Blog

  • இரும்பு பட்டாம் பூச்சி

    கவிஜி.

    இரவு … மணி 2.
    ஊசி குத்துவது போல உடலுக்குள் புகுந்து வெளிவந்து கொண்டிருந்தது குளிர். எங்கும் இருட்டு. ஷிப்ட் முடிந்து சாப்பாட்டு பேக்கும், சின்ன டார்ச்சுமாக வீடு நோக்கி நடக்க துவங்கியிருந்தான் செல்வராஜ். உடன் வந்த சிலர் அவரவர் பாதையில் பயணிக்க, செல்வராஜ் வீடு இருக்கும் பகுதிக்கு அவன் மட்டுமே செல்லும் தனிக்காட்டு ராஜாவின் பயணம் அது. அந்த ஏரியாவில் இருந்து அவன் மட்டும்தான் நைட் ஷிப்ட் வேளைக்கு வருகிறான். நண்பர்கள் உடன் வந்த வரை குளிர் வெறுங்குளிராக இருந்தது. அவரவர் கலைந்து தனியாக நடக்க ஆரம்பிக்கையில், குளிர் வெவ்வேறு ஞாபகங்களை நடுங்கிக்கொண்டே ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தது.

    “செல்வராசு, உங்க தாத்தா ஒரு முறை இதே மாரிதான், நைட் வேல முடிஞ்சு ஒத்தையா வந்தாக. அப்போ, அத்தனை அழகா ஒரு பொண்ணு, மல்லிகை பூவும், செண்டு வாசனையுமா ஜல்லு ஜல்லுனு, நடந்து போயிருக்கா. இவுகளுக்கு ஒரே டவுட்டு. யார்டா, நமக்கு தெரியாம இவ்ளோ அழகா நம்மூர்ல ஒருத்தின்னு, அவள நெருங்க, வேக வேகமா நடந்துருக்காக”

    “……!”

    “அவளும், தொணைக்கு ஒரு ஆள் இருந்தா நல்லதுதானன்னு நெனைச்சாளோ என்னவோ, நடந்தவ கம்முனு நின்னுருக்கா. கிட்ட போன இவுக, ஏய் , ஏய் பொண்ணு, யாரு இந்த நேரத்துல அப்டீன்னு சொல்லிட்டே அவள தாண்டி முன்னால போய் நின்னுருக்காக. அவ்ளோதான், மனுஷன் நடுங்கி, பேச்சு வராம, தலை தெறிக்க ஓடி வந்து பத்து நாள் ஆஸ்பத்திரில கிடந்து செத்து பொழைச்சாக”

    “ஏனாம் ?”

    “அந்த அழகிக்கு பின்னாலதான் பொம்பள ஒடம்பு முன்னால வெறும் ஓட்டை”

    நினைவுகளை என்ன செய்தும் அடக்க முடியவில்லை. அவைகள் தன் பேய் கைகளையும், கால்களையும், நாக்கையும் நீட்டி ஞாபகங்களை கிளறியபடியே இருக்க, செல்வராஜுக்கு கால்கள் நடுங்கத் தொடங்கின. காற்றும் குளிரும் புதுக்கதைகள் சொல்லிக்கொண்டிருந்தன. ஒற்றையடிப்பாதையில் ஒரே ஒரு வெளிச்சம் தூரத்தில் மினுங்கிக்கொண்டிருக்க திக் … திக்… இன்னும் அதிகமானது.

    “பிணம் சுற்றும் முக்கில் ஒற்றை தீபம் எரிகிறதென்றால், ஐயோ, கடவுளே. என்ன செய்வேன்”

    இன்று யாரோ ஒருவருக்குப் பேய் ஓட்டியிருக்கிறார்கள். அதனின் தொடர்ச்சிதான் இந்த ஒற்றை விளக்கு. நடை தாறுமாறாகப் போனது செல்வராஜுக்கு. நினைவுகளும் தான் … ஒரு முறை கறி வாங்கி வந்த மாமாவை வீடு வரை விரட்டி வந்து மிரட்டிய மோகினியின் கதையும் ஞாபகக் கிணற்றில் இருந்து பூதமாக கிளம்பியது. பேசாமல் பின்னால் திரும்பி பேக்டரிக்கே போய் விடலாமா என்று யோசித்தவன் சட்டெனத் திரும்பும் யோசனையைக் கைவிட்டான்.

    “செல்வராசு, எப்பவுமே நைட் நேரத்துல தனியா நடக்கறப்போ சட்டுன்னு திரும்பி பார்த்திரக்கூடாது, கொள்ளிவாய்ப் பிசாசு பின்னால வந்தாலும் வரும். ஏன்னா இந்த பூலோகம் மனுசங்களுக்கு மட்டும் படைக்கப்படல, அமானுஷ்ய சக்திகளுக்கும், பில்லி சூனியத்திற்கும், மொட்ட மோகினிகளுக்கும், சங்கிலி முனிகளுக்கும், ரத்தக்காட்டேரிகளுக்கும் சேர்த்தே படைக்கப்பட்டது தான்” பாட்டியின் குரல் பாடாய் படுத்தியது.

    ஆனால் அவளே ஒரு தப்பிக்கும் யோசனையும் சொல்லியிருந்தாள் “ஒருவேளை பேயிடம், அது எந்த பேயாக இருந்தாலும், மாட்டிக்கொண்டால் கால் பெரு விரல் கொண்டு, நின்றபடியே உன்னை சுற்றி ஒரு வட்டம் வரை. வட்டம் தாண்டிய பேய்களை ரத்தம் கக்க செய்யும் சக்தி அந்த வட்டத்திற்கு உண்டு. அது சூரியனை பிரதிபலிக்கும் மந்திரம்”… கொஞ்சம் தைரியம் வந்தது.

    கடைசி ஆயுதம் கொண்டு எப்படியும் உயிரைக் காப்பாற்றி விடலாம் என்ற நம்பிக்கை துளிர் விடும் போது, பிணம் சுற்றும் முக்கை தாண்டும் மணித்துளி. உறைந்து விடத் துடிக்கும் காலமும் உடலும், கரைந்து காணாமல் போகத் துடிக்கும் உயிரும் உலகமும், பார்க்காமல் இருக்க முடியவில்லை. கடைக்கண்ணில் தொடங்கி நன்றாகவே பார்த்து விட்டான். ஆம், கண்டிப்பாக சற்று முன் நடந்த மந்திர தந்திர வேலைக்கான அத்தனை சாட்சியும், கொத்து முடியோடு, எலுமிச்சை மாலையோடு, ஒற்றை விளக்கு பல் காட்டி சிரித்தது. இதய துடிப்பை துல்லியமாக கேட்க முடிந்தது. நெஞ்சை ஒரு கையால் பிடித்தபடியே வேக வேகமாய் நடந்தான்.

    பின்னால் வரும் ஒருவரை அல்லது ஒன்றை அவனால் உணர முடிந்தது அல்லது உணருவது போல ஒரு நம்பிக்கை அல்லது அவ நம்பிக்கை. திரும்பி பார்க்கக் கூடாது. நடையை கூட்டினான். முன்னால் ஒரு பனிமூட்டம் விலகி கொண்டே இருப்பது போன்ற உணர்வு. பாட்டியின் கதைகளில் ஒன்றாக இருக்கட்டும் என்றே வேண்டிக்கொண்டான். பன்றிகளின் சத்தமும், சேவல்களின் கத்தலும் பனி விழும் இரவை பறையடித்து எழுப்பிக்கொண்டிருந்தது.

    தட்டினான். தட்டினான், தட்டி…..

    “அதான் வரேன்ல, என்ன அவசரம்?” என்றாள் அம்மா கதவைத் திறந்தபடியே.

    “உனக்கென்ன தெரியும், சாமத்துல தனியா நடந்து பாரு ” என்றபடியே “அப்பாடா” என்ற பெருமூச்சுடன் உள்ளே புகுந்தவன் கதவை வேகமாய் அடைத்தான். அதற்குள் அம்மா அவளின் அறைக்குள் புகுந்திருக்க. கடவுளுக்கு நன்றி சொல்லிக் கைகூப்பி கும்பிட முனைகையில் யாரோ கதவைத் தட்டினார்கள். சட்டென கதவு நோக்கித் திரும்பியவன் கதவின் தட்டப்படும் அதிர்வையும் அதிர்வுக்கு தகுந்தாற்போல முன் பின் தன்னை தளர்த்தும் தாழ்ப்பாளையும் வெறித்துப் பார்த்தபடியே …

    திக், திக், பக், பக், லப் டப்,லப் டப், லபக் லபக்….எச்சில் விழுங்கிக் கொண்டே வராத வார்த்தைகளை இடுக்கி போட்டு இழுத்து,” யா…ரு… யாருங்க ” என்றான் மெதுவாக. கதவு தொடர்ந்து தட்டப் பட்டுக் கொண்டே இருக்க, ஒரு தைரியத்தை வரவழைத்துக் கொண்டவன், எல்லா சாமிகளையும் வேண்டிக் கொண்டு தாழ்ப்பாளைத் தொட முனைந்தான்.

    கரகரப்பான குரலில், “செல்வராசு, இன்னைக்கு தப்பிச்சிட்ட. மாட்டுவ ம்ம்ம்ம்ம்… ம்ம்ம்ம்ம்… ம்ம்ம்ம்ம்… ம்ம்ம்ம்ம்… ம்ம்ம்ம்ம்… ம்ம்ம்ம்ம்… ம்ம்ம்ம்ம்…” என்று ஒரு குரல் அணத்து அணத்தி விட்டு அடங்கியது கதவுக்கு பின்னால். அடுத்த நொடி. செல்வராஜ் அம்மா அறையில் கிடந்தான். பேச்சு மூச்சு இல்லை. நடுக்கம்… நடுக்கம்… நடுக்கம்… நடுக்கம்… நிலை குத்திய பார்வையில் பேய்கள் நிறைந்து கிடந்தன. பாட்டி சொன்ன கதைகளுக்கான அன்றைய கிளைமாக்ஸ்தான் பின்னால வந்ததா.

    “ஏன்னா, கதவு தட்டப்பட்டதும், வசனம் பேசியதும் உங்களுக்கு மட்டும்தான் கேட்டிருக்கு. அதே வீட்ல இருந்த உங்க அம்மாக்கு கேக்கல. அப்போதான் கதவ திறந்த உங்க அம்மா அதுக்குள்ள தூங்கியிருக்க முடியாது”

    “ஆக, உள்ளுக்குள்ள இருந்த பேய் பயம் கை கால் முளைச்சு, சரியான நேரம் பார்த்து தன்னை வெளிப்படுத்தியிருக்கு. எதுக்குமே ஒரு முடிவு வேணும் இல்லையா. அந்த முடிவுதான் கதவுக்குப் பின்னால பேய் பேசினதா நீங்களே கற்பனை பண்ணிகிட்ட அந்த கிளைமாக்ஸ் சீன். பூமி தோன்றின காலத்துல இருந்து எத்தன பேர் தற்கொலை பண்ணியும், கொலை செய்யப்பட்டும், விபத்துகளாலும் செத்து போயிருக்காங்க. உங்க கருத்துப்படி, அவுங்க அத்தன பேரும் பேயா சுத்தறாங்கனு எடுத்துக்க முடியுயமா? மனித உடல் என்பது ஒரு இயந்திரம். இதயமே அதனின் பிரதான இயங்கு சக்தி. அதன் இயக்கம் நிற்கும் போது அந்த இயந்திரம் நின்று விடுகிறது. அணுக்கள் அதற்கு மேல் தன்னை தற்காத்துக் கொள்ள இயலாமல் மெல்ல மெல்ல அழியத் துவங்குகிறது. அதுவரை இருந்த ஞாபங்கங்கள் மறையத் துவங்குகையில் அதை மரணம் என்கிறோம். மாண்டவரை புதைக்கவோ, எரிக்கவோ செய்து விடுகிறோம். ஒரு பிரிந்த உயிர் வேறு ஒருவரை பிடிக்கும் என்றால், ஏன் அது தன்னுடைய உடலையே மீண்டும் பிடிப்பதில்லை?”

    மனோதத்துவம், தத்துவங்களில் கொஞ்சம் கொஞ்சமாக செல்வராஜுக்கு தன்னம்பிக்கை முளைக்க ஆரம்பித்திருந்தது. உடல் நலமும், மன நலமும் தேறிக் கொண்டு வந்தது. பேயே முன்னால் வந்தாலும் உட்கார்ந்து நலம் விசாரிக்கும் அளவுக்கு மனம் திடமாகி இருந்தது. இன்னும் சொல்லப் போனால் பேய்களின் உலகம் பற்றிய ஆர்வம் மேலோங்கி இருந்தது. அது நிஜமா, கற்பனையா என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டு இருப்பதை ஆக்கப்பூர்வமாக எடுத்து கொண்டான்.

    ஒரு வாரத்திற்குப் பின் … ஒரு விடுமுறை நாள்.

    ஆற்றில் தூண்டிலிட்டு அமர்ந்திருந்தான், தனிமையில் தவம் செய்வது போல கானல் நீரால் காட்சிப் பிழைகளை சுமந்து கொண்டிருந்த கண்களை ஒரு முறை கசக்கிக் கொண்டான். தூண்டிலில் சட்டென கூடிய கனத்தை உணர்ந்தபடியே, தண்ணீருக்குள் உற்று பார்த்தான். கண்கள் மூடிய நிலையில் ஒரு பெண்ணின் முகம். தாமரைப்பூவாய் மலர்ந்து மிதந்தது. இன்னும் ஆழமாகப் பார்த்தான். அவனுள் பயம் துளியேனும் இல்லை. யாரிவள், வெறும் முகத்தோடு மிதக்கிறாள் என்றபடியே அவளை வெளியே இழுக்கும் முயற்சியில் நீரில் கை வைக்க, சட்டென கண்கள் திறந்து மெல்ல மூழ்கி போனாள்.

    ஒருவேளை தேவதை என்பவள் இப்படித்தான் இருப்பாளோ. அல்லது மோகினியா. அப்பப்பா எத்தனை அழகு. பேய் அழகு என்பது இது தானா. கற்கண்டு கண்கள், ஒற்றை மூக்குத்தியில் உயிரை இழுக்கும் உத்சவம், நெல்லிக்கனி அடக்கிய கன்னங்களில், கள் எடுக்கும் தண்ணீர். மிதக்கும் இலை ஒன்று தடவி தந்த முத்தத்தில் பூத்திட்ட இதழ்களா? நெளிந்த அலையில் நிலவென்று எண்ணத் துடிக்கும் நெற்றியில் கற்றை முடி ஒதுக்கிய அலையை என்ன சொல்ல. பேயாய் இருந்தாலும் அவளை அறியாமல் விட முடியாது.

