வையவன்

ராயப்பேட்டை ஹாஸ்பிடல் கேட்டை விட்டு சிவா இறங்கினான். சாலையில் விளக்குகள் ஒன்றிரண்டு எரியாததால் இருள் அங்கங்கே தேங்கியிருந்தது.சென்னை இன்னும் உறங்கவில்லை.

அவ்வப்போது சாலையில் சென்ற கார்களும் லாரிகளும் அவனுக்கு அதை அறிவித்தன.
பால் வாங்கி வருவதற்காகக் கொண்டு வந்த பிளாஸ்க்கின் பிளாஸ்டிக் பெல்டை எடுத்து தோளில் மாட்டிக் கொண்டான்.
“மணி இன்னா சார்?” எதிரே வார்டிலிருந்து வந்தவர் எவரோ கேட்டனர்.

அவனிடம் கடிகாரம் இல்லை.

“தெரியலே” என்று சொல்லி விட்டு நகரும் போது கதவருகில் நின்றவர் ஒருவர் சொன்னார்.
“ரெண்டு அஞ்சு”
“தாங்க்ஸ்”
யாரோ யாருக்கோ சொன்னார்கள்.

அவன் ஆஸ்பத்திரிக்குள் நுழைந்து எவ்வளவு நேரமாகப் போகிறதென்று கணக்கிட்டான்.
ஐந்து மணி நேரம்.

புண்ணியகோடி மரணத்தோடு ஐந்து மணி நேரமாகப் போராடிக் கொண்டிருக்கிறார்.
சிவா சாலையில் நாற்சந்தி கடந்து திறந்திருந்த பால் கடை ஒன்றை நெருங்கினான்.
“ப்ளாஸ்கைக் கழுவி ரெண்டு பால், ரெண்டு பன் பார்சல்”
“இன்னா சார், கம்பவுண்டர் பொய்ச்சிக்கினாரா.”
சிவா திரும்பிப் பார்த்தான்.

பால் கடைக்குப் பக்கத்திலிருந்த பங்க் கடைக்காரன் கேட்டான்.

“அபாய கட்டம் தாண்டிடுச்சி.”
வாழைப்பழம் உரித்துத் தின்று கொண்டிருந்த நபர் ஒருவர் வேலை தீர்ந்து தோலை வீசிவிட்டு அரைகுறை அக்கறையோடு கேட்டார்.

“யாரு?”
“கம்பவுண்டர் புண்ணியகோட்டி இல்லே, அதாம்பா… வாரம் தவறாமே ரேஸுக்குப் போவாரே… நெத்திலே துண்ணூறு வச்சிகிணு எப்பவும் புல் ஷர்ட் போட்டுணு வருவாரே… நம்ம கடைலே அக்கவுண்ட் வச்சிகிணு ரேஸ் டிப்ஸ் வாங்க மாட்டாரு? அவரு பாய்ஸன் சாப்டாரு”

“அடப் பாவமே…பூட்டாரா?”
“தப்பிச்சுக்கிட்டாரு”
“வயசான மன்சன். எத்தினி குடும்ப கஷ்டமோ?”
“அது எப்பவோ நடந்துருக்கணும்பா… கொயந்த குட்டிக்கார ஆளு. ஏதோ மானத்தை மடியிலே கட்டிக்கினு தம் புடிச்சாரு.”
“சீக்கிரமா குடுங்க” என்று அந்த சூழ்நிலையின் இறுக்கம் தாளாமல் கடுகடுத்தான் சிவா.

“இப்பதானே சார் கொணாந்த… இதுக்குள்ள துடிச்சா… ப்ளாஸ்க் கயுவ வாணாம்.” என்று யாந்திரீகமான அமைதியோடு பதிலளித்து விட்டு வெந்நீரில் ப்ளாஸ்கைக் கழுவினான் கடைக்காரன்.

“அது இன்னா கத…?” வாழைப்பழம் வம்புப் பிரியத்தில் வாயைக் கிளறியது.

