (வானம்பாடி) சாபமிட முடிந்தது அவருக்கு. ‘கண்ணனையும் இந்த இடம் கலக்கவில்லையா, இந்த கர்ணனுக்கு மட்டுமென்ன இதயம் இல்லையா’ என்று காதல் உருகுதலை வடிக்கவும் முடிந்தது.

    புராண பாத்திரங்களை கதைக்கருவிற்கு ஏற்ப பாடலில் இழைத்துக் கொண்டுவருவதில் பேரார்வம் மிகுந்திருந்தது அவரிடம். ரோஜாவின் ராஜா திரைப்படத்தில் தனது நண்பனுக்காகப் பெண் பார்க்கச் செல்கையில் அங்கே தனது காதலியைக் கண்டு திடுக்கிடும் நாயகன்முன் அந்தப் பெண் பாடுவதான ‘ஜனகனின் மகளை மணமகளாக ராமன் நினைத்திருந்தான்’ என்ற அற்புதப் பாடலின் இலக்கிய நயம் அசாத்திய சுவை கொண்டிருப்பது. ‘கொதிக்கின்ற மூச்சு மாலையில் விழுந்து மணியும் கருகியதே, அவள் கூந்தலில் இருந்த மலரும் ஜானகி நிலைமைக்கு உருகியதே….’ என்று நிறைவடையும் அந்தப் பாடல் ஓர் அழகு சிற்பம்.

    வாழ்க்கைப் படகு திரைப்படத்தின் ‘உன்னைத்தான் நான் அறிவேன்’ என்ற அருமையான பாட்டின் சரணத்தில், ;காதலித்தல் பாவம் என்றால் கண்களும் பாவம் அன்றோ, கண்களே பாவம் என்றால் பெண்மையே பாவம் அன்றோ’ என்று கொஞ்சும் சுசீலாவின் குரல், ‘பெண்மையே பாவம் என்றால்..’ என இழுத்து, ‘மன்னவனின் தாய் யாரோ?’ என்று கொண்டு நிறுத்தும் இடத்தில் ரசிகர், கண்ணதாசன் நினைவில் தனது உயிர் மூச்சை ஒரு சொடுக்கு போடும் நேரம் நிறுத்தி இழுத்துக் கொள்வார் அல்லவா…

    ‘நெருப்பென்று சொன்னால் நீரிலும் அணையும், நீரென்று சொன்னால் நெருப்பிலும் வேகும்’ என்ற மிடுக்கோடு கே பாலச்சந்தரின் கதாநாயகி அவள் ஒரு தொடர்கதையாக நடந்து போகும்போதும், ‘தண்ணீரிலே தாமரைப் பூ தள்ளாடுதே அலைகளிலே’ என்று தங்கையின் உயிரைக் காக்க ஓர் அண்ணன் போராடிக் கொண்டிருக்கும் போதும், ‘இங்கே என் காலம் எல்லாம் முடிந்துவிட்டாலும், ஓர் இரவினிலே முதுமையை நான் அடைந்துவிட்டாலும்’ என்று நிச்சயதாம்பூலத்திற்கு ஒரு காதலன் தவிப்பாய்த் தவிக்கும்போதும் கண்ணதாசன் இல்லாமல் போயிருந்தால் என்னவாகி இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

    பாடல்களில் அரசியலைக் கலந்த அந்த கால கட்டத்தில், காமராசரைக் கருத்தில் கொண்டு பல பாடல்களில் அவரைக் குறிக்கும் சொற்களைப் போட்டு எழுதியவர் கண்ணதாசன். சிவகாமி உமையவளே முத்துமாரி, உன் செல்வனுக்கும் காலம் வரும் முத்துமாரி (பட்டிக்காடா பட்டணமா), நல்லோர்கள் தம்நெஞ்சம் நவசக்தி பெறவேண்டும், ஆர்ப்பாட்ட அலை ஓசை வரவேண்டும், எல்லோர்க்கும் வாழ்வென்னும் கர்மவீரர் பின்னாலே….(ராஜபார்ட் ரங்கதுரை) என்று செல்கிறது அந்த அலைவரிசை.

    எலந்தப்பயம் (பணமா பாசமா) போன்ற கொச்சையான பாடல்களையும் உள்ளடக்கியதுதான் கண்ணதாசனின் படைப்புலகம். திரைப் பாடல்கள் மூலம் பெற்ற அவரது பாடலின்பம் ஒரு பக்கம். கவிதைகளாக அவரிடமிருந்து பாய்ந்துவந்த பெருவெள்ளம் இன்னோர் அரிய பக்கம். அவரது அறுசீர், எண்சீர் விருத்தங்களின் ஓசைநயம், சொற்களின் வீச்சு, தாளகதி எல்லாம் உள்ளத்தைக் கொள்பவை. கம்ப ராமாயணச் செய்யுளை மிகுந்த ரசனையோடு தனது மேடைப் பேச்சுக்களில் சங்குசக சங்குசக சங்குசக சங்சங் என்று அவர் மெட்டுப் போட்டுச் சொல்வதைக் கேட்டோர் இசைநதி நுரைபொங்க வழிந்தோடும் அவரது உள்ளத்தை நேரில் கண்டிருப்பர்.

    அவரது அரசியல் உணர்வுகளின் மாற்றங்களின் பதிவாகவும் அவரது கவிதைத் தொகுதிகள் அமைந்திருப்பதைப் பார்க்க முடியும். திராவிட இயக்கத்தின் செல்லப் பிள்ளையான அவரே, ‘இந்திய மலைகள் தோறும் இந்திரா பேர் கேட்டாயா’ என்றும் எழுதினார் வேறொரு கட்டத்தில். ஆட்டுக்குட்டி முட்டை இட்டு என்ற திரைப்பாடலின் முன் வடிவம், திராவிட நாடு குறித்த அவரது பகடியான, ‘குதிரை ஒரு முட்டையிட கோழி அதை அடைகாக்க குட்டியானை பிறக்கும்….’ என்ற கவிதைதான்.

    எழுபதுகளின் பிற்பகுதியில் குமுதம் இதழில் வாரா வாரம் கண்ணதாசன் எழுதி வந்த கவிதைகள் ரசனை மிக்கவை. கேள்வனே கண்ணபிரானே என்ற தலைப்பிலான கவிதையில், ‘கண்வழி சொற்களும் கைவளை சொர்க்கமும் கள்ளமோ கானலோ தோற்றேன், பெண்மையே பொய்மையோ பொய்மையே பெண்மையோ பேதையர் கூடலை ஏற்றேன்..’ போன்ற இடங்களில் சித்தர் மரபினைக் காண முடியும்.

    “நான்தான் கண்ணதாசன், எனது கதை கவிதை கட்டுரைகளைப் படிக்க கண்ணதாசன் மாத இதழ் படியுங்கள், கண்ணதாசன், சென்னை 17” என்ற கம்பீரக் குரலை எழுபதுகளின் பிற்பகுதியில் விவித பாரதியின் வர்த்தக ஒலிபரப்பு விளம்பரங்களைக் கேட்டோர் மறக்க முடியாது.

    தனக்குத் தானே இரங்கற்பா எழுதி வைத்துவிட்டுப் போன கவிஞர், தான் இறந்த செய்தி கேட்டால் யார் முதலாவதாக வந்து நிற்பார் என்று தான் இருக்கும்போதே பார்க்கத் துடித்த வித்தியாசமான மனிதர், திருப்பூர் தொழிற்சாலை அரவத்தின் நடுவே அமர்ந்துகூட தன்னால் கவிதை எழுத முடியும் என்று சவால் விடுத்த குழந்தை உள்ளம், கண்ணதாசன்.

    முத்தையா என்ற தன்பெயரை கண்ணதாசன் என்று மாற்றிக் கொண்ட கவியரசு, கண்ணனை முன்வைத்து அடுக்கித் தள்ளிய சுவைமிகுந்த கவிதைகளின் ஒளிக் கீற்றுக்கு இந்த எடுத்துக்காட்டு போதுமானது. ஏனெனில், அவர் உள்ளத்தின் எதிரொலி அதில் கேட்கிறது.

    நள்ளிராப் போழ்தினில் நானுமென் கண்ணனும்
    உள்ளுறும் பொருள்களை உரைப்பதுண்டுகாண்
    கள்ளினும் இனியவென் கண்ணன் சொன்னது
    பிள்ளைபோல் வாழும்நீ பிதற்றலும் கவிதையே!

    வாழ்வைத் துறக்க முடிவெடுத்த மனிதரையே தனது பாடல்கள் மூலம் வாழ்க்கையின் மீது நம்பிக்கை கொள்ள வைக்க முடிந்த கவிஞரின் பாடல்களும் நிரந்தரமானவை ஆகத் தானே இருக்க முடியும்….எந்த நிலையிலும் அவருக்கும் மரணமில்லைதான்!

    *******************

    Share
  • காதலின் பொன்வீதியில் – 8

    மீனாட்சி பாலகணேஷ்.

    பள்ளத்தை நோக்கி ஓடும் வெள்ளம் …

     

    ‘பெண்களுக்கு அழகின் பயன் ஒன்றுதான்; காதலன் மனதைத் தன் வசப்படுத்தி, அவனது அன்பை நிரந்தரமாகப் பெற வேண்டும். அவ்வாறு பெற இயலாத தன் அழகைப் பார்வதி நொந்து கொண்டாள்’- என்கின்றது குமாரசம்பவம் எனும் சமஸ்கிருத நூல்.

    ‘ஆகவே மனதை ஒருமைப்படுத்தித் தவம் செய்து சிவனை அடைவதன் மூலம் தனது அழகினைப் பயனுடையதாக்க அவள் விரும்பினாள்,’ என்கிறார் இதனை இயற்றிய காளிதாசர்.

    யத் துஷ்கரம் யத் துராபம் யத் துர்கம் யச்ச துஸ்தரம்
    தத் ஸர்வம் தபஸா ப்ராப்யம் தபோஹி துரதிக்ரமம் II

    ‘வேறு எந்த உபாயத்தினாலும் அடைய இயலாததையும் தவத்தினால் அடைய இயலும்’ என்பது ஸ்லோகம்.

    இதை நன்றாக அறிந்தவள் பார்வதி. ஆகவேதான் கடினமான தவம் இயற்றத் துணிந்தாள் அவள். யாராலும் அவள் உறுதியைக் குலைக்க முடியவில்லை. தான் விரும்பிய பொருளில் உறுதியான மனத்தை உடையவரையும், பள்ளத்தை நோக்கி ஓடுகின்ற வெள்ளத்தினையும் யாரால் திசை திருப்ப இயலும்?

    தவம் செய்வதற்கு ஏற்ற கோலம் பூண்டு மரவுரி அணிந்து கூந்தலை சடைகளாகச் செய்து கொண்டாள். கையில் ஜபமாலையை ஏந்தினாள். இமவானின் அருமை மகளாக சுகவாழ்வு வாழ்ந்த அவள் கடினமான தரையில் அமர்ந்து தவம் இயற்றினாள்; கையைத் தலையணையாகக் கொண்டு உறங்கினாள். தினம் மூன்று முறை நீராடி உடலைத் தூய்மை செய்து கொண்டாள்.

    ஆனால், இவ்வாறு அவள் செய்த தவத்தினால் விரும்பிய பயன் கிட்டவில்லை! சற்றும் மனம் தளராத பார்வதி, தன் சரீரத்தின் மென்மையைப் பொருட்படுத்தாமல் மேலும் கடினமான தவத்தை இயற்றலானாள். ‘பஞ்சாக்னி தபஸ்’ எனும் கொடிய தவத்தை மேற்கொண்டாள். அது என்ன? நாற்புறமும் தீயை வளர்த்து, அதன் நடுவே நின்று கொண்டு, சூரியனையே பார்த்தபடி தவம் செய்யலானாள்.