    மறுநாளும் காத்திருந்தான் …

    முகமோடு உடலும் நனைத்திருந்தது. இரு மலை கட்டிக்கொண்டு மிதந்தாளோ, கொடி என்று வளைத்து பிடித்து கரையில் இழுத்து போட வாய்ப்புள்ள இடை கொண்டவள். தொடை வரை மேல் ஏறிய புடவையில் சூரியனின் வெளிச்சமென வண்ணம் என அறிந்த கண்ணில் காதல் கசிய, காமம் நிறைந்தது.

    யாரிவள்? கண்ணதாசனின் கோப்பைகளில் நிறைந்தவளா. பல்லவன் சிற்பத்தை கடத்தி செல்கையில் தடுமாறி தண்ணீரில் விழுந்திட்ட பொற்சிலையா? தூண்டில் போட்டவனே அகப்பட்டுக்கொண்ட கவித்துவம் ஆம் துடிக்கத்தான் செய்கிறான். தூண்டிலிட்டவன்.

    “பெயர் என்ன?”

    சிரித்தபடியே மூழ்கி போனாள்

    விடிய காத்திருந்தான் செல்வராஜ். விடிந்ததும் காத்திருந்தாள் கனகா.

    சுற்றும் முற்றும் பார்த்தான் அனல்காற்று நீர்ப்பரப்பின் மேலெங்கும் மினுமினுத்தது. கண்ணுக்கெட்டும் தூரம் வரை ஆறும், ஆறு சார்ந்த காலமும். சூடான காற்றும், சுவையான காட்சியும். நெருங்கினான். நெருங்கினான் …

    ஆம், முகம் காட்டியவள் இன்று முழுதும் காட்டிக் கொண்டு, அவன் அமரும் இடத்தில் அமர்ந்தவண்ணம் காத்துக்கொண்டிருந்தாள். உற்று நோக்கின் அது ஒரு ஓவியமெனவே தோன்றும். ஓவியத்திற்குள் சில நேரம் நுழைந்து விடும் ஓவியனைப் போல, அவன் அவளருகே அமர்ந்தான். முழுமையான ஓவியம். காண ஆளில்லாமல் கரையோடு காற்றில் நிறைந்து கிடந்தது.

    அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள் தூண்டிலுக்கு வேலை இல்லை. மீன்கள் வாழ்த்திச் சென்றன. முகமும் முகமும் பார்த்துக் கொண்டேயிருக்க, அங்கே யுகங்கள் கடக்கத் தயாராயின. ஒரு காதலும் காதலால் நிரம்பிய காமமும். மிதந்து கொண்டிருந்த தூண்டிலை மெல்ல தடவிப் பார்த்த மீன் ஒன்று விசும்பியபடியே சில நினைவுகளை அசை போடத் துவங்கியது.

    மார்பில்லாதவள் என்ற கேலியும் கிண்டலும், தாழ்வு மனப்பான்மையின் உச்சிக்கு இழுத்துக் கொண்டு போய் தற்கொலையில் விழச்செய்த கதையை ஊர் அறியும். கனகா பிணமான விதமும் மூன்று நாள் கழித்து மிதந்த கணமும் நான் அறிவேன். அழகுக்கும் அன்புக்கும் ஏங்கிய கனகாவின் கனவை யாரறிவார்? மீன் நீந்தியபடியே நினைத்துக் கொண்டு மறைந்தது. இக் கதையை நன்கு அறிந்த நான் ஒன்று சொல்கிறேன்.

    மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த செல்வராஜ் அன்றே அவனின் மாமா வீட்டிற்கு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.

    Share
  • மனிதம் எங்கே ?

    -பா.ராஜசேகர்

    தாயின் நோயும்
    தங்கையின் பசியும்
    என் கண்முன்
    அவலம் அள்ளுவது வலித்தன்று…

    மனிதம் மரத்துப்போனவனே!
    உன் கழிவை நீக்க
    குடித்த மதுவால்
    தந்தை உயிரைக் குடித்ததும்
    எங்கள் வாழ்வைக் கெடுத்ததும்
    உனக்கெங்கே தெரியும்…?

    மனிதம் மரத்துப்போனவனே!
    நீ அழுக்கைக் களையக்
    குளிக்கிறாய்
    எங்கள் அடுப்பெரிய
    அழுக்கிலே குளிக்கிறோம்!

    மனிதம் மரத்துப்போனவனே!
    உன் கழிவுகளில்
    செல்கள் செத்து
    மனமும் பித்துப்பிடித்து
    நாடிநரம்புகள் தொலைந்தும்
    தீண்டாமை மருந்துதெளிக்கிறாய்

    மனிதம் மரத்துப்போனவனே!

    Share
  • காதல் நாற்பது – 42

    என் எதிர்காலத்தை எழுது

     மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    சென்ற காலத்தைப் பிரதி எடுக்காது
    என்
    எதிர்காலம்,”
    என்றோர்
    சமயம் எழுதினேன் !
    என்னருகில்
    அமர்ந்து                                          browning.
    வழிநடத்தும்
    வாழ்க்கைத்
    தேவதை
    முகக்கனிவுடன்
    நோக்கி அந்தத்
    தகவலை
    நியாயப்
    படுத்தும்
    இறைவன்
    வெண்பீடத்து முன் !
    முடிவில்
    திரும்பிப்
    பார்த்தால்
    இருந்தது
    நீ
    தேவதைக்குப்
    பின்
    ஆத்மப்
    பிணைப்போடு !

    இயல்பான நோய்களிடையே
    நீண்ட
    காலம் நான்
    முயலும்
    போது
    நின்
    ஆறுதல் கிடைத்தது
    விரைவாக
    !
    உன்
    பார்வை நிழலில்
    மொட்டாக
    இருந்த போதென்
    பயணத்
    துணைவர்
    பச்சை
    இலைகளைத் தந்தார்,
    காலைப்
    பனி முத்துக்கள்
    மிதந்திட
    !

    முதற்பாதி வாழ்க்கைப் பிரதி
    எதற்கினி
    இப்போது ?
    ஒதுக்கிடுவாய்
    வளைந்து
    எனை வதைக்கும்
    நெடிய
    பக்கங்களை !
    எதிர்கால
    என் சரிதையைப்
    புதிதாக
    எழுது,
    புவியிலே
    எதிர்பார்க்க
    முடியாத என்
    புதிய
    தேவதையே !

    ************

    Poem -42

    Sonnets from the Portuguese

    By: Elizabeth Browning

    “My future will not copy fair my past”–
    I wrote that once; and thinking at my side
    My ministering life-angel justified
    The word by his appealing look upcast
    To the white throne of God, I turned at last,
    And there, instead, saw thee, not unallied
    To angels in thy soul! Then I, long tried
    By natural ills, received the comfort fast,
    While budding, at thy sight, my pilgrim’s staff
    Gave out green leaves with morning dews impearled.
    I seek no copy now of life’s first half:
    Leave here the pages with long musing curled,
    And write me new my future’s epigraph,
    New angel mine, unhoped for in the world !

     

    Share
  • உன்னையறிந்தால் …… 11

    நிர்மலா ராகவன்

    காதுகொடுத்துக் கேளுங்கள்

    உனையறிந்தால்1-1

     

    கேள்வி: : இடைநிலைப் பள்ளியில் பயிலும் சிலரை வீட்டிலோ, பள்ளியிலோ அடக்கவே முடிவதில்லை, ஏன்?

    விளக்கம்: வீட்டில் புரிந்துணர்வு இல்லாது, தண்டனை மட்டுமிருந்தால், எழும் ஆத்திரத்தை ஆசிரியர்களிடம் காட்டுவார்கள். அல்லது, சுந்திரம்’ என்ற பெயரில், சிறுவர்கள் என்ன செய்தாலும் பொறுத்துப்போவது.

    பொதுவாக மத்திம வர்க்கத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு அவர்கள் வீட்டிலேயே மரியாதை, ஒழுக்கம் என்று தகுந்த குணங்களைப் பழக்கி இருப்பார்கள். பெற்றோரிடம் அன்பு செலுத்தும் பிள்ளைகளுக்கு ஆசிரியர்களிடமும் அதேபோல் அன்பைச் செலுத்த முடியும்.அதனால் அவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது எளிது. ஆசிரியர்களுக்கும் அவர்களைப் பிடித்துப்போகும்.

    மாணவர்களும், ஆசிரியர்களும் வெவ்வேறு சமூக நிலைகளிலிருந்து வந்தவர்களாக இருந்தால், பிரச்னைகள் முளைக்கும். பல்லின நாடாக இருந்தால், பிறரின் கலாசாரம் புரியாது போகலாம். தன் கோணத்திலேயே ஒரு ஆசிரியர் அவர்களைக் கணித்தால், அவர்களது போக்கு எப்படிப் புரியும்? எரிச்சலும், ஆத்திரமும்தான் எழும்.

    கதை 1:

    நான் வேலை பார்த்த பள்ளியில் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவான இந்திய (தமிழ்) மாணவர்களே இருந்தார்கள். `கவுன்செலிங்’ என்ற பெயரில் அவர்களுக்கு ஆலோசனை அளிக்கும் வேலை ஒரு மலாய் ஆசிரியரிடம் கொடுக்கப்பட்டிருந்தது.

    வயதில் மூத்தவர்கள் ஏதாவது கேட்டால், அவர்கள் முகத்தைப் பார்த்துப் பேச வேண்டும் என்று தமிழ் மாணவர்களுக்குப் போதிக்கப்பட்டிருந்தது. இது புரியாது, எதற்காவது தான் திட்டும்போது அவர்கள் தன்னையே பார்த்தால், `என்ன முறைக்கிறே?’ என்று அவர்களை மூன்று நாட்கள் பள்ளியிலிருந்து இடைநிறுத்தம் (சஸ்பெண்ட்) செய்துவிடுவார்.
    தமிழர்கள்தாம் மிக அதிகமாக தண்டிக்கப்படுகிறார்கள் என்றறிந்து, நான் அவடம் நியாயம் கேட்டேன்.

    `எனக்கு அவர்களைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை, CIKGU (செகூ. மலாய் மொழியில் ஆசிரியை). இனி நீங்களே அவர்களுக்குப் புத்தி சொல்லுங்கள்!’ என்று பொறுப்பைத் தட்டிக்கழித்தார்.

    அடுத்த நாளே நான்கு பேர் என்னிடம் அனுப்பப்பட்டனர்.

    `கவுன்செலிங்கா?’ என்று ஒருவரையொருவர் கேட்டுக்கொண்டார்கள், தயக்கத்துடன். மணிக்கணக்காக குற்றம் சாட்டி, புத்தி சொன்னால் யாரால்தான் தாங்க முடியும்! அந்த பயம்தான் அவர்களுக்கு!

    கவுன்செலிங்குக்கு வரும் எந்த மாணவரும் தானே விரும்பி வருவதில்லை. பள்ளி விதிமுறைகளைப் பின்பற்றத் தவறிய `குற்றம்’ செய்துவிட்டால், கவுன்செலிங் ஆசிரியரிடம் அனுப்புவார்கள்.

    அவரோ, அவர்களது இனம், மதம், கலாசாரம் என்று எல்லாவற்றையும் அலசி, அவர்களைச் சிறுமைப்படுத்துவார். எந்த மதம், எந்த இனம் என்றெல்லாம் கணக்கில்லை. எல்லாவற்றிற்கும் இவைகளிலிருந்து மேற்கோள் காட்டுவார்.

    அதிகாரம் செலுத்துவதே இன்பமானதாக, சுயபலத்தைக் கூட்டுவதாக இருக்க, `ஆலோசனை’ என்ற பெயரில் தான் சொல்வதால் மாணவர்கள் பயனடைவார்களா என்றெல்லாம் சிந்திப்பது கிடையாது.

    `அவர்களை அழ வைக்கவேண்டும். அதன்பின், நமக்குத்தான் வெற்றி!’ என்று உதவித் தலைமை ஆசிரியை என்னிடம் சொல்ல, அதிர்ந்து போனேன். (இரு காதணிகள் அணிந்து இருந்ததால், ஒரு பெண்ணைப் பலர் சூழ்ந்துகொண்டு, `இது நமது மதத்திற்கு விரோதம்!’ என்று ஒரு மணிக்குமேல் திரும்பத் திரும்பக் கூற, தாக்குப்பிடிக்க முடியாது கதறினாள்).
    என்னிடம் வந்த மாணவர்கள் தயங்கியதில் என்ன ஆச்சரியம்!

    ஒரு காலி அறையில் எங்கள் உரையாடல் நடந்தது. தமிழில் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். அவர்கள் முகங்கள் சற்றே தெளிந்தன. `நான் எதுவும் சொல்லப் போவதில்லை. நீங்கள் பேசுங்கள். நான் கேட்கிறேன்,’ என்றேன்.

    மெள்ள மெள்ள, அவர்கள் ஒவ்வொருவராகப் பேச ஆரம்பித்தார்கள். நடுவில் ஒருவன், `அக்கா,’ என்று அழைத்துவிட்டு, மன்னிப்புக் கேட்டான்! அவர்கள் பிரச்னையைக் கேட்டு நான் சிரிக்காத குறை! ஆனால், அவர்கள் வயதில் அது பெரிது.

    பள்ளி வாசலிலேயே இருந்த பஸ் நிறுத்தத்தில் ஒரு பையன் தன்னுடன் படிக்கும் பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்தானாம். அதைப் பார்த்த இன்னொருவன், `GIRL FRIEND-ஆ ?’ என்று கேலியாகக் கேட்க, இருவருக்குள்ளும் வாக்குவாதம் முற்றிவிட்டது: `ஒண்டிக்கு ஒண்டி சண்டை போடலாமா, இல்லே, கூட ஆள் சேர்த்துக்கிட்டு வர்றியா?’
    நாள் குறிக்கப்பட்டது.

    இவர்கள் கட்சியை பலப்படுத்த, வேறு பள்ளியில் பயிலும் மாணவர்களும் கைச்சண்டையில் சேர்ந்துகொண்டனர்.
    நான் தலையில் கைவைத்துக்கொண்டேன். `உங்களுக்கெல்லாம் என்னப்பா, தமிழ்ப்பட ஹீரோன்னு நினைப்பா?’
    பெருமையுடன் புன்னகைத்தார்கள்.

    `ஹீரோ சண்டை போட்டா, எட்டு இலக்கத்தில பணம் சம்பாதிக்க முடியும். நீங்க அவங்களைமாதிரி நடந்தா, மாட்டிப்பீங்க!’
    அதன்பின், பொதுப்படையாகப் பேசினேன் — கல்வியின் முக்கியத்துவம், சமூக, பொருளாதார நிலையைக் கல்வியால் எப்படி உயர்த்த முடியும் என்று. `ஒங்க இளமையை ஏன் இப்படி வீணாக்கிறீங்க!’ என்று நான் அயர்ந்தபோது, என் முகத்திலிருந்த சோகம் அவர்களிடமும் பிரதிபலித்தது.