“பொண்டாட்டி ஒரு வைர வியாபாரிய இஸ்துக்கினு பூட்டா. அது நடந்து அஞ்சு வருஷமாவப் போவுது.”
அவனை உதைக்கலாமா என்று சிவா யோசித்தான். ஒரு வாயை மூடும் முயற்சிக்காக விபரீதம் தான் விளையும்.

“இப்ப ஏன் பாய்ஸன் சாப்டாரு?”
“தெரிலே… பொண்ணு விஷயம் போல கீது”
பால் கடைக்காரன் பன்னை மடித்துக் கட்டப் போனான்.

“கட்ட வேணாம்” என்று காகித மடிப்பில் பன்களை வாங்கிக் கொண்டான். சில்லறையைக் கொடுத்து விட்டு வரும்போது சமூகத்திற்கு ஊர் வம்பில் இருக்கிற ருசி முள்ளாய் உறுத்திற்று.

எட்டுப் போர்ஷன்கள் கொண்ட அந்த வீடு… வீதி… அறிந்தவர்கள்… புண்ணியகோட்டியைத் தெரிந்தவர்கள்… அவர்கள் அனைவர் முன்பும் தான் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டிருப்பதை பிரத்யட்சமாக அனுபவித்தான்.

பல கண்கள் அந்த ஐந்து மணி நேரத்துக்குள் அவனை விரோதித்தன. சிவாதான் அவருக்கு விஷத்தை ஊற்றிக் கொடுத்தவன் என்கிற மாதிரி பார்த்தன.
ஹாஸ்பிடலுக்குள், காத்திருக்கும் பெஞ்சில் கால் நீட்டிப் படுத்திருந்த பிரேம் கூட முதலில் அவனை அப்படித்தான் பார்த்தான்.

திஷ்யா மட்டும்தான் அந்த துவேஷம் மெல்லும் நிலையில் அவனிடம் வித்தியாசமாக நடந்து கொண்டாள்.
கையில் பன்களுடன் அவன் அந்தப் பெஞ்சுக்குப் போனான்.

வியர்வையில் மை கரைந்து போய் கண்கள் இன்னும் பெரிதாய்த் தெரிய அவள் பரிதாபமாய்க் காணப்பட்டாள்.
“திஷ்யா… பன்னும் பாலும் வாங்கியாந்திருக்கேன். பிரேமை எழுப்பு.”
“எனக்கு வேணாம்.”

“நீ கூட ராத்திரி சாப்பிடலியே. மத்தியானம் கூட நீ சாப்பிடலேன்னு சீதா சொன்னாள்.”
அவள் பிரேமை தட்டி உலுக்கினாள். அவன் கண்களை முழித்துப் பார்த்துவிட்டு மீண்டும் திரும்பிப் படுத்துக் கொண்டான்.
“இவனை தூக்கத்திலேருந்து எழுப்ப முடியாது”

“அப்ப நீ சாப்பிடு”
“எனக்கு இப்ப வேண்டாம் ப்ளீஸ்… தொந்தரவு பண்ணாதீங்க.”
அவன் பெஞ்சு ஓரமாக மாட்டியிருந்த ப்ளாஸ்டிக் கைப்பையீல் பன்களைப் போட்டான்.
பிரேம் நகர்ந்து படுத்ததில் தலைப் பக்கம் கொஞ்சம் இடம் காலியாயிருந்தது. அங்கே போய் உட்கார்ந்தான். திஷ்யா பிரேமின் கால்மாட்டில் உட்கார்ந்திருந்தாள்.

“டாக்டர் வந்தாரா?”
“யாரும் வரல்லே. ஒரு நர்ஸ் வந்து போச்சு.”
“என்ன சொல்லுச்சு”
“பொழச்சுக்குவாராம்”
அவன் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.

“சிவா… ரொம்ப ரொம்ப ஸாரி”
அவன் ஒன்றும் பேசவில்லை. நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.