    பனிக்காலத்தில் தாமரை இல்லாத தடாகத்தில் கழுத்தளவு நீரில் நின்று கொண்டு தவம் செய்தாள். மென்மையான தாமரை போன்ற தனது தேகத்தை இவ்வாறு வருத்திக் கொண்டு அவள் கடுந்தவம் செய்தது, மகரிஷிகளின் தவத்தினையும் தாழ்ந்ததாகச் செய்தது.

    ஏன்? என்ன ஆயிற்று? அவளுடைய காதல் ஏன் நிறைவேறவில்லை? பார்வதி ஏன் கடுந்தவம் இயற்ற விரும்புகிறாள்? காரணம் என்ன?

    ***************************************************************

    பண்டொரு நாள்…………………..
    சிவபிரான் மோனத் தவத்தில் ஆழ்ந்திருந்தார். மற்ற தினங்களைப் போல அன்றும் அவருக்குப் பணிவிடை செய்யப் பார்வதி அவருடைய ஆசிரமத்து வாயிலை அடைந்தாள்.

    அவள் அழகே உருவானவள். வசந்த காலத்தின் ஒளி மிகு மலர்களான அசோக மலர்கள் இரத்தினங்கள் போலவும், கர்ணிகார மலர்கள் தங்க நகைகள் போன்றும், சிந்து வார மலர்கள் முத்துமாலைகளாகவும் அவளை அலங்கரித்தன. இளம் சூரியன் போல் மென்சிவப்பு நிறம் கொண்ட உடையுடுத்தி, பூங்கொத்தினால் வளைந்து ஒசிந்து ஒல்கும் சிவந்த தளிர்களையுடைய மெல்லிய பூங்கொடி போன்ற உடலமைப்புக் கொண்டவள்.

    இமவான் மகள் பார்வதி வந்திருப்பதாக நந்திதேவன் அறிவிக்கிறான். சிவனும் தலையை அசைத்து ஆமோதிக்கிறார்.

    பலவித மலர்களை அணிந்திருந்த பார்வதி சிரத்தை மிகத் தாழ்த்தி அவரை நமஸ்கரித்தாள். அப்போது அவளுடைய காதுகளின் மேல் வைத்திருந்த மலர்கள் நழுவிக் கீழே விழுந்தன.

    “பார்வதி! உன்னைத் தவிர வேறு ஒரு பெண்ணை மனைவியாக ஏற்காத கணவனை நீ அடைவாயாக!” எனச் சிவபிரான் அவளை ஆசிர்வதித்தார் (அவர் வாக்கு முற்றிலும் உண்மையானது. பெரியோர்களின் வாக்கு என்றுமே பொய்ப்பதில்லை!).

    இச்சமயம் தேவர்களின் வேண்டுகோளுக்கும் தூண்டுதலுக்கும் இணங்க இவர்கள் இருவரையும் காதல் வயப்படச் செய்வதற்காகத் தனது மலரம்பை எய்யச் சரியான தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டு மன்மதனும் ரதியுடன் மறைந்திருந்தான்.

    parvathi1

    தவம் செய்பவர்கள் அணிந்து கொள்ளத்தக்கதும், ஆகாச கங்கையில் மலர்ந்த தாமரை மலர்களின் விதைகளாலானதும் ஆன ஒரு மணிமாலையைப் பார்வதி தனது அழகிய சிவந்த கரங்களால் எடுத்துச் சிவனுக்கு அளிக்கிறாள். தலையைச் சிறிது தாழ்த்தி அம்மாலையை ஏற்றுக் கொள்ள சிவன் தயாராகிறார்.

    மன்மதன் தனது குறிதவறாத பாணமான ‘சம்மோஹன’த்தை வில்லில் நாணேற்றுகிறான்!

    parvathi2

    கோவைப்பழம் போலச் சிவந்த உதடுகளை உடைய பார்வதியின் முகத்தைச் சிவபிரான் ஆவலுடன் நோக்குகிறார். பார்வதியும் நாணத்தினால், மெய்ப்புளகமுற்றவளாகித் தனது காதலை வெளிப்படுத்துபவளாக, சிறிதே தன் தலையைச் சாய்த்துக் கடைக்கண்களால் சிவனை நோக்கி நிற்கிறாள்.

    கண்கள் கலந்து, காதல் கதை பேசி, உள்ளங்கள் உறவாடி மகிழ வேண்டிய போதில், அடடா! என்ன கொடுமை! சிவபிரான் தன் நிலை உணர்ந்து, புலன்களை அடக்கியவராகி, தன் மனதை இவ்வாறு தடுமாற வைத்தது யார் என நாலாபுறமும் நோக்குகிறார். மன்மதனைக் கண்டதும், சினத்துடன் நெற்றிக் கண்ணைத் திறந்து, அவனை எரித்துச் சாம்பலாக்குகிறார். பின் அவ்விடத்தை விட்டுத் தவம் செய்யச் சென்று விட்டார்.

    இப்போது பார்வதியின் நிலைமையை நாம் பார்க்க வேண்டும்.

    விரும்பிய காதலன், ‘காதல் வயப்பட்டோம்’ எனக் கண்களால் நொடிப்பொழுது கட்டுரைத்தவன், அந்த இன்பத்தினை அதே நொடியில் சிதைத்துத் துவைத்து விட்டு, அவளுடைய நிலை பற்றி ஒரு சிறிதும் கவலைப் படாமல் அங்கிருந்து விரைந்து சென்று விட்டால், ஒரு பெண்ணின் மனம் என்ன பாடு படும்? எவ்வளவு துயர் கொள்ளும்?

    அதுவும் அவளுடைய தோழிகளும் ரதி-மன்மதனும் காணும் வண்ணம் இது நிகழ்ந்ததால் அவள் இன்னுமே அவமானமடைந்து வெட்கிக் குறுகி நின்றாள்.

    உலகிற்கே தலையாய அழகி அவள். அவள் உயர்வான அழகும், மென்மை நிறைந்த பெண்மையும் நளினமும் அவள் மனம் வரித்துக் கொண்ட சிவபிரான் முன்பு பயனற்றதாயிற்று. மூர்ச்சையடைந்து துவண்டு கொடியெனத் தரையில் வீழ்ந்தாள் அவள்.

    ***************************************************************

    நினைவு வந்ததும் அவள் செய்யத் துணிந்த செயல் ஒன்றே தான்- அது தவம் செய்து தனது காதலனை, கணவனாகப் பெறுவது என்பது. அதனால் தான் தவம் இயற்றப் புகுந்தாள்.

    ***************************************************************

    செய்தற்கரிய உயர்ந்த தவத்தைச் செய்ததால், தவப்பயன் தானே வரவேண்டும் அல்லவோ? இப்போது பார்வதியின் தவச்சாலைக்குச் சென்று என்னவாயிற்று எனப் பார்க்கலாமா? செய்த தவத்தின் பலன் நெருங்கி வரும் வேளை- ஆஹா! சிவபூஜையில் கரடி போல , யார் இது?

    பார்வதியின் ஆசிரமத்தில், மிகுந்த ஒளி பொருந்திய உடலும், மான்தோல் அணிந்து கையில் ஏந்திய தண்டத்துடன், சடாமுடி தரித்த ஒரு பிரம்மசாரி* நுழைந்தார். பார்வதி அவரை மிகுந்த மரியாதையுடன் வரவேற்று உபசரித்தாள்.

    மரியாதையை ஏற்றுக் கொண்டவர், களைப்பு நீங்கியதும் சொன்ன சொற்கள்…..

    இவர் யார்? தவசீலரா அல்லது கலா ரசிகரா? காமுகரா?

    “இக்கொடிகளின் தளிர்கள், சாயம் பூசாவிடினும் இயற்கையிலேயே சிவந்த உனது உதடுகள் போல உள்ளன!”

    “ஆசிரமத்திலுள்ள இந்த மான்கள் உனது கண்களுக்கு உவமையாக இருக்குமாறு தமது கண்களைச் செய்து கொள்ள முயலுகின்றன!”

    “நீ கங்கையினும் உயர்வானவள்! உனது நட்பு எனக்குக் கிடைத்தது. அந்த நட்பின் உரிமையால் நான் உன்னை ஒன்று கேட்கிறேன். நீ எதனை விரும்பித் தவம் செய்கிறாய்? உனக்கு செல்வமும், சுகங்களும், அழகும், இளமையும் பருவமும் உள்ளனவே. இன்னும் வேறென்ன வேண்டும்?” என்றார் அந்த பிரம்மசாரி.

    இப்போது, கச்சியப்பச் சிவாச்சாரியார் இயற்றிய கந்தபுராணத்தில் இந்தக் கதை தொடர்வதைக் காணலாமா?

    “உனது இந்த அழகெல்லாம் அழியுமாறு எதற்காக இந்தத் தவம் செய்கிறாய்?” எனக் கேட்டார் வயதில் முதிர்ந்த அந்த பிரம்மசாரி.

    “அப்பொழுது உமை தன்னை ஆதரவொடு பாராச்
    செப்புதல் அரிதாம் உன் திரு நலன் அழிவு எய்த
    மெய்ப்படு தசை ஒல்க மிகுதவம் முயல்கின்றாய்
    எப்பொருள் விழைவுற்றாய் எண்ணியது உரை” என்றான்.

    “சுவாமி! பரமேசுவரனாகிய சிவபிரானை அடைய வேண்டியே எம் தலைவியார் தவம் செய்கின்றார்கள், ” என்றாள் தோழியான விசையை.

    ‘கட கட’வெனச் சிரித்தவர், “அயனும் மாலும், தேவரும் மூவரும் காணவொண்ணா ஒருவனை அடையவா தவம் செய்கிறாய்? அது நடக்கக் கூடிய செயலல்லவே?” என எள்ளி நகையாடுகிறார்.

    பார்வதிக்குச் சினம் மிகுகிறது. “முடிவற்ற அந்த இறைவன் என் விருப்பத்தினை முடித்து வைக்காவிடினும் இன்னும் கடுமையாய்த் தவம் செய்து அன்பினால் அவரை அடைவேன். அறிவு முதிர்ந்தவர் போல் காணப்படும் நீர் ஏன் பித்தன் போன்று பேசுகின்றீர்?” என்கின்றாள்.

    “முடிவிலாது உறை பகவன் என் வேட்கையை முடியாது
    விடுவன் என்னினும் தவத்தினை விடுவனோ மிக இன்னம்
    கடிய நோன்பினை அளப்பு இல செய்து உயிர் கழிப்பேன் நான்
    நெடிது மூத்தலின் மயங்கினை பித்தனோ நீ” என்றாள்.

    இவ்விளம் பெண்ணின் திட உள்ளம் அந்தணருக்கு வியப்பை மூட்டியதோ என்னவோ, இன்னும் சிறிது பார்வதியிடம் விளையாடத் துணிந்தார் அவர். “ஆமாம்! அவர் என்ன அவ்வளவு உயர்வானவரோ? அவர் அணிவது யானை, புலி இவைகளின் தோலாலான ஆடை; ஏறுவது ஒரு கிழமாடு! பாம்பு தான் அணிகலன்கள். எலும்பு மாலை; மண்டையோட்டு உண்கலம்; கொடிய நஞ்சே உணவாகும்,” எனப் பழித்துப் பட்டியலிட்டு அவளது சினத்தைக் கூட்டுகிறார்.

    “ஆடை தோல் விடை ஏறுவது அணிகலம் அர என்பு
    கேடு இல் வெண் தலை மாலிகை கேழலின் மருப்பு இன்ன
    ஓடு கொள்கலம் ஊண் பலி வெய்ய நஞ்சு உலப்பு உற்றோர்
    காடு அதே நடம் புரி இடம் கண்ணுதல் கடவுட்கே.”