    அதன்பின், பிற ஆசிரியர்கள் அவர்களிடம் கடுமையாக நடந்துகொள்வதைப்பற்றி, வகுப்பில் எது காணாமல் போனாலும், அவர்கள் புத்தகப்பைகளைச் சோதனை போடுவது என்று பல தகவல்களை நான் கேளாமலே என்னுடன் பகிர்ந்து கொண்டார்கள்.

    அவர்களது பெற்றோர் பள்ளியில் தம் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள், படிப்பின் முக்கியத்துவம் எதுபற்றியும் கலந்து பேசுவதில்லை என்றும் கேட்டறிந்தேன்.

    விடைபெற்றபோது, அவர்கள் முகத்தில் நிம்மதி கலந்த சிரிப்பு. நான் திட்டவில்லை, உபதேசம் செய்யவுமில்லை. அவர்களைப் பாதித்த விஷயங்களைக் காதுகொடுத்துக் கேட்டேன். அவ்வளவுதான்.

    அதன்பின், அவர்களின் நடத்தையில் நல்ல மாறுதல் தெரிந்தது. நான் எங்காவது போய்க்கொண்டிருந்தால், ஓடி வந்து வணக்கம் தெரிவிப்பார்கள். சில சமயம் நான் முதலில் வணக்கம் தெரிவித்து, அவர்களுடைய ஆச்சரியத்துக்கு அடிகோலி இருக்கிறேன்.

    `நல்லாப் படிக்கிறீங்களா? பள்ளி இறுதியாண்டு பரீட்சையில என்ன வாங்குவீங்க?’ என்று நான் சிரிப்புடன் கேட்டபோது, ஒரு மாணவன் செல்லமாக முறைத்தான்.` ஃபர்ஸ்ட் கிளாஸ்தான்!’
    கதை 2 : இன்னொரு பள்ளி, மாணவ மாணவிகள் தாமே ஓர் ஆசிரியரைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடம் தம் மனக்குறைகளை வெளியிடலாம் என்று அறிவித்தது.

    ஒரு மாணவி தன் தந்தை இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதால் குடும்பம் படும் கஷ்டங்களைக் கூறினாள். (முதலில் தாயின் அனுமதி பெற்றிருந்தாள் இந்த மலாய் மாணவி).

    எல்லா வகுப்புகளிலும் அடங்காத வேற்றின மாணவன் ஒருவன் தானே வலிய வந்து, அதே போன்ற கதையைச் சொன்னான். அதற்குள் எனக்கு அக்கலாசாரம் பழகிவிட்டிருந்தது.

    `அப்பா இன்னொரு பொண்ணோட உறவு வெச்சுக்கிட்டிருந்தா, அது அம்மாவுக்கும், அப்பாவுக்கும் இடையே இருக்கிற பிரச்னை. நீ உருப்படற வழியைப் பாரு!’ என்றேன். `நாளைக்கே கல்யாணமானா, எப்படியோ குழந்தை பிறக்கும். (பதின்ம வயது மாணவர்களுக்கு மிகவும் பிடித்த வாக்கியம் இது!) மனைவியோட சினிமாவுக்குப் போக, டாக்டருக்குப் போக, எல்லாத்துக்கும் பணம் வேண்டாம்? படிச்சாதானே நிறைய காசு சம்பாதிக்கலாம்?’

    இந்த மாணவன் அடிக்கடி என்னுடன் வந்து பேசிவிட்டுப் போனான். என் பாடமாகிய பௌதிகத்தில் சிறப்பான தேர்ச்சி பெற முடியவில்லையே என்று வருந்தி அழுதான். (`விடு! நானே நல்ல விதமாக பாசாகி இருக்க மாட்டேன்!’ என நான் ஆறுதல் அளிக்க, அவனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது).

    அந்த ஆண்டின் இறுதியில், `என்னை மரியாதையுடன் நடத்திய ஒரே நபர் நீங்கள்தான்!’ என்ன்று சொல்லிவிட்டுப் போனான்.

    பல மாணவ மாணவிகள் தயங்காது என்னிடம் வந்ததற்குக் காரணம் நான் என்னை அவர்கள் நிலையில் பொருத்திப் பார்த்ததால்தான் (EMPATHY) என்று நினைக்கிறேன்.

    `அந்த இந்திய ஆசிரியைகிட்ட என்ன ஓயாம பேச்சு? எதுவாக இருந்தாலும், என்கிட்ட வந்து சொல்லேன்!’ என்று ஓர் ஆசிரியை அழைத்ததாகச் சொல்லி, `அவங்ககிட்ட யார் போவாங்க! ஏதாவது சொன்னா, பள்ளிக்கூடம் பூராவும் டமாரம் அடிச்சுடுவாங்க!’ என்று கசப்புடன் தெரிவித்தாள் இன்னொரு மலாய்ப் பெண். நான் வேற்றினமாக இருந்தது அவளைப் பாதிக்கவில்லை. தான் அந்தரங்கமாகச் சொல்வது ரகசியமாகவே வைக்கப்படும் என்ற நம்பிக்கை இருந்திருக்கிறது.

    நாம் ஒரு நாட்டுக்குப் போவதற்குமுன், அவர்களுடைய கலாசாரத்தைப்பற்றிக் கொஞ்சமாவது அறிந்திருக்க வேண்டும். இல்லையா? அதே போல், ஆசிரியர்கள் தம் பொறுப்பில் இருக்கும் மாணவர்களின் பின்னணிபற்றியும் தெரிந்திருக்க வேண்டுவது அவசியம்.

    ஆசிரியப் பயிற்சியின்போது சொல்லிக் கொடுப்பது பரீட்சை எழுத மட்டுமில்ல. அதை நடைமுறையிலும் கடைப்பிடித்தால்தான் ஆசிரியர், மாணவர் இரு சாராருக்குமே நிறைவு, நீண்டகால நன்மை.

    தொடருவோம்

    Share
  • நீ ஆன நான்…

    உருமாறிக் கிடத்தல்
     
    உயிர் தாவி கடத்தல்
     
    அற்றவன் பெறுகிறான்
     
    கற்றதன் பொருள்
     
    மற்றவையும் சொல்லலாம்
     
    மாற்றுதலுக்குரியது
     
    மௌனம்- செயல்- தூக்கம்- பசி…
     
     
    சொல்லற்ற சூட்சுமக்
     
    குறியீட்டு கொட்டகை
     
    கல் உடைத்த நெஞ்சம்
     
    பஞ்சின் வண்ணம்…
     
    மயில் தோகை
     
    மையல்
     
    தேடும் யோகம்- யாகம்
     
    காற்றுத் திசை
     
    கைவிரித்த பெருங்காடு
     
    புள்ளியாய் -அது
     
    மானாகவும் புலியாகவும்
     
    பூவாகி
     
    புழுவாகி, தொட்டால்
     
    சிணுங்கிய சுண்டு விரலாகி
     
    நடுங்கிய பனிக்குள்
     
    மூடு மந்திர
     
    யந்திர தந்திரத்தில்….
     
    வெண்ணிற வாடை
     
    வெற்றிட வேகம் கொண்டு
     
    தீ மூட்டும் வெறிக் கண்கள்
     
    கருவளையம் ஐம்பதுக்கு மேல்…
     
    கடைசி துணியும்
     
    திமிர் பிடிக்க
     
    தீயான, நீர் ஆனா நீ
     
    அது நான் ஆன, பின் நீ ஆன
     
    நான்…
     
     
     
    கவிஜி
    Share
  • கொடுமணம் – வரலாற்றுத் தடம்

    — கவிஜி.

     

    கொடுமணம் – வரலாற்றுத் தடம்

    Kodumanam - Kodumanal

     

    பயணங்கள் தரும் தியானம் உணருதலின் உள் சங்கமம் தீரவே முடியாத தாகத்தை நமக்குள் தெளித்துக் கொண்டே செல்லும். வெற்றிட மழை அது கவனத்தை ஒரு மனதாக சேர்க்கும் நுட்பம் எல்லா பயணங்களுக்கும் உண்டு என்றே நம்புகிறேன். முடிய முடிய நீளும், முடியாத நீட்சியின் தொடுவானத்தில் ஒரு முனை நம்மோடே வருவதில்தான் நூலிழை திருப்பங்கள் பயணம் எங்கும் கிறுக்கல்களை கவிதையாக்கும். காகித பூக்கள் எனது பயணமெங்கும் நான் பயணிக்க பயணிக்க பயணமாகவே மாறி விடுவதில் எனக்குள் இருக்கும் நான் செத்து போகிறான். நானுக்குள் இருக்கும் நான் பிழைத்துக் கொள்கிறான். தேடல்களில் இல்லாத எதுவும் சிந்தனையாய் இருக்க முடியாது என்பதாக எனது சிந்தனையும்; தேடலாகவே மாறி விடுவதில்தான் எனது பயணம், நான் நினைத்தது போல அல்லாமல் வேறொன்றாக இருக்கிறது.

    வேர் தேடி செல்லுதல் எவைக்கும் உண்டு. அவை கொண்ட சுவைக்கும் உண்டு. பார்க்க பார்க்க பார்த்துக் கொண்டே இருக்கும் நவீன வசனம் போல ஒரு துளி இப்பக்கம், மறு துளி அப்பக்கம் இடையினில் நீண்டதொரு வாசகமாய் நான் என்ற நான். எப்பக்கமும் என் பக்கமாய் அப்பக்கத்தில் நான் பக்கமாய், சிறகு முளைத்த வானம் போல வானமெங்கும் பறவையாகிய போதுதான் கண்கள் முழுக்க காடாய் விரிந்து கிடந்தது கொடுமணல் என்ற பகுதி.

    கொடுமணல் என்பது ஒரு தொல்லியல் களம். இது ஈரோடு மாவட்டத்தில் உள்ள வெள்ளகோயில் மற்றும் சென்னிமலைக்கு பக்கத்தில் இருக்கும் ஒரு சிற்றூர். ஈரோடு நகரில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டரில் இருக்கிறது. காவிரி ஆற்றில் கலக்கும் எங்கள் நொய்யல் ஆற்றின் கரையோரம் இருப்பதில் பெரு மகிழ்வு. ஆனால் நொய்யல் அங்கு இல்லை என்பது பேரதிர்ச்சி (கோவை தோழர்கள் கவனிக்க) ஒரத்தபாளையம் அணை அத்தனை அற்புதம். ஆனால் நீருக்கு பதில் முழுக்க கழிவு நீர் (இது வேறு கட்டுரை).

    சங்க இலக்கிய பதிற்றுப்பத்தில் இவ்விடம் கொடுமணம் என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சேர நாட்டின் தலைநகரான கரூரை மேற்கு கடற்கரையுடன் இணைக்கும் பண்டைய வணிகப் பாதையில் இவ்விடம் இருந்திருப்பது சமீப கால தொல்பொருள் அகழ்வாராய்ச்சியில் தெரியவந்துள்ளது. கிறிஸ்துவுக்கு முந்திய முதல் சில நூற்றாண்டுகளில் இப்பகுதி வணிகத்திலும், தொழிற் துறையிலும் சிறப்புற்று இருந்ததற்கான சான்றுகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. அவ்விடத்தில் கால் வைக்க வைக்க எனக்குள் ஏற்பட்ட அதிர்வுகளை என்னவென்று வர்ணிப்பது. அது ஒரு வகை அமானுஷ்யம். நம் மூதாதையர்களுடனான ஒரு வித தொடர்பை நான் பெற்று விட்டதாகவே எனது கற்பனை கண்கள் விரிந்தன. அங்கும் இங்கும் நடந்தேன் ஓடினேன். கிடைத்த மண்டை ஓடுகள், கற்கள், நடுகல்களுடன் என்னை இணைத்துக் கொண்டே இருந்தே.ன் அங்கிருந்த காலம் சற்று நின்று விட்டதாக ஒர் எண்ணம்.

    கொடுமணல் தொல்லியற் களம் 50 ஹெக்டர் வரை பரந்துள்ளது. இதில் பெரும்பகுதி புதைகுழிகள் அடங்கிய அடக்க களமாகக் காணப்படுகின்றன. இதனை சுற்றி சுமார் 15 ஹெக்டர் பரப்பளவில் குடியிருப்புப் பகுதி இருந்தமைக்கான தடயங்கள் காணப்படுகின்றன. அங்கிருந்த ஆடு மேய்ப்பவர்களும் செவி வழி செய்தியாக அதை உறுதி படுத்தினார்கள். இக்களம் 1961 ஆம் ஆண்டில் புலவர் இராசு, செல்வி முத்தையா ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பின்னர் பல தடவைகளில் தொல்லியல் துறையினரால் இங்கே ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இவ்வாய்வுகளில், பெருங்கற்காலப் பண்பாட்டுக்குரிய 300 க்கும் மேற்பட்ட இறந்தோருக்கான நினைவுச் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை பல வகைகளிலும், அளவுகளிலும் காணப்படுகின்றன. நான் கண்ட சில புதைகுழிகள், கீழிடையாக இரு அறைகள் கொண்டதாகவே இருந்தன. சில இடங்களில் நடுகல்கள் பாதி பனைமரம் அளவுக்கும், சற்று அதை விட குறைவான உயரத்துக்கும் இருந்தன. அது எப்படி இத்தனை காலம் அப்படியே நிற்கிறது என்ற பிரமிப்பில் நான் மிரண்டு, சுருண்டு மூளையை இன்னும் கொஞ்சம் இழுத்து இழுத்து யோசிக்க வேண்டியாதாகப் போனது.

    கொடுமணலில் நடந்த அகழ்வாய்வின்போது கண்டுபிடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பாசி மணிகளும், கருமாணிக்கம், நீல மணி, செவ்வந்திக்கல், மரகதம், வைடூரியம், நீலம், பச்சை, மங்கிய சிவப்புக்கல், கந்தகக் கன்மகி போன்ற நகைக் கற்களும் அங்கு அலங்காரப் பொருள் தொழிலகம் இருந்தமைக்குச் சான்று பகர்கின்றன. சேர நாட்டைச் சார்ந்த இந்த தொழில் நகரம் சோழ நாட்டுக் காவிரிப்பூம்பட்டினத்தோடு வியாபாரச் சாலைத் தொடர்புகொண்டிருந்தது என்பது தேட தேட கிடைத்துக் கொண்டே இருக்கும் உண்மை என்பதற்கு இதை விட சான்று வேறு என்ன இருக்க முடியும். இத்தனை பக்கத்தில் இப்படி ஒரு வரலாற்று சிறப்பு மிக்க இடம் இருப்பதில் ஒரு கணம் ஸ்தம்பிக்காமல் இருக்க முடியவில்லை.