“ஒங்களை நான் அநாவசியமா இதிலே இழுத்து விட்டுட்டேன்.”
“சரி சரி… இதுக்கெல்லாம் அவசியமில்லே.”
“அவசியம் வந்துடுச்சு.”
“வேண்டாங்கறேனே… இந்தப் பேச்சை விடு”
“இல்லே… நான் அப்பா இஷ்டப்படியே நடக்கறதுண்ணு முடிவு பண்ணிட்டேன்.”
அவனுக்கு பளிச்சென்று அறைந்த மாதிரி இருந்தது.

“பயந்துட்டியா?”
“பயமா…” அவள் உதட்டிற்குள் வெறுமையாகச் சிரித்த ஓசை ஹூங்காரமாகக் கேட்டது.
“அதெல்லாம் எப்பவோ போயிடுச்சு. அம்மா போனாளே அப்பவே போய்டுச்சு.”
“இப்ப எதுவும் பேச வேண்டாம்.”
“இல்லே, இப்ப பேசிடணும்” அவள் குரலில் உறுதி உயர்ந்து தொனித்தது.

“இது என் பிரச்னைன்னு மட்டும் நெனச்சுட்டேன். அது மகா தப்பு. ஒங்க பிரச்னை. இந்தப் பையன்… அந்த ரெண்டு கொழந்தைங்க.. பொறப்பட்டுப் போனாளே அந்த மகராசி… அவ குடும்பத்துக்கு வச்சிட்டுப் போன நல்ல பேரு… அதுவும் பிரச்னை. வேண்டாம், என்னாலே என் பிடிவாதத்தாலே எதுவும் நடக்க வேண்டாம்.”

“அதுக்காக சகதியிலே எறங்கிடறேண்ணு சொல்றியா?”
“ஒருத்தி எறங்கிட்டா இத்தனை பேரும் தப்பிச்சுக்கலாம்.”
“திஷ்யா.”
அவள் சேலைத் தலைப்பை வாயில் புதைத்துக் கொண்டாள். அவளது கறுத்து அடர்ந்த நீளமான கூந்தல் அவள் முகம் குனிந்தபோது மெதுவாக அதிர்ந்து குலுங்கிற்று.

அவள் விம்மல்களைக் கட்டுப்படுத்துகிறாள் என்று புரிந்து கொண்டான்.
அந் நேரத்தில் அவளை வாரியணைத்து அந்த முகத்தை தன் மார்புறத் தழுவிக் கொள்ள வேண்டும் போலிருந்தது.

அங்கு வழிந்த கண்ணீரையும் ஒலிக்கின்ற விம்மல்களையும் துளி விடாமல் முழுக்க முழுக்க அப்டியே தன் மார்பின் மீது வாங்கிச் சுமக்க வேண்டும் போன்று அவனுக்கு மனம் துடித்தது.

அது ஹாஸ்பிடல். அந்த நேரம் அதற்கு ஒவ்வாத அபாக்கியமான நேரம். அந்த வெண்ணிற முதுகின் மீது செழித்து அடர்ந்த கருங்கூந்தல் குலுங்குவதையே அவன் கவனித்தான்.

ஒரு வாரம் கம்பவுண்டர் புண்ணியகோடி ஆஸ்பத்திரியிலேயே இருந்தார். அங்கேயே கம்பவுண்டராக இருந்ததால் ஸ்பெஷல் சிகிச்சை.
சிவா தினசரி மூன்று முறை அவரைக் காண ஆஸ்பத்திரிக்கு வந்தான்.

ஒர்க்ஷாப் திறக்கும் முன் ஒரு வேளை காலையில் வருவான். மத்தியானம் ஹோட்டலில் சாப்பிட வரும்போது ஒரு முறை.
ஒர்க்ஷாப்பை மூடிவிட்டு இரவு எட்டரைக்கு ஒரு முறை வருவான். சில சமயங்களில் புண்ணியகோடியின் பக்கத்தில் இருக்கும் ஸ்டூலில் மௌனமாக திஷ்யா உட்கார்ந்திருப்பாள்.