    “நீர் இவ்வாறு இறைவனைப் பழிக்கிறீர். உம்மெதிரே நிற்பதும் பாவம்; மறை ஓதியவர், பெரியவர் என மதித்தேன். இவ்வாறெல்லாம் பேசுவதாயின், இப்போதே இங்கிருந்து சென்று விடுங்கள்,” என்றாள் பார்வதி.

    அவர் விடாக்கண்டன்! “பெண்ணே! என்னை இவ்வாறு நீ விரட்டலாகுமோ? நான் இங்கு வந்த காரணமே உன்மீது மையல் கொண்டு உன்னை முறைப்படி மணந்து கொள்ள ஆசை கொண்டதனால் தானே,” என்று கூறிப் புன்னகை புரிந்து நின்றார் முதிய அந்தணர்!

    அறத்தினைப் புரிவாள் இவ்வாறு அறைதலும் “அணங்கே ஈங்கு உன்
    திறத்தினில் ஆர்வம் செய்து சென்ற என் செயல் கேளாது
    புறத்திடைப் போதி என்று புரைவதோ புகுந்த பான்மை
    மறைச் சடங்கு இயற்றி நின்னை வரைந்திடற்கு ஆகும்” என்றான் அந்த அந்தணப் பிரம்மசாரி*!

    தவத்தால் வருத்திய உடலைக் கொண்ட இமவான் மகள் திடுக்குற்று நின்றாள்.

    உள்ளம் பதைக்க விம்மி விம்மி அழுதவாறு, “நீர் தகாத சொற்களைக் கூறினீர். நீர் செல்லாவிடின் நான் இங்கிருந்து செல்கிறேன்,” எனத் திரும்பிப் போக எத்தனித்தாள் பார்வதி.

    (இங்கு குமாரசம்பவத்தில் காளிதாஸர் கூறுவதைப் பார்க்கலாமா?)

    திரும்பிச் செல்ல முயன்றவளின் கரத்தினை வலிந்து பற்றி இழுத்தார் பிரம்மசாரி- எல்லையற்ற சினத்துடன் அவரை எதிரெடுத்து நோக்கியவள் பிரமிப்பிலும், வியப்பிலும், நாணத்திலும் மூழ்கினாள். அங்கு அவள் கண்டது யாரை? முதிய அந்தணர் வடிவை விடுத்து தமது உண்மை உருக்கொண்டு காதலில் கனிந்த புன்னகை பூத்த வண்ணம் சிவபிரானே அங்கு நின்றார்.

    திகைத்து நின்றாள் பெண்ணணங்கு! தனது தவத்தின் பயன் நேரில் எதிர்பாராது வந்ததாலும், அவரைப் பற்றி வாய்விட்டுப் புகழ்ந்து பேசித் தன் காதலையும் வெளியிட்டதாலும், நெகிழ்ந்து நாணி நின்றாள்.

    காதலனான சிவன் அவளை நோக்கிக் கூறுவார்: “உனது கடும் தவத்தினை விலையாகக் கொடுத்து நீ என்னை அடிமைப் படுத்திக் கொண்டு விட்டாய். இனி என்றென்றும் நான் உந்தன் அடிமை.”

    பார்வதி தனது தவத்தின் பயனைக் கண்ணுற்றாள்; அவர் இனிய சொற்களைக் காதால் கேட்டாள்; உவகைப் பெருக்கு மிக்கிட ஆனந்த வெள்ளத்தில் நீந்தலானாள்.

    ***************************************************************

    ( *காளிதாசரின் குமாரசம்பவம் சிறிது வயது முதிர்ந்த பிரம்மசாரி என்கிறது; கச்சியப்பரின் கந்தபுராணம் கிழ அந்தணர் என்கிறது. நாம் எப்படி வேண்டுமானாலும் கொள்ளலாம்)

    ***************************************************************

    தவப்பயனைத் தருபவர், நேரில் வந்து காதலியைக் கைப்பிடிக்க வேண்டியது தானே! இவ்வாறெல்லாம் வம்பு செய்து, அவளை இன்னும் தொடர்ந்து வருத்தி மகிழ வேண்டுமோ என நாம் எண்ணலாம். இதுவும் ஒரு காரணத்திற்காகத்தான்- தன்னிடம் அவள் கொண்ட காதலை அவள் வாயினாலேயே கேட்டு அறிந்து கொள்வதற்காகத்தான் இந்த விளையாட்டு. சிவபிரானாகிய தலைவனுக்குத் தான் திருவிளையாடல்கள் மிகவும் விருப்பமானவை ஆயிற்றே!

    தன் காதலியாகிய பார்வதியிடம், சிவபிரான் அவளழகை வருணிப்பதாக வேறொரு நூலிலும் நாம் காணவில்லை; காளிதாசர் அந்தக் குறையை தமது குமாரசம்பவம் எனும் இந்நூலில் பூர்த்தி செய்கின்றார்! மேலும், பார்வதியின் திருவாயிலிருந்தே தமது மேன்மைகளை அவள் கூறக் கேட்டு மகிழவும் இது ஒரு உபாயம், ஈசன் செய்தது!

    தனதழகின் பயன் வீணாயிற்றே என வருந்தியல்லவா அவள் தவம் செய்யப் புகுந்தாள்? காதலியைத் தவிக்க விடலாமா? காதலின் இனிய தருணங்கள், காதலியைக் காதலன், “பொன்னே, முத்தே, என் உயிரே,” எனவெல்லாம் வருணித்து அவள் அழகையும் குணங்களையும் போற்றுவது தான். அதைத்தான் அண்ணலும் செய்து மகிழ்கிறான்.

    பார்வதியின் அன்பின் மேன்மையை அறிந்ததால் அன்றோ அண்ணல் சிவபிரான் தன் சக்தியான அவளுக்குத் தன் உடலிலேயே பாதியை அளித்தான் ?

    முழுமையான நிபந்தனையற்ற அன்பும், ஒருமைப்பட்ட செம்மையான மனமும் தான் காதலுக்கு இன்றியமையாத தேவைகள் என்பது காதலின் பொன்வீதியில் நடை பயிலும் இளம் காதலர்கள் உணர வேண்டியனவாகும்.

    குமார சம்பவத்தில் வரும் பார்வதியின் தவம் இதனைத் தெளிவாக விளக்கி உள்ளது!

    ***************************************************************

    படம் உதவி:
    நன்றி; © அம்புலிமாமா
    நவராத்திரி கொலு பொம்மைகளைச் செய்தவரும், படம் எடுத்தவரும் – மீனாட்சி பாலகணேஷ்.

     

     

    Share
  • இணையத் தமிழே இனி…

    -பா வானதி வேதா. இலங்காதிலகம்

    சுணையற்று உறைந்தவர் மணை விட்டெழுகிறார்!
    அணைகிறார் தமிழ் ஆய்வு செய்கிறார்!
    புணையாக்கி இணையத் தமிழுள் நீந்துகிறார்!
    இணைந்து ஆர்வமாய்ப் பின்னுகிறார்! விதைக்கிறார்!
    இணையற்ற ஏணியிது தமிழ் வானிற்குப்
    பணையுடைப் பாட்டரும் காணாத சுரபி           surfing-the-internet
    பிணையும் எழுத்துப் பிழைகள் பாசி
    கணைச் சூடாகாது வெல்லல் வாசி

    தூசி நிறை இதயக்கமலத்தைப் பலர்
    பாசி படர்ந்த கிணறாக ஆக்குகிறார்
    ஆசியுடைத் தமிழடிகள் ஒளி ஈர்த்து
    வாசிக்கிறாராதித் தமிழ்ச் சங்க நூல்களை
    பூசித்துக் கூடித் தமிழ் எழுதுகிறார்
    கூசித் தம் மொழிக்கு உயிரூட்டுகிறார்
    நேசித்துப் புனிதமாய் இலக்கணம் படிக்கிறார்
    யாசிக்காத இணையத் தமிழே! அற்புதம்!

    கட்டுரை, சரித்திரம், ஆராய்வு, புவியியல்,
    கொட்டிய கலைகள், சமயம், அரசியல்
    எட்டாதது எதுவுமில்லை, யோகா, விளையாட்டென
    சொட்டும் நல்லறிவு, நல்லுணர்வு பெறுமதியாய்த்
    தொட்டிட்டால் வித்தகங்கள் அள்ளலாம் வெள்ளமாய்!
    தட்டும் விரல்நுனி வியப்பு நூலகம்!
    எட்டும் இணையத் தமிழே இனி
    கொட்டும் முரசு வெள்ளிடை மலை!

     (மணை – அமரும் பலகை, சிறு பீடம்;   புணை – தெப்பம்
    பணை – பெருமை;  கணைச் சூடு – நோய் வகை
    சுணை – சுரணை, அறிவு, கூர்மை)

     

    Share
  • ஓலைத்துடிப்புகள் ( 10 )

    ஓலைத்துடிப்புகள் (9) ஆம் பாடலுக்கான பொழிப்புரை
    ===============================================

    உடலோடு உடலுதல் முறுக்கும் செந்தீ

    கவிஞர் ருத்ரா

    oolaisuvadi

    பைஞ்சாய்ப் பாவைக்கு பொய்ப்பாலூட்ட‌
    நீள்தல் ஆற்றா குடுமியவாய் திகழ்தரு
    பைஞ்சுரைச் சிறுகாய் அன்ன முலையின்
    அண்மை காட்டி அரும்பவிழ் நகையொடு
    தன்மை படர்த்தி நின்னை அழைக்கும்
    மடவள் என்னிவள் வந்திசின் ஓம்புமன்!

    தலைவன் பால் காதல் உற்ற போதும் அது காதல் தான் என்று உணர்ந்து கொள்ள இயலாத ஒரு பால்வடியும் பிள்ளைத்தனம் மாறாத “மடப்பம்” உடையவள் தலைவி.மரப்பாச்சி வைத்து “அம்மா பிள்ளை”விளையாடும் தன்மையவள்.”பைஞ்சாய்” எனும் ஆற்றோர நுண்ணிய கோரையில் செய்யப்பட்ட பொம்மையை தன் பிள்ளையாக நினைத்து விளையாடுகிறாள்.உடல் அளவில் கூட இன்னும் முதிராதவள் தான்.சுரைக்கொடியின் காய் இன்னும் வளர்ச்சி நிலையில் நீள்தல் உறாது சிறிய பசுமையான காய் போல தோற்றம் தரும் முலையினை தாய்ப்பாசம் மிக்க முலையாய் அந்த பொம்மையின் வாய் அருகே காட்டி “பொய்ப்பால்” ஊட்டும் விளையாட்டில் ஆழ்ந்து விட்டாள்.இருப்பினும் அதனில் நாணம் கொண்டு மெல்லிய சிரிப்பை உதிர்க்கிறாள்.தன்மை படர்க்கை முன்னிலை என்னும் இலக்கணம் எல்லாம் அந்த பொம்மைப் பிள்ளையிடம் ஒன்றாய் நிரவி விட்டது.தன்னை தாயாய்(தன்மை) ஆக்கி பொம்மையை குழந்தையாய்க்கொண்டு (படர்க்கை) அதன் தந்தை நீ தான் என்று உன்னை நோக்கி ஓங்கிய குரலில்(தலைவனை நோக்கி) அழைப்பதே அவளது விளையாட்டு. (தன்மை படர்த்தி நின்னை அழைக்கும்)

    வீடுகளில் அம்மா பால் ஊட்டும் போது பொய்யாய் அழைப்பது உண்டு.”அப்பா சீக்கிரம் வாங்க!உங்க பையன் பால் குடிக்க மாட்டேனென்கிறான்”என்று செல்லமாய் அழைப்பது உண்டு அல்லவா! அது போன்றது தான் இந்த பொய்ப்பால் ஊட்டல். தோழிக்கு ஆற்றமை தாங்க வில்லை.”என்ன மடச்சி இவள்?” விரைவாய் வந்து இவளை காப்பாற்று என்கிறாள் தலைவனை நோக்கி. (“மடவள் என் இவள்?வந்திசின் ஓம்புமன்.”)