    இதோடு மட்டுமல்லாமல் கொடுமணலில் நிகழ்ந்த அகழ்வாய்வுகளின்போது, இரும்பால் ஆன ஈட்டி முனைகள், வாள்கள், இரும்பு உருக்காலை, சிப்பி, கிளிஞ்சில், அழகொப்பனை வளையல்கள், தமிழ் பிராமி எழுத்துக்களைக் கொண்ட மட்பாண்டங்கள் போன்றவை பெருமளவில் கண்டுபிடிக்கப்பட்டன. ரோம் பேரரசில் புழங்கிய பொன் மற்றும் வெள்ளி நாணயங்கள் பலவும் கிடைத்தன. மேலும், செப்பால் ஆன சிங்கச் சிலை மற்றும் இரும்பு உருக்கு ஆலை கண்டுபிடிக்கப்பட்டதைக் கொண்டு கொடுமணல் கி.மு. முதல் நூற்றாண்டிலிருந்தே தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கிய நகரமாக அறியப்பட்டுள்ளது. கிமு 500க்கு முற்பட்ட தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானையின் சிதிலங்களையும் பல ஆபரணங்களையும் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் என்பது கூடுதல் செய்தி.

    சுற்றியும் புதையப் பட்டிருக்கும் கல்களின் நடுவே மண்ணுக்குள் கண்டிப்பாக ஒரு தாழியோ அதற்கு மேற்பட்டவையோ இருக்கலாம், அதற்குள் மனித பிணங்கள் இருக்கலாம் என்பது அதன் சுற்று வட்டார குடிகளின் எண்ணம். அது நிஜமாகதான் இருக்கும் என்றே எனக்கும் படுகிறது. ஏனெனில் கண்ட காட்சிகள் வெறும் காட்சிப் பிழையாக இருக்க முடியாது. காலப் பிழையாக வேண்டுமானால் இருக்கலாம். காலப் பிழை என்பது பின்னால் வரும் உயிர்கள் கண்டு கொள்ள, விட்டு செல்லும் அடையாளம் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆம் மனிதகுலம் ஒவ்வொரு கால கட்டத்திலும் தன் வரலாறுகளை ஏதாவது ஒரு வழியில் பதிந்து விட்டு தான் செல்கிறது. அது தான் நம் எதிர்காலத்தின் நூலிழை தொடர்பின் பாதைகள் என்பது எத்தனை யோசித்தும் கிடைக்காத மூலக் கவிதை. கவிதையின் கால் தடம் எனது தேடலின் பயணமாய் இருப்பதில் நான் மீண்டும் மீண்டும் மீண்டு விடுகிறேன் ஒரு மீட்சியென அல்லது ஒரு நீட்சியென.

    நன்றி: விக்கிபீடியா

    Share
  • இதுவும் ஒரு பிரகிருதி ~II வது தொகுப்பு: 2

    இன்னம்பூரான்

    innam

    திடீரென்று காரைக்குடி போக வேண்டியிருந்ததால், புதுக்கோட்டை பஸ் ஸ்டாண்டுக்கு ஓடினேன். அடுத்த பஸ் கிளம்ப ஒரு மணி நேரம் ஆகும் என்று சொன்னார்கள். அந்தக்காலத்தில் டாக்சி, ஆட்டோ அதெல்லாம் கிடையாது. அடுத்த ரயில் ராத்திரி பெருத்த சங்கூதலுடன் நுழையும் போட் மெயில் தான். நிற்கக்கூட இடம் கிடைக்காது. அவசரம் தான். கு.ரங்காச்சாரியார் போய்ட்டார். அவருடைய அருமை மைந்தன் சாரங்கபாணி சிவகங்கையிலிருந்து வரணும். அதனாலே பாடியை வச்சிருப்பா என்று ஒரு எண்ணம். ஆனால் தந்தியில் வந்த சமாச்சாரம் சுருக்கமாக இருந்ததால் ஒன்றும் சொல்வதற்கில்லை. எல்லாத்துக்கும் மேலே, தான்தோன்றி சுயம்பு ஆலோசகர்கள் பங்கஜம் மாமியை துளைத்து எடுத்துக்கொண்டிருப்பார்கள். என் பேச்சு கொஞ்சம் எடுபடும். அதான் அவசரப்படறேன். திடீரென்று ஆபத்பாந்தவனாக வக்கீல் ஜம்புநாதன் மாமா காரை நிறுத்தி விசாரித்தார்; ஒரு கேசுக்காக தேவகோட்டைக்கு போய் கொண்டிருப்பதாகவும், வழியில் இறக்கி விடுவதாகவும் சொன்னவர், திரும்பிக்கொண்டு வருவது உத்தரவாதமில்லை என்ற நிபந்தனையும் விதித்தார். அவர் அப்படித்தான் ஜபர்தஸ்து ஆசாமி.

    வழி நெடுக ஓயாமல் பேசினார். கு.ரங்காச்சிரியார் மாமாவை அவருக்குத் தெரியாது என்றாலும் அவருடைய குணாதிசயங்களை பற்றி, மெய்யும், பொய்யுமாக, விமரிசித்தார். திருமயத்தில் காஃபி குடித்தோம். பார்சல் நிறைய வாங்கிக்கொண்டார். ஆபத்து சம்பத்துக்குப் பரவாயில்லை, காஃபி குடிக்கலாம் என்று சாத்திரம் படைத்தார், பில்லை என் பக்கம் தள்ளி விட்டார். இதெல்லாம் விடுங்கோ, சார். அந்த வக்கீல் மாமா ஒரு மாதிரி. கறக்கறதெல்லாம் கறந்துடுவார், கட்சிக்காரன் கதற, கதற. ‘எச்சில் கையால் ஈ விரட்டமாட்டார்.’ என்று ஊர்ஜனங்கள், அவர் இல்லாத போது, அக்கம்பக்கம் பார்த்து, சொல்லிக்கொள்வார்கள்.

    ஒரு நாள் இப்படித்தான் கையேந்தி பவன் சங்கர ஐயர் ஜம்புநாதன் மாமாவிடம் இசைகேடாக மாட்டிக்கொண்டார். பேரென்னமோ ‘மங்களவிலாஸ் பிராமணாள் ஹோட்டல்’. (தப்பா நினைக்காதீர்கள். அந்த காலத்தில் இப்படித்தான் போடுவார்கள்.) அறுசுவை நாயகன் பாலு நாயர் கூட தன் ஹோட்டலுக்கு அப்படித்தான் பெயர் வைத்தார். கல்லாவில் அவர் தானே உட்கார்ந்திருப்பார். எல்லாம் ஒரு ஷோ தான், ஜம்புநாதன் மாமா சொல்றமாதிரி.

    சங்கர ஐயருக்கு ஒரு வில்லங்கம். ஹாஜி மொய்தீன் சாயபு கடையில் தான் மளிகை வாங்குவார். நாலு நாள் முன்னால் வாங்கிய துவரம்பருப்பில் கல்லு ஜாஸ்தி இருந்தது. சாயபு கிட்ட இதமா சொல்லியிருந்தால், எல்லாமே மிதமாக முடிஞ்சிருக்கும். போறாத வேளை. சாயங்காலம் அன்யோன்யங்களை ஜமா சேர்த்து அதையும் இதையும் அருந்துவதற்கு ஸ்பென்சர் சோடா வாங்க வந்த ஜரிகைத்தலைப்பா இன்ஸ்பெக்டர் வரதாச்சாரியிடம் துவரம்பருப்பை காண்பித்து, அங்கலாய்த்துக்கொண்டார், சங்கர ஐயர். வரதாச்சாரிக்கு ஏற்கனவே ஹாஜி மீது காட்டம். எஃப்.ஐ.ஆர் போடறேன் பேர்வழி என்று வெத்துப்பேப்பர்லெ சங்கர ஐயர் கையொப்பம் வாங்கிக்கொண்டு போய் விட்டார்.

    அலறினார், சங்கர ஐயர். அவர் கொடுத்தது என்ற சொல்லப்படும் பிராது ஹாஜியை உசுப்பி விட்டதாம். இருக்காதா பின்ன? நூடில்ஸ் தோத்தது போங்கோ. அரிசியில் கிராம ஃபோன் ஊசி, மண்டை வெல்லத்தில் கருப்பட்டி, கொட்டை எடுத்த புளியில் வீசைக்கணக்கில் கொட்டைகள், நல்லெண்ணெயில் நாற்றம், இத்யாதி கம்ப்ளைண்டை கண்ட ஹாஜி, ஆவேசமாக மங்களவிலாசில் புகுந்து, காச்சு மூச்சு என்று கத்த, சங்கர ஐயருக்கு எக்கச்சக்க நடுக்கம். அவருக்குத்தான் தெரியுமே, இதெல்லாம் பொய் என்று. அவசரமாக எடுபிடி கோபுவை போலீஸ் தாணாவுக்கு அனுப்பினால், அவன் ஓடோடி வந்து, வரதாச்சாரி திருச்சி போய்விட்டார் என்றான்.

    சமய சஞ்சீவியாக அங்கு திடீர் பிரசன்னம் ஆன வக்கீல் மாமா, சாவகாசமாக ஹாஜியை கூப்பிட்டு, ‘நான் தான் ஹோட்டலுக்கு வக்கீல். உம்மீது மானநஷ்ட வழக்குப் போடுவேன். உமது வக்கீல் ஜலாலுதீன் அப்பாவி. நான் உம்மை தீர்த்துக்கட்டுவேன், ஓய்.’ என்றார்.

    நீங்கள் இதையும் தெரிஞ்சுக்கணும். ஆதனக்கோட்டை முந்திருப்பருப்பு ரொம்ப ஃபேமஸ். ஏகபோகம், முத்தையா செட்டியாருக்கு. ஏதோ ஒரு சிக்கல். எனக்கு நினைவில் இல்லை. அவர் நம்ம வக்கீல் கிட்ட மாட்டிக்கொண்டார். அவர் செலவில் மசால் தோசை, ஃப்ரூட் சாலெட் சாப்பிட ஆசை கொண்டு, கையேந்தி பவனில் அவர் நுழைந்த மாத்திரம், சினிமா மாதிரி இது எல்லாம் நடந்து விட்டது. செட்டியாருக்கே என்னாடாது இது, பிள்ளையார் பிடிக்க அது சிவனாரின் நாடி பிடிக்குதே என்று தனக்குள் சூள் கொட்டிக்கொண்டார்.

    புதுக்கோட்டை கீழ மூணாம் வீதி புகழ் வக்கீல் ஜம்புநாதன் மாமா ஒரு அலாதி பிறவி. தூண்டில் போட்டு கட்சிக்காரனை இழுப்பார். அவருடைய குமாஸ்தா ராமராவ் நாமமும், விபூதியும், கரும்சாந்துப்பொட்டும், இடம், பொருள், ஏவல் கருதி மாற்றி மாற்றி அணியும் ஜகஜ்ஜால கில்லாடி என்றாலும், வக்கீல் மாமா வக்கீல் மாமா தான்.

    இரண்டு பக்கத்து கட்சிக்காரர்களிடமும் இணக்கமாக பேசுவார். எல்லா வக்கீல்களோடும் விரோதம் பாராட்டுவார். அவன் மண்ணாங்கட்டி, இவன் பூஜ்யம், அது, இது என்று ஏசுவார். கூச்சமே இல்லாமல், பொய்யும் புனைசுருட்டுமாக, கட்சிக்காரர்களிடம் தற்பெருமை சாற்றுவார். ஏதாவது கேட்டால், பிரிவி கெளன்சிலில் தான் வாதாடும்போது லார்ட் தாமஸ் ஹோர் பாராட்டினார் என்பார். கதை அளப்பதில் மன்னர். அவர் ஹாஜியின் புறப்பாட்டுக்கு பிறகு சங்கர ஐயரிடம் சொன்னதே ஒரு சான்று.

    ஐயர்வாள்! பஜ்ஜி போட்டா போறாது. சொஜ்ஜி, கொஞ்சமாவது இனாம தொட்டுக்குக் கொடுக்கவேண்டும்.
    யாராவது துவரம்பருப்பில் கல்லு என்றால் கோர்ட்டார் கேட்பார்களா? வழித்துக்கொண்டு சிரிப்பார்கள். நாம தான் தூபம் போடணும்.
    அதனால் தான் அந்த கடங்காரன் வரதாச்சாரி வெத்துக்கடுதாசிலெ உம்ம கை நாட்டு வாங்கினான்.

    நல்ல வேளை! நான் வந்து சேர்ந்தேன். போலீஸ் கேசை ஜலாலுதீனே தோக்க அடிச்சுடுவான். நீர் விஷ்கிக்கப்பம் கட்டாட்டா, ஜரிகை உன்னை முழுங்கி ஏப்பம் விட்டுடும்!

    போடும் மான நஷ்ட வழக்கு, லக்ஷ ரூபாய்க்கு. எனக்கு ஃபீஸ் வேண்டாம். நம்ம ஃப்ரெண்டாச்சே! ஃப்ரீ. வந்ததிலே பாதி கொடுத்தா போதும். உமக்கு என்ன கசக்குது,ஓய்?

    வக்கீல் ஜம்புநாத ஐயர் ஒரு பிருகிருதி: இல்லாட்டா, தன்னுடைய அம்மா கிட்டவே எக்கச்சக்க ஃபீஸ் வாங்கிண்டு, ராமராவை விட்டு பொய் சாட்சிகளை தயார் செய்வாரா? எனக்கு அவருடைய சித்தி புத்திகள், வித்தைகள் எல்லாம் தெரியும். எதிர் வாடையில் நாலாவது வீடு தானே.
    -#-
    சித்திரத்திற்கு நன்றி: http://ecx.images-amazon.com/images/I/51px9X4yqeL._SY344_BO1,204,203,200_.jpg

    இன்னம்பூரான்

    http://innamburan.blogspot.co.uk

    http://innamburan.blogspot.de/view/magazine

    www.olitamizh.com

    Share
  • குறளின் கதிர்களாய்…(78)

       செண்பக ஜெகதீசன்…

     

    ஊக்க முடையா னொடுக்கம் பொருதகர் 

    தாக்கற்குப் பேருந் தகைத்து.

          -திருக்குறள் -486(காலமறிதல்)

     

    புதுக் கவிதையில்…

     

    பயத்தினால் அல்ல

    பலமுடையோர் பின்வாங்குவது,

    காலமறிந்து செயல்படத்தான்..

     

    சண்டைக்கடா

    பதுங்குவது,

    பாய்வதற்குத்தானே…!