சில சமயம் வேறு யார் யாரோ இருப்பார்கள். வியாசர்பாடியிலிருந்து திஷ்யாவின் சித்தி வந்து போனாள். பெங்களூரிலிருந்து அத்தை வந்து ஒரு நாள் தங்கி விட்டுப் போனாள்.

“ஒம் மனசை இவ்வளவு கெடுத்த மகாபாவிங்க அனுபவிப்பாங்கடா!” என்ற பெங்களூர் அத்தை ஒன்றுக்கு பலமுறை சிவாவின் காதுபட புண்ணிய கோடியிடம் புலம்பினாள்.

வீடு விரோதமாகப் பார்த்தது. வீதியில் பல கண்களில் காலித்தனம் தென்பட்டது. ஓரிருவர் “ஷோக்கான குட்டி இருக்கிற வூடா பார்த்து கொடகூலிக்குப் போவணுண்டா” என்ற கோழைச் சாக்காகப் பேசினர்.

எல்லாவற்றையும் எதிர்கொள்ள சிவாவுக்கு ஓர் உரம் ஏறிற்று. வைராக்கியம் மிகுந்தது.

எதிர்த்து நின்று தட்டிக் கேட்கட்டும். உண்டான பதிலைச் சொல்லலாம் என்று நிமிர்ந்த தலையோடு அவன் வீட்டிற்குப் போனான். வீதியில் உலவினான்.
அப்படி எவரும் வரவில்லை. யாருக்குமே அந்தத் துணிச்சல் இல்லை.

ஆஸ்பத்திரியில் புண்ணியகோடி அவன் வந்து நின்றால் பார்வையைத் திருப்பிக் கொள்வார். ஓரிரு நிமிஷம் அங்கே நிற்பான்.
நர்ஸ்… டாக்டர் என்று எதிர்ப்படுகின்ற ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் அவருடைய உடல்நிலை குறித்து விசாரித்து அறிவான். பிறகு போய் விடுவான்.

தாமுவுக்கு இவற்றைத் தெரிவிக்க வேண்டும் என்று ஏனோ தோன்றியது. விவரமாக ஒரு கடிதம் எழுதிப் போட்டான்.
அவசியம் ஒரு பதில் போடவும் என்று ஒரு வரி எழுதியிருந்தான் – பதிலில் ஓர் அறிவுரை வரும் என்ற நம்பிக்கையில்.
பதில் வரவில்லை.

ஒரு வாரமாக பிரீதாவைக் காண வாய்ப்பில்லை. ரேடியம் தெரபி சம்பந்தமாக ஒரு விசேஷ பயிற்சிக்கு அந்த பிரைவேட் நர்ஸிங் ஹோம் அவளைத் தேர்ந்தெடுத்து வேலூர் சி.எம்.சிக்கு அனுப்பியிருந்தது.

முகூர்த்தத் தேதி நிர்ணயமானதும் எழுதும்படி அவள் ஒரு கடிதம் போட்டிருந்தாள்.
அதற்கு அவன் பதில் போடவில்லை.

அந்த ஒரு வாரம் ஒரு புறக்கணிப்பின் கூண்டிலேற்றப்பட்ட உணர்வின் தனித்துவத் தன்மையை சிவா பூரணமாக அனுபவித்தான்.
அவனைச் சுற்றி இருக்கிறவர்கள் தன்னை எரிக்கட்டும் என்ற திடத் தன்மையோடு எல்லார் வெறுப்பையும் ஏற்றுக் கொண்டான்.
அந்த வேதனையில் ஒரு தனி சுகமிருந்தது. புடமிடப்படுவது போன்ற தகிக்கின்ற சுகம். மாசுகள் நீங்குவது போன்ற கொதித்துக் கரையும் சுகம்.
ஏழாவது நாள்.

காலையில் குளித்துக் கொண்டிருக்கும் போது கனத்த ஷý ஒலி கேட்டது. பழக்கமானது. தாமுவுடையது.
“சிவா” என்று அடித் தொண்டையில் அவனுக்கே உரித்தான மெதுவான தொனியில் கூப்பிட்டான் தாமு.
“எஸ் ஸார்” என்று பதிலளித்தான்.