    முடமுது நாரை இறை தேடி அலம்ப‌
    ஞாழல் கொடுஞ்சினை காலுடன் அலம்ப‌
    பதைப்பத்ததைந்த நெய்தல் அங்கழி
    பனி இமிர் பைந்திரை படர் கரை சேர்ப்ப!
    உடலோடு உடலுதல் முறுக்கும் செந்தீ
    உறைநோய் உற்று நின்னை நோக்கும்
    நரம்பார்த்த தீங்கிளவியள் குழறல் ஒல்லுமோ.

    கிழடாய்ப்போன முதுகு கூன் விழுந்த நாரை ஒன்று தங்குமிடம் (இறை) தேடி திரிய கரையின் ஞாழற்பூவின் கிளை வளைந்து காற்றுக்கு ஏற்றபடி ஆட நெய்தல் பூக்கள் நெருக்கமாய் பூத்து ஆடி ஆடி அசைய (பதைப்ப..அசைய ;ததைந்த…நெருங்கிய) அந்த அழகிய உப்பங்கழியில் குளிர்பொருந்திய கரையோர பாசிபடர்ந்த நீரலைகளுடன (பைந்திரை) விளங்கும் கடற்கரைப்பட்டினத்து தலைவனே!உடலே உடலோடு போர் செய்தாற்போன்ற காதல் நோயின் வலியால் முறுக்கிய நிலையில் செம்பிழம்பாய் நெருப்பு பற்றிக்கொண்டது போல் அந்த உடம்பில் தங்கி அவளை துயர்ப்படுத்தும்.அதனால் அவள் உன்னை ஏக்கத்துடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறாள்.நரம்புகளால் நன்கு முறுக்கப்பட்ட யாழின் இன்னிசை ஒத்த சொல்லை உடைய உன் தலைவி ஏதேதோ குழறுகிறாள்! இது தகுமோ?

    ஒள்மணல் படுத்தன்ன கருங்கோட்டெருமை
    ஒத்த திண்ணிய அம்பி ஆங்கு அடைகரை
    சிறைபெய் குருகு கணங்கொள் துறைவ‌
    மடப்பம் தீண்டிய சில்மகள்ப் பெருநோய்
    துடைப்புன ஆற்றுதி விழி தூஉய் கண்டிசின்.

    ஒளிபொருந்திய மினுமினுப்பான மணலில் படுத்துக்கிடப்பதைப்போன்ற கரிய கொம்பின் எருமையை ஒத்த பளுமிகுந்த படகு அங்கே கரையில் ஒதுங்கிக்கிடக்கும்.அதன் மீது சிறகுகளால் மொய்க்கும் நாரைக் கூட்டங்கள் நிறைந்த துறையை சேர்ந்த தலைவனே!மடமை பொருந்திய இந்த சிறு பெண்ணின் பெரிய காதல் நோயை துடைக்கும் வழியை காண்பாயாக!உன் பார்வைகள் அவள் மீது தூவினாலே போதும்.அந்த பூமழையை நீயும் பார்த்து களிப்பாயாக!

    வெண்முளை வித்திய வினைசெறி யன்ன‌
    கண்முளை எல்கதிர் உள்சிறை ஒடுங்க‌
    இருள் தின்ற ஒளியாய் அளியள் ஆனாள்.
    உண்துறை ஆங்கு மண்மறை முன்னே
    உய்யக்கொள்வாய் பெரும்பணைத் தோளாய்!

    விதை முளைக்கும் விதமே விந்தை தான்.விதையின் முளை வெள்ளையாய் இருப்பது என்பது விதைக்குள் வெறுமையாய் இருந்து உள் விசைகளின் தொகுப்பே (வினைசெறி)பின் வெளியே முளைக்கிறது.விதை முளைக்கும் விதமே விந்தை தான்.விதையின் முளை வெள்ளையாய் இருப்பது என்பது விதைக்குள் வெறுமையாய் இருந்து உள் விசைகளின் தொகுப்பே (வினைசெறி)பின் வெளியே முளைக்கிறது.எனவே மரப்பாச்சியாய் இருந்தவளுக்குள் பாய்ச்சிய மின்னலாய் ஆனதே இவள் காதல்.கண்ணின் முளைபோல் கருவிழிக்குள் நுழையும் ஒளிக்கதிர் (எல்கதிர்) வியப்புச்சிறகுகள் விரியும் வண்ணம் அவள் உள்மனத்தில் எண்ணங்கள் தேக்கி நிற்கின்றாள்.இருள் எல்லா வெளிச்சத்தையும் தின்றுவிடுதல் போல் ஒரு அடர் இருள் தோன்றி (உன்னைப் பிரிந்த துயரம்)அவளை அலைக்கழிக்கிறது.அலைகளால் அரித்து அரித்து உண்ணப்படும் அந்த நீர்க்கரையில் மண்ணே மறைந்து
    போய்விடும் நிலையும் வந்து விடும் போல் இருக்கிறது.செறிவுற்ற மூங்கில் கட்டமைப்பின் தோள் அழகு மிக்கவனே இவளை இவள் துன்பத்திலிருந்து விடுவிப்பாயாக.

    ஓலைத்துடிப்புகள் ( 10 )

    கவிஞர் ருத்ரா

    அம்மூவனார் எழுதிய “நெய்தல் செய்யுட்”கள் கடற்கரையின் அழகை மிக உயிர்ப்புடன் காட்டுகின்றன என்பதை சங்கத்தமிழ் ஆர்வலர்கள் நன்றாகவே அறிவார்கள்.

    “வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தெனக்
    காணிய சென்ற மடநடை நாரை”..

    என்ற இந்த இரண்டு வரிகள் அவர் தீட்டும் ஓவியம் ஏழு கடலும் கொள்ளாது அலை கொண்டு அதன் கலை கொண்டு அதன் மணல் கொண்டு அதன் குருகும் சிறகும் குருகின் குஞ்சும் கொண்டு தீட்டப்பட்ட உணர்ச்சிப்பிழம்பு. அந்த இரண்டு வரிகளில் வரும் “செத்த” என்ற சொல் பலவிதமாய் பொருள் கொள்ளப்பட்ட போதும் “செத்தவன் கையில் வெத்தலை பாக்கு “இன்றும் நாம் வழங்குகிறோமே அந்த “செத்த நிலையை” தான் புலவர் மனத்தில் கொண்டிருக்கிறார் என்று உரையாசிரியர்கள் கருதுகின்றன. தொள தொள என்று அல்லது தத்தக்க பொத்தக்க நடை தான் இங்கு குருகின் மட நடை என குறிக்கப்படுகிறது.இருப்பினும் தன் குஞ்சு தொலைந்ததோ (செத்ததோ) என்ற துயரத்தில் அந்த தளர்நடை வெளிப்படுவதாகவும் கொள்ளலாம்.இன்னமும் நமக்கு புரியவேண்டுமென்றால் “தங்கப்பதக்கம்” திரைப்படத்தில் மிடுக்கு நிறைந்த அந்த அதிகாரி துயரம் தாங்காது தளர் நடையிடுவதை நம் நடிகர் திலகம் நடந்து காட்டுவாரே அதுவும் நம் கண் முன் விரிகிறது.

    “செத்தென” என்ற சொல் மிகவும் அழகானது;நுண்மையானது.

    ஐங்குறுநூறு 151லிருந்து 160 வரைக்கும் உள்ள அத்தனை பாடல்களிலும் அந்த வெள்ளாங்குருகின் பிள்ளை (குஞ்சு)யின் “மடநடை”அவ்வளவு செறிவு மிக்கது.தலைவியின் காதல் “மடம்” அதில் காட்சி ஆக்கப்படுகிறது.செத்த என்பதற்கு ஒரு பாடலில் மட்டுமே காணாமல் போன அல்லது இறந்து போய் விட்ட குஞ்சை தேட தளர தளர நடையிட்டதாக அம்மூவனார் பாடுகிறார்.மற்ற பாடல்களில் “போல” என்ற உவமை உருபாகத்தான் எழுதுகிறார். இருப்பினும் செத்த என்ற சொல் “போல” என்று வழங்கப்படுவதில் “சங்கத்தமிழின் சொல்லியல் முறை” ஒரு அ றிவு நுட்பத்தையும் சிந்தனைத்திட்பத்தையும் வெளிப்படுத்துகிறது.இறந்தவனுக்கும் இருப்பவனுக்கும் அப்படியென்ன வேறுபாடு வேண்டிக்கிடக்கிறது இங்கே என்ற ஒரு தத்துவ உட்குறிப்பு நமக்கு புலனாகிறது.மக்களுக்கு ஊறு செய்பவன் அல்லது எந்த பயனும்இல்லாதவன் அவன் உயிரோடு இருந்தாலும் “செத்தையாருக்குள் வைக்கப்படும்” என்கிறார் வள்ளுவர்.இன்னொரு குறளில் “உறங்குவது போலும் சாக்காடு” என்கிறார்.பெரும்பாலானவர்கள் இப்படி “நடைப்பிணங்களாய்”(செத்தவர்கள் போல்) இருப்பதால் தானே எல்லா பிரச்னைகளும் தீர்வு இல்லாமல் தத்தளிக்கின்றன.இங்கே “செத்த” “போல” என்ற இரு சொல்லும் ஒரு பொருளில் இழைகிறது.எனவே “வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென”என்ற வரிகளைப்பற்றியே வெள்ளம்போல் சிந்தனை பெருகுகின்றது.அதனால் நான் எழுதிய சங்கநடைக்கவிதையே இது.

    இப்போதும் இதன் பொழிப்புரையை இந்த இதழிலேயே தர இயலவில்லை.செமஸ்டர் அர்ரியர்ஸ் போல வரும் இக்குவியலை வரும் இதழில் சமப்படுத்திவிடுவேன் என நம்புகிறேன்.சிரமத்தை பொறுத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென..”

    பூவின் அவிழ்முகம் நோக்கும் தாதுள்
    உயிர்பெய் அவிர்மழை நனையல் அன்ன‌
    தீயின் தீஞ்சுவை நுண்ணிய நோக்கும்.
    நிலவின் பஞ்சு வெள்ளிய வெள்ளம்
    விண்ணின் பரவை வெரூஉய் நோக்கும்.
    வெண்ணிப்பறந்தலை ததையநூறி
    குருதி பொத்திய அகல் அறை மன்று
    ஆயும் ஓர்க்கும் தன் சேய் தேடும்
    மறத்தினை உடுத்த மணித்திரள் அன்னை
    முலையின் தேக்கிய உயிர்ப்பால் அழிய‌
    மூசு மூச்சின் உடற்கூடு திரிய‌
    கண்ணீர் இழியும் கடுஞ்செறி தேடல்
    அன்ன யாமும் அழல்குண்டு மூழ்கும்.
    வெள்ளாங்குருகு பிள்ளை செத்தென
    மடநடை பயிலும் மடப்பத்தின் மாய்ந்து
    வெள்மணல் ஒற்றி விரிகுரல் வீசி
    அவன்விழி தேடும் விசும்பின் உயர்த்தும்
    வெறுங்கை வீச்சும் வானம் சிதைப்ப‌
    காணா ஒள்வாள் செங்கடல் பாய்ச்சும்.
    கதிர்மகன் இருந்தலை மலையிடை வீழும்.
    எக்கர் சிவக்கும்;யாழல் சிவக்கும்;அண்ணியநீரின்
    பொறிநுரை நிழலும் சிவக்கும் கண்ணே
    அயிரைப் பிஞ்சும் அழல்சிறை காட்டும்.
    படுபரல் துறைதொறும் அவனே நோக்கும்.

    =================================================================

    Share
  • போய்விடு போதையே!

    -துஷ்யந்தி

    சுதந்திர நாட்டில் சுதந்திரம் பறிக்க
       ஏவினாய் விதை தூவினாய்
    தலையை ஆட்டும் மந்தையாய் எமை
       மீட்டினாய் ஆசை யூட்டினாய்!