     

    குறும்பாவில்…

     

    வலிமையுள்ளவன் பின்வாங்குவது

    உரிய தருணத்திற்குத்தான்,

    பதுங்கிப் பாயும் போர்க்கடாபோல்…!

     

    மரபுக் கவிதையில்…

     

    களத்தில் மோதிடும் சண்டைக்கடா

         கணத்தில் வென்றிடத் திறமிருந்தும்,

    தளர்வது போலப் பதுங்கிடுதல்

         தாக்க எதிரிமேல் பாய்வதற்கே,

    உளமொடு உடலும் வலியோனும்

         உடனடி செயலில் இறங்காதது,

    அளந்தே அறிந்து காலத்தை

         அதன்படி நடந்து வென்றிடவே…!

     

    லிமரைக்கூ…

     

    போர்க்கடா பதுங்குதல் பாய்ந்திடத்தான் போரில்,

    வலிமை யுள்ளவன் பின்வாங்குதல்

    காலமறிந்து செயல்பட்டு வென்றிடத்தான் பாரில்…!

     

    கிராமிய பாணியில்…

     

    ஆட்டுக்கிடா ஆட்டுக்கிடா

    ஆளமுட்டும் ஆட்டுக்கிடா,

    சண்டியான ஆட்டுக்கிடா

    சண்டபோடும் ஆட்டுக்கிடா,

    அது

    சண்டயில பதுங்குறது,

    சட்டுண்ணு பாஞ்சிடத்தான்..

     

    மனுசங்கத இதுபோலத்தான்,

    பெலமாவுள்ளவன் ஒதுங்குறது

    பயந்துபோயி ஓடயில்ல,

    பாத்துநல்ல நேரம்பாத்து

    செய்யிறதச்செய்து செயிச்சிரத்தான்..

     

    ஆட்டுக்கிடா ஆட்டுக்கிடா

    ஆளமுட்டும் ஆட்டுக்கிடா,

    சண்டியான ஆட்டுக்கிடா

    சண்டபோடும் ஆட்டுக்கிடா…!

     

    -செண்பக ஜெகதீசன்…

    Share
  • ஓடி ஓடி உழைக்கணும், ஊருக்கெல்லாங் கொடுக்கணும்

    கவிஞர் காவிரிமைந்தன்.

     

     

    ஓடி ஓடி உழைக்கணும் …

    odi odi uzhaikanum2‘நல்ல நேரம்’ திரைப்படத்திற்காக நாயகன் பாடும் பாடல்! காட்டுவிலங்காம் யானைகள் வைத்து தேவர் எடுத்த படம்! உழைப்பின் மேன்மையை உயர்த்திக்காட்டும் புலவரின் கைவண்ணம்! எழுத்தில் எழுந்துநிற்கும் உயர்ந்த கோபுரம்! வாழ்க்கைப் பாடத்தை வரிகளில் காட்டியிருக்கும் அற்புதக் கவிதை!

    உழைப்பின் பெருமை என்னவென்று உலகறியும்! உழவன் முதல் கவிஞன் வரை உழைப்பு ஒன்றுதான் மனித முன்னேற்றத்திற்கு முதல்படி! இவ்வுலகில் பிறந்த எந்த மனிதனும் உழைப்பதில் பின்வாங்கக் கூடாது. இன்னும் சொல்லப்போனால், உழைக்க மறுப்பவனுக்கு உண்ணுவதற்கு உரிமை கிடையாது என்றே இலக்கணம் வகுக்கலாம். அதுவும் தனக்காக வாழ்வதைவிட பிறருக்காக வாழ்வதிலேதான் அர்த்தமிருக்கிறது! ஆனந்தமிருக்கிறது! இந்த தத்துவ தரிசனத்தைத் திரைப்பாடலில் கொண்டுவரும் சாமர்த்தியம் புலவர் புலமைப்பித்தன் போன்ற பிதாமகர்களுக்கே கைகூடும்!

    இருசக்கர வாகனத்தில் பயணம் செல்லும்போதெல்லாம் என் மகனை முன் வைத்துக்கொண்டு எம்.ஜி.ஆர். பாடல்களை முணுமுணுப்பது வழக்கம்! என் மகன் விவேகானந்தன் சுமார் 6 வயது இருக்கும்போது முதலில் உரக்கப்பாடிய வரிகள் இவைதான்…

    வயித்துக்காக மனுஷன் இங்கே கயித்தில் ஆடுறான் பாரு
    ஆடி முடிச்சி இறங்கி வந்தா அப்புறம் தாண்டா சோறு

    நான் கூட கேட்டேன். என்ன விவேக், பல்லவியெல்லாம் விட்டுவிட்டு சரணத்தில் உள்ள வரிகளைப் பாடுகிறாயே என்று! அப்பா, அதில் கருத்து இருக்கிறது என்றான். அவன் கண்டிப்பாக வாழ்க்கையில் முன்னுக்கு வருவான். வெற்றி மேல் வெற்றி பெறுவான் என்று உணர்ந்தேன். தற்போது பொறியியல் பட்டப்படிப்பு முடித்து தனியார் நிறுவனத்தில் பணிபுரிவதோடு, கவியரசு கண்ணதாசன் அவர்களின் பூரண ஆசிகளால் குறும்படங்களுக்குப் பாடல்கள் எழுதிவருகிறான்.

    உலகம் முழுமைக்கும் உரிய பாடலிது! அறநெறி போற்றி ஆயிரம் செய்யுள்களைவிட இந்த ஒரு திரைப்பாடல் அதைவிட மக்கள் மனதில் எளிதாகச் சென்று சேரத்தக்கது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

    1234 … அப்… அப்…

    ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாங் கொடுக்கணும்
    ஆடிப் பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க்கணும்

    வயித்துக்காக மனுஷன் இங்கே கயித்தில் ஆடுறான் பாரு
    ஆடிமுடிச்சி இறங்கி வந்தா அப்புறம் தாண்டா சோறு
    அன்போடு சொல்லுறதைக் கேட்டு நீ அத்தனைத் திறமையும் காட்டு
    இந்த அம்மாவைப் பாரு ஐயாவைக் கேளு
    ஆளுக்கொண்ணு கொடுப்பாங்க

    சோம்பேறியாக இருந்து விட்டாக்கா சோறு கிடைக்காது தம்பி
    சுருசுருப்பில்லாம தூங்கிட்டுருந்தா துணியும் இருக்காது தம்பி
    இதை அடுத்தவன் சொன்னா கசக்கும்
    கொஞ்சம் அனுபவம் இருந்தா இனிக்கும்
    இதுக்கு ஆதாரம் கேட்டா ஆயிரம் இருக்கு
    அத்தனையும் சொல்லிப்போடு

    வலிமையுள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி
    பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம் சட்டம் ஆகணும் தம்பி
    நல்ல சமத்துவம் வந்தாகணும் அதிலே மகத்துவம் உண்டாகணும்
    நாம பாடுற பாட்டும் ஆடுற கூத்தும் படிப்பினைத் தந்தாகணும் – நாட்டுக்குப்
    படிப்பினைத் தந்தாகணும்.

    ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாங் கொடுக்கணும்
    ஆடிப் பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க்கணும்

     

    காணொளி: https://www.youtube.com/watch?v=yiOVK2taBno

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கேசவ் பிரமாதம்….பார்த்தவுடன் த்யாகய்யரின் ”பால கனகமய” தோன்றியது….

    ”பால கனகமய ஆயர் குலமகனை
    கோல மயிற்பீலி கண்ணனைபிம் -மாலை
    அனுப்பிடும் கேசவ்க்கு ஆயிரம் கோடி,
    குனிப்புடன்(வளைந்து) குட்மார்னிங் கூறு”….கிரேசி மோகன்….

    பிம்மாலை -அதிகாலை
    குனிப்புடன் -வணங்கியபடி….

    விடியவிடிய வரைந்த கேசவ்வும், வரைதலுக்கு உட்பட்ட கண்ணனும்
    ”தூங்க வருகவே”….
    —————————–

    crazy
    தூங்க வருகவே
    ——————–

    காளிக்கு அண்ணன் கார்முகில் வண்ணன்
    காளிங்க நர்த்தனம் ஆடிக் களைத்தவன்
    கோளரி மாதவன் கோவிந்தன் என்வீட்டுத்
    தூளியில் ஆடித் தூங்க வருகவே….(1)

    வானிடை சூரியன் காய்கின்ற வேளையில்
    ஆநிரை காத்து மேய்த்துக் களைத்தவன்
    தூணிடை சிங்கன் எந்தன் துரும்பு
    மேனியில் ஒளிந்து தூங்க வருகவே….(2)

    பாரதப் போரில் பார்த்தனின் தேரை
    சாரத்யம் செய்து சோர்ந்துக் களைத்தவன்
    நாரத மாமுனி நாவிருப்போன் என்
    மாரதில் புரண்டு தூங்க வருகவே….(3)

    மாணிக்கக் குறளன் மாவலி ஈன்ற
    காணிக்கை ஏற்றுக் கால்களை நீட்டி
    வானுக்குத் தாவி களைத்தவன் எந்தன்
    ஊனுக்குள் கலந்து தூங்க வருகவே….(4)

    மாம்பழக் கதுப்பு மருங்கில் கட்டிய
    தாம்புக் கயிறால் உரலை இழுத்து
    கூம்பிய ஆம்பலாய்க் களைத்தவன் ஐம்புலப்
    பாம்பை அடக்கத் தூங்க வருகவே….(5)

    முடியில் கற்றை மயிற்பீலி புனைந்து
    மடியில் பட்டுப் பீதாம்பரம் அணிந்து
    நொடியில் ராதைக்காய் காத்துக் களைத்தவன்
    அடியேன் என்னகத்தில் தூங்க வருகவே….(6)

    அன்னையர் துரத்த ஆயர் பாடியில்
    வெண்ணெய் திருடி வீதியோடிக் களைத்தவன்
    பின்னையின் பின்னல் நிறத்தன் என்மனத்
    திண்ணையில் சாய்ந்து தூங்க வருகவே….(7)

    ஆசை கோபியர் அன்புக்கு அடிமையாய்
    ராச லீலையில் மூழ்கிக் களைத்தவன்
    வாச துளசி மாலை அணிந்தென்
    பூசை உள்ளில் தூங்க வருகவே….(8)

    பூதனை நச்சுப் பாலொடு அவளின்
    வேதனை தீரக் குடித்துக் களைத்தவன்
    சீதரன் கோமளன் ஸ்யாமளன் என்னுளத்
    தீதினை விரட்டித் தூங்க வருகவே….(9)

    இத்தரை இன்னல்கள் களைந்து தர்மம்
    புத்துயிர் பெற்றிடப் பற்பல யுகத்தில்
    பத்தவதாரம் பூண்டுக் களைத்தவன்
    புத்தியில் யோகமாய்த் தூங்க வருகவே….(10)

     

     

    Share
  • சிவபிரதோஷம்

    மீ.விசுவநாதன்

    இரவா பகலா இறைவோய்நீ ! இரண்டு மான பொருளோநீ !
    இரவாப் புகழின் எழிலோநீ ! இருந்தும் இல்லா உருவோநீ !
    அரவாய் அமுதாய் கலப்போநீ ! அழகுக் கவிதை நெருப்போநீ !
    வரவாய் எனக்குள் உறவோநீ ! வசவில் லாத துறவோநீ (4)

    சுகமாய் வலியாய் இருந்தேநீ சுழலும் விதியாய் வருவாய்நீ !
    நகமும் சதையு மானாய்நீ ! நரனில் முக்தி மானாய்நீ
    அகமும் புறமும் ஒளிர்ந்தாய்நீ ! அசுர சுரனின் குணத்தில்நீ
    நிகரே இல்லா பலவான்நீ ! சிவனே தமிழ்நற் கவியேநீ ! (8)

    (அறுசீர் விருத்தம் அரையடி வாய்பாடு: மா, மா, காய்)

    (29.06.2015)

    Share
  • படக்கவிதைப் போட்டி 18-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திரு. திவாகரன் எடுத்த இந்தப் படத்தை இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான படமாகத் தேர்ந்தெடுத்துத் தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் வல்லமையின் நன்றிகள்.

    leaves

    பச்சை இலைகளும் பழுத்த இலைகளும் கலந்தே இருக்கும் இம்மரக்கிளை வாழ்வின் பல நிலைகளை மொழியின்றி நமக்கு விளக்கி நிற்கக் காண்கிறோம்.

    பச்சிளம் குழந்தையாய் இருந்தநாம் பாலப் பருவத்தில் அடியெடுத்துவைக்கும்போது குழந்தைப் பருவம் மாண்டு போகிறது; காளைப் பருவத்தில் நுழையும்போது பாலப் பருவம் அழிந்துபோகிறது. இவ்வாறு நம்முடைய ஒவ்வொரு வளர்ச்சி நிலையுமே முந்தைய நிலையின் முடிவாய்…மரணமாய் அமைந்து விடுகின்றது. இதுவே வாழ்வின் நியதி. இதை உணராத மனிதனோ உடலைவிட்டு உயிர்பிரிவதொன்றே முடிவுநிலை என்றெண்ணுகின்றான் என்பதைச் சிறப்பாக எடுத்தியம்புகின்றது குண்டலகேசி எனும் நூலில் வரும் பாடலொன்று.

    பாளையாம் தன்மை செத்தும்
    –பாலனாம் தன்மை செத்தும்
    காளையாம் தன்மை செத்தும்
    –காமுறும் இளமை செத்தும்
    மீளும் இவ்வியல்பு பின்னே
    –மேல்வரு மூப்பும் ஆகி
    நாளும் நாள் சாகின்றாமால்
    –நமக்கு நாம் அழாதது என்னே!

    வழக்கம்போலவே, சிந்தனைக்கு இன்பம் நல்கும் இனிய கவிதைகளை வாரி வழங்கியிருக்கின்றனர் கவிஞர்கள்! அவைகளை இரசித்துவிட்டு வருவோம்!

    ***

    பருவகாலக் கன்னி மரங்களின் இலைகளில் பன்னிறம் வடித்து வானில் கோலமிட வருகிறாள் எனும் சுவையான கற்பனையைத் தன் கவிதையில் வழங்கியிருக்கும் திரு. ஜெயபாரதன், தன் மற்றொரு கவிதையில் ’பழுப்பு இலைகள் புயலில் பறக்கும் தட்டுகள்’ என்று இரசனையோடு வருணித்திருக்கின்றார்.