“குளிச்சுட்டு வா!”
ஷூவைக் கழற்றிவிட்டு அவன் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போகும் ஓசை.

குளித்துக் கொண்டிருந்த சிவாவுக்கு அவனை எப்படி ஏறிட்டுப் பார்ப்பது என்ற பிரச்னை தோன்றிற்று. தாமு திஷ்யாவை விரும்புகிறான். திருமணம் செய்து கொள்கிற அளவு.

அவன் அவசரமாக துண்டை எடுத்துத் துவட்டியும் துவட்டிக் கொள்ளாமலும் போய் அவன் முன் நின்றான்.
ஏதோ ஃபைலைப் புரட்டிய தாமு நிமிர்ந்து அவனைப் பார்த்தான். வெள்ளையாகச் சிரித்தான்.
“ஸாரி, ஒடனே பதில் போட முடியலே” என்றான்.

சிவா கண்களைத் தாழ்த்தினான்.
“நேரிலே வரணும்தான். பதில் போடலே. நல்லா துடைச்சுக்கிட்டு வா. யூ ஆர் ஸ்டில் வெட்.”
சிவா வெளியே வந்து உடம்பை நன்றாகத் துடைத்துக் கொண்டு துண்டை பிழிந்து கொடியில் போட்டான். காய்ந்து விட்டிருந்த ஒரு பனியனை மாட்டிக் கொண்டு மீண்டும் உள்ளே வந்தான். நின்றான்.

“பீ ஸீடட்” என்று அருகிலிருந்த நாற்காலியைக் காட்டினான். சிவாவினால் உட்கார முடியவில்லை.
“பீ ஸீடட் ஐ ஸே”
சிவா கீழ்ப்படிந்தான்.

“யூ ஃபீல் கில்ட்டி!” என்று அவனைப் பார்த்து மீண்டும் சிரித்தான்.
“நானா எந்தத் தப்பும் பண்ணலே!”
“அதுதான் லெட்டர்லே எழுதியிருந்தயே. பட் கங்க்ராட்ஸ்.”
“எதுக்கு?”
“யூ பிகம் சம்படி. அஞ்சு மாசத்துக்கு முன்னாடி நீ ஒரு ரைட்டர்தானே. நவ் யூ பிகம் எ மேன்”
சிவாவுக்கு அவன் பெருந்தன்மை சிலிர்த்தது.

“திஷ்யா பேர்லே எனக்கு ஒரு லைகிங் உண்டு. இட்ஸ் ஜஸ்ட் எ ஃபேன்ஸி. தெருவிலே போற பொண்ணுங்களைப் பார்க்கறப்ப இவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா நல்லாயிருக்கும். அவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா நல்லாயிருக்கும்னு தோணறாப்பிலே” என்று அவன் அலட்சியமாக தோள்களை உலுக்கிக் கொண்டான்.

“டோன்ட் திங்க் மீ ஸோ மீனர். தனக்கு கிடைக்காதது வேற யாருக்கோ கெடச்சுட்டா பொறாமைப் படற மாதிரி ஆள் இல்லே நான். யூ நோ மீ.”
சிவா மெதுவாக தலையசைத்தான்.

“புண்ணியகோட்டி இன்னும் ஆஸ்பத்திரிலேதான் இருக்கறாரா?”
“ஆமா…”
“என்னிக்கு டிஸ்சார்ஜ் ஆவறாரு?”
“இன்னிக்கு சாயங்காலம்”
தாமு ஒரு சிகரெட்டை கேஸிலிருந்து உருவிப் பற்ற வைத்தான். ரசித்து உறிஞ்சுவிட்டுப் புகையை ஊதினான்.
“ஹி ஈஸ் எ ஃபூல்” என்றான்.