    அற்பமாய் மனதிலேபல ஆசைகள்
        காட்டினாய் பழி ஈட்டினாய்
    கற்பினை அழிக்கக் கயவர்கள் சிலரைத்
       தோற்றினாய் புன்மை ஆக்கினாய்!              intoxication

    போதைக்கு அடிமையா யிருத்தல்
        நியாயமோ இது தேவையோ?
    சிந்தனை செய்யா மனிதனேயிது
        நீதமோ பிடி வாதமோ!

    உன்னதவாழ்வின் அழகிய நொடிகள்
          மாறுமோ வீண் போகுமோ
    புத்தி கூறிநல் வழிப்படுத்தல்
          பாபமோ மனஸ் தாபமோ?

    பெற்றதாய்க்கு இல்லை பிள்ளையெனப்
       போகவோ நாங்கள் சாகவோ?
    குற்றம் செய்வித்துச் சிறைக்குள்ளே
       தள்ளுவாயோ பழி கொள்ளுவாயோ!

    நல்ல மரத்திலே புல்லுருவியாய்நீ
       தொற்றுவாயோ கைப் பற்றுவாயோ
    வெற்றி வாகை சூடும்நேரம்
      தாழ்த்துவாயோ எமை வீழ்த்துவாயோ?

    புற்றுநோயாய்த் தொற்றி உயிர்குடிக்க
       வந்திட்டாய் சமூகம் அழித்திட்டாய்
    இன்னும்நீ செய்யும் கொடுமைக்கு
       மலைவுறோம் சித்தம் கலைவுறோம்!

    வந்தவழிதனில் திரும்பிப் பார்க்காது
       போய்விடு எம்மை வாழவிடு!
    நாளைய நாட்கள் வாசனைமலராய்
       மலரட்டும் யுகம் புலரட்டும்!

     

    Share
  • கவிதையாகும் விளங்காமை!

    -மெய்யன் நடராஜ்

    விளக்கமாக விளக்கிச் சொல்லியும்
    விளங்காத நிலையில்
    விளங்குச்சா என்னும்
    வாத்தியாரின் அதட்டலில்
    விளங்காததையும்
    விளங்கியதாய் தலையசைக்கும்
    விடலைநாட்களின் தொடர்ச்சி
    விடவே இல்லை இன்னும்….

    விளங்கிப் படிச்சவங்க எல்லாம்
    விலங்கியலும் பௌதீகமும் என
    விரிவாகப் படிக்கப் போனபோது
    விளங்காம படிச்ச எனக்கும்
    விளங்கிப் படிச்சிருந்தா கொஞ்சம்
    விளக்கமாப் படிக்கலாமுன்னு
    விளங்கியது,
    விளங்க வேண்டிய நேரத்தில்
    விளங்கிக்காம இருந்துட்டு
    விளங்காததை இப்போ
    விளக்கமாக விளக்குமாறு
    விளங்கியவர்களிடம் கேட்க, எடு
    விளக்கமாத்த என்பதில்
    விரிகிறது விசனத்தின் விசும்பு.

    விளக்குமாறு பற்றி
    விளக்குமாறு கேட்டால்
    விளக்குமாறே விளக்கும்

    விளக்கு மாதிரி இருந்தும்
    வெளிச்சம் தர மறுக்கும்
    விளக்கமானோர் எல்லாம்
    விளங்கியும் விளங்காமல் நடிக்கும்
    விவஸ்தைஇல்லா அவஸ்தைகளில் நின்று
    விடுதலைக்காய் போராடுவதிலும்
    விளங்காமல் இருப்பதே மேலென்று
    விளங்குவதில் விளங்குகிறது
    விளங்காம படிக்காததின் விளக்கம்

    விளக்கமாக படித்ததின்
    விலைகளில் நிர்ணயமாகின்ற
    விளக்கங்கள் இருதயம் மூடும்
    விசித்திரங்களில் விளையாடும்
    விளையாட்டு மைதானத்தில்
    விளையாடப்படும் பந்தாய்
    விளையாட்டுக்கும் விளையாடாமல்
    விளைவிக்கப்படும் சந்தோசங்களில்
    விளையாடுகிறது
    விலைகொடுத்தும் கிடைக்கா வான
    வில்லின் அழகுகள்

    விளங்கியதை விளங்காததாய் நோக்கும்
    விலங்கு மனசு வேண்டுவதற்கு
    விளக்கமாகும் விளக்கங்களுக்கு
    விலைகொடுக்கும் கொலைகளிலும்,
    விளங்காமலிருக்கும் கலைகளில்தான்
    வீணை வாசிக்கிறாள் என் சரஸ்வதி
    என்பதால்தான்
    வைத்தியமும் உபாத்தியாயமும்
    பொறியியலும் வணிகமும் என்ற
    பணம்பிடுங்கும் பிழைப்புகளிலும் நுழைந்து
    கவிதையாகி நிற்கிறது என் விளங்காமை!

     

    Share
  • ஐந்து கை ராந்தல் (19)

    வையவன்

    ராயப்பேட்டை ஹாஸ்பிடல் கேட்டை விட்டு சிவா இறங்கினான். சாலையில் விளக்குகள் ஒன்றிரண்டு எரியாததால் இருள் அங்கங்கே தேங்கியிருந்தது.சென்னை இன்னும் உறங்கவில்லை.

    அவ்வப்போது சாலையில் சென்ற கார்களும் லாரிகளும் அவனுக்கு அதை அறிவித்தன.
    பால் வாங்கி வருவதற்காகக் கொண்டு வந்த பிளாஸ்க்கின் பிளாஸ்டிக் பெல்டை எடுத்து தோளில் மாட்டிக் கொண்டான்.
    “மணி இன்னா சார்?” எதிரே வார்டிலிருந்து வந்தவர் எவரோ கேட்டனர்.

    அவனிடம் கடிகாரம் இல்லை.

    “தெரியலே” என்று சொல்லி விட்டு நகரும் போது கதவருகில் நின்றவர் ஒருவர் சொன்னார்.
    “ரெண்டு அஞ்சு”
    “தாங்க்ஸ்”
    யாரோ யாருக்கோ சொன்னார்கள்.

    அவன் ஆஸ்பத்திரிக்குள் நுழைந்து எவ்வளவு நேரமாகப் போகிறதென்று கணக்கிட்டான்.
    ஐந்து மணி நேரம்.

    புண்ணியகோடி மரணத்தோடு ஐந்து மணி நேரமாகப் போராடிக் கொண்டிருக்கிறார்.
    சிவா சாலையில் நாற்சந்தி கடந்து திறந்திருந்த பால் கடை ஒன்றை நெருங்கினான்.
    “ப்ளாஸ்கைக் கழுவி ரெண்டு பால், ரெண்டு பன் பார்சல்”
    “இன்னா சார், கம்பவுண்டர் பொய்ச்சிக்கினாரா.”
    சிவா திரும்பிப் பார்த்தான்.

    பால் கடைக்குப் பக்கத்திலிருந்த பங்க் கடைக்காரன் கேட்டான்.

    “அபாய கட்டம் தாண்டிடுச்சி.”
    வாழைப்பழம் உரித்துத் தின்று கொண்டிருந்த நபர் ஒருவர் வேலை தீர்ந்து தோலை வீசிவிட்டு அரைகுறை அக்கறையோடு கேட்டார்.

    “யாரு?”
    “கம்பவுண்டர் புண்ணியகோட்டி இல்லே, அதாம்பா… வாரம் தவறாமே ரேஸுக்குப் போவாரே… நெத்திலே துண்ணூறு வச்சிகிணு எப்பவும் புல் ஷர்ட் போட்டுணு வருவாரே… நம்ம கடைலே அக்கவுண்ட் வச்சிகிணு ரேஸ் டிப்ஸ் வாங்க மாட்டாரு? அவரு பாய்ஸன் சாப்டாரு”

    “அடப் பாவமே…பூட்டாரா?”
    “தப்பிச்சுக்கிட்டாரு”
    “வயசான மன்சன். எத்தினி குடும்ப கஷ்டமோ?”
    “அது எப்பவோ நடந்துருக்கணும்பா… கொயந்த குட்டிக்கார ஆளு. ஏதோ மானத்தை மடியிலே கட்டிக்கினு தம் புடிச்சாரு.”
    “சீக்கிரமா குடுங்க” என்று அந்த சூழ்நிலையின் இறுக்கம் தாளாமல் கடுகடுத்தான் சிவா.

    “இப்பதானே சார் கொணாந்த… இதுக்குள்ள துடிச்சா… ப்ளாஸ்க் கயுவ வாணாம்.” என்று யாந்திரீகமான அமைதியோடு பதிலளித்து விட்டு வெந்நீரில் ப்ளாஸ்கைக் கழுவினான் கடைக்காரன்.

    “அது இன்னா கத…?” வாழைப்பழம் வம்புப் பிரியத்தில் வாயைக் கிளறியது.

    “பொண்டாட்டி ஒரு வைர வியாபாரிய இஸ்துக்கினு பூட்டா. அது நடந்து அஞ்சு வருஷமாவப் போவுது.”
    அவனை உதைக்கலாமா என்று சிவா யோசித்தான். ஒரு வாயை மூடும் முயற்சிக்காக விபரீதம் தான் விளையும்.

    “இப்ப ஏன் பாய்ஸன் சாப்டாரு?”
    “தெரிலே… பொண்ணு விஷயம் போல கீது”
    பால் கடைக்காரன் பன்னை மடித்துக் கட்டப் போனான்.

    “கட்ட வேணாம்” என்று காகித மடிப்பில் பன்களை வாங்கிக் கொண்டான். சில்லறையைக் கொடுத்து விட்டு வரும்போது சமூகத்திற்கு ஊர் வம்பில் இருக்கிற ருசி முள்ளாய் உறுத்திற்று.

    எட்டுப் போர்ஷன்கள் கொண்ட அந்த வீடு… வீதி… அறிந்தவர்கள்… புண்ணியகோட்டியைத் தெரிந்தவர்கள்… அவர்கள் அனைவர் முன்பும் தான் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டிருப்பதை பிரத்யட்சமாக அனுபவித்தான்.

    பல கண்கள் அந்த ஐந்து மணி நேரத்துக்குள் அவனை விரோதித்தன. சிவாதான் அவருக்கு விஷத்தை ஊற்றிக் கொடுத்தவன் என்கிற மாதிரி பார்த்தன.
    ஹாஸ்பிடலுக்குள், காத்திருக்கும் பெஞ்சில் கால் நீட்டிப் படுத்திருந்த பிரேம் கூட முதலில் அவனை அப்படித்தான் பார்த்தான்.

    திஷ்யா மட்டும்தான் அந்த துவேஷம் மெல்லும் நிலையில் அவனிடம் வித்தியாசமாக நடந்து கொண்டாள்.
    கையில் பன்களுடன் அவன் அந்தப் பெஞ்சுக்குப் போனான்.

    வியர்வையில் மை கரைந்து போய் கண்கள் இன்னும் பெரிதாய்த் தெரிய அவள் பரிதாபமாய்க் காணப்பட்டாள்.
    “திஷ்யா… பன்னும் பாலும் வாங்கியாந்திருக்கேன். பிரேமை எழுப்பு.”
    “எனக்கு வேணாம்.”