    அவ்விரண்டு கவிதைகள்…

    …பச்சை இலைகள்
    பழுப்பு இலைகளாய்
    மாறும் காலம்.
    நீல வானப் புடவை கட்டி
    மேகக் கன்னி
    மயக்க வரும் காலம் !
    குளிர்காலம்
    பச்சை நிறச் சேலையை
    உரிக்கப் போகுது !
    மரத்தின் மீது
    கிருஷ்ணன் வருவானா
    மஞ்சள் நிறப் புடவை
    அளிக்க !
    வெண்ணிலா தென்படும்
    பொன் முலாம் பூச !
    பருவக் கால கன்னி
    மரத்திலே பன்னிற
    ஓவிய
    இலைகள் வடித்து வானில்
    கோலமிட வருவாள்
    நம்முள்ளம்
    கொள்ளை கொள்ள !

    ***

    பழுப்பு நிற இலைகள்
    புயலில்
    பறக்கும் தட்டுகள் !
    பகலில் ஒளிக்கதிர் திரட்டிடும்
    ரேடார்  தட்டுகள் !
    பரிதிக் கதிர்கள் பெற்று
    பச்சைப் பசேலென்று
    பசுமை ஆக்கும்
    இலைகள் !
    பச்சை இலைகளைக் குளிர்ப்
    பருவ காலம்
    பழுப்படிக்கச் செய்யும் !
    மங்கிய இலைகள்
    தொங்கும் காட்சி ! …

    ***

    கிளையில் மோதிய லாரியில் ஏறித் தனியே பயணிக்கும் ஒரு கொத்து இலைகளை நமக்கு அறிமுகப்படுத்துகிறார் திரு. கவிஜி!

    கிளை முட்டி 
    சமாளித்து பயணித்த 
    லாரியில் 
    அனாதையாய் 
    ஒரு கொத்து இலைகள்…

    ***

    இலைகள் உதிர்ந்ததால் கருகும் காம்புகள் உறவின் சாட்சிகள் எனும் புதிய சிந்தனையைச் செப்பும் திரு. கனவு திறவோன், வீழ்ந்தழியும்வரை மற்றையோர்க்குப் பயன்தருபவை மரங்கள் என்று அவற்றின் தன்னலமற்ற வாழ்வைப் போற்றுகிறார்.

    உதிர்ந்த இலைகள்
    விட்டுச்சென்ற
    கருகும் காம்புகள்
    உறவின் சாட்சிகள்

    மிஞ்சியிருப்பதில்
    பச்சையென்றும்
    வெழுப்பென்றும்
    பேதமா?

    உன்னை படைத்திட
    என்னை இழக்கிறேன்
    நீ தரும் சக்தியில்
    என்னைக் கழிக்கிறேன்
    நானாக விழுவேன்
    அதுவரை
    உன்னைத் தாங்குவேன்!

    ***

    தன் இறுதிப் பயணத்திற்காய் உறுதியோடு காத்திருக்கும் பழுத்த இலையின் சாகசத்தைப் பாவாக்கியிருக்கிறார் திரு. சேயோன் யாழ்வேந்தன்.

    பழுத்த இலை காத்திருக்கிறது
    காற்றின் சிறு வருகைக்கு
    ஒரு பறவையின் அமர்வுக்கு
    அல்லது காம்பின் தளர்வுக்கு
    தன்னை விடுவித்துக் கொள்ள.

    பென்டுலம் போல் அசைந்துகொண்டோ
    உருளையைப் போல் சுழன்றுகொண்டோ
    தரையிறங்கும் இறுதி சாகசப் பயணத்தை
    யாரேனும் பார்த்து வியக்கக்கூடுமென
    அது காத்திருக்கிறது

    தன்னிடத்தை விட்டு
    இவ்வளவு தூரம் வந்ததை
    சிலர் வியந்து பேசவும் கூடும்
    ஓர் எறும்பைச் சுமந்து
    அது இறங்கும் அதிசயத்தை
    இரு கூரிய கண்கள்
    வியந்து பாடவும் கூடும்.

    பழுத்த இலை காத்திருக்கிறது
    தன் இறுதி சாகசப் பயணத்துக்கு.

    ***

    சுயநலப் பந்தாட்டம் நடைபெறும் உலகில், பழுத்த இலைகளின் உயிர்கள் கிளையில் ஊசலாடுவதை வேதனையோடு பதிவு செய்திருக்கிறார் திருமிகு. லட்சுமி.

    நீல  வாழ்க்கைப் பாதையில்
    எழுதிய வினாக்குறி 
    பழுத்த இலை முதியோர்!
    முகவரி நரம்புகள் இழையோட
    ஒட்டியும் ஒட்டாத துளிர் இலைகள்
    துளிர்இலை மனிதர்களுக்காக
    நிகழ்வாழ்வின் மகிழ்ச்சியை
    ஈந்து வாழும் 
    வாழும் தியாக ஊற்றுகள்!
    பழுத்த இலைகள் சுயநலப் பெருங்காற்றினால்
    உதிர்வதுண்டு!
    தாமரை இலைத்தண்ணீர் பாசம் இருந்திருந்தால்
    பழுத்த இலைகள் என்றோ
    ஆரவாரமாக சலசலத்திருக்கும்!
    ஒட்டாத பாசந்தனில்
    ஒட்டிய கிளையில் பழுத்த இலைஉயிர்கள் அசைந்தாட
    சுயநலப் பந்தாட்டம் சுதந்திர உலகில்
    நடக்குதப்பா!

    ***

    ’பருவம் மாறி…தான்கொண்ட உருவம் மாறி உதிர்தல் என்பது இலைகளுக்கு மட்டுமல்ல மனித இனத்துக்கும் பொருந்துவதே!’ எனும் உலகியல் உண்மையை அழகாய் விளக்கியிருக்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

         பருவம் முதிர்ந்து சருகாகி
    மிச்ச மின்றி மண்ணாதல்
    மரந்தரு கிளைக்கு மட்டுமல்ல,
    இச்சை உடலில் கொண்டவனே
    இதுவும் முதுமை வந்தழியும்,
    நிச்சயம் இதனை நினைத்திருந்தால்
    நிம்மதி வாழ்வில் நிலைத்திடுமே…!

    ***

    இலைகளின் நிறமாற்றம் அவைகளை மலர்ச்செண்டுகளாய் மாற்றிக் காட்டுதே என வியந்துபோகிறார் திரு. ரா. பார்த்தசாரதி.

    …பசுமை இலைகளை கண்டாலே கண்ணுக்கு குளிர்ச்சி
    பல நிற இலைகளை கண்டாலே மனதிற்கு மகிழ்ச்சி
    அயல் நாட்டில் இலைகளே அழகிய பூக்களாய் மிளிரும்
    வசந்தத்தின் சிறப்பினை இலைகளே நினைவூட்டும் !

    வசந்தத்தில் இலைகளே மலர்களாய் மலர்ந்து காட்சி தரும்
    இதுவே காண்போர்க்கு மட்டற்ற மகிழ்ச்சி  தரும்,
    வான்னின்றும், சிகரத்தின் மேல் நின்று  கீழ் நோக்கின்
    மலர்ச்செண்டுகள், நட்டதுபோல்  காட்சி  தரும்.

    ***

    பச்சை வண்ண ஆடைகட்டிச் சலித்துப்போன மரப்பெண்ணின் உடைமாற்றந்தான் இலைகளில் தெரியும் புத்தம்புது வண்ணங்களோ? என வினா எழுப்புகிறார் திருமிகு. தமிழ்முகில்.

    இலையதுவே மரத்திற்கு
    ஆடையாகிப் போக
    பச்சை நிற ஆடையே உடுத்தி
    சலித்துப் போனதோ
    இந்த மரப் பெண்ணிற்கு ?
    மஞ்சளும் அடர்சிவப்புமாய்இளம்
    தளிரையும் பழுத்த இலையையும்
    உடுத்தி தன் அழகினை இரசிக்கிறாளோ ?

    ***

    மழைக்கால மேகங்கள் இலைகளில் சேமிக்கும் வானவில்லை நமக்கும் காட்டுவதில் மகிழ்ச்சி கொள்கிறார் திரு. மெய்யன் நடராஜ்.

    மழைக்காலத்துக்கான மேகங்கள் 
    உதிர்கின்ற  இலைகளில்சேமிக்கின்றன
    வானவில்லுக்கான நிறங்கள்

    ***

    பழுப்பு வண்ண இலைகள் பகரும் வாழ்வின் நிலையாமையை விளக்கும் திருமிகு. வேதா இலங்காதிலகம், ’நிலையற்ற உலக வாழ்வை உணரும் ஞானம் அனைவர்க்கும் வாய்த்தால் வாழ்க்கை சுலபமே’ என விளம்புகிறார்.

    காவோலை விழ குருத்தோலை துளிர்த்தலாய்
    சாவோலை உறுதி பிறப்போலை வந்தால்
    தீர்வோலை இதுவெனத் தீட்டிய விதியைப்
    பாரேன் படமெனக் காட்டுதிங்கு.

    எம் கண் பறிக்கும் நீலமேகம்
    தன் வண்ணப் பின்ணனி மயக்க
    தலை நீட்டும் இலைக் கொத்து
    நிலையற்றது வாழ்வு என்கிறது.

    விலையற்ற பெரும் தத்துவ உண்மை
    தலைக்கு எடுப்பார் எவர்! அழியும்
    கலையே வாழ்வெனும் அரிய ஞானம்
    நிலைநிறுத்தினால் வாழ்வு சுலபம்!

     ***

    வாழ்வியல் தத்துவங்களைத் தம் கவிதைகள் வழியே அழகாய்ப் பாய்ச்சியிருக்கும் கவிஞர்கள் அனைவர்க்கும் என் பாராட்டுக்கள்!

    ’பழுத்த ஓலை மண்ணில் வீழப்
    பச்சை
    ஓலை சிரித்ததாம்!
    காலம் என்னும் காலன் கணக்கில்
    பச்சை
    பழுக்கலானதாம்!
    தானும் கறுத்துப் போன போது
    தனது
    நிலைமை உணர்ந்ததாம்!’ என்றொரு சிறுவர் பாடல் உண்டு. ஆம்! நிலையாமை ஒன்றே வாழ்வில் நிலையானது. இந்த நிலையாமைத் தத்துவத்தையும், வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் பிறருக்குப் பயன்படவேண்டும் எனும் நல்லெண்ணத்தையும் இப் போதிமரத்திடம் தாம் கற்பதாய் ஒரு கவிதை பேசுகின்றது.

    அக்கவிதை…

    கிளை ஒன்றுதான் !
    ஆயினும் அதிலே
    உதிரப் போகும் இலைகளும்
    பச்சை நிற இலைகளும்
    கலந்தே துலங்குது !

    ஆம்
    இயற்கை
    அது நமக்கு
    போதிக்கும் உண்மை
    வாழ்வும் அது போலத்தான்

    உதிரும் இலைகள்
    சருகாக !
    மீண்டும் தன்னை
    வாழவைத்த மண்ணுக்கு
    உரமாக
    . . .

    மனிதனாய்ப் பிறந்தோம்
    மறைந்த பின்பு
    நாம் வாழ்ந்த மண்ணுக்கு
    பயனாய் எதை
    விட்டுச் செல்கிறோம் ?

    சிந்தையைக் கிளறிடும்
    விந்தையான பொறியைத்
    தட்டி விட்டு
    நம்மைப் பார்த்துச்
    சிரிக்கிறதோ
    அப் போதி மரம் ?

    நிலைத்திடும் என்று
    அகந்தையில் உழன்று
    நர்த்தனமாடிடும் எமக்கு
    காற்றிலசையும் இலைகள்
    கற்றுத் தருகின்ற ஞானம்
    தொட்டு நிற்கிறதோ
    முற்றுப் பெறாத காவியமாய் !

    ஆடை களைந்து
    நிர்வாணமாகப் போகும்
    ஒற்றைக் கிளை
    வரப்போகும் தன் நிலை
    எண்ணி நாணாமல்
    வருவதை ஏற்கும்
    பண்பதை மானிடர்
    எமக்குப் பறைசாற்றும்
    வாழ்க்கைப் புத்தகத்தின்
    வரலாற்று அத்தியாயமாய்
    . . .

    பொருட்செறிவுள்ள இக்கவிதையை யாத்திருக்கும் திரு. சக்தி சக்திதாசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவிக்கின்றேன்.

    அடுத்து, முற்றிலும் புதிய கோணத்தில் படத்திலுள்ள கிளையை நோக்கி, ’பூமியில் பிரிவினைகள் செய்துவிட்ட மாந்தர்காள்! வானத்திலும் அவ்வேலையை ஆரம்பித்து விடாதீர்கள்! என்று இக்கிளை கைநீட்டித் தடுப்பதாய்க் கவிபாடியிருக்கிறார் திரு. எஸ். பழனிச்சாமி. அவரின் கவிதையைப் பாராட்டுக்குரியதாய்க் குறிப்பிட விரும்புகிறேன்.

    மனிதன் பிரித்த விதங்கள்தான் எத்தனை
    மனத்தால் மதமும் மதத்தால் இனமும்
    இனத்தால் மொழியும் மொழியால் நிலமுமாய்
    இவ்வுலகைப் பிரித்து துண்டாடி நின்றாய்
    தனித்தனித் தீவுகளாய் ஆகிவிட்ட மானுடமே
    தனியேவிடு நீலநிற வானத்தை என்கிறதோ
    தனித்தன்மை யோடுபல வண்ண இலைகொண்ட
    தகுதியால் கைகாட்டி ஆகநின்றே!

    ***

    கவிஞர்கள் அனைவருக்கும் மீண்டும் என் மனங்கனிந்த பாராட்டுக்கள்! உற்சாகத்துடன் போட்டிகளில் தொடர்ந்து பங்கெடுத்துக்கொள்ள படைப்பாளிகள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றேன்.

     

    Share
  • பிரபஞ்ச ஒளிமந்தைக் கொத்துக்களின் பயங்கரக் கொந்தளிப்பு

    — சி. ஜெயபாரதன்.

     

    பிரபஞ்ச ஒளிமந்தைக் கொத்துக்களின் பயங்கரக் கொந்தளிப்பால் 
    பேரசுரக் காந்த சக்தித் தளங்கள் உற்பத்தி ஆகின்றன
     

    Cosmic Turbulence

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    ++++++++

    காந்த விண்மீன்கள்
    தீவிரக் கதிர்கள் விடுப்பவை !
    பிரபஞ்சம்  எங்கும் பூதச் சக்தியுள்ள
    காந்த தளங்கள்
    உருவாகிப் பாதிக்கும் !
    அசுரக் காந்த முள்ள
    பயங்கர விண்மீன்கள் சூழ்ந்தவை !
    காந்த விண்மீன் பூமியை நெருங்கின்
    மாந்தரின்
    உடல்மூலக் கூறுகளைச்
    சிதைத்து
    முடமாக்கி விடும் !
    உயிரினத் துக்குச் சீர்கேடு
    உண்டாக்கும்
    நியூட்ரான் விண்மீன்கள் !
    எரிசக்தி தீர்ந்த பின்
    வறிய விண்மீனாகி
    சிறிய தாகிப்
    பரிதிபோல் திணிவு நிறை
    பன்மடங்கு பெருத்துப்
    பூமியைக் குள்ள வடிவிலே
    காமாக் கதிர்க்
    குண்டுகளாய்த் தாக்கும்
    விண்மீன்கள் !