சற்று கழித்து “பேராசை பிடித்த முட்டாள்” என்றான். மீண்டும் ஒரு யோசனையோடு சிகரெட்டை ஊதினான்.
“அப்பா எப்படி இருக்காரு?”
“நல்லா இருக்கார். நான் போனவுடனே அவருக்குப் போற உசிரு திரும்பிடுச்சி. நான் ஒன்ஸ்ஃபார் ஆல் அங்கேயே தங்கிடப் போறேன்னு தெரிஞ்சதும் நாளுக்கு நாள் தேறிக்கிட்டு வர்றார். பட்… தேர் ஆர் சம் ப்ராப்ளம்ஸ்…” என்று கூறிவிட்டு பெருமூச்செறிந்தான்.

வழக்கப்படி தேவைப்பட்டால் தாமுவே சொல்வான் என்று காத்திருந்தான் சிவா.

“நான்… பொம்பளை விஷயத்திலே யோக்கியன் இல்லே. யூ நோ
இட். அப்பாவும் அப்படித்தான். ஜமீந்தார் இல்லியா?”
தாமுவின் முகத்தில் ஓர் இளக்காரப் புன்முறுவல் தொடர்ந்தான்.

“எத்தனை வைப்பாட்டி உண்டோ அந்த அளவு மதிப்பு. ஒரு மனுஷன் எத்தனை பொம்பிளையை வெச்சிருக்கான்றது அவருடைய சொஸைட்டியிலே ஒரு ஸ்டேடஸ் சிம்பல். அதிலே ரெண்டு பேருக்கு குழந்தைகள் உண்டாய்ப் போச்சு. லீகலா க்ளெய்ம் பண்ணப் பார்த்தாங்க. ஐ டோன்ட் வாண்ட் டூ மேக் ஹிம் கிளைம். சுத்தமா பேசித் தீத்து கொஞ்சம் சொத்தைப் பிரிச்சுக் கொடுத்து விடுதலைப் பத்திரம் எழுதி வாங்கிட்டேன்.”
சிவா கேட்டுக் கொண்டிருந்தான்.

“யுவர் லெட்டர் வாஸ் அன் இன்ஸ்பிரேஷன்… இதோ எழுதியிருக்கே பாரு…” சட்டைப் பையில் கையை விட்டு சிவா எழுதிய கவரை எடுத்தான்.
நான்காக மடித்து வைக்கப்பட்டிருந்த எட்டுப் பக்கங்களைப் புரட்டிப் புரட்டித் தள்ளிவிட்டு ஒரு பாராவை ஓரிரண்டு முறை படித்தான். பின்பு அதை மடித்து அவனிடம் நீட்டினான் தாமு.

சிவா தான் எழுதிய அந்தக் கடிதத்தை வாங்கித் தானே மௌனமாக வாசித்தான்.

“பெண்ணை விற்கிற, எந்த உருவத்திலாவது விற்கிற சமூகம் நசித்துவிடும். அங்கே வீரியம் இருக்காது. ஆண்மை இருக்காது. புண்ணியகோடி விற்கத் தயாராயிட்டார். ஒரு வேளை மனைவி ஓடிப்போனது அவர் மனசிலே பெண்களைப் பற்றிய மதிப்பையே அழித்திருக்கலாம். நான்கு குழந்தைகளுக்குத் தாயான ஒருத்தியை – தன் மனைவியை உண்மையாக நேசித்திருந்தால் அவள் ஓடிப் போயிருக்க மாட்டாள். பெண்ணைப் போகப் பொருளாக நினைத்தால் அவளும் அந்த அளவுதான் நம்மை மதிப்பாள். அப்போது அவர் விதைத்த வினையின் அறுவடை இப்போது நடைபெறுகிறது…”
அவன் படித்துவிட்டுத் திருப்பிக் கொடுத்தான்.

“இட் ஷûக் மி. என்னை அது கம்ப்ளீட்டா அசைச்சிடுச்சு.”
தாமு சிகரெட்டை உறிஞ்சி மீண்டும் புகையை ஊதினான்.