    “நீ கூட ராத்திரி சாப்பிடலியே. மத்தியானம் கூட நீ சாப்பிடலேன்னு சீதா சொன்னாள்.”
    அவள் பிரேமை தட்டி உலுக்கினாள். அவன் கண்களை முழித்துப் பார்த்துவிட்டு மீண்டும் திரும்பிப் படுத்துக் கொண்டான்.
    “இவனை தூக்கத்திலேருந்து எழுப்ப முடியாது”

    “அப்ப நீ சாப்பிடு”
    “எனக்கு இப்ப வேண்டாம் ப்ளீஸ்… தொந்தரவு பண்ணாதீங்க.”
    அவன் பெஞ்சு ஓரமாக மாட்டியிருந்த ப்ளாஸ்டிக் கைப்பையீல் பன்களைப் போட்டான்.
    பிரேம் நகர்ந்து படுத்ததில் தலைப் பக்கம் கொஞ்சம் இடம் காலியாயிருந்தது. அங்கே போய் உட்கார்ந்தான். திஷ்யா பிரேமின் கால்மாட்டில் உட்கார்ந்திருந்தாள்.

    “டாக்டர் வந்தாரா?”
    “யாரும் வரல்லே. ஒரு நர்ஸ் வந்து போச்சு.”
    “என்ன சொல்லுச்சு”
    “பொழச்சுக்குவாராம்”
    அவன் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.

    “சிவா… ரொம்ப ரொம்ப ஸாரி”
    அவன் ஒன்றும் பேசவில்லை. நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.

    “ஒங்களை நான் அநாவசியமா இதிலே இழுத்து விட்டுட்டேன்.”
    “சரி சரி… இதுக்கெல்லாம் அவசியமில்லே.”
    “அவசியம் வந்துடுச்சு.”
    “வேண்டாங்கறேனே… இந்தப் பேச்சை விடு”
    “இல்லே… நான் அப்பா இஷ்டப்படியே நடக்கறதுண்ணு முடிவு பண்ணிட்டேன்.”
    அவனுக்கு பளிச்சென்று அறைந்த மாதிரி இருந்தது.

    “பயந்துட்டியா?”
    “பயமா…” அவள் உதட்டிற்குள் வெறுமையாகச் சிரித்த ஓசை ஹூங்காரமாகக் கேட்டது.
    “அதெல்லாம் எப்பவோ போயிடுச்சு. அம்மா போனாளே அப்பவே போய்டுச்சு.”
    “இப்ப எதுவும் பேச வேண்டாம்.”
    “இல்லே, இப்ப பேசிடணும்” அவள் குரலில் உறுதி உயர்ந்து தொனித்தது.

    “இது என் பிரச்னைன்னு மட்டும் நெனச்சுட்டேன். அது மகா தப்பு. ஒங்க பிரச்னை. இந்தப் பையன்… அந்த ரெண்டு கொழந்தைங்க.. பொறப்பட்டுப் போனாளே அந்த மகராசி… அவ குடும்பத்துக்கு வச்சிட்டுப் போன நல்ல பேரு… அதுவும் பிரச்னை. வேண்டாம், என்னாலே என் பிடிவாதத்தாலே எதுவும் நடக்க வேண்டாம்.”

    “அதுக்காக சகதியிலே எறங்கிடறேண்ணு சொல்றியா?”
    “ஒருத்தி எறங்கிட்டா இத்தனை பேரும் தப்பிச்சுக்கலாம்.”
    “திஷ்யா.”
    அவள் சேலைத் தலைப்பை வாயில் புதைத்துக் கொண்டாள். அவளது கறுத்து அடர்ந்த நீளமான கூந்தல் அவள் முகம் குனிந்தபோது மெதுவாக அதிர்ந்து குலுங்கிற்று.

    அவள் விம்மல்களைக் கட்டுப்படுத்துகிறாள் என்று புரிந்து கொண்டான்.
    அந் நேரத்தில் அவளை வாரியணைத்து அந்த முகத்தை தன் மார்புறத் தழுவிக் கொள்ள வேண்டும் போலிருந்தது.

    அங்கு வழிந்த கண்ணீரையும் ஒலிக்கின்ற விம்மல்களையும் துளி விடாமல் முழுக்க முழுக்க அப்டியே தன் மார்பின் மீது வாங்கிச் சுமக்க வேண்டும் போன்று அவனுக்கு மனம் துடித்தது.

    அது ஹாஸ்பிடல். அந்த நேரம் அதற்கு ஒவ்வாத அபாக்கியமான நேரம். அந்த வெண்ணிற முதுகின் மீது செழித்து அடர்ந்த கருங்கூந்தல் குலுங்குவதையே அவன் கவனித்தான்.

    ஒரு வாரம் கம்பவுண்டர் புண்ணியகோடி ஆஸ்பத்திரியிலேயே இருந்தார். அங்கேயே கம்பவுண்டராக இருந்ததால் ஸ்பெஷல் சிகிச்சை.
    சிவா தினசரி மூன்று முறை அவரைக் காண ஆஸ்பத்திரிக்கு வந்தான்.

    ஒர்க்ஷாப் திறக்கும் முன் ஒரு வேளை காலையில் வருவான். மத்தியானம் ஹோட்டலில் சாப்பிட வரும்போது ஒரு முறை.
    ஒர்க்ஷாப்பை மூடிவிட்டு இரவு எட்டரைக்கு ஒரு முறை வருவான். சில சமயங்களில் புண்ணியகோடியின் பக்கத்தில் இருக்கும் ஸ்டூலில் மௌனமாக திஷ்யா உட்கார்ந்திருப்பாள்.

    சில சமயம் வேறு யார் யாரோ இருப்பார்கள். வியாசர்பாடியிலிருந்து திஷ்யாவின் சித்தி வந்து போனாள். பெங்களூரிலிருந்து அத்தை வந்து ஒரு நாள் தங்கி விட்டுப் போனாள்.

    “ஒம் மனசை இவ்வளவு கெடுத்த மகாபாவிங்க அனுபவிப்பாங்கடா!” என்ற பெங்களூர் அத்தை ஒன்றுக்கு பலமுறை சிவாவின் காதுபட புண்ணிய கோடியிடம் புலம்பினாள்.

    வீடு விரோதமாகப் பார்த்தது. வீதியில் பல கண்களில் காலித்தனம் தென்பட்டது. ஓரிருவர் “ஷோக்கான குட்டி இருக்கிற வூடா பார்த்து கொடகூலிக்குப் போவணுண்டா” என்ற கோழைச் சாக்காகப் பேசினர்.

    எல்லாவற்றையும் எதிர்கொள்ள சிவாவுக்கு ஓர் உரம் ஏறிற்று. வைராக்கியம் மிகுந்தது.

    எதிர்த்து நின்று தட்டிக் கேட்கட்டும். உண்டான பதிலைச் சொல்லலாம் என்று நிமிர்ந்த தலையோடு அவன் வீட்டிற்குப் போனான். வீதியில் உலவினான்.
    அப்படி எவரும் வரவில்லை. யாருக்குமே அந்தத் துணிச்சல் இல்லை.

    ஆஸ்பத்திரியில் புண்ணியகோடி அவன் வந்து நின்றால் பார்வையைத் திருப்பிக் கொள்வார். ஓரிரு நிமிஷம் அங்கே நிற்பான்.
    நர்ஸ்… டாக்டர் என்று எதிர்ப்படுகின்ற ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் அவருடைய உடல்நிலை குறித்து விசாரித்து அறிவான். பிறகு போய் விடுவான்.

    தாமுவுக்கு இவற்றைத் தெரிவிக்க வேண்டும் என்று ஏனோ தோன்றியது. விவரமாக ஒரு கடிதம் எழுதிப் போட்டான்.
    அவசியம் ஒரு பதில் போடவும் என்று ஒரு வரி எழுதியிருந்தான் – பதிலில் ஓர் அறிவுரை வரும் என்ற நம்பிக்கையில்.
    பதில் வரவில்லை.

    ஒரு வாரமாக பிரீதாவைக் காண வாய்ப்பில்லை. ரேடியம் தெரபி சம்பந்தமாக ஒரு விசேஷ பயிற்சிக்கு அந்த பிரைவேட் நர்ஸிங் ஹோம் அவளைத் தேர்ந்தெடுத்து வேலூர் சி.எம்.சிக்கு அனுப்பியிருந்தது.

    முகூர்த்தத் தேதி நிர்ணயமானதும் எழுதும்படி அவள் ஒரு கடிதம் போட்டிருந்தாள்.
    அதற்கு அவன் பதில் போடவில்லை.

    அந்த ஒரு வாரம் ஒரு புறக்கணிப்பின் கூண்டிலேற்றப்பட்ட உணர்வின் தனித்துவத் தன்மையை சிவா பூரணமாக அனுபவித்தான்.
    அவனைச் சுற்றி இருக்கிறவர்கள் தன்னை எரிக்கட்டும் என்ற திடத் தன்மையோடு எல்லார் வெறுப்பையும் ஏற்றுக் கொண்டான்.
    அந்த வேதனையில் ஒரு தனி சுகமிருந்தது. புடமிடப்படுவது போன்ற தகிக்கின்ற சுகம். மாசுகள் நீங்குவது போன்ற கொதித்துக் கரையும் சுகம்.
    ஏழாவது நாள்.

    காலையில் குளித்துக் கொண்டிருக்கும் போது கனத்த ஷý ஒலி கேட்டது. பழக்கமானது. தாமுவுடையது.
    “சிவா” என்று அடித் தொண்டையில் அவனுக்கே உரித்தான மெதுவான தொனியில் கூப்பிட்டான் தாமு.
    “எஸ் ஸார்” என்று பதிலளித்தான்.

    “குளிச்சுட்டு வா!”
    ஷூவைக் கழற்றிவிட்டு அவன் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போகும் ஓசை.

    குளித்துக் கொண்டிருந்த சிவாவுக்கு அவனை எப்படி ஏறிட்டுப் பார்ப்பது என்ற பிரச்னை தோன்றிற்று. தாமு திஷ்யாவை விரும்புகிறான். திருமணம் செய்து கொள்கிற அளவு.

    அவன் அவசரமாக துண்டை எடுத்துத் துவட்டியும் துவட்டிக் கொள்ளாமலும் போய் அவன் முன் நின்றான்.
    ஏதோ ஃபைலைப் புரட்டிய தாமு நிமிர்ந்து அவனைப் பார்த்தான். வெள்ளையாகச் சிரித்தான்.
    “ஸாரி, ஒடனே பதில் போட முடியலே” என்றான்.

    சிவா கண்களைத் தாழ்த்தினான்.
    “நேரிலே வரணும்தான். பதில் போடலே. நல்லா துடைச்சுக்கிட்டு வா. யூ ஆர் ஸ்டில் வெட்.”
    சிவா வெளியே வந்து உடம்பை நன்றாகத் துடைத்துக் கொண்டு துண்டை பிழிந்து கொடியில் போட்டான். காய்ந்து விட்டிருந்த ஒரு பனியனை மாட்டிக் கொண்டு மீண்டும் உள்ளே வந்தான். நின்றான்.

    “பீ ஸீடட்” என்று அருகிலிருந்த நாற்காலியைக் காட்டினான். சிவாவினால் உட்கார முடியவில்லை.
    “பீ ஸீடட் ஐ ஸே”
    சிவா கீழ்ப்படிந்தான்.

    “யூ ஃபீல் கில்ட்டி!” என்று அவனைப் பார்த்து மீண்டும் சிரித்தான்.
    “நானா எந்தத் தப்பும் பண்ணலே!”
    “அதுதான் லெட்டர்லே எழுதியிருந்தயே. பட் கங்க்ராட்ஸ்.”
    “எதுக்கு?”
    “யூ பிகம் சம்படி. அஞ்சு மாசத்துக்கு முன்னாடி நீ ஒரு ரைட்டர்தானே. நவ் யூ பிகம் எ மேன்”
    சிவாவுக்கு அவன் பெருந்தன்மை சிலிர்த்தது.

    “திஷ்யா பேர்லே எனக்கு ஒரு லைகிங் உண்டு. இட்ஸ் ஜஸ்ட் எ ஃபேன்ஸி. தெருவிலே போற பொண்ணுங்களைப் பார்க்கறப்ப இவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா நல்லாயிருக்கும். அவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா நல்லாயிருக்கும்னு தோணறாப்பிலே” என்று அவன் அலட்சியமாக தோள்களை உலுக்கிக் கொண்டான்.

    “டோன்ட் திங்க் மீ ஸோ மீனர். தனக்கு கிடைக்காதது வேற யாருக்கோ கெடச்சுட்டா பொறாமைப் படற மாதிரி ஆள் இல்லே நான். யூ நோ மீ.”
    சிவா மெதுவாக தலையசைத்தான்.

    “புண்ணியகோட்டி இன்னும் ஆஸ்பத்திரிலேதான் இருக்கறாரா?”
    “ஆமா…”
    “என்னிக்கு டிஸ்சார்ஜ் ஆவறாரு?”
    “இன்னிக்கு சாயங்காலம்”
    தாமு ஒரு சிகரெட்டை கேஸிலிருந்து உருவிப் பற்ற வைத்தான். ரசித்து உறிஞ்சுவிட்டுப் புகையை ஊதினான்.
    “ஹி ஈஸ் எ ஃபூல்” என்றான்.

    சற்று கழித்து “பேராசை பிடித்த முட்டாள்” என்றான். மீண்டும் ஒரு யோசனையோடு சிகரெட்டை ஊதினான்.
    “அப்பா எப்படி இருக்காரு?”
    “நல்லா இருக்கார். நான் போனவுடனே அவருக்குப் போற உசிரு திரும்பிடுச்சி. நான் ஒன்ஸ்ஃபார் ஆல் அங்கேயே தங்கிடப் போறேன்னு தெரிஞ்சதும் நாளுக்கு நாள் தேறிக்கிட்டு வர்றார். பட்… தேர் ஆர் சம் ப்ராப்ளம்ஸ்…” என்று கூறிவிட்டு பெருமூச்செறிந்தான்.

    வழக்கப்படி தேவைப்பட்டால் தாமுவே சொல்வான் என்று காத்திருந்தான் சிவா.

    “நான்… பொம்பளை விஷயத்திலே யோக்கியன் இல்லே. யூ நோ
    இட். அப்பாவும் அப்படித்தான். ஜமீந்தார் இல்லியா?”
    தாமுவின் முகத்தில் ஓர் இளக்காரப் புன்முறுவல் தொடர்ந்தான்.

    “எத்தனை வைப்பாட்டி உண்டோ அந்த அளவு மதிப்பு. ஒரு மனுஷன் எத்தனை பொம்பிளையை வெச்சிருக்கான்றது அவருடைய சொஸைட்டியிலே ஒரு ஸ்டேடஸ் சிம்பல். அதிலே ரெண்டு பேருக்கு குழந்தைகள் உண்டாய்ப் போச்சு. லீகலா க்ளெய்ம் பண்ணப் பார்த்தாங்க. ஐ டோன்ட் வாண்ட் டூ மேக் ஹிம் கிளைம். சுத்தமா பேசித் தீத்து கொஞ்சம் சொத்தைப் பிரிச்சுக் கொடுத்து விடுதலைப் பத்திரம் எழுதி வாங்கிட்டேன்.”
    சிவா கேட்டுக் கொண்டிருந்தான்.

    “யுவர் லெட்டர் வாஸ் அன் இன்ஸ்பிரேஷன்… இதோ எழுதியிருக்கே பாரு…” சட்டைப் பையில் கையை விட்டு சிவா எழுதிய கவரை எடுத்தான்.
    நான்காக மடித்து வைக்கப்பட்டிருந்த எட்டுப் பக்கங்களைப் புரட்டிப் புரட்டித் தள்ளிவிட்டு ஒரு பாராவை ஓரிரண்டு முறை படித்தான். பின்பு அதை மடித்து அவனிடம் நீட்டினான் தாமு.

    சிவா தான் எழுதிய அந்தக் கடிதத்தை வாங்கித் தானே மௌனமாக வாசித்தான்.

    “பெண்ணை விற்கிற, எந்த உருவத்திலாவது விற்கிற சமூகம் நசித்துவிடும். அங்கே வீரியம் இருக்காது. ஆண்மை இருக்காது. புண்ணியகோடி விற்கத் தயாராயிட்டார். ஒரு வேளை மனைவி ஓடிப்போனது அவர் மனசிலே பெண்களைப் பற்றிய மதிப்பையே அழித்திருக்கலாம். நான்கு குழந்தைகளுக்குத் தாயான ஒருத்தியை – தன் மனைவியை உண்மையாக நேசித்திருந்தால் அவள் ஓடிப் போயிருக்க மாட்டாள். பெண்ணைப் போகப் பொருளாக நினைத்தால் அவளும் அந்த அளவுதான் நம்மை மதிப்பாள். அப்போது அவர் விதைத்த வினையின் அறுவடை இப்போது நடைபெறுகிறது…”
    அவன் படித்துவிட்டுத் திருப்பிக் கொடுத்தான்.

    “இட் ஷûக் மி. என்னை அது கம்ப்ளீட்டா அசைச்சிடுச்சு.”
    தாமு சிகரெட்டை உறிஞ்சி மீண்டும் புகையை ஊதினான்.

    “போகட்டும் அதை அப்பறமா பேசுவோம். நீ டிரஸ் பண்ணிட்டு கௌம்பு. புண்ணியகோடியைப் போய்ப் பார்ப்போம்.”
    ஆஸ்பத்திரியில் புண்ணியகோடி மட்டும் இருந்தார். அவர் பார்வை சுழலுகின்ற மின்விசிறியை வெறித்துக் கொண்டிருந்தது.
    சிவாவையும் தாமுவையும் பார்த்ததும் எழுந்து உட்கார முயன்றார்.

    “நீங்க படுத்துக்குங்க” என்று தடுத்தான் தாமு. ஆனாலும், அவர் எழுந்து காலை பிடித்தவாறே உட்கார்ந்தார்.

    “ரொம்ப ஸாரி மிஸ்டர் புண்ணியகோடி என்னென்னவோ நடந்துட்டிருக்கு. எதுவும் இன்டென்ஷனோட நடக்கலே. ஒங்களுக்கு சிவாவைத் தெரியும். ஹி ஈஸ் எ பர்ஃபெக்ட் ஜென்டில் மன். ஒங்க குடும்ப விஷயத்திலே தலையிடணும்னு அவன் விரும்பலே. திஷ்யாவேதான் ஆள் விட்டு அவனைக் கூப்பிட்டிருக்கு…”
    புண்ணியகோடி தலை நிமிர்ந்து தாமுவைப் பார்க்கவில்லை.

    “ஒங்க ப்ராப்ளம் என்னன்னு எங்களுக்குப் புரியறது…”
    புண்ணியகோடி திடீரென்று குலுங்கினார்.
    “நான் ஒரு முட்டாள் மிஸ்டர் தாமு.”
    கட்டிலின் மீது போட்டிருந்த துண்டை எடுத்து அவர் அதில் வாய் புதைத்துக் கொண்டார். தாமு திரும்பி சிவாவைப் பார்த்தான்.

    அவர் உணர்ச்சிகள் வடிய அவர்கள் நேரம் வழங்கி நின்றனர். அவர் ஒரு நிமிஷம் கழித்து முகம் துடைத்துக் கொண்டார்.

    “கொழந்தை இப்பதான் வந்து சினிமாவிலே நடிக்க வக்கிறியோ… எங்க போகச் சொல்றியோ… என்ன பண்ணச் சொல்றியோ பண்றேம்பான்னு கண்ணு வழிய சொல்லிட்டுப் போறா… மிஸ்டர் தாமு… நானும் மனுஷன்தான். தோத்தவன். நஷ்ட்ப்பட்டவன். இருந்தாலும் நானும் மனுஷன்தான். ஐ ஆம் ஆஸ்ஸோ எமேன்! எ ஃபாதர்.”
    தாமு ஸ்டூலை இழுத்துப் போட்டு அவர் அருகில் உட்கார்ந்தான். அவர் தோள் பட்டையை மெதுவாகத் தொட்டான்.

    “தாமு சார்… யூ ஆர்… யூஆ…” அவருக்குத் தொண்டை அடைத்தது.
    மீண்டும் துண்டை முகத்தில் ஒற்றிக் கொண்டார்.

    “நீங்க பெரிய மனுஷன். நீங்களே இருந்து இவங்க கல்யாணத்தை நடத்தி வைங்கோ. நான் ஒண்ணும் பெரிசா செய்ய முடியாது. பெரிய குடும்பம்…”
    “டோன்ட் ஒரி… டோன்ட் ஒரி” என்று தாமு அவர் தோளைத் தட்டிக் கொடுத்தான்.

    ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வரும்போது தாமுவின் கண்கள் கலங்கியிருந்தன. இதை சிவாவுக்குக் காட்டாமல் மறைத்துக் கொண்டே தாமு சொன்னான்.

    “சிவா, நாம ரெண்டு பேரும் ஊருக்குப் போகணும். ஐ வான்ட் டு மீட் பிரீதா. அவளை மதனபள்ளிக்குக் கூட்டிப் போகப் போறேன்…”
    “சரி.”
    “நீ அப்படியே திருப்பத்தூர் போய் அம்மாவைக் கூட்டி வந்துடு! நாளை மறுநாள் முகூர்த்த தேதியை நிச்சயம் பண்ணிடலாம்” என்றான் தாமு.

    தொடரும்

    Share
  • தாகூரின் கீதங்கள் – 10

     

    என்னோடுள்ளாய் எப்போதும்

     

    ajay

    மூலம் : இரவீந்தரநாத் தாகூர்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

     

    கோடான கோடி ஆண்டுகளுக்கு

    முன்பு புவிக்

    கோளில் முதலில் எழுந்த

    சூரிய உதயத்திலே

    வீசிய வெண்கதிர்ப் பொறிகளில்

    எடுத்து

    என் வாழ்வுக்கு நீ

    பின்புலம் ஆக்க வில்லையா ?

    எவர் அறிந்திடுவார்

    எவ்விதம் நான்

    அன்றைய காலைப் பொழுதில்

    அவதரித்தேன் என்று ?

    மலர்ந்தும் மலராத

    எந்த ஓர் வடிவத்தை எனக்களித்தாய்

    என்று எட்டாமல் போகும்

    என் அறிவுக்கு !

    கால வரம்பில்லாத முதல்வனே !

    நினைவைக் கடந்து

    எனைப் புதுப்பித்து

    வடிவமைத்து வருகிறாய்

    யுக யுகமாய் !

    என்னருகில் அமர்ந்து கொண்டு

    என்னுடனே இருக்கிறாய்

    எப்போதும் !

    ************

    Original Source: A Tagore Testament,

    Translated From Bengali By Indu Dutt

    Jaico Publishing House (1989)

    121 Mahatma Gandhi Road,

    Mumbai : 400023

    *********************

    Share
  • புரியாத புதிர்!

    -ரா. பார்த்தசாரதி

    அன்புள்ள  அம்மா உன் அடிச்சுவட்டைப்  பின்பற்றுகிறேன்
    அன்று உன் நிலைமை கண்டு பிரமிப்பு அடைந்தேன்
    உன்னைப்போல் உழைக்கின்றேன் இன்று நானே
    அன்று இளமையில் சுயநலமாக எதையும் சிந்தித்தேன்
    இன்று திருமணம் ஆனதால் பிற(ர்) நலமாகச்  சிந்திக்கின்றேன்
    என்  குழந்தை என் கணவன் என்கிற வட்டத்தில்  சுழலுகின்றேன்
    ஏன் இந்த மாற்றம்  என்  நிலைமை  என்னை மாற்றியதா?
    பெண் இனத்திற்கு இது இயற்கை என முடிவானதா?

    பிறந்த வீட்டின் குலமும் புகுந்த வீட்டின் நலமே எனக்கொண்டாலும்
    இரண்டையும் சமமாக நினைக்க வேண்டும் என நினைத்தாலும்
    பெண்ணின் நிலைமை மதில்மேல் பூனையாக  அமைந்தாலும்
    பெற்ற தாயும் தந்தையும் சற்றே தொலைவிலிருந்தாலும்
    அன்று ’கல்’ ஆனாலும் கணவன்; ’புல்’ ஆனாலும் புருஷன்
    இன்று ஒரு ஆண்,  மனைவிக்காக அனுசரித்து நடந்தும்
    ஒருவரை ஒருவர் விட்டுகொடுக்கும் மனப்பாங்கே
    வாழ்கையில் அன்பும், அமைதியும் என்றும் நிலவிடும்!

    நீயும் என் வயதில் என்னை மாதிரி  உணர்ந்திருப்பாய்
    உன் அன்பும் தியாகமும் எங்களுக்காக அளித்தாய்
    நீ தந்த பாசத்தையும் அன்பையும் திருப்பி அளிக்க முடியுமா?
    தாய்ப்பாசத்தையும் தந்தையின் அரவணைப்பையும் திருப்பித் தரமுடியுமா?
    தாயின் பாசமும் அன்பும்  அவள் மடியிலிருந்து தொடக்கம்
    பெண் அன்பில் ஒரு தாய், நட்பிற்கு  நேர்மை,  அறிவில் ஒரு மந்திரி
    பெண்  கண்கண்ட ஆசான், பெண்ணே  வெற்றிக்கு மாலை
    பல உருவினில் இருந்தாலும் இன்றும்  ஒரு புரியாத புதிர்!

     

    Share
  • மனிதருக்குள் இருக்கும் மனிதாபிமானம்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    மனவளர்ச்சிக் குறை உள்ளவர்களை (autistic people) எங்கு சந்தித்தாலும் என் மனதில் ஒரு உளைச்சல் ஏற்படும்.  உறவினர்களோடு அவர்கள் இருந்தாலும் அவர்களுடைய வாழ்நாள்வரை அவர்களை யார் கவனித்துக்கொள்வார்கள் என்ற எண்ணம் உடனேயே மனதில் தோன்றும்.  பல மனநோய் நிறுவனங்களில் அங்குள்ளவர்களை அவர்களைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பில் இருப்பவர்கள் எப்படி நடத்துகிறார்கள் என்பதைப் படிக்கும்போது வேதனை ஏற்படும்.  எல்லா வகையான ஒழுங்கு நடவடிக்கைகளும் உள்ள அமெரிக்காவிலேயே இவர்களைக் கவனித்துக்கொள்வதில்  அநியாயங்கள் நடந்துவருகின்றன என்றால் இந்தியாவைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.  மனவளர்ச்சிக் குறை உள்ளவர்களைக் கவனித்துக்கொள்ள இந்தியாவிலும் நிறைய சமூக மனநோய் நிறுவனங்கள் தோன்றியிருந்தாலும் அங்கு ஒழுங்குமுறைகள் எல்லாம் சரியாக இல்லை.  அமெரிக்காவில்போல், குடும்பத்தவர் நிறையப் பணம் கொடுத்து அவர்களைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை இந்தச் சமூக மனநோய் நிறுவனங்களிடம் விட்டுவிடும் வழக்கம் இன்னும் இந்தியாவில் வரவில்லை என்றே நினைக்கிறேன்.  மைசூரில் எங்களுக்கு வீட்டு வேலைகளில் உதவும் பெண்ணின் குடும்பத்தில் உள்ள இப்படிப்பட்ட ஒரு பையனைப் பற்றி அடிக்கடி நான் கவலைப்படுவதுண்டு.  இவனை யார் அவன் ஆயுள் உள்ளவரை கவனித்துக்கொள்வார்கள் என்ற கேள்வி எழும்போதெல்லாம் அதற்கு விடை கிடைப்பதில்லை.

    தனித்துவத்தை (individualism) மிக அதிகமாக வளரவிட்டுவிட்ட அமெரிக்காவில் குடும்ப உறுப்பினர்களையே சரியாகக் கவனிக்காமல் இருக்கும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது.  இப்படிப்பட்ட அமெரிக்காவில் சமீபதத்தில் பத்திரிக்கையில் வந்த மனவளர்ச்சி குன்றிய தன் தம்பியைப் பற்றியே சதாசர்வ காலமும் நினைத்துக்கொண்டு அவனுடைய நலத்திற்காகப் பாடுபடும் ஒரு பெண்ணின் கதை மனதை நெகிழவைத்தது.  உலகில் இன்னும் பாசம், பந்தம் போன்றவை இருக்கின்றன, சொந்த பந்தங்களைக் கவனித்துக்கொள்ளும் மனிதர்களும் இருக்கிறார்கள் என்று அறிந்தபோது ஏதோ ஒரு நிம்மதி மனதில் பிறந்தது.

    நியுயார்க் மியுசியம் ஒன்றில் பார்வையாளர்களை உள்ளே அனுமதிக்கும் காவலராக ஒரு பெண் வேலைபார்க்கிறார்.  இந்தப் பெண்ணுக்கு  சம்பளம் மணிக்கு பதினாறு டாலர்.  இவருக்கு வயது ஐம்பத்தாறு; இவருடைய தம்பிக்கு ஐம்பத்தி நான்கு.  இவருடைய தம்பிக்கு எழுதப் படிக்கத் தெரியாது.  தானாகச் சாலையைக் கடக்கக்கூட முடியாது.  மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான ஒரு இல்லத்தில் வசித்துவரும் இவரை இவருடைய தமக்கை அடிக்கடி சென்று பார்க்க விரும்புகிறார்.  ஆனால் இவரால் அதைச் செய்ய முடியவில்லை.  இவருடைய அலுவலகத்தில் மேல் பதவியில் இருப்பவர்கள் வேண்டுமானால் வேலை நேரத்திலேயே வெளியே போவதற்கு வசதி செய்துகொள்கிறார்கள்.  அவர்களால் வேலை நேரத்திலேயே டாக்டரிடம் போவதற்கும் உடல்நலமில்லாமல் இருக்கும் உறவினர்களைப் பார்ப்பதற்கும் தங்கள் குழந்தைகளின் ஆசிரியர்களைச் சந்திக்க பள்ளிகளுக்குப் போவதற்கும் முடியும்.  ஆனால் இவரைப் பொறுத்தவரை நினைத்த நேரத்தில் வேலையை விட்டு வெளியே போக முடியாது.  செவ்வாய் முதல் சனி வரை  காலை ஒன்பது மணியிலிருந்து மாலை ஐந்து மணிவரை இவருக்குப் பணி நேரம். அந்தச் சமயத்தில் எங்கும் போக முடியாது.  வருடத்திற்கு இரண்டு வாரங்கள் சம்பளத்தோடு கூடிய விடுமுறை உண்டு.  ஆனால் அதை எப்போது எடுக்கலாம் என்பதை இவரால் தீர்மானிக்க முடியாது.

    இவருக்கென்று வருடத்தில் மொத்தம் ஐந்து நாட்கள் பர்சனல் விடுமுறை (personal leave)  உண்டு. இந்தியாவில் இதை ‘கேஷுவல் விடுமுறை’ என்பார்கள்.  அந்த ஐந்து நாட்களில் இவருக்கு இருக்கும் வியாதிகளான உயர் ரத்த அழுத்தம், ஆர்த்ரைட்டிஸ் போன்றவற்றிற்கு டாகடர்களைப் பார்ப்பதில் இரண்டு மூன்று நாட்கள் கழிந்துவிடும்.  இவருக்கு ஞாயிறு, திங்கள் விடுமுறை.  இவருடைய தம்பிக்கு திங்கட்கிழமைகளில் தான் இருக்கும் கட்டடத்தைச் சுத்தப்படுத்தும் வேலை இருக்கும்.  ஆக ஞாயிற்றுக்கிழமை ஒன்றுதான் இருவருக்கும் பொதுவான விடுமுறை நாள்.  அந்த நாளில் தம்பியைப் பார்க்கப் போனால்தான் உண்டு.

    கெடுபிடிகள் உள்ள வேலைக்கிடையேயும் அடிக்கடி இவர் தன் தம்பியைப் பற்றி நினைத்துக்கொள்வார்.  தம்பிக்கு இன்னும் அதிகம் செய்யவேண்டுமோ, தன்னால் அப்படிச் செய்ய முடியவில்லையே என்று அடிக்கடி ஏங்குவார்.  இவருக்கென்று இப்போது தம்பியைத் தவிர குடும்பம் வேறு எதுவும் இல்லை.

    இவர்களுடைய தந்தை 1995-லும் தாய் 1998-லும் இறந்துவிட்டார்களாம்.  அவர்கள் உயிருடன் இருக்கும்போது அடிக்கடி ‘நீங்கள் இருவரும் எப்போதும் ஒன்றாக இருக்க வேண்டும், ஒற்றுமையாக இருக்க வேண்டும்’ என்று அறிவுரை கூறுவார்களாம்.  இந்த அறிவுரையைத் தலைமேல் ஏற்று இவர் தன் தம்பியைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை – அவரை அடிக்கடி சென்று பார்ப்பது, அவரைக் கவனித்துக்கொள்பவர்களைச் சந்தித்துப் பேசுவது, அவருக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பவர்களை நன்றாகச் சொல்லிக் கொடுக்கும்படி கேட்டுக்கொள்வது போன்றவை – ஏற்றிருக்கிறார்.

    தம்பிக்கு இதெல்லாம் புரியாவிட்டாலும், கடந்த 26 வருடங்களாக இல்லத்தில் வசிக்கும் இவரை அவருடைய அக்கா பார்க்க வரும்போதெல்லாம் இவருடைய முகம் பிரகாசிக்கும்.  அவருக்கு இருக்கும் ஒரே உறவு அவருடைய அக்காதான்.   அவ்வப்போது அவருடைய அக்கா இவரைத் தன் வீட்டிற்கு அழைத்துச் செல்வதுண்டு.  அப்படி தமக்கை அழைத்துச் செல்லும்போதெல்லாம் இல்லத்தில் உள்ளவர்கள் ‘எங்கு போகிறாய்?’ என்று கேட்டால் ‘எங்கள் வீட்டிற்குப் போகிறேன்’ என்று சொல்வாராம்.  அமெரிக்காவிலும் சரி, இந்தியாவிலும் சரி தங்கள் சொந்த வீட்டைத்தான் வீடு என்பார்கள்.  இவர் தமக்கையின் வீட்டை தன் சொந்த வீடு என்கிறார்.  அந்த அளவிற்குத் தமக்கையின் மீது இவருக்குப் பிடிப்பு இருக்கிறது.

    அமெரிக்காவில் சொந்தப் பெற்றோர்களையே பலரால் கவனித்துக்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.  ஏனெனில் எல்லோரும் எப்போது வேலை செய்வதை நிறுத்தினாலும் 67 வயது முடிந்த பிறகுதான் மத்திய அரசு கொடுக்கும் பென்ஷன் கிடைக்கும்.  அதனால் கடைசிவரை – அதாவது 67 வயது முடியும் வரையாவது – வேலைபார்க்க வேண்டும்.  அதனால் பெற்றோர்களை வீட்டில் வைத்துக் கவனித்துக்கொள்வது மிகவும் கஷ்டம்.  பெரிய பணக்காரர்களைத் தவிர பலரால் கடைசிவரை உழைத்தால்தான் ரிடையர் ஆன பிறகு ஓரளவாவது வசதியாக வாழ்க்கையை ஓட்ட முடியும்.  இப்படிப்பட்ட அமெரிக்காவில் தன் தம்பியைக் கவனித்துக்கொள்ளும், அவனைப் பற்றி எப்போதும் நினைத்துக்கொண்டிருக்கும் அந்த அக்காவின் கதை மனிதர்களிடம் இன்னும் மனிதாபிமானம் செத்துவிடவில்லை என்ற நம்பிக்கையைத் தருகிறது.

    Share