    +++++++++++++++++

    Mighty Magnetars

    பூர்வீக முதற்காந்த சக்தி தளங்களாகத் [Primordial Magnetic Fields] தோன்றி யவையே அகில்வெளி ஒளிமந்தைக் காந்தம் [Intergalactic Magnetism] என்பதில் எமக்கு ஐயப்பாடு உள்ளது.  பிரபஞ்சத்தைச் சுற்றியுள்ள அனைத்து காந்த தளங்களுக்கும் அவைதான் அடிப்படை மூதாதையக் காந்த சக்தி அளிப்பவை என்று இப்போது தெரிகிறது.

    ஜீனா மெய்நெக்  [Astrophysicist, University of Oxford, Leader of the Project]

    கணினிப் போலிக் கொந்தளிப்பு தூண்டும் மிகையாக்கிக் காந்த தளங்களின் கணிப்பீடு மாடல் [A Computer Model of Turbulence-Amplified Magnetic Fields] ஒருபோதும் மெய்யான காலக்ஸி கொத்துக்களின் சூழ்வெளி நிபந்தனை களை உருவாக்க முடியாது.  பிரபஞ்ச ஒளிமந்தைக் கொந்தளிப்பு காந்த தளங்களை உற்பத்தி செய்ய, நமக்குத் தெரியாத பல்வேறு பௌதிக முறைப்பாடுகள் கட்டுப்படுத்தும், பல்லரங்கு இயக்கம் [Multistage Process] படைக்கப் படவேண்டும்.

    ஆன்ரி நீரோநாவ் [Astrophysicist, University of Geneva] 

    +++++++++++++++

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=RQ8Gvab6eO8

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=dgNLaKkNejo

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=s8johKNthUI

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=rKpFFTGbaDc

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=JcD6Ia6o78I

    ++++++++++++++++++

    Computer Simulation Lab Experiment

    “பால்வீதியில் (Milky Way) குறைந்தது 100 காந்த விண்மீன்கள் (Magnetars) இருக்கலாம்.  அவற்றால் பூதளத்துக்குக் கேடுகள் விளையலாம் !  அதிகமாக அவை இருந்தால் எதிர்பார்த்ததற்கும் மாறாகப் பேரளவில் காமாக் கதிர் வெடிப்புகள் (Gamma Ray Bursts) நேரிடலாம்.  அதனால் உயிரினத்துக்கு அபாயப் பாதிப்புகள் நிகழ வாய்ப்புள்ளன !  பூமிக்கருகில் அத்தகைய காமா வெடிப்பு (பாதுகாப்பான) ஓஸோன் கோளத்தை ஒழித்து விடலாம் !  அதாவது பிரளய முடிவு போல் மனிதரும் விலங்குகளும் ஒருங்கே முழுமையாய் அழிந்து போகலாம் (Mass Extinction).”

    டோனால்டு ஃபைகர் (Donald Figer, Rochester Institute of Tecnology, USA) 

    காந்த விண்மீனைச் சுற்றியிருக்கும் காந்த தளத்தின் (Magnetic Field of Magnetar) தீவிரத்தின் ஆழத்தைக் காண்பது கடினம் ! பூகாந்த தளத்தின் அளவு சுமார் அரை காஸ் (0.5 Gauss) (Gauss – Unit of Magnetism).  குளிர்ச் சாதனப் பெட்டியின் காந்த அளவு 100 காஸ். ஆனால் ஒரு சாதாரணக் காந்த விண்மீனின் அசுரக் காந்த தளம் குவாடிரில்லியன் காஸ் (Quadrillion Gauss —> 10^15 Gauss. USA) !  அதன் விளைவு உயிரினத்துக்குப் பேராபத்தை உண்டாக்கக் கூடியது !  அதன் காந்த சக்தி வீரியம் பூகோள மாந்தரின் உடல் மூலக்கூறுகளை உடனே திரித்து முரணாக்கும் வல்லமை பெற்றது !

    விஞ்ஞான விளக்க வெளியீடு (Science Illustrated Magazine) (Jan-Feb 2009)

    Cover Image Magnetars

    பிரபஞ்சத்தில் அகிலவெளிக் காந்த தளங்களின் தோற்றங்கள் 

    நமது பிரபஞ்ச விண்வெளி பேரளவில் காந்த சக்தியைக் கொண்டது. அது ஏனென்று விஞ்ஞானிகளுக்குத் தெரியவில்லை.  ஆய்வகத்தில் கணிப்பீடு செய்யப்பட்ட காலக்ஸி மோதல்கள் [Galactic Collisions Computer Models] மெய்யான பிரபஞ்சத்தில் தோன்றிய பேராற்றல் கொண்ட காந்த தளங்களைப் பற்றி ஆராய உதவுகின்றன.  தற்போதைய கோட்பாடு, ஒளிமந்தைக் கொந்தளிப்பு சிறு “விதைக்” காந்த தளங்களை [Seed Magnetic Fields] மிகைப் படுத்திப் பேராற்றல் கொண்டவையாய் உருவாக்கி ஒளி மந்தைக் காலக்ஸிகளை ஆட்சி செய்கின்றன என்பதே.  அவற்றைப் புரிந்து கொள்ள இப்போது வானியல் பௌதிக விஞ்ஞானிகள் தமது ஆய்வுக் கூடத்தில் காலக்ஸிகள் மோதுவதைப் பிரதிபலித்து பிரபஞ்ச காந்த சக்தி தளங்களைப் பற்றி அறிய முற்படுகிறார்.

    நமது பிரபஞ்சத்தில் உள்ள பிண்டம் [Matter] அடர்த்தியாக நெய்த ஒளி மந்தைக் கொத்துக்களில் இடைவெளிகளுடன் பிரிந்தும் பின்னியும் பிணைந்துள்ளது.  முதன்முதல் வானியல் விஞ்ஞானிகள் விண்வெளிக் காந்த தளங்களை நோக்கிய போது, ஓர் விந்தையான நிகழ்வைக் கண்டனர்.  பிரபஞ்சம் அனைத்துமே காந்தத்தின் பிடியில் இருப்பதை அறிந்தார்.  ஒளிமந்தைக்குள் இருக்கும் விண்மீன்களின் பிளாஸ்மா [Plasma – ஒளிப்பிழம்பு] ஓட்டமுள்ள உயிர்ப்பு அரங்குகளில் மட்டும் காந்தம் இருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்த்தார்.  ஆனால் காலியாக இருக்கும் சூன்யப் பகுதிகளிலும்  காந்த சக்தி பின்னியுள்ளதைக் கண்டார்.  பிரபஞ்ச காந்த தளங்களே விண்மீகள், ஒளிமந்தைகள் நகர்ச்சி, தோற்றம் ஆகியவற்றின் முக்கிய ஆளுமைக் களங்கள் என்பது தெளிவாக முடிவானது.  மேலும் அவற்றின் படைப்பு, வளர்ப்பு பற்றித் தெரிந்து கொள்ளவும் ஆய்வக முடிவு ஏதுவானது.

    Fig 1A Inside a Magnetar

    விண்வெளியில் பூதக் கதிர்கள் வீசும் காந்த விண்மீன்கள் !

    1987 ஆம் ஆண்டில்தான் முதன்முதல் வானியல் விஞ்ஞானிகள் ராபர்ட் டங்கனும் கிரிஸ்டஃபர் தாம்ஸனும் (Robert Duncan & Christopher Thompson) அசுரக் காந்த ஆற்றல் கொண்ட நியூட்ரான் விண்மீன்களின் இருப்பைக் கண்டுபிடித்தனர்.  அவையே பின்னால் “காந்த விண்மீன்கள்” (Magnetars) அல்லது “சாவூட்டும் விண்மீன்கள்” (Deadly Magnetars) என்று பெயரிடப் பட்டன.  காந்த விண்மீன்கள் அசுரக் காந்த ஆற்றல் மட்டுமல்ல பூதச் சக்தி கொண்ட காமாக் கதிர்கள் (Mammoth Bursts of Energetic Gamma Rays) வீசி நாசமூட்டும் தீவிர விண்மீன்களாகவும் கருதப் படுகின்றன !  இந்தப் புதிரான மரண விண்மீன்கள் எப்படித் தீவிரக் காமாக் கதிர்களை வீசுகின்றன ஏன் வீசுகின்றன என்று விஞ்ஞானிகள் ஆழ்ந்து ஆராய்ந்து வருகின்றனர்.

    Fig 1B Gamma Ray Flares from Magnetars

    நியூட்ரான் விண்மீன், துடிப்பு விண்மீன், காந்த விண்மீன் (Neutron Star, Pulsar & Magnetar) ஆகியவற்றின் வேறுபாடுகளை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.  எரிசக்தி தீர்ந்து போன நியூட்ரான் விண்மீன்களின் தனித்துவம் என்ன ?  ஒரு சூப்பர்நோவாவில் (Supernova) உருவான பெருத்த விண்மீன் (Massive Star) ஒன்றின் உட்கருவாய் மிஞ்சி விட்ட திணிவு மிக்க எச்சம் (Dense Remnant) அது !  அத்தகைய விண்மீன்கள் நமது பரிதியை விட இரண்டு மடங்கு நிறை கொண்டு சுமார் 12 மைல் (20 கி.மீ.) விட்டமுள்ள ஒரு சிறு கோளமாய்ச் சுருங்கி விடுகின்றன !  துடிப்பு விண்மீன் என்பது வெகு வேகமாய்த் தன்னச்சில் சுழலும் உருவித நியூட்ரான் விண்மீன் !  அதன் காமாக் கதிர்க் கற்றைகள் (Radiation Beams) ஒவ்வொரு சுழற்சியிலும் ஒரு துடிப்பை உண்டாக்கிப் பூமியை ஊடுருவுகின்றன !  மெகனடார் எனப்படும் காந்த விண்மீனின் தனித்துவம் என்ன ?  ஒரு நியூட்ரான் விண்மீன் இயல்பு நிலையைப் போல் (Normal Staus) ஆயிரம் மடங்கு ஆற்றலுள்ள காந்த சக்தியை அடையும் போது அது காந்த விண்மீன் ஆகிறது.

    Fig 1B Magnetar SGR 1806-20

    இருபது ஆண்டுகளாய் விஞ்ஞானிகளிடையே ஐயப்பாடுகள் இருந்த பிறகு 2007 இல் காந்த விண்மீன்களின் மெய்யான இருப்பு ஏற்றுக் கொள்ளப் பட்டது.  புதிரான இந்த நியூட்ரான் விண்மீன்கள் ஒருவிதத் துடிப்பு விண்மீன்கள்தான் !  வெகு வேகமாய்ச் சுழலும் தீவிரக் காந்த ஆற்றல் கொண்டவை !  சூப்பர்நோவா வெடிப்பில் திணிவு நிறை மிக்க எச்ச விண்மீனாய் மரண நிலையில் இருப்பவை !  இந்த காந்த விண்மீன்கள் எப்படி உண்டாகின்றன ?  அவற்றின் அசுரத்தனமான காந்த ஆற்றலின் தீவிரம் எத்தனை அளவு ?  ஏன் சில விண்மீன்கள் மட்டும் புதிராகக் கருந்துளை யாகாமல் காந்த விண்மீன்களாக மாறுகின்றன ?  பிரபஞ்சத்தில் காந்த விண்மீன்களின் இருப்புத் தொகை (Abundance) என்ன ?  இவை போன்ற வினாக்களுக்கு வானியல் விஞ்ஞானிகள் விடை தேடிக் கொண்டிருக்கின்றனர் !

    Fig 1E Neutron Stars

    புதிரான காமாக் கதிர்வீசும் பூதக் காந்த விண்மீன்கள்

    1992 ஆம் ஆண்டில்தான் பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கிரிஸ்டஃபர் தாம்ப்ஸனும், ராபர்ட் டன்கனும் காந்த விண்மீன் நியதியை முதன்முதலில் நிலைநாட்டினர்.  அதற்கு ஆதாரமாக 1979 ஆம் ஆண்டிலே காந்த விண்மீன் ஒன்றிலிருந்து எழுந்த காமாக் கதிர்வீச்சுக்களை முதலில் அவரிருவரும் பதிவு செய்தனர்.  அதன் பிறகு அடுத்த பத்தாண்டுகளில் காந்த விண்மீன் நியதி பரவலாகப் பலரால் ஏற்றுக் கொள்ளப் பட்டது.  சூப்பர்நோவா (Supernova) வயிற்றிலிருந்து பிறந்து சுருங்கிப் பேரளவு திணிவுள்ள காந்த விண்மீன்கள் (Super-Dense Magnetars) பூமியின் காந்த தளத்தைப் போன்று 1000 டிரில்லியன் மடங்கு தீவிரக் காந்த சக்தியைக் கொண்டவை !  காந்த வின்மீன்கள் என்பவை வாயு எரிசக்தி தீர்ந்து போன ஒருவகை நியூட்ரான் விண்மீன்களே (Neutron Stars) !  அவற்றை அதி தீவிர ஆற்றல் உள்ள காந்தத் தளம் சூழ்ந்திருக்கிறது.  அந்தக் காந்த தளமே தேய்வடைந்து பேரளவு சக்தி வாய்ந்த மின்காந்த கதிர்வீச்சாக (High Energy Electromagnetic Radiation) குறிப்பாக எக்ஸ்ரே, காமாக் கதிர்களாக (X-Rays & Gammar Rays) மாறி எழுகின்றன.

    Fig 1E Magnetars Discovered

    இதுவரை (2007) விண்வெளியில் 16 காந்த விண்மீன்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.  அவற்றில் இரண்டு விதங்கள் உள்ளன.  முதல் வகை : “SGR” என்று அழைக்கப்படும் “மென்மைக் காமாக் கதிர் மீளெழுச்சி மீன்கள்” (Soft Gamma Ray Repeaters). அடுத்த வகை : AXP என்று குறிப்பிடப்படும் “முரண் எக்ஸ்ரே துடிப்பு மீன்கள் (Anomalous X-Ray Pulsars).  இதுவரைப் பிரபஞ்சத்தில் பதிவு செய்த காந்த விண்மீன்களில் அதி தீவிரக் காந்த தளம் கொண்டது : SGR 1806-20.  அதன் கணிக்கப்பட்ட காந்த தளம் : 2 X (10^11) Teslas OR 2 X (10^15) Gauss (1 Teslas = 10,000 Gauss). பூத வல்லமை உடைய அந்த காந்த விண்மீனின் தீவிரத்தை ஒப்பாகக் காட்ட வேண்டுமானால் இப்படிக் கூறலாம்.  பூமியின் காந்த தளம் : அரை காஸ்.  மருத்துவ மனையில் உள்ள “காந்த இணைத் துடிப்புப் படவரைவு யந்திரம்” (MRI – Magnetic Resonance Imaging Machine) 32,000 காஸ். ஆய்வுக் கூடங்களில் இதுவரை தயாரிக்க முடிந்த காந்த தளம் : 40 டெஸ்லாஸ் (400,000 காஸ்).

    Fig 1F High Energy Observatories

    தீவிரக் காமாக் கதிர் வீசும் காந்த விண்மீன்

    2007 ஆண்டுவரை விஞ்ஞானிகள் 16 காந்த விண்மீன்களைக் கண்டுபிடித்துள்ளார்.  அவற்றின் பெயர்கள், இருப்பிடங்கள், சுழற்சி வேகங்கள், கண்டுபிடித்த ஆண்டுகள் ஆகிய விபரங்களை அட்டவணையில் காணலாம்.  அவற்றில் 1979 இல் கண்டுபிடிக்கப் பட்ட காந்த விண்மீன் SGR 1806-20 டிசம்பர் 27 2004 தேதி அன்று இதுவரைப் பதிவு செய்யப் படாத அளவு கதிர்ச் சக்தியை வெளியிட்டிருக்கிறது.  அந்தப் பேரளவு சக்தி நமது சூரியன் 250,000 ஆண்டுகள் தொடர்ந்து வெளியிடும் வெப்ப சக்தி அளவுக்கு ஒப்பாகும்.  வெளியிட்ட நேரம் : 0.2 வினாடி !  வெளியிட்ட அளவு : வினாடிக்கு 1 மில்லியன் ஒளித்துகள் (1000,000 Photons per Sec) !  இந்தக் காந்த விண்மீன் ஓர் எக்ஸ்-ரே துடிப்புக் களஞ்சியம் (Pulsating X-Ray Source).  பூமியிலிருந்து 50,000 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது.  அதன் சுழற்சி வேகம் : 7.56 வினாடிக்கு ஒரு சுற்று.  அதன் அசுரக் காந்த ஆற்றல் : 10^15 காஸ் (Gauss).  ஒப்பு நோக்கினால் பூமியின் காந்த தளத்தின் ஆற்றல் : 0.6 காஸ் !  அகில உலக விஞ்ஞானிகள் 2004 டிசம்பர் 27 ஆம் தேதி அன்று விளைந்த சம்பவங்களை ஆராய்ந்து டங்கன் தாம்ஸன் கோட்பாடுகளை ஒப்புக் கொண்டுள்ளனர்.  அதாவது காந்த விண்மீனின் முறிவுகளில் கதிர் வீச்சுகள் வெளிப்படுகின்றன என்றும் இந்த காந்த தளங்கள் விண்மீனின் மேற்தட்டைப் (Magnetar’s Crust) பல மைல் தூரம் தகர்த்துக் கிழிக்கின்றன !  இந்த முறிவு அரங்குகள் பூமியிலுள்ள பூகம்பப் பழுதுக் கோடுபோல் (Earth’s Tectonics Fault Line) காணப் படுகின்றன.  1998 ஆகஸ்டு மாதம் 20,000 ஒளியாண்டு தூரத்தில் உள்ள [SGR 1900+14] காந்த விண்மீன் மிகச் சக்தி வாய்ந்த காமா கதிர்களையும் எக்ஸ்-ரே கதிர்களையும் உமிழ்ந்தது !

    Fig 2 Making a Magnetar

    நியூட்ரான் விண்மீன்களில் காமாக்கதிர் வெடிப்புகள்

    பிரபஞ்சத்தில் பிறந்த ஒரு விண்மீனின் இறுதி மரண நிலைகளில் ஒன்று நியூட்ரான் விண்மீன் எனப்படும் முடிவான வடிவம்.  சூரியப் பளுவைப் போல் 4 முதல் 8 மடங்கு பெருத்த திணிவு விண்மீன்கள் சிதைவாகி விளைவதே ஒரு நியூட்ரான் விண்மீன் !  பொதுவான விண்மீன்கள் தமது அணுக்கரு எரிசக்தி யாவும் எரிந்து போன பிறகு, சூப்பர்நோவாவாக வெடித்து விடுகின்றன !  அந்த வெடிப்பில் விண்மீனின் மேலடுக்குகள் சிதறிப் போய் அது வனப்புள்ள ஓர் சூப்பர்நோவாவின் மிச்சமாகிறது.  விண்மீனின் உட்கருவானது பேரளவு ஈர்ப்பு விசை அழுத்தத்தில் சின்னா பின்னம் ஆகச் சிதைகிறது !  அப்படிச் சிதைவாகும் போது விண்மீனில் உள்ள நேர் மின்னியல் புரோட்டான்களும், எதிர் மின்னியல் எலெக்டிரான்களும் இணைந்து

    [1 புரோட்டான் + 1 எலெக்டிரான் –>>  1 நியூட்ரான்]

    நியூட்ரான்களாக மாறிகின்றன.  அதனால் அவை நியூட்ரான் விண்மீன் என்று அழைக்கப் படுகின்றன.

    Fig 2 Neutron Stars & Magnetars

    ஒரு நியூட்ரான் விண்மீன் சுமார் 20 கி.மீடர் (12 மைல்) விட்டம் கொண்டது.  அதன் பளு சூரியனைப் போல் சுமார் 1.4 மடங்குள்ளது.  அதாவது நியூட்ரான் விண்மீன் குள்ளி ஆயினும், பளு திண்மையானது (Mass is Dense with High Density).  நியூட்ரான் விண்மீனின் சிறு பிண்டம் கூட பல டன் பளுவைக் கொண்டதாய் இருக்கும்.  நியூட்ரான் விண்மீனின் பளு அடர்த்தி ஆனதால், அதன் ஈர்ப்பாற்றலும் பேரளவில் பிரமிக்க வைப்பதாய் உள்ளது.  ஒரு நியூட்ரான் விண்மீனின் ஈர்ப்பு விசை பூமியின் ஈர்ப்பு விசைபோல் (2 X 10^11) மடங்கு மிகையானது !   அதே போல் நியூட்ரான் விண்மீனின் காந்த சக்தி பூமியின் காந்த சக்தி போல் 1 மில்லியன் மடங்கு மிகுந்தது !

    Fig 4 Spitzer Space Telescope

    சூப்பர்நோவா மிச்சங்களாக (Supernova Remnants) நியூட்ரான் விண்மீன்கள் தோன்றலாம் !  தனிப்பட்ட நியூட்ரான் விண்மீன்களாகவும் பிறக்கலாம் !  இரட்டைப் பிறவி விண்மீன்களாகக் (Binary Systems) காட்சி அளிக்கலாம் !  அவ்விதம் இரட்டையாக அமைந்துள்ள நியூட்ரான் விண்மீனின் பளுவைக் கணிப்பது எளியது.  அப்படிக் கண்டுபிடித்ததில் நியூட்ரான் விண்மீன்களின் பளு, பரிதியின் பளுவைப் போல் 1.4 மடங்கு (சந்திரசேகர் வரம்பு) இருந்ததாக அறியப்பட்டது. இரட்டை அமைப்பில் நான்கு நியூட்ரான் விண்மீன்கள் அண்டக் கோள்களைக் கொண்டுள்ள தாக அறியப் படுகிறது !  கருந்துளைகள் (Black Holes) மிகவும் கனமான தால் “சந்திரசேகர் வரம்பு” ஒரு பிண்டத்தை நியூட்ரான் விண்மீனா அல்லது கருந்துளையா என்று அடையாளம் காண உதவுகிறது !

    Fig 3 Supervova Explosion

    பால்வீதி விண்மீன் கொத்துக்களில் காந்த விண்மீன்களைத் தேடல்

    அமெரிக்காவின் ராச்செஸ்டர் தொழில் நுணுக்கக் கூடத்தின் வானியல் விஞ்ஞானி டோனால்டு ஃபைகர் நமது பால்வீதி காலக்ஸியின் விண்மீன் கொத்துக்களை (Star Clusters) உளவி குறைந்தது 100 காந்த விண்மீன்கள் அவற்றில் ஒளிந்து கொண்டிருக்கலாம் என்று கூறுகிறார்.  அப்பணிகளுக்கு நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி, ஸ்பிட்ஸர் விண்ணோக்கி, சந்திரா எக்ஸ்-ரே தொலைநோக்கி, கிளாஸ்ட் தொலைநோக்கி போன்றவையும் ஹவாயியில் உள்ள உட்சிவப்புக் கருவிகள் பயன்படுகின்றன.  நாசாவின் கிளாஸ்ட் தொலைநோக்கி [Gamma-Ray Large Area Space Telescope (GLAST)] காமாக் கதிர் வெடிப்பு களைக் காணும்.  நியூட்ரான் விண்மீன், துடிப்பு விண்மீன் ஆகிய வற்றைக் கண்டுபிடிக்கும்.  கருந்துளை, கரும் பிண்டம், அகிலக் கதிர்களைப் பற்றி அறிய உதவும். அதாவது இதுவரை 10% காந்த விண்மீன்களைத்தான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்.  இத்தகைய அசுரக் காந்த விண்மீன்களை ஏன் விஞ்ஞானிகள் தேடிப் பதிவு செய்ய வேண்டும் என்னும் வினா நம்மிடையே எழுகிறது.  உதாரணமாக 2004 டிசம்பர் 27 ஆம் தேதி அடித்த பேரளவுக் காமாக் கதிர்ப் புயலின் பூதள விளைவுகள் பல விஞ்ஞானிகளுக்கு அச்சத்தை உண்டாக்கி யிருக்கிறது !  விண்வெளியில் ஏற்படும் இயற்கையின் விந்தை நிகழ்ச்சிகளால் பூமியில் விளையும் பூகம்பங்கள், எரிமலைகள், சுனாமிகள், மின்காந்த அலை அபாயங்கள் ஆகியவற்றுக்கு எந்தத் தொடர்பும் உள்ளதா என்று உளவி ஆராய உதவியாய் இருக்கும்.

    Fig 6 Gamma Ray Bursts Initiate Extinction

    +++++++++++

    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines, Science Illustrated, Wikipedia & Earth Science & the Environmental Book.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – How Did the Moon form ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. National Geographic – Invaders from Space – Meteorites (Sep 1986)
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world (1998)
    8. Physics for Poets By :  Robert March (1983)
    9. Atlas of the Skies (2005)
    10 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    10 (a) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40802141&format=html(Gamma Ray Bursts)
    10 (b) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40801031&format=html(Neutron Stars)
    10 (c) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40905121&format=html(Death Stars)
    10(d) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40905281&format=html(Harmful Death Stars)
    11 Space Com – Origins of the Universe’s Most Powerful Magnets (The Magnetars) By : Michael Schirber (Feb 1, 2005)
    12 Extreme Universe : Magnetic Fields & Magnetars Posted By : Jcconwell in Astronomy (Mar 12, 2009)
    13 Science Illustrated – Death Star – Could the Most Magnetic Objects (Magnetars) in the Universe Cause Extinction on Earth ? (Jan-Feb 2009)
    14 From Wikipedea – Magnetar (May 1, 2009).
    15 Space & Earth – Integral Looks at Earth to Seek Source ogf Cosmic Radiation (Mar 16, 2006)
    16 BBC News – NASA’s Eye on the Violent Cosmos By Paul Rincon [June 6, 2008]
    17 BBC News – A Glimpse of Ancient Dying Stars By Victoria Gill (Sep 7, 2009)
    18 Astronomy – Gammy Rays from Monster Stars By Philips Plait (Feb 7, 2007)
    19 Thunderbolt Info – Magnetic Monsters (May 22, 2009)
    20 Astronomy Magazine – In Search of the Galaxy’s Magnetic Monsters By : Steve Nadis (September 2009)

    21. http://earthsky.org/space/magnetars-most-powerful-magnets-in-the-universe [May 14, 2014]

    22. https://en.wikipedia.org/wiki/Magnetar   [June 24, 2015]

    23.  http://www.scientificamerican.com/article/cosmic-turbulence-may-spawn-monster-magnetic-fields/?WT.mc_id=SA_DD_20150623   [June 23, 2015]

    ++++++++++++++++
    S. Jayabarathan (jayabarathans@gmail.com)  June 26, 2015

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

    ”வழங்கினாய் செல்வம், வழங்கினாய் சேலை,
    வழங்கினாய் கீதை, வணக்கம் -வழங்கிடும்,
    காலம் முடிந்ததோ, கண்ணா மவுனமாய்,
    ஆலில் படுத்தாயோ ஆழ்ந்து”….கிரேசி மோகன்….

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

     

    பழமொழி: மென்கண்ணன் ஆளான் அரசு

     

    எங்கண் இனையர் எனக்கருதின் ஏதமால்
    தங்கண்ண ரானும் தகவில கண்டக்கால்
    வன்கண்ண னாகி ஒறுக்க ஒறுக்கல்லா
    மென்கண்ணன் ஆளான் அரசு.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     

    பதம் பிரித்து:
    எம் கண் இனையர் எனக் கருதின், ஏதமால்;
    தம் கண்ணரானும் தகவு இல கண்டக்கால்,
    வன்கண்ணன் ஆகி ஒறுக்க; ஒறுக்கல்லா
    மென்கண்ணன் ஆளான், அரசு.

    பொருள் விளக்கம்:
    (நீதி கூறுமிடத்து நடுநிலை தவறி) எனது கண் போன்றவர் இவர் என்றெல்லாம் கருதத் துணிந்தால் அது நீதிதவறும் குற்றமாகும். தமது கண்ணைப் போன்றவராகவே இருந்தாலும், தகாத குற்றச் செயலில் ஈடுபடுபவராக அவரைக் காண நேர்ந்தால், வன் கண்மையோடு சினந்து தண்டிக்கவேண்டும். தண்டிக்காது மென்மையாக மன்னித்து விடுபவர் அரசாளத் தகுதியற்றவர்.

    பழமொழி சொல்லும் பாடம்: நடுநிலை தவறாமல் நீதிவழங்குவது அரசாட்சி செய்பவரின் கடமை. இதனைக் குறிக்கும் வள்ளுவர் வாய்மொழி,

    ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
    தேர்ந்துசெய் வஃதே முறை. (குறள்: 541)

    குற்றத்தை ஆராய்ந்து எவரிடத்தும் விருப்பு வெறுப்பின்றி, நடுநிலையோடு தக்க தண்டனையை வழங்குவதே நேர்மை தவறாத செயலாகும் என்று அறிவிக்கிறது.

    Share