“போகட்டும் அதை அப்பறமா பேசுவோம். நீ டிரஸ் பண்ணிட்டு கௌம்பு. புண்ணியகோடியைப் போய்ப் பார்ப்போம்.”
ஆஸ்பத்திரியில் புண்ணியகோடி மட்டும் இருந்தார். அவர் பார்வை சுழலுகின்ற மின்விசிறியை வெறித்துக் கொண்டிருந்தது.
சிவாவையும் தாமுவையும் பார்த்ததும் எழுந்து உட்கார முயன்றார்.

“நீங்க படுத்துக்குங்க” என்று தடுத்தான் தாமு. ஆனாலும், அவர் எழுந்து காலை பிடித்தவாறே உட்கார்ந்தார்.

“ரொம்ப ஸாரி மிஸ்டர் புண்ணியகோடி என்னென்னவோ நடந்துட்டிருக்கு. எதுவும் இன்டென்ஷனோட நடக்கலே. ஒங்களுக்கு சிவாவைத் தெரியும். ஹி ஈஸ் எ பர்ஃபெக்ட் ஜென்டில் மன். ஒங்க குடும்ப விஷயத்திலே தலையிடணும்னு அவன் விரும்பலே. திஷ்யாவேதான் ஆள் விட்டு அவனைக் கூப்பிட்டிருக்கு…”
புண்ணியகோடி தலை நிமிர்ந்து தாமுவைப் பார்க்கவில்லை.

“ஒங்க ப்ராப்ளம் என்னன்னு எங்களுக்குப் புரியறது…”
புண்ணியகோடி திடீரென்று குலுங்கினார்.
“நான் ஒரு முட்டாள் மிஸ்டர் தாமு.”
கட்டிலின் மீது போட்டிருந்த துண்டை எடுத்து அவர் அதில் வாய் புதைத்துக் கொண்டார். தாமு திரும்பி சிவாவைப் பார்த்தான்.

அவர் உணர்ச்சிகள் வடிய அவர்கள் நேரம் வழங்கி நின்றனர். அவர் ஒரு நிமிஷம் கழித்து முகம் துடைத்துக் கொண்டார்.

“கொழந்தை இப்பதான் வந்து சினிமாவிலே நடிக்க வக்கிறியோ… எங்க போகச் சொல்றியோ… என்ன பண்ணச் சொல்றியோ பண்றேம்பான்னு கண்ணு வழிய சொல்லிட்டுப் போறா… மிஸ்டர் தாமு… நானும் மனுஷன்தான். தோத்தவன். நஷ்ட்ப்பட்டவன். இருந்தாலும் நானும் மனுஷன்தான். ஐ ஆம் ஆஸ்ஸோ எமேன்! எ ஃபாதர்.”
தாமு ஸ்டூலை இழுத்துப் போட்டு அவர் அருகில் உட்கார்ந்தான். அவர் தோள் பட்டையை மெதுவாகத் தொட்டான்.

“தாமு சார்… யூ ஆர்… யூஆ…” அவருக்குத் தொண்டை அடைத்தது.
மீண்டும் துண்டை முகத்தில் ஒற்றிக் கொண்டார்.

“நீங்க பெரிய மனுஷன். நீங்களே இருந்து இவங்க கல்யாணத்தை நடத்தி வைங்கோ. நான் ஒண்ணும் பெரிசா செய்ய முடியாது. பெரிய குடும்பம்…”
“டோன்ட் ஒரி… டோன்ட் ஒரி” என்று தாமு அவர் தோளைத் தட்டிக் கொடுத்தான்.

ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வரும்போது தாமுவின் கண்கள் கலங்கியிருந்தன. இதை சிவாவுக்குக் காட்டாமல் மறைத்துக் கொண்டே தாமு சொன்னான்.

“சிவா, நாம ரெண்டு பேரும் ஊருக்குப் போகணும். ஐ வான்ட் டு மீட் பிரீதா. அவளை மதனபள்ளிக்குக் கூட்டிப் போகப் போறேன்…”
“சரி.”
“நீ அப்படியே திருப்பத்தூர் போய் அம்மாவைக் கூட்டி வந்துடு! நாளை மறுநாள் முகூர்த்த தேதியை நிச்சயம் பண்ணிடலாம்” என்றான் தாமு.

தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *